சமணம் துறவற மதமா











சமணம் துறவற மதமா..



ஸ்ரமண மஹாவிரர் துறவற நெறியினை தமது இளமைக்காலத்திலேயே ஏற்று ஒழுகினார். வாழ்க்கை நிலையாமையை உணர்ந்ததினால் மட்டும் துறவறத்தை ஏற்கவில்லை, மேலும் இவ்வுலக வாழ்வில் அனைத்துயிரும் துன்பத்தில்  உழன்று வருவதை கண்டு வருந்தி அதற்கான தீர்வை கண்டுகொள்ளத்தான் அரச வாழ்வைத் துறந்து கானகம் சென்றார் என்பது வரலாறு.



இவ்வுலக வாழ்வின் இடர்களிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றிலிருந்து விடுதலை பெறும் வழியையும் வழங்கிச் சென்றுள்ளார். அனைத்துயிர்களும் துன்பத்தை நீக்க பலவகை முயற்சியில் ஈடுபடுகின்றன; ஆனால்  பயனற்று போகின்றன. ஏனெனில் துன்பத்திற்கான காரணமும் தானே என்பதை உணராத அறியாமை தான் என்கிறார். துன்பம் நீங்கிய தருணத்தில் சொற்ப இன்பத்தினை சுவைக்கின்றன என்றும் கூறுகிறார்.



அனைத்துயிரும் தங்கள் கர்மாவின் உரிமையாளர்களே. தன்னிச்சையாய் எச்செயலைச் செய்தாலும், அது நல்லதோ, தீயதோ அச்செயல்களுக்கு வாரிசுகளாகிறார்கள் என்பதை நுணுக்கமாக விளக்குகிறார்.



கூடுதலான வசதிகளும், வாய்ப்புகளும் அந்த ஜீவனின் நல்உழைப்பினால் கிடைத்த புண்ணிய பலனே, அதனை எப்பிறவியில் ஈட்டியதோ, இப்பிறவியில் பலனை அனுபவிக்கிறது; இதனை உணராமல் சிந்திப்பதே பொறாமை, திருடு, பொய், ஏமாற்றும், தந்திரம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது என்கிறார்.



சரியான உழைப்பே புண்ணியத்தை தருகின்றன. தவறான ஒழுக்கமே பாவத்தை அளிக்கின்றன. புண்ணிய ஜீவன்கள் சுகத்தையும், மாறாக பாவிகள் துன்பத்தையும் இப்பூவுலகில் எதிர்கொள்கின்றனர். அதனால் சமகாலத்தில் ஒருவருக்கு துன்பம் கூடுதலாகவும், மற்றொருவருக்கு குறைவாகவும் ஏற்படுகிறது. 



ஆனால் உண்மையில் சுவர்க்க சுகமும், நரக துன்பமும் இதனிலும் பெரிது.  இருப்பினும் இவ்விரு வாழ்வினையும் இப்பூவுலக ஒழுக்கமே ஒருவருக்கு நிர்ணயிக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.



துன்பத்திற்கான காரணம் இருவழி. ஒன்று இயற்கையினால் ஏற்படுவது, அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். மற்றோன்று பிறரால் வருவது. அதனை தடுக்கவே பலவழியிலும் நெறிகளின் வழியே விளக்கியுள்ளார் பகவான்  மஹாவீரர்.

 

எவ்வுயிருக்கும் தீங்கிழையாமல், அவற்றுக்கு இடர்வந்தபோது  போக்க உதவும் அஹிம்சை அறத்தினை பிரதானமாக வழங்கிச் சென்றுள்ளார். தாமும் வாழ்ந்து பிறரையும் வாழவிடும் தத்துவத்தை போதித்தார்.



அதுவே இக்கால மனித சமுதாய நலன் பயக்கும் பொதுஉடமை கோட்பாட்ற்கு (socialism) எந்த முயற்சியும் இன்றி வழி வகுக்கும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.



அவ்வாறான ஒழுக்கத்திற்கு நான்கு சங்கங்களை நிறுவினார். சாத்வ, சாத்வி, சிராவ, சிராவகி என்ற துறவற ஒழுக்கத்தினை துறவியர் இருபாலருக்கும், இல்லற ஒழுக்க நெறியை ஆண், பெண் இல்லறத்தாருக்குமாக வரையறுத்து கொடுத்தார்.

-------------------


அந்நெறியில் ஒழுகி, பிறருக்கும் போதிக்கும் முகமாக துறவியருக்கு எளிய வாழ்வும், தூய ஒழுக்கம் நிறைந்தும் காணப்படும். அவர்களை போற்றி காக்கும் பொருட்டு இல்லறத்தார் ஒழுக்க நெறியுடன் வரையறுத்து தந்துள்ளார் பகவான்  மஹாவீரர்.

 


இல்லறத்தார் வாழ்வில் அஹிம்சை, பொய்யாமை,  களவாடாமை, மிகுபொருள் விரும்பாமை, பிறன்மனை நோக்காமை போன்ற நன்நெறிகளை அவரவர் நிலையில் ஒழுக விட்டுச் சென்றுள்ளார்..


அவ்வாறு உலக உயிர்கள் இணக்கமுடன், சார்புநிலையில், பரஸ்பர உதவியுடன்  வாழும் வகையில் அந்நெறிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆனால் மனிதன் இல்லற வழியொழுக்கத்தையும், துறவற நெறியொழுக்கத்தையும் எந்த ஒரு வயது நிலையிலும் ஏற்றுக் கொள்ள சமணம் வகை செய்கிறது.



துறவற நெறியை கைக்கொண்டவருக்கு இல்லறநெறியாளரே ஆதரவு அளித்து அவர் நெறியில் ஒழுக உணவளித்து, பணிவிடை செய்து மகிழ்கின்றனர்.



இதனை ஒரு அரசனாக பிறந்து சகல சுகங்களையும் அனுபவித்து துறவறம் ஏற்று அதன் அனுபவங்களையும்  சமமாக கருதிய ஸ்ரீமஹாவீரர் எனும் மாமனிதனே அளித்துள்ளார். அவ்விரு நெறிகளை மனிதர்களின் மனப்பக்குவமும், உறுதிப்பாடும் தான் தேர்வு செய்ய எத்தனிக்கின்றன.

 


துறவற நெறியில் பயணிப்பவருக்கு குடும்ப நலன் கருதி செய்யும் தவறுகளுக்கு வாய்ப்பில்லை, அதனால் அவர்கள்  ஞான முன்னேற்றநிலையினை விரைவில் எய்துவர் என்பது ஒரு புரிதலாக இருப்பினும்;


மஹாவீரரின் சங்கத்தில் வாழ்ந்த நீண்ட நாள் சீடருக்கு முன்னரே, இல்லறநெறியில் முற்றிலுமாய் வாழ்ந்த ஒரு பவ்யருக்கு அவதிஞானம் வந்ததாக வரலாறு கூறுகிறது.



அவ்வழியே நோக்குங்கால் துறவறத்தை மட்டுமே இம்மதம் வலியுறுத்தவில்லை அதிலுள்ள நெறிகளை  இல்லறத்தில்  கடைபிடித்தாலே நற்கதி சீக்கிரத்தில்  கிட்டும்  என்பது திண்ணமே.


மேலும் துறவற நெறியாளர்களை ஆதரிப்பது இல்லறத்தார் என்பதையும் அவரே உணர்ந்து வழிகாட்டியுள்ளார். அப்படியிருக்க துறவற நெறிமட்டுமே சமணக் கொள்கையாக வரையறை செய்யப்படவில்லை என்பதை உணரலாம்.


துறவறத்தார் அஹிம்சைக் கொள்கைகளை  இல்லறத்தாருக்கு அளித்து நெறிப்படுத்துவதையும் செய்கின்றனர். கடமையை உணர்ந்து குடும்பத்தினர் செயல்பட அவர்கள் உறுதுணை புரிகின்றனர்.


தவறான பாதையில் பொருள்  ஈட்டுவதை, அதிகம் சேமிப்பதையும், ஒழுங்காக செலவிடுவதையும், பிறஉயிர்களுக்கு ஊறு விளைவிக்காமல் செயல் படுவதையும் கூறி நெறிப்படுத்துகின்றனர்.


அவ்வாறான நெறியாளரை இல்லறத்தார் போற்றி ஆகாரம் மற்றும் பணிவிடைகள் செய்து தம் குடும்பத்தில் முதியோராக எண்ணி போற்றி மகிழ்கின்றனர்.


அதே சமயம் மனிதனுக்கு மட்டுமே வளங்கள் சொந்தம் என்ற கோட்பாட்டை முறியடித்து அனைத்துயிர்களும் பொது உடமையானது என்பதை உணர்த்துகிறார்.


அதனால் இவ்வுலகில் மனித, விலங்கினங்களும் இயற்கையினால் வரும்  துன்பங்களின்றி, பிறஜீவன்களால் துன்புறாது இனிமையாக வாழ வகுத்து தந்துள்ளார்.


எவ்வழியில்  பயணிப்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது. அனைவரும் துறவறநெறியை ஏற்க சமணம் எந்த ஒரு கட்டத்திலும் வற்புறுத்தவில்லை.


இவ்விரு வழிகளிலும் பற்றொழிப்பதே ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதே அவர் காட்டும் உள்ளார்ந்த வழிகாட்டல்.


பற்றறுத்தல் என்பதே துறவு. அதனை இருபாலருக்கும் சமமாகவே அவரவர் வாழ்வமைப்பைப் பொருத்து வழங்கப்பட்டுள்ளது.


நெறி பிழன்ற துறவறத்தாரை விட வழிமாறா இல்லறத்தாரே சிறந்தவர். அவரே பவ்யர் எனப்படுகிறார். 


அதனால் சமணம் இல்லறத்தையும் துறவறத்தையும் சமமாகவே காண்கிறது.

 ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதையே வலியுறுத்துகிறது.



***********************

No comments:

Post a Comment