Humcha historyஹும்புஜம் ஸ்ரீ பத்மாவதி அம்மன் வரலாறுமாரிதத்தன் எனும் மன்னன் உத்திரமதுரையை சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டு வந்தான். ஜிநதத்தை எனும் மனைவியால், ஜிநதத்தன் எனும் மகனைப் பெற்று சீரும் சிறப்போடும் ஆண்டு வந்தான்.


ஒரு நாள் அவ்வரசன் வழக்கமாக வேட்டைக்கு சென்று திரும்புகையில் நதிக்கரையில் அழகிய பெண் ஒருத்தி  சுள்ளி  பொருக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவள்  அழகில் மயங்கிய அம்மன்னன் அருகில்  சென்று விசாரித்ததில் கமலை எனும் பெயருடையவள் என்றும் செம்படவனின் மகள் என்பதை  தெரிந்து கொண்டான்.


தான் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக அவளிடம் தெரிவித்தான். அதனைக் கேட்ட அவள் தன் தந்தை  அனுமதித்தால், தான் ஏற்றுக் கொள்ள தயார் என்றாள். இருவரும் அவன் தந்தையின் இருப்பிடம் சென்றடைந்தனர். வந்திருப்பது மன்னன் என்பதை அறிந்த அச்செம்படவன் அவரை வரவேற்று உபசரித்து அவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய தான் ஒரு நிபந்தனையை விதித்தான்.


 மன்னா தங்களுக்கு பல ராணியர் அரண்மனையில் இருப்பார்கள். அதனால் இவளை மனம் புரிந்ததும் கடைசிவரை மரியாதை குறையாமல்  இருக்க, பட்டத்து மகாராணி போல் பாவித்து, அவளுக்கு பிறக்கும் குழந்தையை தங்களுக்குப் பின் பட்டம் சூட்டி நாடாள அனுமதிக்க வேண்டும். இதுவே எனது நிபந்தனை.  இதனை ஏற்றால் என் மகளை  திருமணம் செய்து கொள்ளலாம். என்றான்.


அரசன் தனது காமத்தீயில் வெந்து கொண்டிருந்ததால், அதனை தணிக்க அந்நிபந்தனை ஏற்று கமலையை காந்தர்வமணம் புரிந்து தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றான். அரண்மனையில் தனி அந்தப்புரத்தில் அவளை தங்கவைத்தான். அவ்வப்போது  அவளுடன் காமபோகங்களை அனுபவித்து வரும் நாளில், ஒருநாள் கமலை கருவுற்றாள்.  ஒன்பது மாதம் கழித்து ஸ்ரீதத்தன் எனும் மகனை பெற்றாள்.

மன்னனின் பட்டத்தரசி ஜினதத்தையின் மூத்த மகனான ஜினதத்தன், தினமும் காலையில்  குளித்து புத்தாடையுடுத்தி அருகப்பெருமானை அஷ்டவிதார்ச்சனையுடன் பூசை செய்து வணங்கி விட்டு, நாளது மற்றச் செயல்கள் துவங்குவதை வழக்கமாக கொண்டிருந்தான்.


கமலையின் மகனான ஸ்ரீதத்தனும், ஐந்து வயதை எட்டியதும் குருகுலம் சென்று படித்து வந்தான்.  இவ்வாறு சில காலம் கழிந்தது.


ஜிநதத்தனின் மேலான நடவடிக்கைகளை தினமும் கண்டு வந்த கமலை மனதில் ‘இவ்வளவு உத்தம சீலனான இவன் இளமை எய்தியதும் அனைவரும் இவனுக்கே பட்டம் சூட்ட பரிந்துரை செய்வர். தன் மகனுக்கு கிட்டாமலும் போகலாம். அதனால் இப்போதே அவனை கொன்று விட வேண்டும்.  அதன் பின்னரே தன்மகனுக்கு முடிசூட்ட  வசதியாக அத்தடையும் நீங்கும்’ என கொரூரமாக எண்ணி ஜினதத்தனை  கொல்ல துணிந்தாள்.

அரசனுடன் தனிமையில் இருந்த போது கமலை அவனை மயங்கச்செய்து அவனது ஆணையாக தானே எழுதி ராஜமுத்திரையை பதித்து லாவகமாக எடுத்து வைத்துக் கொள்கிறாள். அவன் மயங்கிக் கிடந்த அவ்வேளையை முற்றிலுமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணி சமயற்காரனிடம், அரசர் ஆணையை காண்பித்து நாளை தலையில் அழகாக கீரீடம் அணிந்திருக்கும்  ஒரு சிறுவன் உன்னிடம் ஒரு எலுமிச்சம்பழத்தை கொண்டுவந்து கொடுப்பான். யாராயிருப்பினும் அதனையே அடையாளமாக கொண்டு அச்சிறுவனை நீ கொன்று விட வேண்டும். கொன்றபின் அவன் சூடியிருந்த அக்கிரீடத்தை இம்மாளிகை மாடத்தில் வைத்து விடு என உத்தரவிட்டாள். சமையற்காரனும் அரசரின் ராஜமுத்திரையை கண்டதும் வேறு வழியின்று  கீழ்ப்படிந்தான்.


மறுநாள் காலையில் ஜிநதத்தன் நீராடிவிட்டு தூய உடையுடன் ஜிநாலயம் சென்று பகவானை வழிபாடு செய்தான். மேலும் சில நாட்களுக்கு முன் அங்கு தங்கியிருக்கும்  துறவி முனிகுப்தரையும் வழக்கம்போல் அன்றும் வணங்கி போற்றினான். அவ்வேளையில் தனது அவதிஞானத்தில் அவன் நிலையை உணர்ந்த  அம்முனிவர் அவனுக்கு ஆசி வழங்கவில்லை. அவ்வேறுபாட்டு நிலையைக் கண்ட ஜிநதத்தன் ஸுவாமி, தாங்கள் எனக்கு தினமும் அளிக்கும் ஆசியை ஏன் வழங்க வில்லை என பணிவுடன் வினவினான். குழந்தாய் இன்று பள்ளிக்கு சென்று மாலையில் திரும்பியதும் என்னிடம் வா, அளிக்கிறேன்  என்றார் முனிவர்.


ஜிநதத்தன் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்ல புறப்பட்டான். அவன் செல்லும் வழியில் கமலை அவனை அழைத்து திட்டமிட்டபடி அவனிடம் ஒரு எலுமிச்சம்பழத்தை அளித்து அடுக்களையிலுள்ள சமையற்காரனிடம் தந்து விட்டு செல்லும் மாறு கூறினாள். அவனும் அவ்வாறே அதனைப் பெற்று அவ்விடம் நோக்கிச் செல்கிறான்.


வழியில் விளையாடிக் கொண்டிருந்த  அவனது சகோதரனான ஸ்ரீதத்தன் அவனை நெருங்கி அப்பழத்தை பறித்துக் கொள்கிறான். தம்பியிடம் கமலைஅன்னை இட்ட கட்டளையை கூற, அவனோ தானே அப்பழத்தை சமையற்காரரிடம் சேர்ப்பித்து விடுவதாக கூறி ஓடி விடுகிறான். அந்தப்புரம் பக்கத்திலுள்ள சமையற்காரரிடம் அப்பழத்தை கொடுத்ததும் அவனும் கமலை அளித்த அரச ஆணைப்படி ஸ்ரீதத்தனை கொன்று அவன் தலையில் இருந்த  கீரீடத்தை கழற்றி அங்குள்ள மாடத்தில் வைத்து சென்று விட்டான்.


வினைவிதைத்தவன் வினையறுப்பான் என்பது மெய்யானது. கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழிக்கிணங்க அச்செயல் மாறாக நடந்து  முடிந்தது. கமலை மதியம் சாப்பிடச் சென்ற போது அவ்வழியில் இருந்த மாடத்தில் தன் மகனின் கிரீடம் இருந்ததைக் கண்டு அதிர்ந்தாள். நடுக்கத்துடன் சமையற்காரனை, வந்த சிறுவன் யார் என கேட்டதும், அவனும் ஸ்ரீதத்தன் என்று அடையாளம் கூற அவனே பழம் கொண்டு வந்தான், அதனால் இச்செயலை செய்து முடித்தேன் என்றான். கமலை கதிகலங்கி கதறி அழுது அரற்றினாள்.  தான் போட்ட திட்டம் தனக்கே தீங்கிழைத்ததை கண்டு வருந்தினாலும், தனது வன்மத்தினை குறைப்பதாக இல்லை. ஜினதத்தனை எப்படியும் கொன்றே தீர்வது என்று மேலும் ஆத்திரத்துடன் முடிவெடுத்தாள். அன்றிரவே ஜினதத்தனை கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்தாள்.


துறவி முனிகுப்தர் கூறிய படி கற்பிக்கும் இடமான பள்ளியிலிருந்து வந்ததும் மாலை ஜினதத்தன் முனிபுங்கவரைக் கண்டு ஆசி பெற சென்றான். அவர் ஆசி கூறியதும். ஜினதத்தா, உனக்கு இன்றிரவு பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே இரு காலி பெட்டிகளை தயார்  செய்து கொள். இன்றிரவு முதல் ஜாமத்தில் குதிரை லாயத்திற்கு செல். உன்னைக் கண்டதும் எந்தக் குதிரை தன் காலை பூமியைச்சுரண்டி சமிக்ஞை செய்கிறதோ அக்குதிரையுடன் என்னிடம் வா என்றார்.  


ஜினதத்தனும்  முனிவர் கூறிய மொழிகளை தனது தாய் ஜினதத்தையிடன் கூறி விடைபெற்று, இரவு குதிரையுடன் முனிவரை சந்திக்கிறான். அவர் ஜினாலயத்திலிருந்த பகவான் பார்ஸ்வநாதர் சிலை மற்றும் ஸ்ரீபத்மாவதி சிலையை பத்திரமாக அப்பேழையில் வைத்து மூடித்தருகிறார். மற்றொன்றில் வழிச் செலவுக்கான பொருளையும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். மேலும் ஜினதத்தனிடம் இங்கிருந்து புறப்பட்டு மேற்கு திசையில் பயணத்தை  தொடங்கு;  செல்லும் வழியில் ஓய்வெடுக்கும் போஹு இந்த  பெட்டியை தரையில் வைத்து விடாதே. மேடையிலோ, மரக்கிளையிலோ வைத்துவிட்டு  இளைப்பாறு. எந்த இடத்தில் சிலைகள் உள்ள பெட்டி நகர்த்த முடியாமல் உறுதியாக பிடித்துக் கொள்கிறதோ, அப்புனித ஸ்தலத்தில் பகவானையும், யக்ஷியையும்  உயர்ந்த மேடைகட்டி அமர்த்தி விடு என்று கூறி அவனை அரண்மனையை விட்டு, யாரும் அறியாமல், வெளியேறி விடுமாறு பணிக்கிறார்.


சமணத்துறவியிடம் நல்லாசி பெற்று இரவே நகரைக் கடந்து சென்றுவிட்டான். கமலையால் ஏவப்பட்ட கொலையாளிகளும் ஜினதத்தனைக் காணாது திரும்பி வந்தனர். ஆனால்  அவளோ அவனை எப்படியும் தேடிக் கண்டுபிடித்துக் கொல்லுங்கள் என அழுத்தமாக உத்தரவிட்டாள். அவர்களும் வேறு வழியின்றி நாற்திசைகளில் தேடப்புறப்பட்டனர்.


இரவோடு இரவாக அரண்மனையை விட்டகன்ற ஜினதத்தனும் மேற்றிசை நோக்கி பயணத்தை தொடர்ந்தான். அடர்ந்த காடுகளுக்கிடையே பயணித்தபோது ஒரு நொச்சிலி மரத்தடியில் குதிரையை விட்டிறங்கி பிரதிமைகள் உள்ள பேழையை உயர்வான இடத்தில்  வைத்து உறங்கலானான். பின்னர் விழித்து பயணத்தை தொடர முடிவெடுத்து பெட்டியை குதிரையில் ஏற்ற முற்பட்டபோது, அசைக்க இயலவில்லை.  வெகுநேரம் போராடிய அசதியில் மீண்டும் கண் அயர்ந்தபோது, அவன் கனவில் ஸ்ரீ  பத்மாவதி மாதா தோன்றினாள், ஜினதத்தனே கலங்க வேண்டாம், அருகிலுள்ள  சுனையில் இரும்பினை  நனைத்தால் அது  தங்கமாக மாறும் சக்தி அளித்துள்ளேன். அவ்வற்புதத்தை பயன்படுத்தி  ஸ்ரீபார்ஸ்வநாதர்  சிலைக்கு ஒரு ஜினாலயம் எழுப்பி, பகவானை கருவறையில்  பிரதிஷ்டை செய்து, பக்கத்தில் என் சிலையை நிறுவி விடு என ஆணையிட்டது. அவனும் அக்கூற்றினை சோதனை செய்ய எண்ணி குதிரை  சேனத்தின் பகுதியான அங்குபடியை அச்சுனையில் மூழ்க்கினான். வெளியே எடுக்கும் போது பொன்னாக மின்னியது. அவ்வாறே தன்னிடமுள்ள இரும்புகளை தங்கமாக்கி, பக்தியுடன் கொண்டுவந்த சிலைகளான பார்ஸ்வ ஜினருக்கும், பத்மாவதி மாதாவுக்குமாக ஒரு ஆலயத்தை கட்டி கருவறைகளில் பிரதிஷ்டை  செய்து  அக மகிழ்ந்தான்.


அத்தலத்தில் ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்து தானே ஆண்டு வந்தான். அருகேயுள்ள நகரத்து அரசனான தனது  மாமனின் மகளை மணம் புரிந்து நலமுடன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள்  தனது  மாமனின்  வீட்டிலிருந்து வரும் போது ஒரு  ஏரியில் இரண்டு முத்துக்கள் கிடைத்தன. ஒன்று உயர்வானதாகவும், மற்றொன்று சற்று தரம் குறைந்தும் காணப்பட்டது. உயர்முத்தை ஒரு மூக்குத்தியில் பதித்து மனைவிக்கு அணிவித்து மகிழ்ந்தான். சற்று தரம் குறைந்ததை வேறொரு  மூக்குத்தியில் பதித்து ஸ்ரீ பத்மாவதி அம்மனுக்கு அணிவித்தான்.


இப்பாகுபாட்டு எண்ணத்தை உணர்ந்த ஸ்ரீ பத்மாவதி யக்ஷி; அவனுக்கு தன்மீது பக்தி குறைந்து விட்டதற்கு காரணம் கலிகாலம் பிறந்து விட்டதே என்பதை அவனது கனவில் வந்து கூறி நான் பவணலோகம் செல்ல முடிவெடுத்துள்ளேன். இனி சுனை நீரில் இரும்பு தங்கமாகாது அதற்காக வருந்தாதே. மேலும் நொச்சிலி மரம் வாடும்வரை என் மகிமை இத்தலத்தில்  இருக்கும் என தெரிவித்து விட்டு  சுனையில் இறங்கி மறைந்தது. கனவு கலைந்து விழித்து தான் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினான்.


சிலநாள் கழித்து வீரர்கள் ஜிநதத்தனின் தாயாரையும், முனிகுப்தரையும் கண்டதை தெரிவித்தனர். அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை அனுப்பி மகிழ்ந்தான். பின்னர் அவ்விருவரையும் தன் நகருக்கு தக்க மரியாதையுடன்  அழைத்து, தன்னுடன் தங்க வேண்டினான். அவர்களும் சம்மதித்து அவனுடன்  தங்கினார்கள்.


அவனது சிறிய தாயாரான கமலை பெருவியாதியால் பீடிக்கப்பட்டு உடலில் சிறங்குகள் தோன்றி துன்பமுற்றாள். சில நாட்களில் தாங்கமுடியா வலி ஏற்பட்டு மனம் கலங்கினாள். பின்னர் இறந்து  நரகமெய்தினாள். ஜினதத்தன் தன் தந்தை மன்னன் மாரிதத்தனை அழைத்து தன் நாட்டிற்கு மன்னனாக்கி மகிழ்ந்தான்.


இவ்வாறு ஜிநதத்தன் ஸ்ரீபார்ஸ்வநாதர், ஸ்ரீபத்மாவதி மீது பக்தி கொண்டு விரதசீலனாகி வாழ்ந்ததினால்,  இறந்து போனதும் தேவருலகம் எய்தினான்.


ஹும்புஜம் ஸ்ரீ பத்மாவதி வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகவும், ஜினதத்தன் கட்டிய கோவில், தற்போதைய ஸ்ரீஅம்மன் கோவிலும், நொச்சிமரமும் என்பதாக கர்ணபரம்பரைக் கதையாக தெரிவிக்கப்படுகிறது. கலியுகம் பிறந்து 5090 ஆண்டுகளைக் கடந்தும் நொச்சிலி மரம் வாடாமல் இருப்பதிலிருந்து அந்த பவணலோகத்து யக்ஷியின் மகிமை இத்தலத்தில்  குறையாமல் இருப்பதை  உணரலாம்.


அத்தலத்தில் ஜின மடமும், ஸ்ரீபுவனகீர்த்தி பட்டாரகரும் பீடத்தில் அமர்ந்து அந்த ஜினாலயத்தை பாதுகாப்பதோடு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை அளித்து வருவது சிறப்பானதாகும்.

----------------------------------------------- 
மேலும் ஜினதத்தனின் தந்தை இந்நாட்டை ஆண்ட  போது முகலாயப் படையெடுத்தனர். அவர்களின் பெரிய சேனைகளை கண்டு அஞ்சி ஸ்ரீஅம்பாளை வேண்டினர். அவ்வேளையில் ஜினதத்தனின் கனவில் தோன்றிய  பத்மாவதி யக்ஷி துணிவுடன் போர் தொடுக்க படையுடன் செல் என தைரியமூட்டியது. அதனை  உற்சாக வார்த்தைகளை  சிரமேற்கொண்டு  படைக்குச் சென்றார் மன்னன் மாரிதத்தன்.


முகலாயர்கள் இப்படையை நெருங்க, நெருங்க மாரிதத்தனின் சேனை உள்ளதை  விட பத்து மடங்கு  பெரிய  சேனையாக அவன் கண்களுக்கு  தோற்றமளித்தது. அதனால் அஞ்சி அவன் திரும்பிச் சென்று விட்டதாகவும் ஒரு பரம்பரைக்கதையும் அத்தலத்தில் நிலவுகிறது.  

----------------------------------------------- 

No comments:

Post a Comment