தற்கருத்துரை

தற்கருத்துரைஸ்ராவகனோ,  முனிவனோ


ஆத்மாவே!

தைஜஸ, கார்மணம் ஜீவனுக்கு சிநேகிதனைப்போல அனாதி காலமாக கூடியிருக்கிறது. அவைகளுடன் ஒளதாரிகாதி சரீரங்களின் மத்தியிலும் ஜீவன் சிறை பட்டவன் போல் குடியிருக்கிறது. ஆகவே இன்றையிலிருந்து அவைகளைப் போக்கும் முரணான சிந்தனை என்னவென்றால்:


சமூகத்தில் பெரிய மனிதன் சிறைக்குச் சென்றால் மான கர்மத்தால், அவமானத்தால் தூங்காமல் இவ்விடம் விட்டு எப்போது விடுதலை பெறுவோம் என்று நினைப்பது போல, யோகியானவன் சரீரமாகிய சிறையிலிருந்து எப்போது விடுதலையாவோமென்ற சிந்தனையுடயவனாகி, சரீரத்தின் மீதுள்ள மோகத்தை விட்டு:


நம்மிடம் வந்த சத்ருக்கு மிதமான உணவு கொடுத்துத் தந்திரமாக வேலைவாங்குவது போன்று இந்த சரீரமாகிய உடலுக்கு ஊக்க உணவு இல்லாத உணவளித்து ஜபம், தபம் முதலிய வேலைவாங்கிக் கொள்ள வேண்டும்;


பகைவரும், நண்பரும், உறவினரும் நாம் ஈட்டிய வினைகளுக்கு தக்கவாறு ஏற்பட்டுள்ளனர் என்று அவர்களிடம் சமநோக்குடன் நடந்தகொள்ள வேண்டும்;


பொருள்சார்ந்த, லெளகீக விஷய பேச்சுக்களில் செவிடனாகவும், ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இதமான பேச்சுக்களில் ஊமையாகவும் இருக்க பழக வேண்டும்.


தன்னுடையதும் பிறருடையதுமாகிய அவயவங்களைப் பார்க்குமிடத்து குருடன் போன்றிருக்க வேண்டும். ஒருக்கால் தவறிப்பார்த்தால் மாமிஸ பிண்டம் என்று கருத வேண்டும்.


ஆத்மாவே பிறப்பு இறப்பு அறுக்கும் காரணரான ஜினரின் பாதத்தில் பக்தியும், புலன் விஷய  போகங்களில் விரக்தியும், தபஸின் பாரத்தைத் தாங்கும்படியான சக்தியும், உடலை அன்மனினின்றும் பிரித்து, அதனை அறியும் யுக்தியும் உண்டானால் முக்தி சுலபமாக கிடைக்கும்.


ஆகவே வெளிவிஷயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மனதை தடுத்து, பிடித்து ஆன்மனில்  வைத்துத் தனக்குத்தானே  ஆத்ம ஸ்வரூபத்தின் ரகசியத்தை அறிந்து அதன்மேல் விருப்பத்தை செலுத்தி, ஆத்மனையே அறிந்து பார்க்க வேண்டும்.  சருமம் முதலியவற்றாலாகிய கண்கள் மற்றெல்லாவற்றையும் பார்க்கும் ஆத்மனைப் பார்க்காது; சகல ருசிகளையும் அறியும் நாக்கு ஆத்மனை அறியாது.


ஆகவே, ஆத்மாவே!  அறஅமிர்தமிருக்க வேறு பால் எதற்கு? பரஞ்சோதி மயமான ஆன்மனுடன் ஆடுபவனுக்கு வேறு உலக விஷய ஆட்டங்கள் ஏன்?


பகைவனை போ போ என்றால் போய்விடுவானா? கர்மங்களை விடு, விடு என்றால் விட்டுவிடுமா? தங்கத்தை புடம் போடும்போது நெருப்பிற்கு  பயந்தால்  பிடித்த காளிதம்  விட்டு விடுமா? கர்மமாகிற களங்கத்தைப் போக்கவதற்கு ஆத்மாவெனும்  வெப்பப் ஸ்புடத்தில் வைத்து கடினமான தபஸின் தாபத்திற்கு பயந்தால் முடியுமா?


வியாதியஸ்தன் மருந்து கசக்குமென்று உண்ணாமல், ருசிக்கு மயங்கி பத்தியமற்ற  வஸ்துவை  உண்டால் ரோகம் எவ்வாறு விலகும்;  அதுபோன்றே நீயும் மருந்தைப் போன்ற தவத்தைச் செய்யாது, பத்தியமற்ற வஸ்து போன்ற போபஉபபோகங்களை நுகர்ந்தால் பிறவி நோய்  எவ்வாறு  விலகும்.


உலகம் மன்மதனாகிற பிசாசினால் பீடிக்கப்பட்டுள்ளது. போகம், உபபோகம் இந்திரஜாலம் போன்றுளது. எமன் எனும் ஓமகுண்டத்தில் சகலரும் வேகின்றனர். யாரிடம் அன்பு காட்டுவது, யாரிடம் கோபம் கொள்வது, யாரிடம் சோகமாயிருப்பது; உனக்கு மெளனமும், தயவுமே வேண்டும். இம் மல மயமான உடலில் இருந்தே எழுவகைத் தத்துவங்களையும்  அறிந்து அடங்கி, ஜினசாசன  ஆராய்ச்சியிலேயே பொருந்தி, வினை வெல்லும் வழியில் நடந்து, வெளி விஷயங்களில் பற்றற்று ஆத்மனுக்குள்ளேயே நோட்டமாக இருக்க வேண்டும். ஆனால் இவ்விதமாக வாழ்பவன் பிறரையும், பிற பொருட்களையும் கவனியாமல் இருப்பதனால் அவனை பைத்தியம் என்று பழி தூற்றுவர்.

அத்தகைய ஞானியே வினைகளை வென்று வீட்டை அடைகின்றான். ஞானமும் தரிசனமும் ஆத்மனுக்கு விஷயம் ஆனதால், வேறு பரத்திரவிய  வாஞ்சைகளைத் துறந்து ஆத்மனைத் தியானிப்பாயாக. மேலும் ஆத்மனை வேறு எங்கும் தேடவேண்டாம், உன்னுள்ளேயே  உறைகின்றான். ஆகவே மித்யாத்வம் என்கிற வயலில், மாயை எனும்  சேற்றில், ஆத்மனாகிற பயிரை வளர்த்து, மோகமெனும் களையை நீக்கி, ஞானமாகிற நீரைப்பாய்ச்சி மோக்ஷம் என்னும்  பலனை அறுவடை செய்து  இன்புறுவாயாக.

----------------------

No comments:

Post a Comment