நல்லறம் நவின்ற நங்கை நீலகேசி

 


                                                நீலகேசி.

 

               தமிழ்த்  தாய்க்கு,  தமிழ்  சமணம்  பல  நூல்களைக்  கொடையாக  தந்து,  தமிழை  வளர்த்தது.  கல்வி,  மருத்துவம்,  உணவு,  அபயம்  என்ற நான்கையும்  தானமாக  வழங்கி,  நாகரீக  வளர்ச்சிக்கு  வித்திட்டது.  தமிழும்  வளர்ந்தது,  தமிழ்  நாகரீகமும்  வளர்ந்தது.  தமிழ்  சமணம்  தந்த  நூல்களில்  ஐஞ்சிறு  காப்பியமும்  ஒன்று.

               ஐஞ்சிறுங்காப்பியங்களில்  தனிச்  சிறப்புடையது  நீலகேசி.  தத்துவ  தர்க்க  நூலென்று  தமிழ்  அறிஞர்களால்  போற்றப்படும்  நூல்.  ஐந்தாம்  நூற்றாண்டில்  தேன்றியிருக்கலாம்  என்று  கருதப்படும்  இந்நூலின்,  ஆசிரியரைப்  பற்றிய  விபரங்கள்  கிடைக்கவில்லை.

               உண்மையில்  நீலகேசி  என்று  ஒருத்தி  இருந்ததே  இல்லை  என்பதும்,  நூலாசிரியர்  தாம்  கண்ட  கனவின்  காட்சியை அடிப்படையாக  வைத்து  இந்நூலை  உருவாக்கினார்  என்பதும்,  நூலின்  அவையடக்கப்  பகுதியால்  அறியலாம்.

               மனிதனுக்கும்,  மற்ற  உயிர்களுக்கும்  உள்ள  வித்தியாசங்களில்  மனம்  என்பதும்  ஒன்று.  அந்த  மனம்  ஒன்று  தான்,  மனிதனை  சொர்கத்திற்கும்  அனுப்பும்,  நரகத்திற்கும்  அனுப்பவல்லது.  அத்தகைய  மனதை  நம்  முன்னோர்கள்  குரங்குக்கு  ஒப்பிட்டார்கள்.  மனம்  ஒரு  குரங்கு  என்று.

               ஒரு  குரங்கிற்கு, பைத்தியம்  பிடித்து,  அது  மேலும்  கள்  குடித்து,  அதை  தேள்  கொட்டினால்,  அதன்  மனநிலை  எப்படி  இருக்குமோ,  அந்தகைய  நிலைதான்  மனித  மனத்திற்கும்  இருக்கும்  என்று  நம்பினார்கள்.  மனித  மனமும்,  ஆணவம்  என்ற  பைத்தியம்  பிடித்து,  அதிகாரம்  என்ற  கள்ளைக்  குடித்து,  மிகு  பொருள்  என்ற  தேள்  கொட்டினால், எப்படி  பேய்  மனம்  கொண்டு  ஆடுமோ,  அந்த  மனதை  அடக்கி,  நல்வழிப்படுத்தவே,  சமண  ஆகமங்களும்,  அதில்  கூறும்  நல்லறங்களும்  உதவுகின்றன. 

               அத்தகைய  பயமுருத்தும்  கொடிய  மனம்  கொண்ட  பேயாக  இருந்த  நீலகேசி,  முனிச்சந்திர  பட்டாரகரின்  சமண  அருளுரைக்  கேட்டு,  மும்மணிகள்  ஏற்று,  முழு  சமணப்  பெண்ணாகி,  பிறசமயத்து  குறவர்களுடன்  சொல்லறப் போரிட்டு,  அவர் தம்  கருத்துக்களை  பொய்யாக்கி,  தருமமாம்  சமண  நெறி  பரப்பிய  உயர்நிலை  பெண்ணான  நீலகேசியை,  நல்லறம்  நவின்ற  நங்கை  நீலகேசியாக  நான்  பார்க்கிறேன்.

            894  செய்யுள்கள்  கொண்ட  இந்நூலை  சுருக்கி  எழுதியமை  என்  அறியாமையே  எனினும்,  நமது  சொந்தங்கள்,  நீலகேசி  படிக்காதவர்கள்  கதையை  தெரிந்து  கொள்ள  ஒரு  வாய்ப்பாக  அமையும்  என்ற  எண்ணத்தில்  எழுதினேன்.  நிறையிருப்பின்  நண்பர்களிடம்  பகிருங்கள்,  குறைகாணின்  என்னிடம்  உரையுங்கள்  திருத்திக்  கொள்கிறேன்.

 

                                    முதலில்  கடவுள்  வாழ்த்து.

 

ஈரிரண்டு  துன்பம்  போக்கி  இருவினைகள்  உடன்  அழித்து

இயங்குகின்ற  உயிர்க்கெல்லாம்  இன்னலின்றி  காத்து  நின்று

திவ்யத்தொனியாலே  திருமொழியை  வழங்கி  நின்ற

முக்காலம்  உணர்ந்தவனே  அருகா  உனை  வணங்குகிறேன்                           1

 

            நல்லோரால்  வணங்கப்படுபவன்,  பிறப்பு , பிணி, மூப்பு, இறப்பு  ஆகிய  நால்வகைத்  துன்பங்களும்  இல்லாதவன்,  காதி,  அகாதிகளாகிய  இருவினைகளையும்  அழித்தவர்,  அனைத்து  உயிர்களுக்கும்  துன்பம்  போக்கி  அருளுகின்றவன்,  ஆதி  தீர்த்தங்கரர்  காலம்  தொடங்கி,  தன்மை  வாய்ந்த  அறத்தின்  ஒளியை  உடையவன்,   திவ்வியத்  தொனி  மூலம்  அறம்  உரைத்து,  எல்லாவுயிர்களும்  அதனதன்  மொழியில்  உணரும்படி  செய்தவன்,  மூவுலகும்,  முக்காலமும்  உணரும்  வாலறிவன்,  அத்தகைய  அருகனே  எம்  தலைவன்,  அவரையே  போற்றி  வணங்குகிறேன்.

 

 

அவ்வருகனின்  நல்லறத்தை  அமுதமென  பருகி  நின்ற

சித்தரும்  ஆச்சாரியரும்  தேர்ந்த  நல்  சான்றோரும்

வகுப்புநிலை  ஆய்தலின்றி  வழிபாடு  செய்யும்  ஆற்றல்

எம்  உள்ளத்தே  பெருகியதால்  இயம்புகிறேன்  செய்தி  ஒன்றை                     2

 

            அருகன்  அருளிய  நல்லறமாகிய  அமுதத்தை  உண்டு,  அவன் மேல்  அன்புகொண்ட  சித்தரும்,  ஆச்சாரியரும்,  நல்  சான்றோர்களும்,  மேலோர்,  கீழோர்  என்று  விருப்பு,  வெறுப்பு  கொள்ளாமல்,  அந்த  நல்லறத்தையே  துணையாகக்  கொண்டு,  வழிபாடு  செய்யும்  ஆற்றல்,  என்  உள்ளதில்  பெருகியதால்,  அன்பு  காரணமாக  நான்  கூறும்  செய்தி  ஒன்றுள்ளது.

 

அவையடக்கம் :

 

செங்கமல  மலர்  மேலே  செவ்வடி  பதித்த  அருகனின்

திருவடியை  வணங்கி  நான்  துயில்  கிடந்த  நேரத்தில்

இந்நூல்  நிகழ்ச்சி  அத்தனையும்  நுண்  கனவாய்  நான்  காண

ஆகமத்தில்  இக்கருத்தில்லையென  அகம்  சினந்து  விடல்  வேண்டாம்            3

 

            குளிர்ந்த  தாமரை  மேல்  நடக்கும்  அருகபெருமானின்  திருவடிகளை  வணங்கி,  நான்  உறங்கும்  போது,  என்  கனவில்  கண்டவற்றை  நான்  இங்கு  உரைக்கிறேன்.  அறிவிற்  சிறந்த  சான்றோர்கள்  இந்த  கருத்துக்கள்  நம்  பரம  ஆகமங்களில்  இல்லை  என்று,  கோபம்  கொண்டு  ஒதுக்கிவிட  வேண்டாம் என்று  கேட்டுக்  கொள்கிறேன்.

            பரம  ஆகமம்  என்பது,  நம்  தீர்த்தங்கரர்கள்  தங்களின்  திவியத்  தொனியாலே  அருளிய  நல்லறங்களும்,  தத்துவங்களும்  தான்.  அவைகள்  12  அங்கங்களாக  கூறப்பட்டுள்ளது.  காலப்போக்கில்  ஆகமங்களின்  சிறப்பிற்காகவும்,  விவரித்து  கூறவும்,  பூர்வாகமம்  14  ஆகவும்,  பகுசுருத  ஆகமம்  18  ஆகவும்  சிறப்பிக்கப்பட்டுள்ளதாய்  கூறுகிறார்கள்.  இவ்விரு ஆகம  கருத்துக்களும்  திவ்யத்  தொனியால்  கூறப்பட்ட,  அங்கம  ஆகமம்  12ல்  அடக்கம்  என்றும்  கூறுகிறார்கள்.

 

தாமரை  மேல்  நடந்தவன்  அருகனே  என்பதை  நம்  தமிழ்  இலக்கியங்கள்  பல  தெளிவாக  கூறுகின்றன.

மலர்மிசை  நடந்தோன்  மலரடி  என  சிலப்பதிகாரம்  ( 204 )

செந்தாமரை  மலர்  மேல்  நடந்தான்  என  சீவக சிந்தாமணி  ( 2564 )

விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய் என சூளாமணி (187 )

கமலம்  மீது  உலாவும்  உனை  என  மேருமந்திர புராணம்  ( 66 )

கால்  நிலம்  தோயாக்  கடவுள்  என  நாலடியார்  கடவுள்  வாழ்த்து

தாமரைப்  பூவின்  மேற்  சென்றான்  என  அறநெறிச்  சாரம்  கடவுள்  வாழ்த்து

மலர்  மிசை  ஏகினான்  என  திருக்குறள்

என  பல  நூல்களின்  எடுத்துக்காட்டுகளைக்  கூறலாம்.

 

 

விழிகள்  கண்டு  மையலுரும்  வண்  பேயாள்  நீலகேசி

முனிச் சந்திர  பட்டாரகரின்  முழு  அறங்கள்  கேட்ட  பின்பு

தன்  குணத்தை  விட்டு  நீங்கி  தன்  நெஞ்சத்தில்  மாறுபட்டு

மாந்தர்  தம்  தீவினையை  மாற்றும்  மாண்பு  கொண்டிருந்தாள்                     4

 

 

            அழகிய  மயக்கம்  தரும்  கண்களை  உடையவளும்,  அடக்கமற்ற  செயல்களைச்  செய்பவளுமாகிய  கொடிய  பேயான  நீலகேசி  என்பவள்,  தவத்தில்  உயர்ந்து  விளங்கும்  முனிவரான  சந்திர  பட்டாரகரிடம்  அறம்  கேட்டதன்  பயனாக,  தன்  தீய,  நீல,  துர்குணங்கள்  மாறி,  உயரிய  திருவறத்தை  ஏற்று,  உலகெங்கும்  சென்று  அறப்பணி  செய்யும்  ஆற்றலை  கொண்டிருந்தாள்.

 

            உள்ளத்தில்  உண்டாகும்  குண  பேதங்கள்  ஆறு  வகைப்படும். 1. கிருட்டிண, 2. நீல,  3. கபோத,  4.  பீத,  5.  பதும,  6. சுக்கில.  முதல்  மூன்றும்  தீய  குணங்கள்.  கடை  மூன்றும்  நல்ல  குணங்கள்.  தீயவைகள்  தேய்வதும்,  நல்லவைகள்  வளருவதும்  படிநிலைகள்  ஆகும்.  நீலகேசி  தீய  குணங்களில்  இரண்டாம்  நிலையான  நீல  குணம்  உடையவள்  என்கிறார்  நூல்  ஆசிரியர்.

 

வான்தேவன்  அக்கனவில்  அவள்  வரலாற்றை  எடுத்துரைக்க

நானறிந்த  பொருளெல்லாம்  நற்சிறப்பு  எனத்  துணிந்தேன்

நற்பொருளை  நல்  நூலாக்கி  நாவன்மை  புலவர்களிடையே

அரங்கேற்ற  துணிந்த  என்னை  அவமதிப்பார்  இல்லை  என்க                       5

 

            அந்த  கனவில்  ஒரு  தேவன்  அவளின்  வரலாற்றை  எடுத்துரைக்க, நான்  அறிந்து  கொண்ட  பொருள்கள்  எல்லாம்  சிறப்புடையதென்று  துணிந்தேன்.  என்னுடைய  அறியாமையையே  என்  பலமாக்கி,  அப்பொருளை  ஒரு  நல்ல  நூலாக்கி,  நல்லிசைப்  புலவர்கள்  குழுமிய  அவையில்  ஓதி,  நிலை  நாட்டச்  செய்தேன்.  அந்நூலின்  பொருட்கள்  குற்றம்  உள்ளவை  என  பழித்து  கூறுவார்  யாருமில்லை.

 

ஆழிசூழ்  உலக  மக்கள்  அன்றாடும்  காணும்  மதியும்

தன்னகத்தே  கொண்டுள்ளது  தளராத  களங்கம்  தன்னை - அதுபோல்

என்நூலை  ஓதுவோர்கள்  என்  குற்றம்  சுட்டிக்  காட்ட

அக்குற்றம்  நானும்  ஏற்று  அடியேனும்  திருத்திக்  கொள்வேன்                        6

 

            கடல்  சூழ்ந்த  உலகத்தோர்,  தினமும்  கண்டு,  மகிழ்ந்து,  சுகம்  காணும்  வெண்ணிலாவிடமும்  களங்கம்  இல்லாமல்  இல்லை.  எனவே  என்  சொற்கள்  அனைத்தும்  குற்றம்  இல்லாதவை  என  கூறமாட்டேன்.  இதில்  காணும்  குற்றங்களை  எடுத்துக்  காட்டினால்,  அதை  ஏற்று  நான்  திருத்திக்  கொள்வேன்.

 

காக்கை,  கரிகுருவி,  கோட்டான்  கத்தும்  மொழி  ஆய்தலின்றி

நிமித்தம்  என்று  மனம்  ஏற்று  நம்பி  நாம்  தேறுதல்  போல்

இன்நூலின்  மொழி  ஆய்ந்து  இகழ்கின்ற  தன்மை  விட்டு

நல்லறங்கள்  உள்ளம்  பதிய  நாடிடுவார்  இந்நூலை  ஏற்று                               7

 

            உலகத்து  மக்கள்  தீமை  செய்யக்  கூடிய  காக்கை,  கோட்டான்,  கரிகுருவி  முதலிய  பறவைகளின் கத்தும்   மொழிகளை  ஆராயாமல்,  அவைகள்  நமக்கு  நடக்கப்  போகும்  நிகழ்வுகளை  நிமித்தம்  என்று  கருதி  ஏற்றுக்  கொள்கின்றனர்.  அதுபோல்  இந்நூலின்கண்  காணும்  குற்றங்களை  கருதாமல்  நல்ல  அறங்களையும்  அதன்  இயல்புகளையும்  இகழாமல்  ஏற்றல்  வேண்டும்.

           

                                                தருமவுரைச்  சருக்கம்.

 

நாட்டுச்  சிறப்பு  :

 

நால்வகை  நில  அமைப்பை  நல்லெழிலாய்  கொண்ட  மண்ணில்

மாஞ்சோலைகள்  மிகுந்த  நீலம்  மருதத்தின்  சிறப்பைக்  கூறும்

மாங்கனி  சாரு  சொட்டும்  பைங்கிளியின்  வாய்  அழகு

முதுமையை  இளமையாக்கும்  பசுமையாம்  பாஞ்சால  நாட்டில்                    8

 

            குறிஞ்சி,  முல்லை,  மருதம்  நெய்தல்  என்னும்  நால்வகை  நிலங்கள்  அழகையெல்லாம்  தன்  அகத்தே  கொண்ட  மருத  நிலத்தில்  நீலம்  மிகுந்த  மாஞ்சோலைகள்  மிகுந்து  இருக்கும்.  கிளிப்பிள்ளைகளின்  செவ்வாயில்  மாம்பழங்களின்  மது  போன்ற  சாறுகள்  சொட்டும்.  கண் கிட்டும்  அழகை  கொண்ட  பசுமையானது  கோலூன்றி  நடக்கும்  முதியவர்களையும்,  குதித்தோடும்  இளஞர்கள்  ஆக்கும்,  சீரிய  அழகும்  செழுமையும்  உடையது  பாஞ்சால  நாடு.  கோசல  நாட்டிற்கு  மேற்கே  உள்ளது  பாஞ்சாலம்.

 

குன்றாத  வளமை  கொண்டு  குணவோர்கள்  நன்மதிப்பில்

உலகோர்கள்  கூறும்  மொழியே  உயர்ந்தது  பாஞ்சால  நாட்டில்

வார்த்தைகள்  தேட  வேண்டும்  வளம்  பற்றி  எடுத்துரைக்க

பாஞ்சாலம்  வருந்தி  நோக்கும்  கொஞ்சாமல்  செல்வேனாகில்                        9

           

உலகத்தில்  நற்குணங்களோடு  வாழ்பவர்களுடைய  நல்ல  மதிப்பில்,  என்றும்  வளமை  குன்றாமல்,  அவர்கள்  கூறுவதே  ஒழுக்கதின்  சொல்லாகவும், உயர்  மொழியாகவும்  உள்ள  நாடாகும்.  அந்நாட்டின்  நன்மைகளையும்,  வளங்களையும்  சொல்ல  தமிழில்    வார்த்தைகள்  கிடைக்காமல்  திகைப்பு  ஏற்படும்.  அந்த  நாட்டின்  புகழைப்  பற்றி  கூறாமல்  சென்றால்  பாஞ்சாலமே  வருத்தப்பட்டு,  நம்மை  நோக்கி  மௌனமாகும்.

 

மருதத்தின்  வருணணை  :

 

வருணனின்  கொடை  பெருகும்  வற்றாத  நீரின்  வளத்தால்

வயல்களில்  வாளைமீன்கள்  வளைந்தோடும்  துள்ளலோடு

கண்ணுக்கு  எட்டும்  தூரம்  கவிழ்ந்திட்ட  நெற்பயிர்கள்

கதிர்கொண்ட  பொன்னிறமோ  காண்பவர்  கண்ணைக் கிட்டும்                    10

           

வயலும்  வயலைச்  சார்ந்த  நிலம்  மருத  நிலம்  ஆகும். வருணனின்  பெருங்கொடையால், மாதம்  மும்மாரிப்  பெய்யும்  மழைவளத்தால்,  கழனிகளில்  சேர்ந்துள்ள  நீரில்  வாளைமீன்கள்  வளைந்தும்,  நெளிந்து  துள்ளித்திரியும்.  கண்ணுக்கு  எட்டும்  தூரம்  வரை  செழித்து  நிற்கும்  செந்நெற்பயிர்களின்,  பொன்னிற  கதிர்களின்  வனப்பு,  விழிகளின்  இமையசையாமல்  கண்களைக்  கட்டி  நிற்கும்.

 

கமுகோடு  தென்னை  மரங்கள்  குலைகொண்டு  பருத்திருக்கும்

பழம்  வெடித்து  சுளை  தெரியும்    பலாமரங்கள்  மேனியெல்லாம்

கன்னலோடு  வாழைத்  தோட்டம்  காடுபோல்  வளர்ந்திருக்கும்

கருங்குவளை  மலர்களெல்லாம்  கல்யாண  இல்லமாக்கும்                               11

 

            பாக்கு  மரங்களும்,  தென்னை  மரங்களும்  அவை  சாயும்  அளவு  குலைகள்  பருத்து  தொங்கும்.  பலாமரங்களில்  பழுத்து  தொங்கும்  பெரும்  பழங்கள்,  முற்றும்  பழுத்ததன்  காரணமாக  வெடித்து,  பலாச்சுளைகள்  வெளியே  தெரிய  மரம்  முழுதும்  பொன்னிறமாய்  தோற்றம்  அளிக்கும்.  கரும்புத்  தோட்டமும்,  வாழைத்  தோப்பும்  பெரிய  காடுகள்  போல்  செழித்து  இருக்கும்.  கருங்குவளை  மலர்கள்  பூத்துத்  தொங்கும்  காட்சி,  திருமண  வீட்டின்  அலங்காரம்  போல்  தோற்றம்  தரும்.

 

நெய்தல்  நில  வருணணை :

 

கடல்  அலை  முழக்கத்தோடு  கரை  கவிழ்ந்த  தாழைகளும்

எண்ணற்ற  மலர்கள்  உதிர்ந்து  எழுச்சி  கொண்ட  நறுமணமும்

புன்னை  மரங்கள்  சூழ்ந்து  பொன்னிற  பூக்கள்  தூவும்

நெய்தலின்  அழகை  கண்டு  நேத்திரங்கள்  களைப்படையும்                           12

 

            கடலும்  கடலைச்  சார்ந்த  பகுதி  நெய்தல்  நிலம்.  கடல்  அலையின்  முழக்கத்தோடு,  கடற்கரை  ஓரம்  தாழை  மரங்கள்  பூத்து  நிறைந்திருக்கும்.  எண்ணற்ற  மலர்கள்  அங்கு  உதிர்ந்து  கிடப்பதால்,  அந்த  இடம்  முழுவதும்  நறுமணம்  வீசும்.  புன்னை  மரங்களின்  தோப்பு  பொன்னிறமான  பூக்களை  நிலமகளுக்கு  தூவி  ஆசி  வழங்குவது  போலிருக்கும்.  நெய்தல்  நிலத்தின்  அழகைக்  கண்டு  களித்த  சுகத்தில்  கண்கள்  இரண்டும்  களைப்படையும். 

 

முல்லை  நில  வருணணை :

 

முல்லைக்  கொடிகள்  எல்லாம்  முட்புதர்  போல்  படர்ந்திருக்கும்

வெண்காந்தள்  பூங்கொத்துகள்  வெண்பட்டாய்  விரிந்திருக்கும்

செங்காந்தள்  மலர்கள்  எல்லாம்  சிகப்பு  கம்பளம்  விரிக்கும்

முல்லை  நில  காயஞ்செடிகள்  மொட்டிட்டு  தளிர்  துளிர்க்கும்                        13

 

            காடும்,  காட்டைச்  சார்ந்த  இடமும்  முல்லை  நிலம்.  முல்லைப்  பூ  பூக்கும்  முல்லைச்  செடிகள்  படர்ந்து,  புதர்  போல்  காட்சி  தரும்.  வெண்காந்தள்  செடிகளில்  மலர்ந்துள்ள  பூங்குலைகள்,  வெண்பட்டு  துணி  விரித்தார்  போல்  இருக்கும்.  செந்திறமுடைய  செங்காந்தள்  மலர்கள்  பூத்திருப்பது,  சிவப்பு  கம்பளம்  விரித்து  வரவேற்பது  போல்  இருக்கும்.  முல்லை  நிலத்தில்  வளரும்  காயஞ்செடிகள்  மொட்டுகளுடன்  தளிர்  விட்டு  துளிர்த்திருக்கும்.

 

குறிஞ்சி  நில  வர்ணணை :

 

நாக  மரங்கள்  எல்லாம்  நாற்புறமும்  கிளைகள்  பரப்பும்

வேங்கை  மரங்களெல்லாம்  வான்  தொட்டு  வளர்ந்திருக்கும்

தினைப்புன  குறவர்களின்  கூற்றொலி  குறிஞ்சியில்  பரவும்

ஈராறு  ஆண்டில்  பூக்கும்  குறிஞ்சி  மலர்கள்  இதழ்  விரிக்கும்                          14

           

மலையும்,  மலையைச்  சார்ந்த  நிலமும்  குறிஞ்சி  நிலம்.  கருநாகப்  பழங்கள்  தரும்  நாகமரங்கள்  செழிப்புடன்  கிளைகள்  படர்ந்து  வளர்ந்திருக்கும்.  வேங்கை  மரங்கள்  வானத்தைத்  தொடும்  அளவுக்கு  வளர்ந்து,  நீண்டிருக்கும்.  தினை  விளைந்த  நிலத்தில்  பறவைகளை  ஓட்டியும்,  பாடியும்  மகிழும்  குறவர்களின்  ஓசை  குறிஞ்சி  நிலம்  முழுவதும்  ஒலிக்கும்.  பன்னிரண்டு  ஆண்டுக்கு  ஒரு  முறை  பூக்கும்  குறிஞ்சி  மலர்  இதழ்  விரித்து  மலர்ந்திருக்கும்.

 

கூத்தோடு  பாடல்  இசையும்  குதுகலத்தில்  மிதக்கும்  நாடு

பிழையற்று  நல்லவை  நடக்கும்  புகழினைப்  பெற்ற  நாடு

இசையினில்  இணைந்த  மாந்தர்  இன்பத்தை  நுகரும்  நாடு

மிகுபொருள்  விரும்பா  மனதால்  வறியோர்க்கு  வழங்கும்  நாடு                     15

 

            பாஞ்சால  நாட்டின்  பெருமைகளைக்  கூறிக்கொண்டே  போகலாம்.  மிகுந்த  மகிழ்ச்சியில்  பாட்டும்,  கூத்தும்  தினமும்  நடக்கும்.  தவறு  செய்வோர்கள்,  பிழை  செய்து  வாழ்வோர்கள்  இல்லாத  புகழுடையது.  மக்கள்  என்றென்றும்,  இசையுடன்  இணைந்தும்,  இல்லற  அறம்  காத்தும்  இன்பம்  தூய்ப்பார்கள்.  அனைத்து  மக்களும்,  தேவைக்கு  அதிகமாக பொருள்  சேர்க்க  விரும்பாமையால்,  மற்ற  வறியவர்களுக்கு  வாரி  வழங்கும்  தன்மையுடையவர்கள்.

 

ஐம்பொறிகள்  வென்று  வாழும்  அற ஞானம்  கொண்டோர்  நாடு

தேன்,  கள்,  ஊன்  தவிர்த்திட்ட  தேர்ந்த  ஒழுக்கம்  நிறந்தோர்  நாடு

இல்லறத்தோர்  நல்லறத்தில்  இணைந்து  வாழும்  நல்ல  நாடு

இருவினைகள்  அழிவதற்கு  துறவிகளைக்  கொண்டோர்  நாடு                       16

 

            பாஞ்சால  நாட்டு  மக்கள்  ஐம்பொறிகளையும்  அடக்கி  ஆளும்  ஞானத்தை  உடையவர்கள்.  அதர்ம  உணவுகளாகிய  தேன்,  கள்,  புலால்  முதலியவற்றை  முற்றும்  தவித்து  வாழ்பவர்கள்.  இல்லறத்தார்  கடமைகளையும்,  இல்லற  தருமத்தையும்  கடைபிடித்து,  நல்லறத்தோடு இணைந்து  வாழ்பவர்கள்.  காதி,  அகாதியான  இருவினைகளை  அழிக்கும்,  அறநெறிகளை  உரைக்கும்   அருளாளர்களாகிய  துறவிகளையும்  உடைய  நாடு.

 

நற்குலத்தோர்  தம்  தொழிலில்  நாட்டத்துடன்  நிலைத்தோர்  நாடு

நலன்களினால்  நிறைந்ததென்று  நானிலத்தோர்  மகிழ்ந்த  நாடு

மாதம்  மும்மாரிப்  பெய்து  வளங்களினால்  செழித்த  நாடு

பாலை  நிலம்  மட்டும்  இல்லா  பாஞ்சாலப்  பெரும்  நாடு                                  17

 

            அந்நாட்டு  மக்கள்,  மேன்மையான  நல்ல  குலத்தில்  பிறந்தவர்கள்,  விருப்பத்துடனும், ஆர்வத்துடனும்,  தர்மநெறியான  தொழில்  செய்பவர்கள்.  மற்ற  நாட்டு  மக்கள்  எல்லோரும்    அனைத்தும்  நலங்களும்  நிறைந்த  நாடு  என்று  புகழுவார்கள்.  மாதம்  மூன்று  முறை  மழை  பெய்வதால்  வளமான  செழுமை  உடைய  நாடு.  மணல்  நிறைந்து,  வரண்டு,  செடி  கொடிகள்  வளராத,  எதுவும்  விளையாத  நிலமான  பாலைவனம்  மட்டும்  இல்லாதது  பாஞ்சால நாடு.

 

அரசன்  சிறப்பு  :

 

தேவர்கள்  உலகை  ஆளும்  தேவேந்திரன்  இவனுக்கு  ஒப்பான்

வலிமையைப்  போற்றிச்  சொல்ல  வனத்தரசன்  அரிமா  ஒப்பான்

தெளிந்த  செங்கோல் ஆட்சிக்கு  தென்திசை கூற்றுவனுக்கொப்பான்

நாட்டு  மக்களைக்  காப்பதில்  நல்ல  தாயாவான்  சமுத்திரசாரன்                  18

 

            பாஞ்சால  நாட்டின்  அரசனான  சமுத்திரசாரன்,  விண்ணுலக  அதிபதி  இந்திரனைப்  போல,  மண்ணுலகத்தை  ஆள்பவன்.  அவனது  வீரத்தையும்,  பலத்தையும்  கூறவேண்டுமானால்,  காட்டு  விலங்குகளுக்கு  அரசனான  சிங்கத்திற்கு  சமமானவன்.  நேர்மை  தவறாது  ஆட்சி  செய்வதில்  தென்  திசை  அதிபதி  எமனுக்கு  நிகரானவன்.  குடிமக்களைக்  காத்து  ரட்சிப்பதில்  நல்ல  ஒரு  தாய்க்கு  சமமானவன்.

 

நகரச்  சிறப்பு  :

 

தீயவைகள்  ஏதும்  இல்லா  திருமகள்  வசிக்கும்  நகரம்

தன்னாட்டு  வறியோர்  அன்றி  பிற  நாட்டுக்கும்  ஈயும்  நகரம்

பாஞ்சால  நாட்டை  ஆளும்  சமுத்திரசாரன்  வசிக்கும்  நகரம்

எண்  திசையும்  பரவியுள்ள  புண்டர  வருத்தன  நகரம்                                       19

 

            தீயவைகள்  எல்லாம்  ஒழிந்து,  எப்போதும்  திருமகள்  வாசம்  செய்யும்  செல்வம்  கொழிக்கும்  நகரம்.  தன்னாட்டில்  உள்ள  வறியவர்களுக்கு  வாரி  வழங்குவதைப்  போல்,  பிற  நாட்டு  ஏழை  மக்களுக்கும்  அள்ளிக்  கொடுக்கும்  வள்ளல்  குணம்  கொண்ட,  வளமான  நகரம்.  எட்டு  திசைகளிலும்  விரிந்து,  பரந்த  மிகப்  பெரிய  நகரமான  புண்டர  வருத்தன  நகரம்,  சமுத்திரசாரன்  மன்னன்  வாழும்  அழகு  சொட்டும்  பெரு  நகரம்  ஆகும்.

 

நகரத்தின்  நெடிய  மதில்கள்  நாடிடும்  விண்ணைத்  தொட

முகிலினம்  தவழ்ந்து  மூடிட  முழுமதியின்  ஓட்டம்  நிற்கும்

அழகிய  மதில்லைச்  சுற்றி  அகழிகள்  நிரம்பி  நிற்கும்

அதில்  நீந்தும்  முதலைகளோ  அதன்  உணவை  ஏற்க  விரையும்                    20

 

            நகரை  சுற்றி,  பாதுகாப்பிற்காக  கட்டியுள்ள  பெரும்  மதில்கள்  வானத்தைத்  தொட  முயற்சி  செய்யும்.  அம்மதில்களின்  மேல்  மேகக்கூட்டம்  தவழ்ந்து,  மூடி  விளையாடுவதால்,  வான  வீதியில்  வலம்  வரும்  முழுநிலவின்  ஓட்டம்  நின்று  போகும்.  மதில்களைச்  சுற்றியுள்ள  அகழிகளில்  நீரானது  நிறைந்து  கடல்  போல்  காட்சி  தரும்.  அதில்  உள்ள  முதலைகள்  தங்கள்  உணவுக்காக  அலைந்து,  விரைந்து  திரியும். 

 

நகரத்தின்  ராஜவீதியில்  நகர்ந்திடும்  யானைகள்  கூட்டம்

காற்றென  விரையும்  புரவிகள்  கண்களில்  கிலியைக்  கூட்டும்

பரிகளின்  ஓட்டத்தாலே  பறந்திடும்  தேர்கள்  எல்லாம்

அலையென  திரளும்  மக்கள்  ஒலி  ஆழியின்  ஓசை  ஒக்கும்                            21

 

            நகரத்தில்  உள்ள  ராஜவீதியில்  செல்லும்  யானைகளின்  கூட்டம்  கருங்குன்றுகள்  நகர்வது  போல்  இருக்கும்.  சூறாவளி  காற்றைப்  போல்  விரைந்து  செல்லும்  குதிரைகள்  கண்களில்  பயத்தை  உண்டாக்கும்.  குதிரைகள்  இழுத்து  செல்லும்  தேர் சக்கரங்களின்  ஒலியும்,  அலையென  திரண்டு  செல்லும்  மக்களின்  கூச்சொலியும்  கடல்  அலைகள்  போல்  முழங்கும்.

 

பலாலயம்  என்னும்  நன்காட்டியல்பு  :

 

நகரத்தின்  நல்  ஒலி  மாறி  துயரத்தில்  தோய்ந்த  குரலில்

பகலோடு  இரவும்  சேர்ந்து  பதறியே  அழுவார்  குரலும்

புண்டர  வருத்தன  நகரில்  பலாலயம்  என்னும்  பெயரில்

சமரசம்  நிலவும்  இடமாய்  தனி  ஒரு  சுடுகாடு  இருந்தது                                  22

 

            நகரத்தின்  மகிழ்ச்சியின்  ஆரவார  ஒலி  மாறி,  துன்பத்தில்  மூழ்கி,  ஏங்கி  அழும்  மக்களின்  சோகமான  ஒலியானது,  இரவு,  பகல்  பாராது  இரு  பொழுதுகளும்  ஒலித்துக்  கொண்டு,  பெரியவன்,  சிறியவன்,  செல்வந்தன்,  ஏழை,  மேல்குலம்,  கீழ்குலம்  என்ற  எந்த  பாகுபாடும்  இல்லாத,  இறந்த  உடல்களைச்  சுடும்  சமரசம்  உலாவும்  ஒரே  இடமாக,  பலாலயம்  என்னும்  பெயர்  கொண்ட  சுடுகாடு  ஒன்று  அந்த  புண்டர  வருத்தன  நகரில்  இருந்தது.

 

வாகைமரத்  தோப்பினோடு  வளர்ந்த  மூங்கில்  புதர்களோடு

பகலினை  இரவாய்க்  காட்டும்  பரந்த  இடுகாட்டினுள்ளே

குழிந்த  கண்கள்  கூகைகளோடு  கோரவுரு  பேய்கள்  வாழுமிடம்

கண்டவர்  நெஞ்சம்  அஞ்சும்  கண்களும்  மங்கிச்  சாயும்                                   23

 

            வாகைமரத்  தோப்புகளும்,  அடர்ந்து  வளர்ந்த  மூங்கில்  புதர்களும்,  சூரிய  ஒளியை  உள்ளே  நுழைய  விடாததால்  அந்த  சுடுகாடு  பகலிலோயே  இரவு  போல்  தோன்றும்.  குழிந்த,  குண்டு  கண்களையுடைய கூகைகளும்,  கோரமான  உருவம்  கொண்ட  பேய்களும்  வாழும்  இடமான  அந்த  சுடுகாட்டை,  கண்டவர்கள்  நெஞ்சம்  பயத்தில்  நடுங்க,  கண்கள்  மயங்கி  விடும்.

 

பிணம்  சுடும்  புகையின்  இருளை  பிணம்  எரியும்  தீயே  போக்க

ஊமத்தங்  கூகையும்  நரியும்  உடன்  மாறி  மாறி  குரல்  எழுப்ப

பாடையும்  மாலைகளும்  சூழ்ந்து  பிளந்த  தலைகள்  வெளியே    தெரிய

அப்பெருஞ்  சுடுகாடு  என்றும்  அருவருப்பின்  இடமாய்  அமையும்                 24

 

            பிணங்களை  எரிக்கும்  புகை  இருளாய்  கவிழ,  அந்த  எரியும்  பிணங்களின்  தீயே  விளக்காய்  அமைந்தது.  ஊமைக்  கோட்டான்களும்  நரிகளும்  மாறி  மாறி  கொடுமையான  சத்தத்தை  எழுப்பின.  பிணம்  எரிப்பதால்  மாலைகள்  சுற்றிய  தலைகள்  வெடித்து,  சிதற,  அந்த  சுடுகாடு  அருவருப்பு  மிக்க  இடமாக  அமைந்தது. 

 

காக்கைகள்  கரைந்து  கத்த  கழுகுகள்  சூழ்ந்து  சுத்த

கள்ளிகள்  அடர்ந்து  நிற்க  கட்டை  போல்  எலும்புகள்  கிடக்க

பேய்கள்  தம்  சுற்றத்தோடு  பிணங்களை  போட்டியில்  இழுக்க

பலாலயம்  காட்டின்  தோற்றம்  பார்ப்பவரை  பதறச்  செய்யும்                        25

 

            காக்கைக்  கூட்டங்கள்  கடூரமாய்  கத்த,  சிவந்த  கழுத்தையுடையா  கழுகுகள்  பிணங்களுக்காக  அலைந்து  சுற்ற,  கள்ளிச்  செடிகள்  புதர்கள்  போல்  வளர்ந்து  இருக்க,  மனித  எலும்புகள்  கட்டைகளைப்  போல சிதறி  கிடக்க,  வண்மனம்  கொண்ட  பேய்கள்  தங்கள்  சுற்றங்களோடு,  பிணங்களை  போட்டி  போட்டுக்  கொண்டு  இழுக்க,  பலாலயம்  சுடுகாடு  பார்ப்பவர்களை  பதறி  ஓடச்  செய்தது. 

 

பலாலயம்  சுடுகாட்டின்  அருகே  பிடாரியின்  கோயில்  ஒன்றை

நான்கு  திங்கள்  இடமாய்  கொண்டு  நெஞ்சினில்  தியானம்  இருத்தி

அழிவற்ற  மெய்பொருள்  இயல்பை  அடிமனதில்  உணர்ந்து  வாழும்

அத்தனையும்  துறந்து  விட்ட   அருள்  முனிவர்  அங்கு  இருந்தார்                    26

 

            பலாலயம்  சுடுகாட்டின்  அருகில்  ஒர்  பிடாரி  அம்மன்  கோயில்  இருந்தது.  அந்த  கோயிலில்,  அந்த  காட்டை  இருப்பிடமாகக்  கொண்டு, முனிவர்கள்  மழை  காலத்தங்கலாகிய,   நான்கு  மாதங்கள் ஒரு  முனிவர்  தங்கி  இருந்தார்.  அவர்  பொறுமையில்  பூமியைப்  போன்றவர்.  ஆற்றலில்  மேரு  மலையைப்  போன்றவர்.  ஐம்புலன்  உணர்வுகளை  தியானத்தால்  அடக்கி  மனதினை  கட்டுக்குள்  வைத்து  இருப்பவர்.  அழிவற்ற  மெய்ப்பொருள்களின்  இயல்புகளை  நெஞ்சில்  நிறுத்தியவர்.  அனைத்தையும்  துறந்து  வாழும்  அருள்  முனிவர்.

 

ஐவகை  அத்திகாயங்களையும்  அளவைகளால்  ஆய்ந்து  அறிந்து

ஐயமறத்தேர்ந்து  தெளிந்து  ஐங்குணங்களை  அகத்திற்  கொண்டு

ஈராறு  தவங்களை  ஏற்று  இனி  வரும்  பிறவிகள்  அறுக்கும்

அருளாளன்,  துறவோன்  அவரே  ஆன்ம  முனி  சந்திர  பட்டாரகர்                   27

           

ஐந்து  அத்திகாயங்களை  நன்கு  ஐயமற  அறிந்த,  துறவிகளின்  ஐந்து  ஒழுக்கங்களை  மனதில்  பதித்த,  12  தவங்களை  கருத்தில்  கொண்ட,  இனி  வரும்  பிறவிகளை  அறவே  அறுத்த,  அனைத்தும்  துறந்த  அருளாளன்  முனிச்  சந்திர  பட்டாரகர்  அவ்விடத்தில்  இருந்தார்.

அத்திகாயம் :  அத்தி  என்றால்  மூன்று  காலத்திலும்  நிலைத்து  இருத்தல்.  காயம்  என்றால்  உடல்  போல்  பாரந்து  பட்ட  இடம் ( பிரதேசம் ). நிலத்த  தன்மையும்  மிகுந்த பிரதேசங்களையும்  உடையது  அத்திகாயம்.  ஆறு  பொருள்களில்  காலம்  நீங்கலாக  உள்ள  மீதி  ஐந்தும்  ஐந்து  அத்திகாயங்கள்.  உயிர்,  உயிரில்லாதவை,  தன்மம்,  அதன்மம்,  ஆகாயம்..

துறவிகளின்  ஐந்து  ஒழுக்கங்கள்  :உயிர்களுக்கு  ஊறு  செய்யாமல்  இருத்தல்,  அளவோடு  பேசுதல்,  உணவை  சோதித்து  உண்ணல்,  பொருளை  கவனமுடன்  கையாளுதல்,  மலம்,  சிறுநீர்  கழிக்கும்  இடத்தை  சோதித்தல்.

அகத்தவம்  6,  புறத்தவம்  6,  ஆக  தவம்  12. 

 

உயிர்  பலி  கொடுக்க  வந்த  ஊர்  மக்களை  முனிவர்  தடுத்து

இப்பலி  கொடுத்து  நீங்கள்  இனி  என்ன  பெறுவீர்  என்றார்

மகவில்லா  இந்த  மங்கை  மகப்  பேறு  பெறுதல்  வேண்டி

பிடாரி  தாய்க்கு  பலியை  ஈந்து  பிராத்தனை  செய்வோம்  என்றனர்            28

 

            அந்த  பிடாரி  கோயிலில்  சிலர்,  அம்மனுக்கு  பலி  கொடுக்க ஒரு  ஆட்டுக்  கிடாயுடன் வந்தனர்.  முனிவர்  அவர்களைத்  தடுத்து,  இந்த  ஆட்டின்  உயிரை  வதைத்து  நீங்கள்  என்ன  பெறப்  போகிறீர்கள்  என்று  கேட்டார். அதற்கு  அவர்கள்,  முனிவரே,  இந்த  பெண்ணுக்கு  குழந்தை இல்லாததால்,  இந்த  அம்மனிடம்  வேண்டிக்  கொண்டோம்.  குழந்தப்  பிறந்ததால்,  இந்த  தெய்வத்தை  மகிழ்விக்கவும்,   வேண்டுதலை  நிறைவேற்றவும்,  இவ்வாட்டை  பலி  கொடுத்து  சிறப்பு  செய்யப்  போகிறோம்  என்று  கூறினார்கள். 

 

 

பெருந்தவம்  செய்து  நீங்கள்  பெற்றுள்ளீர்  மனித  பிறவியை

மண்  உயிரை  வதைக்கும்  செயலால்  மாபெரும்  நரகில்  வீழ்வீர்

மண்  மாவில்  உருவம்  செய்து  மாரிக்கு  பலி  இட்டாலும்

உயிர்  பலியின்  பாவனையால்  உங்கள்   உயிரில்  கருமம்  சேரும்                 29

 

            முப்பிறவியில்  செய்த  நல்வினைப்  பயனாலும்,  செய்த  நல்  தவத்தாலும்  நீங்கள்  மனிதப்  பிறவியை  எடுத்துள்ளீர்கள்.  மண்ணில்  பிறந்துள்ள  எந்த  ஒரு  உயிரையும்  வதைப்பது  உங்களை  மிகக்  கொடுமையான  நரகத்தில்  தள்ளும்.  தெய்வத்திற்கு  படையல்  இடுவதான  வேண்டுதலை,  நிறைவேற்ற  மாவினால்  உருவங்கள்  செய்து,  பலி  என்ற  பெயரில்  இட்டாலும்,  உயிர்  பலி  பாவனையால்,  உங்கள்  உயிரில்  தீய  கர்மங்கள்  சேரும்.

            தெய்வங்களுக்கு  இவ்வாறு  படையலிடுதல்,  மும்மூடங்களில்  சேரும்.  நற்காட்சி  உடையவர்கள்  இதனை  செய்யமாட்டார்கள்  என்பது  சமணக்  கொள்கையாகும்.

 

கொலை  களவு  பொய்யினோடு  பிறன்மனையை  விரும்பிச்  சேரல்

மிகுபொருளை  மனம்  விரும்பல்  மிகப் பெரும்  பாவம்  என்றார்

முனிவரரின்  அறமொழிகளை  முழுவதும்  கேட்ட  ஊர்மக்கள்

சந்திர  பட்டாரக  முனிவரரின்  தாள்  பணிந்து  ஊர்  திரும்பினர்                    30

 

உயிர்  கொலை  செய்தல்,  பொய்  பேசுதல்,  கொடிய  திருட்டு  செயலை  செய்தல்,  பிறன்  மனையை  விரும்பிச்  சேரல்,  தேவைக்கு  அதிகமாக்  பொருள்  சேர்த்தல்  அனைத்தும்  மிகப்  பெரும்  பாவங்கள்.  இப்பாவங்களைத்  தவிர்த்து,  இல்லறம்,  துறவறம்  என்ற  இரு  நிலைகளில்  இல்லறத்தாரின்  ஒழுக்கங்களை  ஏற்று,  அணுவிரதங்களைக்  கைக்கொள்ளுங்கள்  என்று  கூறிய  முனிவரின்  நல்லறங்களை  மக்கள்  ஏற்று,  ஊர்  திரும்பினர்.

 

சந்திர  முனியின்  திருவறத்தை  செவிமடுத்த  பேய்கள்  எல்லாம்

நிலத்தின்  கண்  ஒன்று  கூடி  நாம்  முனிவனிடம்  சென்றோமாகில்

நம்  குறையை  கேட்கமாட்டான்  நமையழிப்பான்  தவநெறியால்

இவ்விடத்தை  விட்டகன்று  வேறு  வழி  காண்போம்  என்றன                            31

 

            சந்திர்  பட்டாரகரின்  திருவறத்தை  அங்கு  வாழும்  பேய்கள்  எல்லாம்,  கேட்டு,  ஒன்று  கூடின.  உயிர்  பலி  கொடுக்காததால்  தங்களுக்கு  உணவு  கிடைக்கவில்லை,  இக்குறையை  இந்த  முனிவனிடம்  கூறினால்,  அவன்  நம்மைப்  பற்றி  சிந்திக்காமல்,  தன்  தவநெறியால்  நம்மையெல்லாம்  அழித்து  விடுவான்  என்ற  அறியாமையால்  முனிவரிடம்  செல்லாமல்,  அவ்விடத்தை  விட்டு  அகன்று, வேறு  வழியை  சிந்திக்கத்  தொடங்கின.

 

பாரினில்  பல  நாடுகள்  சென்று  பலமுள்ள  வண் தெய்வம்  கண்டு

அத்தெய்வம்  அடியை  தொழுது  அதனிடம்   குறையைச்  சொன்னால்

அதன்  மனது  நமக்கு  இரங்க  அதையழைத்து  வந்தோமானால்

முனிவரனை  விரட்டி  விட்டு  முன்  போல்  நாம்  வாழலாம்  என்றன              32

 

            இனி  நாம்  பரந்து  கிடக்கும்  பல  நாடுகள்  சென்று,  ஒரு  வலிமையான தெய்வத்தை  கண்டு,  அதை  வணங்கி,    நம்  குறையை  கூறினால்,  அந்த  தெய்வம்  இரக்கப்பட்டு  நமக்கு  உதவி  செய்யும்.  அதை  அழைத்து  வந்து  இந்த  முனிவரை  இந்த  காட்டில்  இருந்து  விரட்டி  விட்டு,  நாம்  முன்  போல்  வாழலாம்  என்று  முடிவு  செய்தன.

 

காசி  நாடெல்லாம்  அலைந்தன  சேடிய  நாட்டுக்கு  சென்றன

வேறு  பல  நாடுகள்  சென்றும்  வண்  தெய்வம்  கிடைக்கவில்லை

தென்  திசை  நோக்கி  வந்து  செந்தமிழ்  நாட்டில்  உறையும்

நீலகேசியை  கண்டு  தொழுது  நிலமையை  எடுத்து  கூறின                            33

 

காசி  நாட்டிற்கு  சென்று  தேடின,  சேடிய  நாட்டில்  அலைந்தன,  மற்றும்  பல  நாடுகளுக்கு  சென்று  தேடிப்  பார்த்தன.            எந்த ஒரு வலிமையான தெய்வமும் கிடைக்கவில்லை.  வேறு வழியின்றி  தென்திசை  நோக்கி  வந்தன.  செந்தமிழ்  நாட்டில்  நீலகேசி  என்னும்  பேயைக்  கண்டு,  அதைத்  தொழுது,  தங்களீன்  நிலமையை  எடுத்து  கூறி  உதவி  கேட்டன.

 

அன்னையே  ஒரு  அறத்துறவோன்  யாம்  வாழும்  சுடுகாடு  வந்து

எமக்கீனும்  படைச்  சோற்றுடன்  இடும்  பலியை  தீவினையென

பாமரரிடம்  கூறித்  தடுத்து  பட்டினியில்  எங்களை  வருத்தும்

அம்முனிவனை  விரட்டி  விட்டு  அடைக்கலம்  தாரும்  என்றன            34

 

            அன்னையே,  பொதுவாக  மக்கள்  சுடுகாட்டை  கண்டு  அஞ்சுவார்கள்.  ஆனால்  ஒரு  தவமுனிவன்  கொஞ்சமும்  பயம்  இன்றி  எங்கள்  சுடுகாட்டில்  வந்து  தங்கி,  எங்களுக்கு  படைக்கும்  சோற்றையும்,  பலியையும்,  தீவினை  என்று  மக்களுக்கு  சொல்லி,  எங்களைப்  பட்டினியால்  வாட  வைத்துள்ளான்.  அம்முனிவனை  அங்கிருந்து  விரட்டி  விட்டு,  எங்களுக்கு  அடைக்கலம்  தாருங்கள்  என்றன.

 

 அருந்தவம்  செய்யும்  துறவோன்  உம்  அனைவருக்கும்  பகைவனாகி

நம்  காட்டின்  உள்ளே  வந்து  நமக்கு  எதிராய்  பொழுதை  கழிக்கும்

புல்லனைக்  கொன்று  அவனுடலை  புழு, கழுகுகட்கு  உணவாய் தருவேன்

எனைத்தொடர்ந்து  வாரும்  என்று  பலாலயம்  வந்தாள்  நீலகேசி                    35

 

            அருந்தவத்தை  மேற்கொள்ளத்  துணிந்தவன்,  உங்களுக்கு  பகைவனாகி,  நம்  காட்டினுள்  நுழைந்து  தங்குவது,  ஒன்றும்  பெரிய  விஷயம்  இல்லை,  பொருத்தமானதும்  கூட.  அந்த  முனிவனைக்  கொன்று,  அவன்  உடலை,  கழுகுகளுக்கும்,  புழுக்களுக்கும்  உணவாக  ஆக்குவேன்.  என்னை  தொடர்ந்து  வாருங்கள்  என்று  கூறி,  நீலகேசி  பலாலயம்  சுடுகாட்டுக்கு  வந்தாள்.

 

பெருந் துறவி சந்திரர்  எதிரே  பேரிருள்  கரு  உருவம்  கொண்டு

வானிலே  எழுந்து  உயர்ந்து  உனை  விழுங்கிட  வந்தவள்  அல்ல

உன்னை  நீயே  உயர்ந்து  வியக்கும்  பேதமை  உடையோளுமல்ல

நெடுமலை  உச்சியில்  இருந்து  நிலத்தினில்  உனை  வீசுவேன் என்றாள்       36

 

            பெரிய  தவவலிமை  மிக்க  முனிவர்  சந்திர  பட்டாரகரின்  முன்னே  பேரிருட்டாய்  கரிய  உருவம்  கொண்டு  நின்றாள்.  முதலில்  வானளவு  உயர்ந்து  நின்றாள்.  உன்னை    பயமுறுத்த  வந்தவளில்லை,  என்  வாயால்  உன்னை  விழுங்கி  விடுபவளும்  இல்லை.  உன்னை  நீயே  உயர்வாய்,  வியந்து  இருக்கும்  பேதமை  உடையவளும்  இல்லை.  மிக  உயர்ந்த  இந்த  மலைமேல்  உன்னைத்  தூக்கிக்  கொண்டு  சென்று  அங்கிருந்து  நிலத்தில்  வீசிக்  கொல்வேன்  என்றாள்  நீலகேசி.

 

அருகனின்  பரமாகங்களை  ஆய்ந்து  ஓதி  தெளிந்துணர்ந்து

அறங்களை  நன்கு  அறிந்து  அழியாப்  பொருள்  இயல்புணர்ந்து

மெய்யறிவு  முழுஞானம்  பெற்று  வியந்தரர்கள்  அச்சம்  போக்கிய

முனிவரர்  முழுதும்  அறிந்தார்  நீலகேசியின்  நெறியற்ற  செயலை               37

 

            அருகன்  அருளிய  திருமொழியின்  மூலம்  உயரிய  ஒழுக்கங்களை  அறிந்து  தெளிந்தவரும்,  மூன்று  காலங்களிலும்  அழியாமல்  நிலைப்  பெற்று  இருக்கும்  மெய்ப்பொருளை  உணர்ந்தவரும்,  இப்படிப்  பட்ட  வியந்திர  தேவர்கள்  உயிரினங்களை  அச்சுறுத்துதல்  உண்டு  என்று  அறிந்தவருமான  முனிவர்  நீலகேசியின்  முறையற்ற  செயலை  அறிந்து  கொண்டார்.  வியந்திர  தேவர்கள்  8  வகையினர்.  விரும்பிய  உடல்  எடுக்கவும்,  விரும்பிய  இடம்  செல்ல  வல்லவர்கள். நீலகேசி 8 ஆம் வகை.

                                               

 

. பொருள்  இயல்பில்  புலமைப்  பெற்று  மெய்நூல்கள்  முழுதுணர்ந்து

அறநெறியோடு  அருளியல்புடைய  அம்முனிவர்  சந்திர பட்டாரகர்

நீலகேசியின்  அச்சுறுத்தலை  நீர்  கொண்ட  குமிழாய்  போக்கி

அவளது  ஆற்றலின்மையை  அவர்  திறனால்  உணர்த்த  எண்ணினார்            38

 

மெய்ப்பொருள்களின்  திறங்களைத்  தன்  புலமையினால்  நன்கு  உணர்ந்தவரும்,  நல்லற நெறிகளோடு,  அருள்  இயல்பைக்  கொண்ட  முனிவர்  சாந்திர  பட்டாரகர்,  நீலகேசியின்  அச்சுறுத்தலை,  நீர்  மேல்  குமிழியாய்,  ஒதுக்கித்  தள்ளி,  நீலகேசியின்  ஆற்றல்  இல்லாமையை  அவளுக்கு,  தன்  திறமையால்  உணர்த்த  விரும்பினார். 

 

நீலகேசி  வானத்தில்  உயர்ந்து  நெடுமலையொத்த  வானவில்லோடு

முகில்  மோதி  முழக்கம்  செய்யும்  இடியொலியாய்  வெடி ஒலி  கக்க

ஐந்து  தலை  நாகம்  தனது  நாக்கினை  தீயாய்  நீட்டி  காட்டி

பல்வேறு  உருவம்  தன்னில்  பாதி  உடல்  காட்டித்  திரிந்தாள்                           39

 

            நீலகேசி  வானளவு  உயர்ந்து,  பெரும்  மலையைப்  போல  பரந்து, பருத்து,  வானவில்லுடன்  தோன்றினாள்.  மேகங்கள்  ஒன்றோடு  ஒன்று  மோதி,  பேரிடியாய்  ஒலிப்பது  போல  வெடி  முழக்கம்  செய்தாள்.  ஐந்து  தலைகளைக்  கொண்ட  மிகப்  பெரிய  நாகமாக  உருவெடுத்து,  தனது  வாய்  திறந்து,  நாக்கினை  நீட்டி,  தீயினை  கொட்டிக்  காட்டினாள்.  இன்னும்  பல்வேறு  உருவங்களை  எடுத்து  பாதி  உடலைக்  காட்டித்  திரிந்தாள்.

 

பற்களின்  இடையே  இருந்து  பரவும்  தீ  தோன்ற  நகைத்து

கார்கால  மேகங்கள்  மோதிட  கடும்  ஒலி  எழுவது  போல்  இறைந்து

மலை  முழை  போன்ற  வாயால்  மாந்தர்கள்  மனம்  கலங்கிட  கத்தி

குழல்  நிறைந்த  தன்  கரத்தை  குகையொத்த  வாயிலிட்டு  நின்றாள்            40

 

            தனது  நீண்ட,  வளைந்த  கோரைப்  பற்களிடையே  தீயானது  சிதறும்படி  சிரித்தாள்.  கேட்போர்  மனம்  கலங்கும்படி,  மழை  கால  மேகங்கள்  இன்றோடு  ஒன்று  மோதி  ஒலியும்,  ஒளியும்  எழுப்புவது  போல்  இறைந்து  கத்தினாள்.  மலைக்குகை  பேன்ற  தன்  வாயினைத்  திறந்து  மக்கள்  நடுங்க  கத்தினாள்.  பனைமடல்  பேன்ற,  நெடிய  மயிர்கள்  நிறைந்த  தனது  கைகளை  வாயினுள்  இட்டுக் கொண்டு  நின்றாள்.

 

பெருந்துகள்  பெருகும்  வண்ணம்  பெருங்  காலால்  நிலத்தை  உதைத்து

வயிற்றின்  மேல்  இருகை  கொண்டு  அடித்து  பெரும்  ஓசை  எழுப்பி

தீ  மழை  நிலத்தில்  கொட்ட  திக்கெட்டும்  ஊளையிட்டு  முழங்க

கண்டிடும்  இடங்களெல்லாம்  கனல்  வட்டம்  போல  சுழன்றாள்                      41

 

            அவள்  பூமியெங்கும்  புயல்  போல்  புழுதி  கிளம்புமாறு  தனது  பருத்த  கால்களால்  பூமியை  உதைத்தாள்.  தனது  வயிற்றின்  மேல்  தன்  இரு  கரங்களால்  பட படவென  பெருஓசை  கிளம்புமாறு  அறைந்து  கொண்டாள்.  தீயானது  மழை  போல்  நிலத்தில்  கொட்டும்படி  செய்தாள்.  கேட்போர்கள்  அஞ்சும்படி வாயைப்  பிளந்து  ஊளையிட்டாள்.  பார்க்கும்  இடமெல்லாம்  தனது  உருவம்  தெரியும்படி  தீயாய்  சுழன்று  வட்டமிட்டாள்.

 

கண்டவர்  அஞ்சி  ஓட  நிற்பாள்  கல்மழை  போல்  கற்கள்   எறிவாள்

வில்லின்  கண்  கணைகள்  ஏற்றி  மிரண்டு  ஓட  தொடர்ந்து  எய்வாள்

பிணத்  தசையை பல்லால் கிழிப்பாள் பசிக்கு முனியை கொல்வேனென்பாள்

பலசொல் கூறியும்  அச்சுறுத்தியும்   பின்அச்சத்தால்  செய்யாது  விட்டாள்       42

 

            பார்ப்பவர்கள் பயந்து  ஓடும்படி  கற்களை  மழையாக  கொட்டுவாள்.  வலிய  கணைகளை  வில்லில்  பொருத்தி,  அனைவரு  மிரண்டு  ஓடும்படி  தொடர்ந்து  வீசுவாள்.  தனது  இரு  புருவங்களையும்  நெரித்துக்  கொண்டு,  தன்  வலிய  பற்களால்  பிணங்களின்  தசைகளை  கிழித்து  காட்டுவாள்.  என்னுடைய  பசிக்கு  இந்த  முனிவனை  கொன்று  சாப்பிடுவேன்  என்று  திரும்பத்  திரும்ப  கூறுவாள்.  பின்பு அச்சம் கொண்டாள்.   அவ்வச்சத்தால்  செய்யாது  விட்டாள்.

 

கொலை  குணம் கொண்ட  சிங்கமும்  சிறுத்தையும்  புலியும்  யானையும்

பிறர் அஞ்சும் தன்மையுள்ள  பெருஞ்சின  விலங்குகளையும்

கண்டு அஞ்சா கடுஞ்சினம் கொள்ளா  அறதவம்  கொண்ட  முனிவரை 

அழித்திட  எண்ணினேனாகில்  அவர் ஆற்றல்  என்னை  அழிக்கும்               43                   

            யானை, பெரியபுலி, வலிமையான காளை, சிறுத்தை, பிற  விலங்குகளைக்  கொல்லும்  சினங்கொண்ட,  பார்த்து  அஞ்சும்  தன்மையுள்ள,  வலிமைப்  பெற்ற  சிங்கம்  என  பல  கொடிய  விலங்குகளைக்  கண்டும்,  சிறிதும்  அஞ்சாத,  மாபெரும்  தவத்தையுடைய  அறவோனாகிய  இம்முனிவரை  அழிக்க  எண்ணினால்,  அவருடைய  ஆற்றலே  என்னை அழிக்கும் என்று  எண்ணினாள்.

 

 

சிந்தையில்  அறிவினை  இழந்து  சிதைப்பேன் தவநிலை   என்றேன்

சிறந்த  நற்குணங்கள்  கொண்டோன்  சிறிதும்  மாயை கொண்டோனில்லை

என்  செருக்கு  அழிந்தது  என்றும்  உன்  தவநிலை  அறிந்தேனின்று

கொடுஞ்செயல்  ஒழியும்  இனி  என  முனிவரன்  திருவடி  தொழுதாள்              44

 

            என்  மனதில்  சிறிதும்  அறிவில்லாமல்,  இவன்  தவநிலையை  அழிப்பேன்  என்று  அச்சுறுத்தினேன்.  இவனோ  மாயவித்தைகள்  ஏதும்  இல்லாத,  சிறந்த  குணங்களை  உடைய  தவ  வலிமை  மிக்க  முனிவன்.  இந்த  முனிவரின்  விருப்பம்  இல்லாமல்  இவரின்  முன்  நிற்பதே  அரிய  செயலாகும்  என்று  நினத்து,  என்  ஆணவம் அழிந்தது,  முனிவரின்  தவநிலையை அறிந்தேன்,  இனி கொடுஞ்செயல்  ஏதும்  செய்யமாட்டேன் என்று  முனிவரின்  திருவடிகளை  தொழுதாள்.

 

கண்டவர்  மயங்கும்  அழகில்  கன்னியாய்  உருவம்  கொண்டு

வஞ்சகம்  நெஞ்சில்  நிறைந்து  வஞ்சியவள்  முனி  முன்  நின்று

பழவினைகள்  முழுதும்  அழிய  பகருங்கள்  அறம்  என்  கேட்டு

காமத்தால்  முனியினை  மயக்கி  தவத்தினை  அழிக்க  எண்ணினாள்            45

 

            கண்டவர்கள்  மயங்கும்  அழகுடைய  இளம்  நங்கையாக  உருவம்  கொண்டு,  வஞ்சகத்தையும்,  தந்திரத்தையும்  மனம்  முழுக்க  வைத்துக்  கொண்டு,  முனியின்  முன்  சென்று,  அவரை  வணங்கி,  என்னுடைய  பழைய  வினைகளையும்,  அவைகளை  அழிக்கும்  நல்லற  நெறிகளையும்  சொல்லுங்கள்  என்று  கேட்டு,  தன்  காமவிழிகளைக்  கொண்டு,  முனிவனை  மயக்கி  வீழ்த்தி,  அவரின்  தவத்தை  அழிக்க  நினைத்தாள்

 

சமுத்திரசார  மன்னன்  பெற்ற  தன்னிகரற்ற  மகள்  காமலேகை

திருமகள்  புகழும்  அழகும்  தேவர்கள்  மயங்கும்  உருவும்

தன்  அகத்தே  கொண்ட  அவளின்  திருவுருவை  நீலகேசி  ஏற்று

தாதியர்  சந்தனம்  பூக்கள்  ஏந்த  தவமுனிவர்  முன்னால்  நின்றாள்               46

 

            சமுத்திரசாரனின்  மகள்,  தன்னிகர்  இல்லாத  பேரழகி  காமலேகை.  திருமகளே  வாய்  திறந்து  புகழும்  அழகும்,  விழியசையா  விண்ணுலக  தேவர்களும்,  விழியசைத்து  நோக்கும்  உருவம்  கொண்டவள்.  அத்தகைய அழகுடைய  காமலேகையின்  உருவமாக  நீலகேசி  மாறினாள்.  அரச  மகள்  என்பதால்  தாதியர்கள்   சந்தனம்,  மலர்கள்  முதலியவற்றை  கையில்  ஏந்தி  தன்னை  சூழ்ந்து  வர,  தவமுனிவர்  முன்னால்  நின்றாள்.

 

                                           

வலங்கொண்டு  சுற்றி  வந்தவள்  வலிய  தவத்தோன்  அடியை  தொழுது

தோழியர்  அவள்  அழகைப்  போற்றி  துலங்கிடும்  அவள்  குணங்கள்  பாட

சிற்றிடையணிந்த  மேகலை  மின்ன  செழுமையாம்  உடலும்  குழய

அருந்தவ  முனிவரன்  கண்டிட  அவளழகை  காட்டித்  தொழுதாள்                  47

 

            பேய்  உருவில்  இருந்து,  பேரழகியான  காமலேகையின்  உருவெடுத்த  நீலகேசி, வலமாக  மும்முறைச்  சுற்றி  வந்து,  வலிய  அறத்தவத்தோன்  சந்திர  பட்டாரகரை  தொழுதாள்.  உடன்  வந்த  அவளின்  தாதியர்கள்,  அவளின்  குணங்களையும்,  அழகையும்  போற்றிப்  பாடினர்.  இருகையில்  அடங்கும்  சிறிய  இடையில்  மேகலை  அணிந்து,  வளமான  அவளது  மென்னுடல்  குழைய,  காமவிழிகளுடன்,  அவளது  அழகை  முனிவருக்கு  காட்டி  தொழுது  நின்றாள். 

 

அருளாசி  வழங்கும்  முனிவரரே  அருளுவீர்  தீவினைகள்  அழிய  என்றாள்

உடலோடு  உயிர்  பொருந்திய  ஒற்றுமை  வேற்றுமைகளை  அறிந்து

உடம்போடு  உயிர்  இரண்டற  கலக்க  உருவான  வினைகளை  அகற்ற

ஆகம  நெறிகளை  அறிந்த  முனி அவளொரு  பேய்  மகளென  அறிந்தார்     48

 

            மிகுந்த  தவத்தையுடைய  பெரியோனே,  என்  தீவினைகள்  எல்லாம்  அழிந்திட,  நான்  என்ன  செய்யவேண்டும்  என்ற  நல்லறங்களை  எனக்கு  சொல்லுங்கள்  என  வேண்டினாள்.  உடம்புக்கும்,  உயிருக்கும்  உள்ள  ஒற்றுமை  வேற்றுமைகளையும்,  அவ்வுடம்போடு  உயிர்  தங்கி  இருப்பதற்கு  காரணமான,  பலவகை  வினைகளை  அகற்றும்,   ஆகம  நெறிகளை  அறிந்தவனுமான  முனிவன்,  வந்திருப்பது  பாராளும்  மன்னன்  மகள்  அல்ல,  போராடும்  பேய்  மகள்  என்று  அறிந்தார்.

 

யோகத்தைச்  சற்றே  நிறுத்தி  மோகத்தாள்  நீலகேசியை  வாழ்த்தி

இவ்விடம்  தேடி  வந்தமைக்கு  என்ன  காரணம்  என்று  வினவ

முன்னர்  நான்  வேண்டிக்  கொண்ட  வரங்களின்  கடனைத்  தீர்க்க

முறைப்படி  தெய்வப்  படையலிட்டு  முன் கடன்  தீர்க்க  என்றாள்                   49

 

            தனது  தியானத்தை  சற்றே  நிறுத்தி,  காமமோகத்தை,  உள்ளம்,  உடலில்  குழைத்து  நின்ற  நீலகேசியை  வாழ்த்தி,  என்னை  நாடி  வந்த  காரணம்  என்னவென்று  கேட்டார்.  அதற்கு  காமலேகை  உருவில்  உள்ள  நீலகேசி,  முன்பு  நான்  வேண்டிக்கொண்டபடி  நான்  பெற்ற  வரங்களுக்கு பிராத்தனை  செய்து,  அம்மனுக்கு  முறைபடி  கடனைச்  செலுத்த  வந்துள்ளேன்  என்றாள்.

 

நல்முனிவன்  இயல்பாய்  கேட்டார்  நங்கையே  உன்  வரம்  என்னென்று

எதிரரசன்  இயற்கைக்கு  எதிராய்  எம்மரசன்  மேல்  எழும்  போர்  நீக்க

 கொடியோருடன் போரிட்டு  வெல்லும்  கொற்றவைக்கு  படையலிட்டு

மலர்  சந்தனம்  கொண்டு  தொழுதிட  மங்கை  நான்  வந்தேன்  என்றாள்       50

 

            அந்த  நல்லற  முனிவர்  இயல்பாகவே,  நீ  வேண்டிய  வரங்கள்  யாது  என்று  வினவினார்.  அதற்கு,  அவள்  பகைநாட்டு  அரசன்,   காரணம்  ஏது  இல்லாமல்  எங்கள்  அரசனுடன்  பகை  கொண்டு,  போருக்கு  வருவதைத் தடுக்கவே,  போர்  தெய்வமான  பிடாரிக்கு,  படையல்  இட  மலர்கள்,  சந்தனம்,  படைச்சோறு,  மணம்  பொருந்திய  அகிற்புகை  கொண்டு  தொழுது  வேண்டிக்கொள்ள  வந்தேன்  என்றாள், 

 

நீ  கேட்ட  வரம்  இதுவாயின்  நின்  மொழி  நெஞ்சத்தழகாகும் – என்ற

முனிவரன்  சொல்  உதிரக்  கேட்டு  மலர்  வண்டுகள்  இசைக்துப்  பாட

செவியணி  குண்டலம்  சிணுங்கிட  செவ்விய  அணிகள்  ஒளி  சிந்த

இளநங்கை  உரு  கொண்ட நீலகேசி இடுகாட்டால்  மனம்  அஞ்சுதென்றாள் 51

 

            அருந்தவச்  செல்வன்  முனிவரன்,  நீ  கேட்ட  வரம்  இதுவாக  இருந்தால்  உன்  உள்ளம்  மிகவும்  நல்ல  அழகுடையதாகும்  என்று  கூறினார்.  காதில்  உள்ள  குண்டலங்கள்  சிணுங்கி, சிரித்து  ஆட,  கழுத்தில்  அணிந்துள்ள  மாலைகளில்  மொய்க்கும்  வண்டுகள்  இசையுடன்  பாட,  அணிந்துள்ள  உயர்ந்த  அணிகலன்கள்  ஒளி  வீசிட,  ஆடி  அசையும்  பூங்கொம்பு  போன்ற  நீலகேசி,  ஐயனே,  இந்த  சுடுகாடு  எனக்கு  மிகவும்  மனதில்  அச்சத்தைத்  தருகிறது  என்றாள்.   

 

நெடுமுடி  வேந்தனின்  மகள்  நீ  நித்தமும்  தோழியர்  சூழ்ந்தவள்  நீ

அகம்  மண்டும்  மகிழ்ச்சி  பொங்க  அரண்மனை  சுகம்  நுகர்பவள்  நீ

இன்பத்தை  தூய்க்கும்  ஏந்திழை நீ  துன்பத்தை  அறியாத    சுந்தரி  நீ

பற்றற்றோரும்  பேய்களும்  வாழும்  பலாலயம்  காண  வந்தது  ஏனோ            52

 

            இளம்  நங்கையே,   நீண்ட  மணிமுடியும்,  மறப்பண்பும்,  வேற்படையும்  உடைய  வேந்தன்  மகள்  நீ,  தினமும்  சுற்றத்தாரும்,  புன்னகைப்  பூக்கும்  தோழியரும்  சூழ  வாழ்பவள்  நீ,  நாளெல்லாம்  மகிழ்ச்சியுடன்,  அரண்மனை  சுகத்தை  அனுபவிக்கும்  செல்வி  நீ,  இன்பம்  ஒன்றைத் தவிர,  துன்பம்  என்னவென்றே  தெரியாத  ஏந்திழை  நீ,  துன்பங்கள்  அதிகமாவதற்கு  காரணமான  பெரும்  பேய்களும்,  பற்றற்ற,  அனைத்தும்  துறந்து,  துறவறம்  ஏற்றவர்கள்  அல்லாமல்,  பிறர்  வருவதற்கு  அஞ்சும்  இந்த  பலாலயம்  சுடுகாட்டுக்கு  ஏன்  வந்தாய்  என்று  கேட்டார்.

 

இடுகாட்டின்  இயல்பினைக்  கேட்கின்  இளவேர்வை  துளித்திடும்  உடலில்

காண்பதற்கு  அரிய  உருவங்கள்  கணக்கின்றி  உள்ளன  இக்காட்டில்

குடும்பத்தில்  ஒன்றாய்  சேர்ந்து  குறைவற்று  வாழும்  உம்  நிலையை

துள்ளியமாய்  வியந்து  நானுரைப்பது  துறவி  என்  நிலைக்கு  பொருந்தா   53

 

            மூங்கிலும்,  அதுபோன்ற  பிறவும்  நிறைந்து,  காண்போர்  பயப்படுவதற்கு  காரணமான இச்சுடுகாட்டின்  இயல்பை  கேட்டால்,  உடல்  எல்லாம்  வேர்வை  துளிர்  விடும்.  காண்பதற்கு  அரிய  உருவங்கள்  இக்காட்டில்  ஏராளமாயுள்ளன.  குடும்பத்தில்  ஒன்றாய்  சேர்ந்து,  வளர்ந்து,  குறைவற்ற  வாழ்க்கை  வாழும்  உனக்கு,  என்  போன்ற  பற்றற்ற  முனிவர்கள்  துள்ளியமாய்  எடுத்துரைப்பது  சரியில்லை  என்று  முனிவர்  கூறினார்.

 

சந்திரபட்டாரகரின்  உரையை  தளிர்  மேனி  மடந்தைக்  கேட்டு

பேய்களணுகா  மந்திரமிருப்பின்  பெண்  எனக்கு  உரைப்பீர்  என்றாள்

தேவரும்  வணங்கும்  சிறப்புடைய  தவவேந்தன்  முனிவரன்  சொன்னான்

இந்திரனே  வேண்டி  நின்றாலும்  இப்பேய்கள்  அணுகா  உனை என்றார்        54

 

            முனி  சந்திர  பட்டாரகர்  அவ்வாறு  கூற,  மாந்தளிர்  போன்ற  மேனியை  உடைய  அவள்,  ஐயனே,  பேய்கள்  அணுகாத  மந்திரம்  ஏதேனும்  இருப்பின்  எனக்கு  கூறுங்கள்  என்று  வேண்டினாள்.  பெண்ணே,  தேவர்கள்  வணங்கும்  சிறப்புடைய  தவமுனிவர்,    இந்திரனே  வேண்டினாலும்  எந்தப்  பேய்களும்  உன்னை  அணுகாது  என்று  கூறினார். பேயை பேய் அணுகாது  என  நயம்பட கூறியது.

 

பற்றற்ற  முனிவரன்  சொல்லால்  பவள  இதழ்  துடிக்கக்  குழைத்து

சிமிழ்  ஒத்த  தனங்கள்  நெருக்கி  செவ்வரி  கண்ணால்  நோக்கி

தனச்  சுமை  தாங்கா  இடை  துவள  தன்  முகம்  கவிழ்ந்து  நாணி நிற்க

என்  திறம்  இச்செயல்களால்  என்றும்  அழிவதில்லை  என்றார்  முனி            55

 

            உலக  பற்றுகளை  எல்லாம்  அறவே  அழித்த  முனிவரின்  சொற்களைக்  கேட்ட,  காமலேகையான  நீலகேசி,  தனது  பவள  இதழ்கள்  குழைந்து  துடிக்க,  செவ்வரி  படர்ந்த  கண்களால்  மோகம்  பெருக,  நோக்கி,  ஒடிந்து  விடுமோ  என்று  எண்ணக்கூடிய  இடையினை  மேலும்  வளைத்து,  துவள  விட,  தன்  முகத்தை  வெட்கத்தால்  சிவக்க  வைத்து,  நாணி  நின்றாள்.  அவளின்  செய்கைகளைக்  கண்ட  அறத்துறவோன்  உன்னுடைய  இச்செயல்கள்  அனைத்தும்  என்னை  ஒன்றும்  செய்ய  முடியாது  என்றார்.

                                               

முனி  சந்திரபட்டாரகர்  நீலகேசிக்கு  அறங்கூறத்  தொடங்கள்  :

 

பிறவிகள்  துன்பமுடையதென்பது  பொய்யற்ற  வாய்மையாகும்

பிறப்பினது  இயல்பை  அறிந்து  பிறப்பில்  வரும்  துன்பம்  தெரிந்து

துன்பத்தை  துடைக்கும்  மருந்தையும்  அம்மருந்தை  பேணும்  முறையயும்

துறவியும்  கூறத்  தொடங்கினார்  துர் நீலகேசி  அறங்கேட்களானாள்        56       

            பெண்ணே,  பிறவிகள்  வேதனை  உடையது,  துன்பத்தைத்  தரக்கூடியது  என்பது  பொய்யில்லாத  உண்மையே.  நால்கதி  பிறப்பின்  இயல்பினை  அறிந்து,  அதனால்  வரும்  துன்பங்களை  தெரிந்து,  அத்துன்பங்களை  அகற்றும்,  மறத்தல்  இல்லாத  மருந்தையும்,    அந்த  மருந்தின்  பெருமைகளையும்,  நீ  கேட்பாயாயின்,  அறம்  நிறைந்த  மனதை  உடையவளாகி,  புலன்  உணர்வுகளை  அடக்கி,  உயிரினங்களை  பாதுகாப்பாய்  என்றார்.  துர்குண நீலகேசியும்  அறங்கேட்களானாள்.

 

நரககதி.

 

நான்கு  வகை  பிறப்புகள்  உள்ளே  நரககதி  ஒரு  பிறப்பு  ஆகும்

ஏழுவகை  நரகங்கள் கொண்டு  ஒன்றின்  மேல்  ஒன்றாய்  அமைந்து

எண்ணற்ற  குழிகள்  கொண்டு  எண்பத்து நான்கு  நூராயிரம்  பகுதிகளோடு

கீழ்  நரகம்  சென்றோர்  எல்லாம்  எண்ணற்ற  பிறப்புடையோராவர்               57

 

            நான்கு  பிறப்புகளாகிய,  விலங்கு  பிறப்பு,  மனித  பிறப்பு,  நரக  பிறப்பு,  தேவ  பிறப்பில்,  ஒன்று  நரககதி  ஆகும்.  ஏழுவகையான  நரகங்கள்  கொண்டு,  ஒன்றின்  மேல்  ஒன்றாய்  அமைந்துள்ளது.  ஏழாவது  நரகத்திற்கு  கீழே  உள்ளது  நிகோதம்.  நிகோதத்திற்கு  மேலுள்ள  ஏழம்  நரகில்  இருளின்  இருளும்,  அதற்கு  மேல்  உள்ள  ஆறாம்  நரகில்  இருளும்,  அதற்கு  மேலுள்ள  ஐந்தாம்  நரகில்  மிகுந்த  புகையும்,  நன்காம்  நரகில்  சேறும்,  மூன்றாம்  நரகில்  மணலும்,  இரண்டாம்  நரகில்  பரலும்,  ஒன்றாம்  நரகில்  மணிகளும்  சூழ்ந்திருக்கும்.  எண்ணற்ற  குழிகள்  கொண்டு  எண்பத்து  நான்கு  நூறாயிரம்  பகுதிகளோடு  கீழ்  நரகம்  சென்றோர்  கணக்கிலா  பிறவிகள்  எடுத்துக்கொண்டே  இருப்பார்கள்.

 

விலங்குகதி.

 

விலங்குகதி  எடுக்கும்  உயிர்கள்  இருவகைப்  பிறப்புடையனவாகும்

நிலங்களில்  நிற்பன  ஒன்றும்  நிலத்தின்  மேல்  இயங்குவதொன்றும்

இயங்கிடும்  விலங்கு  கதியில்  மெய்  வாய்  இரண்டு  பொறியுணர்வும்

கண்  மூக்கு  செவியும்  இணைந்து  ஐம்பொறி  உணர்வில்  வாழும்                58

           

விலங்கு  கதி  எடுக்கும்  உயிர்கள்  இருவகை  பிறப்புகளை  உடையனவாக  இருக்கும்.  நிலங்களில்  நிற்பன  ஒருவகை.  நிலத்தில்  இயங்குபவை  ஒருவகை.  நிற்பவை  தாவரங்கள்,  இயங்குபவை  விலங்கினங்கள்.  ஓர்  அறிவு  உடையவைகள் மரம், புல், செடி, கொடி, புதர்  என  ஐந்து  வகைப்படும்.  இயங்குவனவாகிய  விலங்குகளில்  மெய்,  வாய்  என  இரு  பொறிகளில்  தொடங்கி, கண், மூக்கு, செவியும் இணைந்து  ஐந்து  பொறிகளுடன்  நிலவுலகில்  வாழ்கின்றன.

 

உண்ணியும்  பூச்சியும்  எறும்பும்  மெய்,  நாவுடன்  இரண்டறிவாகும்

கண்  சேர  மூன்று  அறிவு  ஆகும்  கொட்டிடும்  தேளும்  பல்லுயிரும்

நாசியுடன்  சேர்ந்து  நாலறிவாகும்  நால்வகை வண்டுகளும்  தேனியும்

செவியது  ஐந்தாய்  சேர்ந்திட  பறப்பன, நடப்பன,  நீரின  உயிர்களாம்        59

 

            உண்ணி,  பூச்சிகள்,  எறும்புகள்  அனைத்தும்  மெய்  நாவுடன்  உள்ள  இரண்டறிவு  கொண்டவைகள்.  கொட்டிடும்  தேளும்  பல உயிர்களும்  கண்  என்ற  மூன்றாம்  பொறி  சேர,  மூவறிவுடையவை.  வண்டுகள்,  தேனீ  வகைகள்  நாசி ( மூக்கு )  என்ற  நான்காம்  பொறி  சேர  நாலறிவுடையவை.  பறப்பன,  நடப்பன,  தவழ்வன,  ஊர்வன  என  பல  இனங்களாகி,  நீரிலும்  வாழ்ந்து,  காது  என்னும்  ஐந்தாம்  அறிவை  உடையனவாகும். 

 

மக்கள்கதி.

 

மக்கள்கதியில்  பிறந்திட்ட  மாந்தர்களில்  ஐந்து  வகையாம்

நல்லவர்,  தீயவர்,  திப்பியர்  குமானுயர்  ஏனையோர்ரென  ஐவர்

நல்லவர்  என்னும்  மாந்தர்  பல்வேறு  வகைப்பட்டவராய்

போக பூமியில்  பிறப்பெடுத்து  பெருமகிழ்வில்  வாழ்க்கை  வாழ்வர்             60

 

மக்கள்  கதியில்  பிறந்த  மனிதர்கள்  ஐந்து  வகைப்படுவர்.  அவர்கள்  நல்லவர்கள்,  தீயவர்கள்,  திப்பியர்கள்,  குமானுயர்கள்  மற்றய  மனிதர்கள்  உட்பட  ஐவர்.  நல்லவர்கள்  பல்வேறுபட்ட  போகபூமியில்  பிறந்து,  மிக்க  மகிழ்ச்சியுடன்,  அனைத்தையும்  அனுபவித்து  வாழ்பவர்கள்.  போகபூமி  என்பது  கற்பகத்தருக்களால்,  வேண்டியதை  வேண்டியபடி  பெற்று,  சகல  சுகத்தையும்  அனுபவிக்கும்  இடம்.

கர்மபூமி  என்பது  உழவு  முதலிய  தொழில்களைச்  செய்து  பொருள்  ஈட்டி  வாழ்வது.  வினைகளை  வெல்லும்  இடம்  என்றும்  கூறலாம்..  பரதம்,  ஐராவதம்,  விதேகம்  மூன்றும்  கர்மபூமிகள்.

 

தீயவர்  என்னும்  பிரிவோர்  சிந்தையில்  குற்றம்  கொண்டோர்

கடலிடை  அமைந்த  சிறு  சிறு  தீவினில்  வாழ்க்கைக்  கொள்வர்

திப்பியர்  என்னும்  வகையோர்  திரண்ட  நல்  ஞானத்துடன்

பரமாகமம்  பிறர்க்குச்  சொல்லி  பால் வெள்ளிமலையில்  வாழ்வோர்            61

 

            தீயவர்கள்  என்பவர்கள்  சிறு, சிறு  தீவுகளில்  பிறந்து  வாழ்பவர்கள்.  இவர்களில்  அரசன்  முதலானோர்  நற்குணங்களில்  குறைந்துக்  குற்றம்  மிக்கவர்கள்.  முன்  தவப்பயனில்  மனிதர்களாகப்  பிறந்திருந்தாலும்  நல்லொழுக்கம்  இல்லாதவர்கள்.

            திப்பியர்  என்பவர்கள்  தீர்த்தங்கரர்கள்  வழங்கிய  ஆகமப்  பொருள்களை மற்றவர்களுக்கு  எடுத்துரைப்பவர்கள்.  தர்மச்சாக்கரம்  கொண்ட  சக்கரவர்த்திகளும்,  வானத்தில்  உலாவும்  விஞ்சையர்களும்  இப்பிரிவினர்.  அவர்கள்  வெள்ளிமலையில்  வாழ்பவர்கள்.

 

 

குமானுயராய்  பிறந்த  மக்கள்  குன்றா  உடல்  வலிமையுடையோர்

கொம்பு,  வளை  பற்கள்,  வாலுடன்  அறிவு  ஒழுக்கம்  அற்று  வாழ்வோர்

ஏனைய  மனிதர்கள்  எல்லாம்  தவ  ஒழுக்க  நெறிகள்  கொண்டு

மோட்சமாம்  வீட்டை  அடையும்  கர்மபூமியில்  பிறந்தோராவர்                       62

 

குமானுயர்  என்பவர்கள்  உடல்  வலிமை  மிகவும்  உடையவர்கள்.  வளைந்த பற்களையும், கொம்புகளையும், உடையவர்கள். அழகில்லாமலும்,  நல்லொழுக்கம்,  நற்காட்சி  இல்லாதவர்கள்.  ஏனைய  மனிதர்கள்  கர்மபூமியில்  பிறந்து,  நல்ல  தவம்,  நல்ல  செய்கையினால்  தீவினைகளை  வென்று  மோட்சமாம்  வீட்டினை  அடைவார்கள்.

 

தேவகதி.

 

வான் வாழும்  தேவகதி  பெற்றோர்  வகையினில்  ஐவர் ஆவர்

பவணர்,  வியந்தரர்,  சோதிடர்,  கல்பக,  வைமானிக  தேவராவர்

தீயினால்  மாட்சிமைப்  பெற்ற  அக்னிகுமாரர்கள்  உள்ளிட்டோர்

ஈரைந்து  தேவர்கள்  சேர்ந்து  பவண  தேவர்கள்  என்றழைப்பர்                       63

 

            வானுலகில்  தேவர்களாகப்  பிறந்து  சுகம்  அனுபவிப்பவர்கள்  ஐந்து  வகையினர்  ஆவர்.  அவர்கள்  பவணர்,  வியந்தரர்,  சோதிடர்,  கல்பவாசியர்,  வைமானிகர்  என்பர்.  தீயின்  மாண்பினை  உடைய  அக்கினிகுமாரர்கள்  உள்ளிட்ட  பத்து  வகையினர்  பவண  தேவர்கள்.  அவர்களை  அசுரர்,  நாகர்,  சொர்ணகுமாரர்,  தீய  குமாரர்,  திக்கு  குமாரர்,  அக்கினி  குமாரர்,  உத்தர  குமாரர்,  வாயு  குமாரர்,   வித்யு  குமாரர்,  மேக  குமாரர்  என்றழைப்பர்.

 

வியந்தர  தேவர்கள்  மிகவும்  இசை  ஞானம்  கொண்ட  கின்னரர்

விசும்பிடை  வாழும்  சோதிடதேவர்  வகையினில்  ஐவர்  ஆவர்

மந்தாரமலையை  சுற்றும்  இவர்களும்  சுற்றாமல்  நிலைத்தே  நின்றும்

ஒளியினை  சிந்தும்  ஆற்றல்  உடையவர்கள்  இருவகைப்படுவர்                     64

 

            வியந்தர  தேவர்கள்  இனியகுரலும்  இசை ஞானம்  கொண்ட  கின்னரர்கள்.  வியந்தர  தேவர்கள்  எட்டு  வகையினர்.  அவர்கள்  கின்னரர்,  கிம்புருடர்,  கருடர்,  காந்தருவர்,  யட்சர்,  ராட்சதர்,  பூதர்,  பிசாசர்  என்று  அழைப்பார்கள்.  நீலகேசி  8 ஆம்  வகையினர்  ஆதலால்  அவரைப்  பற்றி  முனிவர் ஏதும்  கூறவில்லை.

            விண்ணில்  வாழும்  வாழ்க்கையை  உடையவர்கள்  சோதிடர்.  இந்த  தேவர்கள்  ஐந்து  வகைப்படுவர். சந்திரன்,  சூரியன்,   ஏனைய கோள்கள்,  விண்மீன்கள்,  நாள் மீன்கள்  என்று  கூறப்படுவார்கள்.  இவர்கள்  மந்தார  மலையை  வலமாக  சுற்றித்  திரிபவர்கள்,  சுற்றாமல்  நின்று  ஒளி  தருபவர்  என்று  இருவகைப்படுவர்.

 

ஈரெட்டு  கல்பகங்களில்  வாழ்வோர்  கல்பவாசி  தேவர்கள்  ஆவர்

கல்பலோகத்திற்கு  மேலே  உள்ளது  மும்மூன்று  கொத்துகளாகி

நவக்கிரையவேயங்களிளும்  நவாணு  திசைகளிளும்  மேலும்

பஞ்சாநுத்திரங்களில்  வாழும்  தேவர்கள்  வைமானிகர்  என்றழைப்பர்       65                   

            சௌதரும  கற்பம்  முதல் அச்சுத  கற்பம்  வரை  16  கற்பகங்களில்  வாழ்பவர்  கல்பவாசி  தேவர்கள்  ஆவர்.  கல்ப  லோகங்களுக்கு  மேலே,  மூன்று  பிரிவுகளை  உடைய  நவக்கிரய  வேயகங்கள்.  இவை  ஹேஷ்டிம  ஹேஷ்டிம  முதல்  உபரிமோ  பரிம  வரை  9  ஆகும்,  அதற்கும்  மேலே  உள்ளது  தான் நவாணு  திசைகள்.  இவை  அச்சா  முதல்  ஆதித்ய  விமானம்  வரை  9  ஆகும்.  அதற்கு  மேல்  பஞ்சாணுத்தரங்கள்  உள்ளன.  இவை  ஐந்தும்  விஜய  முதல்  சர்வார்த்த  சித்தி  என  5  வகையாகும்.  இத்தகைய  தேவ  உலகங்களில்  வாழ்பவர்கள்  தான்  வீரத்தில்  சிறந்த  வைமானிக  தேவர்கள்  ஆவர்.

 

நரகர்  துன்பம்.

 

ஏழாம்  நரகம்  கீழ்நரகம்  இருளின்  இருள்  சூழ்ந்த  உலகம்

நரகத்தில்  வாழும்  நரகர்கள்  ஐநூறு  வில்  உயரமுடையோர்

கரு  நிற  நரகர்கள்  உடல்கள்  கத்திகளால் பிளக்கப்படும்

நீர்  பிளந்து  சேர்வது  போலவே  பிளந்த  உடல்  ஒன்றாய்  சேரும்                     66

 

            பிறவிகளிலேயே  ஒப்பற்ற  தீவினைகளை உடையது  நரகர்  பிறவி.  இந்த  பிறவி  எடுத்தவர்கள்  துன்பத்தை  வார்த்தைகளால்  சொல்ல  முடியாது.  இதில்  கீழ்  நரகமாகிய  ஏழாம்  நரகம்  இருளின்  இருள்  சூழ்ந்த  நரகம்.  இதில்  பிறப்பவர்கள்  ஐநூறு  வில்  உயரமுடையவர்கள்.  அவ்வளவு  உயரத்தில்  நரகர்கள்  எழுந்து  மீண்டும்  கீழே  விழுவார்கள்.  கருப்புநிறமுடையா  அந்நரகர்களின்  உடல்களை  கூர்  வாளால்  வெட்டி  பிளப்பார்கள்.  பிளந்த  உடல்,  நீர்  பிளந்து  சேர்வது  போல்  சேர்ந்து  விடுவதால்,   மீண்டும்  மீண்டும்  வெட்டி  பிளப்பார்கள்.

 

பிளவுபட்ட  உயிர்  உடல்களை  பழைய  நரகர்  கொடுமை  செய்வர்

கொடுமைகளை  உடல்  தாங்காமல்  கொடுந்தீயின்  புழுவாய்  துடிப்பர்

பழைய  பகை  கொண்ட  நரகர்கள்  பாழ்  நரகில்  வீழ்ந்து துடிப்பர்

கடுஞ்சினத்தில்  கண்கள்  தீயாக  பெருங்கொடுமை  செய்து  நிற்பர்             67

 

            அங்கு  உள்ள  பழைய  நரகர்கள்,  புதிதாய்  வந்த  நரகர்களை  மிகவும்  கொடுமை  செய்வார்கள்.  அவர்கள்  செய்யும்  கொடுமைகளை  தாங்காமல்  நெருப்பில்  விழுந்த  புழுக்களைப்  போல்  துடிப்பார்கள்.  அந்த  நரகர்களின்  பழைய  பகைமை  கொண்ட  நரகர்களும்,  அந்த  நரகத்தில்  வீழ்ந்து  கிடப்பதால்,  அவர்களின்  மேல்  மிகவும்  கோபம்  கொண்டு,  எல்லையில்லாத  துன்பத்தை  அவர்களுக்கு  தருவார்கள்.

 

இந்நரகில்  விழும்  உயிர்களுக்கு  ஆண்  பெண்  என்ற  தன்மையில்லை

பேடித்தன்மை  உயிர்களானதால்  பெருந்துன்பங்கள்  பரவி  நிற்கும்

உயிரை  வதைத்து  செய்த  கொலைக்கும்  ஊன்  தின்ற  தீவினைக்காகவும்

வாயினில்  செம்பு  குழம்பை  விட்டு  வதைத்திடுவர்  உயிரின்  உடலை            68

 

            இந்த  நரகத்தில்  வீழ்ந்த  உயிர்கள்  ஆண்,  பெண்  தன்மையில்லாத  பேடித்தன்மை  உடையவர்கள்.  ஆண்,  பெண்  உறவு  ஏதும்  இல்லாத  பேடித்தன்மையால்  தாங்க  முடியாத  கொடுமைகளை  அனுபவிப்பார்கள்.  உயிர்களை  வதைத்து  கொன்றதற்காகவும், ஊன்  தின்ற  பாவத்திற்காகவும்,  மற்றவர்கள்  அவர்களை  கொன்றும்,  வாயில்  உருகி   கொதிக்கும்  செம்பினை  ஊற்றியும்  கொடுமைகள்  செய்வார்கள்.

 

கொதி  நெய்யில்  பொறித்திடுவர்  கொடுந்தீயில்  வறுத்திடுவர்

படுந்துன்பம்  கண்டு  அங்கு  பரிதாபங்கொள்ள  யாருமில்லை

புழுக்கள்  நெளியும்  இவ்வுடம்பின்  புலன்  விழையும்  இன்பத்திற்கு

குலம்  துறந்து  பழியை  உண்டு  கொடும்  நரகில்  வீழ்கிறார்கள்                     69

 

கொதிக்கின்ற  நெய்யில்  அவ்வுயிர்  உடல்களை  அப்பளம்  போல்  பொறித்து  எடுப்பர்.  அனல்  மிகுந்த  பெரும்  தீயில்  உள்ள  வாணலி  போன்ற  பாத்திரத்தில்  வறுத்து  எடுப்பர்.  இவர்கள்  ஓலமிட்டு  அழுதாலும்,  படும்  துன்பங்களைக்  கண்டு,  மனம்  இரங்கி  ஆறுதல்  சொல்ல  யாரும்  இருக்கமாட்டார்கள்.  உருவம்  அழுகி,  புழுக்கள் நெளியும்  இந்த  உடலின்  மேல்,  ஐம்புலங்களின்  ஆசையால்,  இன்பம்  தூய்த்து,  தங்களின்  குலத்தின்  பெருமையை  துறந்து,  பழியை  ஏற்றுக்  கொண்டதால்  இக்கொடும்  நரகில்  வீழ்ந்து  தவிப்பார்கள்.  இதுபோல்  ஒவ்வொரு  நரகத்திலும்  அதனதன்  தன்மைகேற்ப  கொடுமைகளை  அனுபவிப்பார்கள்.

 

விலங்கு  பிறப்பின்  துன்பம்.

 

விலங்குகள்  ஒன்றுக்கொன்று  விழிகண்டு  அஞ்சி  நடுங்கும்

பகை  கண்டு  கலங்கி  ஓடும்  பயத்தினால்  நடுங்கி  நிற்கும்

பெரு  மழையால்  துன்பம்  எய்தும்  புண்  உடல்  கொண்டு  மாயும்

ஊன்  உண்ண  ஓட்டிச்  சென்று  உயிர்  வதைத்து  கொல்லப்படும்                   70 

 

            நலம்  இல்லாத  பிறவிகளில்,  நஞ்சையுண்ட  நரகர்களின்  கொடுமைகளைக்  கூறினேன்.  இனி  விலங்குகளின்  துயர்களை  கூறுகிறேன்  என்றார்  முனிவர்.  விலங்குகள்  ஒன்றை,  மற்றொன்று  கண்டு  மிரண்டு  நடுங்கும்.  பகையினால்,  கலங்கி,  நடுங்கி,  பயந்து  ஓடும்.  கடுமையான  பெரும்  மழையால்,  உணவுக்கும்,  உடல்  துன்பத்திற்கும்  வேதனைப்பட்டு  கலங்கி  நிற்கும்.  உடல்களில்  புண்கள்  ஏற்பட்டு,  காக்கை,  கழுகு,  புழுக்கள்  போன்ற  மற்ற  உயிர்களால்  துன்புறுத்தப்படும்.  மனிதர்கள்  தங்கள்  உணவுக்காக,  ஓட்டிச் சென்று  கொன்று  உண்பார்கள்.

 

போரினில்  போரிட்டு  அழியும்,  பறவை,  மீன்கள்  வலை  சிக்கி  சாகும்

வேள்வியில்  விலங்கினங்களிட்டு    வீணர்கள்  பலியிட்டு  கொல்லவர்

மருத்துவர்கள்  மருந்தாய்  கொடுக்க  மாய்த்திடுவர்  விலங்குகளை

மாளாத்துன்பம்  கொண்டு  வாழ்வர்  விலங்குகதி  பெற்றவர்கள்                     71

 

            போரில்  யானை,  குதிரை  போன்ற  விலங்கினங்கள்  போரிட்டு  அழியும்.  கடல்  வாழ்  மீன்கள்  மீனவர்களின்  வலைகளில்  சிக்கி,  மற்றவர்கள்  உண்ண  மாண்டுவிடும்.  வேள்விகள்  செய்வதாகக்  கூறி,  வைதீக  சமயத்தவர்கள்  தீயில்  இட்டு,  பலி  கொடுத்து  கொல்வார்கள்.  மருத்துவர்கள்,  நேய்  தீர்க்க  மருந்து  என்று  கூறி  வதைப்பார்கள்.  இவ்வாறு  விலங்குகதி  உயிர்கள்  மாளாத  துன்பத்தை  அடைவார்கள்.

                                                           

மானிடர்  பிறப்பில்  உறும்  துன்பம்.

 

அடக்கமில்லா  மக்கள்  பெறுவது  அனைவருக்கும்  பொதுவாய்  வருவது-என

இரண்டுவகைத்  துன்பங்கள்  உண்டு  ஏந்திழையே  கேளும்  என்றார்

சினம், செருக்கு, அச்சம், பற்று,  மாயை  தீவினையின்  வாயில்களாகும்

அடக்கமில்லா  மக்கள்  பெறுவர்  அனைத்து  துன்பம்  இவ்வகையாலே            72

 

            மனிதப்பிறவி  எடுத்த  உயிர்களில்  மனிதர்கள்  படும்  துன்பம்  இரண்டு  வகையில்  அடங்கும்.  ஒன்று  அடக்கம்  இல்லாத  மக்களுக்கு  வரும்  துன்பம்.  மற்றொன்று  பொதுவாக  அனைவருக்கும்  வரும்  துன்பம்.  கோபம்,  ஆணவம்,  பயம்,  பொருள்கள்  மேலும்  மற்றவைகள்  மேலும்  கொண்ட  பற்றுகள்,  மாயை,  மயக்கம்  போன்றவைகளால்,  அடக்கம்  இல்லாத  மக்கள்  அனைத்து  துன்பங்களையும்  பெறுவார்கள்.

 

மானிடர்  செயல்களின்  விளைவு  மறுமையில்  நம்மைத்  தொடரும்

குலப்பெருமைகள்  மாசுபடின்  குன்றாத்  துன்பம்  வந்து  சேரும்

புழுக்கூட்டப்  போர்வை  உடலினை  போற்றிடும்  இன்பத்திற்காக

ஆற்றிடும்  செயல்களெல்லாம்  அழிந்திடா  துன்பம்  நல்கும்                             73

 

            மனிதர்கள்  தாம்  செய்கின்ற  செயல்களின்  காரணமாக,  ஏற்படும்  நல்ல,  மற்றும்  தீய  வினைகள்  அவர்களை  மறுபிறப்பிலும்  தொடரும் என்றும்,  தங்களது  குடும்பப்  பெருமை,  பிறந்த  குலத்தின்  பெருமை  கெட்டு  போகும்  என்றும்,    புழுக்களின்  கூடங்களால்  நிறைந்த  போர்வையாகிய,  அழுக்கு  நிறைந்த  இந்த  உடலின்  இன்பத்திற்காக  செய்திடும்  தீவினைகள்  எல்லாம்  பெரும்  துன்பத்தைத்  தரும்  என்றும்  நினைப்பதும்  இல்லை.    “அழுக்குடம்பிற்கே  கெடுவார்  ஆடவர்கள்  அந்தோ “  என்று  பெண்  இன்பத்தை  குறிப்பால்  உணர்த்துகிறார்  நூலாசிரியர்.

 

உயிர்  பொருளாய்  வருந்துன்பம்  உயிரில்  பொருளாய்  வருந்துன்பமென

இரண்டுவகைத்  துன்பங்களுண்டு  எழில்  நங்காய்  கேளும்  என்றார்

நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்றால்  நேர்ந்திடும்  துன்பம்  எல்லாம்

உயிரில்  பொருள்களாய்  வந்து  உயிர்களுக்கு  தரும்  துன்பம்              74

 

            அழகிய  நங்கையே  கேள்.  மனித கதியில்  வரும்  துன்பங்கள்  இரண்டு  வகையானது.  ஒன்று  உயிருள்ளவைகளால்  வருவது.  மற்றொன்று  உயிர்  இல்லாத  பொருள்களால்  வருவது.  நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்றால்  வரும்  துன்பங்கள்  உயிரில்லாத  பொருள்களால்  ஏற்படுவது. 

 

மாந்தர்கள்  செய்யும்  கொலையும்  விலங்குகள்  தரும்  தொல்லையும்

பேய்களின்  சினத்தின்  வதையும்  உயிர்  பொருளால்  வரும்  துன்பங்கள்

மெய்ப்பிணிகள்  மூன்று  வகையாம்  மருந்துண்ண  நீங்கும்  பிணிகள்

மருந்துண்டும்  தீராப்  பிணிகள்  மறைந்துடலில்  வாழும்  பிணிகளாம்            75

 

பேய்கள்  கோபத்தால்  தாக்கி  வருந்துதல்,  மானிடர்கள்  பல்வேறு  வகைகளின்  தாக்குதலால்,  கொலை  செய்தலால்  வருவதும்,  பலவகை  விலங்கினங்களால்  வருந்துன்பம்  என  மூன்று  வகையும்,  உயிர்  உள்ளவைகளால்  வரும்  துன்பங்கள்  ஆகும்.  அதே  போல்  மெய்ப்பிணிகள்  மூன்று  வகையாகும்.  மருந்துண்டு  தீரும்  பிணிகள்,  மருந்து  சாப்பிட்டாலும்  தீராத  பிணிகள்,  மருந்தின்  தன்மையால்,  தீர்வன  போல்  தெரிந்தாலும்,  முற்றிலும்  தீராமல்  உடலிலேயே  மறைந்து  வாழும்  பிணிகள்  ஆகும்.

 

தேவர்க்கு  துன்பம்  இல்லை  எனல்.

 

தீக்குணங்கள்  கொண்டோர்  உண்டு  தேவகதிகள்  எடுத்தோரிடமும்

நற்குணங்கள்  அகத்தே  கொண்டு  நல்சுகம்  தூய்க்கும்  தேவருமுண்டு

தேவர்களாய்  இருக்கும்  வரையில்  தேவசுகம்  சுகித்து  வாழ்வர்

சாக்காடு  நெருங்கும்  வரையில்  சேராது  நானுரைத்த  துன்பன்பங்கள்            76

 

            தேவகதியில்  தேவர்களாக  பிறந்தவர்களில்  தீயகுணம்  கொண்டோரும்  உண்டு.  நல்ல  குணங்களை  தன்னகத்தே  கொண்டு,  நல்ல  தேவசுகம்  அனுபவிப்பவர்களும்  உண்டு.  தேவர்களாய்  இருக்கும்  வரையில்  சுகத்தை  நுகர்ந்து  விட்டு,  மரணம்  நெருங்கும்  காலத்தில்  மட்டும்  இத்தகைய  துன்பகள்  உண்டு  என  அறியலாம்.

 

பேய்கள்  பிறருக்கு  செய்யும்  துன்பங்கள்.

 

மூங்கில்  ஒத்த  தோள்கள்  உடைய  முழுமதி  நயன  நங்கையே  கேள்

வியந்தர  தேவருள்  நீயொருத்தி  நற்குணம்  நிறைந்த  நல்பேயாவாய்

உன்  இனத்தார்  மற்றவர்கள்  உறு  துன்பங்கள்  தருபவர்கள்

பேய்கள்  என  இகழப்பட்டு  பெருந்  தீவினைகள்  செய்பவர்களே                    77

 

            இளமூங்கில்  போன்ற  தோள்களையும்,  முழுமதி  போன்ற  முகத்தையும்  உடையவளே,  பேய்  எனப்படுபவர்கள்  பல  இடங்களுக்கு  சென்று,  எல்லோருக்கும்  தீயைப்  போல  துன்பங்களைத்  தருபவர்கள்.   சான்றோர்களால்  விளக்கி  கூறிய  தீமைகளை  செய்பவர்கள்.  ஆனால்,  வியந்திர  தேவர்களில்  ஒருவளான  நீ  மட்டும்  நற்குணங்கள்  நிறைந்த  நல்லதொரு  பேய்  ஆவாய்.

 

முக்கூட்டு  மருந்து.

 

அகற்றுதற்கரிய  பிறவி  வினையை  அகற்றி  அழிக்கும்  அரிய  மருந்து

துன்பங்களை  வேரோடு  ஒழிக்கும்  தூய  நல்  முக்கூட்டு  மருந்து

நற்காட்சி,  நல் ஞானம்,  நல்லொழுக்க  நல்லமிர்தம்  கலந்த  மருந்து

மாலவன்  நமக்கு  அளித்த  மும்மணியாம்  பெரும்  மருந்து                               78

 

            அகற்றுவதற்கு  அரிய  பிறவித்  துன்பங்களை  எல்லாம்  தீர்த்து  அழிக்கும்  ஒரு  அரிய  மருந்து.  அனைத்து  துன்பங்களையும்  வேரோடு  ஒழிக்கும்  தூய,  நல்ல  மூன்று  மருந்துகளும்  சேர்ந்தது.  அருக  பெருமான்  நமக்கு  அளித்த  மும்மணியாம்,  நற்காட்சி,  நல் ஞானம்,  நல்லொழுக்கம்  என்ற  முக்கூட்டு  மருந்து.  இம்மருந்தை  உண்டவர்கள்,  பிறவியாகிய  பிணியில்  சிக்காமல்  இருப்பார்கள்.  இம்மூன்றில்  ஒன்று  குறைந்தாலும்  வீடு  பேறு  இல்லை.

 

நல் ஞானம்.

 

மான்  அனைய  விழிகள்  கொண்ட  மருள்  பார்வை  கொண்ட  நங்காய்

முக்கூட்டு  நல்  மருந்தில்  நல் ஞானம்  என்னும்  மருந்து

மூவிரண்டு  திரவியங்களின்  ஓரு  ஏழு  தத்துவங்களின்

மும்மூன்று  பதார்தங்களின்  மெய்ப்பொருளை  உணர்தல்  ஞானம்               79

 

            மான் போன்ற  மருண்ட  பார்வையுடைய  நங்கையே,  இந்த  முக்கூட்டு  நல்மருந்தில்,  நல் ஞானம்  என்னும்  மருந்து,  ஆறு  திரவியங்களையும்,  ஏழு  தத்துவங்களையும்,  ஒன்பது  பதார்த்தங்களையும்  அவற்றின்  இயல்புகளையும்  ஐயமற  தெளிந்து  உணர்தலே  ஞானம்  எனப்படும்.

6 திரவியங்கள் : உயிர், ( உயிரில்லாத ) புத்கலம்,  தன்மம்,  அதன்மம்,  ஆகாயம்,  காலம்.  7  தத்துவங்கள் : உயிர்,  உயிரல்லவை,  ஊற்று,  கட்டு, செறிப்பு,  உதிர்ப்பு,  வீடு.  9  பதார்த்தங்கள்  :  இந்த  7  தத்துவங்களுடன்  புண்ணியம்,  பாவம்  சேர்ந்து  ஒன்பது.

 

                                               

அளவைகள். 

 

உயிர்  முதலான  உட்பொருள்களை  உணர்ந்தறியும்  முறையே அளவை

காட்சியும்  காட்சி  அல்லாதவையென  அளவைகள்  இருவகையாகும்

காண்டல்  என்னும்  காட்சி  அளவை  கணித்திடுவர்  ஐந்து  வகையென

பொறி,  மனம்,  மனப்பரியாயம்,  அவதி,  கேவல  ஞானமென  ஐந்தாம்            80

 

            உயிர்  முதலான  உட் பொருள்களை  நன்கு  அறிந்து  உணரும்  முறையே  அளவையாகும்.   இந்த  அளவைகள்  இரண்டு வகைப்படும்.  காட்சியும்,  காட்சி  அல்லாததும்  ஆகும்.  காண்டல்  என்னும்  காட்சி  அளவு  ஐந்து  வகைப்படும்.  முன்  செய்த  பழவினையால்  அமைந்த  ஐம்பொறிகளால்  அறிதல்,  மனதால்  அறிதல்,  அவதிக்  ஞானத்தால்  அறிதல்,  நல்வினைகளின்  பயனால்  பெற்ற  மனப்பரியாய  ஞானத்தால்  அறிதல்,  கேவலக்  ஞானத்தால்  அறிதல்  என  ஐந்து  வகைப்படும்.

 

காட்சியில்  அளவை.

 

காட்சி  அல்லாத  அளவைகள்  கணக்கினில்  ஐந்து  வகையாம்

நினைவுகளோடு  மீட்டுணர்வும்  அழகொடு  பொருந்திய  அனுமானமும்

முனிவர்கள் அருளிய  ஆகமமும்  முற்றிலும்  பொய்யில்லாமையும்

ஐந்தும்  காட்சியில்  அளவைகளென  ஆகம  உரையென  கூறினார்  முனி  81

 

            காட்சி  அல்லாத  அளவையானது  ஐந்து  வகைப்படும்..  இதை  வடமொழியில்  “ பரோஷப்  பிரமாணம் “  என்று  கூறுவர்.  நினைவு,  நினைவுகளோடு  இணைந்த  மீட்டுணர்வு,   உவமையால்  எடுத்துக்  காட்டும்,  அழகோடு  கூடிய  அனுமானம்,  பொய்யில்லாமை,  முனிவர்கள்  கூறும்  ஆகம  மொழியாகிய  மெய்யுரை  என  ஐந்து  வகையாகும்.

 

நற்காட்சி.

 

நாலிரண்டு  நல் பொருள்களையும்  நம்  மனதில்  நிலை  நிறுத்தி

சிந்தனையை  விட்டு  அகலாமல்  தெளிவுற்ற  நம்பிக்கையுடனே

உள்ளத்தில்  இன்பம்  என்னும்  ஊற்றினை  எய்துதல்  ஒன்றே

தீர்த்தங்கர்கள்  நமக்கு  தந்த  திவ்விய  நற்காட்சி  ஆகும்                                   82

 

            நற்காட்சி  என்பது,  கடவுள்  முதலான  சிறப்பு  வாய்ந்த  எட்டு  நல் பொருள்களையும்,  மனதில்  நிறுத்தி,  அச்சிந்தனையில்  இருந்து  சிறிதும்  விலகாமல்,  அவற்றை  தெளிவுடன்  உணர்ந்து,  உள்ளத்தில்  இன்பமான  ஊற்றினை  அடைதலே,   என்று  வினைகளையெல்லாம்  வென்று  நின்ற    தீர்த்தங்கரர்கள்  கூறிய  புனித  நற்காட்சி  ஆகும்.

( நல் பொருள் 8.  : 1. கடவுள். 2. ஆகமம். 3. பதார்த்தம். 4. பிரமாணம்.  5. பிரவர்த்தி. 6. லிங்கம். 7. சாரித்திரம். 8. பலம்.  )

 

மூவகை  மூடங்கள்.

 

மும்மூடப்  புலிகள்  தாக்கிட  நற்காட்சி  பசுவது  அழியும்

புலிக்கு  இரையாக  பிழைத்தல்  புவி  வாழ்வில்  அரிதேயாகும்

எண்வகை  செருக்கை  அழித்து  மும்மூடம்  முழுதும்  போக்கிட

நல்கிடும்  இன்பந்தன்னை  நற்காட்சியர்  இலக்கணம்  இதுவே                       83

 

            உலக  மூடம்,  தேவ மூடம்,  பாஷாண்டி மூடம்  என்னும்,  மூன்று  மூடங்களாகிய  புலியானது  தாக்க,  நற்காட்சி  என்னும்  பசுவானது  அழிந்து  போகும்.  அந்த  மும்மூடங்களாகிய  புலிக்கு  இரையாகாமல்  பிழைத்து  வாழ்வது  இந்த  மண்ணில் மிகவும்  கடினமான  செயல்.  எட்டுவகை  செருக்குகளை  அழித்து,  மேற்சொன்ன  மூன்று  மூடங்களையும்  ஒழித்திட  கிடைக்கும்  இன்பத்தினை  நற்காட்சியர்  பெறுவார்கள்  என்பதே  நற்காட்சியின்  இலக்கணம்.

உலகமூடம் :  மலையை  வலம்  வருதல்,  தீ மிதித்தல்,  நதிகளில்  நீராடுதல்  போன்றவற்றால்  நன்மையடையலாம்  என்பது.

தேவமூடம்  :  தேவர்கள்  நமக்கு  நன்மைகள்,  செல்வங்கள்  தருவார்கள்  என்று  எண்ணி,  படையலிட்டு  வணங்குதல்  எல்லாம் தேவமூடம்.

பாஷாண்டிமூடம் :  குற்றம்  செய்பவர்களை,  நன்னெறி இல்லாதவர்களை,  ஏமாற்றும்  வேடதாரிகளை,  மெய்யுணர்வு  இல்லாதவர்களை  தெய்வ  வடிவமாக  கொண்டு  வணங்குதல்.

அழிக்க  வேண்டிய  8  செருக்குகள்  :  பிறப்பு,  குலம்,  வலிமை,  செல்வம்,  அழகு,  பெருமை  தவம்  அறிவு.

 

நற்காட்சியின்  உறுப்புகள்.

 

ஆகம  மெய்ப்பொருளில்  ஐயமின்மை  அனைத்துலக  இன்ப வேட்கை விடல்

மெய்த்துறவோர் மேல் வெறுப்பு நீக்கல் அறிவிலார் மாந்தர் புகழ்ச்சி  போக்கி

நன்னெறியார்  குற்றம்  கலைதல்  அருவருப்பு  மயக்கம்  அழித்தல்

மெய்யன்பில்  நல்லறம்  கூறல்  மேமிகு  எட்டும்  காட்சியின்  மாட்சி              84

 

            அருகனையும்,  அவன்  அருளிய  பரமாகமங்களின்  நல்லறங்களையும்,  அவற்றின்  மாண்புள்ள  சிறப்புகளையும்,  சந்தேகப்  படாமல்  இருத்தல்,  உலக  இன்பங்களில்  மோகமும்,  ஆசையும்  இல்லாமல்  இருத்தல்,  அருவருப்பு  இல்லாமல்,  மயக்கம்  இல்லாமல்,  அறிவற்றவர்களின்  புகழ்ச்சியில்  மயங்கமல்  அறவழி  நடப்போர்களை  குற்றம்  கூறுதல்,  நன்னோன்பில்  இருந்து  தவறியோரை  மீண்டும்  நிலைநிறுத்துதல், அனைத்து  உயிர்களிடம்  அன்பு  செலுத்தும்  நல்லறம்,  இவை  எட்டும்  நற்காட்சியின்  மாண்பாகும்.

 

                                    நல்லொழுக்கம்.

 

அருகனின்  திவ்வியத்  தொனியில்  அருளிய  மெய்நூல்  விதிகளை

உள்ளத்தால்  உணர்ந்தவர்கட்கு  நற்காட்சி  நல்  ஞானம்  கலந்தால்

நல்லோழுக்கம்  தானே  அமையும்  அவ்வொழுக்கம்  இரண்டாய்  பிரிந்து

குறைவிலா  ஒழுக்கம்  என்றும்  குறையுடை  ஒழுக்கம்  என்றாகும்                  85

 

            அருகபெருமான்  திவ்வியத்  தொனியில்  அருளிய  நல்லற  மெய்நூல்  விதிகளை,  தெளிவுடன்  உள்ளத்தால்  உணர்ந்தவர்களுக்கு,  நற்காட்சியும்,  நல்  ஞானமும்  கிடைக்கும்.  அவைகளிரண்டும்  கிடைத்தவுடன்,  நல்லொழுக்கம்  தானே  அவர்களிடம்  சேர்ந்துவிடும்.  அந்த  நல்லோழுக்கமானது,  இரண்டு  வகைப்படும்.  ஒன்று  குறையில்லா  ஒழுக்கம்,  அடுத்தது  குறையுடைய  ஒழுக்கம்  ஆகும்.

 

                                    நல்லொழுக்க  இலக்கணம்.

 

துறவு,  ஒழுக்கம்  பேணி  ஏற்றலும்  மனம்  மெய்  செயல்  மூன்றடங்கலும்

நல்லறங்கள்  நாடி  செய்தலும்  நல்  நினைவினில்  மனம்  தெளிதலும்

அகப்  புறத்  தவங்கள்  காத்து  அகம்  உற்ற  நோய்கள்  பொறுத்து

பிறவி  என்னும்  பகை  ஒழிப்பதே  நல்லொழுக்க  இலக்கணம்  ஆகும்            86

 

            சலனமும்,  பற்றும்  இல்லாத  துறவு  ஒழுக்கத்தை  ஏற்று  நடத்தலும்,  மனம்,  மெய்,  செயல்  மூன்றையும்  அதன்  வழியில்  செல்லாமல்  அடக்கி  ஆளுதலும்,  பொறுமை  முதலிய  நல்லறங்களை  ஏற்றலும்,  நல்ல  உயரிய  நினைவுகளில்  மனதை  நிறுத்தி,  அகத்தவம்,  புறத்தவம்  ஆகியவற்றை  மேற்கொண்டு,  மனம்,  உடல்  உற்ற  நோய்களைப்  பொறுத்து,  பிறவி  என்னும்  பகைவனை  அழித்தலே  நல்லொழுக்க  இலக்கணம்  ஆகும்.  தவம்  மேற்கொள்ளும்  போது,  மனம்  தொடர்பாக  13ம்,  உடல்  தொடர்பாக  9ம்  ஆக  22  துன்ப  நோய்கள்.  இவைகளை  பொறுத்து,  ஒதுக்குதல்

 

                                                            முனிவர்  முடிவுரை.

 

அருகனின்  முக்கூட்டு  மருந்தினால்  அகமிந்திர  உலகம்  செல்வர்

தேவர்களுக்கெல்லாம் அரசனாகி  தேவசுகம்  தூய்த்து  வாழ்வர்

தீவினைகள்  ஏதும்  செய்யாமல்  தேவகாலம்  முடிந்த  பின்னர்

மனிதகதியில்  தவத்தை ஏற்று  மீளாப்  பெரும் பேறினையடைவர்                 87

 

            நல்லவளான  நங்கையே,  அருகனால்  கூறப்பட்ட,  மும்மணிகளான,  முக்கூட்டு  மருந்தினை  உண்டு  களித்தவர்கள்  அகமிந்திர  உலகத்தில்  தேவனாக  பிறப்பார்கள்.  அவ்வுலகத்தின்  தேவர்களுக்கெல்லாம்  அரசனாகி,  பல்லாண்டுகாலம்  உயரிய  இன்பத்தை  அனுபவிப்பார்கள்.  பின்  ஆன்மாவுக்கு  தீவினைகளை  ஏற்படுத்தும்,  தீய  செயல்களை  ஏதும்  செய்யாமல்,  தேவகாலம்  முடிந்த  பின்னர்,  அடுத்து  வரும்  மனிதகதியில்  அருந்தவத்தை  மேற்கொண்டால்,  பிறவித்  துன்பத்தை  அறவே  அறுத்து  வீடுபேறு  அடைவார்கள்  என்று  முனிவர்  கூறி  முடித்தார்.

           

நூலாசிரியர்  கூற்று.

 

சந்திர  பட்டாரக  முனியின்  சத்திய  அறங்களால்  நீலகேசி

ஆராய்ந்து  நல் தெளிவு  கொள்ள  ஆன்மா  எடுக்கும்  நால்கதியும்

கதிநான்கில்  அவ்வுயிர்கள்  கண்டிடும்  துன்பங்களையும்

துன்பங்கள் முற்றும்  அழிந்திட  தூய  நல்லற  மருந்து  தந்தேனென்றார்            88

 

            அறங்கூறும்  நல்லாசிரியரான  சந்திர பட்டாரகர்  கூறிய  அறங்களைக்  கேட்டு,  திறம்  பெற்ற  நீலகேசி,  அறத்தை  நன்கு  ஆராய்ந்து,  ஐயமற்ற  தெளிந்து,  உணர்ந்து  தன்  உள்ளத்தில்  ஏற்கும்  வகையில்,  உயிர்கள்  மாறி  மாறி  நான்கு  கதிகளில்  பிறந்து,  துன்பம்  எய்துகிற  விதங்களையும்,  அவ்வுயிர்களுக்கு  உண்டாகும்  துன்பத்தின்  தன்மையையும்,  அப்பிறவித்  துன்பத்தை  போக்கும்  அற அமுதாகிய  முக்கூட்டு  மருந்தின்  சிறப்பையும்  எடுத்துக்  கூறினார்  நூலாசிரியர்.  

 

முனிவர்  கூற்று.

 

கயல்விழியும்  கனிச்சுவை  இதழும்  தனச்  சுமை  தாங்கா  தளிரிடையும்

தவழும்  இடை கொண்ட மேகலையும்  இதயம் பிழிந்திடும் மோகத்தாலே

தூண்டிலில்  தொங்கும்  புழுவிற்காக  துடித்து  சிக்கும்  மீனினை  போல

மக்களும்  சிக்கிய  மடமையாலே  மாபெருந்துன்பம்  எய்துவரென்றார்            89

 

            மீன்களைப்  போன்ற  விழிகளையும்,  நற்கனிச்  சாற்றினைப்  போன்ற  இதழ்களையும்,  தனங்களின்  சுமையை  தாங்காத  மெலிந்த,  தளிர்  போன்ற  இடையினையும்,  அதன்  மேல்  தவழ்ந்து,  சிணுங்கும்  மேகலை  என்ற  ஆபரணமும்,  இதயத்தை  பழங்களில்  இருந்து  சாற்றினை  எடுக்க  பிழிவது   போன்ற  மோகத்தாலும்,  தூண்டிலில்  தொங்கும்  புழுவிற்காக,  ஒடிவந்து,  கவ்வி  சிக்கிக் கொள்ளும்  மீனைப்  போல  பெண்களின்  மீதுள்ள  ஆசையால்  மக்கள்  தங்கள்  மடமையால்  சிக்கி  பெருந்துன்பம்  அடைகிறார்கள்  என்று  முனிவர்  கூறினார்.

 

புழு  புழுத்து  நாறும்  உடம்பை  பட்டுப்  புடவை  கொண்டு  போர்த்தி

கயலாய் துள்ளும்  கண்களுக்கு  கருப்பு  மை  கொண்டு  எழுதி

கார்மேகக்  கூந்தல்  திருத்தி  குழல்  பொருந்த  மணமலர்  சூடிய

மங்கையரை  நாடிச்  செல்வோர்  மீளாப்  பெரும்  நரகம்  செல்வர்                 90

 

            எலும்பு,  நரம்பு,  இரத்தம்,  சதை,  மலம்  முதலியவைகளால்  உருவாகி,  புழு  புழுத்து  நாற்றமெடுக்கும்  இந்த  உடலை,  பட்டுப்  புடவையால்  போர்த்தி,  மீன்களைப்போல்  துள்ளும்  கண்களுக்கு,  கருப்பு  மைகொண்டு  அழகு  படுத்தி,  மழைகால  மேகம்  போல்  கருத்து  சுருண்ட  கூந்தலை  வாரி,  மணம்  பொருந்திய  மலர்களைச்  சூடி,ய  மங்கையரின்  அழகினை  கண்டு  மயங்கி,  அவர்களைச்  சேர நினைப்பவர்களும்,  சேர்ந்தவர்களும்,  மீளாப்  பெரும்  நரக  உலகை  அடைவார்கள்.

 

ஒப்பனையால்  பேணும்  உடல்கள்  உயிர்  பிரிந்தால்  பிணங்களாகும்

உடல்கள்  எரிக்கும்  சுடுகாட்டில்  உறைகின்ற  முனிவனான  என்னை

காமலோகினியாய்  உருவம்  மாறி  கட்டழகால்  எனை  மயக்கி  வதைக்க

பேயான  நீலகேசி  நீ  வந்தாய்  பேதலித்து  நான்  மருள்வேனென்று                91

 

            எவ்வளவுதான்  உடலை  அழகு  சாதனங்கள்  கொண்டு  அழகு  செய்தாலும்,  உயிரானது  பிரிந்து  விட்டால்,  அதை  பிணம்  என்றுதான்  கூறுவார்கள்.  அத்தகைய  உடல்களை  எரிக்கும்  இந்த  சுடுகாட்டில்,  வாழ்கின்ற  முனிவனான  என்னை,  அரசன்  மகள்  காமலோகினியாய்  உருவம்  மாறி,  உன்னுடைய  அழகால்  என்னை  மயக்கி  அழிக்க  வந்த  பேயான  நீலகேசியே,  நான்  உன்மேல்  மோகம்  கொண்டு,  மயங்கி  மருள்வேன்  என்று  நினைத்தாயா  என்றார்  சந்திர பட்டாரகர்.

 

சந்திரபட்டாரக  முனியின்  சத்திய  அறங்களைக்  கேட்டும்

புழுகு  உருகி  புடைநாற்றம்  வீசும்   பெண்  உடலை  துறந்து  விரட்ட

உயிரிணைந்த  வினைகள்  நீங்க  உள்ளத்தில்  அருகநெறி  ஏற்று

மும்மணியால்  மனம்  மெய்யாக  ஞான  ஒளி  நங்கை  வடிவானாள்              92

 

            சந்திர பட்டாரகரின்  சத்தியமான  நல்லறங்களை  கேட்ட  பிறகு,  உயிரில்  இணைந்த  வினைகள்  எல்லாம்  அழிய,  தன்  உள்ளத்தில்  அருக  பரமேட்டியின்  மும்மணிகளையும்,  நல்லறங்களையும்  ஏற்று,  மனமானது  மெய்ப்பொருளினை  தெளிந்து,  புழுக்கள்  ஊர்ந்து  நெளியும்,  புடைநாற்றம்  வீசும்  உடலினைத்  துறந்து  ஒழிக்க,  ஞானம்  பெற்ற  ஒளி  பொருந்திய  ஞானப்  பெண்ணானாள்  நீலகேசி.

 

நீலகேசியின்  செயல்.

 

தன்  மகவு  செய்யும்  தவறுகளை  தாய்  மறந்து  பாலூட்டுதல்  போல்

தான்  செய்த  தீச்செயல்களை  தவ  முனிவர்  புறத்தே  தள்ளி

அறம்  ஓதி  மறம்  விலக்கிய  சந்திரபட்டாரகர்  தாள்  தொழுது

காமலோகினி  வடிவத்தை  நீக்கி  தன்  வடிவில்  வணங்கினாள்  கேசி            93

 

            தான்  பெற்ற  குழந்தையின்  தவறுகளை  எல்லாம்  மறந்து,  தன்  சேய்க்கு  பாலூடுவது  போல்,  சந்திர பட்டாரக  முனிவருக்கு  தான்  செய்த  அத்தனை  தீயசெயல்களை  எல்லாம்  பொறுத்து,  புறந்தள்ளி,  நல்லறங்களை எல்லாம்  எடுத்து  கூறி,  அருகன்  ஆகமங்களை  விளக்கிய  அவரை  தொழுது  வணங்கி,  காமலோகினி  வடிவத்தை  விட்டு  நீங்கி,  தனது  உண்மை  உருவத்தில்  நின்றாள்  நீலகேசி.

 

மண்ணுலகில்  பிறந்த  எவரும்  மறம்  செய்தல்  இயற்கையாகும்

மங்கையான  நீ  செய்த  பிழையை  மன்னித்தல்   என்  கடமையாகும்

வருந்தாதே  வஞ்சியே  என  கூறிய   வான் போற்றும்  முனி  அடி  தொழுது

நெஞ்சத்தில்  அவர்  புகழ்  நிறைய    நீலகேசி  போற்றிப்  பாடினாள்       94

 

            விருப்பு,  வெறுப்பில்லாத  தவமுனியான  சந்திர பட்டாரகர்,  நங்கையே,  மண்ணுலகில்  பிறந்த  மனிதர்கள்  தவறு  செய்தல்  மனிதர்களின்  இயற்கை  குணமாகும்.  ஒரு  பற்றற்ற  முனிவனாக,  உன்னை  மன்னித்தல்  என்னுடைய  கடமையாகும்.  ஆகவே  நீ  வருத்தப்பட வேண்டாம்  என்று  கூறினார்.  விண்ணுலகமே  போற்றும்  அந்த  மாபெரும்  முனிவரின்  திருவடிகளை  வணங்கி,  அவள்  மனதில்  அவரின்  பெருமைகளும்,  புகழும்  நிறைய,  அவரைப்  போற்றி  பாடலானாள்  நீலகேசி.

 

நீலகேசி  முனியை  ஏத்துதல்.

 

வெள்ளம்  போல்  பெருகுகின்ற  ஞான  மழை  பொழிபவன்  நீ

இரு  வினை வரும்  வழி  அடைத்து  பிறப்பறுக்கும்  பெரியவன்  நீ

நல்லவர்  நெஞ்சத்தில்  வாழும்  நல் மாண்புடைய  மன்னவன்  நீ

பிறவித்  துன்பங்கள்  போக்க  பெரு   அறங்கூறும்  பெரியவன்  நீ                    95

 

            பெருவெள்ளம்  பெருகி  ஓடும்  படியாக  கொட்டுகின்ற  மழையைப்  போல,  ஞானத்தை  மழையாக  பெய்விப்பவன்  நீ.  நான்கு  கதிகளில்  பிறப்பை  தோற்றுவிக்கும்  இருவினைகள்  வரும்  வாயிலை  அடைக்கின்ற  பெரியவன்  நீ.  நல்லறங்களை  என்றும்  மனதில்  நிறுத்தி,  நல்லொழுக்கத்துடன்  வாழுபவர்கள்  மனதில்  வீற்றிருக்கும்  மாமன்னன்  நீ.  பிறவித்  துன்பங்களை  நீக்குவதற்கான  வழிகளாகிய  நல்ல  அறங்களை  கூறும்  அறிவன்  நீ  எனப்  பாடினாள்.

 

அறிவிலி  நான்  செய்த  தீமைகளை    அறிவால்  உணர்ந்த  அறவோன்  நீ

பேய்  என்று  என்னை  இகழாத  பெருந்தன்மை  உடையவர்  நீ

பகை  ஒழித்து  பிறப்பழித்த  பாழ்சினம்  துறந்த  சித்தனும்  நீ

மூவகை  மூடங்களை  விளக்கி  முழுதும்  தெளிய  வைத்தவர்  நீ                     96

 

            முட்டாள்தனமாக,  அறிவில்லாமல்  நான்  தங்களுக்கு  செய்த  தீமைகளை,  தாங்கள்  ஞானத்தால்  உணர்ந்த  நல்லறத்தோன்  நீ.  பேய்  என்று  என்னை  தரம்  தாழ்த்தி  உணர்ந்து,  என்னை  இகழ்ந்து  பேசாத  பெருந்தன்மையுடையவர்  நீ.  என்னையோ  மற்றவர்களையோ  பகைவர்கள்  என்று  நினைத்து,  விரோதம்  கொள்ளாத,  கோபம்  இல்லாத,  அனைத்தும்  துறந்த  சித்தநிலையில்  இருக்கும்  சித்தனும்  நீ.  மூன்று  வகை  மூடங்களையும்  விளக்கிச்  சொல்லி,  அவைகளை  முழுதும்  தெளிய  அறியவைத்த  அறிவன்  நீ என்  பாடினாள்.

 

வீட்டியல்பையும்  கட்டியல்பையும்  விளக்கிச்  சொன்ன  வீரியன்  நீ

இருவினையால்  எய்தி  நிற்கும்  இன்பங்களை  வெறுத்தவன்  நீ

சுடுகாட்டின்  மாயவினை கண்டு  சுணங்காத  நெஞ்சினன்  நீ

புகழ்தற்கரிய  சிறப்புடைய  பெருந்தவத்து  மெய்யவன்  நீ                                97

 

            மோட்சமாம்  வீட்டின்  இயல்பையும்,  உயிரிடத்து  வினைகள்  கட்டுற்று  நிற்கும்  தன்மைகளை  விளக்கிச்  சொன்ன  வீரன்  நீ.  இரு  வினைகளால்  வந்து சேரும்  இன்ப துன்பங்களை  வெறுத்து  ஒதுக்கியவன்  நீ. சுடுகாட்டில்  நடக்கும்  மாயா  ஜாலங்களையும்,  வினோதங்களையும்  கண்டு  பயப்படாத  நெஞ்சம்  கொண்டவன்  நீ.    உன்னை  புகழ்ந்து  போற்றும்  பல  சிறப்புகளை  உடைய  மெய்  ஞானத் தலைவன்  நீ  என்று  பாடினாள்.

 

                                                             

பிறவித் துன்பங்கள்  கடந்த  பேரறிவுடைய  முனிவன்  நீ

அவா, அழுக்கறு  வேர்  அறுத்த  ஆன்ம  நலம்  கொண்டவன்  நீ

வெல்லுதற்கரிய  காமவேளை  வெறுத்து  சினந்து  எரித்தவன்  நீ

உனை  கொல்ல  வந்த  எளியவளை    உன்  குணத்தால்  வென்றவன்  நீ            98

 

            நான்கு  கதிகளின்  பிறவியினால்  ஏற்படும்  துன்பங்களை எல்லாம்  கடந்த  மிகப்பெரிய  அறிவுடையவன்  நீ.  ஆசை,  பொறாமை  போன்ற  தீவினைகளை  வேரோடு  அறுத்து  ஆன்மாவை  சுத்தமாக்கி,  நலம்  கொண்டவன்  நீ.  மலர்  கணைகளைக்  கொண்டு  மக்களை  தாக்கி,  மோகமாம்  காமத்தைத்  தூண்டி,  மங்கையர்கள்  மேல்  ஆசை  கொள்ளச்  செய்யும்  காமவேள்  மன்மதனை,  சினந்து  எரித்தவன்  நீ.  உன்னை  கொல்ல  வந்த  பாவியான,  எளியவளான  என்னை,  உன்  நல்ல  குணத்தால்  வென்று,  ஏற்றுக் கொண்டவன்  நீ  என்று  போற்றினாள்.

 

நிலையாமை  என்னும்  பெரு  உண்மையை    நன்குணர்ந்த  நாயகன்  நீ

உடலினது  மயக்கம்  தன்னை  உள்ளத்தில்  துறந்த  அறிவன் நீ

அடக்கம்  இல்லா  என்  தீவினையை  அருள்  கொண்டு  அழித்தவன்  நீ

உன்  செந்தாமரை செவ்வடிகளை   சிரம்  கொண்டாள்  இந்த நீலகேசி        99                   

            உலகில்  எதுவும்  நிரந்தரம்  இல்லை  என்ற  நிலையாமை  தத்துவத்தை  நன்கு  உணர்ந்து, உரைத்த   நாயகன்  நீ.  உடலில்  ஏற்படும்  ஆசைகள்,  மயக்கங்கள்  எல்லாவற்றையும்  முழுதும்  துறந்து  விட்ட  அறிவன்  நீ.  அடக்கம்  இல்லாத,  ஆணவம்  கொண்ட,வளான  என்னை  ஆட்கொண்டு,  என்  தீயவினைகளை  அருளுடன்  அழித்தவன்  நீ.  உன்  செந்தாமரை  போன்ற  திருவடிகளை,  நீலகேசியாகிய  நான்  சிரம்  மேல்  கொண்டு  வணங்குகிறேன்  என்றாள்.

 

பெருந்தீவினைகள்  உடைய  நான்  பெருமழையாய்  உன்  மேல்  பெய்தேன்

நஞ்சுடை  பாம்பு  தேள்களாய்  வந்து  நின்  உடல்  ஏறி  ஊர்ந்தேன்

உன் தவ  சக்தியின்  உயர்வால் உடல்  வேறு  உயிர்  வேறென நின்றாய்

கலக்கமுறா  மெய்யுணர்வுடையோய்  காலடி  பணிந்தேன்  என்றாள்            100

 

            தீவினைகளின்  மொத்த  உருவமான  நான்,  உன்  பெருமைகளை  அறியாமல்,  கார்கால  மழையைப்  போல்  உன்மேல்  பெய்தேன்.  கொடிய  நஞ்சுகளைக்  கொண்ட  பாம்பு,  தேள்களாய்  வந்து  உன்  உடல்  மேல்  ஏறி  உனக்கு  துன்பம்  தந்தேன்.  உன்  மிகப்  பெரிய  தவத்தாலும்,  தேவ  சக்தியின்  உயர்வாலும்,  உடல்  வேறு  உயிர்  வேறாகி,  ஏதும்  அறியாமல்  நின்றாய்.  உண்மையான  மெய்யுணர்வினால்,  சிறிதும்  கலங்காமல்  நின்ற  தலைவனே  உன்  காலடியை  தொழுகிறேன்  என்றாள்.

 

கல்  உருகும்  வெப்பத்தையும்  கடும்  சூறைக்  காற்றையும்  ஒதுக்கி

சுடுகாட்டின்  இருண்ட  இருளில்  சுடுகாட்டையே  உறைவிடமாக்கி

காதிகர்ம  வினைகள்  அறுத்த  கடும்  நோன்பு  ஏற்ற  தலைவா

உன்  திருவடிகளை  என்றும்  யான்  தினம்  தொழுது  வாழ்வேனென்றாள்          101

 

            கடுமையான,  கருங்கற்கள்  உருகி  ஓடும்  அளவு  வெப்பத்தையும்,  நெடும்  மரங்களையும்  வேரோடு  பெயர்த்து  தள்ளும்  கடுமையான  சூறாவளிக்  காற்றையும்  ஒதுக்கித்  தள்ளிவிட்டு,    இருண்ட  இருளும்,  பிணம்  வேகும்  நாற்றமும்,  பேய்களும் வாழும்  இந்த  சுடுகாட்டை  இருப்பிடமாக்கிக்  கொண்டு,    காதி,  அகாதி  கர்ம  வினைகளை  எல்லாம்  அழிந்து  போக,  கடும்  நோம்பினை  ஏற்ற  தலைவனே,  உன்  திருவடிகளை  நான்  தினமும்  தொழுது  வாழ்வேன்  என்றாள்.

 

இப்பெருஞ்  சுடுகாடு  மட்டுமே  சுகம்  தரும்  இல்லம்  என்றும்

இறந்தவர்கள்  உடலை  உண்ணும்  இளநரிகள்  கூட்டம்  கண்டும்

கார்கால  மழை கொட்டிடினும்  காரிருள்  சூழ்ந்த  காட்டினை

கலங்கி நான் பிரியேன் என்ற  தனித்த  தவ முனியே தொழுகிறேன்               102

 

            இந்த  பெரிய  சுடுகாடு  மட்டுமே  உனக்கு  நல்ல  சுகங்களைத்  தரும்  வீடாகவும்,  இங்கு  வரும்  இறந்தவர்களின்  பிண உடலை  தின்னுவதற்கு  அலையும்  நரிகளின்  கூட்டத்தையும்,  ஓசையை  கண்டு  பயப்படாமையும்,  தாங்க  முடியாத  அளவு  கடுமையான  மழை  பெய்து,  கரிய  இருள்  சூழ்ந்த  காட்டினை  விட்டு  கலக்கமுற்று  பிரியமாட்டேன்  என்று  வாழும்  தவமுனியே  உன்னை  வணங்குகிறேன்  என்றாள்.

 

வல்லிய  சிறு பேய்கள்  எல்லாம்  வெண்தலைகளை காய்களாக்கி

வகுப்பறையாம்  இக்காட்டினிலே  விளையாடும்  நிலையைக் கண்டும்

உடல்  பற்றை  அறவே  நீக்கிய உயர்  தவத்து  சான்றோன்  உன்னை

வழிபாட்டு  நூல்  விதிமுறைபடி  வலம்  வந்து  தொழுவேன்  என்றாள்             103

 

            கொடிய,  வலிமை  பொருந்திய  சிறிய  பேய்கள்  எல்லாம்,  பிணங்களின்  தலைகளை  காய்களாக்கி,  இச்சுடுகாட்டையே  வகுப்பறையாக்கி,  விளையாடும்  நிலையை  பார்த்தும்,  உடலின்  பற்றை  அறவே  நீக்கிய  உயரிய  தவத்து  சான்றோனாகிய  உன்னை,  வழிபாடு  செய்யும்  முறைகளை  நன்கு  தெளிவுடன்  விளக்கும்  நூல்படி உன்னைத்  தொழுவேன்.

 

உன்  நுண்மையாம்  நல்லறங்களை  உள்ளத்தில்  நான்  வைத்து  போற்றி

மெய்குணங்கள்  சற்றும்  விலகா  உனை  மெய்  மொழி  மனதால்  வணங்கி

கடலளவு  பெருந் தீவினை  அழிய  கருத்தினில்  இனி  பதியாதிருக்க

அடியவளின்  செயல்கள்  இனியும்  அமையும்  வழி உரைப்பீரென்றாள்       104

 

            உங்கள்  நுண்மையான  நல்ல  அறங்களை  நான்  என்றும்  என்  உள்ளத்தில்  பதியவைத்து,  அவைகளைப்  போற்றுவேன்.  மெய்குணங்களின்  உருவான  உங்களை,  என்னுடைய  மனம் ,  மெய்,  மொழிகளால்  வணங்குவேன்.  பெருங்கடல்  போன்ற  என்  தீவினைகள்  என்னை  விட்டு  அழியவும்,  இனி  என்றும்  என்  மனதில்  உருவாகி,  பதியாதிருக்கவும்,  நான்  செய்யவேண்டிய  செயல்களை  எனக்கு  உபதேசியுங்கள்  என்றாள்.           

 

நால் வகை பிறப்புகள் நீங்கி எண்குணங்கள்  நிறைவு கொண்டு

எவ்வுயிர்க்கும் அருளை நல்கி எல்லையற்ற துன்பம் போக்கி

ஆகம நல்லறங்களை தந்து அதன் வழி நெறியில் நின்றால்

அருகன் அடி பற்றி வணங்கி அவரே புகலிடம் என வாழ்கவென்றார்          105

 

            தீவினைகளால்  உண்டாகும்  நான்கு  பிறப்புகளையும்  நீக்கி,  எட்டு  வகையான  நல்ல  குணங்களை  மனதில்  நிறைவு  கொள்ளச்  செய்து,  உலகில்  உள்ள  எல்லா  உயிர்களுக்கும்  அன்போடு  அருளைத்  தந்து,  அவைகளின்  எல்லையில்லாத  துன்பத்தைப்  போக்க,  தரும  உரைகளைக்  கூறி,  அருகனின்  பரமாகங்களை  எல்லோருக்கும்  எடுத்துரைத்து,  அதன்  வழியில்  நின்று,  அருகா  நீயே  எனக்கு  புகலிடம்  என்று  சரணடைந்து  வாழ்வாய்  என  வாழ்த்தினார்  முனிவர்.

 

நல் முனியே உங்கள் அருளால்  நான்  புகலிடம் அறிந்தேன்  இன்று

மும் மணியை முழுதும் பெற்றேன் உயிர் உயிரில் பொருள் இயல்பறிந்தேன்

உனக்கு இழைத்த பிழை கழிய உன்னத கழுவாய்  கூறும்  என்றாள்

அருகனின்  நன்நெறியை  நீ  அனைவருக்கும்  உரைப்பாய்  என்றார்             106

 

            உயர்ந்த  தவத்தையுடைய  நல்ல  முனிவரே,  உங்களின்,  அருளால்  நான்  மும்மணிகளைப்  பெற்றேன்.  என்னுடைய  புகலிடம்  என்ன  என்று  அறிந்தேன்.  உயிர்  பொருள்கள்,  உயிர்  இல்லா  பொருள்களின்  இயல்பு  பற்றி  அறிந்தேன்.  நான்  உங்களுக்கு  செய்த  பெரும்  தவறுகள்  கழிய,  எனக்கு  பிரயாசித்தம்  கூறுங்கள்  என்று  வேண்டினாள்  நீலகேசி.  உலகம்  எங்கும்  சென்று,  நீ  அருக  பெருமானின்  நல்லற  நெறியை  மக்களுக்கு  சொல்லி,  அறச்  சேவை  செய்து  நல்வழி  படுத்துவாய்  என்றார்  சந்திர  பட்டாரக  முனிவர்.

 

முனிவரின்  அருள்நெறி  ஏற்று  முழுதுன்பம்  அகன்ற  அவள்

அருகனின்  அறநெறிகளை  அடியவள்  என்றும்  மறவேன் - என

சந்திர  பட்டாரக  முனிவரனை  வலம்  வந்து  தொழுது  எழுந்து

சித்ரகூட  சைத்யாலயத்தில்  தென்றலென  புகுந்தாள்  நீலகேசி                       107 

 

            முனிவர் கூறிய  அருள்நெறிகளால்  அவளது  முழு  துன்பங்களும்  அகன்று  போவதற்கான  வழியை  அறிந்து,  அருகன்  அறநெறிகளை  நான்  என்றும்  மறக்கமாட்டேன்  என்று  கூறினாள்.  பின்  சந்திர  பட்டாரக முனிவரை  வலம்  வந்து  வணங்கி,  வேதண்டம்  என்னும்  அகன்ற  வெள்ளிமலை  மலையின்  மேல்  வாழும்  உயிரினங்களின்  துன்பங்களைப்  போக்க,  சித்தகூட  சைத்தாலயம்  சென்றாள்.

 

                                    தருமவுரைச்  சருக்கம்  முடிவுற்றது.

 

 

 

                        2.  குண்டலகேசி  வாதச்  சருக்கம்.

 

கொல்லை,  முல்லை  மலர்களும்  கோங்கு  மரப்  பூக்களும்

குருத்த  மர  மலர்களும்   குரா  மரங்கள்  பூத்த  பூக்களும்

காந்தளில்  அலர்ந்த  மலர்களும்  கருங்குவளை  தந்த  பூக்களும்

நரவஞ்ச்  செடி  ஈந்த  மலர்களும்  நங்கை கரங்கள்  ஏந்தியிருக்க                  108

 

            நீலகேசி,  முல்லை,  கோங்கு,  குருத்தம்,  குரவம்,  காந்தள்,  அன்று  மலர்ந்த  கருங்குவளை,  நறவம்,    பூக்களை  இரு  கைகளிலும்  ஏந்தி,

 

ஞாழலில்  மலர்ந்த  மலர்களும்  தாழையின்  சுகந்தப்  பூக்களும்

சுர புன்னை  விரிந்த  மலர்களும்  குளிர்ந்த  குவளைப்  பூக்களும்

பாதிரி  மரத்தின்  மலர்களும்  பந்தொத்த  குண்டு  மல்லிகையும்

இன்னும்  பல  மலர்களோடும்  நீலகேசி  ஜினாலயம்  சென்றாள்                    109                             

            ஞாழல்  மலர்களும்,  தங்கொணா  மணம்  கமழும்  தாழையும்,  புன்னையும்,  குளிர்ந்த  குவளைப்  பூக்களும்,  பாதிரியோடு  குண்டுமல்லிகையும்,  இன்னும்  எண்ணற்ற  மலர்களோடு  அருகனின்  ஜினாலத்தினுள்  சென்றாள்.  

 

சித்திர  கூட  திருக்கோயிலின்  நீள  அகல  உயரம்  நோக்கி

சிந்தையில்  பதிந்த  வியப்பில்  வலமாக  மும்முறை  சுற்றி

நற்காட்சி  உடையோளாகில்  நடை  திறந்திருக்குமென  எண்ண

அக்கணமே  கதவுகள்  திறக்க  அருகனை  கை கூப்பி  தொழுதாள்                110

 

            சித்திரகூட  ஜினாலயத்தின்  நீளம்,  அகலம்,  உயரம்  ஆகியவற்றை  உற்று  நோக்கி,  மனதில்  ஆச்சரியம்  கொண்டாள். “ பெருந்தவத்தால்  உயரிய  இறைவன்  அருளிய,  பிழையற்ற  நற்காட்சியை  நான்  உடையேன்  ஆகில்,  எல்லா  கதவுகளும்  திறக்க  வேண்டும் “  என்று  எண்ணிய  உடனே  ஆலயக்  கதவுகள்  எல்லாம்  திறந்தன.  நீலகேசி  அருக  பெருமானை  இருகரம்  கொண்டு  தொழுதாள்.

 

அவளுடன்  கொண்டு  வந்த  அத்தனை  மலர்களையும்

அருளாளன்  அருகன்  அடியில்  அடை  மழை  போல்  பொழிந்து

நறும்  புகை  சந்தனத்தோடு  நல்  சுண்ணப்  பொடிகள்  தூவி

நல்லிசைப்  பாடல்கள்  இயற்றி  இன்னிசைப்  பண்களால்  துதித்தாள்            111

 

            நீலகேசி,  தான்  கொண்டு  வந்த  மலர்களால்  எண்வகையான  மங்கலப்  பொருள்கள்,  யானை,  பசு,  பறவைகள்,  மரம்,  பூங்கொடிகள்  போன்ற  உருவங்களை  கலை நயத்துடன்  செய்து,  மலர்களை  அருகன்  திருவடிகளில்  பெரு  மழையைப்  போல்  அர்ச்சித்து,  நறுமணப்  புகைகளுடன்,  சந்தனம்,  சுண்ணப்பொடிகளையும்  தூவி,  அருகனின்  புகழினை,  நல்லிசைப்  பாடல்கள்  கொண்டு  பாடித்  தொழுதாள்.

8  மங்கலப்  பொருள்கள் :  சாமரை,  விளக்கு,  பொற்குடம்,  இணையக்கயல்,  கண்ணாடி,  தோட்டி,  பதாகை,  வெண்முரசம்.

 

வீரர்களில்  சிறந்த  வேந்தனே  வருத்துகின்ற  காலனை  வென்றோனே

காமத்தினை  வென்ற  தலைவா  கதி நான்கை  துறந்த  தூயவா

மூத்தலையும்  அழித்த  முதல்வா  மூவுலக  உயிர்களின்  அருளே

நின்  நிலை  நான்  அடைய  வேண்டி  நித்தமும் உனை  நான்  தொழுவேன்            112

 

            பகைவர்களாகிய  அனைத்து  வினைகளையும்  வென்ற  வீரர்களில்  சிறந்த  வீரனே,  துன்பத்தைத்  தருகின்ற  காலனை  வென்றவனே,  மோகமாகிய  காமத்தை  வென்றவனே,  நான்கு  பிறப்புகளையும்  அறுத்த  தூயவனே,  முதுமையை  வென்று,  மூவுலக  உயிர்களையும்  உன்  அருளால்  காப்பவனே,  உன்னைப்  போன்ற  நிலையை  அடைய  நான்  தினமும்  உன்னை  தொழுவேன்  என்றாள்.

 

பிறத்தலும்  மூத்தலும்  கொண்டு பிணியுடன்  சாதலும்  ஏற்று

அவரவர்  தீவினைக்கு ஏற்ப  அளவிலா  துன்பம்  அடையும்

உயிர்களுக்கு  உயர்நெறி  அருளிய  உய்ய  வைக்கும்  தெப்பம்  ஆகி

மெய்நெறிகளைப்  பகர்ந்திடும்  புலவரில்  சிறந்த  புலவன்  நீயே                  113                             

            பிறத்தல்,  நோய்வாய்  படுதல்,  முதுமை  அடைதல்,  இறத்தல்  ஆகியவைகளை,  அவரவர்  தீவினைகளுக்கு  ஏற்ப  அளவிலா  துன்பங்களை  அனுபவிக்கும்  உயிர்களுக்கு,  உயர்ந்த  அறநெறிகளைக்  கூறி,  அவர்களை  அத்துன்பக்  கடலில்  இருந்து  தப்பிக்க  வைக்கும்  படகு  போல்  ஆகி,  மெய்நெறிகளை  உரைத்திடும்  புலவர்களில்  சிறந்த  புலவன்  நீ  என்றாள்.

 

அசோகமர  அடியில்  அமர்ந்து  ஆகம  நெறிகளை  அருளி

இருவினைகள்  விலக்கும்  வழியை  இவ்வுலக  உயிர்கட்கு  சொல்லி

தேவர்கள்  துந்தூபி  முழங்க  தேன்  மலர்கள்  மழையாய்  பெய்ய

பெரியோரில்  சிறந்த  பெரியோனே  பொற்பாதம்  வணங்குகின்றேன்            114

 

            தேவர்கள்  மகிழ்ச்சியுடன்  துந்தூபிகளை  முழங்க,  தேன்  கொட்டும்  மலர்கள்  மழை  போல்  பெய்ய,  பொன்மதில்  வட்டத்திற்குள்  அமைந்துள்ள  சமவசரணதில்,  அசோக  மரத்தின்  அடியில்,  பொற்றாமரை  மலர்மேல்  அமர்ந்து,  எண்திசையும்  ஒலிக்கும்படி,  இருவினைகளை  ஒழிக்கும்  ஆகமநெறிகளை,  உயிர்களுக்கு  சொல்லும்  பேராற்றல் உடைய பெரியோனே உன் பொற்பாதங்களை  வணங்குகிறேன்  என்று  பாடினாள்.

 

வெண்நிற  சாமரைகள்  விசிட  பொன் சிம்மாசனத்தில்  அமர்ந்து

முக்குடையின்  நிழல்  கவிழ  மும்மண்டலம்    ஒளிர்ந்து  நிற்க

முப்பெரும்  ஆகமங்களையும்   மூவுலகமும்  கேட்கும்  வண்ணம்

திவ்வியத்  தொனியால்  அருளிய  தேவனே  உனை  வணங்குகிறேன்            115

 

            இருபுறமும்  வெண்மை  நிறமுடைய  சாமரைகள்  வீச,  திங்கள்  போன்ற  முக்குடை  நிழலில்,  மும்மண்டலம்  ஒளிர,  தங்க  சிம்மாசனத்தில்  அமர்ந்து,   அங்க  ஆகமங்களை,  மூவுலகமும்  கேட்டு  பதினென்  மொழிகளில்  உணரும்  வண்ணம்,  உன்  திவ்வியத்தொனியாலே  திருமொழிகளை  வழங்கிய தேவாதி  தேவனே  உனை  வணங்குகிறன்  என்றாள்.

( 3 மண்டலம்.  ஆலோகம்,  பிரபா  மூர்த்தி,  கனப் பிரபா.   முக் குடை  :  சந்திராதித்தம்,  நித்ய  வினோதம்,  சகல  பாசனம்,   3  ஆகமம்  :  அங்காகமம்  பூர்வாகமம்,  பிரகீகுணவாகமம்.

 

வினைகள்  வாயில்  ஊற்றை  அடைத்து  ஊற்றின்  தன்மையை  உணர்த்தி

செய்தியை  உணர்த்த  முழங்கும்  செவ்விய  முரசின்  குணம்போல்

பரம  ஆகமங்கள்  எல்லாம்  கூறி  பற்றற்ற  தூய உள்ளம்  கொண்ட

தேவர்கட்கு  தேவனாய்  திகழும்  தெய்வமே  உனை  சரணடைந்தேன்            116

 

            அனைத்து  வினைகளும்  ஊற்றாகப்  பெருகி,  உயிரில்  கலக்கும்  வாயிலை  அடைத்து,  அவ்வூற்றின்  தன்மைகளை  நன்கு  உணர்த்தி,  மக்களுக்கு  செய்திகளைச்  சொல்ல  அரசர்கள்  முழக்கச்  செய்யும்  முரசம்  போல,  பரம  ஆகமங்களையும்  உரைத்து  கூறிய  பற்றுகளையெல்லாம்  விட்ட  தேவர்க்கு  தேவனாகிய  தெய்வமே  உன்னை  சரணடைந்தேன்  என்றாள்.

 

ஊனக்கண்ணால்  நோக்கான்  நீ  உலகு  உணர்ந்த  ஞானியும்  நீ

ஐம்புலன்  அடக்கிய  அறிவன்  நீ  அழியா  பேரின்ப  ஆதவன்  நீ

உண்ணுதல்  இல்லா  உயர்ந்தோன்  நீ  ஒளி  வீசி  திகழும்  மேனியான்  நீ

இறைவனுக்கு  இறைவன்  நீ  இணையடிகள் பணிகிறேன் காப்பாய்  நீ            117

 

            மனிதர்களைப்  போல்  ஊனக்கண்களினால்  நோக்காமல்,  அனைத்தையும்  ஞானக்கண்ணால்  பார்க்கும்  உலகமே  உணர்ந்த  ஞானி  நீ.  ஐம்புலங்களையும்  அடக்கி  ஆளும்  மிகப்  பெரிய  அறிவாளன்  நீ.  அழியாத  பேரின்பத்தைத்  தரும்  ஆதவன்  நீ.  உணவுண்டு  உடல்  வளர்க்கும்  சாதாரணமான  மனிதர்களைப்  போல்  இல்லாத,  உணவையே  வெறுத்த  உயர்ந்தவன்  நீ.  உன்னுடைய  மேனியானது  ஞாயிறு  போல்  ஒளி வீசக்கூடியது.  தெய்வத்திற்கெல்லாம்  தெய்வமாகிய  உன்  திருவடிகளை  பணியும்  என்னை  காப்பாயாக  என்றாள்.

 

ஆசிரியர்  இல்லா  அறிவன்  நீ  ஆகமம்  உரைக்கும்  அறிஞன்  நீ

உட்பொருள்  உணர்ந்த  தூயோன்  நீ  மெய்காட்சி  உடைய  மேலோன்  நீ

எண்குணம்  கொண்ட  எம்மான்  நீ  எண்வினை  அழித்த  எழிலோன்  நீ

வினைகள்  அறுத்த  துறவியர்க்கு  வித்தான  முதல்  முனிவன்  நீ                     118

 

            அனைத்தையும்  சொல்லித்தருகின்ற  ஆசிரியரே  இல்லாமல்,  அனைத்தயும்  அறிந்துணர்ந்த  ஆகமங்களை  உரைக்கும்  அறிவாளி  நீ. அனைத்தின்  உட்பொருள்களையும்  உணர்ந்து,  முழு  மெய்காட்சியுடைய  மேலானவன்  நீ.  எட்டுவகையான  குணங்களையும்  கொண்டு,  எட்டுவகையான  வினைகளையும்  அழித்தவன்  நீ.  வினைகளையெல்லாம்  அறுத்த  துறவியர்களுக்கு  விடை  போன்ற  முதல்வன்  நீ  என போற்றினாள்.

 

முதலும்  முடிவும்  அளந்துணர்ந்த  மூலவன்  திருக்  கோயில்  உள்ளே

மெய்யறிவால் இப்படி  வாழ்த்தி  மெய்யுருக  வணங்கிய  நீலகேசி

புல்லிய  பொய்  சமயங்களிங்கு  புற்று  போல்  பல  உள்ளனயிங்கு

அவற்றுடன்  சொற்போர்  புரிந்து  வெல்லும்  முடிவினை  ஏற்றாள் கேசி      119                 

            தொடக்கத்தையும்,  முடிவையும்  முழுதும்  அளந்து  உணர்ந்த  முழுமுதற்கடவுளின்  திருக்கோயில்  உள்ளே,  மெய்யறிவுடன்  தன்  மெய்  உருக  பாடி  வணங்கினாள்  நீலகேசி.  மக்களுக்கு  பொய்யான  தத்துவங்களையும்,  மெய்பொருளற்ற  அற்ப  பொய்நெறிகளையும்  சொல்வதற்கு,  நாகத்தின்  புற்றுகள் போல்  பலசமயங்கள்  தோண்றியுள்ளன.  அவற்றுடன்  அருகனின்  நன்னெறிகளையும்,  ஆகமங்களையும்  கொண்டு,  சொற்போரிட்டு  அவர்களை  வெல்லுவேன்  என்று  முடிவு  செய்தாள்.

 

ஊன்  உண்ணல்  தீவினையில்லை  உயிரென  ஒரு  பொருளுமில்லை

தவஞ்செய்தல்  அறமும்  இல்லை  பொருள்  கவரும்  கணிகையைப்  போல்

பொதுமக்கள்  அறிவைக்  கவரும்  புல்லிய  பொய்  புத்தன்  கூற்றை

போரிட்டு  பொய்  ஆக்குவேனென  நீலகசி  கடமையாய்  ஏற்றாள்                  120

 

            பொருள்களைக்  கவரும்  நோக்கம்  உடைய  ,  விலைமகளீர்  பேன்று,  மக்களின்  அறிவாகிய  செல்வத்தை,  மிருகங்களை  வதைத்து  அதன்  ஊனை  உண்பது  தீமையில்லை.  உயிர்  என்று  ஒரு  பொருளே  இல்லை,  தவம்  செய்து  உடலை  வருத்துவது  அறம்  இல்லை  என்று  கூறி  அழிக்கும்  புத்தனின்  பொய்நெறியை,  சொற்போரிட்டு  அழிப்பது  என்  கடமையென  முடிவு  செய்தாள்.

 

முனிச்  சந்திர  பட்டாரகரால்  முழு  ஞானம்  பெற்ற  நீலகேசி

தன்  செயலைத்  தொடங்குதற்கு  தக்கதோர்  இடத்தை  நோக்க

காம்பிலி  நாட்டு  அரண்மனை  முன்  கருநாவல்  மரக் கிளையை  நட்டு

சொற்போர்க்கு  அறைகூவலிட்டு  செருக்குடன்  குண்டலகேசி  இருந்தாள்    121

 

            முனி  சந்திர  பட்டாரகரிடம்  அருகநெறி  என்ற  ஞானப்பாலை  பருகிய  நீலகேசி,  தான்  பெற்ற  தூய  அவதிக்  ஞானத்தால்,  இந்த  உலகில்   அருகனின்  அறப்பணியை  தொடங்குவதற்கு  ஏற்றதொரு  இடம்  எது  என்று  எண்ணினாள்.  காம்பிலி  நாட்டு  மன்னனின்  அரண்மனை  முன்,  ஒரு  பூஞ்சோலையில்,  கருநாவல்  மரத்தின்  கிளையினை  நட்டு  வைத்து,  சொற்போர்  நடத்த  அறைகூவலிட்டு,  ஆணவத்துடன்  வீற்றிருந்தாள் குண்டலகேசி  என்ற  புத்த  துறவி. 

 

அருகனறம்  பிறழா  நீலகேசி  அவளுடன்  சொற்போர்  நிகழ்த்த

சித்தகூட  சைத்யாலயம்  சுற்றி  சித்த  பரமேட்டிகளைத்  தொழுது

தவப்  பெண்ணாய்  வேடங்கொண்டு  அரண்மனைக்  காவலனை  கண்டு

காந்தர்வ  பெண்  ஒருத்தி  ராசனைக்  காண உள்ளாளென  கூறென்றாள்           122

 

            அருகா  பெருமானின்  அறநெறியில்  இருந்து  சிறிதும்  தவறாத  நீலகேசி,  குண்டலகேசி  என்ற  அப்புத்த  துறவியுடன்  சொற்போர்  நிகழ்த்த  முடிவு  செய்தாள்.  சித்தகூட  ஜினாலயத்தை  வலம்  வந்து,  சித  பரமேட்டிகளை  வணங்கி,  தூய  சமண  தவப்பெண்ணாய்  வேடங்கொண்டு,  காம்பிலி  நாட்டுக்குப்  புறப்பட்டாள்.  காம்பிலி  நாட்டு  அரண்மனைக்  காவலன்  முன்  நின்று,  காந்தர்வ நாட்டு  பெண்  ஒருத்தி  அரசனைக்  காண  வந்துள்ளாள்  என்று  கூறும்படி  கேட்டுகொண்டாள்.

 

கருங்குன்று  ஒத்த  களிறுகளும்  களித்து  துள்ளும்  குதிரைகளும்

மனமின்றி  தத்தம்  தறியில்  மயங்கியே  சோர்வுடன்  உள்ளன

தேர்களும்  காலாட்படைகளும்  அரண்மனை  வாயிலைக்  காணாது

குதுகலம் அழிந்து இந்நகரில் குண்டலகேசியின் நாவலால்  என்றான்             123

 

            அது  கேட்ட  காவலன்,  இந்த  குண்டலகேசி என்னும்  பாவிப்  பெண்  நட்டு  வைத்த  நாவல்  கிளையின்  காரணத்தால்,  கரிய  குன்றுகள்  போன்ற  யானைகளும்,  களிப்புடன்  துள்ளித்  திரிந்து  காற்றென  பறக்கும்  புரவிகளும்,  உணவையும்  நீரையும்  அருந்தாமல்  தத்தம்  இடங்களில்  மயங்கி  கிடக்கின்றன.  தேர்களும்,  காலாட்படைகளும்  இந்த  அரண்மனை  வாயிலை  இதுவரை  அணுகவில்லை.  எனவே  நான்  அரண்மனை  உள்ளே  செல்ல  இயலாது  என்று  கூறினான்.

 

நீலகேசி  குண்டலகேசியை  வினாவுதல்.

 

காவலன்  மொழிந்ததை  கேட்டு  கனிவுடன்  குண்டலகேசியை நோக்கி

அரண்மனையுள்  நான்  செல்வதால் அழகி நீ  அடைந்த  குறை  தான்  என்ன

நின்  பொருள்  இழந்தனையோ  நின்  சுற்றத்தார்  உயிர்  நீத்தனரோ

நாவல்  கிளையை  இங்கு  நட  நல்லதோர்  காரணம்  என்ன  என்றாள்            124

 

            காவலன்  கூறிய  அனைதையும்  கேட்ட  நீலகேசி,  கனிவு  ததும்பும்  பார்வையுடன்  குண்டலகேசியை  நோக்கி,  நான்  இந்த  அரண்மனையின்  உள்ளே  போவதை  மறுப்பதற்கு  உனக்குள்ள  குறைதான்  என்ன  என்று  வினாவினாள்.  மேலும்,  உன்னுடைய  செல்வங்கள்  அனைத்தும்  இழந்து  விட்டாயா,  இல்லை  உன்  உற்றார்,  உறவினர்கள்  யாரேனும்  உயிர்  இழந்தனரா,  இவ்விடத்தில்  நாவல்  கிளையை  நட்டு  வைத்துள்ளதன்  நோக்கம்  தான்  என்ன  என்று  கேட்டாள்  நீலகேசி.

 

குண்டலகேசி  கூற்று.

 

தவமகளே  நான்  இங்கு  கருதுவது  பிற  சமயத்  துறவோரை  வைத்து

என்னுடன்  சொற்போரில்  வெல்லும்  எவரும்  சென்று  அரசரை காணலாம்

நாவற்கிளையை  நட்டுவைத்தேன்  நங்கையே உன் வேலையை  பார்

சொற்போரில் திறனுண்டெனில்  சென்றிடுவோம் அரசவை  என்றாள்            125

 

            துறவறம்  பூண்ட  தவமகளே,  பிற  சமயத்துத்  துறவிகளிடம்  சமய  சொற்போர்  செய்ய  வல்லவர்களை  அழைத்து  வந்து  நிறுத்தி,  என்னை  வெல்ல  வேண்டும்  என்று  இம்மன்னனிடம்  கூறி,  அதற்காக  நாவல்  கிளையினை  நட்டு  வைத்துள்ளேன்.  அரசனைக்  காண  வேண்டும்  என்றால்  என்னுடன்  சொற்போரிட்டு,  வென்று  மன்னனைக்  காணலாம்.  உனக்கு  அந்த  திறமை  இருந்தால்  வா,  நாம்  அரச  அவையில்  சமய  சொற்போர்  நடத்துவோம்  என்றாள்  குண்டலகேசி.

 

நீலகேசி  கூற்று.

 

அரண்மனைக்கு  உள்ளே  இனி  யானையும்  தேரும்  பிறவும்  செல்ல

நீலகேசி  நின்று  நோக்கினாள்  நினக்கு  மாற்றம்  தருவேன்  என்றாள்

காவலனே நீ கடிதில்  செல்வாய்  கூறிடுவாய்  உன்  மன்னனுக்கு

நாவற் கிளையை முறித்தெறிந்து நாவாட  ஒரு நங்கை வந்துள்ளாளென            126

 

            குண்டலகேசி  கூறியவற்றை  கேட்ட  நீலகேசி,  நல்லது,  இனி  அரண்மனைக்குள்  யானைகளும்,  குதிரைகளும்,  தேர்களும்,  இன்னும்  பிறவும்  அதனதன்  விருப்பப்படி  சென்று  வரட்டும்.  உனக்கு  நான்  நல்லதொரு  பாடம்  தருவேன்  என்று  கூறினாள்.  பின்,  நீலகேசி  காவலனிடம்  திரும்பி,  நீ  சென்று  உன்  அரசனிடம்,   ஒரு  பெண்  துறவி  நாவல்  கிளையை  முறித்து  எறிந்து,  குண்டலகேசியிடம்  சொற்போர்  புரிய  வந்துள்ளாள்  என்று  சொல்லச்  சொன்னாள்.

 

                                                காம்பிலி  மன்னன்  செயல்.

 

காவலன்  நவின்றதைக்  கேட்டான்  கனிந்தது  மன்னன்  நெஞ்சம்

மங்கையர்கள்  இருவரையும்  மா சபைக்குள்  அனுமதித்தான்

சொற்போர்கள்  நிகழ்த்துதற்கேற்ப  தனித்தனி  இருக்கைகள்  தந்தான்

துறவோர்க்கு  செய்யும்  முறையை  செய்த  பின்  அமரச்  சொன்னான்            127

 

            காவலன்  கூறியதைக்  கேட்ட  மன்னன்,  மனதில்  இருந்து  வந்த  துன்பங்கள்  போக,  மிக்க  மகிழ்ச்சி  அடைந்து,  அவ்விரு  நங்கைகளையும்  தன்  அரச  அவைக்கு  அழைத்து  வரச்  கூறினான்.  சொற்போர்  செய்வதற்கு  ஏற்ப,  இரண்டு  ஆசனங்களை  அமைத்தான்.  அவைக்கு  வந்த  இரு  பெண்துறவிகளுக்கும்  செய்யவேண்டிய  முறைகளை  செவ்வனே  செய்து,  அவர்களை  அமரச்  சொன்னான்.

 

மன்னன்  வேண்டுகோள்.

 

தத்தம்  சமயத்தைச்  சேர்ந்த  தவப்பெருமை  கொண்ட   மகளீரே

சமயத்து  முதல்வர்களையும்  சமைத்த  அவர்  நூல்களையும்

நூல்  சொல்லும்  பொருள்களையும்  நும்  ஞானத்திறனை  கொண்டு

நாங்கள்  நன்கு  உணரும்படி  நலம்பட  விளக்குவீர் என்றான்                           128

 

            துறவு  பூண்ட  தவப்பெருமை  கொண்ட  மகளீர்களே,  உங்கள்  சமயத்து  தலைவர்கள்  அருளிய  ஆகமங்களில்  கூறியுள்ள  நுண்ணிய,  சிறந்த   மெய்ப்பொருள்களின்  நிகழ்வுகளையும்,  உங்கள்  கொள்கைகளையும்,  உங்கள்  ஞானத்தின்  திறனைக்  கொண்டு,  நாங்கள்  அனைவரும்  புரிந்து,  நன்கு  உணரும்படி  விளக்குங்கள்  என்ற  வேண்டுகோளை  அரசன்  அவர்களிடம்  வைத்தான்.

 

குண்டலகேசி  கூற்று.

 

கொற்றவன்  கூற்றைக்  கேட்டு  குண்டலகேசி  நா  உதிர்த்தாள்

சொற்போரில்  இருவர்  மோத  தோற்பவர்  ஒருவரே  ஆவார்

வென்றோர்க்கு  பெருஞ்சிறப்பும்  தோற்றோர்க்கு  அருந்துன்பமும்

முன்னரே நீர் அறிவித்தாயானால் முழுமை பெரும் சொற்போர் இனிதே     129

 

            மாமன்னன்  கூறியதைக்  கேட்டு,  முழுமதி  போன்ற  முகத்தையுடைய  குண்டலகேசி,  மன்னரே  நீர்  நன்றே  கூறினீர்  என்றாள்.  ஆயினும்  நான்  கூறவேண்டியது  ஒன்றுள்ளது.  அவையில்  இருவர்  சொற்போர்  புரிந்தால்,  வெற்றி  பெறுவது  ஒருவர்,  தேல்வி  அடைபவர்  ஒருவர்.  வென்றவருக்கு  சிறப்புப்  பொருளும்,  தோற்றவருக்கு  பெருந்துயரும்  அளிக்கவேண்டும்.  இதற்கு  சம்மதமானால்  நான்  போட்டியில்  கலந்து  கொள்கிறேன்  என்றாள்.

 

                        வேந்தர்  உடன்பாடும்  மகளீர்  மகிழ்ச்சியும்.

 

அறப்பண்பில்  தோய்ந்த  அரசன்  அந்நங்கையின்  மொழியைக்  கேட்டு

சொற்போரில்  வென்றவர்க்கு  சொல்லொண்ணா  சிறப்புகள்  உண்டு

தோற்றுத்  தலை   கவிழ்ந்தவரை  துன்புறுத்தி  நாடு  கடத்துவேன் – என

மன்னவன்  சபையில்  கூறக்  கேட்டு  மகிழ்ந்தனர்  மங்கையர்  இருவரும்     130

 

            அறப்பண்புகளையும்,  வளையாத  செங்கோலும்  உடைய  மன்னன்  குண்டலகேசியின்  கூற்றுக்கு  பதில்  அளித்தான்.  புத்தத்துறவியே,  நீ கேட்டுக்  கொண்டபடி,  நான்  வென்றவர்க்குக்கு  சிறப்புகளையும்,  தோற்றவர்க்கு  அவர்கள்  துன்பப்படும் வகையில்  இன்றே  நாட்டை  விட்டு  வெளியேற்றுவேன்  என்றான்.  அரசன்  கூறியதைக்  கேட்டு  அவையோரும்  மகிழ்ச்சி  அடைந்தனர்.

 

அம்மகளீர்  இருவருக்கும்  சொற்போர்  தொடங்குதல்.

 

நிறைமதி  முகத்தைக்  கொண்ட  நீள்  விழியால்  குண்டலகேசி

அவையமர்ந்த  சான்றோர்  வியக்க  ஆரம்பித்தாள்  தன்  வாதத்தை

தன்  தலைவன் அவன்  யாத்த நூலும்  தரும்  பொருளும்  நிகழ்வும்  கூற

நீலகேசி அவள் கூறும் பிழைகளை நீட்டோலையாய்  தெளிய சொன்னாள் 131

, 

            நிறைந்த  முழுமதியைப்  போன்ற  முகத்தைக்  கொண்ட,  கத்தி  போன்ற  நீண்ட  கண்களைக்  கொண்ட  குண்டலகேசி,  அவையில்  அமர்ந்து  உள்ள  மக்கள்  வியக்கும்  வண்ணம்  தன்  வாதத்தைத்  தொடங்கினாள்.  தன்  தலைவனாகிய  புத்தன்  அருளிய  நூல்களையும்,  அந்த  நூல்கள்  சொல்லும்  பொருள்களையும்,  அதன்  நிகழ்வுகளையும்  கூறினாள்.  நீலகேசியோ  அவள்  கூறிய  பேச்சிலும்,  பொருளிலும்  உள்ள  பிழைகளை  பெரும்  ஓலையாக,  தெளியும்  படி  சொல்ல  ஆரம்பித்தாள்.

 

குண்டலகேசி  கூறிய  இலக்கணம்.  (1.  தலைவன் ).

 

பரம்பொருள்  எந்தன்  தலைவன்  பிறவுயிர்க்கு  இன்பம்  எண்ணி

தனதறத்தை  அவர்க்குச் சொல்லி  தனக்கென  எல்லாம்  நீக்கி

பிறர்  நலங்கருதி  துன்பமேற்று  தன்னிடம்  அடைந்தோரைக்  காக்கும்

தரணி  போற்றும்  போதி  புத்தனே  எம்மோர்க்கு  தலைவன்  ஆவான்            132

 

            பரம்பொருளாகிய  நான்  விரும்பும்  தலைவன்,  தான்  அழிந்து  போகும்  நிலையிலும்  பிறர்  உயிர்களின்  இன்பத்தையே  எண்ணுபவன்.  தனது  அறத்தை  அவர்களுக்கு  சொல்லி,  தான்  எந்த  ஒரு  பொருளையும்  விரும்பாதவன்.  பிறர்  நலங்கருதி  தான்  துன்பம்  அடைபவன்.  தன்னிடம்  வந்து  அடைக்கலம்  அடைந்தோரை  அருளோடு  காக்கும்  உலகமே  போற்றும்  போதி  புத்தனே  எங்களின்  தலைவன்  ஆவான்.

 

2. நூல்.  3. பொருள்.   4. நிகழ்வு.

 

எம்  தலைவர்  புத்தர்  பெருமான்  எடுத்துரைத்த  நூல்கள்  மூன்று

நூல்களுக்குள்  ஐந்து  பொருளை  நுணுக்கமாய்  விரித்து  ஆய்ந்து

தோன்றுவன  அழிவன  அவையாம்  நிலையது  ஏதும்  இல்லையென  கூறி

உவமை யான் கூறுவதெனின் விளக்கின்  நுனிபோல்  கெடும்  என்றாள்            133

 

            எம்  தலைவன்  புத்தர்  அருளிய  நூல்கள்  மூன்று.  அந்நூல்களில்  கூறப்பட்ட  பொருள்கள்  ஐந்து.  அவை  உருவம்,  நுகர்ச்சி,  அறிவு,  குறி,  செய்கை  என  ஐந்து  வகைப்படும்.  அவைகளை  நுணுக்கமாய்  ஆராய்ந்து,  விளக்கி,  தேன்றுவன  என்றும்,  உடன்  அழிவன  என்றும்,  எதுவும்  நிலையானது  அல்ல  என்றும்  கூறியுள்ளார்.  இதற்கு  உதாரணம்  கூறுவதாயின்  விளக்கினது  நுனியைப்  போல்  அழியும்  என்றாள். 

புத்தரின்  மூன்று  நூல்கள் : 1. விநய பிடகம்.  2. சூத்திர பிடகம்.  3. அபிதரும பிடகம்.

 

நீலகேசி  குண்டலகேசியை  மறுத்தல்.

 

குண்டலகேசி  அவையில்  உரைத்த  இறைவன்,  நூல்,  பொருள்,  நிகழ்வில்

தானக்குற்ற  தெளிவினைகளை  தானொருமுறை  கூற்றாய்  மொழிந்து

அவையோரே  மனதில்  கொள்வீர்  அவள்  இயம்பிய  இறை  இலக்கணம்

பலவகை குற்றங்கள் உடையவை பதம் பதமாய் விளக்குவேனென்றாள்  134

 

            குண்டலகேசியால்  அவையில்  கூறப்பட்ட  இறைவன்,  நூல்,  பொருள்,  நிகழ்வு  என்ற  நான்கின்  பொருள்கள்  பற்றிய  தன்  தெளிவினை,  தான்  ஒருமுறை  அவையோருக்கு  சொல்லி,  அவர்கள்  மனம்  கொள்ளும்  வண்ணம்  முதலில்  எடுத்துக்  கூறினாள்.  அவள்  சொல்லிய  இறை  இலக்கணத்தில்  உள்ள  பிழைகளை  நான்  பதம்  பதமாக  விளக்குகிறேன்  என்றாள்  நீலகேசி.

 

ஆதி  என்று  நீ  கூறியதனால்  அவன்  பிறப்பினிலே  பெரியவனாகிறான்

பிறப்பினால்  பெரியவனாகில்  பின்னர்  அறவொழுக்கம்  என்பது  வீணே

அறவொழுக்கம்  ஒழுகிய  பின்னர்  அவன்  புத்தன்  ஆனான்  எனில்

ஆதியில் பெரியவன் எனும்  சொல்  அடிப்படையில்  பிழையே  ஆகும்            135

 

            உன்னால்  ஆதி (  பரம்பொருள் )  என்று  கூறப்பட்ட  உன்  தலைவன்  பிறப்பிலேயே  பெரியவன்  என்ற  பொருளைத் தருகிறது.  அப்படி  பிறப்பில்  பெரியவனாக  இருந்தால்,  அறவொழுக்கம்  மேற்கொண்டான்  என்பது  பொய்யகும்  அல்லவா.  அறவொழுக்கம்  மேற்கொண்ட  பின்னரே  அவன்  புத்தன்  ஆனான்  என்றால்  ஆதியில்  பெரியவன்  என்று  நீ  கூறுவது  பிழை  இல்லையா  என்று  வினவினாள்.  இரண்டுமே  தடுமாற்றத்திற்குரியது  என்றாள்  நீலகேசி.

 

பிறப்பிலே  பெருமையுடையோனாகில்  பிறந்த பின்  அவன்  கருமம் யாது

பிறந்து  அறமுணர்ந்தானெனில்  புலையரும்  அறமேற்று  தலைவராவர்

சம்சாரத்தில்  பெரியவனாயின்  நிறைவுடையான்  கூற்றே  பொய்யாம்

விலை ஊன்  உணவு  தவறிலையென விளக்கிகூறல்  அறத்தின்  பண்போ       136

 

            பிறப்பிலேயே  உம்  புத்தன்  பெருமை  அனைத்தும்  உடையோன்  என்றால்  அவன்  பிறந்த  பின்  செய்து  முடிக்க  வேண்டிய  கர்மங்களை  நீ உரைக்கவேண்டும்.  பிறக்கும்போது  சிறப்பு  ஏதும்  இல்லாதவனாகி, பின்னர்  அறம்  உணர்ந்து,  மனம்  ஒன்றி  தருமத்தை  ஏற்றான்  என்றால், கீழ்ச்  செயல்களைச்  செய்யும்  புலையர்களும்  அறத்தை  ஏற்று  தலைவர்  ஆகலாமே.  சம்சார  வாழ்வில்  பெரியவன்  ஆகி,  நிறைவுடையவன்  என்று  நீ  கூறுவதும்  பொய்யாகும்.  உயிர்களை  வதைத்து  கொன்று,  கடைகளில்  பணத்திற்காக  விற்கும்  ஊனை  வாங்கி  உண்ணலாம்  என்று  கூறுவது தான்  உம்  தலைவனின்  பண்பொடு  கூடிய  அறமா  என்று  கேட்டாள்  நீலகேசி.

 

உயிர்களின்  நலத்துக்காக  உயர்  நூல்கள்  தந்தார்  என்றாய்

உயிர்வதை  செய்து  விற்கும்  ஊனினை  ஏன்  மறுக்கவில்லை

கடை  ஊனை  உண்ணச்  சொல்வதும்  கருத்துக்கு  வழிகாட்டியாகிய

உயிர்வதை செய்யும் ஒழுக்கமில்லான் ஒழுக்கத்தை  பற்றி  பேசலாமோ     137

 

            மாந்தர்களில்  மேன்பட்ட  சான்றோர்கள்,  தம்  வழிவந்தோரின்  நலனுக்காக  தம்மையே  வருத்திக்  கொள்வர்.  உம்  புத்தன்  அவர்கள்  நலத்துக்காக  பல  நூல்களைத்  தந்தார்  என்று  சொல்கிறாய்.  ஊனுக்காக  உயிர்களைக்  கொல்லுவதை  ஏன்  மறுக்கவில்லை.  கடை  ஊனை  உண்ணச்  சொல்லி  வழிகாட்டுவதும்,  உயிர்  வதை  செய்வதை  தடுக்காததும்  ஒழுக்கமாகுமா.  அத்தகைய  ஒழுக்கம்  இல்லாதவன்  ஒழுக்கத்தைப்  பற்றி  பேசலாமா  என்றாள்.

 

பொற்கிழியில்  உள்ள  பொற்காசை  பொறுப்புடன்  ஆய்ந்து  பார்த்து

செல்லும்  செல்லாதென  கூறல்  சிறந்தோர்களின்  முறையேயாகும்

ஆராய்ந்து  பார்த்திடாமல்  அத்தனையும்  செல்லதென்பதை

ஆன்றோரும்  பொறுக்கமாட்டார்  அவையோரும்  ஏற்கமாட்டார்                     138

 

            பொற்காசுகள்  நிறந்துள்ள  பையை  திறந்து  பார்த்து,  பொறுப்புடன்  அக்காசுகளை  ஆராய்ந்து,  இதில்  செல்லும்  காசுகள்,  செல்லாத  காசுகள்  என்று  பிரித்து  கூறுவது தான்  நடைமுறை  வழக்கம்  ஆகும்.  அவ்வாறின்றி,  காசுகளைப்  பார்க்காமலும்,  ஆராயாமலும்  மொத்தமும்  செல்லாது  என்று  கூறுவதை,  அறிவுடையா  ஆன்றோர்களும்,  அவையில்  உள்ள  அறிஞர்களும்  ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

 

நின்  தலைவன்  புத்தன்  சிரசின்  நுண்ணிய  முடியின்  முனையால்

பெருங்கடல்  நீரை  எடுத்து  கடல்  வற்ற  எடுக்கும்  துளி  போல்

அடுத்தவர்  துன்பத்திற்காக  அத்தனை  பிறவி  எடுத்தானெனில்

அச்சொல்லது  உண்மையாயின்  அவ்வளவு  தீவினை  செய்தவன்  தானே           139

 

            அன்னையே,  உம்  தலைவன்  புத்தன்,  உலக  உயிர்களின்  துன்பத்திற்காக,  நுண்ணிய  மயிரின்  நுனியால்,  பெருங்கடல்  நீர்  முழுவதும்  வற்றிப்  போகும்படி,  தேய்த்து  எடுத்தால்,  எத்தனை  துளிகள்  ஆகுமே,  அத்தனை  பிறவிகள்  எடுத்தான்  என்றாய்.  அக்கூற்று  உண்மையாயின்,  புத்தன்  அவ்வளவு  எண்ணற்ற  பாவங்களைச்  செய்து,  கணக்கற்ற  பிறவிகள்  எடுத்தான்  என்பதே  உண்மையல்லவா.

 

தன்  பயன்  கருத்தில்  நீக்கி  பிறருக்கு  உழைத்த  நின்  தலவன்

பெருமையில்  மிக்கவன்  என்றாய்  பொருந்தாது  அச்சொல்  என்றும்

அழியாத  தீவினையாலே  அடிமை  ஆண்டானுக்கு  எரு  சுமப்பான்

ஆண்டானோ  நல்வினைப்  பயனால்  அடைகிறான்  இன்பம்  என்பர் 140

 

            குண்டலகேசியே, ஒரு  உயிர்  தன்  துன்பங்களுக்கு  தானே  காரணமாகி.  அத்தீவினைக்கான  பயனை  அனுபவிக்கிறது.  அப்படியிருக்க,  தன்  பயனைக்  கருத்தாமல்  பிறரின்  நன்மைக்காக,  உழைத்த  உன்  தலைவன்,  பெருமை  மிக்கவன்  என்று  கூறுகிறாய்.  பெரும்  குப்பையை  எருவாக  சுமக்கிற அடிமையானவன்,  முன்  செய்த  தீவினைகளால்  துன்பம்  அடைகிறான்  என்று  எண்ணுவார்கள். அதுபோல்,  அந்த  அடிமையை  ஆளுகின்ற  அவன்  தலைவன்  நல்வினை  காரணமாக  சுகம்  அனுபவிக்கிறான்  என்றுதானே  கூறுவர். அப்படியிருக்க,  பிறருக்காக  துன்பம்  அனுபவித்த  உம்  புத்தன்  பெருந்தீவினையாளன்  தானே  என்றாள்

 

தரணியோர் துன்பம்  போக்குதற்கு  தான் பிறந்து பிறந்து  துன்பமேற்றார் 

அன்பினில்  புனிதன் எம் தலைவன்  அருள்வதில்  அருளாளன்  என்றாள்

பல்லுயிர் துன்பங்கள் தீர்த்திட  பிறந்து கொண்டே இருந்தானெனில்

பிறப்பறுத்து வீடுபேறடையும் பாக்கியத்தை இழந்தானென்றாள் கேசி            141

 

            உலகத்தில்  உள்ள  உயிர்களுக்காக,  அருள்  மிகுந்த  உணர்வு  காரணமாக,  அத்துன்பங்களைப்  போக்குவதற்கு,  பிறந்து  பிறந்து  துன்பத்தை  அடைந்தார்.  எம்  புத்தன்  அன்பினிலே  புனிதமானவன்,  அருள்வதிலே  மிகப் பெரிய  அருளாளன்  என்று  குண்டலகேசி  கூறினாள்.

            இவ்வுலகில்  அனாதி  காலமாக  உயிர்கள்  தொடர்ந்து  துன்பப்பட்டுக்  கொண்டே  உள்ளன.  அத்துன்பங்களை  போக்க  புத்தன்  துன்புற்றான்  எனில்,  அவன்  மீண்டும்  மீண்டும்  பிறந்து  கொண்டே  இருக்க  வேண்டும்.  பிறப்பில்  இருந்து  வீடுபேறு  அடைய  முடியாது.  அவன்  வீடுபேறடைந்தான்  எனில்,  பிறருக்காக  துன்பபுற்ற  நிலையில்  இருந்து  மாறுபடுவதாகிவிடும்  என்றாள்  நீலகேசி.

 

உடலில்  துவராடை  அணிந்து  உயிரற்ற  உடல்களை  உண்ண

உபதேசம்  செய்த  உன்  தலைவன்  உயர்ந்தவன்  என்கிறாய்  மடமையில்

வீடுபேறு  அடைதல் என்பதெல்லாம்  வெற்றுச்  சொல்  என்றான் புத்தன்

வானுறையும்  இறைவன்  அவனென  வாதிட  வந்துள்ளாய்  நீயும்                    142

 

துறவிகளுக்கே  உரிய  துவராடையை  அணிந்து,  உயிரற்ற  உடல்களை  (  பிணங்களை ) உண்ணலாம்  என்று  மடமையான  அறங்களை  உபதேசம்  செய்யும்  உன்  தலைவனை  உயர்ந்தவன்  என்று  கூறுகிறாய்.  மேலும்,  உம்  புத்தன்  வீடு  பேறு  அடைதல்  என்று  ஒன்று  இல்லை  என்றும்,  வீடு  என்பது  சூன்யமே  என்றும்,  அறவுபதேசம்  செய்யும்  அவனை  வானுறையும்  இறைவன்  என்று  கூறி,  வாதிட  நீயும்  வந்துள்ளாய்  என்றாள்  நீலகேசி.

 

அவையோரை  நோக்கி  கூறியது.

 

கண்களும்  காதுகளும்  இன்றி  கனத்த  இரு  தனங்கள்  மறைந்து

உணவு  உண்ண  வாயும்  இன்றி  உதடு  மூக்கு  ஏதும்  இல்லாத

மங்கையை  சாத்தான்  கூறும்  மாபெரும்  பேரழகி  என்மகளென 

குண்டலகேசியின்  கூற்றும்  சாத்தானின்  கூற்றுக்கு  ஒப்பும்                            143

 

            அவையோர்களே,  ஒரு  சாத்தானின்  மகள்  கண்களும்,  காதுகளுமாகிய  உறுப்புகள்  இல்லாதவள்.  அவளது  இரு  தனங்காளும்  இருக்கும் இடம்  தெரியாமல்  மறைந்து  போனது.  உண்பதற்கு  வாயும்  இல்லை,  உதடுகளும்  இல்லை.  மூக்கு  ஏதும்  இல்லாத  அவளை,  அந்த  சாத்தான்  என்  மகள்  பேரழகி  என்று  கூறும்  சாத்தானின்  பேச்சைப்  போல்,  இந்த  குண்டலகேசியின்  வாதமும்  அமைந்துள்ளது  என்று  நீலகேசி  கூறினாள்.

 

புத்தனையும்  குண்டலகேசியையும்  பழித்தல்.

 

ஈன்ற  தாயின்  பழு  எலும்பினை  இரக்கம்  இன்றி  பறித்த  புத்தனின்

மாணவி  குண்டலகேசியோ  தன்  மணவாளனை  மலைமேல்  கொன்றவள்

அவையோரே  அறிந்து  கொள்ளுங்கள்  அவனியில்  இவர்களை  போல

நல்லருளாளர்  யாருளர்  என்று  நாணிட  நகைத்தாள்  நீலகேசி                      144

 

            புத்தன்  தன்னை  ஈன்ற  தாயை  இரக்கமின்றி  கொன்றான்.  அவன்  மாணவி  குண்டலகேசியோ,  அவளுடைய  கணவனை  மலையின்  உச்சியில்  இருந்து  தள்ளிக்  கொன்றவள்.  அவையில்  உள்ள  சான்றோர்களே,  தெரிந்து  கொள்ளுங்கள்,  உலகத்தில்  இவர்களை  போன்ற  நல்ல  அருளாளர்கள்  வேறு  யாரும்  இல்லை  என்று  கேலியுடன்  சிரித்தாள்  நீலகேசி.

 

புத்தன்  நூலைப்  பழித்தல்.

 

உலகப்  பொருள்களின்  இயல்பை  உன்  புத்தன்  உணராதவன்

கண்  முதலிய  உறுப்புகள்  கொண்டு  கண்டறியும்  தன்மையாளன்

சிரசில்  இலைக்  கட்டை  சுமந்து  விற்றிடும்  மனிதனைப்  போல்

நுண்ணறிவு  ஏதும்  இல்லாதவன்  நூலினை  ஏற்றிட  முடியுமோ                       145

 

            அழகிய  நெற்றியை  உடைய  குண்டலகேசியே,  உன்  தலைவன்  புத்தன்  உலகப்  பொருள்களின்  இயல்பை  முற்றும்  உணராதவன்.  கண்  முதலிய  உறுப்பாகிய  கருவிகளால்  மட்டும்  அறிந்து  கொண்டுள்ளவன்.  தலைமேல்  இலைக்கட்டை  வைத்து  சுமந்து  கொண்டு,  விற்பணை  செய்யும்  சாதாரண  மனிதனைப்  போன்று  நுண்ணறிவு  இல்லாதவன்.  அவன்  உரைத்த  நூலின்  அறங்களை  ஏற்க  முடியுமா  என்றாள்.

 

பொருட்  குற்றம்.

 

 நின்  தலைவன்  கூறியதெல்லாம்  நிகரற்ற  மெய்நூல்  என்றால்

ஐவகை  கந்தங்கள்  என்பதே  அடிப்படையில்  பிழையே  ஆகும்

குறி,  உழப்பு,  செயற்  கந்தங்கள்  அறிவு  கந்தத்தின்  செயல்களாகும்

இம்மூன்று  கந்தங்கள்  என்றும்  தனித்தன்மை  உடையன  ஆகா                    146

 

            நின்  தலைவன்  கூறியதெல்லாம்  நிகரில்லாத  மெய்நூல்  என்றால்,  அவன்    ஐந்து  கந்தங்கள்  என்று  கூறியதே  அடிப்படையில்  தவறாகும்.  உருவ கந்தம்,  உழப்பு கந்தம்,  அறிவு கந்தம்,  குறிக் கந்தம்,  செயல் கந்தம்  ஆகிய  ஐந்தில்,  குறி கந்தம்,  உழப்பு கந்தம்,  செயல் கந்தமும்   அறிவு கந்தத்தின்  வெவ்வேறு  செயல்களன்றி,  அவை  தனித்தன்மை  பெற்றது  அல்ல  என்பதை  நீயும்  அறிந்து  கொள்  என்றாள்.

 

உன்  தலைவன்  புத்தன்  என்றுமே  உலகப்  பொருள்  இயல்புணராதான்

ஐம்பொறியால்  இயல்பை  அறிந்த  அவன்  நூலை  ஏற்றல்  தருமமா

உருவமும்  உருவமில்லா  பொருளென  உடையது  பொருளின்  தன்மை

இதையறியா  குண்டலகேசியே  இனி  தத்துவம்  பேசாதிருப்பாயாக              147

 

            உன்  தலைவன்  புத்தன்  என்றுமே  உலகப்  பொருள்களின்  இயல்பை  மெய்யறிவால்  எப்போதும்  உணராதவன்.  ஐம்பொறிகளால்  மட்டும்  பொருள்களின்  இயல்பை  அறிந்தவனின்  நூல்களை  ஏற்றுக்  கொள்ளுதல்  எப்படி  தருமம்  ஆகும்.  அவன்  பொருள்களின்  தன்மையை  உருவம்  உடையது,  உருவல்  இல்லாதது  என்று  கூறியிருக்க  வேண்டும்.  இதை  அறியாத  குண்டலகேசியே  நீ  தத்துவம்  பேசலாமா  என்றாள்  நீலகேசி.

                                   

கணபங்க  கூற்றில்  புத்தன்  கெட்டொழிந்தான்  முதல்  கணப்பொழுதில்

மறுகணப்  பொழுதில்  அவனே  முழுதும்  வேறாய்  வந்தானென்றாய்

முதல்  கணத்தில்  உள்ளம்  பெற்றது  மறுகணத்தில்  அழிந்ததென்றால்

இறந்த  காலம்  பற்றிக்  கூறல்  எவ்வகையில்  இயல்வது  ஆகும்                       148

 

            பேதையே,  உம்  தலைவன்  புத்தன்  தன்  கொள்கையாகிய  கணபங்கம்  கூறும்  போது,  முதல்  கணப்பொழுதில்  இருந்த  தான்  முழுதும்  கெட்டொழிந்தேன்,  அடுத்த  கண்பொபோழுதில்  தான்  முழுதும்  வேறாகினேன்  என்றான்.  முதல்  கணத்தில்  உள்ளத்தில்  நின்றது  அத்தனையும்  அறவே  அழிந்து,  அடுத்த  கணத்தில்  எள்  அளவும்  இல்லை  என்றும்  கூறலாம்  அல்லவா.  அப்படிப்பட்டவர்கள்  இறந்த  காலத்தைப்  பற்றி எப்படி  கூற  இயலும்  என்று  வினவினாள்  நீலகேசி. 

 

கணபங்க கொள்கைப்படி அடுத்த  கணத்தில்  தோன்றல்  இல்பொருளானால்

பிறைத் தோற்றமும்  பிள்ளைப்பிறப்பும்  இல்பொருள்  என்றால்  பிழையே

பிறையது  இல்பொருளென்றால்  புவியிலும்  தோன்றல்  வேண்டும்

மழலையும்  இல்பொருளென்றால்  வானத்திலும்  பிறக்கும்  தானே                149

 

            குண்டலகேசியே,  கணபங்க  கொள்கைப்படி,  அடுத்த  கணத்தில்  தோன்றுவது  இல்லாத  பொருள்  என்று  கூறி,  எடுத்துக்காட்டாக  பிறை  தோன்றுவதையும்,  பிள்ளைப் பிறப்பதையும்  கூறுவாயானால்,  அதுவும்  பிழையே.  அவை  இல்பொருள்கள்  அல்ல.  உள்பொருள்கள்.  அது  இல்லாத  பொருள்  என்றால் வானத்தில்  தோன்றாமல்  நிலத்திலும்   பிறை  தோன்றலாமே.  பிள்ளை  இல்பொருளானால்  அது  தாயின்  வயிற்றை  விட்டு,  வானத்திலும்  பிறக்கலாமல்லவா.  எனவே  உன்  தலைவனின்  கண்பங்க  தத்துவம்  ஏற்றுக்கொள்ளக்  கூடியதன்று  என்றாள்  நீலகேசி.

 

வேறுபட்ட  பொருளின்  தொடர்ச்சி  ஒரேவகை  பொருளின்  தொடர்ச்சி-என

இரண்டையும்  குறித்து  விளாக்கினாள்  ஏந்திழையாள்  குண்டலகேசி

அழிந்த  முதற்கண  அறிவுக்கும்  மலர்ந்த  மறுகண  அறிவுக்கும்

கலப்புண்டா  என்று  கேட்டாள்  கன்னி  மகள்  நீலகேசி                                       150

 

            வேறுபட்ட  பொருளின்  தொடர்ச்சி,  ஒரேவகைப்  பொருளின்  தொடர்ச்சி  என  இரண்டையும்  விளக்கினாள்  குண்டலகேசி.  அழிந்த  முதல்  கண  அறிவுக்கும்,  அடுத்த  கணத்தில்  தோன்றிய  அறிவுக்கும்  கலப்பு  உண்டா,  உண்டெனில்  எப்படி  அறியப்பட்டது  என  கேட்டாள்  நீலகேசி.

 

கணங்களில்  மலரும்  அறிவில்  கலப்பில்லை  என்றாள்  குண்டலகேசி

நேரிடையாய்  கூற்றை மறுத்திட்டாள்  நெடுங்கண்ணாள்  நீலகேசி

முன்கணத்தில்  அழிந்தவைகட்க்கும் பின்கணத்தில்  உதித்த  பொருளுக்கும்

தொடர்பில்லை எனும் உன் வாதம்  துளியும் அறிவற்ற  வாதமென்றாள்            151

 

            அவ்வாறு  இருகணங்களில்  மலரும்  அறிவுகளுக்கு  இடையே  கலப்பில்லை  என்று  குண்டலகேசி  கூறினாள்,  பொருள்கள்  கணந்தோறும்  அழிகின்றன.  முதல்கணத்தில்  அழிந்த,  மற்றும்  மறுகணத்தில்  தோன்றிய  பொருள்களின்  அறிவுகளுக்கு  தொடர்பில்லை  என்று  குண்டலகேசி  வாதிட  முனைகிறாள்  என்று  கருதிய  நீலகேசி,  நேரிடையாக  உன்  வாதம்  மிகவும்  அறிவற்ற,  பொருளற்ற  வாதம்  என  மறுத்தாள்.

 

எண்ணற்ற  பல  கந்தங்கள்  இடையுறவு  படமாட்டா  எனில்

தம்முள்  ஊடுதலின்றி  பொருந்த  கலப்பில்லை  என  கருதலாம்

காலமும்  இடமும்  நுண்ணியவாயின்  இடையீடுண்மை  உறுதியாகும்

தம்முள் ஊடுருவி   கலந்தால்  நீ  கூறிய  முழுகேடுமின்றி  போகும்                 152

 

            எண்ணற்ற  பல  கந்தங்கள்  தங்களிடைய  உறவு  இல்லையென்று  நீ  கூறினால்,  அவை  தம்முள்  ஊடுருவுதல்  இல்லாமல்  பொருந்துவதால்  கலப்பில்லாதவை  எனக்  கருதலாம்.  ஆகவே  அவற்றுக்கிடையே  காலமும்,    இடமும்  மிக  நுண்ணியதாக இருந்தால்,  இடையீடு  உண்மை  உறுதியாகும்.  அவ்வாறு  இல்லாமல்,  அவை  தம்முள்  ஊடுருவிக்  கலந்தால்  நீகூறிய  முழுக்கேடு  என்பது  இல்லாமல்  போகும்.

 

முதல்  கணத்தறிவின் நிகழ்ச்சியை அடுத்த கணத்து வாசனையால்  அறிய

அடுத்த கணத்தறிவில் சிறிதேனும் முன் கணத்தறிவில் உண்டா இல்லையா

இல்லையென்று நீ உரைப்பாயாகில் முன் கணத்து அறிவின் நிகழ்வை

அடுத்ததில் கூறலில்லை உண்டென கூறில் உயிருண்டு நீ அறிவாய்               153

 

            முதல்  கணத்து  அறிவின்  நிகழ்ச்சியை,  அடுத்த  கணத்து  அறிவு  வாசனையால்  அறியலாமென்று  கூறுவாயெனில்,  அவ்வாறு  அடுத்த  கணத்தறிவின்  கண்,  முதற்  கணத்தினின்று  பெறப்பட்டது  சிறிதேனும்  உண்டா  இல்லையா ?  இல்லையெனில்,  முதல்  கணத்து  அறிவின்  நிகழ்ச்சியை,  அடுத்தணத்தறிவு  அறிந்து  கூறுதல்  இல்லை.  அவ்வாறு  பெறப்பட்டது  உண்டு  என்றால்,  கண்ணால்  பார்க்க  இயலாத,  உயிர்  உண்டு  என்பதையே,  வாசனை  என்னும்  பெயரால்  நீ  கூறினாய்  அல்லவா,  என்று  குண்டலகேசியை,  நீலகேசி  கேட்டாள்.

 

புத்தோட்டு  நீரில்  மிதக்கும்  பாதிரிப்  பூக்களின்  வாசம்

புத்தோடும்  பூவும்  அழிந்திடினும்  நீரினில்  நிலைக்கும்  என்றாய்

பூவும்,  ஓடும், நீரும்  போன்ற  இவ்வுடல்  அழிந்திட்டாலும்

பாதிரிப்  பூவின்  வாசம்  போல் உயிர்க்கழிவில்லை என்பதே உண்மை            154

 

            புதிய  ஓட்டில்   நீரை  ஊற்றி,  அதில்  பாதிரிப்பூக்களைப்  போட்டு  வைத்தால்,  ஓடும்,  பூவும்  அழிந்து  போனாலும்,  பூவின்  வாசனை  நீரில்  நிலைத்து  இருக்கும்  என்பது  உன்  தத்துவம்  அல்லவா.  அவ்வாறாயினும்,  பூவும்,  ஓடும்,  நீரும்  போன்ற  இந்த  உடம்பு  அழிந்து  போனாலும்,  பூவின்  வாசனைப்  போன்ற  நம்  உயிருக்கு  அழிவில்லை  என்பது  உண்மையாகும்  தானே  என்றாள்  நீலகேசி.

 

புத்தனின்  வரலாற்று  கதைகளை  புகன்றிட்ட  உன்  வாதம்  எல்லாம்

ஒன்றோடொன்று  பொருந்தாமல்  நூலும்  நாரும்  போலவே  ஆகும்

மெய்யுணர்வு  உடையோன்  என்றால்  இந்திரனும்  நன்மை  செய்வான்

தலை கொடுத்த  பின்பும்  புத்தன்  தரணி  வாழ்வு  அவனுக்கில்லை               155

 

            நீ  நீண்ட  நேரம்  புத்தனின்  வரலாற்றுக்  கதைகளை உன்  வாதமாக  எடுத்துரைத்து   வந்தாய்.  அவையாவும்  நூலும்  நாரும்  போல்  ஒன்றோடு  ஒன்று  பொருந்தவில்லை.  உம்  புத்தன்  மெய்யுணர்வு  உடையவன்  என்றால்,  தேவர்கோன்  இந்திரன்  அவனுக்கு  நன்மை  செய்வானே  அன்றி  உயிரை  எடுக்கமாட்டான்.  தனது  தலையை  கொடுத்த  பின்பு  புத்தன்,  இவ்வுலக  வாழ்வு  இன்றி  இறந்துபோவான்  என்று  நீலகேசி  கூறினாள்.

 

உடல், கண்கள்,  தலை  தசைக் கேட்போர்  உலகினில்  யாருமில்லை

ஒருவளை  இரப்பவர்  இருப்பின்  அறிவிலியிடம்  அவர்  செல்வாரோ

புத்தனின்  வள்ளல்  தன்மையை  புரிந்திட  தேவர்கோன்  கேளான்

தேவனின்  ஞானமும்  அறிவும்  தெய்வலோகமே  அறியுமன்றோ                     156

 

            இவ்வுலகில்  வாழும்  மக்களில்  உடல்,  கண்கள்,  தலை,  தசைகளை  தானம்  கேட்டு  வருபவர்கள்  யாருமில்லை.  அப்படி  யாரேனும்  இருந்தாலும்  அவர்கள்  அறிவில்லாதவர்களிடம்  தன்  தானம்  கேட்கச்  செல்வார்களா.  தேவர்களுக்குத்  தலைவன்  ஆன  இந்திரன்  தெய்வீக  ஞானமும்,  அறிவும்  கொண்டவன்  என்று  தேவலோகமே  அறியும்.  அத்தகைய  தேவன்  உன்  புத்தனிடம்  இவைகளைக்கேட்பானா  என்றாள்.

 

உடம்பது  பிளவு  பட்டால்  உயிர்  அது  பறந்து  போகும்

புத்தனின்  உடம்பில்  பாதியோ  பொருந்தும்  வேறு  உடலில்  என்றாய்

உடலினை  பிளக்கும்  செயலோ  உயிர்  விடும்  தற்கொலையாகும்

பிணத்தினை  பிளந்து  தந்து  பெரு  வள்ளல்  ஆனானோ உன்  புத்தன்            157

 

            மேலும்,  உடம்பானது  கத்தியால்  வெட்டி  பிளவு  படுத்தினால்,  உள்ளுறையும்  உயிரானது  போய்  விடும்.  ஆனால்,  புத்தனின்  உடம்பில்  பாதி  வேறு  உடலில்  பொருந்தும்  என்கிறாய்.  உடல்  கொடுத்த  புத்தனும்,  இறந்து  விட,   உடல்  தானம்  கேட்ட  பிணம்  எவ்வாறு  பிழைக்கும்.  மேலும்,  உடலினை  வெட்டி  பிளக்கும்  செயல்  தற்கொலையாகும்  அல்லவா.  உயிர்  பிரிந்த  தன்  உடலைப்  பிளந்து,  தந்து  பெரிய  வள்ளால்  ஆனானோ  உம்  புத்தன்  என கேட்டாள்.

 

                                   

புத்தனின்  புற  அழகைக்  கண்டு  பொங்கிடும்  பெரும்  காமத்தாலே

அணைத்திட  அழைக்கும்  அணங்கின்  ஆசையை  அவன்  ஏற்க  வேண்டும்

பாவைக்கு  மனம்  இரங்கா  புத்தன்  பிறருக்கு  மனம்  கனிந்த  புத்தன்

உடலினை  பிளந்து  கொடுத்தது  உண்மைக்கு  புறம்பான  பொய்யே            158

 

            உம்முடைய  புத்தன்  இளம்வயதுடைய,  புறத்தோற்றத்தில்  சிறந்த  அழகன்  ஆவான்.  அவன்  மேல்  ஆசை  கொண்டு,  காமம்  மயக்கத்தில்  ஏங்கி,  இரக்கம்  காட்டச்  சொல்லி,  அவனை  சேர  அழைக்கும்,  பெண்ணின்  ஆசையை  ஏற்பானா ?   அந்த  அழகிய  பெண்ணுக்கு  மனம்  இரங்காத  உன்  தலைவன்,  பிறருக்காக  மனம்  உருகி  உதவினான்  என்பதும்,  உடலினை  பிளந்து  தந்தான்  என்பதும்  உண்மைக்கு  புறம்பான  வாதம்  என்றாள்.

 

கலகன்  தன்  கூர்  வாளால்  கொன்ற  காந்திபலி  எனும்  புத்த  துறவி

ஐம்புலன்கள்  வென்று  அடக்கிய  ஆன்மநலம்  கொண்ட  புனிதன்

தூய  தவம்  கொண்டத்  துறவிக்கு  சொர்க்கம்  தான்  அமையுமே  தவிர

இடமான  நரகம்  நகர்ந்து  வந்தது  இழிவான  பொய்யுரை  தானே                 159

 

            காந்திபலி  என்னும்  புத்தத்துறவியை  கலகன்  என்னும்  அரசன்,  சந்தேகப்பட்டு  தனது  கூரிய  வாளால்  வெட்டிக்  கொன்றான்.  காந்திபலி  துறவியோ,  ஐம்பொறிகளை  அடக்கி,  ஐம்புலன்  ஆசைகளை  அழித்து,  ஆன்ம  புனிதம்  கொண்டவர்.  அத்தகைய  தூய  தவம்  கொண்ட  துறவிக்கு,  சொர்கம்  அமையுமே  தவிர,  நரகம்  கிட்டாது.  ஆனால்  நீயோ,  இடமான  நரகம்  தன்னிடம் விட்டு, பெயர்ந்து  வந்து  அவரை  ஆட்கொண்டது  என்று  இழிவான  பொய்யுரைகளைக்  கூறுகிறாய்.

 

பத்துவகை  ஒழுக்கப்  புத்தன்  பாரினில்  அருளாளன்  என்றாய்

பெற்றதாயைப்  பிறந்ததும்  கொன்றான்  பேய்களுக்கு  உடல் தசை  தந்தான்

நரகலை  தினம்  கழிக்கும்  மாந்தர்  நாய்களுக்கு  தரத்தான்  என்று

பெருமையில்  பேசும்  செயலே  புத்தனின்  செயல்களுக்கு  ஒப்பும்                 160

 

            பத்து  வகை  ஒழுக்கங்களையும்  உடைய உமது  தலைவன்  உலகிலேயே  பெரிய  அருளாளன்  என்று  கூறுகிறாய்.  உமது  புத்தன்  தன்னைப்  பெற்ற  தயையே  கொன்றவன்.  அவன்  தருகின்ற  பொருள்கள்  உடல்  தசையும்,  அதில்  சொட்டும்  குருதியுமே  தான்.  அதையும்  பேய்களுக்கு  மட்டுமே  தருபவன்.  இதையே  நீ  பெருங்கொடை  என்கிறாய்.  இது  எப்படி  இருக்கிறது  என்றால்,  நாள்தோறும்  மலம்  கழிக்கும்  மக்கள்,  நாங்கள்  நாய்களுக்காகத்தான்  தினமும்  மலம்  கழிக்கிறோம்  என்று  பெருமை  பேசுவது  போல்  உள்ளது  உம்  புத்தனின்  செயல்கள்  என்றாள்.

 

அரசன்  கூற்று :

 

மருண்டிடும்  விழிகள்  கொண்ட  மான்  போன்ற  குண்டலகேசியே

புத்தனின்  கதைகள்  எல்லாம்  பொருளற்ற  பொய்கள்  ஆகும்

நீலகேசி  எடுத்துக்  காட்டுகள்  நெடுஞ்சபையில்  கூறிய  உவமைகள்

அவையோர்கள் அறிவால் ஏற்றிட அவைவிட்டு  நீ  விலகல்  நன்றென்றார்   161

 

            காம்பிலி  நாட்டு  மன்னன்  அவையில்  நடந்த  சொற்போரினை,  ஆய்ந்து  கேட்டு,  அவையோர்களின்  கருத்துப்படியும்  தீர்ப்புக்  கூறலானான்.  மான்களின்  மருண்ட  விழிகளையுடைய  குண்டலகேசியே,  உம்  தலைவன்  புத்தனைப்  பற்றி  நீ  கூறிய  கதைகள்  எல்லாம்  பொருளற்ற  பொய்யுரைகள்  ஆகிவிட்டது.  நீலகேசி  எடுத்துரைத்த  எடுத்துக்காட்டுகள்,  உவமைகள்  அனைத்தும்,  அவையில்  உள்ள  சான்றோர்களின்  அறிவுத்திறத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.  எனவே  நீ  அவையை  விட்டு  நீங்குக  என்று  ஆணையிட்டான்  மன்னன்.

 

கருங்கூந்தலாள்  நீலகேசி  குற்றங்களை  விளக்கிக் கூற

குன்றிடை  விளக்கைப்  போல  குறையின்றி  அமைந்தன  உரைகள்

அறிவினில்  பெரியோர்  எல்லாம்  அறமிது  என  அறிந்து  கொண்டதால்

நீலகேசியின்  வெற்றியை  புகழ்ந்து  நெடு  முரசு  முழங்கச்  செய்தான்       162

 

            கரிய  மேகங்களைப்  போன்ற  கூந்தலையுடைய  நீலகேசி,  அனைத்து  குற்றங்களையும்  விளக்கிக்கூற,  அவைகள்  குன்றின்  மேல்  வைத்த விளக்கினைப்  போல்,  குறைகள்  ஏதும்  இன்றி  அமைந்தன.  நீலகேசி  கூறிய  அருகன்  அறங்களை  எல்லாம்,  அறிவில்  சிறந்த  பெரியோர்கள்  இவையனைத்தும்  மக்களுக்கு  வேண்டிய  நல்லறங்கள்  என  அறிந்து  கொண்டனர். நீலகேசியின்  வெற்றியை  புகழ்ந்து,  நாடெங்கும்  வெற்றி  முரசு  அறையக்  கட்டளையிட்டான்  மன்னன்.

 

நெடு  முடியான்  முடிவைக்  கேட்ட  நீல  நயனத்தாள்  நீலகேசி

குண்டலகேசியை  பார்த்து  குரு  உனக்கு  யாரென  கேட்டாள்

உஞ்சையின்  தென்திசை  உறையும்  அருக்கசந்திரன்  என்னும்  துறவி

அனைத்தையும்  எனக்குரைத்தார்  அத்துறவியின்  மாணவி  என்றாள்        163

 

            நீண்ட  பொன்முடியை  அணிந்த  அரசனின்  தீர்ப்பைக்  கேட்ட  நீல  நிற  விழிகள்  கொண்ட  நீலகேசி,  குண்டலகேசியைப்  பார்த்து,  இத்தகைய  பொய்  கதைகளை  உமக்கு  கற்றுத்தந்த  உன்  குரு  யார்  என்று  கேட்டாள்.  செல்வ  செழிப்பு  மிக்க,  மதில்  சூழ்ந்த  உஞ்சை  மாநகரின்  தென்திசையில்  வாழும்  அருக்கசந்திரன்  என்னும்  புத்தத்துறவியே,  இவையனைத்தும்  எனக்கு  கற்றுத்தந்தார்  என்றாள்  குண்டலகேசி.

 

கர்வத்தில்  சொற்களைக்  கொட்டி  கருநாவல்  மர  கிளையை  நட்டு

செருக்குடன்  நகரில்  நுழைந்த  சிற்றிடையாள்  குண்டலகேசியை

வசை  மொழிகள்  பலவும்  கூறி  வான்  அதிர  பறைகள்  முழங்கி

பெருநகர்  வாயின்  புறத்தே  பேயென  விரட்டினர்  மக்கள்                                164

 

            மனதில்  கர்வம்  மிக  அதிகமாக,  செருக்குடன்  சொற்களை  கொட்டி,  கருநாவல்  மரக்கிளையினை  அரண்மனை  முன்  நட்டு,  சொற்போரில்  என்னை  வீழ்த்துவர்  யாருளர்  என்று  இறுமாப்புடன்  கூறிய  குறு  இடையாள்  குண்டலகேசியை,  மக்கள்  பல  வகையான  வசைமொழிகளைக்கூறி,  வானமே  அதிரும்  வண்ணம்  உரத்த  ஒலியுடன்  பறைகளை  முழங்கி,  இனி  இந்நாட்டினுள்  வரவேண்டாம்  என்று  கூறி  பேயினை  விரட்டுவது  போல்  விரட்டி  விட்டனர்.

 

காமம்,  வெகுளி,  மாயக்கமேதும்  கருத்தினில்  பதியா நீலகேசியே

காவலன்  நான்  சிறப்பு  செய்வேன்  கன்னியே  அதை  ஏற்பாயென்றான்

அருகன்  அறம்  உமது  நாட்டில்  ஆல்போல்  தழைக்க  வேண்டுமென

அடியவள்  நான்  வேண்டுகின்றேன்  அனைத்தையும்  செய்வாயென்றாள்  165

 

            காமம்,  வெகுளி,  மயக்கம்  போன்ற  குற்றங்கள்  ஏதும்  இல்லாதவளும்,  இயல்பாகவே  பல  மெய்நூல்களை  பயின்றவளுமான  நீலகேசிக்கு  காம்பிலி  நாட்டு  மன்னன்  சிறப்புகள்  பலவும்  செய்வேன்  ஏற்றுக்கொள்ள  வேண்டும்  என்றான்.  அதற்கு,  மலர்மிசை  நடந்த  அருகனின்  திருவடிகளைத்  தவிர,  வேறு  அணிகலன்கள்  ஏதும்  அணிவதில்லை.  அருகனின்  அடியவளாகிய  நான்  வேண்டுவது எல்லாம்  ஒன்றேதான்.  உமது  நாட்டில்  அருகனின்  நல்லறங்கள்  ஆல்போல்  தழைத்து  ஓங்க,  அரசனாகிய  நீ  அனைத்தும்  செய்யவேண்டும்  என்றாள்.

 

அரசே  நான்  வந்த  நோக்கம்  அருகன்  நெறி  பரப்புதல்  ஒன்றே

இந்திரனை  ஒத்த  உமதாட்சியில்  இனி  அருகன்  நெறியே  கொள்வீர்

பிற  நாடுகள்  அனைத்தும்  சென்று  பேதமைகளை  போக்குவேனென

விடை  பெற்று  விண்வழி  சென்றாள்  அருக்கசந்திரன்  திசைவழி நோக்கி  166

 

            மன்னனே,  நான்  இங்கு  வந்த  நோக்கம்  அருகனின்  அறநெறிகளைப்  பரப்புதால்  ஒன்றே  தான்.  இந்திரனைப்  போல்  ஆட்சி  செய்து  வரும்  உமது  நாட்டில்  இனி  அருகன்  நெறிகளை  பரப்ப  ஆவன  செய்யவேண்டும்.  நானும்  பிற  நாடுகளுக்குச்  சென்று,  அங்கு  நிலவும்  பொய் ஞானத்தையும்,  பொய்யான  கொள்கைகளையும்  போக்கி,  அருகனின்  மெய்ப்பொருளைப்  பரப்புவேன்  என்றாள்.  பின்  அனைவரிடமும்  விடைபெற்றுக்கொண்டு,  அருக்கச்சந்திரன்  இருக்கும்  திசை  நோக்கி  விண்வழியே  புறப்பட்டாள்  நீலகேசி.

 

                        குண்டலகேசி  வாதச்  சருக்கம்  முற்றும்.

 

                                    3. அருக்க  சந்திர  வாதச்  சருக்கம்.

 

அஞ்சிலோதி  அடைந்தனள்  உஞ்சை  உஞ்சை  அழகை உண்டு மகிழ்தனள்

பௌத்தத்  துறவி  பெருங்கையாளன்  அருக்கசந்திரனை  அரசர்கள் போற்ற

பிடகம்  மூன்றை  விரல் நுனி கொண்டு போரில் வெல்லும் புலியாய்  விளங்கி

புத்த அறத்தை மாணவர்கட்கு  போதித்திருந்தான் புத்த  பள்ளியில்                167

 

            அருக்கசந்திரனுடன்  சொற்போரில்  கலந்து  கொள்ள  அஞ்சலோதி,  உஞ்சை  நகருக்குள்,  அதன்  அழகைப்  பருகிக்கொண்டே  நுழைந்தாள்.  அரசர்களால்  புகழ்ந்து  போற்றபடுபவனும்,  புத்தத்துறவியுமான  அருக்கசந்திரன்,  புத்த பெருமானின்  பிடக  நூல்கள்  மூன்றினையும்,  விரல்களின்  நுனியில்  கொண்ட  பேரறிவாளனாக  இருந்தான்.  சொற்போரில்  வெல்லும்  திறன்  படைத்தவனான  அவன்,  புத்த  நெறிகளை,  புத்தப்  பள்ளியில்  தன்  மாணவர்களுக்கு   சொல்லிக்கொடுத்து  கொண்டு  இருந்தான்.

அஞ்சலோதி  என்றால்  நீலகேசி.  உஞ்சை  என்றால்  உஜ்ஜைனி  நகரம்.

 

பள்ளியில் நுழைந்தாள் நீலகேசி பதிந்தனள் தூணில் சொல்லறம் கேட்க

உணவினை ஏற்கும் முறையையும்  உணவினை உண்ணும் முறையையும்

கலயத்தில்  கஞ்சியை  வாங்கி  கறியுடன்  தின்னும்  முறையையும்

துறவிகள்  தினம்  செய்யும்  செயலை துறவிஅருக்கசந்திரன்  உரைத்தான் 168

 

            நீலநிற  கூந்தலையுடைய  நீலகேசி,  அந்த  பள்ளியில்  யாரும்  அறியா  வண்ணம்  நுழைந்தாள்.  அழகிய  உயர்ந்த  தூணில்  செதுக்கிய  கந்திற்பாவை  போல்  நின்றாள்.  துறவியான  அருக்கசந்திரன்,  இல்லறத்தாரிடம்  உணவு  பெறும்  முறையையும்,  அவர்கள்  தரும்  கஞ்சியை  மண்பாண்டத்தில்  ஏற்று,  முதுகு  வளைய  நெளித்து  உண்ணும்  வகையையும்,  கஞ்சியுடன்  ஊனை  அள்ளித்தின்னும்  முறையையும்,  அவ்வூனை  மெல்ல  விழுங்கும்  முறையையும்  விளக்கிச்  சொல்லிக்கொண்டிருந்தான்.

 

தலைகளை  மழிக்கும்  முறையையும்  கண்மை  எழுதி  விழிக்கும் முறையும்

வினய  பிடக  நூலில்  உள்ளதை  விவரித்தார்  அருக்கசந்திரன்  அவர்கட்கு

அருகனின்  நெறிகளில்  தேர்ந்து  அறநெறி  ஆற்றும்  அஞ்சலோதி

சாக்கிய  அறநெறிகளெல்லாம்  சாலச்  சிற்புடையதென  இகழ்ந்தாள்            169

 

            உணவு  உண்டபின்  கலயத்தை  வழித்து  தின்னும்  முறையையும்,  தலை  முடியை  மழிக்கும்  முறையையும்,  கண்களில்  கருப்பு  மை  எழுதி  விழ்த்துக்  காட்டும்  முறையையும்,  வினய பிடக  நூலில்  உள்ளது  போல்  விளக்கி  பாடம்  செல்லிக்கொண்டிருந்தான்.

            அருகனின்  அறநெறிகளில்  தேர்ந்து,  அறநெறி  பரப்பும்  அஞ்சலோதி  சாக்கிய  அறநெறிகள்  எல்லாம்,  மிகவும்  சிறந்தவைகள்  என்று  கூறி,  இகழ்ச்சியில்  நகைத்தாள் .

 

அருக்கசந்திரன் ஆழியாய் சினந்து அவையினில் இம்மொழி  ஏனென வினவ

ஆறுக சினமென நீலகேசி கூறி  வினையநூல் பொருளினை கூறென கேட்டு

வஞ்சக  ஒழுக்கங்களையும் கூறி  விரதங்களற்ற  வினையநூலையும்  விளக்கி

உங்களின்  நெறிகள்  என்றும்  உயர்வில்லை  என்றுகூறுவேன்  என்றாள்            170

 

            பிற  சமயத்  தலைவர்களை  தன்  சொல்லாற்றலால்  வெல்லும்  திறமை  கொண்ட  அருக்கசந்திரன்,  பேரலை  போல்  எரிமலையாய்  கோபம்  கொண்டு,  இந்த  அவையில்  இத்தகைய  சொற்களைக்  கூறும்  காரணம்  யாது  என்று  கேட்டான்.  நீலகேசியோ,  அவனைப்  பார்த்து,  கோபம்  கொள்ளாதே,  சினத்தைத்  தணித்துக்கொள்.  இங்கு  நீ  கூறிய அறங்களைச்சொல்லும்  நூலான  வினைய பிடகம்  அழகான  பெயரைக்கொண்டது.  அந்நூல்  கூறும்  பொருளையும்,  தன்மையையும்  ஒரு  தினையளவேனும்  விளக்கிக்கூறவும்.  அதில்  கூறப்பட்டுள்ள  விரதங்களையும்,  வஞ்சக  ஒழுக்கங்களையும்  விளக்கி,  உங்கள்  நெறிகள்  உயர்ந்தவையல்ல  என்று  கூறுவேன்  என்றாள்  நீலகேசி.  

 

நீலகேசி  குற்றம்  சாட்டுதல்  :

 

தன்னையே  பிறர்க்கு  வழங்கல்  தருமத்தின்  செயலென்றாலும்

தன்  மனைவியை  பிறர்க்கு  தரல்  தாங்கொணா  பாவம்  அன்றோ

விநய பிடக நூல்  சொல்லும்  வியக்கத்  தக்க  இந்த  நெறியை

இல்லத்தோர்  ஏற்பாராகில்  இழிந்த  தொழில்  ஆகும்  அன்றோ                       171

 

            தன்னையே  பிறருக்கு  தருவது  மிக  உயர்ந்த  செயல்  தான்.  போற்றுதலுக்கு  உரியதும்  ஆகும்.  ஆனால்  தன்  மனைவியை  பிறருக்கு  தருவது  இழிந்த  செயல்  அல்லவா.  பெரிய  பாவமும்  ஆகுமே.  நீ  கூறுவதைக்கேட்டால்,  தன்  வீட்டிற்கு,  தன்  மனைவியை  விரும்பி  வரும்  அயல்  மனிதரைக்கண்டு  கோபம்  கொள்ளாதவனைப்  போல்  உள்ளது.  இந்த  ஆச்சரியப்படும்  நெறியை  உங்கள்  வினய பிடக  நூல்  சொல்வதை,   இல்லறத்தோர்  ஏற்றால்  அதைவிட  கேவலமான  செயல்  வேறில்லை  என்றாள்  நீலகேசி.

 

சாக்கியத்  துறவி  ஒருவன்  தன்னுள்  பொங்கிய  காமத்தாலே

தூய்மை உடல் தோற்றத்தை மறைத்த  துவராடையை முற்றும் கலைந்து

காண்பவர் கண்ணில் நீங்கி  கணிகையர்கள்  இல்லம்  சென்று

பரத்தைய  கூடலாம்  எனபது  வினையபிடக  மறைபொருள்  தானே             172

 

            தன்  உள்ளம், உடலில்  காமவுணர்வு  தோன்றினால்,  தூய்மையான  உடலில்  அணிந்துள்ள  துறவிகளுக்கே  உரிய  துவறாடையை  களைந்து,  மற்றவர்கள்  கண்களில்  படாமல்,  கணிகையர்  வீட்டிற்கு  சென்று,  விலைமகளிரைச்  சேரலாம்  என்று  வினய பிடக  நூல்  கூறும்  மறைபொருள்  ஆயிற்று  என்று  உனக்கு  விளங்கவில்லையா. 

 

சிங்கதத்தன்  என்னும்  துறவி  சிறப்புடை  போதிமரத்தின்  கீழ்

சாக்கிய  பிக்குணியைக்  கண்டு  சதிராடும்  காமத்தால்  அணைக்க

துறவியே  இப்பள்ளியிடத்தே   துர்ச்செயல்  தகுமோவென  கேட்டாள்

துறவிக்கு  இடம், பொருள், ஏவல்  துளியும்  பொருந்தாது  என்றானாம்            173

 

            சிங்கதத்தன்  என்ற  பௌத்த  துறவி  ஒருவர்,  புத்தர்கள்  புனிதமாகக்  கருதும்  பேதி மரத்தின்  கீழ்,  இளம்  புத்த  பெண்  துறவிமேல்  எழுந்த  காமவேட்கையால்  அவளுடன்  உறவுகொள்ள  முனைந்தான்.  அதற்கு  அந்த  புத்த  பிக்குணி,  இந்த  புனிதமான  இடத்தில்  இந்த  தகாத செயலைச்  செய்யலாமா  என்று  வினவினாள்.   அதற்கு  அவன்,  துறவிகளுக்கு  எங்கு,  எதை,  எதைச்  செய்யலாம்  அல்லது  செய்யக்கூடாது  என  விதி ஏதும்  இல்லை.  எனவே  நாம்  இதைச்  செயலாம்  என்றான்.  இதுவும்  நீ  கூறும்  வினய  பிடக  ஒழுக்க  நெறியா  என்று  கேட்டாள்  நீலகேசி.

 

புன்றலை மகனார்  எனும்  துறவி  பொங்கிய பெரும்  காமத்தாலே

பிணத்தினைத்  தழுவிப்  புணர  பொருந்துமாவென  துறவியர்  கேட்க

எப்பொருளும்  உயிரற்றனவென  எம்  தலைவன்  புத்தன்  கூற்றால்

என் செயலும் தகுமே  என்றானாம் இதுவும்  வினைய பிடக  நூலறமோ            174

 

            புன்றலை மகனார்  என்ற  புத்த  துறவி  ஒருவன்,  மிகுந்த  காம உணர்வினால்,  துறவாடையை  களைந்து,  வெள்ளாடை  உடுத்தி,  பெண்களை  நாடிச்  சென்றான்.  எந்த  பெண்ணும்  கிடைக்காததால்,  அவன்  பிணத்தை  தழுவி  உறவு  கொள்ள,  இச்செயல்  தகுமா  என  வேறு துறவிகள்  கேட்க,  எப்பொருளும்  உயிரற்றன  என்று  என்  தலைவன்  புத்தர்  கூறியுள்ளார்.  எனவே  என்  செயல்  ஏற்புடையது  ஆகும்  என்றானாம்.  இதுவும்  உங்கள்  விநய பிடக  நூல்  அறம்  தானோ  என  கேட்டாள்.     

 

உலகநூல்  வழக்கறிந்தோரே  புத்தத்  துறவி  தன்  காம  உணர்வை

ஈரைந்து  வகையினருடன்  கூடி  இல்லாள்  போல்  மனதில்  கருதி

ஐம்புலன்கள்  அடக்கம்  இன்றி  ஆசையுடன்  இன்பம்  நுகரக்  கூறும்

வினையபிடக  அறநெறி  நூல்  விந்தை  நூலென இகழ்ந்தால்  கேசி            175

 

            உலக  வழக்கு,  நூல்  வழக்கு  அறிந்த  பெரியோர்களே,  தவ  ஒழுக்கத்தை  மேற்கொண்ட  புத்தத்  துறவிகள்  தங்கள்  காம உணர்வை  பத்து  வகையினருடன்  கூடி,  அவர்களை  தங்கள்  மனைவிபோல்  பாவித்து  தீர்த்துக்  கொள்ளலாம்.  ஐம்புலங்களின்  அடக்கம்  இன்றி,  மனதில்  எழும்  ஆசைக்காக  இன்பம்  நுகரலாம்  என்று  கூறும்  வினய பிடக  நூலின்  அறநெறிகள்,  உண்மையில்  விசித்திரமான  நெறிகள்  என்று  இகழ்ச்சியுடன்  கூறினாள்  நீலகேசி.

( 10 வகையினர் :  1. புதிய பிக்குணி.  2. பேடி.  3. விலங்கு.  4.  பெண்ணுரு  கொண்ட  ஏதேனும்  ஒன்று.  5. இளமைப் பெண்.  6.  பரத்தை.  7. அறம்  தெளிந்த  உபாசகப் பெண்.  8.  ஆதரவு  அற்றவள்.  9.  உயிரற்ற  பிணம்.  10.  ஊமைப் பெண்.  )

 

நீலகேசி  புத்த  சமயத்தாரின்  ஒழுக்கத்தைப்  பழித்தல்  :

 

உம்  இதழ்  உதிர்ப்பதோ  பேரறம்  உண்பதெல்லாம்  ஊன்,  மீன்  இனம்

செப்பிடும்  சொல்களோ  பெருந்தவம்  சேர்வதோ  பஞ்சணை பெரும் சுகம்

தீவினை போக்க ஏற்றத் துறவறம்  துறந்திடா மனதில் பொருள்கள் உம்மிடம்

தீவினை  விலகிட  கிட்டிடும் சூன்யம்  சொல்லுவதெல்லாம்  பொய்  அறம் 176

 

            நீங்கள்  பேசுவதெல்லாம்  மிகப்பெரிய  அறம்.  சாப்பிடுவது  பிணமாகிய  ஊன்,  மீன்  இனங்கள்.  செய்வதாகச்  சொல்வதோ  மிகப்  பெருந்தவங்கள்.  படுத்து  உறங்குவதோ  மெல்லிய  பஞ்சணைகள்.  தீவினைகளை  கரைப்பதற்காக  துறவறம்  ஏற்றதாக  கூறுகிறீர்கள்.  ஆனால்  எந்த  பற்றையும்  மனதில்  இருந்து  நீக்காமல்,  எல்லா  பொருள்களும்  வைத்திருக்கிறீர்கள்.  தீவினைகள்  எல்லாம்  அழிந்தால்  சூன்யம்  கிடைக்கும்  என்கிறீர்கள்.  எப்போதும்  பொய்யான  அறங்களையே  கூறுகிறீர்கள்  என  இகழ்ந்து  பேசினாள்  நீலகேசி.

 

செல்வம்  நிலையற்றது  என்பீர்  செல்வர்களிடம்  இரந்து  பெறுவீர்

மாட  மாளிகைகள்  கட்டுவீர்  மனமதில்  உயிர்  இல்லை  என்பீர்

முன்  பிறப்பு  நிகழ்வுகள்  சொல்வீர்  புலைத்  தொழில்  செய்வதை ஏற்பீர்

சாக்கியத் துறவிகள்  அறமே  சாலவும்  சிறந்ததென  இகழ்ந்தாள்                    177

 

            செல்வம்  நிலையற்றது  என்று  கூறும்  நீங்கள்   செல்வந்தர்களிடம்  சென்று  பெரும்  பொருளை இரந்து  பெற்றுக்  கொள்கிறீர்கள்.  பெரிய  மலை  போன்ற  மாட  மாளிகைகளைக்  கட்டிக்  கொள்கிறீர்கள்.  ஆனால்  உயிர்  என்ற  பொருள்  ஒன்று  இல்லை  என்று  வாதாடுகிறீர்கள்.  பழம்  பிறப்பு  நிகழ்ச்சிகளை  எல்லாம்  கூறுவீர்கள்.  கீழ்மையான  செயல்களை  செய்வதை  ஏற்றுக்கொள்வீர்கள்.  இததகைய  புத்த  அறங்கள்  மிகவும்  போற்றலுகுரிய  அறங்களென  இகழ்ந்தாள்.

 

 வாயினால்  புத்தத்  துறவிகள்  வாழ்  உயிர்க்கு  அன்பு  காட்டுவர்

உயிர்வதைத்த  ஊனினை  உண்பர்  பீடிகை சென்று  தலைமோதி  தொழுவர்

புத்தனின்  பொய்  வடிவங்களை  போற்றி  இருகை  கூப்பித்  தொழுவர்

மான், முயலாய் புத்தன் பிறந்ததை  மறந்து அவற்றின் ஊன் உண்ணுவர்   178

 

            மண்ணுயிர்கள்  யாவும்  நலமுடன்  இருக்க  வேண்டும்  என்று  பாவனை  செய்யும்  புத்ததுறவிகள்  உயிர்களிடம்  அன்பு  காட்டுவதைப்போல்  நடிக்கும்  அவர்கள்,  உயிர்வதை  செய்து,  ஊனை  வாங்கி  உண்கிறார்கள்.  பின்  புத்த  பீடிகை சென்று,  தலையை  மோதிகொண்டு  வணங்குவார்கள்.  புத்தனின்  பொய்வடிவங்களை  இருகை  கூப்பி  வணங்குவார்கள்.  புத்தன்  முன்பு  மானாகவும்,  முயலாகவும்  பிறந்ததை  மறந்து,  அதுபோன்ற  உயிர்களை  வதைத்து  அதன்  ஊனை  உண்ணுகிறார்கள்.

 

பௌத்தத்  துறவிகளின்  துன்பநிலை  :

 

சீலைப்பேன் ஊறும் ஆடை துக்கம்  துர்நாற்றத்  துவராடைத்  துக்கம்

கன்னி இளம் பிக்குணி நோக்கில்  கண்களில் ஒளிரும் காமம்  துக்கம்

தவறு  செய்தால்  தண்டனையாக  கோவிலுக்கு  மணல் சுமப்பது துக்கம்

இறால்  வாங்க  இயலாத  துக்கம்  இறுதிவரை உம்  துறவே  துக்கம்                179

 

            சீலைப்பேன்கள்  ஊர்ந்து  திரியும்  ஆடைகளும்,  துர்நாற்றம்  வீசும்  துவராடைகளும்  புத்த  துறவிகளுக்கு  துன்பத்தைத்  தரும்.  இளம்  கன்னிப்  பெண்களான  பிக்குனிகளைப்  பார்த்து,  அவர்களில்  பொங்கும்  காமம்  தரும்  துக்கம்.  அவர்கள்  தவறு  செய்தால்,  அதற்கு  தண்டனையாக,  புத்த  கோயில்களுக்கு  மணல்  சுமப்பது  துக்கம்.  கடைத்தெருக்களில்  விற்கும்  இறால்  மீன்களை  வாங்க  இயலாத  துக்கம்.  தன்னை விட்டு  நீங்காத  பலவகைத்  தொழில்களைச்  செய்தலும்  துன்பம்.  இப்படி  புத்தத்துறவிகளின்  வாழ்க்கையே  துன்பம்  நிறைந்தது  தான்.

 

மெய்யென  மக்கள்  நம்பிட  பொய்யினை  மறைத்தல்  தீவினை

அறப்பணிகள்  ஆற்றுவதற்கு  அடைந்திடும்  கூலியும்  தீவினை

அடைக்கலப்  பொருளை  அடைய  அருந்தீயிட்டு  கொளுத்தல்  தீவினை

ஆடைகளைத்  துவர்  ஊட்டுவதற்கு  மருதமரங்களை மாய்த்தல் தீவினை       180

 

            பொய்யை  மறைத்து,  கேட்போர்  நம்பும்  அளவிற்கு  மெய்யென  சொல்லப்படுவதும்  தீவினை.  அறப்பணி  செய்வதற்கு  கூலியாக  பணம்,  பொருள்கள்  வாங்குவதும்  தீவினை.  அடைக்கலமாக  வைக்கப்பட்ட  பொருளை  வஞ்சகமாக  கைப்பற்றும்  பொருட்டு,  பள்ளிக்கு  தீயிட்டுக்  கொளுத்துவதும்  தீவினை.  ஆடைகளை  துவர்  நிறம்  ஊட்டுவதற்கு,  மருதமரங்களை  வெட்டி  உபயோகிப்பதும்  தீவினை.  இத்தீவினைகள்  அனைத்தும்  தீயான  நரகத்தில்  மக்களைத் தள்ளும்.

 

கீழ்மை  குணங்கள்  மேலோங்கிட  கலகங்கள்  செய்தல்  தீவினை

மீன், கறி உணவுகள்  உண்ணல்  மீளாத்துயரில்  ஆழ்த்தும்  தீவினை

பற்றினால்  துயர்  வரும்  என்று  பகர்ந்திடும்  துறவியாம்  நீங்கள்

பாழ்  நரகில்  வீழும்  செயலை  பதற்றமின்றி  செய்தல்  அறமோ                     181

 

            கீழ்மைக்குணங்கள்  அதிகமாகி, கலகங்கள்  செய்வதும்  தீவினை ஆகும்.  மீன்,  கறி  உணவுகள்  வாங்கி  உண்ணல்  மீளாத  துயரில்  ஆழ்த்தும்  தீவினையாகும்.  பற்றுகள்  மனதை  விட்டு  அகலாமல்,  நாங்கள்  துறவிகள்  என்று  பொய்யாக  வாழ்தலும்  தீவினை.  பாழ்நரகத்தில்  வீழ்த்தும்  இத்தனை  தீவினைகளையும்  பதற்றமின்றி  செய்தல்  அறம்  ஆகுமா  என்றாள்  நீலகேசி.

 

அருக்கசந்திரன்  கூற்று  :

 

நீலகேசியின்  நல்லறம்  கேட்ட  புத்தத்  துறவி  அருக்கசந்திரன்

தேன் மலர்கள்  மாலையணிந்த  தேவியாம்  நீலகேசியே  கேட்பாய் 

துவராடை  போர்த்திய  எம்மான்  துயரங்கட்க்கு  மனமே  என்றார்

பிறர்க்கு  தோன்றும்  தீவினையெல்லாம்  புத்த  அறம்  ஏற்பது இல்லை            182

 

            நீலகேசி  கூறிய  நல்லறங்களை  எல்லாம்  கேட்ட  புத்ததுறவி  அருக்கசந்திரன்,  தேன்  சொட்டும்  மலர்மாலைகளை  அணிந்த  தேவி  நீலகேசியே  கேள்,  மலர்  மணம்  கமழும்  காராடை  போர்த்திய  எம்  பெருமான்  புத்தன்,  தீவினைகளுக்கு  எல்லாம்  மனமே  காரணம்  அன்றி  வேறெதுவும்  இல்லை  என்றார்.  தீய  ஒழுக்கம்  என்று  நீ  கூறியதெல்லாம்  தீவினையென்று  புத்த  அறம் ஏற்றுக்கொள்வதும்  இல்லை.

 

நீலகேசியின்  கூற்று.

 

இன்பத்தைப்  பெரிதும்  விரும்பி  செயல்படும்  செயல்கள்  எல்லாம்

துன்பத்தைப்  பெருக்குமேயன்றி  குற்றத்தை  நீக்குவதில்லை

மனம்  என்னும்  வீட்டின்  உள்ளே  மயக்கிடும்  ஆசைப்  பேய்  நுழைய

உயிரினை  வெட்டிக்  கொன்று  ஊன்  உண்ணல்  அறமென்பாயோ                183

 

            அருக்கச்சந்திரனே,  இன்பத்தையே  பெரிதும்  விரும்பி,  அவ்விருப்பத்தின்  காரணமாக  செயல்படும்  குற்றம்  எப்போதும்  நீங்குவதில்லை.   அவைகள்  துன்பத்தை  அதிகம்  ஆக்கும்.  மனம்  மட்டும்  மாசற்று  இருந்தால்  போதுமா ?  மனம்  என்னும்  வீட்டின்  உள்ளே  ஆசை  என்ற  பேய்  நுழைய,  நீயே  ஒரு  கத்தி  கொண்டு  ஒரு  உயிரை  தலைவேறு,  கால்  வேறு  வெட்டிக்  கொன்று,  அந்த  ஊன்  உணவை  உண்ணல்  அறமாகுமா  என்று  கேட்டாள்  நீலகேசி.

 

அறப்  புற  பற்றுக்கள்  நீங்கி  அகம்  புறம்  தூய்மையானால்

தவம்  என்னும்  மாபெருஞ்  செயலால்  தவறாமல்  வீடு  பேறு  உண்டு

நீர் கொண்ட கொள்கைப்படியே கணந்தோறும் அறிவு தோன்றி அழியும்

கடைசியில் எல்லாம் சூன்யமென கருதிய கொள்கை பொய்யே என்றாள் 184

 

            அகப்பற்றும்,  புறப்பற்றும்  நீங்கி,  உள்ளும்  புறமும்  தூய்மையாகி,  தவம்  என்னும்  பெருஞ்செயலைச்  சேர்த்து  செய்தால்,  வீடுபேறடைவது  உண்மை.  நின்  கொள்கைப்படி  அறிவு  என்பது  கணந்தோறும்  தோன்றி  அழிவது  அல்லவா.  நிலைத்து  நிற்ககூடியது  ஏதும்  இல்லை.  முடிவில்  அமைவது  சூன்யம்  என்ற  உன்  கொள்கை  பொய்யே  ஆகும் என்ராள்.

 

நீ நினைக்கும்  வீடுபேறுனக்கு நிச்சயம் கிடைக்குமாயின் கிடைக்கட்டும்

நின் கொள்கை தத்துவப்படி அறிவு கணந்தோறும் தோன்றியழியும்

நிலைத்து நிற்பது ஏதுமின்றி முடிவில் அனைத்தும் சூன்யமேயென கூற

அருக்கசந்திரன் உணர்ந்து கேட்டான் அன்னையே என் கடமையாதென            185

 

            அருக்கசந்திரனே,  நீ  நினைக்கும்  வீடுபேறு  உனக்கு  கிடைக்குமாயின் கிடைக்கட்டும்.  அது  கிடைக்காமல்  போகவும்  கூடும்.  ஏனெனில்  உன்  கொள்கைப்படி,  அறிவு  என்பது  ஒவ்வொரு  கணமும்  தோன்றி  அழியக்கூடியது.  நிலைத்து  நிற்கக்கூடியது  ஏதுமில்லை.  முடிவில்  அமைவது  சூன்யம்  என்பது  நீ  கருதும்  உண்மை  என்று  கூறிய  நீலகேசியை  நோக்கி,  தன்  பின்பற்றிய  தவறான  கொள்கையால்  வீணானதை  உணர்ந்த  அருக்கசந்திரன்,  நல்லவளே நான்  செய்ய  வேண்டிய  கடமையை  கூறி  அருளுங்கள்  என்றான். 

 

நீலகேசி  அருக்கசந்திரன்  வருத்தம்  போக்கல்  :

 

இம்மையில்  இறந்த  பின்னர்  மறுமையில்  சொர்க்கம்  என்றாலும்

மானிடர்கள்  சாவினைக்  கண்டு  மருள்வதும்  உண்மையாகும்

உண்மையே  இதுதான்  எனினும்  இறந்த  பின்  சூன்யம்  என்னும்

புத்தனின்  புன்  நெறியை  விட்டு  நன்னெறியில்  செல்வாய்  என்றாள்            186

 

            இந்த  பிறப்பில்  இறந்தவுடன்  மறுபிறப்பில்  தேவருலகம்  சென்று  பிறந்து  இன்பம்  அடையலாம்  என்று  சொன்னாலும்,  மானிடர்கள்  இறப்பதை  நினத்து  பயப்படுவது  உண்மை.  அப்படியிருக்க,  செத்தபின்  பெறப்போவது  வெறும்  சூன்ய  வீடே  என்று  கூறிய  புத்தனை  நோக  வேண்டும்.  அப்புத்தனின்  பொய்நெறியை  விட்டு  நன்னெறியில்  செல்வாயாக  என்றாள்  நீலகேசி.

( புன் நெறி : பொய்யான நெறி  )

 

இதுவரை  பின்  பற்றி  வாழ்ந்த  இகழ்ந்திடும்  பொய்நெறியை  விட்டு

அருகனின்  மும்மணிகளை  ஏற்று  அரிய  திருவற  நெறியில்  நின்றால்

அழிவற்ற  பேரின்ப  வீட்டையடைவது  அறுதியிட்ட  உறுதி  என்பதை

அறம்  உரைக்கும்  அன்னையாக  அருக்கசந்திரனுக்கு  நவின்றாள்  கேசி  187

 

            இதுவரை  நீ  பின்பற்றி  வந்த  ,  இழிந்த  பொய்நெறியை  விட்டு  விட்டு  நற்பேறடைவாய்.  அருகன்  அருளிய  நற்காட்சி,  நல் ஞானம்,  நல்லொழுக்கம்  ஆகிய  மும்மணிகளை  ஏற்று,  திருவற  நெறியை  பின்பற்றினால்,  நீ  பேரின்பமாகியா  மோட்சத்தை  அடைவாய்  என்பது  உறுதியென,  அறம்  உரைக்கும்  அன்னையாக  அருக்கசந்திரனுக்கு  கூறினாள்  நிலகேசி.

 

அருக்கசந்திரனின்  ஆக்கநிலை  :

 

புத்தனை  ஒத்த  புனிதன்  என்ற  அருக்கசந்திரன்  என்னும்  துறவி

காட்டினில் மனம் போல் திரியும் களிறினை பாகன் மொழியால் பழக்கி

அங்குசத்தைக்  கையில்  கொண்டு  அடக்கி  தன்  வழியில் செலுத்தலாய்

நீலகேசியின்  நல்லறம்  என்னும்  நெடிய  கயிற்றால்  பிணையப்பட்டான்           188

 

            புத்தனை  ஒத்த  பெருமை  பெற்றிருந்த  துறவி  அருக்கசந்திரனை,  காட்டில்  மனம்  போல்  திரியும்  காட்டுயானையை,  பாகன்  தன்  மொழியால்  பழக்கி,  கையில்  அங்குசத்துடன்  அதை  அடக்கி,  தன்  வழியில்  செலுத்துவதைப் போல்,  நீலகேசி  தன்  நல்லறம்  என்னும்  நீண்ட  கயிற்றால்  கட்டிப்போட்டாள்.

 

அருக்கசந்திர  புத்தத்  துறவியை  அருக  சமய  நெறிகளால்  வென்று

நல்லறங்களை  நாளும்  ஏற்க  நற்காட்சியினைக்  காட்டிய  பின்பு

புத்தன்  அறம்  உனக்கு  புகட்டிய  பொய்யாசிரியன்  யாரென  கேட்க

புத்தனின்  முதல்  மாணாக்கன்  மொக்கலனை  வென்றொழி  என்றான்            189

 

            புத்தத்துறவி  அருக்கசந்திரனை  அருகனின்  ஆகமநெறிகளால்  வென்று,  நல்லறங்களை  ஏற்கச் செய்து,   நல்வழி  படுத்தியபின்  புத்த  அறம்  உனக்கு  சொல்லித்தந்த  பொய்யாசிரியன் யாரென  கேட்டாள்.  அதற்கு  அருக்கசந்திரன்  புத்தனின்  முதல்  மாணாக்கனான  மொக்கலன்  என்று  பதிலளித்து,  நீ  சென்று  அவனை  வெல்வாயாக  என்றான்.

 

                                    அருக்கசந்திர  வாதச்  சருக்கம்  முற்றியது.

 

 

 

                                    3. மொக்கல  வாதச்  சருக்கம்.

 

மனம்  செல்லும்  விரைவு  போல  வான்வழியே  பறந்து  சென்றாள்

வானத்து  தாரகையாய்  நீலகேசி  வளமிக்க  பதுமபுரம்  அடைந்தாள்

பல்வகை  மலர்கள்  கொண்டும்  பொன், மணல்  பொருள்கள்  கொண்டும்

புத்த  பழமொழிகள்  கொண்ட  பள்ளியினை  அடைந்தாள்  பாவை                190

 

            உலகிலேயே  அதிக  விரைவில்  செல்வது  மனம்  மட்டுமே.  அவ்வளவு  விரைவாக,  வானத்து  தேவதை  போல்,  நீலகேசி  செழுமைமிக்க  பதுமபுரம்  சென்றடைந்தாள்.  பலவகை மலர்கள்  கொண்டும்,  பொன்னாலும்,  மணலாலும்  அலங்கரித்தும்,  புத்த பொன்மொழிகளை,  அங்காங்கே  எழுதி  வைத்தும்  உள்ள  புத்தப்  பள்ளியினை  அடைந்தாள்.

 

முகில்  தொடும்  கொடிகளோடும்  மகரமீன்  வடிவொத்த  கோபுரமும்

நீண்ட  நெடு  மதில்களோடும்  நிறை  பொன்  பூண்  தூண்களோடும்

மகரமீன்  படிமைகள்  கொண்டு  வார்த்தைகளால்  வர்ணிக்கயியலா

வான்  உலக  சொர்க்கம்  போன்ற  வளம்  கொண்ட  பள்ளியை  கண்டாள்      191

 

            வானத்தைத்  தொடும்  அளவு  நீண்டு  உயர்ந்த, பலநிறக்  கொடிக்  கம்பங்களும்,  மகரமீன்  போன்ற  வடிவில்  அமைக்கப்பட்ட  கோபுரமும்,  நெடிய,  நீண்ட,  உயர்ந்த  மதில்கள்  கொண்டு,  பொன்பூண்கள்  பதித்த  பெருந்தூண்களோடும்,  அங்காங்கு  மகரமீன்  வடிவ  பதுமைகளை  நிறுவி,  வார்த்தைகளால்  வர்ணிக்க  இயலாத  அழகுடன்,  அந்த  பள்ளி  வானுலக  சொர்க்கம்  போல்  இருந்தது  கண்டு  வியந்தாள்.

 

ஒழுக்கமும்  சமயக் கல்வியும்  ஒன்றின  பள்ளியில்  ஆடம்பரமாய்

ஒரு  கால்  சிறிது  தூக்கி  நின்று  அரசமரத்து  கிளையினைப்  பற்றி

துறவோனில்  ஒருவனைப்  பார்த்து ஈரைந்து  மணப் புகையினை  மூட்டிய

துவறாடை  போர்த்திய  உடலால்  உனக்கென்ன  பயனென  கேட்டாள்            192

 

            புத்தப்  பள்ளிகள்  எப்படி  வெளி  அலங்காரத்துடன்  இருந்தனவோ,  அவ்வாறே  அவர்களின்  ஒழுக்கமும்,  சமயக்  கல்வியும்  இருந்தன.  அப்பள்ளியின்  முற்றத்தில்  வெட்டப்படாமல்  தழைத்த  ஒரு  அரசமரத்தின்  கிளை  ஒன்றை  பிடித்துக்கொண்டு,  ஒரு  காலை  சற்று  தூக்கிக்கொண்டு  நின்றாள்.  அப்போது  அவ்விடம்  சென்ற    குற்றமற்ற  துறவிகளைக் கண்டாள்.  மணம்  மிகுந்த  புகையினை  ஊட்டிய,  மருதமரத்தின்  துவர்நிறம்  தோய்த்த  துணியை  போர்த்திய  உடலால்  உங்களுக்கு  என்ன  பயன்  என்று  கேட்டாள்.

 

விடையறியா  அத்துறவோர்கள்  விழிகள்  தரை  நோக்கி  தாழ்ந்திட

முதல்வனாம்  மொக்காலனை  நோக்கி முறையான என்  கேள்விகளுக்கு

வஞ்சனையை  நெஞ்சில்  அகற்றி  வாழ்வளிக்கும்  உம்  புத்த நெறியால்

ஐயத்தை  அனைவர்க்கும்  நீக்கும்  அறநெறியை  பகர்வீர்  என்றாள்               193

 

            நீலகேசி  அவ்வாறு  கேட்டதும்,  அந்த  துறவிகளுக்கு  விடை  தெரியாததால்,  மௌனமாக  விழிகள்  தரையை  நோக்கி  தலை கவிழ்ந்து  நின்றார்கள்.  மனதில்  வஞ்சனையை  நீக்கி,  உங்கள்  புத்த  நெறி  அளிக்கும்  நல்ல  வாழ்க்கை  முறைகளை,  அனைவருக்கும்  சந்தேகமின்றி  எடுத்து  விளக்குங்கள்  என்றாள்  நிலகேசி.

 

அகம்  போர்த்திய  துவராடையாலே  அடையலாம்  வீடுபேறென்றால்

அறிவினை  அறநூலால்  அறிய  அறநெறியைக்  கற்றல்  வேண்டாம்

ஆடைகள்  பிறர்  மதிக்க  எனில்  அதையணிந்த  செல்வோர் சிறந்தோரென

துவராடையணிந்தோரெல்லாம்  துறவியர்  என்றான்  மொக்காலன்               194

 

            உடலை  மூடிய  துவராடையாலே,  வீடுபேறை  அடையலாம்  என்று  கூறினீர்  என்றால்,  அறிவினை  வளர்க்கும்  அறநூல்களையும்,  அறநெறிகளையும்  கற்கவேண்டிய  அவசியம்  இல்லாமல்  போகும்.  அவ்வாறு  இல்லாமல்,  ஆடைகள்  பிறர்  மதிக்கவே  அணிவது  என்றால்,  உங்களை  விட,  மிக  விலை  உயர்ந்த  ஆடைகள்  அணியும்  செல்வந்தர்கள்  சிறந்தவர்கள்  என்றாள்  நீலகேசி.  துவராடையை  அணிவது  அவர்கள்  துறவிகள்  என்று  அடையாலம்  காட்டவே  என்றான்   புத்த  துறவி  மொக்கலன்.

 

இல்லறத்தார்  உணவிடுவதற்கு  இவ்வாடை  பயன்  எனச்  சொன்னால்

தோலாடை  உடுத்துதல்  நன்றே  தோலினைப்  பெறுதலும்  எளிதே

கள்வரால்  கவர்வதும்  இல்லை  காலத்தால்  கிழிவதும்  இல்லை

ஊன்  உண்ணும்  துறவிகள்  என  ஊர் மக்கள்  உணர்ந்து  தருவர்                    195

 

            துறவிகளாகிய  உங்களுக்கு,  இல்லறத்தில்  இருப்பவர்கள்  உருவம்  அறிந்து,  உணவு  இடுவதற்கு  இந்த  துவராடையை  உபயோகப்படுத்துவதாக  நீ  கூறினால்,  தோலினால்  செய்த  ஆடைகளை  உடுத்துவதும்  நல்லது  தானே.  மேலும்  தோலை  நீங்கள்  எளிதில்  பெற்றுக்கொள்ள  இயலுமே.  தோல்  ஆடைகளை  திருடர்கள்  திருடமாட்டார்கள்.    சீக்கிரத்தில்  கிழிந்தும்  போகாது.  தோல்  ஆடை  அணிந்து  சென்றால்  ஊன்  உண்ணும்  துறவிகள்  என்று  இல்லறத்தாரும்  அறிந்து  உணவு  தருவார்கள்  என்றாள்  நீலகேசி.

 

பசும்பொன்  மிகத்  தூய்மையெனில்  பழியின்றி ஏற்பார்  அதனை

பொன்முலாம்  பூசிய  பொருளை  பெற்றவர்  மனம்  துன்பம் கொள்ளும்

அகத்தோற்றம்  தூய்மையானால்  புறத்தோற்றப்  பெருமை  வேண்டாம்

துவராடை போர்த்திக் கொண்டு துடிக்க கொன்று ஊனுண்ண வேண்டாம் 196

 

            நாம்  வாங்கும்  பொன்னானது,  சுத்தமான  பொன்நகை  என்றால்  வாங்கியவர்கள்  சந்தோஷத்துடன்  ஏற்றுக்கொள்வார்கள்.  ஆனால்,  அதே  நகை  பொன்முலாம்  பூசப்பட்டு,  உரசி  பார்க்கையில்  பொன்  அல்ல,  போலி  என்று  தெரிந்தால்,  வாங்கியவர்கள்  மனம்  துன்பப்படுவது  மட்டுமின்றி,  கொடுத்தவர்களையும்  தண்டிப்பார்கள்.  எந்த  ஒரு  மனிதனுக்கும்  மனமானது  அன்புடன்  தூய்மையாக  இருந்தால்  போதும்,  புறத்தோற்றத்தைப்  பற்றிய  பெருமை  கொள்ளத்  தேவையில்லை.  தூய்மையான  துறவிகள்  அணியும்  துவராடையை  உடுத்திக்கொண்டு,  உயிர்களை  வதைத்து  கொன்று  ஊன்  உண்ண  வேண்டாம்  என்றாள்.

 

உள்ளத்தில்  குற்றம்  இன்மையே  உண்மை  தவம்  என்று  கூறும்  நீர்

உறுப்புகளைச்  சிறையிடுதல்  போல்  உடையினால்  உடலை  மறைத்தீர்

கண்களால்  உடல்  அழகைக்  காண  கண்களில்  பெருங்காமம்  பொங்கும்

கண்களை  மட்டும்  நீங்கள்  கட்டிக்  கொள்ளா  காரணம்  யாதோ                  197

 

            உள்ளத்தில்  குற்றம்  இல்லாமல்,  தூய்மையுடன்  இருப்பதே  உண்மையான  தவம்  என்று  கூறுகிறீர்கள்.  உடல்  உறுப்புகள்  அனைத்தையும்,  சிறையில்  இடுவது  போல்,  போர்வையால்  மூடிக்கொள்கிறீர்கள்.  வலிமையான  மன  அடக்கம்  இல்லாமல்  இருக்கிறீர்கள்.  கண்களால்  தான்  பெண்களின்  உடல்  அழகைக்  கண்டு,  தங்கள்  உடலில்  காமத்தீயைப்  பெருக்கிக்கொள்ளும்  நீங்கள்,  கண்களை  மட்டும்  கட்டிகொள்ளாததற்கு  காரணம்  என்ன  என்று  சொல்லுங்கள்.

 

மங்கையர்  எம்  உடலழகாலே  மனம்  அது  காமுரும்  என்று

உடலினை  போர்த்துகிறோமென  உரைத்திட முன்  வருவாயின்

தாபத்தால்  கலங்கிடும்  கன்னியரால்  தளர்ந்திடும்  உம்  மனம் கூட

உடல்  மூடும்  துறவும்  தவமும்  உள்ளத்தில்  சிதைந்திடுமன்றோ                    198

 

            புத்தத்துறவியான  மொக்கலனே,  உங்களின்  உடலழகைக்கண்டு,  மங்கையர்கள்  மனமானது,  ஆசையால்  காமம்  கொண்டு  கலங்கும்  என்று  தான்,  உடலினை  போர்வையால்  போர்த்துகிறோம்  என்று  நீங்கள்  சொல்ல  முன்  வந்தால்,  அந்த  மோக தாபத்தால்  கலங்கி  வாடும்  காமக் கன்னியரைக்  கண்டதால்,  உங்கள்  மனமும்  தளர்ந்து,  உடலை  மூடிய  உங்கள்  துறவும்,  தவமும்    உள்ளத்தில்  சிதைந்து  விடும்  அல்லவா.  எந்த  விதத்தில்  பார்த்தாலும்  உங்கள்  உடல்  மூடும்  தவக்கோலம்  இழுக்குடையதே  எனக் கூறினாள்  நீலகேசி.

 

மண்கலம்  கையிலேந்திய  நீவீர்  மனம்  ஒன்றி  உணவுண்டாலும்

மண்கலம்  உடையும்  தன்மையால்  மனத்துயர்  தவத்தை  அழிக்கும்

ஐம்பொறிகள்  புறத்தூய்மையால்  அடையலாம்  மனத்தூய்மையெனில்

விலைமகளீர்க்கும்  துறவறம்  கூட  விரைவினில்  எளிதாய்  கிட்டும்               199

 

            மண்ணால்  செய்த,  உணவு  ஏற்று  உண்ணும்  உங்கள்  கலயம்,  கீழே  விழுந்து  உடைந்தாலும்,  கால்  இடறி  உடைந்தாலும்  உங்கள்  மனம்  துயரம்  அடையும்.  வேறு  மண்கலயம்  செய்யும்  நேரமும்,  பொருளும்  வீணாகி,  உங்கள்  தவத்தைக்  கெடுக்கும்.  ஐம்  பொறிகளை  தங்கள்  மனதிடத்தால்  அடக்கி,  ஆளுதல்  இன்றி,  ஐம்பொறிகளை,  குளித்து  சுத்தம்  செய்து  காக்கும்  புறத்தூய்மையால்,  மனத்தூய்மை  அடையலாம்  என்று  நீங்கள்  நினைத்தால்,  விலைமகளிர்க்கு  கூட  துறவறம்  மிகச்  சீக்கிரம்  கிடைத்து  விடும்  என்றாள்.

 

இல்வாழ்க்கை  குற்றம்  என்று  ஏற்றமிகு  தவத்தை  ஏற்றீர்

துவராடையின்  தூய்மைக்காக  துவர்  பொருளை  சமைக்கின்றீர்கள்

சலவை,  தையல்,  தலை மழித்தல்  சக்கிலிய  குயத்  தொழில்களென

உடலுழைபில்  உழலும்  நீங்கள்  உணவுக்காக  இரந்துன்பதேன்                      200

 

குடும்ப  வாழ்க்கை  குற்றம்  உடையது,  துன்பம்  நிறைந்தது  என்று,  பெருமையும்,  உயர்வும்  உடைய  தவத்தை  ஏற்றுக்  கொண்டீர்கள்.  ஆனால்,  உங்கள்  காவி  உடைகளைத்  துவர்  ஏற்றித்   துவைப்பதும்,  துவர்களுக்கு  தேவையான  பொருள்களைத்  தயாரிப்பதும்,  கிழிந்த  துணிகளை  தைப்பதும்,  தலையை  மழிப்பதும்,  காலடிகளை  தயாரிப்பதும்,  பராமரிப்பதும்,  உணவு  ஏந்தி  அருந்து  மண்கலயம்  தயார்  செய்யும்  குயவத்தொழில்  செய்வதும்  என்று  உடல்  உழைப்பில்  ஈடுபட்டு  வாழ்கிறீர்கள்.  ஆனால்  உணவுக்காக   இல்லறத்தாரிடம்  பிச்சை  எடுத்து  உண்கிறீர்களே,  அதைப்பற்றி  ஏன்  சிந்திக்கவில்லை    என்று  கேட்டாள். 

 

மொக்கல  முனிவரரே  உனக்கு  முழுமையாய்  நான்  சொல்லுவதொன்று

ஐம்புலன்கள்  பற்றினை  நீக்கி  அருந்துறவு  மேற்கொண்டோர்க்கும்

மண்ணுலகில்  பிறந்து  வாழ்ந்து  மறுமையில்  தேவனானோர்க்கும்

உணவொன்றே  முக்கியமாகும்  உடல்  ஓம்பலை  கருத்தில்  கொண்டால்            201

 

            தவத்தில்  சிறந்த  மொக்கலரே,  உங்களுக்கு  ஒன்று  சொல்லலாம்  என்று  கருதுகிறேன்.  துறவறம்  மேற்கொண்டோரின்  கடமை,  ஐம்பொறிகளை  அடக்கி,  ஐம்புலன்வழி  பற்றுகளை  ஒழித்து,  தூய  சிந்தனைகளை  மேற்கொள்ளுதலேயாகும்.  மண்ணுலகில்  பிறந்து  வாழ்ந்து  மாண்டவர்கள்,  இனி  பிறக்க  உள்ளவர்கள்,  இப்போது  வாழ்ந்து  கொன்டு  இருப்பவர்கள்,  தேவனாக  பிறந்தவர்கள்  அனைவருக்கும்  உடலை  வளர்ப்பதற்கு  உணவு  முக்கியம்  தேவையாகும்.

 

மொக்கலன்  கூற்று  :

 

பொருள்கள்  பல  பெற்றதனாலும்  பொருந்திடா  நல் ஞானத்தாலும்

அறிவிலிகள்  போற்றுதலாலும்  அகங்காரம்  கொண்ட  மொக்கலன்

அருகநெறி உணர்ந்த  நீலகேசியை  அறங்கூறி  வெல்ல  எண்ணியவன்

இரணியன் பெற்ற  இடர்  தன்னை  இங்கு  நீயும்  பெறுவாய்  என்றான்          202

 

            அருள்  உள்ளம்  கொண்ட  நீலகேசி  உரைத்ததை  மொக்கலன்  கேட்டு,  பல  பொருள்களைப்  பெற்று  செல்வத்தில்  வாழ்பவனும்,   கீழான  ஞானம்  கொண்டவனும்,  அறிவில்  குறைந்தோரால்  போற்றப்படுபவனும்,  செருக்குமிகக்  கொண்டவனுமான  அவன்  அருகநெறியை  நன்கு  அறிந்த  நீலகேசியை,  தனது  புத்த  அறத்தைக்கூறி  சொற்போர்  செய்து  வெல்ல  எண்ணினான்.  எனவே  அவன்  நீலகேசியை  நோக்கி,  நீ இங்கு  வந்து  இரணியனைப்  போல  இடர்படப்  போகிறாய்  என்றான்.

 

நீலகேசி  தன்  வெற்றி  விலம்பல் :

 

மொக்கலன்  சினந்து  கூறியதை  மென்மேனியால்  நீலகேசி  கேட்டு

இரணியன்  ஒருவனையே  வென்று  இறுமாப்புடைய  மொக்கலனே

இடையினையே  உடுக்கையாக்கி  இருவிழிகள்  நாணம்  தளும்பும்

குண்டலகேசியும்  குருவான  அருக்கசந்திரனும்  தேற்றாரென்றாள்                 203

 

            மொக்கலன்  கோபத்துடன்   கூறியதைக்  கேட்ட  மலர்மேனியுடைய  நீலகேசி,  உன்னால்  இரணியன்  என்ற  ஒருவனை  மட்டும்  வென்று,  ஆணவம்  கொண்ட  மொக்கலனே,  உடுக்கையைப்  போன்ற  இடையினையும்,  வெட்கம்  தளும்பும்  கண்களையும்  கொண்ட  குண்டலகேசியும்,  அவளுடைய  குருவான  அருக்கச்சந்திரனும்  என்னுடன்  சொற்போரிட்டு  தோல்வி  அடைந்தவர்கள்  என்று  கூறினாள்.

 

மொக்கலன்  கூற்று  :

 

இந்திரர்கள்  தொழுது  நிற்கும்  இறைவன்  என்   புத்தனாவார்

தலைவனின்  கருத்துக்கள்  எல்லாம்  தர்மம், அதர்மம்,  காலம்,  ஆகாயம்

புற்கலம், புண்ணியம்,  பாவம்,  உயிர்,  கட்டு,  வீடுபேறு  என  திணறி

முழுமையும்  முடிக்க  இயலாத  மனதினால்  தடுமாறி  நின்றான்                    204

 

            நீலகேசி  கூறியதைக்கேட்ட  மொக்கலன்,  வானவர்களின்  அரசன்  இந்திரனே  தொழுது  நிற்கும்  கடவுளானவர்  என்னுடைய  புத்தர்.  அவருடைய  கருத்துக்கள்  தர்மம்,  அதர்மம்,  காலம்,  ஆகாயம்,  புற்கலம்,  புண்ணியம்,  பாவம்,  உயிர்,  கட்டு,  வீடுபேறு  ஆகியவைகள்  என  அவன்  கூறி,  தான்  கூறியதை  முழுமையாக  முடிக்காமல்,  தடுமாற்றம்  அடைந்து  பாதியில்  நிறுத்தினான்.

 

தடுமாற்றம்  அடைந்த  மொக்கலன்  தானுரைத்த  பொருள் நிகழ்வறியா

தன்  மனம்  போன  போக்கில்  தடுமாறி  உரைத்தது  எல்லாம்

பேதை  பருவத்து  மகளீர்  கூடி  புழுதி  சேறை  சோறென  சமைத்து

ஆடிடும்  விளையாட்டைப்  போல  அமைந்தது  அவனுரைத்ததெல்லாம்            205

 

            அவ்வாறு  தடுமாற்றம்  அடைந்த  மொக்கலன்,  தான்  கூறிய  பொருள்கள்  பற்றிய  நிகழ்வுகளைப்  பற்றி  முழுமையாக  அறியாமல்,  தன்  மனம்  பேன  போக்கில்  விவரித்துக்  கூறினான்.  அது,  இளம்பருவத்து  சிறுமிகள்  கூடி,  மண்  சேற்றை  வைத்துக்கொண்டு  சோறு  சமைத்து  விளையாடும்  விளையாட்டைப்போல்  இருந்தது.

 

நீலகேசி  கூற்று  :

 

இறைவனின்  இயல்பை  அறியாத  நீ  இந்திரன்  தொழும்  இறைவனென்றாய்

துறவியர்  யாரையும்  தொழுல்  தனக்கு  தகும்  என  கருதும்  இந்திரன்

ஊடற்பொழுதில்  தேவியை  தொழுபவன் உயர்ந்தவன்  இந்திரன் என்றால்

இந்திரன் தேவியும்  தலைவனென இயம்புவாய் போலுமென நகைத்தாள்  206 

 

            மொக்கலன்  தடுமாறும்  உரையைக்கேட்ட  நீலகேசி,  நீ  இறைவனின்  இயல்பை  அறியாதவன்  போலும்.  எனவே  தான்  இறைவன்  இந்திரனால்  தொழப்படும்  சிறப்புடையவன் என்று  புகழ்ந்தாய்.  இந்திரன்  துறவியர்  யாரையும்  தொழுதல்  தன்  தகுதிக்கு  ஏற்றது  என்று  நினைப்பவன்.  அதுமட்டுமின்றி,  அவன்  தன்னுடைய  மனைவியை,  ஊடற்பொழுதில்  தொழுபவன்.  உன்  கூற்றுப்படிப்  பார்த்தால்,  இந்திரன்  தொழும்  அவன்  மனைவியும்  தலைவன்  என்று  கூறுவாயோ  என  நகைத்தாள்

 

அருகனின்  இயல்பினை  அறியாய்  அவர் அருளிய  நூல்களையும்  அறியாய்

நூற்பொருளின்  தன்மைகளையும்  நின்  நெஞ்சம்  சிறிதும் உணரவில்லை

குற்றங்கள்  ஏதும்  கூறிலையெனில்  குறையற்ற  தத்துவ  நூல்  தனே

என்  தலைவன்  அருளியதெல்லாம்  அரிய  தத்துவம்  என்பதேயுண்மை            207

 

என்  தலைவன்  அருகனின்  இயல்பினை  நீ  அறியவில்லை. அவர்  அருளிய  நற்பொருள்களின்  தன்மையை  நீ  அறியவில்லை.  அவர்  தந்த  ஆகம  நூல்களையும்  தெரிந்திருக்கவில்லை.  எதையும்  நீ  சிந்தித்து  உணரவில்லை.  குற்றங்கள்  என்று  எதையும்  நீ  கூறவுமில்லை.  எனவே  என்  தலைவன்  அருளிய  தத்துவங்களும்  குற்றமில்லாத  அரிய  நூல்கள்  தானே  என்றாள்  நீலகேசி.

 

அத்திகாயங்கள்  ஐந்தை  ஏற்கிலை  ஆறு  திரவியங்களையும்  ஏற்கிலை

ஒன்பது  பதார்த்தங்களின்  உண்மையில்  உடன்பாடும்  இல்லை

சுட்டி  நான்  காட்டிய  குற்றங்கள்  சுழல்கின்றன  உமது  கருத்தில்

நீ  கூறும்  பொருட்களெல்லாம்  பொருந்திலை  ஒன்றுடன்  ஒன்று                    208

 

            எம்  சமயத்தோர்  அத்திகாயங்கள்  ஐந்து  என்று  கூறுவோம்.  நீர்  அதை  ஏற்பதில்லை.  நாங்கள்  கூறும்  ஆறு  பொருட்களையும்  நீர்  ஏற்பதில்லை.  அவ்வாறே  நாங்கள்  கூறும்  ஒன்பது  பதார்த்தங்களிலும்  உமக்கு  உடன்பாடு  இல்லை.  நான்  உனக்கு  எடுத்துக்காட்டிய,  உனது  கருத்துக்களில்  காணப்படுகிற  குற்றங்கள்  உமது  சிந்தையில்  சுழல்கின்றன.  அதுமட்டுமின்றி  நீர்  கூறும்  பொருள்கள்  ஒன்றுடன்  ஒன்று  பொருந்தவில்லை.  உன்  பொருளியல்பு  நன்றே  என்று  ஏளனமாய்  சிரித்தாள்.

 

தரும  அத்திகாயம்  என்றும்  பொருள்களை  இயக்குவதில்லை

உயிர்களும்  புற்கலமும்  இயங்க  உபகாரணமாயவை  அமையும்

தர்மாத்திகாய  இயக்கத்தாலே  தரணியில்  நம்  இயக்கமென்ற

தவறான  கொள்கையைக்  கொண்டு  தர்க்கத்தில்  குறை  நீ  கண்டாய்            209

 

            தரும  அத்திகாயம்  பொருள்களை  இயக்குவது  இல்லை.  ஆனால்  உயிர்களும்,  புற்கலங்களும்  இயங்குவதற்கு  அது  துணைக்காரணங்களாக  உள்ளது.  அதாவது  கடலில்  செல்லும்  மரக்கலத்திற்கு  கடல்  துணைக்  காரணம்  ஆவது  போல.  இதைப்  புரிந்துகொள்ளாத  நீ,  தர்மாத்திகாயம்  இயங்குவதால்,  உலகத்தில்  நாம்  இயங்குகிறோம்  என்ற  தவறான  கொள்கையில்,  நீ  என்  தர்க்கத்தில்  குறைகாண்கிறாய்  என்றாள்.

( தர்மாத்திகாயம் : மீன்  இயங்க நீரும்,  தேர்  இயங்க  அச்சும்  தேவைப்படுவது  போன்று,  மூலப்பொருள்கள்  இயக்கத்திற்கு  தர்ம  அத்திகாயம்  துணைக்காரணம்  என்பது  சமணக்  கொள்கை )

 

அதரும  அத்திகாயமும் அதுபோல்  பொருள்களை  இயக்குவதில்லை

உயிர்களும்  புற்கலமும்  உலகில்  நிலைத்து  நிற்க உபகாரணங்கள்

பொருள்கள்  இயங்கவும்  நிலைக்கவும்  அவை  இரண்டும்  காரணமென்ற

தவறாகக்  கூறிடும் உன்  வாயை  தேய்த்து நீ  கழுவாயாக  என்றாள்              210 

 

            அதரும  அத்திகாயமும்  அவ்வாறே  தான்  என்ற  கருத்தை  நீ  புரிந்து  கொள்ளவில்லை.  உயிர்களும்,  புற்கலமும்  நிலைத்து  நிற்பதற்கு  துணைக்காரணமாய்  இருப்பது  அதரும  அத்திகாயம்  நீயோ,  பொருள்கள்  இடம்  விட்டு  இடம்  செல்வதற்கும்,  அல்லது  ஒரே  இடத்தில்  நிற்பதற்கும்  அவையிரண்டும்  காரணம்  என்று  தவறுதலாகக் கூறும்  உன்  வாயைக்  கழுவுவாயாக  என்றாள்  நீலகேசி.

 

இளமையில்  புலமை  பெற்றவனே  காலம்  பொருள்  இல்லை  என்கிறாய்

கணம், கற்பகாலத்திற்கிடையே அமைந்த விகற்பங்களை  இணைக்கிறாய்

நின்  தலைவன்  புத்தன்  அவன்  நெடுங்காலமாக  தவம்  செய்தான்  என

நாணமின்றி  உரைக்கும்  உனக்கு  நல்லறிவு  பேதமையோ  என்றாள்            211

 

            இளமையிலேயே  அதிக  புலமை  பெற்ற  மொக்கலனே,  காலம்  என்று  ஒரு  பொருள்  இல்லை  என்கிறாய்.  ஆனால்,  கணப்பொழுதும்,  கற்பகாலமும்,  இவற்றுக்கு  இடையில்  அமைந்த  விகற்பங்களை  இணைத்து  கூறுகிறாய்.  உம்  தலைவன்  புத்தன்  நீண்டகாலம்  தவம்  செய்தான்  என்று  கூறி,  அவனை  வணங்குகிறாய்.  இவ்வாறு  முன்னுக்குப்  பின்  முரணாக  கூறும்  உனககு  பித்துப்  பிடித்து  விட்டதா  என  நீலகேசி  வினவினாள்.

 

விண்  சுற்றும்  கோள்களை  ஆய்ந்து  விளைவுகளை கணித்து  சொன்னால்

விண்  கோள்கள்  இல்லை  என்கிறாய்  புத்தன்  பிறந்த காலம்  எண்கிறாய்

உயிர் என்ற  பொருளினை நீவீர் கண்டு   கருத்தால்  உணர்ந்தீரா என்றீர்

உயிருள்ள பொருள்களால் தான் அறிதலும் பார்த்தலும் இயலுமென்றாள்    212

 

            விண்ணில்  சுற்றிவரும்  கோள்களை  ஆராய்ந்து,  அவற்றால்  என்னென்ன  நிகழ்வுகள்  நடக்கும்  என்று  கூறினால்,  நீ  அக்கோள்களின்  நிலை  அவ்வாறே  உள்ளதைக்  கண்ட  பின்பும்,  அவ்வாறு  எக்கோளும்  இல்லை  என்று  வாதிடுகிறாய்.  ஆனால்,  புத்த  பெருமான்  பிறந்த  ஆண்டை  எண்ணிக்  கணக்கிட்டு  போற்றுகிறீர்கள்.  உயிர்  என்ற  பொருள்  ஒன்று  உண்டு  என்பதை,  கண்ணால்  கண்டு,  கருத்தால்  உணர்ந்தீர்களா  என்று  கேட்கிறாய்.  உயிர்  உள்ள  பொருள்களால்  தான்  அறிதலும்,  பார்த்தலும்  முடியும்.  உயிர்  இல்லையென்றால்  நீங்கள்  கூறும்  அறிவு  கந்தமும்  இல்லை  என்று  ஆகும்  என்றாள்.

 

உயிரொன்று  இல்லையெனில்  உம்  அறிவுகந்தமும்  அழிந்து  போகும்

உயிரினை  மறுக்கும்  நீங்கள்  அறிவினை  ஏற்பதும்  முரணேயாகும்

உடல்களின்  அளவைக்  கொண்டே  உடன்  உறையும்  உயிரளவாகும்

சமணத்தின்  இந்நெறியை  நீர்  தர்க்கத்தில்  பொய்  என  மறுத்தீர்                 213

 

            உயிர்  என்ற  ஒன்று  இல்லாமல்  போனால்,  நீங்கள்  கூறும்  ஐந்து  கந்தங்களில்  ஒன்றான  அறிவு கந்தம்  முற்றிலும்   அழிந்து  போகும்.  உயிர்  உள்ளது  என்பதை  மறுக்கும்  புத்தர்,  உயிரின்  சிறப்பு  குணமாகிய  அறிவினை  ஏற்றுக்கொள்வது  முரண்பாடு  எனத் தெரியவில்லையா.  உடல்களின்  அளவே  அதில்  உறையும்  உயிரினது  அளவு  ஆகும்  என்பது  சமணத்தின்  கோட்பாட்டை  நீங்கள்  பொய்  என்று  கூறுகிறீர்கள்  என்றாள். 

 

மெய்யுணர்வு  உடலெங்கும்  பரவி  உடலளவில்  அடங்கும்  என்கிறாய்

உயிர்  மட்டும்  அடங்காதென்பது  உண்மையில்  பேதமை  தானே    

உணர்வு  அருவப்  பொருளானதால்  உடலினுள்  அடங்கும்  என்பாய்

தீண்டல், ஒட்டல், கலத்தலெல்லாம் அருவவுணர்வின்  தொழில்கள் தானே 214

 

            மெய்யுணர்வு  உடலெங்கும்  பரவி,  உடலிலேயே  அடங்கியுள்ளது  என்று  கூறுகிறாய்.  ஆனால்,  உயிர்  அடங்காது  என்று  கூறுகிறாய்.  இது  உண்மையில்,  நாணயத்தைச்  சோதித்து,   செல்லும்   செல்லாது  என்று  கூறும்  தொழில்  செய்யும்  ஒருவன்,  நாணயத்தின்  ஒருபக்கம்  செல்லும்,  மறுபக்கம்  செல்லாது  என்று  கூறுவதைப்போல்  உள்ளது.  உணர்வு  அருவப்  பொருள்  ஆனதால்  உடலில்  அடங்கும்  என்று  கூறுவாயாயின்,  அருவமாகிய  உணர்வுக்கு  உம்  புத்தன்  கூற்றுப்படி,  தீண்டல்,  ஒட்டல்,  கலத்தல்,  யாத்தல்  ஆகிய  தொழில்கள்  உண்டா  என்று   நீ  கூற வேண்டும்.

 

இன்பமும்  துன்பமும்  நுகர்வது  உடலில்லை  உயிர்  தான்  என்கிறோம்

உடலில்  கட்டுண்ட  உயிர்  தான்  துன்பத்தை  நுகரும்  அன்றோ

எருதின்  கால்  உடைந்து  போனால்  கழுதை  முடமாகுமா  என்கிறாய்

கழுதையும் எருதும் உடலால்  தனித்து  இரு வேறு  உயிர்கள் தானே               215

 

            இன்பத்தையும்,  துன்பத்தையும்  அனுபவிப்பது  உயிர்  தான்,  உடல்  இல்லை  என்று  நாங்கள்  கூறுகிறோம்.  உடலில்  கட்டுண்ட  உயிர்தான்  துன்பத்தை  நுகரும்  என்று  நாங்கள்  கூறுவதை  பிதற்றல்  என்கிறாய்.  எருதின்  கால்  ஒடிந்து  போனால்,  கழுதை  முடம்  ஆகுமா  என்று  கேட்கிறாய்.  எருதும்  கழுதையும்  தனித்தனி  உடலைக்கொண்ட  இருவேறு  உயிர்கள்  என்பதையும்  அறியாத  பேதமையாளன்  நீ  என்றாள்.

 

கரும்பிற்குள்  சாறு  போல்  தான்  கண்ணுக்கு  உயிர்  தெரியாது

உழப்பு, அறிவு, குறி, செயலெல்லாம்  உயிரின் அரிய பண்புகளாகும்

சமணத்தின்  கொள்கை  என்றும்  உயிரும் அறிவும் ஒன்றே  என்பது – நீ

உண்மை நிலையை உணரவுமில்லை  உன் மனதில் ஏற்கவுமில்லை              216

 

            கரும்பிற்குள்  இருக்கும்  சாறு  எப்படி  கண்ணுக்கு  தெரிவதில்லையோ,  அப்படித்தான்  உடலில்  இருக்கும்  உயிரும்  கண்ணுக்கு  தெரிவது  இல்லை.  உழப்பு,  அறிவு,  குறி,   செயல்கள்  எல்லாம்  உயிரின்  அரிய பண்புகள்  ஆகும்.  உயிரையும்,  அறிவையும்  வேறு  வேறாகக்  கொள்வது  எங்கள்  கருத்தல்ல.  அறிவு  முனைத்தெழுவதால்  துன்பம்  உண்டாகிறது  என்றும்,  அதனால்  அறிவினின்று  வேறுபட்ட  உயிர்  துன்பமுறுகிறது  என்பதும்,  நாங்கள்  கூறும்  உண்மைநிலை.  இதை  நீ  உணரவுமில்லை,  உன்மனதில்  ஏற்கவுமில்லை  என்றாள்.               ( உழப்பு : நுகர்ச்சி. )

 

மானிடப்  பிறவி எடுத்தாலும்  மற்ற  கதிகளில்  உழன்றிட்டாலும்

அப்பிறப்பு  துன்பங்களையெல்லாம்  அவ்வுயிர்கள்  அடைந்தே  தீரும்

புத்தரின்  கண்பங்க வாதப்படி  அறத்தினால்  பயன்  இல்லையென்பதை

அருக  சமயம்  மறுப்பதோடு  அறிஞர்கள்  நகைப்பால் நாணமடைவாய்            217

 

            மானிடராகப்  பிறந்தாலும்,  மற்ற  கதிகளில்  பிறந்து  உழன்றாலும்,  அப்பிறப்பின்  இன்ப  துன்பங்களை,  அந்த  உயிர்கள்  அதனதன்  நல்  தீவினைகளுக்கு  ஏற்ப  அடைந்தே  தீரும்.  பௌத்தர்களின்  கண்பங்கம்  கொள்கைப்படி,  அறம்  செய்பவன்  அந்த  அறத்தின்  பயனை  நுகர  இயலாது.  எனவே  அறம்  செய்வதால்  பயன்  ஏதும்  விளையாது  என்று  நீங்கள்  கூறுவதை,  சமண  சமயம்  மறுக்கிறது.  நீ  கூறியதைக்கேட்டு  அறிஞர்களும்,  சான்றோர்களும்  நகைப்பது  கண்டு  நீயும்  வெட்கப்பட்டு  தலைகுனிவாய்  என்றாள்.

 

உடலினை  விட்டு  பிரிந்த உயிர்  வேறொரு  தாயின்  வயிற்றையடைவதும்

அடைந்திட்ட  அவ்வுயிர்கள்  அவ்வுடல்  பெற்றதை  விளக்கென மொழிய

நீள் குழல்  சிரம்கொண்ட நீலகேசி  நிழல்  நுண்ணுடம்புடைய பேய்கள்

வேறு  ஒரு  உடலில்  புகுவதையும்  அறியாத  அறிவிலியா  நீ என்றாள்            218

 

            உடலை  விட்டு  இறக்கின்ற  உயிர்,  வினைகளால்  சூழ்ந்த  நுண்  உடம்புடன்  வேறொரு  தாயின்  வயிற்றில்  சென்றடைவது  எவ்வாறு  இயலும்.  அவ்வாறு,  அடைந்த  உயிரின்  உடலை  நீ  எவ்வாறு  பெற்றாய்  என்பதை  நீ  விளக்கிக்  கூறவும்  என்றான்  மொக்கலன்.  நீண்ட  கருங்குழலைக்  கொண்ட  நீலகேசி,  நிழலைப்  போன்ற  நுண்ணுடம்பினையுடைய  பேய்கள்,  வேறொரு  உடலில்  புகுவதை  நீ  அறிந்ததில்லையா,  அவ்வளவு  அறிவிலியா  நீ  என்றாள்.

 

கொல்லனிடம்  பழுத்த  இரும்பும்  கொண்டிடும்  தன்னுள்  தண்ணீரை

கன்னலால்  உறிஞ்சும்  நீரும்  கருப்பஞ்சாறு  ஆவது  உண்மை

உடல்  விட்டு  பிரிந்த  உயிரும்  வினைகளின்  உந்துதலாலே

புதுப் புது பிறவிகள்  எடுப்பது  பூவுலக  நிகழ்ச்சிகள்  அறிவாய்                       219

 

            எந்த  ஒரு  பொருளும்,  தன்னோடு  வேறொரு  பொருள்  சேருவதற்கு  இடம்  கொடுத்தல்  உண்டு.  உதாரணமாக,  கொல்லன்  உலைக்கலத்தில்  பழுத்த  இரும்பானது  எப்படி  தண்ணீரை  உறிஞ்சிக்கொள்ளுமோ,  கரும்பானது  உறிஞ்சும்  நீர்,  எப்படி  அதனுள்  கருப்பஞ்சாறு  ஆகிறதோ,  அப்படி  உடலை  விட்டு  பிரிந்த  உயிரானது,  அதனதன்  வினைகளுக்கு  ஏற்ப,  புது  புது  பிறவிகள்  எடுப்பது  இந்த  உலகத்தில்  நடக்கின்ற  நிகழ்வுகளாகும்.

 

உயிர்  செய்த  வினைகள்  எல்லாம்  உடனுக்குடன்  பலன்  தரும்  என்பதும்

வினைகள்  கெட்டொழிந்த பின்பே  விளைந்திடும் பயன்களென்பதும்

சமணத்தின்  கொள்கையில்லை  சாக்கியனே  அறிவாய்  நீயும்

உரிய காலம்  பயன்களை தந்து உதிர்ந்திடும் காலம் முடிந்தால் என்றாள்       220

 

            ஒருவன்  செய்த  வினைகள்  எல்லாம்  உடனே  பயன்  தரும்  என்பதும்,  அவ்வினைகள்  முழுதும்  கெட்டு  அழிந்த  பின்னரே  பயன்  தரும்  என்பதுமான  இருகருத்துகளையும்  சமணம்  ஏற்றுக்கொள்வது  இல்லை  என்பதை  புத்ததுறவியே  நீ  புரிந்துகொள்.  அவ்வினைகள்  சிலநாள்  பலன்  தராமல்  நிலைத்திருந்து,  பின்னர்  உதயத்திற்கு  வந்து,  உரிய  பலனை  அதற்குரிய  காலம்  வரை  தந்து,  அக்காலம்  முடிந்ததும்  அழிந்து  போகும்  என்பதே  எங்கள்  தத்துவம்  என்றாள்.

 

பசும்பொன்னால்  செய்யப்பட்டும்  பலமணிகள்  பொன்னில்  பதித்தும்

பலவகை பொருள்கள்  செய்தாலும்  பசும்பொன்னின்  தன்மை கெடாது

பொன் போன்ற நமது  உயிரும்  பெற்றிடும்  வினைகளுக்கு  ஏற்ப

நால்கதியில்  பிறக்கும்  என்பதை  நவின்றிடும்  எம்  தத்துவம் என்றும்            221

 

            பசும்  பொன்னால்  செய்யப்பட்ட  குடத்தை  உருக்கி,  பலமனிகளைப்  பதித்து,  பலவகை  ஆபரணங்கள்  செய்தாலும்,  பொன்னின்  குணம்  என்றும்  மாறுவதில்லை.  பொன்  போன்ற  நமது  உயிரும்,  தத்தம்  வினைகளுக்கு  ஏற்ப, நான்கு  பிறப்புகளை  மாறி  மாறி  எடுக்கும்  என்பதே  எங்களது  தத்துவம்  ஆகும்.  அதை  விட்டுவிட்டு  நாங்கள்    என்றும்  கூறாத  கருத்துக்களைக்  கூறி,  குற்றம்  உடையது  என்று  கூறிக்கொண்டிருக்காதே. 

 

பாவங்கள்  நுகர்ந்த  பின்னரே  வீடுபேறென்பதை  சமணம்  மறுக்கும்

உரிய  தவம்  மேற்கொண்டால்  தான்  உயிரில்  கலந்த  பழவினை  உதிரும்

உயிர்  தூய்மை  பெற்ற  பின்பே  உயர்  நிலையாம்  முக்தி  கிட்டும்

சமணத்தின்  தத்துவத்தை    சரியாக  உணராத  சாக்கியன்  நீ                         222

 

            செய்த  பெரும்  பாவங்கள்  அனைத்தும்  நுகர்ந்த  பின்னரே,  வீடுபேறு  வாய்க்கும்  என்று  சமணம்  என்றும்  சொல்லுவதில்லை.  நீ  அவ்வாறு  யார்  சொல்லியோ  தவறுதலாக  கருதிக்கொண்டுள்ளாய்.  முன்னரே  உயிரில்  வந்து  கலந்துள்ள  பழைய  வினைகளை,  உயரிய  தவத்தை  மேற்கொண்டு,  அவைகளை  முற்றிலும்  உதிரச்  செய்து,  உயிர்  தூய்மைப்  பெற்ற  பின்னரே,  உயர்ந்த நிலையான  வீடுபேற்றை  அடையமுடியும்  என்று  கூறுகிறோம்.  சமணத்தின்  தத்துவத்தை  நீ  சரியாக  பிரிந்து  கொள்ளாத  புத்த  துறவி    என்றாள்.

 

இன்பமும்  துன்பமும்  முறையே  நல்வினை  தீவினைப்  பயன்கள்

தீவினை  இன்பம்  பயக்கும்  என  கூறுவோர்  சமணத்தில்  இல்லை

ஐம்பொறிகள்  அடக்கி  வென்றால்  உடலை  வருத்தும்  குற்றம்  என்கிறாய்

தலை  மழித்து  நீ ஏற்கும்  துறவால்  தியானத்திற்கு  தரும்  ஆக்கம்  யாது  223

 

            ஒரு  உயிர்  அனுபவிக்கும்,  இன்பமும்,  துன்பமும்  முறையே  நல்வினை,  தீவினைகளின்  பயன்களாகும்.  தீவினைகள்  இன்பத்தைப்  பயக்கும்  என்று  சமணத்தில்  கூறுபவர்கள்  யாரும்  இல்லை.  அப்படியென்றால்,  துறவியர்  துறவு  மேற்கொள்ளும்போது,  பலவித  துன்பத்தை  பெறுகிறார்களே  அது  தீவினையின்  பயன்கள்  தானே  என்று  கூறுவாயாகில்,  உன்  துறவிகளும்  அவைகளை  அனுபவிக்கிறார்கள்  அல்லவா.  ஐம்பொறிகளை  அடக்கி,  வினைக்கட்டில்  இருந்து  விடுபட,  உடலை  வருத்துவது  குற்றம்  என்கிறாய்.  அத்தகைய நிலையை  அவர்கள்  ஏற்பார்கள்.  நீங்கள்  தலைமுடியை  மழித்து  ஏற்கும்  உங்கள்  துறவால்  தியானத்திற்கு  என்ன  பயன்  என்றாள்.

 

ஆழ்ந்த  ஒர்  தியானத்திற்கு  ஆடைகள்  என்றும்  இடையூறாகும்

உடல்  இன்பம்  வெறுத்த  நாங்கள்  உயர்  தவத்தால்  உடலை  மறந்தோம்

உடல்  அழியும்  காலத்தாலேயே  உள்ளப்  பற்றுகள்  அறவே  நீங்கிட

உன்னத  நோம்பினை  ஏற்கும்  உத்தமர்கள்  எம்  முனிவர்களாவர்                 224

 

            உயரிய  ஆழ்ந்த  தியானத்திற்கு  ஆடைகள்  எப்போதும்  இடையூறு  தரும்.  அதனால்  எம்மோர்  ஆடைகள்  அணிவதில்லை.  உடலினது  இன்பத்தை  வெறுத்து  நாங்கள்,  மிக  உயர்ந்த  தவத்தை  கடைபிடிப்பதால்,  உடலை  மறந்து  விடுகிறோம்.  உடலுக்கு  அழிவு  நேரும்  காலத்தில்,  அப்பிறவியில்,  மனதில்  உண்டான  பற்றுகள்  அறவே  நீங்கிவிட  வேண்டும்  என்று  கருதி,  புனிதமான  நோம்பினை  ஏற்கும்  உத்தமர்கள்  எம்முனிவர்கள்  என்றாள்  நீலகேசி.

 

புதிய  பெண்  துறவிகளுடன்  புத்தத்  துறவிகள்  காமம்  நுகர்வர்

அந்நெறி  சமணத்தில்  உண்டென  அறிவிலியாய்  புலம்புகின்றாய்

ஆரணங்கை  எதிரில்  கண்டால்  ஆகாரம்  ஏற்காமல்  திரும்புவர்

அவர்களின்  ஒழுக்கத்தை  பழித்து    ஆழியளவு  தீவினை  அடைகிறாய்            225

 

            புதிய  பெண்  துறவிகளுடன்,  உமது  புத்ததுறவிகள்  உடல்  சுகத்தை  நுகர்கிறார்கள்.  எம்துறவிகள்  காமஉணர்வை  நெஞ்சில்  நினைப்பதும்,  பெருந்தீவினை  என்று  கருதி,  முற்றிலும்  விளக்கியவர்கள்.  அத்தகைய  முனிவர்களை,  உங்கள்  துறவிகளைப் போல்  உடல்  சுகம்  அனுபவிப்பவர்கள்  என்று  பொய்யான  தகவலைக் கூறி  நீ  தீவினையை  ஏற்றுக்கொள்கிறாய்.  எம்துறவிகள்  ஆகாரத்திற்கு  ஊருக்குள்  செல்லும்  போது,  மங்கையரை  எதிரில்  கண்டால்,  ஆகாரம்  ஏற்கமாட்டார்கள்.  திரும்பி  வந்துவிடுவார்கள்.  மறுநாள்  தான்  ஆகாரத்திற்கு  செல்வார்கள்.   அவர்களின்  ஒழுக்கத்தை  பழித்துக்  கூறி,  கடலளவு  தீவினையை  ஏன்  சேர்த்துக்கொள்கிறாய்  என்று  கூறினாள்.

 

கத்து  உரைத்தல்  கூடாதென்று  கட்டிய  வாய்  மௌனம்  காக்கும்

உண்மைக்கு  ஊனம்  வந்தால்  வாய்  திறந்து  வாய்மை  உதிரும்

உத்தம  அபய  உயிரைக்  காக்க  உரைத்திட்ட  பொய்களுங்கூட 

உயர்ந்த  அறம்  என்றே  ஆகும்  உணர்வாய்  மொக்கலனே  என்றாள்             226

 

பொய்  சொல்லுதல்  பாவம்,  பொய்  சொல்லக்கூடாது  என்று,  வாயைக் கட்டி  மௌனம்  சாதிப்பவர்கள்.  உண்மைக்கு  பாதகம்  வரும்போது,  மௌனம்  கலைந்து,  வாய்  திறந்து  பேசுவார்கள்.  இது  தவறு  என்று நீ  கூறுவாய்.  ஒருவனை  நான்  பாதுகாப்பேன்  என்று  மனமாற  உறுதி  அளித்த  பின்,  அது  இயலாது  என்று  கருதி,  குறிப்பால்  உணர்த்துவது  மிகவும்  வஞ்சகமான  பாவம்  ஆகும்.  ஒரு  பொய்யைக்  கூறினால்  தான்,  ஒரு  குற்றமற்ற  உயிர்  காக்கப்படும்  என்றால்,  பொய்  கூறுவதும்  அறமேயாகும்,  அறிந்துகொள்  மொக்கலா  என்றாள். 

(  கத்து  :  பொய். )

 

புத்தனுக்கு  நிழலைத்  தந்த  போதிமரத்தை  வணங்குகின்றாய்

புத்த  அறம்  காத்து  வாழும்  புத்தத்  துறவியரை  தொழுதாததேன்

புத்தனுக்கு  நிழல்  உதவியதென்றால்  புத்தனின்  துறவுக்கு  உதவிடும்

மண்டை, குடை,  செருப்புகளையு.ம்  மகிழ்ச்சியுடன்  தொழாததேனோ            227

            புத்தர்  மேல்  நீங்கள்  கொண்ட  பக்தியினால்,  அவருக்கு  ஞானத்தையும்,  நிழலையும்  தந்த  அரசமரத்தை,  புனிதமாக  கருதி  வணங்குகிறீர்கள்.  எந்தவிதமான  அறிவும்,  அருள்  உணர்வும்  இல்லாத,  அரசமரத்தை  தொழும்  நீங்கள்,  புத்தனின்  அருள்நெறிகளை  கடைபிடித்து  நடக்கும்,  புத்தத் துறவிகளை  ஏன்  வணங்க  மறுக்கிறீர்கள்.  புத்தனுக்கு  நிழல்  தந்து  உதவிய  அரசமரத்தைப்போல்,  அவரின்  துறவுக்கு  உதவிடும்,  உணவுண்ணும்  மண்கலயம்,  குடை,  செருப்புகளையும்  ஏன்  மகிழ்ச்சியுடன்  தொழாது  விட்டுவிடுகிறீர்கள்  என்று  கேட்டாள்  நீலகேசி.

 

ஆயுள்  முடிந்து  இறந்த  உடலை  ஆசையுடன்  திண்பதும்  தீவினை

அடிபட்டு  இறந்த  உடலையும்  ஆர்வத்தில்  உண்பதும்  தீவினை

இயற்கை  மரணமோ  கொல்லப்பட்டோ  இறந்தவனின் மனைவி விதவை

விதவையை  புணர்தல்  என்றும்  விண்  அளவு  தீவினைகள்  தானே               228

 

            ஆயுள்  முடிந்து  இறந்து  போன  உடல்களை,  விருப்பப்பட்டு  திண்பதும்,  வேல்,  கம்பு,  ஈட்டி  முதலியவைகளால்  அடிபட்டு  இறந்த  உயிர்களின்  உடலாக  இருந்தாலும்  அதை  ஆர்வமாக  உண்பதும்,  தீவினையே  ஆகும்.  அதே  போல்,  இயற்கையாக  மரணம்  அடைந்தாலோ,  இல்லை விபத்து,  கொலை  போன்றவைகளால்  இறந்து  போனவனின்  மனைவியை  விதவை  என்றுதான்  அழைப்பார்கள்.  அந்த  விதவையை  கூடுதலும்  மாபெரும்  தீவினையே  ஆகும்  என்றாள்.

 

மானையும்  மீனையும்  கொல்வதால்  தீவினைகள்  அவற்றுக்கில்லை

அவைகளை  கொல்பவர்களுக்கே  ஆழியாய்  தீவினைகள்  சூழும்

பூ  தந்து  பூ  வாங்கி  தொழுவோர்க்கு  புண்ணியம்  கிட்டுவது  போல்

ஊன்  விற்க ஊன்  வாங்கி  உண்போர்க்கு  உறுதியாய்  தீவினை  சேரும்            229

 

            ஊன்  உண்பவரையும்,  ஊன்  விற்பவரையும்  கண்டு,  மான்,  மீன்கள்  ஓடி  ஒளிவதால்,  மான்களுக்கும்,  மீன்களுக்கும்  தீவினை  ஏற்படுவதில்லை. அதற்கு  மாறாக  அவைகளை  கொல்லுபவர்களுக்கே  பெருங்கடல்  போல்  தீவினைகள்  வந்து  சேரும்.  ஊன்  விற்பவன்,  அவ்வூனை  தனக்கு  கொண்டுவருவதால்,  உயிரை  கொலை  செய்த  பாவம்  அவனை  சேராது  என்பாய்.  அது  தவறு.  அப்பாவம்  அவனுக்கு  வந்தே  தீரும்.  ஒருவன்  பூக்களால்  புத்தனை  அர்ச்சனை  செய்து,  அப்பூக்களை  எடுத்துச்  செல்லும்  போது,  அப்பூக்களை  ஒருவன்  வாங்கி,  புத்தனுக்கு  அர்ச்சனை  செய்தால்,  அவ்வாறு  அர்ச்சனை  செய்பவனுக்கும்  நல்வினை  சேரும்.  அவ்வாறு  இருக்க,  ஊனை  விற்பவருக்கும்  தீவினை  வந்தே  சேரும்  என்றாள்.

 

காமத்தின்  சுவையை  சுவைத்தோன்  கணிகைகளை  நாடுவது போல்

இறச்சியின்  சுவையுணர்ந்த  நீ  எல்லா  உயிர்  ஊனையும்  உண்பாய்

புலாலினை  கடிந்து  உரைக்கும்  புண்ணிய  நூல்களுக்கு  முரணாய்

பசுமடி சுரக்கும் பாலையும் பகர்கின்றாய்  நெஞ்சால் ஊனென கருதி            230 

 

            முதிர்ந்த  காமச்சுவையை,  ஏற்கெனவே  சுவைத்த  ஒருவன்,  அப்பெண்ணிடம்  மீண்டும்  மீண்டும்  அவளிடம்  காமம்  நுகர்வது  போல்,  முயல்  முதலான  உயிர்களின்  ஊனைத்தின்று,  சுவையுணர்ந்தவன்,  எஞ்சிய  உயிர்களின்  ஊனையும்  உண்ண விரும்புவான்.  புனிதமான  நூல்கள்  கடிந்து  மறுக்கும்,  உண்ணத்  தகுதியற்ற,  தூய்மையற்ற  ஊனை,  உண்ணக்கூடாது  என்று  கூறினால்,  நீயோ  பசுவின்  மடியில்  சுரக்கும்  பாலையும்  ஊன்  போன்று  தூய்மையற்றது  என்று  கூறுகிறாய்.  நீ  கூறுவது  குற்றமற்ற  இறைவன்  உரைக்கும்,  சான்றோர்  மொழிக்கும்  முரண்பட்டதேயாகும்.

 

பேய்  தின்ன  மழலையை  இழுக்க  பெற்றவள்  அதை  காக்க  இழுக்க

மழலையும்  மாண்டு  போனதால்  மாபாவம்  பேயைச்  சேரும்  என்றேன்

சேயின்  உயிர்  பிரிந்ததாலே  சேர்ந்திடும்  தீவினை  தாயை  என்கிறாய்

சான்றோர்களால்  இகழத் தக்க  தத்துவத்தை  நீ உரைக்கின்றாயே               231

 

            ஒரு  பேயானது  குழந்தையை  திண்பதற்கு,  அக்குழந்தையின்  தாயினுடையா  கையில்  இருந்து  இழுக்க,  அத்தாய்  தன்  மகவைக்  காப்பாற்ற  பேயிடமிருந்து  இழுக்க,  குழந்தை  இறந்துபோகிறது.  அதனால்  அந்த  பெரும்  பாவம்  அந்தப்  பேயைப்  போய்  சேரும்  என்று  நான்  சொல்கிறேன்.  ஆனால்  நீயோ குழந்தையின்  உயிர்  பிரிந்ததனால்,  அந்த  தீவினையானது  தாயைச்  சேரும்  என்கிறாய்.  இதுபோன்ற  சான்றோர்களாளும்,  அறவோர்களாளும்  இகழப்படும்  தத்துவத்தை  நீ  கூறுகிறாய்  என்றாள்.

 

அறம்  கூறும்  நல்லோர்க்கெல்லாம்  அரிய  நல்வினைகள்  கிட்டும்

புலால்  உணவை நீ  விட்டு  விட்டால்  பகரும்  உன்னறம்  நல்வினையாகும்

அறம்  அற்ற  ஊன்  உண்ணுதலாலே  அடைந்த  பயன்  என்னவென  சொல்

சிறந்த  பயன்  வேண்டும்  என்றால்  சிறு  உயிர்க்கும்  ஊறு  செய்யாதே      232

 

            அறத்தைச்  சொல்லி  அதை  பிறர்  ஏற்றுக் கொள்வார்கள்  என்றால்,  அவ்வாறு  அறம்  உரைத்தவர்களுக்கு  நல்வினை  உண்டாகும்,  என்று  கருதி,  நீயும்  அறங்களை  சொல்கிறாய்.  அத்தகைய  நீ,  அறமற்ற  தீவினையை  கொடுக்கும்  புலால்  உணவை  விட்டு  விடு.  மற்றவர்களுக்கும்  புலால்  உண்ணுவதால்  ஏற்படும்  தீவினைகளை  எடுத்துச்  சொல்.  பிறகு  யாரும்  உயிர்  கொலை  செய்யமாட்டார்கள்.  சிறு  உயிர்களுக்கும்  எந்த  தீங்கும்  செய்யாமல்  இருந்தால்  சிறந்த  பயனோடு  அவ்வுயிர்கள்  உன்னை  வாழ்த்தும்  என்றாள்  நீலகேசி.

 

ஆசிரியர்  கூற்று  :

 

ஆசிரியராய்  தன்னை  ஏற்றுள்ள  அனைவரும்  மெய்யுரை  உணர்ந்த  பின்

ஊன்  உண்ணல்  குற்றமில்லையென  உறுதியாய்  கூற  இயலாததால்

மொக்கலன்  முகம்  சிவந்து  சினக்க  பேய்  போல்  நின்று  நாய்  போல்  சீறி

சமணத்  துறவிகள்  செய்யும்  தவம்  பற்றி  பொய்கள்  உரைக்கலானான் 233

 

            தன்னை  ஆசிரியராக  ஏற்றுக்கொண்ட  மாணவர்களின்  முன்னால்,  தான்  தனது  உண்மைக்கு  மாறான உரையாடலில்,  இனி  ஊன்  உண்ணல்  குற்றம்  இல்லை  என  உறுதிபட  கூறமுடியாது  என்று  மனதில்  உணர்ந்தான்  மொக்கலன்.  நீலகேசியின்  கருத்துக்கு  மாறுபட்டு,  பேய்  போல்  எழுந்து  நின்றான்.  முகம்  கோபத்தால்  சிவக்க,  நாய்  போல்  சீறி  விழுந்தான்.  சமணத்துறவிகள்  தங்கள்  உடலை  வருத்தி  தவம்  செய்வதை,  குற்றம்  கூற  முற்பட்டு  பொய்யான  உரைகளைக்  கூறத்தொடங்கினான்.

 

மொக்கலன்  கூற்று  :

 

பனி, மழை, வெயில், பட்டினியால்  பல  துன்பங்கள்  உடலை  வாட்டும்

பகல், இரவு  துயில்  துறந்ததாலே  கிடைத்திடும்  நன்மைகள்  யாது

உடல்  வருத்தி  செய்யும்  செயலே  உயர்  தவம்  என்று  சொன்னால்

தீயும்,  நோயும்  உடலை  வருத்துதலும்  தேர்ந்த  தவம்  என்று  கூறலாம்            234

 

            வெற்று  வெளியில்  நின்று  தவம்  செய்தால்,   வெய்யில்  உடலை  சுட்டு  எரிக்கும்.   பனி,  மழையில்  உடல்  நனைந்து  துன்புறும்.    பட்டினி  உடலை  வாட்டும்.  பகல்,  இரவு  தூக்கம்  இல்லாமல்  வருத்தி,  துன்பத்தை அனுபவிப்பதால்  உங்களுக்கு  கிடைக்கும்  பயன்கள்  என்ன ?  இவ்வாறு  உடலை  வருத்தித்  தவம்  செய்வதால்  நன்மை  உண்டாகும்  என்று கூறுவாயானால்,  நெருப்பினால்  உடலைக்  கொளுத்திக்  கொள்வதும்,  நோய்  வந்து  உடல்  மெலிந்து  வருந்துதலும்,  இன்னும்  இதுபோன்ற  பிற  செயல்களும்  தவம்  என்று  சொல்லலாமே.

 

நீலகேசி  பதிலுரை  :

 

விழி  அகழ்ந்து  கொடுப்பதுமில்லை  வெட்டி  உடலை  புண்  ஆக்கவில்லை

வின்  உயர்ந்த  மலை  மேல்  ஏறி  விழுந்து  உடலை  வருத்துவதில்லை

உடலைப்  பிளந்து  கொள்வதுமில்லை  உடலில்  ஊனம்  செய்வதுமில்லை

துன்பம்  தந்து  உடலை  வருத்தும்  தவறுகள்  ஏதும்  செய்வதும்  இல்லை            235

 

            மொக்கலனே,  நாங்கள்  எங்கள்  கண்களைத்  தோண்டி  காணிக்கையாய்  கொடுப்பதும்  இல்லை.  உடல்களை  வெட்டி,  புணாகும்படி  வேண்டிக்கொள்வதும்  இல்லை.   உயர்ந்த  மலையின்  மீது  ஏறி,  அங்கிருந்து  விழுந்து,  உடலை  வருத்தி  சாவதும்  இல்லை.  உடலை  பிளந்து  கொண்டும்,  உடலில்  ஊனம்  செய்துக் கொண்டும்  வழிபாடு  செய்வதும்  இல்லை.  நும்  புத்தர்  பெருமானைப்  போல்,  உடலுக்கு  துன்பம்  தந்து,  அதை  வருத்தும்  செயல்களை  எம்  சமயத்தவர்  என்றும்  செய்வதில்லை  என்று  பதில்  அளித்தாள்  நீலாகேசி.

 

உடலில்  ஊனம்  உருவாக்கல்  தான்  உண்மையான  நல்லறம்  என்று

நாக்கினைப்  பிடுங்கி  சாதலும்  நெருப்பினில்  வீழ்ந்து  இறத்தலும்

கழுமர  உச்சியில்  அமர்தலும்  கட்டுடலை  தூக்கிட்டு  மரித்தலும்

நல்லறம்  என்று  கொள்ளுதலை  நாங்கள்  என்றும்  ஏற்பது இல்லை               236

 

            உடலில்  இவ்வாறு  ஊனத்தை  உருவாக்கிக்கொண்டு,  உடலை  வருத்துவதே  நல்ல  அறங்கள்  என்றால்,  நாம்  நாக்கினை  பிடுங்கிக்கொண்டு  சாகலாம்.  நெருப்பினில்  விழுந்து  இறக்கலாம்.  தூக்கிட்டுக்  கொண்டும்,  மலைமேல்  இருந்து  குதித்தும்  மரணம்  அடையலாம்.  நமது  பலமான  உடலை, கழுகு  மரத்தின்  மீது  அமர்ந்து,  உயிரை  போக்கிக்  கொள்ளலாம்.  இத்தகையவைகளை  நாங்கள்  நல்லறம்  என்று  ஒருபோதும்  ஏற்றுக்கொள்வதில்லை  என்றாள்.

 

ஈரைந்து  பாரமிதைகளை  ஒழுகலும்  இல்லறத்தார்  தரும்  ஆடை  ஏற்றலும்

ஊன் முதலான  உணவை  உண்டலும்  துவர் தோய்த்த  அடை உடுத்தலும்

தேவைக்கு  மேல்  உணவை  மறுத்தலும்  நேர்ந்த  இடத்தில்  தங்குதலும்

பிடித்த  உணவை  வெறுத்து  ஒதுக்கலும்  புத்தரின்  அறிவுரைகளாகும்            237

 

            பத்து  பாரமிதைகளை  ( பத்து  வகையான  நற்குணங்களின்  எல்லையை  அடைதல் )  கடைபிடித்தலும்,  இல்லறத்தார்  தரும்  ஆடைகளை  ஏற்று  அணிதலும்,  ஊன்  முதலான  உணவுகளை  உண்ணுதலும்,  துவர்  தோய்த்த  காவி  உடைகளை   அணிதலும்,  தேவைக்கு  மேலான  உணவை  ஏற்க  மறுத்தலும்,  எங்கு  இருக்கிறோமோ,  எங்கு  அமைகிறதோ  அந்த  இடத்திலேயே  தங்குவதும்,  பிடித்த  உணவுகளை  வெறுத்து  ஒதுக்குவதும்,  இவைகளால்  ஏற்படும்  துன்பங்களை  தாங்கிக்கொள்ள  வேண்டும்  என்று  உம்  புத்தர்  பெருமான்  அறிவுரை  வழங்கியுள்ளார்  என்றாள்.  நநீலகேசி  கூறினாள்.

 

புத்தர்  அருளிய  அறிவுரைகளை  போற்றி  நடக்கும்  காலங்களில்

பெற்றிடும்  துன்பங்களையெல்லாம்  புத்த  துறவிகள்  பொறுத்துக்கொள்வீர்

உயர்ந்த  தவ  நோக்கத்தாலே  உன்னத  எங்கள்  சமணத்  துறவிகள்

உடல்  படும்  துன்பங்களை  வெல்லல்  உன்  நோக்கில்  நல்லறமன்றோ       238

 

            புத்தர்  கூறிய  மேற்கண்ட  அறிவுரைகளை  கடைபிடித்து  நடக்கும்  போது,  நம்  உடலானது  பெறும்  துன்பங்களை,  புத்தத்துறவிகள்  பொறுத்துக்கொள்ளவேண்டும்.  அவை  நல்லறங்களென  உம்மால்  ஏற்றுக்கொள்ளப்படும்.  ஆனால்,  உயர்ந்த  நோக்கில்,  ஆன்மாவானது  தூய்மை  பெற்று,  மோட்சமாம்  வீட்டை  அடைய,  சமணத்துறவிகள்  உயர்ந்த  தவம்  செய்வதால்  உடலுக்கு  ஏற்படும்  சிரமங்கள்  உன்னுடைய  நோக்கத்தில்  நல்லறம்  இல்லை  என்று  தோன்றுகிறது  அல்லவா.  சமணத்துறவியரை  விட,   புத்தத்துறவிகள்  பலமடங்கு  துயரை  உடலால்  அடைகிறார்கள்.  அத்துன்பங்களையெல்லாம்  பொறுத்துக்கொள்ள  வேண்டும்.    உடல்  துன்பத்தைக்  காரணம்  காட்டி  சமணர்களின்  துறவு  நிலையைக்  குற்றம்  கூறுதல்  அறியாமையே  என்றாள்.

 

உயிர்களைக்  கொல்வோர்  மனதில்  உள்ளது  அறவுணர்வென்றால்

தனிமையில்  தவத்தில்  நிற்போரை  தாழ்ந்தவர்  என  அறிவிலி  உரைப்பர்

ஊன்  உண்ணும்  உன்போன்றோர்க்கும்  உயிர்  வதைக்கும்  வேடர்களுக்கும்

தீவினை  ஆன்மனில்  சேரும்  தெளிவடைவாய்  மொக்கலனே  என்றாள்     239

 

            ஊன்  உண்ணுவதற்காக,  உயிர்களை  வதைத்து  கொல்பவர்கள்  மனதில்  அறவுணர்வு  ஓங்கியுள்ளது  என்றால்,  தனிமையில்  அனைத்தையும்  துறந்து,  தவம்  செய்பவர்களை  தாழ்ந்தவர்கள்  என்று  அறிவில்லாத  மூடர்கள்  தான்  கூறுவர்.  உன்னைப்போன்ற  இறந்த  விலங்குகளின்  பிணங்களைத்    திண்பவர்களுக்கும்,  அவ்விலங்குகளை  வேட்டையாடி  கொல்பவர்களுக்கும்,  தீவினையானது  ஆன்மனில்  கலந்து  நரகத்திற்கு  கொண்டு  செல்லும்  என்பதை  அறிந்து,  நீ  தெளிவு  கொள்வாய்  மொக்கலனே  என்றாள்  நீலகேசி.

 

துன்பங்கள்  ஆயிரமெனினும்  துறவோர்கள்  வென்றிட  வேண்டும்

துள்ளிய  இந்தத்  துறவுநிலை  துவராடை  உம்  துறவிகட்குமுண்டு

துன்பங்களைப்  பொறுத்து  வென்றால்  தூய  தவம்  முழுமையாகும்

சமணர்  துறவு  நிலையை  பழித்தல்  சாக்கியனே  உம்  மடமையாகும்        240

 

            துன்பங்கள்  உடலுக்கு  ஆயிரம்  வந்தாலும்,  உயரிய  தவத்திற்காக,  துறவிகள்  அனைவரும்  அத்துன்பங்களை  வெல்லவேண்டும்.   இந்த  துள்ளியமான,  தெளிந்த  சிந்தனை  துவராடை  அணிந்து,  துறவு  பூண்ட  உம்  புத்தத்துறவிகளுக்கும்  மனதில்  பதிய  வேண்டும்.  அப்படி  துன்பங்களைப்  பொறுத்து  வெற்றி  பெற்றோமானால்  நாம்  மேற்கொண்ட  தவமானது  முழுமை  பெறும்.  இனியாவது  சமணத்துறவு  நிலையை  பழித்துக்  கூறுவதை  நிறுத்தி,  உன்  அறியாமையை  போக்கிக்கொள்  என்றாள்.

 

மரம்  செடி  கொடிகளெல்லாம்  உணவுண்டு  வளர்வதனாலே

ஓரறிவு  உயிர்கள்  என்பது  சமணத்தின்  உள்பொருளாகும்

வளர்கின்ற  பொருள்கள்  எல்லாம்  உயிர்பொருள்  என்னும்  கூற்றால்

வளர்கின்ற  நகமும்  மயிரும்  உயிர்  பொருளா  என்பதுன்  வாதம்               241

 

மரங்கள்,  செடி கொடிகள்  எல்லாம்  உணவை  ஏற்றுக்கொண்டு  அமைதியாக  வளர்கின்றன.  அதனால்  அவைகளுக்கு  உயிர்  உண்டு  என்று  நாங்கள்  கூறுகிறோம்.  அவைகளை  நாங்கள்  ஓரறிவு  உயிர்கள்  என்று  கூறுகிறோம்.  இது  சமணத்தின்  உள்  பொருள்  தத்துவம்  ஆகும்.  ஆனால்,  நீயோ,  உயிர்ப்  பொருளின்  தன்மையில்  இருந்து  வேறுபட்ட  மயிரும்,  நகமும்  வளர்கின்றனவே,  வளரும்  தன்மையுள்ளதால்  அவைகள் உயிர்  பொருளா,  இல்லையே  என்று  என்  கருத்தில்  குற்றம்  காண்கிறாய்  என்றாள்.

 

உயிருள்ள  உடலில்  மட்டும்  நகத்தோடு  முடியும்  வளரும்

மயிர்  நகத்தின்  அடிதான்  வளரும்  நுனி  பாகம்  வளர்ச்சி  பெறாது

மரம், செடி, கொடிகள்  எல்லாம்  அடி, நுனி,  மேலென  படர்ந்து வளரும்

உயிரற்ற பொருள்களிடத்து  ஒரு  செயலும்  நிகழ்வதும்  இல்லை                    242

 

            மயிரும்,  நகமும்  உயிருள்ள  உடலில்  மட்டுமே  வளரும்.  அந்த  உயிர்  தொடர்புடைய  அடிப்பகுதியில்  தான்  வளரும்.  நுனிப்  பகுதியில்  வளர்ச்சி  பெறாது.  ஆனால்,  மரம்,  செடி,  கொடிகளுக்கு,  அடிப்பகுதி,  பக்கங்கள்,  மேல்  பகுதியென  எல்லாப்பகுதிகளிலும்  வளர்ச்சியுண்டு.  உயிரற்ற  பொருளிடத்து  எந்த  ஒரு  செயலும்,  நிகழ்ச்சிகளும்  நடப்பது  இல்லை.  எனவே  என்  கருத்தில்  எந்த  குற்றமும்  இல்லை  என்பதை  அறிவாயாக  என்றாள்.

 

தொட்டால்  சுருங்கிச்  செடிகள்  தொட்டதும்  இலைகள்  சுருங்கும்

தீண்டுதல்  நீங்கி  விட்டால்    சுருங்கிய  இலைகள்  மலரும்

தோலினில்  நெருப்பு  பட்டால்  சுருங்கிடும்  நிலையைக்  கண்டு

எரிந்த  தோலை  உவமையாக்கும்  என்னே  உம்  அறிவின்  திறமை                243

 

            தாவரங்களுக்கு  உயிர்  உண்டு  என்பதையும்  விளக்குகிறேன்  கேள்.  தொட்டால்  சுருங்கி  என்ற  தாவரம்,  ஏதேனும்  ஒன்றால்  தீண்டப்பட்டால்,  இலை  சுருங்கி  மயங்குவதைக்  காணலாம்.  தீண்டல்  நீங்கினால்  மறுபடியும்  மலர்ந்து  விடும்.  இதை  நான்  கூறினால்,  நீயோ,  தோலின்மேல் நெருப்புப்பட்டால்,  சுருங்கிவிடும்  நிலையைக்  கண்டு,  நீயும்  எரிந்த  தோலை  உவமையாகக்  கூறுகிறாய்.  நெருப்புப்  பட்டு  சுருங்கிய  தோல்  மீண்டும்  விரிகிறதா.  என்னே  உன்  அறிவின்  மகிமை  என்று  நகைத்தாள்  நீலகேசி.

 

ஓரறிவு  மரங்கள்  செத்து  மனிதர்களாய்  பிறந்திட்டாலும்

அவ்வுயிர்க்கும்  ஓரறிவு  என்று  அறிவின்றி  வாதிடுகின்றாய்

முப்பிறப்பில்  முயலாய்  பிறந்து  இம்மையில்  புத்தனான  தலைவன்

ஞானத்தில்  உயர்ந்தவன்  என்று  ஞானம்  இன்றி  உளறுவதேனோ                 244

 

            ஓரறிவு  உடைய  மரம்  செத்து,,  மக்கள்  பிறவியில்  பிறக்கும்  போது,  அவ்வுயிருக்கு  உடம்பால்  அறியும்  ஊற்றறிவைத்  தவிர,  பிறிதோர்  அறிவும்  இருக்க  இயலாது  என்று  வாதிடுவாயானால்,  முன்  பிறவியில்  முயலாய்  பிறந்து,  இப்போது  புத்தனாய்  பிறந்துள்ள  உம்  தலைவனுக்கு  ஞானம்  கிடைத்தது  எவ்வாறு.  முயலுடைய  அறிவு  மட்டும்  தானே  இருக்க வேண்டும்.  எம்  சமயத்தவர்  உயிர்கள்  பல  பிறவி  எடுத்தாலும்,  ஒரு  பிறவியில்  இருந்த  அறிவே,  பல  பிறவிகளிலும்  வாய்க்கும்  என்று  என்றும்  கூறுவதில்லை  என்றாள்.

 

உடலறிவை  உடைய  தாவரங்கள்  உணவின்றி  பட்டிடும்  போது

அறிவு  தெளிவற்ற  நீங்கள்  அவைகளுக்கு  உயிரில்லை  என்றீர்

பொருளியல்புணரா  உம்  துறவியர்  உணவின்றி  இறப்பது  போல

உயிருள்ள  தாவரங்களும்  உயிர்  விடும்  உணவு  இல்லையேல்                        245

 

            உடலறிவைப்  பெற்ற  மரம்  முதலான  தாவரங்கள்  உணவு  பெற்றே  உயிர்  வாழ்கின்றன.  அவைகளுக்கு  உணவு  கிடைக்காத  போது  தாவரங்கள்  பட்டுப்போகின்றன.  இதை  நாம்  கண்கூடாகப்  பார்க்கிறோம்.  அறிவு  தெளிவற்ற  நீங்கள்  அவைகளுக்கு  உயிரில்லை  என்று  கூறுகிறீர்கள்.  பொருள்  இயல்பை  உணராத  உம்  துறவிகள்  கூட  உணவு  உண்ணாமல்  இருந்தால்  இறந்து  விடுவது  உண்மையில்லையா.  அது  போல்  தான்  தாவரங்களும்  உணவில்லையென்றால்  இறந்து  விடும்  என்றாள்.

 

மொக்கலன்  குற்றம்  கூறுதல்  :

 

நீலகேசியின்  கருத்தில்  தெளியா  நுண்  அறிவு  இல்லா  மொக்கலன்

ஒரே  பொருளிடம்  காணும்  குணம்  நிலைத்த நிலையாத  தன்மையும்

உண்டு  என்பதும்  இல்லை  என்பதும்  ஒருங்கே  அமையுமென கூறினாய்

ஒற்றுமையும்  வேற்றுமையும்  ஒரே  பொருளில்  அடங்காதென்கிறேன்            246

 

            நீலகேசி  கூறி  கருத்துக்கள்  முழுதும்  சிந்தையில்  தெளிவு  இல்லாமல்,  அதை  அறிந்து  கொள்ளும்  நுண்ணிய  அறிவும்  இல்லாத  மொக்கலன்  நீலகேசியை  நோக்கி,  ஒரே  பொருளிடத்தில்  நிலைத்த  தன்மையும்,  நிலையற்ற  தன்மையும், உண்டு  என்பதும்  இல்லை  என்பதும்  ஒருங்கே  அமைந்துள்ளன  என்று  கூறினாய்.  ஒற்றுமையும்,  வேற்றுமையும்  ஒரே  பொருளில்  அடங்கியிருக்கின்றன  என்பதில்  உள்ள  குற்றத்தினை  நான்  கூறுகிறேன்.

 

நிலையான  தன்மையுண்டெனில்  நெடுவானத்தின்  தன்மை  கொள்ளும்

அப்பொருளில்  இருந்து  எந்த  ஒரு  செயலும்  தோன்றல்  இல்லையாகும்

நிலையற்ற  தன்மையுண்டெனில்  நிறைய  புதிய  பொருள்கள்  தோன்றும்

நின்  கருத்து  பொருளின்  தன்மையில்  நிரந்தர  குற்றம்  என்றான்                 247

 

            நீலகேசியே,  பொருள்களிடத்தில்  நிலைத்த  தன்மை  இருக்கும்  என்று  கொண்டால்,  அப்பொருள்கள்  வானத்தின்  தன்மையை  பெற்றிருக்கும்.  அவற்றிலிருந்து  எந்த  ஒரு  செயலும்  தோன்றும்  என்று கூறுவது  அரிதாகும்.  அவ்வாறே,  பொருளிடத்தில்  நிலையற்ற  தன்மை  உண்டு  என்று  கொண்டால்,  அவற்றிலிருந்து  பிறப்பன  புதிய  புதிய  பொருள்கள்  ஆகும்.  ஆதலால்  பொருளின்  தன்மையைப்  பற்றிய  உன்  கருத்து  குற்றமாகும்  என்றான்  மொக்கலன்.

 

நிலைத்தமையும்  நிலையாமையும்  உண்டென்பதும்  இல்லையென்பதும்

பலவகைப்  பட்டவை  என்பதும்  தனித்தனியே  பகர்வோர்களுக்கு

நீ  கூறிய  குற்றங்களெல்லாம்  நிறையவே  பொருந்தி  அமையும்

சமணர்கள்  எங்கள்  கருத்து  சகலமும்  ஒரு  பொருளில்  உண்டென்பது            248

 

            பொருள்கள்  நிலைத்த  தன்மை  உடையவை  என்றும்,  நிலையற்ற  தன்மை  உடையவை  என்றும்,  எல்லாப்  பொருள்களும்  ஒரேத்தன்மையின  என்றும்,  பலவகைப்  பட்டவை  என்றும்,  உண்டு  என்ற  தன்மை  உள்ளவை  என்றும்,  இல்லை  என்ற  தன்மை  உண்டு  என்றும்  தனித்தனியே  கூறுவோர்க்கு  நீ  கூறிய  குற்றம்  ஏற்படலாம்.  ஆனால்,  சமணர்களாகிய  நாங்கள்  ஒரே  பொருளில்  இத்தனையும்  உள்ளன  என்று  கூறுவதால்  எம்  கருத்தில்  குற்றம்  இல்லை  என்றாள்  நீலகேசி.

 

குணங்களின்  தொகுப்பே  பொருள்  உயிர்,  உயிரற்ற  பொருள்களை

பல பெயரில்  குறிப்பிடுவாரெனில்  பலகுணப்  பொருளினை கூறென்றான்

கலைதலில்லா  சிறந்த  பொருளென  கூறுகின்றாய்  நும்  கந்தங்களைந்தை

பலகுணம் பொருந்தி நிற்பது  பொருந்துமே  கந்தங்கட்கென்றாள்  கேசி            249

 

            குணங்கள்  இல்லாமல்  பொருள்  இல்லை.  குணங்களின்  தொகுப்பே  பொருள்  ஆகும்.  எனவே  அப்பொருட்கள்  உயிர்  உள்ளவை  எனவும்,  உயிர்  அற்றவை  எனவும்  பல  பெயர்களால்  குறிக்கப்படுகின்றன.  அவ்வாறு  பல  சொற்களால்  குறிக்கப்படும்  பொருள்  உண்டு  என்றால்,  பலகுணங்கள்  ஒன்றாகி  நிற்கும்  ஒரு  பொருளை  கூறுவாய்  என்றான்  மொக்கலன்.

            கலைதல்  இல்லாத  சிறந்த  பொருள்  என்று  உம்மால்  கூறப்படும்  ஐந்து  வகை  கந்தங்கட்கும்,  நிலையற்றன  என்றும்,  உயிர்  இல்லை  என்றும்,  ஒழியாத  துன்பங்கள்  உடையன  என்றும்,  தூய்மையல்லாதவை  என்றும்  பண்புகளை  உங்கள்  நூல்கள்  காட்டுகின்றன.  ஆகவே  நீ  என்னிடம்  கேட்ட  பல  குணங்கள்  ஒன்றிய  பொருள்  உங்கள்  கந்தங்களுக்கும்  பொருந்தும்  என்றாள்  நீலகேசி.

 

பால்  என்னும்  பெயருடைய  பொருள்  கெட்டுத்  தயிர்  ஆகும்  பொழுது

தயிரென்று  அழைப்போமே  தவிர  பால்  என்று  என்றும்  சொல்லோம்

ஒருபொருள்  வேறாய்  மாறும் போது  அப்பொருள்  முழுதும்  கெட்டேத்தீரும்

பொருள் இயல்பை சிதைத்து கூறல் பொருந்தாது  என்றான்  மொக்கலன் 250

 

            பால்  என்னும்  பொருள்  தயிராக  மாறும்பொழுது  முழுவதுமாகக்  கெடும்.  அவ்வாறு  முழுவதும்  கெட்டே  அது  தயிராகும்.  கெடாது  அப்படியே  நின்றால்,  அதை  பால் என்று  சொல்வோமே  தவிர,  தயிர்  என்று  கூறமாட்டோம்.  அதைப்போல்  ஒரு  பொருள்  வேறாக  மாறும்போது,  அப்பொருள்  முழுவதும்  கெட்டே  தீரும்.  ஆனால்  நீ  கூறும்  உங்கள்  நூலின்  கருத்தாகிய,  பொருட்கள்  தாம்  முற்றிலும்  கெடாமல்,  ஒன்று  பிறிதொன்றாய்  பரிணமிக்கும்  என்பது  பொருளின்  இயல்பை  சிதைத்துக்  கூறுவதாகும்  என்றான்  மொக்கலன்.

 

புற்கலப்  பொருள்கள்  எல்லாம்  தோன்றி,  நின்று, அழியும்  தன்மையில்

பால்  என  நீ  கூறிய  புற்கலம்  தயிராய்  உரு  மாற்றம்  கொண்டது

சமணத்தின்  தத்துவம்  இதையே  பரியாயம்  என்று  பகர்வோம்

பல  நூல்கள்  படித்த  மொக்கலா  படித்ததை  தெளிந்துணர்  என்றாள்            251

 

            புற்கலப்  பொருள்களுக்குத்  தோன்றல்,  நிற்றல்,  அழிதல்  என்னும்  மூவகைத் தன்மைகள்  உண்டு.  இங்கு  நீ  கூறிய  பால்  என்னும்  புற்கலப்பொருள்  பருவ  மாறுபாட்டினால்  தயிராகவோ,  மோராகவோ  உருவ  மாற்றம்  அடைந்தது  என்றே  நான்  கூறுகிறேன்.  இதனை  சமணம்  பரியாயம்  என்று  சொல்லுகிறது.  பல  நூல்களைப்  படித்த  மொக்கலா,  படித்ததை  தெளிவாக  உணர்ந்து  கொள்  என்றாள்  நீலகேசி.

 

தோன்றல், நிற்றல், கெடுதலெல்லாம்  பொருள்களின்  குணங்கள்  என்றாய்

இக்குணங்களையன்றி  வேறாக  அப்பொருளின்மையால்  பயனுரைப்பாய்

குணமும் பொருளும் தனியில்லை குணம் பொருள் வேறென வாதமுமில்லை

பொருளியலறியா மயக்கத்தோனே மயக்கதிலிருந்து தெளிவாயென்றாள் 252 

 

            ஒரு  பொருள்  தோன்றல்,  நிற்றல் ,  கெடுதல்  என்பவை  அப்பொருள்களின்  குணங்கள்  என்று  நீ  கூறுகிறாய்.  அவ்வாறாயின்,  இக்குணங்களையன்றி,  இவற்றின்  வேறாக  அப்பொருள்  காணப்படாமையால்,  உன்  கருத்தால்  என்ன  பயன்  உள்ளது  என்று  மொக்கலன்  கேட்டான்.

            எந்த  ஒரு  குணத்தையும்  நாம்  குறிப்பிடும்போது,  அக்குணத்தையுடைய  பொருள்  உண்டு  என்பது  தானே  விளங்கும்.  அவ்வாறு  எந்த  ஒரு  பொருளையும்  நாம்  குறிப்பிடும்போது,  அப்பொருளின்  குணத்தையன்றி,  வேறு  குணங்களை  யாம்  எண்ணுவதில்லை.  ஒரு  பொருளும்  அதன்  குணமும்  தனித்தனியாக  பிரித்து  எண்ணப்படுவதில்லை.  குணத்தை  உறைவிடமாகக்  கொள்ளாத  பொருளும்  இல்லை,  பொருளின்றி  குணமும்  வெளிப்படுவதில்லை.  பொருளறியாத  உன்  மயக்கத்தை  விடுவாயாக  என்றாள்  நீலகேசி.

 

நுண்ணணு பொருள்கள் தம்முள் கூடி நிலம்,நீர்,காற்று, கற்கள் தீயெனவாகும்

நுண்ணணுக்கள் தம்முள் புகுமென நும் நூல்கள்  உரைப்பது  யாதோ

இரண்டணுக்கள்  இணைதல்  தொடங்கி பலவும் இணைந்து விரியும் தன்மை

நுண்ணணுக்களின் பண்பாகுமென எம் மெய்நூல்களின் கூற்று என்றாள்       253

 

            புற்கலமாகிய  நுண்ணனுப்  பொருள், தம்முள்  கூடி,  கற்கள்,  நீர்,  நிலம்,  காற்று  தீ  என  பல்வேறு  கூறுகளாக  திரண்டு  எப்படி  விரிவடையும்.  நுண்ணணுக்கள்  பொருந்தி  ஒன்றினுள்  ஒன்று  புகும்  என்று  உம்முடைய  நூல்கள்  உரைக்கின்றனவே  அதன்  கருத்து தான்  என்ன  என்று  மொக்கலன்  கேட்டான்.  மொக்கலனே,  எங்கள்  மெய்நூலில்  கூறப்பட்டுள்ள  முறையை  கூறுகிறேன்  கேள்.  அணுக்கள்  ஒன்றினுள்  ஒன்று  புகுதலும்,  அதற்கு  இடம்  கொடுத்தலும்,  ஒன்றோடு  ஒன்று  இணைதலும்  ஆகிய  பண்புகளை  உடையவை.  இரண்டு  அணுக்கள்  இணைதல்  தொடங்கி,  பல  அணுக்கள்  ஒன்றாக  திரண்டு  விரியும்  தன்மை  உடையவை  என்றாள்  நீலகேசி.

 

கன்றுக்கு கொம்பில்லை எனவும் எருதுக்கு கொம்புண்டு எனவும்

உண்டு இல்லை தத்துவப்படி கன்றுக்கு கொம்புண்டென்ற மொக்கலனுக்கு

கன்று எருதாக வளரும் போது  கொம்புகள் உண்டென கூறுவோம் நாங்கள்

கொம்புகள் தோன்றாகன்றுக்கு முன்பே கொம்பில்லையென கூறோம்            254

 

            கொல்லும்  தன்மையுள்ள  எருதுகள்,  இளங்கன்றாக  இருக்கும்  போது  அதற்கு  கொம்பு  இல்லை  என்றும்,  எருதுக்கு  கொம்பு  உண்டு  என்றும்  கூறினால்  அதை  ஏற்றுக்கொள்வேன்.  ஆனால்,  இளங்கன்றுக்கும்  கொம்பு  உண்டு  என்று  உங்கள்  உண்டு  இல்லை  தத்துவப்படி  கூறலாமே  என்றான்  மொக்கலன்.   இளங்கன்று  எருதாக  வளர்ந்த  காலத்தில்  கொம்புகள்  உண்டு  என்று  கூறுவோமே  தவிர,  வளராத  கன்றுக்கு,  கொம்புகள்  தோன்றாத  கன்றுக்கு  முன்  கூட்டியே  கொம்புகள்  இல்லை  என்று  கூறமாட்டோம். 

 

உண்டு  என்ற  நிலைமை  தன்னை  முன்  வைத்த  பின்னரே  தான்

இல்லை  என்ற  நிலைமையையும்  பின்னதாய்  நாங்கள்  கூறுவோம்

இல்லை  என்ற  தன்மை  தன்னை  எடுத்து  முன்னதாய்  வைதத பின்

உண்டு  என்று  இறுதியில்  கூறோம்  எம்  வாதம்  சரியென்றாள்  கேசி            255

 

            .  மேலும்  கூறுகிறேன்  கேள்  மொக்கலனே.  உண்டு  என்ற  நிலமையை  முன்னதாகவும்,  இல்லை  என்ற  நிலமை  பின்னதாகவும்  கூறுவோமே  தவிர,   இல்லை  என்ற  தன்மையை  முன்னதாகக்  கூறி,   உண்டு  என்ற  தன்மையை  இறுதியில்  கூறமாட்டோம்.   எனவே  எங்கள்  கூற்றில்  தவறு  ஏதும்  இல்லை  என்றாள்  நீலகேசி. 

 

கொம்புள்ள  பிராணிகள்  சில  கொம்பு  இல்லா  விலங்குகள்  சில

குட்டிகளுக்கு  கொம்பில்லை  என்ற  கூற்றே  குற்றம்  என்றான் மொக்கலன்

முயல் கழுதைக்கில்லா  கொம்பை  உண்டில்லை  கோட்பாட்டில்  கொணர

எம்மவர்  வாதிப்பதுமில்லை  எம் நூலை  நீ  கற்றதும்  இல்லையென்றாள்            256

 

            கொம்புள்ள  பிராணிகள்  சில,  கொம்பு  இல்லா  பிராணிகள்  சில  என்று  உலகத்தில்  விலங்குகள்  உண்டு.  இளங்கன்று,  முயல்,  கழுதை ஆகியவற்றுக்கு  தலையில்  கொம்பு  உறுப்பாக  அமைதல்  இல்லை  என்று  நீ  கூறினால்,  அக்கூற்றில்  குற்றம்  உண்டாகும்.  முயல்,  கழுதை  ஆகியவற்றிற்கு  என்றும்  கொம்புகள்  முளைப்பதில்லை.  எனவே  குட்டிகளுக்கு  கொம்பில்லை  என்று  கூறுவதே  குற்றம்  என  வாதிடான்  மொக்கலன். 

எம்மவர்  எக்காலத்திலும்,  முயல்,  கழுதை  போன்ற  கொம்புகள்  இல்லாதவைகளை,  உண்டு  இல்லையாம்  கோட்பாட்டிற்கு  உதாரணமாக  கூறுவதில்லை.  அதை  நாங்கள்  வாதிப்பதும்  இல்லை.  எங்கள்  நூலை  நீ  சரிவர  கற்றதும்  இல்லை.  பொருத்த  மற்றதும்,  இல்பொருள்  ஆகியவற்றை  உண்டு  இல்லையாம்  கோட்பாட்டிற்கு  மேற்கோள்  காட்டி  குற்றம்  காண  முற்படுகிறாய்  என்றாள்  நீலகேசி.

 

உண்டென்ற நிலையை கூறி பின் இல்லையென்ற  தன்மையைக் கூறும் யாம்

இல்லையென்ற தன்மையை உணர்த்த அன்று எனும் சொல்லை மொழியோம்

நாயைக்  கண்ட ஒருவன் அது  நரி  அன்று  என்று  கூறுவதும்

நரி  இல்லை  எனும் பொருளை ஒப்பும்  நீ அறிவாய் என்றான் மொக்கலன்  257

 

            நாங்கள்  உண்டு  என்ற  நிலைமையைக்  கூறிய  பின்னரே  இல்லை  என்ற  நிலைமையைக்  கூறுவோம்.  இல்லை  என்ற  தன்மையை  அன்று  என்ற  சொல்லால்  குறிப்பிடமாட்டோம்  என்று  நீலகேசி  கூறியதைக் கேட்ட  மொக்கலன்,  அன்று  என்று  உரைத்தல்  எம்நூலில்  இல்லை  என்று  கூறுகிறாய்.  அவ்வாறாயின்,  நாயைக்கண்ட  ஒருவன்,  அதை  நரியன்று  எனக்கூறுவதும்,  அது  நரி  இல்லை  என்று கூறுவதும்  ஒன்றாகாதா  என்று  வினவினான்

 

அவன் கண்டது நாயா நரியாயென  ஐயமின்றி  தெளிந்த  பின்னர்

நரி  அன்று  என  நவில்வானேயன்றி  நரி இல்லையென  கூறமாட்டான்

இல்லை என்ற சொல் பொருள் தன்மையை  என்றும்  அறிந்திடா மொக்கலா

பேய் பிடித்து பிதற்றுவது போல்  பொருளற்று  சொல்களைப்  பகர்கிறாய்  258

 

            ஒருவனுக்கு  தான்  கண்டது  நாயா,  அல்லது  நரியா  என்று  ஐயம்  தோன்றிய  போது,  அவன்  ஐயம்  தெளிந்து,  அது  நரியன்று  என்று  கூறுவான்.  நரி  இல்லை  என்று  கூறுவது  பொருந்தாது.  நீயோ  நரி  இல்லை  என்னும்  சொற்களின்  பொருள்  உணர்த்தும்  தன்மையை  அறியாமல்  கூறுகின்றாய்.  சொல்லறிந்த  அறிஞர்  பெருமக்கள் நெறியில்  நீ  நிற்கவில்லை.  பேய்  பிடித்தவர்கள்  பொருளற்று  பேசுவது  போல்  பிதற்றுகிறாய்  என்றாள்  நீலகேசி.

 

ஒரு  பொருளின்  இயற்கை குணம்  மறு  பொருளுக்கு  இல்லை  என்றாய்

காய்ச்சிய  இரும்பின் வெப்பம்  தோய்த்திடும்  நீரில்  சேரும்  என்றான்

உடம்புடன் கூடிய உயிர்கள்  உணர்ந்திடும் பொருளின்  தன்மையை

உயிர்தன்மை உடம்புக்குண்டென உரைக்கும் உவமை பிழையென்றாள்    259

 

            நீலகேசியே,  ஒரு  பொருளிடத்திலுள்ள  இயற்கை  குணம்  மற்றொரு  பொருளுக்கு  இல்லை  என்று  கூறுகிறாய்.  அவ்வாறாயின்,  காய்ச்சப்பட்ட  இரும்பில்  உள்ள  வெப்பம்,  அந்த  இரும்பு  தோய்க்கப்படும்  நீரில்  சேருகிறது  அல்லவா,  அதனால்  உன்  கருத்து  குற்றமுடையது  தானே  என்றான்  மொக்கலன்.

            உயிர்  உடம்புடன்  கூடி  நின்று,  பொருட்களைப்  பார்த்தலும்,  உணர்தலுமாகியவற்றை  செய்கிறது.  அவ்வுடம்பின்கண்  நின்ற  உயிரின்  தன்மையை,  உடம்புக்கும்  உண்டு  என்று  கூறுவதைப்  போன்றது,  நீ  கூறும்  மேற்கோள்.  உன்னுடைய  உதாரணமே  பிழையாகும்  என்றாள்  நீலகேசி.

 

நூல்  இரும்பாகாது  என்கிறாய்  பால்  தயிராக  மாறும்  என்கிறாய்

முரண்பாடான  உன்  உரையை  மூதறிஞர்  ஏற்கார்  என்றான் மொக்கலன்

பொருள்களின்  தன்மை  என்றும்  தனக்குரிய  மாற்றத்தையே  பெரும்

பொருளனைத்தும் மாறும் என்று  பித்தனாய்  பிதற்றாதே  என்றாள்  கேசி 260 

 

            நீலகேசியே,  நூல்  இரும்பாக  மாறாது  என்று  கூறுகிற  நீ,  பால்  தயிராக  மாறும்  என்பதை  ஏற்றுக்கொள்கிறாய்.  இந்த  முரண்பாடன  உரை,  பித்துப்  பிடித்தவர்  உரையைப்போல்  இருக்கிறது.  அறிவுடைய  எவரும்  இதை  ஏற்கமாட்டார்கள்  என்றான்  மொக்கலன்.  பொருள்கள்  தமக்கே  உரிய  மாற்றங்களைப்  பெறுவதற்கான  காரணங்களைப்  பெற்றுள்ளன.  அத்தகைய  செயல்பாட்டால்,  பொருள்கள்,  ஒன்று  பிறிதோன்றாய்  மாறக்கூடும்  என்று  நான்  கூறுகிறேன்.  பைத்தியம்  போன்று,  எல்லா  பொருள்களுமே  ஒன்று  பிறிதொன்றாய்  மாறும்  என்று  நான்  கூறவில்லை  என்றாள்  நீலகேசி.

                                   

நற்தவம் செய்வோர்  நல்லுயிரும்  எதிர்காலத்தில்  இல்லையாதலால்

இக்காலத்தில் உள்ள ஒரு பொருள் பிறிதொரு காலத்திலில்லை என்கிறாய் 

நம்  உடலை  வருத்திக்  கொண்டு  நல்லொழுக்கம்  காத்தல்  வீணேயாகும்

நாங்கள்  நவிலும் கணபங்கங்கள் நல் தத்துவமே என்றான் மொக்கலன்            261

 

            நீலகேசியே,  நீ  உன்னையே  புகழ்ந்து  கொண்டு,  ஒரு  பொருள்  ஒரு  இடத்தில்  உள்ளது,  அதே  நேரத்தில்  அப்பொருள்  பிரிதொரு  இடத்தில்  இல்லையென்கிறாய்.  நல்ல  உயர்ந்த  தவம் செய்யும்  நல்லதொரு  ஆன்மா,  எதிர்காலத்தில்  இல்லையென்றால்,  நாம்  உடலை  வருத்திக்  கொண்டு  தவம்  செய்து,  நல்லொழுக்கத்தை  காப்பது  வீணேயாகும்  அல்லவா.  ஆனால்  நாங்கள்  கூறும்  கணபங்கங்களின்  தத்துவமே  சிறந்த  தத்துவம்  ஆகும்  என்றான்  மொக்கலன்.

 

உடல்  வருந்தும் தவத்தின் போதும்  உயரிய விரதம் காக்கும் போதும்

மன மயக்கம்  அடையா போதும்  நல்லொழுக்கப் பயன்களினாலே

விண்ணுலகில்  தேவனாய் பிறந்து  விரும்பிய சுகம் நுகரும் போதும்

அவ்வுயிர்கள் அக்காலத்தில் நிற்கும் அதுவே சமண தத்துவம் என்றாள்        262

 

            ஒருவன்  மனதில்  எந்த  வித  மாசும்  இல்லாமல்,  ஈகை  குணம்  நிரம்பியவனாய்,  அறம்  செய்கின்ற  காலத்தும்,  அதன்  பயனை  அவன்  நுகர்கின்ற  காலத்தும்,  குற்றம்  கொல்லாமை  முதலிய  விரதங்களை  மேற்கொண்டு,  உடல்  துன்பம்  உற்ற  காலத்தும்,  அவன்  உயிர்  உடலை  விட்டு  பிரிந்து  வானுலகம்  சென்ற  காலத்தும்  நிலைபெற்ற  உயிர்  அதுவே  தான்.  ஆகவே  நீ  கூறிய  குற்றம்  எமக்கில்லை.  தானத்தின்  உண்மையான   பயனையும்,  உயிரின்  இயல்பையும்  உணர்வாயாக  என்றாள்  நீலகேசி.

 

வீட்டுலகம்  சென்ற உயிர்கள்  மீண்டும்  பிறவா உயிர்கள் என்றாய்

அவ்வுயிர்கள் பிறப்பைத் தடுக்கும்  ஆற்றலுண்டா  அவ்வுலகிற்கு

வினை முன்பு செய்த உயிர்களே  வினைகளை முழுதும் நீக்கி விட்டு

அவ்வுலகில் இருக்கிறதெனில் அவ்வினைகள் உயிரையடையுமென்றான்   263

 

நீ  வீட்டுலகம்  என்பது,  மீண்டும்  இங்கு  வந்து  பிறவாத  உயிர்கள்  சென்று  தங்கும்  இடம்  என்று  கூறுவாயாகில்,  அந்த  வீட்டுலகிற்கு  அவ்வுயிர்கள்  மீண்டும்  இங்கு  வந்து  சேராமல்  தடுக்கும்  ஆற்றல்  உள்ளதோ.  அல்லது  மிகுதல்  இல்லாத  வினைகளின்  அழிவே  மீண்டும்  பிறப்பாததற்கு  காரணம்  என்று  சொல்கிறாயா.  அல்லது  முன்பு  வினை  செய்தவனே,  அவ்வினையை  நீக்கி  விட்டு,  அவ்வீட்டுலகில்  இருக்கிறான்  என்றால்,  அவ்வினைகள்  தாமும்  அவனை  அடையும்  என்றான்  மொக்கலன்.

 

மீண்டும்  பிறவாமல் பிறக்கும்  பிறப்பொன்றை  வீடென்று உரையேன்

வீட்டுலகம் மீண்டும் பிறவாமையை  செய்திடும்  என்றும் சொல்லேன்

மனம்,மொழி, மெய்களின் செயலால்  மண்டிடும் வினைகள் உயிரில்

வினைகளின்  தன்மைக்கேற்ப பிறப்பது  தன்னால்  அமையும்  என்றாள்            264

 

            மீண்டும்  பிறவாமல்  பிறக்கின்ற  பிறப்பு  ஒன்றை  வீடு  என்று  நான்  சொல்லவில்லை.  வீட்டுலகம்  மீண்டும்  பிறவாமையை  செய்யும்  என்றும்  நான்  சொல்லவில்லை.  ஒருவனோடு  பொருந்துவதற்கு  ஏற்ற  வினைகள்,  தாமே  அவனை  அடையும்  என்றும்  சொல்லவில்லை.  மாறாக  மனம்,  மெய்,  மொழி  இவைகளின்  செயலால்  உண்டாகும்  வினைகளே  உயிரில்  கலந்து  அவனை  மீண்டும்  மீண்டும்  பல  பிறவிகளில்  வீழ்த்துகின்றன  என்பதே  எம்  கொள்கை  என்றாள்  நீலகேசி.

 

பொருள்களின்  அறிவை அருகன் ஐம்பொறிகளால்  அறியவில்லை

மூன்று கால, உலகங்களையும்  முற்றும் ஒன்றாய் உணர்ந்தவன் என்றாய்

இளமையும், மூப்பும், சாக்காடும்  இணைந்து  ஒன்றாய் வருவதுமில்லை

நும் இறைவன் ஒரே நேரத்தில் முழுதுணர்  அறிவுள்ளோனல்ல  என்பேன்      265

 

            நங்கையே  நீலகேசி,  உம்  அருகன்  பொருள்களைப்  பற்றிய  அறிவை,  ஐம்புலன்களால்  அறிவது  இல்லை  என்கிறாய்.  அவன்  ஒரே  நேரத்தில்  மூன்று  காலங்களையும்,  மூன்று  உலகங்களையும்  முற்றும்  உணர்ந்தவன்  என்கிறாய்.  ஒருவனுக்கு  இளமையும்,  முதுமையும்,  சாக்காடும்  ஒரே  நேரத்தில்  வருவது  இல்லையே.  அதே  போல் உன்னுடைய  இறைவன்  ஒரே  நேரத்தில்  முழுதுணர்  அறிவுடையவன்  என்று  நாங்கள்  ஏற்றுக்கொள்வது  இல்லை  என்றான்  மொக்கலன்.

 

தேர்ந்த  தவ முனிவர்களும்  தேவர்  உலக  அமரர்களும்

முழு ஞானம்  பெற்றவர்களாவர்  முக்காலமும்  உணர்ந்தவர்களாவர்

துவராடை  உடலில்  போர்த்தி  துறவறம்  கொண்டிருந்தாலும்

அறியாமை  என்னும்  ஆடையால்  அறிவினை மூடினாய்  என்றாள்                266

 

            தவத்தில்  உயர்ந்த  முனிவர்களும்,  தேவர்  உலகத்து  அமரர்களும்  தமது  ஞானத்தால்  மூன்று  காலங்களையும்,  பொருள்களையும்  அறிந்து  கூறும்  திறம்  படைத்தவர்கள்  என்பதை  அறிவோம்.  உலகங்கள்  மூன்றையும்  அறிந்த  ஞானம்  பெற்ற  எம்  இறைவனை  நீ  உணரவில்லை.  நீ  உடலை  மட்டும்  துவராடையால்  போர்த்திக் கொள்ளவில்லை.  உன்  உள்ளத்தையும்  அறியாமை  என்னும்  ஆடையால்  போர்த்திக்  கொண்டுள்ளாய்  என்றாள்  நீலகேசி.

 

எல்லையற்ற  பெரும்  அறிவினால்  எல்லையற்ற பொருள்களையறிவான்

எல்லையின்றி  அறியும்  அறிவை  எவ்வாறு  பெறப்படுமென  கேட்டான்

 நாள்தோறும்  பலவிடங்களில்  ஞாயிறு  தரும்  பேரொளி போல

கடையிலா பெரும் ஞானத்தினால்  கண்டிடுவான் ஒரே நேரத்திலென்றாள் 267

 

            எல்லையற்ற  பெரும்  அறிவினால்,  எல்லாகாலங்களிலும்,  எல்லா  இடங்களிலும்  உள்ள  பொருள்களையும்,  அவற்றின்  இயல்புகளையும்,  ஒருங்கே  எப்படி  அறிய  முடியும்  உன்  இறைவனால்  என்று  கேட்டான்  மொக்கலன்.  தினந்தோறும்  பல  இடங்களில்  சூரியன்  தன்னுடைய  பேரொளியை  வழங்குவது  போல்  தான்,  கடையிலாப்  பெரும்  ஞானத்தினால்,  அனைத்தையும்  எம்  இறைவன்  ஒரே  நேரத்தில்  அறிந்து  கொள்வான்  என்றாள்  நீலகேசி.

 

கதி நான்கு  பிறப்பினை வென்று  கடையிலா ஞானம்  பெற்று

பண்ணிரு கணங்கள்  சூழ நின்று பொன்னெழில் சமவசரண  மையத்தில்

அசோக  மரத்தின் அடியின் கீழே  முக்குடை நிழலில்  வீற்றிருக்கும்

அருகன்  என  போற்றும்  எங்கள்  இறைவன்  மீது  எக்குறை கண்டாய்            268

 

நால்  வகைப்  பிறப்புகளையும்  ஒழித்து,  தன்னை  ஒப்பார்  யாரும்  இல்லாத  கடையிலா  ஞானத்தைப்  பெற்று,  பண்ணிருகணங்கள்  சூழ  நின்று,  எல்லாதிசைகளிலும்  வாழ்த்திப் போற்றப்படுபவனாய்,  பொன்னாலான  மதில்கள்  சூழ்ந்த  சமவசரணத்தின்  மத்தியில்  அசோகமரத்தின்  கீழ்,  முக்குடை  நிழலில்  அமர்ந்திருப்பவனே,  அருகன்  என்று  நாங்கள்  போற்றும்,  எங்கள்  இறைவனிடம்  என்ன  குறையை  நீ  கண்டாய்  என்றாள்.

 

நீலகேசி  மொக்கலனுக்கு  அருகன்  சிறப்பைக்  கூறுதல் :

 

மூவுலகுக்குத்  தந்தையும்  ஆகி  முறையான  உயர்  தவநெறி  அருளி

உயரிய  தத்துவங்களையெல்லாம்  உலகோரை உணர்ந்திடச் செய்து

யாவர்க்கும்  பெருந்தலைவனுமாகி  எல்லையற்ற பெரும் ஞானத்தோடு

நின்  மனதில்  குறைந்தவனான எம் அருகனின் புகழினை கேள் என்றாள்       269

 

            சரியான  கருத்துக்களைக்  கூறி,  மொக்கலனை  வெற்றிகொண்ட  நீலகேசி,  அவனுக்கு  அருகனின்  சிறப்புகளை  எடுத்துக்  கூறினாள்.  மூவுலகுக்கும்  தந்தையானவனும்,  உயரிய  தத்துவத்தை  கேட்டோர்  உணருமாறு  செய்தவனும்,  உயர்ந்த  தவநெறிகளை  அருளியவனும்,  யாவர்க்கும்  பெருந்தலைவனாகி,  எல்லையற்ற  ஞானத்தை உடையவனும்,  உன்  மனதில்  மட்டும்  குறையுள்ளவனான  எம்  அருகனின்  புகழை  கூறுகிறேன்  கேள்  என்றாள்  நீலகேசி.

 

பொன்னெழில்  மதில்கள்  சூழ்ந்த பொன்னாசன சமவ சரணத்திலமர்ந்து

எண் திசை வாழ் உயிர்களுக்கும்  எடுத்து  இயம்பும்  நல்லறத்தாலே

பகை, பசி, பிணிகள்  விலகும்  பட்ட மரம்   பசுந்தளிர்  துளிரும்

பாழ்நிலமும்  விளைச்சலைத்  தரும்  பெருமகிழ்வில் உயிரினம் வாழும்            270

 

            எம்  இறைவனாகிய  அருகன்,  சமவசரணத்து  அறம்  உரைக்க  ஸ்ரீவிகாரம்  செய்யுங்கால்,  எட்டு  திசைகளிளும்  உள்ள  உயிர்களுக்கும்  பகையுணர்வு,  பசி,  பிணி  முதலிய  பல்வகை  துன்பங்களும்  விலகிடும்.  மரம்  முதலான  ஓர்  அறிவு  உயிர்கள்  தளிர்  ஈந்து,  தழைத்து,  மலர்கள்  மலர்ந்து  நிற்கும்.  பாழ்பட்ட  நிலங்களும்,  மேட்டு  நிலங்களும்  நல்ல  விளைச்சலைத் தரும்.  பிற  நலங்கள்  யாவும்  பெருகியதால்  உயிரினங்கள்  பெரிதும்  மகிழ்வடையும்  என்றாள்  நீலகேசி.

 

எண்வினைகள் அழியப்  பெற்று  எண் குணங்கள்  உடைய அருகன்

உயிர், உயிரற்ற பொருள்களும்  தருமம்,  அதருமம்,  ஆகாயம்  என

ஐந்துவகை  அத்திகாயங்களையும்  தோன்றி, அழிந்து நிலைத்த தன்மையும்

உள்ளங்கை நெல்லிக் கனியென உணர்ந்திருக்கும்  சிறப்புடையவன்            271

 

            எட்டு  வகையான  வினைகள்  முற்றுலும்   அழிய,  எட்டு  வகை  உயர்ந்த,  சிறந்த  குணங்களை  உடைய  எம்  அருகன்,  உயிர்,  உயிரல்லாதவை,  தருமம்,  அதருமம்,  ஆகாயம் ஆகிய  அத்திகாயங்களையும்,  தோன்றுவனவும்,  அழிவனவும்,   நிலைத்த  தன்மையுடையனவுமாகிய  குற்றமற்ற  பல்வகைப்  பொருள்களையும்,  உள்ளங்கையில்  வைத்த  நெல்லிக்கனியை  தெளிவாக  அறிவதைப்  போன்று,  முழுதும்  ஒருங்கே  அறியும்  சிறப்புடையவன்  ஆவான் என்றாள்  நீலகேசி.

 

ஐந்து  சிறந்த  பொறிகளிருந்தும்  அதனால் பொருளை அறிந்தவனில்லை

பொருள்களின் நிகழ்வினையெல்லாம் அக்கால மட்டும்  உணர்ந்தவனில்லை

மாவுலக  மக்கள்  விழிகளில்  மறைந்து  நிற்கும்   பொருள்களைக்  கூட

பொருளையும்  காலத்தையும்  ஒன்றாய் உணர்ந்திடும் ஞானியே அருகன்        272

 

            என்  இறைவனுக்கு  தலைசிறந்த  ஐந்து  பொறிகள்  இருந்தும்,  அதனால்  பொருள்களின்  இயல்பை  அறிந்தவனில்லை.  உலகத்து  பொருள்களின்  நிகழ்வினை,  அந்நிகழ்வு  நடைபெறும்  காலம்  மட்டும்  அறிபவனில்லை.  முக்காலமும்  உணர்ந்தவன்.  இந்த  உலகமக்கள்  கண்களுக்கு  மறைந்து  நிற்கும்  பொருள்கள்  கூட  அவன்  அறிவிற்கு  மறைந்தவையல்ல.  எல்லா  பொருள்களையும்  ஒரே  காலத்தில்,  ஒருங்கே  முழுதும்  உணரும்  ஞானம்  உள்ளவன்  எம்  இறைவன்  என்றாள்.

 

தீவினைப்  பிறப்புடைய  உயிர்க்கு  தீவினைகளை வெல்லும்  முறையையும்

திவ்யத் தொனியால்  அளித்திடும்  சிறப்பினையுடையோன் எம் அருகன்

மலர் மழை மிகவும்  பொழிந்து  மணக்கின்ற சுண்ணங்கள் தூவிட

அமரர்கள்  வாழ்த்தொலி இசைக்க அங்கு விளைவதே வீடுபேறென்றாள்            273

 

            துன்பம்  விளைகிற  பிறப்பினை  உடைய  உயிர்களுக்கு,  அத்தீவினைகளை  வெல்லும்  முறையையும்,  சிறப்பைத்தருகின்ற  வீடுபேறு  அடையும்  முறையையும்,  திவ்வியத்தொனி  என்ற  தன்  திருமொழியால்  வழங்கும்  சிறப்புடையவன்.  எம்  அருகன்  எழுந்தருளிய  இடத்தில்,  மலர்  மழை  பொழியும்.  நறுமணம்  வீசும்  சுண்ணப்பொடிகள்  சிறு  தூறலாய்  வீசும்.  அமரர்களின்  இன்னிசை  வாழ்த்தொலிக்கள்  இசைக்கும்.  அங்கு  எரிவதோ  மணிவிளக்குகள்  தான்.  எம்  அருகனின்  இச்சிறப்புகளோடு  விளைவதே  வீடுபேறு  ஆகும்  என்றாள்  நீலகேசி.

 

அருகனின் திவ்வியத் தொனியால்  அரசரும்  அமரரும்  மகிழ்வர்

அம்மொழியை  கேட்கும்  அனைத்தும்  அதனதன்  மொழியில்  உணரும்

முரசொலி போல் ஒலிக்கும் உரையால்  மெய்பொருள் முழுதும் அறிவர்

மெய்பொருள் அறிந்த உயிர்கள்  மேன்னிலை  அடையும்  என்றாள்                274

 

            அருகன்  அருளும்  திவ்வியத்தொனி  என்ற  திருமொழியால்  அரசர்களும்,  அமரர்களும்  மகிழ்ச்சி  அடைவார்கள்.  அம்மொழியை  கேட்கும்  பல்வகைப்பட்ட  மற்றவர்களும்,  மற்ற  உயிர்களும்  தம்  தம்  மொழியில்  அதை  உணர்ந்து  மனதில்  நிலைத்த  இன்பத்தை  அடையும்.  அம்மொழி  முரசொலிபோல்  ஒலிப்பதால்,  அனைவரும்  மெய்ப் பொருளை  நன்கு  உணர்ந்து  கொள்வர்.  மெய்ப் பொருளை  முற்றும்  அறிந்த  உயிர்கள்  தம்  வினைகள்  அழிந்து  மேன்மையான  நிலையை  அடையுமென்றாள்.

 

இருவினைகள் இருளை அழிக்கும்  இறைவனின்  திரு  இணையடிகள்

அருகனின் ஞானஒளியோ  ஆதவனின் பேரொளியாய்  விரியும்

கொடிய  துன்பங்கள் அழிக்கும்  மெய்யறிவை உயிர்கள்  பெறும்

இல்லறத்  துன்பங்கள் ஒழிந்து  இதயத்தில் மெய் ஞானம்  அமரும்                  275

 

            மெய்மை  பொருந்திய  இறைவனின்  இணையடிகள்  இரு  வினையாகிய  இருளை  அழிக்கும்.  அருகனின்  ஞான  ஒளியோ,  பேரொளி  வீசும்  பரிதியின்  ஒளியைப்  போல்  திகழும்.  கொடிய  துன்பங்கள்  எல்லாம்  அழிந்து,  அனைத்து உயிர்களும்  மெய்யறிவைப்  பெறும்.  இல்வாழ்க்கையின்  அனைத்து  துன்பங்களும்  அழிந்து  இன்பம்  கிட்டும்.  இதயத்தில்  மெய் ஞானம்  பெருகும்  என்றாள்  நீலகேசி.

 

இத்தகைய  மாண்புகளுடைய  இறைவன்  எம்  அருகன்  ஒருவனே

அருகனின்  இரு  திருவடிகளில்  அன்றலர்ந்த  மலர்களைத்  தூவி

பொருந்திடும்  வாழ்த்துக்கள்  பாடி  பொய்யற்ற  வழிபாடுகல்  செய்ய

இருவினைகளின்  துன்பம்  நீங்கி  எய்துவர்  பேரின்ப  வீட்டினை                     276

 

            இத்தகைய  மாண்புகளை  உடையன்  எம்  இறைவன்  அருகன்  ஒருவனே.  அவனுடைய  திருவடிகளில்  மலர்களைத் தூவி,  பொருத்தமான  வாழ்த்து  மொழிகளால்  பொய்யில்லாத  வழிபாடு  செய்பவர்களே  தம்  இருவினைகளும்  அழிந்தொழிய,  குற்றமற்ற  வீட்டின்பத்தை  அடையும்  தன்மையுடையவர்கள்  ஆவர்  என்றாள்  நீலகேசி.

 

மொக்கலன்  நீலகேசியை  வினவுதல்  :

 

அருகனின்  சிறப்பை  உரைத்த  அருந்தவசி  நீலகேசியை நோக்கி

இறைவனின்  இயல்பு தன்மையும்  பொருள்களின் குணயியல்பையும்

முறைப்படி விளக்கிய உம் கூற்று  முற்றிலும் உண்மையென உணர்ந்தேன்

இவ்விரண்டுக்கும்  மேலான வீட்டின் இயல்பினை எனக்குரை என்றான்            277

           

அருகனின்  சிறப்பைக்கூறிய  நீலகேசியை  நோக்கி  மொக்கலன்,  இறைவனின்  இயல்புகள்  இத்தன்மையென  என்றும்,   பொருள்களின்  இயல்புகள்,  குணங்கள்  இத்தன்மையென  என்றும்,  முறைப்படி  விளக்கிக்  கூறிய,  உம்  கூற்று  முற்றிலும்  உண்மையே  ஆகும்.  இவ்வாறு  நீ  கூறிய  இரண்டிலும்  வேறான  வீட்டின்  இயல்பை,  நீ  ஆராய்ந்தறிந்த  முறையில்  எனக்கு  கூறு  என்று  கேட்டான்  மொக்கலன்.

 

நீலகேசி  வீட்டின்  இயல்பை  கூறுதல்  ;

 

வெந்திட்ட  விதைகள்  என்றும்  வேரூன்றி  முளைப்பதும்  இல்லை

நாலிரண்டுறுப்புடை உடல் உயிர்  நால்கதியில்  பிறப்பதுமில்லை

உடல்  விட்டு  பிரிந்திட்ட உயிர்  பிறவாப்  பெரும்  நிலையடைந்து

எண்குணச்  சிறப்புகளோடு  இருக்கும்  நிலையே  வீடுபேறென்றாள்              278

 

            விதைகள்  வெந்திட்ட  பின்னர்  என்றும்  வேர்  விட்டு  முளைப்பது  இல்லை.  அவ்வாறே,  எட்டு  உறுப்புகள்  அடங்கிய  உடம்பில்  அடங்கி  நின்ற  உயிரும்,  மீண்டும்  நான்கு  கதிகளில்  பிறப்பதும்  இல்லை.  உடலை  விட்டு  உயிர்  பிரிந்த  பின்,  சித்த  உலகில்  அழிவற்ற   கடையிலா  அறிவு  முதலிய  எட்டுவகைச்  சிறப்புகளுடன்,  நிலைத்து  நிற்கும்  நிலையே  வீடுபேறு  என்று  நீ  அறிந்துகொள்  மொக்கலா  என்று  கூறினாள்.

 

மொக்கலன்  கூற்று  :

 

மெய்யான வீடுபேறின் தன்மையை  மிகப் பொருத்தமாய்  எடுத்துரைத்தாய்

தாழ்வுறும்  புத்தனின்  இயல்பால்  தாய்  போன்ற  உனை  நகைத்தேன்

காண்பவரை  வியக்கச்  செய்யும்  கபிலபுரம்  என்னும்  நகரில்

பிடக நூலைக்  கற்றுத்  தரும்  புத்தனை  நீ  வெல்வாய்  என்றான்                    279

 

            நல்லநெறியை  உடைய  நீலகேசியே,  மெய்யான   வீடுபேற்றின்  தன்மையை,  மிகப்  பொருத்தமாக  எடுத்து  சொன்னாய்.  இவ்வாறான  வீடுபேற்றின்  தன்மையை  பாழாக்கிய  புத்தனின்  இயல்பு  ஏற்று,  தாய்  போன்ற  உன்னை  எள்ளி  நகையாடினேன்.  காண்பவர்  வியந்து  பாராட்டும்  கபிலபுரம்  நகரில்,  பிடகநூலைக்  கற்றுத்தரும்  புத்தனை  நீ  வெல்வாயாக  என்றான்  மொக்கலன். 

 

நீலகேசி  கபிலபுரம்  செல்லுதல்  :

 

அருளெனும்  பெருஞ்செல்வத்தோடும்  அறங்களின்  நல்  அறிவினோடும்

மெய்பொருள் அனைத்தும் அறிந்தவரை மெய்நெறியில் நிற்கச் செய்தும்

அறிவில்  மிகச் சிறந்தவளாகி  அருகன்  நெறி  பரப்பும்  நெறியில்

இருள்  அழிக்கும்  ஞாயிறு  போல   எழுந்தனள்  கபிலபுரம்  செல்வதற்கு            280

 

            அருள்  என்னும்  செல்வத்தையுடையவளும்,  அறத்தை  நன்கு  அறிந்தவளும்,  மெய் நெறியை  உணராதவர்களை  மெய்நெறியில்  நிற்குமாறு  செய்வதைத்  தன்  கடமையாக  கொண்டவளும்,  அறிவில்  மிகச்  சிறந்தவளுமான  நீலகேசி,  இருளை  அகற்றும்  சூரியன்  எழுந்ததைப்  போன்று  கபிலபுரம்  நோக்கி  புறப்பட்டாள். 

 

 

                        மொக்கல  வாதச்  சருக்கம்  முற்றிற்று.

 

           

 

5. புத்த  வாதச்  சருக்கம்.

 

பசுமையின்  பாய்  விரித்தாடும்  பரந்த  வயல்  மருதநிலமும்

கருமணலை  கடை விரித்தாற்  போல்  கடுந்துயர்  தரும் பாலைநிலமும்

ஞாயிறின்  கதிரொளி  நுழைந்திடா  நடுங்கிடும்  காடுடை முல்லையும்

குறிஞ்சி  நிலத்தையும்  பார்த்து  கொடி  அவள்  கபிலபுரம்  வந்தாள்              281 

 

            பதுமபுரத்தில்  இருந்து  புறப்பட்ட  நீலகேசி,  பயிர்களின்  பசுமையை  பாய்  போல்  விரிந்த,  பரந்த  வயல்களைக்  கொண்ட  மருத  நிலத்தின்  அழகையும்,  கருமணலை  நெடுக  பரப்பி  வைத்தது  போன்றும்,  கடும்  வெய்யிலால்  துன்பம்  தரும்  பாலைநிலத்தையும்,  நன்பகலிலும்  சூரிய  ஒளி  நுழைய  இயலாது  அடர்ந்து  வளர்ந்த  காடுகளை  உடைய  முல்லை  நிலத்தையும்,  மலைகள்  சூழ்ந்து  நின்ற  குறுஞ்சி  நிலத்தையும்  கடந்து,  கபிலபுரத்தை  அடைந்தாள்.

 

விண்முட்டும்  பெரு  மாளிகைகள்  முகில்  தவழும்  மலையை ஒக்கும்

மாளிகைமேல்  பறக்கும்  கொடிகள்  மலைவாழைத் தோப்பை ஒக்கும்

மலர்மாலை  அணிந்த  ஆடவர்  மலைமுழை  வாழ்  புலியை  ஒப்பர்

நன்மலர்கள்  சூடிய  நங்கையர்  நடனமிடும்  மயில்களை  ஒப்பர்                    282

 

            கபிலபுரத்தில்  இருந்த  மாளிகைகள்  விண்ணைத்தொடும்  அளவுக்கு  உயர்ந்து  மேகக்கூட்டம்  தவழ்ந்து  விளையாடும்  மலையைப்  போல்  இருந்தது.  அந்த  மாளிகையின்  மேல்  பறக்கும்  கொடிகளைப்  பார்க்கையில்,  மலைவாழைத்  தோப்பின்  தோற்றத்தை  நிகர்க்கும்.  மலர்மாலைகளை  அணிந்த  அந்நாட்டு  ஆடவர்கள்  மலைக்குகையில்  வாழும்  புலியினை  போல்  இருந்தனர்.  நறுமண  மலர்கள்  சூடிய  மங்கையர்கள்  நடனமாடும்  மயில்களைப்போல்  அழகுடன்  இருந்தனர்.  (முழை : குகை)

 

கடலில்  மிதக்கும்  தோணிகளோடும் பொருள் சுமந்த கப்பல்களோடும்

கண்கிட்டும் பொன்னெழிலோடு பூம்பொழிலெங்கும் வண்டுகள் பாடும்

செம்மீன்கள்  துள்ளி  பாய்வதினால்  செங்கழுநீர்  மலர் மொட்டுகள் மலரும்

துள்ளிடும் கயலால் குறுமுயலங்கு தளிரினை உண்ணாதரையினில் ஓடும்283

 

            அந்நகரின்  வெளியே  இருந்த  கடலில்,  பொருள்களை  சுமந்த  கப்பல்களும்,  வெண்ணலைகளின்  மேல்  ஆடியபடி  ஓடங்களும்  மிதந்து  நின்றன.  கண்டவர்கள்  நெஞ்சை  அள்ளும்  வனப்புடன்,  பொன்மலர்களென  பூத்து  குலுங்கும்,  பூவனத்தில்  வண்டுகள்  பாடித்திரியும்.  சிவந்த  மீன்கள்  துள்ளியும்,  பாய்ந்தும்  ஓடுவதால்   செங்கமல  மலர்  மொட்டுகள்  மலரும்.  மீன்கள்  துள்ளித்  திரிவதால்,  அதனைக்கண்டு  சிறுமுயல்கள்,  தளிர்களை  உண்ணாமல்  தரையில்  ஓடும்.

 

பிணந்தின்னும்  கழுகுகள் கூட்டமும்  பயம் தரும் பேய்களின் கூச்சலும்

துவராடை உடலில் போர்த்திய  துறவு கொண்ட பௌத்த  கூட்டமும்

புத்தார்கள் உண்ண  கொழுப்புடைய மான் ஆடுகளின் மண்டிய ஊனும்

எலும்புகள்  மிகவும்  நிறைந்துள்ள இடுகாடு  போல்  இருந்தது அங்கு             284

 

            பிணந்திண்ணும்  கழுகுகள்  கூட்டமும்,  பயத்தை  உண்டாக்கும்  பேய்கள்  கூச்சலும்,  காவி  உடைகளைப்  உடலில்  போர்த்திய  பௌத்த துறவிகளின்  கூட்டமும்,  அவர்கள்  சாப்பிடுவதற்கு  வேண்டிய  கொழுப்புகள்  அதிகம்  உள்ள  ஊன்,  மீன்,  ஆடு  முதலியவற்றின்  உடல்களும்  மிகுந்து,  பசையுடன்  கூடிய  எலும்புகள்  நிறைந்துள்ள  இடுகாடு  போல்  அந்த  இடம்  காட்சி  தந்தது.

 

நீலகேசி  மக்களை நோக்கி  கூறியது  :

 

நகர  வீதியில்  நடந்தாள்  நீலகேசி  நல்லறம் அங்கு நலிந்ததை கண்டாள்

புத்தன் போற்றிய புல்லறிவான  புலால் உண்ணும் போகத்தை சாடினாள்

உயிர்களை வதைத்து கொன்று  ஊனாக்கி விற்கும் கொடுமையை

உங்களின்  ஆசான்  புத்தனுக்கு  நீங்களும் உரைக்கா நிலைதானென்ன            285

 

            அந்நகரத்தின்  வீதியில்  நடந்து  சென்ற  நீலகேசி,  மக்கள்  மீண்டும்  மீண்டும்  பிறப்புகளை  எய்தி  துன்பத்தை  அடைகின்ற  அறிவுரைகளான,  புலால்  உண்ணும்  நெறியை  கண்டு  மனம்  வருத்தமுற்று,  சாடினாள்.  உயிர்களை  வதைத்து  கொன்று,  ஊனாக்கி  விற்கும்  கொடுமையை,  உங்கள்  ஆசான்  புத்தனுக்கு  நீங்கள்  ஏன்  எடுத்துக் கூறவில்லை  எனக்  கேட்டாள்.

 

பொருள் படைத்தோர் ஊனினை உண்ண  விலைகொடுத்து வாங்குகின்றனர்

பொருள் சேர்க்கும்  எண்ணமுடையோர் உயிர் வதைத்து ஊன் விற்கின்றனர்

பிற உயிர் நலம் கருதியே வாழும்  உங்கள் புத்தன்  அருளாளன்  என்றால்

ஊன் தின்ன மறுத்திருப்பான்  உயிர்களும்  இங்கு வாழ்ந்திருக்கும்                 286

 

            பொருள்  படைத்தோர்  ஊனினை  விரும்பி  உண்ண,  அதை  விலை  கொடுத்து  வாங்குகின்றனர்.  எனவே  பொருள்  ஈட்டும்  எண்ணம்  கொண்டோர்,  வலை  முதலிய  கருவிகளால்  உயிரைப்  போக்குகின்றனர்.  பின்  அதை  கடைவீதிகளுக்கு  கொண்டு  வந்து  விற்பனை  செய்கின்றனர்.  பிறன்  நலம்  கருதி  வாழும்  உங்கள்  புத்தன்  அருளுடையவன்  என்றால்,  ஊன்  உணவை  மறுத்திருக்க  வேண்டும்.  உயிர்களும்  இங்கு  வாழ்ந்திருக்கும்.

 

மண்ணுயிரெல்லாம் தன்னுயிரென  மனதினில்  எண்ணம்  கொண்டோன்

உயிர் வதைத்து ஊனை உண்ணல் உயர்ந்த அறம் என்றுரைத்தானோ

பிறர் கொன்று விற்கும் ஊனை  பொருள் கொடுத்து வாங்கி உண்ணல்

தீவினைகள்  உண்டாகாது என்ற  தலைவனை யான் காண்பேனென்றாள்         287

 

            மண்ணுயிரெல்லாம்  தன்  உயிர்  என்று  உரிமையோடு   கருதுபவன்,  ஆராயாமல்  யாதொன்றும்  கூறாதவன்  என்று  நீங்கள்  கூறும்  உம்  ஆசிரியன்,  உயிர்களை  வதைத்து,  ஊனாக்கி  உண்ணுவது  உயர்ந்த  அறம்  என்று  உரைத்தாரோ.  பிறர்  கொன்று,  அதை  ஊனாக  விற்பதை,  தீவினையாகாது  என்று  கூறும்  உங்கள்  தலைவனை  நான்  காணவேண்டும்  என்றாள்  நீலகேசி.

 

அரசமரத்தின் நிழலின்  அடியில்  அருமணிகள்  வீசிடும் ஒளியில்

மணமலர்கள் தூவிய மனையின்  மத்தியில் வீற்றிருந்த புத்தனை

மெய்பொருள் உணர்ந்த ஞானியேயென மென்னடி தொழுத மக்களை

ஆடையால் உடலை மூடிய அவன் அருளற்ற விழிகளுடனிருந்தான்                288

 

            அழகிய  வழுவழுப்பான்  அடிபாகத்தைக்  கொண்ட  அரசமரத்தின்  நிழலில்,  நன்மணிகள்  பலவும்  ஒளியை  சிந்திட,  மணம்  வீசும்  மலர்கள்  தூவப்பட்ட  மரப்பலகையின்  மத்தியில் அமர்ந்திருந்த  புத்தனை,  மெய்பொருளை  உணர்ந்த  முழு ஞானம்  கொண்ட  ஞானியே  என்று  போற்றி  வணங்கும்  மக்களை,  உடலை  ஆடையால்  மூடிய  அவர்,  அவரது  அருளற்ற  விழிகள்  உடன்  அமர்ந்திருந்ததைக்  கண்டாள்.

 

ஆகம  கருத்துக்களைக்  கூறுவது  அரிய  மூன்று  நூல்கள்  ஆகும்

சூத்திர, விநய,  அபிதம்ம பிடகமென  மெய்நூல்கள் என உரைத்தான்

கந்தங்கள்  ஐந்தும் பொருள்கள் கணப்போழுதில் தோன்றி மறையும்

ஆராய்ந்து கற்று  அறிந்தால்  அறிவு  மட்டுமே  பொருளென  ஆகும்                289

 

            அவ்வாறு  அமர்ந்திருந்தவனை  சிறந்த  நல்லாசிரியனே  என  உணர்ந்து,  அங்கு  அமர்ந்திருந்த  மாணவர்களுக்கு,  ஆகம கருத்துக்களைக்  கூறுவது  அரிய  மூன்று  நூல்கள்  ஆகும்.  அவை  சூத்திர பிடகம்,  விநய பிடகம்,  அபிதம்ம பிடகம்  என்று  கூறப்படும்.  மெய்நூல்கள்  ஆகும்  என்று  கூறினார்.  மேலும்  கந்தங்கள்  ஐந்தும்  பொருள்கள்  ஆகும்.  இக்கந்தங்கள்  ஒரு  கணப்பொழுதில்  தோன்றி  மறைவன  ஆகும்.  ஆராய்ந்து  கற்று,  தெளிந்தால்  அறிவு  மட்டுமே  பொருள்  ஆகும்  என்று  சொல்லிக் கொண்டிருந்தார்.

 

வழக்கு  வகையில்  ஆன்ம உண்டு  மெய்மை வகையில் ஆன்மா இல்லை

சொல்லொண்ணா இயல்புகளுடன் பொருளனைத்தும் உள்ளனவென்றான்

பித்தனை  போல்  தத்துவங்களை  பிதற்றுகின்ற  புத்தரே  கேட்பீர் – அவை

பொருத்தமற்ற  தத்துவங்களென  புகல்கிறேன்  கேள்  என்றாள் நீலகேசி        290

 

            வழக்கு  வகையில்  கூறுவதென்றால்  ஆன்மா  உண்டு  என்றாலும்,  மெய்மையில்  ஆன்மா  இல்லை.  கூற  இயலாத  இயல்புகளுடன்,  பொருள்கள்  அனைத்தும்  உள்ளன  என்று  பித்தனை  போல்  பகர்கின்ற  புத்தனே,  நீ  கேட்பாயாக,  நீ  கூறும்  உன்  தத்துவங்கள்  எல்லாம்  பொருத்தமற்றவை  என்றாள்  நீலகேசி

 

நீலகேசி  கூற்று  :

 

கந்தங்கள்  ஐந்துண்டு  என்றாய்  அறிவு  கந்தம்  ஒன்றைத்  தவிர

உருவ, நுகர்ச்சி, குறி, செய்கை நான்கும் இல்லையென விளக்கம்  தந்தாய்

அறிவினால் ஆன்மா உண்டென கூறி  அதுவும் இல்லை என்றுரைக்கிறாய்

பொருளியல்பை சொல்லயியலாதென பொருளற்ற விளக்கமேனென்றாள் 291

 

            நீ  சொன்ன  கந்தங்கள்  ஐந்தும்   உள்ளன  என்று  கூறினாய்.  பின்னர்  நீர்  கூறியவற்றுள்  உருவம்,  நுகர்க்ச்சி,  குறி,  செயல்  நான்கும்  இல்லை ,  அறிவு  கந்தம்  மட்டுமே  உண்டு  என்று  கூறுகிறாய்.  இந்த  விளக்கம்  எவ்வாறு  பொருந்தும்.  அறிவு  காரணமாக  அவ்விடத்தில்  ஆன்மா  உண்டென  கூறினாய்.  பின்  அவ்வாறு  ஏதும்  இல்லை  என்று  கூறுகிறாய்.  பொருள்களின்  இயல்பு  சொல்லப்பட  இயலாது   என்று  கூறும்  உன்  விளக்கம்  பொருளற்றது  என்றாள்  நீலகேசி..

 

புத்தன்  விடைகூறலும்  நீலகேசி  நகைத்தலும் :

 

கந்தங்கள்  ஐந்துண்டு  என்ற என்  கருத்தினை நீ ஏற்றுக்  கொண்டாய்

என் பிறக்  கருத்துக்களையும் ஏற்றவள் ஆகிறாய் இதனல் என்றான்

குட்டநோய்  உடல் முழுதும்  தாக்க குடுமி மயிர் குட்டமில்லையென

வாதிடும்  முழு  மூடனைப்  போல்  வாதமிடுகிறாய்  என  நகைத்தாள்            292

 

            நீலகேசி  கூறியதைக்கேட்ட  புத்தன்,  நான்  கூறிய  பல   தத்துவங்களை  நீ  பொருத்தமற்றவை  என்று  கூறினாலும்,  என்னால்  உரைக்கப்பட்ட  ஐந்தவகையான  கந்தங்கள்  உள்ளது  என்ற  என்  உரையில்  உனக்கும்  உடன்பாடு  என்பதால், என்  பிற  மேற்கோள்கள்  பொருத்தமானவை  என்பதை  உணர்வாயாக  என்றான்  புத்தன்.  அதற்கு  நீலகேசி,  நீர்  கூறுவது  எப்படி  இருக்கிறது  என்றால்  ஒருவன்  குட்டநோயால்  உடல்  முழுவது  தாக்கியிருக்க,  என்  குடுமி  மட்டும்  குட்டநோய்  இல்லாமல்  இருக்கிறது  என்று  வாதிடும்,  முட்டாளின்  வாதம்  போல்  உள்ளது  என்றாள்.

 

புத்தன்  தன்  தத்துவங்களை விரித்துரைத்தல் :

 

உருவ, நுகர்ச்சி,குறி, செய்கையுடன் அறிவென  கூடிய  கந்தம்  ஐந்து

ஆண், பெண், தன்மை  முதலியவை அடக்கமாம்  உருவ  கந்தத்தில்

நிலம், நீர்,நெருப்பு, காற்றுடன்,  ஒளி, சுவை, நாற்றம்,  ஊறு   என

நாலிரண்டும் உடன்  தோன்றி  உடன் கெடும் தன்மையாகுமென்றான்          293

 

            உருவம்,  நுகர்ச்சி,  அறிவு,  குறி,,  செயல்  ஆகிய  ஐந்து  கந்தங்களும்  பௌத்தம்  கூறும்  பொருள்களாகும்.  இதில்  உருவகந்தத்தில்,  வரையறை  இல்லாதனவாகிய,  ஆண்,  பெண்  தன்மை  முதலியவற்றைக்  குறிக்கும்.  மேலும்,  நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்று  ஆகிய  நான்கு  பூதங்களும்,  ஒளி,  சுவை,  நாற்றம்,  ஊறு  ஆகிய  நான்கு  நன்மை  தரும்  புலன்களும்,  ஆக  எட்டும்  ஒன்றை  ஒன்று  விட்டு  நீங்குவது  இல்லை.  இவை  உடன்  தோன்றி  உடன்  கெடும்  தன்மையுள்ளவையாகும்  என்றான்.

 

நிலம்  அது  வலியதாகியும்  பொறுத்தல்  அதன்  செயலுமாகும்

நீர்  அது  துவட்சியுமாகி  அயர்த்தல்  அதன்  செயலும்  ஆகும்

நெருப்பு  வெப்பம்  உடையதுமாகி  புலர்த்தல்  அதன்  செயலும்  ஆகும்

காற்று  இயக்கம்  கொண்டதாகி  உலர்தல்  அதன்  செயலும்  ஆகும்              294

 

            முன்  கூறப்பட்டவைகளில்  நிலமானது  மிகவும்  வலிமை  உடையதாகி,  பொறுத்துக்  கொள்வது  அதன்  செயலாகிறது.  நீரானது  திரவமாகி,  தேங்குதலும்,  ஒடுதலும்  அதன்  செயலாகிறது.  நெருப்பானது  மிகுந்த  வெப்பம்  உடையதாகி,  எரிப்பது  அதன்  செயலாகிறது.  காற்று  ஆரவாரத்துடன்  இயக்கம்  கொண்டு,  உலர்த்துவது  அதன்  செயலாகிறது.

 

நுகர்ச்சி  கந்தம்  இன்பம்  துன்பம்  இரண்டும்  கலந்த  சமநிலையாகும்

நல்வினை, தீவினை, இரண்டும் கலந்தது மூவகையுடையது நுகர்ச்சியாகும்

ஐம்பொறியோடு  மனதை சேர்த்து   அறுவகையாகும்  அறிவு  கந்தம்

அறுவகை அறிவால்  பெறுவது தான்  குறி கந்தம்  என்றான்  புத்தன்              295

 

            நீலகேசியே  மேலும்  கேள்,  நுகர்ச்சி  கந்தம்  என்பது  இன்பநுகர்ச்சி,  துன்பநுகர்ச்சி,  இவை  இரண்டும்  கலந்த  சமநிலை  என  மூன்று  வகைப்படும்.  இந்த  மூன்றும்  நல்வினை,  தீவினை,  மற்றும்  இரண்டின்  கலப்பாலும்  உண்டாகும்.  ஐம்பொறிகளோடு  மனதையும்  சேர்த்து  ஆறு  வகைகளும்  அறிவுகந்தம்  ஆகும்.  இந்த  ஆறுவகை  அறிவினால்  பெறப்படுவது  தான்  குறிகந்தமாதலால்,  ஆறுவகைப்படும்  என்பதே  என்  கருத்து  ஆகும்  என்றான்  புத்தன்.

 

நல்வினை, தீவினைகள் இரண்டும்  பல்வேறு  வகையால் சேர்ந்திடும்

மனம், மொழி,  உடல்களினாலே  மயக்கத்தில்  இருவினை அமையும்

இவ்வைந்து  கந்தங்களும்  கணம் தோன்றி  கணத்தில்  அழியும்

தோன்றி  அவை  கெட்டிடும் போது  சுடர் ஒளியின்  நுனியினை ஒக்கும்            296

 

            நல்வினை,  தீவினை  என்பன  பல்வேறு  வகைப்படும்.  அவ்விரு  வினைகளும்  மயக்கம்  உடைய  மனதால்,  மொழியால்,  உடலால்  என  மூன்று  வகையில்  அமைவன.  இந்த  ஐந்து  கந்தங்களும்  ஒரு  கணத்தில்  தோன்றி,  உடனே  அக்கணத்துக்குள்ளேயே  அழியும்  தன்மையுள்ளவை ஆகும்.  அவை  தோன்றும்  போதும்,  அழியும்  போதும்,  ஒலிபொருந்திய  விளக்கின்  நுனியை  போன்று  இருக்கும்  என்றான்  புத்தன்.

 

ஐந்து  கண கூட்டமைப்பிற்கு  உயிர்  என்ற பெயரும்  அமையும்

துன்பங்கள்  நுகரும் உயிரே  வழக்கு  வகையில்  உள்ளது  ஆகும்

உண்மையில்  கூறும்  இடத்து உயிர் என்ற பொருள்  ஒன்றில்லை

உணர்ந்துகொள்  நீலகேசியென  உடையணிந்த  புத்தன்  சொன்னான்      297

 

            கையில்  உள்ள  ஐந்து  விரல்களைக்  கூட்டிப்பிடிக்கும்  போது  கைபிடி  என்று  கூறுவோம்.  அவ்வாறே,  ஐந்து  கந்தங்களும்  சேர்ந்த  கூட்டத்திற்கு  உயிர்  என்று  கூறப்படும்.  அவ்வுயிரே  துன்பங்களை  நுகருகிறது.  அதனால்  உயிர்  என்பது  வழக்கு வகையில்  அமைகிறது.  ஆனால்  உண்மையில்  கூறுமிடத்து  உயிர்  என்றொரு பொருள்  இல்லை  என்பதை  நீ  உணர்ந்து  கொள்  நீலகேசி  என்று  உடையணிந்த  புத்தன்  சொன்னான்.

 

ஐந்துவகை  கந்தங்கள்  என்றும்  ஐயமின்றி  நிலையற்றனவாம்

அருவருப்பும்  துன்பமும்  தரும்  உயிர்  என்ற  பொருளும்  இல்லை

இந்நான்கு  கருத்தும்  உண்மை உணர்ந்து  செய்யும் செயல்களெல்லாம்

பற்றுகளை  அறவே  அறுத்து  வீட்டினை  தரும்  என்றான்  புத்தன்                   298

 

            ஐந்துவகையான  கந்தங்களும்  சந்தேகத்திற்கு இடமில்லாமல்  நிலையில்லாதவைகள்.  துன்பம்  தருபவைகள்.  அருவருப்பு  மிகுந்தவைகள்.  உயிர்  என்ற  பொருளும்  இல்லை  என  உணருகின்றவர்கள்,  இந்த  நான்கு  கருத்துக்களும்,  உண்மையானவை  என்று   நம்புகிறவர்கள்,  எந்த  செயல்  செய்தாலும்,  அவற்றினிடத்து  உள்ள  பற்றுகளை  அறுத்து,  வீடுபேறினை  அடைவர்  என்றார்  புத்தன்.

 

நீலகேசி  புத்தன்  மெய்காட்சிகளை  மறுத்தல்  :

 

ஒக்கத்தோன்றி  ஒக்ககெடும்  ஐந்து  கந்த  பிண்டங்களெல்லாம்

பிரியாமல்  இருக்கும்  குணமுடைய பொருள் ஒன்று  இருக்க வேண்டும்

பிரிந்திடும்  தன்மைகள்  என்று  பிதற்றலில்  நீர்  கூறுவாயாகில்

கைவிரல்  பிரிந்து  நிற்பது போல்  கண்ணுக்கும்  தோன்றல் வேண்டும்            299

 

            ஐயனே,  நீ  கூறிய  ஐகந்த  பிண்டங்கள்  தனித்தனியே  பிரித்து  கூறப்படுபவைகள்  அல்ல (  ஒக்கத்தோன்றி  ஒக்கக்  கெடும் )  என்று  உன்னால்  சொல்லப்படுவதால்,  அவைகள்  பிரியாமல்  இருப்பதற்கு  காரணமான  குணத்தையுடைய  ஒரு  பொருள்  இருந்தாக  வேண்டும்.  அக்குணத்தால்  தான்  அவை  பிரியாமல்  இருக்கவேண்டும்.  அவ்வாறு  இல்லை  என்று  நீர்  கூறினால்,  அவை  வேறு  வேறு  எனப்  பிரிந்திருக்க  வேண்டும்  அல்லவா.  நீ  முன்பு  கூறிய  கைவிரல்களைப்  பிரித்து  தனித்தனியே  காட்டுவது  போல  என்றாள்  நீலகேசி.

 

நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்று  நான்கினை  பூதங்கள்  என்றாய்

நால்வகைப்  பண்புகளோடு  நால்  செயல்கள்  உடையனவென்றாய்

உயிர்கள் என்ற தன்மையினாலே  நுகர்ச்சி, அறிவு, குறி, செயல் கந்தங்கள்

உயிர்பொருளில்  அமையுமென  உரைப்பதில்  தவறென்ன கண்டாய்            300 

           

            ஐயா,  நிலம்,  நீர்,  நெருப்பு,  காற்று  நான்கினையும்  பூதங்கள்  என்று  விளக்கினாய்.  அவற்றிற்கு  குற்றமற்ற  வன்மை  முதலிய  பண்புகள்  உண்டென்றும்,  பொறுத்தல்  முதலிய  செயல்  உண்டென்றும்  இரு  விதமாய்  பிரித்து  கூறினீர்.  நிலம்  முதலான  நான்கிற்கும்,  பண்பு,  செயல்பாடு  என்ற  தன்மை  இருப்பது  போலக்  கந்தங்கள்  நான்கிற்கும்,  அதாவது  நுகர்ச்சி,  அறிவு,  குறி,  செயல்  இவைகளுக்கு  நிலைக்கலனாக  உயிர்  என்ற  தன்மையுண்டு  என்று  கூறுவதில்,  குற்றம்  யாது  கண்டீர்  என்றாள்  நீலகேசி. 

 

உடலினை பெரும்  போர்வையால்  மூடி  அறிவை அறியாமையால் மறைத்து

நீ  உரைத்த  வன்மையும்,  பொறுமையும்  நிலத்தினது  உடமைகளாயின்

நானுரைக்கும்  அறிவும்  காட்சியும்  உயிர்த்  தன்மை   உடையனவாயின

நீ கூறும் நிலத்  தன்மையுண்டெனில்   உயிருண்டென்பதும் உண்மையே     301

 

            பெரும்  போர்வையால்  உடலை  மூடியது  மட்டும்  இன்றி,  அறிவையும்  அறியாமையால்  மூடியவரே,  உன்னால்  கூறப்பட்ட  வலிமையும்,  பொறுமையும்  நிலத்தின்  உடமைகள்  ஆயின.  என்னால்  கூறப்பட்ட  அறிவும்  காட்சியும்  உயிரினுடையவைகளாயின.  நீர்  கூறும்  நிலத்தின்  தன்மை  உண்மை  என்று  கொண்டால்,  நான்  கூறும்  உயிர்  உண்டு  என்பதும்  உண்மையாகும்  என்றாள்  நீலகேசி.

 

வன்மை  என்ற  குணத்தையே  புத்தன்  நிலம்  என்று  கூறியதாதலின்

நிலமென்ற பொருளொன்றில்லை வன்மை செயல் பொறுத்தலாவென்றாள்

உயிர்  என்ற அரிய  பொருளோ  உயர்  பெருமை  கொண்டது   ஆகும்

உயிரொன்று இல்லையெனில் பிறருக்காக பல பிறவி எடுத்ததெவ்வாறோ 302

 

நான்கு  பூதங்களில்  நிலம்  ஒன்று.  நிலத்தின்  குணம்  வன்மை.  அதன்  செயல்  பொறுத்தல்.  இவ்வாறு  முன்னர்  கூறிய  புத்தன்,  இப்போது  வன்மை  என்ற  குணத்தையே  தாம்  நிலமென்று  கூறுவதாகவும்,  நிலம்  என்று  ஒன்று  இல்லை  என்று  கூறினான்.  அதற்கு  நீலகேசி,  உயிர்  என்ற  ஒருஅரிய ,  பெருமையுடைய  பொருள்  இல்லை  என்றால்,  பல  பிறவிகளில்  நீ பிறந்து,  பிறருக்காக  துன்பம்  பெற்றது  எவ்வாறு  எனக்கேட்டாள்.

 

அட்டங்களில்  தீயும்  நீரும்  அடங்கிடும்  புத்தா உன்  கூற்றுப் படி

நீர்  பட்டு  தீயும்  அணைந்திடும்  நிரந்தர  அதன்  தன்மையாலே

நீ  கூறும்  பூதங்கள்  நான்கும்  முரண்பட்ட  இயல்பினை உடையது

இயற்கையில்  ஒன்றுக்கொன்றின்  இயல்பும்  பயனும்  அழியும்  என்றாள்       303

 

            புத்தனே,  அறிவுக்கு  முரணாக  எதையும்  கூறமாட்டோம்  என்னும்  நீர்,  மெய்யான  பொருள்கள்  என்று  கூறும்  நிலம்  முதலான  எட்டும்  பிரியாமல்  கூடி  நிற்கும்  என்றால்  தீயும்  நீரும்  ஒன்று  கூடித்  தங்கவேன்டும்.  ஆனால்  நீர்  பட்டவுடன்  தீ  அணைந்து  விடுகிறதே.  நீ  கூறும்  பூதங்கள்  நான்கும்  முரண்பட்ட  இயல்பினை  உடையது.  இயற்கையில்  ஒன்று  மற்றொன்றின்  இயல்பையும்,  பயனையும்  அழிப்பதாகும்  என்றாள்.

 

ஊரும்  காடும்  ஒன்றாயிணைந்து  ஒரே  இடத்தில்  கலந்து  இருந்தால்

ஊர்  எது, காடு  எது  என்று  கூறல்  உலகோர்க்கு  அருஞ்செயலாகும்

பூதங்கள் நான்கும் ஒன்றாயிணைந்தால் அட்டகம்  என அழைக்கலாமே-தவிர

நான்கையும்  தனித்தனி பெயரில்  நவிலுதல்  பிழையாகும்  என்றாள்            304

 

            ஊரும்  காடும்  ஒரே  காலத்தில்,  ஒரே  இடத்தில்  கலந்து  இருந்தால்,  எது  ஊர்,  எது  காடு  என்று  பிரித்து  கூற  இயலாது.  அவ்வறே,    நீர்  கூறிய  நீர்,  தீ  முதலான  பூதங்கள்,  நான்கும்  ஒன்றில்  ஒன்று  கலந்து  இருந்தால்,  அதை  அட்டகம்  என்று  அழைக்கலாமே  தவிர,  தனித்தனி  பெயரில்  அதை  அழைப்பது  பிழையாகும்  என்றாள்.

 

மூன்று  வகை  நுகர்ச்சிகளும்  முழுதும்  தீரா  உளம்  உடையோனே

காமப்பசியின்  நுகர்ச்சிக்காக  பெண்  கழுதையாகி  கூடினாயன்று

செயல்களின்  விரிவே  என்றும்  நுகர்ச்சியின்  தன்மையாகும்

நீர்  கூறும்  செயல்  கந்தம்  நுகர்ச்சி  கந்தமே  தெளிவாய்  என்றாள்               305

 

            மிகவும்  அருள்  உடையவனே,  மூன்று  வகை  நுகர்ச்சிகளும்  முழுதும்  தீராத  உள்ளம்  உடையவனே,  காமப்பசியால்  துயருற்ற  ஆண்கழுதையின்  ஆசையை  தணிக்க  நீயே  பெண்கழுதையாக  மாறி,  அதனுடன்  கூடினாய்.  முன்பு  நீ கூறிய  செய்கைகளின்  விரிவே  நுகர்ச்சி  கந்தமாகும்.  ஆராய்ந்து  உணர்ந்தால்  நுகர்ச்சி  கந்தம்  என்று  உன்னால்  கூறப்படுவது,  செயல் கந்தமேயன்றி,  வேறு  இல்லை  என்று  தெளிவு  பெறுவாய்  என்றாள்.

 

அறிவினால்  நிகழும்  நிகழ்ச்சியே  செயல்களென  அறிவாய்  நீயும்

செயல்களின்  தொடக்கம் முடிவும்  நுகர்ச்சியில்  அடங்கி  முடியும்

நுகர்ச்சியின்  உணர்வை  சுவைக்க  ஒரு பொருள் நிச்சயம்  வேண்டும்

அப்பொருள்  நாங்கள்  கூறும்  உயிரென  அறிந்துகொள்  என்றாள்                  306

 

அறிவினால்  செயல்கள்  நிகழ்த்தப்படும்.  அச்செய்கையால்  நுகர்ச்சி  உண்டாகும்.  செயல்களின்  தொடக்கமும்  முடிவும்  நுகர்ச்சியில்  தான்  முடியும்.  அவ்வாறு உணர்வு  ஏற்படுவதற்கு  ஏதோ  ஒரு  பொருள்  காரணமாக  அமைதல் வேண்டும்.  அப்பொருளே  உயிர்  எனப்படும்  என்றள்  நீலகேசி.

 

ஆறறிவில்  ஓரறிவு  செயல்பட  அங்கில்லை  மற்ற  ஐந்தும்  என்றாய்

அவ்வைந்து  அறிவும்  அங்கு  அடங்கி  கிடந்தன  என்கின்றாயா

ஓரறிவின்  செயல்பாட்டிற்கும்  உறங்கி  கிடக்கும்  ஐந்தறிவிற்கும்

நின்று நிலைக்க நிலைகலன்தேவை யாமதை உயிரென்ருரைக்கின்றோம்307

           

ஆறுவகையான  அறிவுகந்தங்களில்  ஒரு  அறிவு  நிகழ்கின்றபோது,  மற்ற  அறிவுகள்  அங்கிருந்து  செயல்படாது  என்று  கூறுகிறாய்.  அவ்வாறாயின்  அவற்றின்  உண்மையை  நீ  எவ்வாறு  அறிந்தாய்.  அல்லது  ஒரு  அறிவு செயல்படும்  போது,  மற்ற  ஐந்து  அறிவுகளும்  அங்கு  இல்லை  என்கிறாயா.  அல்லது  அவ்வைந்தும்  அங்கு  அடங்கி கிடந்தன  என்கிறாயா.  அவ்வாறு  ஒரு  அறிவு  செயல்படுவதற்கும்,  அடங்கி  நிற்பதற்கும்  ஒருநிலைக்கலன்  தேவைப்படும்.  அந்த  நிலைக்கலனே  உயிர்  என்று  நாங்கள்  கூறுவதில்  என்ன  குறை  கண்டாய்  என்றாள்.

 

உயிர்  என்னும்  ஒன்று  இன்றி  உடலில் உணர்வு  பிறக்குமாயின்

ஐம்பொறிகளும்  எந்த  உடலின்  அங்கமாக  அமைந்தது  தானே

ஐம்புலன்களின்  அறிவும்  அங்கே அதனதன் உணர்வை அறியாததனால்

உயிர்  என்ற  பொருளுண்டென்று  உணர்ந்திடு புத்தனே  என்றாள்                 308

 

            உயிர்  என்று  ஒன்று  இல்லாமல்,  உடம்பின்  சார்பாக  உணர்வு  பிறக்கும்  என்றால்,  ஐம்பொறிகளும்  அந்த  உடலின்  அங்கங்கள்  தானே.  ஆதலால்  புலனறிவும்  ஒன்றாகவே,  அதாவது  ஒருங்கே  நிகழ்தல்  வேண்டும்..  ஆனால்  அவ்வாறு  நிகழ்வதில்லையே.  அதனால்  உயிர்  உண்டு  என்று  நீ  தெளிவடைவாய்  என்றாள்  நீலகேசி.

 

விருப்பத்தின்  வாயிலாகத்தான் உணர்ச்சிகள்  பிறக்கிறதென்றாய்

விருப்பமது  இல்லை  என்றால்  உணர்ச்சிகளும்  இல்லை  தானே

உடலில்  விருப்பம்  தோன்றுமெனில்  நிலம் முதல் நான்கிலும்  தோன்றும்

உயிர்  உள்ள  பொருளில்  மட்டும்  விருப்பத்தின் செயலும் நிகழும்                 309

 

            எல்லா  உணர்ச்சிகளும்  விருப்பத்தின்  வாயிலாகவே  பிறக்கின்றன என்று  சொல்கிறாய்.  எனவே  விருப்பம்  இல்லையாயின்  எல்லா  உணர்ச்சிகளும்  இல்லாமல்  போகும்.  ஆகையால்  அறிவில்லாத  உடலில்  விருப்பம்  இருக்குமானால்,  நிலம்  முதலான  பூதங்களிலும்  விருப்பம்  தோன்றல்  வேண்டும்.  புத்தனே  புரிந்து  கொள்,  உயிர்  உள்ள பொருள்களில்  மட்டுமே  விருப்பமும்,  அதன்  செயல்களும்  நிகழும்.

 

மூக்கு, நாவு, உடம்பு  மூன்றுக்கும்  புலனறிவு  நாற்றம், சுவை, ஊறு

அருவப் பொருள் இவ்வறிவு மூன்றும்  உருவப்பொருள் பொறிகளில் சேரும்

செவியது  ஒலி  வரும்  முன்பே  சென்று  பற்றும்  என்று  சொல்கிறாய்

ஒளி,  ஒலி  ஒருங்கே  தோன்றினும்  ஒலி பின்னரே கேட்பதறியாயோ               310

 

            உன்னை  பின்  பற்றுகிறவர்களால்  புண்ணியவான்  என்று  பாராட்டப்படுபவனே,  மூக்கு,  நா,  உடம்பு ஆகிய  மூன்றும்  முறையே  தமக்குரிய  நாற்றம்,  சுவை,  ஊறு  என்னும்  உணர்வுகளைப்  புலனறிவாகப்  பெறுகிறது  என்பது  உம்  தத்துவம்.  அறிவு  என்பது  உருவம்  அற்ற  பொருள்.  அத்தகைய  அருவப்பொருள்,  உருவப்  பொருளாகிய  புலன்களைச்  சேர்ந்து  நீங்காமல்  இருப்பது  எதனால்.  செவிப்பொறியானது,  ஒலி  தன்னிடம்  வராதபொழுதே  சென்று  பற்றும்  என்கிறாய்.  ஒரே  நேரத்தில்  தோன்றும்  ஒளியும்,  ஒலியும்  நாம்  ஒரே  நேரத்தில்  பெறுவதில்லை.  ஒளியை  முன்னர்  காண்கிறோம்,  ஒலியை  பின்னர்  கேட்கிறோம்.

 

அறிவு  கந்தத்தில்  இருந்து  குறிக்கந்தம்  ஆறும்  வேறாம்

கண், காது, மூக்கு, நா, மெய், மனதால்  குறிகள்  ஆறென  புத்தன்  கூற

அறிவுகந்தம்,  குறிகந்தம்  ஆகிய  இரண்டு  கந்தமும்  ஒன்றேயாகும்

அமைந்திட்ட  வேறுபாடினை  முறையாக  உரையென்றாள்  நீலகேசி            311

 

            புத்தன்  அறிவுகந்தத்தில்  இருந்து  குறிகந்தம்  ஆறும்  வேறுபட்டன  என்பதை  விளக்குவேன்  உனக்கு  என்றார். குறிகந்தங்கள்  என்பன  கண்களால்  உண்டாகும்  குறி,  மூக்கால்  உண்டாகும்  குறி,  உடம்பால்  உண்டாகும்  குறி,  செவிகளால்  உண்டாகும்  குறி,  நாவால்  உண்டாகும்  குறி  என  ஆறாகுமென  புத்தன்  கூற,  அறிவுகந்தமும்  குறிகந்தமும்  ஒன்றே  ஆகும்,  இவையிரண்டும்  வேறு  வேறு  என்று  கூறுவாயாகில்,  அவற்றுக்குள்ள  வேறுபாட்டை  சிறிதாகிலும்  விளக்கி  கூறு  என்றாள்  நீலகேசி.

 

குறிக்கந்தம்  பொருளின்  தன்மையை  தன் புலனாக கொள்ளும் என்றும்

அறிவு  அறியும்  புலன் ஆகாது என அறியலாம்  வேறுபாட்டினை என்றான்

குறிகந்த புலன் பொருள் தன்மையும் அறிவுகந்த புலனின் பொருளொன்றே

இரண்டும்  தம்முள்  இயையாதாயின் அறிவுகொள் புலனில்லை என்றாள்       312

 

            குறிகந்தம்  பொருளின்  உண்மைத்  தன்மையை  தன்  புலனாக  கொள்ளும்.  அறிவினால்  கொள்ளப்படும்   புலனாக  அது  ஆகமாட்டாது.  இதுவே  குறிகந்தத்திற்கும்  அறிவுகந்தத்திற்கும்  உள்ள  வேறுபாடு  என்று  கூறினார்  புத்தர்.  குறிகந்தத்திற்கு  புலனாகும்  பொருளின்  உண்மைத்  தன்மையும்  அறிவுகந்தத்திற்கு  புலனாகும்  பொருளும்  ஒன்றே  ஆகும்.  அவ்வாறு  இல்லாமல்  அவையிரண்டும்  தம்முள்  இயையாது.  இரண்டாயின்  அறிவினால்  கொள்ளப்படும்  புலன்  இல்லை  என்றாள்  நீலகேசி.

 

அறிவுகந்தம்  குறிக்கந்தத்தின்  புலன்கள்  ஒருங்கே  தோன்றுவதால்

அவைகள்  இரண்டும்  ஒருங்கே  சேர  அப்புலன்கள் தன்மையும் ஒன்றே

அப்புலன்கள்  ஒன்றாய்  தோன்றி  ஒருங்கே  அவையழியுமானால்

ஒரு  சேர  தோன்றுதல்  இல்லை  கந்தங்கள்  நான்கே  என்றாள் நீலகேசி            313

 

            குறிகந்தத்திற்கும்  அறிவுகந்தத்திற்கும்  புலன் ஒருங்கு  தோன்றுவதால்,  அவையிரண்டும்  ஒருங்கே  அப்புலனைக்  கொள்ளும்.  அப்புலன்கள்  ஒருங்கே  தோன்றி,  ஒருங்கே  அழியுமானால்  அவை  ஒருசேரத்தோன்றுதல்  இல்லை  என்று  ஆகும்.  எனவே  கந்தங்கள்  நான்கு  மட்டும்  தான்  என்றாள்  நீலகேசி.

 

மனம், வாக்கு, காயம்  மூன்றால்  நிகழும்  உம்  நல் தீவினைகட்கு

எள்ளளவும்  பொருத்தமில்லை  என்பதை  நான்  விளக்கிச்  சொல்வேன்

உம்மிடமுள்ள  குடை, செருப்பெல்லாம்  நீ விரும்பிட  வந்தவை  தானே

உனை விரும்பி அவை வரவில்லை  உம் மனம் கொண்ட தீவினை தானே  314

 

            மனம்,  மொழி,  உடம்பு  ஆகிய  மூன்று  கருவிகளால்  நிகழ்வன  என்று  நீங்கள்  கொள்கின்ற  நல்வினைகளும்  தீவினைகளும்  ஒரு  எள்ளளவு  கூட  பொருத்தம்  இல்லை  என்பதை  நான்  விளக்குகிறேன்.  உம்மிடம்  உள்ள  குடை,  செருப்புகள்  எல்லாம்  உன்னை  விரும்பி  வந்தவைகள்  அல்ல.  நீ  விரும்பி  ஏற்றுக் கொண்டவைகள்.  உம்  மனம்  கொண்ட  விருப்பத்தால்  தானே  தீவினைகளால்  உம்மை வந்தடைந்தன. 

 

நன்மை  வெகுதல்  நல்வினை என்றும்  தீவினை  வெகுதல்  தீவினை என்றும்

நெறியினை நீயும் விளம்பிடவில்லை நின் நெறி வெகுதல் தீவினையென்றாய்

வெகுளியை ஒத்த தீவினைகளை  வென்றிடல் அறமென நின் மொழியில்லை

நன்மையில்லா  எவ்வித  நெறியும்  அறநெறியென  நீ  அறிவுறுத்தாதே            315

 

            நன்மையை  வெகுதல்  நல்வினை  என்றும்,  தீவினையை  வெகுதல்  தீவினைகள்  என்றும்,  கூறுவதையும்  நீ  மேற்கொள்ளவில்லை.  மாறாக  வெகுதல்  என்பதே  தீவினை  என்றுதான்  நீ  அறிவுரை  கூறினாய்.  உள்ளத்தில்  தோன்றும்  வெகுளியை  ஒத்த  தீவினைகளாகிய  வஞ்சம்,  மானம்,  உலோபம்  பிறவும்  நீக்கப்பட  வேண்டியவை  என்ற  அறமும்  உன்  மொழியில்  இல்லை.  நன்மையில்லாத  எந்த  விதமான  நெறியையும்  அறநெறியென  நீ  அறிவுறுத்தாதே  என்றாள் நீலகேசி.

(  வெகுதல் : விரும்புதல் )

 

பொருள்களின்  உண்மைத் தன்மையின்  நன்மைகளை  நோக்கலே நற்காட்சி

நின் மன விருப்பிற்கு  ஏற்ப  நன்மையை  நவிலல்  பொய்காட்சி

பொய், குறளை, கடும், பயனில் சொல்  நா  தரும்   தீவினைகள் என்றீர்

நாவின்  செயலான  சொற்கள்  நல்வினையும்  நவின்றிடுமன்றோ                  316

 

            அனைத்துப்  பொருள்களின்  உண்மைத்  தன்மையாகிய  நன்மைகளைக்  காண்பதே  நற்காட்சியாகும்.  அதனைக் கூறினால்  நானும்  அதை  ஏற்றுக் கொள்வேன்.  உன்னுடைய  மன  விருப்பத்திற்கு  ஏற்ப  இது  நன்று,  இது  நன்றல்ல  என்று  கூறினால்  அது  பொய்க் காட்சியாகும்.  ஐயனே,  பொய்,  குறளை,  கடுஞ்சொல்,  பயனில்லாத  சொல்,  ஆகிய  நான்கும்  நாவின்  செயல்கள்  ஆகும்.  அவ்வாறாயின்,  நாவினால்  நல்வினை  செய்யும்  சொற்களையும்  கூறலாம்  அல்லவா  என்றாள்  ( குறளை  :  கோள் சொல்லுதல் )

 

கடுஞ்சொல்  தீவினைத்  தருமெனில்  மென் சொல் நல்வினையாகுமன்றோ

கயவர், பகைவர் மென்சொற்கள்  நல்வினைகள்  தந்து  விடுவதாகும்

வன்மை, மென்மை சொல்லின் தன்மையால் நல்தீவினைகள் அமைவதில்லை

பேசும் பொருளின் தன்மையில் தான் பிறந்திடும் நல்தீவினைகளென்றாள் 317

 

            புத்த தேவனே,  கடுஞ்சொல் தீவினையைத்  தரும்  என்று  கூறினீர்கள்.  அதனால்  மென்மையாகப்  பேசுதல்  நல்வினையைத் தரும்  என்று  பொருளாகிறது.  அவ்வாறு  பேசுதல்  நல்வினையென்றால்,  இவ்வுலகில்  யாரும்  தன்  பகைவர்  மேல்,  கயவரை  ஏவித்தாக்குமாறு  மேன்மையாக  பேசி  அனுப்புவர்.  எனவே,  சொல்லின்  தன்மையில்  வன்மையோ,  மென்மையோ  நல்  தீவினைகளை  தீர்மானிப்பதில்லை.  பேசும்  பொருளின்  தன்மையில்  தான்  நல்  வினையும்  தீவினையும்  உருவாகும்  என்றாள்.

 

கொலை உறுப்புகள் ஐந்தும் சேர்ந்திடகொலை நிகழ்ந்தால் தீவினையென்றீர்

ஐந்து  உறுப்பும்  சேராவிடினும்  அரும்  உயிர்  அழித்தல்  தீவினையாகும்

கொலை  நோக்கம்  இல்லாவிடினும்  கொலை  செயல்  நடந்திட்டாலும்

மனம்,மெய்யும் கொலையில் ஒன்றிட மாபெரும் தீவினை சேருமென்றாள் 318

 

            ஐந்து  கொலை  உறுப்புகளோடு  கொலை  நிகழ்ந்தால்  தான்  அது  தீவினையாகும்  என்று  கூறினீர்.  ஐந்து  உறுப்புகள்  சேராமல்  ஒரு  அரிய  உயிரை கொல்லுதலும்  தீவினையே  ஆகும்.  கொலை  செய்யும்  நோக்கம்  ஏதும்  இல்லாமல்  கொலை  செயல்  ஏற்பட்டாலும்,  மனம்,  உடல்  கொலையில்  ஒன்றிட்டாலும்,,  உயிர்  கொலை  என்ற  மாபெரும்  பாவம்  வந்தே  தீரும்  என்பதை  புரிந்துகொள்  என்றாள்.

( புத்தரின் கொலைக்கான ஐந்து உறுப்புகள்  :  1. ஒன்றி நின்ற உயிர். 2. உயிர் உள்ளது என அறிதல்.  3. கொலை  சிந்தனை.  4.  உயிர்  துன்புறுத்துதல்.  5. கொலை  செய்தல்.  )

 

நீலகேசி  கொலை முதலியன பற்றிய சமணத்தின் கருத்தினை கூறுதல்  :

 

கொல்வேன்  என்ற  மனதுடன்  சென்று கொலைக்கருவிகளின்றி  திரும்பினும்

பிறன்மனை சுக விழைவில் சென்று  பின் தடைப்பட்டு திரும்பினாலும்

பிறர் பொருளைத் திருடச் சென்று  வாய்ப்பின்றி  திரும்பி  வந்திட்டாலும்

தீவினைகள் அவனைச் சேரும் என்ற  சிந்தனையாளன்  தான் சமணன்            319

 

            புத்தரே,கொலையால்  தீவினை  உண்டாகும்  என்று  நீர்  கூறினால்,,  கொலை செய்வேன்  என்ற  மனதுடன்  சென்று,  பின்  கொலை  செய்யும்  கருவிகள்  இல்லாமல்  திரும்பி  வந்தாலும்,  பிறன்மனை  சுகம்  விழையச்  சென்று,  பின்  அது  தடைப்பட்டு  திரும்பி  வந்தாலும்,  பிறர்  பொருளைத் திருடச்  சென்று,  பின்  வாய்ப்பு  இல்லாமல்  திரும்பி  வந்தாலும்,,  தீவினைகள்  அவனை  சூழ்ந்தே  தீரும்  என்பதுவே  சமணத்தின்  தத்துவமும்,  சிந்தனையுமாகும்  என்றாள்

 

நுகர்ச்சியால்  வினைவரும் என்று  வினைப் பற்றி கூறேன் என்றாய்

மகளீரின் மென்மலர் மெய் சுகம்  மனம் வெறுத்து ஒதுக்கியது ஏனோ

உள்ளத்தில்  விழைவு  இன்றி  பிறர்  பொருள் கவர்ந்து கொள்ளளும்

மனதினில் மயக்கம்  இன்றி  பிறன்மனை கூடல் நல்வினையா என்றாள்            320

 

புத்தரே,  நுகர்ச்சியால்  வினைவரும்  என்று  கூறமாட்டேன்  என்று  நீர்  கூறினீர்.  அவ்வாறாயின்,  மலர்  போன்ற  மேனியை  உடைய,  பெண்களின்  உடல்  சுகத்தை,  மனம்  வெறுத்து  ஏன்  ஒதுக்கினீர்.  உள்ளத்தில்  விருப்பம்  இல்லாமல்  பிறர்  பொருளைக்  கவர்ந்து  கொள்ளுதலும்,  மனதில்  மயக்கமோ,  ஆசையோ  இல்லாமல்  பிறன்மனையை  நுகர்வதும்  நல்வினையாகுமா.  மனதால்  நினைத்தால்  தான்  தீவினை  உண்டாகும்.  மெய்யால்  நுகர்ந்தாலும்,  மொழியால்  கூறினாலும்  தீவினை  இல்லை  என்பது  உம்  கருத்தா  என்றாள்.

                                   

காக்கையின் பற்களைப் போல்  கந்தங்கள்  ஐந்தும்  ஆகும் – என

கசடற  விளக்கி விட்டேன் நின்  கருத்தில் பொருள் இல்லை என்று – இனி

ஆரிய சத்தை  நான்கு என்ற உன்  அர்த்தமற்ற  கருத்துக்களையும்

அனைவருக்கும்  தெளியும்  வண்ணம் அரும் விளக்கம் தருவேனென்றாள் 321

 

            புத்தரே,  நீர்  கூறிய  ஐந்து கந்தங்களும்  அறிவுக்கு  பொருந்தவில்லை.  காக்கையின்  பற்களைப் போல  இல்லாத  பொருள்கள்  ஆகும்  என்று  ஐயமற  விளக்கிவிட்டேன்.  என்  விளக்கத்தால்  உன்  கருத்தில்  பொருள்  இல்லை  என்று  நிறுத்தி விட்டேன்.  இனி  உன்னால்  கூறப்பட்ட  ஆரியசத்தை  எனப்படும்  நிலையாமையை  முதலிய  நான்கையும்,  மற்ற  உன்  அர்த்தமற்ற  கருத்துக்களையும்,  அனைவருக்கும்  தெரியும்  வண்ணம்  விளக்கம்  தருவேன்  என்றாள்  நீலகேசி.

(ஆரியசத்தை : 1. பொருள்கள் நிலையில்லாதன.  2. துன்பம் தருவென.  3.. உயிர் அல்லன.  4. அருவருப்பு. )

 

அனைத்தும் துன்பம் ஆகும் போது  ஆரியசத்தையில் அடங்கிடும் மூன்று

அருவருப்பு, உயிரின்மை, நிலையாமையே நான்கென்பது அறியாமையாகும்

இன்பம்,  துன்பம்  சமமென  மூன்றும்  நுகர்ச்சி கந்த  அடக்கம் என்றாய்

எல்லாமே துன்பம் எனும் உன் கூற்று முன்னுக்கு பின் முரண்பாடென்றாள்          322

 

            ஐயனே,  நீ  எல்லாமே  துன்பம்தான்  என்று  கூறுவாயாகில்,  நீ  கூறுவது  போன்று  எல்லாம்  துன்பம்  ஆகும்பொழுது,  ஆரியசத்தையில்  எஞ்சியதான  நிலையாமை,  அருவருப்பு,  உயிரின்மை  மூன்று  மட்டுமே.  அவை  துன்பத்தில்  அடங்குவதால்,  நான்கு  என்ற  நிலைக்கே அறியாமையுடன்  கூடிய   பிழையாகும்.  இன்பம்,  துன்பம்,  சமம்  என  மூன்று  வகைப்படுவது  நுகர்ச்சி  கந்தம்  என  கூறினாய்.  இப்போது  எல்லாமே  துன்பம்  என்னும்  உன்  கூற்று,  முன்னுக்குப்பின்  முரணாக  உள்ளதை  நீர்  அறியீரோ  என்றாள்.

 

பொருள்கள் எல்லாம் தூய்மையற்றன  புத்தனே உன் கூற்றாய் வைத்தாய்

பிடகநூலும், ஒழுக்கம், உணவும்  உன்னுரையில் தூய்மை என்கிறாய்

பொருள்களின் இயல்பினையெல்லாம் பொருத்தமற்று நீ அறிந்ததாலே

முரண்பாடுகளின் தலைவன் ஆகி  முன்னுக்குப் பின் வாதம் செய்கிறாய் 323

 

ஐயனே, எல்லாபொருள்களும்  தூய்மை  உடையன  அல்ல,  என்று  நீ  கூறும்  வய்மையில்  அடங்கும்.  அப்படியெனில்,  மக்கள்  நீராடி  மலர்,  சந்தனம்  முதலியவற்றை  அணிவதும்  குற்றம்.  மேலும்  நீர்  ஓதுகின்ற  பிடகநூலும்,  ஒழுக்கமும்,  உணவுகளும்  உன்னுரையில்  தூய்மையானது  என்கிறாயே  அது  எப்படி. பொருள்களின்  இயல்பினை  எல்லாம்  நன்கு  புரிந்து  கொள்ளாததாலும்,    பொருத்தமற்று  அறிந்ததனாலும்  முரண்பாடுகள்  முழுதும்  உடையவராகி,  முன்னுக்குப்பின்  முறையற்று  வாதம்  செய்கிறாய்  என்றாள். 

 

பொருள் தன்மை நிலையாமையாயின் நிலையாமையும்  நிலையற்றதாகும்

துன்பமும் நிலையற்றது என்றால்  துயரத்தில்  அழுவதும்  ஏனோ

முழுவதும் கெட்டொழியும் என்பது நும்  வாய்மையின் தத்துவம் என்றால்

வழிபாடும் தானச் சிறப்பும் தரும்  நன்மையும்  அழியுமே  என்றாள்                324

 

எல்லாப்  பொருள்களும்  நிலையற்றதாக  நிலையாமை  உடையன  என்கிறாய்.  அப்படியெனில்  நிலையாமை  என்ற  தன்மையும்  நிலையற்றது  தானே.  இன்பம்  துன்பம்  எல்லாம்  நிலையற்றது  எனில்,  துன்பத்தில்  ஏன்  அழுகிறார்கள்.  எல்லாமே  முழுவதும்  கெட்டொழியும்  என்பது  உம்  வாய்மைத்  தன்மையின்  தத்துவமாகில்,  தெய்வம்  உண்டு  என்று  தெளிந்தோர்  செய்யும்  வழிபாடும்,  தானங்களும்,  அதனால்  பெறப்படும்  சிறப்புகளும்,  அவை  தரும்  நன்மைகளும்  அழிந்தாக  வேண்டுமே  என்றாள்.

 

உன் நால்வகை  வாய்மைகளையும்  ஐவகைக் கந்தங்களையும்

ஐயமற  மறுத்து  உரைத்தேன்  அவை  நல்ல  தத்துவம்  இல்லையென

பிறப்பொழிக்கும் ஒழுக்கத்தையும்  பின்னிக் கொள்ளும் வினைப்பயனையும்

ஆதிகாலமாய் தொடர்ந்துரைக்கும் அருகநெறியை அகத்தில் கொள்வேன் 325

 

            புத்தரே,  நான்  இதுவரை  நீர்  உரைத்த  நான்கு  வாய்மைகளையும்,,  ஐந்து  கந்தங்களின்  சிறப்பையும்,  பிறவற்றையும்,  எம்முன்னே  நல்ல  தத்துவங்களாக  நிலைபெறவில்லை  என்று  விளக்கி  உம்  கருத்தை  அழித்தேன்.  நான்  கூறிய  பிறப்புகளை  அழிக்கும்  ஒழுக்கத்தையும்,  நம்  உயிருடன்  பின்னிக்கொள்ளும்  வினைப் பயன்களையும்  ஆதிகாலமாய்  எடுத்துரைக்கும்  அருகநெறியானது  என்  மனதில்  ஆழ  அமர்ந்துள்ளது.  இனி  வேறு  ஏதேனும்  கூற வேண்டியிருப்பின்  நீர்  கூறலாம்  என்றாள்.

 

புத்தன்  கூற்று  :

 

இளந்தளிர்  போன்ற  நீலகேசியே  விதையில் இருந்து முளைத் தோன்றும்

முளையில் இருந்து கிளை படரும்  முழுதும் பிறப்பின் சுழற்சி ஆகும்

வெந்த  விதைகள் முளைப்பதில்லை  வீடுபேறுக்கும்  இதுவே உவமை

பௌத்தத்தின்தத்துவம்  இதுவே புரிந்துகொள்  நீலகேசியே என்றான்           326

           

இளந்தளிர்  போன்ற  நீலகேசியே,  விதையில்  இருந்து  முளைத்தோன்றும்.  அம்முளையில்  இருந்து  கிளைகள்  தோன்றும்..  இவ்வாறு  தோன்றும்  தொடர்ச்சியையே,  யாம்  பிறவிச்சுழற்சியாகிய  மாற்றங்கள்  என்று  கூறுகிறோம்.  வீடுபேறு  என்பது  முளைக்கும்  திறனற்ற  வெந்த  விதைகளாகும்.  அதற்கு  வேறு  உதாரணங்கள்  ஏதும்  தேவையில்லை.  இதுவே  எங்கள்  புத்தத்தின்  தத்துவம்  ஆகும்  என்றார்  புத்தர்.

 

ஆராய்ந்திடில் வினையும் உண்டு  அவ்வினையின் பயனும் உண்டு

தினையளவேனும் அவ்வினையை  செய்பவர்கள்  யாரும்  இல்லை

ஐவகை  கந்தங்களும் கூட  அக்கணத்தில்  தோன்றி  அழியும்

சாக்கிய  சமயநெறியிது என துவராடை பூண்டபுத்தன்சொன்னான்              327

 

            ஆராய்ந்து  பார்த்தால்  வினையும்  உண்டு.  அவ்வினைகளுக்கு  பயன்களும்  உண்டு.  ஒரு  தினையளவேனும்  வினைகளை  செய்பவன்  யாரும்  இல்லை.  எல்லாகந்தங்களும்  ஒரு  கணத்தில்  தோன்றி  உடனே  அழியும்  ஆதலால்,  இருகண  நேரம்  கூட  நிலைத்திருப்பதில்லை.  இதுவே  எம்  புத்தநெறி  என்றார்  புத்தர்.

 

நீலகேசி  கூற்று  :

 

நற்குணமும், தானமும்  செய்தல்  நற்செயல் என்று  பகர்ந்தாய்

நன்குணர்ந்து அவற்றை செய்து  நற்பயன் அடைவாரில்லை என்கிறாய்

ஐந்துவகை  கந்தங்கள் கூட  கணப்பொழுதே  நிலைகும் என்கிறாய்

உன் புத்தன் என்ற பெயருங்கூட  பொருளற்றதை அறிவாயென்றாள்         328

 

            நற்குணங்களை  மேற்கொள்ளுதல்  நற்செயல்  என்று  கூறினீர்.  அதேபோல்  தானம்  செய்தலும்  நன்று  என்று  கூறினீர்.  ஆனல்  அவற்றை  உணர்ந்து  செய்து,  அதற்கான  பயனை  எய்துகிறவன்  யாரும்  இல்லை  என்று  கூறுகிறீர்.  ஐந்துவகை  கந்தங்களும்  உடன்  தோன்றி  உடன்  அழிகின்றன  என்கிறீர்.  அப்படியெனில்  உமது  புத்தன்  என்ற  பெயர்  கூட,  அதன்  பொருளோடு  மாறுபடுவதாக  நான்  உணர்கிறேன்.

 

மாதுளம் விதை அரக்கின் நிறத்தை  மாதுளம் மலரில் காண்பது போல்

தீவினை துன்பத்தை பயக்கும்  நல்வினை இன்பம் விளைக்கும் என்றான்

ஐந்து கந்த பிண்ட இருவரில்  நல்வினை தீவினை உடையோனானால்

தேவ, நரக  கதிகள் அடைவதே  உன் உவமையின் பொருளென்றாள் கேசி  329

           

ஒரு  மாதுளம்  விதையில்  காரரக்கும்,  மற்றொரு  விதையில்  செவ்வ்ரக்கும்  உள்ளதை  நிலத்தில்  இட்டால்,  காரரக்கு  விதையில்  இருந்து  காருநிற  மலரும்,  செவ்வரக்கு  விதையில்  இருந்து  செம்மை  நிற  மலர்கள்  மட்டுமே  மலரும்.  அதுபோல்  தீவினை  துன்பத்தைப்  பயக்கும்,  நல்வினை  துன்பத்தை  பயக்கும்  என்றார்  புத்தர்.  ஐயா  அட்டக  பிண்டமாகிய  இரு மாதுளை  விதையில்  அதனதன்  நிறத்தில்  பூக்கள்  பூப்பதுபோல்,  நல்வினை  தீவினை  செய்தவர்கள்  தேவ,  நரக  கதிகள்  அடைவதே  நீர்  கூறிய  உதாரணத்தின்  பொருள்  ஆகும்  என்றாள்  நீலகேசி.

 

கணபங்க கொள்கையின்படி  விதையோடு ஒன்றிய அரக்கின் நிறம்

முளையிடத்து செல்லாது  எனின்  மலரினில் சென்று தங்குவதெப்படி

நிறம் மலரில் தங்கியது என்றால்  கணபங்க கொள்கைத் தவறே

தவறான உன் தத்துவம் ஏற்ற  அங்குலி மாரன் அறிவிலி  என்றாள்                   330

 

            உன்  கணபங்க  கொள்கைபடி,  விதையோடு  ஊட்டப்பட்ட  அரக்கின்  நிறம்  அதன்  முளையின்  இடத்துச் செல்ல  இயலாது.  அப்படியாயின்  அந்நிறம்  மலரில்  சென்று  தங்குவது  எப்படி ?  நிறம்  மலரில்  சென்று  தங்கியது  என்றால்,  கண்பங்க  கொள்கைப்படி  தவறுதானே.  அத்தகைய  நும்  தவறான  தத்துவத்தை,  உண்மையென்று  ஏற்றுக்கொண்ட  உம்  மாணவன்  அங்குலிமாறனை  அறிவிலி  என்று  கூறுவாயா  என்றாள்.

 

அரக்கின் நிறத்தை விதையுண்டதால்  அரக்கின் நிறமே மலர் பெறுமெனின்

இம்மையில் இரந்துண்ணும் ஒருவன் மறுமையில் இரந்துண்ண வேண்டும்

இம்மையில் ஊன் உண்ணும் துறவி மறுமையிலும் ஊன் உண்ண வேண்டும்

மாதுளம்விதைஉவமையுரைத்தஉம் வாதமும் தவறெனஉரைத்தாள் கேசி  331

 

            அரக்கின்  நிறத்தை  அந்த  விதையே  உண்டது  என்றால்,  அரக்கின்  நிறமே  மலர்  பெறும்  என்று  நீர்  கூறுவாயாகில்,  இப்பிறவியில்  ஒரு  மண் கலயத்தில்  பிச்சை  எடுத்து  உண்ணும்  ஒருவன்,  மறுமையில்  பல  மண் கலயங்கள் கையில்  ஏந்தி  இரந்து  உண்ணவேண்டும்.  இப்பிறவியில்  மான்  ஊனை  உண்ணும்  ஒரு  புத்த  துறவி ஒருவன்,  மறுபிறவியிலும்  பல  மான்களின்  ஊனை  உண்ணவேண்டும்.  ஆகவே,  மாதுளம்  விதை  கூறும்  உம்  உதாரணத்தையும்,  உம்  வாதத்தையும்  தவறு  என்று  மறுக்கிறேன்  என்றாள்  நீலகேசி.

 

மனதிற்கு  மற்றுமொரு பெயர்  அறிவு  என்று கொள்வோமானால்

அறிவு கந்தம்  வினையூற்றென்றால்  செயல் கந்தம் இல்லையென்றாகும்

உள்ளமும் செயலும் ஒன்றென கூறின் பண்பும் பண்புடை பொருளுமுண்டு

அறிவும் செயலும் ஒன்றிலையெனில் எதன் வழி நுகர்ச்சி வந்தது கூறும்            332

 

            மனம்  மட்டுமே  வினைகளுக்கு  காரணம்  என்று  நீ  கூறுவாய்.   அங்கு  செயலின்  பங்கு  எள்ளளவும்  இல்லை  என்றாகும்.  மனதிற்கு  இன்னொரு  பெயர்  அறிவு என்று  கொள்வோமானால்,  அறிவு  கந்தமே  வினைகளுக்கெல்லாம்  காரணம்  ஆகும்  என்றால்,  செயல் கந்தம்  இல்லையென்று  ஆகும்.  உம்முடைய  உள்ளமும்,  செயலும்  ஒன்றே  தான்  என்று  நீ  கூறினால்,  பண்பும்,  அப்பண்பினுடைய  பொருளும்  உண்டு  என்று  பெறப்படும்.  அறிவும்  செயலும்  ஒன்று  இல்லையெனில்  எதன்  வழியாக  நுகர்ச்சி  வந்து  சேரும்  என்று  கூறுவாயாக  என்றாள்.

 

வினைகளின் ஊற்றே நுகர்ச்சியென விளக்கிடும் சமணத்தை வெறுப்பதேன்

பொறிகளின் புலனடக்கமின்றி  பெறும் இன்பம் அறம் என்பாயோ

மனதோடு கூடிய செயல்களினால்  மலர்ந்திடும் வினைகள்  எல்லாம்

மனம்  என்ற  அறிவே  வழியது  மாபெரும்  வினைக்களுக்கு  என்றாள்            333

 

              நுகர்ச்சிகளும்  வினைகளை  உண்டாக்கும்.  மனதின்  வழியது  வினைகள்  என்று  சான்றோர்கள்  கூறுவதால்,  எங்கெல்லாம்  மனதோடு  கூடிய  செயல்கள்  நிகழ்கின்றனவோ  அங்கெல்லாம்  வினைகள்  தோன்றும்  வினைகளின்  ஊற்றே  நுகர்ச்சியாகும்.  இதனை  விளக்கி  கூறும்  அருக  சமயத்தை  ஏன்  நீங்கள்  வெறுக்கிறீர்கள்.  ஐம்பொறிகளால்  உண்டாகும்,  புலன்களின்  அடக்கம்  இன்றி,  அதன்  வழியில்  சென்று  இன்பம்  அனுபவிப்பது  தான்  அறம்  என்று  கூறுவீர்களா.  மனதோடு  கூடிய  செயல்களே  வினைகளை  உண்டாக்கும்  என்றாள்  நீலகேசி. 

 

அறம்  செய்த ஒருவன் அக்கணமே  அதனோடு முழுதும் அழிந்தானாயின்

அவன் வழித்தோன்றல்களெல்லாம் அப்பயனை அடைவானென்றார் புத்தர்

ஐந்து கந்த பிண்டங்கள் அழிய  அதனதன்  தத்துவம்  முடிவுற்றதாகும்

செயல் செய்தவன் அழிந்த பின்பு  பயன்  வாரிசை  எப்படி  அடையும்            334

 

            அறம்  செய்த  ஒருவன்  அக்கணமே  அதனோடு  முழுதும்  கெட்டான்  ஆயின்,  அவன்  வழித்தோன்றல்கள்  எல்லாம்,  பின்னொரு  காலத்தில்  அவ்வறத்தின்  பயனை  நுகர்வார்கள்  என்று  நான்  கூறும்  நன்னெறியை  உன்னால்  அறியயியலாது  என்றார்  புத்தர்.  ஐந்து  கந்தங்களின்  பிண்டங்கள்  எல்லாம்  அழியும்  நிலையில்,  நீ  கூறும்  தத்துவம்  முடிவுற்றது  ஆகும்.  ஒரு  செயலைச் செய்தவன்,  கெட்டு  ஒழிந்த  பின்,  அச்செயலின்  பயனாக  விளையும்  வினையை,  அவன்  வழித்தோன்றல்கள்  நுகர்வார்கள்  என்பது  எப்படி  பொருந்தும்  என்றாள்.

 

வான்  தவழும்  மதி இல்லையென்றால்  வெண்  ஒளியும்  இல்லையன்றாகும்

மக்கள் பிறப்பு அழிந்த போதே  புதிய பிறவி, தேவ பிறவி இல்லையாகும்

கணத்தில் தோன்றிய அறிவானது  அக்கணத்திலேயே அழியுமானால்

முற்று பெற்ற தன்மை ஒன்றை தொடர்ச்சியென்பது பண்பாகாதென்றாள்        335

 

            வானில்  தவழ்ந்து,  குளிர்ச்சியை  தரும்  நிலவு  இல்லையென்றால்,  அதனுடைய  ஒளியும்  இல்லாமல்  போகும்.  அதுபோலவே,  மக்கள்  பிறப்பு  அழிந்த  போதே,  நீ  கூறும்  புதிய  பிறப்புகளும்,  தேவ  பிறப்புகளும்  இல்லாது  போகும்.  ஒருகணத்தில்  தோன்றிய  அறிவானது,  அந்தகணத்திலேயே  அழியுமானால்,  முற்றுபெற்ற  தன்மை  ஒன்றை,  தொடர்ச்சி  என்பது  பண்பாக  இருக்காது  என்றாள்.

 

பாதிரி பூவின்கண்  கேடு  எய்தி புது ஓட்டில் தோன்றிய மணம் போல்

ஆற்றல்  என்பது முன்னே தோன்றி  அது பின்னர் எங்கும் உளதே எனில்

சமணம்  கூறும் நிலைத்தலும்  நிலையாமை  என்ற  தன்மையும்

பொருளிடத்தே ஒருங்கே அமையுமென்ற கருத்தினை நீ ஏற்பவன் ஆவாய் 336

 

வாசனை  மிக்க  பாதிரிப்பூவானது  அழிந்த  பின்னரும்,  அவ்வாசனை  அந்த  புது  ஓட்டினில்  காணப்படுவது  போல்,   ஆற்றல்  என்பது  முன்னர்  தோன்றிப் பின்னர்  எங்கும்  உளதாகும்   என்னும்  எம்  கருத்து  பொருத்தம்  என  கொள்வாயாக.   ஏனெனில்  நாங்கள்  கூறும்  நிலைத்தல்  என்ற தன்மையும்,  நிலையாமை  என்ற  தன்மையும்,  ஒரே  பொருளினிடத்தில்  ஒருங்கே  அமையும்  என்ற  கருத்தை  நீ  ஏற்றவன்  ஆகிறாய்  என்றாள்  நீலகேசி. 

 

கணந்தோறும் அறிவு கெடுமென்ற  கருத்தினை ஏற்பது உண்மையானால்

தவ ஒழுக்க  சான்றோர்களும்  தவநெறி  அற்ற  கயவர்களும்

தவறாமல்  வீடுபேறு  அடையும்  தகுதியைப்  பெற்றவராதலின்

தவம்  செய்யும்  அவசியம்  ஏனோ  தெளிவுபெற உரைப்பாய் புத்தா              337

 

            கணந்தோறும்  அறிவுகள்  முழுமையாகக்கெடும்  என்ற  கருத்து  உண்மையானால்,  அதுவே  நீ  கூறும்  வீடுபேறு  ஆதல்  வேண்டும்.  அந்த  நிலையில்,  சிறந்த  தவ ஒழுக்கத்தை  மேற்கொண்ட  சான்றோர்க்கும்,  நற்குணம்  இல்லாத  கயவர்களுக்கும்  அத்தகைய  வீடுபேறு,  கால  நீளுதல்  இன்றி  கணந்தோரும்  கிடைக்கவேண்டும்.  அப்படியாயின் தவம்  செய்ய  வேண்டிய  அவசியமே  இல்லது  போகும்  அல்லவா  என்றாள்  நிலகேசி.

 

ஓர்  அறிவு  முழுதும்  கெட்ட  பின்  பிறிதோர்றிவு  தோன்றும்  என்றால்

பெண்  ஒருத்தி  இறந்த  பின்னே  பெற்றாள்  ஓர்  பிள்ளையை போலாகும்

பின்னறிவு  தோன்றிய  பின்னரே  முன்  அறிவு  முழுதும்  கெடுமெனில்

பிள்ளையை பெற்றெடுத்த பின்னர்பெற்றதாய் இறந்ததுபோலென்றாள் 338

 

            ஒரு  அறிவு  முழுதும்  கெட்டு,  பிறிதோர்  அறிவு  தோன்றும்  என்றால்,  அந்நெறி  அடிப்படையின்றி  தடுமாற்றம்  உடையதாகும்.  முன்னறிவு  முழுதும்  கெட்ட  பின்  பின்னறிவு  தோன்றும்  என்றால்,  இறந்து  போன  பெண்  ஒருத்தி  பிள்ளையை  பெற்றது  போலாகும்.  பின்னறிவு  தோன்றிய  பின்னரே,  முன்னறிவு  முழுதும்  கெடும்  என்றால்,  குழந்தையைப்  பெற்றவுடன்  தாய்  இறந்தது  போலாகும்  என்றாள்  நீலகேசி.

 

வினை செய்தவனே  பயன்  நுகர்வானா  வேறு  ஒருவன் பயன்  நுகர்வானா

செய்தவனும்  மற்றோரும்  சேர்ந்து செய்த வினை பயன் நுகர்வரா என்றாள்

வினை செய்தவனும்  வேறு ஒருவனும்  பயன் நுகர்வாரென யானும் கூறேன்

செய்தவனும் மற்றோரும் நுகரார்  பயன் நுகர்வை கூறுவேனென்றான்புத்தன்

 

            வினை  செய்தவனே  அதன்  பயனை  நுகர்வானா ?  அல்லது  வேறு  ஒருவன்  நுகர்வானா?  அல்லது  அவனும்  மற்றவர்களும்  சேர்ந்து  நுகர்வார்களா ?  அல்லது  வினை  செய்தவர்களுக்கு  நுகர்ச்சி  இல்லையா ?  என்று  கேட்டாள்  நீலகேசி.  வினை  செய்தவன்  அப்பயனை  நுகர்வான்  என்றும்  கூறமாட்டேன்.  வேறு  ஒருவன்  நுகர்வான்  என்றும்  கூறமாட்டேன்  அவனும்  பிறனுமாகிய  இருவரும்  நுகரான்  என்பதும்  பொருந்தாது.  பின்  யார்  தான்  வினைப்பயனை  நுகர்வான்  என்பதை  கூறுகிறேன்  என்றார்  புத்தர்.

 

நட்ட  விதையாகவும்  இன்றி  நட்ட  விதை  பயிராகவும்  இன்றி

விதையும்  பயிரும்  இரண்டாகவுமின்றி  கன்னல்  தரும்  கரும்பைப் போல

கதிர் தொங்கும் நெல்லில்  இருந்து  காய்ந்த பொன் நெல்லைப் போல

வினைதரும் பயன்கள் நுகர்வை  பொதுவாக  கருதிடு  என்றான்  புத்தன்          340

 

நீலகேசியே,  நிலத்தில்  நடப்பட்ட  விதையாகவும்  இல்லாமல்,  அவ்விதையில்  இருந்து  தோன்றிய  பயிராகவும்  இல்லாமல்,  விதையும்  பயிரும்  ஆகிய  இரண்டும்  இல்லாமல்,  இனிய  கரும்பில்  இருந்து  தோன்றிய  கரும்பைப் போலவும்,  நெல்லில்  இருந்து  தோன்றிய  நெல்லைப் போலவும்  வினை  நுகர்வினை  நீ  பொதுவாக  கருதிக்கொள்  என்றார்  புத்தர்.

 

காணும்  குதிரை  ஆணில்லையெனில் அக்குதிரை பெண்னாவது போல்

வினை செய்தவன் பயன் நுகரானெனில் வேறு ஒருவன் பயன் நுகர்வான்

கண் போன்றது  கயல்மீன் எனினும்  காடு  இல்லை இது தூறு  எனினும்

வினை செய்தவன் நுகர்வதில்லை வேறொருவன் நுகர்வான் என்கிறாய்            341

 

            நாம்  கண்ணால்  காணுகின்ற  குதிரை  ஒன்று  ஆண்  அன்று  என்றால்,  அக்குதிரை  பெண் குதிரையே  என்பது  நிச்சயம்  ஆகிறது  அல்லவா.   அதுபோல்,  வினை  செய்தவன்  பயனை  நுகரமாட்டான்  என்றால்,  அப்பயனை  வேறு  ஒருவன்  நுகர்வான்  என்பது  அறியப்படும்.  கண்  ஆனது  கயல்  போல்  உள்ளது  என்று  உவமை   சொன்னாலும்,  இது  காடு  இல்லை  கிணறு  தான்  என்று  பொய்யாக  கூறினாலும்,  செய்தவன்  என்றெல்லாம்  நீ  எப்படி  எடுத்து  விவரித்தலும்,  உன்  கருத்து  வினைசெய்தவன்  இருக்க,  வேறு  ஒருவன்  அதன்  பயனை  நுகர்வான்  என்பதேயாகும்  என்றாள்.

 

செய்தவன்  பயனை நுகரான் எனில்   செய்த  வினைகள்  பாழாயிற்றே

நல்லறம்  செய்தவன் இறந்தால்  தேவனாய் பிறப்பவன்  வேறோ

ஒருவன் செய்த  வினையின் பயன் வேறு ஒருவனுக்கு  எனும் உம் கூற்று

அறிவுடைய  சான்றோர்களால்  அணு  அளவும்  ஏற்புடைதன்று                        342

 

            வினை  செய்தவன்  பயனை  என்றும்  நுகரமாட்டான்  என்ற  உம்  கூற்றுப்படி  பார்த்தால்  அவன்  செய்தவினைகள்  எல்லாம்  பாழாகி  விட்டதாய்  அர்த்தமாகும்.  நல்வினைகளை  உண்டாக்கும்,  நல்லறங்களை  செய்தவன் ஒருவன்  இறந்து  போனால்,  தேவனாகப்  வேறு  ஒருவன் பிறப்பான்  என்பதாகிறதே..  ஒருவன்  செய்த  வினையின்  பயனை,  வேறு  ஒருவன்  அனுபவிப்பான்  என்று  நீர்  கூறும்  விவாதத்தை  அறிவுடைய  சான்றோர்கள்  யாரும்  ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்  என்றாள்  நீலகேசி.

 

வினை  செய்தோன் மாண்டு போனால்  வழித்தோன்றல் பயன் நுகர்வான்

இது யான்  கண்டு  சொல்லும்  இறவா மெய் தத்துவம் என்றான்  புத்தன்

எவர்  வினைகள்  செய்திட்டாலும்  இருள்  சேர்  இருவினையும்  எய்தார்

பிறர்  எய்து பயன் நுகர்வாரென  புத்தனே உன் தத்துவமே  என்றாள் கேசி  343

 

            வினை  செய்த  ஒருவன்  இறந்து  போனால்,  அவனுடைய  வழித்தோன்றல்களான  வாரிசுகள்,  அவன்  செய்த  வினைப்பயன்களை  நுகர்வார்கள்.  இது  நான்  கண்டு  அறிந்த,  இறவா  மெய்த்தத்துவம்  ஆகும்  என்றார்  புத்தன்.   யாரானாலும்,  எந்தவகையான  வினைகளைச்  செய்தாலும்,  இருளைப்  போன்ற  கொடுமையான  இருவினைகளைச்  செய்தாலும்,  அதன்  பயன்களை  அவர்கள்  அனுபவிக்கமாட்டார்கள்.  அவற்றை  பிறரே  எய்துவார்  என்பது  தானே  உன்  கருத்து  என்றாள்.  அதற்கு  பதில்  அளிக்க  இயலாத  புத்தன்  சிந்திக்க  துவங்கினார்.

 

தலை, கண், உடல், உறுப்பு, மனைவியை  தானமாய்  பிறருக்கு  தந்தாய்

நற்பயன்  உண்டென்ற  கருத்தில்  நல்வினைகள் இதை  செய்தாயன்றோ

கணபங்கம்  என்னும்  கருத்தால்  வினைப்பயன்  கூறும்  உன்  முயற்சி

தினையளவும்  கைத் தேறாது  தெளிந்திடு  புத்தனே  என்றாள்  நீலகேசி            344

 

            ஐயா,  உன்  கண்களையும்,  தலையையும்,  உடல்  தசையையும்,  பிற  உறுப்புகளையும்,  உன்  மனைவியையும்  இரப்போர்க்கு  வழங்கி,  இவைகளைச்  செய்வதால்  நற்பயன்  உண்டென்று  கருதி,  நல்வினைகளைச்  செய்தாயோ.  கணபங்கம்  என்னும்  உம்  கருத்தால்  வினைப்பயன்  தன்மையை  விவரித்து  கூறும்  உம்  முயற்சி, ஒரு  தினையளவும்  தேறாது  என்பதை  உணர்ந்து  கொள்வாயாக  என்றாள்  நீலகேசி.

 

ஒழிவறக் கெடுதல் என்னும்  உன்  கருத்தைக்  கைவிட்டாயெனில்

பொருள்களின்  கெடுதல்  கெடாமை  தத்துவம்  உனக்குப் புரியும்

கணபங்கம்  என்னும்  கருத்தால்  வினையாளன்  பயன் நுகரான் கருத்தை

சாக்கிய  சங்கத்தோர்  கூடி  ஆய்ந்து   சரியான  விடை  கூறுமென்றாள்            345

 

            புத்தரே,  ஒழிக  அறக்  கெடுதல்  என்ற  நின்  கருத்தை  கைவிட்டால்,  அப்பொழுது  பொருள்கள்  கெடுதலும்,  கெடாமையும்  என்று  யாம்  கூறும்  தத்துவம்  உண்மை  என்பதும்  விளங்கும்.  கணபங்கம்  என்னும்  நின்  கருத்தால்,  வினை  செய்தவனுக்கு  எந்த  பயனும்  இல்லை  என்ற  முடிவு  தான்  ஏற்படும்.  எனவே  புத்தசமயத்தைச்  சேர்ந்த  பலரும்  ஒன்று  கூடி,  ஆராய்ந்து  எனக்கு  சரியான  விடைகூறும்  என்றாள்  நீலகேசி.

 

பொருள்களின்  நிலையாமைத்  தன்மை  பொருந்தாது  எல்லா வகையிலும்

நிலையாமை  ஒருவகையில்  அமையும்  நிலைத்தல்  ஒருவகையில் அமையும்

நிலையாமை  என்னும் தன்மையும்  நிலைத்தல்  என்னும்  தன்மையும்

சேர்ந்ததே பொருள் என்னும் கருத்தை தெளிந்து ஏற்றான் புத்தன்  அன்று    346

 

            புத்தரே,  பொருள்களுக்கு  நிலையாமை  என்னும்  தன்மை  எல்லாவகையிலும்  அமைவது  இல்லை.  ஒருவகையால்  அமையும்.  அதுபோல்  நிலைத்தல்  என்ற  தன்மையும்  ஒருவகையால்  அமையும்.  எனவே  ஒருவகையில் நிலையாமை  என்னும்  தன்மையும், மறுவகையில்  நிலைத்தல்  என்னும்  தன்மையும்  பொருளிடத்தே  காணப்படும்.  எனவே,  அறவே  கெடுதல்  என்ற  தன்மை  அல்லாதது  பொருள்  என்னும்  என்  கருத்தை  நீர்  ஏற்றுகொள்வாய்  என்றாள்  நீலகேசி.

 

அருகனின்  திருமொழி உணர்த்தும்  மெய்நூலை  ஓதி உணர்ந்தால்

எச்சமயத்தின்  சார்பும்  இன்றியே எய்தலாம்  வீடுபேறை  முறையாய்

புத்தனே  இத்தத்துவம்  புரிந்து  பின்பற்றி  நடப்பாய்  எனக்  கூறி

நீலகேசி  புறப்பட்டு  சென்றாள்  அருகன்  நெறியை  அவனிக்கு  கூற             347

 

            புத்தரே,  அருகன்  திருமொழி  உணர்த்தும்  மெய்நூல்களைப்  பயின்றுணர்ந்தால்,  எச்சமயத்தைச்  சார்ந்தவராயினும்,  தாம்  எண்ணிய  வீடுபேற்றை  முறையாக  எய்துவர்.  எனவே  நீ  மறைமுகமாகவோ  அல்லது  வேறுவகையிலோ  இத்தத்துவத்தை  மனநிறைவோடு   ஏற்று  வழிநடப்பாயாக  என்றாள்  நீலகேசி.  இவ்வாறு  கூறிய  நீலகேசி  அருகன்  அறநெறியினை  பரப்புவதற்கு  புறப்பட்டு  சென்றாள்.

 

 

                        புத்த  வாதச்  சருக்கம்  முற்றும்.

 

 

6.  ஆசீவக  வாதச்  சருக்கம்.

 

 

கண்கிட்டும்  அழகு  மிகுந்த  கபிலபுரத்தை  விட்டு  நீலகேசி

காதி அகாதி  வினைகள்  நீக்கிய  காதிரொளி  மேனியுடையான்

கடையிலா  நான்கும்  பெற்ற  கேவலக்  ஞானியான

அருகனை  மனதில்  போற்றி  தொழுதிட  தொடங்கினாள்  அவள்                   348

           

அகன்று  உயர்ந்த  மலைபோலும்  தோற்றமுடைய  நீலகேசி,  கண்  நிறைந்த  அழகு  நிரம்பிய  கபிலபுரத்தை  விட்டு  புறப்பட்டாள்.  கபிலபுரத்தைக்  கடந்து  வான்வழியே  சென்றாள்.  காதிவினைகளாகிய  ஞானாவரணீயம்  முதலிய  நான்கையும்  நீக்கி,  ஒளிரும்  திருமேனி  உடைய,  கேவலக் ஞானியான  அருகனை,  மனதில்  போற்றி  வணங்கத்  தொடங்கினாள்  நீலகேசி.

 

அங்க  ஆகமத்தை  அருளிய  அருகனின்  விரிந்த  நூலின்

ஏழு  பங்கி  நயத்தைச்  சாரா  எந்த  சமய  நூல்களும்  இல்லை

அன்றலர்ந்த  மலர்களெல்லாம்  அருகனடிச்  சேராவிட்டால்

மலர்களுக்கும்  சிறாப்பில்லை  மலர்  மலர்ந்து  பயனும்  இல்லை                    349

 

            அங்க  ஆகமத்தைத்  திருவாய்  மலர்ந்தருளிய  அருகக்கடவுளின்,  கடல்  போன்று  விரிந்த  நூலில்  கூறப்பட்ட,  ஏழு  பங்கி  நயத்தைச்  சாராத  கருத்து  ஏதேனும்,  பிற  சமயப்  பெரியோர்களின்  நூல்களும்  உள்ளதோ.  தினம்  தினம்  கொடிகளில்  மலரும்  பூக்களெல்லாம்  எம்  அருக  பெருமானின்  திருவடிகளைச்  சேராவிட்டால்,அம்மலர்களுக்கும்  சிறப்புகள்  ஏதும்  இல்லை,  அம்மலர்கள்  மலர்ந்தும்  பயன்  ஏதும்  இல்லை  என  வணங்கினாள்.

 

ஆகமங்கள்  நல்லொழுக்கத்தை  அறிவுருத்தா  உயர்  நெறிகளில்லை

தீர்த்தங்கரர்கள்  என  அழைக்கும்  திருப்  பெயரில்லா  கடவுளுமில்லை

பகு  சுருத  ஆகமத்தை  சாராத  பக்தி  உரைக்கும்  நூலுமில்லை

ஆன்றோர்கள்  கற்று  உரைக்கும்  நூல்கள்  அருகனருளிய  ஆகமங்கள்            350

 

            பூர்வ  ஆகமத்தைத்  திவியத் தொனியாலே  மலர்ந்தருளிய  அருகக் கடவுளின்,  கடல்  போல்  விரிந்த  அந்நூல்களில்  கூறப்பட்ட  நல்லொழுக்கங்களை  சாராத  உயர்ந்த  நெறிகள்  ஏதும்  இல்லை.  அவ்வாறே  தீர்த்தங்கரர்கள்  என்னும்  திருப்பெயர்  பெறாத  கடவுள்களும்  இல்லை.  அருகன்  அருளிய  பகுசுருத  ஆகமத்தை சாராத,  பக்தி  உரைக்கும்  நூல்களும்  இல்லை.  ஆன்றோர்கள்  கற்று,  தெளிந்து,  அவர்கள்  உரைக்கும்  நூல்கள்  அருகன்  அருளிய  ஆகமங்களேயாகும்.

 

மலரும்  சந்தனமும்  வைத்து  மாலவன்  அருகனைத்  தொழுவோம்

மற்ற  வேறு  இறைவனை  நினையோம்  மனதினில்  நன்மைகள் பெறுவோம்

இரண்டு  திருவடிகளை  நினைத்து  இன்புற்று  போற்றுவதாலே

இணையடிகள்  எம்  துன்பம்  நீக்க  ஈடில்லா  வீடுபேறடைவோம்                     351

 

            அன்றலர்ந்த  மலர்களையும்,  மணம்  வீசுகின்ற  சந்தனத்தையும்  அருக  பெருமானின்  திருவடிகளில்  வைத்து  வணங்குவோம்.  வேறு  எந்த  கடவுள்களையும்  மனதில்  இறைவனாக  நினைக்கமாட்டோம்.  மனதில்  பல  நன்மைகளைப்  பெறுவோம்.  அருகனின்  இரன்டு  திருவடிகளை  எப்போதும்  நினைத்து,  மனம் , மொழி,  காயங்களால்  இன்பம்  பெற்று  வாழுவோம்.  அந்த  இணையடிகளை  நாம்  பற்றித்  தொழுதாலே,  நம்  துன்பங்கள்  எல்லாம்  நீங்கி  ஈடில்லா  வீடுபேற்றை  அடையலாம்.

 

மனம், மொழி,  மெய்  மூன்றாலும் முக்குடை  நாயகனை  வணங்கி

மூவுலகம்,  முக்காலம்  உணர்ந்த  முழு  ஞானத்தலைவனைப்  போற்றி

தன்னுடன்  ஒருங்கே  இணைந்த  பழைய வினைகள்  யாவும்  கெடவேண்டி

உறையூரில் இருந்து புறப்பட்டு  சமதண்டம்  ஊரை  அடைந்தாள்                    352

 

            நீலகேசி,  மனம்,  வாக்கு,  காயத்துடன்  ஒன்று  சேர,  முக்குடை  நாயகனின்  திருவடிகளை  வணங்கி,  மூன்று  உலகத்தையும்,  மூன்று  காலங்களையும்  தன்னுடைய  ஞானத்தால்  அறிந்தவனை  போற்றிப்பாடி,  தன்னுடன்  ஒருங்கே  இணைந்த  பழய  வினைகள்  எல்லாம்  பொடித்தோடி  செல்ல,  மனம்  உருக  வேண்டி,  உறையூரில்  இருந்து  புறப்பட்டு  சமதண்டம்  ஊரை  அடைந்தாள்.

 

மலர்  கொடிகள்  மணந்து  வீசும்  மாதவப்  பள்ளியினைக் கண்டாள்

மன இன்பம்  தரும்  இப்பள்ளியில்  மாதவத்தார்  யாரென கேட்டாள்

காரியம்  நிகழ்வதற்கெல்லாம்  காரணம்  தேவை  இல்லை  என்ற

கொள்கையை  சமயமாய்  கொண்ட  ஆசீவக சமய  பூரணன் என்றனர்            353

 

            மணங்கமழும்  மலர்கள்  பூத்து  குலுங்கும்  கொடிகளை  கொண்ட  ஒரு  பெரும்  பள்ளியின்  முன்  கூடியிருந்த  துறவோர்களைக்  கண்டாள்  நீலகேசி.  அவர்களிடம்  மனதிற்கு  மிகவும்  இன்பம்  பயக்கும்  இந்த  பள்ளியில்  யார்  இருக்கிறார்கள்  என்று  கேட்டாள்.  காரியம்  நிகழ்வதற்கெல்லாம்  காரணம்  தேவையில்லை  என்ற  கொள்கையை  உடைய,  ஆசீவக  மதத்தைச்  சேர்ந்த  பூரணன்  என்பவர்  உள்ளார்  என்றனர்.,

 

சமணமும்  ஆசீவகமும் ஒன்றென்ற  சாரத்தைக் கொண்டிருந்த காலத்தில்

நீலகேசி  சமணம்  சார்ந்தவளென்ற  நிலையினை உணர்ந்தான் பூரணன்

கார்முகில்  கூந்தலை  உடைய   பொற்கொடி  நீலகேசியே  கேட்பாய்

மெய்காட்சி உடைய இவர்கள் முற்றும் துறந்த ஆசீவக துறவிகளென்றான் 354

 

            சமணமும்,  ஆசீவகமும்  ஒத்த  கொள்கைகளையுடை  ஒரே  சமயந்தான்  என்ற  சாரத்தை,  மக்கள்  மனதில்  கொண்டிருந்த  காலத்தில்,  தெய்வப்பெண்ணான  நீலகேசியை  சமணத்தைச்  சேர்ந்தவள்  என்று  பூரணன்  உணர்ந்தான்.  கரிய  மேகங்கள்  கவிழ்ந்த  கூந்தலை  உடைய  நீலகேசியே    மயக்கம்  தீர்ந்த  மெய்காட்சியை  உடைய  பெருந்தவத்தோர்களாகிய  இவர்கள்,  முற்றும்  துறந்த  ஆசீவக  மதத்துறவிகள்  என்றான்.

 

ஆசீவகப்  பெருந்தலைவனையும்  அச்சமயத்தின்  பொருள் நிகழ்வையும்

விரிவாகப்  பகுத்துக்  கூறின்  விளைந்திடும்  பயன்  என்றாள்  கேசி

மற்கலி  என்னும்  பெயருடையோன்  ஆசீவக  சமயத்  தலைவனாவான்

நவகதிர்  என்னும்  நூல்  தான்  எம்  சமய  அறநூல்  என்றான்  பூரணன்            355

 

            மெய்நூலறிவில்  தன்னிகரற்று  விளங்கிய  நீலகேசி,  பூரணனை  நோக்கி,  ஐயா,  உம்  ஆசீவகத்  தலைவனையும்,  உம்  சமயம்  உணர்த்தும்  பொருள்களையும்,  அதன்  நிகழ்வுகளையும்,  விரிவாக  விவரித்து  சொன்னால்,  எனக்கு  பயன்படும்  என்றாள்.  அவள்  கூறியதைக்  கேட்ட  பூரணன்,  எம்  சமயத்தலைவனின்  பெயர்  மற்கலி,  அவரே  ஆசீவக  சமயத்தின்  தலைவர்.  அவர்  இயற்றிய  எம்  சமய  நூல்  நவகதிர்  என்று  கூறினான்.

 

ஐந்து  பொருள்  இயல்பாய்  உண்டு  ஆழ்தல்,  மிதத்தல்,  நிகழ்வுகளாகும்

மற்கலி  வாய்  அடக்கம்  கொண்டான்  மற்ற  நுகர்ச்சி  ஏதும்  இல்லான்

உடல்  திரைதல்,  மயிர்  நரைத்தலின்றி  ஓவியத்தில்  எழுதா  எழிலோன்

குற்றமற்ற மெய் அறிவினால் குன்றாப் புகழுடையோனென்றான்பூரணன்356

 

            மேலும், எம்  தலைவன்  கண்டு  உணர்த்திய  பொருள்கள்  ஐந்தாகும்.   அவ்வைந்து  பொருள்களும்  இயல்பாய்  உள்ளன.  அதன்  நிகழ்ச்சிகள்  என்பன  ஆழ்தலும்,  மிதத்தலும்  ஆகும்.  எம்  இறைவனான  மற்கலி,  முழுதும்  உணர்ந்தவன்  ஆகையால்  வாய்  திறந்து  பேசாமல்  அடங்கி  இருப்பவன்.  பேச்சு  இல்லாதவனாகிய  எம்  இறைவன்  மற்ற  நுகர்ச்சிகள்  ஏதும்  இல்லாதவன்.  உடல்  முதுமை  அடைதல்,  தலைமுடி  நரைத்தலேதும்  இன்றி,  ஒவியத்திலும்  வரைய  முடியாத  அழகு  பொருந்தியவன்.  குற்றமற்ற  மெய்யறிவினால்  சான்றோர்களால்  என்றும்  புகழப்படுபவன்  என்றான்  பூரணன்.

( ஐந்து பொருள். : 1.நில அணு. 2. நீர் அணு.  3. தீயணு.  4. காற்று அணு.5. உயிரணு) 

 

நிலம், நீர்,  நெருப்பு, காற்று, உயிர்  ஐம்பொருளின்  இயல்பை உரைப்பேன்

நிலத்திற்கு  ஒலியைத்  தவிர  ஊறு, உருவம், சுவை, நான்கும்  உண்டு

நீரின்  தன்மை  குளிர்ச்சி என்றும்  நெருப்பின்  தன்மை  எரித்தலாகும்

வாயுகுணம் அறைதலும்,இரைதலும் உயிரது அறியும் அறிவாகுமென்றான்357

 

            நிலம், நீர்,  நெருப்பு,  காற்று,  உயிர்  என்ற  இந்த  ஐந்து  பொருள்களின்  இயல்பினை  உரைக்கிறேன். முதலில்  கூறப்படும்  நிலத்திற்கு  செவிப்புலனாகிய  ஒலியைத் தவிர,  ஊறு,  உருவம்,  சுவை,  நாற்றம்  அனைத்தும்  உடையது.  நீரினது  தன்மையானது  குளிர்ச்சியாகும்.  நெருப்பின்  தன்மை  வெப்பத்துடன்  எரித்தல்  ஆகும்.    வாயுவின்  குணம்  பெரும்  சத்தமும்  அறையும்  தன்மையாகும்.  அறிதலும்,  அறிவித்தலும்  உயிரின்  தன்மைகள்  ஆகும்  என்றான்.

 

ஐந்தும்  அணுக்கூட்டங்களாகும்  அணுக்களும்  அழிவற்றன  ஆகும்

அணுக்கள்  தம்முள்  கூடும்  பிரியும்  ஒன்றினுள்  ஒன்று  அடங்கியிருக்கும்

குணமும், குணியும்  ஒன்றே  ஆகும்  குணமென  ஒன்று  தனியே  இல்லை

காலம்  என்ற பொருளொன்றில்லையென  கருதுவது எம் தத்துவமாகும்            358

 

            மேல்  கூறிய  ஐந்தும்  அணுக்கூட்டங்கள்  ஆகும்.  அணுக்களும்  அழிவற்றன  ஆகும்.  இந்த  அணுக்கள்  தம்முள்  கூடும்,  பிரியும்,  ஒன்றினுல்  ஒன்று  அடங்கி  இருக்கும்.  ஆயினும்  உட்புகுதால்  இல்லை  என்போம்.  குணமும்,  பண்பும்  ஒன்றே  என்பது  எங்கள்  கருத்து.  ஆகையால்  குணம்  என்று  ஒன்று  தனியே  இல்லை.  கணம்  உண்டு  என்றாலும்,  காலம்  என்று  ஒன்று  இல்லை  என்பதே எங்கள்  கருத்தாகும்  என்றான்  பூரணன்.

 

முழுதுணர்ந்த  மற்கலியானவன்  மூடிய  வாய்  திறவாததனால்

உயிர்களிடம்  வெறுப்பைக்  கொண்டு உணர்ந்த அறத்தை கூறாதவனாவான்

ஒக்கலி, ஒகலி  தெய்வங்களிரண்டும்  உமது நூலைப்  படைத்தது  என்றீர்

மற்கலி  போல மௌனமாய்  அவையும்  வாயடக்கம் வேண்டுமென்றாள்           359

 

            எண்ணறிவாலும்,  எழுத்தறிவாலும்  உயர்ந்த  சான்றோர்கள்  முன்னிலையில்  பூரணனின்  கருத்துகளில்  உள்ள  பொருள்கள்  பொருந்தாமையால்,  நீலகேசி  கூறத்தொடங்கினாள்.  முழுதும்  உணர்ந்த  நும்  தலைவன்,  பிறருக்கு  எதையும்  கூறாமல்  வாய்மூடி  இருப்பானாயின்,  அவனால்  அறியப்பட்ட  உயிர்கள்  எல்லாவற்றின்  மேலும்  வெறுப்பு  அடையவனாகிறான்.  தான்  உணர்ந்த  அறங்களை  மற்றவர்களுக்கு  கூறாதவன்  ஆகிறான்.  ஒக்கலி,  ஒகலி  என்னும்  இரண்டு  தெய்வங்கள்  உம்  சமயநூலை  படைத்ததாய்  கூறுகிறாய்.  அத்தெய்வங்கள்  இரண்டும்,  மற்கலியாரைப்போல்  முழுதும்  அறிந்தவையானால்  அவைகளும்  பேசாமல்  வாய்மூடி  இருக்கவேண்டும்  என்றாள்  நீலகேசி.

 

வாய்  திறந்து  அறத்தை கூறினால்  வந்திடும்  அன்பும்,  கோபமுமானால்

உயிர்களை  வதைத்த  தீவினையை  உன்  தலைவன்  எய்துவான் என்றாய்

முற்றும் உணர்ந்த  ஞானியானவன்  மீண்டும்  பிறப்பு  வாராதிருக்க

மற்கலி பேசான் என்பதாயின் மலைகளும்,மரங்களும் தலைவர்களாகும்   360

 

            முழுதும்  உணர்ந்தவனான  உம்  தலைவன்,  வாய்  திறந்து  பேசினால்,  அறத்தைக்  கூறினால்,  உயிர்கள்  மேல்  அன்பும்  கோபமும்  உடையவனாகி,  உயிர்களைக்  கொன்ற  தீவினையை  அடைந்தவனாகிறான்  என்று  கூறினாய்.  நீயும்  உம்  தலைவன்  போல்  வாய்  பேசாது  அடங்கி,  சமயத்தலைவன்  ஆகலாமே.  மேலும்,  முற்றும்  உணர்ந்த  ஞானியானவன்,  பிறவிச்சுழலில்  இருந்து  விலக,  மற்கலி  பேசாதிருப்பானாயின்,  மலைகளும்,  மரங்களும்  கூட  சமயத்தலைவர்கள்  ஆகலாமே  என்றாள்  நீலகேசி.

 

 

பேசினால் குற்றம் வரும் என்றால்  பிற, நடத்தல் முதலியவை குற்றமாகும்

எச்செயலும்  இன்றி இருப்பது  உயிரற்ற  உடலே  என்றாள்  நீலகேசி

நிறம், நாற்றம், சுவை, ஊறு  நான்கும்  நிலத்தின்  நான்கு  பால்களாயின

எஞ்சிய நீர்,நெருப்பு,காற்றிலும் ஏதேனும் பால்கள் இருக்குமோ என்றாள்    361

 

            உம்  தலைவன்  பேசினால்  குற்றம்  வரும்  எனில்,  கை , கால்  முதலியவற்றை  அசைத்தலும்,  மூச்சை  விட்டு  நடப்பதும்,  தன்  உறுப்புகளைத்தன்  கட்டுப்பாட்டில்  வைத்திருப்பதும்  குற்றம்  அல்லவா.  மேலும்  இந்த  செயல்கள்  ஏதும்  இன்றி  இருப்பவன்  என்று  நீர் கூறினால்,  உம்  தலைவன்  உயிரற்ற  உடல்  தானே.  நிறம்,  நாற்றம்,  சுவை,  ஊறு  நான்கும்  நிலத்தின்  பண்புகள்  என்கிறாய்,  எஞ்சியுள்ளநீர்,  நெருப்பு,  காற்றுகளுக்கும்  ஏதேனும்  பண்புகள்  இருக்கவேண்டுமே  என்றாள்  நீலகேசி. (  பால்  :  பண்பு )

 

இங்குரைத்த  ஐம்பொருள்களின்றி  இருள்  என்ற  ஓர்  பொருளும்  உண்டு

இப்பொருள்  எதில் அடங்குமென  இயம்பிடு  பூரணனே  என்றாள்  கேசி

அவ்வைந்து  பொருள்கள்  எதிலும்  இருள் அடங்காதென  கூறினால்

அறியாமை  என்னும்  இருளில் நீயும்  அமிழ்ந்துள்ளாய் என்றாள் நீலகேசி        362

 

            ஐந்து  பொருள்கள்  என்று  உன்னால்  கூறப்பட்ட  நிலம்  முதலியன  தவிர,  இருள்  என்ற  ஒரு  பொருளும்  உள்ளது.  உனக்கு  தெரியும்.  அந்த  இருள்  ஆனது  இந்த  ஐந்தினுள்  எதில்  அடங்கும்  என்று  சொல்  பூரணனே.  இந்த  ஐந்து  பொருள்களுள்  எதிலும்  இருள்  அடங்காது  என்று கூறுவாயாகில், அறியாமை  என்னும்  இருளில்  நீயும்    உள்ளாய்  என்பது  தவிர  வேறு  என்னவாகும்  என்றாள்  நீலகேசி.

 

உள்ளது  கெடாது  என்று  கூறினாய்  உணவு  மலம்  ஆவது  எப்படி

இல்லாதது  தோன்றாது  என்றால்  உணவில்  மலம்  கலந்ததே  ஆகும்

அறநெறியில்  வறியோர்க்கு  உதவ  அறநெறி  கூறும்  உம்  தலைவன்

நவின்றிடும்  அவன்  தத்துவத்தால்  நற்பயன்   எய்தல்  இயலாததாகும்       363

 

            எந்த  வகையில்  உள்ளது  கெடாது  என்று  கூறுகிறாய்.  உண்ட உணவு  சீரணம்  ஆன  பின்  மலம்  ஆவது எவ்வாறு.  இது  உள்ளது  கெடாது  என்று  நீ  கூறுவது,  தவறல்லவா.  இல்லாதது  தோன்றாது  என்கிறாய். அவ்வாறானால், ஒருவர்  சாப்பிடும்  தூய உணவில்,  தூய்மையற்ற  மலமும்  கலந்து,  மறைந்து  உள்ளது  என்றுதானே  பொருளாகிறது. அறநெறியில்  நின்று,  வறியவர்களுக்கு  உதவுங்கள்.  உங்கள்  தேவைக்கு  உணவு  உண்டு,  எஞ்சியவற்றை  எளியவருக்கு  தாருங்கள்  என்று  கூறும்  உம்  தலைவன்,  அவ்வாறு  தானம்  செய்பவர்களுக்கு  எந்தவிதமான  நற்பயன்களும்  கிடைக்காது  என்று  கூறுகிறானே.  இது  எவ்வாறு  பொருந்தும்.

 

இல்லாத  பொருள்  தோன்றாதென்றும்  உள்ள பொருள் கெடாது என்றாய்

நெய்யிடத்து முன்  இல்லாத  நெருப்பு  தோன்றி  சுடுவது  எவ்வாறென்றாள்

ஒன்றினுள்  ஒன்று  பொருள்கள்  உட்புக  இடம்  தராது  என்றாய்

சுடர் முன்பே நெய்யுள் இருந்ததாய் துணிந்து  சொல்ல இயலாதுன்னால் 364

 

            இல்லாத  பொருள்  தோன்றாது  என்றும்,  உள்ள  பொருள்  கெடாது  என்றும்  உன்  தத்துவம்  கூறுகிறது.  அவ்வாறாயின்,  நெய்யிடத்து  முன்பு  இல்லாத  தீ  தோன்றி  சுடுவது  எப்படி,  என்று  கேட்கும்  எனக்கு  உன்னால்  விடைகூற  இயலாது.  உன்  கருத்தின்படி,  பொருள்கள்  ஒன்றினுள்  ஒன்று   உட்புகுவதற்கு  இடம்  தராது  என்கிறாய்.  அப்படியானால்,  சுடரானது  முன்பே  நெய்யினுள்  புகுந்திருந்தது  என்று  கூற  இயலாதே.  நெய்  விழுதாய்  இருக்கும்போது  நெருப்பு  அங்கு  மறைந்திருக்க  இயலாது  அல்லவா  என்றாள்  நீலகேசி.

 

நிறம்  முதலிய  பண்பை  ஆய்ந்து  அப்பொருள்  தான்  என்று  கூறினால்

காய்  இடம்  காணும்  பசுமை  நிறம்  கனிந்த  பின்  காண  வேண்டும்

தொழில்,  குணம்  வடிவச்  சொற்கள்  தனித்தனி  சொற்களாயினும்

குற்றமற்ற பொருளோடு  பொருந்தி  எழுத்ததிகாய இலக்கணம் அடையும் 365

 

            நிறம்  முதலிய  பண்புகளை  ஆராய்ந்து,  அப்பொருள்  தான்  என்றால்,  இளமையான  காயினிடத்தில்  காணும்  பசுமையான  நிறம்,  அது  முதிர்ந்து  கனியான  பின்பும்  காண  வேண்டுமே.  தொழிலைக்  குறிக்கின்ற  சொற்கள்,  குணத்தைக்  குறிக்கின்ற  சொற்கள்,  வடிவத்தைக்  குறிக்கின்ற  சொற்கள்  ஆகிய  மூன்றும்  தனிதனியாக  பிரிந்து  நிற்கின்ற   போது  குற்றமற்ற  சொற்களாகவே  உள்ளன.  எழுத்ததிகாரத்து  இலக்கணப்படி  பொருந்துவதை  நாம்  எப்போதும்  பார்க்கிறோம்.  நீ  இவற்றையெல்லாம்  இல்லை  என்று  சொல்வதால்,  உன்  சொற்கள்  பொருளற்றவையாகின்றன.

 

நான்கு வகை ஆக்கமுறைகளை பொருள்கள் எல்லாம்  உடையனவென்றாய்

அக்கூற்றில்  குற்றம்  உள்ளது  அறிந்து  கொள்  விளக்குவேன்  என்றாள்

குழந்தையின்  அரிவைப்  பருவம்  வளர்ந்து மூன்று முழ உயரம்  ஆவதும்

வயதுக்கு வரும்  காலமடைதலும்  நான்குக்கும் உவமை என்றாள் நீலகேசி 366

 

            எல்லாப்  பொருள்களும்  நான்குவகை  ஆக்கமுறைகளை  உடையவே  என்று  கூறுகிறாய்.  அவற்றில்  குற்றம்  உண்டு  என்பதை  கூறி  விளக்குகிறேன்  அறிந்து  கொள்  என்றாள்.  ஒரு  குழந்தையானது,  அரிவைப்  பருவத்தை  அடைதல்,  உரிய  வகையில்  வளர்ச்சி  அடைதல்,  மூன்று  முழ உயரம்  வளர்தல்,  பிறகு  உரிய  வயதை  (  காலம்  )  அடைதல்  ஆகிய  நான்கையும்  உன்  எடுத்துக்காட்டுக்களாய்  கொள்ளலாம்.  என்றாள்  நீலகேசி.

( 4 வகை ஆக்கம்  : 1. பொருள்கள். 2. பொருள்கள் ஆதல். 3. பொருள்கள் ஆகும் முறை. 4. பொருள்கள் ஆகும் காலம். )

 

உள்ளது  கெடுவது  இல்லை என்பது  உன் கருத்தென  வாதிட்டாயானால்

மழலை  தன்  நிலை இழக்காது  மண்ணில் இட்ட  விதையும்  முளைக்காது

இல்லாதது  தோன்றாதென்றால்  இளம் மழலைக்கு  பற்களோடு

வயிற்றினில் பிள்ளையும் வேண்டும்  வளமான தனங்களும்  வேண்டும்            367

 

            உள்ளது  எப்போதும்  கெடுவதில்லை  என்பது  உன்  கருத்தானால்,  ஒரு  பெண்  தன்  குழவிப்பருவத்தை  இழந்திடமாட்டாள்.  நிலத்தில்  நடப்பட்ட  விதையும்  முளைத்தலின்றி,  விதையாகவே  நிலத்தில்  இருக்கும்.  இல்லாதது  தோன்றாது  என்பது  உன்  கருத்தானால்,  அப்பெண்  குழந்தையாய்  இருக்கும்  பொழுதே,  அம்மழலைக்கு  வாயில்  பற்களோடும்,  அழகிய  தனங்களோடும்,  வயிற்றில்  ஒரு  குழந்தையும்  இருக்க  வேண்டும்.  ஏனெனில்,  இவையெல்லாம்  பின்னர்  தோன்றமுடியாது  என்றுதானே  உன்  கொள்கை  ஆகிறது.

 

காரணம் உண்டென்றால் தான்  பொருள்களின் ஆக்கம் தோன்றும்

காரணம் ஒன்று இல்லை என்னும்  உன் கருத்தும் இங்கே அழியும்

பொருள்கள் என்றும் மாறுபாடின்றி  நிலைத்த தன்மை உடையதென்றாய்

நிலைத்தல், நிலையாமை  இரண்டும் பொருளியல்பு என்கிறது சமணம்            368

 

            எதற்கு  ஒரு  காரணம்  இருந்தால்  தான்  பொருள்களின்  ஆக்கம்  தோன்றும்.  நீ  கூறும்  காரணம்  ஒன்று  இல்லை  என்ற  கூற்று  இங்கு  பொய்யாகும்.  பொருள்கள்  என்றும்  மாறுபாடின்றி  நிலைத்த  தன்மை  உடையது  என்று  கூறுகிறாய்.  ஆனால்  சமணமோ  பொருள்களின்  இயல்பு  நிலைத்தலும்  நிலையாமையுமே  என்று  வலியுறுத்துகிறது.

 

பொருள்  ஓரிடத்தில் இருந்தால்  பொருளின் தன்மையும் உடன் இருக்கும்

உடம்பின் கண் உள்ள உயிரும்  உணர்வாகி உடம்பெங்கும் பரவும்

உயிரும்  உருவம் உடையதென்றால்  இறுதிவரை  துண்டுகளாக்கலாம்

உருவம் இல்லை என்பாயாயின்  உன் நூல் கருத்துக்கு முரண்பாடாகும்            369

 

            ஒரு  பொருள்  ஓரிடத்து  உள்ள  பொழுது,  அதன்  தன்மையும்  உடல்  இருத்தல்  இயல்பு  ஆகும்.  உடம்பினுள்  உள்ள  உயிரும்  உணர்வாகி,  உடம்பு  எங்கும்  பரவி  நிற்கும்.  ஒரு  உடலில்  தங்கியுள்ள  உயிர்,  உடலின்  பரப்பைத்தாண்டி,  நீள  அகலத்தில்  வானத்தில்  சென்று  நிற்க  வேண்டும்.  சிறந்த  பொருளான  உயிர்  உருவம்  உடையது  என்று  கூறப்படுவதால்  அதைத்  துண்டு  துண்டாக  வெட்ட  இயலும்.  உருவம்  இல்லாதது  என்று  கூறுவாயாகில்,  அப்படி  ஒருபொருள்  இருக்கமுடியாது  என்று  நீர்  கூறமுடியும்.  உன்  நூல்  கருத்துக்கு  முரண்பாடாகும்  என்றாள்  நீலகேசி.

 

தீயிம், உயிரும்  மேல்சீர் என்றும்  காற்று மட்டும் விலங்குசீர்  எனவும்

நீரும், நிலமும் கீழ்சீர்  எனவும்  நீங்கள்  கூறும்  தத்துவங்கள்  ஆகும்

நெருப்பும் உயிரும் மேலெழும் என்றால் நிலத்திலிருப்பது பொருந்தாதன்றோ

பிறப்பு,இறப்புஉயிரில்லையெனில் உயிர்மேல்சீரென்பதுஉண்மையில்லை370

 

            தீயும்  உயிரும்  மேல்சீர்  என்றும்,  காற்று  விலங்கு  சீர்  என்றும்,  நீரும்,  நிலமும்  கீழ்சீர்  என்றும்  உமது  நூல்கள்  கூறுகின்றன.  அவைகள்  உமது  தத்துவங்களாகும்.  இவற்றில்  மேல்சீர்  உடையன  மேல்  நோக்கி  எழும்  என்றும்,  விலங்குசீர்  உடையன  நெடுவிலங்கும்,  குறுவிலங்குமாய்  பக்கங்களில்  ஓடும்  என்றும்,  கீழ்சீர்  உடையன  கீழ்  நோக்கி  விழும்  என்றும்  கூறுகிறாய்.  நெருப்பும்,  உயிரும்  மேல்  நோக்கி  எழும்  என்றால்,  தமக்கு  இயன்ற  திசையை  நோக்கி  எழுந்து  செல்லாமல்  நிலத்தில்  இருப்பது  பொருத்தம்  இல்லையே.  உயிர்களுக்கு  இறத்தலும்  பிறத்தலுமான  நிகழ்வுகள்  உண்டு.  விலங்கு  சீராகவும்  அவை  பிறக்க  வேண்டும்  அல்லவா  என்றாள்.

 

காற்றை  விலங்குசீர் என்றால்  காற்றும்  ஒருநாள்  தென்றலாகும்

தென்றலான காற்றும்  திசைமாறி  வாடைக்காற்றாய் மாறுமொருநாள்

தென்றல் காற்று  வாடையாவதும்  வாடைகாற்று  தென்றலாவதும்

விலங்குசீர்  தன்மையில்லையென  விளக்கம் உன் தத்துவத்தில் அன்றோ       371

 

            காற்று  விலங்குசீர்  உடையது  என்றால்,  காற்று  ஒரு  நாள்  தென்றலாக  வீசும்,  ஒரு  நாள்  வாடைக்காற்றாக  திசை  மாறி  வீசும்.  காற்று  விலங்குசீர்  என்றால்  அது  மாறாத  தன்மையை  உடையதாய்  இருக்கவேண்டும்.  ஆனால்  இப்பகல்  வேளையிலேய,  தென்றல்  வாடையாவதும்,  வாடைகாற்று  தென்றல்  ஆவதும்  உண்டே.  உன்  தத்துவத்தில்  காற்று  விலங்குசீர்  இல்லையென  விளக்கம்  உண்டோ  என்றாள்  நீலகேசி.

 

நிலத்தில் தேங்கிய நீர் ஆவியாகி  முகிலின் கண் நிலைபெற்ற  பின்

மழைத்துளியக மண்ணில் விழுவது  மண்ணிலிருந்து ஆவியான நீரே

நீர்  என்றும் கீழ்ச்சீரென்றால்  மேல் சென்று மேகமானது எப்படி

விளக்கிசொல் உன் சமய முறையை விளக்கத்தின் உண்மையை ஏற்பேன்372

 

            பெருந்தவத்தையுடைய  துறவியே,  நிலத்தில்  தேங்கிய  நீர்,  முன்னதாக  ஆவியாக  மாறி,  மேகத்தில்  நிலைப்பெற்று,  பின்  மழைத்துளியாக  மண்ணில்  விழுகிறது.  அவ்வாறு  நிலத்தில்  விழுகின்ற  மழைத்துளி,  முன்பு  ஆவியாக  மாறிய  நீர்  தானே  தவிர  வேறில்லை.  நீர்  கீழ் நோக்கி  விழும்  கீழ்சீர்  என்றால்,  மேல்நோக்கி  சென்று  மேகமானது  எப்படி,  அதற்கான  விளக்கத்தை  உன்  சமயமுறைபடி  விளக்கிச்  சொன்னால்,  நானும்  உன்  கொள்கை  சரியானது  என்று  சொல்வேன்  என்றாள்.

 

நீலகேசி  பூரணனுக்கு  அறங்கூறல்  :

 

அறியாமை எனும் நேய்  எனைத் தாக்க அலைந்திட்டேன் பேயாக பலநாள்

தவமுனி சந்திரபட்டாரகரின்  தருமமாம் அமுதம் உண்டேன்

நல்லறமாகிய  அவ்வமுதத்தாலே  நான்  பெற்றேன்  மெய் உணர்வினை

அருகன் அருளிய அற அமுதுண்டு  பிறப்பினை நீக்கி விடுபேறடைவாய் 373

 

            அறியாமையாகிய  நோய்  கொண்டு,  நானும்  நற்குணங்கள்  ஏதுமின்றி  இருந்தேன்.  என்னைக்  கண்டவர்கள்  எல்லோரும்  என்னை  பேய்  என்று  இகழ்ந்தனர்.  அந்நிலையில்  தவத்தில்  பெரியோனாகிய  முனிச்சந்திர  பட்டாரகர்,  நீ  இதனை  உண்பாயாக  எனக்  கூறி,  நல்லறமாகிய  அமுதத்தை  வழங்கினார்.  நானும்  அதனால்  மெயுணர்வு  பெற்றேன்.  நீயும்  அருகன்  அருளிய  அறமாகிய  மருந்தை  உண்பாயாக.  உன்  மயக்க  நோயும்,  பிறவிப்பிணியும்  நீங்கி,  வீடுபேறு  அடைவாய்  என்றாள்  நீலகேசி.

 

உயிர்கட்கான  நோயை  ஆய்ந்து  நோய்க்கான காரணம் அறிந்து

நோய்க்கான சிறந்த மருந்தை  நோயாளிக்கு மருத்துவன்  தந்திட

நோயாளியும்  தவறாது  உண்டிட  நோயது  விலகுதல்  போன்று

நல்லாசிரியன் உன் நல்லற உரையே ஆன்ம நோயை அகற்றிடுமென்றாள்         374

 

            பல்வகையான  உயிர்களுக்கும்,  மருத்துவன்  நோய்  இன்னது  என்று  ஆராய்ந்து  அறிதல்  வேண்டும்.  உற்ற  நோய்க்கான  காரணத்தையும்  அறிதல்  வேண்டும்.  பின்னர்  அந்நோய்க்கான  மருந்தை  நோயாளிக்கு  மருத்துவன்  அறிந்து  கூறல்  வேண்டும்.  பின்பே  நோயானது  தீரும்.  நல்லாசிரியர்  தரும்  அறிவுரையும்  அத்தகையதே.  அதுமட்டுமே  ஆன்மநோயை  தீர்க்கவல்லது  என்றாள்.

 

பிறப்பு, மூப்பு, இறப்பு  மூன்றும்  உயிர்களின் முக்கிய நோய்களாகும்

நோய்க்கு  காரணம் நன்கு நோக்கிட செய்திடும் தீவினைகள் ஒன்றேயாகும்

பொய் காட்சி, அறிவு, ஒழுக்கம் சேர தீமை  பயக்கும் துன்பம் சேரும்

பயத்திடும் தீமை பனியென விலகிட மெய்யுணர்வே முழுமருந்தென்றாள் 375

 

            பிறப்பு,  மூப்பு,  இறப்பு  மூன்று  நோய்களும்  உயிரினைப்  பற்றிய  நோய்களாகும்.  அந்நோய்களுக்கான  காரணத்தை  ஆராய்ந்தால்,  தீவினைகளைச்  செய்தலே  என்று  புலப்படும்.  அத்தீவினைகளில்  உயிர்கள்  மூழ்குவதற்கு  முக்கிய  காரணம்  பொய்காட்சி,  பொய்யறிவு,  பொய் ஒழுக்கம்.  அத்தகைய  தீமை  பயக்கும்  துன்பங்களை  தீர்க்க  வல்லது  மெயுணர்வேயாகும்  என்றாள்  நீலகேசி.

 

நீலகேசி  அறிவுரை  கேட்டு  பூரணன்  கூறல்  :

 

விரலை  நின்ற  நிலையில்  நிறுத்தி  விரல்  நின்ற  நிலையென நவின்று

அவ்விரல்களை மடக்கிக் காட்டி  நின்ற நிலை மாறி மடங்கியதென்றும்

ஒரேவிரல்ஒரு நிலையில் உண்மையும்  மறு நிலையினை இல்லாமையுமாகும்

பொருள்கள்நிலைத்த,நிலையாமை இயல்பென உணர்ந்தேனென்றான் 376

 

            மான்போன்ற  பார்வையுடைய  நீலகேசியே,  கைவிரலில்  ஒரு  விரலை  நின்ற  நிலையில்  நிறுத்தி,  பின்  அதை  மடக்கி,  நின்ற  நிலையையும்,  மடங்கிய  நிலையையும்  காட்டி,  ஒரே  விரல்  ஒரு  சமயம்  இருந்த  நிலையையும்,  வேறு  நிலையில்  இல்லாத  நிலையையும்  உடையன  என்ற  மெய்ப்பாடை  விளக்கிக்கூறினாய்.  இந்த  உவமையின்  மூலம்  பொருள்களின்  நிலைத்த,  நிலையாமை  உடைய  இயல்பை  நான்  உணர்ந்தேன்  என்றான்  பூரணன்.

 

மெய்யறிவால்  வாலறிவு  எய்திய   மாலவன்  அருகனே  இறைவன்

நும் மற்கலியைப் போல் வாய் திறந்து  நெறியுரைக்காதவன்  அல்லன்

அருகனின் திருவாய் மலர்ந்த ஆகமமும் ஒன்பது பொருளடங்கிய

பொருள்களின் இயல்பை உணர்ந்து தீயவை விலக்கி வாழ்வீரென்றாள்             377

 

            பூரணனே,  யாரிடமும்  சென்று  கற்காமல்,  இயல்பாகவே  தன்  மெய்யுணர்வால்  வாலறிவு  எய்திய  அருகனே  நம்  இறைவன்.  உம்முடைய  மற்கலி  போன்று  வாய்  திறந்து  யாருக்கும்  எதையும்  சொல்லாதவன்  இல்லை.  எம்  அருக  தேவன்  திருவாய்  மலர்ந்து,  திருமொழியை  அருளிய  ஆகமம்  ஒன்பது  பொருள்களை  உள்ளடக்கியது.  பொருள்களின்  இயல்பை  உணர்ந்து,  தீயவை  யாவற்றையும்  விலக்கி,  வாழுங்கள்  என்றாள்  நீலகேசி.

 

                                    ஆசீவக  வாதம்  முற்றிற்று.

                                               

 

7.  சாங்கிய  வாதச்  சருக்கம்.

 

சாங்கிய  சமய  கணக்கன்  ஒருவன் பிற  சமயத்  தலைவர்களை  வெல்ல

கொடி ஒன்றை அடையாளமாய்  நட்டு  கூவி  சொற்போருக்கு  அழைத்து

அஸ்தினாபுர  நகரில்  அவன்  ஆணவம்  கொண்டதை  பூரணன்  கூற

அவனோடு  சொற்போர்  நிகழ்த்த  அஸ்தினாபுரம்  சென்றாள்  நீலகேசி            378

 

            அஸ்தினாபுரத்தில்  சாங்கிய  சமயத்தைச்  சேர்ந்த  துறவி  ஒருவன்,  பிற சமயத்தவரை  சொற்போரில் வெல்ல,  அறைகூவலிட்டு,  கொடி  ஒன்றை  அடையாளமாக  நட்டு  வைத்துள்ளான்  என்று  பூரணன்  நீலகேசிக்கு  கூறினான்.  அஸ்தினாபுரத்தில்  அவன்  ஆணவத்தை,  சொற்போரி  வென்று,  அருகநெறி  பரப்ப,  நீலகேசி  அஸ்தினாபுரம்  புறப்பட்டு  சென்றாள்.

 

சாங்கிய சமயத்தான்  எனும்  பராசரன்  தத்துவங்கள்  மாணவர்களுக்கு  கூற

நீலகேசி  நின்றாள்  அவ்விடம்  தத்துவத்தை  எனக்கும்  கூறென்றாள்

தொழிலோடு அறிவு கருவிகளைந்து  செயலோடு தன் மாத்திரை ஐந்து

நிலம், நீர், தீ, வாயு, வெளியும் ஐந்து  ஐந்தைந்தும் என் தத்துவமென்றான் 379

 

            அஸ்தினாபுரம்  சென்ற  நீலகேசி,  சாங்கிய  சமயத்தான  பராசரன்,  தன்  சமயத்தில்  கொண்டிருந்த  நம்பிக்கையால்,  தனது  தத்துவங்களை  மாணவர்களுக்கு  கூறிக்கொண்டிருந்தான்.  அவ்விடத்தை  அடைந்த  நீலகேசி,  உன்  தத்துவங்களை  எனக்கும்  கூறும்படி  கேட்டுக் கொள்கிறேன்  என்றாள்.  அறிவுக் கருவிகள்  ஐந்து,  அதனோடு  சேர்ந்த  தொழில் கருவிகள்  ஐந்து.  அவற்றின்  செயல்கள்  ஐந்து.  அவற்றின்  பண்புகள்  ஐந்து.  இந்த  ஐந்தைந்து  யாம்  கூறும்    தத்துவமே  என்றான்  பராசரன். 

( அறிவு கருவிகள் : மெய், வாய், கண், மூக்கு , செவி.  தொழில் கருவிகள் : மொழி, கால், கை, கருவாய், எருவாய்.  செயல் கருவிகள் : பேசுதல், நடத்தல், கொள்ளுதல், இன்புறுதல், கழித்தல்.  தன் மாத்திரை : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். )

 

ஐயனே  உம்  தத்துவங்கள்  மெய்காட்சி  உடையோர்க்கு  பொருந்தா

உயிர்  எதுவும்  செய்யாதென்றீர்  எனவே  உயிரற்ற பொருளானீர்  நீர்

உன்னிடம்  தோன்றும்  செயல்களும்  உடம்பினால் செய்யும் செயல்களும்

உயிரின் செயல்பாடுகளானதல்  உயிர் செய்யாதென்றது  குற்றமே               380

 

            ,

            ஐயா,  நீங்கள்  கூறிய  இருபத்தியைந்து  தத்துவங்களும்,  உங்களைப் போன்ற  மயக்கம்  உடைய,  பொய்காட்சி  உடையவர்களுக்கு  பொருந்தும்.  மெய்காட்சி  உடையவர்களுக்கு  பொருந்தாது.  உயிர்  எதுவும்  செய்யாது  என்று  கூறுகிறீர்கள்.  அது  உண்மையாயின்,  நீர்  உம்மை  உயிர்  உள்ள  பொருளாகக்  கருதவில்லை.  என்னை  நான்  உயிர்  பொருளாகவே  கருதுகிறேன்.  உன்னிடம்  காணப்படுகின்ற  மொழி  முதலானவைகளும்  உடம்பால்  செயகின்ற  செயல்களும்  உயிரின்  செயல்பாடுகளேயாகும்.  உயிர்  ஏதும்  செய்யாது  என்ற  உம்  கருத்து  குற்றமுடையதாகும்  என்றாள்  நீலகேசி.

 

ஆன்மா  செயலற்றது  என்றால்  தலைவன்  என்ற  சிறப்பும்  போகும்

பொருள்  காண்கிறேன்  என்ற கூற்றால்  பொய்த்தல்  குற்றமாகும் என்றாள்

உயிர்க்கு  செயல் உண்டென கூறேன் இடை, வினை உயிர்  இரண்டென்பதால்

இத்தனை அரிய செயல்களும் இங்கு நடக்கிறதென்றான்  பராசரன்              381

 

            ஆன்மாவானது  எவ்வகையிலும்  செயலற்றது  என்று  நீ  கூறுவதால்,  தத்துவங்கள்  கூறுகின்ற  தலைவன்  என்ற  சிறப்பும்  உனக்கு  இல்லாமல்  போகும்.  பொருள்களை  நான்  காணுகிறேன்  என்று  நீ  கூறுவதும்,  நின்  தத்துவத்திற்கு  முரணாகி,  பொய்  முதலிய கூற்றங்களும்  உண்டாகும்  என்றாள்  நீலகேசி.  அதற்கு  பராசரன்,  உயிருக்கு  செயல்  உண்டென  நான்  கூறமாட்டேன்   பேருயிரைத்  தவிர இடை உயிர்  என்றும்,  வினை உயிர்  என்றும்  இருவுயிர்கள்  உண்டென்பதும்,  இவற்றினால்  தான்  அருமையான  செயல்கள்  நடைபெறுகின்றன  என்பது  எங்கள்  தத்துவம்  என்றான்.

 

உயிர் செயல் அற்றது என்றாய்  செயல் உயிர் இரண்டென சொல்கிறாய்

செயலில்லா ஒரு  உயிர்  உண்டென்ற  உன் தத்துவக்  கருத்தும்  முரணே

பண்பு, பேணல், நுகர்ச்சியற்றவன்  சோம்பலோடு  மறைந்திருப்பவன்

பரமாத்மனின் இயல்பென்றால்  பெரும் பயன் தான் என்ன  என்றாள் கேசி 382

 

            நீர்  முன்பு  உயிர்  செயலற்றது  என்றாய்.  பின்பு  செயல்  உயிர்கள்  இரண்டு  உண்டு  என்றும்,  செய்கையில்லாத  உயிர்  ஒன்றுண்டு  என்றும் கூறுதல்  உம்  கருத்துக்கு  முரணாகும்.  நீர்  கூறும்  பரந்தாமன்  சோம்பல்  உடையவன்,  பண்பு  இல்லாதவன்,  காணப்படாமல்  மறைந்த்  இருப்பவன்,  எதையும்  பேணுதல்  அவனுக்கு  இல்லை,  எதையும்  நுகராதவன்.  இத்தனையில்புகளையும்  உடையவனால்,  நாம்  பெற்ற  நன்மைதான்  என்ன.  அவன்  இல்லாமல்  நம்  காலம்  இனிதே  கழியுமே  என்றாள்  நீலகேசி. 

 

வீடுபேறினை பெற்ற ஆன்மாவை  வெகுண்டு ஒதுக்கல் உன் நிலையானால்

வேறு இரண்டு ஆன்மாக்களையும் விரும்புதல்  தான் உன் தத்துவமாகுமோ

வீடுபேறில் பிறப்பெய்தா  ஆன்மனை  பிறப்பு சுழற்சியில் சிக்க வைப்பது

சாங்கியத்  தத்துவம் என்றால்  தத்துவமே  முற்றிலும்  குற்றம்  என்றாள்            383

 

            நீ  வீடுபேறு  பெற்ற  ஆன்மாவை வெறுத்தோ,  அல்லது  நீ  புதிதாகக்  கூறிய  வேறு  இரு  ஆன்மாக்களை  விரும்பியோ  போற்றுதலோ  உம்  நிலையாகவும்,    தத்துவமாக  இருக்கலாம்.  வீடுபேறு  பெற்று, அறிவொளியாய்,  மீண்டும்  பிறப்பு  எய்தாத,  விரிந்து  நின்ற  சுத்த  ஆன்மாவை  மீண்டும்  பிறப்பு  சுழற்சியில்  சிக்கவைப்பது  தான்  சாங்கியத்  தத்துவம்  என்றால்,  அத்தத்துவமே  முற்றிலும்  குற்றம்  ஆகும்.

 

பகர்கின்ற  உன் பகுதி  தத்துவமும்  விவரிக்கும்  உன் விகுதி  தத்துவமும்

ஒன்றுக்கொன்று முரண்பாடேயாம்  முரண்பாடே உம் கருத்தையழிக்கும்

அறிவு, தொழில் கருவிகள் பத்தோடு மனதை கூட்டி  பதினொன்றாக்கினாய்

வாத, பித்த, கோழை தரும் கருவிகளையும் வாதத்தில் சேர்க்காததேன்            384

 

            நீ  கூறுகின்ற  பகுதித் தத்துவமும்,  நீ  விவரிக்கும்  விகுதித் தத்துவமும்  ஒன்றுக்கு  ஒன்று  முரண்பட்டவை.  அத்தகைய  முரண்பாடே  உனது  கருத்தை  அழிக்கும்.  ஏனைய  தத்துவங்களும்  அதனோடு  பாழாகும்.  அறிவுக் கருவிகளும்,  தொழில்  கருவிகளும்  சேர்ந்து  பத்தோடு,  மனதையும்  சேர்த்தால்  பதினோரு  தத்துவங்களைக்  கொண்டாய்.  பித்தத்தை  உண்டாக்கும்  கருவியையும்,  கோழையை  உண்டாக்கும்  கருவியையும்,  வாதத்தை  உண்டாக்கும்  கருவியையும்  ஏன்  உன்  வாதத்தில்  சேர்த்துக் கொள்ளாமல்  விட்டுவிட்டாய்  என்று  கேட்டாள்  நீலகேசி.

 

கை, கால்கள் தொழில் கருவிகளானால் செய்யும் பொருளும் அறிவும் யாது

உதடு, புருவம், பற்கள், தொண்டையும் உன்  வாதத் தொழிற்கருவிகள் தானே

ஒளி,ஊறு, உருவம், சுவை, நாற்றம் ஐந்தும் நுண்ணணுக்களின் கூட்டமாகும்

அறிவு உணரும் அவ்வணுக் கூட்டம்  நால்வகை பூதங்கள்  என்றாய்               385

 

            கைகளும்,  கால்களும்  தொழிற் கருவிகள்  ஆனால்,  செய்கின்ற  செயலும்,  பொருளும்,  அதைச்  செய்ய  வைக்கின்ற  அறிவும்  யாது  என்பதை,  நீர்  நன்குணர்ந்து  இந்த  அவையில்  எடுத்துரைப்பாயாக.  நீ  கூறியவைகளே  தொழில்  கருவிகளானால்,  குழந்தைக்கு  பாலூட்டும்  மார்பகங்கள்,  உதடு,  புருவம்  உணவினை  உண்ணும்  உறுப்பாகிய  பற்களும்,  விழுங்கும்  உறுப்பாகிய  தொண்டையும்  கருவிகள்  ஆகவேண்டுமே.  அவற்றையும்  தொழில்கருவிகள்  என்றால்  என்ன  குற்றமாகும்.  நீ  கூறிய  தன் மாத்திரைகள்  எனப்படும்  ஒளி,  ஊறு,  உருவம்,  சுவை,  நாற்றம்  இவைகள்  ஐந்தும் நுண் அணுக்களின்  கூட்டமேயாகும்.  அவ்வணுக்களே  மேன்மேலும்  வந்து,  பெருகி,  திரண்டு,  ஒழுங்காக  வளர்ந்து,  நம்  அறிவுக்கு  புலப்படுகிற  நால்வகை  பூதங்களாகின்றன  என்றாள்  நீலகேசி.

 

உலகம், உலகமில்லா  இடத்தும்  உருவம்  அற்றது  ஆகாயம்  ஆகும்

ஆகாயம்  ஒலியில்  அடங்காது  ஒலியிலும்  வெளி  என்றும்  பிறக்காது

உயிரும், பகுதியும்  எங்கும்  நிறைந்து  தம்முள்  கலந்து இருப்பனவாகும்

புதுபொருள்ஒன்றொண்டெனில்அனாதிகாலமாயவையுண்டெனஅறிவாய்386

 

            அழகிய  கண்களையுடைய  நீலகேசி,  இவ்வுலகிலும்,  உலகம்  அல்லாத  இடத்திலும்  பரவி  கிடக்கிறது  ஆகாயம்.    வெளியாகிய  ஆகாயம்.  அது  உருவம்  அற்றது.  ஒலியானது  உருவப்பொருள்  ஆகும்.  அது  அவ்வெளியினின்று  ஒலி  பிறவாது.  மெய்நூல்  பயிற்சி  இல்லாததால்  நீ,  ஒலியில்  வெளி  பிறக்கும்  என்று  கூறுகிறாய்.  நீர்  கூறுகின்ற  உயிரும்  பகுதியும்,  தாம்  இல்லாத  இடம்  ஏதுமின்றி,  தம்முள்  கலந்து  இருப்பனவாகும்.  உலகில்  புதிதாக  தோன்றும்  பொருள்களும்  உண்டு  என்று  கூறுவாயாகில்,  உண்மையில்  அவை  அநாதிகாலமாகவே உள்ளன  என்று  அறிந்துகொள்  என்றாள்  நீலகேசி.

 

ஆளுதல், அழித்தல்,படைத்தல்  அருந்தவம்  செய்து  வீடுபேறடைதல் என

நாங்கள் கூறும் ஆத்துமானவன் நற்பயன்கள் ஐந்துமுடையவன் என்றான்

ஆத்மாபண்பினைஅறிந்தோர் சிலரும் அதனை மறுத்து உரைப்போர் சிலரும்

அவனியில்உண்டெனஅறிந்தபின்ஆன்மாக்கள் பலவென அறிவாய்  நீயும்387

 

            நாங்கள்  கூறும்  ஆத்துமன்,  ஆளுதல்,  அழித்தல்,  படைத்தல்,  பொறிகளை  அடக்கி  தவம்  செய்தல்,  வீடுபேறு  எய்தி  நின்றல்  என்ற  ஐந்து  பண்புகளும்  உடையவன்  ஆவான்.  ஆத்மன்  ஒருவனே  என்று  கூறும் போது,  அவ்வாத்துமாவுக்குரிய  பண்புகளை  முறைபடுத்து  கூறுவோர்  சிலரும்  உள்ளனர்.  அதனை  மறுப்போர்  சிலரும்  உள்ளனர்.  அதனால்  ஆன்மாக்கள்  பல  என்றே  பெறப்படும்.  உம்  ஏக  ஆத்மா  என்னும்  கருத்தில்  பொருள்  ஏதும்  இல்லை  என்றாள்.

 

ஆன்மா ஒன்றென நீ உரைத்தால் அக்றினை உயர்தினை உயிர்கள் ஒருவனே

ஆளும் அரசன் ஒருநிலையெனில் ஆளப்படும் மக்கள் மறுநிலை  ஆகும்

ஆன்மா  ஒன்றென திரும்பவும் வாதிடில் பிற விலங்கினை வதைத்து கொன்று

ஊன் உண்ணல் என்பதும் தன்னைத் தானே உண்பது போலாமென்றாள்  388

 

            உம்  கூற்றுப்படி,  ஆன்மா  ஒருவனே  என்று  உரைத்தால்,  யானை,  குதிரை  முதலிய  அக்றினை  உயிர்களும்,  காலட்படை,  குடிமக்கள்,  பிறருமான  உயர்திணை  உயிர்களும்  அவ்வொருவனே  ஆதல்  வேண்டும். ஆளும்  அரசன்  ஒருநிலை  என்றால்,  ஆளப்படும்  மக்கள்  மறுநிலையாகும்.  ஆன்மா  ஒன்றேதான்  என்று  மறுபடியும்  வாதிட்டாயானால்,  பிற  விலங்குகளை  வதைத்து  திண்ணும்  போது,  அவன்  தன்னைத்தானே  கொன்று  திண்பது  போல்  ஆகுமே  என்றாள்  நீலகேசி.

 

தன்னைத் தானே படைத்துக்கொள்பவன் படைப்புக்கு முன்னேஇல்லையவன்

படைத்தவன் வேறென  கூறினால்  அவனை படைத்தவன் யாரென கூறுவாய்

எல்லாசெயல்களும் ஆத்மன்செயலெனில் கொலை, தவம் இரண்டும் முரணே

தவச் செயல் பயன்களெல்லாம்  கொலைச்  செயலால்  அழியும்  அன்றோ       389

 

            தன்னைதானே  படைத்துக்  கொள்பவன்  உன்  ஆன்மன்  என்றால்,  அவன்  தன்னைப் படைத்துக்  கொள்ளும்  முன்  இல்லையாவான்.  அவனை  முன்  ஒருவன்  படைத்தான்  என்றால்,  அந்த  முன்  ஒருவனைப்  படைத்தவன்  யார்  என்று  கூறு.  இப்படி  படைத்தல்  தத்துவம்  நீண்டு  கொண்டே  போகும்.  எல்லா  செயல்களும்,  ஆத்மனின்  செயல்  என்றால்,  கொலை  செய்தலும்,  தவம்  செய்தலும்  ஆகிய  முரண்பட்ட  செயல்கள்  யாவும்  அவன்  செயல்கள்  என்பதாகும்.  அவ்வாரு  ஆத்மா  ஒருமுறை  கொல்வதும்,  மறுமுறை  தவம்  செய்வதும்  மேற்கொண்டால்,  அத்தவம்  பயனின்றி  அழியும்  அல்லவா  என்றாள்  நீலகேசி.

 

ஆராய்பவன், அறிவுருத்துபவன்,  ஊன்  ஆனவன், ஊன் உண்பவன்

நோயாளியானவன், நோய் தீர்ப்பவன், சீறுகின்றவன், சீற்றத்திற்காளானவன்

உயிரை எடுப்பவன், மாயும் உயிரானவன், வழங்குபவன், வறுமையுற்றவன்

அனைவரிடமும் ஒரே ஆத்மனெனஅழைப்பதன்பொருள் என்னவென்றாள் 390

 

            ஒன்றை  ஆராய்பவன்,  அதை  அறிவுறுத்துபவன்,  ஊன்  ஆனவன்,  அந்த  ஊனை  உண்பவன்,  நோயாளியானவன்,  அந்த  நோயைத் தீர்ப்பவன்,  ஒன்றின்  மேல்  சீறுகிறவன்,  அந்த  சீற்றத்திற்கு  ஆளானவன்,  உயிரைப்  போக்குபவன்,  அந்த  உயிராய்  மாய்பவன்,  பிறருக்கு  வழங்குபவன்,  பிறரிடம்  இரந்து  வாழ்பவன்,  பிறருக்கு  கொடுக்காமல்  விரட்டுபவன்,  அவனால்  விரட்டப்படுபவன்  எல்லோரும்  அந்த  ஒரே  ஆத்மா தான்  என்று  நீ  கூறுவதன்  பொருள்  எப்படி  பொருந்தும்  என்றாள்  நீலகேசி.

 

நாயாய்  பிறந்து  கடிப்பவன்  நரியாய்  பிறந்து  கொல்பவன்

பேயாய்  பிறந்து  பிணம் தின்பவன்  ஈயாய்  பிறந்து உயிர் வதைப்பவன்

எருதாய்  பிறந்து கொம்பால் குத்துபவன்  எறும்பாய்  பிறந்து கடிப்பவன்

அனைத்தும் பரமாத்மனெனில் தீவினையாளன் அவனேஆவானென்றாள் 391

 

            நீர்  கூறும்  ஒருவனேயான  பரமாத்மன்,  நாயகப்  பிறந்து  மற்றவர்களை  கடிப்பான்,  நரியாய்  பிறந்து  மற்ற  உயிர்களைக்  கொன்று  உண்பான்,  பேயாகப்  பிறந்து  உயிர்களை  அறைந்து  உண்பான்,  எருதாய்  பிறந்து  தன்  கொம்புகளால்  பிற  உயிர்களைக் குத்தி  துன்புறுத்துவான்,  ஈயாய்  பிறந்து பிறவுயிர்களை  வதைசெய்து  துன்புறுத்துவான்,  எறும்பாய்  பிறந்து  கடித்து  அழிவான்.  இவைகள்  அனைத்தும்  செய்யும்  உன்  பரமாத்துமன்  தீவினையாளன்  தானே  என்றாள்  நீலகேசி.

 

நீண்ட  நெடும்  பனைமரமானது பனை விதையினுள் உண்டென கொண்டால்

பனைவிதை எவ்வளவென கேட்க கையளவே என்பதுன் கருத்தாகும்

பனைவிதையில் பனை இல்லையென்பதும் எதிர்காலத்திலுள்ளதென்பாயின்

பொருளும் ஒருநிலையிலில்லையென புரிந்துகொள் பராசராயென்றாள்392

 

            நின்  கருத்துப்படி,  பொருள்கள்  இடம்  பெயராது  நிலைத்தல்  உடையன  ஆதலால்,  நீண்டதொரு  பனையானது,  பனைவிதையினுள்ளே  உண்டு  என்று  கொள்ளுதல்  வேண்டும்.  அப்படியானால்,  அந்த  பனைவிதை  எவ்வளவு  உடையதாக  இருக்கும்  என்று  நான்  கேட்டால்,  நீ  உன்  கையளவே  உள்ளது  என்று  கூறுவாய்.  பனைவிதையில்  பனையில்லை,  எதிர்காலத்தில்  உள்ளதாகும்  என்று  கூறுவாயாகில்,  அப்போது  அது  உள்ளது  என்பதும்,  இப்போது  அது  இல்லை  என்பதாகும்  அல்லவா.  எனவே  எல்லாப் பொருள்களும்  ஒருநிலையில்  இல்லை  என்பதும்  எங்கள்  உண்மையான  தத்துவம்  என்று  அறிந்து  கொள்  என்றாள்.

 

உருவ, அருவ பொருள், ஆகாயம் மூன்றை ஐ ஐந்து தத்துவமாய் சொன்னாய்

அவற்றையே கொஞ்சம் மாற்றி அருவ, அலோக, அறிவுபொருளாய் கூறு

பரமாத்மன் என சொல்கிறவனை  சித்தபரமேட்டியென பகர்வாய்

ஞானமே உயிர்களுக்கெல்லாம் இயற்கைப்பண்பென இயலம்பிடு இனி   393      

            உருவப்பொருள்,  அருவப்பொருள்,  ஆகாயம்  ஆகிய  மூன்றையும்  இருபத்தி  ஐந்து  தத்துவங்களாகக்  கூறினாய்.  அவற்றையே  சிறிது  மாற்றி,  அருவப்பொருள்,  அலோகம்,  அறிவுப்பொருள்  என்ற  மூன்றாகக்  கூறுவது  பொருத்தமாக  இருக்கும்  அல்லவா.  நீர்  பரந்தாமன்  என்று  சொல்கிறவனை,  சித்த  பரமேட்டி  என்று  கருதி  வணங்கி,  அனைவருக்கும்  கூறுவாயாக.  உயிர்களுக்கு  நுகர்ச்சியும்,  காட்சியும்  இயற்கைப்  பண்புகள்  என்று  நீர்  கூறுவதால்,  ஞானமே,  அவ்வியிர்களுக்கு  இயற்கை  பண்பு  என்று  கூறுவாயாக  என்றாள்  நீலகேசி.

 

பொருள் இயல்பினை உணர்ந்தேனென்று  பராசரன்  பணிவுடன் கூறிட

மும்மையின்  நல்வினைப் பயனால்  இம்மையில்  நற்காட்சியைப் பெற்றாய்

தத்துவங்கள் ஐந்தைந்தென்னும்  தவறினை  மனம்  விட்டு  அகற்றி

அருகனின்  திருவடிகள்  தொழுது  அடைவாய் பெரும் பேறினை என்றாள்       394

 

            மாட்சிமை  பொருந்திய  நீலகேசியே,  உன்  அருளால்  நான்  பொருள்களின்  இயல்புத் தன்மையை  அறிந்து  கொண்டேன்  என்று  பராசரன்  கூறிட,  நீலகேசி  அவனை  நோக்கி,  நீ  முன்பிறவியில்  நல்வினை  செய்துள்ளாய்,  அதனால்  இம்மையில்  நீ  நற்காட்சியினைப்  பெற்றாய்  என்றாள்.  இனி  நீர்  இருபத்தியைந்து  தத்துவங்கள்  உள்ளன  என்ற  தவறான  கருத்தை  விட்டு  விட்டு,  அருகனின்  திருவடிகளை  சரணடைந்து,  பெரும்  பேற்றினை  பெறுவாயக  என்றாள். 

 

 

சாங்கிய  வாதச்  சருக்கம்  முற்றும்.

 

 

                                    8. வைசேடிக  வாதச்  சருக்கம்.

 

அறச்சொற் போரில் பராசரனை வென்று அவன் அறியாமை இருளை போக்கி

அறநெறி உரைக்கும்  நீலகேசி அவ்விடம் நீங்கினாள் அறநெறி பரப்ப

வாழ்நெறி பகரும் சமயக் கணக்கருள் வைசேடிக சமய நூலினை யாத்த

கணாதனனுக்கு நிகரானபுகழுடை உலோகசித்து பள்ளியை அடைந்தாள் 395

 

            அஸ்தினாபுரத்தில்  சாங்கியனான  பராசரனை  சொற்போரில்  வென்று,  அவனுடைய  அறியாமையைப்  போக்கி,  மெய்யுணர்வு  பெறச்செய்த  பின்,  நீலகேசி  அங்கிருந்து  புறப்பட்டு,  வீட்டுலகை  அடைவதற்கான  நன்நெறியை  விரிவாகக்  கூறிய  சமயக்  கூறவர்கள்  பலருள்,  உலகப்  புகழ்  பெருமையுடைய,  வைசேடிக  சமயநூலை  எழுதிய,  கணாதன்  என்பவனுக்கு  சமமாக  பெருமை  படைத்த  உலோக  சித்து  என்னும்  துறவி  இருந்த  பள்ளியினை  அடைந்தாள்  நீலகேசி.

 

அழகிய நங்கை நீலகேசியை  அறத்துறவி உலோகசித்து நோக்கி

சினந்து  சொற்போர்  நிகழ்த்தும்  சிங்கப்  பெண்  இவரேன  கருதி

வைசேடிக  தத்துவங்களையெல்லாம்  வளமாக விளக்குவேன் உனக்கு

மனங்கொண்டு கேட்பாயாக என மறையோன்உலோகசித்து கூறினான் 396

 

            உலோகசித்து  என்னும்  பெரும்  தவத்தோனாகிய  வைசேடிகன்,  அழகிய  நங்கையாகிய  நீலகேசியைக்  கண்டு,  இவள்  நம்மோடு  சினந்து  சொற்போர்  நிகழ்த்தும்,  அறிவுமிக்க  சிங்கப்பெண்  எனக்  குறிப்பால்  உணர்ந்து,  நான்  என்  வைசேடிக  தத்துவங்களை  உனக்கு  விளக்கமாக  கூறுவேன்,  நீ  மனம்  ஒன்றி  கேட்பாயா  எனக்  கேட்டான். 

 

பொருள், குணம், தொழில், சிறப்பு,  பொது , கூட்டம்  என்பன  ஆறு

வைசேடிக  சமயம்  உணர்த்தும்  வையக  மெய்ப் பொருளைக் கூறும்

நிலம், நீர்,  தீ, வாயு,  ஆகாயம் என  பூதங்கள்  ஐந்தினோடும்

திசை, மனம், காலம், உயிர்  சேர  பொருள்கள்  தாம்  ஒன்பது  ஆகும்             397

 

            நல்வினையுடைய  நங்கையே,  எம்  வைசேடிக  சமயம்,  அனைவரும்  உணர்ந்து  கொள்வதற்கு  அரிய  ஆறு  மெய்ப் பொருள்களைக்  கூறும்  என்றான்.   அவை,  பொருள்,  குணம்,  தொழில்,  சிறப்பு,  பொது,  கூட்டம்  என்பனவாகும்.  பொருள்கள்  நிலம்,  நீர்,  தீ,  வாயு  ஆகாயம்  என்ற  ஐந்து  பூதங்களோடு,  திசை,  மனம்,  காலம்,  உயிர்,  என்ற  நான்கும்  சேர  பொருள்கள்  ஒன்பது  ஆகும்  என்றான்.

 

பொருள்களின்  இயல்புகளெல்லாம்  குணம் என்று  கொள்ளப்படும்

பொருள்களின்  இயக்கமெல்லாம்  செய்கையென  அறியப்படும்

உடையதும்  இல்லாததுமாகிய  தத்துவமிரண்டும்  பொதுவெனப்படும்

பொருளின் தனித்தன்மையை உணர்வது  சிறப்பென்னும் தத்துவமாகும்         398

 

            குணம்  என்பது  அப்பொருள்களின்  இயல்புகளாகும்.  பொருள்களின்  இயக்கங்கள்  எல்லாம்  செய்கை  என்று  கூறப்படும்.  முதன்மை  உடையதும்,  அது  இல்லாததுமாகிய  இரு வகைப்பட்ட  தத்துவம்  பொது  என்று  கூறப்படும்.  பொருள்களுக்குள்  ஒன்றிற்கு  ஒன்று  உரிமையுடையதாகச்  செய்கின்ற  ஒற்றுமைத் தன்மையை  உண்டாக்குவது  இந்த  பொது  என்னும்  தத்துவமே.  அப்பொருள்களின்  தனித்தன்மையை  உணரச் செய்வது  சிறப்பு  என்னும்  தத்துவம்  ஆகும்.

 

பொருளினது  குணம்  இது  என்றும்  பொருளினது  தொழில் இது  என்றும்

கூறுவதற்கு  காரணம்  ஆவது  கூட்டம்  என்னும்  தத்துவம்  ஆகும்

பொருள்,குணம்,தொழில் மூன்றில்  உண்மை தன்மை பொது தத்துவமாகும்

பொது,சிறப்பு,கூட்டம் மூன்றும் பொது தத்துவம் இல்லாதனவாம் என்றான் 399

 

            இந்த  குணம்,  இந்த  பொருளினது  என்றும்,  இந்த  தொழில்  இந்த  பொருளினது  என்றும்  கூறுவதற்கு  காரணமாய்  இருப்பது  கூட்டம்  என்னும்  தத்துவம்  ஆகும்.  முன்னர்  கூறப்பட்ட  ஆறு  தத்துவங்களில்,  பொருள்,  குணம்,  தொழில்  என்னும்  மூன்றில்  மட்டும்  உண்மைத்தன்மை  என்ற  பொது  தத்துவம்  உண்டு.  பின்னர்  கூறப்பட்ட  பொது,  சிறப்பு,  கூட்டம்  என்னும்  மூன்றும்  உண்மைத்தன்மை  என்ற  பொதுத்தத்துவம்  இல்லாதவையாகும்  என்றான்  உலோகசித்து.

 

வைசேடிக  தத்துவங்கள்  கூறினேன்  வஞ்சிமனம்  ஏற்றதா  என்றான்

நீலகேசி  தலை  சாய்த்து  நின்று  உலோகசித்துக்கு  உரைக்கலானாள்

நின்  தத்துவங்களை மெய்யென கருதி  நான் தவம் செய்தேனாகில்

பொய் தவமது ஆவதும்  இன்றி  பெருங்கேடு  அடைவேன்  என்றாள்  கேசி  400

 

            வைசேடிக  உலோகசித்து,  நான்  கூறிய  இவைகளே வைசேடிக  தத்துவங்கள்.  வஞ்சியாகிய  நீலகேசியே  உம்  மனம்  எம்  தத்துவங்களில்  உடன்பாடு  உள்ளதா  என்று  வினவினான்.  அவைகளில்  தனக்கு  உடன்பாடு  இல்லை  என்ற  கருத்தில்,  தலையை  சற்று  சாய்த்து  நின்று,  நீலகேசி  கூறலானாள்.  ஐயா,  நீர்  கூறிய  தத்துவங்கள்  அனைத்தும்  மெய்யானவை  என்று  ஏற்று  தவம்  செய்தேனாகில்,  அது  பொய்தவம்  ஆகி,  முழுதும்  கேட்டையே  விளைவிக்கும்  என்று  கூறினாள்  நீலகேசி.

 

நிலம்  முதல்  பூதங்கள் நான்கும்  ஒரு  குல  உருவப்  பொருட்கள்

மண்ணுக்குரிய  நீர்  என்னும்  பொருள் உப்பாய் மாறி  பரிணமிக்கும்

நீராய்  பரிணமிக்கும்  நெய்யே  தீயாய்  உருமாறி  தோன்றும்

தீ  மிகுந்து  எரியும்  இயக்கத்தால்  ஒலிக்கின்ற  காற்றாய்  தோன்றும்            401

           

என்  உண்மையான  நெறிகளைக்  கேட்டு,  பொய்நெறிகள்  என்று  நீ  கூறுவதற்கான  காரணங்களைக்  கூறுவாய்  என்று  உலோகசித்து  கேட்டான்.  நிலம்  முதல்  பூதங்கள்  நான்கு  எனக்கூறப்பட்ட  பொருள்கள்,  ஒரே  குலத்தில்  தோன்றிய  உருவப் பொருள்கள்.  எனவே  அந்த  நான்கும்  உருவப்பொருள்  என்னும்  ஒரு  கூற்றில்  அடங்கும்.  உன்னால்  தனிப்பொருளாய்  கூறப்பட்ட  அவை,  ஒன்றாகத்  திரியும்  விதத்தை  கூறுகிறன்.  நீர்  என்னும்  பொருள்  மண்ணுக்கு  உரியதாகி,  உப்பாக  தோற்றம்  பெரும்.  நீர்  போல்  இருக்கும்  நெய்யோ  தீயாய்  பரிணமிக்கும்.  தீ  மிகுந்து  எரியும்  இயக்கத்தால்  ஒலிக்கின்ற  காற்றாய்  தோன்றும்.

 

ஒலியது  வெளியின்  குணமென்றாய் ஒலியும் வெளியும் தம்முள் பொருந்தா

வெளி  ஓசை  உண்டாக்கும்  என்னும்  உன்  கருத்தை  நீ  ஒழிப்பாயாக

பொருள்  என்று  நீ  கூறுகின்ற  திசையின்  தன்மையைக்  கூறுகின்றேன்

ஆகாயம்  எனும்  பொருளினின்று  திசையெனும்  வேறு  பொருளில்லை            402

 

            ஒலியானது  வெளியின்  குணம்  என்று  கூறுகிறாய்.  ஆதலால்  ஒலியை  ஒத்த  நான்கு  பூதங்களும்  அவ்வாறே  வெளியின்  குணமாதல்  வேண்டும்.  மேலும்  ஒலியும்  வெளியும்  தம்முள்  பொலிவுறப்  பொருந்துதல்  இல்லை.  எனவே  வெளி  ஓசையை  உண்டாக்கும்  என்ற  உன்  கருத்தை  விட்டொழிப்பாயாக.  நின்னால்  பொருள்  எனக்  கூறப்பட்ட  திசையின்  தன்மையைக்  கூறுகிறேன்  கேள்.  சூரியன்  தோன்றுதலையும்,  மறைதலையும்  வைத்து  திசைகளை  நான்காகவும்,  எட்டாகவும்  கூறுகின்றனர்.  உண்மையில்  திசை  என்பது  ஆகாயம்  என்ற  பொருளில்  இருந்து  வேறுபட்ட  தனிப்  பொருள்  அன்று  என்றாள்  நீலகேசி.

 

பலர்  சூழ  நடுவில்  நின்றவனை  சூழ்ந்து  நின்றவர்கள்  கூறுகையில்

ஒருதிசையில் உள்ளான் என்றும்  பிறதிசையில்  இல்லை  என்றும்

பகுத்தறிந்து  உரைப்பதையே  அநேகாந்த  வாதம்  பொருந்தும்

அர்த்தத்தை  ஆய்ந்து  உணர்ந்து  அருகனடி தொழுது வாழ் என்றாள் கேசி 403

 

            ஒருவன்  தன்னைச்  சூழ  பலரை  நிறுத்தி  அவர்களின்  நடுவில்  நிற்கிறான்.  அப்போது  அவன்  தன்னைச்  சூழ்ந்து  நின்றவரை  தனித்தனியே  நோக்கி,  தான்  நிற்கும்  திசையைக்  கூறு  என்று  கூறினால்,  சூழ்ந்து  நின்றவர்கள்,  ஒவ்வொருவரும்  நடுவில்  நின்றவனை,  ஒருதிசையில்  உள்ளவனாகவும்,   பிறதிசைகளில்  இல்லாதவனாகவும்  கூறுவார்கள்  அல்லவா.  பகுத்தறிந்து  யாம்  கூறும்  அநேகாந்தவாதமே  பொருந்தும்.  இதன்  அர்த்தத்தை  ஆராய்ந்து,  உணர்ந்து,  நீ  அருகனின்  திருவடிகளை  அடைந்து  பக்தியுடன்  வாழ்வாயாக  என்றாள்  நீலகேசி.

 

உயிரது  உடலினில்  இணைந்தால்  உருவாகும்  மனம்  எனும்  பொருள்

அறிவு பொருளும் அறிவிலாப் பொருளும் புடைபெயர் காரணம் காலமாகும்

மனமும் காலமும் தனிப் பொருளென வைசேடிக தத்துவம் வாதிடுமானால்

உலோகசித்துவே  நீ  நவின்றிடும்  இந்த தத்துவம்    ஏற்புடையதன்று            404

 

            பொருள்களில்  ஒன்றாகிய  நீ  கூறிய  மனம்  என்பது,  உயிர்  உடம்புடன்  சேருவதால்  பெறப்படுவதாகும்.  அது  தனிப்பொருள்  அன்று.  நீ  தனிப்பொருளாக  கூறிய  காலம்  என்பது,  அறிவுப்பொருளும்,  அறிவில்லாப் பொருளும்  ஆகிய  இருவகையான  பொருளின்  இயக்கம்  காரணமாக  பெறப்படுவது.  எனவே  காலமும்  தனிப்பொருளாக நிற்பது  இல்லை.  மனமும்  காலமும்  தனித்தனி  பொருள்களென  வைசேடிக  தத்துவம்  வாதிடுமானால்,  உலோகசித்துவே  நீ  கூறும்  தத்துவங்கள்  ஏற்புடையது  இல்லை  என்றாள்.

 

பொருள்களின் குணம் செயல்களை  தனித்தனி  தத்துவம்  என்றாய்

நீரின் குணமது குளிர்ச்சியே  ஆகும்  நெருப்பின் குணத்துடன் கூடிட இயலுமா

பொருளையும் குணத்தையும் கூட்டமைக்க கூட்டம் எனும்தத்துவம் கூறினாய்

பொருளதன்குணத்தில் பொருந்தாவிடில் பாழாய் கெடும் பொருளவ்விடத்தில்

 

நீர்  பொருள்களின்  குணங்களையும்,  செயல்களையும்  தனித்தனியே  தத்துவங்களாக  கூறினாய்.  அவை  பொருள்களில்  இருந்து  வேறானவை  என்றும்  கூறினாய்.  எந்த  ஒரு  பொருளும்  இயல்பாகவே  ஏதோ  ஒரு  குணத்துடன்  இல்லையென்றால்,  அப்பொருள்  அந்த  குணத்தில்  இருந்து  வேறுபட்டது.  நீரின்  குணமாகிய  குளிர்ச்சியுடன்,  நெருப்பின்  குணம்  கூடியிருக்க  முடியாது.  நீர்  பொருள்களையும்,  குணங்களையும்  கூட்டுவிக்க  கூட்டம்  என்ற  தத்துவதைக்  கூறுகிறாய்.  எல்லாப்பொருள்களும்  தத்தம்  குணங்களோடு  தோன்றாது  போனால்  எல்லாமே  பாழாகிவிடும்  என்றாள்.

 

பொருள்களின் குணங்கள் கெட்டிடில் பொருள்களும் கெட்டிடும் என்று

நீ கூறிடும் தத்துவம் உண்மையே எங்கள் சமணமும் அதையே கூறிடும்

பொருள்கள் ஒரு நிலையில் கெடுதல் மறுநிலையில் பொருள்கள் தோன்றல்

கெடுதலும் தோன்றலும் இன்றி நிலைப்பெறும் தன்மையே மூன்றாம்       406

 

            பொருள்கள்  அதனின்  குணங்களில்  கெடும்  போது,  அப்பொருள்களும்  கெட்டு  ஒழியும்..  அது  உண்மையே  .ஆகும்.  பொருள்களுக்கு ஒர்  வகையில்  கேடு  உண்டாகும்  என்று  எங்கள்  சமணமும்  கூறுகிறது.  பொருள்கள்  ஒரு  நிலையில்  கெடுதலும்,  மறுநிலையில்  தோன்றுதலும்,  நிலைபெற்று  இருத்தலும்  ஆகிய  மூன்று  தன்மைகளை  பெற்றுள்ளன  என்று  கூறினால்,  அக்கூற்று  உண்மையே  ஆகும்  என்றாள்  நீலகேசி.

 

பொருள்கள் பெறும் குணங்களால் பொருளுக்கு  என்றும்  மதிப்பே  தான்

தீமை எனும் குணத்தால் வெறுப்பு நன்மையெனும் குணத்தால் சிறப்பு

குணமும் பொருளும் வெவ்வேறெனில் பொருள் குணங்கள் ஒற்றுமை கெடும்

நின்கருத்து பொருளுடையதன்று நெஞ்சில் தெளிவுறு துறவியே என்றாள் 407                       

            பொருள்கள்  தாம்  பெறும்  குணங்கள்  காரணமாக,  அப்பொருள்களுக்கு  மதிப்பு  ஏற்படுகிறது.  தீமை  என்னும்  காரணமாக  வெறுக்கப்படுகிறது. நன்மை  என்னும்  குணத்தால்  சிறப்பினை  பெறுகிறது.  களவு  என்னும்  செயல்  காரணமாகப்  பொருள்கள்  கொலை  செய்யப்படும்.  இதனால்  பொருளுக்கும்,  குணத்திற்கும்  உள்ள  ஒற்றுமையை  உணரலாம்.  குணமும்  பொருளும்  வேறு  வேறு  என்றால்  இந்த  ஒற்றுமை  கெட்டுப்போகும்.  எனவே  உன்  கருத்தில்  பொருளில்லை  என்பதில்  தெளிவுறு  துறவியே  என்றாள்.

 

பொருளில்  இருந்து குணமும் செயலும் வேறுபட்டவை என நீபகர்ந்தால்

உயிர்களின்  நல் தீவினைகளால்  பிறவி சுழற்சி இல்லாமல்  போகும்

குணம்  செயலின் தன்மையை அறிவாய் பொருளுடன் கூடி அழிவனவாகும்

அழிந்தது மீண்டும் பொருளொடு சேரும் ஆய்ந்து தெளிவுறு என்றாள் கேசி 408

 

            பொருளில்  இருந்து  குணமும்,  செயல்களும்  வேறுபட்டவை  என்று  நீ  கூறுவாயாகில்,  உயிர்கள்  நல்லறம்  செய்தலும்,  தீவினைகளைச்  செய்தலும்,  ஆகிய  பல்வேறுபட்ட  வினைகளின்  காரணமாக,  அவற்றின்  பயனை  நுகர்தலும்,  மீண்டும்  மீண்டும்  பிறப்பு எய்தி  துன்புறுதலும்,  வீடுபேறு  எய்தலும்  இல்லாது  போகும்.  தம்முள்  சேராது  முழுதும்  வேறு  வேறான குணங்களும்,  தொழில்களும்  பொருள்களிடத்தில்  கூடி  அழியும்.  அவ்வாறு  கூடி  அழிந்தவை,  மீண்டும்  அப்பொருளுடன்  சேரும்  என்பதை  ஆராய்ந்து  தெளிவு கொள்  என்றாள்.

 

பொது  என்று  கூறும்  உன் தத்துவம்  பொருள்களில் பொருந்திடில்

சிதைந்து, குறைந்து, பெருகுவதாலே  தத்துவம் என ஏன் கொளல் வேண்டும்

பொருள் எனும் நோக்கில் பார்க்க  குணம் அதில் அடங்கல் இல்லை

குணம் எனும் நோக்கில் பார்த்தால்  பொருள் அதில் அடங்கல் இல்லை            409

           

நீர்  கூறும்  பொது  என்ற  தத்துவம்  எல்லாப்  பொருளிலும்  பொருந்துவதாயின்,  அத்தத்துவம்  எல்லா  பொருள்களையும்  ஒன்றுபடுத்தும்.  ஆனால்  பொருள்கள்  தம்முள்  வேற்றுமை உடையவைகளாக  உள்ளன.  மற்றும்,  பொது  தத்துவம்  எல்லாப் பொருளிலும்  பொருந்தினால்,  அது  சிதைந்து  போய்,  பலவாகி  குறைந்தும்,  பெருகியும்  நிற்கும்.  நமக்கு  பயன்  ஏதும்  இல்லாத  அதை  தத்துவம்  என்று  ஏன்  ஏற்கவேண்டும்.  பொருள்  என்னும்  நோக்கில்  பார்த்தால்  குணம்  அந்நோக்கில்  அடங்கி  இருக்கவில்லை.  அதுபோல்  குணம்  என்னும்  நோக்கில்  பார்த்தால்  பொருள்  அந்நோக்கில்  அடங்கியில்லை  என்றாள்.

 

ஒருநோக்கில் பொருளில்லை என்றும் மறுநோக்கில் குணமில்லை என்பதால்

பொருள் குணம் இரண்டுமில்லையென பொருள்கொளால் உன் தவறாகும்

பொருளிடத்து குணம் உள்ளதென்று  கூறுவதை தெளிவாயென்றாள் கேசி

உலோக்சித்து உண்மை உணர்ந்து  உள்ளத்தால்  அன்பு  கொண்டான்            410

 

            நான்  இவ்வாறு  ஒரு  நோக்கில்  பொருள்  இல்லையென்றும்,  மறுநோக்கில்  குணம்  இல்லையென்றும்  கூறுவதால்,  பொருளும்  குணமும்  ஆகிய  இரண்டும்  இல்லை  என்று,  நான்  கூறுவதாக  நீ  கருதினால்,  அது  உன்  தவறாகும்.  பொருளிடத்தில்  குணம்  அடங்கும்  என்றுதான்  நான்  கூறுகிறேனே  ஒழிய  குணம்  இல்லையென்று  கூறவில்லை  என்று  நீலகேசி  கூற,  அதுகேட்ட  உலோகசித்து,  இந்த  முடிவு  நன்மை  தரக்கூடியதே  என்று  தெளிந்து  நீலகேசியிடம்  அன்பு  உடையவன்  ஆனான்.

 

பொருள், குணம், செயல்கள் மூன்றும்  ஒன்றாக இணைந்தே நிற்கும்

தோன்றல், நிலைப்பு, அழிவு எனும்  தன்மைகள் மூன்றும் கொண்டதாகும்

அருள் உணர்வே அடைப்படையான   அறநெறிகளே  சமணம்  ஆகும்

அருகனின்  செவ்வடி தொழுது  அகற்றிடு உன் அறியாமை  இருளை             411

 

            நீலகேசி  உலோகசித்துவை  நோக்கி,  பொருள்,  குணம்,  செயல்  ஆகிய  மூன்றும்  வேறு  வேறாகவே  இல்லாமல்  ஒன்றாக  இணைந்து  நிற்கும்  என்பதை  அறிந்து  கொள்.  உன்  சீடர்களுக்கு  தோன்றல்,  நிலைப்பு,  அழிவு  என்னும்  மூன்று  தன்மைகள்  உடையனவாகும்  என்று  அறிவுறுத்து.  அருள்  உணர்வையே  அடிப்படையாகக்  கொண்ட  அறநெறிகளை  உடையது  சமணம்  ஆகும்.  திருமொழி  மலர்ந்தருளிய  அருகனின்  செவ்விய  திருவடிகளை  தொழுது  உன்  அறியாமை  என்னும்  இருளை  அழித்திடுக  என்றாள்.

 

நல்லறம்  சொன்ன நல்லாசிரியையே  நின் பிரிவே என் துயர் ஆகும்

அச்சுறுத்தும்  பேயே  ஆயினும்  அதன்  நட்பைப்  பிரிதல்  துன்பமேயென்றான்

அருகன் கோயில் தோறும் சென்று  அவனடி வணங்கல்  நல்லறமென

நீலகேசி உலோகசித்துக்குக் கூறி நீங்கினாள்  அவ்விடத்தை  விட்டு               412

 

            இனிய  மொழிகளையுடைய  நல்லாசிரியயே,  உன்  பிரிவால்  நான்  மிகவும்  வருந்துகிறேன்.  அனைவரையும்  அச்சுறுத்தும்  பேயானாலும்,  அதனுடன்  நட்பு  கொண்டு,  பின்பு  அதைப்  பிரிதல்  என்பது  பெரும்  துன்பமே என்றான்.  எனக்கு  அருகன்  கோயில்  தோறும்  சென்று,  மனஉறுதியோடு  வணங்கும்  நல்லறக்  கடமை  உள்ளது  எனக்  கூறி  அவ்விடத்தை  விட்டு  நீங்கினாள்  நீலகேசி.

 

 

                        வைசேடிக  வாதச்  சருக்கம்  முற்றும்.

 

 

                                                9. வேதவாதச்  சருக்கம்.

 

உலோகசித்துவின் பள்ளியை விட்டு  உவகையில்  புறப்பட்ட நீலகேசி

காதங்கள்  பலவும்  கடந்தாள்  காட்டு  வழியே  பயணம்  செய்தாள்

காவல்  மிகுந்த  காகந்தி நகரில்  கல்வி கேள்விகளில்  திறனடைந்து

வேதத்தின்  அங்கங்களை விளக்கும் பூதிகனின் பள்ளியை அடைந்தாள்            413

 

            நீலகேசி  உலோகசித்துவின்  பள்ளியை  விட்டு  புறப்பட்டு,  காட்டு  வழியே  பல  காத  தூரம்  கடந்து  பயணம்  செய்தாள்.  பின்பு  காவல்  நிறைந்த  காகந்தி  என்னும்  நகரத்தில்  உறைபவனும்,  வேதங்களையும்,  வேதத்தின்  அங்கங்களையும்,  பிற  வித்தைகளின்  இயல்புகளையும்  மாணவர்களுக்கு  கற்றுத் தரும்  பூதிகன்  என்னும்  பெயருடைய  பார்பனனின்  பள்ளிக்கு  சென்றாள்.

 

பள்ளியின் உள்ளே  சென்ற நீலகேசி  பயிற்றுவிக்கும்  முடிபொருள்  வினவ

ஆதியந்தம்  அற்ற  வேதத்தையும்  அதன் பின்  தோன்றிய  நூல்களையும்

இன்னினவை என எடுத்துக் கூறி  எளிய முறையில் விளக்குகின்றேன் – என

பூதிகன்  பொறுமையில்  கூறிட  புன்னகையுடன்  கேட்டாள்  நீலகேசி           414

           

பள்ளியுள்  சென்ற  நீலகேசி,  அங்கிருந்தவர்களை  பொதுவாக  நோக்கி,  இவ்விடம்  ஓதப்படும்  உங்களின்  முடிவான  பொருள்  யாது  என்று கேட்டாள்.  அதற்கு  பூதிகன்,  அநாதிகாலமாக  உணர்வதற்கு  அரிய  வேதமும்,  பின்னர்  தோன்றிய  நூல்களும்  இன்னின்னவை  என்று,  எளியமுறையில்  விளக்குகிறேன்  என்று  பொறுமையுடன்  புன்னகைத்துக்  கொண்டே  கூறினான்.

 

வேதத்தில் இருந்து பிறந்த நூல்கள்  வேறு வேறாய்  முரண்படுவதால்

பயன்  ஒன்றும்  விளைவதில்லை  பூதிகனே புரிந்து  கொள் என்றாள்

நலங்கூறுவது  வேதங்கள்  என்று  நானிலத்தோர்  போற்றுகையில்

நாத்திகம்  பேசும்  கீழ்மகள் என்று நாகமாய்  சினந்தான் பூதிகன் அங்கு            415

 

            நின்  வேதத்தில்  இருந்து  பிறந்த  நூல்கள்  ஒன்றோடு  ஒன்று  முரண்படுவதால்,  அவற்றால்  பயன்  ஏதும்  இல்லை என்பதை  புரிந்துகொள்  பூதிகனே  என்றாள்.  அதுகேட்ட  பூதிகன்  கோபம்  கொண்டு,  நலங்கள்  பலவற்றைக்  கூறுவதும்,  யாவராலும்  போற்றப்படுவதுமான  வேதத்தைப்  பற்றி  நாத்தீகம்  பேசும்  கீழான  மகளாய்  நீ  இருக்கிறாய்  என்று   சீறினான்  பூதிகன்.

 

குற்றங்கள்  எல்லாம்  கூறுவேன்  குற்றத்திற்கு  தீர்வினை  சொல்வாய்

வேதத்திற்கு  முதலும்  முடிவும்  உண்டென்ற  உன் கருத்தை  விளக்கு

வேதங்கள்  மனிதரால்  யாத்தது  வாய்மைக்கு  முரண்பாடுடையது

பயில்வோர்க்கு  புரிந்திடாமல்  பொருள்  தேடும்  நிலையில்  உள்ளது 416

 

            பூதிகனின்  சினத்தைகண்டு  நீலகேசி,  வேதியரே,   நான்  உன்  வேதத்தில்  உள்ள  குற்றங்களை  கூறுவேன்.  நீ  அக்குற்றத்திற்கு  தீர்வு  கூறி  உன்  கருத்தை  நிலை  நாட்டு  என்று  கூறினாள்.  அதற்கு  பூதிகன்,  வேதத்திற்கு  முதலும்,  முடிவும்  உண்டு  என்னும்  உன்  கருத்தை  நிலைநாட்டு  என்றான்.  உன்  வேதங்கள்  மனிதரால்  ஆக்கப்பட்டது.  உண்மை  நிலைக்கு  முரண்பாடாகும்.  கற்றுக் கொள்பவர்கள்   எளிதில்   புரிந்துகொள்ள  இயலாமல்  பொருள்  தேடும்படி  அமைந்துள்ளது  என்றாள்.

 

புதுமை  என்னும்  பொய்  உடையது  பொருள்  தடுமாறும்  தன்மையுடையது

தீச்செயல்  தவறில்லை  என்னும்  தீய ஒழுக்கத்தை  ஊக்குவிப்பது

வேள்வியில்  உயிர்கொலை  செய்து  வழிபட்டு  தீவினைகள்  சேர்ப்பது

நரகத்தில்  ஆழ்த்தும்  வேதங்கள்  ஆதியந்தம்  ஆவதெப்படி  என்றாள்            417

 

            உம்  வேதங்கள்  புதுமை  என்ற  போர்வையில்  பொய்களை  கூறுவது.      தீய  ஒழுக்கங்களை  ஊக்குவிப்பது.  தடுமாறு  பொருள்  தன்மையுடையது.  தீச்செயல்கள்  செய்வது  தவறு  இல்லை  என்ற  எண்ணத்தை  ஏற்படுத்துவது.  வேள்வியில்  உயிர்களை  எரித்து,  கொலைசெய்து  வழிபாடு  செய்வது.  இத்தகைய  தீவினைகளைச்  செய்து  நம்மை  நரகத்தில்  கொண்டு  சேர்க்கும்  வேதங்கள்  எப்படி  ஆதியும்  அந்தமும்  இல்லாததாக  இருக்கமுடியும்  என்றாள்  நீலகேசி.

 

மலத்தின் நிறம், நாற்றம், ஊறால்  ஈன்றவன் உடல்  இயல்பினை அறியலாம்

மலத்தின்தன்மையைஆய்ந்து  மேல்,  கீழ்  குலத்தைக் கூறலில்லை-அதுபோல்

வேதத்து  நூல்களை  ஆராய்ந்தால்  செய்தவர்கள்  அறிவை  அறியலாம்

செய்தவன்  குலத்தை  அறிதல்  சிறிதும்  இயலாதென்றாள்  நீலகேசி             418

 

            மருத்துவநூல்  கற்றுத்  தெளிந்த  அறிஞர்கள்,  மலதின்  நாற்றம்,  நிறம்,  ஊறு  என்னும்  தன்மைகளால்  ஆராய்ந்து,  அது  நோயாளியின்  மலமா  அல்லது  நோய்யற்றவன்  மலமா  என்று  அறிவார்கள்.  ஆனால்  அம்மலம்  மேல்குலத்தவன்  மலமா  இல்லை  கீழ்குலத்தவன்  மலமா  என்று  கூறமுடியாது.  அதுபோல்  நுண்ணறிவுடைய  சான்றோர்கள்,  வேதத்தைச் செய்தவர்கள்  சிறந்த  அறிவுடையோரா  அல்லது  அறிவில்  குறைந்தவரா  என்று  ஆராய்ந்து  கூறுவர்.  ஆனால்  அதை  இயற்றியவன்  மேல்குலத்தோரா  அல்லது  கீழ்குலத்தோரா  என்று  கூறமுடியாது  என்றாள் நீலகேசி.

 

எழுத்துக்கள், சொற்களின்  வடிவில்  எழுதியது  வேதம்  மனிதனால்

வேதத்தை  யாத்தவர்  பெயர்கள்  வேதத்தில்  உள்ளதை  அறியலாம்

பாரினில்  பிறந்தோர்  பெயர்கள்  பதிந்துள்ளன  வேதந்  தன்னில்

நாம்  எழுதிய  நூல்லாய்  அமைந்திட நாம்  அதை புதியன என்கிறோம்            419

 

நீ  கூறும்  வேதம்  மனித  முயற்சியால்  பிறந்தது.  எழுத்துக்களின்,  சொற்களின்  வடிவில்  இயற்றப்பட்டது.  மனிதனால்  எழுதப்பட்டது  வேதம்.  அதனை  யாத்தவர்  பெயரும்  அதிலேயே  எழுதப்பட்டுள்ளது.  அது  தானே  தோன்றியது  அன்று.  நாம்  எழுதிய  நுலாய்  அமைந்திட்ட  வேதங்களை  நாம்  புதியன  என்கிறோம்,  என்று  எடுத்துக்காட்டுகளுடன்  கூறினாள்  புலமைமிக்க  நீலகேசி.

 

உயிர்வதை தீவினையென கூறி  வேள்வியில்  உயிர்களை  எரித்தலும்

காமத்தை  அழியுங்கள்  என கூறி  காமத்தால்  வீடுபேறடையலாம் எனலும்

பிற சமய  நெறிகள் தவறென  கூறி அக்கருத்துக்கள் வேதத்திலென்றும்

முரண்பாடுகள் முழுதும்  உள்ளன  முன்னோர்  வேதம்  எனும் உம் நூலில்           420

           

வேதவாதிகள்  உயிர்கொலை  தீவினை  என்று  கூறிவிட்டு,  பின்னர்,  பொருள்  சேர்க்கும்  காரணமாக  செய்யப்படுகிற வேள்வியில்  கொல்லப்படுகிற  உயிரினங்களுக்கு  வரையறை  தேவையில்லை  என்கின்றனர்.  காமத்தை  விட்டு விடுங்கள்  என்று  உபதேசம்  செய்து  விட்டு,  அக்காமத்தை  மேற்கொள்ளுவதால்  வீடுபேறு  அடையலாம்  என்கின்றனர்.  பிற  சமயத்தில்  கூறியுள்ள  நெறிகள்  தவறானது,  தீவினை  பயப்பது  எனக்கூறி,  பின்னர்,  பலவேறு  சமய  சித்தாந்தங்களும்  எம்  வேதத்தில்  உள்ளன  என்று  கூறுகிறார்கள்.  இவ்வாறு  உமது  வேதங்கள்  பல்வேறு  முரண்பாடுகளையுடையது  என்றாள்.

 

பிரம்மனின்  உறுப்பினில்  இருந்து  பிறந்தனர்  நால்வகை  வகுப்பினரெனில்

சூத்திரர்கள்  வேள்வி  இயற்றும்  சுதந்திரம்  மறுப்பதும்  தவறேயாகும்

பிறவியில்  செய்த  வினைகளையெல்லாம் வேள்வியில் அழிக்கலாம்  என்றும்

வேள்விகள் செய்யாதவர்கள் மட்டும் வினை தொடரும் என்பது பொய்யே  421

 

            பிரம்மதேவனின்  உறுப்பில்  இருந்து  நால்வகை  வகுப்பினரும்  பிறந்தனர்  என்று  பெருமையுடன்  கூறிக்கொள்கிறீர்கள்.  ஆனால்,  அவ்வாறு  பிரம்மனின்  உறுப்பில்  இருந்து  பிறந்த  சூத்திரனுக்கு  மட்டும்  வேள்வி  இயற்றும்  தகுதியில்லை  என்று  மறுக்கிறீர்கள்.  அது  தவறு  இல்லையா.  பிறவிகளில்  செய்த  வினைகளையெல்லாம்,  வேள்விகள்  செய்து  அழிக்கலாம்  என்று  பொய்ரைக்கிறீர்கள்.  வேள்விகள்  செய்து  வருபவர்களை  வினைகள்  தொடர்ந்து  வராது  என்ற  பொய்யான  உறுதியை  மக்களுக்கு  தருகிறீகள்.

 

வேதங்களில் மெய்பொருளில்லை  வேதங்களால்  பயன்  உங்களுக்கே

உங்களை  உலகோர்  மதித்திட  உங்களாய்  யாத்தது  உம்  வேதங்கள்

உயிர்களிடத்து  அருள்  சிறிதுமின்றி  உயிர்களை  வேள்வித் தீயிலிட்டு

உருத்திரர்,வசு,பிதிரருக்கு படைத்து ஊன் உண்ட தீவினை உங்களுக்கு   422       

            வேதங்கள்  முரண்பாடு  உள்ளவைகளாகவும்,  மயக்கம்  தருவனவாகவும்  உள்ளன.  மெய்ப்பொருள்கள்  ஏதும்  இல்லை.  ஆனால்,  அவைகளின்  பெயரால்  நீங்கள்  பயனடைகிறீர்கள்.  உலகோர்  உங்களை  மதித்து,  பொன்,  பொருள்  கொடுத்து  சிறப்புகள்  செய்வார்கள்  என்ற  காரணத்தால்,  நீங்கள்  இத்தகைய  நூல்களைப்  படைத்துக்  கொண்டீர்கள்.  உயிர்களிடத்து  அன்பும்,  அருளும்  சிறிதும்  இல்லாமல்,  அவ்வுயிர்களை  வேள்வித்  தீயில்  இட்டு  உயிர்  வதை  செய்கிறீர்கள்.  இரக்கம்  இன்றி,  அவைகளைக்  கொன்று,  உருத்திரர்,  பிதிரர்  ஆகியோருக்கு  படைப்பதாக  கூறிக் கொள்கிறீர்கள்.  அவர்களுக்கு  ஊட்டுவதாக  கூறி  நீங்கள்  ஊன்  உண்ணுகிறீர்கள்.

 

தேவர்கள்  மகிழ்ந்திட  நீங்கள்  செய்திடும்  வேள்விகள்  எல்லாம்

உயிர்கொலை  ஒன்றே  தவிர  உயர்நிலை  தேவரைச்  சேராது

விலைகொடுத்து  ஊன் ஊண்போர்கள்  உயர்பிறவி  தேவர்கள்  எனினும்

தீயென  தீவினைகள்  பற்றும்  தெரிந்துகொள்  வேதியனே  என்றாள் கேசி  423

 

            ஒருவன்  அறச்சாலை  அமைத்து,  அன்னதானம்  செய்கையில்,  வயிறார  உண்ணும்  நீங்கள்  நல்வினைப்  பெற்றவர்கள்  ஆகமாட்டீர்.  மாறாக  உங்களுக்கு  அன்னமிட்டவனுக்கே  நல்வினைகள்  கிட்டும்.  அதுபோல்  தேவர்களுக்கு  என்று  வேள்வி  என்ற  பெயரில்,  உயிர்கொலையை  நீங்கள்  செய்யும்  போது,  அத்தீவினை  உங்களையே  வந்து  சேரும்.  தேவர்களுக்கு  போய்  சேராது.  விலைகொடுத்து  கடையில்  ஊன்  வாங்கி  உண்ணுபவர்கள்,  உயர்ந்த  பிறவிகள்  பெற்ற  தேவர்களே  ஆனாலும்,  தீவினைகள்  அவர்களைத்  தீ போல்  பற்றிக் கொள்ளும்  என்பதை நீ  அறிந்துகொள்  வேதியனே  என்றாள்.

 

உயிர்களை  வேள்வியிலிட்ட  ஊனினை  தேவர்கள்  ஏற்றாரெனில்

தேவர்களும்  தீவினையாளர்களே  மக்கள்  தீவினையை எப்படி போக்குவர்

வழிபாடுகள்  செய்வதன்  மூலம்  வரும்  துன்பம்  போக்கலாமென்பது  தவறே

நோய், துன்பம், பேய்கள் வருவதும்  ஊழ்வினையின் பயனே என்றாள்            424

 

            உம்மால்  போற்றப்படும்  தேவர்கள்,  நீங்கள்  வேள்வித்தீயில்  இட்டு  உயிர்களை  கொல்லுவதையும்,  அவற்றின்  ஊனை  தமக்கு  வழங்குவதையும்  கண்டு  இன்புறுவார்கள்  என்றால்,  அத்தேவர்களும்  தீவினையாளர்கள்  ஆவர்.  அவர்கள்  எப்படி  மக்களின்  தீவினைகளைத்  தீர்த்துவைப்பார்கள்.  அவர்கள்  தீவினையை  தீர்க்காவிட்டாலும்,  வழிபாடு  செய்வதன்  மூலம்,  நோய்களையும்,  துன்பத்தையும்,  பேய்களையும்  நாங்கள்  போக்கிக்  கொள்வோம்  என்று  கூறுவதும்  தவறேயாகும்.  ஏனெனில்,  நோய்  துன்பம்,  பேய்கள்  வருவதெல்லாம்  நாம்  செய்த  ஊழ்வினையின்  பயன்கள்  ஆகும்.  ஊழ்வினையை  அகற்றுதல்  அரிதாகும்  என்றாள்  நீலகேசி.

 

மக்கள்  நாம்  பெறும்  துன்பத்தை  மாய்த்திட  இயலாதவர்கள்

மற்றவர்கள்  துன்பங்களையும்  மாற்றுவதும்  அருஞ்செயலாகும்

தேவர்களும்  தன்  துன்பங்களை  தீர்த்துக்கொள்ள  முடியாதவர்கள்

பிறர் துன்பம்  போக்கும்  திறன்  பொருந்தும்  எனக்  கூறுதல்  முரணே            425

 

            மாந்தர்களாகிய  நாம்,  நாம்  பெறும்  துன்பங்களை  நாமே  தீர்த்துகொள்ள   இயலாதவர்களாகவுள்ளோம்.  இந்த  நிலையில்  பிறர்  பெரும்  துன்பத்தை  தீர்த்தல்  நமக்கு  அரியசெயலாகும்.  அத்தேவர்களும்  நம்மைப்  போலவே  தமக்கு  வரும்  துன்பங்களைத்  தாமே  தீர்த்துக்  கொள்ள  இயலாதவர்கள்  அத்தகைய  அவர்கள்  பிறருடைய  துன்பங்களை  எப்படி  தீர்க்க  முடியும்  என்று  இகழ்ந்தாள்  நீலகேசி.

 

தேவர்கள்  தம்  பசியைப் போக்க  தாமே  கொன்று  உண்ண  இயலும்

விரும்பிய  உணவை  தூரநின்று  ஏற்றுண்ணும்  தமையுமுண்டு

உயிர்வதையில்  கிடைக்கும்  ஊனை  உண்பது  தேவர்கள்  என்னும்

இழிந்த  தீய  வார்த்தைகளை  இனியும்  கூறாதிருப்பாய்  பூதிகனே                426

 

            தேவர்கள்  தம்மை  வருத்தும் பசியை  போக்க,  நாம்  கொன்று  கொடுக்கும்  ஊனை,  அவர்களே  கொன்று  தின்னமுடியம்.  அவர்களை  யார்  தடுக்க  இயலும்.  அவர்கள்  தமக்கு  வேண்டிய  உணவை  தூரத்தில்  நின்று,  ஏற்றுண்ணும்  தன்மையுடையவர்கள்.  அத்தகைய  அவர்களை  இழிவான  ஊனோடு  சோறு  உண்ணும்  வயிற்றினர்  என்று  கூறுவது,  இழிந்த  தீய  வார்த்தைகள்  தானே.  இத்தகைய  செய்கைகளை  இனியும்  செய்யாதீர்கள்  பூதிகனே  என்றாள்.

 

நீலகேசியின்  வாய்  மொழிகளை  பூதிகனின்  மாணவர்கள்  கேட்டு

வேதங்கள்  கூறும்  மொழிகள்யாவும் வெறும் பொய்யுரைகளென்றனர்

வனிதையே  உங்கள்  கருத்தினை  வாய்மையாய்  உரையும்  என்றனர்

அவை  அமர்ந்த  சான்றோரெல்லாம்  அத்தனையும் ஏற்று மகிழ்ந்தனர்            427

 

            நீலகேசியின்  கருத்தினைக்  கேட்ட  பூதிகனின்  மாணவர்கள்  அவனை  நோக்கி,  பிழைமிக்க  ஆசிரியப்  பெருந்தகையீர்,  ,நாம்  ஏற்றுள்ள  வேத  மொழிகள்  யாவும்  பொய்யுரைகளேயாகும்..  வேதம்  கூறும்  மொழிகளால்  நன்மையேதும்  இல்லை  என்பது  எங்கள்  முடிவாகும்.  அம்மையே,  நீங்கள்  உங்கள்  கருத்தை  எங்களுக்கு  வாய்மையாகவே  கூறவேண்டும்  என்றனர்..  பூதிகனும்,  மாணவர்கள்  கூறுவதே  வாய்மையென  உடன்பட்டான்.  அவையில்  குழுமியிருந்த  அனைத்து  சான்றோர்களும்,  உண்மையை  ஒத்துக்கொண்ட  பூதிகனும்  மனம்  மகிழ்ந்தனர்.

 

சமண  சமயத்  தத்துவங்களை  சான்றோரும்  பூதிகனும் கேட்டு  மகிழ

நல்லற  நெறிகளை  உணர்த்திய  நங்கை  மேல்  அன்பு  கொண்டனர்

வாலறிவன்  நெறியுணர்ந்த  நீலகேசியை  வலம் வந்து வணங்கி  சென்றனர்

புது நகர்  செல்ல  புறப்பட்ட  பூவை  பூதவாதி  ஒருவனைக் கண்டாள்             428

 

            நீலகேசியும்,  பூதிகனும்,  மற்றும்  அந்நகரத்து  சான்றோர்களும்,  கேட்டு  மகிழும்படி,  நன்மை  பயக்கும்  உறுதிப்பொருள்கள்  இவையென,  சமண  சமய  தத்துவங்களை  எடுத்துரைத்தாள்.  நங்கை  நவின்ற  நல்லறங்களை  கேட்டவர்கள்  நீலகேசியின்  மேல்  அன்பு  மிகக்  கொண்டனர்.  அருகன்  நெறிகளை  நன்கு  உணர்ந்த  நீலகேசியை  அனைவரும்  வலம்  வந்து  தொழுதனர்.  அவள்  மீது  கொண்ட  நல்லன்பின்  காரணமாக  நெடுந்தொலைவு  அவளுடன்  சென்று  வழியனுப்பினர்.

                                    வேத  வாதச்  சருக்கம்  முற்றும்.

 

 

                                                10. பூத  வாதச்  சருக்கம்.

 

வேதவாதியை  வாதில்  வென்ற  நீலகேசி  வழியில்  பூதவாதியை  கண்டாள்

சினமது  முகத்தில்  பொங்கிட  சீறும்  அவன்  போர்குணம்  கண்டாள்

அறிவிலியைப்  போரில்  வென்று  அவனது  மனச் செருக்கை  அடக்க

மனதினில்  தீர்க்க  முடிவு  செய்து  மானிடன்  பூதவாதி  முன்  நின்றாள்            429

 

            நீலகேசி,  வேதவாதியோடு  சொற்போரிட்டு,  அவன்  கருத்துக்கள்  குற்றம்  உடையன  என்று  எடுத்துக்காட்டிய  பின்னர்,  அங்கிருந்து  புறப்பட்டு  செல்லும்  போது  வழியில்  ஒரு  பூதவாதியைக்  கண்டாள்.  அவன்  முகத்தில்  மிக  சினம்  உடையவனாகவும்,  பிற  சமயவாதிகளை,  சொற்போரில்  வெல்லும்    போர்குணம்  கொண்டவனாகவும்  இருப்பதை  கண்டாள்.  அறிவிலியாகிய  இவனை  சொற்போரில்  வென்று,  இவனின்  செருக்கை  அடக்க,  மனதில்  முடிவு  செய்து  அவன்  முன்னே  சென்று  நின்றாள்  நீலகேசி. 

 

பூதவாதியை  நோக்கிய  பூவையாள்  அவன்  தத்துவப்  பொருளது  கேட்டாள்

அறியாமை சிந்திடும்  முகத்தினன்  அரசன்  அவைக்கு  அழைத்து  சென்றான்

சான்றோர்கள்  நிறைந்த அவையில் தன்  எதிரில்  நின்ற நீலகேசியை நோக்கி

நிலம், நீர், முதலிய ஐம்பூதங்கள் மெய்பொருள் என்பதே தத்துவமென்றான்430

 

            நீலகேசி  அவனை  நோக்கி,  ஐயா  நீர்  கண்ட  தத்துவப் பொருள்  யாது  என்று  எனக்கு  சொல்வீரா  என்று  கேட்டாள்.  அறியாமையை  வெளிப்படுத்தும்  முகத்தினை  உடையவனாகிய  பிசாசகன்  என்னும்  பூதவாதி,  நீலகேசியை  அரசன்  அவைக்கு  அழைத்துச்  சென்றான்.  சான்றோர்கள்  நிறைந்த  அந்த  அவையில்,  அனைவரையும்  கேளுங்கள்  எனக்  கூறி,  பின்  நீலகேசியை  நோக்கி,  நிலம்,  நீர்,  தீ,  வளி,  வெளி  என்னும்  ஐந்து  பூதங்கள்  என்பதே  என்  தத்துவம்  ஆகும்  என்று  கூறினான்.

 

நிலம், நீர், நெருப்பு,வாயு, வானம்  ஐம்பெரும்  பூதங்களாகும்

கண்,மூக்கு, நா, மெய், செவிகள் முறையே  ஐம்பொறிகள்  ஆகி நிற்கும்

நிறம், நாற்றம், சுவை, ஊறு, ஒலி  அதில்  தோன்றும்  ஐம்புலனாகும்

ஆய்ந்துபார்த்தால்இக்கருத்து அனைத்தும் பொருந்துமென்றான்பிசாசகன்431

 

            திண்ணிய  நிலைத்த  தன்மையுடைய  நிலம்,  நீர்,  தீ,  காற்று,  வானம்  ஆகியவை  ஐந்து பூதங்களாகும்.  இவற்றிலிருந்து  முறையே  மூக்கு,  நாக்கு,  கண்,  மெய்,  செவி  ஆகிய  ஐம்பொறிகளும்,  நாற்றம்,  சுவை,  வண்ணம்,  ஊறு,  ஒலி  ஆகிய  ஐம்புலன்களும்  தோன்றும்.  ஆராய்ந்து  பார்த்தால்  இக்கருத்து  மிகப்  பொருதம்  உடையது.

 

ஐம்பூதங்கள் கூட்டத்தாலே  அறிவும் இன்பமும்  தானே  தோன்றும்

அவ்வாறு  தோன்றிய  அவைகள் வளர அவைகளோடு தாமும்  வளரும்

ஐம்பூதங்கள்  தனியே பிரிந்தால்  குடமும், விளக்கும்  அழிதல்  போல

ஐம்பொறிகள் அனைத்தும்  அழிந்து அதனதன் பூதத்தில் சேருமென்றான்     432

 

            மா  முதலான  ஐந்து  பொருள்களையும்  கூட்டி  சமைத்த  கள்ளில்  களிப்பு  தோன்றுவது  போல்,  ஐம்பூதங்களின்  கூட்டத்தாலே,  அறிவு,  இன்பம்  முதலானவை  தோன்றும்.  அவ்வாறு  தோன்றி,  அவை  வளர,  தாமும்  வளரும்.  ஐம்பூதங்கள்  தனியே  பிரிந்தால்,  குடமும்  விளக்கும்  அழிதல்  போல,    பொறி  முதலியன  அழிந்து,  தத்தம்  இனமாகிய  பூதங்களில்  சேர்ந்துவிடும்  என்றான்  பிசாசகன்.

 

ஐம்பெரும்  பூதங்கள் கூட்டம்  அனைத்தும்  இவ்வுலகம்  ஆகும்

உயிர் முதலிய பொருளுண்டென  உள்நோக்கில்  கூறுவர்  சிலர்

அறிவிலிகளின் அம்மொழியேற்று  ஆர்பாட்டம்  செய்பவர்  பலர் – இதில்

பலன் ஒன்று  உண்டென  கூறின்  புலவர்களால் புகழப்படுதல் ஒன்றே            433

 

            உலகம்  யாவும்  இந்த  ஐம்பூதங்களின்  கூட்டமேயாகும்.  சொல்வன்மை  உடைய  சிலர்,  உயிர்  முதலிய  பொருள்கள்  உண்டு  என்று  தங்கள்  நலங்கருதி  கூறுவர்.  அறிவில்லாதவர்கள்  பலரும்  அம்மொழிகளை  உண்மையென்று  கருதி,  பல்வேறு  கலகங்கள்  செய்வர்.  அவர்களால்  பலன்  ஏதும்  விளைவதில்லை.  அப்படி  பயன்  உள்ளது  என்றால்,  அது  புலவர்கள்  என  பலராலும்  புகழப்படுதல்  ஒன்றேயாகும்.

 

நீலகேசி  பூதவாதி  கூற்றை  மறுத்து  கூறுதல்  :

 

இருள்சேர்  இருவினைகள்  நீக்கிய  மெய்ப்பொருளை  உணர்ந்த முனைவன்

ஞானத்தால்  போற்றிடும்  அவனை  முதல்வனாய்  நீ  ஏற்கவில்லை

அருள்நெறி  கூறிடும்  ஆகமங்கள்  அனைத்தும்  உயரிய  மாண்புடையது

அத்தகைய  முதல் நூல் ஏதும் ஐயனே உம்  தத்துவத்தில்  இல்லையே             434

 

            இருள்  சேர்க்கும்  இரு வினைகளில்  இருந்து  நீங்கி,  மெய்ப்பொருளை  விளக்கும்,  சிறந்த  ஞானத்தையுடையவனே  முனைவன்  என்று  போற்றப்படுவான்.  அத்தகைய  முனைவனை  நீங்கள்  முதல்வனாகக்  கொண்டிருக்கவில்லை.  எனவே,  உங்களுக்கு  முதல்  நூல்  என்று  ஏதும்  இல்லை.  ஆகமம்  என்பது  அத்தகைய  உயரிய  மாண்பினை  உடையது  ஆகும்.  அத்தகைய  முதல்நூல்  ஏதும்  உம்  தத்துவத்தில்  இல்லையே  என்றாள்.

 

உயிரென்னும்  பொருள்  இல்லையெனில்  உம்  உயர்  தவம்  வீண் முயற்சியே

மற்ற  சமய  கூற்றை  மறுத்து  மக்களுக்கு  நீர்  சொல்லுவது  என்ன

இறைவன், ஒழுக்கம், அறம், நற்பயன்  இவையாவும்  இல்லை  என்று  கூறி

ஐம்பூத  வாதம்  செய்யும்  பூதமே  ஐம்பூதத்தில்  எப்பூதம்  நீ  என்றாள் கேசி  435

 

            உயிர்  என்னும்  பொருள்  இல்லையென்றால்,  ஆகமங்கள்  கூறியபடி,  உங்கள்  உயர்ந்த  தவம்  வீண்  முயற்சியேயாகும்.  ஐம்பூதங்களே  மெய்பொருளாகும்.  இதைக்கூறும்,  மற்ற  சமயங்களை,  மறுத்து,  மக்களுக்கு  நீங்கள்  கூறும்  நன்மைதான்  என்ன.  இறைவன்,  நல்லொழுக்கம்,  அறம்,  நற்பயன்  இவையாவும்  இல்லையென  கூறுவது  பயனில்லாத  சொல்லாகும்.  ஐம்பூத  வாதம்  செய்யும்  செய்யும்  நீ,  அந்த  ஐந்து  பூதங்களுள்  எந்த  பூதம்  ஆவாய்.

 

ஐம்பூதக்  கூட்டத்தால்  தான்  அறிவு,  இன்பம்  தேன்றிடும்  என்றாய்

மறைந்துள்ள  அறிவு  இன்பத்திற்கு  உருவம்  உண்டு  என்பதுன்  கருத்தோ

கூறிய  பூதங்களுக்கெல்லாம்  களவு,  காமம்,  வள்ளல்  குணமுண்டோ

மனிதர்கள்  குண  வேறுபாட்டால்  உயிர்  பொருள்  உண்டென  அறிவாய்      436

 

            நீ  கூறிய  ஐம்பூதக்கூட்டத்தினிடம்  அறிவு,  இன்பம்  என்பன  தோன்றுவதற்கு,  உவமையாக  மா,  கள்  முதலிய  மயக்கம்  தரும்  பொருள்களை  எடுத்துக்  கூறினாய்.  மயக்கம்  தரும்  பொருளுக்கும்  உருவம்  உண்டு,  மயங்குவோனுக்கும்  உருவம்  உண்டு.  அதுபோல்  அறிவு  முதலியவற்றுக்கு  உருவம்  உண்டோ ?  இல்லையே.   எனவே  உன்  உவமை  பொருந்தாது.  நீ  கூறும்  பூதங்கள்  களவு  செய்தல்,  காமுறுதல், வள்ளல்  தன்மை  முதலியன உடையவையல்ல.  ஆனால்  மனிதருள்  இத்தகைய  குண  வேறுபாடுகளுக்கு  காரணமான  உயிர்  என்ற  பொருள்  ஒன்று  உண்டு  என்று  அறிந்துகொள்  என்றாள்.

 

ஒவ்வொரு  பொறியின்  காரியங்கள்  ஒவ்வோர்  அறிவு  எனக் கொண்டால்

ஐந்து பூதங்களும்  ஒருசேர  அறிவுடைய  பொருள்  ஆதல்  வேண்டும்

ஐந்து பூதங்களும்  ஐம்பொறியாகி  ஐந்து  அறிவைத்  தந்திடுமெனில்

ஆறாம்  அறிவாம்  மனதிற்காக  ஆறாம்பூதம்  என்றொன்றில்லையே            437

 

            ஒவ்வொரு  பொறியின்  காரியம்  ஒவ்வோர்  அறிவு  என்றால்,  ஐம்பூதங்களும்  ஒரு  சேர  அறிவுடைய  பொருளாதல்  வேண்டும்.  அவ்வாறின்றி,  ஐந்தும்  கூடி  ஓரறிவை  உண்டாக்கும்  என்றால்,  அதுவும்  முதலில்  சொல்லிய  குற்றத்திற்கு  இலக்காகும்.  ஐந்து  பூதங்களும்  ஐந்து  பொறிகளாகி,  ஐந்து  அறிவுகளைப்  பிறபிக்கும்  என்றால்,  ஆறாவது  அறிவு  கருவியாகிய  மனதைப்  பிறப்பிக்கும்  பூதம்  ஒன்று  இல்லையே  என்றாள்.

 

உடல்  கொண்ட  உயிரினங்களுண்டு  கண்டு  கேட்டு  அறிதலும்  உண்டு

அத்தனை  நிகழ்வின்  காரணங்கள்  ஐந்து பூதங்கள்  செயலென்பாயோ

குழந்தைகளும்  கன்றுகளும்  தம்  தாய்  முலைப்பால்  அறிந்து  உண்ணும்

பசியுணர்ந்து  உணவு  உண்பது  உயிர்  கொண்ட  உடலால்  தானே                438

 

            உடம்போடு  பிறந்த  உயிரினங்கள்  எல்லாம்  உணவு  உண்ணுகின்றன,  பொருள்களைப்  பார்க்கின்றன,  கேட்டல்,  அறிதல்,  செய்தல்  ஆகியவற்றை  செய்கின்றன.  அத்தகைய  நுகர்வுகள்  எல்லாம்  நிகழ்வதற்கு  ஐந்து  பூதங்களின்  செயல்தான்  காரணமோ.  குழந்தைகளும்,  விலங்குகளின்  குட்டிகளும்  தத்தம்  தாயின்  முலைப்பாலை  தாமே  அறிந்து  அருந்துகின்றன.  பசியை  அறிந்து  பிற  உணவுகளையும்  உண்ணுகின்றன.  இவையெல்லாம்  உயிர்  கொண்ட  உடலால்  தானே  நடக்கும்  என்றாள்.

 

ஐந்து பூதங்கள்  சேர்ந்து  தான்  ஐம்பொறிகள்  உண்டாக்கும்  என்றும்

ஐந்து  பொறிகளால்  மட்டும்  தான்  ஐம்புலன்கள்  உருவாகும்  என்றும்

கருத்தினை  நெஞ்சில்  நீக்கி  கதி மோட்சம்  அடைவதற்கு

உயிர் என்னும்  பொருள்  உண்டென்ற  உண்மையை  உணர்வாயென்றாள் 439

 

            ஐந்து  பூதங்களால்  தான்  ஐந்து  பொறிகளும்  உண்டாகும்.  அந்த  ஐந்து  பொறிகளால்  தான்  ஐந்து  புலங்களும்  உண்டாகும்  என்று  எண்ணுகின்ற  எண்ணத்தை  இனி  நீ  விட்டுவிடு.  பிறவி  சுழற்சியில்  சிக்கி  கரையேறி  வீடுபேறு  அடைவதற்கு,  உயிர்  என்னும்  ஒரு  பொருள்  இருந்தால்  தான்  முடியும்  என்னும்  கொள்கையை  ஏற்றுக்கொள்  என்றாள்  நீலகேசி.

 

ஓர்  அறிவு  பொருள்களிடத்தே  அறிவு, இன்பம், துன்பம்  உள்ளதெனில்

ஐம்பூதங்கள்  கூடின  போதே  அறிவு  முதலிய  தோன்றுதல்  பொய்யே

அறிவும், இன்பமும்  உள்ளதுயெனில்  அங்கு  உயிர்  உள்ளது  உண்மை

பூத வாத  கருத்துடையோனே  புரிந்து  கொள்  சமணத்தத்துவம்  தன்னை       440

 

            ஓரறிவு  உயிர்கள்  இடத்தே  அறிவு,  இன்பம்,  துன்பம்  முதலியன  உள்ளன  என்றால்,  ஐம்பூதங்கள்  கூடினபோதே  அறிவு   முதலானவை  தோன்றும்  என்பது  பொய்.  அறிவும்,  இன்ப, துன்பம்  உள்ளது  என்றால்  அங்கு  உயிர்  உள்ளது  என்பது  உண்மையாகும்.  இந்த  சமண  தத்துவத்தை  பூதவாத  கருத்துடையோனே  புரிந்து  தெளிவாய்  என்றாள்  நீலகேசி.

 

மழலையில்  கூறும்  மொழிகள்  முதுமையிலும்  கூறல்  கேட்போம்

எக்காலமும்  அழிவின்றி  போற்றும்  ஏற்றம்  உடையது உயிர்  ஒன்றேயாம்

துன்பத்தையும்,  மனத்தூய்மையும்,  அஞ்சலையும்,  அன்பு  செலுத்தலையும்

ஆண்மை,மானம், பொய்மை பண்புகளை ஆக்கிடும் பூதம் எதுவென கூறு 441

 

            ஒருவன்  குழந்தைப்  பருவத்தில்  கூறும்  மொழிகள்  பலவற்றையும்  தன்  முதுமைப்  பருவத்தில்  அவனே  கூறக்கேட்கிறோம்.  ஆதலால்  எக்காலத்திலும்  அழியாமல்,  நல்லோர்களால்  போற்றப்படுகின்ற  சிறப்புடையது  உயிர்  என்பது  விளங்கும்.  உயிர்கள்  துன்பமுறுதலும்,  மனத்தூய்மையடைதலும்,  ஐயோ  என  அஞ்சுதலும்,  அன்பு  செலுத்தலும்,  மானம்  உடையவைகளாக  இருத்தலும்,  ஆண்மையுடயதாக  இருத்தலும்,  பொய்மையுடையவனாக  இருத்தலும்  ஆகிய  பண்புகளை  எந்த  பூதம்  உண்டாக்கும்  என்று  எனக்கு  விளக்கி  சொல்வாய்  என்றாள்  நீலகேசி.

 

உறக்கத்தில் தோன்றும்  கனவும்  உள்ளத்தில்  எழுந்திடும்  சூழ்ச்சியும்

அறிவு  கொண்டு  ஆய்ந்து  அறிதலும்  பறவை  ஒலியின்  நிமித்தம்  அறிதலும்

வாழ்நாள்  பற்றி  கூறுவதற்கு  விடையென  பகரும்  சோதிடமும்

பூதங்களின் செயல்கள் என்று பிசாசகா நீ  பகர்கின்றாயா  என்றாள்  கேசி 442

 

உறங்கும்  போது  கனவு  காண்பதும்,  மனதினில்  சூழ்ச்சி  செய்தலும்,  நம்முடையா  அறிவைக்கொண்டு   ஆராய்ந்து  அறிதலும்,  பறவைகளின்  ஒலியைக்கேட்டு  நிமித்தம்  அறிதலும்,  நம்  வாழ்நாள்  பற்றிய  கேள்விகளுக்கு  ஜோதிடமும்,,  இவைபோல  பிறவும் நீ  கூறும்  பூதங்களின்  செயல்கள்  தனோ  பிசாசகா  என்று  கேட்டாள்  நீலகேசி. 

 

பேய்  இல்லை,  மறுபிறப்பில்லை  என  பேதமையில்  கூறும்  பூதவாதியே

மந்திரத்தால்  பேயைக்  காட்டுவேன்  மெய்யென  உணர்வாய்  நீயும் – என

தன்  பேயுருவம்  முழுதும்  காணில்  பூதவாதி  உயிர்  போகும்  என்று

வாய் பிளந்து வளைந்த  பற்களின்  வடிவம்  காண  அவன்  முன்  நின்றாள் 443

 

            பூதவாதி  பிசாசகனே,  பேயும்  இல்லை,  மறுபிறப்பும்  இல்லை  என்று  கூறுகிறாய்.  இவ்வாறு  கூறும்  உன்  வாயை  அடக்குவேன்.  பொய்  சொல்லியனறு,  மந்திரத்தால்  நான்  பேயை  வரவழைப்பேன்.  அதைக்கண்ட  பின்  நீயும்  மெய்யென  உணர்வாய்  என்று  கூறி,  தன்  பேய்  உருவம்  முழுவதும்  காட்டினால்  பூதவாதியின்  உயிர்  பிரிந்துவிடும்  என  எண்ணி,  வாயை  மட்டும்  பிளந்து  காட்டி,  வளைந்த பற்கள்  தெரியும்  படி  அவன்  முன்  நின்றாள்  நீலகேசி.

 

வாயையும்  பற்களையும்  கண்டு  வாடா  அச்சம்  மிகவும்  கொண்டான்

கண்களைகையால் மூடிக்கொண்டான் கவிழ்ந்த முகம் மண்ணில் பதித்தான்

நீலகேசி  அவனை  தூக்கி  நிறுத்தி  நெறிகள்  பல  அவனுக்கு  உணர்த்தி

பேய்  கண்டு  நீ  அஞ்ச  வேண்டாம்  பேய்  உனக்கு  நட்பு  ஆகும்  என்றாள்       444

 

            பேயின்  வாயையும்,  பற்களையும்  கண்ட,  எதற்கும்  அஞ்சாத  பிசாசகன், மிகுந்த  அஞ்சம்  கொண்டான்.  தன்  கண்களை  கைகளால்  முடிக்கொண்டான்.  முகம்  கவிழ்ந்து  கீழே  விழுந்து,  மண்ணில்  தன்  முகத்தைப்  பதித்துக்  கொண்டான்.  நீலகேசி  அவனை  நிலத்தில்  இருந்து  தூக்கி, பல  உறுதி  மொழிகளைக்கூறி  தேற்றினாள்.  மேலும்  பயப்படாமல்  இருக்க  பல  பண்பு  மொழிகளை  அவனுக்கு  கூறி,  நீ  இனி  பேயைக்கண்டு  அஞ்சவேண்டாம்,  பேய்  உனக்கு  நண்பன்  ஆகும்  என்று  ஆறுதல்  வார்த்தை  கூறினாள்.

 

பேயை  நீ  கண்டாய்  இப்போது  பேயின்  இயல்பை  கூறு  என்றாள்

வாயினை  மட்டுமே  கண்டேன்  வரும்  சாவை  உணர்ந்தேன்  என்றான்

அப்பனே  நீ  அஞ்ச  வேண்டாம்  அவள்  உனக்கு  தாயாய்  இருப்பாள்

நல்லறத்தை  ஏற்றாய்  ஆகில்  சாதல்  என்பது  உனக்கு  இல்லை  என்றாள்       445

 

            பிசாசகா,  நீ  இப்போது  பேயைக்கண்டாய்.  அதன்  இயல்பினைக்  கூறுவாயக  என  நீலகேசி  கேட்டாள்.  அதற்கு  பூதவாதி,  அம்மையே  நான்  அப்பேயின்  வாயை  மட்டும்  கண்டேன்,  வடிவத்தக்  காணவில்லை.  அவ்வாயைக்  கண்டே  நான்  சாவை  நெருங்கிய  நோயாளியாகி,  சாவை  உணர்ந்தேன்.  இனிநான்  உயிர்  வாழ்வேன்  என்று  கருத  வேண்டாம்  என்று  அச்சத்தில்  கூறினான்.  அன்பனே  நீ  அஞ்சவேண்டாம்,  அப்பேய்  உனக்கு  இனி  அன்னையாகி,  பிசாசகன்  என்னும்  பெயருள்ள  நீ  இனி  பேய்மகன்  ஆவாய்  என்றாள்.  ஆனால்,  நீ  குற்றமற்ற  எங்கள்  நல்லறத்தைக்  கைகொண்டால்,  உனக்கு  சாதல்  என்பது  இல்லை  என்றாள்.

 

நல்லறங்கள்  எடுத்துரைத்த  நல்லசிரியை  உம்மை  மறவேன்  என

பார்ப்பவர்  அஞ்சும்  தோற்றமுடைய  பிசாசகன்  தன்  கருத்தைக்  கூற

வேந்தனும்,  சான்றோர்களும்  வியந்து ஞானப்பெண்  நீலகேசியை போற்றி

அவள்  அருளிய  அறத்தின்  படியே  அனைவரும்  சிறப்புடன்  வழ்ந்தனர்    446

 

            பிறப்பின்  காரணம்,  வகை,  பேய்  முதலிய  உயிர்களின்  தன்மை  முதலியவற்றை  எனக்கு  எடுத்துரைத்ததால்,  நான்  ஐயம்  திரிபறத்  தெளிந்தேன்.  எனவே,  இனி  நான்  நீர்  கூறிய  நல்லறத்தின்  வழிய  நடப்பேன்.  நல்லாசிரியையாகிய,  உன்னை  என்றும்  மறவேன்  என்றான்  பிசாசகன்.   வேந்தனும்,  சான்றோர்களும்,  வியந்து  மனமழ்ச்சியுடன்  ஞானப்பெண்ணாக,  நல்லறம்  நவின்ற  நங்கை  நீலகேசியைப்  போற்றி,  அவள்  அருளிய  அறத்தின்படி  அனைவரும்  சிறப்புடன்  வாழ்ந்தனர்.

 

 

                                                பூத  வாத  சருக்கம்  முற்றும்.

           

நீலகேசி  சமய  திவாகர  விருத்தி  உரைச்  சிறப்பு. 

 

1.      மெய்நூல்  நெறியை  விளக்கி

விளங்காப்  பிடக  முதல்

            பொய் நூல்  இருளைப்  போக்கப்

                        துறந்தது  பூதலத்தில்

            எந்நூலும்  வல்லவர்  ஏத்தச்

                        சமயத்து  இறைவன்  கண்ட

            செந்நீலகேசி  விருத்தச்

                        சமய  திவாகரமே

 

2.      அருகன்  திருவறத்து  அன்பு  செய்

வாரு  மழிவழக்கால்

            பெருகுந்  துருநெறிப்  பீடழிப்

                        பாரும்  இப்பேருலகில்

            பொருவின்றி  நின்ற  தமிழ்  நீல

                        கேசிப்  பொருளையெல்லாம்

            திரிவின்றிக்  காட்டும்  சமய

                        திவாகரம்  சேவிக்கவே.

 

நீலகேசி  கவியாக்கம்  முற்றும்.

 

இனிய  சொந்தங்களே,

            இந்த  நீலகேசியை  தொடர்ந்து  வந்தமைக்கு  மிக்க நன்றி.  தர்க்க  நூலான  இதில்  தவறுகள்  என்னால்  பல  இருக்கும்.  பேச்சுத்  தமிழில்  பொருள்  பதியும்,  பெருமுயற்சியில்  பிழைகள்  பல  வந்திருக்கும்.  சொற்குற்றம்  ஏற்புடைதெனினும்,  பொருட்குற்றம்  ஏற்புடைதன்று.  சொற்குற்றம்  பல  காணலாம்,  பொருட்குற்றம்  தவிர்த்திருப்பேன்.  பொருட்குற்றம்  சிலது  காணினும்  பெருந்தன்மையுடன்  மறந்து  ஏற்கவும்.  பொருட்குற்றங்களை  நவின்றால்  பெருமையுடன்  திருத்திக்  கொள்வேன்.

சமணம்  அறியாச்  சமணனாய்,  நூலில்  நுகர்ந்ததை  உங்களையும்  நுகரச்  செய்தேன்.  சமணம்  அறிந்த  சான்றோர்கள்,  தவறைச்  சுட்டினால்  கற்றுக்  கொள்வேன்.  மேருமந்திர புராணம்,  சீவக சிந்தாமணி,  யசோதர காவியம்,  சூளாமணி,  நீலகேசி  நூல்களை,  என்  பாமரத்தமிழில்  கவியாக்கம்  செய்ய,  வாய்ப்பளித்த  அனைத்து  நல்லற  சொந்தங்களுக்கும்  நன்றி  கூறி  விடைபெறுகிறேன்.  வணக்கம்.

                                                                        என்றும்  உங்கள்  அன்பில்,

                                                                            முட்டத்தூர். அ. பத்மராஜ்.

                                                                                                29.04.2022.

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment