Chandraprabasamy brief history



ஸ்ரீ சந்திரப்ரபு ஸ்வாமி



மந்தார கிரி
(தும்க்கூர்)





ஜம்பூத்வீபத்தில் பரதக்ஷேத்திரத்தில் சந்திராபுரத்து அரசன் இக்ஷுவாகு வம்ச காசியப கோத்திரத்து மன்னன் மஹாசேசன் மற்றும் தேவி லக்ஷ்மணை என்ற ஜினமாதா பதினாறு கனவுகளைக் கண்ட பின் உத்தமரான ஸ்ரீசந்திரப்பிரபு எழுந்தருளினார். சுபார்ஸ்வ ஜினரின் தீர்த்தங்கர சந்தான காலத்திற்குப்பின் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரப்ரப நாதர் சந்திர ஒளி மயமானவர், நூற்றைம்பது வில் உயரத்துடன் அரச சுகத்தை அனுபவித்து, நிலைக்கண்ணாடியில் தன்முக நிழலுருவத்தை கண்டதும், இவ்வுலக வாழ்வில் வெறுப்புற்று துறவறம் நாட்டம் கொண்டு மகனிடம் ஆட்சியை ஒப்படைத்து ஆயிரம் மன்னர்களுடன் சர்வர்த்துகம் எனும் வனம் நோக்கி சென்றார். எல்லாப் பற்றையும் நீக்கி துறவியாகி உடன் மனப்பர்யய  ஞானத்தை எய்தினார். பின்னர் சில காலம் தபவாழ்வில் மூழ்கி நாக மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்யும் தருணத்தில் கேவலஞானத்தை பெற்றார். பின்னர் தரும உபதேசசேவை புரிவதில் ஈடுபட்டு பல காலம் சமவசரணத்தில் வெவ்வேறு ஸ்தலங்களில் அற உபதேசம் செய்தார்.


தொண்ணூற்று மூன்று கணதர்கள், தவமுனிவர்கள் இரண்டு லட்சத்து ஐயாயிரத்து தொண்ணுற்று மூவர், ஆர்யங்கனைகள் மூன்று நூறாயிரத்து எண்பதினாயிரவர். தேவ தேவியர் எண்ணற்றவர் இவரது பக்தர்கள் ஆனார்கள். மற்ற பிராணிகள் எண்ணில் அடங்கியவை யாகும். கேவலிபகவான் பலகாலம் சமவசரணத்தில் அமர்ந்து தரும உபதேசம் செய்தபின் சம்மேத பருவதத்தில் ஒரு  மாதம் பிரதிமாயோகதாரியாக  நின்று ஆயிரம் முனிவர்களுடன் பங்குனி மாதம் சுக்கில பட்ச பஞ்சமி கேட்டை நட்சத்திரத்தில் பிற்பகலில் அனைத்து கர்மாக்களையும் விலக்கி மோட்ச பரமசுகத்தை அடைந்தார்.


இவரது தீர்த்தங்கர சந்தான காலம் தொண்ணூறு கோடி கடற்காலம் ஆகும்.

No comments:

Post a Comment