Festival of lights. தீபாவளி


தீபாவளி 


Festival of lights.


பாவா நகரின் அந்தநாட்கள்....


மகாவீரர் துறவறம் ஏற்று தவவாழ்வில் எங்கும் சுற்றி திரிந்து முழுதுணர்ஞானம் பெற்று, அனைவர் வாழ்விலும் துன்பம் நீங்கும் வழியை தெய்வ(திவ்ய)தொனி வழியே ஒவ்வொரு தேசமாக உபதேசித்து வரும் வேளையில்; தன்னுடைய 42 வது மழைக்கால தங்கலுக்காக, ஆயிரக்காணக்கான சீடர்களுடன் வருகிறார்.

குண்டலபுர இளவரசர் துறவற நெறியை தொடர வழிவகுக்கும் முகமாக, அந்நகர அரசன் ஹஸ்திபால் வரவேற்று அவருக்கு வேண்டிய பணிவிடை செய்யும் பொறுப்பை தனது தலைமை கணக்கனுக்கு ஆணையிடுகிறான்.
அம்முனிகள் ஆசிரமத்தில் தினமும் காலை மாலை போதனைகள் வாயிலாக பல ஆயிரம் மக்களும் கண்டு தரிசித்து வந்தனர். அவர் பொன்நிற மேனியின் திருவாய் அருளும் திவ்ய மொழி வழியே, வாழ்வு உய்ய வழிகேட்டு சென்றனர்.

வானவரும், மன்னரும் அன்றாடம் வந்து வணங்கி செல்கின்றனர். அவரை தரிசிப்பதே பெரும் பாக்கியமாக கருதிய அந்த நகர மக்கள் பரவசத்துடன் பக்தி செய்து தம் பாவங்களைப் போக்கி வந்தனர்.

நான்கு மாதங்கள் கழிந்தன. மகாவீரரும் வெளியுலக தரிசனத்திற்கு வரலானார். அப்படி யிருக்க கார்த்திகா மாதம் துவாதசியன்று அவர் சிறிய குளங்களுக்கு நடுவே அமைந்த பாறைப் பலகையில் அமைதியாக அமர்ந்து இருப்பதைக் கண்டனர்.

அவர் அருகில் சீடர் சுதர்மரும், மற்றோரும் நெருங்கியதும், “சுதர்மா இனி இந்த நால் வகைச் சங்கத்தின் பொறுப்பை நீயே ஏற்று நடத்த வேண்டும்” எனக் கூறிவிட்டு; அருகிலிருந்தவர்களிடம், அன்னாந்து பார்த்துக் கொண்டே, “நான் உங்களையும் இவ்வுலகையும் இரு நாளில் பிரியும் வேளையை கண்டு கொண்டிருக்கிறேன் ” என கூறுகிறார்.

அதனைக் கேட்ட அன்பர்களும், சீடர்களும் அதிர்ந்து விடுகின்றனர். அழுது அரற்றுகின்றனர். 💧 பலரும் வாய்விட்டு “எங்கள் தெய்வத்தை நாங்கள் இழக்கப் போகிறோமா, முடியாது அவ்வாறு இல்லாமல் இருக்க ஏதாவது செய்யுங்கள்’ என கதறுகின்றனர்.

அறிவிற் சிறந்தவர்கள் “பகவான் தமது பிறவி உடலை விடுத்து பிறவா பூமிக்கு செல்ல விருக்கிறார். அதுவே பெரும் பேறாகும்” என்கின்றனர். பாமரர்களோ “பகலவன் போல் வந்தவர், மறைந்து எங்களை இருளில் தள்ளி விடுவாரோ; இயற்கையே இவரை எங்களிடமிருந்து பிரித்து விடாதே” என்றும், “நேற்று தான் வந்தது போல் இருந்தது நாளை சென்று விடுவாரா, கடவுளே என்ன சோதனை; காலனே அவரை எங்களிடமே விட்டு விடு” என அழுது அரற்ற ஆரம்பித்து விட்டனர்.

“அவரே எங்கள் செல்வம் செல்ல விடமாட்டோம்” என்றனர். “அவர் பிரிவதை நிறுத்த முடியாதா, அரசே ஏதாவது செய்யுங்கள்” என அரசரிடம் முறையிட சென்றனர்.

இவற்றை அறிந்த மன்னனும், தேவரசனும் அவரை அணுகி வினவுகின்றனர்.

அவர் “எனது அனைத்து கருமங்களும் கெடும் நேரம் நெருங்கி விட்டது. சதுர்த்தசி நடுஇரவுக்கு முன் அனைத்து ஆயுள் கருமமும் கழிவதால் இவ்வுடலை விடுத்து பிறவா பிரதேசம் நோக்கி இவ்வான்மா சென்று விடும் என்றார்.” மண்ணரசரும், விண்ணரசரும் “ஐயனே எங்களை விட்டு பிரியாதீர்கள், அகன்று விட்டால் பெரும் பாவம் செய்தவர்கள் ஆகிவிடுவோம், எங்கள் வாழ்வின் பேறுகள் முடிந்து விடும்” என வேண்டுகின்றனர்.

தேவரசன் செளதர்மனும் “பகவானே தாங்கள் இவ்வுடலை விட்டு நீங்கும் நேரம் நல்ல நட்சத்திரம் கூடிய வேளையில்லை, அவ்வாறு நிகழ்ந்தால் இம்மண்ணுலகிற்கு தீங்கு நேரலாம். ஆதலால் எங்களை விட்டுப் பிரியாதீர்கள். நல்ல சமயம் வரும் வரை எங்களுடன் இருக்க வேண்டுகிறோம் “ என தன் நிலை மறந்து மண்டியிட்டு மன்றாடுகிறான். மேலும் “ தாங்கள் கேவலஞானம் பெற்றவர், தாங்கள் அவ்வறிவின் வழியே தாமதம் செய்ய முயல வேண்டுகிறோம்” என அறிவிழந்து அவரை வேண்டுகிறான்.

அதனைக் கேட்ட மாகாவீரர் “ஏ இந்திரராஜ் என்மீதுள்ள பிரியத்தினால் நீ அவ்வாறு கூறுகின்றாய், அதனை எப்படி செய்ய முடியும், கேவலஞானத்திற்கு பின் அகாதி கர்மங்கள் கெட்டு, கடைசியாக ஆயுள் கருமமும் அழியும் வேளையில் ஆன்மா உடலை விடுவித்து தானே ஆகவேண்டும். நீயோ, நானோ, எந்த சக்தியாலும் அந்நிகழ்வை தள்ளிப் போட முடியாது” என தெளிவு படுத்தி; “இருப்பினும் அனைத்துலக இடர்களும் நீங்கி பிறவா நிலைக்குச் செல்லும் எந்தவொரு ஆன்மாவும் விலகாமல் இருப்பதை விரும்பாது என்பதை நீயும் உணர்வாய். ஆனால் ஓர் உபாயம் உள்ளது; அனைவரும் என்வழியே நடந்தால்; கர்மங்கள் அழியும் வரை நான் உங்களுடன் வழிகாட்டியாக இருப்பேன்.” என பதிலுரைத்து அனைவரையும் அமைதி படுத்தினார்.

மேலும் “ இந்த இளவேனிற்காலத்தில் ஒரு மலர் உதிர்ந்தால் அடுத்து ஒன்று மலர்வது போல, இன்னொரு சத், சித், ஆனந்தத்திற்கான விடியல் வரத்தான் போகிறது “ என அனைவரது மனதையும் தேற்றினார். ஆனால் மக்கள் பலவாறு உரையாட ஆரம்பித்து விட்டனர். “வாழ்வின் ஒளியான வீரசாமி நம் வாழ்வையும் கரை சேர்க்காமல் நம்மை விட்டு அகல மாட்டார்”

“அமாவாசை தேய்பிறையில் இரவே தெரியாமல் ராக்கதிரோன் போல ஒளி பொருந்திய அவர் அகன்றால் இந்த பாவா நகரை இருள் சூழந்து விடுமே” என்றனர் சிலர். “அவருடைய பிரதான சீடர் கெளதமரை விட்டு எப்போதும் பிரிந்தவரில்லை. அருகிலுள்ள ஊருக்கு பிரவசனம் செய்ய சென்றிருக்கிறார். அச்சீடர் வரும் வரை சில நாட்கள் நம்முடன் இருப்பார்” என தங்களை சிலர் தேற்றிக் கொண்டனர். “அவர் எங்களை விட்டுச் சென்றால் நாங்களும் அவருடன் சென்று விடுவோம்” என பித்தனைப் போல் பிதற்றியும் வந்தனர்.

அவ்வொளி அங்கிருந்தும் இருள் கவ்வியது போலாயிற்று அவ்வூர்.

இச்செய்தியை கேட்டு தேவர்களும், மக்களும் கடலை தழுவும் நதியை போல் கூடிக் கொண்டே இருந்தனர். தேவர்களும், மனிதர்களுமாக நிரம்பி வழிய ஆரம்பித்தனர், அனைவரையும் காண, காண தனது திவ்யதொனி வழியே அவரவருக்கும் புரியும் வண்ணம் திவ்ய அமுதமாக வழங்கி வந்தார். இடையிடையே விலங்குகளும், பறவைகளும் அவ்வொலியில் கவர்ந்து அவர் மொழிவழியறிவை கிரகித்தன.

உணவை மறந்து, உறக்கத்தை மறந்து, உள்ளம் இருப்பதையும் மறந்து, அவர் வாய்மொழி நிற்றல் எனும் நிலை உயிர்களுக்கு.

இக்கணம் எங்கே என தெரியாமல் அக்கணங்கள் கழிந்தது அனைவர்க்கும். மதிமயங்கா விழிப்புணர்வு, விதி பற்றிய விழிப்பு தம்தம் மொழியில் கேட்டு கழிந்தது ஈரறுபது நாழிகைகள்.உபதேசத்தின் இடையே அரஹந்தரோ, சித்த கதிக்கு செல்ல ஆயத்தமானார். மன, வசன யோகத்தை கடந்ததும், ஒலி ஓய்ந்தது; பின்னர் எஞ்சிய காய யோகத்தை கடந்தார். உள்ளிருந்த ஆன்மா கோள வடிவில் தலைக்குமேல் உயரே எழும்பியது. தேவரசனும், மன்னரும் பிரிவு நிலையை உணரும் முன்னே ஒளி வானைக் கடந்து சென்றது.

சதுர்தசி கழிந்தது நடு நசிக்கு முன்னரே, இருண்டது அந்நகர்; இரவென்பதை உணர்ந்தனர் அனைவரும். ராச்சூரியன் ஓளி எங்கே? ஆம் மகாவீரர் ஆன்மா கொண்டு சென்றது அதனை. தெய்வ ஒலி ரீங்காரத்தில் மயங்கிய தேவ, மக்கள், மாக்களும் சுயநினைவு வந்ததால் விளக்கொளி தேடினர்.

தேவர் ரத்தினங்களால் ஒளியூட்டினர், மக்கள் வரியாய் விளக்கொளி ஏற்றினர், ஆனால் விலங்கினமோ இரவென்பதை உணர்ந்தது, ஏனெனில் அச்சூரியனுக்கு இவை யனைத்தும் ஒப்பாகவில்லை. தேவரசர் “மகாவீரர் பரிநிர்வாண நிலையை எய்திவிட்டார்” என அனைவருக்கும் அறிவித்தார். அவர் மறைவை ஏற்காத மனங்கள் அழுது புரண்டன. அவர் மறையை புரிந்தவர்கள் தொழுது போற்றினர்.

அவர் விடுதலைக்கு பின் அங்கிருந்த 18 தேசத்து அரசர்களும், பல இன தலைவர்களும் அந்நாளை வரி-விளக்கேற்றி வைபவமாய் கொண்டாட முடிவெடுத்தனர்.

தேவருலகத்தவர் அனைவரும் அபாவாபுரி (இன்றைய பாவாபுரி) நகருக்கு வந்திறங்கினர். அவருடலை புனித நீராட்டினர். சுமந்து செல்ல பல்லக்கை தயார் செய்து, அமர்ந்த நிலையில் இருத்தி தேவர்கள் அதனை தூக்குவதை பாக்கியமாக கருதி, ஈமக்கிரியை பூமிக்கு கொண்டு சென்றனர்.

பல லட்சம் மக்களும் கலந்து கொண்ட அப்புனித யாத்திரையின் இறுதிச் சடங்குகளை அனைத்தையும் தேவர்கள் செய்குவித்தனர். அதன் பிறகு அவர் அஸ்தியை விண்ணுலகிற்கு கொண்டு சென்றனர்.

பகவானின் சகோதரர் அரசர் நந்திவர்தன் மகாவீரரின் பிரிவினை தாங்காமல் ஆற்றொனா துயரத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் சகோதரி சுதர்ஷனா தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சகோதரர் மகாவீரர் பகவான் நிலையை எட்டியதின் சூட்சமத்தை கூறி தெளிவுறுத்தி, அமைதி படுத்தினார்.

அவரது சீடர் கெளதமரும் திரும்பி வந்து, நிலை அறிந்து மிக வருந்தி, “ எனது ஐயன் எனைப் பிரிந்தது எனக்கு அவர் மீதுள்ள பற்றை நீக்கவே” என தன்னை தேற்றினார். “என் மீது பற்றுள்ள வரை உனக்கு கேவலஞானம் தடைபடும் “ என கூறி வந்ததை நினைவு கூர்ந்தார். அன்றே தீவிர தியானத்தில் ஆழ்ந்து கேவலஞானத்தை பெற்றார்.


அன்றிலிருந்து இன்று வரை அவர் பரிநிர்வாணம் அடைந்த தினத்தன்றே தீபங்களை ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.பகவான் மகாவீரர் வீடுபேறடைந்த பாவாபுரி, பத்மசரோவர் நடுவே அமைந்துள்ள பகவானின் பாத ஜினாலயமே அவர் பரிநிர்வாண பூமியாக அனைத்து சமணப்பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்தலமாகும்.நன்றி. முற்றும்.


   

No comments:

Post a Comment