மேருமந்திர புராணம் - பாகம் 2



மேருமந்திர புராணம்  பாகம் - 2


 8.  வச்சிராயுதன்  அணுத்தரம்  புக்க சருக்கம்.

சக்கராபுரத்தின்  மன்னன்  சாயாத  கோல்  உடையான்
     வச்சிராயுதன்  பெற்ற  வலிமை  கொண்ட  ரத்தினாயுதன்
கமல  மொட்டு  தனத்துடனும்  கனிசுவையின்  இதழுடனும்
     கன்னியர்கள்  சூழ  வாழும்  கதை  சொல்வேன்  கேள்  தரணேந்ரா  394

தேவ  மகளீர்  போன்ற  திருந்திய  வனப்பு  கொண்டு
     மேகலை  இடையில்  ஆட  மெய்  எல்லாம்  மாணந்து  வீச
காமமும்  காதலும்  கலந்த  கன்னியர்கள்  சூழ்ந்திருக்க
     ஜின  தர்மம்  சொல்லக்  கேட்டு  தீயிடை  ஆமையானான்   395

ஆட்சி  செய்யும்  ராஜ்ஜியமும்  அருகில்  உள்ள சுற்றங்களும்
     பொன்  பொருள்  செல்வங்களும்  பெண்கள்  தரும்  இன்பங்களும்
பொறிகளின்  போகமும்  மோகமும்  பொருந்திய  தன்  ஆயுளும்
     நிலையென்று  நினைத்து  அவன்  நித்தம்  நித்தம்  களித்திருந்தான்  396

சம்சார  பிறப்பில்  வரும்  பொறி  புலனின்  இன்பங்கள்
     புண்ணியத்தின்  ஊற்றாய்  வந்து  உதயத்தை  கொடுப்பதென்று
எண்ணாத  நெஞ்சத்தால்  மோட்சம்  ஒன்று  இல்லை  என்றும்
     மரித்திட்ட  எவர்க்கும்  மீண்டும்  மறுபிறவி  இல்லை  என்றான்    397

இவ்வுலக  இன்பம்  எல்லாம்  இங்கு  தூய்க்கமல்  விட்டு  விட்டு
     இறந்த  பெறும்  இன்பம்  எண்ணி  இங்கு  நாம்  வருந்துவது
ஊன்  வாயில்  கொண்ட  நரி  நீரில்  மீனைப்  பிடிப்பதற்கு
     ஊன் விட்டு பாய்த்த நரி  ஊன் மீனை இழந்தது போல் என்றான்  398        

ரத்தினாயதன்  கர்மம்  அவனை  உயிர்நிலை  அறியவிடாததால்
     ஐம்புலனின்  இச்சையாலும்  அழியாத  மோகத்தாலும்
மண்ணுலக  ஆசையெல்லாம்  அவன்  மனதில்  வேர்  ஓட
     வஜ்ரதந்த  முனிவர்  வந்தார்  அவர்  சங்க  முனிகளோடு  99

மெய்  தவ  வீர்யமும்  மெய்  ஞானமும்  கொண்டவஜ்ரதந்தன்
     மாமேரு  மலையைச்  சுற்றி  குறு  மலைகள்  சூழ்ந்தது  போலும்
தாரகைக்  கூட்டம்  நடுவில்  தண்மதி  ஒளிர்வதைப்  போலும்
     பத்ராஜல  வனத்தில்  ஒளிர்ந்தான்  பல  முனிவர்  சங்கத்தோடு 400

நற்காட்சி    சக்தியாளும்  வாலறிவன்  வகுத்த  அறத்தினாலும்
     சம்சார  கடலை  கடக்கும்  ஜினவறமாம்  தத்துவத்தையும்
மூன்றுலக  உயிர்கள்  நிற்கும்  முழு  ஞான  விளக்கத்தையும்
          மாதவன்  வஜிரதந்தர்  வழங்கினார்  தன்  சங்கத்திற்கு 401

தொடு  உணர்வு  ஒன்றுடைய  ஓரறிவு  ஜீவன்  கூட
     ஐந்து  வகை  உடலெடுக்கும்  ஒரு  பொறியை  கொண்டு  வாழும்
நத்தை  சிப்பி  சங்குமான  இரு  பொறியின்  ஜீவன்கள்
     சுவை  புலன்  பொறியுடைய  ஈரறிவு  உயிர்கள்  ஆகும்   402


எறும்பினங்கள்  பட்டுப்பூச்சி  மூன்றறிவு  ஜீவன்  எல்லாம்
     கேட்டல்  புலன்  பொறியுடன்  தொடு  சுவையும்  சேர்ந்திருக்கும்
தும்பிகளும்  வண்டினமும்  நான்கு  அறிவு  ஜீவனாகி
     பார்த்தல்  என்னும்  புலனுடனே  கேட்டல்  தொடு  சுவையும்  சேரும் 403

விலங்கினமும்  மனிதர்களும்  நரகர்களும்  தேவர்களும்
     மனம்  என்னும்  புலனுடனே  ஐம்புலனும்  கொண்ட  உயிர்கள்
ஐம்பொறிகள்  ஆகி  நிற்கும்  ஐந்துநிலை  ஜீவன்களிலும்
     அதனதன்  கர்மத்தினால்  அடுத்து  அடுத்து  பிறப்பெடுக்கும்   404

பசுமை  உடலில்  வாழும்  பயிர்  செடி  மரத்து  உயிர்கள்
     வெய்யிலாலும்  மழையினாலும்  கடுங்காற்று  தீயால்  அழியும்
ஆழியில்  பிறந்து  வாழும்  வெண்சங்கு  மீன்  இனங்கள்
     எமனுக்கு  நிகரான  கொலையாட்கள்  கை  மடியும்    405

விலங்குகதி  அடைந்து  விலங்கினமாய்  திரியும்  உயிர்கள்
     வில்  வாள்  வலை  கொண்டும்  வெட்டுகின்ற  பலியாலும்
பாரங்கள்  மிக  ஏற்றியும்  பாதங்களில்  கட்டு  இட்டும்
     தாளாத  துயரடைந்து  தன்  உடல்  விட்டு  உயிர்  மறையும்           406

உள்ளமும்  மெய்  மொழியும்  ஒவ்வாத  செயலினாலும்
     அறச்செயலை  ஒதுக்கி  விட்டு  மறத்தோடு  பொருள்  சேர்த்தும்
தேனோடு  கள்  ஊனை  மனக்  களிப்போடு  உண்டவரும்
     மாந்தராய்  பிறந்திடினும்  மறுபிறப்பில்  விலங்காவார்   407

பாவவினை  புண்ணியவினை  இல்லை  என்று உரைப்போரும்
     மறுபிறவி  மோட்சம்  எல்லாம்  மடமை  என்று  சொல்வோரும்
அரசநீதி  அழித்து  ஆளும்  அரசர்களும்  மந்திரிகளும்
     அந்நியரை  புணரும்  பெண்ணும்  விலங்குகதி  எடுத்துழல்வர்   408

மனோகரம்  பெயருடைய  மலர்  வனத்தில்  இருந்த  முனி
     விலங்குகதி  வாழ்க்கையினை  விரிவாக  சொல்லுகையில்
இரத்தினாயுதன்  பட்டத்து  யானை  மேகவிஜயம்  என்னும்  வேழம்
     உரைகேட்டு ஊன்  கவளம்  உண்ணாமல்  பெருமூச்சி  விட்டதங்கு  409

களிறு  காக்கும்  பாகர்கள்  யானை  கவளம்  கொள்ள  நிலைதன்னை
     அரசனுக்கு  செய்தி  சொல்ல  ரத்தினாயுதன்  அவ்விடம்  வந்தான்
மருத்துவர்கள்  துணையுடனே  மலை  போன்ற  வேழத்தை
     சோதித்து  சொன்னார்கள்  நோய்  ஏதும்  இல்லை  என்று    410

முற்பாவ  பிறப்பு  தனை  யானை  முழுதுணர்ந்த  காரணத்தால்
     பெருமூச்சி  விட்டு  கொண்டு  பெருங்கவளம்  மறுக்கிறது
ஊன்  கலவா  தூய்க்கவளம்  உண்பதற்கு  தந்திட்டால்
     தன்  பிறப்பை  அறிந்த  வேழம்  தடையின்றி  உண்ணுமென்றார்  411

அரசனும்  ஆணையிட்டான்  ஊன்  இல்ல  உணவு  தர
     யானையும்  மகிழ்ந்து  உண்ண  மன்னனும்  மயங்கி  நின்றான்
மனோகரம்  சோலை  சென்று  மாமுனி  வஜ்ரதந்தை  வணங்கி
     வேழத்தின்  நிலையை  கூறி  விளக்கத்தை  உரையும்  என்றான் 412

அஸ்தினாபுரத்தை  ஆளும்  பெரும்  அரசன்  பிரதிபத்திரன்
     அவன்  ராணி  கற்பரசி  வனப்புள்ள  வசுந்தரி  ஆவாள்
தம்பதிகள்  இருவருக்கும்  தனையனாக  பிறந்தவன்  தான்
          பிரித்திங்கரன்  என்னும்  பெயர் கொண்ட  இளவரசன்  413    
           
பிரதிபத்திரன்  மன்னனுக்கு  சித்திரமதி  அமைச்சன்  ஆவான்
     அமைச்சனவன்  கை  பிடித்தாள்  அழகுமகள்  கமலை  என்பாள்
இவ்விருவர்  இன்பத்திலே  விசித்திரமதி  மகன்  பிறந்தான்
     பிரித்திங்கர  குமாரனுக்கு  பிரியமான  நண்பனானான்   414

மன்னன்  பெற்ற  மைந்தனும்  மதி  அமைச்சர்  குமாரனும்
     மனம்  ஒத்த  நண்பர்களாய்  ஐம்புலங்கள்  வழி  நடந்து
மண்ணுலக  இன்பம்  எல்லாம்  மட்டின்றி  அனுபவிக்க
     புலன்வழி  போகம்  எல்லாம்  ஓர்நாள்  பெரும்  வெறுப்பாகியது  415

புலனாசை  வெறுப்படைந்து  போகம்  விட்ட  இருவரும்
     தருமருசி  என்னும்  ஒரு  தவமுனியின்  அடி  பணிந்து
அருகன்  அறம்  எங்களுக்கு  அறிவுரைக்க  வேண்டுமென
     அகம்  சுருக்கி  கரம்  தொழுது  அருகதீட்சை  வேண்டி  நின்றார்  416

சிறு  வயதில்  போகம்  நீக்கி  ஜினதீட்சை  கேட்டவர்க்கு
     மாதவத்தார்  தருமருசி  தபோ  தீட்சை  விதிகள்  படி
முத்து  மலர்  மாலைகள்  நீக்கி  முகம்  மறைக்கும்  குஞ்சு  போக்கி
     அருந்தவத்தை  செய்வதற்கு  ஆசியுடன்  அனுப்பி  வைத்தார்  417

ஜினதீட்சை  தன்னுடன்  பெற்ற  விசித்திரமதி  நண்பனுடன்
     மன்னன்  மகன்  பிரீதிங்ககரன்  மதுர  சொல்  முனிவனாக
அயோத்தி  நகர்  வெளியில்  உள்ள  அகம்  மகிழும்  மலர்  வனத்தில்
     துறவரத்தின்  பற்றுடனே  இளங்களிறாய்  இருக்கலானார்   418 

சரிகை  என்னும்  நியமத்துடன்  சாந்த  முனி  பிரீத்திங்கரன்
     மண்ணில்  ஊறும்  சிறு  உயிர்கள்  தன்னடையில்  சிக்காமல்
பிறை  வளரும்  சந்திரனாய்  இல்லம்  தோறும்  தினம்  நடந்து
     நோய்  தீர  மருந்துண்ணும்  நியமத்தில்  நகர்  புகுந்தான்    419



 (சரிகை முனிவர்கள்  தங்கியுள்ள  இடத்தில்  இருந்து,  ஏதேனும்  ஒன்றை 
 உறுதியேற்று  நகரினில்  உணவு  ஏற்க  செல்லுதலை  சரிகை,  சரியை,  
சர்ய  மார்க்கம்  என்பர்  )

கண்கவர்  கணிகை  புத்திசேனை  வீட்டின்  முன்  சென்ற  முனியை
     எதிர்கொண்ட  அம்மகளோ  இறைவா  என  கைதொழுது
உத்தமர்க்கு  உணவுதரும்  உயர்குலத்தில்  பிறப்பதற்கு
     உண்மையான  நல்வழியை   உரைத்திடுவீர் என்று  கேட்டாள் 420

தன்  மனம்  நிந்தனை  நீக்கி  தவத்தோர்கள்  குணங்கள்  போற்றி
     தேன்  ஊன்  மதுவைத்  தள்ளி  தெள்ளிய  விரதம்  ஏற்று
சம்சார  உயிர்களைத்  தன்  கருணையால்  ஓம்பி  காத்து
     ஆகமம்  பயின்று  வந்தால்  அடையலாம்  நற்குலத்தை  என்றார்  421   
       
அவ்விளம்  முனிவர்  சொன்ன  அறிவுரையை  கேட்டுணர்ந்து
     விலைமகள்  புத்திசேனை  விலக்கினாள்  தேன்  ஊன்  மதுவை
செய்தக்க  சீலங்கள்  எல்லாம்  தெள்ளிய  விரதமாய்  ஏற்க
     முனிவனோ  மலர்வனம்  புகுந்தான்  முட்டாகி  போனதாலே  422

விசித்திரமதி  முனி  கேட்டறிந்தான்  விபரங்கள்  அத்தனையும்
     காமத்தின்  மோகம்  கொண்டான்  கணிகை  புத்திசேனை  மீது
முன்  கர்ம  பாவவினை  விசித்திரமதி  பின்  தொடர
     விலைமகள்  வீட்டை  நோக்கி  விரகத்தில்  சென்றான்  முனி  423


பொய்  ஒழுக்கம்  பொய்  துறவு  பூண்ட  அந்த  முனிவனிடம்
     கணிகை  அவள்  வினயத்துடன்  காலடி  வணங்கிய  பின்
தான்  ஏற்ற  விரதத்தை  முனிவனிடன்  முறையிட்டு
     பயன்  தரும்  தன்மைகளை  பகர்ந்திடுங்கள்  என்று  நின்றாள்  424

கள்ளமுனி  சொல்லுகின்ற  காமவார்த்தை  அத்தனையும்
     புத்திசேனை  புத்தியிலே  இவன்  பொய்  முனிவன்  என்று உறுத்த
மோகத்தில்  நரகடைந்த  கதைகளை  கணிகை  சொல்லியும்
     காமவேகம்  தணியாத  கபடன்  மேல்  வெறுப்பு  கொண்டாள்  425

எலும்பும்  தோலும்  ஈறலும்  எண்ணற்ற  நரம்புகளும்
     ஒன்பது  வாயில்களில்  புழு  அரும்பும்  கழிவுகளும்
மூளையும்  ரத்தமும்  கொழுப்புகளும்  ஒன்று  இன்றி  தனித்துப்  பார்த்தால்
    காறித்துப்பி  வெறுத்திடுவோம்  காமம் கொள்ளும்  உடலின்  மீது  426 
         
ஊன்  உண்ணும்  பறவைகள்  உண்ண  பிணமாகும்  இவ்வுடலை
     மோகனீய  கர்மத்தால்  முடை  நாற்ற  மேனியின்  மேல்
காமத்தால்  மூழ்கி  போற்றி  கலவிக்கு  நாடும்  மனதால்
     காத்திடும்  தவத்தை  விட்டு  களங்கத்தில்  வீழ்ந்தான்  முனிவன் 427

அதிமணம்  கொண்ட  மலரை  அகிற்புகை  குழலில்  இட்டு – பின்
     சிரசினை  விட்டு  நீக்கி  தெருவினில்  எறிவதைப்  போல்
தவநிலை  கொண்டு  ஒழுகும்  தவமுனி  என்று  தொழுதவள்
     அவன்  நிலை  அறிந்த  பின்னே  இகழ்ந்திட்டாள்  புத்திசேனை 428

கணிகையின்  தாழ்ச்சியாளும்  கனிந்து விட்ட  மோகத்தாளும்
     கந்தமித்திர  அரசனுக்கு  ஊன்  உணவு  சமைத்து  தந்து
வேந்தனின்  ஆணை  பெற்று  விலைமகள்  புத்திசேனையை
     விசித்திரமதி  கலவி  கொண்டு  விரகதாபம்  தணித்துக்கொண்டான் 429

மாபெரும்  தவத்தை  நீக்கி  மன்னனுக்கு  ஊன்  சமைத்து
     மோகனீய  கர்மத்தாலே  கணிகையை  கட்டி  மகிழ்ந்து
காலத்தால்  ஆயுள்  முடிய  ஆன்மாவின்  கர்மத்தாலே
     மேகவிசய  வேழமாகி  இன்று  அருகனறம்  கேட்டது  யானை  430

நிலையில்லா  சம்சார  வாழ்வில்  புலன்  இன்பம்  மேவி  நிற்றல்
     விலையில்லா  ரத்தினத்தை  குணம்  நீங்கி  வீசி  விட்டு
கண்ணாடி  மணிகளையெல்லாம்  கருவூலத்தில்  வைப்பது
     தனையனாய்  தாயை  ஒதுக்கி  தன் மனைவியை  ஓம்பலாகும் 431

கடலனைய  கானல்நீரை  தண்ணீர்  என  நினைத்த  மான்
     தாகத்தில்  தாவி  ஓடி  தன்னுயிரை  இழப்பது  போல்
புலன்வழி  இன்பம்  எல்லாம்  பூமியில்  நிலையென்றெண்ணி
     அருகனின்  அறம்  அறியா  அறிவிலி  என்றான்  ரத்தினாயுதன்  432

விளக்கொளி  கண்டு  மகிழ்ந்து  வீழ்ந்திடும்  விட்டில்  போலும்
     இளம்பெண்  யானை  மதநீரில் மொய்த்திடும்  வண்டு  போலும்
தூண்டில்  புழுவை  விழுங்க  துடித்திடும்  மீனைப்  போலும்
     மயக்கத்தில்  நுகர்ந்த  இன்பம்  மறந்து  நான்  தவத்தை  ஏற்பேன் 433

மணிமுடி  கிரீடம்  தன்னை  மகனுக்கு  மகிழ்ந்து  தந்து
     புலி  கண்ட  எருதினைப்போல்  புலன்  வழிப்  பற்றுக்கஞ்சி
மெல்லிடை  மங்கையரின்  பொய்நிலை  இன்பம்  நீக்கி
     மனோகரவனம்  நோக்கி  வந்து  முனியிடம்  சரணடைந்தான்      434

கார்மேகம்  கொட்டுகின்ற  கார்கால  மழையைப்  போல
     தானங்கள்  செய்து  செய்து  தன்  கைசிவந்த  ரத்னாயுதன்
வஜ்ரதந்த  முனிவரனின்  வாகைமலர்  பாதம்  தொழுது
     ஜினதீட்சை  ஏற்ற  செயல்  முரசொலித்து  செய்தியானது   435

வச்சிராயுத  வேந்தன்  அன்று  துறவு  கொண்டு  செல்லும்  போது
     மகன்  மேலுள்ள  பாசத்தால்  ரத்னமாலை  உடன்  இருந்தாள்
மைந்தனும்  துறவு  ஏற்க  மாறிய  உள்ளம்  கொண்டு
     ஆர்யாங்கனை  தீட்சை  ஏற்று  அணுவிரதம்  நோற்றாள்  அரசி   436

பூங்கொடி  மங்கையர்  மேல்  புலன்வழி  தூய்த்த  ஆசை  போல்
     தவத்தின்  மேல்  மிகுதியாகி  வெய்யில்,  பனி,  மழையில்  நின்று
ஆர்யாங்கனை ரத்னமாலையும்  அவன்  மகன்  ரத்னாயுதனும்
     அச்சுதகல்பம்  என்னும்  அமரலோகம்  சென்றடைந்தார்கள்   437


பங்கைப் பிரபை  என்னும்  நரகத்தில்  உழன்ற  அரவம்
     பத்துக்  கடல்  காலம்  நான்காம்  நரக  ஆயுள்  நீங்கி
நால்வகை  ஆழிகாலம்  இயங்குயிர்  நிலையுயிர்  பிறவி  சென்று
     கச்சைநகர்  அருகே  உள்ள  குறிச்சியுள்  வேடனானான்   438

தாருணகிரணன் வேடன்  தன்  மனைவி  மங்கிக்கு
     மகனாய்  பிறந்த  மழலைக்கு அதிதாருணன்  என  பெயரிட்டான்
கரிக்கட்டை  நிறத்துடனும்  கடுங்கனல்  விழியுடனும்
     பாவமே  மனித  உரு  கொண்டது  போல்  வளர்ந்து  நின்றான்   439

கொலை  வதை  செய்வதிலே  கொண்டிருக்கும்  மகிழ்ச்சியிலும்
     உலகத்து  ஜீவன்கட்கு  உயிர்  நடுக்கம்  தருவதிலும்
வில்லோடும்  அம்போடும்  திரிகின்ற  அவ்வேடன்
     மலையுச்சி  ஏறி  சென்றான்  வச்சிராயுத  முனியை  கண்டான்   440

முஞ்ஜென்ம  வைரபாவம்  முழுவதும்  விழியில்  கொண்டு
     முனிவரனை  அழிப்பவன்  போல்  முனிவன்  முன்  வந்து  நின்றான்
கூர்  அம்பை  செவி  நுழைத்தான்  வில்லெடுத்து  சிரம்  அடித்தான்
     முள்ளொத்த  ஈட்டி  கொண்டு  முனிவரின்  தொடை  துளைத்தான்  441

காட்டுக்  கொடி  கொண்டு  இடையினை  கடைந்திட்டான்
     கால்  பாதம்  இரண்டினிளும்  கடும்  முளை  கொம்படித்தான்
முள்கொத்துக்  கரண்டியாலே  முனிவரின்  முதுகறைந்தான்
     முழுநீள  ஆணி  கொண்டு  தலை  மீது  அடித்து  இழுத்தான்   442

நெருப்பணைய  செய்கைகளால்  நேரிட்ட  துன்பமெல்லாம்
     வச்சிராயுத  முனிவர்  மனம்  வலி  மறந்து  தவம்  செய்தது
சிந்தையில்  நல்தருமத்தோடும்  தெளிந்த  நல்தவத்தினாலும்
     சர்வார்த்த  சித்தி  விமானத்தில்  அகமிந்திர  லோகம்  சென்றார்  443

கொடும்பாவம்  பல  செய்த  அந்த  கொடும்பாவி  அதிதாருணன்
     சிலநாளில்  உயிர்  துறந்து  ஏழாம்  நரகம்  அடைந்தான்
மகாதமப்  பிரபை  என்னும்  ஏழாம்  பெரு  நரகத்தில்
     தலை  கீழாய்  அவன்  தொங்கி  நரகத்தின்  அடியில்  வீழ்ந்தான்  444 

புது  நரகன்  அப்பூமியில்  புதிதாக  வந்ததனால்
     பழைய  நரகர்கள்  தடி  கொண்டு  தாக்கினார்கள்
செம்புக்  குழம்பில்  இட்டு  செந்நெருப்பில்  தீயவைத்து
     செக்கிலிட்டு  உடல்  நொறுங்க  சித்திரவதை  செய்தார்கள்   445

சிம்மசேன  பேரரசன்  அசனிகோடம்  யானையானான்
     அவன்  அமைச்சன்  ஸ்ரீபூதி  அடுத்தடுத்து  நரகம்  சென்றான்
பவணலோக  தரணேந்திரா  பகை  நமக்கு  வேறில்லை
     விருப்பு  வெறுப்பு  ஒன்றேதான்  வினைகளுக்கு  பொறுப்பாகும்   446

          வச்சிராயுதன்  அணுத்தரம்  புக்க  சருக்கம்  நிறைவுற்றது.

9.  பலதேவன்  சுவர்க்கம்  புக்க  சருக்கம்.

சீயபுர  மன்னன்  சிம்மசேனனும்  அந்நகர  அமைச்சன்  ஸ்ரீபூதியும்
     குணங்களில்  எதிரெதிராய்  மோட்ச  நரககதி  அடைந்து
அவ்விருவர்  மறுபடியும்  இந்த  அவனிக்கு  வருவதற்குள்
     ஆதித்யாபன் கூறினான் ராமதத்தை பூர்ணச்சந்திரன் பிறப்பு தனை  447

மலரெல்லாம்  பூத்துக்  குலுங்கி  மனம்  வீசும்  மலர் வனங்கள்
     வண்டோடு  புல்லினங்கள்  வலம்  வந்து  பாடிசைக்க
தாதோடு  தேன்  சொரியும்  தாதகி  மரங்கள்  சூழ்ந்த
     தாதகிசண்டத்தீவு  தனி  அழகு  கொண்டத்  தீவு     448
(  தாதோடு :  பூந்தாதுக்களோடு )

மந்திர  மலைகள்  இரண்டு  மேல்  ஒன்று  கீழ்  ஒன்றாக
     ஈராறு  குலமலைகள்  பக்கத்துக்கு  ஆறாறாக
நாலேழு  மா  நதிகள்  இருபக்கம்  பெருகி  ஓட
     சிதோதர  நதி  வடகரையில்  அமைந்தது  தான்  கந்திலைநாடு  449

வெண்பனியாய்  கொட்டும்  அருவி  வேழத்தின்  மும்மத  நீரும்
     மலை  அடைத்தேன்  துளியும்  மற்ற  நறுமணங்கள்  கொண்டும்
ஆற்றினில்  புனலாய்  வர  சாஞ்சலம்  சங்குகள்  எல்லாம்
     காதலரை  கண்ட கன்னியாய்   களிக்கும்  நீர்வளம் கந்திலையில்  450

( மும்மத நீர் : காது,  கர்ணகபோலம்,  பீஜம்களில்  ஒழுகும்  நீர் )
வாழையின்  வலிய  தார்கள்  தரையினை  தொட்டு  நிற்க
     வளைகரம்  கொண்ட  மகளீர்  செங்கனி  பறித்தெடுத்து
செம்பொன்  தூண்  மாடத்தில்  சிறு  மழலைக்கு  ஊட்டுகின்ற
     அயோத்தி  மாநகரம்  தான்  கந்திலை  நாட்டின்  மூதூர்    451

ஆற்றலில்  ஆதவன்  போல்  அழகினில்  மன்மதன்  போல்
     அயோத்தியின்  மாமன்னன்  அருகதாசன்  பெயெருடையான்
கரும்  சுருள்  குழலுடனும்  கொவ்வை  வாய்  இதழுடனும்
     ஆண்  மயிலின்  சாயலிலே  அவன்  பட்டத்தரசி  சுவ்விரதை    452

இல்லறத்தை  நல்லறமாய்  ஏற்று  வாழ்ந்த  இருவருக்கும்
     பூர்வஜென்ம  ரத்தினமாலை  புதல்வனாக  பிறப்பெடுத்தான்
வீரமகன்  பிறந்ததனால்  வேந்தன்  வறியவர்க்கு  வாரி  தந்தான்
     வீதபயன்  என  பெயர்  சூட்டி  விழா  எடுத்து  மகிழ்ந்திட்டான்  453

விற்புருவம்,  வேல் விழியும்  விரல்கடை  சிற்றிடையும்  கொண்ட
     அருகதாசன்   மனைவி  ஜினதத்தை  ஆண்  மகவை  ஈன்றிட்டாள்
கடந்த  ஜென்ம  ரத்தினாயுதன்  கல்பலோக தேவனாகி
     கால  ஆயுள்  முடிந்ததனால்  ஜினதத்தை  மகனாய்  பிறந்தான்  454

அரசனும்  அரசியும்  சேர்ந்து  விபீடணன்  என  பெயெரிட்டார் 
     வீதபயனும்  விபீடணனும்  வீரர்களாய்  வளரந்து  வந்தார்
நீல  வானில்  தவழுகின்ற  நிறை  ஒளி  சந்திரன்  போல்
     விபீடணனும்  வீதபயனும்  ஒன்றிணைந்து  வளரந்தார்கள்  455

பால்  வண்ணன்  வீதபயன்  பலராமனை  ஒத்திருந்தான்
     நீல  நிற  விபீடணன்  வாசுதேவன்  போலிருந்தான்
பௌர்ணமி  தினத்தன்று  பொங்கி  வரும்  ஆழியை  போல்
     புதல்வர்கள்  இருவருமே  புகழ்  தருமம்  போல்  இணைந்தார்      456

அருகதாசன்  இரு மகன்கள்  வீதபயனும்  விபீடணனும்
     பயத்திற்கே  பயத்தை  தரும்  பலம்  கொண்ட  வீரனானார்
இந்த  இரட்டையரின்  ஒரு  எதிரி  பிரதி  வாசுதேவன்  ஆவான்
   அவன்  படையும்  அயோத்தி சேனையும்  அலைகடலாய்  மோதியன  457

கடல்  சீற்றம்  கொண்டதனால்  கரைமோதும்  பேரலை  போல்
     காலாட்  படைகள்  இரண்டும்  கடும்  சினத்தில்  மோதியன
புயல்   ஒத்த  வேகத்தோடு  புரவிப்  படைகள்  இரண்டும்
     புழுதியை  எழுப்பியதால்  பகல்  பொழுது  இரவானதங்கு   458

மலைகள்  நகர்வது  போல்  மதங்கொண்ட  களிறு  சேனை
     வாள்  வேல்  கைகொண்டு  வான்மழையாய்  பொழிந்தார்கள்
காண்டீபம்  கைகொண்டு  கணை  கொட்டும்  ரதப்படையால்
     கதிரவன்  கண்  மறைக்க  காரிருள்  சூழ்ந்தது  அங்கு    459

கடுங்காற்று  வீசியதால்  கதலித்  தோப்பு  வீழ்ந்தது  போல்
     கணைகளின்  தாக்குதலால்  கொடி  குடையும்  சாய்ந்திட்டது
வேல்  கொண்டு  தாக்கியதால்  வேழத்தின்  குருதி  அங்கு
     புனல்  பெருகும்  பெரும்  ஆறாய்  செங்குருதி  ஓடியது     460

வாயு  தேவன்  வெஞ்சினத்தால்  பனங்கனிகள்  உதிர்வது  போல்
     படைவீரர்  சிரங்கள்  எல்லாம்  பூதேவி  மடியில் வீழ
மங்கையரின்  கடைவிழியில்  மயங்கிவிட்ட  மாந்தராக – வீரர்கள்
     உடல்  பட்ட  காயத்தினால்  உணர்வின்றி  மயக்கமுற்றார்     461

குற்றுயிரில்  சாய்ந்து  விட்ட  குன்றொத்த  களிறுகளின்
     நெட்டநெடும்  பெருமூச்சி  பேரரவம்  சீறல்  ஆச்சி
கடல்  தாவழும்  கப்பல்கள்  கரைதட்டி  நின்றார்  போல்
     கரை  மோதும்  அலை  போல  தேர்  முறிந்து  நின்றது  அங்கு   462

அருகதாசன்  மகன்கள்  சேனை  அச்சமுடன்  பின்  செல்ல
     வீதபயன்  விரைந்து  வந்தான்  எதிரி  படையை  வேரறுத்தான்
பிரதிவாசுதேவன்  படை  பின்னடைந்து  பதறி  ஓட
     வீதபயன்  விபீடணன்  சேனை  வெற்றி  முரசு  கொட்டியது        463

பின்னடையும்  படையை  கண்ட  பிரதிவாசுதேவன்  அங்கு
     பேராற்றல்  சக்கராயுதத்தை  பறக்கவிட்டான்  விபீடணன்  மேல்
படை  நடுவே  பிளந்து  வர  படைகள்  புறமுதுகு  காட்ட
     விபீடணனை  கண்ட  சக்கராயுதம்   வலம்  வந்து  வணங்கியது  464

சரணடைந்த  சக்கராயுதத்தை  கரம்  கொண்ட  விபீடணனும்
     சாஸ்திர  விதிகள்  ஓதி  திரும்ப  விட்டான்  எதிரியின்  மேல்
பிரதிவாசுதேவன்  தலை  தெறிக்க  பிணமாகி  மண்ணில்  சரிய
     கேசவனின்  திருக்கரத்தில்  திக்கொளிக்க திரும்ப   நின்றது    465

போர்  அது  முடிந்த  பின்பு  புரோகிதன்  அழைத்து  செல்ல
     முனிவர்கள்  தவம்  இயற்றும்  கோடிசிலை  மலை  அடைந்தான்
மலையினை  வலமாய்  சுற்றி  வலக்கரம்  மலையை  துக்கி  நிற்க
     மன்னர்கள்  திறை  செலுத்தி  இருவரையும்  வணங்கி  நின்றார்  466

மலரென  தூக்கிய  மலையை  மறுபடியும்  கீழே  வைத்து
     சக்கராயுதத்தை  செலுத்தி  அது  சென்றிடும்  வழி  பின்  சென்று
எதிர்படும்  நாடுகள்  எல்லாம்  தன்  திக்விஜயம் ஆக்கிக்  கொண்டு
     வீதபயனும்  விபீடணனும்  அயோத்தியின்  அரசர்கள்  ஆனார்     467

பட்டத்தை  சூடியபின்  பதினாராயிரம்  தேவியருடனும்
     ஏழாயிரம்  வியந்திர  தேவர்கள்  இரவு  பகல்  காவல்  செய்ய
நாற்பத்திரெண்டு  லட்சம்  யானைகளும்  ஒன்பது கோடி  குதிரைகளும்
    நாற்பத்திரெண்டு  கோடி  வியந்தரர்  கொண்ட  படையினானார்   468

எழில்  கூந்தல்  ஏந்திழைகள்  எண்ணாயிரம்  தேவியருடன்
     இல்லற  இன்பத்தில்  இந்திர  சுகத்தை  அடைந்து
வாசுதேவனான  அந்த  நீல  வண்ணன்  விபீடணன்
     ஆயுள்  முடிந்ததனால்  அடைந்திட்டான்  நரகம்  தன்னை     469

நாகமணி  தலை  அகன்ற  நாகத்தை  ஒத்த  வீதபயன்
     சம்சார  வாழ்க்கையிலே  சலிப்படைந்து  பயத்தினாலே
பொன்  பொருள்  கிரீடம்  தன்னை  புத்திரர்கள்  வசம்  கொடுத்து
     அருகனறம்  ஏற்றுக்கொண்டு  ஜினதீட்சை  பெற்றுக்கொண்டான்   470

பலதேவனான  அந்த  வெண்மை  நிற  வீதபயன்
     நல்லறிவு  நற்காட்சி  நல்லொழுக்க  பாவனையால்
லாந்தவ  கல்பம்  தன்னில்  தேவேந்திரனான  நானே
     சஞ்சயபட்டாரகர்க்கு  பூஜைகள்  செய்ய  வந்தேன்  என்றார்      471

தரணேந்திர  தேவனே  நீயும்  அதற்கு  தான்  இங்கு  வந்தாய்
     ஐம்புலன்  நுகர்ச்சியாளும்  சம்சார  ஆசையாளும்
நரகத்தை  அடைந்து  வாழும் விபீடணன்  நரகம்  மீள
    அறம்  உரைக்க  செல்லுகின்றேன்  அறிந்திடு  தரணேந்ரா  என்றார்  472

     பலதேவன்  சுவர்க்கம்  புக்க  சருக்கம்  நிறைவுற்றது.

10.  நிரையத்துள்  (  நரகத்தில்  )  அறவுரைச்  சருக்கம்.



சம்சார  வாழ்க்கையிலே  பொருள்  பற்றால்  சேர்ந்த  கர்மத்தால்
   சர்க்கராப்பிரபை  என்னும்  இரண்டாம்  நரகில்  வீழ்ந்த
நரகனைக்  கண்டு  நாடி  நடந்ததை  சொல்வதற்கு
   நரகனின்  அருகில்  சென்று  அறிவாயா  என்னை  என்றார்  473

ஆதித்யாபனாகிய  நான்  உனக்கு  அறம்  உரைக்க  வந்துள்ளேன்
   சிலபிறவிக்கு  முன்  நான்  மதுரை  என்னும்  பெண்ணானேன்
என்  வயிற்றில்  வாருணியாய்  என்  மகளாய்  பிறப்பெடுத்தாய்-பின்
     ராமதத்ததையாய் பிறக்க என் மகன் பூர்ணச்சந்திரனானாய்    474

நல் அறங்கள்  கடைபிடித்து  நல்வினைகள்  சேரப்  பெற்று
   மகாசுப்ர  கல்பம்  என்னும்  தேவலோகம்  சென்றடைந்தேன்
தேவ  ஆயுள்  முடிந்த  பின்பு  வியந்தர  உலகம்  தன்னில்
   சீதரையாய்  நான்  பிறக்க  நீ  யசோதரை  என்  மகளானாய்      475

ஆர்யாங்கனையாக  அருகன்  அறம்  ஏற்றுக்  கொண்டோம்
   காபிஷ்ட  கல்பத்தில்  இருவரும்  தேவனாக  பிறப்பெடுத்தோம்
தேவர்களான நம்  ஆயுள்  தேய்ந்து  முடிந்த  பின்பு - மண்ணுலகில்
     ரத்தினமாலை அரசியானேன்  என்  மக  ரத்தினாயுதனானாய்      476

தவத்தோடு  தருமம்  ஏற்று  தவறாத  அணுவிரதம்  கொண்டு
   அச்சுத  கல்பம்  என்னும்  தேவலோகம்  சென்று  அடைந்தோம்
அச்சுதகல்ப  ஆயுள்  அனைத்தும்  அனுபவித்து  முடிந்த  பின்பு
   பூமியில்  நான்  வீதபயனானேன் நீ  என்  நண்பன்  விபீடணனானாய் 477

அருகன்  அறம்  ஏற்றுக்கொண்டு  அனைத்துயிரில்  கருணை கொண்டு
   பலதேவன்  ஆன  நான்  இலாந்தவ  கல்பம்  சென்றேன்
புலன்வழி  செய்கையாளும்  போகாத  மோகத்தாலும்
   வாசுதேவனான  நீ  வீழ்ந்திட்டாய்  இரண்டாம்  நரகில்      478

ஆதித்யாப  தேவனான  நான்  அவதிக்  ஞானத்தால்  அறிந்தேன்
   உனக்கு  அறம்  உரைத்து   தெளிய  உன் அருகில்  நான்  வந்தேன்
தன்  பிறப்பின்  பிறவிகளை  தான்  அறிந்து  கொண்டதனால்
   என்னை  வணங்கி  அவன்  என்  முன்னே  மூர்ச்சித்தான்      479

நரகனைத்  தெளியச்  செய்து  நான்  மேலும்  கூறலானேன்
   சம்சார  வாழ்க்கையிலே  தேர்ந்த  சுகம்  என்றாலும்
நிலையாக  அனுபவித்து  நின்றவர்கள் யாருமில்லை – அதுபோல்
   வெந்தணல்  நரகம்  தன்னில்  வீழாத  உயிரும்  இல்லை    480

மாறிடும்  நான்கு  கதியில்  சுழன்றிடும்  உயிர்களெல்லாம்
   சேர்ந்திடும்  செல்வம்  பின்னே  சுழல்வது  இயல்பே  ஆகும்
மனித  தேவ  கதியில்  அன்று  அனுபவித்த  சுகத்தை  எண்ணி
   நரகத்தின்  வேதனையால்  மனதிலே  வருந்த  வேண்டாம்    481

ஒன்றாம்  நரகம்  ரத்தினப்பிரபை  இரண்டில்  நிற்பது  சர்க்கராப்பிரப்பை
   மூன்றாய்  வருவது  வாலுகப்பிரபை  நாலில்  உள்ளது பங்கபிரபை
ஐந்தில்  அமைந்தது  தூமப்பிரபை  ஆறை  அடைவது  தமப்பிரபை
   7 ஆம்  நரகம்  மகாதமபிரபை  நரகங்கள்  ஏழென  அறிந்திடுவாயே  482

இயல்பு  மரணம்  என்றும்  இயல்பில்லா  மரணம்  என்றும்
   இருவிதமாய்  மரணம்  வரும்  நான்குகதி சுழற்சியிலே
ஆயுள்  முடிந்து  வரும்  மரணம்  அதுவே  இயல்பினதாகும்
   மற்ற  மரணமெல்லாம்  அகால  இயல்பில்லா  மரணமாகும்      483

இயல்பில்லா  மரணம்  வரும்  மனிதர்கட்கும்  விலங்குகட்கும்
   போகபூமி  மனிதர்  விலங்கு  தேவர்  நரகர்  விதிவிலக்காகும்
முன்  செய்த  பாவ  வினை  முடிவு  செய்யும்  மரணம்  தன்னை
   நரகத்திற்கும்  சொர்க்கத்திற்கும்  அவ்வினையே  வழி நடத்தும்  484

துவர்பசை  திரவிய வினை  துன்பங்கள்  கொடுப்பதனால்
   அறிவுரையோ  ஆறுதலோ  சொல்ல  யாருமில்லை  இந்நரவுலகில்
கீழுலக  பவண  தேவர்கள்  வந்து  கீழ்மையான  நரகர்களிடம்
   முற்பிறப்பின் பொல்லாங்கு கூறி மூட்டிடுவார் கலங்கந்தன்னை   485

முற்பிறப்பின்  விபீடணனே  உன்  மோகனீய  கர்மத்தால்
   இரண்டாம்  நரகடைந்தாய்  என்  நண்பனாய்  நீ இருந்தும்
நற்குலம்  தர்மம்  ஞானம்  கன்னிகள்  காமத்தால்  கலைய
   தீக்குழியில்  வீழ்ந்திட்டு  கூக்குரலிட்டு  அழுகிறார்கள்    486

தருமத்தை  அறியா  உள்ளம்  தன்  மனதில்  கொடியராகி
   ஊனினை  விரும்பி  உண்டு  ஊனுக்கு  வேட்டையாடி
வில்  அம்பு  கையில்  கொண்டு  கொலை  தொழில்  புரிவோரெல்லம்
   முள்ளிலவ  மரத்தில்  ஏறி  மறுபடியும் நரகில்  வீழ்வார்    487

இல்லற  அறத்தை  மறந்து  அவையிலே  நீதியரசர்  ஆகி
   பெருங்குடி  மக்கள்  சேர்த்த  பெருஞ்செல்வம்  அத்தனையும்
முறையற்று  கவர்ந்தவர்கள்  முள்  கொண்ட சமட்டியாலே
   உடல்  நசுங்க  அடி பெறுவார் உள்  வீழ்ந்த நரகத்திலே    488

வினையுற்ற  உயிர்கள்  மாண்டு  மறுபடியும்  பிறப்பெடுக்கும்
   அதை  மறுக்கும்  ஆன்மாவெல்லாம்  மோகத்தால்  நரகடையும்
செம்பினை  கொதிக்க  காய்ச்சி  கொட்டுவார்  அவர்கள்  வாயில்
   வெப்பத்தை  தாங்கா  நரகர்கள்  துன்பத்தில்  துடித்து  உழல்வர்     489

பொய்யாக  புகழ்ந்து  கூறி  பிறர்  பொருள்  கவர்ந்தோரையும்
   மெய்யான  தவமுனியை  புறஞ்சொல்லி  தூற்றினோரையும்
நெருப்பிலிட்ட  ஊசி  கொண்டு  நகங்களில்  குத்தச் செய்தும்
   நஞ்சுடன்  குருதி  காய்ச்சி  வாயிலிட்டு  வதைக்கச்  செய்வர்     490

நிறைந்திடும்  கோபத்தாலே  நெருப்பிட்டு  ஊர்  எரிப்போரையும்
   அரசினால்  செல்வம்  சேர்த்து  பின்  அறத்தினை  மறந்தோரையும்
கற்செக்கில்  உடலையிட்டு  கடுமையாய்  நொறுங்கச்  செய்து
   துடித்திடும் ஆன்மா  தன்னை  துன்பத்தில்  உழலச்  செய்வர்    491


உயிர்வதை  களவு  பொய்யும்  பொருள்  கொண்ட  ஆசையாளும்
   கற்புடை  மகளீர்  ஒழக்கம்  கெடும்படி  செய்ததாலும்
மலையுச்சி  மேலிருந்து  மெய்  வலிக்க  உருட்டித்  தள்ளி
   கொதியிரும்பு  தட்டின்  மேலே  புழக்களாய் பொறித்தெடுப்பர்       491

தோலினை  உரித்தெடுத்து  ஊனினை  உண்ணுவோர்கள்
   மன்னனை  கபடத்தாலே  வஞ்சித்த  மந்திரிகள்
நெருப்பினை  மழையாய்  பெய்து  தோலினை  கருகச்செய்து
   கழுமரம்  ஏற்றி  வைத்து  கடுந்துயர்  கொள்ளச்செய்வர்    492

எண்ணரிய  கடுந்துன்பங்கள்  ஏழ்நரகில்  நிறைந்திருக்கும்
   நீ  செய்த  வினைப்  பயனால்  இரண்டாம்  நரகடைந்தாய்
இதிலிருந்து  உன்னை  மீட்க  அருகன்  முனிகட்கு  அரியதான
   அறங்களெல்லாம்  நானுரைப்பேன்  அறிந்துகொள்  விபீடணனே     493

ஐம்பொறி  புலனாசைகளை  அறவே  வெறுத்து  ஒதிக்கி
   ஆழி  சூழ்  மன்னனாக  அவதரித்து  சுகம்  அடைந்தாய்
மறத்தோடு  மலிந்துள்ள  புலன்வழி  இச்சைகளை
   மனசுகம்  புணர்ந்ததாலே  இவ்வுலாக  நரகனானாய்   494

அறத்தோடு  நீ  சேர்ந்து  அமரலோகம்  செல்வாயோ
   மறத்தினில்  நீ  திளைத்து  மறுபடியும்  இங்கு  வீழ்வாயோ
நீ  சிந்தித்து  முடிவெடுத்தால்  இத்துன்பம்  நீங்குதற்கு
   கர்மத்தின்  தத்துவத்தை  நான்  உனக்கு  கூறுகிறேன்    495

உனை  துன்புறுத்தும்  நரகர்  மேல்  வெஞ்சினம்  நீ  கொள்ளாமல்
   முன்  பிறப்பின்  வினையென்று  தியானத்தை  கொள்வாயோ- இல்லை
குரோதத்தை  நீ  கொண்டால்  குறையாத  வினை  பெருகி
       விலங்குகதி  நீ  சென்று  வெந்துயரம்   அடைந்திடுவாய்  496                               

பஞ்சபரமேட்டிகளின்  திருப்பாதம்  சரணடைந்து
   சிந்தித்து  தியானித்தால்  சம்சார  சுழற்சி  நீங்கும்
அகப்  புறப்பற்றுகளை  அறவே  நீ  நீக்கி  விட்டு
   சம்யக்  தரிசனத்தில்  தலை  நின்று  நடந்திடுவாய்  497

இன்றிருக்கும்  நரககதி  எப்போது  நீங்கும்  என்று
   சித்தத்தில்  கவலை  கொண்டு  சிந்தனைகள்  செய்யவேண்டாம்
கர்மத்தின்  கட்டெல்லாம்  காய்ந்த  இலையாய்  உதிர்கையிலே
   இக்கதியும்  நீங்கிவிடும்  மறுகதிக்கு  கொண்டு  செல்லும்    498

கடந்திட்ட  பெரும்  ஆயுளால்  இருக்கும்  உன்  குறு  ஆயுள்
   கடுந்துன்பம்  நரக  நிலை  கடந்துவிடும்  விரைவாக
ஜினவரனின்  அறநெறியில்  செயல்பட்டு  நீ  நடக்க
   எண்வினையும்  கெட்டுவிடும்  இந்நரகம்  விட்டுவிடும்    499

மூவுலக  அதிபதியான  அரகந்தர்  பதவி  கிட்ட
   சம்சார  பிறவி  போக்கி  மோட்சத்தின்  நிலை  அடைய
நல்லறம்  ஒன்றே  துணை  நாடிடு  ஜினவறத்தை
   ஆதித்யாப  தேவனான  நான்  அறம்  உனக்கு   உரைத்திட்டேன்  500

என்  மன  ஆசையாலே  இந்நரகம்  வந்து  சேர்ந்தேன்
   உறுதியான  நல்லறத்தை  உரைத்திட்டீர்  இன்றெனக்கு
அவ்வறத்தை  நான்  ஏற்பேன்  என்று  அவன்  அடிதொழுதான்
   நல்லாசி  நான்  தந்து  இலாந்தவ கல்பம்  சென்றன்     501

நிரையத்துள் ( நரகத்தில் )  அறவுரைச்  சருக்கம்  நிறைவு  பெற்றது.
                  

11.  பிறவி  முடிச்  சருக்கம்.

பொறுமையும்  சாந்த  குணமும்  மன  நிறைவு  பெற்ற  நரகன்
   சம்சார  வாழக்கையிலே  சுக  துக்கம்  நிலையற்றதென்று
அருகன்  திருவடி  நினைத்து  ஆழ்மனதில்  தியானித்து
   அந் நரகம்  விட்டு  நீங்கி  அரசமகனாய்  பிறந்தான்     502

நாவலந்  தீவினிலே  ஐராவத  திரு  நாட்டில்
   அயோத்தி  நகர்  ஆளும்  அரசன்  பெயர்  ஸ்ரீ வர்மன்
ஸ்ரீ வர்மன்  இதயத்தாள்  சிந்தைகவர்  சித்திரத்தாள்
   சுசீமா  என்னும்  சுந்தரியே  ஸ்ரீ வர்மன்  இடப்புறத்தாள்     503

ஸ்ரீ வர்மன்  சுசீமாவின்  சீர்மை  பெற்ற  இல்லறத்தால்
   அரசகுலம்  தழைத்தோங்க  அவள்  அடிவயிறு  நிரம்பியது
சுசீமா  பெற்றெடுத்தாள்  குலமலைகள்  விளக்கு  போல
   ஸ்ரீ தாமா  பெயர்  சொல்லும்  சிங்கம்  நிகர்  மழலை  ஒன்றை  504      
( குலமலைகள் :  அரசகுலங்கள்  என்னும்  ஆறு  மலைகள். இமவான்,  மகாஇமவான்,  நிசதம்,  நீலி,  ருக்மி,  சிகரி  )

முனிவனின்  வணக்கத்தோடும்  முடிமன்னன்  வித்தைகளோடும்
   பகைவர்கள்  பதுங்கி  வாழ  பல்லுயிர்க்கும்  பாசம்  ஈந்து
தாமரை  மொட்டின்  தனமும்  தண்மதி  முகமும்  கொண்ட
   தேவியர்  தரும்  சுகத்தில்  திளத்திருந்தான்  ஸ்ரீ தாமன்    505

வெஞ்சுடர்  நரகம்  தன்னில்  செஞ்சுடர்  துன்பம்  நீங்கி
   நிழலிலே  நிற்பதை  போல்  நரகத்தின்  துயரம்  போக
குழலிசை  மொழியை  கொண்ட  தேவியர்  இன்பம்  தூய்த்து
   முன்  வினை  முற்றும்  உதிரும்  குணமது  உதித்த  நாளில்   506

முடிவிலா  வினைகள்  போக்கி  மும்முழு  ஞானம்  கொண்ட
   முழுதவம்  ஏற்ற  ஒரு  முனிவரன்  பாதம்  தொழுது
சம்சார  இயல்பை  எல்லாம்  அத்தவன்  சொல்லக்  கேட்டு
   ஸ்ரீ தாமன்  ஜினதீட்சை  ஏற்று  துறவுக்கு  அரசனானான்    507

மனம்  வாக்கு  காயம்  மூன்றை  மாபெரும்  தியானத்தால்  வென்று
   மோகனீய  கர்மந்தன்னை  முதுகு  காட்டி  ஓடச்  செய்து
வானுலக  தேவர்  எல்லாம்  நடுங்கிடும்  தவத்தை  ஏற்று
   வர்ணிக்க  வார்த்தை  இல்லா  பிரம்ம  கல்பத்தை  அடைந்தான்      508

ஆன்மனில்  தீவினைகள்  நின்றால்  அவ்வான்மா  நரகம்  துய்க்கும்
   ஆன்மாவில்  சேரும்  அறத்தால்  ஆன்மா  விண்ணுலகம்  செல்லும்
ஆன்மனில்  கூடும்  நல்தீவினைகள்  நான்குகதி  சென்று  உழலும்
   ஆன்மாவின்  நல்யோகத்தால்  வினையொழிந்து  சித்தராகும்   509

இந்த  ஆகம  விதிக்கு  ஏற்ப  பிறவிகள்  எடுத்து  வந்தோம்
   இதை  செவியுற்று  தெளிந்த  பின்னும்  ஜினவறம்  தெளியாதவர்கள்
அறியாமை  இருளில்  மூழ்கி  மோகனீய  கர்மம்  ஏற்பர் – என
   பவணலோக  அதிபதியே  தரணேந்திரா  அறிந்து  கொள்வாய்    510

பஞ்சாணுத்தரம்  என்னும்  அகமிந்திர  உலகத்திற்கு
   சர்வார்த்தசித்தி  விமானம்  ஏறி  சிம்மசேன  மன்னன்  சென்றான்
தேவன்  ஆயுள்  முடிந்த  பின்பு  வச்சிராயுதன்  பிறப்பெடுத்து – பின்
   சஞ்சயந்தன்  பிறப்பெடுத்து  தவ வலியால்  வீடு  பெற்றான்   511

சீதாம  அரசன்  அவன்  பிரம்ம  கல்ப  தேவனாகி
   மண்ணுலகில்  மறுபடியும்  மன்னன்  மகன்  சயந்தனாக
சம்சார  மோகத்தாலே  சம்யக்தரிசனம்  நீங்கி  போக
   பவணலோக  தலைவனான  தரணேந்திர  தேவன்  நீயே             512

தீவினைகள்  கொண்ட  அதிதாருணன்  சிக்கினான்  ஏழம் நரகில்
   ஆயுள்  முடிந்த  பின்பு  மண்ணுலகில்  அரவமாகி
தீமையின்  தீவிரத்தால்  மூன்றாம்  நரகம்  சென்று  - பின்
   கோசிருங்கன் மகனாக  மிருகசிங்கன்  பெயரில்  பிறந்தான்     513

கற்களின்  மேல்  படுத்தும்  ஆணிப்  பலகையில்  உறங்கியும்
   ஐவகைத்  தீயில்  நின்றும்  அடைமழையில்  நனைந்தும்
மோகத்தின்  கர்மத்தாலே  காமத்தைத்  தழுவி  சேர்ந்து
   மிருகசிங்கன்  ஆயுள்  முடிய  வித்துதத்தனாய்  பிறந்தான்  புவியில்  514

ஸ்ரீ பூதி  செய்த  வினையால்  அகந்தனன்  அரவம்  ஆகி
   அடுத்தடுத்து  சமரீமான்  கோழிப்பாம்பாய்  மூன்றாம்  நரகடைந்து
மலைப்பாம்பு  பிறவிகொண்டு  ஏழாம்  நரகம்  சென்று – பின்
   பாம்பாகி  நரகனாகி  மண்ணுலகில்  வித்துதத்தனானான்    515

சிம்மசேனன்  செய்த  வினை  அசனிகோடம்  வேழம்  ஆகி
   அருகன்  அறம்  கேட்டதாலே  கல்பத்து  தேவன்  ஆனான்
தேவகாலம்  முடிந்த  பின்பு  கிரணவேகன்  அரசனாகி
   மலைப்பாம்பு  விழுங்கிய  பின்  காவிட்ட  கல்ப  தேவனானான்     516


ஆயுள்  முடிந்த  தேவன்  முன்  பிறப்பு  கிரணவேகன்
   சக்கராயுத  மன்னனுக்கு  மண்ணாளும்  மகன்  ஆனான்
வச்சிராயுதன்  என்ற  பெயரில்  ஜினதீட்சை  அறம்  ஏற்று
   அகமிந்திர  தேவனாகி  புவியில்  அவதரித்தான்  சஞ்சயந்தனாய் 517

இருவரில்  ஒருவருக்கு  வைரபாவம்  உண்டு  பண்ணி
   இருவரும்  பிறவிதோறும்  இன்னல்களை  ஏற்றுக் கொள்ள
இவ்விருவருமே  சாட்சியாகி  நிற்க  வேறொருவர்  சான்று  வேண்டாம்
   வித்துதந்தனை  நண்பனாக்கி  அருள்  புரிவாய்  தரணேந்திரா    518

ஆதித்யாபன்  மொழி  அனைத்தும்  கேட்டு  நின்ற   தரணேந்திரன்
   என்  நரகத்துள்  வந்து  எனக்கு  நல்லறங்கள்   உபதேசித்தீர்
பிறப்புகள்  அனைத்தும்  கூறி  ஜினதர்மம்  தெளியச் செய்தீர்
   என்  குருவான  உங்களிடம்  ஒன்று  கூறுவேன்  கேட்பீரா  என்றான்   519

வித்தைகள்  வலிமையாலே  வான்வழி  விமானம்  சென்று
   மேதகு  குணம்  கொண்டோரை  வெஞ்சிறையில்  அடைக்கும்
வித்துதந்தன்  குலத்தாரை  எல்லாம்  சிறகொடிந்த  பறவை  போல
   இந்த  வித்யாதர  வம்சத்தாரை  அவர்  நகரில்  அடங்க  வைப்பேன் 520

வெவ்வினைகள்  செய்யும்  இந்த  வித்யாதரரை  எல்லாம்
   கொல்லாமல்  விட்டேனாகில்  கோபம்  தணியாதென்றான்     
தரணேந்திரனின்  தணியா  சினத்தை  தணித்திட்டான்  ஆதித்யாபன்
   அருகன்  அருளிய  தருமத்தாலே  அமைதியுடன்  அவன்  தொழுதான்   521

கொடுங்கோரைப்  பற்களுடனும்  கரும்  பூத  உடலுடனும்
   எளிய  மனிதர்கட்கு  எண்ணிலா  துன்பம்  செய்து
களிப்புடன்  மகிழ்ந்து  திரியும்  கீழான  குணம்  கொண்டோர்க்கு
   தண்டனை  தந்திடாவிடில்  வருங்காலம்  இதுபோல்  தொடரும்      522

மண மலர்  அணிந்த  குழலார்  மதிமுகம்  கொண்ட  மகளார்
   சஞ்சய  பட்டாரகரின்  செங்கமலர்  ஒத்த  செவ்வடி  தொழுது
வஞ்சனை  பொறாமை  நீங்கி  அருகனின்  பூஜை  செய்தால்
   வித்தைகள்  எல்லாம்  தங்கள்  வசப்படுத்தி  வாழ்வார்  என்றார் 523

மங்கல  அணிகள்  பூண்ட  மான்விழி  மங்கையர்க்கு
   பிரம்மரி  வித்தை  சேர  வித்துதத்தன்  குலமும்  தாழ
சஞ்சயந்தர்  மோட்சம்  பெற்ற  இரிமந்தம்  மலையின்  மீது
   சஞ்சயந்தபட்டாரகர்க்கு  சமைத்திட்டான்  ஜினாலயத்தை  524

பவணலோக    தரணேந்திரன்  இரிமந்தமலை  ஆலயத்தில்
   நவரத்தின  மணிகள்  கொண்டும்  நல் பசும்  பொன்னினாலும்
சஞ்சயபட்டாரகரின்  திருமேனி  உருவம்  செய்து
   பிரதிமையை  உள்ளே  வைத்து  பிரதிஷ்டை  செய்து  வைத்தான்    525

மத்தள  இசை  ஒலியும்  பேரிகை  இடி  ஒலியும்
   வலம்புரி  சங்கு  ஒலியும்  வீணை  குழல்  மென்  ஒலியும்
ஓர்கட்  பறை  வன்னொலியும்  ஓங்கார  தாள  வெண்கல ஒலியும்
   ஒரு  சேர  ஒலித்தது  அன்று  பிரதிஷ்டை  நாளின்  அன்று  526

கின்னர  தேவர்களின்  கிரங்கிடும்  இசைக்கு  ஏற்ப
   உடுக்கை  இடையுடைய  ஊர்வசிகள் நடனம்  ஆட
தாங்கொணா  பக்தியினால்  தரணேந்திர  தேவன்  அவன்
   தாமரை  மொட்டாய் குவித்து  தலைவணங்கி  துதிக்கலானான்    527

அனைத்தும்  அறிந்த  அமலன்  நீ  அணிகலன்  அணியா  அழகன்  நீ
   ஆனந்த  மோட்ச  அண்ணல்  நீ  ஆராய்ந்து  அறியும்  பொருளும்  நீ
நிலையாத  நிலையை  உடையோன்  நீ  மாறுதல்  இல்லா  மாயவன்  நீ
   என்னுள்  இருக்கும்  இறைவன்  நீ  கேவலக் ஞான  கேசவன்  நீ   528

மலமில்லாத  மனதினன்  நீ  அனைத்துக்கும்  உரிய  அமலன்  நீ
   சலனம்  இல்லா  சத்தியன்  நீ  சகலமும்  தெரிந்த  சத்துவன்  நீ
அனந்த  வீர்யம்  பெற்றவன்  நீ  அகப்  புறபற்று  அற்றவன்  நீ
   அனந்த  சுகத்தை  அடைந்தவன்  நீ  அனந்த  ஞான  ஆசானும்  நீ  529

கர்மங்கள்  முற்றும்  நீங்கிய  கடவுளாம்  சஞ்சயந்தபட்டாரகரை
   பவணர்  கோமான்  தரணேந்திரன்  பாடித்துதித்தான்  இதையெல்லாம்
நான்கு  வணக்கத்துடன்  மாண்புடன்  கரங்கள்  கூப்பி
   மும்முறை  கரத்தைச்  சுற்றி  வணங்கி  தன்  இடத்தை  அடைந்தான் 530
( நான்கு  வணக்கம் : அருகர்,  சித்தர்,  சாது,  தர்மம்  )

ஆதித்யாப  தேவனும்  வித்துதத்தன்  வெஞ்சினம்  நீங்க
   அருளினை  மனதில்  கொண்டு  அறத்தினை  சொல்லி  அருள
மறத்தினால்  நரகில்  வாழும்  வியந்தர  வித்துதத்தன்
   ஜினவறம்  முழுதும்  கேட்க  சிந்தயை  பதித்து  நின்றான்   531

அழிந்திடும்  உடலும்  ஆன்மா  அடைந்திட்ட  மனிதர்  எல்லாம்
   பாகனின்  ஏவல்  கேட்டு  பணிந்திடும்  மதகரியைப்  போல
தீவினை  வசத்தால்  தாழ்ந்து  செய்வார்கள்  பாவந்தன்னை
   நற்காட்சி  உடையோரெல்லாம்  ஞானத்தால்  பொருந்தி  நிற்பர்    532

கோபத்தீ  மிகுதியாக  உன்  உள்ளத்தில்  எரிந்து  நிற்க
   பலமுறை  நரகம்  தன்னில்  பல்வேறு  துன்பம்  கொண்டாய்
வெய்யிலின்  கடுமை  தன்னை  தணிக்கின்ற  நிழலைப்  போல
   அருகன்  அறம்  ஏற்று  நீயும்  ஆன்மசுகம்  அடைவாய்  என்றார்  533

சம்சார  துன்பம்  தன்னில்  அடைந்திட்ட  இன்பம்  எல்லாம்
   நெருப்பிடை  மலையை  ஏந்தி  மலை  நிழலில்  பெற்ற  இன்பம்
சூழ்ந்திட்ட  புலிகள்  நடுவில்  துளிர்  உண்ணும்  மானின்  இன்பமாய்
  விலங்குகதியில்  அடையும்  இன்பம்  நிலையற்ற  இன்பம்  ஆகும்  534   
  
பொருட்செல்வம்  இல்லாதோர்க்கு  பூமியில்  சுகங்கள்  இல்லை
   உயிர்களிடம்  அருள்  இல்லார்க்கு  இப்புவியில்  இன்பம்  இல்லை
பொன்  குணம்  அறியா  நெஞ்சான்  பொன்  வாங்கி  பயனும்  இல்லை
   நற்காட்சி  இல்லா  ஆன்மா  நாடாது  மோட்சம்  தன்னை  535

இந்த  சஞ்சயபட்டாரகர்  தான்  முன்  பிறப்பில்  சிம்மசேனன்
   அவன்  அமைச்சனாய்  இருந்தாய்  அப்பிறப்பில்  ஸ்ரீபூதியாய்
சிம்மசேனன்  ராணியாக  நானிருந்தேன்  ராமதத்தையாய்
   பிறப்புகள்  மாறி  மாறி  இன்றிருக்கும்  நிலையடைந்தோம்    536

ஆதித்யாப  தேவன்  சொன்ன  அறத்தை  கேட்ட  வித்துதத்தன்
   ஆன்மாவில்  பகைமை  நீங்கி  தேவனை  வாழ்த்தி  வணங்கி
சிம்மசேனன்  மேல்  வெஞ்சினத்தால்  பிறவிதோரும்  துன்பமுற்றேன்
   இத்தீமை  நீங்கும்  வழியை  எனக்கு  அருள  வேண்டும்  என்றான்   537 
    
மூவுலகும்  தொழுது  ஏற்கும்  சஞ்சயந்த  பட்டரகரின்
   மலரடி  தொழுது  வணங்கி  மனதார  துதி  செய்  என்றார்
இருகையில்  மலர்கள்  ஏந்தி  அவ்விறைவன்  பாதம்  வைத்து
   தீமைகள்  பொருத்தருள    வித்துதத்தன்  வேண்டி  சென்றான்      538

குரோதம்  கொண்ட  ஸ்ரீ பூதி  பல  தடவை  நரகம்  சென்றான்
   பொறுமை  கொண்ட  சிம்மசேனன்  பலதடவை  தேவனானான் 
பகையாலும்  பொறுமையாலும்  பயன்  தரும்  பலனைக்  கண்டு
   பொறுமையை  கைகொள்ளாதோர்  புல்லறிவு  மனிதர்  ஆவர்   539

          பிறவிமுடிச்  சருக்கம்  நிறைவு  பெற்றது.

      12.   ஸ்ரீ  விஹாரச்  சருக்கம்.

சிம்மசேன  மன்னன்  வீடடைந்து  சஞ்சயந்தன்  பிறவி  கொண்டு
   காதிவினை  முழுதும்  கெட்டு  திரவிய  மோட்சம்  சென்றடைந்தார்
ஸ்ரீ பூதி  அமைச்சனின்  தீவினையால்  விலங்குகதி உழலச்  செய்து பின்
   வித்துதத்தன்  பிறவி  பெற்று  வித்யாதரர்  அரசனானான்    540

சிம்மசேனன்  ராணியான  பூங்குழலால்  ராமதத்தை
   இலாந்தவ  கல்பத்திலே  ஆதித்யாப  தேவன்  ஆனாள்
அவள்  மகன்  பூர்ணச்சந்திரன்  பவணலோக  தரணேந்திரனாக
   இவ்விரு  தேவர்களின்  பிறப்புதனை  இனி  இயம்புகிறேன்      541 

முப்புறமும்  கடல்  சூழ்ந்த  விஜயார்த்த  மலை  நடுவில்
   வில்லெடுத்து  நாணேற்றியதாய்  விளங்குகின்ற  பாரதத்தில்
மலர்  தளிர்ந்த  மலர்வனமும்  தேனிசைக்கும்  வண்டுகளும்
   தோப்புகளும்  சூழ்ந்திருக்கும்  சுந்தரமாம்  வடமதுரையில்    542

துகில்  கொடிகள்  பறக்கும்  ஒலி  முகில்  மோதும்  முழக்கம்  என
   மயில்கள்  தோகை  விரித்தாடும்  மனம்  கவர்ந்த  நடனங்களும்
பொற்கதிரோன்  வழிமறிக்கும்  பொன்  இழைத்த  மாளிகைகளும்
   சிற்றிடை  கொண்டொளிரும்  சித்திரபாவைகள்  கொண்ட  நகரம்    543

மன்மதன்  தான்  வருத்தம்  செய்வான்  மதகரிகள்  விலங்கு  கொல்லும்
   வாடுவது  மலர்கள்  மட்டும்  கலப்படமும்  வண்ணத்தில்  மட்டும்
நீர்  நிறைக்கு  அணை  தான்  காவல்  தீத்தொழில்  யாகத்தில்  மட்டும்
   வசியமோ  மகளீரால்  தான்  வஞ்சனைகள்  வேறில்லா  நகரம்      544

வடமதுரை  ஆளும்  அரசன்  வலிமை  கொண்ட  அனந்தவீர்யன்
   பகைவர்களின்  இரவுகளில்  பயம்  தெளித்த  பெரிய  வீரன்
மன்மதன்  மயக்கம்  கொள்ளும்  வடிவம்  கொண்ட  பேரழகன்
   மாரி  போல்  அள்ளித்தந்து  கரம்  சிவந்த  தர்மவேந்தன்    545

கற்பக  மரத்தை  சேர்ந்த  பவழக்கொடிக்கு  ஒப்பாவாள்
   கன்னியர்கள்  அனைவருமே  காமுறும்  வடிவம்  கொண்டாள்
பாற்கடல்  அள்ளித்  தந்த  அமிர்த  மொழி  சொல்லுடையாள்
   அனந்தவீர்யன்  கைபிடித்த  முதல்  மனைவி  மேருமாலினி      546

மேகங்கள்  மோதலில்  ஒளிரும்  மின்னல்  கொடி  வடிவு   கொண்டாள்
   மெல்லிடை  ஒடிந்துவிடும்  பொன்  அன்னம்  நடையுடையாள்
அனந்தவீர்ய  மாமன்னன்  மணந்த  வடமதுரை  இளைய  ராணி
   அமிர்தமதி  பெயர்  கொண்ட  அழகு  கொஞ்சும்  ஆரணங்கவள்             547

ஆண்  மகரமீன்  ஒன்று  அதன்  இரண்டு  செதில்களுடன்
   ஆழ்கடலில்  ஆனந்தத்தில்  ஆட்டமிட்டு  திரிவதைப்  போல்
அரசன்  அனந்தவீர்யனும்  அவன்  இரண்டு  அரசிகளுடன்
   இல்லறக்  கடலில்  மூழ்கி  இன்பம்  என்னும்  முத்தெடுத்தான்   548

இலாந்தவ  கல்ப  தேவன்  இராமதத்தை  காலம்  முடிய
   முதல்  அரசி  மேருமாலினியின்  மணி  வயிற்றில்  வந்துதித்தாள்
பவணலோக  தேவன்  ஆன  பூர்ணச்சந்திரன்  ஆயுள்  முடிய
   அமிர்தமதி  அடிவயிற்றில்  அரசமகனாய்  வடிவெடுத்தான்       549

மேருமாலினி  பெற்று  தந்த  வடமதுரை  மன்னன்  மகனுக்கு
   மேரு  என்று  பெயர்  வைத்து  மெய்  மகிழ்வு  கொண்டார்கள்
அமிர்தமதி  இளையராணி  ஈன்று  தந்த  இளம்  மழலைக்கு
   மந்திரன்  என்று  பெயர்  சூட்டி  வடமதுரை  மகிழ்ந்ததன்று  550

இளவரசர்கள்  இருவருமே  இளங்கலை  போல்  வளர்ந்தார்கள்
   வில்,  வாள்,  வேல்  கையாளும்  வீரக்கலை  பயின்றார்கள்
யானை  ஏற்றம்,  குதிரை  ஏற்றம்,  தேரோட்டம்  கற்றறிந்து
   மன்மதனின்  மலர்கணைக்கு  மாய்கின்ற  வயதானார்கள்    551

புருவத்தின்  வில்லெடுத்து  விழியென்ற  வேல்  பொருத்தி
   கடைக்கண்  பார்வையாலே  கணை  தொடுக்கும்  கன்னியரால்
இளங்களிறு  போல்  இருக்கும்  இரண்டு  இளவரசர்களின்
   மனம்  கெடுத்து  வசமாக்க  மன்மதனும்  காத்திருந்தான்     552

காமத்து  இச்சைதனை  கணை  கொண்டு  எழுப்பி  விட
   மலர்  அம்பு  பொழிந்து  நின்றான்  மன்மதனும்  பகைவனைப் போல்
தொடுத்த  அம்பு  அத்தனையும்  தூள்  தூளாய்  ஒடிந்து  விழ
   ஐங்கணையான்  முதுகு  காட்டி  அவர்களை  விட்டு  அகன்றான்  553

உடல்  தேடும்  இச்சை  இன்றி  காமத்தின்  மோகம்  அற்று
   நிலையற்ற சம்சாரத்தில்  ஐம்புலன்  நுகர்ச்சி  நீக்கி
நிறை  பொருள்  செல்வம்  எல்லாம்  நீர்  கொண்ட  நுரை  போலும்
   வாலிபமும்  உடலழகும்  வானவில்  போன்றது  என்றனர்  554

உடல்  செல்வம்  அத்தனையும்  ஒருபோதும்  நிலைப்பதில்லை
   உறவினரும்  பெரும்  பொருளும்  உடன்  வந்து  காப்பதில்லை
துணையென்று  ஒன்றிருந்தால்  நமக்கு  நாமே  துணையாவோம்
   அருகனின்  அறிவுரைகள்  அனைத்துயிர்க்கும்  நன்மை  என்றனர் 555

ஈராறு  சிந்தனையில்  இருவரும்  இல்லறத்தில்  செல்லுங்கால்
   மூவுலகும்  தோன்றுகின்ற  வாலறிவு  ஞானத்தோடு
தேவர்கள்  மலர்  சொரிய  பூவில்  கால்பதியா  சாரணத்தில்
   விமலநாதர்  ஸ்ரீ விஹாரமாகி  வடமதுரை  வனம்  வந்தார்  556

செந்தாமரை  மலரிதழில்  தேவதைகள்  நடனமாட
   பவ்வியர்கள்  பாவவினை  பழத்த  இலை  போல்  உதிர
எண்வினைகள்  அறுத்தொழித்த  எழில்  கொண்ட  விமலநாதர்
      ஸ்ரீ விஹாரம்  செய்வதற்கு  தேவர்கள்  வழி  சமைத்தார்கள்  557           
நறுமணம்  வீசுகின்ற  நன்மலராம்  செந்தாமரை  மேல்
   நான்கு  அங்குலம்  மேல்  பொருந்தி  ஸ்ரீ விஹாரம்  செல்வாரென
மூன்று  யோசனை  அகலத்தில்  முத்துகளால்  தெரு  அமைத்து
   இரு  யோசனை  அகலம்  ரத்தின  மண்டபம்  அமைத்தார்கள்        558
(  ஒரு யோசனை :  9  மைல் )

வாயுதேவன்  நறுமணத்தில்  இளம்  தென்றலாய்  வந்து
   பூவுலகில்  படிந்துள்ள  தூசி  நீக்கி  தூய்மை  செய்தான்
வருணதேவன் மேகமாகி  வான்வெளியில்  உலா  வந்து
   மணங்கமழும்  நீர்  தெளித்து  அவ்விடத்தை  குளிரச்  செய்தான்     559

சௌதர்மேந்திரனும்  வானவரும்  எண்வகை  தேவர்களும்
   ஸ்ரீ விஹாரம்  எழுந்தருளும்  விமலநாதர்  எதிரில்  வந்து
வீதராக  பகவானின்  செவ்வடியை  வணங்கி  நிற்க
   ஸ்ரீ விஹாரமும்  சிம்மாசனமும்  எண்சிறப்பில்  இயல்பானதன்று  560

இடியொத்த  பேரிகைகளும்  பம்பையுடன்  பெருமணியோசையும்
   வலம்புரி  சங்கொலியும்  உடுக்கையுடன்  மத்தள  இசையும்
உறுமி  மேள  நாதத்துடன்  சேமகல  வெங்கல  ஒலியும்
   ஸ்ரீ விஹாரம்  செய்கையில்  திக்கெட்டும்  ஒலித்தது  அங்கு         561

கின்னர  தேவர்  எல்லாம்  கிளை  கிளையாய்  கூடி  நின்று
   வீணையுடன்  யாழ்  எடுத்து  விண்மயங்கும்  இசை இசைத்து
நிலமடந்தை  தன்  நிலையில்  பொன்  வைர  நவ  மணிகளுடன்
   நன்னீர்  எல்லாம்  வழங்கி  நாயகனை  தொழுது  நின்றார்கள்      562

விண்ணகத்து  தேவ  மகளீர்  விண்வெளியில்  நடனமிட
   மண்ணுலக  மங்கைகளும்  கல்பலோக  கன்னிகளும்
தேவர்களால்  அமைக்கப்பட்ட  சுந்தர  அரங்கம்  தன்னில்
   பாட்டிசைக்கு  பாங்குடனே  பரவசத்தில்  ஆடினரே   563

ஜினேந்திர  தேவர்  அவர்  செல்லுகின்ற  வீதிகளில்
   இந்திரலோக  தேவர்  கூடி  மலர்  மழையைப்  பொழிந்தார்கள்
தீவினைகள்  ஒழிந்திடவும்  புண்ணியங்கள்  பெருகிடவும்
   ஜினதேவன்  நாமங்களை  இசை  கொண்டு  பாடினார்கள்   564

தேவர்களால்  அமைக்கப்பட்ட  செந்தாமரை  மலரின்  மீது
   செங்கமலம்  நிற்பதை  போல்  ஜினேந்திரன்  அடி  பதிகையிலே
திங்கள்  ஒத்த  முக்குடையும்  யட்சர்களின்  வெண்சாமரையும்
   ஒருங்கிணையும்  நேரத்திலே  தேவர்கள்  பூ  சொரிந்தார்கள்   565

மா தவ  முனிவர்  எல்லாம்  மாலவன்  மலரடி  தொழுதார்கள்
   எண்வகை  மங்கலங்கள்  ஏந்தி  எழில்  பூர்ண கும்பத்துடன்
தேவ  மாந்தர்  பின்  தொடர  திருமகளும்  வரும்  போது
   இரு  நிதிக்கு  தேவர்களும்  எழுந்து  நின்றார்  முன்னும்  பின்னும்   566

பவணலோக  தேவர்  எல்லாம்  ஜினேந்திரரின்  திருவடி  பணிந்து
   தீவட்டிகள்  கையில்  ஏந்தி  தேர்  வடம்  போல்  முன் நடந்தார்
அக்கினிகுமாரர்  எல்லாம்  அவர்  சிரசில்  கலசம்  தாங்கி
   விமலநாதர்  அடி  தொழது  வீதிகளில்  பாடி  சென்றார்    567

ஆதவனின்  அதியொளியும்  வெண்மதியின்  தண்ணொளியும்
   ஒன்றிணைந்த  பேரொளியான  விமலநாதர் மேனி  எழிலை
பரிதி  பார்த்த  குமுதமென  மதி  கண்ட  அல்லி  போல
   மனிதர்கள்  முகம்  மலர  மலர்ச்சியுடன்  தொழுதார்கள்    568

வெண்குடையும்  அலைகொடியும்  மின்னலென  ஒளிர்ந்து  நிற்க
   வீங்கு  எழில்  வைசயந்தை கொடி  முன்புறம்  அணியாய்  செல்ல
மங்கல  வாழ்தொலியால்  இடி  முழக்கம்  கரைந்து  போக
   மறம்  அறுக்கும்  தர்மச்சக்கரம்  முன்னிடத்தில்  சென்றதங்கு     569

செங்கமல  மலரின்  மீது  ஜினேந்திரரும்  ஏறி  நிற்க
   எட்டு  திக்கும்  விழிபறிக்கும்  எழில்  ஒளியாய்  மின்னலிட
திசைக்குரிய  கன்னியர்கள்  பூ  மாரி  பொழிந்து  வர
   காசினியின்  வறட்சி  வெள்ளம்  வடிந்து  செழிப்பு  ஓங்கியது   570

ஊமைகள்  வாய்  மொழிந்தார்  செவிடர்கள்  செவியுற்றார்
   முடவர்கள்  காளையாய்  நடக்க  விழியற்றோர்  பார்வை பெற்றார்
துன்பத்தோர்  சுகம்  அடைந்தார்  குரோதத்தோர்  சினம்  அழிந்தார்
   விமலநாத  வாலறிவன்  ஸ்ரீ விஹாரம்  சென்ற  போது    571

எதிரிகளாய்  பிறந்திட்ட  எல்லா எதிர்  விலங்கினமும்
   அண்ணல்  பாதம்  பட்டதினால்  அன்பினால்  இணைந்ததங்கு
அதிசயங்கள்  அத்தனையும்  அங்கிருந்து  பார்த்த  மக்கள்
   மேரு  மந்திரர்களிடம்  மென்  மொழியில்  கூறி  நின்றார்   572

  எழுந்து  ஏழடி எடுத்து  வைத்து இறைவனை  துதித்து  வணங்கி
   செய்தியை  சொல்லியோர்க்கு  செம்பொன்  தானங்கள்  கொடுத்து
ஏழுலகமும்  நிறைந்துள்ள  பொய்காட்சி  இருள்  அகல
   விமலரின்  பாதம்  தொழ  வேழத்தில்  முரசறைந்தார்கள்     573

சங்க  வாத்தியங்கள்  சப்தமாய்  ஒளி  எழுப்ப
   ஏழுவகை  மலர்கள்  கொண்டு  யானை  பரி  மேல்  அமர்ந்து
நிலமங்கை  முதுகு  அதிர  ஆன்மனின்  தீமை  நீங்க
   பரிவாரங்கள்  தொடர  பரமனின்  இடம்  வந்தார்கள்     574

சந்தன  குழம்பு  கொண்ட  சந்திரகாந்த  செப்புகளும்
   குங்கும  குழம்பு  குலுங்கும்  சூர்யகாந்த  செப்புகளும்
அகிற்புகை  பெருகுகின்ற  இந்திரநீல  கலசங்களும்
   கையிலேந்திய   கன்னியர்கள்  சூழ்ந்து  நின்றார்  மேரு மந்திரரை    575

விண்வரை  மணந்து  வீசும்  நல்  மலர்  மாலைகளும்
   பொன்  வைர  ரத்தினங்கள்  ஒளிரும்  பெரும்  தட்டுகளும்
பின்  தொடரும்  கூடத்துடன்  பிளிரும்  களிர்கள்  மேலமர்ந்து
   மேரு  மந்திரர்  இருவரும்  இரு  மேகமற்ற  பரிதியானார்      576

 ஸ்ரீ  விஹார  சருக்கம்  முடிவுற்றது.


 13.  சமவ  சரணச்  சருக்கம்.

ஈராறு  யோசனை  அளவில்  அமைந்த  சமவசரண  முதலிடத்தில்
   நான்கு  திசை  வீதிகளின்  நடு  அமைந்த  மானஸ்தம்பங்கள்
அழகினை  விளக்கிச்  சொல்ல  வார்த்தைகள்  மொழியிலில்லை-அதை
   காண்பவர்  மனதில்  உள்ள  கர்மங்கள்  அழிந்து போகும்      577

வீசும்  வெண்  சாமரைகள்  வெளிப்படும்  அரசு  சின்னங்கள்
   அனைத்தையும்  துறந்து  விட்டு  அரசன்  மக்கள்  மேரு  மந்திரர்
ஜினேந்திரரின்  சமவசரணம்  ஜினாலயத்தை  அடைந்து
   மூவுலக  அதிபதியை  முழுமனதில்  தொழுது  நின்றார்    578

பன்னிரண்டு  யோசனைகள்  பரப்பளவில்  வட்டமாகி
   தேவர்கள்  எல்லாம்  கூடி  சுவர்ணமணிகளால்  அமைத்த
இருபத்து  ஆயிரம்  படிக்கு  மேல்  சமவசரண  மண்டபம்  கொண்ட
   பிரதம  பூமியாகும்  பிராசாத  சைத்யபூமி     579

வேழத்தின்  அம்பாரி  விட்டு  தரை  தொட்ட  மேரு  மந்திரர்
   தூளிசாலம்  மதில்  கடந்து  பிராசாத  சைத்திய  பூமியையும்
இரண்டு  காதம்  அகலம்  கொண்ட  நான்கு  திக்கு  வீதிகளின்
   மார்பளவு  முதல்  பீடத்தில்  மலர்கள்  வைத்து  வணங்கினார்கள்  580

நான்கு  காத உயரத்தில்  பன்னிரண்டு  யோசனை  தெரியும்
   திக்குக்கு  ஒன்றாக  நான்கு  திக்கும்  உயர்ந்து  நின்று
காண்பவர்  மன கர்வம்  கலங்கத்தில்  அழிந்து போக
   தோரண  மதில்  வரிசையிலே  மங்கலம்  எட்டும்  சூழ்ந்திருந்தன  581

இரண்டு  காதம்  உயரம்  நடுவில்  படிக  ரத்தினமும்
   ஒரு  காதம்  உயரம்  மேலே  வைடூரியம்  பதித்திருக்க
ஒரு  காதம்  உயரம்  கீழே  வைரத்தின்  கல்  ஒளியும்
   அடி  பாகம்  நாற்புறமும்  அமைந்தன  சித்தர்  உருவங்கள்   582
( 1  காதம் :  2.5  மைல்,  1 யோசனை  :  9  மைல் )

மானஸ்தம்பத்தின்  மேலே  நான்முகம்  கொண்ட  பூதம்
   சிரத்தினில்  செங்கமலம்  போல்  செம்பொன்  கலசம்  மீது
திருமகள்  உருவம்  நிறுவி  வெண்  நிற வேழம்  கொண்டு
   சொரிந்திடும்  பாலின்  ஒளி  ஒளிர்ந்திடும்  இருபத்து  யோசனை   583

திருமகள்  வீற்றிருக்கும்  செம்பொன்  பலகையின்  பக்கங்கள்
   நான்கிலும்  தொங்குகின்ற  நாலிரண்டு  மங்கலங்களும்
நால்  திசை  மானஸ்தம்பங்கள்  நளினத்தின்  அழகு  கண்டு
   மேரு  மந்திரர்  இருவரும்  வலங்கொண்டு  தொழுது  வந்தார்  584

மனதினில்  மாலவன்  பதிய  மார்பளவு  மதிலைக் கடந்து
   இந்திர  நீலம்  கொண்ட  ரத்தின  நிலத்தை  உடைய
கண்கவர்  அகழிகளில்  தளும்பிடும்  நீர்  நிறைந்த
   காதிகை  பெயரைக்  கொண்ட  இரண்டாம்  பூமியை  கண்டனர்  585

அகழியின்  ஆழமும்  நீரும்  ஆழ்  கடல்  ஒத்திருக்க
   கரை  தொடும்  அலையை போல்  காதிகை  அலையும்  வந்து
ஜினேந்திரனின்  மலரடி  தனை  மலர்  போன்ற  பட்டுடையால்
   போர்த்தியது  போல்  தோன்றும்  என  போற்றிப்  புகழ்ந்தார்கள்   586

ஆழியின்  நீலம்  போல  அகழியின்  நீரும்  நீலம்
   பாற்கடல்  அமுதம்  போல  பருகினால்  நீரும்  சுவைக்கும்
ஆழமோ  அதிகம்  என்று  இறங்கினால்  முழங்கால்  அளவே
   மேடுகள்  பள்ளம்  இன்றி  அகழியோ  சமதளம்  ஆகும்   587

இரண்டு  குரோச  காதிகா  பூமியில்  அரை  காதம்  அகழிகளாகும்
   நான்கு  திக்கு  வீதிகளில்  உதயதர  பிரதம  கோபுரங்கள்
கோபுரத்தின்  அங்கங்கள்  செம்பொன்னால்  செதுக்கி  இருக்க
   ஒரு  காதம்  பரப்பளவுள்ள  வல்லிபூமியை  அடைந்தனர்  588

ஒரு  காதம்  மைல்  அகலம்  மூன்றாம்  பிரகார  வல்லிபூமி
   பூப்பந்தல்  தோட்டங்களும்  பொன்னிழைத்த  மண்டபங்களும்
மலர்களில்  சொட்டும்  மதுவால்  மயங்கிடும்  வண்டுகள்  கூட்டம்
   ஒலித்திடும்  ஓசையின்  ஒலி  சுவாமியை  துதிப்பது  போலாகும் 589

மல்லிகை  முல்லை  மலர்கள்  மணம்  தூவும்  செண்பகப்பூவும்
   வனமல்லி  குறுக்கத்தியும்  கருமுகை  குறிஞ்சிகளும்
வெட்சியும்  இன்னும்  பிறவும்  நெருக்கத்தில்  மலர்ந்து  நிற்க
   அத்தனை  பூவும்  கொண்டு  அடைந்தனர்  கோபுரத்தை    590


மூன்று  காதம்  உயர்ந்து  நின்று  இரண்டு  காதம்  நீளம்  கொண்டு
   உதயதரம்  பெயரில்  கோபுரம்  உள்ளத்தைக் கவர்ந்து  நிற்கும்
ஒரு  காதம்  அகலத்தில்  ரத்தின  வாயில்  கொண்டு
   எண்வகை  மங்கலத்துடன்  மூன்றுநிலை  கொண்டதாகும்   591

நிலைக்கொரு  படிமையாக  மூன்று  ஜின  பிரதமைகள்
   வாயிலின்  இருபுறமும்  வடிவழகில்  துவார  பாலகர்கள்
துவஜக்  கொடிகள்  கொண்ட  உதயதர  கோபுரத்தை
   கை  கொண்ட  மலர்கள்  தூவி  காலடி  வைத்தார்  நாலில்  592
(  1  குரோசம்  :  2.25  மைல் )

நான்காம்  பிரகாரம்  ஆன  வனபூமி  என்னும்  நிலம்
   பலவகை  நிறங்கள்  கொண்டு  இரண்டு  காத  அகலத்தில்
பிரீதிதரம்  சுற்று  மதிலும்  நால்  மூலையில்  மேடை  தாங்கி
   மரங்கள்  பலவும்  சூழ்ந்த  மண்  அழகு  கொண்ட  பூமி     593

அமைந்திட்ட  மேடை  ஒன்றுக்கு  அழகிய  இரு  தூபைகளும்
   அதனுடன்  அமைந்திருக்கும்  முக்குடையுடன்  இரு  சோதிமரமும்
ஆதிமுதல்  தளிர்த்திருக்கும்  கற்பக விருட்சம்  இரண்டும்
   அழகுடன்  விளங்குகின்ற  அரிய  வன  பூமியாகும்   594

நான்கு  திசை  வீதி  பிரிந்து  மேடைக்கு  செல்லும்  வழியில்
   இருபக்கம்  அமைந்திருக்கும்  கோண  வட்ட  சதுர  குளங்கள்
மூவெட்டு  எண்ணிக்கையில்  முறைபடி அமைந்திருக்கும்
   முறைபடி  குளித்து  பல் துலக்கி  வாய்த்தூய்மை  செய்வாரகள்  595

நான்காம்  பிரகாரத்தின்  நான்கு  பெரும்  வீதிகளின்
   இருபுறமும்  அமைந்திருக்கும்  இசையொலிக்கும்  நடனகூடம்
ரத்தின  தூபைகளும்  நயம்  பொன்  எண்  மங்கலமும்
   தேவலோக  போகபூமி  சேர்ந்தது  போல்  மனித  கூட்டம்     596

குயில்  இசைக்கும்  ஓசையது  மத்தளத்தின்  நாதமாக
   கொம்பு  பூவின்  வண்டினங்கள்  பாடிசையின்  தாளமாக
வண்ணமயில்  தோகையுடன்  வான்  மழைக்கு  நடனமாட
   வஞ்சியர்கள்  கொஞ்சும்  விழி  கண்டவர்கள்  கிரங்கிடுவார்   597

தீவினைகள்  ஏதும்  சேரா  மேரு  மந்திர  இளவல்  இருவரும்
   வனபூமி  விதியின்  படியே  வாவியை  கடந்து  சென்று
நன்  மலர்  கையில்  ஏந்தி  ஜினபிம்பை  பூஜைசெய்து
   மென்  அடி  எடுத்து  வைத்தார்  பிரகாரம்  ஐந்தில்  செல்ல  598

துவஜ பூமியான  ஐந்தாம்  பிரகார  பூமி
   கோபுரத்தின்  இருமருங்கும்  பவணேந்திர  தேவர்கள்  கூடி
ஜினேந்திரரின்  அருங்குணத்தை  ஜினதுதியாய்  பாடி  நிற்க
   மாங்கொத்து  கொடிகள்  கொண்ட  மாபெரும்  வீதிகளாகும்    599

சிங்கம்,  பெரிய யானை,  பூமாலை,  மயில்,  அன்னம்,  கருடனாகி
   எருது,  மகரமீன்,  சக்கரம்,  செங்கமல  பூவும்  கொண்டு
பத்து  வித  லாஞ்சனங்கள்  பதிந்திட்ட  தம்பத்தின்  நிற்கும்
   ஜினேந்திரரின்  ஜினாலய  மதில்  கல்யாணதாரம்  என்பதாகும்   600

மூன்று  குரோசம்  அடி  அகன்று  ஒன்றரை  குரோசம்  மையத்துடன்
   முக்கால் குரோசம்  தலைப்புடன்  உயர்ந்து  நிற்கும்  கல்யாணதாரம்
பசும்  பொன்னால்  இழைத்து  கட்டி  ரத்தினங்கள்  பதிய  வைத்து
   ஏழ்  நிலை  வட்டாலயங்கள்  எழில்  கொண்டு  அமைந்தது  அங்கு  601
(  ஒரு  குரோசம்  :  2.25  மைல்  )

செம்பொன்  கோபுரங்கள்  நான்கு  தேவலோகம்  போல்  இருக்கும்
   ஐந்து  காத  உயரத்துடன்  கோபுர  வாயிலின்  இருமருங்கும்
அகப்பற்றின்  விருப்பத்தில்  வரும்  ஏழ்  பாவத்  தொடர்ச்சிகளை
   நுழைபவர்கள்  காணும்படி  கண்ணாடிகள்  பதிந்திருக்கும்     602

கல்பவாசி  தேவர்கள்  துவார  பாலகராய்  காவல்  செய்ய
   ஏழ்நிலை  நடனசாலையில்  எழில்  மகளீர்  நடனம்  ஆட
நான்கு  வீதி  கிளைகளிலும்  சித்த  திருவுருவங்கள்  துலங்க
   திருவுருவ  சிரசின்  மீது  சித்தாயதன  மரம்  மலர்  சொரியும்   603     

ஆறாம் பிரகாரம்  ஆன  கல்பவிருட்ச  பூமியிலே
   கல்யாணதார  கோபுரங்கள்  சூழ்ந்திருக்கும்  இடத்தினிலே
வாலறிவனை  தரிசித்து  வணங்குகின்ற  ஜினாலயமும்
   வானினை  தொட்டு  நிற்கும்  வனப்புடைய  தூபிகள்  உண்டு       604

கல்ப விருட்ச  பூமியிலே  திக்குக்கொரு  தடாகம்  உண்டு
   கீழ்  திசையில்  நந்தை  என்றும்  தென் திசையில்  பத்திரை என்றும்
மேல் திசையில்  ஜயந்தை  எனவும்  வட  திசையில்  பூரம்  எனவும்
   பெயர்களால்  அறியப்பட்ட  பேரெழில்  குளங்களாகும்    605

நத்தையின்  நீர்  தெளித்தால்  முன்  பிறப்பை  அறிந்து  கொள்வர்
   பத்திரை  நீர்  மேனி  தொட்டால்  முன்  ஏழு  பிறவி  அறிவர்
சயந்தையின்  தண்ணீர்  பட்டால்  நினைத்ததை  நேரில்  காண்பர்
   பூரத்தின்  புனித  நீரால்  புத்கல  நோய்கள்  நீங்கும்     606

நான்கு  காதம்  பரப்பிலுள்ள  ஆறாம்  பிரகாரம்  தன்னில்
   மூவுலக  தேவர்  மனிதர்  விலங்குகள்  வந்து  சேரினும்
மனித  மன  ஆசை  போல  பரந்து  விரியும்  பூமியாகி
   ரத்தின  மரங்கள்  சூழ்ந்த  கற்ப விருட்ச  பூமியாகும்    607

பூஜைப்  பொருள்கள்  கொண்டு  இச்சமவசரண  பூமி  சேர்ந்தால்
   தேவரும்  மறந்து  நிற்பார்  தங்கள்  தேவலோகம்  தன்னை
மலையென  நிமிர்ந்து  நிற்கும்  மாளிகைகள்  ஒருபுறமும்
   ஞாயிறின்  ஒளி  மங்கிடும்  மண்டபங்கள்  நிறந்திருக்கும்  608

கன்னலின்  சுவை  கொள்  நீரால்  கரை  புரலும்  நதிகள்  உண்டு
   வண்டுகள்  படை  போல்  திரளும்  மலர்வன  தடாகம்  உண்டு
ரத்தின  தளங்கள்  கொண்டு  ஒளிர்ந்திடும்  மண்டபங்கள்  உண்டு
   கற்ப விருட்ச  பூமியில்  கண்கவர்  பசும்பொன்  மதில்கள்  உண்டு    609

மாறிடா  சிந்தை  கொண்டு  மாதவம்  செய்யும்  முனிவோர்
   மறுபிறப்பை  ஒழித்து  நீக்கும்  உபாத்தியாய  குணத்தையுடையோர்
மறம்  போக்கி  தர்மம்  காக்கும்  மௌனத்தைக்  கைகொண்டோர்கள்
   முக்கால  யோக  நிலையோர்  நாற்புறமும்  அமர்ந்து  இருப்பார்     610

ஐந்தவம்  ஏற்ற  சான்றோர்  அமர்ந்துள்ளார்  ஒரு  பக்கத்தில்
   மன  வாக்கு  காய  பலத்தோர்  இருந்தனர்  ஒரு  பக்கத்தில்
உபவாச  விரதம்  கொண்டோர்  ஒரு  பக்கம்  இருக்கை  கொண்டார்
   உடல்  துன்பம்  துறந்த  தவத்தோர்  உறைந்தனர்  ஒரு  பக்கத்தில்   611

(  ஐந்தவம்  :  உக்கிர,  தீப்த,  தப்த,  மாதவ,  கோர  தவம்  )

உடல்  பிணி  நீங்குதற்கு  மருந்து  அளிக்கும்  முனிவர்களும்
   நறுமண  நெய்  பால்  அமுது  வழங்கிடும்  தர்மத்தோரும்
ஆகம  நூல்களிலே  முதல்  இறுதி  நடுவண்  கொண்டு
   முழுநூலும்  அறிந்த  ஞான  கோஷ்ட  புத்தி  புலவர்கள்  உண்டு   612

முதல்  பதம்  துவக்கம்  சொல்ல முதல்  நடு  முடிவு  அறிந்து
   முழுநூலும்  அறிந்து  சொல்லும்  பீஜபுத்தி  மாமுனிகளும்
ஈராறு  யோசனையில்  உண்டாகும்  மொழிகளை  அறிந்துணரும்
   சம்பின்ன  மதிகள்  கொண்ட  தவமுனிகள்  அமர்ந்திருப்பர்      613

ஆறாம்  பிரகார  பூமியின்  நான்கு  பெரும்  வீதிகளின்
   இருபுறமும்  இத்தகைய  இறை  ஞான  முனிவர்களை
மேரு  மந்திர  மாமன்னர்கள்  மனம்  உருக  துதிகள்  பாடி
   ஏழாம்  பிரகாரமான  கிருஹாங்கண  பூமி  சென்றார்கள்    614

பொன்  மணி  ரத்தினத்தால்  பொழுதெல்லாம்  ஒளிர்கின்ற
   கனகமணி  மதில்  கடந்து  ஜயாஸ்ரயம்  மண்டபம்  அடைந்தார்
ஒரு  குரோசம்  அகலத்துடன்  ஒரு  யோசனை  உயரம்  கொண்டு
   ஒரு  காதம்  நீளமாக  ஜயாஸ்ரயம்  மண்டபம்  நிற்கும்      615

முத்து  மணி  பவழங்கள்  தனித்தனியாய்  தரை  பதிய
   முழுமதியின்  ஒளிக்கதிரும்  பரிதி  கக்கும்  பளிங்கொளியும்
ஒன்று  சேர  இங்கு  வந்து  ஒளிர்வதை  பார்கையிலே
   மணல்  பாதை  அமைந்ததை  போல்  மண்டப  தரையுள்ளது   616

குங்கும  குழம்பினாலும்  சந்தன  குழம்பு  கொண்டும்
   மண்டப  கூரையுள்ளே  வண்ணமாய்  ஞாயிறு  திங்கள்
ஆன்மனின்  தீய  நல்வினைகளாலே  சம்சார  துக்கம்  தன்னை
   உரைக்கின்ற  சிற்பங்கள்  உப்பரிகைகளில்  உள்ளதங்கு  617

செம்பொன் பீடம்  ஒன்றும்  இந்திர துவஜ  கம்பம்  நடுவில்
   அன்னம்  போல்  ஆகாயத்தில்  ஆடிடும்  கொடிகள்  மேலே
அசைந்திடும்  கொடிகளாலே  எழுந்திடும்  மணிமாலை  ஓசை
   பரிதியின்  பரிகள்  ஓட  தேர்மணிகள்  ஒலிக்கு  ஒப்பாம்      618

அமலனின்  ஆலயம்  முன்  ஆயிரங்கால்  மண்டபமும்
   அம்  மகோதய  மண்டபத்தில்  வெண்கமல  தேவி  பீடம்
எண்  திசையும்  மேருமலை  போல்  எழில்  மிகு  மண்டபங்கள்
   தாண்டியே  உள்ளே  சென்றால்  தங்கத்தில்  பலி  பீடம்  உண்டு  619

மலர்  கொண்டு  அர்ச்சிக்கும்  மணி  பீடம்  தாண்டி  சென்றால்
   இருபுறமும்  இடர்  இன்றி  தரும்  நவநிதி  குபேரர்களும்
அக்  கொடைக்கர  மண்டம்  கடந்தால்  குபேரர்களின்  தேவியர்கள்
   மின்னலென  நடனமாடும்  நவமணிகள்  நடனசாலை  காணும் 620

ஏழாம்  கிருஹாங்கண  பூமி  எண்  திசை  கோணங்களிலும்
   ஏழ்வகை  தூபைகளிலும்  நவமணிகள்  பதிந்து  நிற்க
வானவர்  கோன்  இந்திரன்  விழியகன்று  வியந்திருக்க
   உரைப்பதற்கு  வார்த்தை  இல்லா  பேரெழிலை  கொண்டதாகும்      621
( 7 வகை  துபை  :  மத்திய  உலக  தூபை,  மந்திர  தூபை,  சுவர்க்க  தூபை,  கிரய  வேயக  தூபை,  சர்வார்த்த  சித்தி  தூபை,  சித்த  தூபை,  பவ்ய தூபை )

இரண்டு  குரோசம்  பரப்புடைய  பிரசாத சைத்ய  பூமியையும்
   இரண்டு  குரோசம்  நிலப்பரப்பில்  காதிகா  பூமியையும்
நான்கு  குரோசம்  அகலத்தில்  வனவல்லி  பூமியையும்
   எட்டு  குரோசம்  உத்யான  பூமி  நான்காம்  பிரகாரமாக           622

ஈராறு  குரோசம்  கொண்ட  கொடி ( துவஜ )  பூமியையும்
   ஈரெட்டு  குரோசத்தில்  எழில்  கற்பவிருட்ச  பூமியையும்
மூவாறு  குரோசம்  பரப்பில்  கிருஹாங்கண  பூமி  கடந்து
   திருநிலய  ஆலயத்தை  மேரு  மந்திரர்  சென்றடைந்தார்கள்     623

ஏழு  பூமி  கொண்டிருக்கும்  சமவசரண  நடுஇடத்தில்
   திருமகளின்  பெயர்  கொண்ட இலட்சுமி  வர மண்டபமும்
எண்  வினைகள்  வெற்றி  கண்ட  ஜினனின்  இருக்கை  கொண்ட
   பொற்றாமரை  ஸ்ரீ நிலையமும்  பொருந்திய  அழகை  கண்டார்கள்   624

இவ்விடம்  இவ்வண்ணம்  இருக்கும்  என  நினைக்கையிலே 
   அவ்விடம்  அவ்வண்ணம்  ஆகி  அங்கு  காட்சி  தரும்
இவ்விடத்தை  விட  எழில்  பெருகும் இவ்விடம் என நினைத்தால்
   அவ்விடம்  அவ்விடத்தை  விட  அழகு  பொங்க  அமைந்திருக்கும்  625

மேலான தன்மை  குணம்  தாழ்ந்திடும்  தன்மையாகி
   தாழ்ந்திடும்  நிலைமை  எல்லாம்  மேலானதாகிவிடும்
அவரவர்  உள்ளத்தில்  எழும்  ஆசைகளுக்கு  ஏற்றபடி
   எங்கெங்கும்  தோன்றி  நிற்கும்  அவரவர்  இச்சைக்கு  ஏற்றபடி   626

ஈரேழு  காதங்கள்  அகலத்தை  கொண்டிருக்கும்  ஸ்ரீ நிலயம்
   இரு  மூன்று  யோசனையில்  கோபுரம்  உயர்ந்திருக்கும்
பதினாறு  குற்றம்  நீக்கி  பசும்பொன்  ரத்தினம்  கொண்டு
   இல்லறத்தார்  ஆசையை  போல்  எல்லையின்றி  ஒளிரும்  அது      627

ஜகதீ  தலங்கள்  என்னும்  மூன்று  மா  மேடைகளும்
   மார்பளவு  உயர்ந்துள்ள மண்டபத்தின்  விளிம்புகளில்
வாய்விட்டு  எண்ண  இயலா  வரண்டகஜ  துவஜங்களுடன்
   ஸ்ரீ நிலையம்  ஜொலிக்கிறது  செங்கதிரோன்  ஒளியை  போல      628

ஒவ்வொரு  ஜகதீயிலும்  சதுர்முக  ஆலயங்கள்
   முக்கால  தீர்த்தங்கர்கள்  திருப்  பெயரை  பொறித்திருக்கும்
மழைகால  முகிலைப்  போல்  முழங்கிடும் முரசு  சங்கோடு
   பொன்கயிறு  நுனியினிலே  சேமங்கலம்  ஒலியெழுப்பும்  629


ஒவ்வொரு  நாழிகைக்கு  பின்  ஜயகண்டி  ஒலி  கொடுக்கும்
   ஒரு  ஜாமம்  முடிவினிலே  சங்கொலி  இசை  இசைக்கும்
பதினைந்து  நாழிகையில்  ஜாம  சந்தி  நேரத்திலே
   மூன்றும்  முழங்கும்  இசை  மூபத்து  யோசனைகள்  கேட்கும்     630

வானவர்  சொரியும்  மலர்கள்  வழியெங்கும்  நிறைந்திருக்கும்
   வாத்திய  இசைப்  பொருட்கள்  வருவோரை  கவர்ந்திழுக்கும்
எண்  மங்கலங்கள்  வரிசை  எழில்  கொண்டு  இருபுறமும்
   தோரணத்  தொங்கலுடன்  காண்போரின்  கண்  மயங்கும்   631

துவர்பசை  துறந்து  விட்ட  தொண்மை  சமவசரணம்  தன்னில்
   சுற்றுச்  சுவர்கள்  பெரிதாய்  சுந்தர  கைவண்ணத்தில்
நான்கு  காத  உயரத்துடன்  மூன்று  யோசனை  அகலத்துடன்
   இலட்சுமி  வரமண்டபம்  அதன்  நடுவில்  அமைந்திருக்கும்       632

முன்னூற்று  எழுபத்தைந்து  நிலையுடைய  ஸ்ரீநிலைய  கோபுரத்தில்
   ரத்தினத்தால்  கட்டிய  மேடை  நிலைக்கு  ஒன்றென  அமைத்து
மேடையின்  நான்கு  பக்கம்  பெரிய  சிறிய  தூபைகள்  இரண்டுமாய்
   மேலுலகோர்  கிரங்கி  நிற்கும்  விழி  மயங்கும்  ஸ்ரீ நிலையம்        633

ஜினாலயத்தில்  அமைந்துள்ள  தர்மசக்கரம்  பீடம்  ஒன்று
   ஜினேந்திரரின்  உயரத்திற்கு  செவ்வனே  அமைந்ததாகி
நான்கு  பக்க  வீதிகளில்  பசும்பொன்னால்  இழைத்திட்ட
   பதினாறு  படிகள்  கொண்டு  பார்ப்பவரை  கவர்ந்திழுக்கும்     634

ஜினேந்திர  தேவன்  இருக்கும்  கந்தகுடி  மண்டபம்  அது
   ஒருகாத  அகலத்தில்  ஒளி  கொண்டு  திகழ்ந்திருக்கும்
பக்கத்துக்கொன்றாக  வெண் பளிங்கால்  செய்த  தூண்கள்
   நவமணி  மாலைகள்  தொங்க  நாற்புறமும்  தாங்கி  நிற்கும்    635

மூன்று  வில்  உயரம்  கொண்டு  அதற்கொப்ப  அகலமாகி
   நடுவினில்  அமைக்கப்பட்ட  நவமணி  பீடம்  தன்னை
அரிமாக்கள்  இரண்டு  தாங்க  அதன்  மேல்  பட்டு  மெத்தை  கொண்டு
   அனைத்தும்  வென்ற அமலனின்   ஆசனம்  ஆதவனாய்  ஒளிர்ந்தது   636

கணதரர்களும்  மாமுனிகளும்  கல்பவாசி  தேவ  தேவியரும்
   கடுந்தவம்  நிலையில்  உள்ள  துறவுற்ற  ஆர்யங்கனைகளும்
பவணலோக  தேவ  தேவியர்களும்  வியந்தர  தேவர்களும்
   வரிசையில்  நின்றிருந்தார்கள்  ஈராறு  கோட்டங்களில்   637

சோதிஷ்க  தேவர்களும்  சௌதர்மேந்திர  தேவர்களும்
   மண்ணுலக  அரசர்களும்  அறம்  கேட்கும்  விலங்குகளும்
பன்னிரண்டு  கணங்களும்  வலங்கொண்டு  சூழ்ந்திருக்க
   ஜினேந்திரரின்  ஜினாலயத்தை  மேரு  மந்திரர்  வந்தடைந்தார்கள்    638

மேருவை  சூழ்ந்து  போகும்  மாசிலா  பரிதி  இரண்டு
   பரிதியின்  வட்டத்திற்கொப்ப  வலங்கொண்டு  நடந்து  வந்து
கை  நிறைந்த  மலர்களாலே  கார்கால  மழையைப்  போல
   பூக்களை  சொரிந்து  தொழ  தோன்றினார்  ஜினேந்திரன்  அங்கு   639

இருகரம்  குவிந்து  தொழ  இரு  விழிகள் நீர்  சொரிய
   உடல்  ரோமம்  கூச்செரிய  ஊமை  போல்  சொல்  குழற
உள்ளமது  சிலிர்த்து  போக  வைத்த  அடி  குழைந்து  நிற்க
   இரவி முன் இருளைப் போல எண்வினைகள் கெட்டு உதிர்ந்தன 640  

சமவ சரண  ஞானக்காட்சி  ஞாயிறு போல்  பிரகாசிக்க
   அறவாழி  அமர்ந்திருக்கும்  தருமசக்கரம்  பீடம்  ஏறி
நல்லறிவு  நல்லொழுக்கம்  ஆன்ம  குண  ஜினேந்திரர்  முன்
   எட்டங்கம்  படிய  தொழுது  எழுந்து  நின்று  துதி  பாடினர்    641

காமம்  வெகுளி  மயக்கம்  வென்று  வாலறிவு  மாதை  மணந்தும்
   தேவர்கள்  பூமழை  பொழிய  செங்கமலம்  மேல்  நின்றும்
ஸ்ரீ  விஹார  செயல்  செய்தும்  சிம்மசனம்  மேல்  அமர்ந்தும்
   மூவுலகும் பணிந்து தொழும் முதல்வா உம் குணங்கள் வேண்டும்   642

திவ்யத்தொனியாம்  உம் திருமொழி  ஈரொம்பது  மொழியில்  ஒளிக்க
   உலகத்து  உயிர்கள்  எல்லாம்  உள்ளத்தால்  அறிந்து  உருக
மனம்  வாக்கு  காயம்  மூன்றில்  மாசின்றி  பொருந்தி  நிற்க
   விருப்பு  வெறுப்பற்ற  உயிர்க்கு  மூவுலகிற்கும்  கடவுளானாய்  643

விலங்கரசன்  ஆற்றல்  உடனும்  வியர்வை  மலம்  மூத்திரமின்றி
   வெண்குருதி  உடலில்  ஓட  ஆயிரத்தெட்டு  மருவுகள்  தாங்கி
செப்புதற்கரிய  நறுமணம்  செம்மானே  உம்  உடல்  எழுப்ப
   செவிக்கினிய  மொழியில்  தரும்  திருவறம்  உமது  தானே   644

நிழல்  பசி  இமைத்தலின்றி  உம்  முகம்  நால்திசையோர்  நோக்க
   நின்  முடி  நகம்  வளர்ச்சி  இன்றி  நல்  கலைகட்கு  அரசனாகி
பகை  பசி  பஞ்சம்  நீங்க  பார்வையால்  கொடும்  தீமை  விலக
   எவ்வுயிர்க்கும்  தலைவனான  திவ்ய  ஒளி  திருமூர்த்தி  நீயே   645

பல  மொழி  பேசும்  மக்கள்  உம்  திருமொழி  புரிந்து  கொள்வர்
   பகை  கொண்ட  உயிர்கள்  கூட  உம்  பார்வையில்  பகை நீங்கும்
இரு  மூன்று  பருவ  சேர்க்கையில்  இப்பூமி  செழித்து  விளங்கும்
   இரு  நான்கு  மங்கலங்கட்கு  ஏற்றமிகு  ஜினேந்திரன்  நீயே   646

ஆன்மனில்  ஆண்டாண்டு காலம்  கட்டிய  காதி  வினைகள்
   ஆதவன்  கண்ட  பனியாய்  ஆன்மாவை  விட்டு  அகலும்
மாமலை  உச்சி  தவழும்  முகில்  தரும்  முழக்கத்தோடு
   ஸ்ரீ விஹாரமாகி  சமவசரணம்  வந்து  அமர்ந்த  தேவா     647

செங்கமல  மலரின்  மீது  பதிந்த  உன்  செவ்வடி  தன்னை
   தீவினை  அகல  மனதால்  உன்  இயல்பினை  அறிந்து  தொழ
முக்தியாம்  திருமகளின் முழுச்செல்வம்  பெற்ற  பின்பு
   எக்கொடையும்  பெரிதில்லை  இவ்புவியில்  எங்களுக்கு   648

அருள்  நீங்கி  சினமுற்று  உன்  இயல்பறியா  மனம்  எல்லாம்
   துன்பத்தில்  தோய்ந்து  மூழ்கி  துடித்திடும்  தவிப்பறிந்து
சினமுற்று  எழுதல்  இன்றி  சிந்தையில்  அருள்  கொள்ளும்
   அவரவர்  தன்மையென்று  விருப்பு  வெறுப்பற்ற  தேவா  649

முதலும்  முடிவும்  இல்லா  முழு  குணம்  பெற்ற  தேவா
   சம்சார  துக்கம்  நீக்கி  ஐம்புலன் நுகற்சி  போக்கி
  ஆன்மாவின்  இயல்பு  குண  மதி  சுருத  அவதி  அற்று
   அனைத்தும்  தன்  அகத்தே  கொண்ட  அழகிய  அமலன்  நீயே     650

மூன்று  ஜோதிகள்  உடைய  தேவா  மற்ற  ஜோதிகளற்ற  இறைவா
   சுருக்கம்  பெருக்கமற்ற  தூயவா  தோற்றம்  மறைவற்ற  மாதவா
மாறிடும்  நீதிகள்  நீக்கிய  நிர்மலா  நல்தீவினை  வென்றிட்ட  நாயகா
   எங்களுக்கு இறைவனாய்  அறம்  தந்த  சொரூபன்  நீயே   651

நறுமண  மலர்களின்  பெருமழை  பொழிந்திட
   வெண்நிற  சாமரைகள்  தண்  தென்றல்  வீசிட
தேவ துந்தூபிகள்  தேன்  இசை  முழங்கிட
   முக்குடை  ஒளியுடன்  சிம்மாசன  செல்வன்  முன்     652

துதிகளைப்  பாடினர்  தோய்ந்தனர்  பக்தியில்
   கிரீடங்கள்  போக்கினர்  கருங்குழல்  நீக்கினர்
மேகலை  மேலணி  அரை ஞான்  ஆடைகள்  துறந்தனர்
   அத்தனை  பொருள்களும்  விளக்கின்றி  ஒளிர்ந்தன    653

துவர்பசை  நான்கை  நீக்கி  ஈரைந்து  மாசு  போக்கி
   அகப்புற  பற்றுதனை  அருகநெறி  நீரால்  கழுவி
நல்லொழுக்க  நதியில்  குளித்து  ஆகாயத்தை  ஆடையாக்கி
   மாதவ  சந்தனத்தை  மேனியில்  பூசி  நின்றார்      654

வினைகளின்  அரசரை எல்லாம்  வென்றிட்ட  ஜினவரனின்
   இளவரசராய்  இருவரும்  சுருதகேவலி  பட்டம்  சூடி
இறைவனை  தொழுதெழுந்து  உயிர்  பொருள்  தன்மைகளையும்
   சம்சார  சுழற்சிகளையும்  அருளிட  வேண்டி  நின்றார்       655

பேரிகை  முழங்கும்  இசை  இடரின்றி  தொடர்வது  போல்
   திவ்யத்தொனி  எழுந்து  கேவலக்  திருமகளின்
தூது  செல்லும்  தாதியாக  சரஸ்வதி  மனதில்  அமர்ந்தாள்
   மேரு  மந்திரர்  இருவரும்  கணதரர்  பதவி  பெற்றார்   656


முன்  ஒரு  பிறப்பில்  மதுரையாகப்  பிறந்தவள்,  அடுத்த  பிறப்பில் ராமதத்தை  ராணியாய்  பிறந்து,  செய்த  புண்ணியத்தால்  பாசுகரப்பிரப தேவனாகி,  பின்  சீதரையாக  மண்ணுலகில்  பிறந்து,  செய்தவத்தால் காபிஷ்ட  கல்ப  தேவனாகி,  மறுபடியும்,  இரத்தினமாலை   அரசியாய் பிறந்து,  நல்லறத்தால்,  அச்சுத கல்ப  தேவனாகி,  மறுபடியும்  வீதபயன் (பலதேவன்)  என்னும்  அரசனாய்  பிறந்து, மும்மணி ஏற்றதாலே,  லாந்தவ  கல்ப  ஆதித்யாப  தேவனாகி,  பின்  மேரு என்னும் அரசகுமாரனாய் பிறந்து,  பகவான்  விமலநாதரின்  கணதரராய்  பதவி  அடைந்து,  இனி பிறப்பிலா   திரிலேக பூஜ்யனான  நிலையான  பதவி அடைந்தார்.


முன்  ஒரு  பிறப்பில்,  மதுரையின்  மகள்  வாருணியாய் பிறந்து, மறுபிறப்பில்,  ராமதத்தை  மகன்  பூர்ணச்சந்திரனாய்  பிறந்து , புண்ணியத்தால்  வைடூரியப்பிரப  தேவனாகி,,  சீதரை வயிற்றில் யசோதரையாய்  பிறந்து,  பின்  தேவனாகி,  இரத்தினமாலை  மகன் இரத்தினாயுதனாய்  பிறந்து,  தவநெறி  கொண்டு,  அச்சுத கல்ப தேவனாகி, மண்ணுலகில்  விபீடணனாய்  (  வாசுதேவன் ) பிறந்து, மோகனீய  கர்மத்தாலே  இரண்டாம்  நரகம்  சென்று, அருகனறம் ஏற்றதாலே,  சீதமா  அரசனாகி,  நல்லற  தருமத்தாலே  பிரம்ம  கல்ப தேவனாகி,  இப்பூவுலகில்  மறுபடியும்  ஜயந்தன்  என்னும் அரசகுமாரனாகி, பின்  பவணலோக  தரணேந்திரனாகி,  பின்  மந்திரன் என்னும் அரசகுமாரனாய்  பிறந்து,  பகவான்  விமலநாதரின்,  கணதரராய் பதவி அடைந்து,  பின்,  இனி  பிறப்பிலா  திரிலோக்கிய  பூஜ்யனான நிலையான பதவி  அடைந்தார்.

ஆக்குவது  ஏதெனில்  அறத்தை  ஆக்குக
போக்குவது  ஏதெனில்  வெகுளி  போக்குக
நோக்குவது  ஏதெனில்  ஞானம்  நோக்குக
 காக்குவது  ஏதெனில்  விரதம்  காக்கவே. 

(மேரு : 1406.)

          சமவசரணம்  சருக்கம்  நிறைவு  பெற்றது.
                   
பின் குறிப்பு  :

          ராமதத்தை  கணவன்  சிம்மசேனன்,  தீவினையால்  அசணிகோடம்  யானையாய்  பிறந்து,  அருகன்  அறம்  கேட்டதாலே  ஸ்ரீ தர  தேவனாய்  பிறந்து,  பின்  மண்ணுலகில்  கிரணவேகனாய்  பிறந்து  நல்வினையால்,  மறுபடி  தேவனாகி,  காலம்  முடிந்து,  புவியில்  வஜ்ராயுதன்  மன்னனாய்  பிறந்து,  நல்லறத்தால்  தேவனாகி,  சஞ்சயந்தனாய்  பிறந்து,  மாதவத்தால்  சித்தப்  பதவி  அடைந்தார். 

          வணிகன்  பத்திரமித்திரன்,  மறுபிற்ப்பில்  சிம்மச்சந்திரன்  என்ற  அரசகுமாரனாய்  பிறந்து,  பிரீத்திங்கர  தேவனாகி,  பின்  சக்கராயுதன்  என்னும்  அரசனாகி,  நல்லறத்தால்  தேவனானான். 

              சிம்மசேனன்  மந்திரி  சத்தியகோடன்  (  ஸ்ரீ பூதி ), மிகு  பொருளாசையினால்  கருவூலத்தில்,  அகந்தனன்  என்னும்  பாம்பாய்  பிறந்து,  வைரபாவத்தால்  கோழிப்பாம்பாய்  பிறந்து,  மறுபடியும்,  வெஞ்சினம்  தீராததால்,  மலைப்பாம்பாய்  பிறப்பெடுத்து,  மறுபடியும்,  மனிதகதியில்  வேடனாய்  பிறந்து,  கொலை  வதையால்  ஏழாம்  நரகம்  அடைந்து,  பின்  செய்வினை கர்மத்தால்,  பாம்பாகி,  மூன்றாம்  நரகம்  சென்று,  மறுபடியும்  மிருகசிங்கன்  என்னும்  வேடனாகி,  வித்யாதரன்  வித்துதத்தன்  பிற்பெடுத்து,  பின்  நரகம்  சென்றான்.


No comments:

Post a Comment