Pazhamozhi Naanuru




பழமொழி நானூறு.


Jain united news centre என்ற whatsapp குழுவில் திரு. தங்கராஜ் அவர்களால் தினமும் (இரு பழமொழியாக)  அஞ்சல் செய்த தொடரின் தொகுப்பு.


(இன்னும் முடிவடையவில்லை)



பெயர்க் காரணம்


பழமொழி என்றால் பழைமையான மொழி என்றும், முதுமொழி என்றும், பட்டறிவு மொழி என்றும் பொருள்கள் உண்டு.

பழங்காலத்தில் இருந்து பேசப்படுவதால் பழமொழி என்றழைக்கப்படும், மூத்த மொழி, முதுமை வாய்ந்த மொழி, மூத்தோர் சொன்ன மொழி என்ற காரணங்களால் முதுமொழி என்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மொழியும் அவரவர் வாழ்க்கையில் பட்டு அறிந்து சொன்ன மொழிகளாக இருப்பதால் பட்டறிவு மொழி என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு அனுபவ மொழிகள் பழமொழி, முதுமொழி மற்றும் பட்டறிவு மொழி என்று பொருள் கொண்டு அழைக்கப்பட்டும் வருகிறது.

வாழ்க்கைக்கு நன்மை பயக்கினற பழமொழி நானூறைத் தேர்ந்தெடுத்து, ஒரு பழமொழியை வைத்து, ஒரு வெண்பாவை பாடி,
நானூறு பழமொழிகளைக் கொண்டு நானூறு வெண்பாக்களால் ஆக்கப் படடுள்ளதால் பழமொழி நானூறு என்று இந்நூல் பெயர் பெற்றுள்ளது.

நூன்முகம் - 1

சங்கம் மருவிய காலத் தமிழ்நூல் தொகுப்பான பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று தான் இந்தப் பழமொழி நானூறு.

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும்
கடவுள் வணக்கத்தையும் சேர்த்து மொத்தம் நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதி நூலாகும்.

இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுகிறது. இதில் கூறப்பட்டுள்ள பழமொழிகள் இலக்கியம் சார்ந்தவைகளாக உள்ளன.

குறிப்பாக சங்க காலத்தைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இந்நூலின் காலம்
கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

நானூறு என்னும் தொகையமைப்பு புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு நூல்களில் நிலவுகிறது. நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத் தழுவியதாகும்.

செய்யுட்கள் முத்தகச் செய்யுட்களாதலால், ஒவ்வொரு செய்யுட் பொருளும் தனியே நின்று அந்தச் செய்யுளிலே முடிந்து வருகிறது. எனவே ஒவ்வொரு செய்யுளாக மனப்பாடம் செய்து கருத்தை உளமேற்றி ஒவ்வொருவரும் உயர்வதற்கு இந்நூல் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

முன்றுரை அரையனார் பலப்பல காலங்களில் தம்முடைய மாணவர்கட்கு அறிவுறுத்தக் கூறிய செய்யுட்களின் தொகுப்பாக அமைந்ததே இந்நூல் என்றும் கருதப்படுகிறது.

இந்நூலுக்குரிய பால் இயல் அதிகாரப் பகுப்புகள் போன்றவற்றை முன்னோர் செய்துள்ளதாகத் தெரியவில்லை. இந்நூலை அச்சிட்ட பிற்கால தமிழறிஞர்களே இந்தப் பகுப்பு முறைகளைச் செய்துள்ளனர் எனத் தெரிகிறது.

பதினெண்கீழ் கணக்கு நூல்களுள் மிகவும் செல்வாக்குப் பெற்றதாக விளங்குவது திருக்குறள், அடுத்தபடியாக நாலடியார் பலராலும் விரும்பி கற்கப் படுகிறது. நாலடியாரைப் போலவே பழமொழி நானூறும் விரும்பிக் கற்கப்பட வேண்டும் என்பதே எனது அவா. அந்த விருப்பமே இந்நூலை பதிவிட என்னைத் தூண்டியது எனலாம்.

இந்நூல் முக்கியமாக நாலடியார், திருக்குறள் முதலிய கீழ்க்கணக்கு நூல்களில் வந்துள்ள பல கருத்துக்களை சிற்சில இடங்களில் அடியொற்றிச் செல்கிறது.

தூங்கு எயில் எறிந்த சோழன், கரிகாலன், பாரி, மற்றும் பேகன் முதலியோரைப் பற்றிய முற்கால நிகழ்ச்சிகளை எடுத்தாளுதலோடு பொற்கைப் பாண்டியன், மனுநீதிச்சோழன் பற்றிய பிற்கால வரலாறுகளையும்
இந்நூலில் காண முடிகிறது.

ஆசிரியரைப் பற்றி

முன்றுறை அரையனார் என்ற பெயர் இயற்பெயர் என்று எண்ணுவதிற்கில்லை. முன்றுறை என்னும் இடத்தில் அரசு புரிந்த அரசர் என்பதே இதன் பொருளாகும். அரையனார் என்னும் சொல்லால் இவரை அரச குடியினர் என்று உறுதியாக கருதமுடிகிறது.

கொற்கை முன்றுறை, கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, மற்றும் வைகைக் கரையின் திருமருத முன்றுறை என்று பல முன்றுறைகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுள் ஒன்றைச் சேர்ந்த பகுதியில் பிறந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நூலின் அமைப்பிலே பயின்றுவரும் சொற்களையும், கருத்துக்களையும், பழமொழிகளையும் கருத்திற் கொண்டால், இவரைத் தென்பாண்டி நாட்டின் சீர்மிகு பழம்புலவருள் ஒருவராகவும் கருத முடிகிறது. இதில் முத்தாய்ப்பாக
சமண சமயக் கோட்பாடுகளில் அழுத்தமான சமணர்என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.

----------------------- 

தற்சிறப்பு பாயிரம் மற்றும்  அருகன் வாழ்த்து...


 தற்சிறப்புப் பாயிரம்
---------------------------------------------

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும்--கொண்டினிதா
முன்றுறை மன்னவன், நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.

பொருள்: முன்றுறை மன்னர், அசோக மரத்தின் நிழலில் வீற்றிருக்கும் அருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி, தொன்று தொட்டு வழங்கி வரும் பழமொழிகள் நானூற்றையும் தழுவிக் கொண்டு, இனிய அறம் பொருள் இன்பம் வீடு  அமைந்த வெண்பாக்களான நான்கு அடிகளையும் சுவை தோன்ற இந்நூலை இயற்றினார்.

----------------------------------------

கடவுள் வணக்கம்

அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து,
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே, போலப்
பெரியதன் ஆவி பெரிது

பொருள்: அகன்ற கடலால் சூழப்பட்ட அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில், காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் அரிதாகக் கெடுப்பதால், குற்றம் இல்லாது முழுவதும் உணர்ந்த அருகரின் திருவடிகளையே உரிமைப் பொருளைப் போல் எண்ணி உணர்ந்தவர்கள் உயர்வே, பெரிய உடம்பையுடைய ஆவியைப் போல் பெரியதாகும்.
அருகரின் அடிகளை வணங்கியவரின் உயர்வே மிகச் சிறந்தது என்பது பொருள்.


----------------------------------------------
பழமொழி நானூறு – 1

நூல் -  கல்வி

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம் போக்கிக் கூலிகொண்டார்

ஆயத்துறையில் அதிக தூரம் கடக்கும்படி விட்டுவிட்டு வணிக வரிப் பொருளை பெறுபவர் இல்லை.
ஓடம் தன்னை ஓட்டி கரை நிறுத்திய பின் கூலி பெறுபவர் இல்லை.
இதுபோன்று, இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்று சான்றோன் ஆவானென்று சொல்லவும் முடியுமோ..?

கருத்து- 

கற்பதற்குரிய கல்வியை இளமையில் கல்வி கற்க வேண்டும்.

இதிலுள்ள பழமொழி

மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.

----------------------------------------------

பழமொழி நானூறு - 2

நூல் -  கல்வி

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றி
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்று அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு

கற்றவர் முன்பு ஒன்றைச் சொல்லும போது குற்றம் உண்டாவதால், கற்கும்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி, கல்லாது விட்ட நாட்களுக்கு வருந்தி, மனம் பொருந்தி ஒருமைப்பட, மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தி, அறியாத ஒன்றை அறிவானாயின், பின் நூல்கள் கற்கும் போது கல்லாதவனாகவே எண்ணி கற்பானாக.

கருத்து- கற்கும் போது தன்னை அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவரும் கற்க வேண்டும்.

இதிலுள்ள பழமொழி

கற்றொறுந்தான் கல்லாதவாறு.

----------------------------------------------
பழமொழி நானூறு - 3

கல்வி

விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம் இன்று என்றனைத்தும் தூக்கி - விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

மலைநாட்டையுடையவனே, விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை, விலைகொடுத்து வாங்குவது, விளக்கினால் பொருள் வேறுபாடில்லை, என்று விளக்கினது இயல்பை முற்றும் ஆராய்ந்தே ஆகும்.
விளக்கு நன்றாக எரியாது ஒளி மழுங்கின் பொருள் தந்து நெய் முதலியவற்றைப் பெற்றதால் என்ன பயன்? எனவே பொருளை விலையாகத் தந்து இருளைக் கொள்ளமாட்டார்.

கருத்து- 

ஞான நூல்களைக் கற்க வேண்டும்.

இதிலுள்ள பழமொழி

பொருளைக் கொடுத்து இருளைக் கொள்ளார்.

----------------------------------------------
பழமொழி நானூறு – 4

 கல்வி

ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.

  கற்கவேண்டிய நூல்களை நன்கு கற்றவர்களே அறிவுடையார் ஆவர். அத்தகையவரின் புகழ் நான்கு திசைகளிலும் பரவாத நாடுகள் இல்லை. அந்த நாடுகள் அயல் நாடுகள் ஆகா, அறிவுடையவரின் நாடுகளே. அவர்கள் செல்லும் வழியில் உண்பதற்க்கு உணவு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

கருத்து:

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம்சிறப்பு.

இதிலுள்ள பழமொழி

ஆற்றுணா வேண்டுவது இல்.

----------------------------------------------

பழமொழி நானூறு - 5

நூல் - கல்வி

உணற்கு இனிய இன்னீர் பிறிது உழிஇல் என்னும்
கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று.

கிணற்றில் வாழும் தவளை உண்பதற்க்கு உரிய உகந்த நீர் வேறு இடங்களில் எங்கும் இல்லை என எண்ணிக்கொள்ளும்.

அதுபோல ஒருவர் நாள் முழுவதும் இனிதாய்த் தாம் கற்பதே சிறந்தது என்று எண்ணாமல் கற்றுணர்நத சான்றோரிடம் போய் விரும்பி கேட்டலே நல்லதாகும்.

கருத்து:

கற்ற வலலவரிடம் சென்று கேட்டலே நன்று.

இதிலுள்ள பழமொழி

கற்றலின் கேட்டலே நன்று.

----------------------------------------------

பழமொழி நானூறு – 6

நூல் - கல்வி

 உரைமுடிவு காணான் இளமைபோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

நம்மால் உரைக்கப்படும் வழக்கின் முடிவை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன், இவன் இளம் வயதினன் என்று இகழ்ந்த நரையுடைய முதிய மக்கள் மனம் மகிழும்படி,

கரிகால் பெருவளத்தான் என்னும் சோழ மன்னன் வயது முதிர்ந்தவன் போல் நரை முடியை தலையில் கவிழ்த்துக்கொண்டு, அவ்வயது முதிர்ந்தவர் உரைத்த சொற்களையே கொண்டு, நல்ல நீதியை கூறினான். ஆதலால் தத்தம் குலத்திற்குரிய அறிவு கல்லாமலே இனிதாய் எவருக்கும் அமையும்.

கருத்து:

குலவித்தை கற்காமலேயே கைவரப் பெறும்.

இதிலுள்ள பழமொழி:

குல விச்சை கல்லாமல் பாகம் படும். (விச்சை - வித்தை).

----------------------------------------------
பழமொழி நானூறு - 7

நூல் - கல்வி - 7

புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின கால்.

நன்மை மிகுந்த அழகிய நீர் வளம் நிரம்பிய ஊரை உடையவனே.. பாம்பினுடைய கால்களை அவற்றின் இனமாகிய மற்ற பாம்புகளே அறியும்.
அதுபோல அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் அறிந்து கொள்ளும் திறம், அவர்களைப் போன்ற அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும், எளிய அறிவு கொண்ட பொது மக்களுக்கு அறிவுடையவரின் புலமையை அறிந்து கொள்ளல் இயலாது.

கருத்து:

அறிவுடையவரை அறிவுடையாரே அறிவர்.

இதிலுள்ள பழமொழி:

பாம்பின் கால் பாம்பறியும்.

----------------------------------------------

பழமொழி நானூறு - 8

நூல் - கல்வி

 நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.

கண்களுக்கு இனிய மயில்கள் ஆடும் சிறந்த மலைநாட்டை உடையவனே.. எப்போதும் இரும்பைக் கூர்மையான இரும்பைக் கொண்டே அறுத்துப் பிளப்பர். அதுபோல கற்று அமைவு கொண்ட நல்லவர்களின் அறிவின் நன்மையை அறிய வேண்டுமானால் அவரை விட கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிவுடையவரே அறிவர். மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.

கருத்து:

நல்லவர்களின் அறிவின் நன்மையை நன்கு கற்றவர்களே அறிந்து கொள்வர்.

இதிலுள்ள பழமொழி:

அயிலாலே போழ்ப அயில்.

----------------------------------------------

பழமொழி நானூறு - 9

நூல் - கல்வி


 கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.


பாறைக் கற்களினின்றும் இழியும் அருவிகளை மலையாக உடைய மலை நாட்டை உடையவனே... நிரம்பிய நீர் குடம்  தளும்பவதில்லை..
அதுபோல நூல்களை கற்று அவற்றின் உண்மையைத் தம் வாழ்வில் அமைத்துக் கொண்டவையே அடக்கத்திற்குரிய செயல்கள் ஆகும். கற்றதுடன் அமைந்து நூல் உண்மையையும் அனுபவ உண்மையையும் அறியாதவர் மறந்து தம்மைத் புகழ்ந்து பேசிக் கொள்வர்.

கருத்து :

கற்றவர் தம்மைப் புகழ்ந்து பேசிக்கோள்ள மாட்டார்.

இதிலுள்ள பழமொழி:

நிறைகுடம் நீர் தளும்பல் இல்

----------------------------------------------

பழமொழி நானூறு - 10

நூல் - கல்வி

 விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து, நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாதவர்கள், மாறுபட்டு எழுந்தோர்களது நூலின் கொள்கைகளைத் தம் வலிமையால் வென்று, தலைமை பெற்று வாழ்கின்ற அறிஞர்கள் இகழ்தற்குரிய செயல்களை செய்தல், சந்திரனும் விளங்கும் களங்கம் போல் விளங்கித் தோன்றும்..

கருத்து:

அறிஞர் சிறு பிழை செய்தாலும் அது எல்லோரும் அறிய விளங்கித் தோன்றும்.

இதிலுள்ள பழமொழி

மதிப்புறத்துப் பட்ட மறு.

----------------------------------------------
பழமொழி நானூறு - 11

நூல் - கல்வி

 கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல் கீழ்ப் பெறின் கனி.

அறிவு நூல்களை தாமே கற்றாயினும், கற்றவர்களிடம் கேட்டாயினும், கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையை தெளிவாக அறியமாட்டார்கள். கல்வி கேள்விகளில் அறிவு இல்லாதவன் உண்மைப் பொருள்களை அறிதல் எத்தகையதெனில், நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போன்றதாகும். அதுவன்றிக் கல்வி கேள்வி என்பனவற்றுள் எதுவும் காரணம் அன்று.

கருத்து:

கல்வி கேள்வியற்றவர் உண்மைப் பொருளை அறியார்.

இதிலுள்ள பழமொழி:

நாவல் கீழ்ப் பெற்ற கனி.

----------------------------------------------

பழமொழி நானூறு - 12

நூல் - கல்வி

 கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்
வினாமுந் துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை.

நல்ல குணம் கொண்ட நங்கையே.. அறிவு நூல்களைக் கல்லாதவன் அறிந்த அறிவு நுட்பம்,
அவன் கற்றார் முன் சொல்லும்போது அப்பொருள் வன்மை இழக்கும். அதனால் வினா வானது முற்பட்டு தோன்றாத விடையில்லை. கனவானது முற்பட்டு நடக்காத செயலும் இல்லை.

கருத்து:

வினா தோன்றினால் விடை பெறப்படும், அதுபோல அறிவு நூல்களைக் கற்றால்தான் அறிவு நுண்மை உண்டாகும். கனவு தோன்றாமல் செயல் நிகழ்வதில்லை, அதுபோல அறிவு நூல்களைக் கற்றால்தான் அறிவு நுட்பம் உண்டாகும்.

இதிலுள்ள பழமொழிகள்:

1. வினா முந்துறாத விடையில்லை.

2. கனா முந்துறாத விடையில்லை.

----------------------------------------------

பழமொழி நானூறு - 13

நூல் - கல்வி

 கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு) அடுக்கிற் பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.

கல்லாதவன் தான் நுட்பமாக அறிந்ததாக எண்ணும் நுட்பப் பொருளை மற்றவர் அறிகின்ற வகையில் எடுத்துச் சொல்லுதல் இயலாது, எனவே கல்வியும் சொல்லாற்றலும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் உடையவன் என்று தம்மைத் தாமே மதித்துக் கொள்வது ஏன்?...
தம் சொல்லால் தவத்துக்குப் இடையூறாக இருப்பவரை பணியச் செய்து, பணியாமல் போனால் சினந்து கொள்ளும் முனிவர்களுக்கும், தாம் எண்ணியதை எடுத்துச் சொல்ல முடியாத போது, தவத்துக்குரிய ஆற்றல்கள் இல்லை என்பதாகும்.

கருத்து:

கற்றவர்க்குச் சொல்வன்மை இன்றியமையாதது.

இதிலுள்ள பழமொழி

சொல்லாக்கால் சொல்வது இல்.

----------------------------------------------

பழமொழி நானூறு - 14

நூல் - கல்வி

 கல்வியான் ஆய கழிநுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லாம்
இவர்வரை நாட! தமரையில் லார்க்கு
நகரமும் காடுபோன் றாங்கு.

எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலை நாட்டை உடையவனே... முன்பு சுற்றத்தவரை உடையவராய் இருந்து, பின்பு அவரை பெற்றிராதவர்க்கு நாடும் காட்டைப் போன்ற துன்பத்தை அளிக்கும்,
அதுபோல கல்வியால் உண்டான நுண்பொருள்கள், நூல்களைக் கல்லாதவர் முன்பு கூறிய நல்லவையும் பொருளின்றி தீமையில் முடியும்.

கருத்து:

கற்றவர் கல்லாதவர் அவையில் நுண்பொருள்களைக் கூறுதலை தவிர்த்தல் நல்லது.

இதிலுள்ள பழமொழி

தமரை இல்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு.

---------------------------------------------- 

பழமொழி நானூறு - 15

நூல் - கல்வி

 கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாதது இல்லை ஒருவற்கு - நல்லாய்
இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு.

நற்குணம் கொண்ட நங்கையே.. தத்தம் நிலைக்கு கூறப்பட்ட ஒழுக்கத்திலிருந்து தவறி நடப்பதைவிட மிகுந்த தாழ்வு ஒருவருக்கில்லை.
அங்ஙனமே தத்தமக்குக் கூறப்பட்ட ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுதலை விட உயர்வு வேறு இல்லை. எனவே  நூல்களைக் கல்லாதவரிடம் விரிவாகக் கூறும் கட்டுரையை விடத் தீமை தரும் செயல் வேறில்லை.

கருத்து:

கற்றவரின் கட்டுரை கல்லாதவரிடம் சிறப்படையாது.

இதிலுள்ள பழமொழிகள்:

1. இழுக்கத்தின் மிக்க இழிவில்லை.

2. ஒழுக்கத்தின் மிக்க உயர்வில்லை.

---------------------------------------------- 

பழமொழி நானூறு - 16

நூல் - கல்வி

கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதவர்
சொல்தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்றெனின்
தானும் நடவான் முடவன் பிடிப்(பு) ஊணி
யானையோடு ஆடல் உறவு.

கற்க வேண்டியவற்றை கல்லாதவர், நூல்களைக் கற்று செயலிற் செய்பவரை சினமூட்டி, சொற்களைக் கொழித்துக் கொண்டு மனவெழிச்சியுடன் எழுதல்
எத்தகைய இயல்புடையது என்றால் தானே நடக்க இயலாத முடவன், ஊன்றிகோலை ஊன்றி யானையோடு விளையாடுவதைப் போன்றதாகும். யானையுடன் விளையாடும் முடவன் உயிரிழப்பான் அதுபோல கல்லார் அவமானம் அடைவர் என்பது பொருள்.

கருத்து:

கல்லாதவன் கற்றவருடன் வாதம் செய்தல் தவறு.

இதிலுள்ள பழமொழி:

முடவன் பிடிப்பு ஊணி யானையோடு ஆடல் உறவு.

----------------------------------------------

பழமொழி நானூறு - 17

அவையறிதல்  

கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால்
வண்டு அழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர் அவை.

காம விருப்பம் காரணமாக் கண்களைப் பெண் வண்டுகள் என எண்ணி ஆண் வண்டுகள் பின் செல்கின்ற வாள் போன்ற விழிகளை உடையவளே..
அறிஞர், தாம் கூறும் அறிவு நூற் பொருளைக் கேட்கத்தக்கவரைத் தேடி, தம்மால் கூறப்படும் பொருளிடம் அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள். அவையில் தோல்வி அடைவதற்கு உரியவற்றை கொண்டு போகமாட்டார்.

கருத்து:

அவையின் இயல்பு அறிந்து கூறல் வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

தோற்பன கொண்டு புகாஅர் அவை.

----------------------------------------------

பழமொழி நானூறு - 18

அவையறிதல்

ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் இன்னா(து)
இருவர் உடன்ஆடல் நாய்.

பெரிய மலை நாட்டை உடையவனே.. ஒரே சமயத்தில் இரண்டு பேர் ஒரு நாயைக் கொண்டு வேட்டையாடுதல் சிறிது காலமே என்றாலும் இனியது ஆகாது.
அதுபோல மாறுபாடு கொண்ட இருவருள் ஒருவர் ' இப்பொருள் இத்தன்மையானது' என்று கூற, அதே நேரத்தில் மற்றொருவரும் 'இத்தன்மையானது' என்று சொன்னால் அப்பொருள்களைக் கொண்டு மாறுபடுவோர் இருவரும் ஒரே சமயத்தில் வாதம் செய்தால் தகுதியுடையது ஆகுமா..? ஆகாது,!

கருத்து:

வாதிடுவோர் ஒரே சமயத்தில் வாதிடாமல் ஒருவர் பின் ஒருவராய் வாதிடல் வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்.

---------------------------------------------- 

பழமொழி நானூறு - 19

அவையறிதல்

துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு.

கேள்வி கேட்பவனும் பதில் அளிப்பவனுவாகிய இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய வார்த்தையில், பின்னால் விடை கூற வேண்டியவன், கேள்வி அறியாமல் முற்பட்டு ஒன்றைக் கூறினால், அது பதில் கூறுதல் அறியாதவனாய் முடியும்.
கேள்விக்கு முன்னர் பதில் சொல்லுதல் என்பது முழந்தாள் புண்பட்டவனை முழந்தாளில் கட்டுப் போட்டு மருத்துவம் செய்யாமல், மூக்கில் நூல் இழையால் கட்டுதல் போன்றதாகும்.

கருத்து:

வினாவிற்கு முன் விடை அளிக்காமல், வினா அறிந்து விடை அளிக்க வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு.

----------------------------------------------

பழமொழி நானூறு - 20

அவையறிதல்

 கல்லாதும் கேளாதும் கற்றார் அவைநடுவண்
சொல்ஆடு வாரையும் அஞ்சற்பாற்று - எல்அருவி
பாய்வரை நாட! பரிசுஅழிந் தாரோடு
தேவரும் ஆற்றல் இலர்.

விளங்கும் நீர் அருவிகள் பாய்கின்ற மலை நாட்டை உடையவனே.. நல்ல பண்பு இல்லாதவருடன் தேவர்களும் ஒரு சொல் கூறுவதற்கு ஆற்றலற்றவர் ஆவர். எனவே நூல்களைக் கல்லாமலும், கற்றவரிடம் கேளாமலும் அறிஞர்கள் நிரம்பியுள்ள அவையின் நடுவே ஒன்றைப் சொல்லப் புகும் செயல் உடையவரையும், "இவருடன் வாதாடித் தோற்றுப் போவோம்" என நினைத்து அஞ்சச் செய்யும் தகுதியுடையது.

கருத்து:

கற்றவர் கல்லாதவருடன் வாதிடல் தவறு.

இதிலுள்ள பழமொழி:

பரிசு அழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இலர்.

----------------------------------------------

பழமொழி நானூறு - 21

அவையறிதல்

அகலம் உடைய அறி(வு)உடையார் நாப்பண்
புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்
வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ
பாண்சேரிப் பல்கிளக்கும் ஆறு.

கல்வி கேள்விகளில் சிறந்த அறிவுடையவர் நடுவில், நுழைவதற்குத் தகுதியில்லாதவர் நுழைந்து, தம் சொற்களை யாரும் விரும்பாமல் இருக்கும் நிலையிலும், தாமே வீணான பயனற்ற சொற்களைக் கூறுதல், பாணர்கள் தெருவில் ஒருவன் வாய் திறந்து பாடுவதைப் போன்றதாகும்.

கருத்து:

கல்லாதவர் கற்றவர் அவையில் பேசுதல் கூடாது.

இதிலுள்ள பழமொழி:

பாண்சேரிப் பல்கிளக்கும் ஆறு.

----------------------------------------------

பழமொழி நானூறு - 22

அவையறிதல் 

 மானமும் நாணும் அறியார் மதிமயங்கி
ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து
ஞானம் வினாஅய் உரைத்தல், நகையாகும்
யானைப்பல் காண்பான் புகல்.

கல்லாதவர் தம் மானமும் நாணமும் அழிவதை அறியாதவராய், அறிவு மயங்கி பல நூல்களைக் கற்றவரின் நடுவில் புகுந்து, அவர்களுக்கு சமமாகத் தாமும் இருந்து, நூல்களை வினாவி உரைக்கப் புகுதல், யானையைப் பல் பிடித்து பார்க்கப் புகுதல் போல் நகைப்புக்குரிய செயலாகும்.

கருத்து:

கல்லார் கற்றவரின் அறிவை அறிய முயலுதல் சிரிப்பு தரும் செயலாகும்.

இதிலுள்ள பழமொழி:

யானைப்பல் காண்பான் புகல்.


 ---------------------------------

பழமொழி நானூறு - 23

அவையறிதல் 

 அல்லவையுள் தோன்றி அலஅலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் - கல்வி
அளவிறந்து மிக்கார் அறி(வு) எள்ளிக் கூறல்
மிள(கு) உளு உண்பான் புகல்.

கல்வி அறிவற்றவரின் அவைக்குள் புகுந்து நல்லவை அல்லாதவற்றைச் சொல்லி வாழ்பவர்கள், கற்றவர் அவைக்குள் புகுந்து பிறர் நா அடங்குமாறு, கல்வியால் அளவிறந்து மிக்கவராக விளங்கும் ஒருவரின் அறிவை இகழ்ந்து கூறுதல், சிறந்த உணவுகள் இருக்க மிளகின் உளுவை (புழு) உண்ணப் போவதைப் போன்றதாகும். 

கருத்து:

கல்லாதவர் கற்றவரை இகழ்ந்து பேசுதல் தீயது. 

இதிலுள்ள பழமொழி:

மிளகு உளு உண்பான் புகல். 

---------------------------------------------- 

பழமொழி நானூறு - 24

அவையறிதல் 

நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து எய்து விடல்.

கல்லாதவர், கல்வி அறிவுடையோர் அவையைக் காண்பாராயின் தமது நாவை மடக்கி, நன்மை தீமை இன்னதென்று அறியாத அற்பர்கள் வாழும் அவையில் தம்மைத் தாமே புகழ்ந்து உரைத்தல், அஞ்சாமையைக் கண்டு பின்வாங்குகிறவன், வீட்டின் உள்ளேயே வில்லில் அம்பை வைத்து கருங் கலங்களிடையே எய்துவதைப் போன்றதாகும். 

கருத்து:

கல்லார் தம்மைப் போன்றவர்கள் கூடிய அவையில் தம்மைத் தாமே புகழ்வர். 

இதிலுள்ள பழமொழி:


இல்லுள்வில் லேற்றி இடைக்கலத்து எய்து விடல்

---------------------------------------------- 


பழமொழி நானூறு - 25

அவையறிதல்

நடலை இலராகி நன்(று) உணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.

மனதில் கவலையில்லாதவராய் நன்மை தீமை அறியாதவராகிய, மனவலிமையுள்ள கயவர்கள் நெருங்கியுள்ள அவையில் மற்றவரை வருத்தி வாழும் கயவன் ஒருவனுக்கு, உயிர்க்குப் பயன் தரக்கூடியவற்றைக் கூறுதல் கடலில் மாங்கனியை வடித்தது போன்றாதாகும்.

கருத்து:

கயவனுக்கு உறுதியை கூறக்கூடாது.

இதிலுள்ள பழமொழி:

கடலுள் மாவடித் தற்று
----------------------------------------------

பழமொழி நானூறு - 26

அறிவுடைமை

 அறிவினால் மாட்சியொன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.

சாணையால் தீட்டப்படும மணியும், பொன்னும் சந்தனமும், பூமாலை இவைபோன்ற அணியெல்லாம் அழகுறச்செய்வதில் ஆடையின் பின்னே வைத்து மதிக்கத்தக்கவையாகும்.
ஆதலால் அறிவால் ஆன பெருமை சிறிதும் இல்லாத ஒருவன் செல்வத்தைப் பெற்று, மாட்சி உடையவனாதல் அவனுக்கு என்ன பெருமைக் கொடுக்கும்..?

கருத்து:

செல்வம் உடையவரை விட அறிவுடையார் சிறந்தவர் ஆவர்.

இதிலுள்ள பழமொழி:

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன, அணியெல்லாம் ஆடையின் பின்
----------------------------------------------

பழமொழி நானூறு - 27

அறிவுடைமை

 ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாஇரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்
பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்
காய்கலா ஆகும் நிலா.

உலகத்தில் பரவியுள்ள இருளை நீக்கும் சந்திரனைப் போன்று, பல நட்சத்திரங்கள் ஒன்று கூடினும் நிலவைப் போன்று ஒளி வீசமாட்டா.
அதுபோல அறிவற்றவர் ஆயிரம் பேர் திரண்டிருப்பினும், மிகப் பெரிய இவ்வுலகில் அறிவினால் சிறந்து விளங்கும் ஒருவனைப் போல் விளங்க மாட்டார்.

கருத்து:

அறிவற்றவர் பலர் இருப்பினும், அறிவுடைய ஒருவருக்கு நிகராகார்.

இதிலுள்ள பழமொழி:

மதியம் போல் பல்மீனும் காய்கலா ஆகும் நிலா
----------------------------------------------

பழமொழி நானூறு - 28

அறிவுடைமை

நற்குஅறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே
சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்புஅறைமேல் தாழும் இலங்குஅருவி நன்னாட!
கற்றறிவு போகா கடை.

மலையிலிருந்து பாறை மீது விழும் அருவிகள் விளங்கும் நாட்டை உடையவனே.. !! சொல்லால் குறிக்கப்படும் பொருளை, உடுக்கையைக் கொண்டு அதில் பண் ஊண்டாக்குவதைப் போல, இயற்கையறிவு இல்லாதவரை கல்வியறிவை கற்றுக் கொடுப்பதனால் சிறந்தவனாக்க இயலாது, ஆதலால் நூல்களைக் கற்பதால் அறிவு முழுவதும் கைவரப் பெறாது.

கருத்து:

கல்வியறிவுடன் இயற்கையறிவும் சேர்ந்து உடையவரே சிறந்து விளங்குவர்.

இதிலுள்ள பழமொழி:

கற்றறிவு கடை போகா
----------------------------------------------

பழமொழி நானூறு - 29

அறிவுடைமை

ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மான்அமர் கண்ணாய்! மறம்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று.

மான் போன்ற கண்களை உடையவளே..!! உள்ளத் திண்மை கொண்ட அறிஞர்கள், தம்மைக் கல்வியறிவால் ஒத்த  அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளுதல், வீரம் மிக்க மாமன்னர்கள் யானையைக் கொண்டு மற்ற யானைகளைப் பிடிக்கும் செயலுக்கு ஒப்பாகும்.

கருத்து:

கற்ற அறிஞர் கற்ற மற்ற அறிஞர்களோடு சேருதல் பலம் தரும்.

இதிலுள்ள பழமொழி:

யானையால் யானை யாத்தற்று
----------------------------------------------
பழமொழி நானூறு - 30

அறிவுடைமை

தெரிவுடையாரோடு தெரிந்து உணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பு அறிவார் மன்ற
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப
அரிவாரைக் காட்டார் நரி

பரந்து ஒலிக்கும் அலைகளையுடைய கடற்கரையை உடையவனே..!! நெல்லை அரிபவர்களுக்கு அந்த பணியானது தடைபடும் படியாக நரியைக் காண்பிக்க மாட்டார், அதைப் போன்று ஆராய்ந்து உண்மை கண்டு உணர்ந்தவர்,, நுண்ணறிவு இல்லாதவரிடம் செல்ல மாட்டார். அவர்களின் பண்பை நன்கு அறிவார் ஆதலால் அவ்வாறு செய்ய மாட்டார்.

கருத்து:
அறிவுடையவர்கள் தம் போன்றவரை, அறிவில்லாதவரிடம் அழைத்துச் செல்ல மாட்டார்.

இதிலுள்ள பழமொழி:
அரிவாரைக் காட்டார் நரி.
----------------------------------------------
பழமொழி நானூறு - 31

அறிவுடைமை

பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்
சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்  அறியும்
பெரி(து) ஆள் பவனே பெரிது.

வில்லைப் போன்று புருவத்தின் கீழ் செவ்வரி படர்ந்திருக்கின்ற அகன்ற கண்களை உடையவளே.!!
ஒருவனிடத்து அமைந்துள்ள நன்மையையும் தீமையையும் அருகில் இருந்தவர் சொற்களில் அமைத்து அலங்கரித்து உணர்த்துதல் அவசியமோ..? அவனே நன்மை, தீமைகளை அறிந்தவன் ஆவான்.

கருத்து:

கற்றறிந்தவன் எல்லா வற்றையும் தானே பகுத்தறிந்து நடப்பான் என்பதாகும்.

இதிலுள்ள பழமொழி:

பெரிது ஆள்பவனே பெரிது அறியும்
----------------------------------------------

பழமொழி நானூறு – 32

அறிவுடைமை

பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்(து) எழுந்து
வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய் விண்இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்.

வரிசைப்பட உயர்ந்து எழுந்து மூங்கிலினைப் போல் திரண்ட தோள்களையும் வேல் போன்ற கண்களை உடைய பெண்ணே..!!
வானில் வலம் வரும் சூரியனைக் கையால் மறைப்பவர் இல்லை. அதுபோல பரந்த அறிவு ஆற்றல் உடையவரை பாசியைப் (நீர்ப்பாசி) போன்ற அடாத சில சொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு, அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ..? மறைக்க முடியாது.

கருத்து:

சிறந்த ஆற்றல் உடையோரை மறைக்க முடியாது.

இதிலுள்ள பழமொழி:-

ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்
----------------------------------------------

பழமொழி நானூறு - 33

அறிவுடைமை

அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்
திருவினும் திட்பம் பெறும்.

பெரிய மலை நாட்டை உடையவனே..!! செல்வம் உடையவர்க்கு என்றால், அவருடைய அரிய விலை மதிப்புடைய சிறந்த அணிகளும், நிறைந்த பிற செல்வங்களும் நிலைத்து நிற்காமல் மாறிவரும் இயல்புடையவை. அறிவுச் செல்வம் உடையோர் என்றால், அவரது அறிவுச் செல்வம் பிரிவது இல்லை. அதனால் செல்வத்தை விட அறிவே உயர்வைப் பெறும்.

கருத்து:

அறிவு செல்வத்தை விடச் சிறந்தது.

இதிலுள்ள பழமொழி:

திருவினும் திட்பம் பெறும்
----------------------------------------------

பழமொழி நானூறு - 34

ஒழுக்கம்

விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுங்(கு) உடையர் ஆகி ஒழுகல் - பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ
நெய்த்தலைப்பால் உக்கு விடல்.

முற்றிய தேங்காய் (mature coconut) வயலின் கண் விழுகின்ற நீர் நிறைந்த மருதநிலத் தலைவனே..!! சிறந்த தொடர்ச்சி உடையாரை உடையது ஆகிப் புகழ்கின்ற தொன்று தொட்டு வரும் குடியில் பிறந்தவர், தத்தமக்குரிய ஒழுக்கத்தினை உடையவராகி தம் குலத்திற்கேற்ப ஒழுகுதல் பசுவின் நெய்யில் பசுவின் பாலை ஊற்றுதல் போன்று இனிமையைத் தருமல்லவா..

கருத்து:

நற்குடியில் பிறந்தவர் எப்போதும் ஒழுக்கத்துடனே இருப்பர்.

இதிலுள்ள பழமொழி:

நெய்த்தலைப் பால் ஊக்குவிடல்
----------------------------------------------

பழமொழி நானூறு - 36

ஒழுக்கம்

தந்நடை நோக்கார் தமர்வந்த வா(று) அறியார்
செந்நடை சேராச் சிறியர்போல் ஆகாது
நின்நடை யானே நடஅத்தா! நின்னடை
நின்நின்று அறிகிற்பார் இல்.

தலைவனே...! நினது ஒழுக்கத்தை உன்னிடத்திலிருந்தும்
அறிபவர் இல்லை, நீயே அறிவாய். ஆதலால், தமது ஒழுக்கத்தை ஆராயதவராய்த் தம் சுற்றத்தார் ஒழுகி வந்த வரலாற்றையும் அறியாதவராய், செம்மையான நடையைச் சேராத அறிவில் சிறியவர் போல் ஒழுகாமல் , உனக்கு விதிக்கப்பட்ட குடியேற்ற ஒழுக்கத்தின்படி ஒழுகுவாயாக.

கருத்து: 

தத்தம் இயல்புக்கு ஏற்றவாறு ஒழுகுதலே நலம் பயக்கும்.

இதிலுள்ள பழமொழி:

நின்நடை நின்நின்று அறிகிற்பார் இல்
----------------------------------------------
பழமொழி நானூறு – 37

ஒழுக்கம்

நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்
ஓர்த்தது இசைக்கும் பறை.

பறையானது நாம் எண்ணிய ஓசையையே ஒலிக்கும். அதுபோல நுண்ணறிவு பெற்ற,, அறிவு நூல்களைப் படித்தவர்களே ஆயினும் முறை தவறி நடந்தால், அவர்களைத் திருத்த தவத்தினால் பெரியோர்களுக்கும் இயலாது.

கருத்து:

ஒழுக்கத்தை அனைவரும் கட்டாயமாக் கடைபிடிக்க வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

ஓர்த்தது இசைக்கும் பறை
--------------------------------------

பழமொழி நானூறு – 38

ஒழுக்கம்

 தம்குற்றம் நீக்கவர் ஆகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல்.

அறிவில்லாதவர்கள் தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி, மற்றவர்களுடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல், அகன்ற உலகில் எவ்விடத்தும் வெள்ளாடு தனது வாதநோயைப் போக்கிக் கொள்ளாமல், மற்ற உயிர்களுக்கு வாதத்தால் வரும் நோயைத் தீர்ப்பதற்கு நிகராகும்.

கருத்து:

ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களை போக்கிய பின்பே, மற்றவர்களின் குற்றங்களை களைய முற்படுதல் வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல்
----------------------------------------------

பழமொழி நானூறு – 39

ஒழுக்கம்

 கெடுவல் எனப்பட்டக் கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்.

பெரிய மலைகளால் சூழப்பட்ட நீரையுடைய கடலால் வரையறை செய்யப்பட்டுள்ள இந்த பூமியில், மலைகள் தேய்வடையும்.  பழிச்சொல் மாறுவதில்லை, ஆகையால் நான் கெடுவேன் என்று கருதப்பட்ட இடத்தும், தனக்கு ஒரு சிறிதும் பழியை ஏற்படுத்தாத செயல்கள் செய்வதையே ஒவ்வொருவரும் விரும்புதல் வேண்டும்.

கருத்து:

பழியற்ற செயல்களையே செய்தல் வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

கல்தேயும் சொல் தேயாது

--------------------------------------

பழமொழி நானூறு - 40

ஒழுக்கம்

 பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின்
தணியாது விட்டக்கால் நண்கடல் சேர்ப்ப!
பிணியீ(டு) அழித்து விடும்.

குளிர்ந்த கடல் பொருந்திய நாடனே..!! ஒருவருக்கு உண்டான நோயை மருந்தைக் கொண்டு போக்காது விட்டால்,, அந்நோயானது அவரது வலிமையை போக்கிவிடும். ஆதலால் பொருத்தமற்ற பழி என்ற தீய நோய்க்கு அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது நல்ல ஒழுக்கமே ஆகும்.

கருத்து:

தீயநோயைத்தீர்க்கும்  மருந்து நல்லொழுக்கமே.


இதிலுள்ள பழமொழி:

மருந்தின் தணியாது விட்டக்கால் பிணி ஈடு அழித்துவிடும்.
--------------------------------------
பழமொழி நானூறு - 41

ஒழுக்கம்

 உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவ
நெருஞ்சியும் செய்வ(து) ஒன்று இல்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப!
பெரும்பழியும் பேணாதார்க்கு இல்.

செருந்தி மரங்கள் பெரிய உப்பங்கழியில் தாழ்ந்து விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே..!! பயப்படாமல் உராய்ந்து (காலைத் தேய்த்து) நடப்பவர்களை அவர் உள்ளங்கால்கள் வருந்தும்படி நெருஞ்சி முள்ளும் குத்துவதில்லை, அதுபோல மிக்க பழியும் தன்னை அஞ்சிப் பாதுகாவதவர்க்கு மனவருத்தம் செய்தல் இல்லை.

கருத்து:

தீயவர்கள் பழிக்குப் பயப்படுவதில்லை.

இதிலுள்ள பழமொழி:

பெரும் பழியும் பேணாதார்க்கு இல்


--------------------------------------

பழமொழி நானூறு – 43

இன்னா செய்யாமை

பூவுட்கும் கண்ணாய் பொறுப்பர் எனக்கருதி
யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்
நோவச்செய் நோயின்மை இல்.

தாமரை மலரானது இவளது கண்ணுக்கு ஒப்பாக முடியவில்லையே என வருந்தும் கண்களை உடையவனே..!! தேவர்க்கும் இயலாத காழ்த்த அன்புடையார்க்காயாயினும் துன்புறுத்தினால் துன்பம் அடையாது இருப்பதில்லை (பொறுமையாக இருக்க மாட்டார்), எனவே, எத்துணை தீங்கு செய்தாலும் பொறுமையுடன் இருப்பார்கள் என்று தாமே நினைத்து, எவ்வளவு எளியவராய் இருந்தாலும் தீமையைச் செய்தல் கூடாது.

கருத்து:

எளியவர்களுக்கு தீமை செய்யாது இருத்தல் வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

நோவச்செய் நோயின்மை இல்
--------------------------------------

பழமொழி நானூறு – 44

இன்னா செய்யாமை

வினைப்பயன் ஒன்றின்றி   வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்
தனக்கின்னா இன்னா பிறர்க்கு.

வயலில்படும் பொன்போல விளங்கும் பசலையுடைய பூங்கொம்மைப் போன்றவளே.. தனக்கு துன்பத்தை அளிப்பவை மற்றவர்க்கும் துன்பத்தை அளிக்கும், எனவே செய்யும் செயலில் பயன் சிறிதும் இல்லாமல், பகைமை ஒன்றையே நினைத்து, மற்றவர் வருந்தும் படியான செயல்கள் செய்தலை விட்டொழித்தல் வேண்டும்.

கருத்து:

மற்றவர் மீது பகைமை கொண்டு, அவரை வருந்தச் செய்யாதிருக்க வேண்டும்.

இதிலுள்ள பழமொழி:

தனக்கின்னா இன்னா பிறர்க்கு
--------------------------------------

பழமொழி நானூறு – 45

இன்னா செய்யாமை

ஆற்றார் இவரென்று அடைந்த தமரையும்
தோற்றத்தா மெள்ளி நலியற்க-போற்றான்
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும்

பிற உயிர்க்கு உண்டாகும் துன்பத்தை பற்றி எண்ணாமல், வாசலை அடைத்து வைத்து நாயை அடித்து துன்புறித்தினால், அது தன்னை வளர்த்த உரிமையாளனையும் கடித்துவிடும். ஆகையால் தம்மை அடைந்த உறவினரையும் நம்மை எதிர்க்க வலிமையில்லாதவர் என்று நினைத்து மற்றவர் அறியும்படி இகழ்ந்து துன்புறுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உறவினர் தம்மால் இயன்ற சிறு தீங்கினையாவது செய்ய முற்படுவர்.

கருத்து:

 வலிமையற்ற உறவினரைத் துன்புறுத்தக் கூடாது.

இதிலுள்ள பழமொழி:

கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்
--------------------------------------

பழமொழி நானூறு – 46

இன்னா செய்யாமை

நெடியாது காண்கிலாய் நீயொளியை நெஞ்சே
கொடியது கூறினாய் மன்ற - அடியுளே
முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பின்பகல் கண்டு விடும்

உள்ளமே!! தீய செயல்களை மற்றவர்க்குச் செய்யும் படி கூறினாய். ஆதலால் நீ அறிவு அற்றாய்!! நீ மற்றவர்க்குத் தீமை செய்தலால் வரும் பயனை நீண்ட காலத்திற்கு பின் அறியாய்!! அந்நிலையிலே, பிறன் ஒருவனுக்குத் தீங்கை முற்பகலில் செய்தால் தனக்கு வரும் தீங்கினைப் பிற்பகலிலே அடைவான்.

கருத்து:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
என்ற திருக்குறளின் கருத்தே அமைந்துள்ளது.

இதிலுள்ள பழமொழி:

முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பின்பகல் கண்டுவிடும்
--------------------------------------

பழமொழி நானூறு – 47

இன்னா செய்யாமை

தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்

குடிப்பிறப்பால் தீய செயல்களை உடையவர், ஒரு துணையும் இல்லாதவர், வறுமையுடையவர், சொற்களால் பகைவருக்குச் சமமானவர் என்று இங்ஙனம் நினைத்து, வலிமையுடையவர் அவை இல்லாதவர்களை வாட்டினால், அவர்களின் கொடுமை தாங்க இயலாமல் அவர்களின் கண்களிலிருந்து வந்த கண்ணீரே, துன்பம் செய்தவர்க்கு இயமனாய் அமைந்து விடும்.

கருத்து:

நலியப் பெற்ற எளியார் அழுத கண்ணீர் இயமனாகும்.

இதிலுள்ள பழமொழி:

ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும்
--------------------------------------
பழமொழி நானூறு – 48

இன்னா செய்யாமை  

மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கு எளிது ஆகிவிடினும் நளிர்வரைமேல்
கல்கிள்ளி கையுய்ந்தார்

விளங்கும் மலை மீது உள்ள கல்லைக் கிள்ளி கை வருந்துதலை தப்பினார் இல்லை, ஆதலால் செல்வம் மிக உடையவராகி, அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டவரை, அவர்கள் வருந்தும்படித் தீய செயல்களை செய்வோம் என நினைத்தல், மிகவும் எளியதாயினும் செயலில் செய்தால் மிக்க துன்பமே தரும்.

கருத்து:

செல்வம் மிக்க அறிவுடைமையால் மதிக்கபடுபவர்களை துன்புறுத்தல் தவறாகும்.

இதிலுள்ள பழமொழி:

கல்கிள்ளிக் கை உயர்ந்தார் இல்.

---------------------------------------------

1 comment:

  1. மிக அருமை....
    மீதி பாடல்கள் பற்றிய விளக்கங்கள் பதிவு கிடைக்குமா

    ReplyDelete