சம்யக்தர்சனம் - Samyakdarsan

 


சம்யக்தர்சனம் அடைவோம் வாரீகளா?


பவ்யர் திருவாளர் T. ஸ்ரீதர் அவர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் தொடராக பதிவு செய்த செய்திகளின் தொகுப்பு.  அவருக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

 

சம்யக்தர்சனம், சம்யக்தர்ஷன் நற்காட்சி என்று சமணர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக அல்லது அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமாக   சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகள்.

 

நற்காட்சி அல்லது சம்யக்தர்சனம் என்றால் அதன் உண்மையான தன்மை அல்லது பொருள் என்ன? என்பதை நாம் உணர்ந்து கொள்ளாமலேயே ஒரு உபசார வார்த்தையாக  உச்சரித்துக் கொண்டு இருக்கின்றோம் .

 

சமணர்கள் வார்த்தைகளாக அதிகமாக உபயோகப்படுத்தும் இந்த தன்மை அல்லது தகுதி இதை அடையும் வழிதான் என்ன? ஏனெனில் இது தான் ஒவ்வொரு உயிரும் உய்வதற்காக  முதன்மையான நுழைவாயிற்படியாகும். ஆனால் அனைவரும் இதன் முக்கியத்துவம் பற்றி அறிந்தும் அறியாமலும் இருப்பது உதாசீனம் செய்து வாழ்நாட்களை வீண் நாட்களாக வீணடித்துக் கொண்டு இருப்பது விந்தையிலும் விந்தை.

 

தர்மம் மலிந்து கிடக்கும் இந்த சமண சமுதாயத்தில் பிறந்த நாம் இந்த அரிய வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வோமா?  வாருங்கள் பவ்யர்களே!

 

சம்யக்த்வம் அதாவது ஆத்மானுபவத்தை பெறும் வழிமுறைகளைச் சுருக்கமாக பார்ப்போம். முதலில் நாம் நம்முடைய ஆத்மனைப் பற்றிய சிந்தனையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


நம்முடைய இடைவிடாத ஆத்ம சிந்தனையின் காரணமாக நம் புறம் சார்ந்த எண்ணங்கள் குறைகின்றன. அதாவது அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் இவை சார்ந்த எண்ணங்கள் மட்டுப்படுகின்றன. ஆகையால் நம் மனோபாவம் தீய  எண்ணங்கள் குறைந்த விசுத்த பரிணாமம் கொண்டு இருக்கும். இதன் மூலம்  ஆத்மனைப் பற்றிய தேடலில் ஊக்கம் மேலும் வளரும்.


அடுத்து தொடர்ந்த ஆத்ம சிந்தனையில் நம்முடைய  ஞானாவரண  காதி கர்ம வினைகள் நிகழ்காலத்தில் ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக்கூடிய நிஷேகங்கள் நிகழ் காலத்தில் உதயத்திற்கு வராமல் உதயாபாவிக் க்ஷய நிலையை அடையும்.


அடுத்து எதிர் காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய  ஞானாவரண  காதி கர்ம வினைகள், ஸத்தாவில் இருப்பாக இருக்கும் 'ஸதவஸ்த்தா வடிவ உபசம' நிலையை அடைந்து இருக்கும்.


அடுத்து நிகழ் காலத்தில் தேசகாதி கர்மவினைகளான மதிஞானாவரணம் ஸ்ருத ஞானாவரணம்  அவதி ஞானாவரணம்  மனப்பர்யய ஞானாவரணம்  இவைகளில் ஒன்றோ அல்லது நான்குமோ உதயத்தில் இருக்கும். இந்த மூன்று நிலைகளும் நம்முடைய தொடர்ந்த ஆத்ம சிந்தனையால் விளைபவை ஆகும். இதனால் நமக்கு தத்துவத்தை புரிந்து கொள்ளும் அறிவாற்றல் ஏற்படும்.

 

அடுத்து நம்முடைய அறிவைத் தூண்டி நாம் தெளிவான ஆத்ம ஞானத்தை அடைய தேவ சாஸ்திர குருவின் உபதேசம் அறவுரை நம்முடைய தொடர்ந்த ஆத்ம தேடலின் காரணமாக ஏற்படும். நமக்கு தேவையான ஆத்ம தத்துவத்தை தெரிந்து கொண்டு அதில் தெளிவும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்படவேண்டும்.

 

ஆத்மனில், ஆத்ம தத்துவத்தில் முழு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நம் ஆத்மனில் கட்டியுள்ள கர்ம வினைகளின் ஸ்திதி, அதாவது கால அளவு, ஒரு அந்தர் கோடா கோடி கடற்கால அளவிற்கு குறைந்து விடும். புதிதாக கட்டும் கர்மங்களின் ஸ்திதி, கால அளவு, அந்தர் கோடா கோடி கடற்காலத்தின் ஸங்க்யாதத்தில் ஒரு பகுதியாக குறைந்து கட்டும்.


கட்டியுள்ள கர்ம வினைகள் குறையத் துவங்கும். பாவ கர்ம வினைகள் அழிய ஆரம்பிக்கும்.

 

இந்த நான்கு சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நாம் புத்தி பூர்வமாக நம்முடைய சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஆத்மனில் செலுத்த வேண்டும். ஆத்மனுள் ஆழ வேண்டும்.

 

ஆத்மனுள் நம்முடைய கவனம் அல்லது உபயோகம் குவிந்த மாத்திரத்தில் நம்முடைய ஆன்மாவின் செயல்பாடு காரணமாக அதக்கரணம் அபூர்வ கரணம் அநிவ்ருத்தி கரணம் என்ற மூன்று அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இம்மூன்றின் காரணமாக ஆன்மாவின் விசுத்த பரிணாமம் அனந்த மடங்கு தூய்மையை அடையும்.

 

இம்மூன்று கரணங்கள் முடியும் தருவாயில் "அந்தரகரணம்" ஏற்பட்டு ஆத்ம தரிசனம் அதாவது நற்காட்சி அல்லது சம்யக்த்வம் அல்லது ஆத்மானுபவம், மித்யாத்வத்தை ஒதுக்கி விட்டு அந்த இடத்தை சம்யக்த்வம் ஆக்ரமிக்கும். இது சுருக்கமாக நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பற்றிய விளக்கம். மேலும் விரிவாக அறிய கட்டுரையைத் தொடர்வோம்.

 

முதலில் நாம் நம்மை உடலாக மட்டுமே உணர்ந்து கொண்டு நம் வாழ்நாட்களை வெறுமனே அழித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்த உடல் அல்ல, அந்த ஜடப்பொருளை அதிஅற்புதமாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் தான் நாம்!  அதுதான் ஆன்மா! என்பதை உணர வேண்டும். ஆன்மா உருவமற்றது, அருவமானது, சுவை, ஒளி,, ஊறு, ஓசை, நாற்றம் அற்றது ஞானமயமானது, அணுவிலும் இருக்கும் அண்ட சராசரங்களையும் வியாபித்து இருக்கும், அழிவில்லாதது நிரந்தரமானது அதன் ஆரம்பத்தை நம்முடைய க்ஷயோபசம ஞானத்தால் அறிய முடியாதது எக்காலத்திலும் நிலைத்து இருக்கக் கூடியது. நிரந்தரமான பேரின்பமாம் மோக்ஷத்தை அடையும் தன்மை கொண்டது. இவைகளை ஆகமங்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். அவை கேவல ஞானிகளால் சொல்லப்பட்டு, அவர்கள் காலம் முடிந்த பிறகு ஆச்சாரியர்களால் வாய்மொழியாக சொல்லப்பட்டு, பிறகு இறுதியாக எழுத்து வடிவில் ஆச்சாரியர்களால் சுவடிகளில் எழுதப்பட்டு நம் கண் முன்னே ஆகம நூல்களாக காணக் கிடைக்கின்றன. அவைகளைப் படித்து அறிவதோடு மட்டும் அல்லாமல் ஆகமங்கள் எங்கெல்லாம் பிரவசனம் செய்து விளக்கப்படுகிறதோ? அங்கெல்லாம் சென்று இந்த உண்மையைக் கேட்டு உணர்ந்து கொண்டு செயலில் இறங்குவோமாக.

 

நாம் யார்? நம்முடைய உடல் மெய் வாய் கண் மூக்கு செவி மற்றும் ஆறாவது புலனாகிய மனம் சேர்ந்த தொகுப்பா?


அல்லது இத்தனையயும் ஒன்று சேர்த்து இயக்குகிறதே! ஒரு அற்புதமான கண்ணுக்குப் புலப்படாத சக்தி அதுவா? நாம் யார்?

 

இந்த வினாவிற்கு விடை காணாத வரை ஆன்மீகத்தில்  சொல்லப்படும் மூலக் கருத்து நமக்குப் புரியவே புரியாது.

 

ஐம்புலன்கள் மற்றும் மனம் கொண்ட இந்த உடல் நாம் என்றால்? நம்முடைய மரணம் என்பது தவிர்க்க இயலாதது. மரணத்திற்குப் பிறகு நம்முடைய உடல் அழிந்த பின்னர் மனம் மற்றும் ஐம்புலன்களின் நிலை என்ன? உடலோடு அவையும் அழிந்துதான் போகின்றன. இப்போது நாம் யார்? அழிந்து போன உடலா? ஆம் எனில் நாம் தான் அதாவது நம் உடல் தான் அழிந்து விட்டதே! எதனைக் கொண்டு அழிந்து போன உடல் தான் நாம் என்று சொல்ல முடியும்? உடல் அழிந்த பின்னர் அது நாம் தான் என்று சொல்வது பைத்தியக் காரத்தனம் அல்லவா?


ஆக அழியக் கூடிய உடல் நாம் தான் என்று சொல்வது சரியல்ல! அது உண்மையும் அல்ல என்பது தெளிவாகிறது.

 

மேலும் சில கருத்துக்கள்.

பெரும்பாலும் சமணர்கள் முன் ஜென்ம பின் ஜென்ம நம்பிக்கை உள்ளவர்கள். நம்முடைய முன் ஜென்மம் என்னவாக இருந்தோம்? என்று தெரியாது. நம்முடைய அடுத்த ஜென்மம் எதுவென்றும் தெரியாது. தற்போது மனித ஜென்மமாக இருக்கிறோம். சமீபத்திய கடந்த பிறவி தற்போதைய மனித பிறவி அடுத்து நாம் அறிய இயலாத மறுபிறவி இவ்வாறு மூன்று பிறவிகள் வெவ்வேறானவை. ஒரே மனித பிறவிகளாகக் கூட இருக்கலாம். ஆனால் உடல்கள் வெவ்வேறானவை. இந்த மூன்று உடல்களை கடந்த பிறவியில் உடலை மரணம் வரை நாம் என்று நினைத்தோம் அது அழிந்து தற்போது உள்ள உடலை நாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம் இதுவும் அழியத்தான் போகிறது. அடுத்த பிறவி என்னவாக பிறப்போம் என்று தெரியாது ஆனால் அந்த உடலையும் நாம்தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கப் போகிறோம். அந்தந்த பிறவிகளில்  அந்தந்த உடல்களை நாம் என்று தான் நினைப்போம். அதில் மாற்றம் இருக்கப் போவதில்லை. இந்த மூன்று உடல்களை உருவாக்கி அவைகளில் வாசம் செய்து கொண்டு இருந்ததே! இனியும் முக்தி அடையும் வரை பல உடல்களில் வாசம் செய்யப் போகிறதே! ஒன்று! அதுதான் நாம்! அதுதான் நம்முடைய ஆன்மா! நிஜமான நாம்! அந்த ஞானமயமான உருவமற்ற அருவமான ஆன்மா தான் நாம்!!!

 

அப்படியானால் நாம் யார்?

அழியக் கூடிய உடலை உருவாக்கி அதில் கரு முதல் ஜனனத்தில் இருந்து மரணம் வரை அதிலேயே தங்கி அதை இவ்வளவு காலமும் இயக்கிக் கொண்டு கடைசி சமயம் வரை இருந்து வெளியேறிச் செல்லப் போகிறதே! ஒரு சக்தி அதுதான் நாம்!!! அதுதான் நம் ஆன்மா!!! நான் ஆன்மா!!! நான் உடல் அல்ல!!! என்று எப்போது புரிந்து கொள்கிறேனோ? அதுவரை எனக்கும் விடிவில்லை எவருக்கும் விடிவில்லை!

 

இப்போது நாம் ஆன்மா!  இந்த உடல் அல்ல என்று முழுவதும் தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டோம். இது போதாது இனி ஆத்ம சிந்தனையில் மூழ்க வேண்டும். நம்முடைய ஆன்மா ஏன் இப்படி பிறவிச் சுழற்சியில் சிக்கி அல்லல்படுகிறது? பிறவிச் சுழற்சியில் இருந்து மீண்டு வர என்னதான் வழி? என்று தீவிரமாக சிந்திக்க வேண்டும். ஒரு முறையல்ல இருமுறையல்ல பலமுறை அல்ல தொடர்ந்து அதே சிந்தனை! எண்ணம்! என தொடர்ந்து ஆத்ம சிந்தனையில் இருக்க வேண்டும்.

 

நம்முடைய தீவிர ஆத்ம சிந்தனை நல்வழி நாட்டம் நம்மை தேவ சாஸ்திர குருவின் அருகில் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். தேவர் என்பவர் முழுதுணர் ஞானி, முக்காலமும் அறிந்தவர், கேவல ஞானி, அரஹந்த பகவான்,  அவரை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தால் நம் ஆத்ம சிந்தனைக்கான நல்வழி உடனே புலப்பட்டு விடும். அது இந்த ஐந்தாம் காலத்தில் சாத்தியம் இல்லை.

 

சாஸ்திரம் என்பது கேவல ஞானத்தால் பகவானால் அருளப்பட்டு அவர் சொன்ன உண்மைகளை எழுத்துரு கொண்டு நம்மிடையே புழங்குபவை. அவைகளை திரும்பத் திரும்ப படித்து அதில் உள்ள கருத்துக்களை தெளிவாக புரிந்து கொண்டு ஐயமின்றி தெளிந்த மனதுடன் இருக்க வேண்டும்.

 

குருவானவர் அரஹந்த பகவானின் உபதேசம் பெற்றோ? அல்லது ஆகமங்களைப் படித்தோ? தெளிவடைந்து பகவான் சொன்ன அறவழியில் ஒழுகுபவர். அது திகம்பர முனிவர் ஆகவும் இருக்கலாம் ஆகமங்களைக் கசடறக் கற்றுணர்ந்த சான்றோர் ஆகவும் இருக்கலாம். அவர்கள் இடம் உபதேசம் பெற்றோ? தர்மத்தை உண்மையைக் கேட்டு அறிந்தோ? அடுத்த முயற்சியில் இறங்கலாம். அதாவது பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

 

அது என்ன வழி? மித்யாத்வ கர்ம வினைகளால் சூழப்பட்ட நாம் அந்த வினைகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு சம்யக்த்வத்தை அதாவது ஆத்மானுபூதியை ஆன்ம அனுபவத்தை நாம் அடைய வேண்டும். இது தான் பிறவிச் சுழற்சியில் இருந்து நாம் விடுபட எடுத்து வைக்கும் முதல் அடியாகும்.

 

என்ன இது? மளிகைக் கடையில் சென்று மளிகைப் பொருட்கள் வாங்கி வருவது போல் எளிதாகச் சொல்கிறாயே? இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கலாம். இது சாத்தியம் தான்!!! ஆகமங்கள் அந்த சாத்தியக் கூறுகளை தெளிவாகச் சொல்கின்றன. அந்த சாத்தியக் கூறுகள் தான் என்ன?

 


கரணலப்தி தான் அந்த சாத்தியக் கூறுகள் ஆகும். இந்த கரணலப்தி என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும் அதை அடையும் வழிகள் என்ன? என்ன? அதை அடைவதற்கான தயார் நிலைகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம். இதற்கு என்னுடைய க்ஷயோபசம ஞானத்தை சற்றே ஓரங்கட்டி வைத்து விட்டு திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரி அவர்கள் மோக்ஷமார்க்க பிரகாசகம் ஏழாவது அத்தியாயத்தை 2023 மார்ச் மாதம் 29,30 மற்றும் 31 ம் தேதிகளில் பரமாகம வகுப்பில் ஆற்றிய உரைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு எழுதுகிறேன். இனி நான் சொல்லப் போகும் கருத்துக்கள் வெற்றுக் கற்பனை அல்ல ஆகம அறிஞர் ஆற்றிய உரையின் சாராம்சம் ஆகும். இனி விஷயத்திற்கு வருவோம்.

 

முதலில் சம்யக்த்வம் எனப்படும் நற்காட்சி அடைவதற்கான நம்முடைய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும்?

 

நமக்கு நமது ஆத்மனில் அசைக்க முடியாத முழுநம்பிக்கை முதலில் ஏற்பட வேண்டும். நாம் உடல் அல்ல, ஆன்மா என்பதை சர்வ நிச்சயமாக உணர வேண்டும்.

 

அடுத்து ஆத்ம தத்துவம் அதாவது மோக்ஷதத்துவத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தேவ சாஸ்திர குருவின் துணையுடன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அடுத்து இப்படி அறிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தை நன்கு அலசி ஆராய்ந்து அதை நன்றாகப் புரிந்து கொண்டு அதில் அசைக்க முடியாத ஆணித்தரமான முழு நம்பிக்கை நம் மனதில் ஏற்பட வேண்டும்.

 

அடுத்து சம்யக்த்வம் பெற்றே தீர வேண்டும் என்ற தீராத வேட்கை நம்முள் ஏற்பட வேண்டும். அந்த வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அணுவளவும் தளர்ச்சி என்பதே கூடாது.

 

நம்முடைய ஆத்மனில் நமக்கு இருக்கும் முழு நம்பிக்கை, ஆத்ம தத்துவத்தில் முழுமையான அறிவு, ஆத்ம தத்துவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை தெளிவு மற்றும் சம்யக்த்வம் அடைந்தே தீர வேண்டும் என்ற தணியாத வேட்கை இவை அனைத்தும் நாம் சம்யக்த்வம் பெறுவதற்கு அல்லது அடைவதற்கு முன்பு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்.

 

இவ்வாறு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நிலையில் நமக்கு க்ஷயோபசம லப்தி, விசுத்தி லப்தி, தேசனா லப்தி மற்றும் ப்ராயோக்ய லப்தி அல்லது கால லப்தி என்னும் நான்கு லப்திகள் ஏற்படும். இவை அனைத்தும் மேற்சொன்ன  நம்முடைய தீவிர ஆத்ம சிந்தனையால் தெளிவால் தணியாத வேட்கையால் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். மேலும் இவை அனைத்தும் நம்முடைய சுய முயற்சியால் விளைபவை ஆகும். சுயமுயற்சி என்பது மெய் வாய் கண் மூக்கு செவி மனம் சார்ந்த நாம் அதாவது பிறவி உயிர் சுயநினைவோடு செய்வதாகும். மேலே சொல்லப்பட்டவை 29-3-2023 தேதிய ஆடியோ மற்றும் வீடியோ உரையின் சுருக்கமான விளக்கம் ஆகும்.

 

க்ஷயோபசம லப்தி என்றால் என்ன?


நாம் சம்யக்த்வம் பெற ஆத்ம தத்துவத்தை அறியும் அறிவு அதாவது புத்திக்கூர்மை நமக்கு ஏற்பட வேண்டும்.

 

அதற்கு முதலில் ஞானாவரண காதி கர்ம வினைகளில்  ஞானாவரண காதி கர்ம வினை, ஒரு சமயத்தில் நிகழ் காலத்தில்  உதயத்திற்கு வரும் நிஷேகங்கள்  உதயத்திற்கு வராமல் இருக்கும் உதயாபாவிக் க்ஷய நிலையில் இருக்கும். இப்போது உதயத்திற்கு வராமல் இருக்கிறது ஆகையால் க்ஷயம் அதாவது அழிவு என்று சொல்லப்படுகிறது.

 

அடுத்து அதே காதி கர்ம வினை எதிர்காலத்தில் உதயத்திற்கு வரவுள்ள நிலையில் அதனை உதயத்திற்கு வர விடாமல் ஸத்தாவிலேயே இருப்பாக நிறுத்தி வைத்து அல்லது தணித்து விடும் ஸதவஸ்த்தா வடிவ உபசம நிலையில் செய்து விடுவது. சர்வகாதி கர்ம வினையான  ஞானாவரணம் உதயத்தில் இருந்தால் நம்முடைய அறிவு மழுங்கியே இருக்கும். வெளிப்படாது. ஆகையால்  ஞானாவரணம் கர்மவினைகளை உதயாபாவிக் க்ஷய நிலையில் க்ஷயம் செய்தும், ஸதவஸ்த்தா வடிவ உபசம நிலையில் உபசமம் அல்லது தணிந்தும் இருக்குமானால் நம்முடைய சொற்ப அறிவு வெளிப்பட தடையில்லை.

 

தற்போது அதாவது நிகழ் காலத்தில்  தேச காதி கர்ம வினைகளான மதிஞானம் ஸ்ருத ஞானம் அவதி ஞானம் மனப்பர்யய ஞானம் இவைகளில் ஒன்றோ அல்லது நான்குமோ உதயத்தில் இருப்பது. இவைகள் தேசகாதி கர்மங்கள் ஆகவே முழுவதும் நம் அறிவைத் தடுக்க இயலாதவை. ஆகையால் இவைகள் உதயத்தில் இருப்பது தவறில்லை. நம்முடைய அறிவு இயங்கும்.

 

இவ்வாறு க்ஷயம் உபசமம் மற்றும் உதயம் இவை மூன்றும் சேர்ந்த நிலைக்கு க்ஷயோபசம லப்தி என்று பெயர். இதன் காரணமாக ஆத்ம தத்துவத்தை ஆராயும் ஞானம் அதாவது அறிவாற்றல்  நமக்கு ஏற்படும். தத்வார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கு கைகூடும். இவைகள் மூன்றும் நம்முடைய அதிதீவிர ஆத்ம சிந்தனையால் அதனால் ஏற்படும் ஆத்மனின் ஆற்றலால் உண்டாவதாகும்.

 

ஆத்ம தத்துவத்தை ஆராயும் அறிவாற்றல் அல்லது மோக்ஷ தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கு ஏற்பட்டு விட்டது அதை செயல்படுத்தும் மனோநிலை அல்லது முயற்சி, ஈடுபாடு வேண்டும் அல்லவா? அதற்கு விசுத்தி லப்தி இருந்தால் தான் அது சாத்தியம் ஆகும்.

 

விசுத்தி லப்தி என்றால் என்ன?


நம்முடைய தீவிர ஆத்ம சிந்தனை எண்ணங்கள் காரணமாக சாரித்ர மோகனீய கர்ம வினைகளான அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய கஷாயங்கள் மந்த நிலையை அடைந்து விடும். இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். மனதில் முழுக்க முழுக்க அதிதீவிர ஆத்ம சிந்தனையில் நிறைந்துள்ள நிலையில் மற்ற எண்ணங்கள் எழுவதற்கு  இடமில்லை. இந்த மந்த கஷாய நிலை விசுத்த பரிணாமம் எனப்படும். கஷாயங்கள் அற்ற நிலைக்கு சுத்த பரிணாமம் என்று பெயர். கஷாயங்கள் உள்ள நிலைக்கு அசுத்த பரிணாமம் என்று பெயர். மந்த கஷாய நிலைக்கு விசுத்த பரிணாமம் என்று பெயர். அதாவது கஷாயங்கள் அழியவில்லை ஆனால் தணிந்து மந்தப்பட்டு மந்த கஷாய நிலையில் உள்ளன. அதாவது தீய எண்ணங்கள் குறைந்து காணப்படும். அதனால் கஷாயங்கள் குறைந்து காணப்படும். அதனால் விசுத்த பரிணாமம் ஆகிறது. இந்த விசுத்த பரிணாமம் ஆத்ம தத்துவ முயற்சி செய்ய தடையற்ற மனோநிலையை ஊக்கத்தை முயற்சியை நமக்கு ஏற்படுத்தும்.

 

தேசனா லப்தி என்றால் என்ன?


தத்துவம் அறியும் ஞானம் அதற்கான முயற்சி செய்யும் ஊக்கம் இவை இரண்டோடு நாம் தத்துவத்தை அறிந்து இருந்தால் தானே அதனை செயல்படுத்த முடியும். ஆகவே வெளியே இருந்து நம்முடைய அறிவைத் தூண்டும் சக்தி தேவ சாஸ்திர குருவின் உபதேசம் மூலம் ஏற்படுகிறது. அந்த உபதேசத்தின் காரணமாக ஆத்மனில் முழு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அதனை நன்கு உள்வாங்கிய பிறகு நான்காவது லப்தி கால லப்தி அல்லது ப்ராயோக்ய லப்தி ஏற்படும்.

 

ப்ராயோக்ய லப்தி என்றால் என்ன?


இதற்கு கால லப்தி என்னும் மற்றொரு பெயரும் உண்டு.

ஆத்மனில் உள்ள அத்தனை கர்ம வினைகளின் ஸ்திதியும் அதாவது கால அளவும் ஒரு அந்தர் கோடா கோடி கடற்காலம் அளவிற்கு குறைந்து விடும். இதன் பொருள் என்னவென்றால் சம்யக்த்வம் பெற்ற உயிரானது இந்த அந்தர் கோடா கோடி கடற்காலத்திற்குள் மோக்ஷத்தை அடைந்து விடும் என்பதாகும். இந்த கால அளவிற்கு மேல் சம்சாரத்தில் அந்த உயிர் இருக்காது என்று பொருள்.

 

அடுத்து புதிதாக கட்டும் கர்மங்களின் ஸ்திதி அந்தர் கோடா கோடி கடற்காலத்தின் ஸங்க்யாதத்தில் ஒரு பகுதியாக குறைந்து கட்டும்.

 

ஸத்தாவில் இருப்பாக உள்ள கர்ம வினைகள் குறையும்.

 

பாவ கர்ம வினைகள் அழியும். முற்றிலும் அழியாது ஓரளவு அழியத் துவங்கும். இந்த நான்கு தன்மைகள் கால லப்தி என்னும் ப்ராயோக்ய லப்தியில் உண்டாகும் மாற்றங்கள் ஆகும். இவை நமக்கு ஏற்பட்ட ஆத்மனில் நம்பிக்கை, அதன் காரணமாக ஆத்மனின் ஆற்றல் வெளிப்பட்டு நிகழும் நிகழ்வாகும்.

 

இப்போது சொன்ன க்ஷயோபசம லப்தி விசுத்தி லப்தி தேசனா லப்தி மற்றும் ப்ராயோக்ய லப்தி இவை நான்கையும் பவ்ய ஜீவன்களும் அடையும் அபவ்ய ஜீவன்களும் அடையும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் எந்த உயிரானது விடாப்பிடியாக அடுத்த கட்டமான கரண லப்தியை அடைய தொடர்ந்து தளர்வின்றி முயற்சி செய்கிறதோ? அந்த ஜீவன் சம்யக்த்வத்தை நோக்கி முன்னேறும். நற்காட்சி அனுபவத்தைப் பெறும்.

 

இது வரை சொல்லப்பட்ட நான்கு லப்திகளும் யாருக்கு ஏற்படுகிறது?

 

யதாக்யாத சாரித்ரம் அதாவது பூரண திகம்பர முனி தர்ம ஒழுக்கம் அடைந்தவர்களுக்கா? அல்லது சகல சாரித்ரம் கொண்ட திகம்பர முனிவர்களுக்கா? அல்லது அணுவிரதங்களைக் கடைபிடிக்கும் தேசவிரத இல்லறத்தாருக்கா? அல்லது நற்காட்சி பெற்ற நான்காவது அவிரத நிலையில் உள்ள சம்யக்திருஷ்டி உயிர்களுக்கா? என்றால் இல்லை!! இது வரை அனந்தானந்த காலமாக நற்காட்சியே பெற்றிராத முதலாவது மித்யாத்வ குணஸ்தானத்தில் உள்ள அனாதி மித்யாதிருஷ்டிகளுக்கு தான் இந்த நான்கு லப்திகளும் கைகூடுகின்றன. அதற்குப் பிறகும் கரண லப்திகளும் அந்தரகரணமும் ஏற்பட்டு சம்யக்த்வமும் அதாவது முதன் முறையாக பிரதமோபசம சம்யக்த்வமும் அடையப் போகிறது.

 

இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுகிறது. இது வரை அஷ்ட கர்ம வினைகளையும் அழித்தொழித்து சித்த பதவி அடைந்த அத்தனை சித்த பகவான்களும் ஒரு காலத்தில் இந்த இருண்ட மித்யாத்வத்தில் இருந்து முதன்முறையாக பிரதமோபசம சம்யக்த்வம் பெற்று பிறகு படிப்படியாக 14 குணஸ்தானங்களிலும் முன்னேறி மோக்ஷம் அடைந்தவர்கள் தான். ஆகையால் வியவகார நயத்தில் சம்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் ஒரு ஜீவன் நிச்சய நயமான ஆத்மனை உணர்ந்து அதில் ஆழ்ந்து சம்யக்த்வம் எப்படி பெற முடியும்? என்ற வினாவிற்கே இடம் கிடையாது. அப்படியே உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ள இயலாத ஜீவன்களின் அறியாமையை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இது வரை சொல்லப்பட்ட இரண்டு பாராக்களும் என்னுடைய கருத்து சாஸ்திரியாரால் சொல்லப்பட்டது அல்ல. அவருடைய உரையில் இந்த கருத்து இடம் பெறவில்லை.

 

 

இது வரை பிறவி உயிரின் தளர்ச்சி அடையாத முயற்சியின் விளைவாக க்ஷயோபசம லப்தி விசுத்தி லப்தி தேசனா லப்தி மற்றும் ப்ராயோக்ய லப்தி இவைகள் நான்கையும் அடைந்த ஜீவன் இறுதியாக, கடைசி முயற்சியாக, தன்னுடைய புத்தியை அதாவது சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கில் தன்னுடைய ஆத்மனில் செலுத்த வேண்டும். அவ்வாறு சிந்தனையை குவித்து உள்ளுக்குள் ஆத்மனில் லயிக்க விடுவது மட்டுமே பிறவி உயிர் செய்ய வேண்டிய வேலை. எப்போது பிறவி உயிர் தன்னில் அதாவது ஆத்மனில் ஊன்றி விட்டதோ? அதற்குப் பிறகு ஆத்மனின் செயல்பாடு தொடங்கி விடும். பிறவி உயிரின் கடுமையான முயற்சி முழுமை அடைய ஆரம்பிக்கும்.

 

பொதுவான வழக்கு ஒன்று உண்டு. நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் நம்மை நோக்கி பத்து அடி ஓடி வருவான்! என்று ஆன்மீக வாதிகள் அல்லது படைப்புத் தத்துவ வாதிகள் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஆகும். ஆத்மனின் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை தான் என்பதை இப்போது நாம் உணரலாம். 'ஆன்மா' தான் இறைவன் என்பது மட்டும் அல்ல, அந்த ஆன்மாதான் நாம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.

 

கரண லப்திகளின் தொடக்கம் இனி ஆரம்பமாகிறது. கரணம் என்றால் பரிணாமம் என்று பொருள். லப்தி என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருள்.

—--------------------------------------------

இரண்டாம் பாகம்.

 

இது வரை புத்தி பூர்வமாக இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும், என்ற சிந்தனையில் முயற்சியில் நடந்த செயல்கள் ப்ராயோக்ய லப்தி தவிர மற்றவை  நம்முடைய ஆழ்ந்த ஆத்ம சிந்தனையால் ஏற்படுபவை. நம்முடைய உபயோகம் அல்லது கவனம் முழுவதும் ஆத்மனில் நிலை கொண்ட இந்த சமயத்தில் இருந்து உணர்வு பூர்வமாக செயல்பாடு, ஆத்மனின் செயல்பாடு! துவங்குகிறது.  இதற்குப் பிறகு நடைபெறுவது எல்லாம் ஆத்மனுள் நடக்கும் அந்தரங்க மாற்றங்கள் ஆகும். இவைகளை கேவல ஞானிகள் மட்டுமே அறிவர். நம்மால் அறிய முடியாது. ஆனால் இந்த கரண லப்திகளைப் பற்றி கேவலிகள் தங்கள் கேவல ஞானத்தினால் கண்டு உரைத்ததை ஜினாகமங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன அவற்றை பார்ப்போம்.

 

இனிமேல் ஆத்ம உணர்வில் லயிப்பது மட்டுமே நம்முடைய வேலை.  அடுத்து நடக்கும் மூன்று கரண லப்திகளும் அவைகளைச் சார்ந்து நடக்கும் கர்ம வினைகளின் பல்வேறு மாற்றங்களும் நம்மால் அறிய முடியாதது. கேவல ஞானிகள் மட்டுமே அறிவர். அந்த நிகழ்வுகளை ஆகமங்களில் இருந்து சாஸ்திரியார் விளக்குகிறார் அந்த விளக்கங்களை நான் கேட்டு எழுதுகிறேன். நம்முடைய வேலை ஆத்ம உணர்வில் லயிப்பது மட்டுமே.

 

கரண லப்தி அதப்ரவிருத்தி கரணம், அபூர்வ கரணம் மற்றும் அனிவிருத்தி கரணம் என்று மூன்று வகையாக நடக்கிறது. இந்த மூன்று கரண லப்திகளும் ஆத்மனின் செயல்பாடுகளே தவிர நம்முடைய செயல் அல்ல. நம்முடைய செயல், சிந்தனையை குவித்து ஒருமுகப்படுத்தி ஆத்மனில் செலுத்துவது அல்லது ஆழ்வது மட்டுமே. ஆத்மனில் நமது உபயோகம் சென்று அடைந்த க்ஷணத்தில் இருந்து ஆன்மா செயலுக்கு வருகிறது.

 

அதப்ரவிருத்தி கரணம்.

நம்முடைய கவனம் ஆத்மனில் ஒடுங்கிய அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு சமயமும் ஆத்மனின் பரிணாமம் தூய்மை அடைய ஆரம்பிக்கும். ஒரு அந்தர் முகூர்த்த காலம் அதப்ரவிருத்தி கரண காலம் ஆகும். இது ஜகன்ய அந்தர் முகூர்த்தம ஆகவும் இருக்கலாம். அல்லது உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்த காலமாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் இடையே பல மத்திம அந்தர் முகூர்த்தங்கள் உள்ளன. நம்முடைய முயற்சியைப் பொருத்து ஏதாவது ஒரு மத்திம அந்தர் முகூர்த்த நேரம் வரை அதப்ரவிருத்தி கரணம் இருக்கும்.

 

அதப்ரவிருத்தி கரணம் நிகழ்வு நடைபெறும் போது ஆரம்ப சமயத்தில் இருந்து அடுத்தடுத்த சமயங்களில் ஆத்மனின் பரிணாமம் தூய்மை அடைந்து கொண்டே இருக்கும். சமயம் என்பது கால அளவுகளில் மிகவும் சிறிய நுண்ணிய காலம் ஆகும். ஒரு அந்தர் முகூர்த்த நேரத்தில் எண்ணிக்கையில் அடங்காத நிறைய சமயங்கள் உள்ளன. அந்த சமயங்களின் கடைசி சமயம் வரை ஆத்மனின் பரிணாமம் தூய்மை அடைந்து கொண்டே இருக்கும்.

 

அதப்ரவிருத்தி கரணத்தை எவ்வாறு கணிப்பது?


ஒரு உயிர் முதல் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தூய்மை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதே உயிர் அடுத்த அல்லது இரண்டாவது சமயத்தில் முதல் சமயத்தில் ஏற்பட்ட தூய்மையை விட இன்னும் சற்று கூடுதலாக பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

 

அதே நேரத்தில் இன்னொரு உயிர் அதப்ரவிருத்தி கரணத்தில் முதல் சமயத்தில் பிரவேசிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அதன் தூய்மை முதலில் வந்த உயிருக்கு இரண்டாவது சமயத்தில் ஏற்பட்ட தூய்மையின் அளவில் இருந்தது என்றால் இதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். அதாவது அதப்ரவிருத்தி கரணத்தில் ஈடுபடுகின்ற பல உயிர்களின் பரிணாம தூய்மை சம அளவாக இருக்குமானால் இதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். அதாவது பல உயிர்கள் பெறும் தூய்மை சமமாக இருப்பதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். பல உயிர்களின் பரிணாமம்  சமமாக தூய்மை அடைவதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். அதப்ரவிருத்தி கரணம் முடியும் அடுத்த சமயம் முதல் அபூர்வ கரணம் ஆரம்பமாகும்.

 

அபூர்வ கரணம் என்றால் என்ன?


அதப்ரவிருத்தி கரணத்தில் இருந்து உயிர்கள் இரண்டாவது அபூர்வ கரண நிலைக்கு வரும் போது அவைகளின் பரிணாம தூய்மை சமயத்திற்கு சமயம் அவைகளின் முயற்சியைப் பொருத்து சமமாக இல்லாமல் அபூர்வ அபூர்வமாக அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சமயம் ஏற்படும் தூய்மை அடுத்த சமயத்தில் சமமாக இல்லாமல் மிகவும் அதிகமாக தூய்மை அடைந்து கொண்டே இருக்கும். கடைசி சமயம் வரை அளவின்றி அதிகரித்துக் கொண்டே போகும். இவ்வாறு உயிரின் பரிணாமம் வேறுபாடுகளுடன் அபூர்வ அபூர்வமாக அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு அபூர்வ கரணம் என்பது பெயர். அபூர்வ கரணம் முடிந்த அடுத்த சமயம் முதல் அனிவிருத்தி கரணம் ஆரம்பமாகும்.

 

அனிவ்ருத்தி கரணம் என்றால் என்ன?

அனிவ்ருத்தி கரண நிகழ்வில் இருக்கும் பல உயிர்களின் பரிணாம தூய்மை எந்தவொரு வேறுபாடுகளும் இன்றி ஒரே அளவில் மாற்றம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும். இதற்கு அனிவிருத்தி கரணம் என்று பெயர்.

 

இது வரை சொல்லப்பட்டவை 30-3-2023 திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரியாரால் விளக்கமாக சொன்னதை சுருக்கமாக சொல்லப்பட்டது.

—----------------------------------------------

"ஒரு உயிர்" அடிப்படையில் கரண லப்தியில் ஈடுபடும் போது இந்த மூன்று கரணங்களின் தன்மை எவ்வாறு இருக்கும்?

 

ஒரு உயிர் அடிப்படையில் கரண லப்தியில் அதப்ரவிருத்தி கரணத்தின் முதல் சமயத்தில் ஏற்படும் ஆத்மனின் விசுத்த பரிணாமம் குறிப்பிட்ட அளவு இருக்கும் என்றால் அதற்கு அடுத்த சமயத்தில் ஆத்மனின் தூய்மை அனந்த மடங்கு அதிகரிக்கும். அடுத்தடுத்த சமயங்களில் ஆத்மனின் தூய்மை அனந்தனந்த மடங்கு அடுத்தடுத்து அதிகரித்துக் கொண்டே போகும். இவ்வாறு அந்தர் முகூர்த்த காலம் வரை தொடர்ந்து சமயத்திற்கு சமயம் ஆத்மனின் தூய்மை அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர்.

 

அதப்ரவிருத்தி கரணம் நிறைவு பெற்ற அடுத்த சமயத்தில் இருந்து ஒவ்வொரு சமயமும் நம்முடைய உணர்வானது அபூர்வ அபூர்வமாக மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும். அதாவது நாம் இது வரை அனுபவித்திராத இந்திரிய சுகங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மசுகத்தை ஆத்ம உணர்வை அனுபவிப்போம். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆத்ம அனுபவம் அல்லது சுகம் என்றும் சொல்லலாம். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட வெற்று வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆத்ம உணர்வாகும். இதற்கு அபூர்வ கரணம் என்று பெயர். அபூர்வ கரணத்தின் இறுதி சமயம் வரை சமயத்திற்கு சமயம் ஆத்மனின் விசுத்த பரிணாமம் அபூர்வ அபூர்வமாக அதிகரித்துக் கொண்டே செல்லும்.

 

அபூர்வ கரணம் நிறைவு பெற்ற அடுத்த சமயத்தில் இருந்து இப்போது நாம் அடைந்துள்ள அல்லது அடைந்து கொண்டிருக்கின்ற ஆத்மானுபவத்தில் ஆத்ம உணர்வில் இருந்து வெளியே வர மனமின்றி அதிலேயே ஆழ்ந்து இருப்போம். இந்த நிலைக்கு அனிவிருத்தி கரணம் என்று பெயர். மேலும் அனிவிருத்தி கரணத்தில் ஆத்மனின் தூய்மை ஒரே சீராக தூய்மை அடைந்து கொண்டே இருக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்காது.

 

இந்த மூன்று கரண லப்தி காலத்தில் நம்முடைய கர்ம வினைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது நம்மால் அறிய முடியாதது. இந்த கரணலப்தி காலத்தில் ஏற்படும் அபூர்வ உணர்வுகளை மட்டும் தான் நம்மால் உணர முடியும். உள்ளுக்குள் நிகழும் மாற்றங்களை கேவல ஞானிகள் மட்டுமே அறிவர். அவைகள் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

 

அதப்ரவிருத்தி கரண காலம் முழுவதும் சமயத்திற்கு சமயம் ஆத்மனின் தூய்மை அனந்தனந்த மடங்கு அதிகரிக்கும். அதோடு கூட ஆத்மனில் இருக்கும் முன்பே கட்டியுள்ள கர்மங்களின் கால அளவு குறையும்.

புதிதாக கட்டும் கர்மங்களின் கால அளவு குறைந்து கட்டும்.

புண்ணிய கர்மங்களின் பலன் தரும் தன்மை கூடுதலாகும்.

பாவ கர்மங்களின் பலன் தரும் தன்மை குறையும்.

 

அதப்பிரவ்ருத்தி கரணம் நிறைவு பெற்றதும் அபூர்வ கரணம் ஆரம்பமாகும். இதனுடைய கால அளவு அதப்ரவிருத்தி கரண காலத்தை சங்க்யாத அளவாகப் பிரித்து அதில் ஒரு பகுதி எவ்வளவு காலமோ? அது அபூர்வ கரணத்தின் காலமாகும். இந்த அபூர்வ கரணத்தின் ஒவ்வொரு சமயந்தோறும் முன்பே கட்டியுள்ள கர்மங்களின் ஸ்திதிகாண்ட காதம் ஏற்படும். பூர்வ கர்மங்களின் கால அளவு அதாவது ஸ்திதி பந்தம் குறைந்து விடும்.

 

இரண்டாவதாக ஆத்மனில் கட்டியுள்ள கர்மங்களின் அனுபாக காண்ட காதம் நடைபெறும். அதாவது கர்மங்களின் பலன் தரும் தன்மை அல்லது ஆற்றல் மிகவும் அதிகமாக குறைந்து விடும்.

 

மூன்றாவதாக குணஸ்ரேணி நிர்ஜரை நடக்கும். அதாவது மித்யாத்வம் மற்றும் அதனைச் சார்ந்த கர்மங்களின் நிர்ஜரை ஏற்படும். அதாவது அழியத் துவங்கும்.

 

நான்காவதாக புண்ணிய கர்மங்களின் பலன் தரும் தன்மை கூடுதலாகும். இன்பம் சுகம் முதலானவற்றை தரும் ஸாதா வேதனீய கர்மங்களின் பலன் தரும் தன்மை கூடுதலாகும். மேலும் தேசகாதி கர்மவினைகளின் நற்பலனைத் தரும் கர்ம வினைகளின் பலன் தரும் தன்மை கூடுதலாகும். தேசகாதி கர்ம வினைகளில் தீய பலனைத் தரும் கர்ம வினைகளின் பலன் தரும் தன்மை குறையும்.

பாவ கர்மங்களின் பலன் தரும் தன்மை குறைந்து விடும். அதாவது துன்பம் துக்கம் முதலானவற்றை தரும் அஸாதா வேதனீய கர்மங்களின் பலன் தரும் தன்மை வெகுவாக குறைந்து விடும்.

 

இந்த நான்கு  நிகழ்வுகளும் அபூர்வ கரண காலத்தில் நிகழும்.

 

அடுத்து அநிவ்ருத்தி கரணம்! அபூர்வ கரணம் நிறைவு பெற்ற உடன் ஆரம்பமாகும். இதனுடைய கால அளவு அபூர்வ கரணத்தின் கால அளவின் ஸங்க்யாதத்தில் ஒரு பகுதியாக இருக்கும்.

 

 

மூன்று கரணங்களும் சேர்ந்து ஒரு அந்தர் முகூர்த்த காலம் மட்டுமே நிகழும். அதாவது அனிவிருத்தி கரண காலம குறிப்பிட்ட அளவு காலம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காலத்தை விட சங்க்யாதத்தில் ஒரு பகுதி கூடுதல் அபூர்வ கரண காலம் ஆகும். அபூர்வ கரண காலத்தை விட சங்க்யாதத்தில் ஒரு பகுதி கூடுதல் அதப்ரவிருத்தி கரண காலம் ஆகும். இந்த மூன்று கரணங்களும் சேர்ந்து ஒரே ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே. அந்த கால அளவிற்கு உள்ளாக மூன்று கரணங்களும் நடந்து முடிந்து விடும். அவைகள் சார்ந்த கர்ம வினை மாற்றங்களும் நடந்து முடிந்து விடும். அடுத்து சம்யக்த்வம் ஏற்படும் முறையை பார்ப்போம்.

—----------------------------------------------

மூன்றாம் பாகம்.


அனிவ்ருத்தி கரண நிகழ்வில் சமயந்தோறும் ஆத்மனின் விசுத்த பரிணாமம் அதாவது தூய்மை ஒரே சீராக நடைபெறும். அனிவ்ருத்தி கரண நிகழ்வு நிறைவு பெறும் தருணத்தில் "அந்தரகரணம்". ஏற்படுகிறது.

 

அந்தரகரணம் என்றால் என்ன?


அனிவ்ருத்தி கரணம் நிறைவு பெறும் தருணத்தில் சம்யக்த்வம் அடைய நேரம் வந்துவிட்டது என்று பொருள். அப்போது ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக் கூடிய மித்யாத்வ கர்ம வினை நிஷேகங்களை ஒரு அந்தர் முகூர்த்த நேரம் வரை உதயத்திற்கு வராமல் ஆத்மா தன் ஆற்றலை பயன்படுத்தி தடுத்து நிறுத்தும் அல்லது வேறு வடிவில் அந்த கர்ம வினைகளை மாற்றிவிடும். இந்த அந்தர் முகூர்த்த நேரமானது மித்யாத்வ பிரக்ருதிகளின் குறைந்தபட்ச கால அளவும் இல்லாமல் அதிகபட்ச கால அளவும் இல்லாமல் அதற்கு மத்தியில் ஒரு குறைந்த அந்தர் முகூர்த்த நேரத்திற்கு மித்யாத்வ ப்ரக்ருதி நிஷேகங்களை உதயத்திற்கு வராமல் ஆன்மா செய்து விடும்.

 

அதற்குப் பிறகும் அந்த கால அளவிற்கு மேல் மித்யாத்வ ப்ரக்ருதி நிஷேகங்களை உதயத்திற்கு வர விடாமல் உபசமம் செய்து தணித்து விடுகிறது.

 

இப்போது இந்த அந்தர் முகூர்த்த நேரம் வரை மித்யாத்வம் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும். அந்த வெற்றிடத்தை சம்யக்த்வம்! அதாவது ஆத்ம உணர்வு! முழுமையாக ஆக்கிரமிக்கும். அதாவது நம் உயிர் சம்யக்த்வத்தை பெற்று அந்த உணர்வில் ஆழ்ந்து இருக்கும். இது வரை மூன்று கரண லப்திகளிலும் நாம் பெற்றது ஆத்ம சுகம். இப்போது நாம் பெறுவது ஆத்மானுபவம் அதாவது ஆத்மனின் சுடரை சக்தியை ஆற்றலை உணர்வோம். இது அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே இருக்கும். பிறகு மித்யாத்வம் ஏற்கனவே இருந்தவாறு மீண்டும் சூழும்.

 

இது தான் உண்மையான "சம்யக்தர்சனம்" "சம்யக்தர்ஷன்" "நற்காட்சி" என்று ஆகமங்கள் அறுதியிட்டு உறுதியாகச் சொல்கின்றன. நற்காட்சி பெறுவதற்கு இவ்வளவு நீண்ட நடைமுறை வரையறை வரைமுறையை நாம் கடைபிடிக்க வேண்டும். மித்யாத்வமானது நாம் சம்யக்த்வம் பெற்ற பிறகு சம்யக்த்வ காலமான அந்த அந்தர் முகூர்த்த நேரம் முடிந்த பிறகு மீண்டும் நம்மை சூழ்ந்து விடும். ஆனால் நாம் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் உடைக்கவே முடியாதிருந்த மித்யாத்வமாகிய கடினமான பாறையை முதல் முறையாக உடைத்து சம்யக்த்வம் பெற்று விட்டோம். உடைக்கப்பட்டு பலம் குறைந்த மித்யாத்வ ப்ரக்ருதிகளை மீண்டும் உடைத்து சம்யக்த்வம் பெறுவது என்பது சுலபமான விஷயமே. ஆனால் எத்தனை முறை சம்யக்த்வம் பெற வேண்டுமென்றாலும் ஆத்ம சிந்தனை ஆத்ம ஞானம் அதில் அசைக்க முடியாத நம்பிக்கை சம்யக்த்வம் பெற்றே தீருவேன் என்று தீராத வேட்கை இவைகளின் அடிப்படையில் க்ஷயோபசம லப்தி விசுத்தி லப்தி தேசனா லப்தி பிராயோக்ய லப்தி மூன்று கரணலப்திகள் பரிணாமம் அவைகளின் இறுதியில் மித்யாத்வ ப்ரக்ருதிகளை உபசமம் செய்து சம்யக்த்வம் பெற்று விட முடியும். ஆகவே முயற்சி எப்போதும் குறையவே கூடாது. முயற்சியில் தளர்ச்சி என்பதே கூடாது.

 

அனாதி காலமாக மித்யாத்வத்தில் இருந்து விலக முடியாமல் இருந்த அனாதி மித்யாதிருஷ்டி தர்சன மோகனீய வினைகளான மித்யாத்வத்தை உபசமம் செய்து அனாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெறுவது இந்த சம்யக்த்வம் தான். இதற்கு பிரதமோபசம சம்யக்த்வம் என்று பெயர். ப்ரதமோபசம சம்யக்த்வம் அடைவதற்கு சற்று முன்பு வரை அந்த ஆத்மனின் ஸத்தாவில் தர்சன மோகனீய மித்யாத்வ கர்மவினைகள் மட்டும்  தான் இருப்பில் இருக்கும். அதை சற்று நேரம்  ஒதுக்கி வைத்து விட்டு சம்யக்த்வத்தை அளிப்பது ஆத்மனின் அளப்பரிய ஆற்றல் தான். இந்த பிரதமோபசம சம்யக்த்வம் முழுமுயற்சியுடன்,  மித்யாத்வ சேற்றில் மூழ்கி இருந்து வெளியே வர நினைக்கும் அத்தனை பவ்ய உயிர்கள் அனைத்தும் பெறக்கூடியதே.

 

அந்தரகரண நிகழ்வின்போது ஒரு மொத்தமாக இருந்த மித்யாத்வ தர்சன மோகனீய கர்மமானது ஆத்மனின் விசுத்த பரிணாமம் காரணமாக உடைந்து மித்யாத்வம், சம்யக்மித்யாத்வம் மற்றும்  சம்யக்த்வம் என மூன்று தர்சன மோகனீய கர்ம வினைகளாக ஸத்தாவில் இருப்பாக நிற்கும். இது போன்றே இவைகளை ஒவ்வொன்றாக ஐந்து லப்திகள் (கரண லப்திகள் உள்பட) கொண்டு மற்றும் அந்தரகரணம் பெற்று உபசம சம்யக்த்வம் க்ஷயோபசம சம்யக்த்வம் இறுதியாக க்ஷாயிக சம்யக்த்வம் அடைய வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் கரண லப்திகள் இல்லாமல் எந்த சம்யக்த்வமும் பெற முடியாது. இந்த கரண லப்திகளும் ஆத்ம சிந்தனை, ஆத்மஞானம், அதில் தெளிவு, ஆத்மனில் முழு நம்பிக்கை, சம்யக்த்வம் பெற்றே தீருவேன் என்ற தீராத வேட்கை‌ இவைகளின் அடிப்படையில் நம்முடைய கவனம் முழுவதையும் ஆத்மனில் குவித்தல் இவை அனைத்தும் ஒன்று சேரும் போது தான் மீண்டும் சம்யக்த்வம்  வாய்க்கும்.

 

ஒரு முறை சம்யக்த்வம் பெற்ற உயிரானது சற்றே குறைந்த அர்த்த புத்கலபராவர்த்தன கால அளவிற்கு உள்ளாக மோக்ஷத்தை அடைந்து விடும். இவ்வாறு ஆகமங்கள் கூறுகின்றன. இது வரை 31-3-2023 தேதியில் சம்யக்த்வம் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரி அவர்களுடைய உரையை ஓரளவு விரிவாகக் கூறியுள்ளேன். இதற்கு பிறகு மேலும் மோக்ஷ மார்க்கப் பிரகாசகம் ஏழாவது அத்தியாயத்தை பூர்த்தி செய்ய பல கருத்துக்களை கூறினார். கரண லப்திகளின் சாரம் மற்றும் சம்யக்த்வம் அடைவதற்கு உண்டான வழிமுறைகளை மட்டும் அக்கறையுடன் சொல்வதற்கு யாருக்கும் ஆர்வம் இல்லை அவ்வாறே ஆர்வம் இருந்து சொன்னாலும் அதன் முக்கியத்துவம் உயிர்களுக்கு தெரிவதில்லை ஆகவே இந்த பகுதியை மட்டும் எடுத்துக் கூறியுள்ளேன். மேலும் சில கருத்துக்களை எழுதிய பிறகு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

 

ஒரு முறை சம்யக்த்வம் பெற்ற பிறகு மீண்டும் மித்யாத்வ சேறு நம்மைச் சூழ்ந்து விடும். ஏனெனில் சம்யக்த்வமானது அந்த குறிப்பிட்ட அந்தர் முகூர்த்த காலம் மட்டுமே இருக்கும். பிறகு மீண்டும் மித்யாத்வம் சூழ்ந்து விடும். இது பற்றி பெரிதாக கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் நாம் இது நாள் வரை அனந்தானந்த காலமாக மித்யாத்வத்தினால் சூழப்பட்டு இருந்தோம். அந்த மித்யாத்வ பாறையை உடைத்து ஆத்மனின் சக்தியைச் சிறிதளவு உணர்ந்தோம். அந்த சிறிய கால அளவு ஆத்மானுபவம் நம்மை முக்தியை நோக்கி நிச்சயமாக அழைத்துச் சென்று விடும். ஆனால் தொடர்ந்து ஆத்ம சிந்தனையில் ஆழ்ந்து உபசம சம்யக்த்வத்தை க்ஷயோபசம சம்யக்த்வத்தை பெற்று அதற்கும் பிறகு க்ஷாயிக சம்யக்த்வத்தைப் பெற்று விட தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சியில் தளர்ச்சி என்பதே இருக்கக் கூடாது.

 

இந்த ஐந்தாம் காலத்தில் மோக்ஷம் கிடையாதே தவிர உயிர்கள் சம்யக்த்வம் பெறுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஒரு பிறவி உயிர் அதன் வாழ்நாளில் பல முறை சம்யக்த்வம் பெற வாய்ப்பு உள்ளது அதற்கு தடையில்லை. ஆனால் நாம் நற்காட்சியின் அருமையை அதன் அவசியத்தை உணராமல் வாழ்நாளில் ஒரு முறையாவது நற்காட்சி அடைவதற்கான முயற்சியே செய்யாமல் வீணே காலத்தை ஆயுளை விரயம் செய்து கொண்டு இருக்கிறோம். ஆத்மனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை தொடர்ந்த ஆத்ம சிந்தனை அதில் களங்கம் அற்ற தெளிவு , மோக்ஷ தத்துவம் எழிலும் அசைக்க முடியாத நம்பிக்கை அவற்றில் ஆழ்ந்த ஞானம், மீண்டும் சம்யக்த்வம் பெற்றே தீர வேண்டும் என்ற தணியாத வேட்கை அதனோடு ஆத்மனில் ஆழ்தல் அல்லது ஒன்றுதல் இது தான் நற்காட்சி பெறுவதற்கான அவசியத் தேவை. இப்படி தொடர்ந்து முயற்சி செய்வீர்களானால் சம்யக்த்வம் உங்கள் வசப்படும். மோக்ஷ சுகம் உங்களுக்கு சொந்தமாகும்.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே!!!

 

இதோடு கட்டுரையை முடித்து விட நினைத்தேன்.. ஆகம அறிஞர் திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரி அவர்கள் மேலும் 2023 ஜுலை 17,18,19 ஆகிய தேதிகளில் பரமாகம வகுப்பில் உரையாற்றிய மூன்று ஆடியோக்களை அனுப்பி சம்யக்த்வம் பற்றி மேலும் அரிய கருத்துக்களை எனக்கு சாஸ்திர தானம் அளித்து உள்ளார். அந்த கருத்துக்களையும் எழுதி முடிக்கும் போது தான் இந்த கட்டுரை முழுமை அடையும். பவ்யர்கள் அசௌகரியத்திற்கு மன்னிக்கவும். மீண்டும் இக்கட்டுரை தொடரும்.

-------------------

முந்தைய பதிவுகளில் பஞ்ச லப்திகளின் துணை கொண்டு அனாதி மித்யாதிருஷ்டி முதன் முதலாக சம்யக்த்வம் அடையும் வழி முறைகளைப் பார்த்தோம். அதற்குப் பிறகு உயிரானது பிரதமோபசம சம்யக்த்வம், க்ஷயோபசம சம்யக்த்வம், த்விதியோபசம சம்யக்த்வம் மற்றும் க்ஷாயிக சம்யக்த்வம் இவைகளை விடாமுயற்சியுடன் பெற்று உபசம மற்றும் க்ஷபக ஸ்ரேணிகளில் ஏறி கர்ம வினைகளை அழித்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவதற்கு இத்தனை சம்யக்த்வங்களும் எவ்வாறு உயிருக்குத் துணையாக இருக்கின்றன என்பதை மேலும் விளக்கும் முகமாக இந்தக் கட்டுரை தொடர்கிறது. மேலும் கட்டுரையைத் தொடர்வதற்கு முன் சில கடினமான சமஸ்கிருத வார்த்தைகளின் பொருளை முதலில் அறிந்து கொள்வோம்.

--------------------

பிரசஸ்த உபசமம் என்றால் என்ன?


கரண லப்திகளின், அதாவது அதப்ரவிருத்தி கரணம், அபூர்வ கரணம், அநிவ்ருத்தி கரணம் இம்மூன்று காரணங்களின் துணை கொண்டு இறுதியில் அந்தரகரணம் உபசம கரணம் கொண்டு கர்ம வினைகளை உபசமம் செய்வதற்கு பிரசஸ்த உபசமம் என்று பெயர். அனந்தானுபந்தி கஷாயங்கள் பிரசஸ்த உபசமம் அடையாதவை ஆனால் விஸய்யோஜன முறையில் அனந்தானுபந்தி கஷாயங்கள் அப்ரத்யாக்யான கஷாயங்கள் ஆகவும், ப்ரத்யாக்யான கஷாயங்கள் ஆகவும் சஞ்ஜ்வலன கஷாயங்கள் ஆகவும் மாற்றம் அடைந்து பின்னர் உபசமம் அடையும். நேரடியாக அனந்தானுபந்தி கஷாயங்கள் கரணலப்திக்கு கட்டுப்படாது.

 

அப்ரசஸ்த உபசமம் என்றால் என்ன?

கரண லப்திகளின் துணை இல்லாமல் கர்ம வினைகள் தானாக தணிவடைவதற்கு  அப்ரசஸ்த உபசமம் என்று பெயர்.  ஒரு ஜீவன் சம்யக்த்வம் பெறுவதற்கான முழு முயற்சியுடன் ஆத்ம சிந்தனையில் ஈடுபட்டு இருக்கும் போது அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோப கஷாயங்கள், தானாகவே மந்த நிலையை அடைந்து விடும். மேலும் அனந்தானுபந்தி கஷாயங்கள் கரணலப்திக்கு கட்டுப்பட்டு உபசமம் அடையாது. தானாகத் தான் உபசமம் அடையும்.  இது ஒரு தனித்தன்மையாகும். அனாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெற முயற்சி செய்யும்போதும் அதற்குப் பிறகு ஸாதி மித்யாதிருஷ்டி உபசம சம்யக்த்வம் மற்றும் க்ஷயோபசம சம்யக்த்வம் பெற முயற்சி செய்யும்போதும் அனந்தானுபந்தி கஷாயங்கள் குரோதம் மானம் மாயை லோபம் இவை நான்கும் அப்ரசஸ்த உபசம நிலையில் தாங்களாகவே தணிந்து விடும். இது இயல்பாக நடைபெறும் நிகழ்வாகும்.

கஷாயங்கள் அப்ரசஸ்த உபசமம் மட்டுமே அடையும்.

 

2. அனந்தானுபந்தி கஷாயங்கள் கரணலப்திக்கு கட்டுப்பட்டு உபசமம் அடையாது.


3. மந்த நிலையில் உள்ள  அனந்தானுபந்தி கஷாயங்களை  விஸய்யோஜனம் முறையில் அப்ரத்யாக்யான, ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்கள் ஆக கரணலப்தி கொண்டு மாற்றி அவைகளின் பலத்தைக் குறைக்க முடியும். இது சாத்தியம். நேரடியாக அனந்தானுபந்தி கஷாயங்களை கரணலப்தி மூலம் உபசமம் செய்வது என்பது சாத்தியமில்லை.

 

இந்தக் கட்டுரையில் அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றி விரிவாகச் சொல்லப்போவதில்லை. உபசம மற்றும் க்ஷயோபசம சம்யக்த்வம் இரண்டிலும் பொதுவாக அப்ரசஸ்த உபசமம் என்ற நிலையிலும் க்ஷாயிக சம்யக்த்வத்தில் விஸய்யோஜன முறையில் அனந்தானுபந்தி கஷாயங்கள் அப்ரத்யாக்யான ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்களாக மாற்றப்படும் என்று குறிக்கப்படும். இந்தக் கட்டுரையின் இறுதியில் அவைகளின் நிலை பற்றி சற்று விரிவாகப் பேசப்படும்.

 

விஸய்யோஜனம் என்றால் என்ன?


கரண லப்திகளின் துணை கொண்டு கர்ம வினைகளை ஒடுக்கி அதே தன்மையுள்ள அவைகளுக்கு அடுத்த சற்றே பலம்  குறைந்த கர்ம வினைகளாக மாற்றம் செய்வது ஆகும். உதாரணமாக மித்யாத்வ தர்சன மோகனீய வினை பரமாணுக்களை ஒடுக்கி சம்யக்மித்யாத்வ அதாவது மிஸ்ர மோகனீய பரமாணுக்கள் ஆக மாற்றம் செய்தும் சம்யக்மித்யாத்வ மிஸ்ர மோகனீய பரமாணுக்களை ச்சல மல அகாட தோஷங்கள் கொண்ட சம்யக்த்வ மோகனீய பரமாணுக்களாக மாற்றம் செய்வதற்கு விஸய்யோஜனம் என்று பெயர். 


சம்யக்த்வம் என்றால் என்ன?


ஆத்ம ஸ்ரத்தாணம் சம்யக் தரிசனம். ஆத்மனில் நம்பிக்கை கொள்வது சம்யக்த்வம் ஆகும்.

தத்வார்த்த ஸ்ரத்தாணம் சம்யக் தரிசனம். ஆத்ம தத்துவத்திலும்  மோக்ஷ தத்துவம் ஏழிலும் நம்பிக்கை கொள்வது சம்யக்த்வம். தேவ சாஸ்திர குரு ஸ்ரத்தாணம் சம்யக்த்வம். இவை ஆரம்ப நிலையில் சொல்லப்படுவது. ஆனால் கரண லப்திகளின் துணை கொண்டு ஏற்கனவே அனந்தானுபந்தி கஷாயங்கள் மந்த கதியில் உள்ள நிலையில், மித்யாத்வ ப்ரக்ருதிகளை உபசமம் செய்து அல்லது தடுத்து விட்டு அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆத்மா தன்னை தன் ஆற்றலை க்ஷணத்தில் பிறவி உயிருக்கு வெளிப்படுத்தும் அபூர்வ நிகழ்வே! உண்மையான சம்யக்தர்சனம் அல்லது சம்யக்த்வம் ஆகும். இதை ஆத்மானுபூதி அல்லது ஆத்மானுபவம் என்றும் சுருக்கமாகச் சொல்லலாம்.

 

சம்யக் தரிசனம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆத்மானுபவம் பெறுதல் என்று பொருள் கொள்வதே சிறப்பாகும்.

 

ஆத்மானுபவம் என்பது ஆத்மனில் திட நம்பிக்கை கொண்டு தீவிர ஆத்ம தேடலில் மனம் குவிந்து ஆத்மனில் ஆழும் போது ஏற்படும் காட்சிகளற்ற அபூர்வ உணர்வே ஆத்மானுபவம் ஆகும். சாதாரணமான ஆத்மனின் பால் நம்பிக்கை இன்றி தியானம் செய்யும் போது ஏற்படும் காட்சிகள் அதில் ஏற்படும் உணர்வுகள் ஆத்மானுபவம் அல்ல, அவை மாயையாகும் அல்லது நம்முடைய முந்தைய எண்ணங்கள் காட்சிகள் ஆகத் தெரிவதாகும். அவை நற்காட்சி அல்லது சம்யக்தர்சனம் ஆகாது.

 

சம்யக்த்வம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆத்மானுபவம் பெற்று ஆத்மனில் ஐயத்திற்கு இடமின்றி திட நம்பிக்கையுடன் இருப்பது என்று பொருள் கொள்வதே நன்மை பயக்கும்.

 

மித்யாத்வம் என்றால் என்ன?


ஆத்ம அஸிரத்தாணம் மித்யாத்வம். ஆத்மனில் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது மித்யாத்வம். ஆத்மனைத் தவிர புறத்தில் புறப்பொருள்களில் நம்பிக்கை கொள்வது மித்யாத்வம்.. மித்யாத்வம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல தீய நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் உடல் சார்ந்த அபிலாஷைகள் புறப் பொருள் சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தின் ஒட்டுமொத்த வடிவம். நம்முடைய கவனத்தை ஆத்மனில் திரும்ப விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பது மித்யாத்வம். நம்மை முற்றிலும் சூழ்ந்து இருப்பது மித்யாத்வம் அதனை விலக்கி வெளிப்படும் போது தான் சம்யக்த்வத்தை நாம் உணர முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் உடலைச் சார்ந்து மட்டும் முழுவதும் நம்பிக்கை கொண்டு ஆத்மனில் நம்பிக்கையே இன்றி இருப்பது மித்யாத்வம்.


 அனாதி மித்யாதிருஷ்டி என்றால் யார்?


எந்த உயிரானது அனந்தானந்த பிறவிகளில் அனாதி காலமாக மித்யாத்வத்திலேயே உழன்று கொண்டு சம்சாரக் கடலில் இருந்து இன்று வரை வெளியே வரவே முடியாது தவித்துக் கொண்டு இருக்கின்றதோ? இது நாள் வரை சம்யக்தரிசனத்தை அடையாமல் இருக்கின்றதோ? அந்த உயிருக்கு அனாதி மித்யாதிருஷ்டி என்று பெயர்.


ஸாதி மித்யாதிருஷ்டி என்றால் யார்?

இது நாள் வரை சம்யக்த்வமே பெறாமல் இருந்து மிக்க பிரயாசையுடன் பாடுபட்டு முதன் முறையாக பிரதமோபசம சம்யக்த்வம் பெற்று அந்த பிரதமோபசம சம்யக்த்வமும் ஒரு அந்தர் முகூர்த்த நேரத்திற்கு மேல் நீடிக்காமல் போக மீண்டும் மித்யாத்வத்தால் சூழப்பட்ட  உயிருக்கு ஸாதி மித்யாதிருஷ்டி என்று பெயர். ஒரு முறை சம்யக்த்வம் பெற்று விட்ட உயிர், அனாதி என்ற சொல்லை நீக்கி ஸாதி மித்யாதிருஷ்டி என்று அழைக்கப்படும். ஒரு முறை சம்யக்த்வத்தை பெற்று விட்ட உயிர் ஸாதி மித்யாதிருஷ்டி என்று அழைக்கப்படும். தொடர்ந்த முயற்சிகளால் மீண்டும் மீண்டும் சம்யக்த்வம் பெறும் வல்லமை ஸாதி மித்யாதிருஷ்டிக்கு உண்டு.


பிறவி உயிர் அல்லது சம்சார ஜீவன் என்றால் என்ன?


அஜீவப்பொருள் (உடல்) + ஜீவன் சேர்ந்த நிலை சம்சார ஜீவன் ஆகும்.


அஜீவப்பொருள் (உடல்) கழித்தல் ஜீவன் இல்லாத நிலை ஜடப்பொருள் ஆகும். இயக்கமற்ற அஜீவப்பொருள் அதாவது உடல் ஜடமாகும் அது அழிந்து விடும். 


ஐம்புலன்கள் மற்றும் மனம்+ஆன்மா சேர்த்து பிறவி உயிர் ஆகும். ஆனால் நாம் நம்மை ஆன்மாவாக உணர்வது இல்லை. நாம் உடலாக மட்டுமே பார்க்கின்றோம் அங்கே தான் மாபெரும் தவறை ஒவ்வொரு மனிதரும் செய்து கொண்டு இருக்கிறோம்.  உடலையே ஆத்மாவாக‌ நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். நிரந்தரமான ஆன்மாவை விட்டு விட்டு உடல் தளர்ந்து ஆயுள் முடிந்ததும் அழியப் போகும் நம் உடலைத்தான் நிரந்தரமானது என்ற மயக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆன்மா வேறு! நம் உடல் வேறு! என்பதை நாம் உணர்வதில்லை.


ஆன்மா நம் உடலில் ஒவ்வொரு அணுவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஏனெனில் ஆன்மா எந்தப் பிறவியிலும் முழுவதும் ஐக்கியமாகி விடும் தன்மை கொண்டது. அதாவது மிக நுண்ணிய நிகோத ஜீவனில் இருந்து நமக்குத் தெரிந்த மிகப் பெரிய காட்டு யானை வரையிலும், மேலும் தேவ பிறவிகளில் ஒரு சில பிறவிகள் மிகப்பெரிய விஸ்வரூபம் கொண்டு இருக்கும் அந்த உடல்களில் கூட முழுமையாக வியாபித்து இருக்கும் தன்மை கொண்டது. ஆகையால் உடல் வேறு! ஆன்மா வேறு! என்பது நம் புத்திக்கு எட்டுவதே இல்லை.


ஐம்புலன்கள் மற்றும் மனம்+ சுயநினைவு அல்லது உயிர்ப்பு சேர்ந்த நிலை பிறவி உயிர் ஆகும். ஏனெனில் உயிர் நம்முள் இருக்கிறது.


இந்தப் பிறவி உயிர் சுய நினைவுடன்  ஆத்மனைத் தன்னுள்ளே எப்போது தேட ஆரம்பிக்கின்றதோ? உணர ஆரம்பிக்கின்றதோ? அப்போது தான் இந்தப் பிறவி உயிரை ஆன்மா உருவாக்கியதன் பலன் பூரணமாகும்.  அதுவரை இந்த பிறவி வீண்தான். வெறும் கர்ம வினைகளை அனுபவித்துக் கழிக்கும் ஒரு சாதாரண கருவியாகத் தான் இந்தப் பிறவி கருதப்படும்.


ஆன்மா மோக்ஷப் பாதையில் பயணிக்க "பிறவி உயிர்" சுய நினைவுடன் ஆத்மனைத் தன்னுள்ளே தேட ஆரம்பிக்க வேண்டும். அப்போது  தான் ஆன்மா மோக்ஷப் பாதையில் நுழைய முடியும். அது வரை ஆன்மா சம்சாரக் கடலில் இருந்து கரையேற வாய்ப்பே கிடைக்காது. தான் செய்த கர்ம வினைகளின் பயன்களான சுக துக்கத்தை அனுபவித்துக் கழிக்கும் செயலைத் தான் வெறுமனே செய்து கொண்டு இருக்கும். நிர்ணயித்துக் கொண்டு வந்த கர்ம வினைகளை கழித்து முடித்தாலும் மேலும் கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளத் தான் செய்யும்.


 நற்காட்சியின் எட்டு அங்கங்கள் யாவை?

1.நிச்சங்கை எனப்படும் ஐயம் இன்மை. வீதராக பகவானால் அருளப்பட்ட மோக்ஷ தத்துவத்தை தர்ம நெறிகளை ஐயம் கொள்ளாமல் நம்புவது நிச்சங்கை எனப்படும். சங்கை என்றால் ஐயம். நிச்சங்கை என்றால் ஐயம் இன்மை.

 

2.அவாவின்மை எனப்படும் நிஷ்காங்க்ஷை காங்க்ஷை என்றால் அவா, ஆசை என்று பொருள்படும். உலக இந்திரிய சுகங்களில் விருப்பங்கள் கொள்ளுதலை முற்றிலும் நீக்கி விடுதல் அவாவின்மை எனப்படும். அவாவானது மோக்ஷ சுகத்தை நாடுவதில் தீவிரமாக இருப்பது அவா அல்லது ஆசை என்ற குற்றமல்ல.

 

3.நிர்விசிகித்ஸை எனப்படும் அருவருப்பின்மை.

விசிகித்ஸை என்பது வெறுப்பு மற்றும் அருவருப்பு என்று பொருள். நிர்விசிகித்ஸா என்றால் அருவருப்பின்மை என்று பொருள். நமக்கு ஏற்படும் நோய், பசி, தாகம், குளிர், வெப்பம் இவைகளால் உண்டாகும் துன்பம் துயரங்கள் இவற்றை பொருட்படுத்தாமல் பொறுத்துக் கொள்வதும், நம் உடலில் இருந்து வெளிப்படும் மலம் சிறுநீர் வியர்வை சளி காயங்களில் இருந்து வெளிப்படும் சீழ் இவற்றைக் கண்டு அருவருப்பு அடையாமல் இருப்பது நிர்விசிகித்ஸா எனப்படும். பொதுவாக நம் ஆன்மா தூய்மையானது ஆனால் அது தங்கி இருக்கும் நம் உடலோ அசுத்தமானது. ஆனால் இந்த உடல் தான் நாம் மும்மணிகளைத் தரிப்பதற்கும் நல்லொழுக்கம் கடைபிடித்து நம் ஆன்மனை உணர்வதற்கும் அதன் கர்ம வினை தூய்மைக்கும் பிரதான கருவியாக இருப்பது இந்த உடல் தான் என்பதை அறிந்து உடலின் மீது பற்றின்றி ஆத்ம சிந்தனையில் ஆழ்வதும் சம்யக்த்வத்தின் நிர்விசிகித்ஸா அங்கமாகும்.

 

4.அமூட திருஷ்டித்வம் எனப்படும் மயக்கமின்மை.

அமூட திருஷ்டித்வம்.

திருஷ்டி என்றால் நோக்கம் அல்லது நம்பிக்கை என்பது பொருள். அமூட திருஷ்டித்வம் என்றால் அறியாமை நீங்கிய நம்பிக்கை,  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உணர்வது சம்யக்த்வம் உடையவரின் இயல்பாக இருக்க வேண்டும். நற்காட்சி உடையவர் எப்போதும் பகுத்தறிவாளராக இருத்தல் வேண்டும். மந்திர தந்திர அதிசயங்களில் மனதைச் சிதற விட்டு மூடநம்பிக்கை கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம். அச்சம் தாழ்வு மனப்பான்மை ஆசை(உலோபம்) தவறானவர்களின் வழிகாட்டல் முதலிய காரணங்களால் மித்யா தேவ குரு சாஸ்திரங்கள் இவை எவற்றிற்கும் இடந்தராமல் ஆத்ம நம்பிக்கையில் ஆழ்ந்து இருக்க வேண்டும். இது அமூட திருஷ்டித்வம் என்னும் நான்காவது அங்கமாகும்.

 

5.உபகூஹனம் எனப்படும் அழிந்தாரைத் தாங்கல்.

உபகூஹனம்.

இந்த ஐந்தாவது அங்கமானது உபபிரம்ஹனனம் மற்றும் உபகூஹனம் என்று இரண்டாகப் பிரித்துச் சொல்லப்படுகிறது. உபபிரம்ஹனனம் என்றால் அதிகரிக்கச் செய்தல் என்று பொருள். நற்காட்சியாளர் உத்தமபொறுமை முதலான பத்து விதமான குணங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவதாகும்.

 

உபகூஹனம் என்பது மறைத்தல் என்று பொருள். நற்காட்சியாளர் அறியாமை, ஆற்றல் இன்மை, சூழ்நிலை மாற்றம், பிணி, இளமை இவைகள் காரணமாக நல்லொழுக்கத்தில் சிறிதளவு தவறினாலும் அதைப் பெரிதுபடுத்தி பகிரங்கப்படுத்தாமல் மறைப்பதே அறத்திற்கும் அவர்களின் விரதங்களில் இருந்து பிறழாமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும் என்பதால் நற்காட்சியாளரின் உபகூஹனம் என்னும் அங்கமாகும். உபபிரம்ஹனனம் மற்றும் உபகூஹனம் இரண்டும் வேறு வேறாகத் தோன்றினாலும் இரண்டுமே நல்லொழுக்கம் பேணுவதில் மிக்க துணையாக இருக்கும்.

 

6.ஸ்திதிகரணம் எனப்படும் நிலைநிறுத்துதல்.

ஸ்திதிகரணம்.

ஸ்திதிகரணம் எனப்படும் சம்யக்த்வத்தின் ஆறாவது அங்கம் ஸ்திதிகரணம் ஆகும். ஸ்திதிகரணம் என்றால் நிலை நிறுத்துதல் என்று பொருள்படும்.

 

ஒரு மஹாவிரதி கடுமையான குரோதம் முதலான கஷாயங்கள் காரணமாக தனது நன்னெறியில் இருந்து பிறழும் போது அவருக்கு முக்தி நெறியின் மேன்மையை உணர்த்தி மீண்டும் அவரை நன்னெறியில் நிலை நிறுத்துதல் நற்காட்சியாளர் ஒருவரின் கடமையாகும். ஒரு நற்காட்சியாளர் தானே நன்னெறியில் இருந்து பிறழ்வாராயின் மற்றவர்கள் சுட்டிக் காட்டியோ அல்லது அவரே தான் பிறழ்ந்ததை உணர்ந்து மீண்டும் நன்னெறிக்குத் திரும்புதல் ஸ்திதிகரணம் என்னும் அங்கமாகும்.

 

7.வாத்ஸல்யம் எனப்படும் அறத்தின்பால் மற்றும் அறவோர் பால் மிகவும் ஈடுபாடு கொள்வது  வாத்ஸல்யம் ஆகும்.

வாத்ஸல்யம் என்பது தன்னலமற்ற தூய அன்பைக் குறிக்கும். ஒரு தாய் தன் குழந்தையின் மீது செலுத்தும் அன்பு, ஒரு பசுவானது தன் கன்றின் மீது காட்டும் அன்பு எவ்வளவு ஆர்வத்துடன் ஆசையுடன் காட்டும் அன்போ? அந்த அன்புக்கு நிகரானது வாத்ஸல்யம் ஆகும். நற்காட்சியாளர் முக்தி நெறியின் மீது வைக்கும் அன்பு வாத்ஸல்யத்துடன் இருக்க வேண்டும். மேலும் தர்ம நெறியைக் கடைப்பிடிப்போரிடம் மிகவும் வாத்ஸல்யத்துடன் இருப்பது வாத்ஸல்யம் எனப்படும் நற்காட்சியின் ஏழாவது அங்கமாகும்.

 

8..மார்க்கப்ரபாவனா எனப்படும் தர்மத்தை விளக்கிச் சொல்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்வதுமார்க்கப்பிரபாவனை ஆகும்.

மார்க்கப்பிரபாவனை என்பது தர்மத்தை விளங்கச் செய்தல் என்று பொருள்படும். ஒருவர் தன்னுடைய ஆத்மனை, வாழ்நாளில் மும்மணிகளைத் தரித்து அதன் ஒளியால் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். சத்பாத்திர தானம் தவம் பூஜை தத்துவ உபதேசம் செய்து கொண்டு ஜினதர்மத்தின், ஆத்ம தத்துவத்தின் பெருமையையும் சிறப்பையும் உலகறியச் செய்ய வேண்டும். உண்மையான மோக்ஷ தத்துவத்தை உயிர்கள் அறியும்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பலர் மித்யாத்வத்தினால் உண்மையான தேவ சாஸ்திர குரு பற்றி அறியாமல் அறியாமையில் ஆழ்ந்து தீய நெறியில் உழல்கின்றனர். அவர்களை மோக்ஷ தத்துவத்தை உபதேசித்து நன்னெறியில் திரும்பி வருமாறு தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு மார்க்கப் பிரபாவனா என்ற சம்யக்த்வத்தின் எட்டாவது அங்கமாகும். நற்காட்சி உடையவர் இந்த எட்டு அங்கங்களையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். 

 

ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகைகள் அல்லது 48 நிமிடங்கள் கொண்டதாகும். 48 நிமிடங்களில் ஒரேயொரு சமய கால அளவு குறைந்தால் ஒரு அந்தர் முகூர்த்தம் எனப்படும். 48 நிமிடங்களில் இரண்டு சமய கால அளவு குறையுமானால் அது உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்தம் எனப்படும்.

மிகவும் குறைந்த அந்தர் முகூர்த்தமானது ஆறு ஆவளி கூடுதல் ஒரு சமயம் ஜகன்ய அந்தர் முகூர்த்தம் எனப்படும்.

 

குறைந்த பட்ச ஜகன்ய அந்தர் முகூர்த்தத்தில் இருந்து அதிகபட்ச உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்தம் வரை நிறைய மத்திம அந்தர் முகூர்த்தங்கள் உள்ளன. நம் ஆத்மனில் ஆழ்ந்து ஒன்றும் போது ஜகன்ய அந்தர் முகூர்த்தத்தில் இருந்து உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்தம் வரையும் அல்லது இவை இரண்டிற்கும் இடையில் உள்ள பல மத்திம அந்தர் முகூர்த்தங்களில் ஏதாவது ஒரு மத்திம அந்தர் முகூர்த்தம் வரை இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் பொதுவாக ஒரு அந்தர் முகூர்த்த நேரம் என்று தான் ஆகமங்களில் குறிப்பிடப்படுகிறது. எந்த அந்தர் முகூர்த்தமானாலும் நம் ஆத்மனுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ? அந்த நேரத்திற்குள்ளேயே அது நிகழ்த்த வேண்டிய அற்புதத்தை நடத்தி முடித்து விடும். ஆகையால் நாம் ஆத்மனில் ஆழ்வதை மட்டுமே லட்சியமாகக் கொள்ள வேண்டும். காலத்தைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. என்ன நிகழ்த்த வேண்டுமோ? அதை ஆன்மா நிகழ்த்திவிடும்.

 

ஆகமங்களில் எந்தவொரு தியானமாக இருந்தாலும்  ஒரு முகூர்த்த காலத்திற்குக் குறையாமல் தியானிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஜபம் செய்ய வேண்டுமா? இரண்டு நாழிகைகள் செய். ஸ்வாத்யாயம் செய்ய வேண்டுமா? ஒரு முகூர்த்தம் வரை செய். மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமா? 48 நிமிடங்கள் செய். ஆகமம் ஓத வேண்டுமா? ஒரு முகூர்த்தம் தொடர்ந்து ஓது. தியானம் செய்கிறாயா? இரண்டு நாழிகைகள் செய். இப்படி எதற்கும் ஒரு முகூர்த்த நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து ஒரு முகூர்த்த நேரம் வரை தொய்வின்றி தியானிக்கப் பழகி வருவோமானால் நம் ஆத்மனில் நாம் ஒன்றும் போது எந்தவித சலனமும் இன்றி நிலைப்பதற்கு பெரும் உதவியாக அடிப்படை பயிற்சியாக இருக்கும். அதற்காக தான் இவ்வளவு பீடிகையும்  வலியுறுத்தலும்.

 

 மேற்கண்ட பதிவைப் படித்த ஓர் சான்றோர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 48 நிமிடங்கள் நிலைத்து தியானம் செய்வதற்கான செய்முறைப் பயிற்சிகள் அல்ல அவை. உண்மையில் ஒரு முகூர்த்த நேரம் தொடர்ந்து தியானிக்கத் திகம்பர முனிவர்களுக்குக் கூட முடியாத விஷயம். சாதாரண சிராவகர்கள் நிலையில் ஒரு முகூர்த்த நேர தியானம் என்பது முடியாத ஒன்று. மேலும் இங்கு சொல்லப்படுவது தன்னில் தான் ஒன்றிய நிலை. அதாவது உடல் மனம் நீங்கிய நிலையில் அறிவு ஆத்மனில் ஐக்கியம் ஆக வேண்டும். இவ்வாறு ஒரு முகூர்த்த நேரம் நிலைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

 

நான் சொல்ல வருவது ஒரு முகூர்த்த நேரம் வரை முன் சொன்ன ஸ்வாத்யாயம், மந்திர உச்சாடனம், ஜபம், தபம், தியானம் போன்றவற்றை நிலைக்கிறதோ? இல்லையோ ? வெறுமனேயாகிலும் அமைதியாக செய்ய வேண்டும் என்பதே! தேர்வுக்கு முன்னால் எத்தனை முறை நாம் rivision செய்கிறோம் அதைப் போன்றதே மேற்சொன்ன பயிற்சிகள். உண்மையாக ஆத்மனில் ஆழ்வது என்பது நம்முடைய பிரதான தேர்வு. அதி முக்கியமான அந்தத் தேர்வில் நாம் தேர்ச்சி பெற மேற்சொன்ன பயிற்சிகள் நம்மை சரியான திசையில் கொண்டு சேர்க்கும்.

 

அடுத்து ஒரு ஜீவன் தன்னில் தான் ஒரு முகூர்த்த நேரம் ஒன்றி விடுமானால் பிறவிப் பிணியையே போக்கி விடும். ஆனால் அவ்வளவு நேரம் தன்னில் தான் ஒன்றுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்றும் சொன்னார். மேலும் சில நுணுக்கமான விஷயங்களைச் சொன்னார். அவைகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.

 

உதாரணத்திற்கு பதினோராம் குணஸ்தானமான உபசாந்த மோஹ கஷாயம் இரண்டே இரண்டு சூத்திர பவ காலம் மட்டுமே இருக்கும். அதாவது உபசாந்த மோஹ கஷாயம் குணஸ்தான மொத்த கால அளவே இரண்டு சூத்திர பவ காலம் தான். அதற்கு மேல் பதினோராம் குணஸ்தானம் முடிந்து விடும். பிறகு அங்கிருந்து கீழ் குணஸ்தானங்களுக்கு உயிர் இறங்கி விடும்.

 

சூத்திர பவம் என்பது என்ன?

ஒரு சுவாசம் விடும் நேரத்தில் சில நுண்ணுயிர்கள்  18 முறை பிறந்து இறந்து விடும். அந்த 18 ம் பதினெட்டு பவங்கள் ஆகும். சூத்திர பவம் என்பது அந்தப் பதினெட்டு பவங்களில் ஒரு பவத்திற்கு சூத்திர பவம் என்பது பெயர்.  இந்த இரண்டு சூத்திர பவங்கள் தான் பதினோராம் குணஸ்தான கால அளவாகும்.

 

இது போல் பன்னிரண்டாம் க்ஷீண மோஹ கஷாய குணஸ்தானத்தின் கால அளவு நான்கு சூத்திர பவங்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 

இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று என்பதை பின்வரும் செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது வாழ்நாளில் ஒரேயொரு சமய நேரம் மட்டுமே தியானம் நிலைக்கக் கூடிய பிறவிதனை ஆன்மா சில சமயங்களில் ஒரு பிறவியின் பெரும் பயனாகக் கருதி பிறவி எடுப்பது உண்டு என ஞானி ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைப் பற்றி எண்ணும் பொழுது சூத்திர பவங்கள் கணக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரேயொரு சமய நேர தியானத்திற்கு ஒரு பிறவியையே ஆன்மா செலவழிக்கிறது என்றால் அந்த ஒரு சமய நேர தியானத்தின் மதிப்பு எவ்வளவு? என்பது நம் கற்பனைக்கு எட்டாதது.

உதாரணத்திற்கு பதினோராம் குணஸ்தானமான உபசாந்த மோஹ கஷாயம் இரண்டே இரண்டு சூத்திர பவ காலம் மட்டுமே இருக்கும். அதாவது உபசாந்த மோஹ கஷாயம் குணஸ்தான மொத்த கால அளவே இரண்டு சூத்திர பவ காலம் தான். அதற்கு மேல் பதினோராம் குணஸ்தானம் முடிந்து விடும். பிறகு அங்கிருந்து கீழ் குணஸ்தானங்களுக்கு உயிர் இறங்கி விடும்.

 

சூத்திர பவம் என்பது என்ன?

ஒரு சுவாசம் விடும் நேரத்தில் சில நுண்ணுயிர்கள்  18 முறை பிறந்து இறந்து விடும். அந்த 18 ம் பதினெட்டு பவங்கள் ஆகும். சூத்திர பவம் என்பது அந்தப் பதினெட்டு பவங்களில் ஒரு பவத்திற்கு சூத்திர பவம் என்பது பெயர்.  இந்த இரண்டு சூத்திர பவங்கள் தான் பதினோராம் குணஸ்தான கால அளவாகும்.

 

இது போல் பன்னிரண்டாம் க்ஷீண மோஹ கஷாய குணஸ்தானத்தின் கால அளவு நான்கு சூத்திர பவங்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 

இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று என்பதை பின்வரும் செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது வாழ்நாளில் ஒரேயொரு சமய நேரம் மட்டுமே தியானம் நிலைக்கக் கூடிய பிறவிதனை ஆன்மா சில சமயங்களில் ஒரு பிறவியின் பெரும் பயனாகக் கருதி பிறவி எடுப்பது உண்டு என ஞானி ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைப் பற்றி எண்ணும் பொழுது சூத்திர பவங்கள் கணக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரேயொரு சமய நேர தியானத்திற்கு ஒரு பிறவியையே ஆன்மா செலவழிக்கிறது என்றால் அந்த ஒரு சமய நேர தியானத்தின் மதிப்பு எவ்வளவு? என்பது நம் கற்பனைக்கு எட்டாதது. 

 

ஒரு ஆன்மா தனது மோக்ஷப் பாதையில் எத்தனை முறை திகம்பர முனி தர்மத்தைக் கடைபிடிக்கும்?

 

ஒரு ஆன்மா திகம்பர முனி தர்மத்தைக் கடைபிடிக்கும் அத்தனை பிறவிகளிலும் அது பயன்படுத்திய பிச்சு, கமண்டலங்கள் இவைகளை ஒரு குவியலாகக் குவித்து வைப்போமானால் அந்தக் குவியல் மேரு மலையின் அளவில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது திகம்பர முனியாகவே இருந்தாலும் அவர்கள் மனமும் அலை பாயும்! தியானத்தில் நிலைப்பது அதாவது தன்னில் தான் ஒன்றுவது பிரம்மப் பிரயத்தனமே என்று தோன்றுகிறது. ஆனாலும் அதனைச் சாதித்து தான் ஆக வேண்டும்.  திகம்பர முனியோ? அல்லது சாதாரண ஸ்ராவகராகவோ? இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்வதே சாலச் சிறந்தது. எதைக் கண்டும் கேட்டும் மனதைத் தளரவிடக் கூடாது முயற்சியைக் கைவிடக் கூடாது என்பதே அடியேனின் வேண்டுகோள்.

 

இதை விட இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் ஒரு சில உயிர்கள் நிகோதத்தில் இருந்து வந்து விரல் எண்ணிக்கையில் அடங்கக் கூடிய சில பிறவிகளில் சம்யக்த்வம் அடைந்து முனி தீக்ஷை பெற்று கர்ம வினைகளை முழுவதும் அழித்து முழுதுணர் ஞானம் பெற்று முக்தியை அடைவதும் சாத்தியமான ஒன்று. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய பரிணாமம் எவ்வளவுக்கு எவ்வளவு தூய்மையாக உள்ளதோ? அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய பிறிவிப்பிணி நீங்குவது என்பது வெகுவிரைவில் சாதிக்க முடியும்.


 இனி சம்யக்த்வம் பெறும் முறையைப் பார்க்கலாம். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் நம்முடைய கவனம் முழுவதையும் ஆத்மனில் செலுத்தி ஐக்கியமாவது மட்டுமே நம் சுய புத்தியுடன் செய்யும் செயல். நாம் ஆத்மனில் ஆழ்ந்த பிறகு கர்ம வினைகளில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் நம் சுய நினைவுக்கு அப்பாற்பட்டது நாம் சுயமாகச் செய்வதல்ல. ஆத்மனால் நடத்தப்படுவது. இந்த மாற்றங்களை கேவலி பகவான்கள் மட்டுமே அறிந்து சொன்னவை ஆகமங்கள் மூலம் ஜம்புகுமார சாஸ்திரியார் 2023  ஜூலை 17, 18 19 தேதிகளில் மோக்ஷமார்க்கப் பிரகாசகம் 9 வது அத்தியாயத்தில் இருந்து பரமாகம வகுப்பில் நடத்திய அறப் பொழிவில் இருந்து இவற்றை எடுத்துப்  பதிவு செய்கிறேன்.


இனி சம்யக்த்வம் எத்தனை வகைப்படும் என்பதைப் பார்ப்போம். 

சம்யக்த்வம் மூன்று வகைப்படும். அவை 

1.உபசம சம்யக்த்வம், 2.க்ஷயோபசம சம்யக்த்வம் ,

3. க்ஷாயிக சம்யக்த்வம்.


உபசம சம்யக்த்வமானது பிரதமோபசம சம்யக்த்வம் மற்றும் த்விதியோபசம சம்யக்த்வம் என மேலும் இரண்டு வகைப்படும்.


அனாதி  மித்யாதிருஷ்டி முதன் முதலாக பெறும் சம்யக்த்வம் பிரதமோபசம சம்யக்த்வம் ஆகும். இதன் கால அளவு ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே. அதற்கு மேல் நீடிக்காது. அனாதி மித்யாதிருஷ்டி பெறுவது பிரதமோபசம சம்யக்த்வம். இதில் உயிரானது அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கும் அப்ரசஸ்த உபசமம் அடைந்து விட கடினமான மித்யாத்வ பிரக்ருதிகள் ஒன்றை மட்டும் உபசமம் செய்தால் போதும்.

 

ஒரு முறை சம்யக்த்வம் பெற்ற ஸாதி மித்யாதிருஷ்டி ஜீவன் மீண்டும் கரணலப்தியை பயன்படுத்தி மீண்டும் சம்யக்த்வம் அடையும் போது அந்த சம்யக்த்வமும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று தான் அழைக்கப்படும். ஸாதி மித்யாதிருஷ்டி ஜீவன் எத்தனை முறை உபசம சம்யக்த்வம் பெற்றாலும் அத்தனை முறையும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று தான் சொல்லப்படுகிறது. இந்த சமயக்த்வத்தின் கால அளவும் ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே. இதுவும் அதற்கு மேல் நீடிக்காது. இதற்குப் பிறகு க்ஷயோபசம சம்யக்த்வத்தை பெற முயற்சி செய்யும், அல்லது மித்யாத்வ நிலைக்கு உயிரானது சென்று விடும். ஸாதி மித்யாதிருஷ்டி தரிசன மோகனீய பிரக்ருதிகள் மூன்றையும் உபசமம் செய்த பிறகே பிரதமோபசம சம்யக்த்வத்தைப் பெற வேண்டும்.

 

பிரதமோபசம சம்யக்த்வம் 4 ,5,6 மற்றும் ஏழாவது நிரதிசய குணஸ்தானம் வரை இருக்கும்.

 

த்விதியோபசம சம்யக்த்வம் என்பது ஏழாவது ஸாதிசய அப்ரமத்த குணஸ்தானத்தில் உபசம ஸ்ரேணியில் ஏறுவதற்காக மித்யாத்வம் மற்றும் க்ஷயோபசம சம்யக்த்வம் இவற்றில் இருந்து கரண லப்திகளின் துணை கொண்டு தர்சன மோகனீயம் மூன்று மற்றும் அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கையும் உபசமம் செய்து பெறும் சம்யக்த்வம் த்விதியோபசம சம்யக்த்வம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. த்விதியோபசம சம்யக்த்வம் என்பது இரண்டாவது முறையாக பெறும் சம்யக்த்வம் அல்ல! உபசம ஸ்ரேணியில் ஏறுவதற்காக முனிவர் பெறும் உபசம சம்யக்த்வத்திற்கு த்விதியோபசம சம்யக்த்வம் என்பது பெயர். இதில் அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு மற்றும் தர்சன மோகனீய மித்யாத்வம், சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் ஆகிய மூன்று ஆக மொத்தம் ஏழு ப்ரக்ருதிகளும் உதயத்திற்கு வராமல் தணிந்து இருக்கும். அதாவது உபசமம் அடைந்து இருக்கும் உதயத்திற்கு வராது. இவை ஏழும் தணிந்துள்ள தெளிவான ஆத்ம பரிணாமம். இதற்கு ஒரு உதாரணம் சொல்லப்படுகிறது. அழுக்கு நீரில் தேத்தான் கொட்டையை சில நிமிடங்கள் ஊறவைத்தபின் அந்த அழுக்கு நீரில் உள்ள அழுக்குகள் அனைத்தும் பாத்திரத்தின் அடியில் படிந்து விட தண்ணீர் மேல் பரப்பு தெளிவாக இருக்கும். அழுக்குகள் உள்ளது ஆனால் அவை கீழே படிந்து விட மேல் பரப்பு தெளிவாக உள்ள நிலை உபசம சம்யக்த்வத்தின் நிலை. இந்த த்விதியோபசம சம்யக்த்வ கால அளவும் ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே.

2 comments:

  1. Thank you very much. It will be really useful and we can visit very often.it is a very good idea to post it here. Hope to see many gems like this.

    Raji Sripal.

    ReplyDelete