SooLamani - சூளாமணி

 

                    சூளாமணி.          



                                

முன்னுரை  :

 

                        ஐஞ்சிறு  காப்பியங்களில்  ஒன்று  சூளாமணி.  இதன்  ஆசிரியர்  தோலாமொழித்தேவர்  என்று  அறியப்படுகிறது.  இயற்  பெயர்  தெரியவில்லை.  சமணத்  துறவியான  இவர்,  திராவிட  சங்க  தேவர்   கணத்தைச்  சேர்ந்தவர்.  15  வது  தீர்த்தங்கரர்  தரும  நாதரின்  பக்தர்.  வாசுதேவனின்  அவதாரம்  என  கருதப்படுகிற  திவிட்டனின்  வரலாற்றை,  உரைக்கும்  நூல்  சூளாமணி.  நெடுஞ்சேத்தன்  என்னும்  பாண்டியன்  மன்னன்  அவையில்  அறங்கேற்றப்பட்டது.  308  ஆம்  பாடலில்  தோலா  நாவிற  சச்சுதன்  என்று  குறிப்பிட்டுள்ளதால்,  தோலா மொழி  எனச்  சிறப்புப்  பெயர்  பெற்றார்  என்பர்  சிலர்.  இது  9  ஆம்  நூற்றாண்டில்  எழுதப்பட்டது.  சீவக  சிந்தாமணிக்குப்  பின்  எழுதப்பட்ட  நூல்.

                        சூளாமணி,  நூலாசிரியரால்  வழங்கப்பட்ட  பெயராகத்  தெரியவில்லை.  இதன்  பெயர்  யாரால்,  எப்போது,  இடப்பட்டது  என்றும்  தெரியவில்லை.  சூளாமணி  தன்மையால்  பெற்ற  பெயர்  என்பது  மயிலைநாதர்  கூற்று.  சூளாமணி  என்னும்  பெயர்  இக்காப்பியத்தில்  நான்கு  இடங்களில்  சுட்டிக்  காட்டப்பட்டுள்ளதால்,  காப்பிய  உயிர்  சொல்லாக  இடம்  பெற்று,  காப்பியப்  பெயராக  அமைந்தது  என்பர்  சிலர்.  பழைய  தமிழ்  காப்பியங்கள்  அணிகலங்களின்  பெயரில்  அமைந்திருப்பது  போல்,  காலணி  சிலம்பு,  சிலப்பதிகாரம்,  இடையணி  மேகலை,  மணிமேகலை,  நெஞ்சணி  சிந்தாமணி,  சீவக சிந்தாமணி,  காதணி  குண்டலம்,  குண்டலகேசி,  கையணி  வளையல்கள்,  வளையாபதி,  போல்,  திருமுடியில்  அணியும்  சூளாமணி,  சூளாமணி  நூலானது  என்றும்  கூறுவர்.

                        சமய  நூலான  பிரதமாநுயோக  மகா புராணத்தில்,  உள்ள  பழைய  கதை  ஒன்றை  அடிப்படையாகக்  கொண்டது  இந்நூல்  என்பாரும்  உண்டு.  அறம்,  பொருள்,  இன்பம்,  வீடு  என்று  நாற்பொருளும்  உரைக்கும்  நூல்  சீவக சிந்தாமணியின்  கவியழகையும்,  அதனினும்  மேலான  ஓசையழகையும்  இம்மூலநூலில்  காணலாம்.  இந்நூலுக்கு  மேலும்  ஒரு  சிறப்பு,  வித்யாதரர்  உலகையும்,  மண்ணுலகையும்  இணப்பது.  எண்வகை  சுவைக்கும்  அப்பாற்பட்டது  பக்தி  சுவை.  இப்பக்தி  சுவையூறும்  பாடல்கள்,  இக்காப்பியத்தில்  விரைவியுள்ளது,  புலவருடைய  அருகன்  பக்தியை  அறிய  முடிகிறது.  இக்காப்பியம்  12  சருக்கங்களையும்,  2130  பாடல்களையும்  கொண்டுள்ளது.  கவியழகையும்,  சந்த ஓசையையும்,   வருணனைகளையும்  முழுதும்  ரசித்து  சுவைக்க  மூலநூலைப்  படிக்கவும்.  நம்  சமண  சொந்தங்கள்,  கதையைத்  தெரிந்து  கொள்ள,  முக்கியமானவைகளைத் தொகுத்து,  590  செய்யுள்களாக  தந்துள்ளேன். 

                          பிடித்தால்  சுவையுங்கள்.  பிழையிருந்தால்  அருளுங்கள்.    நன்றி.  வணக்கம்.

            நாளை  முதல்  சூளாமணியை  அணிந்து  கொள்வோமா……….

                                                                                    அன்புடன்  உங்கள்,

 முட்டத்தூர். அ. பத்மராஜ்.



                                                           

சூளாமணி.

                                                           

                                                            பாயிரம்.

கடவுள்  வாழ்த்து :

 

காதி  அகாதி  வினைகள்  வென்று  கடையிலா  ஞானத்தில்  உயர்ந்து

மூவுலகம்  முழுதும்  உணர்ந்து  முழு ஞானம்  பெற்று  ஒளிர்ந்து

திகழ்ந்திடும்  சுடரொளி  சூழுந்து  திவ்விய  சுடரொளி  வட்டனாகி

அருகனின் அடிகளை வணங்கியோர் இருள் சேர் இருவினை நீங்குவர்      1

 

நூல்  நுதலி  பொருள்  :

 

சிரேயாம்ச  தீர்த்தங்கரரின்  செம்மையாம்  அருளாட்சியில்

செங்கண்களில்  செருக்கொளிர  சிவந்த  வாயின்  பற்கள்  தெரியும்

ஆண்  சிங்கம்  வாயைக்  கிழித்து  அவனியை  உய்யச்  செய்து

திவிட்டனின்  வரலாறினை  யான்  செப்புவேன்  இந்நூலின்  மூலம்     


                     2

 

அவையடக்கம்  :

 

ஐம்படைகள்  தன்னகம்  கொண்ட  அழகிய  திருமாலை  ஒத்த

திவிட்டனின்  பண்பினை  கூறும்  தெள்ளிய  நெஞ்சத்து  ஆசையில்

கூறிடும்  இக்காவிய  பெருநூலில்  குற்றங்கள்  வருதல்  இயல்பே

 சான்றோரே  பேரறிவுடையோரே   சிறியோனின்  பிழை பொறுப்பீர்        

   3                                    

நூலரங்கேற்றிய  களனும்  கேட்போரும்  :

 

எதிரிகள்  நடுங்கும்  தோளும்  எழில்மலர்  மாலைகள்  மார்பும்

திருமாலின்  அம்சம்  சேர்ந்து  தெய்வத் தமிழுக்கு  உடையோன்                      

நெடுஞ்சேந்தன்  பாண்டியனவையில்  நல்திறம்  புலவர்கள்  இருக்க

சான்றோரும்  கற்றோரும்  ஏற்ற  சிறப்புதான்  இப்பெரும்  நூலுக்கு            4                             

திரண்டிடும்  இருளைப்  பிரிக்கும்  திங்களின்  கலங்கம்  இயல்பில்

திங்களின்  செயலின்  மாண்பால்  சிதைந்திடும்  கலங்கம்  போல

கற்றுணர்ந்த  சான்றோர்  முன்னே  திவிட்டனின்  மாண்பினை கூற

கருதிய  என்னுடைய  குற்றத்தை  குற்றமாய்  ஏற்கார் என்றும்                5                          

நூல்  வந்த  வழி  :

 

வித்யாதரர்  வித்தைகள்  தலைவன்  வீசும்மண  மலர்மாலை  முடியன்

சுவலனடி  அரசனின்  மகள்  சொக்க  வைக்கும்  சுயம்பிரபை

பஞ்சிக்கு  வாடும்  பாதம்  கொண்ட  பசுங்  கொல்லிப்பாவைக்கீடாய்

பிரதமானுயோக  மகாபுராணம்  பகரும்  வழியில் இந்நூல்  செல்லும்                  6

 

                                                பாயிரம்  முற்றிற்று.

 

 

 

1.     நாட்டுச்  சருக்கம்.

 

சுரமை  நாட்டின்  சிறப்பு  :

 

வான்முகில்கள் தவழ்ந்து  சூழ்ந்து  வளப்பத்தில்  நவ  மணிகள்  கொண்டு

வித்யாதரர்கள்  உலகம்  தொட்டு  விழாக்கோலச்   சிறப்புப்  பூண்டு

இரப்போர்கள்  யாரும்  இன்றி  எல்லோரும்  பெரும்  செல்வராகி

சுகத்தினில்  திளைக்கும்  நாடு  சுரமை  என்னும்  உயர்ந்த நாடு               7

 

கண்களும் கயல்களும்   :

 

செந்தாமரைகள்  பூத்த  பொய்கையில்  செந்நிற  கயல்கள்  கூட்டமும்

சுரமைநாட்டு  சுந்தரிகள் முகம்  சொக்கவைக்கும் செழுமை  அழகும்

செவ்வரி  படர்ந்த  விழிகளில்  சிறு  தூண்டிலில்  விழுந்த  கயலாய்

எப்போதும்  நீங்கா  நிலையில்  நிலைப்பதும்  சுரைமை  நாட்டில் தான்         8

 

வயல்களும்  ஊர்களும்  :

 

கண்களில்  பசுமை  கட்டும்  கவிழ்ந்த அழகு  மருத  நிலங்கள்

மங்கையர்  மெல்லிடை  அசைய  மயக்கிடும்  அன்ன  நடையும்

மழலையின்  மயக்கும்  சொல்லால்  மலர்ந்திடும்  பறவைகள்  ஒலியும்

சிற்றடி  சிலம்பின்  ஒலிகள்  சிரித்திடும்  மருதத்தில்  எப்போதும்              9

 

பொழில்களிலும்  வீடுகளிலும்  இன்னிசை :

 

வித  விதமாய்  மலர்கள்  பூத்து  விழுமிய  நிழல்  தரும்  பொழிலில்

குயிலொடு  தத்தைகள்  சேர்ந்து  குழலென  இனிதாய்  இசைக்க

தேன்  மலர்  அணிந்த  கூந்தலில்  தேனுண்ட  வண்டுகள்  உறங்க

மெல்லிசையும்  யாழொலியும்  மிதந்திடும்  வீடுகள்  தோறும்                                10

 

வண்டுகளும்  கொங்கைகளும்  :

 

குவளையும்  நீலமலரும்  மலர  கொட்டிடும்  மதுவை  உண்ண

வண்டுகள்  கூட்டம்  அங்கு  வாயிசை  ஒலியினில்  சுற்றும்

குங்கும  குழம்புடனே  கஸ்தூரி  கோதையர்  கொங்கையில் அமைய

நற்றவம்  செய்யும்  துறவியையும்  நலிவுற்று  மனம்  தளரச் செய்யும்       11

 

சுரமை  நாட்டின்  நானில  வளம்  :

 

மலைகொட்டும்  அருவியின்  குறிஞ்சி  மென்மலர்  மரங்களின்  முல்லை

கண்  கவ்வும்  பசுமை  படர்ந்த  கழனிகளின்  செழுமை  மருதம்

கடல்  அலை  காதினில்  இசைக்கும்  கருநீலம்  தவழும்  நெய்தல்

நால்வகை  நிலங்கள்  கொண்ட  நல்ல  வளம்  மிகுந்த  சுரமை                                  12

 

குறிஞ்சி  :

 

குன்றுதோர்  ஆடும்  குமரனை  குறவர்கள்  ஆடித்  தொழுவர்

தொழுதிடும்  பாட்டின்  ஒலியும்  சுனை வழியும்  நீரின்  ஒலியும்

தென்றலின்  தாக்கம் நிறைந்த  சில்லென்ற  அருவிகள்  ஓசையும்

வேங்கையை  கொன்று  வீழ்த்திய  வேழத்தின்  பிளிறல் குறிஞ்சியில்            13

 

சிற்றிடை  மங்கையர்  விரல்போல்  செங்காந்தள்  மலர்கள்  மலர

நீர்  நின்ற  சுனைகளிலெல்லாம்  நீலோற்ப  பூக்கள்  பூத்து குலுங்க

வான்னுயர்  வேங்கை  மரங்களில்  வண்டு  சூழ்  பூக்கள்  சிலிர்க்க

கொட்டிட்டும்  தேன்மழை  சேர்ந்து குன்றினில்  தவழும்  குறிஞ்சியில்            14

 

விண்தொடும்  மலையின்  உச்சியில்  கார்முகில்கள்  கவிழ்ந்து  நிற்க

மழை  மேகம்  கண்ட  மயில்கள்  மகிழ்ச்சியில்  தோகை  கொண்டாட

குறிஞ்சி  நில  இடங்களெல்லாம்  குறும்  பீலி  நீல  நிறமாய்  விரிய

காண்பவர்  கண்கள்  சொக்கும்  குறிஞ்சியின்  அழகைக்  கண்டு                       15


வான்னுயர்ந்த  சந்தன  மரங்கள்  மலையெல்லாம்  உயர்ந்திருக்க

மதயானை  கண்களில்  வழியும்  மதநீரை  களிக்கும்  வண்டுகளை

இளம்பிடிகள் காந்தள்  பூக்களால்  இளந்தென்றலாய்  வீசி  ஓட்ட

மற்ற  யானைகள்  கூட்டத்தோடு  மரத்தழைகள்  உண்டு  உறங்கும்                 16

 

மூங்கிலிடை  விளைந்த  நெல்லும்  மண்ணிலே  விளைந்த  தினையும்

மலையினில்  கவர்ந்த  தேனும்  வேடுவர்  வேட்டைப் பொருளும்

பின்னும்  பல  பொருள்கள்  சேர  பிறருக்கு  கொடுத்து  உண்டலும்

குறையாது  மிகுந்து  இருக்கும்  குறிஞ்சி நிலம்  கொண்ட  சுரமையில்  17

 

முல்லை  நிலம்  :

 

உறிகளில்  பணையம்  வைத்து  உறியடிக்கும்  இடையர்  ஒலியும்

இசைகளின்  கருவிகள்  கொண்டு  இசைத்திடும்  இனிய  ஒலியும்

குழல்  என்னும் புல்லாங்குழல்  கோபாலன்  இசையை  வெல்லும்

ஏர்  உழும்  உழவர்கள்  ஒலிகள்  எப்போதும்  முல்லையில்  மலரும்                      18

                                   

கொன்றைப்  பூக்களில்  கொட்டும்  தேனுக்கு  அலையும்  வண்டுகளும்

குருத்திமரப்  மலர்கள்  சிந்தும்  மதுவுக்கு  மயங்கும்  வண்டுகளும்

மலையினில்  படர்ந்து  விரிந்த  முல்லைகள்  பரப்பும்  மணமும்

முல்லை  நிலத்தின்  மதிப்பை  மூவுலகும்  அறிந்திடும்  சுரமையில்              19

 

முல்லையில்  மலர்ந்த  முல்லையும்  மிகப் புதிதாய்  மலர்ந்த கொன்றை

பூக்களில்  சிந்தும்  தாதுகளுக்கு  போட்டியில்  மோதும்  வண்டுகள்

நீர்  அலைகள்  நனைத்த  மணலை  நீர்  பறவை  தன் அலகால்  கிளறி

உணவினை  சேவல்கள்  ஊட்டி  பிணையினை  நோக்கும்  முல்லையில்    20              

 

குவிந்திட்ட  வனப்பு  கொண்ட  குளிர்ந்த  நல்  முல்லை  நிலத்தில்

கார்கால  மழையைப்  போல  கொட்டும் கொன்றைத்   தேனால்

காடென  வளர்ந்த  புற்களைக்  காராம்  பசுக்கள்  மேய்ந்து கொழுத்து

கழல்  அணிந்த  மழலைகள்  போல்  கன்றுகளுடன்  விளையாடி மகிழும்         21

 

பிடிக்கு  எட்டு  காய்கள்  கொண்ட  பெருவிளைச்சல் எள்ளுச் செடியும்

பெருங்கொத்துக்  கொடி  தாங்காது  தரை  தவழும்  அவரைச் செடியும்

இலை மறையும்  காய்கள் கொண்ட  எழுந்து  நிற்கும்  துவரைச்செடியும்

முல்லை நிலத்தை மூடி நின்று முழு  அழகும்  கொட்டும்  சுரமையில்              22


மருதம்  :

 

நங்கையர்  நடனத்துக்கொப்ப  நயம்பட  ஒலிக்கும்  முழவும்

செந்நிற  கொண்டை  கொண்ட   சேவற்போர்  செய்வோர்  ஒலியும்

செய்கின்ற  மனதில்  இசைக்கும்  செவ்வார்  பிண்ண  முரசொலியும்

மங்கல  ஒலியால்  அதிரும்  மருத நிலம்  சுரமை  நாட்டில்                                    23

 

மருதத்தில்  மண்டியிருக்கும்  மணம்  நிறை  கருநெய்தல்  பூவிலும்

சேற்றினில்  வளர்ந்து  நிற்கும்  செந்தாமரை  மலர்ந்த மலரிலும்

சிந்திடும்  தேனை  உண்ண  சேர்ந்திடும்  வண்டுகள்  கூட்டம்

கால்களால்  மிதித்து  மோத  கார்மழையாய்  தேனும்  கொட்டும்                24

 

தாமரை  மலர்கள்  நிறைந்த  தடாகங்கள்  மருதத்தின்  அழகு

தாமரைகள்  மீது  அமர்ந்து  தன்  இறைக்கு  காத்திருந்து

மீன்களை  வாயில்  கவ்விப்  பற்றி  மகிழ்ச்சியில்  உயரே  செல்லும்

புள்ளினங்கள்  பறக்கும்  ஓசை  புது  அழகு  மருத  நிலத்திற்கு                          25

 

தாழை  சூழ்ந்த  நீலமலர்கள்  தடாகத்தில்  நிறைந்து  இருக்க

கரு எருமை  குவளை  உண்ண  கடைவாயில்  தேன்  கசிய

கன்றின்  நினைவு  மனதில்  எழ  காம்புகள்  நீரில்  பால்  சொரிய

அப்பாலுண்ட  அன்னங்களால்  சேற்று  வயல்  ஆனது  அங்கு                                    26

 

கழிகள்  பருத்து  சோலையுடன்  கன்னல்  காடு  செழித்திருக்க

கன்னலின்  இடையே  வளர்ந்த  கதிர்  ஈன்ற  நெற்பயிர்கள்

கற்றறிந்த  சான்றோர்  போல  கதிர்கள்  நிலம் நோக்க  நிற்க

எப்போதும்  அம்மருத நிலம்  எழில்  பெருக்கும்  சுரமைக்கு                                    27

 

நெய்தல்  :

 

பரதவரின்  மரக்கலங்களிலே  பண்ணிசைக்கும்  முழவொலியும்

சமுத்திரத்து  நீர்  அலைகள்  சதிராடும்  கூச்சல்  ஒலியும்

நீரலையால்  மணிகள்  கோர்த்த  நுரை  கொண்ட  கரையழகும்

சுரமை  நாட்டின்  நெய்தல்  நிலம்  சுகமான  அழகு  சொட்டுமிடம்                     28

 

சங்குடைந்து  பிளந்தாற்  போல்   தாழை  மலர்கள்  மலர்ந்திருக்க

காரிருள்  சிதறினார்  போல்  கருங்குவளைகள்  இதழ்  அவிழ

நீர்  பூக்கள்  இன்னும்  பலவும்  நீராடும்  நெய்தல்  நிலத்தில்

மண்மகளின்  பேரழகு  கண்டு  விண்ணுலகமும்  நாணியது அங்கு         29                         

வெண்தாமரை  மெல்லிதழை  முள்  நாளம்  என  வெறுத்த  அன்னம்

மூழ்கி,  மூழ்கி  கலக்குவதால்  தேன்  கொட்டி  நீரில்  மிதக்கும்

துள்ளி  வரும்  சுறாமீன்களை  துச்சமாய்  முதலை  எண்ணும்

வலம்புரி  முத்துக்கள்  ஈந்து  வளம்  பெருக்கும்  நெய்தல்  நிலம்             30

 

                                    நாட்டுச்  சருக்கம்  முற்றிற்று.

 

2.     நகரச்  சருக்கம்.

 

சுரமை  நாட்டு  போதன மாநகரம்  :

 

நீர்வளம்  நிலவளம்  நிறைந்த  நிகரற்ற  சுரமை  நாட்டில்

கட்டிடக்கலை  சிற்ப  வல்லோரால்  கட்டிய  மாட  மளிகைகளுடன்

விண்ணவர்  வழியை  மறைக்கும்  வான்  உயர்ந்த  மதிலைக் கொண்ட

பொன்னெழில்  கொண்ட  நகரம் போதனம்  என்னும்  நகரம்                                    31

 

நகரின்  அமைதி  :

 

சங்குகள்  மேய்ந்து  திரியும்  சமுத்திர  அலைகள்  கொண்ட

பொய்கைகள்  சூழ்ந்து  கொண்டு  புது  அழகில்  நிற்கும்  நகரம்

செந்தாமரைகள்  இதழை  ஒத்த  செவ்வரி  படர்ந்த  கண்ணான்

திவிட்டனின்  பிறப்பிடமானது  திவ்விய  போதன  மாநகரம்                                    32

 

அகழியும்  மதில்  அரணும்  :

 

செங்கதிரோன்  தேரின்  பரிகள்  செல்வதற்கு  வழி  இல்லாமல்

முகில்  தாண்டி  வளர்ந்து  நிற்கும்  விண்முட்டும்  மதில்  சுவர்கள்

ஆழியின்  அலைகள்  துள்ளும்  அகழியை  அரணாய்  கொண்ட

போதன  மாநகரம்  தோன்றும்  பொற்கடலிடை  மிதப்பது  போல            33

அம்மதிற்  புறத்தே  அமைந்த  யானை  கட்டுமிட  மாண்பு  :

 

மாமரங்கள்  நிழலின்  கீழே  மதக்களிறின்  காலைக்  கட்டி

கரும்போடு  கவளம்  தந்து  காத்திடும்  பாகர்கள் ஒலியும்

வேழங்கள்  உடலில்  இருந்து  கொட்டிடும்  மும்மத  நீரை

வண்டுகள்  மொய்த்து  திரியும்  மதில்களின்  இடங்கள்  எல்லாம்                    34

 

மாடங்களின்  மாண்பு  :

 

மையினை  வாள்  போல்  தீட்டி  மயக்கிடும்  விழிகளோடும்

தேனினை  பூச்  சாரலாக்கும்  திருத்திய  மலர்  மாலைகளோடு

தோளினைத்  தழுவி  அணைத்து  துணைவனை  கொஞ்சும்  மகளீர்

மாடங்கள்  தோறும்  மகிழ்வர்  மன்மதன்  மலர்  கணைகளாலே                         35                        

 

அகிற் புகை  வானில்  எழும்பி  முகிலினை  முட்டி  மோதும்

மோதிடும்  முகிலின்  முழக்கம்  மூவுலகும்  அதிரச்  செய்யும்

ஓவியப்  பாவையர்  எல்லாம்  ஒளிர்கின்ற  மின்னலைப்  போல்

மலையொத்த  மாடங்களில்  நிற்க  மாநகரத்தில்  அழகு  சொட்டும்        36                            

 

மாடங்களின்  சிறப்பு  :

 

காண்பவர்  கண்கள்  எல்லாம்  கவர்ந்திடும்  அழகில்  மயங்கும்

வெள்ளியால்  அமைந்த  மாடங்கள்  வெண்மதியின் ஒளியை  கக்கும்

தரை  பதித்த  கல்களெல்லாம்  தண்மையாம்  தென்றலைத்  தரும்

 மாளிகை  மாடங்களெல்லாம்  மண்ணின்றி  பொன்னாய்  ஒளிரும்                    37

[

மாடத்தில்  பலவகை  ஒலிகள்  :

 

மத்தளத்தின்  இசை  ஒலிக்கும்  மகரயாழ்  மெல்லிசை  சிந்தும்

பாவையர்  ஆடும்  கூத்தால்  பாதச்  சிலம்புகள்  சிரிக்கும்

சுருதியோடும்  தாளத்தோடும்  சுந்தரிகள்  பாட்டுகள்  ஒலிக்கும்

போதனநகர்  பொன்மாடங்களில்  பொழுதெல்லாம்  இசை  ஒலிக்கும்      38

 

வண்டுகளின்  மயக்கம்  :

 

தாழியில்  வளர்ந்த  குவளைகள்  தாதையர்  விழிகளை  ஒக்கும்

தேனுக்கு  அலையும்  வண்டுகள்  தேடிடும்  மதுமலர்கள்  எதுவென

கண்ணுக்கும்  மலருக்கும்  இடையே  கட்டுண்டு  அலையும்  கூட்டம்

எழுப்பிடும்  இனிய  ஒலியோ  இடியென  எழும்பி  மெலியும்                                    39

 

கடைத்தெரு  :

 

பெருங்கடைகளின்  ஓரங்களில்  பளிங்குக்கல்  மேடைகளும்

பூந் தென்றலால்  அசையும்  பூமாலைத்  தோரணங்களும்

பூக்கொட்டும்  தேன்  சுவைக்க  போராடும்  வண்டுகளொலியும்

கடைகள்  கொண்ட  வீதியெல்லாம்  கற்பகச்  சோலைகளாகும்               40                               

சிலம்பொலிக்கு  மயங்கும்  சிறு  அன்னங்கள்  :

 

அகிற் புகை  சூழ்ந்து  மணக்கும்  அகத்தில்  எழும்  சிலம்பொலியை

ஆசையாய் அவர்கள்  வளர்க்கும்  அழகிய  பெடை  அன்னங்கேட்டு

ஆண்  துணையற்ற  அன்னங்கள்  அதன்  அச்சத்தில்  மனம் மயங்க

தடாகத்துக்குப்  போய்  சேர்ந்திடும்  தாங்கிடா  மன  வருத்தத்தாலே                 41                     

அரசர்  தெரு  அழகு  :

 

கார்க்குழலில்  பூக்கள்  அணிந்து  கழுத்தில்  மலர்  மலை  கொண்டு

கால்களில்  சிலம்புகள்  அமைய  காலடிகள்  செங்குழம்பு  பூசி

நங்கையர்கள்  தெருவில்  நடக்க  நடந்திட்ட  பாதங்கள்  பதிய

அரண்மனை  வீதியெல்லாம்  அன்றலர்ந்த  தாமரையை  ஒக்கும்                      42

 

செல்வச்  சிறப்பு :

 

கொட்டுகின்ற  தேன்  நிறைந்த  குவலைமலர்  கொத்துகளும்

வட்டமதியின்  ஒளியை  ஒத்த  வலம்புரி  மணி முத்துகளும்

 மாநகர்  போதனமே  மணக்கும்  மல்லிகைப்பூ  மாலைகளும்

முச்சந்திகள்  தோறும்  கிட்டும்  மக்களுக்கு  எல்லாப்  பொருளும்            43                                  

மாளிகையில்  உணவுப் பொருள்களின்  மிகுதி  :

 

மணத்தோடு  சுவை  சொரிந்த  மூன்று  வகை  குடி நீர்களும்

மரந்தாங்கா  பழங்கள்  கொண்ட  வாழை பலா மரத்தோப்புகளும்

மண்  தொட்டு கண்  இழுக்கும்  மாமரத்தின் பெருங்  காடுகளும்

மது  கொண்ட  மூங்கிலோடு   மாளிகைகள்  மிகவும்  உண்டு                                  44

இன்ப  உலகம்  :

 

நறுமணப்  பொடிகள்  கொண்ட  நல்  மணச்  சந்தனங்கள்  பூசி

இரவு  பகல்  அறிந்திடாத  இந்திரனின்  உலகம்  போல

இளைஞர்களும்  கன்னியரும்  இன்புற்று  இருப்பதனால்

விண்ணுலகம் இடம்  பெயர்ந்து  மண்ணுலகம்  வந்தது  போலாகும்              45

 

பாயாபதி  மன்னன்  மாண்பு  :

 

போதனபுர  நகரம்  போற்றும்  பெரும் படையுடைய  மா மன்னன்

பயாபதி  பெயரைக்  கொண்ட  பயம்  அறியா  பெருந்தலைவன்

வெற்றி கொண்ட  மணிமுடியுடனும்  வேந்தர்க்கு  வேந்தனாவான்

வெண்கொற்றக்  குடை நிழலால்  உலகுக்கு  உயிர்  போல்  ஆனவன்                46                     

 

பயாபதி  மன்னன்  சிறப்பு  :

 

எண்ணுவர்  எண்ணத்துக்கு  எட்டாத  நல் சிறப்புடையான்

வேண்டுதல்  வேண்டாமையிலா  வாய் நிறைச்  சொல்லுடையான்

நண்பர்க்கு  உயிர்  கொடுப்பான்  பகைவர்கள்  உயிர்  எடுப்பான்

பயாபதி  மன்னன்  சிறப்புகள்  பாரினில்  உயர்ந்ததென்பார்                        47

 

மக்கட்கும்  பகையின்மை  :

 

பகைவர்கள்  நடுங்கி  அஞ்சும்  பயாபதி  அரசன்  ஆட்சியில்

காமனின்  மலர்  கணைகளுண்டு  கடும்  பகையின்  வேல்களில்லை

மறவர்கள்  மண்ணில்  போரின்றி   மஞ்சத்தில்  தான்  போர்  கொள்வர்

தூய்ப்போரும்  துறந்தோரும்  துயர்  இன்றி  நலம்  பல காண்பர்       48

                                   

குடிகளை  வருத்தி  இறைகொள்ளாமை  :

 

குடிமக்கள்  இறை  தந்தார்கள்  கொண்டதில்  ஆறில்  ஒன்றை

கொடுத்ததைப்  ஏற்றுக்  கொண்டான்  கொடுமைகள்  ஏதுமின்றி

பகைவர்கள்  திறை  தந்தார்கள்  பாசத்தில்  பெற்றுக்  கொண்டான்

பகைவர்கள்  மறுத்திட்டாலும்  பண்பினால்  கொடுக்கச்  செய்தான்                49

மன்னனின்  முன்  நிழல்  :

 

மன்னனின்  உடலின்  நிழல்  மக்களைக்  காத்து  நிற்கும்

அரசன்  காலடியின்  நிழல்  அயலரசர்  நிலத்தைக்  காக்கும்

மணி  கொண்ட  முடியின்  நிழல்  முனிவர்கள்  திருவடி  பணியும்

வெண்கொற்றக்  குடை  நிழலோ  வேற்றுமையின்றி  உலகை காக்கும்      50                

இருவகைப்  பகையும்  அற்ற  ஏந்தல்  :

 

உடலினில்  உள்  உறங்கும்  உட்பகைகள்  ஆறினை  வென்று

நிலவுலகில்  நேரில்  தோன்றும்  நெடும் பகை  எல்லாம்  வென்று

தன்  உயிர்  மட்டும்  இன்றி  மண்ணுயிர்கள்   எல்லாம்  காக்கும்

மன்னனின்  உயர்  மாண்புகளை  மண்ணுலகம் என்றும்  போற்றும்                 51

( 6  பகை :  காமம்,  குரோதம்,  லோபம்,  மோகம்,  மதம்,  மாற்சரியம் )

 

அரசியல்  சுற்றத்துடன்  உலக  பொதுமை  நீகுதல்  :

 

அருகனின்  அறம்  உரைத்திடும்  அறிவுசார்  முனிவர்கள்  இருக்க

ஆட்சி  நூல்கள்  அனைத்துமறிந்த  அமைச்சர்கள்  அவை  சூழ்ந்திருக்க

நீர்  விளையாடும்  அன்னங்களின்  நடுவினில்  தவழுந்து  ஆடி  நிற்கும்

அரச  சிறப்புடைய  அன்னம்  போல்  அரசன்  பயாபதி  வீற்றிருந்தான்         52                                

அரசர்  சுற்றத்தின்  இயல்பு  :

 

அரசருக்கு  சரியாய்  அமைந்த  அமைச்சர்கள்  குழக்களெல்லாம்

மன்னனின்  முகக்  குறிப்பறிந்து  மறுமொழிகள்  கூறல்  இன்றி

நீதியினை  உரைத்திடும்  நேர்மை  நெறிகொண்ட  சான்றோராய்

அயலார்க்கு  சிறிதும்  அஞ்சாத  ஆன்ம  நெஞ்சம்  கொண்டோராவர்           53                                 

அரசியர்  :

 

மலர்  தவழ்  கார்  கூந்தலும்  மகரமீன்  பொன்  செவியணியும்

பிறந்திட்ட  குடியின்  உயர்வும்  புகுந்திட்ட  இடத்தின்  பெருமையும்

இளம்  மார்பின்  எடையினை  தாங்கா  இற்றிடும்  மெல்லிடை  கொண்ட

ஆயக் கலைகள் அறுபதுமறிந்த  அரசியர்கள்  பலர் மாமன்னனுக்கு                  54

செம்பஞ்சின் இளம்  சூட்டினிலே  சிவந்திடும்  அவர்கள்  சிற்றடியும்

செந்நாகம்  படம்  விரித்தாற்  போல்  செம்மணி கொண்ட  மேகலையும்

பழங்கள்  தாங்கா  கிளை  தளரும்  பைங்கொடி  போல்  மென்மேனியும்

ஓவியர்கள்  வரைந்தது  போல்  ஒப்பற்ற  அழகுடையோர்களவர்           55

                                   

காமம்  பூத்த  காரிகையர்  :

 

காமன்  பூங்கணைகள்  கொண்ட  காமவல்லி  பைங்கொடிகள்

கற்பென்னும்  பட்டு  அணிந்த  கள்ளமில்லா  பெண்மணிகள்

இருண்ட  சுருள்  கருங்கூந்தல்  இளங்கயல்கள்  கண்  தவழும்

இளமூங்கிலாய்  தோளுடைய  இன்பம்  நிறை  பெட்டகங்கள்                                56                                            

பட்டத்து  அரசிகள்  இருவர்  :

 

ஆயிரம்  மனைவிமார்கள்  அரசனுக்கு  இருந்தாலும்

பட்டத்து  ராணிப்  பெருந்தேவியாய்  பயாபதியின்  பக்கம்  அமர

விண்ணுலக  மங்கைகளோ  விஷ்ணுவின்    திருமகளோ – என

உவமை  சொல்லி  கூறுதற்கு  உண்டு  அங்கே  இருவர்  மட்டும்                      57

 

பெருந்தேவியர்  இருவரின்  பெற்றி  :

 

கன்னலில் சுவை  நீர்  எடுத்து  கொம்புத்தேன்  அதில்  கலந்து

முக்கனியின்  சாறு  சேர்த்தால்  முதல்  தேவி  மிகாபதியாவாள்

இந்திரனின்  மனைவியை  ஒத்து  இளம்  ரோசா  இதழ்  குழம்பில்

இனிய  மது அதில் கலந்தால்  இரண்டாம்  தேவி  சசியாவாள்                       58                                             

 

மங்கையர்க்கரசியாகும்  மாண்பு  :

 

பூங்குழை  மகளீர்  இருவரும்  பொன்மலர்  கொம்பைப்  போல

மண்ணுலக  மங்கயர்க்கெல்லாம்  மதி கொண்ட  திலகமானார்

வசந்தத்தில்  வளர்ந்து  நிற்கும்  மாவண்ண  அசோகத்  தளிராய்

மாந்தரில்  மிளிர்ந்து  சிறந்து  மாண்பினை  பெற்றவராவார்                             59

 

இவ்விருவரும்  பயாபதியுடன்  கூடியுறைந்த  இன்பநலம்  :

 

மன்னனின்  மனதில்  உறைந்து மாண்புறும்  பெண்மையினால்

ஆண்  அரவம்  ஒன்றைச்  அணைத்து  பெண் நாகம்  இரண்டும்  பின்னி

திருமகளும்  கலைமகளும்  ஒரு  மகளாய்  நெஞ்சில்  தவழ்ந்து

இல்லறக்  கடலில்  மூழ்கி  இன்ப  முத்து  எடுத்து  மகிழ்ந்தனர்                                    60

 

மன்னனும்  மனைவியரும்  ஓர்  உயிர்  ஆகி  நிற்றல்  :

 

ஓருடல்  கொள்வது  என்றும்  ஒரு  உயிரின்  உலக  நியதி

பயாபதி  மன்னன்  உடலில்  பதிந்ததோ  இரண்டு  உயிர்கள்

ஐங்கணையான்  வெஞ்சினத்தால்  அடைமழையாய்  அம்பை  பொழிய

மூவுயிர்கள்  மூச்சித்  திணற  மூழ்கியது  இன்ப  வெள்ளத்தில்                                   61

 

நகரச்  சருக்கம்  முடிவுற்றது.

 

 

 

3.     குமாரகாலச்  சருக்கம்.      

 

 

தேவர்கள்  இருவர்  மண்ணுலகில்  தோன்றுதல்  :

 

தேவர்  கால  வாழ்வு  முடிந்து  தெய்வலேக  ஆட்சியின்  பின்

மண்ணுலகில்  மானிடர்களாய்  மறுஜென்மம்  எடுப்பதற்கு

வெண்சங்கு  நிறத்துடனும்  கார்முகிலின்  வடிவுடனும்

மிகாபதி  சசியர்  வயிற்றில்  மெங்கருவாய்  அமர்ந்தார்கள்                               62

 

மிகாபதி  விசயனைப்  பெறுதல்  :

 

பெண்ணின்  பெருந்தகையாள்  பெருந்தேவி  மிகாபதியவள்

கருவுற்ற  நாள்  முதலாய்  கண்களின்  பெரு  மகிழ்வில்

வெண்மதியின்  முகத்துடனும்  வெம்பரிதி  ஒளியுடனும்

விசயன்  என்னும்  மகவை  வேந்தனுக்கு  பரிசளித்தாள்                                     63

 

சசி  திவிட்டனைப்  பெறுதல்   :

 

இளந்தளிர்  அழகு  கொண்ட  இளைய  கோப்பெருந்தேவி  சசி

இன்னுயிரை  தன்னுயிராய்  இளம்  வயிற்றில்  வளர்த்து  வர

வானவர்கள்  மலர்  பொழிய  வலம்புரி  சங்குகள்  முழங்க

திவிட்டன்  என்னும்  மழலையை  சிறப்புடனே  பெற்று  தந்தாள்                    64

 

விசய  திவிட்டர்கள்  பிறந்த  போது  உண்டான  நன்மைகள்  :

 

போதனநகரமே  பொன்னகராகி  தேவலோகமாய்  சிறப்புடன்  திகழ

உயிர்களை  உற்று  வருத்திடும்  தீவினைப்  பற்றுகள்  நீங்கின

நல்வினை  குறவர்கள்  நெஞ்சில்  நலிவுரும்  ஆசைகள்    அழிந்தன

எண்திசைகள் எல்லாம்  ஒளிர்ந்தன  விசய  திவிட்டர் பிறந்திட நாளில்    65

 

மைந்தர்கள்  இருவரும்  மங்கையர்  மனதைக்  கவர்தல்  :

 

வான்மதி  இளம்  பிறை  போல்  வளர்ந்தனர்  மகன்களிருவரும் 

எட்டெட்டு  கலைகளும்  பயின்று  ஏற்றத்தைக்  கண்டார்கள்

எழில்  காளைப்  பருவத்தை  எய்தார்கள்  இருவரும் சேர்ந்து

ஏந்திழைகள்  நெஞ்சத்தில்  இரவு  உறக்கம்  களைத்தார்கள்                              66

 

விசயனுடைய  உடல், கண், குஞ்சு, காது  :

 

வலம்புரிச்  சங்கைப்போல்  வண்ண  நிறம்  உடையோன்

தாமரையின்  ஊள்ளிதழ்  போல்  தண்மை  கண்களுடையோன்

இருள் வந்து  கவிழ்ந்தது போல்  சுருள் கொண்ட  குஞ்சுடையோன்

சுடரொளி பொன்  குண்டலத்தை  சூடியுள்ள  செவியுடையோன்            67

 

மாலை,  மார்பு,  கை,  நிறம்,  தோள்,  நடை  ஆகியன  :

 

தேவர்கள்  போல்  வாடா  மாலை  திரண்ட பெரும்  விரிந்த  மார்பு

முழங்காலை  முத்தும்  கரங்கள்  முழுமதியாய்  ஒளிரும்  உடல்

குன்றொத்து  விளங்கும்  தோள்கள்  குகை  நீங்கும்  சிங்கம்  நடை

பொருத்தமாய்  பெற்றவன்  தான்  பெரியவன்  விசயன்  என்பான்                  68

 

திவிட்டன்  உடல்  முதலியன  :

 

கருமுகில்  நிறங் கலந்த  கடல்  நிறங்கொண்ட  உடலும்

வாய்மையின்  தூய்மை  ஒத்த  வெண்தாமரை  போன்ற  விழிகளும்

செந்தீயின்  நிறத்தை உடைய  செவ்வல்லி  போன்ற  வாயும்

தேரோடும்  வீதி  போன்ற  திரண்டகன்ற   மார்பன்  திவிட்டன்                             69

 

கை முதலியன  :

 

சங்கொடு  சக்கர  ரேகையை  உள்ளங்கை  உள்ளே    உள்ளவன்

தாமரை  மலர்கள்  போன்ற  சிவந்த  பெருவடிகள்  கொண்டவன்

நடையினில்  பெண் யானைப்  பெற்ற  களிறின் திமிர்  இயல்புடையவன்

இத்தனை  அம்சங்கள்  கொண்ட  இளவலே  திவிட்டன்  என்பான்                  70

 

இருவரும்  இளமை  எய்தல்  :

 

நிறை பெரும்  வளப்பத்தாலே  நிறை  பெற்ற  வனப்புடனே

இருவரும்  வந்தடைந்தனர்  இளமையாம்  சோலைக்குள்ளே

 செவ்விதழ்  நங்கையர்களின்  சிந்தையில்  பதிந்தனரிருவரும்

காமனின்  கணைகள்  தாக்கியும்  காட்டிட  மனம்  மறுத்தனர்                           71

 

மங்கையர்  மனதில்  விசயனும்  திவிட்டனும்  :

 

கடல்  வண்ணன்  இளம்  திவிட்டன்  கன்னியர்  கனவைக்  கலக்கினான்

மங்கையர்கள்  மயங்கினார்கள்  மனம்  கொண்ட பெருஞ் சுழற்சியாலே

வெண்மணி  நிறத்தான்  விசயன்  வீற்றிட்டான்  வனிதையர்  மனதில்

விழிகளில்  அவன் புலப்படாததால்  வீழ்ந்திட்டார்கள்  காதல்  நோயில்       73                             

அரசன்  மனைவியருடன்  அமர்ந்திருத்தல்  :

 

ஒன்றிட்ட  நவமணிகள்  கொண்டு  ஒழுங்குடன்  அவை  பதிக்கப்பட்டு

வண்டுகள்  கூட்டம்  மொய்க்கும்  வாடாத  மலர்மாலைகள்  அணிந்து

மணிமுடி  தரித்த  மன்னன்  பயாபதி  தன்  மனைவியரோடு 

அமரிகை  ஆற்றின்  கரையில்  அமர்ந்திருந்தான்  ஆசை  மனதில்                    73

 

அரசன்  உறங்குதல்  :

 

மண்டபத்தின்  விமானம்  வானில்  முகில்களைச்  சிதறச்  செய்ய

நாற்புறம்  மணிமாலைகளோடு  நறுமண  மலர்மாலைகள்  தொங்க

அகிற்புகை  ஊட்டப்  பெற்று  அகவிடும்  மயிலின்  தோகை யாய்

பஞ்சென இருந்த  மெத்தையில்  பயாபதி  துயில்  கொண்டிருந்தான்             74

 

உடற்பாதுகாப்பாளர்கள்  :

 

பொன்னினால்  வேய்ந்த  உடையை  கச்சினால்  அழுந்தக் கட்டி

பின்னிய  அரை ஞான்  அணிந்து  பெரும்  இரு  விழிகள்  கொண்டு

கையினில்  பெரும்  வில்லை  ஏந்தி  மன்னனின்  அடிகளைக்  காக்க

பயாபதி மன்னன் பஞ்சணை  விட்டு  பையவே  நித்திரை  கலைந்தான்      75                         

 

திருப்  பள்ளியெழுச்சி  :

 

மலர், பொன், மணி கண்ணடிகள்  மங்கலப் பொருளாய்  அமைய

மன்னனும்  பஞ்சணை  விட்டான்  மலர் முகம்  கழுவிக்கொண்டான்

முனிவர்கள்  வாழ்த்துக்கள்  கூறி  மும்மலர்கள்  முடியில்  தூவிட

திருப் பள்ளியெழுச்சி  கொண்டன்  துயவர்களை தொழுது போற்றினான்         76

 

அரசன்  வாயிலை  அடைதல்  ;

 

கைகளில்  கோல்கள்  கொண்ட  காவலில் நிற்கும்  மகளீர்  எல்லாம்

வாயிலின்  ஊடே  உலாவி   நின்று  மன்னனின்  வெளிவரவை  நோக்க

வஞ்சியர்கள் கை சாமரை  வீச  வளைகரத்தோர்  வாழ்த்துக்  கூறிட

திருவோலக்க  மண்டப வாசலுக்கு தேவனனைய  வேந்தன் வந்தான்             77

 

அரசன்  அணையில்  வீற்றிருக்கும்  காட்சி  :

 

பளிங்கு  கற்களைப்  பலகையாக்கி பசும்  பொன்னால்  மேடையமைத்து

பவழத்தால்  இழைத்த  தூண்களில்  பனி  வெள்ளை  கூரை  வேய்ந்து

யாளியின்  முகங்களைக்  கொண்ட  யவ்வனப்  படிகள்  கடந்து

செம்பொன்  சிம்மாசனத்தில்  சிம்மம்  போல்  அமர்ந்திருந்தான்              78

 

நுண்ணிய  நூல் கற்ற  மறையோரும்  நுண்ணறிவு  அமைச்சர்களும்

அரசனின்  மனக் குறிப்பறிந்து  அவர்கள்  அவரவர்  இடத்தில்  அமர

மின்னொளி  வீசும் முடிகளுடன்  மிளிர்கின்ற  கடகம்  அணிந்த

சிற்றரசர்கள்  சிரம்  அடி  தொட  சீரிய  வரிசையில்  அமர்ந்தனர்            79

 

அரசனின்  அன்பைப்  பெற்றும்  அரிய  வெற்றி  ஈட்டும்  திறமையும்

பயாபதிமேல்  பாசம்  கொண்ட  படைத்தலைவர்கள்  பக்கமிருக்க

ஐம்புலங்கள்  மகிழ்ச்சி  கொள்ளும்  அமுத  இசைப்  பாடல்களெல்லாம்

புலவர்கள்  சபைக்குள்  இசைக்க  சபையே  இசை  அரங்கமானது                    80

 

வாயில்  காவலனுக்கு  ஒரு  கட்டளை  :

 

வலிய  குன்றொத்த  தோளோர்களே  வாயில்  காக்கும்  வீரமறவர்களே

திருவோலக்க  மண்டபத்திற்கு  திரள்கின்ற  மக்களை  எல்லாம்

ஏழுநாழிகைப்  பொழுது  வரை  எவ்வித  தடைகளும்  இன்றி

காவலை  விட்டுவிடுங்கள்  என  காவலர்க்கு  கட்டளையிட்டான்             81

 

நிமித்திகன்  வரவு  :

 

எண்ணிறைந்த  நூல்கள்  கற்று  என்  மனதில்  அடக்கம்  கொண்டு

எட்டவும்  கிட்டவும்  நடப்பவைகளை  எடுத்தியம்பும்  திறமை கொண்ட

முக்காலம்  அறியும்  அறிவினை  முழுமையாய்  தெளிந்த  ஞானமுடைய

நான்  அரசனைக்  காண  வேண்டும்  அறிந்து  சொல்  காவலா  என்றான் 82

 

அரசன்  நிமித்தனை  வரவேற்றல்  :

 

மன்னனின்  குறிப்பினை  உணர்ந்த  மலையொத்த  வாயில்  காப்போன்

நிமித்திகனை  செல்ல  இசைந்தான்  நிமித்திகனும்  சபைக்குள் சென்றான்

பெரும்படை  உடைய  பயாபதி  பசும்  வெள்ளி  மலர்க்   கையோடு

 உயர்ந்த  ஓர்  இருக்கையை  காட்ட  உட்கார்ந்தான்  நிமித்திகன்  அதில்           83

 

நிமித்திகன்  தன்  ஆற்றலை  காட்ட  தொடங்குதல்  :

 

நல்லொழுக்கம்  கொண்ட  நிமித்திகன்  நுண்ணிய  நூலறிவைக்  காட்ட

முக்காலம்  உணர்த்தும்  நிலையை  மொழித்திறத்தில்  கூறலானான்

வேந்தரே  உம்  கனவில்  ஒரு  வேழம்  விண்ணில்  இருந்து  மண்ணுக்கு வந்து

திவிட்டனுக்கு  மலர்மாலை  சூட்டி  சென்றது  தன்  இடத்திற்கென்றான்       84                     

 

வித்யாதரர்கள்  அரசன்  ஒருவன்  விண்  இறங்கி  மண்ணுக்கு  வந்து

திவிட்டனுக்கு  மகளைத்  தருவான்  தெரிந்திடுவீர் கனவின்  பயனை

ஓரேழு  நாள்  கடந்த  பின்னர்  ஒரு  தூதன்  ஓலையை  கையிலேந்தி

புட்பமாகரண்டம்  பொழிலடைவான்  புரிந்து  நீர்  தெளிவீரென்றான்            85

 

அந்நிமித்திகன்  சொல்லைக்கேட்டு  அவையோர்கள்  வியப்படைந்து

திவிட்டனின்  எழிலும்  புகழும்  சென்றது  விண்ணை  நோக்கி

நிமித்திகன்  மொழிகள்  மெய்யே  நடந்திடும்  அவன்  கூற்றுகளெல்லாம்

நிலவுலகை  ஆளும்  வேந்தே  நிமித்திகன்  சொல்  ஏற்பீரென்றனர்                  86

 

அரசன்  ஆராய்ச்சி  மன்றத்தை  அடைதல்  :

 

நாழிகை  ஒன்று  கடந்திட  நல்லொலி  பேரிகை  முழங்க

மன்னனும்  அவை  கலைத்து  மந்திரிகட்கு  குறிப்பால்  உணர்த்தி

மேனிநிலை  மாடத்தில்  உள்ள  மாளிகையாம்  ஆராய்ச்சி  கூடத்தை

அரசனும்  சென்றடைந்தான்  அமைச்சார்கள்  பின்  தொடர்ந்தனர்                  87                                 

இரவினில்  தான்  கண்ட  கனவை  சோதிடன்  ஆய்ந்து  கூறியதை

அமைச்சர்க்கு  எடுத்துச்  சொல்லி  அவர்கள்  முகம்  பார்த்திருக்க

நற்தவம்  உடைய  திவிட்டனின்  நல்லெழிலும்  வீரமும்  புகழும்

மண்ணுலகை  ஆள்வான்  என்று  மன்றத்தில்  மந்திரிகள்  கூறினர்                    88

 

சங்கு  உருளை  வடிவ  கோடுகள்  தங்கள்  மகன்  கைகளில்  இருக்க

திருமாலை  ஒத்த  வடிவன்  என  தெரிந்ததே  உலக்குக்கெல்லாம்

வித்தியாதரர்கள்  மன்னன்  மகள்  விஞ்சையின்  உலகுக்கு  அரசி

அவன்  மகன்  திவிட்டனுக்கானால்  அஞ்சிடுவர்   பகைவர்களெல்லாம்       89

 

புட்பமாகரணம்  பொழிலில்  பளிங்கினால்  மேடை  அமைத்து

பால்  வெள்ளிக்  கூரை  வேய்ந்து  பல  மணி  மாலைகள்  கட்டி

திருமகாந்தன்  என்னும்  வீரனை  தொடர்ந்து  அங்கிருக்கச்செய்து

விஞ்சையர்  தூதன்  வரவினை  வரவேற்க    வைப்போமென்றான்                   90

 

மாமன்னன்  மனம்  மகிழ்ந்தான்  மந்திரிகள்  மொழிகள்  கேட்டு

துருமகாந்தனைக்  காக்கச்  சொல்லி  துணைவியரை  நாடிச்  சென்றான்

வேந்தனின்  காலடிகள்  பணிந்து  வேண்டிய  பொருட்களினோடு

துருமகாந்தன்  உடனே  சென்றான்  புட்பமாகரணம்  பொழிலை  நோக்கி          91

 

 

                                    குமாரகால  சருக்கம்  முற்றிற்று.

 

4.     இரதநூபுரச்  சருக்கம்.

 

நுதலிப்  புகுதல்  :

 

கடலென  நீண்ட  மதில்களும்  காவலன்  பயாபதி  ஆட்சியும்

போதன  நகரத்து  மாட்சியும்  போன  சருக்கத்தில்  அறிந்தோம் – இனி

நல் மணம்  என்  திசையும்  பரப்பி  நறு மலர்கள்  கவிழ்ந்த  பொழிலில்

நாடெல்லாம்  நிறைந்திருக்கும்  வித்தியாதரர்  உலகம்  காண்போம்            92

 

வெள்ளிமலை  :

 

சித்திரைத்  திங்களின்  ஒளியும்  சிறுமுத்துப்  பரவிய  தரையும்

விண்ணினை  தொட்டு  வளர்ந்து  விழிதொடும்  தூரம்  பரவி

முகிலெல்லாம்  முகட்டில்  தவழ  முழு  அழகும்  கொண்டு  ஒளிரும்

வித்தியாதரர்  உலகம்  கொண்ட வெள்ளிமலை  என்னும்  மலையாம்  93

 

வியந்திர  தேவர்கள்  எல்லாம்  வெள்ளிமலையின்  மீது  சேர்ந்து

கார்குழல்  தவழும்  கன்னியரோடு  களித்து  விளையாடும்  போது

அடர் பொழிலின்  இடங்களெல்லாம்  அத்தேவர்கள்  உடலின்  ஒளியால்

செங்கதிரோன்  உதயம்  கண்ட  செவ்வான  நிறத்தைக் கொண்டது            94                                 

செவ்விதழ்கள்  சிந்தும்  மதுவை  தேவர்கள்  உண்டு   மகிழ்ந்து

செந்தாமரை  தனங்களைத்  தழுவ  சிதைந்த  மலர்கள் மணம்  பரப்ப

கின்னர  வகுப்பைச்  சேர்ந்த  கிரங்கிய  தேவர்கள்  எல்லாம்

மங்கையர்கள்  மேனி  தழுவிட  மலர்ந்தது  குளிர்  மணம்  அங்கு                        95

 

தேனது  உள்ளே  பொருந்திய  செழிப்புமிக்க  வனத்திடையே

சந்தனம்  மணக்கும்  மலையை  தேவர்கள்  நாடுவர்  தினந்தினம்

நறுமணக்  கூந்தல்  நங்கையர்  நடந்திட்ட  செம்பஞ்சுக்  குழம்பு – அவர்கள்

துகில்கின்ற  பாறையில்  படிந்து  செம்பவள  மஞ்சம்  ஆனது                                   96

 

வெள்ளியெனக்  கொட்டும்  அருவி  பொன்பாறையில்  பொங்கி  வீழ

நாகலோக  அழகு   நங்கையர்கள்  நடனம்  போல்  அந்நீரில்  ஆட

மதயானையின்  மும்மத  நீரின்  மத  மணம்  நீரில்  மருவி கலக்க

கன்னியரின்  மல்லிகை  மணமும்  கலந்து  மணந்தது  அருவி நீரில்            97

 

சேடிநாட்டின்  சிறப்பு  :

 

வீரக்கழல்கள்  காலில்  அணிந்த  விஞ்சையர்கள்  வாழும்  உலகில்

பொற்றாமரைகள்  மலர்ந்து  பொருந்திய  பூஞ்சோலைகளில்

கற்பக  மரங்கள்  எல்லாம்  காடு  போல்  வளர்ந்துள்ள  காட்சி

கண்களைக்  கட்டும்  அழகால்  கருத்தினை  மழுங்கச்  செய்யும்                   98

 

வெள்ளிமலை  உச்சியின்  மீது  வீற்றிருக்கும்  தேவர்கள்  போல

விஞ்சை  உலகின்  தென்  திசையில்  விளங்கும்  நகரம்  இரதநூபுரம்

தங்கநிற  பழங்கள்  கொண்டு    தரை  தொடும்  வாழைக்குலைகள்

சிறு  அசைவு  கொள்ளும்  போது  சிந்திடும்  சாறாய்த்  தெரியும்                   99

 

வெண்பாளை  வெடித்து  தெரியும்  பசிய  மணிகுலைகள்  கொண்ட

கமுகு  மரக்கூட்டத்தின்  நிழல்  காதவழி  தூரம்  விழுந்து  நீளும்

கற்பக  மரங்களின்  ஊடே  பாரிஜாத  மரங்களும்  சேர்ந்து

பொன்மணி  மாளிகைகளை  சூழ்ந்து  புதியதோர்  அழகைக்  கொட்டும்        100

 

மார்பினில்  சந்தனக்  குழப்பொடு  மஞ்சத்தில்  மங்கையர்  கூட்டால்

மேனியில்  வியர்வைத்  துளிர  மென்தென்றல்  மணங்கொண்டுலவ

மதுவினை  உண்டு  மயங்கிய  வண்டுகள்  இசைத்திடும்  இசையோ

மாளிகைதோறும்  ஒலிக்கும்  இரதநூபுர  நகரந்  தன்னில்                                    101

 

புண்ணிய  நதிகள்  தவழ்ந்து  பூமணம்  கமழும்  பொழில்கள்

சிறுமுத்து  மணல்  குன்றோடு  சிரித்திடும்  முல்லைப்  பந்தல்கள்

காமனின்  ஐங்கணைகள்  தாக்க  குவிந்திட்ட  இன்பம்  எல்லாம்

மன்மதன்  போர்  முழக்கத்தேலே  இரதநூபுரம்  துன்பம்  கொண்டது              102                 

சுவலனசடி  :

 

மதயானைகள்  கொண்ட  வேந்தன்  மங்காத  பெரும்புகழ்  உடையோன்

மூவுலகும்  பெருமை  கொள்ளும்  மணிமுடி  கொண்ட  மன்னன்

தீயிக்கு  இன்னோர்  பெயரான  சுவலனன்  என்னும்  பெயருடைய

சுவலன சடி  என்னும்  சுந்தரன்  இரதநூபுர  மன்னன்  ஆவான்                                103

 

குங்குமக்  குழம்பினுள்ளே  குழைத்த  மணப் பொருள்கள்  சேர்த்து

மேனியெல்லாம்  பூசிய  மார்பன்  விழியெட்டா  வெண்குடை நிழலோன்

மதயானைகள்  படையைக்  கொண்ட  மாற்றரசர்கள்  வணங்கும் வேந்தன்

சுவலனசடியின்  சிறப்பைக்  கூற  சொற்களே  தமிழில்  இல்லை                    104

 

வித்தையில்  தேர்ச்சி  உடையான்  விரும்பியதை  கைவரப் பெற்றான்

செம்பொன்  நீண்ட  முடியுடையான்  சிறந்த  விற்படையுடையான்

கருங்குன்று  களிறுப் படையுடன்  கனியுதிரும்  சொல்லுங்கொண்ட

உண்மை  நெறியை  கடைபிடிக்கும்  உத்தம  குண  மன்னன்  ஆவான்         105

                       

வெற்றியின்  வித்தை  அறிந்த  வெண்கொற்ற  குடையுடைய  வேந்தன்

ஒப்பற்றத்  தன்  தன்மையாளும்  ஓங்கியச்  நல் செங்கோலினாலும்

உலகத்தையாளும்  அவனிடம்  ஓரே  குற்றம்  உள்ளது  எனில்

நற்குணங்கள்  இல்லா உயிர்க்கு  நல் அருள்  செய்யாமை  ஒன்றே                      106

 

நவமணி  செம்பொன்  முடியான் நல்  ஆட்சி  செய்யும்  நாட்டில்

நடுங்கியவர்கள்  யாருமில்லை  நடுங்கியது  தூண்  கொடிகள்  மட்டும்

அரசனின்  ஆணை எல்லாம்  ஆடவர்களை  வளைப்பதில்லை

காளையரை  வளைப்பதெல்லாம்  கன்னியர்கள்  விற்புருவம்  மட்டும்          107

 

வெள்ளிய  வெண்குடை  மன்னனின்  கள்ளென  மயக்கும்  ஆட்சியில்

உணவுண்ணா  வாய்கள்  என்றால்  உடல் விற்கும்  பரத்தையர் வாய்களே

மதுவினை  அருவியாய்  கொட்டும்  நறுமண  மலர்களின்  வாய்களை

வண்டுகள்  தழுவியே  உறிஞ்சிட  வாடின  பொழில்களின்  கொடிகள்          108           

அரசன்  மனைவி  வாயுவேகை  :

 

அரசனின்  நல்லாட்சி  தன்னில்  அழிந்தன  பொய்யவை  எல்லாம்

செழித்தன  மெய்யவையெல்லாம்  நிலைத்தன  செங்கோல்  முறையில்

அமர்ந்தனள்  திருமகளைப்  போல்  அவன்  மார்பில்  துயில்வதற்கு

வடிந்திடும்  தேன் இதழ்கள் கொண்ட வாயுவேகை  என்னும்  வனிதை        109

                      

பொன்  பட்டம்  அணிந்த  நூதல்  பொன்னாடைகள்  தவழும்  மேனி

கார்குழல்கள்  காலடி  தவழ்ந்திட  கயல்விழிகள்  காதணி  நுகர்ந்திட

மன்னனின்  தேவியர்களில்  மலர்ந்து  ஓங்கிய  செந்தாமரையாய்

வாயுவேகை  பட்டத்து  ராணி  சுவலன சடியின்  இதயத்து  தேனி            110

 

கோவையாய்  சிவந்த  வாயும்  குளிர்  மணம்  தவழும்  கூந்தலும்

கருங்குவளை  மலரின்  வடிவில்  கத்தி போல்  நீண்ட  கண்களும்

ஐங்கணையான்  அளிக்கும்  நோயை  அரசனுக்கு  அயராமல்  ஈந்து

அரசன்  அவளை  நோக்க  நோக்க  அனுதினமும்  புதியவள்  ஆனாள்                        111

 

அருககீர்த்தி  என்னும்  மகன்  பிறத்தல்  :

 

மலரினை  வண்டுகள்  தழுவி  மதுவுண்டு  மயங்கியது  போல்

அரசியின்  மேனித்  தழுவலாலே  அருககீர்த்தி  மகன்  பிறந்தான்

சுந்தரன்  சுவலனசடியும்  சுந்தர  ராணி  வாயுவேகையும்

சுவைத்திட்ட  இல்லறத்தால்  சுயம்பிரபை  மகளும்  பிறந்தாள்                            112

 

சுயம்பிரபையின்  அழகு  சிறப்பு  :

 

செந்தாமரை  மலரின்  முகமும்  செவியணி  குண்டல  ஒளியும்

காரிருள்  கவிழ்ந்த  கூந்தலும்  கெண்டைமீன்  கண்களும்  கொண்டு

கங்கையின்  புனித  நீர்  போல்  பிறை  திங்கள்  தவழும்  வானமாய்

அச்சம்,  மட,  பயிற்பு  நாணமும்  அணிகலனாய்  ஏற்றாள் சுயம்பிரபை            113

 

கனி  தனங்கள்  தாங்கா  இடையொடு  காதணிந்த  கற்பகப்  பூக்களில்

தாதுண்ண  வந்த  வண்டுகள்  தவழும்  அப்பூக்களின்  மேலே

தவழ்ந்திடும்  நேரமெல்லாம்   தாங்கொணாச்  சுமையினாலே

காமனின்  வில்லாய்  வளையும்  கன்னியின்  புருவங்களிரண்டும்                     114

 

பெண்ணவள்  பொன்மேனி  ஒளியால்  விண்ணவர்  விழிகள்  வருந்த

மண்ணவர்  கண்கள்  இவளால்  அழகென்னும்  சொல்லைக்  கண்டது

சிறு  தனங்கள்  வளரும்  பொருட்டு  செழுமண  சுண்ணங்கள்  பூசிட

அணிகலச்  சுமையும்  சேர்ந்திட  ஆரணங்கு  கொடியென  துவண்டாள்       115                       

செவிவரை  நீண்ட  விழிகளும்  செதுக்கிய  இளமை  வடிவமும்

அகிற்புகை  மணத்தின்  குழலும்  அரும் பவள  வாயின்  இதழும்

பளிச்சிடும்  முல்லைப்  போன்ற  பால்  முத்துப்  பற்கள்  வரிசை

மன்மதனின்  ஐங்கணைகளில்  மலர்  முல்லை  அரும்பை ஒத்தன                      116

 

வித்தைகள்  அனைத்தும்  கற்றாள்  விஞ்சையர்  வேந்தன்  மகள்

அரசனின் நன் மகள்  பிறப்பால்  அஞ்சியே  அரசர்கள்  பணிந்தனர்

பவளம்  போல்  சிவந்த  வாயாள்  பாவையவள்  வயந்த  திலகை

சுயம்பிரபை  சுந்தரியே  இன்று  சுகமான  வேனல்  வந்ததென்றாள்                 117

 

வேனல்  வரவைக்  கூறுதல்  :

 

மது  சொட்டும்  மாலை  அணிந்த  மறவர்  கழல்  அணிந்த வேந்தே

பூவிதழ்  விரிந்த  பூக்கள்  பொழில்களில்  தேனைக்  கொட்ட

சிறியோர்  கை  செல்வம்  போல  சிறு மணமும்  இல்லா மலர்கள்

இளங்கோங்கு  மரத்தில்  பூத்திட  இளவேனிற்  காலம்  வந்ததென்றாள்     118

 

பூங்கொடிகள்  சுமைதாங்காமல்  பொழிலிலுள்ள   மரங்களில்  படர

தேனுண்ண  மொய்க்கும்  வண்டுகள்  தேனினை  மிகுதியாய்  குடித்து

பூந்தாதில்  பெண்  வண்டுகளோடு  பொருந்தியே  களித்து  மகிழ்வது

மாமரத்தின்  பூங்கொத்துகள்  மண்  தழுவுமோ  என்றிருந்தது                                  119

 

பாணர்கள்  கூட்டம்  போல  பாடிடும்  தும்பிகள்  எல்லாம்

காமனின்  ஐங்கணைப்  பற்றியும்  களித்திடும்  வெற்றியை  கூறியும்

தொடர்ந்திடும்  பாடல்கள்  கேட்ட  தோகையராய்  மலர்ந்த  மலர்கள்

இதழினால்  ஊட்டும்  தேனை   இன்பத்தில்  தும்பிகள்  அருந்தின                120

 

மரங்களில்  மலர்ந்த மலர்களின்  மடியில்  சாய இயலா  வண்டுகள்

செவ்வொளி  நெருப்பின்  மேலே  சிதறிடும் கரித்துகள்  போன்றும்

அசோகமரத் தோற்றம்  கண்டு  அணையா எரிமலை  என விலகி  பின்

அதில்  பூத்த  பூக்கள்  தேனை  அருந்திட  மலர்களை மொய்த்தன                        121

 

மாம்பிஞ்சின்  துவர்ப்பு  அறிந்து  மரம்  விட்டு  பறந்த  குயில்கள்

முருங்கமரச்  சோலை  மலரில்  மூழ்கி  தேன்  குடிப்பது  போல்

பண்பிலா  பொருளுடையோரிடம்  பலன்  பெற  யாரும்  செல்லார்

அப்பொருள்களும்  வீணேயாகும்  போற்றுவார்  யாரும்  இன்றி                        122

 

அரசன் மனைவி மக்களுடன் மனோவனம்  எனும்  பொழிலை  அடைதல் :

 

வேல்விழியாள்  வயந்ததிலகை  வேனல்  வந்த  விபரம்  சொல்ல

சுவலனசடி  அரசன்  தனது  சுந்தர  வடிவ  ராணிகளுடனும்

சுயம்பிரபை, அருககீர்த்தியுடனும்  சுற்றும்  பாதுகாவலருடனும்

இரதநூபுரம்  நகரத்தை  விட்டு  நாடினர்  மனோவனம்  பொழிலை             123

 

தேமா  மரங்கள்  பூக்கள்  தூவ  தேனிசையை  சிறு குயிகள்  பாட

மங்கல  வாழ்த்துக்கள்  பாடி  மன்னனை  தொழும்  மாந்தர்கள்  போல

செழித்த  இளம்  பூங்கொடிகள்  செந்துளிர்  மென்  கரங்களாலே

மன்னனை  வணங்கி  வரவேற்றது  மனோவனம்  பொழிலின்  அழகு           124

 

பூம்பொழிலின்  பூங்கொடிகள்  பூத்தாதினை  மணந்து  தூவிட

குங்கும  மரங்கள்  எல்லாம்  மலர்  கொண்டு  சாமரை  வீசிட

கோங்கு  மரங்கள்  விண்ணளாவி  குடைகளென  விரிந்து  நிற்க

மன்னனின்  வரவைக்  கண்டு  மகிழ்ந்தது  மனோவனம்  அன்று                      125

 

வேந்தனின்  குணங்களைப்  பாடி  வண்டுகள்  பண்ணிசைப் பாடின

தண்ணிய  நறுமணப்  பூக்கள்  சாரலாய்  அரசனைத்  தழுவின

மலை  அருவி  நீரில்  நனைந்து  மணங்கமழும்  மலரில்  புகுந்து

மணமகளாய்  வரும்  தென்றல்  மன்னனை  அணைத்தது  அங்கு                       126

 

அரசன்  பெண்களுக்கு  பொழில்  வளம்  காட்டி  விளையாடுதல்  :

 

இளவேனில்  பருவம்  ஆனது  எதிர்கொண்டு  மன்னனை  நோக்க

சோலை  வளம்  காண்பித்தான்  தோகை  மயில்  ராணிகளுக்கு

அசோக மரத்தளிர்கள்  செழித்து  புன்னைப்பூ கொட்டும்  தேனும்

பெண்மையின்  செல்வம்  போல  பெருமை  மிக்க  வேனல்  அது               127

 

கார்முகில்  கூந்தல்  மங்கையீர்  கனி சுவை  தனங்கள்  உடையீர் – உம்

அழகிய  கரங்களைக்  கண்டு  அசோகத்தின்  தளிர்  தழைத்ததிங்கு

குருக்கத்திக்  கொடிகள்  எல்லாம்  குறு  இடை  உம்  எழிலைக்  கண்டு

நாணத்தால்  நெளிந்து  ஆடின  நறுந்  தென்றல்  வீசியதாலே                       128

 

மங்கையர்  உங்கள்  மேனி  கண்டு  மாமரத் தளிர்கள்  வளர்ந்தன

மது  சிந்தும்  செவ்விதழ்  கண்டு  மலர்ந்தன  மலர்கள்  மரங்களில்

நீராழி  மண்டப  குளங்கள்  நிறைந்தன  குவளையும்  ஆம்பளும் 

கண்  போல்  தாமரை  மலர்ந்து  காமனை  மருளச்  செய்தன                             129

 

அரசன்  திருக்கோயிலை  அடைதல்  :

 

மயங்கிடும்  மனைவியரோடு  பொழில்  விளையாடல்கள்  புரிந்து         

இளவேனில்  காலம்  தந்திட்ட  இன்பத்தை  தூய்த்தான்  வேந்தன்

மணிக்கற்கள்  பதிந்து  கட்டிய  மாபெரும்  மதில்கள்  சூழ்ந்த

அருகனின்  ஆலயம்  தொழுதிட   அன்றலர்ந்தா  மலர்கள்  கொண்டான்      130        

 

வழி  வழியே  முன்னோர்கள்  தொழுத  வாலறிவன்   ஜினாலயத்தை

வலமது  முறைபடி  சுற்றி  வர  வாயில்  கதவும்  திறந்தது  அங்கு

எண்வினைகள்  அறுத்த  நாதன்  எண்குணங்கள்  அணிந்த  வேதன்

மாலவனின்  இருப்பிடத்தில்  மாணிக்கத்தின்  ஒளி  மலர்ந்தது                           131

 

அரசன்  கடவுளைப்  போற்றத்  தொடங்குதல்  :

 

மன்னனின்  மெய்யது  சிளிர்க்க  மனமது  அருகனை  நினைக்க

இருகரம்  சிரம்  மேல்  விரைந்து  இளம்  தாமரை  மொட்டாய்  குவிய

இருவினை  துறந்த   அருகனின்  திருவடிகள்  சிந்தையில்  பதிய

எண்குணத்தானைப்  போற்றி  எழுச்சியுடன்  பாடலானான்                                  132

 

அணிகலங்கள்  ஏதும்  அற்று  அருள்  ஒளி  நிரம்பப்  பெற்று

இயற்கையின்  ஒளியாய்  விளங்கி  இயல்பினில்  எல்லாம்  அறிந்து

பகைகுணம்  இல்லா  வடிவில்  பகையினை  அழித்த  இறைவா – உனை

உள்ளத்தால்  அறிந்தவர்கள்  உலகினில்  உயர்ந்தோராவார்கள்                 133

 

மருவற்ற  பொன்  வடிவன்  என்று  ஆகம நூல்கள்  சொன்னாலும்

வலத்திரு  மார்பு  தன்னில்  சீவத்சம்  மருவைப்  பெற்றாய் – என

அருகனைப்  போற்றி  புகழ்ந்து  அவன்  திருவடி  தொழுவதற்கு       

கதவினைச்  சாத்தி  தாளிட்டு  கருவறை  முன்னே  நின்றான்                             134

 

விண்வழியாய்  இறங்கி  வந்த  வெண்ணொளி  முனிவரிருவர்

அனைவர்க்கும்  பரமனான  அருகனின்  திருவடிகள்  தொழ

ஜினாலயம்  தன்னில்  வந்து  ஜினதேவனை  வலமாய்  சுற்றி

வெண்மணிக்  குரலினாலே  வினை  வென்றவனைப்  பாடினார்கள்                   135                                            

 

விண்ணவர்கள்  போற்றும்  வடிவே  வெண்தாமரையில்  நின்ற  திருவே

சான்றோர்கள்  உரையும்  பாட்டும்    சன்னிதியில்  போற்றினாலும்

அகமயக்கம்  உடையோன்  அல்ல  அனைத்துயிர்க்கும்  அருளும்  உருவே

நின்னிடம்  யாம்  கொண்ட  பக்தி  நிறைந்த  அன்பால்  மட்டும்  தானே       136

 

போற்றிட்டாலும்  புகழ்ந்திட்டாலும்  உன்  பொன்மனம்  மகிழ்வதில்லை

அறிந்தும்  யாம்  இங்கு  நின்று  உன்  அறநெறியால்  அன்பு கொண்டோம்

குணங்களைப்  போற்றிப்  பாடல்  குறைவிலா  அன்பினால்  தான்

பிறவிகள்  அழித்த  பெருமானே  போற்றினோம்  போறினோம்  உன்னை   137

 

ஓங்கிய  குரலில்  முனிகள்  பாட  ஒலிகள்  எட்டும்  தொலைவு  வரையில்

உயிர்களின்  தீவினை  ஒழிந்து  உவகையில்  வாழ்ந்தன  உயிர்கள்

நற்குணங்கள்  மலையாய்  நிறைந்த  நல்மனம்  கொண்ட  முனிகள்

கடமைகள்  முடிந்த  பின்னர்  கண்டனர்  மன்னன்  சுவலன சடியை                 138

 

சமண முனிகள்  அரசனுக்கு  அறவுரை  பகர  விரும்பல்  :

 

தென் தென்றல்  தேனாய்  வீசிட  தேன்  துளிகள்  மலரினில்  சிந்திட

வெண்நிலவு  நின்று  ஒளிவிட  வெண்படிகக்  கல்லில்  அமர்ந்தனர்

ஆலய மேடையின்  முன்னே  சென்ற  அரசாளும்  சுவலனசடியும்

முனிவர்களைக்  கண்டு  மகிழ்ந்து  முடி தேய  திருவடிகள்  தொழுதான் 139

 

மாமன்னனுக்கு  வாழ்த்துக்  கூறி  மேடையில்  அமரச்  செய்தனர்

மேகலை  அணிந்த  தேவியர் சூழ  மன்னனும்  மேடையில்  அமர்ந்தான்

இருமகள்கள்  வாசம்  செய்யும்  இரதநூபுர  அரிமா  அரசே

நலமா  என  துறவிகள்  கேட்க  நாவினால்  போற்றி  வணங்கினான்                   140

( இருமகள்கள்  :  திருமகள்,  மலைமகள் )

 

முனிவரில்  மூத்தோனைப்  பார்த்து  முடிமன்னன்  கேட்க  நினைக்க

முனிவரே  அன்பால்  நெகிழ்ந்து  மன்னனுக்கு  மனம்  அருளலானார்

கருமமாம்  பகைகளை  அழிக்கும்  அமிர்தமாம்  மொழிகளைக் கேட்க

அரசனே  உன்  மனம்  விழைவு  என  அரசனும்  இருகரம்  தொழுதான் 141

 

உண்மை  உணர்வில்லா  விதையில்  உதிக்கின்ற  கர்மங்களெல்லாம்

உயிரினில்  கலந்து  தொடர்ந்து  உறுதுன்பம்  தந்திடும் போதும்

மயக்கத்தில்  அதனை  நுகர்ந்து  மயங்கிடும்   உலகின்  உயிர்கள்

எடுத்திடும்  பிறவிகள்  எல்லாம்  ஏழ்கடல்  மணலுக்கு  ஒப்பாம்                142                                 

 

பழவினைகள்  விடாமல்  தொடர்ந்து  பற்றிடும்  கருமங்களாலே

இப்பிறப்பிலும்  இழிவன  செய்து  இறந்தும்  மறுபிறவி எடுப்பதும்

உயிர்களிடம்  அன்பொடு  அறனும்  உள்ளத்தே  இல்லா  உயிர்களும்

ஆழ்துன்பம்  நுகரும்  என்று  சகநந்தன  முனிவர்  சொன்னார்                         143

 

மெய்யறிவுடையோர்  ஞானம் கேட்டு  மாலவன் அறத்தை  மனதிலேற்று

காதிகர்மங்கள்  கடையற  நீக்கி  மோட்சவீட்டினை முற்றிலும்  நாடிட

வேண்டுதல்  வேண்டாமை  ஒழித்து  முதலும்  முடிவும்  இல்லா  அருகனின்

திருவடிகள்   சரணம்  அடைய  தீர்ந்திடும்  பிறவிகள் தந்திடும்  சுகம்      144

 

பொருள்களின்  தன்மையை  உணர்ந்து  அதன்  குணத்தை  மனதில்  நிறுத்தி

ஆகமத்தின்  ஒழுக்கம்  நின்றால்  அருகன்  கூறிய  மும்மணியாகும்

ஊழ்வினைகள்  துன்பம்  போக்கி  உடன்  வரும்  தீவினைகள்  அழித்து

மோட்சமாம்  வீட்டினைத்  தரும்  மும்மணிகள்  ஒன்றே  வாழ்வில்                  145

 

பிறவியின்  துன்பம்  போக்கும்  பெருமையுடைய  ரத்னத்திரயத்தை

சமண முனிவர்கள்  அருளினாலே  சிந்தையில்  பதியச்  செய்து

அறவுரையைக்  கேட்ட  மக்கள்  அனைவரும்  உள்ளம்  தெளிந்து

பிறவிகள்  நீங்கப்  பெற்ற  பயன்களை  பெற்றதற்கு  ஒத்தனர்                               146

 

முனிவர்கள்  அருளுரைக் கேட்ட  முடிமன்னன்  சுவலனசடியும்

உண்மைப்  பொருளினை  உணர்ந்து உள்ளத்தில் நல் ஒளியனாகி

உடன்  வந்த உற்றோர்  உறவினரும் ஒரேமகள்  சுயம்பிரபையும்

உற்றதோர்  நோன்பினை  ஏற்க  உள்ளத்தில்  முடிவு செய்தனர்               147

 

அறிவுரைகள்  கேட்டப் பின்னர்  அம்முனிவர்கள்  அடிதொழுது

ஆலயத்தை  வலமாய்  வந்து  அங்கிருந்து  அகன்றான்  அரசன்

சோலையில்  தங்கி  மகிழ்ந்து  தேவியருடன்  ஆடி  களைத்து

அனைவரும்  படையாய்  சூழ  அடைந்திட்டான் இரதநூபுரத்தை                 148

 

சுயம்பிரபை  நோம்பினால்  மேம்படுதல்  :

 

கண்கவர்  பொன் மேனி  கொண்ட  கார்குழலாள்  சுயம்பிரபை

மேற்கொண்ட  நோம்பின்  செயலால்  மேலுலக  அழகி  ஆனாள்

நோம்பினை  முறைப்படி  செய்தாள்  நெஞ்சத்தில்  அருகனை தொழுதாள்

குறைவற்ற  மனத்  திடத்தால்  குன்றாத  பெரும்  பெருமை  பெற்றாள்     149

 

மெய்நூலில்  எழுதிய  நோன்பை  மனம்  ஊன்றி  செய்தனாலே

நல் நெய்யின் வேள்வித்  தீ போல்  நன் பொன்னாய் ஒளிர்ந்து  நின்றாள்

சக்கரவாளம்  சிறப்பு  நோம்பை  சரிவர  செய்து  முடித்த பின்பு

அருகனுக்கு  திருவிழா எடுத்து  அனைவரையும்  மகிழச்செய்தாள்              150

 

அனைத்துப் பொருள்களுக்கும்  ஆதியாய்  நின்றவன்  நீ

அறிதற்கரிய  நல் அறங்களை  அளித்திட்ட  அருளன்  நீ

மெய்யறிவு  அனைத்துமுடையா  மெய் ஞான முதல்வன்  நீ

தாமரை  மலரில்  நடக்கும்  தலைவனே போற்றி  போற்றி                                    151

 

காமத்தை  சினந்து  வென்று  கதிநான்கை  அழித்தவன்  நீ

கூற்றுவனை  வெற்றி  கண்ட  குறைவற்ற  மா வீரன்  நீ

திருவான  மறுவை  அணிந்த  தெய்வத்திரு மார்பன்  நீ

மலர் மழையை  பெற்ற  தேவா  மங்கையை  வாழ்த்துவாய்  நீ                            152

 

அனைத்துயிர்க்கும்  அருளுகின்ற  அழியாப் பரம்பொருள்  நீ

அடியவர்கள்  துயர்  போக்கி  அருளுகின்ற  உள்ளம்  நீ

திவ்யத்தொனி  அறம்  தந்த  சிறந்த  உபதேசிகன்  நீ

உன்  சீரடியைப்  பணிகின்றேன்  சிறியவளை  வாழ்த்துக  நீ                                 153

 

இருவினைகள்  அழித்தவனை  இருவிழிகள்  நீர்  சொரிய

மலர்  கொண்டு  அர்ச்சித்தாள்  மலர்  எடுத்து  சிரம்  கொண்டாள்

வழிபாடு  முடிந்த  பின்னால்  வலம்  வந்து  கை தொழுதாள்

வழிபாட்டுப்  பொருள்  பெற்று  வந்தடைந்தாள்  தந்தையிடம்                                   154

 

தந்தைக்கு  தன்  வரவு  சொல்லி  தான்  சென்றாள்  தந்தையிடம்

வழிபாட்டுப்  பொருள்  தந்து  வணங்கி  நின்றாள்  மன்னனிடம்

முல்லைப்  பூ  மாலை  அணிந்த  முத்து  மகள்  ரத்தினத்தை

உச்சிமோந்து  உவகை  கொண்டான்  உலகாளும்  மன்னன்  அவன்                 155

 

அரசன்  மகளைப்  புகழ்ந்துரைத்தல்  :

 

தேன் சிந்தும்  பூங்கொத்தில் இனிது  செந்தளிர்  மாமரத்தின்  கொத்து

தினம்  மயக்கும்  வசந்தத்தின்  தென்றல்  ஆனாய்  என்  மகளே

நீ  எனக்கு  பிறந்த  பின்னர்  நித்திலத்தின்  வேந்தர்  எல்லாம்

என்  அடி  பணிந்து  நின்றார்கள்  என  மொழிந்தான்  சுவலனசடி              156

 

உயர்  கங்கை  நீர்  பாய்ந்தால்  உவர்கடல்  நீர்  நன்னீராகும்

கடல்  சூழ்ந்த  உலகத்தினோர்  கற்றறிந்த  சொல்லாடலாகும்

உன்  உதயம்  நம்  குலத்தின்  உயர்  பெருமை  பெற்றதாலே

கடல்  எல்லை  உலகத்தினோர்  கடவுள்  என  தொழுகின்றார்கள்                       157

 

இளம்பரிதி  கண்டு  மயங்கி தன்  இதழ்  விரிக்கும்   செந்தாமரைகள்

தழைத்து  நின்ற  பொய்கையிலே  தீய  உயிர்கள்  செல்லாதங்கே

பாவையே  நீ  தோன்றிய  பின்  பகைவரின்றி  போனார்  இங்கு   

இரதநூபுர  நகரம்  தன்னில்  நலிவடைந்தோர்  யாருமில்லை                                  158

 

வானத்தில்  வளர்  திங்கள்  வர  வையகத்து  இருள்  நீங்கியதால்

வையகமே  மகிழ்ந்து  நின்றது  வெவ்விருள்  அழிந்ததனால்

புனுகொடு  அகிற்புகை  மணக்கும்  பூங்குழலாள்  நீ பிறந்ததனால்

பகை  இருள்  முற்றும்  நீங்கி  பாய்ந்தது  சுகம்  இந்த  நாட்டில்                                159

 

மலர்களில்  மல்லிகை  என்றும்  மணத்தில்  சிறந்தோங்குதல் போல்

செண்பகமரக்  காட்டினுள்ளே  சேர்ந்திசைக்கும்  வண்டுகள்  போல்

மங்கையரில்  சிறந்து  நிற்கும்  மாசற்ற  திருமகளே  உன்னால்

மண்ணுலகம்  என்று  புகழும்  நம்  உலகமும்  சிறப்பு  பெறும்                                  160

 

அரசன்  தன்  மகளைப்  பற்றி  எண்ணுதல்  :

 

அணிகலங்கள்  மிகு  சுமையால்  அஞ்சியே  கெஞ்சும்  இடையால்

சுவலனசடி  சொல்லலானான்  செல்லமே  நீ  மெல்ல  நடயென

அன்னையவள்  காத்திருப்பாள்  அமுதுண்ணும்  நேரம்  இது

அவள்  அரண்மனை  நீ சென்றாள்  அவள்  மனம்  மகிழும்  என்றான்                  161

 

மண்ணுலகின்  பெரும்  பொருளும்  விண்ணுலகின்  அரும்  பொருளும்

நல்வினைகள்  பயன்களினால்  நன்  மக்கள்  பெற்றிடினும்

பெண்களுக்கு  அருங்கலமும்  பெண்மையின்  அருஞ்சிறப்புடைய

தன்  மகளை  மணங்கொள்பவன்  தவப்பலனோன்  என  நினைத்தான்          162

 

நெய்யணி  நீண்ட  குழலுடையாள்  நெற்றி  மூன்றாம்  பிறையுடையாள்

கண்ணென  வளர்த்த  மகளுக்கு  கணவனாய்   கரம்  பிடிப்பதற்கு

முகில்  முத்தும்  வெள்ளி  மலையில்  மூத்த  நெடுங்குடியில்  பிறந்த

கைவேல்  பெரும்  படை  கொண்ட  காளையவன்  யாரென நினைத்தான்    163

 

ஈயத்தில்  தன்னைப்  பதிந்திட்டாலும்  உயர்  மணிகள்  மறுப்பதில்லை

நற்குணங்கள்  இல்லையெனினும்  நங்கையர்  கணவனை  வெறுப்பதில்லை

உயிரில்  கரைந்த  பெற்றோர்கள்  உற்றவனைத்  தேர்ந்தெடுத்தாள்

தன்  உள்ளம்  சேராவிட்டாலும்  தன்  தடம்  மாறிப்  போவதில்லை                    164

 

காமத்தின்  நோக்கம்  அதை  காதலால்  தான்  உணர  முடியும்

மற்றோரின்  உணர்ச்சியினை  மனம்  அளந்து  அறிந்துவிடும்

அறநூலைப்  படித்து  அறிந்து  அதன்  வழியே  நடப்பவனை

சுற்றியே  இருக்க  வேண்டும்  சுயம்பிரபை  சொல்லும்  செயலும்                  165

 

அரசர்  வாழ்க்கையும்  அமைச்சர்களும்  : 

 

அரசனின்  வாழ்வும்  ஆட்சியும்  அடைந்தன  இரண்டுக்குள்ளே

தன்  உணர்வு  ஆவது  ஒன்று  ஏனையோர்  கூட்டுறவாவதொன்று

தன்  உணர்வில்  செய்யும்  செயல்  தன்  செயலே ஆகும்  என்றும் 

அமைச்சர்கள்  கூறும்  உரை  அடுத்தவர்  கூற்றின்  செயலாம்                            166

 

குளிர் நீரில்  தாமரை  வாழினும்  மலர்வது  ஞாயிறின்  ஒளியால்

அரசனின்  நல்வினை  வாழ்க்கை  அறிஞர்களால்  விளங்கி  நிற்கும்

நாடிய  தன்  இடத்தை  அடைய  நல்  காற்றோடு  கப்பல்  செல்லும்

அறநூல்  அறிந்த  அமைச்சனால்  அரசட்சி  வெற்றியை  தொடரும்                 167

 

முனிவர்கள்  தவ ஒழுக்கமும்  முடிமன்னர்கள்  சிறந்த  வாழ்வும்

மந்திரத்தோடு  இணைந்திடில்  மாண்புற்ற  பெருமையடையும்

சுவலனசடி  மன்னன்  மனதில்  சுழன்றிட்ட  இவ்வெண்ணத்தாலே

அமைச்சர்கட்கு செய்தி  சொல்லி  அழைத்திட்டான்  அரச  அவைக்கு     168

 

                                    இரதநூபுர  சருக்கம்  முற்றிற்று.

 

5.மந்திரச்சாலை  சருக்கம்.

 

அமைச்சர்கள்  மாண்பு  :

 

வெண்நிறத்  திண்ணைகள்  எல்லாம்  வெள்ளியால்  பதியப் பெற்று

வெளியார்  ஒலி  கேளாவண்ணம்  அமைத்திட்ட மந்திரசாலையில்

நிறை  கல்வி  அறநெறியடைய  நேர்மையின்  அமைச்சர்களெல்லாம்

மன்னனின்  ஆணையை  கேட்டு  மந்திரசாலையில்  கூடினர்                                 169

 

மண்ணுலகு  ஆளும்  மன்னனுக்கு  மண்டிய  நல்  வினை  இருப்பினும்

அறநெறி  ஆகம  நூல்கள்  பகரும்  அறிவுத்திறன்  உடையாதவர்கள்

வளையாத  செங்கோல்  ஆட்சியில்  வருகின்ற  கடும்  இழிச்  செயல்களை

தடுத்திடும்  ஆற்றல்  எல்லாம்  தகைச்சான்ற  அமைச்சர்கள்  மாண்பு   170

 

வெண்கொற்றக்  குடைநிழலில்  வீற்றிருக்கும்  அரசனாயினும்

வீழாத  செங்கோல்  ஆட்சிக்கு  விதையென  இருப்போர்  மந்திரிகள்

நன்னெறி  நூல்கள்  அறிந்த  நல்  திறம்  அமைச்சர்கள்  சொல்லால்

ஆட்சியின்  சுமையைத்  தாங்கி  ஆள்வதும்  மன்னன்  இயல்பே                   171

 

நல்லற  நூல்கள்  அறிந்தும்  நல் வினைகள்  எடுத்து சொல்லியும்

பழியுடை  நெறிகளை  அழித்து  பகைவரை  ஒடுக்கும்  உபாயமும்

நற்குணம்  உள்ளத்தில்  ஏற்று  நன்மைகளை  ஆராய்ந்து  கூறும்

அமைச்சர்கள்  அரசனுக்கமைதல்  அரிய  பெரும்  புதையலாகும்                    172

 

உலகினை  தன்  அடிபடுத்த  உபாயங்கள்  இரண்டு  உண்டு

மன்னனின்  தோள்  வலிமையும்  மந்திரிகள்  சூழ்ச்சித்  திறனும்

ஒருவகை  நோக்கிப்  பார்க்கின்  ஊழ்வினை  உடன்  வந்தாளும்

சூழ்ச்சியின்  திறமை  கொண்டு    மங்கையரும்  மண்ணில்  சிறப்பர்          173

 

நல்  நூல்கள்  மன்னனுக்கு  நவில்வன  மூன்று  ஆற்றலாம்

அறிவு, பெருமை, முயற்சி  மூன்றில்  அறிவுத்திறன்  சூழ்ச்சியாகும்

அமைச்சரின்  அறிவின்  சூழ்ச்சி  அரசனின்  அறிவோடிணைந்தால்

அரசனுக்கு  இம்மண்ணுலகில்  அருந்திரு  வேறொன்றில்லை                        174

 

மங்கையரின்  இன்பத்தில்  மயங்கிய  மன்னனின்  நல்லாட்சித்  திறன்

மந்திரிகள்  நல் சூழ்ச்சி  இன்றில்  மாண்பினைப்  பெறாது  போகும்

அறநூல்கள்  முற்றும்  அறிந்த  அமைச்சனின்  சூழ்ச்சி  பிறழின்

அரவத்தால்  தீண்டிய  ஒருவன்  அழிவது  போல்  அவ்வாட்சி  வீழும்           175                               

 

மெய் அறநூல்கள்  உணர்ந்த  மேன்மைமிகு  அமைச்சர்களே

மெய் நூல்மதி  நுட்பத்தோடு  நவின்றிடும்  உம்  அறிவின்  திறனால்

அரசனாய்  நான்  இருப்பதோடு   நல்லாட்சி  நடத்துவதெல்லாம்

அமைச்சராய்  நீங்கள்  அமைந்தது  அரசன்  என்  சிறப்பே  என்றான்                  176

 

அரசன்  சுயம்பிரபைக்கு  மணமகன்  யாவன்  என்று  கேட்டல்  :

 

சுருள்  தாழைமலர்  மாலை  அணிந்த  சுவலனசடி  மன்னன்  கேட்டான்

சுயம்பிரபை  அழகிற்கு  ஏற்ற  சுந்தர  உயர்குடியோன்  யாரென

சுச்சுதன்  என்னும்  அமைச்சன்  சூட்சும  முறைகளை  ஆராய்ந்து

அவன்  அறிவொளி  வெளிப்பட  அரசனுக்கு  எடுத்து  சொன்னான்                      177                              

 

அஞ்சுதல்  இயல்பே  இல்லாத  அறமுடைய  வெள்ளிமலை  வேந்தே

வெள்ளிமலை  வடபகுதியில்  வித்யாதர்  நம் உலகம்  உண்டு

மண்ணுலகில்  வாழ்வோர்க்கு  விண்ணுலகம்  போன்றது  அது

நல்வினை  முற்றும்  அற்றோர்  நகரினுள்  செல்லல்  அரிது                                    178

 

அறுபது  அழகிய  நகரங்கள்  அவ்வடசேடி நாட்டில்  உள்ளது

இரத்தினப்  பல்லவம்  என்ற  பொன்மணி  இழைத்த  நகரமொன்று

விண்ணுலகம்  இடம்  பெயர்ந்து  வெள்ளிமலை  வந்தாற்  போன்று

இரத்தினப்பல்லவ  நகரம்  இன்பத்தில்  ஆழ்ந்துள்ள  நகரம்                                    179

 

மலர்  அணிந்த  கார்குழலும்  மெலிந்த    சிற்றிடையும்  கொண்ட

கன்னியர்கள்  ஊடலைத்  தீர்த்தல்  காளையர்கள்  தொழிலேயாகும்

ஊடலில்  தெளிந்த  மங்கையர்  உவந்து  தம்  மதனை  அணைக்க

மென்தனங்கள்  அழுத்தத்தாலே  மலர்மாலை  வண்டுகள்  நசுங்கும்                   180

 

செவ்விதழ் உறும் தேனினை உறிஞ்சி செந்தோள் ஆடவர் கலவி ஒவ்வார்

வாளென  நீண்ட  வரிபடர்  விழிகள்  வயப்பட்டு  நிற்பது  வனிதையரழகு

அப்பெரு  நகரின்  அரிமா அரசன்    மயூரகண்டன்  மனைவி  நிலாங்கனை

இருவரும்  பெற்ற  இளவரசன்  தான்  சுவக்கிரீவன்  எனும்  சுந்தரனாவான்      181

 

சுவக்கிரீவன்  அரசு  எய்தியபின்  உலகம்  முற்றும்  அவனடிபட்டது :

 

வீரக்கழல்  கால்களில்  அணிந்து  மாலைகள்  பல  மார்பில்  ஏற்று

சுவக்கிரீவ  மன்னன்  என்றும்  சுந்தர  புருஷனாய்  திகழ்வான்

விண் மதி  தவழ்ந்து  திரியும்  வித்யாதர  மலையரசர்களும்

மண்ணுலக  மன்னர்களும்  பணிந்திடுவர்  அவன்  கட்டளைக்கு                        182

 

பழம் பெருமை  சுற்றத்தார்களும்  புகழ் பெற்ற  ஆணையுருளையும்

நற்குலத்தில்  தோன்றிய  சிறப்பும்  நன்கறிந்த  வித்தைகள்  பயிற்சியும்

எண்ணியதை  நொடியில்  முடிக்கும்  எழுச்சியுடை  படைகள்  கொண்டு

எவ்வுலகிலும்  தன்னிகரற்று  எவரும்  போற்றும்  சுவக்கிரீவன்  அவன்        183                 

 

சுவக்கிரீவ  மன்னனின்  தம்பிகள்  நீலரதன்  நீலகண்டன்  இருவர்

மகரமீன்  பெருவாய்  கொண்ட  வயிராமா  கண்டன்  ஒருவன்

ஆண் பெண்  வண்டுகள்  மொய்க்கும்  மலர்மாலை  கொண்டவன்  என

நற்தூண்கள்  போன்ற  நால்வரும்  நமனை  மிஞ்சிய  தம்பியர்கள்        184                                  

 

அரசனின்  அமைதிப்  படைபலம்  அவன்  பொருள்  சிறப்பின்  நிலைமை

அவனுக்கு  நிகர்  மூவுலகில்  அவனின்றி  வேறொருவர்  இல்லை

அறநூல்கள்  அறிந்த  அமைச்சன்  அரிமஞ்சு  என்னும்  பெயரானும்

முக்காலம்  உணர்ந்து  கூறும்  நிமித்திகன் சதவிந்தும்  அவனவையில்       185

 

வேந்தனை  சரணடைந்தோர்கள்  வேறு  தெய்வத்தை  போற்றாதாவர்

திறை  செலுத்தும்  அரசர்களும்  தேடமாட்டார்  வேறொரு  கடவுளை

களிறு  நூறும்  எடுக்கா  கல்லினை  கரங்களால்  உருட்டி  ஆடிட

அவன்  ஆற்றல்  அறிவும்  கண்டு  அஞ்சினார்  வித்யாதரர்களெல்லாம்       186

                                   

சுயம்பிரபை  பிறக்கும்  முன்னே  சுவக்கிரீவனுக்கு  திறை  தந்தோம்

செல்வி  அவள்  பிறந்த  பின்னே  செல்வத்தை  அவன்  ஏற்கவில்லை

என்னுள்  எண்ணம்  கூறுகிறது  சுயம்பிரபை  சுவக்கிரீவனுக்கென்று

மணம்  செய்து  கொடுத்தோமாகில்  மலை  மன்னர்கள்  நமக்கஞ்சுவர்         187

 

சச்சுவன்  சொல்லியதெல்லாம்  சத்திய  வார்த்தைகள்  என்றும்

பவச்சுத  அமைச்சன்  சொன்னான்  பகர்ந்திடுவேன்  ஒரு குறையென்று

சுயம்பிரபை  உதித்த  நாளில்  சுற்றி  வரும்  விண்கோள்கள்  எல்லாம்

செவ்வனே  அமைந்தது  என்று  செப்புது  பிறந்த  நாள்  குறிப்பு                      188

 

ஆழ்கடல்  சூழ்ந்த  நாட்டின்  அரசன்  மகன்  இளவரசாகி

அவள்  மீது  முழுகாதல்  கொண்டு  அவளையே  வினைவழி  மணந்து

கோப்பெருந்தேவி  என்னும்  சிறப்பினைப்  பெறுவாள்  சுயம்பிரபை

இவளை  மணங்கொண்டு ஏற்பவன்  ஏற்றிடுவான்  செங்கோல்  தன்னை       189

 

சுவக்கிரீவன்  வாழ்நாள்  காலம்  ஊழி போல்  கழித்தவன்  ஆவான்

இளம்பூவாய்  இதழ்  விரித்த  மகள்  ஏந்திழையாள்  தேவியாவாளோ

சுவக்கிரீவன் முடிமன்னனுக்கு  கனகசித்திரை  பட்டத்து  அரசி

பெருந்தேவி  பட்டச்  சிறப்பு  சுயம்பிரபை  அடைவாளில்லை                         190

 

விண்ணுலகத்தவரும்  அஞ்சும்  வாரிசுகள்  ஐநூறு  பேரில்

இரத்தினகண்டன்  பெயருடையான்  விஞ்சையர்  அஞ்சும்  இளவள்

கின்னரகீதம்  என்னும்  நகரின்  கீர்த்தியுடை  பவனஞ்சன்  என்பவன்

சுயம்பிரபைக்கு  ஏற்ற  கணவன்  என்று  பவச்சுதன்  கூறுமுடித்தான்                  191

 

அமிழ்தபதி  நாட்டை  ஆளும்  வேகதரன்  வலிய  தோளான்

மேகபுரத்து  நாட்டின்  இளவரசு  பதுமதரன்  ஓர்  சிறந்த  வீரன்

ரத்தினபுர  ராஜ்ஜியத்தின்  சுவர்ணதரன்  நற்குலத்தோன்

கீதமாபுரம்  கோலோச்சும்  அர்கண்டன்  திருமாலை  ஒத்தான்                               192

 

திரிபுர  பெரும்  நகரையாளும்  நளிதாங்கன்  கல்வியாளன்

சித்திர கூடத்தின்  இளவரசன்  ஏமாங்கதன்  சயந்தனுக்கு  நிகர்

அச்சுவபுர  நாட்டு  தலைமகன்  கனகசித்திரன்  மற்போரான்

திருநிலையம்  நகர்  அரசமகன்  சித்திராதன்  தேருடையான்                                193

 

கனகபல்லவத்து  அரசமகன்  சிங்ககேது  சினந்து  பகையழிப்பான்

இந்திரசஞ்சயதரசன்  மகன்  அருஞ்சயன்  அரிய  போராளன்

பலநாட்டு  மன்னன்  மகன்களை  பவச்சுத  அமைச்சன்  சொன்னான்

பார்த்து  ஆய்ந்து  தேர்ந்தெடுத்து  பவனஞ்சன்  பெயரை  மொழிந்தான்         194

 

சுதசாகரன்  என்னும்  அமைச்சன்  சுவலனசடிக்கு  சொல்லலானான்

பவச்சுதன்  பகர்ந்தவை  எல்லாம்  பழுதற்ற  உண்மை  எனினும்

கின்னர  நகரின்  இளவரசன்  பவனஞ்சன்  மணந்தானாகில்

சுவக்கிரீவ  அரசன்  பகைமை  சுவலனசடியின்  மேல்  எழுமே                      195

 

சுரேந்திரகாந்த  நாட்டை  ஆளும்  மேகவாகன்  மன்னன்  உள்ளான்

மேகவாகனன்  பட்டத்தரசி  மேகமாலினி  என்னும்  மங்கை

தெய்வத்தைப்  போற்றி  வணங்க  தெய்வமே  தந்த  பிள்ளையென

சுரேந்திரகாந்தமே  மயங்கும்  இளவரசன்  விச்சுவன்  ஆவான்                                196

 

முன்பிறப்பில்  விச்சுவன்  தேவலோகம்  ஆண்டு  வந்தான்

இப்பிறப்பில்  விஞ்சை  ஆள  வேண்டி  வந்தவன்  போலவானான்

தன்னையே  மேன்மையை  ஆக்கி  தன்னின்   அறியாமை  போக்கி

தானே  தன்  குறிக்கோள்  ஆக  தரணியர்  அவனைக்  கண்டஞ்சுவர்                      197

 

விச்சுவன்  தங்கை  ஒருத்தி  வேல்  விழியாள்  சோதிமாலை

கற்பகக்  கொம்பை ஒத்தாள்  காண்பவர்  கள்ளுண்டாராவார்

நறுமணம்  வீசும்  கூந்தலோ  கார்மேகம்  கவிழ்ந்ததாகும்

அருககீர்த்திக்கு  ஏற்ற  மனைவி  அவளே  என்பது என்  எண்ணமாகும்        198

 

சுயம்பிரபை  விச்சுவனை  மணப்பாள்  சோதிமாலை  அருக்கீர்த்தி மனைவி

சுதசாகரன்  முடிவினைக்  கூற  சுமந்தரி  கூறினான்  விச்சுவன்  பற்றி

இன்னிசைப்  பாடல்  விரும்பான்  ஏந்திழையார்  நடனம்  காணான்

விண் மண் உலக  இன்பம்  நீக்கும்  கடவுளர்  தன்மையுடையான்                      199

 

மேகவாகன  மன்னன்  சென்றான்  அருகனின்  ஜினாலயத்திற்கு

அர்ச்சனைகள்  சிறப்பாய்  செய்து  அருகனுக்கு  திருவிழா  செய்தான் 

அவதிக் ஞானம்  பெற்று  திகழும்  யசோதர  முனிவரை  வணங்கி

தன்  மகன்  விச்சுவனப்  பற்றிய   வரலாற்றை  விரும்பி  கேட்டான்            200                                              

 

பவகிரி  மன்னன்  சயசேனனுக்கும்  பட்டத்துராணி  பிரீதிமதிக்கும்

விசயபத்திரன்  பெயரில்  பிறந்து  தவத்தால்  சாசாரலோக  தேவனானான்

மன்னனின்  மகனாய்  பிறந்திடினும்  மனமது  தவத்தை  நாடியதால்

தேவனாய்  பிறந்து  மகிழ்வான்  சேர்ந்திடான்  குடும்ப  பந்தத்தில்                201

 

சுயவரம்  அமைந்திட்டாலோ  சுவக்கிரீவனுக்கு  அஞ்சவேண்டும்

சுற்றியுள்ள  அரசர்கள்  செயலை  சிந்தித்துணர  இயலாதென்றான்

சிந்தித்து  நன்கு  முடியுமென்று  செய்திடும்  செயல்களும்  நமக்கு 

எதிர்  விளைவாய்  முடிவதும்  கூட  ஊழ்வினை  ஆற்றலினால்  தான்                     202

 

ஊழ்வினைச்  செயலை  அறிந்து உறுதியுடன்  உரைப்பவனும்

அரசகுலம்  தழைப்பதற்கு  ஆவன  அனைத்தும்  செய்பவனும்

நுண்ணிய  நூல்களில்  தேறிய  நிறைந்த  அறிவு  கொண்டவனும்

நிமித்திகன்  நம்  சதவிந்துவே  மணம்  பற்றி  சொல்லட்டும்  என்றான்         203

 

அமைச்சர்கள்  அனைவரும்  சுமந்திரியின்  சொல்லை  ஏற்று

அரசனே  நேரில்  சென்று  நிமித்திகனைக்  கேட்கச்  சொல்ல

அரசனும்  அவையைக்  கலைத்து  அமைச்சர்களை  போகச்  சொல்லி

அரண்மனை  சென்றடைந்தான்  அகத்தினில்  மகிழ்ச்சி  பொங்க                   204

 

அரசன்  நிமித்திகனிடம்  செல்லல்  :

 

கச்சையணிந்த  கன்னியர்கள்  செழும்பொன்  கலத்தில்  அன்னமிட

இன்னிசைக்  கருவிகள்  இசைக்க  இன்பமாய்  உண்டான்  மன்னன்

தேன்மலர்  மாலைகளோடும்  செம்பொன்  அணிகலங்களோடும்

தேரினை  தன்  மாளிகையில்  விட்டு  தெருவினில்  நடந்து  சென்றான்        205

 

காலணி  வீரக்கழல்  ஒலிக்க  செவியணி  குண்டலம்  ஒளிர

மலரினில்  சொட்டும்  மதுவுக்கு  வண்டுகள்  போட்டியில்  மோத

வாளொடு  வேல்கள்  ஏந்திய  வீர மெய்க்காப்பாளர்கள்  சூழ                    

சோதிட  நூற்கலை  வல்லோன்  சதவிந்து  வாயிலை  அடைந்தான்                       206 

 

என் குலம்  மேன்மையடைய   என்  இல்லம்  வந்த  வேந்தே

வெற்றியுடன்  வாழ்வீர்  என  சதவிந்து  வாழ்த்தி  வணங்க

மன்னனவன்  கொண்டு  வந்த  மங்கலப்  பொருள்களையெல்லாம்

இல்லத்தில்  பரக்க  வைத்து  ஏவலர்கள்  விலகினார்  வெளியே                 207

 

அகிற்புகை  நிறைந்து  மணந்து  நறுமண  மாலைகள்  விரிந்த

மண்டபம்  தன்னை  அடைந்தான்  மனதினில்  மகள்  மணநினைவில்

மன்னனின்  மனதின்  ஓட்டம்  மகளின்  மணவினை  செயலே  என்று

நுண்ணிய  நூல்  அறிவினாலே நிமித்திகன்  சதவிந்து  சொன்னான்                       208

 

மணிமுத்து  மாலைகள்  அணிந்து  மருளும்  மான்  விழிகளோடு- உமை

வலம்  கொண்ட  வஞ்சியாலே  வந்தது  மங்கல  நிகழ்வென்றான்

பொற்கொடியாள்  சுயம்பிரபையின்  பொற்கரம்  பற்றும்  மணவாளன்

அருகன்  அருளிய  மகாபுராணம்  ஐயமின்றி  உரைக்கும்  என்றான்               209

 

நிறைமெய்  புகழோன்  சுவலனசடி  நிமித்திகன்  மொழியில்  மகிழ்ந்து

மங்கை  சுயம்பிரபைப்  பற்றி  மகாபுராணத்தில்  எதுவென்று  கேட்க

மண்ணுலகில்  இரு  கண்டங்களுள  அதில்  தென்திசை பாரதகண்டம்

அங்கு  கற்பக மரத்தினோடும்  சங்கநிதி  பதுமநிதி  கொண்ட  நாடு                  210

 

போகபூமி  தன்மை  நிலைமை  நீங்கி  கருமபூமியாய்  மாறிய  பின்

உயிர்களின்  துன்பம்  போக்க  அறவாழி  அருள்  ஒளியானார்

பசி போக்கும்  அறநெறிகளையும்  பாமரரில்  பலப்  பிரிவுகளையும்

அவர்களின்  தொழில்களையும்  அவனிக்குக்  கொண்டு வந்தார்                     211

 

அருகனின்  திருவருளைப்  பெற்ற  அவனியை  ஒரு குடையில்  ஆண்ட

பரதன்  என்னும்  ஓர்  அரசன்  பார்புகழும்  சக்கரவர்த்தியாவான்

அருகனுக்கு  அர்ச்சனைகள்  செய்து  அந்நாட்டின்  எதிர்காலம்  கேட்க

பரதனின்  கேள்விகளுக்கு  பரமன்  தன்    பதிலைத்  தந்தார்                            212                                              

என்னோடு  பன்னிருவர்  நாதர்  உனைச்  சேர்த்து  ஈராறோரும்

ஆழி  ஆணையர்களாக  இந்த  அவனியில்  அவதரிப்பார்கள்

மன்னராய்  பல  வாசுதேவர்களும்  பகைவராய்  பிரிதி வாசுதேவர்களும்

தனித்தனியே  ஒன்பதின்மராய்  தரணியிலே  தலைவர்கள்  ஆவர்                      213

 

பரதனே  உன்  மகனான  மருசி  போதன மாநகர்  உரிமையனாகி

போற்றிடும்  அரச  குலத்தில்  முதல்  வாசுதேவனாய்  பிறப்பான்

இரத்தினபல்லவ  சுவக்கிரீவனையும்  அவன்  ஆழியுருளையும்  அழித்து

அருந்தவப்  பயனால்  அவன்  அமரலோக  தேவனாய்  பிறப்பான்                214                             

தேவ  ஆயுள்  காலம்  கழிந்த பின்  திவிட்டனாய்  மண்ணில்  பிறந்து

மாபுராணம்  கூறிய  வாசுதேவன்  இப்பிறப்பின்  திவிட்டன்  ஆவான்

சுரமையின்  அரசன்  பயாபதியின்  இருமகன்களில்  இளைய  மகன்

இங்கு  கூறிய  திவிட்டன்  ஆவான்  சுயம்பிரபையின்  கணவனுமாவான் 215

 

இவ்விருவரின்  மணம்  முடிந்தால்  சுவக்கிரீவனை  திவிட்டன்  கொல்வான்

தென்சேடி  வடசேடி  இரண்டையும்  திவிட்டனே  உனக்குத்  தருவான்

திவிட்டனின்  திறமையைப்  போற்ற  நிமித்திகன்  ஒன்று  சொன்னான்

தன்  கரங்கள்  உதவி  கொண்டு  சிங்கத்தின்  வாயினை  கிழிப்பான்               216

 

நிமித்திகன்  கூறிய  மொழிகள்  நிறை  மன  மகிழ்வில்  மன்னன்

செம்பொன்னை  மழையாய்  பொழிந்து    சோதிமாலை  நகரைத்  தந்தான்

அரண்மனை  திரும்பிய  சுவலனசடி  அந்தப்புரம்  நேரே  சென்றான்

அவன்  அரசி  வாயுவேகைக்கு  நிமித்திகன்  மொழிந்ததை  சொன்னான்      217

 

மக்கட்பேறின்  மண்பைக்  கூறல்  :

 

அரசகுலங்கள்  என்றென்றும்  அரிய  கற்பக  மரம்  போலாகும்

அதன்  கிளைகள்  அத்தனையும்  அரசர்களின்  அரசிகளாகும்

கிளைகள்  ஈனும்  பூங்கொத்துகள்  கிடைத்தற்கரிய  மக்களாகும்

பூக்களில்  சொட்டும்  தேன்  துளிகள்  அனுபவத்தின்  ஆசான்களாகும்     218

 

நறுமண  மலர்கள்  மலராத  செந்தளிர்  கொண்ட  சோலையும்

தாமரையின்  பூக்கள்  பூக்காத  தண்ணீர்  நிறை  தடாகங்களும்

இளம்பிறை  வானில்  இல்லாத  இளமாலைத்  தென்றல்  பொழுதும்

மக்கள்  பேறு  இல்லா  மனையும்  மனையறம்  இல்லாத் தன்மையாம்           219

 

பொன்னோடு  பொருளும்  மணியும்  பொற்குவை  செல்வம்  பெறுதல்

மண்ணில்  வாழ்  மனிதர்களுக்கு  மட்டில்லா  எளிய  செயலாகும்

பெருமையும்  புகழும்  சேர்ந்த  பிள்ளைகள்  பெறுவதென்பது

மண்ணுலக  மாந்தர்களுக்கு  மாண்பினில்  மிக  அரியதாகும்                                   220

 

அகலினில்  ஏற்றிய  விளக்கு  அகற்றிடும் இல்லத்து  இருளை

சுயம்பிரபை  சிறந்த  குணங்கள்  சுடர்மணிகள்  போல  ஓளிரும் 

வலம்புரி  சங்கின்  முத்துகள்  வையகத்தில்  உயர்ந்தது  போல்

வாய்த்திடும்  மக்களால்   நம்குலம் வளர்ந்தோங்கி  மண்ணில்  திகழும்   221             

 

மானின்  மருள்  பார்வையுடைய  மன்னனின்  மாதரசி  வாயுவேகை

மனமது  மகிழ்ந்து  சொன்னாள்  மன்னன்  மகள்  பெருமையுடையாள்

அரசனும்  மகிழ்ந்து  போனான்  அரசியை  அணைத்துக்  கொண்டான்

மார்பணிந்த  மலர்மாலையில்  மழையென  மதுக்கள்  சிதறின                    222

 

அரசனும்  அருககீர்த்தியும்  அரச  அவை  தன்னை  கூட்டினர்

மன்னனும் மந்திரிக்கு  சொன்னான்  சதவிந்து  சொன்ன  செய்தியை

அமைச்சர்கள்  அகம்  மகிழ்ந்து  அனுப்புவோம்  தூதரை  சுரமைக்கு

நல்நூல்  கற்று  அறிந்த  மருசீ  நலம்  கூறும்  தூதுவன்  என்றனர்                  223

 

சொற்களின்  செல்வன்  ஆகவும்  சொல்லினை  ஆய்ந்து  கூறவும்

ஆற்றலில்  வல்லவனாகவும்  அரச தூதினில்  சிறந்த  மருசீயை

சுவலனசடி  மன்னன்  அழைத்து  சிறப்புகள்  பலவும்  செய்து

திருமுகத்தை  மன்னன்  தந்திட  திரண்ட மகிழ்வில்  மருசீயும்   பெற்றான் 224            

போதனமாபுரம்  நகரின்  வெளியே  புட்மமாகரண்டம்  பொழிலில்

பூவிதழ்  விரியும்  ஓசையில்  பொன்நிற  தேன்துளிகள்  சொட்டும்

மதுவினை  உண்ண  வண்டுகள்  இசைத்திடும்  ஒலிகள்  பெருக

வான்  வழி  பயணித்த  மருசீயும்  வந்து  இறங்கினான்  அப்பொழிலில்       225

 

                                    மந்திரசாலை  சருக்கம்  முற்றும்.

 

 

 

6.தூது விடு சருக்கம்.

 

பொழிலிலுள்ள  மரங்கள்,  கொடிகள்  :

 

நறுமண  மலர்கள்  பூத்து  குலுங்கி  நல்மது சொட்டும்  மகிழ  மரங்கள்

நீர்  முகில்கள்  நிறைந்தார்  போல்  நிழல்  சூழ்ந்த  தேமா  மரங்கள்

செந்நிறத்  தளிர்கள்  தழைத்த  சுரபுன்னை  மரங்கள்  தோப்பும்

நெற்பொரியாய் பூக்களோடு நிறைந்த  புனுகு மரங்கள் பொழிலில்  226

 

குளிர்நிறை  தழைகள்  கொண்ட  குளிர்ச்  சந்தன  மண மரங்கள்

மனதினை  அள்ளி  விசிறிடும்  மலர்  மிகு  செண்பக  மரங்கள்

அன்றலர்ந்த  இளம்பூக்களின்  அழகு  சொட்டும்  குரா மரங்கள்

அசைந்து  செவ்வொளி  பரப்பும்  அசோகமரங்கள்  பொழிலில்           227

 

மல்லிகையுடன்  முல்லை  சேர்ந்து  மணம்  வீசி  படர்ந்த  கொடிகளும்

சில்லென  குளிர்ச்சியை  சிந்தும்  செழித்து  நின்ற நாறை கொடிகளும்     

குன்றாமணம்  தன்னுள்  கொண்ட குழையும்  குருக்கத்தி கொடிகளும்

 குவிந்த மொட்டுகள் கொண்ட குறுமுல்லையும் பொழிலில் உண்டு  228

 

குடையினை  விரித்தாற்  போன்ற  கோங்கு மரங்கள்  அழகும்

குளிர்ந்து  களிப்பினைத்  தரும்  புன்னையுடன்  இளவம்  சிறப்பும்

பூ  மணத்தை  எங்கும்  பரப்பும்  பாதிரி  மரங்கள்  தோப்பும்

புட்பகரண்டம் எனும்  பொழிலின்  பொங்கும் எழில் தன்மையாகும்  229

 

மரீசி  பூங்காவில்  உள்ள  பொய்கைக்  கரையை  அடைதல்  :

 

மணம்  மிக்க  மாலை  அணிந்த  மன்னனின்  தூதுவன்  மரீசி

புதுமலர்  பூத்துக்  குலுங்கும்  பொய்கையின்  கரைக்குச்  செல்ல

மணம்  நிறைந்து  தென்றலில் ஆடும்  மதுவுண்ட  வண்டுகள்  பாட

நீர்த் துளிகள் வெளிச்  சிதறி  தூதுவன்  மரீசியை வரவேற்றன               230

 

வெண்முத்து  பரப்பியதை  போன்ற  வெண்மணல்  மீது  நடந்தான்

வேங்கைமரப்  பூக்களின்  நடுவே  ஓங்கிய  ஓர்  அசோகம்  கண்டான்

அசோகமர  நிழலை  அடைந்தான்  அங்கிருந்த  துரும காந்தன்

சந்திரகாந்த  கல்லைக்  காட்டி  சற்று  அமர்ந்து மகிழ்கவென்றான்   231

 

அசோகமரத்தின்  நிழலின்  கீழே  அமைந்திட்ட  இக்கல்லின்  மேலே

இப்பொழிலுக்கு  உரிய  தெய்வம்  இருந்திடும்  இடமாகுமே  என கூற

தெய்வந்தான்  அமர  வேண்டும்  என  சிந்தையில்  கருத  வேண்டாம்

நிலா  நிழல்  கல்லில்  அமர  நீவீரும்  உயர்ந்தவர்  என்றான்              232

 

போதனமாபுரத்து  மன்னன்  போரில்  நிகர்  பயாபதிக்கு

நுண்ணிய  நூலறிவு  கொண்ட  நிமித்திகன்  அங்கதன்  சொன்னான்

வித்யாதர  அரசன்  தூதுவன்  வீரமகனுக்கு  திருமணம்  பேச

இத்தனை  நாட்களுக்குள்  இப்பொழிலை  அடைவான் என்றான்       233

 

அரிமாவை  கொல்லும்  வலியுடைய  அரசமகன்  திவிட்டனுக்கெதிராய்

உருளைப்படையுடய  வேந்தன்  சுவகண்டன்  சினங்கொண்டு  வர

அச்சுவகண்டன்  அப்போரில்  அச்சத்தால்  பயந்து  தோற்க

திவிட்டன்  அவனக் கொல்வானென அங்கதன் மேலும் சொன்னான் 234

 

நின்  வரவை  யாம்  எதிர்பார்த்து  நிலா  வட்டக்கல் இதனை  செய்து

விஞ்சயர்  தூதுவனை  அழைக்க  துருமகாந்தன்  நான்னிங்குள்ளேன்

நிலாக்கல்லின்  வரலாறை  கூற  மரீசியும்  மனம்  மகிழ்ந்து அமர

பயணக் களைப்பு  போக்க  பாவையரை  மன்னன் அனுப்பினான்     235

 

செம்பஞ்சு  குழம்பைப்  போல  சிவந்த  சிற்றடிகள்  உடனும்

சிறுமணிகள்  சேர்த்து  செய்த  சிணுங்கும்  மேகலையுடனும்

பெருமார்பு  சுமைதாங்காமல்  பிழன்று  நெளியும் சிற்றிடையுடனும்

பினை  அன்னம்  போல  நடந்து  பொழிலினை  அடைந்தனர் மகளீர் 236

 

விண்ணுலக  மங்கையர்  போல்  வரவேற்க  வந்த  வனிதையர்

நற்கரங்கள் கொண்ட பொருள்களை நவில்வதற்கு  மொழியுமில்லை

ஒரு  நங்கை  கைகள்  தாங்கின  உன்னத  வெண்பட்டாடைகள்

பிரிதொரு  பெண்ணின்  கையில்  பசும்  இலை வெற்றிலை பாக்கு    237

 

அடுத்தவளின்  அழகு  கரங்கள்  அணிகலங்கள்  ஏந்தி  வர

இன்னொரு  இளமங்கை  கையில்  இனிய  நல்  முத்துமணிகள்

வேறொருத்தி  ஏந்தி  வந்தாள்  வீசி  மணக்கும்  சந்தன சிமிழ்கள்

மங்கையர்கள்  கொண்டு  வந்த  மணமிகு மாலைகள்  நூறு            238

 

கன்னியரின்  காதணிகள்  கதிரவன்  போல்  தக  தகக்க

கைகொண்ட  பொருள்கள்  எல்லாம்  மங்கலத்தை பதிவு  செய்ய

மடந்தையர்கள்  மகிழ்ச்சியுடன்  மரீசி  அவன்  பக்கம்  செல்ல

விஞ்சையர்  தூதுவன்  மரீசி  விண்ணுலகமிது  என்றுரைத்தான்         239

 

நங்கையர்கள்  கூடி  அவனை  நன்னீரில்  குளிக்கச்  செய்து

நல்ல  மணச்  சந்தனத்தை  நல்லுடல்  முழுக்க  பூசினார்கள்

வெண்பட்டு  ஆடைகள்  உடுத்தி  வெண்மணி  மாலைகள்  பூட்டி

அறுசுவை  உணவுகள்  இட்டு  அவன்  மகிழப்  பரிமாறினார்கள்       240

 

பயாபதி  மன்னன்  கட்டளைப்படி  மரீசியை  அழைக்க  விசய  திவிட்டர்கள்  புறப்படுதல்  :

மன்னனின்  மன  விருப்பப்படி  மகன்கள்  விசய  திவிட்டர்கள்

மதவேழம்  மேல்  அமர்ந்து  மரீசியை  அழைக்கப்  புறப்பட

குதிரையின்  கூட்டங்களோடு  கொடி  கட்டிய  தேர்கள்  இணைய

உடன்  செல்லுதற்கு  இடமின்றி  உறைந்தன  மக்கள்  கூட்டம்                241

 

மாளிகை  மங்கையர்களெல்லாம்  மாடங்களில்  பாடினர்  சிலர்

மன்னனின்  மகன்களைக் கண்டு  மண்டியிட்டு பணிந்தனர்  சிலர்

பல்லாண்டு  வாழ்த்துகள்  கூறி  பரவசத்தில்  வாழ்த்தினர்  சிலர்

பாட்டோடு  கூத்துகள்  ஆடிட  பன்மணி  மாலைகள்  அறுந்தன             242

 

மணப்  பொடிகள்  பல  கொண்டு  மழையென  இறைப்பவர்  சிலர்

மணிமுத்து  வளைகரத்தால்  மகிழ்ச்சியில்  வணங்கினர்  சிலர்

நாணமது  நதியென  பாய்ந்திட  நவமணி மாலைகள் கேட்டனர்  சிலர்

மயக்கத்தில் எல்லாம்  மறக்க மன்னர் மகன்களை கண்டனர் சிலர்  243

 

விசய திவிட்டர்கள்  படைசூழ   விஞ்சை தூதன் பொழிலையடைய

நறுமணம்  தாங்கிய தென்றலும்  நல்லிசை  வண்டுகள்  எதிர்கொள

கருங்குன்று  களிறிலிருந்து  காவலன்  மகன்கள்  இறங்க

தும்பிகளோடு  வண்டுகளும்  துள்ளியே  ஆடி  அழைத்தன                   244

 

மயங்கிய  மங்கையர்கள்  தன்  மணவாளனை அணைப்பது போல்

வீசிடும்  தென்றல்  இதமாய்  விசய திவிட்டர்களை  அணைக்க

வண்டுகள்  தழுவிக்  கொண்டு  வழிகாட்டியே  முன்னே  செல்ல

அசோகமர நிலாவட்டக்கல்லை  அடைந்தனர்  இருவரும்  சேர்ந்து     245

 

விஞ்சையர்  தூதுவன்  விசய  திவிட்டர்களை  வணங்குதல்  :

 

தூது வந்த  மரீசியானவன்  துளிர்த்திட்ட  மகிழ்ச்சியோடு

விசய  திவிட்டர்களை  நோக்கி  வாஞ்சையுடன்  தலை வணங்கி

நல்குணம்  மிக  கொண்ட  நீரோ  நல்  ஆசிரியர்  போல்  எனக்கு

எங்களை  நீர்  வணங்கியதேன்  என்று  கேட்டான்  விசயன் அவரை  246

 

பாற்கடல்  வெள்ளொளியுடைய  பெரியவன்  விசயனையும்

நீலவண்ண  கண்ணன்  போன்ற  நிறமுடைய  திவிட்டனையும்

கற்ற  உடல்  நூல்  இலக்கணத்தை  கண்களால்  நன்கு  ஆய்ந்து

அத்தனையும்  பொருந்தி  வர  அகமகிழ்ந்தான்  அந்த  மரீசி           247

 

பார்க்க  பார்க்க  அழகு  கூடும்  படைமன்னன்  மகன்களிருவரை

பித்தனை போல்  மலைத்து  நோக்கி  பேச்சற்று  நின்ற  மரீசி

தெளிந்து  நின்ற  மனதுடனே  விசய திட்டர்கள்  அருகே  சென்று

அங்கிருந்த  கல்லின்  மீது  அமர்ந்து  அவன்  சொல்லலானான்                    248

 

விண்ணிருந்து  மண்ணுக்கு  வந்து  வான்தெய்வக் களிறிடை  மறைந்து

அழகிய பொன்  மாலையணிந்த  உமை  அடிதொழுதோர்  நற்றவத்தார்

 திங்கள்  வெண் கதிர் சுடரும்  கஸ்தூரி  திலகத்தின்  வட்டமும்

எளிமையென உயிர்க்கு தோன்றின் என்றுமும் பண்பேயென்றான் 249

 

செவ்விய உம்  மொழிகள்  போதும்  செல்வோம்  தந்தையை காண

வேழத்தின் பிடரி மேல் அமரும்  வேந்தன்  மனை செல்வோம் என்று

இருவரும்  இரு  களிறுகள்  ஏறி  இந்திர குமாரர்களாய்  அமர

தேவர்கள்  தோற்றத்துடன்  போதனமா நகரை  அடைந்தனர்                250

 

காவலர்கள்  விரைந்து  சென்று  களிப்புடன்  செய்தி  சொல்ல

பயாபதி  மன்னன்  தன்னுடைய  பட்டாடையை  மேனி  திருத்தி

அமைச்சர்களும்  ஆன்றோர்களும்  அவன்  பின்னே  தொடர்ந்திட

பொன்முத்து  தவழும்  முடியுடன் பொன்மண்டபத்தில் அமர்ந்தான்  251

 

மன்னனின்  குமாரர்களோடு  மரீசியான  விஞ்சை  தூதுவனும்

மன்னனின்  செவ்வடி  பணிந்து  மகிழ்ச்சியில்  இருக்கை ஏற்றான்

விண்ணிலே  இயங்கும்  மரீசியை  வேலுடையான்  பயாபதி பார்த்து

வாஞ்சையில்  இன்சொல்கள்  கூறி  வரவேற்றான்  சுரமை  மன்னன் 252

 

மரீசியும்  பணிந்து  எழுந்தான்  மலர்  மொட்டாய்  கைகுவித்தான்

மன்னனின்  திருமுகவோலையை  மதிவரன்  கையில்  தந்தான்

திருமுகவோலையை  பிரித்து  மதிவரன் தன்னுள்  படித்து  பழகி

வாய்விட்டுப்  படிக்கலானான்  வானவன்  அனுப்பிய  ஓலையை        253

 

வெள்ளிமலை  இரதநூபுர  நகரை  வெற்றியுடன் ஆளும்  சுவலனசடி

போதனநகரத்து வேந்தன்  பெருவீரன்  பயாபதிக்கு  வணக்கம்  கூறி

தங்களின்  இளைய  மகனும்  தலைசிறந்த  பண்பாளனுமான

திவிட்டனுக்கு  சுயம்பிரபையை  திருமணம்  ஏற்பீர்  என்றது ஓலை   254

 

மண்ணூலக  மக்களை  விட  விஞ்சையர்  என்றும்  சிறந்தோர்

சுவலனசடி  திருமணத் தூதின்  காரணம் எண்ணி  மௌனமாக

மௌனத்தின்  நிலையறியா  மரீசி  மனதினில்  சினமது  பொங்க

மனிதர்கள் மற்றோரை இகழ்தல்  மன்னனிடம் கண்டேனென்றான்  255

 

தேவர்களாகவே  இருந்தாலும்  திரும்பத் திரும்ப  வருவாராயின்

எவரையோ  பார்ப்பது  போல்  இகழ்வது  மனிதர்கள்  இயல்பு

வெள்ளிமலையான்  என்  தலைவன் வலிய வந்து விடுத்த தூதை

வாய்த்திறவாமல்  இகழ்ந்து வதைத்திட்டீர்  அரசே  என்றான்              256

 

மணம் வீசும்  மாலைகளணிந்த  மரீசியின்  முகமது  நோக்கி

திருமுகத்தின்  சிறப்பினாலே  செவ்விய பதில் உரைக்கவெண்ணி

சிந்தித்த காரணத்தால்  நான்  சிறிது நேரம்  மௌனம்  காத்தேன்

சினம்  கொண்டு  போச வேன்டாம் சிந்தையில் கனவேயென்றான்  257

 

வித்யாதர  தேவர்கள்  என்றும்  மேன்மையில்  சிறப்புடையோர்கள்

மென்மகளைப் பெண்ணாய் கோடல்  மன்ணுலகோர்  பெருமையாகும்

நின்  மன்னன்  திருமுகத்தோடு  நீங்கள்  இங்கு  வந்த  தூதும்

கனவென்று மனம் நினைத்ததாலே கருத்தில் பதில் கூறாநின்றேன்  258

 

கடவுள்  விதித்த  விதிபடியே  அவரவர்  வாழ்க்கை  அமையும்

தன்னிலைக்கு அரியது கிடைப்பின் தன் திறன் என கொள்வாருண்டோ

விஞ்சையர் புகழும் பொருளும் மண்ணுலகோர்  அடையாரென்றும்

மாரீசே  நீர் முன்  பகர்ந்ததை  மன்னன்  நான்  ஏற்பேன்  என்றான்    259

 

சுவலனசடி  தூதுவன்  மரீசி  வெட்கத்தால்  நாணி  சிரம்  குனிய

தீவினைப்  பயனினால்  நான்  வேந்தனின்  மனதை  அறியாமல்

சுடுசொற்கள்  சினந்து  கூறியும்  சீரிடாத  பயாபதி  பெருங்குணம்

குற்றத்தை மறந்து பேசிட குறுகினான்  உடல்  நாணத்தாலே மரீசி    260

 

பயாபதியின்  ஐயத்தை மரீசி  அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கள் 

 

மண்ணுலக மக்களின்  மணம்  விண்ணவருடன்  நிகழ்வதில்லை-என்ற

பயாபதி  மன்னன்  ஐயந்தன்னை  பகுத்தறிந்து  தெளியச்  சொன்னான்

கலைகளில்  சிறந்து  விளங்கும்  கலைஞர்கள்  வித்யாதரர்கள்தான்

மண்ணுலக  மக்களில்  இருந்து மாறுபடு  அற்றவர்காள்  தான்               261

 

மத்தளம்  போல்  ஒலி  எழுப்பி  மிகுந்த  நீரால்  சூழப்பெற்ற

பவபுரத்து  மாமன்னனுக்கு  பட்டத்தரசி  காந்திமதியாவாள்

வில்லொத்த  இரு  புருவங்களும்  வாளென  நீண்ட  விழிகளும்

வெண்மதி  முகமும்  கொண்ட  வாயுவேகை  அவர்கள்  மகள்            262

 

தந்தையின்  பெயர்  அஞ்சுமான்  தாயார்  பெயரோ  அருசிமாலை

காந்திமதி  உடன்  பிறந்தோன்  மரீசி  என்னும்  மகனும்  நானே

அன்னையின்  திருவருளால்  அனைத்து  நூலும்  கற்றவன்  நான்

அனைத்துலக  வரலாற்றையும்  அரசே  நான்  இயம்புகிறேன்              263

 

மரீசி  நமியின்  வரலாறு  கூறல்  :

 

அன்றொரு  காலத்தில்  அரசர்க்கு  ஐங்குலங்கள்  உருவாக்கி  தந்து

அன்று  வாழ்ந்திருந்த  மக்களுக்கு  அறுதொழில்கள்  எடுத்துரைத்த

எண்வகை  குற்றங்கள்  அழித்த  எழில் கொண்ட  எம்பெருமானின்

திருவடிகள்  உலகத்தைக்  காத்து  செல்வத்தைக்  கொடுத்ததன்று     264

 

காசிநாட்டு  அரசன்  கச்சன்  கட்டிய  மனைவிதான்  சுதஞ்சணை

இல்லற  இன்பத்தில்  திளைத்து  ஈன்ற  செல்வன்  நமி  என்பான்

அரசாட்சி  செய்ய  விழையவில்லை  அரச சுகங்கள்  மனதிலில்லை

அறக்கடலை  அள்ளித்  தந்த  அருகன்  நினைவில்  பாடலானான்       265

 

அறம்  உரைத்த  அறவாழி  அந்தணரே  போற்றி  போற்றி

எல்லையில்ல ஞானம்  கொண்ட  எழிலரசே  போற்றி  போற்றி

மூவுலகும்  உன்னுள்  கொண்ட  முதல்வனே  போற்றி  போற்றி

மூவுலக  உயிர்கள்  காக்கும்  மூலவனே  போற்றி  போற்றி                266

 

செங்கதிரோன்  ஒலியுடைய  திருமாலும்  நீயே  தான்

வெவ்வினைகள்  அகற்றுகின்ற  பெருமானும்  நீயே  தான்

எப்பொருளின்  தன்மையறிந்த  எல்லையில்லா  அறிவன்  தான்

எண்குணத்தை  உன்னுள்  கொண்ட எழிலுருவும் நீயே  தான்           267

 

வினைகள்  வென்று  வீடடைந்த  வெற்றித்  திருமகனே  வாழ்க 

கேவலக் ஞானம்  அடைந்த  கீர்த்தியுடையோனே  வாழ்க

அடியார்க்கு  இன்பம்  தரும்  அருளாளனே  நீவீர்  வாழ்க

அனைத்தையும்  துறந்து  விட்ட  அன்புருவே  வாழ்க  வாழ்க                  268

 

நமி  என்பான்  நல்லிசையது  நாற்திசையும்  ஒலியெழுப்ப

விலங்குகள்  தம்  இடம் விட்டு  விலகாமல்  நின்றன  அங்கு

விண் பறக்கும்  பறவைகளும்  மண்  தொட்டு  நின்று  விட

ஐம்பொறி  வென்ற  அருகனின்  தியானத்தில்  சலனம்  இல்லை       269

 

அருகனின்  குணங்களை  நமி  அழகிய  இன்னிசையில்  பாட

ஆதிசேடன்  அங்கு  வந்தான்  தன்  ஆயிரம்  படங்கள்  கொண்டு

நாகரின்  உலகத்து  அரசன்  நன்மணிகள்  உச்சி  கொண்டோன்

நமிநாதனை  வலமாய்  வந்து  நாதனை  வணங்கி நின்றான்            270

 

அருகனின்  திருவடிகளைப் பற்றி  அற்புதமாய் இன்னிசைத்தாய்

நமி  என்ற  மான்னவனே நீவீர்  நாடுவது  யாதென கேட்டார்

ஆதிசேடனை அன்புடன் வணங்கி தேவலோக தேவர்களைப் போல்

விரும்பியதெல்லாம்  கிடைக்கும்  வரம்  தர  வேண்டும் என்றான்       271

 

விஞ்சையர்  துணையினோடு  வெள்ளிமலையும்  கொடுத்து- இசை

நினைத்ததை  உனக்குத்  தரும்  நிறை மனதில்  வாழ்வென  வாழ்த்தி

ஆயிரம்  படங்களையுடைய  ஆதிசேடன்  வரத்தைத்  தந்து

அவ்விடத்தை விட்டு அகன்று அகமகிழ்ந்து தன் உலகம் சென்றான் 272

 

என் மன்னன்  சுவலனசடியோ  நமி  குலத்தின்  தோன்றலாவன்

நமி குலத்திற்கு சமமான  நீரும்  நல்லுயர் குலத்தையுடையோர்

செல்வ சைவ சிறப்புகளுடைய இத்திருமணத்து வினைப்பயன்

நறுவிய  நெய்யோடு  சேர்ந்த  பாலுக்கு  ஒப்பாகும்  என்றான்             273

 

பயாபதியின்  வரலாறு  கூறத்தொடுங்குதல்  : 

 

விஞ்சையின்  தூதுவன்  விளம்பிய  சுவலனசடி  பெருமையை  கேட்டு

அங்கத  நிமித்திகன் எழுந்தான்  அரசன் பயாபதி குலத்தைக் கூற

அருகனின் அருளால் தோன்றிய  அரசன்  வாகுவலி என்பானின்

செங்கோல்  நடத்திய ஆட்சி  சிறப்புடன்  தொடர்கிறது இன்றும்         274

 

வீரக்கழல்  அணிந்த மகனுக்கு  வாகுவலி  அரசைத்  தந்தான்

துறவறம்  முற்றும்  ஏற்றான் தொடர்ந்திட்டான்  தவத்தை நோக்கி

கண்ணிடை  உயர்ந்து  தோன்றி  கதலி  வனத்தை  வேலியாக்கி

கார்முகில்  என்றும்  தவழும் கைலாயகிரியில்  தவத்தில் நின்றான்  275

 

வாகுவலி  வலிய  தவத்தில்  நிற்க  வளர்ந்தன பாம்பு புற்றுகள்

ஐந்தலை கொண்ட அரவங்கள்  அலைந்தன அவர் மேனியெங்கும்

கால்களைக் கொழு கொம்பாய் பற்றி  படர்ந்தன கொடிகள் எல்லாம்

சிரசினில் அடர்ந்த குழலில்  சிறு பறவைகள் கட்டின கூடுகள்               276

 

அனிச்சை மலர் மெத்தை மேலே ஆரணங்குகள் வளைகரம்  தழுவ

பூக்களால் தொடுத்த மலர்கள் பொன்மேனியில் புரள்வது போல்

பொன்கொடியை ஒத்த மகளீர்கள் போர்களம் போன்ற மார்பில்

புரள்வது  போல  இருந்தது  வாகுவலி  வேந்தனின்  மாதவம்              277

 

எண் குற்றங்கள் விலக்கி நின்று  எண்குண மாலைகள்  அணிந்து

கடையிலா காட்சி வீர்யத்தோடு  கேவலக் ஞானமும் கொண்டு

வானவர்கள்  வந்து   வாழ்த்த  வானலோகமும்  மணந்து  வீச

தேவர்களுக்கும்  அரியவனாகி  தெய்வலோகம் சென்றடைந்தார்     278

 

என் தலைவன் பயாபதி மன்னனும் வாலிவாகு  வம்சத்தில் வந்தோன்

சுவலனசடியும் பயாபதியும்  செறிந்த குலத் தோன்றல்கள் என்றான்

உலகத்து அறிவு நூல்களும்  குலங்களை  ஆய்ந்திடும்  திறனும்

மருசியே   உன்னைத்  தவிர  யாருளர் என புகழ்ந்தான்  மன்னன்     279

 

அரசன் உருவம்  கொண்டவனுக்கு  அமைச்சர்கள் இரு கண்களாகும்

குடிமக்களும்  நண்பர்களும்  குன்று  ஒத்த  தோள்கள்  ஆகும்

செய்தி  கொண்டு வரும் ஒற்றர்கள்  சிறந்த இரு  காதுகளாகும்

தேனினிக்க  சொல்லும்  தூதுவன் செவ்விய நல் நாவுடை வாயாம்    280

 

அமைச்சனின் நல்லியல்புகள்  அனைத்டும் பெற்ற ஓர் தூதுவன்

அறிந்து ஆய்ந்து சொல்லும்  செய்தி தெள்ளிய நல்லுரைக்கொப்பும்

சுவலனசடி மன்னன் உம்மை  தேர்ந்தெடுத்து அனுப்பியதாலே

இப்பிறவி பெற்ற பயன்கள்  இரு நாடுகளுக்கும்  இன்பமாகும்                 281             

 

வெற்றியோடு  விளங்குகின்ற  விஞ்சை  மன்னன்  சுவலனசடிக்கு

இரு கண்களாய்  இருந்து கொண்டு எப்போதும்  வாழ்த்து சொல்லும்

வந்த தூதுவன் மன்னனிடம்  வலம்  வந்து  தொழுது விடை கேட்டு

பயாபதி  பட்டும்  பொன்களும்  பரிசளித்து  சிறப்பு  செய்தான்            282

 

 

தூதுவிடு  சருக்கம்  முடிவுற்றது.

 

 

7. சீயவதைச்  சருக்கம்.

 

போதனபுரத்தை விட்டு மரீசி  இரசநூபுரத்தை  அடைந்தான்

முப்பெரும்  வாசலைக்  கடந்து மன்னன்  சுவலனசடியை வணங்க

சடி  மன்னன்  தன்  கையால்  சிறந்ததோர்  ஆசனம்  காட்ட

தூதுவன்  மகிழ்ந்து  அமர  தூதின்  முடிவை அறிந்தான் மன்னன்      283

 

மரீசியின்  கூற்று  :

 

மதகளிறுகள்  கொண்ட  வேந்தே வாழ்க நின் திருவடிகள் என்றும்

திருநாட்டின்  தீமைகள் ஒழிக  தெள்ளன  என் செயலை முடித்தேன்

போதனபுரம்  சென்றதையும்  பயாபதி மன்னனிடம் சினந்ததையும்

மன்னனின் பெருந்தன்மையும் மரீசி சொல்வேன் கேட்பீரென்றான்  284

 

புட்பமாகரண்டம் பொழில் செல்ல  விசய திவிட்டர்கள் வந்தழைக்க

திவிட்டனின் தந்தையைப் பார்த்து  திருமுகத்தை கரம் பணிந்து தர

மன்னனோ  சற்று  மௌனம்  காக்க  மரீசி  நான்  மனம் சினந்து  சீற

நல் ஞானத்தில் பயாபதி  பேச  நாணத்தால்  சிரம்  கவிழ்ந்தேன்       285

 

மன்னனே  உம்  வரலாறு சொன்னேன் பயாபதி வரலாறுமறிந்தேன்

திருமுகச்  செய்தி  அறிந்ததும்  திங்கள் ஒளி போல் முகம் மலர்ந்து

மன்னனும்  மனைவியரும் மகிழ்ந்து  மதுசொல்லால் முகமன் கூறி

பல பொருள் பொன்னோடு தந்ததை பகர்ந்திட்டான் சுவலனசடிக்கு 286

 

பயாபதி  மன்னனின்  இரண்டு  பார்புகழ்  வீர மகன்களும்

பகைவனாம்  மான்கள்  முன்னே  பாய்ந்திடும்  அரிமாக்களாவார்

ஐங்கணையான் மன்மதன் தனை  அவனியில் உள்ளோரெல்லாம்

விசய திவிட்டர்  உருவம் மூலம்  உருவத்தை அறிந்து  கொள்வர்         287

 

வலம்புரி  வெண்சங்கை  ஒத்த  வெண்ணிறமுடையோன் விசயன்

கார்மேக கண்ணன் நிறத்தில்  களைகொண்டோன் திவிட்டனாவான்

திருமால் நாபி செந்தாமரையில் சேர்ந்து வசியும் திருமகளைப் போல்

திவிட்டனை அடைந்து வாழ தேவி சுயம்பிரபை பெருந்தவத்தாளே 288

 

போதனபுரத்து திவிட்டனுக்கு  விஞ்சையின் சுயம்பிரபையை

திருமணம் செய்து வைத்தால்  வியந்திடும் விஞ்சையர் உலகம்

மரீசியின்  சொல்லைக் கேட்டான்  மலை  ஆளும்  சுவலனசடியும்

பொன்  முத்து நவமணிகளை  புது வெள்ளம்  போல் வழங்கினான் 289

 

சடி மன்னன்  அமைச்சரை  வினாவுதல்  :

 

வெற்றியுடைய விஞ்சையின் வேந்தன்  மரீசியை  மனைக்கு அனுப்பி

மந்திரிகள் அனைவரோடும்  மேற்கொண்டு செய்வதைக் கேட்டான்

சதவிந்து நிமித்திகன் சொன்ன  ஒரு திங்கள்  எல்லை நாளில்

திவிட்டன் அரிமா வாய் கிழித்து கொல்வான் எனும் செய்தியுண்டு 290

 

சதவிந்து  கூற்றில்  நிகழ்வது  சரியாய்  அமைந்ததா  என அறிய

ஒற்றற்கே  உரிய மாண்புகள்  உள்ள  ஓர்  ஒற்றனை  அனுப்பி

உண்மையைக் கண்டறிவோம் என  அமைச்சர்கள் கூட்டம்  கூற

அகமகிழ்ந்து மன்னன் கூறினான் அனுப்புக நல் ஒற்றனை என்று      291

 

இனி அச்சுவகண்டன் செய்தியை  கூறுவாம்  எனல் :

 

வடசேடியை ஆளும்  மன்னன்  வளமிக்க  அச்சுவகண்டன்

மெல்லிடை மங்கைகளோடு  மென்பஞ்சு மெத்தையின்  மீது

ஐங்கணையான்  அம்புகள் பாய  ஆர்த்திடும்  காமத்தோடு

உறக்கத்தை அறவே ஒழித்து  ஒன்றினான்  கமக்கடலில்                           292

 

பகைவர்கள் உளர் என சொன்னால்  பகர்வதைப் பொறுக்கமாட்டான்

சொல்லியதை தேர்ந்து  ஆயாமல் சொன்னவனை கொல்வானுடனே

நண்பன் பகைவன் யாரிவர் என  ஆராயாமல் அவனைக் கொல்வான்

சுவகண்டன் செய்யும்  ஆட்சியின் அரசியல் அறம் இதுவேயாகும்    293

 

அறநூல்கள் பலவும் கற்ற அறிவுக் கடல்லன  சதவிந்து

அச்சுவகண்டன் அவையில்  ஆசனமேற்றான்  நிமித்திகனாக

அந்நிமித்திகன்  கூறலானான்  அறமிழந்த  அச்சுவகண்டனிடம்

உட்பகை  ஆறையும்  ஒழியுமென உரைத்து முகம் நோக்கினான்    294

(உட்பகை 6 : காமம், வெகுளி, மயக்கம், பற்று, செருக்கு, பகை )

 

அறுபகை  அறுத்த  அரசனை  அவனியில்  வெல்லுதல்  அரிது

அவன்  ஆளும் நாட்டில்  என்றும்  அடைமழை பொழிய செழிக்கும்

குற்றமே  இல்லா  செங்கோலால் குறையற்ற வானுலகம் புகழும்

காப்பதில்  கடவுள்  இவன்  என  காலத்தால் கடந்து நிற்பான்           295

 

மெய்யறிவு எனும்  கதிரவனான  திரு  என்பது  மன்னன் அறமே

தாமரை  இதழ்  மேல்  அமர்ந்த  செருக்கெனும் பனியை போக்கும்

மனதினில் நிறைந்த மகிழ்ச்சியால் மனம் தடுமாறும் போது

அறம் கெட்டு அழிவார்களென  அறநூல்கள் கூற்றை  அறிவாய்       296

 

அரசியல்  நடத்தும்  முறையும்  அதில்  வரும்  நீதியும் நேர்மையும்

அரசே  நீ  நன்கு  அறிவாய் எனினும் ஆயினும் அன்பால் உரைத்தேன்

சதவிந்து கூறிய  மொழிகள்  சுவகண்டன்   செவியினில்  பதிய

உன் கூற்றின் உறுதிப் பொருளினை உரைத்திடு சதவிந்தென்றான் 297

 

போதனபுர  நகரின் மா மன்னன்  பயாபதிக்கு  இரண்டு  மகன்கள்

விசய  திவிட்டன்  இருவருமே  வீரத்தில்  நிகர்  அற்றவர்கள்  ஆவர்

இளையவன் திவிட்டன்  என்பான்  உன்  பெரும்  பகைவனாவான்-என

நிமித்திகம் மூலம் அறிந்தேன்  நெஞ்சத்தில் வருத்தம் கொண்டேன் 298

 

அப்பகை  மூள்வதற்கு  முன்  அதனை  முறியடித்து  வெல்லும்

நல்லதோர் வழியை  காண்னென கூற  சுவகண்டன் சொல்லை தடுத்து

விஞ்சையின் வேந்தர்கள் என்மேல்  வெஞ்சினத்தால்  தாக்கிய போது

மன்னர்களை அழித்தேனன்று மனிதபகை என் செய்யுமென்றான் 299

 

மென்  விசிறியால் வீசும் காற்று  மாமேரு  மலையினை அசைக்குமா

மனிதர்கள் அறிவின் திறத்தால்  மன்னன்  என்  தோள்  அசையுமா

வேழத்தின்  கூரிய  கோம்புகள்  வாழையை  குத்தி  மழுங்குமா

விஞ்சையர்  படைகளை  வென்ற  வேந்தனுக்கு  மானிடர் நிகரோ   300

 

நீ  சொல்லிய  திவிட்டன் படை மேல்  என்  மாயவித்தையை ஏவினால்

அவன்  படை நொறுங்கி ஓடும்  அறநூல்  நிமித்திகம்  பொய்க்கும்

அவனியில்  உள்ள  அரசர்கள்  அனைவரும்  எதிர்த்து  வரினும்

அஞ்சாது எதிர்த்து போரிட்டு அனைவரையும் கொல்வேன் என்றான்301

 

அச்சுவகண்டன்  அமைச்சர்  கூறல் :

 

சுவகண்டன்  உணர்வுக்கேற்ப  தெளிவிலா  சித்தம்  கொண்ட

பொய் நூல்கள்  கற்றறிந்த  பகுத்தறிவு  இல்லா  அமைச்சர்கள்

சிறு நெருப்பு  பற்றி  எரிந்து  பெருங்காட்டை  அழிப்பது  போல்

பழம்  பகைமை  சிறிதெனினும்  பலம்  மிக்க  நம்மை  அழிக்கும்       302

 

நஞ்சினைக்  கொட்டும்  மரங்கள்  நிலம்  விட்டு  முளைக்கும்  போதே

நகத்தினால்  கிள்ளிவிடலாம்  நமக்கு  அது  எளிதாய்  முடியும் 

அச்செடி  மரமாய்  வளர்ந்து  அடிமரம்  வைரம்  பெற்றுவிட்டால்

வாளோடு  கோடரியும்  கொண்டு  வெட்டிடல்  அறிவுடைமையன்று  303

 

அரிமஞ்சு  அமைச்சன்  சொன்னான் நிமித்திகன்  கூற்றைப் நோக்கில்

திவிட்டன்  நமக்கு  தகுதியுடைய  திடமான  பகைவன்  ஆகலாம்

திறைப்  பொருள்கள்  கேட்டு  நாம்  திறமிக்க  தூதரை  அனுப்பினால்

திறை பொருள் முழுதும்  தந்தால் சிறிதும் பகையில்லையெனலாம் 304

 

அரக்கூட்டிய  கோல்களுடனும் அலங்காரம்  மிகு  ஒளியுடனும்

இலச்சினைப் பொறிக்கப்பட்ட   திருவோலையை கையில் ஏந்தி

கூத்தியல்  வல்லுனர்களான  ஈரிரண்டு  நல்  தூதுவர்களை

சுவகண்டன் அனுப்பி வைக்க தூதர்கள் அடைந்தனர் போதனத்தை 305

 

அச்சுவகண்டன்  தூது  விடுதல் :

 

கருமுகில்கள்  தவழும்  மாளிகை  கதிரவனின்  வழியை  மறைக்க

போதனாபுரம்  செல்வம்  நோக்கில்  விஞ்சையர்  செல்வம்  தாழ்வே

மேகங்கள்  மோதும்  முழக்கமோ  மயில்கள்  தோகை விரியச்  செய்யும்

முழங்கிடும்  முரசைக் கேட்டு  மயங்கினர் தூதர்கள்  நால்வரும்                306

 

தவழ்ந்திடும்  முகில்கள் பொதியை பிளந்திடும் இலையின் நுனிகள்

கொட்டிடும்  அருவிகள்  தோற்றம்  கிட்டிடும்  கண்கள்  இரண்டை

களிறுகளின்  மும்மத  நீரோடு  குதிரைகள்  வாய் நுரை  சேர்ந்து

வெறியாடும்  களங்களைப்  போல்  இருந்ததை  தூதர்கள் கண்டனர்                307

 

குவளைமலர்  மலர்ந்ததாலே  கொட்டிடும்  தேனை  உண்ண

வண்டுகள்  அலைந்து  திரிந்து  வாசிக்கும்  இன்னிசையோடும்

பெடையின்  நடை  கண்டு  மயங்கிய  ஆண் அன்னம்  கொண்ட மகிழ் ஒலி

அத்தனை  ஒலிகளும்  ஆர்த்திடும்  அரண்மனையை அடைந்தனர் தூதர்           308

 

அச்சுவகண்டனின் தூதர்கள்  அரண்மனை  வாயிலில் உள்ளனர் – என

அரசன் பயாபதியிடம்  சென்று  அறிவித்து  வருவாய்  என்றனர்

வாயில்  காப்போன்  வாய் மொழி கேட்டு  வாடாமாலை நெடுமுடி மன்னன்

அனுப்பவும்  என்று  அவனிடம்  கூற  தூதுவர் நால்வரும் சேர்ந்தனரங்கு       309

 

தூதுவர்  வணங்கினர்  மன்னனை  தூதோலைத்  தந்தனர்  அவையில்

ஏடு படிப்போன்  ஓலை  படித்தான் தூதுவர் கூறினர் அவர் தம் வாயால்

ஓராயிரம்  கோடி  செம்பொன்களும்  ஆயிரம்  ஆடும்  அணங்குகளும்

திறை பொருளாகத்  தந்தாளும்  மேலும்  பல கூறுவோம்  கேளீர்                        310

 

திரைகடல்  தந்த  சங்குகளும்  சிவந்த ஒளியுடை  பவழங்களும்

வெண் முத்து மணிகளும் ஆடைகளும் மென்மணம் அமைந்த அகிலும்

கவரிமான்  மயிற்கற்றையும்  களிறுகளின்  வெண் கொம்புகளும்

திறையாகச்  செலுத்த  வேண்டும்  தெளிவீர்  சுவகண்டன் ஆணையை 311

 

கட்டிய  தறியில் இருக்கும் களிறு  கல்லடி  பட்ட  தன்  சினத்தை

மனதினில் அடக்கிய  நிலையில்  மன்னன்  பயாபதி  இருந்தான்

கல்வியோடு  குலமும் புகழும்  சமம்  ஒத்து  இருவரும்  இருக்கையில்

ஒருவன்  கட்டளையிடுதல்  ஊழ்வினை என  எண்ணினான் மன்னன்               312

 

மனம், மொழி,  மெய்களால்  ஈட்டிய  பொருளை மற்றவர் கை பற்றுதலும்

மாண்புடன் பொருள் பெற்றோனிடம்  மகிழ்ச்சியில்  வாழும் ஆசையும்

அதனால்  வரும்   நல் தீவினைகளை  ஆய்ந்து  அறியா  தன்மைகளும்

முற்பிறப்பில்  நாம்  செய்த  இம்மையின்  ஊழ்வினை    என்றான்                  313

 

பயாபதி  தன் மனதின்  உள்ளே  பாய்ந்திட்ட  சிந்தனைகளோடு

தூதரைப்  பார்த்துச்  சொன்னான்  திறை பொருள்கள்  தருவோமென

விசய  திவிட்டர்  அறியுமுன்னே  விரைவாக  தூதர்களை  அனுப்பிட

மொழிந்திட்ட பொருள்கள் அனைத்தும் முறைபடி அளிக்கச் சொன்னான் 314

 

கொவ்வைக்  கனியாய்  சிவந்த  வாயூம்  கொட்டும் உடுக்கை  இடையும்

வாள் போல்  நீண்ட மைவிழிகளும்  வெண்மதி  ஒத்த  முகங்களுடன்

முழவோடு இசை கருவிகளுக்கு  முறைப்படி  ஆடி மயங்கச் செய்யும்

ஆயிரம்  ஆரணங்குகளையும்  பொன் பொருளும்  திரையாய் தந்தான்          315

 

விஞ்சை தூதுவர்களின் வித்தையால்  வந்தன விமானங்கள்  சுரமைக்கு

பொன் பொருள்கள் அணிகலங்களுடன் பொற்கொடியர் ஆயிரமரையும்

விமானத்தில்  ஏற்றிய பின்னர்  பொன் திரையிட்டு  மூடிடும்  போது

விசய திவிட்டர்கள் நேரில்  காண  விபரம்  யாதென காரணம் கேட்டனர்     316

நின்றவர்கள்  அஞ்சி  ஒதுங்க  நடக்கப்  போவதை  அறிந்து  நடுங்க

கொலைத் தொழில்  வல்ல குறளன்  துணிவுடன் முன் வந்து கூறினான்

சுவகண்டன்  மன்னனுக்கு  நமது  மன்னன்  திறை பொருள் தந்ததை

தூதுவர்  கொண்டு  செல்கின்றனர்  விஞ்சை  மாநகரம்  நோக்கி                     317

 

கடுஞ்சொல்லைக்  கேட்ட திவிட்டன்  கண், உடல்  சினந்து  சிவக்க

முடியடியில் முத்துக்கள் போல்  முகமதிலும்  வியர்வைத்  துளிர்க்க

நெய் துளிகள் ஊற்றப்பட்ட  நெருப்பது  கனன்று  எழுவது போல்

கோபத்தில்  திவிட்டன்  அடிக்கடி  குமுறி  குமுறி  சிரிக்கலானான்                 318

 

திவிட்டன்  சின  மொழிகள்  :

 

குடிமக்கள்  உழைத்து  சேர்த்து  கொற்றவனுக்கு  தரும்  இறையை

பகை  மன்னன்  கேட்கும்  திறையை  பகிர்ந்து  உயிர்  வாழ்தலில்லை

உம் மன்னன்  கேட்ட  திறைபொருளை  என் மன்னன் அள்ளித்  தந்து

அவனருள்  பெற்று  வாழ்ந்தால்  அடியேனின்  தோள்  ஆற்றல்  எங்கே      319

 

கடுஞ்சினம்  கொண்ட  பாம்பின்  படம் மீது  அமைந்த  மணியை

அச்சுவகண்டன் எடுப்பதும்  அவன்  அறியாமையை  உணர்த்துவதாகும்

திறை பொருள்  வேண்டும் எனில் உம் மன்னன் கூத்தியல் மகளீரோடு

யாழேந்தி  இசைத்து  ஆடி  வந்து  பரிசலாய்  பெறச் சொல் என்றான்                  320

 

மெலிந்தவர்  இடத்தே  சென்று  சக்கரப்  படை  வலிமையை  காட்டி

திறை கொண்ட  காலம்  போனது  இனி  அச்சுறுத்தல்  செல்லாதிங்கு

திறை பொருள்  பெறுவேனென்றால்  சுவகண்டன் இவ்விடம்  வந்து

போரினில் எங்களை வென்று பொருள் கொண்டு செல்கவென்றான்321

 

தூதரே உம் அரசனிடம் சொல்  திவிட்டன் நான் சொன்ன செய்தியை

திறை பொருள் மறுப்போரிடம்  பெரும்  முறை பிறிதுளதோ  என

மொழியினைக்  கேட்ட தூதர்கள்  மேனி  எல்லாம்  நடுங்கி  அஞ்சி

வலிமை மிக்க பகை ஒன்றெண்ணி விஞ்சைக்கு சென்றனர் உடனே 322

 

மன்னனை காண அஞ்சிய தூதர்கள் மனதினில் கொண்ட பயத்தால்

அரிமஞ்சு  அமைச்சரைப் பார்த்து  அனைத்தையும்  கூறினார்கள்

அச்சுவகண்டனின்  பகையான்  திவிட்டனின்  சொற்களை கேட்கில்

மன்னனும் பொறுக்கமாட்டான் மாற்று வழி யாதென எண்ணினான்323

 

இளங்கன்று பயம் அறியாமல் இத்தகைய  வார்த்தைகள் சொன்னான்

 மலைக்குகை மாய சிங்கத்தால்  திவிட்டனை கொல்ல திட்டமிட்டான்

திரண்ட திண்ணிய தோள் கொண்ட  அரிகேது என்னும்  விஞ்சனை

அரிமாவின்  உருவம் கொண்டு அழிக்கச் சொன்னான்  திவிட்டனை324

 

கவிழ்ந்து படர்ந்த பிடரி முடியும்  கற்பாறையை பிளக்கும் நகமும்

முகில் மோதும் முழக்கம் போல  முழங்கிடும் குரலைக் கொண்டு

பிறயொத்த ஒளியை உடைய  பெரும் பற்கள் வாயில்  இருக்க

தீக்கனல் கண்களில் ஒளிர  பெருஞ் சிங்கமாய்  உருவெடுத்தான்      325

 

இளம் பொழில்கள் வேலியாக்கி  இமயத்தின் விசும்பை தாண்டி

விசய திவிட்டர்கள்  வாழும்  விரிந்த சிந்து நாட்டை  அடைந்தான்

நெடுநிலம் முழுதும்  நடுங்கிடவும்  நீண்ட  மலைகள் பிளந்திடவும்

திரைகடல்  கலங்கி எழும்ப  கர்ஜித்தது அரியகேதான சிங்கம்          326

 

மணல்வெளி எதிரொளி எழுப்ப  மலையோடு  காடுகள் அதிர

விலங்கினங்கள் நெலிந்து வீழ வேழங்கள் கலக்கத்தில் பிளிர

முறத்திடை நெல்லில்  இருந்து  முன் வாய்  பதர்களைப் போல்

கற்களும் குண்டுகளும் சிதற  கலங்கினர்  மக்களெல்லாம்             327

 

அரிமஞ்சு  அமைச்சன் மீண்டும்  அனுப்பினான்  தூதுவர்களை

திறை  மறுத்த வீரன்  திவிட்டன்  சிங்கத்தை ஏன்  கொல்லவில்லை

தூதுவர்கள் கூறிய  செய்தியை  துவக்கத்தில் அறியா திவிட்டன்

சுரமையின் மலைக் குகையில்  சிங்கம் உண்டா என்று கேட்டான்     328

 

மலைக்குகையில் சிங்கம் உண்டென  மக்களும்  மற்றோரும்  கூடி

உயிர்களைக்  கொன்று தின்று  உயிர்வதை செய்கிறதென்று  கூற

ஏனைய வீரரும்  மறவர்களும்  எனைத் தொடர வேண்டாமென கூறி

சிங்கத்தின் வாயினை கிழித்து சிதைத்திடுவேன் உடலை என்றான் 329

 

கடல் ஒத்த திவிட்டன் சொல்ல  சங்கொத்த விசயனும் தொடர்ந்தான்

அண்ணலும் இளவளும் சேர்ந்து  அரிமா இருக்கும் இடம் வந்தனர்

இருவரையும் பார்த்த சிங்கம்  இடியென சினந்து  முழங்கிட

குன்றுடன் கற்கள் நெலிந்து நெற்பொறியாய் பறந்து உதிர்ந்தன      330

 

கருநிறம் கொண்ட திவிட்டன்  கடகத்தை கையினில் ஏற்றி

சூளாமணி மாலையை கொண்டு சுருள்குழலை இறுகக் கட்டி

ஆழியின்  அலை போல் அதிர்ந்து ஆரவாரம் செய்ததைக் கண்டு

விஞ்சையின் அரிகேதுவான அரிமா  விலகி அஞ்சி  ஓடலாயிற்று      331

 

ஓடிடும் சிங்கத்தைத் தொடர்ந்து  ஓடினான் திவிட்டனும் பின்னே

கால்கள் நிலம் தொடாத நிலையில் கழல்களும் ஒலித்தன அங்கு

விலங்குகளும் பறவைகளும்  வீழ்ந்தன அங்கு நிலத்தின் மேலே

திவிட்டனின் தோள் வலியாலே  துவண்டன மலைச் சிகரங்கள்         332

 

பயந்தோடும் மாயச் சிங்கமோ  பாய்ந்தோடும் வகையறியாமல்

மலையினது குகையின் உள்ளே மாயமாய் மறைந்து ஒளிந்தது

குகையினுள்  வாழ்வுற்றிருந்த  காட்டரசன் நிஜ சிங்கமானது

திவிட்டனின் முழக்கத்தாலே  திகைத்து விழித்தெழுந்தது அரிமா   333

 

திவிட்டனின் உருமல் கேட்டு  சினந்து கனன்ற  கண்களுடன்

சிங்கமும்  அதிர்ந்து கர்ஜிக்க  சிதைந்தன மலைகள்  அங்கே

தன் குணம் அறியாத வேறொரு  பகைச் சிங்கம் வந்தது என்று

உள்ளத்தில் மகிழ்வு கொண்டு உள்ளிருந்து வெளியே வந்தது                334

 

பிடரி முடிகள் சிளிர்த்து எழ  திவிட்டன்  மேல்  சிங்கம்  பாய

பிடரி மேல்  தன் கால் பதித்து  பிளந்திட்டான்  அரிமா வாயை

சிங்கத்தைக் கொன்றதை நோக்கி தேவர்கள் வியப்பில் ஆழ

இப்பெருஞ் செயலினாலே  வியந்தனர் மக்களும் தேவர்களும்         335

 

வேங்கையை ஒத்த திவிட்டன்  அண்ணனின்  அருகில்  வந்தான்

அழிந்தது கொடும் சிங்கம் என்று அண்ணனுக்கு செய்தி சொன்னான்

தீமையை  அழித்து  விட்டோம்  திரும்புவோம் போதனம் என்றான்

மன்னனும் அச்செய்தி அறிந்து  மகன்களைத் தழுவிக் கொண்டான் 336

 

தம்பியின்  ஆற்றல்  கண்டான்  தமையன்னா  விசயன்  அன்று

திவிட்டனுக்கு  குறிஞ்சியின் அழகை தெள்ளன எடுத்து சொன்னான்

மலை முகட்டில்  மேகம்  தழுவ  மழை  அருவி  இறைச்சலாய்  வீழ

அவரைக் கொடியை கவரி தின்று அருந்திடும் மலையருவி நீரை      337

 

சுரபுன்னை மரங்கள் வாழையும் செறிந்து நீண்ட பெரிய காடும்

கன்னலோடு மூங்கில்  தழைத்து கடும் இருளைத் தழுவச் செய்யும்

கருமேகக்  கூட்டம்  திரண்டு  கவிழ்த்திடும்  மேலும்  இருளை

பகற்காலம் என்ற ஒன்றை  பார்பதற்கே அரியவை  ஆகும்                   338

 

பெருங்குகை ஒத்த வாயுடன்  பெரிய மலைப் பாம்புகளோடும்

கருமுடிகள் உடலில் கொண்ட  கரடிகள்  கூட்டத்தோடும்

பிடிகளை  அணைத்துச் செல்லும்  பெருங்குன்று  களிறுகளோடும்

பரந்த இந்த குறிஞ்சி நிலம்  மனிதர்களுக்கு இன்னலே தரும்               339

 

தேனுண்ட  வண்டுகள் மயங்கி  தேன்குழல் இசை  எழுப்பும்

நீ விரைந்து செல்வாயாகில்  நின் வீரக்கழல் ஒலி எழுப்பும்

கழல் ஒலி கேட்ட முகில்கள்  கலங்கியே  கண்ணீர் சொரியும்

கண்ணீரின்  வெள்ளத்தாலே  காமனின்  சோலைகள் மூழ்கும்                340

 

தாவுகின்ற  மான்கள்  இடத்தில்  தாமரை  தடாகங்கள் இருக்கும்

சந்தன குங்கும மரங்களோடு சண்பக மாதுளை மரங்களிருக்கும்

சந்தனத்தழை ஒடித்த வேழம்  தன் மேல் மொய்க்கும் ஈயை ஓட்டும்

குறிஞ்சியின் மலைகள் எல்லாம் தேவலோகத்தை எள்ளி நகைக்கும் 341 

 

திவிட்டா  உன் கர்ஜனையில்  திகைத்தோடிய சிங்கம் கண்டு

மாயம்  என்று எண்ணிய நான் மலை அருவியாய் குருதி ஓட

உண்மையே நிகழ்ந்ததென்று  உணர்ந்து வியப்புற்றேனின்று

நின்  ஆற்றலைக் காணும்போது அமரருக்கும் உடலது வேர்க்கும்    342

 

உலகினில் வாழும் உயிர்கள்  உற்றிடும் பெரும் இன்னல்  கண்டு

மலையொத்த தோளுடை மறவர் மதித்திலார் தம் வாழ்வினை

அரச குடியில் பிறந்த மக்கள்  அரச இலக்கணம் யதெனில்

அனைத்துயிரையும் கப்பதுவே  அறமாய்  அமையும்  அரசனுக்கு     343

 

அரிதிற் கிடைத்த மானிடவாழ்வை அரியநூல்களை ஓதியுணர்ந்து

அனைத்துயிர்க்கும் இன்னல் போக்கி அருள்வதே மனித வாழ்க்கை

பிறவுயிர்  இன்னல்  கண்டும்  போக்காது  அதை இருப்பானாகில்

ஆண் தன்மை அறவே அற்ற  ஆண் பெண் அற்ற பேடியை ஒப்பான் 344

 

விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலம் விட்டு பாலைநிலம் எய்தல்  :

 

குறிஞ்சி நிலம் கடந்த இருவரும் கொதிக்கும் பாலைநிலத்தை அடைய

பாலையின்  தன்மைகள்  பற்றி  தம்பிக்கு  உரைக்கலானான்

வெப்பக் காற்றின் மிகுதியாலே  மிதந்திடும்  தரை கானல்நீரை

தண்ணீரென  எண்ணிய மான்கள்  தாவியே  ஓடோடி இறக்கும்            345

 

பாலையில் விளைந்த மூங்கில்  பகலவன் கடும் வெப்பத்தாலே 

தீப்பற்றி கொழுந்தாய்  எரிய  சிதறிய மூங்கில் நெற்கள்

பாறையின் மேல் பனிபோல் வீழ்ந்து தகித்திடும் வெப்பத்தாலே

நெற்பொறியாய் பொறிந்திருக்கும் நித்தமும் பாலை நிலத்தில்        346

 

அயலாரை விரும்பி ஏற்காத அன்பிலார் மனை அழிதல் போல

ஞாயிறின் வெண் கதிர்களாலே நிழல் அஞ்சி நீங்கிடும் இங்கே

நிலச் சூட்டுக்கு பாம்புகள் அஞ்சி  வளை விட்டு நீங்கா வெளியே

காந்தள் மலர் இருகரம் கூப்பி  கார் பருவம்  வேண்டி  நிற்கும்                 347

 

விசய திவிட்டர்கள்  பாலை  கடந்து  முல்லை  நிலம்  ஏகுதல்  :

 

சிங்கத்தைப் பிளந்து கொன்ற  செங்கண்ணான்  திவிட்டனுடன்

பொன்மாலை அணிந்த விசயன் போதனம் நோக்கி ஏகினான்

மாதம் மும்முறையும் பெய்து வற்றாத நீர்வளம் கொண்ட

தெய்வம் போல் நின்று காக்கும்  தந்தையின் முல்லையடைந்தனர் 348

 

வட கீழ் திசைக் காற்று வந்து வசந்த மென் தென்றலாய் வீச

பெருமலர் பூம்பொழில்களில் பூவிரியும் ஓசைகளோடும்

பூங்கொடிகள் என்னும் மங்கையர் பாவையர் கூத்தாடி களிக்க

கொன்றை என்னும் மாமன்னன் கொட்டினான்மலரை பரிசாக               349

 

செம்பவளம் போல் இதழை ஒத்த செழித்த கொவ்வைக் கனிகளும்

வளைந்திடும் இடையை ஒத்த வண்டுகள் மொய்க்கும் கொடிகளும்

மதி முகமாய் ஒளி வழங்கும் மலர்ந்த முல்லை மலர்களும்

முல்லை நிலத்தின் வனப்பினை மூவுலகோர் வந்து காண்பர்           350

 

கருநாவல் மரத்தின் பழங்கள் காற்றினால் தரையெல்லாம் பரவ

கரும்பழங்களை மொய்த்து நுகர கரிய நிற வண்டுகள் சூழ

பகலினை இரவாய் காட்டும் பரந்த அம்முல்லைய் நிலத்தை

பார்த்திட கண்கள் வேண்டும் ரசித்திட   ஞானம் வேண்டும்          351

 

கறந்திடும் பசுக்கள் தன் கன்றுகட்கு பாலை ஊட்டிட

மிகுதியாய் சொரியும் பாலோ முல்லையில் ஓடையாய் ஓட

ஓடிடும் பாலினை உண்டிட ஓரணியாய் பறவைகள் நிற்க

முல்லைகள் முறுவலித்திடும் முல்லையின் அழகோ அழகு                  352

 

விசய திவிட்டர்கள் மருதநிலம் எய்தல்:

 

நீர்  நிறைந்த  வயலின்  ஒலி  நெஞ்சத்தில்  இசையாய்  எழ

இள அன்னக் குஞ்சுகலெல்லாம் இடம் விட்டு பறந்து  செல்ல

வேர்பலா பழுத்த பழத்தில் சுளையது பொன்னாய் ஒளிர

மலைவாழைக் குலைகளோடு மாங்கனிகள் விளையும் மருதம்     353

 

கதலியது மடலின் உள்ளே கருங்குரங்கு மறைந்து கொள்ள

பெண்குரங்கு துணையைப் பிரிந்து பேதமையில் தனித்து வருந்த

பெரு எருமை முட்டியதாலே வழைப்பூ தேனினை கொட்டிட

கொட்டிய தேனோ மருதத்தில் தாமரை இதழில் தங்கின                       354

 

கரும்புகளை ஆலையில் அறைத்து கன்னலின் சாறை எடுத்து

காய்ச்சிட எழுந்திடும் புகை கருமுகில் போல் தவழும் மருதம்

நெற்பயிரின் ஊடே வளர்ந்த நீலோற்பல பூக்காடுகளும்

மருதத்தின் மாண்பு தன்னை மற்றவுலகும் அறிந்து பொருமும்         355             

நால்வகை  நிலத்தின்  அழகை  நவின்றிட்ட வெண்நிற விசயனும்

போதனபுரத்தை அடைந்தனர்  பொதுமக்கள் வாழ்த்தொளியுடன்

பயாபதி  மன்னன்  அழைத்தான்  பாசத்தில்  மகன்கள் இருவரையும்

கருங்குழல்  தரையில்  பதிய  தந்தையை  வணங்கினர் இருவரும்     356

 

மகன்களை  மார்புடன்  தழுவினான் மகிழ்ச்சியில் உச்சி மோந்தான்

விசயனும்  தந்தைக்கு உரைத்தான் திவிட்டனின்  ஆற்றலைப் போற்றி

சினந்து எழுந்த  சிங்கம் தனை  திருமார்பன் என் தம்பி திவிட்டன்

வாய்பிளந்து கிழித்ததை கூற   மன்னனும் போற்றினான் மகனை     357

 

                               சீயவதை  சருக்கம்  முற்றுபெற்றது.

 

 

                               8. கல்யாணச்  சருக்கம்.

 

திவிட்டன் அரிமாவைக் கொன்ற செய்தியை சடி மன்னன் அறிதல்

 

திருமாலின் நிறமுடை   திவிட்டன்  அரிமாவைப்  பிளந்து அழித்து

வெண்மதி நிறமுடை விசயனோடு அழகிய போதனத்தையடை

விசும்பின் வழியோன் ஒற்றன் திவிட்டனின் திறமையை சொல்ல

சுவலனசடிஇன்பம்கொண்டான் நிமித்திகன் சொல் நிறைந்ததாலே 358

 

கரிய கயல் மீன்கள் இரண்டு கண்களாய் முகத்தில் அமைய

கார் கூந்தல் நிலம் தழுவ கன்னமதில் செவ்வானம் பதிய

சித்திரமாய் விளங்குகின்ற செல்வமகள் சுயம்பிரபைக்கு

திருமணம் செய்து வைக்க சிந்தித்தான் அமைச்சரோடு                       359

 

வருத்தமானம் என்னும் நாட்டின் வண்ண மாளிகையில் வசிக்கும்

பிரீதிவருத்தனன் அரசன் பொன்னொளி மேனியுடையான்

காந்தருவ நகரை காக்கும் கண்ணோட்டம் மிகுந்த பெரியோன்

ஏழிசை தினமும் ஒலிக்கும் இல்லத்தில் வாழும் விருககடி என்பான்   360

    

பொன்னிறைந்த மதில்களையுடைய கந்தமாதனம் நகரையாளும்

தேன் சிந்தும் மார்புமாலை சூடிய திவாகரன் வேந்தனாவான்

சக்கரவாளகிரிக்கு மன்னன் விண்ணுலக இந்திரனாய் அழகன்

மலையோடு மோதி சிதைக்கும் மதவேழம் கொண்ட வச்சிரதாடன்  361

 

இயற்கையின் எழிலினோடு எழுந்து நிற்கும் மாளிகையுடைய

தேவரவணவம்  நகரத்தரசன் இரமியதரன் என்னும் பெயரோன்

மாடத்தின் கொடிகள் தன்னை மேகங்கள் மகிழ்ந்து தழுவும்

விஜயகூட நகரின் வேந்தன் வேகமாதரன் என்னும் வீரன்                    362

 

மெல்லிய யாழ் நரம்பு மீட்டும் சொல்லுடைய மாந்தரிசையின்

கிருதனமா நகரின் காவலன் கருடாங்கதன் என்னும் தீரன்

ஆழியும் மதிளும் சூழ்ந்த நீர்வள நிலங்களைக் கொண்ட

சோபன நகரத்தின் நாயகன் சித்ரதரன் என்னும் மன்னன்               363

 

ஈண்மரையும் அழைத்தான் சடி இரதநூபுரத்தை காக்க செய்தான்

ஒப்பற்ற தன் படைகளையெல்லாம் ஒப்பனை செய்ய ஆணையிட்டான்

களிறுகளை அழகு செய்தான் கருவிகளை அதன் மேல் ஏற்றினான்

பரிகளின் பொருள்களைப் பூட்டி பார்ப்பவரை வியக்கச் செய்தான்                364

 

சுடர் தரும் மணிகள் பதித்த சுந்தரத் தேர்களைக் செய்தான்

கால் ஒட்டி ஆடையை திரைத்து அரைக் கச்சையை அசைய கட்டி

வீரக்கழல் மாலைகளோடு வீரார்களை திரளச் செய்தான்

சுவலனதரன் மகளைத் தொடர துவங்கியது படையணி வகுப்பு                      365

 

அரிபுரம் நகரின் வேந்தனும் சடிமன்னன் மருமகனுமான

வியாக்கிர ரதன் தன் படையோடு மாமனுடன் கலந்து கொண்டான்

அருமை மகன் அருககீர்த்தி அதிர்ந்திடும் பெரும் முரசுகளோடு

நிலமகள் நெளிந்து நடுங்க நெடும் படையுடன் சேர்ந்து கொண்டான்          366

 

அத்தனை சடியின் படைகளும் அணி வகுத்து நின்ற பின்பு

சுவலனசடி மனம் நினைத்தது   சொக்க வைக்கும் வின் ஊர்தி படைக்க

பசும்பொன் ஒளிர்ந்து நிற்க பல வளங்கள் கொண்டதாக

நீலநிற நெடு வானம் தொட்டு நின்றது அந்த வான் ஊர்தி                                    367

 

வலம்புரி முத்துமாலைகளுடன்  வண்டு சூழ் மலர்மாலைகள் தொங்க

வைரமிழைத்த தூண்கள்  நிறுத்தி  வின் ஒளிரும் பொன் கூடம்  அமைத்து

மகரமீன் முகத்தின் வடிவில்  மாசறு பொன் குவியலின் ஒளியியுடன்

ஞாயிறின் வெண் ஒளி மழுங்க  விண்ணுலகம்  ஒளிர நின்றது ஊர்தி           368

 

வாழையோடு கமுகு குலைகள்  வண்ண தோரணங்கள் பல கட்டி

முத்துக்கள் குவியலின் மீது பொன் பூரண கும்பங்கள் வைத்து

பசும் பொன் சங்கிலியில் கோர்த்த பொன்மணிகள் மென்னொலியோடு

அகிற்புகை விண்ணில் சூழ்ந்து அனைத்து திசைகளும்  மறைந்தது              369

 

பொன்குழம்பால்  தரையை மெழுகி  புதுப் புது சித்திரங்கள்வரைந்து

சிற்றிடை மெல்லியளார்கள்  சிறப்புடன் நடனமாடும் கூடமும்

அணங்குகள் உறைங்கி  எழ அரும் பொன் தகடிட்ட அறைகளும்

மொத்தத்தில் சொர்கலோகமே வின்னூர்தியாய் வந்திருந்தது                                  370

 

இரதநூபுர மாநகர் மன்னன்  சுவலனசடி மகளை அழைத்தான்

பஞ்சொத்த பஞ்சணையில் இருந்து பைங்கொடியாள் சுயம்பிரபை

கார்முகில் கூட்டத்தினிடையே  கண் பறிக்கும் கொடி மின்னலாய்

பேடிகள்  காவல்  சூழ்ந்திருக்க   செவ்வடிகள் தரை பதிக்கலானாள்              371

 

கஸ்தூரி  மணம் கமழ்ந்து வீச  அகிற்புகை படர்ந்து சூழ

கன்னிமாடம்  விட்டு வந்தாள்  கன்னியவள் தாயிடம் சென்றாள்

சிற்றிடையும் செவ்விதழுமுடைய திருமகள் ஒத்த சுயம்பிரபை           

செவிலித் தாயுடன் வந்தவள் செவ்விய நற்தாயை தொழுதாள்                         372

 

கோப்பெருந்தேவி மனம் குழைந்து  குலக்கொடி சுயம்பிரபையை

மார்புடன் அணைத்து மகிழ்ந்து  மன்னன் மகளை  உச்சி மோந்தாள்

 வல்லணிகள் அணியப் பெற்றால்  வனிதை மேனி வாடும் என்று

மெல்லணிகள் அணைத்தும் பூட்டி பொன்மகளை ஒப்பனை செய்தாள்        373

 

சோதிட நூல்கள் கற்றறிந்த  சோதிடர்கள் நல்ல நேரம் சொல்ல

சுயம்பிரபை மென்னடி எடுத்து சுந்தர விமானத்தில் பதித்தாள்

பவளவாய்  மங்கையர்கள் சூழ  பாசத்தில் செவிலித்தாய் தொடர

விமானத்தில் ஏறிய நங்கை  விண்ணுலக பெண்ணாய் திகழ்ந்தாள்             374

 

பொன்னோடு பொருள்கள் எல்லாம் பொதிந்தன விமானத்தில் சீராய்

பெட்டகம் நிறைந்த பெருங்கலம்  பறந்தது வானில் அருங்கலமாய்

ஆர்த்தன  முரசுகள் சங்கும்  அதிர்ந்தன கொம்புகள் சிறு பறைகள்

நெருங்கின தேர்களோடு  பரிகள்  சடிமன்னன் யானையில் ஏறினான்     375

 

மேகங்கள் வந்து குவிந்தன  மலைகளின்  உச்சியின் மேலே

 வாட்படை வீரர்கள்  கரங்களில்  வாள்கள் அசைந்து மின்னின

இன்னிசை கருவிகள் முழங்கின எதிரொளியாய் சிகரங்கள் ஒலித்தன

விஞ்சை மன்னன் பெருஞ்சேனை  விண்ணிடை பரவி ஒளிர்ந்தன              376

 

கங்கையின் இருகரை எல்லாம்  கற்பகச் சோலைகள் உண்டு

சிந்துவின்  இருகரை எல்லாம்  பொங்கிய வெண் நுரையுண்டு

சந்தன சோலைகள் நிறைந்து  பெருமலை  அகில்களுமுண்டு

தேன் பால் கலந்த தீம்பாலான சுரமை நோக்கி புறப்பட்டது படை          377                                

சடி முதலியோர் போதன நகரில் உள்ள திருநிலயத்தை எய்துதல் :

 

நீர்வளம் நிறைந்து பெருகி  நெடு வயல்கள் சூழ்ந்த சுரமையில்

திருநிலையம் அகமெனும் பொழிலில் திருமண விஞ்சையர் இறங்கினர்

மலரினில் கொட்டிய மதுவை மாந்திய வண்டுகள்  எல்லாம்

மதுரமாய் கீதம் இசைத்து  மன்னனை மகிழ்ச்சியில் அழைத்தன             378

 

சந்தன மரங்களின் அடியில்  சினந்திடும்  வேழங்களைக் கட்டினர்

குங்குமப் பூக்களின் படுக்கையில் குதிரைகள்  புரண்டு களித்தன

கொடி கொண்ட தேர்களெல்லாம் கொட்டிலின்  வாயிலில் நின்றன

சடிமன்னன்  தங்கும்  மனையோ  இந்திரன் அரண்மனை ஆயின                      379

 

செவ்விய பொன் மாளிகைகளும்  செம்பொன் ஆடல் அரங்குகளும்

அகிற்புகை சூழ் படுக்கைகளும்  அளவிடா பெரும் அம்பலங்களும்

காண்பவர் மனதைக் கவரும்  கண் கட்டும் பொய்கைகளும்

அத்தனையும் கொண்ட பொழிலில் அரசர்கள் மகிழ்ந்து தங்கினர்                  380

 

செவிலித்தாய்  தாதியர்  தொடர செம்பொன் விமானத்தை விட்டு

கன்னியர்கள் காவல் சூழ  காண்பவர் மயங்கும் சுயம்பிரபை

மெல்லடி  எடுத்து  இறங்கி  மென்பாதம்  மலர்களில்  பதிய

கன்னிமாடம்  உள்ளே  சென்றாள்   கந்தர்வலோக  தேவதையாக                     381

 

சடியரசன்  தூதுவன்  மரீசி  சுரமை  மன்னன்  பயாபதியை

சந்தித்து தொழுது  மகிழ்ந்து  தன் மன்னனின்  வரவைச் சொன்னான்

மன்னனும்  மகிழ்ந்து  மலர்ந்து  மந்திரிகளுக்கு  ஆணையிட்டான்

நாடெல்லாம்  இவ்வரவையறிய  முரசறைந்து செப்பும்  என்றான்                  382

 

பொன்மணிகள்  பொழியுமாறு  புங்கவனுக்கு  விழா  எடுத்தான்

பொன் கருவூலம்  திறந்து  பொதுமக்களுக்கு  அள்ளித் தந்தான்

சுரமை நாட்டு  தூதுவரை  அனுப்பி  சுவலனசடியை மகிழச் செய்தான்

அத்தனைக்கும்  காரணமான அருகனின்  அடி தொழுது  நின்றான்                 383

 

சுயம்பிரபைக்கு  நல்லுரை  கூறி  சுரமைக்கு  வரவேற்பளிக்க

சொக்கவைக்கும்  அழகிகளோடும்  சொட்டும்  தேன்  மொழிகளோடும்

பொன்னணிகள்  அனைத்தும்  பூண்ட  பைங்கொடி மகளீர்  தம்மை

பணிமகளீர்கள்  சூழச்  சென்று  பாங்குடன்  வரவேற்கச் செய்தான்                384

 

சுவலன்சடி  தூதுவன்  மரீசிக்கு  சுத்தப் பொன்மணிகள்  தந்தான்

சுந்தர  மதுர மொழிகள்  கூறி  தூதன்  மரீசியை  மகிழச்  செய்தான்

சுவலனசடி  மன்னனைக்  காண  அவனைத்  தன்னுடன் வரப் பணிந்தான்

அவனையும்  உடன்  அழைத்து  அருகனை  வணங்கச்  சென்றான்               385

 

இருமன்னர்  குணங்கள்  ஆய்ந்தால்  இருவருக்கும்  சமமே  ஆகும்

ஆற்றலை  ஆய்ந்து  பார்க்கின்  ஆற்றலும்  சமமாய்  தெரியும்

நற்குணங்கள்  தேர்ந்து நோக்கில்  நல்லதோர்  சமமே  கிட்டும் – என

அமைச்சர்கள்  கூறக் கேட்டு  அரசனும்  ஆழ்ந்தான்  மகிழ்வில்                 386

 

மற்றுயிர்  கொல்லும்  களிறுகளும்  மதநீர்  பொழியும்  களிறுகளும் 

மேல்  வைக்கும்  பொருளைத் தூக்கி  மேகமாய்  சிதைக்கும்  களிறுகளும்

வைர  அங்குசத்தைக்  கொண்டு  வயப்படுத்தும்  களிறுகளும்

வன் சங்கிலிக்கடங்கா  களிறுகளும்  வரிசையில்  நிறுத்துமென்றான்           387

 

செம்பொன்  முத்துக்கள்  கோர்த்து  பசும்பொன்  தகடுகள்  பதித்து

உருண்டிடும்  சக்கரங்களில்  உயர்நிலை கண்ணாடிகள் பொறுத்தி

முத்துமணி  மாலைகளோடு  மணநிறை  தேன் மாலைகள் கட்டி

உச்சியில் கொடிகள்  பறக்க  உடன்  திரளட்டும்  தேர்கள்  என்றான்               388

 

பசும்பொன்  சுடருடன்    படாகம்  பரிகளின்  முகத்தில்  கட்டி

உடலெல்லாம்  மணப்பொடிகள் தூவி  உயர்மணி  மாலைகள் இணைய

புரவிக்கு  மேல்  அணிவிக்கும்  பொருந்திடும்  பொருள்களோடு

பிடரிமுடிகள்  மடிந்து   ஒளிர  புறப்படட்டும்  புரவிகள்  என்றான்                  389

 

ஊழ்வினையால்  கொல்வதென்பது  உறுபகையால்  விளையும் போரால்

போரினில் வீரத்தைப்  போற்றி  பொன்னுயிர்  துறக்கும்  மறவர்கள்

வீரக்கழல்  கால்களில்  அணிந்து  வரிந்து  கட்டிய  கச்சையுடன்

வாள்களைக்  கரங்களில்  ஏந்தி  வரிசையில்  வந்து  நின்றார்கள்            390

 

பஞ்சாடைகளும்  பட்டாடைகளும்  பலவிதமான  பிற  துகில்களும்

நவமணிகள்  பதித்து  செய்த  நல்ல  பல  அணிகலன்களும்

வலம்புரி  சங்குகள்  ஈன்ற  வளமான  முத்துக்  குவியலுடன்

வைரக்  குவியலையும்  வைத்து  விஞ்சையன்  பாடியில் வைத்தான்              392

 

தேன்  கனி  சுவையுடைய  நீரும்  செவ்விளநீர்  குறும்பைகளும்

தேன்மா, பலா,  வாழை  கொண்ட  செவ்விய  பழக் குவியல்களும்

கஸ்தூரி  வாசனையோடு  வெற்றிலை  கன்னல்  சாறு  கற்கண்டுகளும்    

சாதிக்காய்  இன்னோரன்ன  என  சகலமும்  அனுப்பி  வைத்தான்              392

 

முடிமாலையுடன்  மணங்கமழும்  தண்டமாலையும்  பூச்செண்டும்

தொடையணி  பொன்மாலையும்  சல  சலக்கும்  கிண்கிணிகளும்

ஆய்ந்தப்  பன்மணி  மாலையும்  அணங்குகளின் ஒப்பனைப்  பொருளும்  

அழகிய  அரண்மனை  எல்லாம்  அமைந்திடச்  செய்தான்  மன்னன்                   393

 

குங்குமச் செங்குழம்பு கொட்டி  சந்தனக் குவியலை  சேறாக்கி

இன்னும்  மணப் பொடிகளைக் கூட்டி  அகிற்புகை ஊடே ஊட்டி

அழகிய  பல  கலவைச்  சாந்தை  அதனுடன்  சேர்த்து  கலக்கி

திருமணம்  நிகழ்தற்குமுன்  சாரளென  பொன்துகள் தூவச்  செய்தான்  394

 

போதனத்தின்  பொன்முடி  மன்னன்  பயாபதி  பாகனுக்குரைத்தான்

பட்டத்து  யானையை  அலங்கரித்து  படை  முன்னே  நிற்கச் செய்தான்

சித்திரதரனை  அழைத்தான்  திவிட்ட  விசயரை  வரப்  பணித்தான்

அரசுவா  என்ற  களிறின்  மேல்  அரசனும்  ஏறி  அமர்ந்தான்  செல்ல                     395

 

பிறநாட்டு  மன்னர்களோடு  பயாபதி  மன்னன்  புறப்பட

கொட்டியது  இடியென  முரசம்  தட்டின  மத்தள  ஒலிகள்

வேய்குழலின்  இன்னிசை ஒலியும் வெண்சங்கு கொம்புகள் ஒலியும்

எண்திசையும்  அதிர்ந்து ஒலிக்க  இயங்கியது பயாபதி படைகள்                  396

 

சுரமையின்  மன்னன்  பயாபதி  சுவலனசடியை  காண  வருவதை

மரீசி  எனும்  நல்லிய  தூதன்  மன்னனுக்கு  செய்தி  அனுப்பினான்

வெண்மலை  அரசன்  சடியும்  மலை சூழ்  சுரமையின்  மன்னனும்

சோதிடர்கள்  குறித்த  நேரத்தில்  சந்தித்தனர்  ஒருவரை ஒருவர்                      397

 

மன்னர்கள்  தொழுது  கொண்டனர்  மகிழ்ச்சியில்  நனைந்து  நின்றனர்

வெண்சங்கு  நிற விசயனும்  நீல  வண்ண  திவிட்டனும்  கூடி

சுவலனசடியின்  திருவடி  வணங்க  தூக்கிய  வெண்மலை  வேந்தன்

இருவரையும்  மார்புடன்  தழுவி  இன்பத்தில்  மிதந்து  நின்றான்                 398

 

விஞ்சையின்  வேந்தன்  சாடியின்  வீரத்திருமகன்  அருககீர்த்தி

பொன்கழல்  அணிந்த  அரசன்  போதனம்  போற்றிடும்  மன்னன்

 பயாபதியின்  பாதம்  பணிந்திட  பண்புடன்  அவனைத்  அணைத்து

அரசுவா எனும்  களிறின் மீது  அவனுடன்  அமர்ந்திடச்  செய்தான்                399

 

சடியின்  தம்பி  சுவலனரதனும்  மருமகன்  வியாக்கிரரதனும்

சுரமையின்  அரசனைப்  பணிந்திட  சூழ்ந்தது  அன்பு  வெள்ளமங்கு

அரசர்கள்  இருவரும்  அங்கு  அன்பினால்  அளாவிய  பின்னர்

திருநிலையம்  விட்டு  புறப்பட்டு  திருநகரின்  உள்ளே  புகுந்தனர்                400

 

திண்ணிய  தோள்கள்  உடைய  விசய  திவிட்டர்  இருவரும்

சேர்ந்த  மன்னர்கள்  பலருடன்  சித்திரகூடத்தை அடைந்தனர்

செவ்விய மங்கையர்  எல்லாம்  செங்கரத்தால்  சாமரை  வீச

திவிட்ட  விசயர்  மன்னர்களுடன்  சிம்மாசனத்தில்  அமர்ந்தனர்            401

 

வித்யாதரர்  உலகம்  போற்றும்  வெண்மலை  வேழ  வேந்தரே

மண்ணுலக  மனிதனை  மதித்து  மகளை  அளிக்க  இசைந்த ஏறே

கருத்தினில்  மகிழ்ச்சி  எனினும்  காரணம்  ஏதும்  அறியேன்

இந்திரனை  ஒத்த  மன்னரே  இயம்புவீர்  எண்ணத்தை  என்றான்                  402

 

இக்குவாகு  மரபில்  வந்த  இமயம்  ஒத்த  மண்ணின்  மன்னா

எம் தூதுவன்  மரீசி  உமக்கு  சொல்லிய  விபரம்  உண்ண்மையே

மெய்நூல்கள்  ஓதியுணர்ந்தோர்  மேம்பட  சொல்லிய  உம் மகன்

திவிட்டனே  சுயம்பிரபையின்  திருவுக்கு  உரியவன்  என்றான்                  403

 

மன்னர்கள்  இருவரும்  சேர்ந்து  மகிழ்வுடன்  அளாவிடும்  போது

விஞ்சையின் வேந்தன்  சொன்னான்  விசய திவிட்டரை போதனம்  செல்ல

அருககீர்த்தியை  யானையில்  அமர  அவர்களும்  களிறுகள்  மேலேறி

போதனபுரம்  நகரை  நோக்கி  போக்கினார்கள்  தம்  வேழங்களை                       404

 

பொன்  அணிகளின்  சிற்றொலியும்  புகழ்ந்து  பாடும்  பாவையர்  பாவும்

மலர்  மாலையில்  தேங்கிய  தேனுக்கு  மயங்கிய  வண்டுகள்  இசையும்

எழில்மேனி  தென்றலால்   அணைக்க  ஏழாம்  மாடத்தில்  சுயம்பிரபை

விழிகளும்  இமைக்க  மறந்திடும்  வெண்மயிலின்  அழகினை ஒத்தாள்          405

 

அமிர்தப்பிரபை  என்னுமோர்  தாதி  அழகிய  விமானக்  கதவு  திறந்து

முன்னே  செல்பவன்  உன்  அண்ணன்  பின்னவன்  பயாபதி முதல்மகன்

இறுதியில்  செல்லும்  எழிலோன்  இதயங்கவர்  உன்  திவிட்டனாகும்

ஏந்திழை சுயம்பிரபையே  நான்  இயம்பினேன்  இதயங்கொள்ளென்றாள்            406

 

விழிகளால்  அவனை  நோக்கினாள்  விழிகளோ  பின்  அசைய மறுத்தன

உள்ளத்தில்  எழுந்த  உணர்வோ  உயிர் வரை  நுழைந்து  நின்றது

காளையவன்  கட்டழகு  உருவம்  கன்னியவள்  கண்களைக்  கவ்வ

சுயம்பிரபை  நெஞ்சத்து  நெகிழ்ச்சி  நினைவினை  மழுங்கச்  செய்தது           407

 

சுவலனசடி  மன்னன்  தனது  திங்களொத்த  சுயம்பிரபையை

தன்னிடம்  வரப்  பணித்தான்  தாரகையாய்  அருகே  வந்தாள்

தந்தையின்  திருவடி  தொழுதிட  தாயென  பரிவுடன்  தூக்கியவன்

சுரமையின்  மாமன்னன்  அடியை  தொழுதிட  பணித்தான்  அவளை      408

 

விஞ்சையின்  மன்னன்  திருமகள்  வணங்கினாள்  சுரமையின்  வேந்தனை

மன்னனோ  மகிழ்ந்து  வாழ்த்தி  மணமகளை  வியப்புடன்  நோக்கி

 மங்கலம்  அனைத்தும்  பெற்ற  திருமகளோ  இவள்  என்று  எண்ணி

திவிட்டன்  உலகாள்வான்  என்று  திட்டமாய்  உரைத்தான்  மன்னன்                   409

 

திவிட்டனின்  அழகில்  உள்ளம்   தேன்மழையில்  நனைந்திருக்க

சுயம்பிரபை  தன்  நெஞ்சத்துடன்  சுணக்கத்தில்  பிணக்கம் கொண்டாள்

காமநோய்  மனம் கொண்டோர்க்கு  நோய்  போக்கும்  மருந்துகளில்லை

நோய் கொண்ட  மனம்  கண்களுக்கு  நிறையென்னும்  பண்புகளில்லை    410

 

பயாபதி  வேந்தனின்  மனைவி  பட்டத்துராணி  சசிதேவியோ

திவிட்டனை  அடையப்  போகும்  திருமகளை  கண்டுவரப்  பணித்தாள்

மதுகரியும்  வசந்தசேனையுடன்  மங்கலப்  பொருள்கள்  ஏந்தி

மலருக்கு  விரையும்  வண்டாய்  மலைமகளைக்  காணச்  சென்றனர்   411

 

கவரிமான்  முடிக்கற்றையின்  சாமரைகள்  வலப்புறம்  வீச

கட்டிலில்  அமர்ந்திருந்தாள்  கலைமகள் போல்  சுயம்பிரபை

வனிதையர்கள் வலமாய்  வணங்கி  வாழ்த்துக்கள்  கூறி  நிற்க

சேடியர்கள்  முகமன்  கூறிட  செவ்விதழ்  மலர  நகைத்தாள்                         412

 

மாதவசேனை  என்னும்  மங்கை  மெல்லிய ஓர்  பலகையின்  மேலே

சுயம்பிரபை  என்னும்  உருவை  சுந்தர  வண்ணக்  கலவையில்

தேர்ந்த  ஓர்  ஓவியன்  போல  சித்திரமாய்  வரைந்து  கொடுத்து

மெல்லிய  துகில்  கொண்டு  மூடி  மாமியார்  சசிதேவிக்கு  தந்தாள்                    413

 

சுயம்பிரபையின்  சொக்கும்  அழகை  சொல்லோவியமாய்  சொன்னதை

மாதவசேனை  வணங்கிச்  சொல்லி வரைந்த ஓவியப் பலகையை தந்தாள்

வண்ணக்  கலவைகள்  கொண்டு  வரைந்திட்ட  ஓவியந்  தன்னை

சசிதேவியின்  விழிகள்  நோக்கின  திருமகளே  இவள்  தான்  என்றனள்       414

 

பளிங்குப்  பலகையின்  ஓவியத்தை  பாசத்துடன்  தழுவிய  ராணி

யாம்  யாற்றிய  நோம்பின்  பலனை  இன்று  யாம்  பெற்றோம்  என்றாள்

மாதவசேனையை  நோக்கியவள்  மகிழ்வுடன்  அவளிடம்  சொன்னாள்

திவிட்டனுக்கு  காட்டுவாய் இதை  திவிட்டனும்  வியப்பான்  என்றாள்          415              

திவிட்டனின்  அரண்மனை  வாயிலை  சேனையவள்  மெல்லக்  கடந்து

திவிட்டனின்  செவ்வடி  பணிந்து  தங்களுக்கோர்  அருங்கலமென

சுடர்மணிப்  பளிங்கு  பலகையின்  சுடர்விடும்  ஓவியத்தை  நீட்ட

சுயம்பிரபை  என்று  அறியாமல்  சொக்கியது  விழிகள்  இரண்டும்                416

 

விண்ணுலகம்  பெயர்ந்த மகளோ  விஞ்சையரின்  வஞ்சி  இவளோ

மண்ணுலகின்  பேரழகி  தானோ  மாதவசேனையே  பகர்வாய்  என்றான்

விண்ணுலக  வஞ்சியும்  இல்லை  மண்ணுலக  மங்கையுமில்லை

விஞ்சையின்  சடி  பெற்றெடுத்த  வெள்ளிமலை  சுயம்பிரபையிவள்                       417

 

அண்ணலும்  அவளை  நோக்கினான்  அவள்  நோக்கா  ஓவியமானாள்

அனலில்  இட்ட  வெண்ணெயாய்  மனம்  அகத்தினில்  கரைந்து  நின்றான்

பிறை  ஒத்து  ஒளிரும்  நூதலும்  பித்தனாக்கும்   இருவிழிகளும் 

காமனின்  கணைகளாய்  தாக்க  காமவெப்பம்  கொண்டான்  திவிட்டன்  418

 

சுயம்பிரபையின்  மணமதை  நாளை  சுற்றத்துடன்  காண  வேன்டுமென

கதிரவன்  மேற்றிசை  மறைந்து  கண்ணுறங்கச்  சென்றான்  அன்று

மயக்கிடும்  மாலைப்  பொழுதும் மாசிலா  இளந்தென்றலும்  வீச

மணமகள்  சுயம்பிரபையும்  மாலவன்  அருகன்  கோயில்  சென்றாள்    419

 

தாதியர்கள்  பூஜைப்  பொருளுடன்  தத்தை  போல்  சூழ்ந்து  வந்திட

மலர்களைக்  கைகளில்  ஏந்தி  மணமிகு  அகிற்புகை  மணந்திட

அருகனின்  திருவடிகள்  தன்னில்  அர்ச்சித்துப்  பூக்களை  சொரிந்து

எண்குணத்தான்  பெருமையினை  ஏந்திழையாள்  பாடலானாள்                      420

 

தாமரை  மலர்  மேல்  நிற்கும்  தயவுள்ளம்  கொண்டவர்  நீயே

செருக்கற்று  மலர்ந்து  நிற்கும்   செவ்வடி  செம்மல்  நீயே

எண்வினைகள்  சுழலை  வென்ற  ஏகாந்த  பெருமான்  நீய

எண்குணங்களை  உன்னுள்  கொண்ட  எழில்  கொண்ட  நாதன்  நீயே         421                    

அறநெறி  எடுத்துரைத்த  அறவாழி  அந்தணன்  நீயே

அனைத்துயிர்க்கும்  அன்பு  காட்டும்  அருள்  உரு  உடையோன்  நீயே

காதி  கர்ம  வினைகள்  வென்ற  கடவுளாம்  அருகன்  நீயே

கன்னியவள்  சுயம்பிரபை  கசிந்துருகி  வணங்கி  நின்றாள்                              422

 

காமனை  அறவே  வென்று  நிற்கும்  வாமனனை  வாழ்த்தி  வணங்கி

கன்னிமாடம்  சென்றடைந்தாள்  காமவேட்கை  அவள் மனதில்  ஓட

 காமத்தை மறைத்தாளாயினும்  கன்னிமேனி  பசலைப்  பரவிட

கண்டவர்  அறியும்  வண்ணம்  அவள்  காமமும்  வெளியாயிற்று                 423

 

தோழியர்  இணைந்து  சொல்லினர்  இங்கித  மொழிகள்  பலவும்

நீர்  முகில்  தவழும்  பொழில்கள்  நிரைந்தது  தான்  சுரமை  நாடு

மனதிற்கு  இனிய  மன்னவன்  மனை  கொண்டு  வாழும்  இடம்

பாலையாய்  இருந்திட்டாலும்  பாவைக்கு  துன்பமிலையென்றனர்              424

 

காதலில்  கலந்திட்டோர்க்கு  சுற்றமும்  உறவும்  துன்பமாம்

காதற்துணை  பிரியும்  போது  கடும்  நெருப்பாய்  தன்னைச்  சுடுமாம்

ஐங்கணையான்  வீசும்  கணையை  நம்  தலைவி  தாங்காளென்று

நகைச்சுவை  பலவும்  பேசி  நங்கையை  நாணச்  செய்தனர்                           425

 

கூத்தர்கள்  மத்தளங்களில்  கொட்டிடும்  இசை  மறைந்தன

யாழொடு  பாணர்கள்  பாடும்  யாழிசையும்  பாடலும்  தேய்ந்தன

கள்ளுண்டு  பலி  ஊன்  உண்ணும்  பேய்களும்  கண்ணுறங்கின

சோலையின்  பறவைகள் தூங்கின  திவிட்டனின்  மணவிழா  கண்டிட          426

 

புள்ளினங்கள்  மெல்லொலியால்  பூமியின்  வைகறைப்  பொழுதாய்

இளங்காலை  ஞாயிறு  எழுந்தான்  இருளது  மெல்ல  கரைந்தது

பரிதியின்  வெம்மைக்  கதிரால்  பனிமலைக்  குன்றுகள்  உருகிட

குலத்திடை  ஆம்பல்  மலர்கள்  குவிந்தன  மன வருத்தத்தாலே                   427

 

அருகனுக்கு  திருவிழா  செய்ய  யானை  மேல்  முரசுகள்  முழங்கின

மத்தளத்  தோல்  கருவிகளோடு  மணப்புகையும்  நிறைந்தன தெருவில்

பிடியொடு  களிறுகள்  குதிரைகள்  பெரும்  நெருக்கம்  வீதியில்  பெருக

அருகனின்  மங்கல  நீராட்டு  அறநூல்  கூற்றினின்  வழி  நடந்தது                    428

 

துகில்  கொடிகள்  நெருங்கி  பறந்திட  தூய  அகிற்புகை விண் மறைத்திட

பகலவன்  தன்  மறைவினாலே  பகல்  பொழுது   இரவாய்  மாறிட

கூத்துடன்  கூத்தரும்  பாணரும்  கூடியே  இசைக்கும்  ஒலியினை

குவலயத்தில்  உள்ளோர்  எல்லாம்  கூடியே  நுகர்ந்தனர்  மகிழ்வை                 429

 

அணிகலன்  விரும்பினோர்க்கு  அமைந்தன  இடங்கள்  தனியே

மணிபொருள்  விரும்பினோர்க்கு  மாடங்கள்  உள்ளன  அங்கே

மதுவுண்டு  மகிழ்வோர்  கூட்டமும்  மாண்பினில்  அமிர்தம் உண்போரும்

இன்னும்  பிற  கூட்டங்களும்  இணைந்து  கலந்து  கிடந்தன  அங்கு                430

 

பொன்மழை  எண்திசையும்  பொழிய  மழையினில்  திரண்டனர்  மக்கள்

வண்டுகள்  மொய்க்கும்  மாலையை  மார்பினில்  அணிந்த  மகளீர்

இளம்பெண்கள்  யானை  மேல்  ஏறி  எட்டு  திக்கும்  நிற்கும்  காட்சி

மலைகளின் மேல்  நின்று  ஆடும்  மயில்  கூட்டத்தை  ஒத்திருந்தது                        431

 

பன்னீரில்  குளிர்  நன்னீர்  ஆடி  பட்டாடைகள்  மேனியில்  உடுத்தி

பசும்பொன்  அணிகலன்  கொண்டு  திவிட்டனின்  மண மன்றம்  செல்ல

நறுமணச்  சாந்துகள்  மேனி  கொண்டு  நளினமான  ஒப்பனை  பூண்டு

கயல்  நெடிய  கண்கள்  உடைய  சுயம்பிரபையும்  பையவே  வந்தாள்            432

 

மணக்கும்  சந்தன  சாந்தெடுத்து  மணவேள்வி  தரையினை  மெழுகி

பொன்மணிகள்  பலவும்  பொருத்தி  சிறு  முத்துகளை  மணலாய்  நிரப்பி

தருப்பைப்  புல்லின்  முனைகள்  கீழ்வட  திசைகளை  காண  வைத்து

மங்கல  சங்குகள்  முழக்கத்தில்  மறையோன்  அவன்  செய்து  முடித்தான்           433

 

நான்மறை  வேதங்கள்  கற்று   நன்குணர்ந்த  வேள்வி  அரசன் 

முறைப்படி  மந்திரங்கள்  ஓதி  மூட்டினான்  வேள்வித்  தீயை

சுவலனசடி  தன்  சுற்றத்தோடு  சுயம்பிரபையைத்  திவிட்டனுக்கு

நீர்  வார்த்து  கன்னிகாதானம்   நிறை  மகிழ்வில்  தந்தான்  அங்கு                        434

 

செந்தீயுடன்  மண  வேள்விகள்   செம்மையாய்  நடக்கும்  போது

திவிட்டனின்  வலது  புறத்தில்  சித்திரை  நிலாவாய்  அமர்ந்தாள்

வேள்வியின்  சடங்குகள்  முடிய  வேங்கையாம்  அத்திவிட்டன்

சுயம்பிரபை  விரலினைப்  பற்றி  சுற்றினான்  மும்முறை  வேள்வியை 435

 

நங்கையின்  மென் கரம்  பற்றிட  நாணத்தால்  உடலது  சிவந்தாள்

நூதலில்  வியர்வை  முத்துக்கள்  நுண்ணிய  அரும்பாய்  துளிர்த்தன

உற்றோரும்  சுற்றத்தோர்களும்  ஒருசேர  பொன்  குவியல்  தந்து

திவிட்டனோடு  சுயம்பிரபையை  சிறப்புடன்  வாழ  வாழ்த்தினர்                        436

 

மேகங்கள்  தவழ்ந்து  அலையும்  மேனிலை  மாடத்தின்  உச்சியில்

நறுமண  மலர்கள்  கொண்டும்  நல்  அகிற்  புகையினோடும்

மாணிக்கக்  கட்டிலின்  மேலே  மலரனைய  பஞ்சணை  மீது

கரங்களால்  சேர்த்தணைத்து  கன்னியின்  நாணம்  போக்கினான்                     437

 

இளமை  வெள்ளம்  புரளும்  ஆற்றை  இதயக்  காதல்  அணைத்  தடுக்க

காமம்  என்னும்  களிறது  மோத  கன்னியென்னும்  கால்வாய்  தன்னில்

பொங்கிய  இன்ப  வெள்ளம்  ஓட  பொன் அணிகலங்கள்  சிதறிட

திவிட்டனும்  சுயம்பிரபையும்  சேர்ந்து  மூழ்கித்  தத்தளித்தனர்                    438

 

பருவத்தே  அரும்பி  மொட்டாகி  பையவே  மலர்ந்து  முதிர்ந்து

உள்ளத்தே  கனிந்து  பிழிந்த  காமமாம்  கனியின்  சாற்றினை

இருவரும்  நிறையே  உண்டு  இருமனமும்  நிறைவு  அற்று

உடல்  மட்டும்  இரண்டதாகி  உள்ளத்தால்  ஒன்றிணைந்தனர்                                    439

 

திவிட்டன்  நங்கையின்  நலம்  பாராட்டல்  :

 

செங்கழுநீர்  மலரின் மணம்  செந்நிற  மேனியில்  கமழும்

செம்பவள  வாயும்  இதழும்  செவ்விய  ஆம்பல்  தேனை  நிகர்க்கும்

முகிலிடை  தோன்றும்  மின்னல்   முழுமதி  அவள்  இடையை ஒக்கும்

இறைவனால்  படைத்த  இவளோ  எனக்காக  பிறந்தவள்  தானோ                    440

 

இணைந்த  இருகயல்  கண்களும்  தாமரை  வாழ்  திருமகளாகும்

காமன்  மலர்  ஐங்கணைகளும்  கன்னியிவள்  விழியில்  மங்கும்

பாற்கடல்  தந்த  அமுதம்  போல்  பாவையிவள்  இதழ்கள்  இனிக்கும்

பைங்கொடியாள்  இவளை  அடைய  பல  தவங்கள்  நானும்  செய்தேன்            441

 

நாண  கள்ள  நோக்குடைய  இவள்  நல்  நெஞ்சில்  என்னைக்  கொண்டாள்

அவள்  மனதில்  என்  உருவத்தை  அறியாமல்  அமர்த்தி  வைத்தாள்

என்  தோளில்  பொருந்துவாளென  என்  நெஞ்சமே  நீயும்  அறியவில்லை

உள்ளத்து  பேதமை  இதுவென  உள்ளுக்குள்  எண்ணிக்  கொண்டான்           442

 

திவிட்டனும்  சுயம்பிரபையும்  சென்றனர்  பூம்பொழிலுக்குள்ளே

செவ்வளை  மங்கையர்கள்  ஆடிடும்  செவ்விய  நடனம்  கண்டனர்

யாழொடு  குழலிசைக்கப்   பாடும்  பாடலை  மகிழ்ந்து  கேட்டனர்

மாலையின்  பெரும்  மயக்கம்  போக்க  மாளிகை  மாடம்  புகுந்தனர்    443

 

 

                        கல்யாணச்  சருக்கம்  முற்றிற்று.

                                               

 

 

 

9.  அரசியற்  சருக்கம்.

 

தோற்றுவாய்  :

 

திவிட்டனின்  மார்பில்  அமர்ந்து   உயிரினில்  கரைந்து  உறைந்த

தாமரையில்  வீற்று  இருக்கும்  திருமகளை  ஒத்த  சுயம்பிரபை

அவன்  மனதின்  கிழத்தியாகி  அவனோடு  நிகர்  போட்டி  இட

நிலமகளும்  வந்து  சேரும்  நெடும்  வரலாற்றை  இனி அறிவோம்                 444                           

சுரமை  மாநாட்டில்  இருந்து  சுவலனசடி  மன்னனைக்  காண

விண்வழியே  பயணம்  செய்து  வித்தியாதர  ஒற்றன்  வந்தான்

வடசேடி  விஞ்சையின்  வேந்தன்  அச்சுவகண்டனுடன்  கூடி

அரசர்கள்  பலரும்  சேர்ந்து  நம்மீது  படையெடுப்பார்  என்றான்                  445

 

அச்சுவகண்டன்  நம்  மேல்  அரும்  பகை  கொள்வான்  என்று

முன்னமே  அறிந்தது  தான்  முடித்திடு  அச்செய்தியை  என்றான்

அடலேறு  திவிட்டன்  இங்கு  ஆண் சிங்கத்தை  கொன்ற  செய்தி

விஞ்சையர்  உலகம்  தன்னில்  நிகழ்ந்ததை  சொல்வாய்  என்றான்                  446

 

திண்ணிய  தன்  கரங்களாலே  திவிட்டன்  அரிமா  வாய்  பிளக்க

வித்யாதர  ஒற்றன்  ஒருவன்  விஞ்சைக்கு  சென்று  சொன்னான்

அரிமஞ்சு  அமைச்சன்  சிலநாள்  அச்செய்தியை  மறைத்த  பின்பு

மாயன்  அரிகேதுவை  அழைத்து  மன்னனுக்கு சொல்லச்  சொன்னான்           447

 

அரசன்  அச்சுவகண்டன்  தன்  அவையில்  கொலு  வீற்றிருக்க

அரிகேது   அவைக்கு  வந்தான்  அரிமா  வாய்  பிளந்ததைச்  சொன்னான்

வடசேடியின்   மன்னன்  மனதில்  வாளாக  அச்செய்தி  பாய்ந்து

வட்டவடிவ   கண்கள்  இரண்டும்  வனத்தீயாய்  சினந்து  சிவந்தன                  448

 

விஞ்சையர்  அஞ்சிடும்  மனதால்  மானிடர்  வலிமையாய்  தோன்றும்

எமையொத்த மன்னர்களுக்கு  அவ்வலிமை  இலையளவு  ஆகும்  என

கடகமணிந்த  கரங்களாலே  கடுஞ்சினத்தால்  தூணை  அறைய

பொடித்தது  அறைந்த  அத்தூணும்  பயந்தனர்  அவையில்  இருந்தோர்  449

 

அரிமாவை  அழித்த  நிகழ்வை  அண்மையில்  கண்ட  அரிகேது

மன்னனின்  மடமையை  எண்ணி  மனதுக்குள் நகைக்கலானான்

செய்தியை  மேலும்  சொன்னால்  சினங்  கொள்வான்  மன்னன்  என்று

முகமன்கள்  பலவும்  சொல்லி  முகம் தாழ  கைகூப்பி    நின்றான்               450                               

மற்றொரு  ஒற்றன  வந்தான்  சுயம்பிரபை  மணச்  செய்தி  கூற

சினத்தீயால்  உள்ளம்  கொதிக்க  இருகரங்கள்  செவியை  பொத்த

மேனி  எல்லாம்  வியர்வைத்  துளிர  வெறிச்  சிரிப்பு  சினத்தால்  அதிர

முரசறைந்து  முழங்கச்  செய்து  முழுப்  படையும்  திரட்டச்  சொன்னான்           451

 

அடங்கிய  அரசர்கள்  எல்லாம்  அச்சுவகண்டன்  முன்னே  வந்து

அவன்  சினத்தின்  காரணம்  அறியா  அச்சத்தில்  நடுங்கி  நின்றனர்

விஞ்சையரும்  அரக்கர்களும்  இவன்  அடியை  முன்பே  பணிந்தனர்

தேவர்களும்  இவனுக்கஞ்சுவர்  இவன்  வெகுளக்காரணம் எண்ணினர் 452

 

தென் சேடியின்  மன்னன்  சடியும்  தன்  மகளை மானிடனுக்கு  தந்த

செய்தியை  ஒற்றன்  சொல்ல  சினங்கொண்டான்  என அவையோர் கூற

திவிட்டனைக்  கொன்று  அவன்  சிரசை  திருவடியில் வைப்போமென சிலர்

சுயம்பிரபையை சிறை பிடித்து சுவகண்டனடி வைப்போமென்றனர் சிலர்453

 

சினமெனும்  தீயில்  பிறந்ததும்  செருக்கென்னும்  நன்னீரானதும்

மானமாம்  கூர்மை  நிலைத்ததும்  மனமென்னும்  உணவையுண்டதும்

பகைவரை  அறவே  அழிக்கும்  இகல்  எனும்  ஒளியுடைய  வாள்

தன்னிடம்  உள்ளது  என்றும்  கனகசித்திர  மறவன்  சொன்னான்                       454

 

வாட்படையால்  ஆற்றும்  போரோ  மாயத்தால்  நிகழ்த்தும்  போரோ

ஆற்றாலால்  நிகழ்த்தும்  போரோ  அதைப்பற்றி  பேச்சை  விட்டு

திவிட்டனுடன்  சுயம்பிரபையை  உயிருடன்  பற்றிக்  கொணர்ந்து

உன்  திருவடியில்  வைப்பேன்  உம்  சினத்தினை  விடுக  என்றான்                  455

 

மகன்  கனகசித்திரனின்  மொழி  மனதினை  மிகக்  குளிரச் செய்ய

தம்பி  வச்ரகண்டன்  என்பான்  தனயன்  சினம்  தணிக்கச் சொன்னான்

மகரமீன்  வாழும்  கடல்லன்றி   மரக்கலங்கள்  குளத்தில்  செல்லா

தன்  நிகர்  அற்றோர்  அன்றி  தாழ்ந்தோரின்  போருக்கு  ஒப்பாம்                    456

 

தம்பியும்  தன்  மக்களும்  கூற  தன் செருக்கால்  சினம்  தணிந்து

மந்திரசாலையுள்  சென்றான்  மந்திரிகள்  அவன்  பின்  தொடர

அறிவோடு  ஆற்றல்  சொல்திறம்  அனைத்துடைய  அரிமஞ்சு அமைச்சன்

அரசனின்  சீற்றம்  தணிந்தது  அடுத்ததை  பேசுவோம்  என்றான்                  457

 

மேகக்கூடம்  நகரின்  மன்னன்  தூமகேது  மன்னனைப்  போற்றினான்

அனலபுரம்  அங்காரவேகன்  போர் தொடுக்க  பொங்கி  பேசினான்

வாய்  சொல்லில்  பகைவரை  வெல்லல்  வாய்த்திடும்  ஆற்றல்  என்றால்

பேசலாம்  எதிரி  வலியறியாது என  அரிசேன  அமைச்சன்  சொன்னான்           458

 

பகைவர்கள்  பகை  வெல்வதற்கு  போர்படை  நூலில்  நீதியுமுண்டு

ஆய்ந்து  கூறிய  மொழிகள்  எல்லாம்  அரசனுக்கு  மகிழ்வைத்  தந்தது

மானிடருடன்  செய்யும்  போரா  தேவர்களுடன்  செய்யும்  போரா

இருமையும்  கலந்த  போரா என  கருடத்துவன்  கேட்டான்  சபையில்                 459

 

போர்  செய்யும்  படைகலங்கள்  போர்நூலில்  மூன்றது  ஆகும்

மானிடப்  படைகலன்  ஒன்று  மற்றது  தேவப்படைகலனாகும்

இருமையும்  கலந்த  படைகலனாக  இருப்பது  மூன்றாம்  வகையாகும்

மானிடப்  படைகலங்களோ  நாற்கூற்று  என்றான்  சிறிசேனன்             460

 

எய்வன  எறிவன  என்றும்  வெட்டுவன  குத்துவன  என்றும்

நான்கினைக்  கொண்டதாகும்  மானிடப்  படையின்  இயல்பு

மானிடருடன்  செய்யும் போரில்  தெய்வக்  கலப்பு  போரதுவானால்

விஞ்சையர்க்கு  பழியுண்டாகும்  என  விவரித்து  சொன்னான் சிறிசேனன்            461

 

விச்சாதரர்  நம்மோடு  பொருதினால்  தெய்வப் போர்  செய்து வெல்வோம்

வஞ்சமற்ற  மானிடப்  போரில்  மானிடப்போர்  செய்து  அழிப்போம் – என

சிறிசேனன்  விளக்கிச்  சொல்ல  அச்சுவகண்டன்  நன்றென்று  கூறி

அவ்வாறே  செய்யச்  சொல்லி  அவைக்  கலைத்தான்  அச்சுவகண்டன்     462

 

ஒற்றன்  கூறிய  செய்தியைக்  கேட்டு  விஞ்சையின்  மன்னன்  சுவலனசடி

பயாபதி  விசய  திவிட்டர்களையும்  பண்புடை  மகன்  அருககீர்த்தியையும்

தன்பால்  உடனே  வரவழைத்து  தன்  ஒற்றன்  கொணர்ந்த  செய்தியை

அனைவரும்  அறிந்திடச்  செய்ய  ஆய்வினில்  அமர்ந்தனர்  அனைவரும்          463

 

அவையினில்  இருந்தோர்  எல்லாம்  அச்சுவனுடன்  போர் எதிர்கொள்ள

தத்தம்  நெஞ்சினில்  எழுந்த  திண்ணிய போர்  வலிமைகள்  பற்றி

எழுச்சியுடன் போரிட  எண்ணி  எடுத்துரைத்து  வீரம்  பேசிட

விஞ்சை  இளவல்  அருககீர்த்தி  வீரத்தை  அன்று  காட்டுவேனென்றான்      464

 

வெண்சங்கின்  நிறம்  உடைய  விசயன்  முன்  வந்து  வணங்கி  நின்று

பகைவரின்  செங்குருதி  தன்னில்  செந்நெல்லை  விளைப்பேனென்றான்

திவிட்டானோ  தன்  மாமனை  வணங்கி  வேற்படை  விஞ்சையின்  வேந்தே

விளைவுகள் இனி அனைத்துக்கும் விரும்பியே பொறுப்பேற்பேனென்றான்465

 

திவிட்டனின்  கூற்றைக் கேட்ட  சுவலனசடி  மன்னன்  மகிழ்ந்து

வித்தையும்  மந்திரங்களையும்  வேதம்  போல்  உரைப்பேனென்றான்

அத்தனை  வித்தைகளையும்  அவன்  மனதில்  ஓதி  உணர்ந்து

சிந்தையில்  பதியச்  செய்து  சிரம்  தாழ்த்தி  வணங்கி  நின்றான்                 466

 

மந்திரங்கள்  மனதில்  பதிய  மந்திரத்திற்குரிய  தெய்வங்கள்

திவிட்டனின்  முன்னே  தோன்றி  தெரிவியுங்கள் கட்டளையென

தெய்வங்களுக்கு  சிறப்பு  செய்து  தேவையில்  அழைப்பேனென்றான்

விஞ்சையின்  தூதுவர்  இருவர்  வந்து  நின்றனர்  திவிட்டன்  முன்னே                      467

 

தூதர்கள்  இருவரும்  கூறினர்  அசுவகண்டன்  தூதுவர்கள்  என்று

வடசேடி  மன்னன்  சொல்லிய  விருப்பத்தை  சொல்வேனென்றனர்

எங்களின்  மன்னன்  கேட்டார்  சுயம்பிரபையை  காணிக்கையாக

காணிக்கை  இல்லையென்றால்  திவிட்டனின்  உயிரைக்  கேட்டார்                   468

 

செருக்குடன்  தூதுவர்கள்  கூறிய  சுயம்பிரபையின்  பெயரைக் கேட்டு

திவிட்டனின்  சினத்தீப்  பற்றி  செந்நெருப்பைக்  கக்கின  கண்கள்

வெம்புண்ணில்  பாய்ந்த  வேல்போல்   வியர்வை  மேனியில் முத்தாய்  உதிர

தெய்வத்தன்மையுடைய நம்பி  மனிதத்தன்மையுடன்    கூறினான்              469       

தொன்மையில்  பழக்கம்  உண்டு  தூதுவரை  நலியாதிருத்தல்

அறிவிலியே  ஆனாலும்  அரசர்  அவர்  பிழைப்  பொறுத்தல்  அறமே

திவிட்டனின்  சொல்லைக்  கேட்டு  திரண்டிருந்த  மன்னர்களெல்லாம்

அச்சுவகண்டனை எள்ளி நகைத்து ஆண்மை  வாய்ச்சொலோனென்றனர்470

 

திவிட்ட  நம்பியை  நாடி  இங்கு  வந்து  திருவடிகளைப்  பணிந்து தொழுதால்

கிட்டிடும்  வடசேடி  அவனுக்கு  கிடைத்திடும்  ராஜசுகம்  அங்கு

அவ்வாறு  செய்ய  மறுத்தால்  அவனது  இன்னுயிர்  பிரியும்

இரண்டினில்  எது  வேண்டுமென  கூறி இங்கு  மீண்டும்  வருவீர்  என்றான்  471

 

மன்னனின்  உரையினைக்  கேட்டு  மதியிழந்த  தூதுவர்கள்  நிற்க

தெய்வமாம்  அசரீரியின்  குரல்  திவிட்டனே  நிலைப்பான்  என்றது

தேவதுந்துபிகள்  ஓங்கி  முழங்கின  செவ்விய  வரிசங்குகள்  ஆர்த்தன

சுந்தரிகள்  இடவிழிகள்  துடித்தன  சுரமைநாடே  சுடராய்  ஒளிர்ந்தது   472

 

அச்சுவகண்டன்  வடசேடியில்  ஆளும்  குடையை  வண்டுகள்  துளைத்தன

தேர்குடையில்  காக்கைகள்  கத்தின  திக்கெட்டும்  தீ பற்றி  எரிந்தன

குறுமுகில்கள்   குருதி  பொழிந்தன  குறைத்தலை  பிணங்கள்  கூத்தாடின

ஆண் பகைமை பெண்னொடு பொருந்த செவியணி மண்ணில் சிதறியது        473

 

வேற்படை  வேல்கள்  எல்லாம்  கூர்மையும்  ஒளியும்  மழுங்கின

வெற்றியின்  வளைந்த  வில்கள்  விண்  அதிர  தாமே  முறிந்தன

ஆடவர்  இடவிழிகள்  துடித்தன  மங்கையர்  வலது  கண்கள்  துடித்தன

அச்சுவகண்டன்  கேடினை  உரைக்க  அத்தனை  உற்பதமும்  நிகழ்ந்தன   474

 

மண்ணகம்  சென்ற  தூதர்கள்  விஞ்சைக்கு  திரும்பி  வந்தனர்

சுரமையின்  மன்னன்  கூறிய  சொற்களை  முழுதும்  கூறினர்

அடங்கிடா  சினத்தைக்  கொண்டு  அச்சுவகண்டன்  சீறினான்

அனைவரையும்  சிறைபிடித்து  அழைத்துவர  ஆணையிட்டான்               475

 

முகில் மோதி  முழங்கும்  ஒலியில்  முரசுகள்  அதிர்ந்து  ஆர்த்தன

வெண்சங்குகள்  ஒலியினோடு  போர்  பறைகள்  எங்கும்  அலறின

நால்வகைப்  படைகளை  வீரர்கள்  நல்லதோர்  ஒப்பனை  செய்தனர்

விஞ்சையின்  பெரும்  படைகள்  மண்ணுலகில்  வந்து  இறங்கின                476

 

பயாபதியின்  சுரைமை  நோக்கி  வடசேடி  படைகள்  நகர்ந்தன

காலாட்படை  முன்  அணி  வகுக்க  தொடர்ந்தன  மூவகைப்  படைகள்

ஆழியின்  அலைகளின்  எழுச்சியாய்  அத்தனைப்  படைகளும்  செல்ல

நெலிந்தது  நிலமகள்  முதுகு  இருண்டன  எட்டு  திசைகளும்                         477

 

போதனமா  நகரின்  உள்ளே  புகுந்தன  பகைவர்  படைகள்

பயாபதி  வேந்தன்  படைகள்  பெருமலையாய்  எதிர்த்து  நின்றன

முகிலோடு  முகில்  மோதலும்  கடலோடு  கடல்  கலத்தலுமாய்

எதிர்த்தன  இருவர்  படைகளும்  இருண்டது  மண்ணுலகு  அங்கு                        478

 

தேர்படைகள்  இரண்டும்  மோத  கொடியுடை  தேர்கள்  முறிந்தன

குன்றொத்த  களிறுப்  படைகள்  குத்தி  முட்டி  குன்றென  சாய்ந்தன

வாட்கொண்ட  காலாட்படைகளோ  வதைத்தன  ஒருவரையொருவர்

வளம்  கொண்ட  நதியினைப் போல  வெள்ளமாய்  புரண்டது  குருதி                479

 

வாயுவென  பறக்கும்  பரிகள்  வன்மையான  கால்களைக்  கொண்டு

வாகாக  எம்பிப்  பாய்ந்து தைக்க  வேந்தர்கள்  அணிகலன்கள் சிதற

வில்  கொண்டு  தாக்கிய  வீரர்கள்  விற்களின்  நாண்கள்  அறுபட

விண்ணவரும்  வியந்து  பார்த்தனர்  வெஞ்சினப்  போரின்  தன்மையை 480

 

தென்சேடி  விஞ்சையின்  மைந்தன்  கீழ்திசைப்  பிறப்போன்  பேரான்

அருகக்கீர்த்தியின்  தோள்  வலிமை  அம்புகளை  கார்மழையாய்  பொழிய

பகைவர்கள்  சிரங்கள்  எல்லாம்  பனங்காய்களாய்  மண்ணில்  உருள

அன்னவன்  சென்ற  இடமெல்லாம்  ஆறென  குருதி  வெள்ளம்  ஆனது   481

 

அருகக்கீர்த்தியின்  அம்பு  மழையால்  ஆதவன்  கண்கள்  அச்சத்தில்  மூட

வெள்ளிய பகலினை இருளது விலக்க அஞ்சிய பகைவர்கள் பஞ்சென பறக்க

மணிமுடிகள்  குருதியில்  மிதக்க  மன்னவர்  உடல்கள்  மண்  உரமாக

அருகக்கீர்த்தியின் அரும் திறத்தால் அச்சுவகண்டன் படை சிதறியதங்கு           482

 

கடுங்காற்றின்  வீச்சின்  முன்னால்  கடல்  உடைந்து  ஓடுவது  போல்

நம்  படை  புறமுதுகிட்டது  என  சுவகண்டனுக்கு  தூதுவர்  சொல்ல

இருதோள்  கொண்டு  ஓர்வில்லாலே  தன்  படை  தோற்றதை அறிந்து

நம்  மன்னர்கள்  ஆற்றல்  திறன்  நன்று  நன்று  எனச்  சினந்தான்              483

 

மூத்த  அவன்  தம்பி  நீலரதனும்  உடன்  பிறந்த  நீலகண்டனும்

ஒளியுடை  பற்கள்  கொண்ட  வயிரகண்டன்  என்றோர்  தம்பியும்

நான்காம்  தம்பி  சுககண்டனும்  நஞ்சுடை  நாகமாய்  சினந்து  சீறி

பகைவரைக்  கொல்வோமென்றனர் பாசத்தில்  மகிழ்ந்தான்  அச்சுவன்   484

 

ஒரு  நஞ்சை  மற்றோர்  நஞ்சு  சுட்டெறிக்கச்  செல்வது  போல

வடசேடி  படைகள்  வெகுண்டு  தென்சேடி  படைகளைத்  தாக்க

திவிட்டனின்  படைகளும்  சேர்ந்து  தீரமாய்  மோதித்  திரள

கடலொடு  கடல்  கலந்தாற்  போல்  கலந்தன  இரு  படைகளுமங்கு                  485

 

அச்சுவகண்டனின்  நண்பன்  அரிசேனன்  போரிட  வந்தான்

வியாக்கிரரதன்  வாளுடன்  வதைத்திட்டான்  அரிசேனனை

அரிசேனன்  மாண்டதைக்  கண்டு  குணசேனன்  குன்றென  வந்தான்

இந்திரகாமன்  குணசேனனை  இந்திரலோகம்  அனுப்பி  வைத்தான்              486

 

வரசேனன்  என்ற  வில்லாளன்  வதைக்கப்பட்டான்  காமுகனால்

அரிகேதனன்  வந்து  போரிட  சார்த்துலன்  சாய்த்திட்டான்  அவனை

தூமகேதனன்  மதவேழம்  ஏறி  சுவலனரதனை  எதிர்க்க  வந்து

விண்ணுலகம்  எய்தது  கண்டு  விசனத்தில்  திகைத்தனர்  மன்னர்கள்  487

 

அழல்வேகன்  என்ற  இளைஞன்  அரிமா  போல்  எதிர்த்து  வந்து

தேவசேனன்  தன்  வாளால்  வெட்ட  சிரம்  சிதறி  மண்ணில்  வீழ்ந்தது

சுவர்ணகேது  போரிட  வந்தான்  சூழ்ச்சிகள் பல  செய்து  பார்த்தான்

சடி மன்னன் அனைத்தையும் அழித்து சாய்த்திட்டான் சுவர்ணகேதுவை  488

 

சிதறிடும்  படையை  எல்லாம்  சிறிசேனன்  ஒன்றாய்  சேர்த்து

புரவிமேல்  அமர்ந்து  தாக்க  சிறீபாலன்  எதிர்த்து  நின்றான்

சிறீபாலன்  போர்  திறத்தால்  சிதறின  படைகள்  எல்லாம்

சிரிசேனன்  தலையை  வெட்டிட  சிரம்  விண்மீனாய்  விழுந்தது                 489

 

புறமிடும்  படையைத்  தடுத்து  கனகசித்திரன்  திரட்டி  வந்து

கடல்  போன்ற  பகைவர்கள்  படையில்  கடும்புயலாய்  தோற்றமளித்தான்

குன்றொத்த  யானைகளையும்  குமுறிப்  பாயும்  குதிரைகளையும்

முகிலிடை  மறையும்  திங்களாய்  முன்னேறியே தன் வழிசென்றான்       490

 

போர்கள  வயலின்  இடத்தில்  விஞ்சையர்கள்  குருதி  பெருகிட

சினம்  நெஞ்சில்  சீறிக்  கொண்டு கலப்பைப்   படையால்  உழுது

வெண்நிறம்  கொண்ட  விசயன்  புகழ்  என்னும்  விதையை  விதைக்க

அச்சுவன்  தம்பி  நால்வரும்  அவ்வீரன்  யாரென  கேட்டனர்                             491

 

பெருஞ்சினம்  கொண்ட  நால்வரும்  விசயனை  வளைத்துக்  கொள்ள

விசயன்  தோற்றொழிந்தான்  என்று  பொய்குரல்  ஒலியொன்றெழுப்ப

ஆண் சிங்கம்  தெய்வத்தன்மையால்  அவ்விடம்  சீறி  வந்ததும்

அதன்  மேல்  அரசச்  சிங்கம்  அமர்ந்தது  கரத்தில்  கலப்பையுடனே                492

 

நால்வருடன்  கனகசித்திரன்  ஐந்தாவதாய்  வந்து  சேர்ந்தான்

மணிகண்டன்  மயங்கி  நின்றான்  மாண்டனர்  நால்வரும்  விசயனால்

அனல் கொண்ட நெஞ்சால் மணிகண்டன் அங்கோர் பெரும் மலையை தூக்க

அருகக்கீர்த்தியின்  அம்பு  ஒன்று  அழித்தது மணிகண்டனை  அங்கு              493

 

அனைவரும்  மாண்ட  செய்தியை  அச்சுவகண்டன்  கேட்டான்

மாயவித்தைகளையெல்லாம்  மனமதில்  தியானம்  செய்தான்

சண்டவேகை  என்னும்  பேய்  ஒன்று  தியானத்தால்  வந்து  பணிய

அனைவரையும் கொன்றொழிக்க ஆணையிட்டான்  கொடுங்கோலன்        494

 

சண்டவேகை  தனைச்  சார்ந்த  சகல  பேய்  கணங்களை  அழைத்து

மலை  உருளும்  சூறைக்  காற்றால்  மலைகளை  உருட்டித்தள்ளி 

வானுயர  செந்தீயை  எழுப்ப  மரங்களும்  மலைகளும்  கருகி  எரிய

சண்டவேகையின்  மாயப்போரால்  திவிட்டனின்  படைகள்  சிதறின 495

 

சிதறிடும்  படைகளைப்  பார்த்து  திருமாலை  ஒத்த  திவிட்டன் 

அருககீர்த்தியைக்  கேட்டான் அங்கு  நடப்பது  என்னவென்று

சண்டவேகையை  அச்சுவகண்டன்  மாயப்போஎர்  செய்ய  அனுப்ப

அத்தெய்வம்  அழிக்கிறது  படையை  அதிலிருந்து  தப்புதல்  கடினம்               496

 

வலக்கையில்  வலம்புரிச்  சங்கும்  இடக்கையில்  நெடிய  ஓர்  வில்லும்

நீலவண்ணத்  திருமேனியின்  ஒளி  எண்திசையும்  பரந்து  எழும்ப

திண்ணிய  தோளோன்  திவிட்டன்  தோற்றத்தை  கண்ட  சண்டவேகை

அச்சமது  அதன்  நெஞ்சில்  தோன்ற  அப்போர்களம்  விட்டு  மறைந்தது 497

 

சண்டவேகை  போர்களம்   அகல    சினங்கொண்ட  அசுவகண்டன்

மதயானை  மீது  அமர்ந்து  வர  திவிட்டனின்  தேர்  படை  அஞ்சியோட

விண்ணில்  இருந்த  பறவை  வேந்தன்  கருடன்  திவிட்டனை  அடைய

கருடனை  வலம்  சுற்றி  வணங்கி  கையில்  வில்  கொண்டு  நின்றான்        498

 

அசுவகண்டன்  அம்புகள்  பொழிய  அத்தனையும்  கருடன்  அழிக்க

அரவக்கணை   சுவகண்டன்  விட  அழித்தான்  கருடக்கணையால்  அதை

தீக்கணை  வடசேடியான்  விட   வருணக்  கணையால்  அழித்தான்  அதனை

ஆழித்தீப் படையை அனுப்பினான் அது வலம்  சுற்றி வந்து   திவிட்டனை 499

 

அச்சுவகண்டனின்  ஆழிப்படை  திவிட்டனை  வணங்கி  நிற்க

அக்கணையை  எடுத்து  திவிட்டன்  அச்சுவகண்டன்  மீது  வீசிட

அச்சுவகண்டன்  மார்பது  பிளக்க  அமர்ந்திருந்த  களிறுடன்  வீழ

அச்சுவகண்டனின்  ஆழியே  அவனையே  அழித்தது  போரினில்               500

 

அச்சுவகண்டன்  இறந்தான்  அவன்  மணந்த  தேவியரெல்லாம்

அச்சுவகண்டனைச்  சூழ்ந்து  அடங்கிடா  துயரம்  கொண்டனர்

அச்சுவகண்டனோடு  அவன்  தம்பிகள்  உடல்களையும்  எடுத்து

மங்கலப்  பொருள்கள்  நீக்கி  ஐம்பொறி  வாயில்  அடைந்தனர்                       501

 

வரிசங்கம்  முரசுகளோடு  வான்  எட்ட  ஒலியினை  எழுப்பி

திவிட்டனின்  வெற்றியைப்  போற்றி  அசரீரி  முழக்கம்  ஒலித்தது

விஞ்சையர்  வணங்கினர்  திவிட்டனை  தென்சேடி  திளைத்தது  மகிழ்ச்சியில்

கருட  ஊர்தியை  விட்டிறங்கி  கால் பதித்தான் பாசறையில்  திவிட்டன்    502               

விசயனும்  திவிட்டனும்  சேர்ந்து  வணங்கினர்  தந்தை  பயாபதியை

மைந்தர்கள்  ஆற்றல் கண்டு  மகிழ்ச்சியில்  முடி சூட்ட  விழைந்தான்

கொட்டியது  மங்கல  முரசுகள்  கொடிவரி  சங்குகள்  முழங்கின

விசய  திவிட்டன்  முடி  விழாவுக்கு  சுரமை  நாடே  சுந்தரமானது                      503

 

வாசுதேவன்  என  திவிட்டனைப்  பலதேவன்  என  விசயனையும் புகழ

ஆழியும், தடியும், வாளும், சங்கும், வில்லும் குடையுடன் கூடிய மேனியை

சங்க, பதும இரு நிதிகள் சொரிய  நல்லிசைப் புலவர்கள்  வாழ்த்திட

மன்னரும்  மக்களும்  வணங்கும்  தெய்வத்தின்  அம்சமாய்  திகழ்ந்தனர் 504

 

வெண்மூங்கிலாய்  பருத்த  தோளும்  மென்மணசந்தனம்  பூசிய மேனியும்

சித்திரை  நிலவின்  முகமும்  தேன்  சிந்தும்  செவ்விய  இதழும்

வலம்புரி முத்துமாலைகள் கழுத்தில்  நறுமண  மாலைகளோடு  தொங்க

விஞ்சையின்  அழகி  சுயம்பிரபை  விமானத்தில்  வீற்றிருந்தாள்                     505

 

பளிங்கில்  நீலமணிகள்  பதித்து  செவ்வரக்கால்  வரிகள்  வரைந்து

செவ்விய  கண்  புருவம்  திருத்தி  செவ்விழியில்  கருமை  தீட்டி

செவ்விளநீர்  தனத்தின்  முனையில்  சந்தனக்  குழம்பு  எழுதி

பொன்முத்து  மாலைகளுடன்  பூவைக்கு  ஒப்பனை  செய்தனர்               506

 

களிறு  மேல்  பூட்டிய  முரசை  காவலர்கள் அதிர  அறைந்து

காலையில்  சுயம்பிரபைக்கு  கோப்பெருந்தேவி  பட்டத்தை

சுரமை  நாட்டின்  மாமன்னன்  வழங்குவார்  என்ற  செய்தியை

மாநகர்  முழுதும்  எதிரொளிக்க  மக்களுக்கு  செய்தியாய்  சொன்னான்           507

 

விஞ்சையர்களும்  தேவர்களும்  மண்ணுலக  மக்களும்  சேர்ந்து

ஒளியுடைய  மணிமாலைகளையும்  ஒளிர்கின்ற  பொன்னணிகளையும்

தன்னகத்தே  ஒப்பனை  கொண்டு  திருமகளாம்  சுயம்பிரபைக்கு

அரசியலில்  பாதியுரிமையாம் கோப்பெருந்தேவி  பட்டத்தை ரசித்தனர்       508

 

விச்சாதரர்  நாட்டையெல்லாம்  விஞ்சை  மன்னன்  சடிக்கு  வழங்கினான்

இரதநூபுரம்  நோக்கிச்  செல்ல  நாடே  திரள  வழியனுப்பினான்

உட்பகையும்  நாட்டில்  இல்லை  உறுபகையும்  எண்திக்கில்  இல்லை

திவிட்டனும்  விசயனும்  மகிழ்ந்து  செம்மாப் புகழில்  வாழ்ந்தனர்             509

 

அருகனின்  கோயில்கள்  தோரும்  அரும்பெரும்  விழா  எடுக்க

அத்தனை  வசதிகளும்  தந்தான்  அருகனின்  திருவடி  சேவைகளுக்கு

பொருள்களை  அள்ளித்  தந்து  பொதுமக்களுக்கு  விருந்தளிக்க

போதனமா  நகரம்  முழுவதும்  பொங்கிடும்  மகிழ்வில்  ஆழ்ந்தது                  510

 

 

                                    அரசியற்  சருக்கம்  முற்றிற்று.

 

                          

 

10. சுயம்வரச்  சருக்கம்.

 

தோற்றுவாய்  :

 

தேவர்களும்  மனிதர்களும்  திறமை  மிக்க  வித்யாதரர்களும்

தேர்ந்த  செல்வங்களுடனும்  செருக்குற்ற  பெருமைகளுடனும்

செஞ்சின  அரிமா  வாய்  பிளந்த  திவிட்டனின்  அவையிலிருக்க

திவ்விய  பெருஞ்செல்வம்  ஒன்று  திவிட்டனுக்கு  வந்ததையுரைப்பேன்      511

 

பால்நிற  ஒளியைத்  திங்கள்  பாரெல்லாம்  பரப்பியதைப்  போல்

விசும்பிடை  நிலவொளி  பரப்பும்  வெண்கொற்றக்  குடையினாலே

விண்ணோரையும்  ஓம்பச்  செய்து  விஞ்சையர்க்கு  அரசியல்  தந்து

விண்  நிற  திவிட்டன்  நம்பி  வேல்விழியால்  வளையில்  சிக்கினான்             512

 

ஞாயிறு  இருளைப்  போக்கும்  நற்செயல் போல்  திவிட்டன்  செய்து

சங்கநிதி  பதுமநிதிகளை  தன்  கருவூல  முதல்  பொருளாக்கி 

எண்திசையும்  தேவர்கள்  காக்க  எண்ணிலா  அரசர்கள்  அடி  தொழ

கையினில்  ஆழியை  பொருத்திய  காமவேள்  திவிட்டன்  ஆனான்                    513

 

திவிட்டனின்  கோப்பெருந்தேவி  திங்கள்  முகத்தாள்  சுயம்பிரபை

விஞ்சையில்  இருந்து  கொணர்ந்த  பாரிசாதம்  எனும்  தேவ  தருக்கு

காமவல்லி  எனும்  தெய்வக்கொடியை  கடிமணம்  செய்து  வைக்கும்- தன்

எண்ணத்தைத்  திவிட்டருக்கு  எடுத்தியம்ப  அனுப்பினாள்  தாதியை      514

 

மன்னனும்  மகிழ்ந்து  சொன்னான்  மனைவி  மகன்  பாரிசாதத்திற்கு

காமவல்லியை  மணம்  செய்விக்கும்  கருத்தினை  மனம்  ஏற்றதென்றான்

அவைநாடி  ஒரு  விதூடகன்  வந்தான்  ஆடிப்பாடி  மகிழச்  செய்தான்

திவிட்டனும்  அவையோரெல்லாம்  அவன்  செய்கையால்  மகிழ்ந்தனர்            515

 

திவிட்டனும்  விதூடகனுடன்  தென்றலாடும்  பொழிலுக்கு  சென்றான்

மங்கையர்கள்  காவல்  செய்யும்  மதிலின்  பெரு  வாயிலையடைந்தான்

பால்  நிலவை  சூழ்ந்த  முகிலாய்  பணிமகளீர்  தன்னை  சூழ்ந்து  வர

திவிட்டனும்  பொழில்  நுழைந்தான்  திங்கள்  தவழும்  வானைப் போல     516

 

மன்னனை  விதூடகன்  கேட்டான்  மகிழமரம் கவசம்  கொண்டதேன்னென

அந்தணனே  அச்சம்  வேண்டாம்  ஆரணங்குகள்  வாய்  மதுவினாலே

வண்டுகள்  அந்நறுமணத்தால்  வந்து  மொய்த்து  நுகர்வதாலே

அடிபருத்து  இருண்டு  போக  அம்மரம்  கவசம்  கொண்டதென்றான்                     517

 

சிற்றடி  சிலம்பது  சிரிக்க  சிறு  இடை  மேகலை  ஒலிக்க

வேல் போன்ற  விழிகள்  இரண்டும்  விரகதாபத்தில்  நம்பியை  தேட

தாதியரும்  பணிமகளீரும்  தண்மதியை  சூழ்ந்த  விண்மீனாய்

கோப்பெருந்தேவி  சுயம்பிரபை  கொடியென  பொழிலில்  நுழைந்தாள்            518

 

சுயம்பிரபை  திவிட்டனோடு  சிறு  ஊடல்  விளையாடல்  செய்ய

தான்  கற்ற  ஒரு  வித்தையாலே  அத்தத்தை  ஒரு  மயிலாய்  தொழ

செம்பஞ்சு  குழம்பு  பதித்த  சிற்றடி  யாதென  விதூடகன்  கேட்க

விஞ்சையின்  மகள்  அடியென்றான்  மஞ்சையை  கண்ட  திவிட்டன்                 519

 

திவிட்டனின்  சொல்லைக்  கேட்டு  சினம்  கொண்டாள்  சுயம்பிரபை

திருத்திய  பிறை  நூதல்  தனில்  சிறு  துளியாய்  வியர்வை  துளிர

அரசனின்  உயிரும்  உருகிட  அதிர்ந்திடும்  மின்னல்  கொடியென

தன்  திருமேனி  துடிக்க  நின்றாள்  திவிட்டனின்  நெஞ்சத்தரசி                      520

 

வெள்ளிமலை  வேந்தன்  மகளே  வெண்  அன்னம்  போன்ற  சிலையே

பாற்கடல்  அமுதத்திற்கும்  பேரமிர்தம்  போன்ற  என்னவளே

என்  உயிரின்  இனிய  உயிரே  இங்கு  இன்றும்  நடக்கவில்லை

என்  குற்றம்  காண்பாயானால்  எனைப்  பொறுத்து  அருள்கவென்றான்           521

 

நம்பியின்  மொழியின்  பணிவாலே  நங்கையும்  நாணத்தில்  மயங்கி

ஊடலை  நெஞ்சில்  போக்கினாள்  உள்ளத்தில்  முறுவல்  கொண்டாள்

மனைவியின்  பேரருளைப்  பெற்றேனென  மனதினில்  மகிழ்ச்சி  பொங்க

மான் மருள் விழிகள் கொண்டாளை மார்புடன் அணைத்துக் கொண்டான்         522

 

பொன்மணிகளால்  மேடை  அமைத்த  பாரிசாத  மரத்தின்  பொழிலுக்கு

வரிகொண்ட  சங்குகள்  முழங்க  வார்கட்டிய  நல் முரசுகள்  அதிர

திவிட்டனும்  சுயம்பிரபையும்  வர  திக்கெட்டும்  ஒலிக்கும்  ஒலி  கேட்டு

திவிட்டனின்  மற்ற  தேவியர்கள்  திரண்டனர்  அப்பூம்பொழிலில்            523

 

நல்  அருவி  நீர்  நிரம்பிய  நீர்  விசிறும்  பொறியினைக்  கொண்டு

பாரிஜாத  மணமகன்  தன்னை  பலர்  கூடி  மண  நீராட்டி

தூண்  என  திரண்ட  கிளைகளில்  துலங்கிடும்  பொன்னணிகள்  பூட்டி

பூம்பொழில்கள்  அனைத்திற்கும்  பாரிஜாதத்தை  அரசனாக்கினர்                 524

 

கன்னிமை  தன்  அகத்தேயுடைய  காமவல்லி  எனும்  நற்கொடியினை

தேவியர்  அனைவரும்  கூடி  செவ்விய  தன்  கரங்களாலே

திருமணப்  பெண்ணுகு  உரிய  திருத்திய  ஒப்பனைகள்  செய்து

பாரிஜாத  மணமகனோடு  மணவிழா  செய்து  மகிழ்ந்தனர்                                    525

 

மாதரார்  தம்  மனத்தினுள்ளும்  மன்னன்  நம்பி    எண்ணத்துள்ளும்

ஐங்கணையான்  அப்பொழிலில்  அவர்களிடம்  தன்  போரைத்  துவக்க

காதலும்  காமமும்  நிரம்பிட  களித்து  மகிழ்ந்து  இருக்கையிலே

திவிட்டன்  ஒரு  சூழ்ச்சியால்  தன்  உருவை  மறைத்துக்  கொண்டான்           526

 

மன்னவன்  மறைந்ததை  எண்ணி  மாபெருந்தேவி  சுயம்பிரபை

மகளீரை  பொழில்  விளையாட்டில்  மகிழ்ச்சியுடன்  ஆடச்  செய்தாள்

இளந்தளிரும்  மலரும்  கொண்டு  இணைத்து  கட்டிய  மாலைச்  சூடி

செவ்வடி  சிலம்புகள்  ஒலிக்க  சிற்றிடை  நெளிய  ஆடினர்  சிலர்              527

 

மானிடப்  பதுமைகள்  போலும்  மற்றும்  பல  விலங்குகள்  போலும்

பறந்திடும்  பறவைகள்  போலும்  பூக்களால்  வடிவம்  செய்தும்

மயக்கத்தை  மனதில்  தூண்டும்  மகரயாழ்  இன்னிசை  மீட்டியும்

மென்விரல்  துரிகையைக்  கொண்டு  ஓவியங்கள்  தீட்டினர்  சிலர்                   528

 

மயில்கள்  தோகை  விரித்து  ஆட  மகிழ்ந்து  நோக்கும்  மங்கையர்  சிலர்

கூவிடும்  குயில்  ஒலிக்கேற்ப  குரலெழுப்பும்  கொங்கையர்  சிலர்

மடல்வாழைக்  குருத்தினை  எடுத்து மென்நகத்தால்  உருவமைப்பார்  சிலர்

மெல்லிதழ்  பூக்களைக்  கொய்து  மென்விரல்கள்  சிவந்தனர்  சிலர்               529

 

செம்பஞ்சுக்  குழம்பு  பூசிய  சிற்றடி  சிவந்த  மகளீர்கள்

பசும்பொன்  பாறையின்  மேலே  பவளத்தால்  செய்த  உரலில்

புதுமணி  செந்நெல்லைக்  கொட்டி  வெண்யானைக்  கொம்பால்  குத்தி

அம்மாணைப்  பாடல்களோடு  அரசன்  புகழ்  பாடி  மகிழ்ந்தனர்                        530

 

கோடி  குன்றத்தைக் கையில்  ஏந்தி  கொடூர  சிங்கம்  வாய்  பிளந்து

வடசேடி  அச்சுவனைக்  கொன்று  வெள்ளிமலையை  தன்  கைப்பற்றி

வலம்புரி  சங்கை  வாய்  முழங்க  சாரங்கமெனும்  வில்லை கையேந்த

திருமகள்  சுயம்பிரபையை  தழுவிய  திவிட்டனே  எம்  அரசனென்றனர்    531

 

மன்மதன்  கணைத்  தாக்குதலாலே  மனமது  காம  வேட்கை  கொண்டு

கன்னியருடன்  சேர  விழைந்து  களிறொன்றை  மந்திரத்தால்  ஆக்கி

பூவையர்  ஆடும்  பொழிலுக்கனுப்ப  பூங்கொடியர்கள்  அஞ்சி  நடுங்க

சுயம்பிரபை  திவிட்டனை அழைக்க  திருமகளே யான் வந்தேனென்றான் 532

 

திவிட்டனோ  மதயானையை  தடுத்து  தேவி  சுயம்பிரபையை  அணைத்து

களிறினை  சூழ்ந்து  பின் செல்லும்  பிடிகளைப்  போல்  தேவியர்  தொடர

சந்தன  மணநீர்  நிறைந்துள்ள  நறுமண  மலர்கள்  கொண்ட  பொய்கையில்

நீர்  விளையாட்டில்  மூழ்கினான்  நீல  வண்ணன்  திவிட்டன்  நம்பி                 533

 

நெஞ்சத்தின்  மனைவியர்களோடு  நீர்  விளையாடி  முடித்த  பின்

பூவொத்த  தேவியர்கள்  தொடர  பொழில்  மன்றம்  புகுந்தான்  நம்பி

தேவியர்கள்  தத்தம்  அறையில்  தேவதை  போல்  ஒப்பனை  செய்து

திவிட்டன்  அமர்ந்த  இடம்  வந்து  தேனீக்களாய்  சூழ்ந்து  அமர்ந்தனர் 534

 

விண்வழியே  வந்து  இறங்கிய  விஞ்சையின்  தூதுவன்  ஒருவன்

அவன்  வரவை  அரசன்  அறிய  அரண்மனை  காவலர்கள்  சொல்ல

வெள்ளிமலையின்  தூதுவன்  வந்து  நீலவண்ணன்  திருவடி  வணங்க

மாமன்  சுவலனசடி  அரசனின்  மாண்பையும்  நலனையும்  கேட்டான்    535

 

துல்லியமாய்  அனைத்தும்  கூறி  தூதன்  அவன்  நம்பியை  வணங்கி

முத்திரை  பதித்த  ஓலை  தன்னை  முடிமன்னன்  முன்னே  நீட்ட

அரசனின்  குறிப்பறிந்த  மங்கை  அவ்வோலையை  கை  நீட்டி  வாங்க

மன்னனே தூதனிடம் சொன்னான்  மங்கல செய்தியை நீயே சொல்லென  536

 

சுந்தர  வடமலையில்  உள்ள  சுரேந்திர  காந்தம்  நகரின்

மன்னனின்  பெருந்தேவி  மகளை  மாவீரன்  அருககீர்த்தி  மணந்தான்

செய்தியை  விஞ்சை  தூதன்  சொல்ல  சித்தத்தில்  பெருமகிழ்வு  பொங்க

 சிறப்புகள்  பலவும்  செய்து  செவ்வனே  அனுப்பினான்  தூதனை                   537

 

செவ்விய  கடல்கயல்  கண்ணாள்  செம்பவள  இதழ்  பொன்  மேனியாள்

சுயம்பிரபை  திவிட்டனை  அணைக்க  சுழல்  கொண்ட  இன்பத்தாலே

நங்கையவள்  படல்  வயிற்றில்  நாட்டிற்கோர்  வாரிசு  தங்கிடும்

மனம்  நிறைந்த  கனவினைக்  கண்டாள்  மங்கையவள்  உறக்கம்  தனில்    538

 

கனவினை  கணவனுக்குரைத்தாள்  கணவனோ  அணைத்து  சொன்னான்

பாவையே  உன்  மணிவயிற்றில்  பாராள  ஓர்  மகன்  உதிப்பான்  என

பையப்  பையவே  வளர்ந்தது  கரு  பாவையவள்  மேனி  தளர்ந்தாள்

விண்கோள்  நன்னிலையில்  நிற்க  மண்  ஆள  ஓர்  மகன்  பிறந்தான்    539

 

ஆழ்கடலின்  ஆரவாரத்தோடு  அதிர்ந்தன  மங்கல  முரசுகள்

மக்களின்  வாழ்த்தொலி  ஓசையால்  மாநகரம்  மகிழ்ச்சியில்  மூழ்க

கொம்பொடு  சங்குகள்  முழங்க  கொட்டிடும்  மலர்  மழையாலே

போதனமா  நகரம்  ஒளிர்ந்தது  பொன்கதிரோன்  ஒளியினைப்  போலே      540

 

அரிமா  நிகர்  மகன்  பிறப்பால்  அந்நகரின்  சிறைகள்  திறந்தனர்

அருகனின்  கோயில்களெல்லாம்  அன்றாடம்  விழாக்கள்  நடத்தினர்

அரசனின்  கருவூலம்  திறந்தது  அரும்பொருள்கள்  அளிக்கப்பட்டது

வேந்தனின்  குலக்கொழுந்துக்கு  விசயன்  என  பெயர்  சூட்டினர்                  541

 

திவிட்டனோ  திகட்டா  இன்பத்தில்  செய்தியை  விஞ்சைக்கு  சொல்ல

முகில்  தவழும்  விண்ணிலிருந்து  முழுப்பொன்  விமானம்  வந்தது

விமானத்து  விஞ்சையர்கள்  கூடி  வெற்றி  வேந்தன்  திவிட்டனுக்கு

மணிமுடியில்  நல் நெய்  பெய்து  மனதார  வாழ்த்தி  வணங்கினர்                       542

 

சுவலனசடி  தூதன்  ஒருவன்  சுயம்பிரபையின்  கணவனுக்கு

திருவடி  பணிந்து  வணங்கி  தேனென  ஓர்  செய்தி  சொன்னான்

அரசனாம்  வீரன் அருககீர்த்தி  சுரேந்திரகாந்த  சுந்தரியாம்

சோதிமாலையை  மணம்  முடித்து  சோர்விலா  இன்பம்  கண்டான்                 543

 

சோதிமாலையின்  அணைப்பினாலும்  கீர்த்தியின்  உடல்  தவிப்பினாலும்

வலம்புரி  வெண்சங்கின்  உள்ளே  வாய்த்திட்ட  வெண்முத்து  போல்

விஞ்சை  அரசி  சோதிமாலையின்  வெளிறிய  வயிறு  கருவுற்றதால்

இளம்  திங்கள்  நாணும்  வகையில்  இளவளாய்  ஓர்  மகன்  பிறந்தான்    544

 

அமிதசேனன்  என்னும்  பெயரை  அம்மகவுக்கு  இட்டுள்ளார்கள்

வெள்ளிமலை  முழுதும்  விரிந்த  வெண்கொற்றகுடை  நிழலை

முன்னோர்கள்  தழைக்க  வாழ்ந்து  முழு  மகிழ்ச்சி  கொண்டதனால்

வெற்றி  பெற்ற  அத்திருப்பெயரை  வெள்ளிமலை  அரசர்  வைத்தார்   545

 

திவிட்டன்  மகன்  விசயனை  தேவர்கள்  காத்து  ஓம்பவும்

செந்தாமரை  மலரில்  வாழும்  திருமகள்  வாழ்த்தி  நிற்கவும்

செவியணி  பொன் குண்டலம்  மின்ன சதங்கைகள்  கால்களில்  ஒலிக்க

திங்களென வளர்ந்து  வந்தான்  திவிட்டன்  பெற்ற  இளவரசன்               546

 

திவிட்டனின்  பெருந்தேவியான  தேவமகளாம்  சுயம்பிரபை

அண்ணலை  அணைத்து  மகிழ் அடிவயிற்றில்  கரு  உதிக்க

ஸ்ரீ  தேவியே  வந்தது  போல்  செந்தீ  ஒத்த  பெண்மகவை

ஈன்றெடுத்தாள்  மகிழ்ச்சியுடன்  சோதிமாலையென பெயரிட்டாள்                     547

 

விஞ்சைக்கு  செய்தி  சொன்னான்  வஞ்சியவள்  பிறந்த  நிகழ்வை

வண்ணப்  பூங்கொடியைப்  போல  வளர்ந்து  வந்தாள்  சோதிமாலை

சிலம்புகளுடன்  கிண்கிணியும்  செவ்விய  சிற்றடிகளில்  ஒலிக்க

செவியிரண்டில்  பொன்சுருளையுடன்  சிரித்து  விளையாடி  வந்தாள்       548

 

கருமேகக்  குழல்  மங்கையர்  களைத்து  கை  சோர்ந்து  நிற்க

கொத்துமலர்  பூங்குழலும்  கோதையவள்  மாலைகளும்  நிற்க

கொய்து  கட்டிய  கொய்ச்சகம் பொன்னாடை  தூக்கி  ஆடா  நிற்க

பொற்செல்வி  சோதிமாலை   பொற்சிலையாய்  வந்து  நின்றாள்                  549

 

சோதிமாலை  கரம்  பட்ட  பந்துகள்  சுழன்று  வானில்  உயர்ந்து  சென்று

விசும்பை  அணைத்து  தரையைத்  தொட  விரைந்து  கீழே  வருகையிலே

செம்பொன்  மணிமாலைகளை  சில  சிற்றிடை  மேகலையையும்  சில

பந்துகள்  தொட்டு  மகிழ்ந்து  பரவசத்தில்  பறந்தன  வானில்                                 550

 

பந்துகள் பட்டு  மோதலாலே  பாவை  மேனி  வருந்தும்  என்பார்

ஓடி எம்பி  பந்து  அடிக்கையிலே  ஒடிந்து  விடும்  மெல்லிடை  என்பார்

சோதிமாலை  மேனி  துன்பங்கண்டு  சுயம்பிரபை  சினப்பாள்  என்பார்

செவிலியரும்  தோழியரும்  கூடி  திவிட்டன்  மனம்  நோகுமென்பார்                551

 

முகில்  கண்டு  ஆடும்  மயிலாய்  மனம்  களித்து  ஆடும்  போது

முடிமன்னன்  திவிட்டன்  நம்பி  திருமகளை  அழைக்கச்  சொன்னான்

மடியிருத்தி  உச்சி  மோந்து  மணியரும்பு  வியர்வை  போக்கி

சுயம்வரச்  செய்தி  சொல்லி  சுப  முரசு  கொட்டச்  சொன்னான்                       552

 

மன்னனின்  சுயம்வரச்  செய்தியால்  மண்ணாளும்  மன்னர்கள்  வந்தனர்

வெள்ளிமலை  எட்டையும்  ஆளும்  விஞ்சை  வேந்தர்கள்  வந்து  கூடினர்

அருககீர்த்தியும்  தன்  மக்கள்  அமிதசேனன்  சுதாரையுடன்  வர

ஆழி வண்ணன் திவிட்டன் சென்று அவர்களை எதிர்கொண்டழைத்தான்    553

 

பொன்மணிகள்  பதிக்கப்  பட்ட  பொன்கோபுர  வாயில்கள்  நான்கும்

நவமணிகள்  தளமிடப்பட்டு  நாட்டிய  பளிங்குத்  தூண்கள்  நான்கும்

வெண்கதிரோன்  ஒளியாய்  திகழும்  வெள்ளி  தகடிட்ட  கூடமும்

சுயம்வர  மண்டபத்தை  மன்னன்  சுந்தரமாய்  செப்பனிட்டான்                554

 

விண்ணிடை  தவழ்ந்து  உலாவும்  வெண்ணிலா  பரப்பும்  ஒளியாய்

பலதிசைகள்  ஒளியைக்  கக்கும்  பளிங்கினால்  மேடையமைத்தனர்

ஐந்து  கோல்கள்  தொலைவிடத்தே  அணங்குகள்  ஆடும்  அரங்கமைத்து

மரகதமணிக்  கற்கள் கொண்டு  மகிழ்ந்திட  சிம்மாசனம்  அமைத்தான்           555

 

வலம்புரி  முத்துக்கள்  கொண்ட  வெண்நிற  மாலைகள்  பலவும்

பசும்பொன்  மணிகள்  கொண்ட  செங்கதிர்  மாலைகள்  பலவும்

நறுமணம்  நிரம்பித்  தவழும்  நவமலர்  மாலைகள்  பலவும்

சுயம்வர  அரங்கில்  தொங்கி  சொல்லொண்ணா  அழகில்  நின்றது                    556

 

அருமணிகள்  உடல்  தரித்த  அயோத்தி  அரசன்  வந்தான்

ஆழி  சூழ்  மதில்கள்  கொண்ட  அஸ்தினாபுர  வேந்தன்  வந்தான்

குங்குமக்  குழம்பு  தோளான்  குண்டலபுரத்து  மன்னன்  வந்தான்

வளமிக்க  நாடுகள்  கொண்ட  வாரணாசி  முடியன்  வந்தான்                               557

 

சூரியபுரத்தை  ஆளும்  மன்னன்  அரிகுலத்தோன்றல்  வந்தான்

மறம்  அற்ற  மாண்புடைய  மதுரையின்  மன்னன்  வந்தான்

விஞ்சையின்  மன்னன்  மகன்   அமிதசேனனும்  அங்கு  வந்தான்

அரசர்களை  வரவேற்கும்  ஓசை  ஆழியின்  அலையோசை  ஆயின                      558

 

மணம்  நிறைந்த  கூந்தலுடன்  மெல்லியல்பு  அகம்  உடைய

சோதிமாலை  மலரணை  விட்டு  தேகை  மயிலாய்  இறங்கி

கச்சை  சூடிய  தனத்துடனும்  கையில்  வேலேந்திய  கன்னியர்  சூழ

செஞ்சாந்து  சிற்றடி  எடுத்து   செல்லமகள்  மண்டபம்  வந்தாள்                    559

 

இட்சவாகு  குலத்தோன்றல்  இளமாறன்  இந்த  மன்னன்

செங்கதிரோன்  நாணமுறும்  சிறந்த  ஒளி  வடியுடையோன்

விருஷபதேவர்  மரபில்  வந்த  விண்ணளவு  ஆற்றல்  கொண்டோன்

வேந்தர்  இவர்  வேந்தர்களில்  ஒப்பான  மிக  வலியுடையார்                               560

 

பூங்கொடியாள்  சோதிமாலையின்  பொற்கரத்தை  தோழி  பற்றி

மேனியெல்லாம்  நாணம்  பூச  மெல்லடிகள்  எடுத்து  வைத்து

அரசர்கள்  அமர்ந்திருந்த  அரியாசனம்  முன்னே  சென்று

வந்திருந்த  மன்னர்களின்  வரலாற்றை  உரைக்கலானாள்                                    561

 

குருகுல  மரபில்  தோன்றிய  குறையில்லா  கோமான்  இவர்

அருகன்  அறம்  பின்பற்றி  அருந்துன்பம்  அகற்றியவன்

சூழ்ந்து  வரும்  கடல்  படையை  சூறாவளியாய்  தாக்குகின்ற

பெறற்கரிய  இவர்  வீரத்தினை  பேருலகம்  வியந்து  போற்றும்                 562

 

உக்கிரமன்னன்  வழி  வந்த  ஒளி  மிக்க  வேலுடை  மன்னன்

விண்ணவரும்  இவர்  அழகில்  வெட்கமுற்று  தலை  குனிவர்

குறிஞ்சி  நிலம்  செழித்திருக்கும்  குண்டலபுரத்து  மன்னன்

நாதவகுலம்  ஒளிரச்  செய்யும்  நாற்படைகள் கொண்ட  வேந்தன்                   563

 

அரி மரபில்  தோன்றிய  அரிமா  சூரியபுரத்து  சுந்தரன்

சுற்றியுள்ள  பகைவர்களை  சுழன்று  வீழ்த்தும்  மன்னரிவர்

யாழ்  ஒலியும்  குழல்  ஒலியும்  எப்போதும்  இசையெழுப்பும்

மதுரை  என்னும்  கூடல்  நகரின்  மாமன்னன்  பாண்டியரிவர்                               564

 

கன்னல்  கணுவில்  முத்து  ஈனும்  கபாரநகர  அரசன்  இவர்

உறந்தை  நகரை  ஆளுகின்ற  உத்தம  சோழ  மன்னரிவர்

எல்லா  வளங்களும்  நிறைந்த  ஏமாங்கத  வேந்தன்  இவர்

களிறுகளின்  பெரும்  படை  கொண்ட  கலிங்க நாட்டு  காளையிவர்                       565

 

மலையருவிகள்  புரளுகின்ற  மகத நாட்டு  மன்னன்  இவர்

அங்க  நாட்டு  வேந்தன்  இவர்  அவந்தி  நாட்டு  அரசன்  இவர்

கோசல  நாட்டு  கோமான்  இவர்  கொடிகள்  கொண்ட  அரசர்  பலர்

மண்ணுலகை  ஆள்வோர்கள்  மணம்  முடிக்க  வந்துள்ளார்கள்                 566

 

விச்சாதரர்  உலகையாளும்  வெள்ளிமலை  வேந்தர்களையும்

வேல்விழியாள்  சோதிமாலையே  விவரிக்கிறேன்  செவி  மடுப்பாய்

விஞ்சை  நாட்டு  வளம்  பற்றியும்  வரலாற்று  மரபை  கூறுமுன்பு

அழகுமயில்  சோதிமாலை  விழிகள்  அமிதசேனன்  தோளில்  பதிந்தது 567

 

மதக்களிறின்  கவுளி  கொட்டும்  மதநீரின்  மணத்துக்காக

நீலமணி  வண்டுகள்  எல்லாம்  நீரை சுற்றி  வீழ்தலைப்  போல்

பவளமாலையை  ஒத்த  மார்பன்  வெள்ளிமலையின்  இளவரசன்

அமிதசேனனின்  அழகு  கண்டு  சோதிமாலையின்  விழிகள்  வீழ்ந்தன       568

 

அமிதசேனனின்  பெருமைகளை  அத்தோழி  பகரும்  முன்னரே

அடம்பிடித்த  கண்களிரண்டும்  அவள்  வசத்தை  இழந்ததாலே

ஊழின்  பயனும்  உடன்  அமைய  உள்ளத்தில்  மகிழ்ச்சி  நிறைய

சோதிமாலை கை கொண்ட மாலை அணைத்தது அமிதசேனன் தோளை  569

 

சங்கோடு  முரசுகள்  முழங்கின செஞ்சுண்ணம்  திசைகளை போர்த்தின

ஏனய  அரசர்கள்  மேனியில்  இளந்துளி  வியர்வைகள்  பூத்தன

ஊழ்வினை அமையுமேயன்றி  உள்ளத்து ஆசைகள் அமைவதில்லை – என

மன்னர்கள்  சிந்தை  தெளிந்து   மனம்  அது  ஆறுதல்  எய்தனர்                  570

 

பொற்குடங்கள்  நிறைய  பரப்பி  புனித  நீரை  அதில்  நிரப்பி

அமிதசேனனையும்  சோதிமாலையையும்  அந்நீரில்  நன்னீராட்டி

வெண்மணி  முத்துக்கள்  பரப்பி  வேதத்துடன்  வேள்வித்  தீ  மூட்டி

சிந்தையில்  மகிழ்ச்சி  பொங்க  திவிட்டன்  மனம்  முடித்து  வைத்தான்      571

 

சுவலனசடி  பெற்ற  மகன்  செங்கோல்  தாழா அருககீர்த்தி

செல்லமகள்  சுதாரைக்கு  சுயம்வர  முரசு  அறைந்தான்

சுயம்வர  மண்டபத்தில்  தோழி  சுதாரையின்  மென்  கரம்  பற்றி

அரசர்களின் இயல்புகளை அடுக்கடுக்காய் எடுத்துரைத்தாள்                         572     

திவிட்டன்  பெற்ற  திருமகனும்  சோதிமாலை  உடன்  பிறந்தானும்

விசயன்  என்னும்  வேலவன்  மேல்  விழிபதித்தாள்  விஞ்சை  மகள்

மணமலர்  மாலை  கழித்தில்  விழ  மங்கலக்  கருவிகள்  இசைக்க

மணவினை  முடித்து  வைத்தான்  மாமன்னன்  அருக்கீர்த்தியும்                     573                           

விஞ்சையை  நாடிச்  சென்றனர்  சோதிமாலையும்  அமிதசேனனும்

விஞ்சையை  விட்டு  மண்ணில் வந்தனர் விசயனும் மனைவி  சுதாரையும்

இல்லறக்கடலில்  வீழ்ந்து  இணைந்த  இரு  தம்பதிகளும்

இன்பமாம்  வெண்முத்தை  தேடி இதயத்தால்  பிணைந்தனர்  அங்கு                  574

 

 

                                    சுயம்வர  சருக்கம்  முற்றிற்று.

 

 

                                    11. துறவுச்  சருக்கம்.

 

மன்னன்  பயாபதி  மகிழ்ந்தான்  மகன்  திவிட்டனின்  மழலைகளால்

கிண்கிணி  கொலுசு  ஒலிக்க  ஆடி வேந்தன் பாட்டனை வண்டாய் சுற்றினர்

விழிகளில்  களங்கம்  இன்றி  வாய்  உதிர்க்கும்  புன்சிரிப்பால்

முற்பிறப்பில்  செய்த  பலனே  இப்பிறப்பில்  என் மகிழ்வென்றான்               575

 

வெண்கொற்றக்  குடை  நிழலில்  வேழத்தின்  மீது  அமர்ந்து

வேந்தர்கள்  பலர்  சூழ்ந்து  வர  வேற்றரசர்கள்  பணிந்து  நிற்க

ஒப்பற்ற  மன்னனாய்  பிறந்து  உலகையாள  செய்த  நல்வினை

மும்மையில்  என்னுடன்  சேர்ந்த  நல்லூழின்  நற்பயன்  என்றான்                  576

 

கழிந்த  நம்  வாழ்நாள்  மீண்டும்  காத்து  நம்  முன்  நிற்குமாயின்

செல்வத்தையும்  செருக்கையும்  சேர்த்து  செம்மையாய்  மனதிருத்தி

பொறியடக்கம்  சிறிதும்  இன்றி போதும்  என்ற  மனமும்  இன்றி

இறப்பில்லை  என்று  இறுமாந்து  இன்பத்தில்  இன்னல்  புரிவோம்                 577

 

நம்மோடு  நாமாய்  பிறந்து  நாம்  நினைவில்  பெரிதும்  போற்றும்

நாளுக்கு  நாள்  மாறிடும்  தன்மையில்  நல்லறிவில்லாத  இவ்வுடலை

பற்றுடன்  பற்றிப்  போற்றும்  பற்றுதல்  அழிந்தொழியுமாயின்

பிறர்களில்  சிறந்தவராவோம்  பேதமை  நிறை  நெஞ்சே  அறிவாய்                 578

 

நறுமண  மலர்  மாலை  அணிந்து  நறுமணச்  சுண்ணங்கள்  பூசி

போற்றியே  வளர்க்கும்  உடல்  புரையோடிப்  போகும்  சிறுமுள்ளால்

மலத்தோடு  மூத்திரம்  ஒழுக  மண்ணில் தடிகொண்டு  காலூன்ற

கழுகொடு  காகங்கள்  உண்ண  காத்திருக்கும்  இளமையழிந்தால்            579

 

நல்வினைகள்  தம்  பயனை  ஊட்ட  நல்வினைப்  பயன்களில்  விலகி

இன்பத்தைப்  பெரிதும்  விரும்பி  இன்புறும்  மக்கள்  எல்லாம்

தீவினை  விதைத்த  மாந்தராகி  தீயென  தீவினைக்  காடுகள்  சூழ 

புலியின்  வாய்  அகப்பட்ட  புள்ளிமானாய்  துன்பம்  கொள்வர்                             580

 

தவநெறி  புகாது  வாழ்ந்தது  தவறான  குற்றம்  என்றெண்ணி

அறநெறி  தவறாத  பயாபதி  அமைச்சர்களை  அழைத்தான்  அவைக்கு

நிலைபெற்ற  செல்வத்திற்கு   நீங்காத  கேடு  எது  என்றான்

மந்திரிகள்  உரைத்த  பதில்  கோள்  வினை  பயின்ற  மறமேயாகும்                     581

 

மெய்நூல்கள்  எடுத்துக்  கூறும்  கோள்வினை  யாதென  அரசன்  கேட்க

மன்னனின்  எண்ண ஓட்டத்தை  மந்திரிகள்  குறிப்பாலுணர்ந்து

ஆயுளது  முடிவுறும்  நாளையும்  அவரவர்  ஊழின்  தன்மையையும்

ஆராய்ந்து  அலசி  நின்று  அவரவர்  உயிரைக்  கவருமென்றனர்               582

 

கூற்றுவனை  எதிர்த்தல்  நன்றா  கூற்றுவன்  பால்  பணிதல்  நன்றா

அவனுடன்  பகைத்துக்  கொண்டு  அரண்  செய்து  தடுத்தல்  நன்றா

போர்  செய்து  வெல்லக்கூடுமா என  பயாபதி  மன்னன்  கேட்டான்

கூற்றுவனின்  சூழ்வினை  தன்னை  கூறிடும்  வழியறியோம்  என்றனர்            583

 

மெய்நூலை  ஆய்ந்து  அறிந்த  மெய் ஞானத்  துறவியை  அடைந்து

அருகனடியை  சேர்வதற்கு  அறநெறிகளைக்  கற்றுத்  தேர்ந்து

அனைத்துயிர்க்கும்  அருளனாகி  அருந்தவத்தார்  அடி  பணிதல்

அமைதியின்  புகலிடமாகும்  அதுவன்றி  பிரிதொன்றில்லை                                   584

 

அழகிய  திவ்ய  ஒளியுடைய  அறவாழி  அந்தணன்  ஆகிய

அசோக மர  நிழலில்  அமர்ந்த  அருகனுக்கு  திருவிழா  எடுக்க

அரசனின்  ஆணையின்  படியே அறைந்திட்ட  முரசொலி  கேட்டு

ஆனந்தத்தில்  நகர்  மக்கள்  அழகு  அணி  செய்தனர்  ஆங்கே                                  585

 

பொன்னிற  தோரணங்கள்  கட்டி  பொற்குடங்களை  நிரலாய்  வைத்து

வெண்பட்டால்  கொடிகள்  ஏற்றி  சந்தனத்தால்  தரையை  மெழுகி

சலித்தெடுத்த  முத்துக்கல்  தூவி  சங்கோடு  முரசுகள்  முழங்கிய

போதனமா  நகரின்  அழகை  போற்றாத  வாய்கள்  இல்லை                                586

 

வெண்மை  நிற  பட்டாடை  அணிந்து  வேதியர்கள்  ஒருபுறம்  சேர்ந்திட

நவமணிகள்  பதித்து  ஒளிரும்  நீள்  முடி  தரித்த  மன்னர்கள்  கூடிட

பொன் பொடிகள்  மின்னும்  மேனியில்  பொளிர்கின்ற  வணிகர்கள் சூழ

போதனநகர  மக்களெல்லாம்  போர்படைப்  போல்  ஆலயம்  வந்தனர் 587

 

பட்டத்து  வேழத்தில்  ஏறி  பயாபதி  மன்னன்  வந்தான்

பரிகளில்  சிரந்த  பரிமேல்  பரிதி  போல்  திவிட்டன்  வந்தான்

பூப்பலிகள்  மாரியாய்  சொரிய  பொற்கூடைகள்  நிறைந்தன  அங்கு

பொன்னொளி  நிறைந்த  அருகனை  பயாபதி  அரசன்  தொழுதான்            588

 

மூவுலகும்  தடையின்றி  சுற்றும்  முழுமதியும்  ஞாயிறும்  நாணும்

ஒளிதிகழும்  அழகுடைய  உத்தமனே  போற்றி  போற்றி

தாமரை  மலர்  மேல்  நின்று  தரணிக்கு  அறம்  உரைத்த

வெண்குடை  நிழல்  அமர்ந்த  வினை  வென்ற  வீரனே  போற்றி                    589

 

இருவினைகள்  பொடியச்  செய்து  இரண்டிரண்டு  கதி  அறுத்த

இறுதியற்ற  அறிவுச்  சுடரே  எம்மானே  போற்றி  போற்றி

நற்காட்சி  நல் ஞானம்  நல்லொழுக்கம்  அறம்  உரைத்து

மும்மணியாய்  திகழ்கின்ற  மூலவனே  போற்றி  போற்றி                                    590

 

உன்  இயல்பில்  பரவியுள்ள  ஒளியாயும்  உலகங்களாவும்

உயிர்களுக்கு  அருளும்  உத்தமனே  போற்றி  போற்றி

அழிவற்ற  மெய்பொருளின்  அளப்பரிய  தன்மையினை

தெளிவுற  எடுத்துரைத்த  தெய்வமே  போற்றி  போற்றி                                       591

 

ஆயிரம்  கண்ணுடைய  ஐராவதத்தான்  இந்திரனும்  காணவொன்னா

எழில்  ஒளி  பிழம்பாய்  திகழும்  ஏகாந்தனே  போற்றி  போற்றி

எவ்வுயிர்க்கும்  இன்னலின்றி  எப்போதும்  அருளுகின்ற

அன்பு  ஆறாய்  பெருகி  நிற்கும்  அருள்  ஆழியே  போற்றி  போற்றி                    592

 

இருட்கடலில்  மூழ்கியுள்ள  ஏழுலகுக்கும்  ஒளியன்  நீயே

இமைத்தல்  தொழில்  இல்லாத  தேவர்  போற்றும்  திவ்யன்  நீயே

தர்மச்  சக்கரம்  முன்  செல்ல  தர்ம  உருவான  தத்துவன்  நீயே

உலகமனைத்தும்  உள்ளடக்கி  உன்  அருள்  தந்து  உயர்ந்தவன்  நீயே            593

 

அசோகமர  நிழலில்  அமர்ந்த  அருட்செல்வ  அருகன்  நீயே

எண்வினைகள்  எடுத்தெறிந்த  எண்குணத்து  நாதன்  நீயே

முக்குடையின்  கீழ்  அமர்ந்த  மூவுலக  முதல்  நாதன்  நீயே

அறுவினைகள்  தீர்த்து  வைக்கும்  அறவாழி  வேந்தன்  நீயே                           594

 

என்  பிறவி  துன்பம்  அகற்றும்  என்  ஞான  குருவும்  நீயே

என்  வினையனைத்தும்  போக்குகின்ற  என்  குலத்து  நாதன்  நீயே

திருமகள்  வாழும்  மார்பன்  தேவர்களின்  தேவன்  நீயே

திரும்பப்  பிறவா  பேறு  தர  திருவடி  பற்றினேன்  எனத்தொழுதான்              595

 

நிர்மாலயத்தை  தலையில்  சூடி  நெஞ்சுருக  நிர்மலனை  வேண்டி

ஆலயத்தை  மீண்டும்  வலம்  வந்து  அழகியதோர்  மண்டபம்  வந்தான்

அப்பொன்  பெரும்  மண்டபத்தின்  அனைத்தும்  துறந்த  முனிவரின்

அடிகளை  மலரால்  தூவி  அறம்  கேட்க  அமர்ந்தான்  பயாபதி                   596

 

உயிர்கள்  செல்லும்  பிறப்பும்   பிறப்பினுள்  நுகரும்  நிகழ்வும்

நுகர்ச்சியால்  வரும்  வினைகளும்  வினைகளை  வெல்லும்  உபாயமும்

மெய்யறிஞசர்  விரும்பும்  முக்தியும்  முக்தியின்  மாட்சியும்  மேன்மையும்

மன்னனே  உனக்கு  சொல்வேன் மனம்  ஒன்றி  கேள்  என்றார்  முனிவர் 597

 

வண்டியின்  உருளைகள்  மேல்  வடித்திட்ட  இரும்பு  வளையம்

வட்டமிட்டு  சுழல்வது  போல்  உயிர்கள்  சுழலும்  கதிநான்கில்

நரகர்,  விலாங்கு,  மனிதர்,  தேவர்  நாற்கதியை  விளக்கிக்  கூறின்

நால்  திசை  போல்  விரியும்  என்று  நெகிழ்ந்துருக  சுருங்கச் சொன்னார்       598

 

நரகங்கள்  ஏழாய்  விரிந்து  நாற்பத்தொன்பது  உட்பிரிவில்

நரகர்கள்  புகும்  புரைகள்  எண்பத்து  நான்கு  நூறாயிரமாகும்

பேரிருளும்  இருளும்  புகையும்  சேறும்  மணலும்  பரற்கற்களும்

வியப்புடைய  மணியும்  என்று  நரகங்கள்  ஏழும்  ஆகும்                                    599

 

பிறவுயிரை  வதைத்தோரெல்லாம்  புழுக்களைப் போல்  தீயில்  வறுப்பர்

பிறன்மனை  சேர்ந்தோரெல்லாம்  தீப்பிழம்பை  அணைக்கச்  செய்வர்

ஊன் உணவை  விரும்பி  உண்டோர்  உடல்  உறுப்பை  அறிந்து  தின்பர்

ஊரான்  பொருள்  கவர்ந்தோரெல்லாம்  சம்பட்டியால்  நசுங்கி  வீழ்வர்      600

 

பிறர்  நோகக்  கடுஞ்சொல்  மொழிந்தோர்  நாக்கறிந்து  நகங்கள்  இழப்பர்

செக்கிலிட்டு  சிதைப்பதுமன்றி  கோடாரி  கொண்டு  மார்பைப்  பிளப்பர்

அறமற்ற  செயல்கள்  புரிந்தோர்  அவரவர்  செயலுக்கு  ஏற்ப

அடைவார்கள்  பெருந்தண்டனை  அரசே  நீ  அறிந்து  கொள்  என்றார்     601

 

விலங்குகதி  துன்ப  வகைகளை  விரித்துரைத்து  சொல்வேனாகில்

விண்வெளியின்  பரப்பைப்  போல   விரிந்து  கொண்டே  செல்லும்

ஒன்றறிவு  கொண்ட  ஜீவன்  முதல்  ஐந்தறிவு  உயிர்கள்  வரை

அனைத்தையும்  நீயே  ஆய்ந்து  அறிந்து  கொள்  வேந்தா  என்றார்                    602

 

ஒன்றறிவு  உயிராய்  பிறந்து  துன்புறும்  தாவரங்களெல்லாம்

உயிரினமே  என்றறியா  மதியால்  உலகத்தோர்  அழித்து  விடுவர்

ஊன்  விற்றுப்  பிழைப்போரால்  உயிரினங்கள்  கொல்லப்பட்டும்

உழ  தொழிலில் சுமையைத் தாங்கி விலங்கினங்கள் துன்பங்கொள்ளும்           603

 

தம்மின்  வலிய  விலங்குகளின்  தாளாத  சின  முழக்கத்தாலே

அஞ்சிய  எளிய  விலங்குகள்  அலறி  ஓடி  துயரங்கொள்ளும்

தெய்வங்கள்  காக்கும்  என்று  உயிர்போக்கும்  தறிகெட்டோரின்

கைகளில்  அகப்பட்டு  அழியும்  கடுந்துன்பம்  விலங்குகட்குண்டு                        604

 

தமையீன்ற  தாய்  விலங்குகள்  தன்  கண்களால்  காத்தும்  பார்த்தும்

அன்பினை  நெஞ்சில்  நினைத்தும்  அதை  நிலங்களில்  ஆட  விட்டும்

உடன்  இருந்து  தழுவி  வளர்த்த  இளம்  பருவ  விலங்கினங்கள்

எண்ணிறைந்த  துன்பங்கொள்ளும்  இயற்கையில்  எய்தும்  துன்பம்                605

 

பெரிய  தவ  ஒழுக்கத்தில்  நின்று  பின்னர்  வஞ்சம்  களவு  சேர்ந்து

ஆசையால்  பொருள்களை  வஞ்சித்து அயலாரை  வஞ்சத்தால்  மயக்கி

அவாவினால்  பெருங்கேடு செய்து  அகிம்சையற்று  கொலைகள்  புரிந்து

வெறுப்புடன்  பகைமை  கொண்டோர்  விலங்கினமாய்  பிறப்பாரென்றும்  606

 

உயிர்  ஒன்று  இல்லை  என்றும்  அவ்வுயிர்க்கு  மறுமை  இல்லையென்றும்

அறம்  மறம்  நீதிகளில்லையென்றும்  அவனியில்  உண்டென்பதை மறுத்தும்

உயிர்களைக்  கொன்று  தின்னும்  மறச்  செயல் உடையோரெல்லாம்

விலங்குகதியில்  பிறப்பு  எடுப்பார்  வினைத்  தொடர்ந்து  வருவதாலே 607

 

மனிதகதி  துன்பம்  :

 

மனிதகதி  உயிர்கள்  எல்லாம்  மனிதராய் பிறப்பெடுத்திடினும்

மனிதத்தன்மை  ஒன்றெனினும்  வேற்றுமையில்  ஐவர்  ஆவர்

சேகர்,  மிலேச்சர்,  மனிதர்,  திப்பியர்,  போகமனிதர் – என

ஐவகை  இனத்தவர்களாகி  அரிய   மனித  பிறவி  எடுப்பர்                                    608

 

பாரத கண்டம்  ஐந்தில்  வாழ்வர்  வாழத்தக்க காலம்  எல்லாம்

குணத்தினில்  இழிந்தோராகி  குறைந்த  அறிவும்  தெளியாதோராய்

ஒழுக்கநெறி  சிறிதும்  இன்றி  ஒடுங்கிய  சீலத்தில்  மூழ்கி

அறிவற்ற  மனிதர்கள்  எல்லாம்  சேகர  இன  மனிதர்களாவர்                             609

 

தீவுகளில்  வாழ்  மனிதர்களும்  தேசத்தில்  வாழும்  மனிதர்களும்

மிலேச்சர்களில்  இருவகையாகும்  மிருகங்கள்  ஒத்த  ஒழுக்கத்தாலே

தீவில்  வாழும்  மனிதர்களெல்லாம்  தீய  ஒழுக்கம்  உடையோர்  ஆவர்

தேசத்து  மிலேச்சர்கள்  எல்லாம்  தேய்ந்தவர்கள்  மக்கள்  பண்பில்                   610

 

மனிதர்கள்  வாழ்ந்து  மகிழும்  மண்ணில்  சிறந்த  நாடுகளில்

மனிதரும்,  திப்பியரும்,  போகரும்  ஒழுக்கத்தோடு  தீச்செயலுடையார்

மும்மூடங்கள்  உடைய  இவர்கள்  மனிதராய்  கருதத்தக்காததால்

நெல்லினுள்  பிறந்த  பதராவர்  நல்  வேந்தே  நெஞ்சில்  கொள்  என்றார்     611

 

அறநெறி  நிறைந்த  நாட்டில்  அவதரித்த  மனிதரானாலும்

அகம்  புறம்  ஊனங்களற்று  அருள்  நிறை  இல்லறம்  பெற்றும்

நல்  நிலம்  பொருள்  நன்மைகளோடும்  நங்கையர்  பிறப்பு  தவிர்ப்பும்

அரிதிலும்  மிக  அரிதேயாகும்  அரசனே  நீ  அறிவாய்  என்றார்                    612

 

மழலைப்  பருவம்  என்னும்  மணல்  பாலை  நிலம்  கடந்து

இளமைப்  பருவம்  என்னும்  இருள்  காட்டை  அரிதிற்  கடந்தால்

முதுமைப்  பருவம்  என்னும்  எல்லையில்  இறந்த  பின்னர்

மறுமையில்  வேறாய்  பிறப்பது  மக்களின்  வினைகளுக்கேற்ப                       613

 

களிறு  துரத்த  பயந்து  ஓடி  கடும்  கிணற்றில்  விழும்  போது

கொடி  பற்றித்  தொங்குகையில்  கொடும்  நாகம்  கீழிருக்க

எலி  ஒன்று  கொடியை  அறுக்க  தேனடையில்  சொட்டும்  துளியை

சுவைக்கும்  நிலைக்கொப்பாகும்  மனிதகதியில்  நுகரும்  இன்பம்                     614

 

அறத்தினோடு  அன்பு  சேர்ந்து  அமைந்திட்ட  இல்லறத்தில்

இன்னல்  பல  எதிர்  வருதல்  இயற்கையான  இயல்பேயாம்

இருபற்றாம்  நான்  எனது  என்பதை  இல்லாது  விட்டொழித்தால்

இருவினைகள்  கெட்டொழியும்  இல்லறமும்  இனிது  பெறும்                                  615

 

தானமும்  தவமும்  பூசையும்  தன்னியல்  இவைகள்  நான்கும்

நற்செயலை  தெளிந்து  கொள்ளும்  நல்  ஆய்வாம்  மனிதகதியில்

ஐந்து  ஒழுக்க  துறவிகளுக்கு  ஏழுகுண  இல்லறத்தார்கள்

ஈனுகின்ற  நல்  ஆகாரந்தான்  எச்சமில்லா  அறமாய்  அமையும்                 616

 

துறவுடன்  அடக்கமுடமை  சுற்றத்தைப்  பேணிச்  செய்தல்

மெய்யுணர்வை  நன்கு  அறிதல்  மெய்குணங்கள்  ஏற்போர்க்கு

அன்பேடு  பொருள்  பற்றின்றி  அறிந்துணரும்  குறிப்பாற்றலும்

ஆற்றலுடன்  கண்ணோட்டமும்  அமைய  வேண்டும்  ஈவோரிடம்              617

 

பிறர்  கலங்க  ஈட்டிய  பொருளை  பொல்லாதோர்க்கு  வழங்கிய  ஒருவன்

கைப்பொருள்கள்  இழப்பதுமின்றி  கீழ்குடியில்  பிறப்பதுண்மை

மெய்யுணர்ந்த  குணங்களோடு  துறவிகளுக்கு  வழங்கிய  ஒருவன்

தேவகதி  சென்று  பிறப்பான்  சிந்தையில்  கொள்  வேந்தே  என்றார்                    618

 

அருளோடு  அறிவும்  குணமும்  மெய்யுணர்வு  தவமும்  ஞானமும்

மயக்கமற்ற  தியான  நிகழ்வென  மாண்பின்  ஏழு  அறவாயில்களுண்டு

நற்காட்சி  விளக்கைக்  கொண்டு  நல்லொழுக்க  ஓளியினாலே

இருவினை  காரிருளைப்  போக்கி  ஏழுவாயிலால்  வீடடையலாம்                    619

 

விசயனும்  திவிட்டனும்  முதல்  பதினெண்மர்  தெய்வமனிதர்கள்

பயாபதி  மன்னனே  நீயும்  கூட  தெய்வத்தன்மை  பெற்றவன்  தான்

இருவினை  வெல்லும்  இயல்புடைய  உன்  மரபினன்  பரதன் உள்ளிட்ட

உதித்திட்ட  சக்கரவர்த்திகள்  தெய்வீக  மனிதர்கள்  ஆவர்                                    620

 

தேவகதி  துன்பம்  :

 

தேவகதியில்  பிறப்பெடுத்தாளும்  பிறப்புகளில்  நால்வகை  உண்டு

ஈரைந்து  பாவணர்கள்  என்றும்  நாலிரண்டு  வியந்தரர்கள்  என்றும்

ஐந்து  வகை  சோதிடர்களோடு  ஈரெட்டு  கற்பகர்கள்  என்றும்

மேலுலகின்  தேவர்களாவர்  மேன்மைமிகு  மன்னா  மனங்கொள்                       621

 

நால் வகை  தேவர்களுக்கும்  நன்குயர்ந்தோர்  ஒன்பதின்மர்

அவ்வொன்பதின்மர்  ஆய்ந்ததில்  அவர்க்குயர்ந்தோர்  ஒன்பதின்மர்

ஈரொன்பது  உயர்ந்தோர்க்கு  ஏற்றமுடையோர்  ஐவர்  உளர்

தேவர்களின்  வகைகள்  இவை  தெரிந்து  கொள்  பயாபதி  மன்னா                     622

 

தீச்சொரி  தலைச்  சூட்டுடனும்  சிறந்த  மணிக்குவியல்களுடனும்

பவணலோகத்தில்  வாழும்  பத்துவகை  பவணதேவர்கள்

இன்னிசை  மகிழ்ந்து  நுகரும்  தேவர்கள்  கின்னரர்  வியந்தரர்கள்

விண்கோள்  வாண்மீன்களாய்  விளங்கும்  தேவர்கள்  சோதிடராவர்                     623

 

நற்காட்சி  சுடர்விளக்கோடும்  நல்லொழுக்க  அறத்தினோடும்

கள், ஊன், தேன் தவிர்த்தொழித்து கணவனுக்குப்  பிழையா  மாந்தரும்

இல்லறத்தில்  சிறந்த  அறமொடு  இரு  நான்கு  குணங்களோடும்

மண்ணுலகில்  வாழும்  மக்கள்  மூவகைத்  தேவராய்  பிறப்பர்                                624

 

மந்தரம்  என்னும்  நீள்  மலையின்  மேல்  உள்ள  அந்தரலோகத்தில்

வாழுகின்ற  தேவர்கள்  எல்லாம்  வானவில்லின்  ஒளியுடையோராவர்

ஏனைய  தேவர்கள்  வணங்கும்  எழில்  ஒளிகொண்ட  மேனியர்

சிறந்த  நிலை  உடையவர்  ஆவர்  அத்தேவராய்  பிறபோரெல்லாம்             625

 

நீராடுதல்  இல்லாவிடினும்  நிறை  ஒளி  திகழும்  உடலும்

வாடுதல்  இல்லா  மலர்மாலைகளும்  மழுங்கிடாத  பூந்துகிலும்

இமைத்தலில்லா  இருவிழிகளும்  இரவு  பகல்  காலங்களின்றி

தீர்த்தங்கர்க்கு  திருவிழா  செய்யும்  சிறப்பு  பெற்ற  தேவர்களாவர்                    626

 

அச்சுத  உலக  தேவர்களுக்கு  இருபத்திரெண்டு  கடற்காலம்  வயது

அகமிந்திர  லோக  தேவர்கள்  மும்மூன்று  வகையினர்  ஆவர்

ஒன்பது  பிரிவினர்கட்கும்  ஒவ்வொரு  கடற்காலம்  உயர்ந்து

பஞ்சாநுத்தரத்து  தேவர்க்கு  முப்பத்திமூன்று  கடற்காலமென்பர்                        627

 

தீவினைகள்  அறவே  ஒழித்து  நற்காட்சி  நல்லொழுக்கத்தில்  நின்று

தவஒழுக்கம்  கொண்டோமாகில்  நற்செல்வம்  அகலாது  என்றார்

அறிவுரைகள்  அளித்த  துறவியின்  அடிகளைத்  தொழுதான்  பயாபதி

முடிவிலா  வீட்டின்பம்  அடைய  மூலமான  தவத்திற்கு  அருளினார்             628

 

 

                                    துறவுச்  சருக்கம்  முற்றிற்று.

 

 

 

12.  முக்திச்  சருக்கம்.

 

முக்திநெறி :

 

நல்வினை  தீவினைகள்  என்னும்  இருவகைத்  தொடர்புகளற்று

நாற்கதிகள்  பிறப்பு  நீங்கி  நற் தவம்  ஏற்ற  முனிவர்கள்

செல்லுதற்கு  சிறந்த  வழியான  சான்றோர்களால்  கூறப்படும்

முக்தி  நெறி  ஒன்றேதான்  மோட்சமாம்  வீட்டை  அடைய                                    629

 

நாற்கதியில்  பிறந்த  உடல்  ஐம்பொறியின்  புலன்  நுகர்ந்து

அடைகின்ற  அவா  வெகுளியால்  நல்  தீவினைகள்  கலந்து

அவ்வினை  ஈட்டிய  பயனால்  அடுத்தெடுக்கும்  கதியில்  கூட

அவ்வினையை  ஈட்டும்  இயல்பை  அந்த  உயிர்  பெற்றே  தீரும்              630

 

பிறப்பதும்  இறப்பதுமான  பிறவிப்  பெருங்கடலைக்  கடக்க

பொறியடக்கம்  தன்னுள்  கொண்டு  துறவொழுக்கம்  துணிந்து  ஏற்று

மெய்ப்பொருள்  தனை  உணர்ந்து  நல்லொழுக்கம்  பாதுகாக்க

நற்காட்சி  நல் ஞானம்  கிட்ட  நல்வீட்டை  அடைவது  உண்மை                631                               

கடையிலா  எண்குணங்களோடு  காமத்தை  அறவே  அழித்து

இல்லறப்  பற்றினை  நீக்கி  இயங்கிடும்  அவா  வெகுளி  போக்கி

ஆகம  மெய்நூல்  நெறியோடு  அறம்  செய்யும்  பேராண்மையே

மோட்சமாம்  வீட்டை  அடையும்  முக்திநிலையாகும்  இயல்பு                                  632

 

துறவியின்  அற  அமிழ்துண்ட  சுடர்மணி  முடியான்  பயாபதி

துறவினை  மனதில்  ஏற்றான்  துணிந்தனன்  தவத்தை  ஏற்க

விசய  திவிட்டர்கள்  இருவரையும்  வேந்தன்  பயாபதி  அழைத்தான்

வேதனைகள்  மனதில்  இன்றி  தன்  முடிவினைக்  கூறலானான்                      633

 

திருமகள்  இயல்பு  என்றும்  சேர்ந்து  வாழாள்  ஒருவரிடமே

மருவியே  மாறிச்  செல்லும்  மனதுடையாள்  லட்சுமியாவாள்

திண்ணிய  மனதினோடு  ஒரிடம்  சேர்ந்து  நிலைத்து  விடுவாளாயின்

அன்பு  அறன்  ஈகை  வாய்மை  அத்தனையும்  அழித்துவிடுவாள்              634

 

கயல்விழி  கணிகையரைச்  சேர்ந்த  காளையர்  செல்வம்  கரைவதுபோல்

திருமகளை  விரும்பியவர்களின்  தெய்வகுணங்கள்  அழிந்து போகும்

பொருளின்  மேல்  கொண்ட  காதலை  பகைவர்  போல்  அழித்திடுங்கள்

மெய்நூல்கள்  பகரும்  நெறியை  மனம்  விரும்பி  ஏற்றிடுங்கள்                      635

 

உயர்குடி  பிறந்தோர்  என்றும்  உயர்குணங்கள்  கொண்டோரென்றும்

நிலமகள்  என்றும்  நினையாள்  வினையுடையோர்  வழியே  செல்வாள்

காலந்தோறும்  புதிது  புதிதாய்  பிறப்பெடுத்து  வரும்  மக்களோடு

நிலமகளும்  மாறிச்  செல்லும்  நிரந்தர  குணம்  அவளுக்காகும்                  636

 

தன்  அடி  வீழ்ந்து  வணங்கி  தன்னை  ஆட்சி  செய்த  தலைமகன்

மண்மீது  பிணமாய்  கிடக்க  மருவுவால்  புது  தலைமகனோடு

நிலமகள்  தன்மை  என்றும்  நிலையென  என்று  எண்ணி  விரும்பும்

தன்மையை  வென்று  அழித்து  தவமதை  மேற்கொள்வீரென்றான்           637

 

மெய்நூல்  ஓதி  உணர்ந்த  மாட்சிமை  உடைய  என்மக்களே

என்னோடுறைந்த  நாட்கள்  சில  இனி  பிரியும்  நாட்கள்  பலவாம் – என

பயாபதி  மன்னன்  பகர்ந்திட  பதைத்தனர்  விசய  திவிட்டர்கள்

கரம்  கூப்பி  தொழுது  வணங்கி  பிழை  பொருத்தருள்வீரென்றனர்                     638

 

அகம்  கொண்ட  துறவினாலே  அயலானாய்  விலகி  நின்று

விசய  திவிட்டர்களுக்கு  விளக்கினான்  தன்  துறவு  தன்னை

தன்  மனைவி  பயாபதியை  நோக்கி  தங்கள்  எண்ணம்  யாதென  வினவ

தவ ஒழுக்கம்  முன்பே  ஏற்றேன்  தங்கள்  உள்ளம்  அறிந்ததாளென்றாள்       639

அமைச்சர்களும்  துறவு  ஏற்றனர்  அரசன்  பயாபதி  அருளைப்  பெற்று

பாற்கடலின்  அழிழ்த  நீரால்  பயாபதியும்  நன்னீர்  ஆடி

மணியணிகலன்கள்  களைந்து  மண்டிய  பெருங்குழலை  நீக்கி

பளிங்கு  வெள்ளித்தட்டில்  இட்டு  பாற்கடலில்  விட்டு  வந்தனர்                   640

 

வேற்று  அரசர்கள்  ஆயிரவர்  வேந்தன்  பயாபதியோடு

தத்தம்  மணிகலங்கள்  நீக்கி  தவத்தினை  தழுவச்  சென்றனர்

விசயனும்  திவிட்டனும்  கூடி  எம்  தந்தை  அயலார்  ஆனார்

இச்செயல்  கொடியதென்றழுது  இருள் மனதில்  அவ்விடமகன்றார்             641

 

நிலையில்லா  உலகியல்  வாழ்வின்  நிலையினை  மனதில்  அகற்றி

நிலைத்து  நிற்கும்  ஆற்றலினை  உலகெல்லாம்  தொழுதிடச்  செய்யும்

உன்னத  செயல்  செய்தமைக்கு  உள்ளத்தில்  மகிழ  வேண்டும்

வருத்தத்தை  அற்வே  ஒழியென  விசய  திவிட்டரை  தேற்றினார்  துறவி           642

 

மண்ணுலக  ஆட்சியினை  துறந்து  வீட்டுலக  அரசினை  விரும்பி

மெய்நூலைப்  படைகளாக்கி  ஐவகை  ஒழுக்கப்  படைத்தலைவனாய்

துறவிகளை  அமைச்சராக்கி  தூய  விரதங்கள்  கேடயமாக

தாக்கிடும்  தீவினைகளையெல்லாம்  தடுத்திட  தவநிலை கொண்டான்           643

 

 

மனம்  வாக்கு  காயம்  என்ற  மதில்களை  திண்ணியதாக்கி

வினைவரும்  வாயில்கள்  ஐந்தை  வெண்கலக்  கதவுகளால்  மூடி

அறிவோடு  கூடிய  தியான  மகளை  அனுதினமும்  போற்றிக்  காத்து

அகப்  புறப்பற்று  தாக்குதலின்றி  அரண்  என  நின்று  காவல்  செய்தான் 644

 

நால்வகை  தியானங்களையும்  நான்கு  கால்கள்  உடையதாகிய 

நல்லியல்  அமைந்த  அறிவாம்  நற்களிறின்  பிடரிமேல்  அமர்ந்து

மெய்நூல்களால்  உரு  பெற்று  பொறிகளைப்  பொறியில்  செலுத்தும்

மெய்யுணர்ச்சி  அங்குசத்தோடு  அக்களிறினை  செலுத்தலானான்              645

 

யான்  எனது  என்னும்  செருக்கின்  வினைப்பகை  அழியும்  பொருட்டு

மூவகை  அடக்கம்  கொண்டு  மும்மூடமற்ற  தியானத்தாலே

மோகனீயம்  என்னும்  வினைகளை  முழுமையாய்  வேரோடழித்து

எண்வினைகள்  அனைத்தும்  அழிய  எதிர்த்து  நின்றான்  பயாபதி  முனி       646

சுவை,  வெண்மை  பதின்மருடனும்  ஞானாவரணீயம்  நால்வர்  சேர்ந்து

தலையறுபட்டு  இறந்தொழிய  கடையிலா   நான்கும்   கைக்கொண்டு

ஏனய  தவ  வேந்தர்களோடு  இடியென  முரசங்கள் முழங்கி  நிற்க

விண்ணுலக தேவர்கள் சேர்ந்து கேவலக் மாதோடு மணவிழா நடத்தினர்      647

 

கடத்தற்கரிய  மயக்கமான  இருவினைத்  தொடர்பை  அழித்து

தேவர்கள்  நாள்தோறும்  அவன்  திருவருளை  வாழ்த்தப்  பெற்று

கேவலக் ஞானம்  என்னும்  ஒளியால்  உலகங்கட்கெல்லாம்  உயர்ந்த

வீட்டுலக  சிகரத்திற்கேற்ப  சூளாமணியாய்  திகழ்ந்தான்  பயாபதி                   648

 

தங்கள்  தலைவனான  பயாபதி  தன்னிகரற்ற  வீட்டுலகை  ஆள

ஆழி  சூழ்ந்த  உலகை  எல்லாம்  அவன்  குடையின்  கீழ்  கொணர்ந்து

அனைத்துயிர்க்கும்  அருளனாகி  அறம்  சாயா  செங்கோலுடன்

தெய்வங்கள்  வாழ்த்தி  நிற்க  திவிட்டன்  பேராட்சி  செய்தான்                649

 

வலம்புரி  சங்கொத்த  விசயனும்  வானத்தின்  நீல  திவிட்டனும்

அனைத்துலகமும்  அவர்களடி தொழ  வினைவென்ற  வீதராகமூர்த்தியின்

செந்தாமரை  திருவடிகளை  வணங்கி  திருவிழாக்கள்  சிறப்புடன்  செய்து

தினம்  தினம்  மகிழ்ச்சியில்  மூழ்கி  செவ்வனே  ஆட்சி  செய்தனர்               650

 

 

 

                                    முக்திச்  சருக்கம்  முற்றிற்று.

 

                                    சூளாமணி  கடைச்  சுருக்கம்  நிறைவு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                                               

 

 

 

 

 

 

No comments:

Post a Comment