மேரு மந்தர புராணம்.- பாகம் 1



மேரு  மந்தர  புராணம்.



சமண  திருமறை  வளர்ச்சிக்கு  வித்திட்டவர்  ஸ்ரீ  குந்த  குந்தாச்சாரியார்.  ஆன்மா,  வினை,  உலகம்,  அதன்  இயக்கம்,  மக்களை  வழி  நடத்தும்  அறவோர்கள்  ஒழுக்கம்  பற்றியும்,  என  பல  நூல்கள்  எழுதியவர்.  இவரின்  நூல்களுக்கு,  பதவுரை,  விரிவுரை,  கருத்துரை  எழுதியவர்,  ஸ்ரீ  மல்லி  சேன  வாமன  முனிவர்.  பன்மொழி  அறிஞர்.  கி.பி  1300 –1350 ல்,  திருப்பருத்தி  குன்றம்  மடத்தில்  வாழ்ந்தவர்.  பாகவதம்,  சமஸ்கிருத  மொழிகளில்  இருந்த  தத்துவங்களை,  உணர்ந்த  இவர்,   முதல்  முதலாக,  முழுக்க,  முழுக்க  தமிழால்  ஒன்றினைச்  சொல்ல  வேண்டும்  என  எழுதிய  நூலே  மேரு  மந்தர  புராணம்.  ஸ்ரீ  புராணத்தில்  வரும்  மேரு,  மந்தரர்  ஆகிய  கணதரர்களின்  முற்பாவங்களின்  வரலாறு.   இந்நூல்  தத்துவம்,  புவியியல்,  ஆன்மீகவியல்,  ஆலய  நிர்மாணம்,  சமவ  சரணம்  பற்றி  கூறும்  நூல்.



இந்நூலில்  உள்ள சருக்கங்களில்  உள்ள  1406  செய்யுள்களைச்  சுருக்கி  656  செய்யுள்களாக  தர  நினைத்தது,  என்  தமிழின்  பலமின்மை  என்றாலும்,  என்  பேதமை  என்றாலும், இரண்டுமே  பொருந்தும்.  தத்துவங்கள்  நிறைந்த  மிகப்  பெரிய  நூலின்  முதல்  நுனியை,  பயமறியா  மழலை,  பாம்பினை  பிடித்தது  போல்,  முதல்  முதலாக  பிடித்துள்ளேன்,  அருகனின்  அடி தொழுது.  விமர்சிப்பது  உங்கள்  உரிமை,  திருத்திக்  கொள்வது  என்  கடமை.  பேராசிரியர்  சிரே.  தன்யகுமார்  அவர்கள்  பதிப்பாசிரியர்  ஆகி,  ஜைன  இளைஞர்  மன்றம்,  சென்னை,  வெளியிட்ட  புத்தகத்தை  தழுவி  எழுதியது.  13 அன்னாருக்கு  என்  மனமார்ந்த  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு  பொறியாளனாக  முதன்முதல்  நான்  தொட்ட  தத்துவ  நூல்.  ஆன்றோரும்,  சான்றோரும்  பிழை  நீக்கி  பொறுத்தருள  வேண்டுகிறேன்.  தமிழ்  அறிந்த  புலவர்கள்,  தமிழறியா  மழலையின்  தமிழென  எண்ணி,  ஒதுக்கும்படி  கேட்டுக் கொள்கிறேன்.



இது  கதைய  தெரிந்து  கொள்ள  எழுதியதே  என்  நோக்கம்,  என்பதால்  நான்  இயன்றவரை  தத்துவங்களையும்  கருத்தில்  கொண்டு  எழுதியது.  அனைத்து  வர்ணனைகள்,  தத்துவங்களை  அறிய  மூலத்தைப்  படிக்கும்படி  கேட்டுக்  கொள்கிறேன். நன்றி.  வணக்கம். 

                                                                                                              அன்புடன்  உங்கள்,
                                                                                                       முட்டத்தூர். அ. பத்மராஜ்.



1.  வைஜயந்தன்  முக்தி  சருக்கம்.


முன்னுரை  :

மேரு  மந்தர  காவியத்தின்  நாயகர்கள்  மேரு  மந்தரர்
     விமலநாத  கணதரர்கள்  ஈராறில்  முதலிருவர்
மல்லிசேன  மாமுனியின்  மனங்  கவர்ந்த  இரட்டையர்கள்
     அவர்  யாத்த  இந்நூலின்  முதல்  துவக்கம்  வைஜயந்தன்    1

மல்லிசேன  மாமுனிவர்  பன்மொழியின்  பெட்டகந்தான்
     ஸ்ரீ  குந்த  குந்தர்  நூல்களுக்கு  பொருளுரைத்த  வித்தகர்  தான்
திருப்பருத்தி  குன்றம்  வாழ்ந்து  திருமுனியாய்  திகழ்ந்தவர்  தான்
     முதல்  முதலாய்  முத்தமிழில்  மேரு  மந்தரம்  தந்தவர்  தான் 2

நாட்டுச்  சிறப்பு :

செம்பொன்  மலை  இறங்கும்   வெள்ளி  ஒத்த  நீர்  வீழ்ச்சி
     மண்  மகள்  மேனி  மூடி  நெலிந்தோடும்  நதியின்  மாட்ச்சி
சிதைந்தோடும்  சீற்றமெல்லாம்  சிதோதகை  நதி  எழிலில்
     வடகரை  அமைந்தது  தான்  கந்தமாலினி  எனும்  நாடு      3

நாலு  வகை  தேவர்களும்   ஐஞ்சிறப்பை  ஆற்றி  வர
     ஏழு  நிலம்  சூழ்ந்திருக்கும்  மும்மதிலின்  காவலிலே
கால்  சிலம்பு  தாளமிட  கன்னியர்கள்  ஆடலிலே
     கந்தமாலினி  நாடு  களித்திருக்கும்  கர்வத்துடன்              4

( நாலு  தேவர்கள் :  பவணர்,  வியந்தரர்,  சோதிஷ்கர்,  கல்பவாசியர். 
ஐஞ்சிறப்பு :  பஞ்சகல்யாணம்,  ஏழு  நிலம் : 1.பிரசாத  சைத்ய  பூமி,
2. காதிகா  பூமி, 3. வல்லி  பூமி, 4. உத்யான  பூமி, 5. துவஜ  பூமி,
6. கல்ப விருட்ச  பூமி, 7.கிருஹாங்கான  பூமி. )

மணி  கொண்ட  மலைகள்  உண்டு  வளமான  வனப்பும்  உண்டு
     கனி  கொத்து  மரங்களுண்டு  கன்னல்  விளை  காடுமுண்டு
அணிகலங்கள்  பூண்ட  மக்கள்  அகத்தூய்மை  ஒழுக்கத்தோடு
     களிப்போடு  வாழும்  இடமே  கந்தமாலினி  என்னும்  நாடு   5


கருணையிலே  தோய்ந்திருக்கும்  கற்புடை  மகளீருண்டு
     சமணத்தின்  சாரம்  கொண்ட  தர்மத்தோடு  ஞானமுண்டு
ஈரிரண்டு  கொடைகள்  உண்டு  இம்மையிலும்  புனிதமுண்டு
     கந்தமாலினி  நாட்டில்  கற்பக  விருட்சமுண்டு          6

குழைகளும்  மலரும்  கொண்ட  குளிர்ந்த  நல்  சோலையுண்டு
     கட்டவிழ்  கமலம்  அல்லி  கவிழ்ந்திட்ட  பொய்கையுண்டு
கள்ளுண்ட  வண்டினங்கள்  கரைந்திடும்  ஓசையாலே
     கந்தமாலினி  நாட்டில்  சுரந்திடும்  ஸ்வரங்கள்  ஏழு          7

கல்வியில்  தேர்ந்தோர்  உண்டு  கனி  மொழி  சொல்வோருண்டு
     துறவிக்கு  உணவு  தந்து  தாம்  உண்ணும்  நல்லோருண்டு
இருவேளை  துதிப்போருண்டு  எப்போதும்  அகிம்சை  உண்டு
     கந்தமாலினி  நாட்டில்  கட்டவிழ்ந்த  மகிழ்ச்சி  உண்டு       8

சொற்பழி  சற்றும்  இல்லை  துயர்  தரும்  மறமும்  இல்லை
     இழிதொழில்  அறவே  இல்லை  இன்னல்கள்  ஏதும்  இல்லை
மிகுபொருள்  விழைவும்  இல்லை  பிறன்மனை  ஓம்பலிலை
     கந்தமாலினி  நாட்டில்  களங்கங்கள்  ஏதுமில்லை            9

ரத்தினம்  வைரம்  பசும்பொன்  நறுமணம்  கொண்ட  அகிலும்
     வேழங்கள்  துஞ்சி  பெற்ற  வெண்நிறம்  கொண்ட  கொம்பும்
ஆடிடும்  மயிலின்  தோகை  அவிழ்ந்திட்ட  கவரி  முடியும்
     அளவின்றி  நிறைந்திருக்கும்  கந்தமாலினி  நாட்டில்      10


ரத்தினம்  பதித்த  தரையும்  நல்லொளி  பளிங்குச்  சுவரும்
     பொன்னினால்  வேய்ந்த்  கூரை  பொருளினால்  அமைந்த  கூடம்
மைந்தரும்  மையலாரும்  மகிழ்ந்திடும்  வெண்மாடம்  கொண்ட
     இந்திரன்  மாளிகைகள்  இருந்தன  கந்தமாலினி நாட்டில் 11

அறக்கொடை  தந்து  மகிழும்  இறை  தரும்  அரண்மனையை
     குறைவற்ற  செல்வம்  கொண்ட  குடிமக்கள்  ஊராரெல்லாம்
வெண்மதியை  சுற்றியுள்ள  விண்மீன்கள்  கூட்டம்  போல
     எப்புறமும்  சூழ்ந்திருக்கும்  எழில்  நாடம்  கந்தமாலினியில்    12

நகர்  சிறப்பு :  

கந்தமாலினி  நாட்டில்  பல  நகரில்  ஒரு  நகரம்
     வைஜயந்தன்  கோலோச்சும்  வளமான  எழில்  நகரம்
தென்னங்கீற்றினை  போல் நதி  பாயும்  அந்நகரம்
     வீதசோகம்  என்னும்  வீங்கெழில்  பெரு  நகரம் 13

ஆயிரம்  வாயில்  உண்டு  அந்நகரில்  உள்  நுழைய
     ஆயிரம்  விழிகள்  வேண்டும்  அந்நகரின்  அழகு  காண
சந்தனக்  குழம்புடனே  மென்மலர்கள்  மிதந்து  நிற்கும்
     அகழிகள்  சூழ்ந்திருக்கும்  அரிவையர்கள்  நீராட         14

மலையொத்த  மதில்  சுவர்கள்  மாநகரை  சூழ்ந்திருக்க
     மன்னனவன்  மாளிகையும்  மாமேரை  ஒத்திருக்க
மாளிகையின்  மேல்  முகட்டில்  முகில்  கூட்டம்  படர்ந்திருக்க
     பகலவனின்  வழி  மறிப்பால்  பாதி  இரவானதங்கு      15

கெண்டை  மீன்  விழியுடனும்  கச்சை  அணி  தனத்துடனும்
     பாவையர்கள்  பந்தாட  பார்ப்பவர்கள்  நெஞ்சாட
ஐங்கணையான்  மலரம்பு  அவ்விடத்தை  தாக்கி  விட
     வீதசோக  நகரம்  எல்லாம்  வீழ்ந்ததங்கு  இன்பத்தில்   16

காமவேள்  ஒத்த  மைந்தர்  கடையினிலே  பொருள்  வாங்க
     மாலையும்,  மாமணி,  முத்தும்  சாலையில்  சறுக்கி  விழ
வீழ்ந்ததை  எடுப்பாரின்றி  கிடந்ததே  அவ்விடத்தில்
     வீதசோகம்  கொண்ட  வைஜயந்தன்  கோலருமை       17

கள்  கக்கி  இதழ்  விரியும்  கமலத்தை  போல்  முகமும்
     களம்  காணும்  வேலைப்  போல்  கருவிழிகள்  கொண்ட  மாதர்
மதுவுண்ட  வண்டினங்கள்  மயக்கத்தில்  ஆடுதல்  போல்
     மகர  யாழ்  இசைக்கு  ஆடும்  வீதசோக  நடன  சாலை     18

வைஜயந்தன்  சரிதை  :    

பொன்னுலகம்  விண்  பெயர்ந்து  மண்ணுலகம்  வந்தது  போல்
  வீதசோக  நகரத்தின்  வெற்றி  வேந்தன்  

வைஜயந்தன் சாத்திரங்கள்  முழுதறிந்த  சமுத்திரமாய்  இருந்திடுவான்
     சத்துருக்கள்  நெஞ்சினிலே  கூற்றுவனாய்  அமர்ந்திருப்பான் 19    

பொய்  நீக்கி  மெய்  காணும்  நற்காட்சி  உடையவன்
     போரின்றி  இன்  சொல்லால்  பகை  நீக்கும்  வல்லவன்
பொருள்  தந்து  கைசிவந்த  பொன்  மனம்  கொண்டவன்
     வையமே  முன்  வந்து  வணங்கும்  மா மன்னவன்         20

நல்லதோர்  பழம்பெரும்  குலத்தினில்  பிறந்தவன்
     சொல்லிலும்  செயலிலும்  விண்ணவர்  போன்றவன்
பூமகள்,  நாமகள்,  பொருள்  மகள்  மூவர்க்கும்
     புன்னகைப்  பெருகிட  புகலிடம்  தந்தவன்                   21

கம்பினைத்  தழுவிடும்  பூங்கொடி  போன்றவள்
     கருத்தினைக்  கவர்ந்திடும்  காவியத்  திருமகள்
சர்வமும்  ஸ்ரீ  ஆன  ஸ்ரீ  தேவி  பெற்றவள்
     மன்னனைத்  தழுவிடும்  மாராணி  சர்வஸ்ரீ                   22

காவலன்  கரங்களில்  கட்டுண்ட  சர்வஸ்ரீ
     கமலத்தின்  வண்டாக  கள்ளுண்டு  வாழ்ந்திட்டாள்
முல்லைக்  கொடியீனும்  முதல்  அரும்பைப்  போல
     செல்வச்  சிறு  மழலை  செவ்விதழாள்  ஈந்திட்டாள்         23

பெயர்  சொல்லும்  பிள்ளைக்கு  பெயர்  வைக்கும்  நந்நாளை
     முறசறைந்து  அறிவித்தான்  முடி  மன்னன்  வைஜயந்தன்
குடிமக்கள்  முடிமக்கள்  பொருளோடு முன்  வந்து
     சஞ்சயந்தன்  என்று  மகவுக்கு  பெயரிட்டு  மகிழ்ந்தார்கள்      24
    
ஒரு  மகவும்  மகவல்ல  ஒரு  மரமும்  தோப்பல்ல – என்று
     வைஜயந்தன்  சர்வஸ்ரீ  வாழ்நாளில்  முடிவெடுத்து
சயந்தன்  என்றழைக்க  சந்திர  பிம்பம்  போன்று
     சஞ்சயந்த  இளவளுக்கு  சகோதரனைத்  தந்தார்கள்     25

குஞ்சியின்  பேரழகும்  குன்று  போல்  தோளழகும்
     குறு  இடை  வஞ்சியர்கள்  குடிகொள்ளும்  மார்பழகும்
களிறினை  கட்டி  வைக்கும்  கல்  கம்பத்  துடையழகும்
         கண்டவர்கள்  கண்  மயங்கும்  காளையானான்  சஞ்சயந்தன்     26

புண்ணியம்  உதித்ததனால்  போகமும்  தளிர்த்ததனால்
     இமையசையா  விண்ணவரும்  இமையசையும்  பேரெழிலில்
இளையராணி  என்றழைக்க  சஞ்சயந்தன்  மனம்  களிக்க
      திருமணத்தை  செய்து  வைத்தான்  தோளழகன்  வைஜயந்தன்      27


மதுமலரின்  உள்புகுந்து  மதுஅருந்தும்  வண்டினை  போல்
     சஞ்சயந்தன்  மனைவியுடன்  தனை  மறந்து  வாழ்ந்திருந்தான்
இல்லறத்தின்  இன்பவெள்ளம்  இருவரையும்  அடித்து  செல்ல
     குலம்  தழைக்க  ஓர்  மழலை  பெற்றதந்த  பேரரசு      28

தந்தை  என்ற  பட்டத்துடன்  தளர்ந்திருந்த  வைஜயந்தன்
     தாத்தன்  என்ற  புதுப்  பதவி  பொங்கியது  புதுப்புனலாய்
பாட்டனின்  பெயர்  தனையே  பேரனுக்கும்  சூட்டியதால்
     பேரின்ப  மகிழ்ச்சியிலே  பாட்டனும்  மிதக்களுற்றான்         29

வைஜயந்தன்  சமவ  சரணம்  சேர்தல்  :

நன்மலர்  நாற்றம்  பொங்கும்  நல்லெழில்  பூவனத்தில்
அமைந்திட்ட  சமவசரணம்  அரசன்  செவி  நாடி  வர
நிறைமதி  கண்ட  நாளில்  பொங்கிடும்  கடலைப்  போல
     நிதியறை  திரந்து  விட்டு  நிறை  பொருள்  தானம்  ஈந்தான் 30

எதிர்பாரா  பெருஞ்செல்வம்  ஏழை  இல்லம்  வந்தது  போல்
     எழுந்திட்டான்  மகிழ்ச்சியிலே  சமவசரணம்  கேட்பதற்கு
வீதசோக  மக்களுக்கு  வேழத்தில்  முரசு  கொட்டி
     சமவசரணம்  வந்து  சேர  சடுதியில்  செய்தி  சொன்னான்   31

இந்திர  தனுசை  ஒத்த  முதல்  மதில்  கடந்து  சென்று
     மானஸ்தம்பத்தின்  முன்னே  வலமது  சுற்றி  வந்து
மனதினில்  கர்வம்  போக்கி  மலர்களால்  வணங்கி  நின்று
     மும்மதில்  தாண்டி  உள்ளே  முதலடி  எடுத்து  வைத்தான்    32

பத்தறை  மாற்றுப்  பசும்பொன்  பதினாறு  நல்மணிகள்
     கொட்டியே  இழைத்துக்  கட்டி  குளிர்ந்தொளிரும்  கோயிலை
மாமத  களிறு  ஒன்று  மலையினை  வலம்  வந்தாற்  போல்
       மலர்களைச்  சொரிந்து  கொண்டு  மன்னனும்  வலம்  வந்தானே   33

இளங்கதிரோன்  அழகினிலே  இதழ்  விரியும்  கமலம்  போல்
     அணை  அழித்து  செல்லுகின்ற  ஆற்று நீர்  வெள்ளம்  போல்
பக்தியின்  மேல்  காதலுற்று  பாசுரங்கள்  அத்தனையும்
     பகவானை  போற்றி  போற்றி  பரவசத்தில்  பாடலானான்    34


நறுமலரால்  தொடுத்தெடுத்த  பூமாலை  அணியா  மேனியும்
     விழிகளை  ஒளியால்  வீழ்த்தும்  வெண்மதி  போன்ற  உடலும்
காதி  கர்மங்கள்  போக்கிய  கடவுள்  இவர் தானென்று
     உள்ளத்தில்  மகிழ்ந்து  நிற்போர்  உண்மையில்  அரியவரே      35
(  இதனால்  உருவ  நினைப்பு.  ரூபஸ்தவம்.  சொல்லப்பட்டது  ) 

அகத்தொளி  படிகம்  போல  மூவொளி  கொண்ட  மேனி
     ஆற்றலின்  ஞானம்  தன்னை  அகத்தினில்  இருத்தி  கூறும்
அளப்பரிய  ஒளியை  தன்னுள்  அடக்கி  நீர்  இருந்த  போதும்
முற்றும்  துறந்த  உன்னை  வணங்குவோர்  ஞானவான்கள்    36
( மூவொளி :  மனோ,  வாக்கு,  காய  ஜோதி  )    
(  இதனால்  செயல்  ஆற்றல்  நினைப்பு,  வாஸ்துஸ்தவம்  சொல்லப்பட்டது )
    
பல் உயிர்க்கெல்லாம்  நீங்கள்  பரிவுடன்  அருளுகின்ற
     நால்குணம்  அத்தனையும்  தன்னுள்ளே  பரந்து  நிற்க
தாமரை  மலரின்  மீது  தவழ்ந்திடும்  உன்  பாதந்தன்னை
     வணங்கிடும்  மக்கள்  எல்லாம்  வையத்தில்  வெகுசிலரே 37

(  நால்குணம்  :  அனந்த  ஞானம்,  தர்சனம்,  சுகம்,  வீர்யம் )
(இதனால்  குணத்தலைமை  நினைப்பு,  குணஸ்தவம் சொல்லப்பட்டது)

மாதவம்  ஒன்றை  மட்டும்  மனதினில்  ஏற்றிக்  கொண்டு
     மூவுலக  முதல்வன்  முன்னே  ஐம்புலன்  அடக்கி  நின்று
உயிர்  முதல்  ஒன்பது  பொருளின்  குணங்களை  எனக்கு  நீங்கள்
     உரைத்திட  வேண்டும்  என  வேண்டினான்  வேந்தன்  அங்கு 38

வைஜயந்தன்  தத்துவம்  கேட்டல்:

     மயக்கத்தில்  தெளிந்து  நிற்கும்  நற்காட்சி  உடைய  வேந்தே
          உயிரும்  உயிரற்ற  பொருளின்  வினையூறி  வரும்  வழியும்
     வினையுதிர்ந்து  பந்தமற்று  விண்ணுலகம்  செல்நெறியும்
           உனக்கு  உரைத்திடுவேன்  உயர்வாக  நினைத்து  கேளாய் 39  

மனம்  வாக்கு  காயத்தோடு  ஐம்பொறிகள்  அமையப்  பெற்று
     மூச்சுடன்  ஆயுள்  சேர்ந்த  இவ்வீரைந்தை  ஜீவனெல்லாம்
ஞானத்தின்  நற்காட்சியோடு  வீடு  பேறடையும்  உயிர்கள்
     மோட்சத்தின்  உயிர்களாகும்  மற்றவை  சம்சார  உயிர்கள்        40

எண்வினை  முற்றும்  கெட்டு  எண்குணம்  அடையப்  பெற்று
     ஞானத்தின்  சீலத்தாலே  நல்லவை  மட்டும்  செய்து
களங்கமும்  கேடும்  நீங்க  பல் உயிர்  பணிந்து  வணங்கும்
     பசும்பொன்  போல  ஒளிரும்  மோட்சத்தின்  உயிர்களெல்லாம்          41

மூவுலக  உயிர்களெல்லாம்  ஓரைந்து  பரிவர்த்தனையால்
     பிறப்போடு  இறப்பின்  ஊடே  கர்மத்தின்  வினைகள்  கூட
கதி  நான்கில்  பிறந்து  உழன்று  கரைசேர  துடித்து  சிக்கி
     சம்சார  நெறியில்  நிற்கும்  சம்சார  உயிர்கள்  எல்லாம்          42
(ஐந்து  பரிவர்த்தனை :  திரவியம், காலம், சேத்திரம், பாவம், பவம் )

மானிட  விலங்கின்  கூட்டை  துறந்திட்ட  ஆன்மாவெல்லாம்
     கதி  நான்கில்  சென்றடையும்  அதனதன்  கர்மம்  போல
தேவ  நரக  உயிர்கள்  எல்லாம்  அதனதன்  தன்மையாலே
     மனித  விலங்கு  இரு  கதியில்  மறுபிறப்பின்  சுழலெடுக்கும்       43

நால்வகை  தேவரெல்லாம்  நில  நீர்  நெருப்பு  உயிர்களாவர்
     நில  நீர்  நெருப்பு  உயிர்கள்  கூட  மனித  விலங்கின்  பிறப்பெடுப்பர்
அருகன்  தவம்  செய்யாரெவரும்  அகமிந்ர  உலகம்  செல்லார்
     மாறிய  மற்ற  தவத்தோர்  கீழ்  முகத்  தேவராவர்                44


போக  பூமி  விலங்கும்  நரரும்  நற்காட்சி  உடையோரானால்
     தேவலோகம்  முதலகிய  சௌதர்ம  கல்பம்  அடைவர்
மோகமும்  மயக்கமும்  நீங்கா  பொய்காட்சி  உடையோரானால்
     பவண  வியந்தர,  சோதிட  தேவராய்  பிறப்பெடுப்பர்            45                

நீரின  உயிரும்  ஆணும்  நிறைந்திடும்  நரகம்  ஏழ்வரை
     அணிகலம்  ஏற்கும்  மகளீர்  அடைந்திடுவர்  நரகம்  ஆர்வரை
நான்குகால்  விலங்கினங்கள்  நாடிடும்  நரகம்  ஐந்து வரை
     ஊர்ந்திடும்  உயிர்கலெல்லாம்  உழன்றிடும்  நரகம்  நால்வரை    46        

வானத்தில்  பறக்கும்  உயிர்கள்  வாழ்ந்திடும்  நரகம்  மூன்று வரை
     தவழ்ந்திடும்  ஆமைபோல்  உயிர்கள்  பிறந்திடும்  நரகம்  இரண்டுவரை
மனமில்லா  ஓணான் போன்ற  உயிர்  சென்றிடும்  நரகம்  ஒன்று வரை
     இவ்வேழு  நரகந்தன்னில்  இயங்கிடும்  உயிர்கள்  எல்லாம்        47

உருவத்தில்  இல்லா  உயிர்கள்  மூடிய  கை  தீபம்  போல்  தான்
     சிறு  உடல்  எடுக்கும்  உயிர்கள்  சிறியதாய்  சுருங்களில்லை
பெரு உடல்  எடுத்திட்டாலும்  பெரிதாக  விரிவதில்லை
     எடுத்திடும்  கூட்டுக்கெல்லாம்  எப்போதும்  ஓரளவே              48
             
ஐம்புலன்  இச்சை  எல்லாம்  தூய்த்திட்ட  இன்பத்தாலே
     சேர்ந்திடும்  வினைகள்  எல்லாம்  பதிந்திடும் ஆன்மா  தன்னில்
மறுமையில்  பிறப்பெடுக்க  அக்கர்மத்தின்  பலனையெல்லாம்
     தூய்த்திடும்  செய்கை  அந்த  உயிரினில்  இயல்பாய்  சேரும் 49 

 தன்மம்
தேருக்கு  அச்சு  வேண்டும்  மீனுக்கு  நீரும்  வேண்டும்
     அச்சின்றி  ரதமும்  ஓடா  நீரின்றி  கயலும்  வாழா
அச்சு  நீர்  தேரும்  மீனும்  சேர்ந்திடும்  தன்மத்தாலே
     உயிரும்  உயிரற்ற  பொருளும்  ஒன்றிடும்  தன்  முயற்சியின்றி    50

 அதன்மம்
ஒன்பத்து  ஏழு  விண்ணுலக  சொர்கத்தின்  படலங்களும்
     நரகங்கள்  ஏழும்  கூடி  மாமேரு  மலையும்  பூமி
முடிவிலா  நிலையை  கொண்ட  அதன்மத்தி  திரவியத்தால்
     அவையாவும்  நிலைபெற்று  அமைந்ததை  அறிவாய்  மன்னா  51

 புண்ணியம்
தெளிந்த  நல்  உள்ளம்  கொண்டு  நாலிட  பக்தியாலே
     ஈராறு  குணங்கள்  கொண்ட  புறத்தவம்  அகத்தவத்தால்
சம்சார  வாழ்வில்  சேரும்  கர்மத்தின்  மாசு  தனை
     நீக்கினால்  வீட்டை  காட்டும்  உயர்நிலை  புண்ணியமாகும்   52

          
 ஊற்று
காதி  வினை  உதயத்தாலும்  கருணை  சற்றும்  இன்மையாலும்
     கட்டி  நிற்கும்  துக்கமெல்லாம்  பாவ  புண்யம்  இரண்டினாலே
கொல்லன்  உலைகளத்து  கொதித்து  நிற்கும்  இரும்பின்  மீது
     சேர்ந்த  நீரின்  தன்மை  போல  சேர்ந்தது  தான்  ஊற்று  என்பர்     53

குறைந்த  ஊற்று,  நிறைந்த  ஊற்று,  துவர்பசையில்லா  ஊற்று,
     எண்ணெயில்  படிந்த  தூசாய்  இருக்கின்ற  ஊற்றும்  ஒன்று
ஞானமும்,  ஞானமற்ற,  பாவ,  புண்யத்தோடு,  மனோபாவ  திரவியம்-என
     ஈரைந்து  உற்று  உண்டு  என்றறிவாய்  வைஜயந்தா              54

 செறிப்பு
மூன்றடக்கம்,  பத்தறமும்,  பன்னிரு  சிந்தனையும்
ஈராறடக்கத்தில்  இணைந்திட்ட  தவங்கள்,  பரிசங்கள்
வென்றிட்ட  ஒரு  முனிவன்  சென்றிட்ட  தியானத்தால்
     தீபத்தில்  இருள்நிலை  போல்  வினைசெறிப்பு  கிட்டிவிடும்        55

   வீடு
  நல்ல  கெட்ட  எண்ணத்தால்  ஆன்மாவில்  பதிந்த  பாவம்
     உறுதி  பெற்ற  தூய  எண்ணம்  உயிரிடத்தில்  பதியும்  போது
நல்ல  கெட்ட  எண்ணக்  கர்மம்  உயிரை  விட்டு  நீங்குதலே
     பாவ  மோட்சம்  என்று  அறிவாய்  வீதசோக  மா  அரசே       56

அரசன்  நகர்  திரும்புதல் :

செங்கதிரோன்  எழில்  கண்ட  செங்கமலப்   பூப்போல
     தீர்த்தங்கரை  தொழுதெழுந்து  திரட்டிய  நல்  ஞானத்தோடு
அரண்மனையை  அடைந்த  மன்னன்  அனைவரையும்  வரவழைத்து
     சஞ்சயந்தனுக்கு  அரசளித்து  தன்  துறவை  உரைக்கலானான்   57

இளமையும்  எழிலும்  என்றும்  வானவில்  தன்மையாகும்
     வளமையும்  செல்வமும்  உறவும்  புதுமழை  வெள்ளமாகும்
வெளியிலே  வைக்கப்பட்ட  விளக்கொளிபோல்  ஆயுளாகும்
     நமக்கிட்ட  ஆயுளுக்குள்  நாடுவோம்  வீட்டை  நோக்கி           58


மனிதனாய்  பிறப்பெடுத்து  கர்மத்தில்  உழலும்  போதும்
     அச்சத்தில்  துன்பம்  தூய்த்து  அலைகின்ற  விலங்கு  போலும்
தீயொத்த  நரகம்  தன்னில்  தலை  வீழ்ந்து  அலரும்  போதும்
     அருகனே  உன்  அடிகள்  அரணாக  வேண்டும்  என்றும்     59

முக்குற்றம்,  நான்கு  கதிகள்,   ஐம்பொறி  கர்மம்  சேர
     இரு  மூன்று  உடல்களிலே,  ஓரேழு  பரிவர்த்தனையால்
சேர்ந்திடும்  கர்மம்  எட்டால்  வரும்  சம்சார  சுழற்சி  தனை
     நற்காட்சி  உடையோரெல்லாம்  கடந்திடும்  மாற்றமாகும்      60

( முக்குற்றம் :  விருப்பு, வெறுப்பு, மயக்கம். 
நன்கு  கதிகள் :  மனித,  தேவ, விலங்கு,  நரகம். 
ஆறு  உடல்கள் : பிருத்வி,  அப்பு,  தேயு,  வாயு,  வனஸ்பதி,  திரஸ. 
ஏழு  பரிவர்த்தனை : திரவிய,  சேத்திர,  கால்,  பவ,  பாவ,  ரூபம்,  நாமம்.  )

எலும்பொடு  நரம்பைக்  கட்டி  குருதியில்  ஊற  வைத்து
     சதையினை  மேலே  அப்பி  தோல்  எனும்  போர்வை  சாத்தி
மலத்தோடு  புழுக்கள்  சொரியும்  ஒன்பது  வாயில்  வைத்து
     உடம்பென்னும்  குடிசை  மேலே  ஆசையால்  அற்பமானோம் 61

பிறவியின்  சுழற்சியாலே  மூவுலக  உயிர்கள்  தம்மை
     ஈன்ற  நம்  தாயைப்  போல  இதயத்தால்  பேணி  காத்து
மூவுலக  நாதனான  அருகனின்  நிலையை  நோக்கி
     அழிவிலா  சித்தப்  பதவி  அடைவதே  அருமை  என்றான்         62

வைஜயந்தன்  வாய்  மொழி  புகுந்தது  சஞ்சயந்தன்  செவிவழி
     அவன்  சிந்தையில்  பதிந்தது  திருவறம்  ஒன்று  தான்
ஜினதர்மம்  நிலை  நீக்கி   ஜெகம்  ஆள  நினைப்பது
     பெரு  விலை  ரத்தினம்  தந்து  பிண்ணாக்கு  பெறுவதென்றான்    63

மணி  முடி   மறுத்தனன்  தனையனும்  தம்பியும்
     மகிழ்ந்தனன்  மன்னவன்  மகன்களின்  நெறியினால்
மகன்களும்  தந்தையும்  மறுமையை  வென்றிட
     மாதவம்  செய்திட  மனம்  ஒத்து  சென்றனர்           64

பேரன்  வைஜயந்தனுக்கு  முடிசூட்டி  மகன்களுடன்  துறவெய்தல்.

பூமியின்  நீரை  நீக்கி  பொழிகின்ற  மழையை  அருந்தும்
     வானத்தில்  பாடி  வாழும்  வானம்பாடி  பறவை  போல
புவியாளும்  போகந்  தன்னை  புதல்வர்கள்  புறத்தே  நீக்க
     குருவியின்  பனங்காய்  ஆக  வைஜயந்தன்  கிரீடம்  பெற்றான்    65

மணி  அணி  பட்டும்  நீக்கி  மழை  மேக  குஞ்சும்  போக்கி
     மத  யானைக்கொப்ப  மூவர்  ஐம்பொறி  அடக்கி  நிற்க
மும்மணி  மனதில்  ஏற்ற  முனிவர்கள்  கூட்டம்  சேர்ந்து
     இணையிலா  மோட்ச  நாட்டின்  இளவல்கள்  போல  ஆனார்    66

ஆகம  நூல்கள்  கற்று  அமைந்த  நல்லொழுக்கம்  ஏற்று
     வைஜயந்த  மாமுனிவன்  வளர்ந்த  மலை  உச்சி  சென்றான்
பனி,  மழை,  வெய்யில்  தாங்கி  மலைமிசை  மலை  நின்றார்  போல்
     தவத்தினில்  தோய்ந்ததாலே  சுக்கில  தியானம்  பெற்றான்    67

சித்தரசம்  சேர்ந்த  இரும்பு  செம்பொன்னாய்  ஒளிர்ப்பது  போல்
     வைஜயந்தன்  மேனி  எல்லாம்  ஆன்ம  ஒளி  விரிந்து  நிற்க
நறு  நாற்ற  மலர்களாலும்  நறுமணப்  பொடிகள்  கொண்டும்
     எண்திசையும்  தேவர்  சூழ்ந்து  தூவி  தூவி  துதிக்களானார் 68

முக்குற்றம்  உனக்கில்லை  என்றால்   முக்குற்றம்  நீ  உரைத்தாய்
     பற்று  உனக்கில்லை  என்றால்  மூவுலக  ஞானப்  பற்று
சுற்றம்  உனக்கில்லை  என்றால்  அனைத்துயிரும்  உனது  சுற்றம் – என
     சோர்வற்ற  மாமுனியாய்  முனிவர்களின்  இறைவனானாய்    69

ஐங்கணையான்  உடலழகும்  முழு  மதியின்  முக  அழகும்
     செம்பொன்  கழல் அணிந்த  செங்கமல  அடியழகும்
கார்கூந்தல்  கன்னயர்கள்  காதலுரும்  வடிவழகும்
     பவணலோக  பார்த்திபனாய்  தரணேந்ரன்  விரைந்து  வந்தான்    70

வீழ்ந்திடும்  எழிலைக்  கண்டு  வீங்கிய  தவத்தான்  சயந்தன்
     வருகின்ற  பிறவி  தன்னில்  இவ்வழகில்  பிறக்க  எண்ணி
ஐம்பொறி  அடக்கம்  அசைய  ஆனந்த  மோட்சம்  நீங்க
     பவணலோகத்தில்  சேர்ந்து  தரணேந்திர  தேவனானான்      71


மலையொத்த  பெருமை  கொண்டோர்  மனதினில்  ஊறும்  ஆசை
     சிறு  துரும்பாய்  இருந்திட்டாளும்  தூசியிலும்  சிறியர்  ஆவார்
பெருந்தவத்தோன்  சயந்தன்  கொண்ட  பிழை  பெற்ற  ஆசையாலே
     வீடு  கதி  நீங்கியது  வினை  கலந்த  ஆன்மாவாலே         72


நெய்  சோற்று  உருண்டைகளை  நீட்டி  நிற்கும்  பாகர்களை
     கருங்களிறு  சினப்பதை  போல்  குணமுடையோர்  வீடு  செல்வர்
எச்சில்  இலை  சோற்றுக்கு  எழுந்து  நின்று  வால்  குழைக்கும்
     நாய்  குணத்தார்  அனைவருமே  பிறவி  சுழல்  பேதையரே        73

ஐம்புலன்  அடக்கி  வென்ற  அருந்தவன்  சயந்த  முனி
     ஆசையின்  தாக்கத்தாலே  அமிர்தமென்று  நஞ்சை உண்டு
துஞ்சுவேன்  என்று  அஞ்சி  துப்பிய  நஞ்சை  மீண்டும்
     தூய்த்திட்ட  நிலையை  ஒத்தான்  சுழற்சிக்கு  துவக்கமானான் 74

நாகத்தின்  வாய்  கொட்டும்  நஞ்சை  நாம்  அருந்திட்டால்
     நாழிகையில்  உயிர்  பிரிந்து  நமது  உடல்  பிணமாகும்-ஆனால்
ஐம்பொறிகள்  என்கின்ற  அரவம்  நமை  தீண்டிவிட்டால்
     பிறவிச்  சுழலில்  சிக்கி  பேதலிக்கும்  ஆன்மாக்கள்      75

அருந்தவம்  ஏற்றதாலும்  நால்வினைகள் வென்றதாலும்
     வைஜயந்த  மாமுனியும்  மறுமையின்றி  அருகனானார்
சய்ந்தமுனி  தவமிருந்தும்  மனதில்  வந்த  இச்சையாலே
     பவணலோக  அமரனாகி  மோட்சமின்றி  அவதரித்தான்       76

வைஜயந்தன்  முத்திச்  சருக்கம்  நிறைவுற்றது.

2.     சஞ்சயந்தன்  முக்திச்  சருக்கம்.

மோட்ச  கதி  ஐந்தில்  நின்ற  வைஜயந்த  பகவானுக்கு
     தேவர்கள்  சூழ  வந்து  தேங்கிய  உடலைச்  சுற்றி
பாவினால்  துதிகள்  பாடி  பல  மலர்  தூவி  நின்று
     வணக்கத்தால்  வாழ்த்திவிட்டு  வானகம்  திரும்பச்  சென்றார் 77

மாயயை  தூரத்  தள்ளி  மாதவத்தார்  சஞ்சயந்த  முனி
     தந்தையின்  மோட்சம்  கண்டு  தனிப்  பெரும்  முனிவனாக
ஒழுக்கத்தை  உடையாய்  ஏற்று  ஒரு  நிலை  மனதில்  கொண்டு
     இராப்  பகல்  நேரமின்றி  நின்றிட்டார்  பதுமையாக         78

சஞ்சயந்தன்  செய் தவத்தால்  சார்ந்திருந்த  சூழ்நிலையில்
     மான்  குட்டி  புலியின்  குட்டி  மாறி  மாறி  முலையருந்த
காரம்  பசுவின்  கன்று  களிறு  பெற்ற  குட்டியோடு
     காட்டரசன்  மழலையுடன்  களித்து  விளையாடியது     79

அரவத்தின்  அழகு  கண்டு  அணைத்தது  எலியும்  அங்கு
     கீரியும்  பாம்பும்  கூடி  பகையினை  விட்டு  ஆட
கவரிமான்  வால்  பதிந்த  கருவேல  முல்லைப்  போக்க
     கடும்  புலி  அங்கு  வந்து  முள்லைக்  கவ்வியது  வாயினாலே    80

ஒரு  நிலை  ஆர்த்த  மனதில்  அகம்  புறம்  கொண்ட  துறவும்
     மூவகை  அடக்கம்  கொண்டு  நால்வகை  சன்னை  நீக்கி
ஐம்புலன்  நுகர்ச்சி  போக்கி  துறவிகள்  கடமை  ஆறால்
     எழுவித  பரிணாமத்தால்  தோன்றினார்  தியானத்தோடு      81

( 4 சன்னைகள் : ஆகார சன்னை,மகளீர் சன்னை, பய சன்னை, பொருட்பற்று)

ஓரெட்டு  தூய்மை  கொண்டு  உயர்ந்திட்ட  சஞ்சயந்த  முனி
     ஒன்பது  யோகம்  பெற்று  ஐயிரண்டு  ஊற்றைக்  கட்டி
பதினோரு  ஆகமங்கள்  பயின்று  பெற்ற  ஞானத்தோடு
     ஈராறு  சிந்தனையில்  பதின்மூன்று  ஒழுக்கம்  கற்றார்        82

காமமாம்  வனத்தை  தாண்டி  காட்டரசன்  சிங்கம்  போல
     சஞ்சயந்த  மாமுனிவர்  தவ நிலையில்  ஆழ்ந்து  நிற்க
வித்துதத்தன்  வித்யாதரன்  விமானத்தில்  மேலே  செல்ல
     விமானமும்  ஓடாதாகி  ஒருநிலையில்  நின்றதங்கு       83

நால்பிறவி  தொடர்ந்த  வினை  இப்பிறவி  பொங்கி  நிற்க
     சஞ்சயந்த  முனியை  தூக்கி  தன்  விமானம்  ஓடச்  செய்தான்
ஐந்தாறு  நதிகள்  கூடும்  நறுமண  சந்தனத்  தோப்பில்
     விமானம்  நின்றதங்கு  விரலிடையும்  அசையவில்லை         84

விமானத்தை  இயங்க  வைக்க  வீருகொண்ட  பலத்தை  சேர்த்தும்
     முயற்சிகள்  அறுந்த  கோபம்  முனியின்  மேல்  வந்து  தங்க
சொல்லொண்ணா  துன்பங்களை  தொடுத்திட்டான்  முனியின்  மேலே
     முனிவனும்  பணிந்து  ஏற்றான்  ஊழ்வினை  கர்மத்தாலே     85

பிணங்களை  உண்டு  வாழும்  பெரியவாய்  அரக்கன்  வந்து
     ஆதவன்  மறைந்த  பின்னே  அழித்துண்ன  வருவான் என்றான்
அரக்கன்  எனும்  சொல்லை  கேட்ட  அருந்தவம்  அறியா  மூடர்
     கல்  மலை  கையில்  ஏந்தி  முனிவரனை  சூழ்ந்து  கொண்டார்    86

கருமுகில்  இடித்துக்  கொள்ள  வெடித்திடும்  இடியைப்  போல
     காற்றுடன்  கையை  கோர்த்து  கொட்டிடும்  மழையைப்  போல
கருநிற  வித்தியாதரர்கள்  கல்  மழை  பொழிந்து  நிற்க
     மாமேரு மலையைப்  போல  சஞ்சயந்தர்  தவத்தில்  நின்றார்  87

வானமே  மறையும்  வண்ணம்  வித்துதத்தன்   கணைகள்  வீச
     வானவர்  விழிகள்  மூடி  அதிர்ச்சியில்  அங்கம்  அதிர
அருகனின்  குணத்தில்  நின்று  சாதுக்கள்  தன்மை  ஏற்ற
     சஞ்சயந்த  மாமுனியின்  தவநிலை  தடுத்தது  அம்பை        88

காரிருள்  மேனி  கொண்டு  கண்டவர்  நடுங்கும்  வண்ணம்
     வித்துதத்தன்  வீரு  கொண்டு  எண்திசை  எல்லாம்  நின்று
நெருப்பையும்  மலையும்  ஏந்தி  தாக்கினான்  புயலைப்  பொல
     சஞ்சயந்தன்  வெகுளி  போக்கி  சுக்கில  தவத்தில்  நின்றார்  89

கார்கால  மின்னல்  போல  போல்  கொண்ட  வித்துதத்தன்
     போகமிகு  ஆசையாளும்  கூடிய  சுற்றத்தோடும்
நாகபாசத்தால்  கட்டி  முனியை  நடுகடலில்  இடுவேன்  என்றான்
        உறவினர்  துன்பமுற்றார்  உடையும்  கப்பல்  பயணத்தார்  போல்   90

கர்மவினை  நான்கு  அழித்து    கடை  ஞானம்  புணர்ந்த  முனிக்கு
     தேவர்கள்  சூழ்ந்து  வந்து  தேன்  மலர்  பூஜை  செய்ய
துட்டதேவன்  வித்துதத்தன்  துன்பத்தில்  திகைத்து  நின்று
     மலை  ஒன்று  சரிவதைப்  போல்  மண்ணிலே  வீழ்ந்து  விட்டான் 91

கீழ்  திசை  ஆதவன்  போல்  கீழுலக  பவணர்  வர
     நடுவுலக  வியந்திரரும்  நாற்திசையும்  வந்து  நிற்க
மேலுலக  தேவரெல்லாம்  மேகம்  போல்  சூழ்ந்து  வர
     வினை  அறுத்த  சஞ்சயந்த  முனி  குன்றிலிட்ட  விளக்கானார்     92

சந்தன  குழம்பு  கொண்டு  தரை  எல்லாம்  மெழுகி  விட்டு
     நறுமண  மலர்களாலே  நாற்புறம்  அழகு  செய்து
பழவகை  அனைத்தும்  வைத்து  பலகார  வகைகள்  வைத்து
     மாமுனி  சஞ்சயந்தன்  மலரடி    பணிந்து  நின்றார்          93

அகிற்  புகை  தூபம்  இட்டு  ரத்தின  தீபம்  ஏற்றி
     வெண்சங்கு  நிறம்  நிகர்த்த  கூர்முனை  அட்சதை  கூட்டி
இந்திரன்  சபையில்  ஆடும்  அரம்பையர்  நடனம்  முன்னே
     பக்தியில்  துதிகள்  பாடி  தேவர்கள்  தொழுது  நின்றார்     94

தேவர்கள்  துதி  :

நால்  வினை  அறுத்த  தேவா   நான்கு  ஞானம்  ஏற்ற  தேவா
     மதி  நான்கை  கடந்த  தேவா  வாலறிவு  கொண்ட  தேவா
கதி  நான்கை  துறந்த  தேவா  கல்பமோட்சம்  பெற்ற  தேவா
     துதி  நான்கை  தாண்டி  சென்று  துறவு  கொண்ட   எம்  தலைவா   95

(4 மதி : மதி, சுருத, அவதி, மனப்பர்ய.  வாலறிவு :  கேவலக் ஞானம். 
4 துதி :  அரகந்த, சித்த, சாது, தர்மம் )

மூவுலகும்  ஆட்கொள்ளும்  முழு  ஞானம்  கொண்டவரே
     அணு  கொண்டு  உலகளக்கும்  அரும்  ஆற்றல்  உடையவரே
எவ்வுயிர்க்கும்  அதன்  இயல்பை  தொழில்  தெரிய  செய்தவரே
     இவை  எதிலும்  பற்றில்லா  எண்குணத்து  நாயகனே         96

கதி  நான்கின்  சுழற்சியிலே  உயிர்  அடையும்  மகிழ்ச்சியையும்
     ஐம்புலங்கள்  தினம்  நுகர்ந்து  அனுபவிக்கும்  இன்பத்தையும்
அத்தனையும்  நீர்  துறந்து  அடைந்து  விட்ட  சுகத்தின்  முன்னே
     அற்பமாய்  போனதை  யாம்  அறிந்திட்டோம்  என் தேவா        97

புள்ளினங்கள்  கூடி  வந்து  கனி  மரத்தை  சூழ்வது  போல்
     மூவுலக  தேவர்களும்  ஓரணியாய்  விரைந்து  வந்து
சித்தபரமேட்டியான  சஞ்சயந்தன்  பாதம்  தன்னில்
     சிரம்  கொண்ட  மலர்  சொரிந்து  சேவித்து நின்றார்கள்     98

அமிர்தத்தைப்  பார்த்திடினும்  அழகியது  நஞ்சு  என்று
     அருந்தியவன்  போல  ஐம்புலனின்  சலனத்தால்
சயந்ததேவன்  தான்  கொண்ட  தரணேந்திர  உருவத்தில்
     சஞ்சயந்தன்  தாள்  தொட்டு  தலைவணங்கி  நின்றிட்டான்   99

உறவு  என்று  பிணைந்தவரும்  மறுபிறப்பில்  பகைவராவர்
     பகைமிகுந்து  வாழ்ந்தவர்கள்  மறுமையிலே  துணைவராவர்
இப்பிறவி  உறவு  பகை  இடம்  மாறும்  மறுமையிலே
     சம்சார  சுழற்சியிலே  எதிரி  நண்பர்  யாருமில்லை      100

கோலோச்சும்  அரசர்களும்  கொடும்  நரகில்  பிறப்பெடுப்பார்
     கொடும்  நரகில்  பிறந்தவர்கள்  புவியாளப்  பிறப்பெடுப்பார்
நான்கு  வகை  தேவர்களும்  தொழு நோய்  பற்றி  வாழ்ந்திடுவார்
     மனிதனாக  பிறப்பெடுத்தார்  வரும்  பிறவி  நாயாவார்       101

இம்மையில்  பிறப்பெடுத்த  எழில்  கொஞ்சும்  மங்கையர்கள்
     மறுமையில்  பிறப்பெடுப்பார்  மன்மதன்  போல்  ஆண்களாக
உடன்  பிறந்து  உடன்  வளர்ந்த  உயிர்  போன்ற  தங்கையர்கள்
     உயிர்  தந்து  உடல்  காக்கும்  உத்தம  தாய்  பிறப்பெடுப்பர் 102

கடலலைகள்  கொண்டு  வந்து  கரை  சேர்க்கும்  மணலை  போல்
     காற்றினால்  கூட்டப்பட்ட  காய்ந்த  இலை  சருகை  போல்
நம்  உடலின்  தண்மை  நிழல்  நம்முடனே  வருவது  போல்
நம்  வினைகள்  தொடர்ந்து  வரும்  நிலையற்ற  உறவு  இன்றி        103

முடிவில்லா  பிறப்புகளில்  அருந்தவத்தான்  சஞ்சயந்தன்
     வித்துதத்தன்  உறவினனாய்  பிறப்பெடுத்து  வரவுமில்லை
வித்துதத்தன்  எடுத்து  வந்த  எத்தனையோ  பிறவிகளில்
     சஞ்சயந்த  முனியின்  மீது  தான்  கொண்ட  பகையுமில்லை  104


வெஞ்சினமே  நமக்கெல்லாம்  தீங்கு  தரும்  பகையாகும்
     தான்  செய்த வினையனைத்தும்  தீங்கு  கதி  சென்றடையும்
உடன்  பிறப்பும்  உறவுகளும்  ஒரு  சமய  நேரத்தில்
     பகையாக்கி  பாழாக்கும்  இழிதன்மை  கோபத்தாலே     105

ஒரு  பிறப்பில்  சிம்மசேன  அரசனான  சஞ்சயந்தன்
     வெஞ்சினத்தால்  செய்த  கர்மம்  அவனிடத்தே  தேங்கி  விட
இப்பிறவி வரை  வித்துதத்தன்  உடன்  தொடர்ந்த  வைரபாவம்
     அத்தனையும்  கொடுஞ்  செயலாய்  அமைந்ததுவும்  கர்மத்தால்     106

முன்  நான்கு  பிறப்பினிலே  சஞ்சயந்தன்  செய்த  வினை
     வித்துதத்தன்  அப்பிறப்பில்  வைரபவம்  கொண்டதனால்
தேவலோகம்  சென்றடைந்து  திரும்பி  வரா  நிலை  பெற்று
     மோட்சகதி  அடைந்துள்ளார்  மும்மணியாம்  சஞ்சயந்தர்      107

வித்துதத்தன்  செய்த  துன்பம்  சஞ்சயந்த  பட்டாரகர்க்கு
     நிலைத்த  புகழ்  நிறை  கீர்த்தி  தப்பாமல்  தந்தது  தான்
அவன்  செய்த  இழி  செயல்கள்  அவன்  தந்த  நெடும்பழிகள்
     அத்தனையும்  பொறுத்ததனால்   மோட்சகதி  முனிவருக்கு     108

இத்தனையும்  எடுத்து  சொன்ன  கல்பதேவன்  ஆதித்யாபன் முன்
     வித்துதத்தன்  வேண்டி  நின்றான்  வேதனையில்  மனம்  கனக்க
கோபக்  கனல்  கொழுந்தை  கருணை  என்னும்  நீர்  கொட்டி
     வினை  வென்ற  சஞ்சயந்தன்  அடி  பணிந்து  தொழு  என்றான்  109

கார்  மாரி  பொழிந்ததனால்  கடும்  நெருப்பு  அழிந்தது  போல்
     கனியினிய  சொல்  மழையால்  கர்வ  மனம்  தெளிவடைய
செங்கதிரோன்  காதலிலே  செங்கமலம்  மலர்ந்தது  போல்
     ஜினேஸ்வரனின்  தாள்  அடியில்  வித்துதத்தன்  வீழ்ந்திருந்தான்   110           

சஞ்சயந்தன்  முக்தி  சருக்கம்  நிறைவு.


3. பத்திரமித்திரன்  அறங்கேள்விச் சருக்கம்.


மாமேரு  நடுவில்  நிற்க ஈரேழு  நதிகள்  பாய
அல்லியும்  கமலம்  பூத்த அழகிய  ஆறு  பொய்கை
கடந்திடா  அகழியை  போல் கடல்களால்  சூழப்  பெற்ற
நாவலந்  தீவினுள்ளே நாடுகள்  அமைந்ததேழு 111


திங்களின்  முழு  வடிவில் திகழ்கின்ற  பரத  நாட்டில்
செம்பொன்னால்  செய்திட்ட தேவலோக  சுந்தரத்தில்
தருமங்கள்  செழித்து  நின்று தளராத  நன்மை  கொண்ட
உத்தம  போக  பூமியில் உள்ளதே  சீயமாபுரம்          112

வான்வழி  செல்லும்  தேவர் விழி  கண்ட  அந்நகரை
தாண்டியே  செல்லமாட்டார் துலங்கிய  அழகை  கண்டு
சோலையும்  பொழிலும் கூடி சொர்க்கத்தை  நமக்கு  காட்டும் 
சீயமாபுரத்தின்  சிறப்பை செப்பவும்  வார்த்தையில்லை        113

அந்நகரை  ஆளும்  அரசன் அரிமா  நிகர்  சிம்மசேனன்
கொடுப்பதில்  கர்ணனில்லை அளிப்பதில் கற்பக விருட்சம்
கொவ்வை  வாய்  மது  தளும்பும் கொடியிடை  மகளீரெல்லாம்
மன்மதனை  மறந்து  நின்று மன்னனை  தொழுது  நிற்பார்    114

கார்குழல்  கொண்ட  சிரமும் கள்  சிந்தும்  செவ்விதழும்
 வேலொத்த  விழி  இரண்டும் மாவொத்த  கன்னம்  கொண்ட
பாற்கடல்  அமுதம்  நிறைந்த பளிங்கொத்த  தனங்கள்  சுமையை
தாங்கொணா  இடையை  கொண்ட தனி  ராணி  ராமதத்தை      115

ஆகமங்கள்  ஆய்ந்து  கற்று வேதம்  நான்கில்  வித்தகனாய்
கூறுகின்ற  சொல்லனைத்தும் குற்றமில்லா  உத்தமனாய்
சத்தியத்தின்  கோட்டில்  நிற்க சத்தியகோடன்  என்றழைக்கும்
ஸ்ரீபூதி  அந்தணனே சீயபுரம்  அமைச்சனாவான்              116

பத்மசண்டம்  நகரினிலே பார்  புகழும்  வள்ளல்  அவன்
சுதத்தன்  பெயர்  கொண்ட செல்வம்  நிறை  வணிகனவன்
மதியொத்த  முகத்துடனும் மனம்  கொண்ட  கற்புடனும்
சுதத்தன்  மனைவியாக சுமத்திரையும்  சேர்ந்திட்டாள்          117

வந்து  நின்று  யாசிப்போர்க்கு வருத்தத்தைப்  போக்கிவிட
  கார் முகில்  சூல்  கொண்டு கடும்  மழை  பெய்வது  போல்
அள்ளிக்  கொடுத்ததனால்  அவன்  பெற்ற  நல்வாழ்த்தால்
குலந்தழைக்க  பிறந்த  மகன்  பத்திரமித்திரன்  என்ற  மகன்   118

பல  கலை  கற்றுத்  தேர்ந்த நல்லறம்  கொண்ட  மனதும்
இல்லற  இன்பம்  தூய்க்க இந்திராணி  ஒத்த  துணையும்
மணி  முத்தும்  பொருளும் வானொப்ப  வளரும்  வணிகம்
நிறைவுடன்  பெற்று  நின்றான் சுதத்தனின்  பத்திரமித்திரன்    119
  
   வருநிதி  குறையுமானால் மாதனம்  தாழ்ச்சி  கொள்ளும்
மாதனம்  குறையா  நிலைக்கு வணிகமும்  பெருக  வேண்டும்
   பத்திரமித்திரன்  நெஞ்சில் பதிந்திட்ட  இந்த  எண்ணம்
ரத்தின  தீவை  நோக்கி நாடினான்  வணிகம்  செய்ய        120

   புண்ணியம்  உதயமானால் பொற்குவி  தானே  வரும்-என்ற
அருகனின்  அருள்  மொழிக்கு பத்திரமித்திரன்  சான்றானான்
   மாமணி  முத்து  வைரம் மணம்  தரும்  சந்தனம்  அகிலும்
பொன்னுடன்  பொருளும்  ஏற்றி புறப்பட்டான்  சீயமாபுரம்   121
  
   செவ்வானம்  போன்ற  மேனியும் சித்திரை  மதியின்  முகமும்
வைரத்தை  ஒத்த  வனப்பும்  வரையிலா  செல்வத்தோடும்
   மித்திரன்  நகரில்  நுழைய அந்நகர்  வணிகர்  கூடி
பவழ  கம்பளம்  விரித்து பரிவுடன்  வரவேற்றார்கள்     122

   நாட்டிலே  திருடர்  இல்லை  நா  தவறும்  பழக்க  இல்லை
போட்டியில்  பொறாமையுறும் புல்லர்கள்  யாரும்  இல்லை
   வளையாத  கோல்  கொண்டு வளரும்  நிறை  அருளோடு
தாய்  அன்பில்  காக்கின்றார் தவ  நெறியான்  சிம்மசேனர்        123

  வணிகர்கள்  வாய்  மொழியும் வளமான  நகர்  எழிலும்
பத்திரமித்திரன்  நெஞ்சில் பசுமரத்து  ஆணியாக
  கொண்டு  வந்த  செல்வத்துடன் கூட்டி  வரும்  சுற்றத்துடன்
இந்நகரில்  குடி  வாழ இதயமதில்  எண்ணலானான்     124

  கொண்டு  வந்த  பெரும்  நிதியை கருவறையில்  வைப்பது  போல்
கள்ளமில்லா  ஒருவனிடம் கை  பதித்து  தான்  சென்று
  சுற்றத்தார்  சூழ  வந்து இந்நகரில்  வாழ்வதற்கு
சீயபுர  அமைச்சனான ஸ்ரீபூதியிடம்  கேட்கலானான்     125

மிகு  பொருள்  விரும்பலும் பிறர்  பொருள்  ஓம்பலும்
பிறர் பொருள் கொண்டு தான்  தூய்த்தலும்  கொடுத்தலும்
அப்பொருள்  மாற்றலும் அதன்  மறைவிடம்  சொல்தலும்
மாபெரும்  பாவம்  என்று மறையோன்  இதழ் மலர்ந்ததன்று   126

மந்திரியின்  மதி  மொழியில் மாவணிகன்  தாள்  பணிந்தான்
அவன்  கொணர்ந்த  ரத்தினங்கள் சாட்சி  இன்றி  ஸ்ரீபூதி  பெற்றான்
செப்பிலிட்ட  செல்வம்  எல்லாம் அமைச்சனிடம்  தந்த  பின்பு
பத்மசண்டபுரத்தை  நாடி பத்திரமித்திரன்  செல்லலானான் 127


உறவினர்கள்  அனைவருடன் ஐந்து  நிலம்  கடந்த  பின்பு
சிம்மபுரம்  வந்து  சேர்ந்தான் செம்மதியான்  பத்திரமித்திரன்
அமைச்சனின்  மாளிகை  போய் அரிய  சொற்கள்  பல  கூறி
செப்பில்  தந்த  ரத்தினத்தை திருப்பி  பெற  வேண்டி  நின்றான்   128


ஊழ்வினை  வந்து  உறுத்த உள்ளம்  மதி  கெட்டதனால்
மிகு  பொருள்  ஆசையினால் தன் தகுதி  தான்  இழந்து
தான்  கற்ற  வேதங்களும் தன் அகத்து  சத்தியமும்
தலை  கவிழ  வீழ்ந்ததனால் தனை  மறந்து  பேசலானான்         129


பத்திரமித்திரன்  ஆன உன்னை நான்  எப்போதும்  பார்த்ததில்லை
செப்பு  நிறை  ரத்தினங்கள் நீ  தந்ததற்கு  சான்று  எங்கே
செல்வம்  கொழிக்கும்  நாட்டின் சிறப்புள்ள  மந்திரி  நான்
என்  பெயரைக்  கெடுப்பதற்கு நீ  பேதமையில்   பேசுகின்றாய்    130


பிறர்  அறியா  சமயத்தில் பொருள்  பெற்ற  உம்  மனதும்
பொருள்  அன்று  நான்  தந்து புலம்புகின்ற  என்  மனதும்
சத்தியத்தின்  வழி  நின்று சத்தியகோடன்  என்றழைக்கும்
உந்தன்  எந்தன்  உள்ளங்களே நீர்  கேட்கும்  சாட்சியாகும்       131

எளியவன்  இயம்பும்  சொல் என்றும்  சபை  ஏறாது
வஞ்சகன்  வலியன்  என்றால் வழிமொழிய  பலருண்டு
பெருஞ்செல்வம் கொண்டோர்கள் பேசுகின்ற  வார்த்தை  என்றும்
சத்தியத்தின்  வார்த்தையென்று சாதிக்கவும்  ஆளுண்டு            132

செய்நன்றி  கொன்றவர்க்கும் பிறன்  மனை  மகிழ்ந்தவர்க்கும்
எய்திடா  பழி  வந்து ஏழ்  நரகம்  சென்றடைவர்
கண்  இமைக்கும்  நேரத்தில் கடந்து விடும்  இவ்வாழ்வில்
செல்வத்தின்  ஆசையினால் புகழ்  ஞானம்  கெட்டழிவர்       133


இந்த  நீதி  அத்தனையும் நீர்  அறிந்த  அமைச்சராவீர்
என்  செல்வம்  கவர்வதனால் எல்லையற்ற  பழியடைவீர்
என்றுறைத்த  பத்திரன்  மேல் எழுச்சி  கொண்ட  கோபத்தால்
மெய்  வருந்த  தண்டித்தான் மாளிகை  விட்டகற்றிட்டான்         134

பாடுபட்டு  சேர்த்த  பொருள் பாம்பின்  வாய்  தேரையாக
ஸ்ரீபூதி  நிலவறையில் சேர்ந்து  விட்ட  காரணத்தால்
வகையறியா  பத்திரமித்திரன் விட்ட  பொருள்  மீட்டெடுக்க
சிம்மசேனன்  செவி நுழைய தெரு  எல்லாம்  புலம்பலானான் 135 
                   
தன்  குற்றம்  காணாத தன்  முகத்து  கண்ணினை போல்
தான்  செய்த  பாவத்தை தன்  நெஞ்சு  அறியாமல்
பத்திரமித்திரனை  பளிங்கு நகர்  விட்டு  அகற்ற
கள்ளனவன்  கள்வர்  கொண்டு கவர்ந்திட்டான்அவன்  பொருளை  136


பணாமுடியில்  காத்து  வந்த ரத்தினத்தை  இழந்த  நாகம்
பணாமுடியும்  இழந்து  விட்டு பரிதவிக்கும்  அரவம்  போல
சேர்த்த  பொருள்  அத்தனையும் ஸ்ரீபூதி  கயவன் கொண்டான்-என
பட்டினத்து  வீதிகளில் பைத்தியம்  போல்  கூச்சலிட்டான்     137


சிம்மசேனன்  செவிகளிலே சேர்ந்து  விட்ட  அவன்  புலம்பல்
ஸ்ரீபூதி  வேதியனை  சபைக்கு அழைத்து  கேட்க்கலானான்
அந்தணனோ  அரசனுக்கு பித்தன்  அவன்  என்றுறைத்து
செப்பி  நிறை செல்வம் கேட்டு எனை திருடன்என  தூற்றுகிறான்  138

அறநூல்கள்  கூறும்  அறம் களவாடல்  பெரும்  பாவம்
இம்மை  தவிர்  மறுமைக்கும் இழுத்து  செல்லும்  ஏழ்  நரகம்
அறம் கூறும்  அந்தணன்  நான் இந்நாட்டு  அமைச்சனும்  நான்
அவன்  கூறும்  இழிசெயலை அரசே  நான்  செய்வேனோ         139


வஞ்சகத்தை  உள்  அடக்கி வார்த்தைகளில்  அமுதம்  கூட்டி
வாய்  நிறைந்த  பொய்யனான வேதியனும்  சொல்  இறக்க
மண்  ஆளும்  மன்னவனும் மந்திரி  சொல்  உண்மையென்று
நம்பியதால்  மௌனமானான் நடந்த  செயல்  அறிந்திடாமல்   140

கொடுமதியான்  ஸ்ரீபூதி கொடிய  தன்  காவலர்க்கு
நெஞ்சு நிறை  வஞ்சனையால் நிதி  கவரும்  ஆசையினால்
வெஞ்சினத்து  வேழத்தையும் வெறி  பிடித்த  நாய்களையும்
வெள்ளை  மன  வணிகன்  மீது விரட்டி  விட  ஆணையிட்டான்   141


உயிர்  பிழைத்து  வாழ்ந்திடவும் தன்  உயர்  செல்வம்  பெற்றிடவும்
கருடனை  கண்டு  அஞ்சும் கருநாகப்  பாம்பினை  போல்
ஸ்ரீபூதி  கட்டளையால் சிதைந்து  விட்ட  மனதுடனே
அதிகாலை  மரம்  ஏறி அனுதினமும்  பிதற்றலானான்          142


பிறர்  பொருள்  ஓம்பலினால் பெறுகின்ற  பழி  வினையால்
குலதர்ம கீர்த்தியோடு புகழ்  ஞானம்  விட்டகலும்
திருமகளும்  இடம்  பெயர்வாள் தமக்கையவள்  உட்புகுவாள்
என்றுறைக்கும்  நீதியெல்லாம் ஸ்ரீபூதி  மனம்  ஏறவில்லை     143


பகை  மிகு  மன்னர்களை தந்திரங்கள்  செய்து  வீழ்த்தி
பட்டத்து  யானை  தனை பறிக்க  வழி  சொல்லும் மந்திரி
குற்றமற்ற  நல்  குடியர் கொடுத்துவைத்த  கைபொருளை
கபடத்தால்  கொண்ட  இவன் சீயபுரம்  அமைச்சன்  இல்லை 144

மேண்மை  குணமும்  கொண்டு மேல்  குலம்  தனில்  உதித்த
அமைச்சனின்  இழி  செயலை அரசன்  முன்  நிறுத்தி  கேட்டால்
சீயமாபுர  ரஜ்ஜியத்தின் சிறு  மதியான்  ஸ்ரீபூதியை
சிரம்  கவிழ  செய்திடுவேன் என பத்திரமித்திரன்  புலம்பலானான்   145


வில்லொத்த  இரு  புருவம் வெண் நிலவின்  பிறை  நூதல்
சங்கு  நிற  மென்  கழுத்து சாயாத  பெருந்  தனங்கள்
ஒடிந்து விடும்  துடியிடையும் ஒளிர்கின்ற  துடையும்  கொண்ட
சிம்மசேனன்  கரம்  தவழும் ராமதத்தை  செவியுற்றாள்        146

வணிகன்  அவன்  கூற்றினிலே வருகின்ற  வார்த்தை  எல்லாம்
முன்  பின்  முரண்  இன்றி முட்டின்றி  கொட்டியதால்
பித்தனல்ல  இவன்  என்று பெரும்  கூர்மை  பெற்ற  ராணி
வணிகனை  முன்  அழைத்து வருத்தத்தை  கேட்களுற்றாள் 147


தனி  வணிகன்  வாய்  மொழியில் தவழ்ந்திட்ட  வாய்மை  தனை
தாய்  நெஞ்சாள்  ராமதத்தை தன்  மனதில்  பதிய  வைத்தாள்
சத்தியத்தின்  பெரு  வணிகா தயங்காதே  சிறு  துளியும்
இந்நாட்டு  மன்னனிடம்  நீ எடுத்தியம்பு  என்றுறைத்தாள்          148


நீதி  நூல்கள்  பல  கற்ற நீதிமான்  போல்  வணிகனும்
தன்  பக்க  நியாயத்தை தவறின்றி  கூறலானான்
பொருளிழந்த  வணிகனுக்கும் பொய்  கூறும் அமைச்சனுக்கும
சொக்கட்டான்  தான்  ஆடித்   தீர்ப்பளிப்பேன்  என்றுரைத்தாள்   149


அரசோச்சும்  அரசன் அவன் அமைச்சனுக்கு  அழைப்பனுப்ப
சீயபுர  மந்திரி  ஸ்ரீபூதி  வந்து அவை  வணங்கி  அமர்ந்திட்டான்
மாராணி  ராமதத்தை  சபையில் மகிழ்ச்சியுடன்  பல பேசி
சொக்கட்டான்  ஆடுவதில் தனக்கு  நிகர்  யாரென்றாள்       150

சிம்மசேனன்  விழிகளிலே தெரிந்திட்ட  பொருள்  அறிந்து
சிம்மபுர  அமைச்சன்  அவன் சித்தத்தில்  மகிழ்வு கொண்டான்
அமைதி  கொண்ட  நதியினிலே அடியில்  சுற்றும்  சுழலை போல
ராமதத்தை  மன நதியை ராஜ்ய  மந்திரி  அறியவில்லை       151


சகுனியின்  சொக்கட்டான் பாண்டவர்க்கு  தீங்கிழைக்க
ராமதத்தை  சொக்கட்டான் வணிகனுக்கு  வாழ்வளிக்க
முதல்  இரண்டு  ஆட்டத்தில் மூத்த  மந்திரியை  முறியடித்து
முத்திரை  மோதிரமும்  பூநூலும் முக  நகையாள்  கை  கவர்ந்தாள் 152 


மயிலோடு  போரில்  தோற்று மயங்கிய  சிம்மத்தைப்  போல்
மலைச்சாரல்  தூறலைப்  போல் மேனி  எல்லாம்  நீர்  பொடிக்க
அவமானம்  அவனைத்  தாக்க அரசன்  முன்  தலை  கவிழ்ந்தான்
அறம்  கூறும்  அமைச்சனான சத்தியகோடன்  ஸ்ரீபூதி         153


கை  கவர்ந்த  கணையாழியை செவிலித்தாய்  கரம்  பதித்து
ஸ்ரீபூதி  மாளிகை  போய் செப்பெடுத்து  வா  என்றாள்
மென்  தனத்தால்  நிபுணமதி மென் நடையில்  கருவூலம்  போய்
கணையாழி  காட்டி  பெற்றாள் பத்திரமித்திரன் ரத்தன  செப்பை    154


மண்ணோரை  வசப்படுத்தும்   மயக்கிடும்  கூர்மை  நோக்கால்
சிந்தித்து  செயல்  செய்தால் தேவர்களும்  தப்பமாட்டார்
வஞ்சகன்  அமைச்சன்  கொண்ட வணிகனின்  ரத்தின செப்பை
செங்கமல  தேவி  ஒத்த ராமதத்தை  கை  கொடுத்தாள்      155


கரந்த  பாலை  மடி சேர்க்கும் கைத்திரம்  கொண்டவள்  நீர்
நிபுணமதி  என்னும்  பெயர் நின்  திறனுக்கு  ஒத்த  பெயர்
பாம்பின்  வாய்  தவளையினை  தப்பிக்கச்  செய்தது  போல்
ரத்தின  செப்பை  மீட்டாய் கருவூலம்  சென்று  என்றாள்          156

கற்பக  மரம்  தழுவும்  காமர் வல்லி  கொடியைப்  போல
கட்டவிழ்  அழகு  கொண்ட கனி  முகத்தாள்  ராமதத்தை
மன்னனை  நெருங்கி  வந்து மலர்  கரம்  கொண்ட  செப்பை
காட்டிட  வேந்தன்  மகிழ்ந்து நீ  சிந்தாமணி  தேவி  என்றான்    157
 ( சிந்தாமணி: நினைத்த  பொருள் தரும் ரத்தினம் )

நஞ்சை  ஒத்த  வஞ்சகர்கள் நல்ல  வாழ்க்கை  வாழ்வதும்
நன்மையே  செய்பவர்கள் நரக  சோதனைக்குள்  ஆவதும்
கலியுகத்தின்  மாற்றத்தால் கட்டி இழுத்து சென்றாலும்
கடைசியில் கிட்டிவிடும் நல் வாழ்க்கை அறத்தார்கே      158


வணிகனுக்கு அமைச்சன்  செய்த வஞ்சகத்தை  உணர்ந்த  மன்னன்
வணிகனின்  குணம்  அறிய வைத்திட்டான்  ஒரு  தேர்வை
ஸ்ரீபூதி  கருவூல  ரத்தினங்கள்  பல கலந்திட்டான் வணிகன்  செப்பில்
தந்திட்டான்  வணிகனிடம்  தன் பொருளை  எடுத்து  செல்ல  159


செப்பினை  பெற்ற  மித்திரன் திறந்திட்டான்  அரசன்  முன்னே
திகைத்திட்டான்  விழி  அகல தேர்ந்த  பல  ரத்தினத்தால்
பாலை  விட்டு  நீர்  பிரிக்கும் அரிய  திறன்  அன்னம்  போல
பத்திரன்  பிரித்தெடுத்தான் தன்  செல்வம்  அத்தனையும்      160


பிறர்  பொருள்  விரும்பல் பெரும் பாவம் என்றுணர்ந்தும்
சத்தியத்தின் செயல்கள் மட்டும் தரணியிலே  நிற்கும்  என்றும்
தேடிப் பெற்ற தன்  பொருள்கள் தன்னிடத்தே  வந்ததனால்
ஆறாம்  குண  நிலையில் அவ்வணிகன் மகிழ்ந்து நின்றான் 161
    
 ( குணநிலை : 1 முதல் 5 வரை இல்லறத்தார்,
6 முதல் 12 வரை  முனிவர்கள், 13, 14 கைவல்ய குணம்)

அறம்  அறிந்த அமைச்சனான ஸ்ரீபூதி  செய்த  குற்றம்
அவன் பெற்ற தண்டனையாய் அனைத்தயும்பெற்றுக்கொள்-என
அரசன்  இட்ட  ஆணையினை அடக்கத்துடன்  மறுதளித்து
வேந்தனிடம்  கூறலுற்றான் வேதம்  நிகர்  பத்திரமித்திரன்      162


அடுத்தவர்  பொருள்  ஏற்றல் தானத்திற்கு  உரியதன்று – அதை
என் உறவுக்கு ஈன்றிட்டால் இழி  நிலைக்கு ஒப்பாகும்
சந்ததியை நான்  இழப்பேன் சாய்ந்து  விடும்  குலப்பெருமை
நிச்சயமாய்  பிறர்  பொருளால் நேர்ந்து  விடும்  ஏழ்  நரகம்      163


வணிகனின் வாய் மொழியால் வியப்படைந்த  சிம்மசேனன்
புவியாளும்  நிலை  வரினும் பொய் கூறா மனம் உடையான்
மரணத்தைப் போக்கும் மருந்து மற்றவர் பொருள் என்றாலும்
ஏற்காத ஒழுக்கம்  கொண்ட ஒப்பிலா  வணிகன்  என்றான்        164  
                                         

மணிகளும் பொன்னும் வைரம் விளைந்திடும் நிலங்கள் பலவும்
மணிகளும் பொன்னும் வைரம் பதிந்திட்ட  மாளிகை சிலவும்
மணிகளும் பொன்னும் வைரம் நிறைந்திட்ட ரத்தின செப்பும்
அத்தனையும் பரிசாய் தந்து அகமகிழ்ந்து வாழச் சொன்னான்   165


வல்லிய  தோள்கள்  கொண்ட மல்லரை சபைக்கு அழைத்து
சாட்டையை பெரிதும் சுழற்றி மூபத்து  அடிகள்  தந்து
சாணத்தை முச்சட்டி  நிறைப்பி தலை மீது  கொட்டச் செய்து
கயவன்  அவன்   ஸ்ரீபூதியை கடத்தினான்  நாட்டை  விட்டு       166


முன் பிறப்பில் ஸ்ரீபூதி செய்த வினைகளின்  உதயத்தாலே
முற்பகல் தேவன் என்று மக்களால் புகழப்பட்டு
பிற்பகல் பேயன் என்று பெரிதும் அவன் இகழப்பட்டு
சிறுகன்று மான்களாளே வதைபடும் சிங்கமானான்        167


ஆசையினை ஆசையால் ஆசையாய் பற்றிக் கொள்ள
ஆசையே துன்பத்தை கூட்டி அதிவினைகள் செய்ய வைத்து
பிறவி எனும் பெருங்கடலை கடந்திடா  நிலை  நிறுத்தும்
ஆசையை அழித்துவிட்டால் அறுந்து விடும் பிறவிச் சுழல்       168


பிறவி சுழற்சிக்கு நல்வித்தாவது   நம்  போற்றும்  ஆசைகள்  தான்
கர்ம வினைகள்  சேர்வதும்  சலியா  நம்  ஆசையால் தான்
பழி  பகையும் பற்றாகி விட்டது   பற்றிட்ட  ஆசையால்  தான்
மோட்சகதியை முற்றும் தடுப்பது மோகத்தின் ஆசையால் தான் 169


விலங்கு நரக கதியில் வீழ்வதும் வெறி கொண்ட ஆசையால் தான்
வீடு அடைய துறவு செல்வதை தடுப்பதும் நம்  ஆசையே  தான்
மூன்றுலகிலும் வலிமையுடையது முடிவிலா  ஆசை  ஒன்றே
ஆசை வென்ற ஆன்மாக்கள் எல்லாம் அடைந்திடும் வீடு பேறே 170   

மிகுபொருள்ஆசையால் பிறர்நிதி கவர்ந்திட்ட வேதியன் ஸ்ரீபூதி
மண் பொருள் பெண்  எல்லாம் துறந்திட்டு வறியவனானான்
அரசதண்டனை தந்த கோபவினை அவன் மனதினில்  ஊற்றெடுக்க
பிறவிச்  சுழற்சிக்கு  ஆளாகி பெற்றிட்டான்  கர்ம வினை      171


காரிய களவினால் கடும்பழி ஏற்றிட்டான் சீயபுர அமைச்சன் 
கற்றவை பெற்றவை  அழிந்து   பிறவியை துறந்திட்டான்
பொருளாசைப் பற்றினாலே  விலங்குகதியில்  பிறந்து
அரசனின்  பொன்னறையில் அகம்பன் அரவமாய் பிறந்திட்டான்  172   


காரியகளவோ காரணக்களவோ இரண்டுமே பெரும் பழி தான்
நரக  விலங்கு பிறவி தருவது களவின் வழியினில் தான்
மனிதபிறவியில் இழிகுல உதயம் மறம் சேர்க்கும் களவினாலே
மண்ணுக்கு  நமைத் தந்த தாயும்  வெறுப்பது தவறான களவினாலே 173


ஆழி சூழ் நாட்டை ஆண்டிடும் அரசன் அரிமா சிம்மசேனன்
அழகு தளிர்கொடி  ராமதத்தை அவன் இடதினில் அமர்ந்திருக்க
 அந்தணன் தமிலன் இனி மந்திரி என அரசனும்  ஆணையிட்டான்
தமிலனின்  மதியினால்  சீயபுரம் தழைத்தது மேன்மேலுமே 174


தன் பொருள் பெற்றிட்ட அந்த தருமத்தின் பத்திரமித்திரன்
தழைத்து மணம் வீசும் காடான அதிங்கவனம்  புகுந்தான்
விண்ணினை தொட்டு நிற்கும் விமல காந்தாரம்  மலையில்
வரதர்ம முனியின் முன்னே அவர் மலரடி பணிந்து நின்றான்    175


மும்மணி அடையப் பெற்று சன்னைகள் நான்கை  நீக்கி
ஐம்புலன் அடக்கம் கொண்டு ஐந்து மா விரதம் ஏற்று
தவத்தினை தாங்கி நிற்கும் வரதர்ம முனிவரரிடம்
ஜினவற தர்மம் என்ன  என்று  செப்புவீர் எனக்கு என்றான் 176             


நால்வகை தானங்களை பாத்திரம் அறிந்து தரலும்
காமம் மயக்கம் நீங்கிய கடவுலார் பாதம் வணங்களும்
ஐம்பொறி வென்று நிற்கும் கணதரர் தலைவன் கூறும்
அறத்தினை ஒழுகல் ஒன்றே சுழற்சியை நீக்கும் மருந்து         177


நற்காட்சி உடைய மக்கள் ஈராறு விரதம் ஏற்று
இவ்வுலக உயிர்களிடம் இதயத்தால் அன்பு கொண்டு
துன்பங்கள் காணும் போது வெந்தனல் வெண்ணெய் போல
இன்னா செய்தார்க்கும் இரங்கிடல் அபயதானம்          178

ஆதவன்  ஒளியைக்  கண்டு அழிந்திடும்  ஒளியைப் போல
மும்மூடம் கொண்ட மக்கள் முழு  ஞானம் பெறுவதற்கு
ஆகம  நூல்கள்  தந்து அறவுறை  விரும்பிச் சொல்லி
அறிவினை வளர்த்தல் ஒன்றே ஆகம  சாஸ்திர  தானம்        179

 ( 3மூடம் : உலக மூடம், தேவமூடம், பாசாண்டி மூடம் )

ஞனமும்  சீலம்  கொண்டு சிதைத்திடும் மோகம் நீக்கி
பாவமும் பழியும் போக்கி பல் உயிர் இன்பம் நோக்கி
தருமமும் தயவும் சேர்த்து தரணியில் வாழும் உயிர்க்கு
உள்ளத்தால் அளிக்கும் உணவே உண்மையில் ஆகார தானம்    180


ஆகார தானம் ஒன்றில் அடைந்தது மூன்று கிளைகள்
தலையாய தானம் ஒன்று தவத்தோர்க்கு ஈனும் தானம்
இடையாய தானம் இங்கு நற்காட்சி உடையோர் ஏற்றல்
கடையாய தானம் என்றும் கிழங்குவகை உண்போர் பெறுதல்   181


ஆகார  தானம்  ஏற்றோன் ஊண் உண்ணும்  புலையனானால்
உயிர்களைக் காப்பானாகில் அளித்தவர் சிறப்பில் மேலாம்
உயிர்களை வதைப்பானாகில் அளித்தவர் ஏழ்  நரகத்தாரே
ஆகார தானம்  இது தான் அறிந்திடு பத்திரமித்திரா       182

பரமாத்மா  அந்தராத்மவும் பலன் தரும் பரம ஆகமமும்
குற்றத்தை நீக்கி தெளிந்த குன்றாத  உயர் நெறியும்
மும்மூடம் அறுவினை எண்மதம் முற்றிலும் அழித்து  நிற்கும்
தெளிந்த நல் தன்மை ஒன்றே செல்வழி மோட்சம்   செல்ல    183


பெரிய கொலை பொய் களவு பிறன் மனையில் ஒருவல்
பொருள் வரைதல் மத்தம் மது புலசு உணவின் நீக்கல்
பெரிய  திசை   தண்டம் இரு போகம் வரைந்தாடல்
மரீஇய சிக்கை  நான்கும் இவை மனை அறத்தார்  சீலம்.      184

 ( பொருள் வரைதல் : மிகு பொருள் விழையாமை. 
மத்தம் : கள். மது : தேன்.  பெரிய திசை : திசை விரதம்.  தண்டம் :
 ( அனர்த்த தண்டம் ) பயனிலா செய்யாமை. 4 சிக்கை :
தேச விரதம், சமாயிக விரதம், பேசாத விரதம்,  உபவாச  விரதம். )

பத்திரமித்திரன்  அறங்கேள்வி சருக்கம்  முற்றும்.
                       
     4.  பூர்ணச்சந்திரன்  அரசியற்  சருக்கம்

வரதர்ம  முனிவர்  சொன்ன  தர்ம  உபதேசம்  கேட்டு
     மதிகண்ட  அல்லி  போல  பத்திரமித்திரன்  மனமகிழ்ந்து
இருள்  ஒத்த  கர்மவினையை  இதயத்தை  விட்டுத்  தள்ளி
     உள்ளத்தில்  அமலன்  அடியை  ஊன்றியே  தொழுதெழுந்தான்          185

வணங்கிய  பத்திரமித்திரன்  வளங்கள்  சூழ்  சீயபுரத்தை
     நாடியே  நடக்கலானான்  தன்  மாளிகை  வந்து  சேர்ந்தான்
கருமுகில்  கொட்டுகின்ற  கார்கால  மழையினைப்  போல்
     வறியவர்க்கு  தானம்  தர  அந்த  வருத்தத்தில்  தாயுரைத்தாள்      186

நல்குலமும்,  நற்குணமும்,  நல்ஞனம்  குடிபிறப்பும்
     கீர்த்தியுடன்  பொன்  பொருளும்  கிட்டிடாது  மிக  எளிதில்
புகழ்  கண்ட  புருஷனவன்  பொருளின்றி  வசிக்கலானால்
     நற்பண்பு  மனையாளும்  நா  இகழத்  தொடங்கிடுவாள்           187


தாய்  உரைத்த  பேச்சுதனில்  தனி  ஆர்வம்  ஏதுமின்றி
     சேர்த்த  பொருள்  அத்தனையும்  தானம்  தர  துவங்கிவிட்டான்
செல்வமகன்  செய்கையினால்  சினங்கொண்ட  சுமித்திரையும்
     அம்மகனை  கொல்ல  எண்ண  ஆன்மவினைக்கு  ஆளானாள்       188

இப்பிறவி  துறந்து  விட்ட  சுருள் குழலி  அவன்  தாயும்
     அதிங்கவனம்    காட்டில்  புலி  மகவாய்  பிறப்பெடுத்தாள்
சேர்த்த  செல்வ  ஆசையாளும்  சித்தம்  கொண்ட  மோகத்தாளும்
     வினைகலந்த  ஆன்மாவால்  விலங்குகதி  பெற்றுவிட்டாள்              189

விளக்கொளியின்  ஜோதி நோக்கி  விரைகின்ற  விட்டில்  போலின்றி
     தான்  சேர்த்த  செல்வம்  மீது  தன்  விருப்பம்  நீக்கியதால்
தயவுடன்  கருணை  கொண்டு  தானங்கள்  செய்து  விட்டு
     மனநிறைவில்  மித்திரன்  சென்றான்  அதிங்கவனம்  காடு  காண  190

முன்  வினை  கைகோர்த்து  வர  மென்நகை  மங்கையரோடு
     காட்டினுள்  களித்து  சென்ற  கார்வள்ளல்  பத்திரமித்திரன்
பூம்பொழில்  சோலை  கொண்ட  மலை  உச்சி  சென்ற  போது
     முன் பிறவி தாயான  இப்பிறவி  புலியை கண்டான்               191

தொடர்ந்து வந்த வைரபாவம்  துவக்கிவிட்ட பகையுணர்வும்
     கடும்பசி உணர்வினாலும் பத்திரனின் வினை சேர்ந்ததாலும்
பளிங்கொளி விளக்கின் மீது  பாய்கின்ற விட்டிலைப் போல்
     பாய்ந்திட்ட  தாய் புலி  தன்  மகனை  கொன்றது  அங்கு              192

பொருளாசை  மிகுதியாலே  புலி பிறவி  கொண்ட  தாயால்
     வறுமை கொண்ட உயிர்களெல்லாம்  வளம்  பெற  வாரி  தந்த
இனிய மகன் பத்திரமித்திரன்  இப்பிறவி  தனைத்  துறக்க
     புலியுருவில்  பெற்ற  தாயால்  புவிவிட்டு  அகன்று  போனான்         193

எல்லையற்ற  பிறவிகளை  எடுத்து  உழலும்  ஆன்மாவால்
     தாயின்றி  ஒரு  சுற்றம்  தரணியிலே  இருப்பதில்லை
ஊண் உண்ணும்  உயிரெல்லாம்  பிற உயிரை  உண்டு வாழும்
     நெறியறிந்த  சுமத்திரையும்  தன் மகனை  அங்கு  தின்றால்        194


இச்சித்த  பொருளை  தரும்  இந்திரலோக  கற்பக  விருட்சம்
     இடி விழுந்து  சாய்ந்தது போல்  இனிய மித்திரன்  சாய்ந்து விட்டான்
வேழங்களின்  வேந்தனான  சீயபுர  மன்னன்  ராணி
     ராமதத்தை வயிற்றினிலே  வாரிசாக  உயிர்  தரித்தான்            195

சூள்  கொண்ட  ராமதத்தை  சுடர்விழி  கருமை  கொள்ள
     இளம்  தனங்கள்  விம்மி  நின்று  நுண்ணிடையும்  வெளி தெரிய
பவழ  வாய்  வெண்மையாக  பசலை  உற்ற  மேனியாக
     முழுமதி உதயம்  பெரும்  திக்கை  போல்  ஒளிரளானால்           196

சிம்மபுரம்  பெற்றதொரு  சீரிய  நல்  இளவரசன்
     சிம்மசேனன்  அகமகிழ்ந்து  செல்வங்களை அள்ளித்தந்தான்
சிம்மச்சந்திரன் என் மகன்  சீயபுரம்  மன்னன்  ஆவான் – என
     திக்கெட்டு  மன்னர்கட்கும்  ஏடெடுத்து  செய்தி  சொன்னான்      197

இளமழலை  வளந்திட்டான்  இளங்காலை  ஆதவன்  போல்
     அரசகுல  வித்தைகளை  ஐயமற  அறிந்து  கொண்டான்
எட்டெட்டு  கலைகளையும்  ஏற்றமுடன்  கற்றறிந்தான்
     ஏழுலக  அழகிகளை  இன்பமுடன்  மணம்  புரிந்தான்              198

மலரினில்  தேங்கும்  மதுவை  மயக்கத்தில்  உண்ணும்  வண்டாய்
     காமத்தின்  ஆழம்  சென்று  களிப்புற்றான்  சிம்மசேனன்
வேழம்  நிகர்  சிம்மசேனனும்  வேண்மாள்  ராமதத்தையும்
     மலைமிசை  மதியைப் போல  மற்றொரு  மகனை  பெற்றார்       199

சிம்மசேனன்  ராமதத்தை  சேர்ந்து  வைத்த  சிறந்த பெயர்
     சித்திரை  முழு  திங்களான  செல்ல  பெயர்  பூர்ணச்சந்திரன்
கடலளவு  சேனை  கொண்ட  காவலனின்  குமாரர்களும்
     சூரியன்  சந்திரன்  போல்  சுகம்  பெற்று  வளர்ந்தார்கள்              200

பொன்னோடு  மணி  வைரம்  புணைகின்ற  நகைக்  குவியல்
     பொத்தி  வைக்கும்  பொன்னறைக்கு  சிம்மசேனன்  சென்றபோது
முற்பிறப்பின்  ஸ்ரீபூதி  இப்பிறப்பில்  அகந்தன்  அரவமாக
     மின்னலென  மன்னன்  மீது  பாய்ந்து  தன்  பல் பதித்தான்            201

நாகத்தின்  கொடிய  விஷம்  நாட்டு  மன்னன்  உடல்  பரவ
     நன்மக்கள்  இருவரும்  சொல்  மெய்  சோர்ந்து  விட
மயிலொத்த  மாராணி  ராமதத்தை  மயங்கி மண் சரிய
     கதிரவனின்  ஒளியிருந்தும்  காரிருள்  சூழ்ந்ததங்கு                 202

கருடதண்டன்   மந்திரம்  ஓதி  கருநகங்களை  வரவழைத்து
     நெய்  சொரிந்து  தீ  வளர்த்து  நாகங்களைப்  பாய செய்தான்
மன்னனின்  மேனி  தீண்டா  மணி கொண்ட நாகமெல்லாம்
     பூம்பொழில்  செல்வது  போல்  தீ  கடந்து சென்றதங்கு           203

அகந்தன  அரவமான ஸ்ரீபூதி  அந்நெருப்பில் புகுந்து வர
     தீ  எரிக்க  உடல்  கருகி  வெண்  சாம்பலாக  மாறியது
தீ  வினையின்  காரணத்தால்  காளம்  என்னும்  காட்டினிலே
     மறுபடியும்  விலங்கினமாய்  மான்  பிறவி  எடுத்திட்டான்              204

ஆயுளும்  அரச  வாழ்வும்  அரும்பெரும் சுற்றங்களும்
     மாயமாய்  நீங்கிவிடும் என  மனிதர்கட்கு சொல்வதுபோல்
தாங்கொணா  தீவினையால்  சல்லகி  காட்டினிலே
     அசனிகோடம்  யானையானான்  முன் பிறப்பின்  வேந்தனின்று          205

கார்குழல்  விரிந்து  தொங்க  கண்களில்  நீர்  பெருக
     நாயகனை  பிரிந்ததனால்  ராமதத்தை  நினைவிழக்க
ஞானகுணம்  கொண்டவர்கள்  ராணியை  கையிலேந்தி
     ஆறுதல்  மொழிகள்  கூறி  அவள் துக்கம் போக்கலானார்          206

நாம்  கொண்ட  செல்வங்கள்  சில  நாளில்  சென்றுவிடும்
     மண்  ஆண்ட  மன்னர்களும் இம்மண்னில்  இப்போதிலை
அழுது  புரண்டாளும்  இங்கு  மாண்டவர்கள்  மீண்டதில்லை
     வந்தவர்கள்  தங்கிவிட்டால்  இவ்வயகத்தில்  இடமுமில்லை         207

மனிதகதி  சுழற்சியிலே  மாண்டவர்கள்  எத்தனையோ
     அத்தனை  இறப்பினிலும்  நம்  சுற்றம்  நட்பு எத்தனையோ
கணக்கெடுத்த  துக்கத்திலே  கதறியழ  நாம்  நினைத்தால்
     யாருக்கென்று  நாம்  அழுவோம்  ஆறுதல்   கொள்  ராமதத்தை        208

ஆறுதல்  மொழியனைத்தும்  அவள்  மனதை  தேற  வைக்க
     அருந்தவப்  புதல்வர்களை அருகினில் அழைத்தணைத்தாள்
அன்புநிறை  செல்வங்களே  உம்மை  அவணிக்கு  தந்தது  நான்
     அரசனாக  ஆக்கும்  முன்னே  என்னரசன்  சென்றுவிட்டார்             209

என்  வயிற்றில் முதலுதித்த  என்  அருமை  சிமச்சந்திரா
     என்றென்றும்  மகுடம்  சூடி  இந்நாட்டை  ஆண்டிடுவாய்
தமயனுக்கு  தன்  கரத்தை  தந்துதவும்  இளவளாக
     பூர்ணச்சந்திரன்  உனக்கு  பூரணமாய்  உதவிடுவான்          210

அன்னையின்  மொழி  அனைத்தும்  அவ்விருவர்  மனம்  பதிய
     எந்த ஒரு  குறையுமின்றி  நெறி மதியில் ஆண்டார்கள்
மன்னனின்  மறைவு  கேட்ட  துறவு கொண்ட பெண்களான
     சந்திரமதியும் இரண்யமதியும்  சந்தித்தனர்  ராமதத்தையை      211

ஆகமநூல்  அறிந்து  கற்று  அற அமிர்த  செற்களோடு
     அனைவரிடம்  அன்புகாட்டும்  ஆர்யாங்கனைகள்  கூறலானார்
ஆசையை  மனதில்  தேக்கி  ஆவேசம்  கொண்ட பகையால்
     விலங்கிடை  பிறந்து உழன்று  வெவ்வினை சேரப்பெறுவர்              212

மனிதகதி  ஆன்மாவெல்லாம்  மனதிலூறும்  திருவறத்தால்
     மோகனீய  கர்மம்  வென்று  மோட்சவீடு  சென்றடைவர்
துவர்பசை  நான்கை நீக்கி  பஞ்சாணுவிரதம்  ஏற்று
     நிலையாமை  தனை உணர்ந்து  நின்றிடு  தவத்திற்கென்றார்        213

அரசனை  இழந்த  ராணி  அழைத்திட்டாள்  தலை மகனை
     நிறைசெல்வம் சுற்றம் உறவும்  நீரின்  மேல்  குமிழியாகும்
சேர்ந்த எண் வினைகள்  போக்க  செல்கிறேன்  துறவுக்கென்றாள்
     செவியினில் கேட்ட மைந்தன்  இடி  கேட்ட  நாகமானான்             214

அனிச்சைப்  பூ  மென்மையான  கார்சுருள்  குழலை  நீக்கி
     கவிழ்ந்த  மென்  கொங்கைகளை வெண்கச்சை துகிலால்  கட்டி
கதிரவன்  ஒளியைப் போன்ற  கறையற்ற  வெண்சீலயை
     கட்டிய  ராமதத்தை  காட்சியில்  ஆர்யாங்கனையானாள்           215

அன்னையின் உருவம் கண்டு  இளையவன்  பூர்ணச்சந்திரன்
     அடிகளில்  மல்ர் சொரிந்து  சிரம்  தொட  தொழுது நின்றான்
பசும்  பொன்  காசுகளை  பாதத்தில்  தானம்  ஆக்கி
     சிறப்புடன்  பூஜை  செய்து  திரும்பினான்  தன்  நகர்க்கு          216

தகர்த்திடும்  வேழம் தன்  துதிக்கையை  இழந்தது போல்
     தாய்  துறவால்  சிம்மசந்திரன்  சம்சார  விரக்த்தியுற்றான்
தேவிமார்  குறுநகையும்  சிற்றிடை  தாங்கும்  தனமும்
     சித்தத்தை  விட்டகல  பித்தன்  போல்  பேதையானான்           217

குற்றமிலா உயர்நெறியார்  பூர்ணச்சந்திர  மாமுனிவர்
     சீயபுரம்  வருகை  அறிந்த  சிம்மச்சந்திர  மா அரசன்
தேவியர்கள்  புடை  சூழ  மதுமலர்கள்  அடி  பெய்து
     வரவேற்று  அழைத்து  சென்றான்  மன்னன்  தன்  மாளிகைக்கு         218

நறுமலர்  கலச  நீரால்  நல்  முனி  பாதம்  கழுவி
     சந்தனம், சருவும்,  மலரும்  சான்றோனின்  முன்னே  வைத்து
பொன்  அடி  மீண்டும்  வணங்கி  அறுசுவை  உணவு  படைத்து
     தேவர்கள்  சிறப்பு  செய்ய  தொழுதிட்டான்  சிமச்சந்திரன்              219

சிறப்புறு  தவத்தை உடைய  சீர்  பெரு  மா முனியே
     பிறவிச் சுழற்சிக்கு  ஒரு  முடிவுண்டா  என்று  கேட்க
அருந்தவ  ஆன்மாவெல்லாம்  அற்றிடும்  சுழற்சி  இன்றி
     அத்தவமில்லா  ஆன்மா  முடிவின்றி  சுழலும்  என்றார்             220

கனிகளும்  கனிந்து தொங்கும்  காய்த்திடும் மரங்கள்  தன்னில்
     காய்களை  கனிய வைக்க  இலைகளில் பதைத்து வைப்பர்- அதுபோல்
  குணத்திலே சக்தி  பெற்ற  குற்றமில்லா  ஆன்மாக்கள்  கூட
     ஈராறு  தவ  இலையால்  மோட்ச  கனி  கனிந்து போகும்              221

ஈரைந்து  அறத்தினோரும்  ஈராறு  தவத்தினோரும்
     நிர்கந்த  நிலையை  ஏற்று  மனம்  வாக்கு காயம்  மூன்றில்
அகப்  புற  பற்று  நீக்கி  தன்  மனம்  பயின்று  ஒழுகும்
     மெய்  காட்சி  ஞானம்  ஒன்றே  மாதவ  குணம் என்றறிவாய்      222


( அகப்பற்று  14 :  பொய்மை, நகைப்பு, விருப்பு, வெறுப்பு, 
அச்சம், கவலை, அருவருப்பு, பெண் ஆசை,  ஆண் ஆசை, 
அலி ஆசை, வெகுளி, மானம், மாயை புறப்பற்று 10 : லோபம், 
நிலம், வீடு, பொன், தனம், தான்யம், பணி ஆள், பணி பொண், 
ஆடை, அணிகலன். )

என் உயிர்,  எனது  ஆன்மா,  கடையிலா  ஞானம்  எனது
     என்று  நாம்  உணரும் போது எண்வினை  அறுந்து போகும் – அன்றி
என் உடல், எனது சுற்றம், என் பொருள், மனைவி, மக்கள்
     என்ற  நம்  மனநிலையால்  எண்வினை  தொடரும் என்றார்       223

நெருப்பினில்  இட்ட  செம்பில்  நீர் துளி கலந்ததை போல்
     ஐம்புலன்  அசைத் தீயும்  ஆழமாய்  மனதில்  பற்ற
மனம்  அது  அவ்வழியே  அடைந்திடும் இன்பமெல்லாம்
     நெய் கொண்டு  நெருப்பணைக்கும்  நிலையினை ஒத்ததாகும்       224

முற்பிறப்பின் செய்தவத்தால்  இப்பிறவி  மானிடராய்
     நல்குணமும்,  நல்குலமும், நல்லழகு  அரசரானோம்
தவத்தோடு  தானம்  செய்து  சீலத்துள்  விரதம் ஏற்றால்
     திருமகள்  உடன் இருப்பாள்  பகைவரும்  பணிந்து  நிற்பார்             225

சிம்மச்சந்திரன் இத்தனையும்  செப்பிட்டான்  தன் இளவளுக்கு
     தன்  சிரத்தின் மணிமுடியை  தந்திட்டான்  தம்பியிடம்
பூர்ணச்சந்திர  மாமுனியை  பூரணமாய்  மனதிருத்தி
     துறவு  ஏற்று  தவநெறியில்  தீட்சை  கொண்டு  நின்றிட்டான்          226

கல்  பதித்த  கிரீடம்  போக்கி  கருமேக  குஞ்சு  நீக்கி 
     உடலினில்  உடை ஒதுக்கி  உள்ளத்தில்  பற்றறுத்து
பணாமுடி ரத்தினத்தையும்  பளபளக்கும்  தோலினையும்
     நஞ்சோடு  நீக்கி  நிற்கும்  நாகத்தைப்  போல்  ஒத்தான்          227

அருளென்ற  ஆரணங்கை  ஆர்வமாய்  அணைத்துக் கொண்டு
     நல்லறம்  என்ற  நண்பன்  தன்னுடன்  இணைந்து  நிற்க
மாசு  என்னும்  மயக்க  மாதை  மனதினால் வெறுத்து விட்டு
     தவம்  என்னும்  ஏந்திழையை தன்னுடன் சேர்த்துக் கொண்டான்         228

அருந்திடும்  உணவு  மிகுந்தால்  ஐம்புலன்  உணர்வு  கூடும்
     கூடிடும்  உணவு  கூட்டும்  குற்றமாம்  கர்மவினையை
ஆகம  நூல்  சொல்  உண்டால்  ஐம்புலன்  அடங்கி  நிற்கும்
     ஆவமோதுரியம்  என்னும்  புறத்தவம்  இரண்டில்  நின்றான்        229
( ஆவமோதுரியம் : குறைவாக  உண்ணல். )

மூவுலகும்  தர இயலா  மும்மணியை  மெய்  தரித்து
     சிந்தையும்  செயலும்  செய்யும்  குற்றத்தை  அறவே  நீக்கி
வேண்டுதல்  வேண்டாமை  இன்றி  விரதங்கள்  மூன்றை  ஏற்று
     அகப்பற்றை அறவே உதிர்த்தான்  அகத்தவன்  சிம்மச்சந்திரன்       230

ஈராறு  அடக்கம்  பெற்று  பற்றற்ற  நிலையைப்  பற்றி
     வீங்கு  தவன்  சிம்மச்சந்திரன்  விண்ணிலே  செல்லும்  நாளில்
கலசம்  போல்  தனத்துடனும்  கண்களில்  காமம்  சிந்தும்
     பூவொத்த  பூவையருடன்  பூர்ணச்சந்திரன்  போகம்  கொண்டான்  231

பிறை  நூதல்  விற்புருவம்  பித்தம்  தரும்  கயல்  விழிகள்
     எள் பூவின்  நாசியுடன்  எழில்  கொழிக்கும்  இரு  கொங்கை
ஒடிந்து  விடும்  இடையழகும்  ஒய்யார  மயிலை  ஒத்த
     பூங்கொடிகள்  சூழ்ந்திருக்க  பூர்ணச்சந்திரன்  வாழ்ந்திருந்தான்     232

துறவு  கொண்ட  ராமதத்தை  சிமச்சந்திர  முனியை  தொழுது
     சிம்மசேன  மன்னன்  இடம்  செப்பியதை  செல்லலானாள்
ஐம்புல  நுகர்ச்சியிலே  அடைவதில்லை  உண்மை சுகம்
     அருந்தவத்தால்  பெற்றிடலாம்  ஆன்ம நலம் என்றுரைத்தேன்       233

நிலத்தில் விதை விதைத்தாலன்றி  விதையில் இலை வளராது
     மலையில்  மழை பெய்தாலன்றி  அருவியில்  நீர்  பெருகாது
ஐம்புலன்  அடக்கமின்றி  ஆன்ம  சுகம்  கிடைக்காது
     அறிந்திடுவாய்  பூர்ணச்சந்திரா  என்று  சொன்னேன் அரசனிடம்        234

காரணம்  இல்லையெனில்  எக்காரியமும்  நடக்காது
     முப்பிறவி  செய்தவமே  இப்பிறவி  நீ  முடி  மன்னன்
மறுமையிலே  பேறு  அடைய  இம்மையிலே  புண்ணியம்  செய்
     என்றுரைத்த  என்னை  அவன்  இகழ்ச்சியுடன்  விட்டகன்றான்         235

என்  மொழியை  செவியறுத்து  என்னை  விட்டு  நீங்கியதால்
     ஐம்புலங்கள்  உணர்ச்சியிலே  அவன்  வீழ்ந்து  போவானோ
அருகன்  சொன்ன  அறமேற்று  அடுத்த  பிறப்பு  அழிப்பானா
     சிம்மச்சந்திர  தவத்தாரே  கூறிடுங்கள்  எனக்கு  அதை             236

ராமதத்தை  ஆர்யாங்கனையே  நாடிடாதே  வருத்தமதை
     பூர்ணச்சந்திரன்  ஜினவறத்தை  ஏற்றிடுவான்  விருப்பமுடன்
நானுரைக்கும்  சரித்திரத்தை  நாட்டமுடன்  நீ  கேட்டு
     எடுத்துரைப்பாய்  அவனுக்கு  என்று  கூறி  உரைக்கலானார்       237

பூர்ணச்சந்திரன்  அரசியற்  சருக்கம்  முற்றும்.
                   
       
5.   நால்வரும்  சுவர்க்கம்  புக்க சருக்கம்.

நறுமணம்  பரவி  வீசும்  நன்  மலர்  பூத்த  சோலையில்
     மாரி  போல்  மது  சொரிய  மயக்கத்தில்  ஆடும்  ஈக்கள்
பாங்குடன்  இசைக்கும்  பண்ணை  முகில்  மோதும்  முழக்கம்  என்று
     செவியுற்ற  மயில்கள்  கூட்டம்  சிறகு  விரித்தாடும்  இங்கு             238

முத்துக்கள்  பதித்து  நெய்த  முந்தானைப்  பூந்துகிலால்
     முழுமேனி  மூடி  இருக்க  மாலைகள்  மார்பில்  ஆட
மகர  யாழ்  மெல்லிசைக்கும்  மங்கையர்கள்  வாய்  இசைக்கும்
     ஜதியோடு  நடனம்  உண்டு  தவறாமல்  எந்நாளும்  இங்கு             239

செல்வங்கள்  கொழிக்கும்  நாடு  செழுமையில்  இருக்கும்  நாடு
     விண்ணினை  தொட்டு  நிற்கும்  மாளிகைகள்  நிறைந்த  நாடு
துன்பங்கள்  துளியும்  இல்லா  இன்பங்கள்  தூய்க்கும்  நாடு
     இப்புவி  போற்றி  கூறும்  இணையிலா  கோசல  நாடு           240

கோசலை  நாட்டினிலே  குறையில்லா  பல  ஊரில்
     அந்தணரும்  அறவோரும்  அமைதியில்  வாழும்  ஊராம்
விண்ணவரும்  போற்றுகின்ற  விருத்தக்  கிராமந்தன்னில்
     நல்லொழுக்க  நற்குணத்தில்  மிருகாயணன்  வாழ்ந்திருந்தான்       241

அதிர்ந்திடும்  நடை  அறியாள்  அலறிடும்  பேச்சறியாள்
     கனி  சொற்கள்  பேசுகின்ற  கற்புடை  மனம்  உடையாள்
நல்லறத்தை  தினம்  போற்றும்  இல்லறத்தாள்  மதுரை  அவள்
     மிருகாயணன்  மனைவியென  மேம்பட்டு  வாழ்ந்திருந்தாள்         242

முழுமதியின்  முக  அழகும்  முத்துப்  பல்  ஒளியழகும்
     மது  சொட்டும்  செவ்விதழும்  மருள்  கொண்ட  மான்  விழியும்
அடிபரந்து  நிமிர்ந்து  நிற்கும்  அழகு  தனம்  கொண்டவளும்
     வாருணி  என்றழைகின்ற  வஞ்சி  அவள்  மகளானாள்             243


செங்கதிரோன்  பிரிவினிலே  செங்கமலம்  வாடுதல்  போல்
     மனைவி  அவள்  மதுரையும்  மகளுமான  வாருணியும்
மிருகாயணன்  மறைவினிலே  மிகு  துயரம்  கொண்டிருக்க
     மறுபிறவி  எடுத்து  விட்டான்  மண்ணுலகம்  வந்தடைந்தான்      244

எதிர்  வரும்  பிறவியின்றி  முக்தி  பெற்ற  ஆன்மாக்கள்
     இடைவிடாமல்  பிறப்பெடுக்கும்  எழில்  நகர்  அயோத்தியை
ஆளுகின்ற  அதிபலனுக்கும்  அவன்  மனைவி  சுமதிக்கும்
     மகளாகப்  பிறப்பெடுத்தான்  மரித்துப்போன  மிருகாயணன்  245

இளமயில்  நிகர்த்த  சாயல்  இளமையால்  வீழ்த்தும்  தோற்றம்
     கொவ்வை  வாய்  செவ்விதழ்கள்  குளிர்த்தென்றல்  மென்விழிகள்
பார்ப்பவர்  உள்ளமெல்லாம்  பைத்தியம்  ஆகும்  நகையில்
     இரண்யவதி  என்ற  பெயரில்  இளவரசி  வளர்ந்திருந்தாள்              246

சீர்பெறு  சுரைமை  நாட்டின்  போதனபுரத்து  ராஜன் அவன்
     இளைய  ராணி  இரண்யவதியை  கைபிடித்த  பூர்ணச்சந்திரன்
சிற்றின்ப  வெள்ளத்திலே  திளைத்திருந்த  இருவருக்கும்
     மறுபிறவி எடுத்த  மதுரை  மகளானாள்  அவள்  நீயே ராமதத்தை  247

சிம்மச்சந்திர  மாமுனியால்  தன்  பிறப்பறிந்தாள்  ராமதத்தை
     பத்திரமித்திரனே  தன்  தலைமகன்  சிம்மச்சந்திரன்  எனவும்
வாருணியின்  முன்பிறவி  பூர்ணச்சந்திரன்  என்றும்
     சிம்மச்சந்திர  முனிவரனே  மேலும்  செப்பினார்  ராமதத்தைக்கு     248

வினையென்னும்  குயவன்  நம்மை  வேண்டிடும்  உருவமாக்கி
     ஆணையே  மறுமையிலே  அணைத்திடும்  பெண்மையாக்கி
மனைவியை  மகளுமாக்கி  மகளையே  மைந்தனாக்கி
     சுப  அசுப  எண்ணங்களால்  சுழற்சியுற்று  வருவார்கள்            249

ராமதத்தை  உன்  தந்தை  இன்று  பத்திரபாகு  முனிவனானான்
     பாரோர்கள்  வணங்குகின்ற  பெருந்தவத்தான்  ஆகியுள்ளான்
ஆகமத்தில்  கூறுகின்ற  அறநெறிகள்  அத்தனையும்
     அனைவருக்கும்  கூறுகின்ற  அரிய  பெரும்  குருவானார்            250

சீயபுர  ராணியான  உன்னை  தரணிக்கு  ஈந்த  தாய்
     ஆர்யாங்கனை  சந்திரமதியை  அடைந்து  அறம்  கேட்டு
அல்லவை  எல்லாம்  போக்கி  அறம்  பேணும்  உள்ளத்தால்
     ஆர்யாங்கனையானாள்  அறிந்திடுவாய்  ராமதத்தை           251

மலை  உச்சி  சென்ற  என்னை  மதங்கொண்ட  அசனிகோடம்
     கொன்றுவிடும்  முயற்சியில்  கோபத்தில்  ஓடி  வர
ஆகாச  சாரணத்தால்  நான்  ஆகாயம்  நோக்கி  செல்ல
     அசனிகோடம்  என்ற  வேழம்  ஏமாந்து  நின்றதங்கு                   252

முன்  பிறப்பின்  பாவவினை  உன்  பிறப்பில்  தொடர்ந்து  வர
     சீயபுர  மன்னனான  நீ  அசனிகோடம்  யானையானாய்
வேழமான  நீ  இன்று  வெந்தனல்  கோபங்கொண்டால்
     தலைகீழாய்  வீழ்ந்திடுவாய்  தாங்கொணா  நரகில்  என்றேன்     253

சீயபுர  அரசனான  உன்  செல்வமகன்  சிம்மச்சந்திரன்  நான்
     இப்பிறவி  விட்டகல  அருகன்  அறம்  தழுவு  என்றேன்
முப்பிறவி  அறிந்து  கொள்ளும்  முழு  ஞானம்  கொண்ட  வேந்தன்
     தன் பிறவி  அறிந்ததனால்  தரை  சாய்ந்தான் மலையினை போல்  254



விழுந்தவன்  எழுந்து  நின்று  வெங்கனல்  கோபம்  நீங்கி
     அருகனின்  அறம்  நான்  கூற  அமைதியாய்  கேட்கலானான்
உடலும்,  உற்றாரும்,  உடன்  பிறத்த  உறவுகளும்,  சுற்றமும்
     உலகினில்  நிலைப்பதில்லை  மறுமையிலும்  வருவதில்லை      255

பிறப்பினில்  சேருகின்ற  பெருவினைகள்  அத்தனையும்
     நீக்கவும்,  ரட்சிக்கவும்  அப்பிறப்பில்  ஏதும்  இல்லை
தீக்கதி  நான்கினிலும்  மாறி  மாறி  பிறப்பு  எடுத்து
     தீர்ப்பதற்கு  உடன்  துணையாய்  சேருவதும்  ஏதுமில்லை               256

வேண்டுதல்  வேண்டாமை  எல்லாம்  வென்றிட்ட  அருகன்  சொன்ன
     மும்மணி  ஏற்று  விட்டால்  வரும்  வினைகள்  வழிகள்  மூட
ஆன்மனில்  முன்னே  சேர்ந்த  அறுவினைகள்  அத்தனையும்
     உதிர்ந்திடும்  சருகு  போல  திறந்திடும்  மோட்ச  வாயில்              257

பயத்திலே  துக்கமானால்  விலங்குகதி  இயல்பாய்  உண்டு
     மனிதகதி  இயல்பாய்  தோன்றும்  குடும்பத்தை  பேணிகாத்தல்
நரகத்தில்  எழுந்து  வீழ்தல்  நரகர்கள்  இயல்பாய்  அமையும்
     தேவகதி  தேவர்  எல்லாம்  மரணத்தின்  துக்கம்  என்றேன்             258

பனையொத்த  துதிக்கை  கொண்ட  மலையொத்த  அசனிகோடம்
     நான்  சொல்லிய  அறத்தையெல்லாம்  முனியை  போல் வணங்கி  கேட்டு
பன்னிரு  விரதங்கள்  ஏற்று  உடன்  பல  உயிர்  பாதுகாத்து
     முனி  கொண்ட  கருணையை  தன்  மனதினில்  தாங்கியது        259

வாரணங்கள்  தின்று  மீந்த  காய்ந்த  புல்  சருகனைத்தும்
     உபவாசம்  முடித்து  உண்ணும்  உணவாக  ஏற்றுக்  கொண்டு
உண்ணா  விரதங்கொண்டு  உணவாக  தண்ணீர்  ஏற்க
     யூபகேசரி  நதியை  நாடினான்  சீயமன்னன்  அசனிகோடம்       260

வற்றிய  உடலினோடும்  பலம்  அற்ற  மனதினோடும்
     நீரினை  உறிஞ்சி  ஏற்க  நீட்டிய  துதிக்கையோடு
ஆற்றினில்  கால்  பதிய  சேற்றினில்  சிக்கிக்  கொண்டு
     விடுபடும்  சக்தி  இன்றி  விழி  சோர  நின்றது  அங்கு           261


அகந்தனன்  பிறவி  நீங்கி  சமரீ  மான்  பிறப்பெடுத்து
     சமரீ  மான்  பிறப்பும்  போக்கி  மனிதகதி  ஸ்ரீபூதி
மறுபடியும்  கோழிப்பாம்பாய்  மறுபிறவி  எடுத்ததனால்
     அசனிகோடம்  மத்தகத்தில்  பறந்து  வந்து  பல்  பதித்தான்        262

மலையினை  சூழ்ந்து  கொண்ட  மழை  கொண்ட  முகிலைப் போல
     உடலினில்  விஷம்  பரவ  உள்ளம்  பஞ்சமந்திரம்  சொல்ல
சிம்மச்சந்திர  முனியான  எந்தன்  திருவடியில்  சிரம்  வைத்து
     துஞ்சிய  உடலை  விட்டு  தேவலோகம்  நோக்கிச்  சென்றான்         263

யானையின்  உடலை  விட்டு  ரவி ப்ரபை  விமானம்  தங்கி
     இந்திர  தனுசை  ஒத்த  எழில்  கொண்ட  வடிவம்  தாங்கி
தேவலோக  மங்கையர்கள்  சிந்தையில்  மயக்கம்  கொள்ளும்
     ஸ்ரீதரன்  என்ற  பெயரில்  தேவனாய்  உருவில்  சென்றான்           264

சிரசினில்  மணி  முடியும்  செவியினில்  பொன்  குண்டலமும்
     மார்பினில்  முத்து  பவழம்  மலர்  வாடா  மாலைகளும்
கைகளில்  வைரக்  கங்கனம்  கால்களில்  வீரக்  கழலும்
     ஒளிர்ந்திடும்  மேனி  கொண்டு  ஸ்ரீதரன்  மஞ்சிலே  வீற்றிருந்தான் 265
 (  மஞ்சில்  :  மெத்தை  )

நஞ்சொத்த  ஸ்ரீ பூதியை  நாட்டை  விட்டு  துரத்திய  பின்
     அந்தணன்  தமிலன்  அங்கு  அமைச்சனாக  பதவி  ஏற்க
சிம்மசேன  மாமன்னன்  பொன்னறையில்  துஞ்சிய  பின்
     தமிலனான  மந்திரியும்  தரணியை  விட்டு  அகன்றான்            266

சல்லகி  வனக்  குரங்காக  தமிலன்  மறுப்  பிறப்பெடுத்து
     முற்பிறப்பில்  மன்னன்  மீது  முழு  அன்பு  கொண்டதனால்
அசனிகோடம்  வேழத்தை  வேரறுத்த  கோழிப்பாம்பை
     கண்டதும்  கடித்துத்  துப்ப  காலனிடம்  சென்றது  அரவம்             267

உயிரிழந்த  கோழிப்பாம்பு  ஊழ்வினை  காரணத்தால்
     மூன்றாம்  நரகம்  சென்று  நரகனாய்  பிறப்பெடுத்து
வரிசையின்  முறைப்படி  வெவ்வினைகள்  தாங்கி  நின்று
     உதயத்தைக்  கொடுத்ததால்  பெருந்துன்பம்  பெற்றதங்கு           268

கருநிறம்  கொண்ட  நரகர்கள்  தடியொடும், தண்டம்  வாளும்
     கையினில்  ஏந்தி  வந்து  கடையற  புடைத்து  நின்றார்
கற்செக்கில்  உடலை  நசுக்கி  முள்ளிலவ  மரத்தில்  ஏற்றி
     செம்பினை  நீராய்  உருக்கி  வாயினில்  ஊற்றி  வதைத்தார்       269

வேழத்தை  நாகம்  கொத்த  மோட்சத்தை  வேழம்  அடைய
     கொத்திய  நாகம்  தன்னை  குரங்கொன்று  கடித்து  கொல்ல
நாகமோ  நரகம்  அடைய  யானையின்  கொம்பும்  மணியும்
     நரியன்  என்றழைக்கும்  வேடன்  நாடியே  எடுத்து  சென்றான்        270

வெண்ணிலவு  தந்தங்களை  விளைந்த  நல்  முத்துக்களை
     தனமித்திரன்  வணிகனிடம்  அவன்  விற்று  பொருள்  கொண்டான்
மண்ணாளும்  மன்னனான  பூர்ணச்சந்திரன்  அடி  தொழுது - அவனுக்கு
     கொம்பு  மணி  தந்ததாலே  தனமித்திரன்  சிறப்படைந்தான்        271

களிற்றின்  கொம்புகளை  நாலு  காலாய்  கடைந்து  எடுத்து
     கட்டிலிலே  பூட்டிவிட்டு  கழுத்தினிலே  மாலை  கொண்டான்
ஆர்யாங்கனை  ராமதத்தையே  அரசனிடம் சென்று  நீ
     நான்  சொன்ன  அத்தனையும்  நவின்றிடுவாய்  என்றுரைத்தார்         272

சிம்மச்சந்திர  முனிவரனின்  அறம்  அனைத்தும்  கேட்ட  பின்பு
     ராமதத்தை  மனம்  மகிழ்ந்து  நகரை  நோக்கி  நடை  நடந்தாள்
அரண்மனையை  அடைந்த  அவள்  அரசமகன்  பூர்ணச்சந்திரனிடம்
     சிம்மச்சந்திர  முனிகள்  சொன்ன  சரித்திரத்தை  சொல்லலானாள்  273

உனது  தந்தை  சிம்மசேனன்  அருகன்  அறம்  மறந்ததாலே
     விலங்குகதி  சென்று  அவர்  அசனிகோட வேழமானார்
அசனிகோடம்  யானையது  அறத்தை  மேவி  வாழ்ந்ததனால்
     தேவலோக  தேவனாக  மறுபடியும்  பிறவி  கொண்டார்          274

பிறர்  பொருள்  ஆசையாலே  ஸ்ரீபூதி  அகந்தன  அரவமாகி
     அரசன்  மேல்  பகையினால்  சமரீ  மான்  கோழிப்பாம்பாகி
குரங்கினால்  கொல்லப்பட்டு  கொதித்திடும்  நரகடைந்தான்
     செப்புவேன்  குமாரனே  நீ  திருவறம்  ஏற்க  என்றார்                 275

அசனிகோட  கொம்பினாலே  கடைந்திட்ட  கால்கள்  நான்கை
     அரசனான  பூர்ணச்சந்திரன்  அக்கினியில்  போட்டெரித்தான்
பவழவாய்  பைங்கொடிகள்  பழக்கத்தை  விட்டொழித்தான்
     காதலையும்  காமத்தையும்  கழுவேற்றி  கொன்று  விட்டான்       276

நிலையற்ற  சம்சார  வாழ்வை  நீக்கினான்  மனதை  விட்டு
     ஐம்புலன்  அடக்கம்  கொண்டு  அறநெறி  போற்றலானான்
ஐவகை  விரதத்தோடும்  ஏழ்வகை  சீலத்தோடும்
     திருவறம்  ஏற்றுக்கொண்டு  திவ்விய  சொரூபனானான்            277

மனம்  வாக்கு  காயம்  மூன்றில்  அருகனின்  பொற்பாதம்  ஏற்றி
     மங்கலம்  நான்கினையும்  மனதினில்  பதிய  போற்றி
மாபெரும்  பஞ்சபரமேட்டிகள்  மலரடி  தொழுது  நின்று
     மும்மணி  கூடப்  பெற்று  முழுத்தவம்  ஏற்று  நின்றான்            278

தன்மகன்  பூர்ணச்சந்திரன்  தவத்தினை  ஏற்ற  பின்பு
     ஆர்யாங்கனை  ராமதத்தை  அவனோடு  சேர்ந்திருந்தாள்
வரும்  பிறவி  தொடர்ந்து  இவனே  மகனாக  பிறக்க  வேண்டி
     மனிதகதி  நீங்கியவள்  தேவகதி  சென்றடைந்தாள்                279

பாசுகர  பிரபை  என்ற  விண்ணுலக  விமானந்தன்னில்
     பாசுகர ப்ரபன்  என்னும்  தேவனாக  அவதரித்து
சாமானிய  தேவரெல்லாம்  தன்னை  சுற்றி  வணங்கி  நிற்க
     சித்திரப்பாவை  ராமதத்தை  தெய்வலோகம்  சென்றடைந்தாள்      280

மின்னிடை  மங்கையரின்  கால்  சிலம்பு  ஓசையோடும்
     மின்னிடும்  ஒளியுடைய  மேகலையின்  மென்னொலியும்
நுண்ணிய  நரம்பில்  செய்த  வீணை  யாழ்  இன்னிசையும்
     தாளமும்  சுரத்தினோடும்  வாய்  இசை  மலர்ந்தது  அங்கு              281

அருகனறம்  ஏற்ற  அரசன்  பூர்ணச்சந்திரன்  ஆயுள்  முடிய
     நல்  ஞான,  நல்  தவத்தால்  மனிதகதி  துறந்த  ஆன்மா
வைடூரியப்  ப்ரபையிலே  அவன்  சேர்த்த  புண்ணியத்தால்
     வைடூரியப் ப்ரபன்  என்னும்  வானுலக தேவன்  ஆனான்          282

வெண்  தூயச்  சந்திரனின்  ஈரெட்டு  கலைகளுமே
     நாள்தோரும்  வளர்வது  போல்  சிம்மச்சந்திரன்  தவம்  பெருக
துவர்பசை  எண்ணங்களும்  சுடர்  ஒளிக்கும்  தன்  உடலும்
     தேய்பிறை  மதியைப்  போல் தேய்ந்து  வரத்  துவங்கியது              283

நற்குணத்தார்  நலிவை  கண்டு  எழுச்சியுறும்  நீசரைப்  போல்
     மாமுனி  மெய்யும்  வாட  நாடி  நரம்பெல்லாம்  வீங்கியது
அறவோர்  விழியொத்த  கண்கள்  உள்ளழுந்தி  ஒளி  குறைய
     அருந்தவ  ஆற்றலினால்  அங்கம்  எல்லாம்  காட்டியது            284

ஆன்ம  பலம்  கொண்ட  வீரன்  அருந்தவச்  சிம்மச்சந்திரன்
     அருகனின் திருவடியில்  அமைதியில்  சரணடைய
பிரீத்திங்கரம்  என்னும்  பொன்னெழில்  விமானந்தன்னில்
     பிரீத்தீங்கரன்  என்னும்  அகமிந்திர  தேவனானார்                285

அரும்பெரும்  தவத்தினாலும்  அடைந்திட்ட  சீலத்தாலும்
     சிம்மசேன  மன்னனும்  அவன்  தேவி  ராமதத்தையும்
தலைமகன்  சிம்மச்சந்திரனும்  அவன்  தம்பி  பூர்ணச்சந்திரனும்
     இணையில்ல  பிறவியான  தேவகதி  சென்றடைந்தார்கள்               286

பகை  என்ற  உணர்வு  என்றும்  ஆன்மாவின்  தீவினைதான்
     நட்பென்ற  உறவினாலே  நாடிவரும்  நல்வினைகள்
பகையினை  அறவே  போக்கி  நட்பினை  நாடிப்  பற்றி
     நரகத்தை  நாமும்  நீக்கி  நாடலாம்  தேவலோகம்                287
     
நால்வர்  சுவர்கம்  புக்க  சருக்கம்  முடிவுற்றது.
                  
  6.  மன்னனும்  தேவியும்  மைந்தனும்  சுவர்க்கம்  புக்க  சருக்கம்.

சிம்மசேன  அரசனும்  அவன்  தேவி  ராமதத்தையும்
     பெற்றெடுத்த  இரு  மகன்கள்  சிம்மச்சந்திரன்  பூர்ணச்சந்திரன்
பெருந்தவத்தால்  தேவராகி  மீண்டும்  மனிதகதிக்கு  வந்த
     மண்ணுலக  சரித்திரத்தை  மாண்புடன்  உரைப்பேன்  தரணேந்ரா   288

முற்பிறப்பின்  ராமதத்தை  பாசுகரப் பிரபன்  தேவனாகி
     முழு  ஆயுள்  முடிவதற்கு  மூவைந்து  நாளிருக்க
பாசுகரைப்  பிரபை  விமானம்  கொண்ட  கற்பகத்தருவானது
     அவள்  தேவலோகம்  பிரிவதற்கு  தேர்  போல்  குலுங்கியது       289

கற்பகத்தரு நடுநடுங்க  சாமான்ய  தேவ  தேவியர்கள்
     கலக்கத்தில்  மனம்  அதிர  கண்களில்  பயம்  தெரிய
பாசுகரபிரபன்  அணிந்திருந்த  கற்பகப்  பூ  மணிமாலையும்
     களையிழந்து  ஒளியிழந்து  களங்கத்தை  கொண்டனவே           290

முழுமதியின்  கலைகளெல்லாம்  தினம்  குறையும்  தேய்பிறையாய்
     சித்திரை  திங்களைப்  போல்  தெளிந்த  ஒளி  பெற்ற  உடல்
தினந்தினமும்  களையிழக்க  சித்தத்தின்  கலக்கத்தால்
     பாசுகரப்பிரப  தேவன்   மனம்  பட்டென  வாடியது                   291

காட்டுத்  தீயால்  சூழ்ந்திட்ட  கற்பக  விருட்சம்  போல
     மனதினில்  வருத்தம்  கொண்ட  பாசுகரப்பிரபன்  முன்னே
தேவலோக  தேவர்கள்  கூடி  அவன்  சித்தத்தின்  துயர்  அகற்ற
     ஆயுள்  முடிந்த  பின்பு  அகன்றிடல்  மரபு  என்றார்                   292

தேவர்கள்  செய்தியெல்லாம்  செவிவழி  ஏற்ற  பிரபன்
     நெருப்பினில்  இளகும்  மெழுகு  நீரினில்  இறுகுதல்  போல்
மனமது  தெளிவு  கொண்டு  மாதவன்  அடி  வணங்கி
     பூமியில்  வந்துதித்தான்  பூவையாய்  பிறப்பெடுத்தான்             293

ஆழியும்  தீவும்  சூழ்ந்த  அழகிய  நாவலந்  தீவில்
     விண்ணினை  தொடுவது  போல்  வெள்ளியம்  மாமேரு  உண்டு
கண்டங்கள்  ஆறு  உண்டு  கரை  புரளும்  ஆறும்  உண்டு
     பாரத  தேசம்  என்னும்  பண்பான  நாடும்  உண்டு                   294
பாரத  நாட்டினிலே  பத்து  பத்து  யோசனையில்
     வியந்திர  தேவர்களின்  வீங்கெழில்  அழகு  கொண்ட
உத்திர  சிரேணி  என்றும்  தட்சண  சிரேணி  என்றும்
     வியந்தர  தேவர்களின்  மனோகர  நகரங்களாகும்                 295

ஏழுமுழ  உயரம்  குறைவதில்லை  ஐநூறு  வில்  மேல்  உயர்வதில்லை
     அகவை  நூறு  தாழ்வதில்லை  ஐநூறு  கோடிக்கு  மேல்  ஏற்றமில்லை
ஏறுகாலம்  உத்சர்ப்பிணியும்  இறங்கு  காலம்  அவசர்ப்பிணியும்  உடைய
     அந்நகர  வித்யாதரர்கள்  நம்  குணத்தை  ஒத்தவர்கள்             296

( உத்சர்ப்பிணி : 1. தீத்தீக்காலம்,  2. தீக்காலம்,  3. தீநற்காலம்,  4.  நற்றீக்காலம், 
5.  நற்காலம்,  6.  நன்னற்காலம்.   அவசர்ப்பிணி  :   1. நன்னற்காலம்,  2.  நற்காலம்,  3.  நற்றீக்காலம்,  4.  தீநற்காலம்,  5.  தீக்காலம்,  6.  தீத்தீக்காலம்.  )

மகரக்  கொடி  உடைய  மன்மதன்  இருப்பிடம்  போல்
     மலர்ந்து  மணம்  வீசும்  மலர்கொண்ட  பந்தலின்  கீழ்
மென்மலர்  படுக்கையிலே  மெல்லிடை  மகளீருடன்
     சேர்ந்திருக்கும்  வித்யாதரர்கள்  உத்தரகுரு  மனிதர்  ஒப்பார்        297
(  உத்தரகுரு  :  போகபூமி  )

விஜயார்த்த  மலையின்  மேலே  வடக்கு  தெற்கு  சேடியிலே
     கோடிவூர்கள்  சூழ்ந்திருக்கும்  அதில்  நூற்று  பத்து  நகரங்களில்
வித்யாதர  அரசர்கள்  வாழுகின்ற  வளமான  தென்  சேடியில்
     தரணி  திலகம்  பெயர்  கொண்ட  தனி  நகரம்  ஒன்றாகும்            298


நகரத்தின்  வீதியெல்லாம்  ராஜபாதை  போலிருக்கும்
     மான்கள்  ஒத்த  மகளீரும்  மதயானை  போல்  ஆடவரும்
அடியெடுத்து  விரைந்து  செல்ல  இயலாத  அந்த  கூட்டம்
     நீர்  நிறைந்த  நதிகள்  பல  நெருங்கும்  கடல்  போல்  இருக்கும்       299

சந்திரனை  தொட்டுவிடும்  தேற்றம்  கொண்ட  மாளிகையும்
     சங்கநிதி  பத்மநிதி  தன் மாளிகையில்  கொண்டவனும்
பகை  அரசர்  பதுங்கி  வாழும்  புஜவலிமை  பெற்றவனும்
     அதிவேகன்  பெயருடைய  ஆணழகன்  அந்நாட்டரசன்             300

சாமுத்திரிகா  லட்சணத்தில்  சற்றும்  குறை  காணாத
     மங்கலங்கள்  முழுமை  பெற்ற  மலர்கொடியாம்  மண்ணரசி
அதிவேகன்  அரசனுக்கு  அவன்  பட்டத்து  ராணியாக
     சுலட்சணை  என்னும்  மங்கை  சூடிக்  கொண்டாள்  பட்டமதை        301

அதிவேகன்  சுலட்சணையும்  இல்லறத்தில்  களித்திருக்க
     ஆதித்தன்  ஒளியை  ஒத்த  முப்பிறப்பின்  ராமதத்தை
செய்தவத்தாள்  பாசுகரப்பிரபனாக  விண்னுலகம்  சென்ற  அவள்
     சுலட்சணையின்  மணிவயிற்றில்  சீதரையாய்  பிறப்பெடுத்தாள்     302

நாளொரு  மேனியும்  பொழுதொரு  வண்ணமுமாய்
     சீதரை  வளர்ந்து  வந்தாள்  ஸ்ரீ தேவி  அழகுடனே
மலர்கணை  மன்னன்  போல்  அளகையை  ஆண்ட  அரசன்
     தர்சகனின்  திண்  தோளினை  தழுவினாள்  பொன்  சீதரை       303

முன்  தவப்  பயனினாலே  ராமதத்தை  வேண்டியது
     அவன்  மகனாய்  பூர்ணச்சந்திரன்  வரும்  பிறவி  பிறக்க  வேண்டி
வைடூரியபிரப  தேவனான  வானுலக  பூர்ணச்சந்திரன்
     சீதரையின்  வயிற்றினிலே  யசோதரையாய்  பிறப்பெடுத்தான்      304

செவ்வரி  படர்ந்த  கண்கள்  சிந்தையை  மயக்கும்  வனப்பு
     மென்மலர்  பாதம்  கொண்டு  மான்  மருள்  பார்வையோடு
கார்குழல்  ஐம்  பதிப்பும்  கன்னல்  நீர்  கொண்ட  சொல்லும்
     மூங்கில்  ஓத்த  தோளுடனும்  யசோதரை  வளர்ந்து  நின்றாள்         305

( ஐந்து  பதிப்பு : குழல்,  அளகம்,  கொண்டை,  பனிச்சை,  துஞ்சை.  
குழல்  அளகத்தை  வகுத்தும்,  கொண்டையை  தொகுத்தும்,  
பனிச்சை,  துஞ்ச்சையை  விரித்தும்  அழகு  படுத்துதல் )

நிறைமதி  நிகர்த்த  வனப்பன்  நீதியை  நெஞ்சில்  கொண்டான்
     அருகனின்  பாதம்  ஒன்றே  அனுதினம்  சிந்தை  உடையான்
ஐம்பொறி  உணர்வு  மிகுந்தும்  அறநெறி  பிறழா  மனத்தான்
     பாசுரபுரத்தின்  மன்னன்  சூரியவிருத்தன்  ஆவான்                 306

பச்சை  இலை  பந்தலின்  கீழ்  மங்கல  ஒலிகள்  முழங்க
     பாசுரபுரத்தின்  மக்கள்  படை  போல  சூழ்ந்திருக்க
அறநெறி  வேதம்  ஓத  ஔபாசன  விதிகள்  செய்ய
     முறைப்படி  சூரியவிருத்தன்  யசோதரையின்  கைபிடித்தான்       307


ஐங்கணையான்  மலர்  அம்பு  அவ்விருவர்  மேல்  பாய
     எல்லையில்ல  இன்பத்தில்  இருவருமே  திளைத்திருக்க
அருகன்  அறம்  கேட்ட  யானை  அழகு  ஸ்ரீதரன்  தேவனாக
     ஆயுள்  முடிந்த  அவன்  யசோதரையின்  வயிற்றுதித்தான்              308

கிள்ளை  ஒத்த  மழலைக்கு  கிரணவேகன் என பெயரிட்டார்
     வித்தைகளை  சொல்லித்  தந்து  வேங்கை  போல்  வளர்த்திட்டார்
இருள்  நிறத்து  குழலுடனும்  எழில்  ததும்பும்  முகத்துடனும்
     கம்ப  நிகர்  கரங்கள்  கொண்டு  காண்பவரை மயங்க  வைத்தான்       309 
    
எட்டெட்டு  கலைகளிலே  ஏற்றமுடன்  திகழ்ந்திருந்தான்
     மண்ணுலக  இன்பத்தை  மன்மதனுக்கு  சொல்லித்தந்தான்
விசயந்த  மலையில்  உள்ள  வேற்றரசர்  கன்னிகளை
     மணந்து  மகிழ்ந்த  நேரத்தில்  அவன்  தந்தை  மனம்  மாறியது         310

களிறுகளுக்கு  அரசென்றாலும்  கால்  சேற்றில்  புதைந்து  விட்டால்
     கால்  எடுத்து  வெளியேற  களிற்றினால்  முடிவதில்லை – அதுபோல்
சம்சார  வாழ்க்கையிலே  நாம்  பதியும்  காலத்தில்
     கர்மத்தின்  வினைகளினால்  கட்டுண்டு  வாழ்ந்திருப்போம்          311

உடலோடு  சுற்றமும்  உடன்  உறையும்  மாந்தர்களும்
     தனத்தோடு  பெரும்  பொருளும்  தான்  பெற்ற  பிள்ளைகளும்
சம்சார  சாகரத்தில்  நிலையற்ற  தன்மை  என்று
     எண்ணியே  மலையை  விட்டு  இறங்கினான்  சூரியவிருத்தன்      312

தரை  வந்த  மாமன்னன்  தவத்தலைவன்  முனிச்சந்திரனின்
     தாமரைப்  பாதத்தில்  தலை  வைத்து  சரணடைந்தான்
எண்  ஜான்  உடம்பினையும்  ஈரடியில்  குவித்துக்  கொண்டு
     எண்வினைகள்  தரும்  பலனை  எனக்குரையும்  என்று  நின்றான்       313

ஞானத்தோடு  தர்சனத்தையும்  இருளாய்  மறைக்கச்  செய்யும்
     பாவமும்  புண்ணியமும்  கூர்  வாளின்  இருபக்கம்
ஒரு  பக்கம்  நஞ்சை  தடவி  மறுபக்கம்  அமிர்தம்  கூட்டி
     நாவினில்  வைத்தல்  ஒக்கும்  தீய  நல்  வேதனீயம்                   314

[  தீய  நல்  வேதனீயம்  :  பாவ,  புண்ணியம். (அசாத  வேதனீயம்,  ஸாதா  வேதனீயம் )  ]                             

மோகனீய  கர்மம்  அது  பைத்தியம்  போல்  மயக்கம்  தரும்
     ஆன்மா  பெற்ற  கர்மமது  அடங்கா  விலங்குக்கு  ஒப்பாகும்
நாம  கர்மம்  எப்போதும்  பல  உரு  கொள்ளும்  சித்திரக்காரி
     சிறிய  பெரிய  பாண்டம்  செய்யும்  குயவனாகும்  கோத்ர  கர்மம் 315

ஆசையும்  கோபம்  சேர்ந்த  மயக்கத்தால்  வினைகள்  சேரும்
     சேர்த்திட்ட  வினைக்கு  ஏற்ப  செல்லுவோம்  நான்கு  கதிக்கு
கதிகளில்  பிறந்த  ஆன்மா  காயங்கள்  ஆறில்  ஒன்றாய்
     அவற்றினில்  ஐம்பொறிகள்  வரிசையில்  தோன்றும்  ஆங்கு       316

(6 காயம் :  மண்னுடல்,  நீருடல்,  நெருப்புடல்,  காற்றுடல்,  நிலையுயிர்,
இயங்கும்  உயிர் )

அருகநெறி  கொண்ட  அறவோர்  சுழற்சியை  வென்று  நிற்பர்
     அந்நெறி  அறியாதவர்கள்  கதிகளில்  பிறந்து  திரிவர்
பவ்யமுனி  மொழிகள்  கேட்ட  பாசுரபுர  நாட்டு  மன்னன்
     கிரீடத்தை  கிரணவேகன்  ஏற்க  முனிவனாய்  தீட்சை  பெற்றான்  317

சூரியவிருத்தன்  கொண்ட  துறவினை  கண்ட  யசோதரையும்
     சீதரை  தாயை  நாடி  செப்பினாள்  தன்  துறவு  தன்னை
தாயோடு  மகளும்  சேர்ந்து  தவநிறியாள்  குணவதியை  நாடி
     ஆகம  விதிகளின்  படி  ஆர்யாங்கனை  ஆகினார்கள்              318

தவக்கொடி தாயும்  மகளும்  தாங்கரும்  ஒழுக்கம்  ஏற்று
     மகிழ்தலும்  பகையும்  இன்றி  மனதினில்  நல்லறத்தை  கொள்ள
சம்சார  போகம்  எல்லாம்  தாங்கொணாத்  துயரம்  எனறு
     கிரணவேகன் மனதில் தோன்ற கீழ்திசை ஜினாலயம்  சென்றான்         319

ஆலய  மேடையெல்லாம்    அழகிய  தோரணங்கள்  அசைய
     ஜினப்படிமைகள்  கொண்டு  சேதிய  மரங்கள்  சூழ
எண்திசை  எல்லாம்  அங்கு  எழில்  தரும்  மலர்  வனங்கள்
     நாற்திசை  வீதிகள்  தோரும்  நான்கு  பெரும்  கோபுரங்கள்       320


நீளமோ  ஒரு  காதம்  ஆகி  அகலம்  அரை  காதமாக
     மாசற்று வரிசையாக  நூற்றெட்டு  கந்தகுடி  மண்டபங்கள்
மூன்று  பெரும்  வாயிலுடன்  முன்  எதிரில்  மண்டபமும்
     பார்த்தவர்கள்  வியந்து  நிற்கும்  பாரோர்  புகழும்  சைத்யாலயம்  321


வைஜயந்தை  என்றழைக்கும்  மாபெரும்  இந்ரத்துவஜம்
     முறைபடி  அளந்து  அமைத்த  கல்  இழைத்த  மானஸ்தம்பம்
ஆதவன்  திசையினிலே  நந்தை  என்னும்  தாமரைத்  பூ  தடாகம்
     கோயில்  உள்ளே  வரிசையாக  கோலங்கொண்டு  இருந்ததங்கு        322

நடன  நடை  பரியின்  மேலே  கிரணவேகன்  கோயில்  வந்து
     சித்தாயதன  கூடம்  முன்னே  குதிரையை  விட்டிறங்கி
தரையின்  மேல்  நடந்து  வந்து  தலை  கோபுர  வாயில்  நுழந்து
     கமல  மொட்டாய்  கைகுவித்து  கனிந்துருகி  வணங்கலானான்          323

கரங்களில்  மலர்கள்  ஏந்தி  கருத்தினில்  பஞ்ச  மந்திரம்  சொல்லி
     மாமேரு  மலையை  சூழ்ந்து  வலம்  வரும்  பரிதியைப்  போல்
ஆலயப்  பிரகாரம்  தன்னை  வலமது  சுற்றி  வந்து
     கோயிலின்  கதவு  திறக்க  கும்பிட்டு  உள்  நுழைந்தான்               324

அளவிலா  ஞனத்தோடும்  அனைத்தையும்  அறிந்து  உணர்ந்து
     நித்திய  சுவரூபமாகி  நிலைத்து  நில்லா  தன்மையுடைய
இறைவனே  உன்னை  என்  இதயத்தில்  வைத்து  போற்றி
     முடிவிலா  உனது  ஆற்றல்  முற்றிலும்  உணரப்  பெற்றேன்            325

மழையினால்  வெள்ளம்  மீது  மருவிய  நீர்  குமிழ்கள்  போல
     தோன்றியும்  மறைந்தும்  போகும்  துளி  நேர  வாழும்  வாழ்க்கை
சம்சார  சுழற்சி  காட்டில்  தந்திடும்  துயரம்  எல்லாம்
     உன்  செவ்விய  பாதந்தன்னை  பற்றிட  நீங்கிப்  போகும்              326

வெண்ணிற  சாமரையும்  வீழ்ந்திடும்  மலர்  மழையும்
     அரிமா  தாங்கும்  ஆசனமும்  அழகிய  அசோக  மரமும்
திவ்யத்  தொனி  முக்குடையும்  தேவ  துந்தூபிகளும்
     எங்கள்  தீவினை  போக்குகின்ற  சிறப்பான  அம்சங்களே              327

வேங்கை  நிகர்  கிரணவேகன்  வாலறிவன்  திருவுருவை
     சிந்தையில்  பதித்து  போற்றி  ஜினாலயத்தை  வலம்  வந்து
மாமுனிகள்  அரிச்சந்திரனின்  மென்னடி  தொழுது  வணங்க
     மணிமுடியை  தரை  இறக்கி  மார்பழுந்த  வணங்கினானே         328

                           தத்துவ  உரை.

நித்தியம், அநித்தியம், அவாச்சியம்,  வேற்றுமை, ஒற்றுமை,  சூன்யம்
     இவை  ஆறும்  ஒருங்கே  பொருந்திய  தன்மையால்
ஒருவகையில்  நித்தியம்  ஒருவகையில்  அநித்தியம்
     என்று  நினைப்பதுவே  நிச்சய  தத்துவமாம்                       329

நித்தியமே  தத்துவம்,  அநித்தியமே  தத்துவம்,  அவாச்சியமே  தத்துவம்
     வேற்றுமையே  தத்துவம், ஒற்றுமையே தத்துவம், சூன்யமே தத்துவம்
இவை  ஆறும் எப்போதும்  வேறு  வேறான  தன்மையாகும்
     என  நினைத்தால்  அவை  பொய்யான  மித்யாத்துவமே           330

இவ்வுலகில்  கடன்  கொடுத்தான்  கொடுத்த  கடன்  வாங்கமாட்டான்
     வாங்கி  கொண்ட  ஒருவனும்  மறுபடியும்  தரமாட்டான்
பெற்ற  பிள்ளை  வளர்ந்திடாது  கற்ற  ஆகமம்  உரைக்கமாட்டான்
     திட்டம்  மூன்றும்  மாறிவிட  முரண்படாத  முரண்பாடாகும்                331 

[ திட்டம் ( திருஷ்டங்கள் ) : 1. லோக ப்ரவர்த்தி,  2. புருஷ ப்ரவர்த்தி, 3. சாஸ்திர ப்ரவர்த்தி ]

சம்சாரப்  பெருங்கடலில்  பிறந்து  இறத்தல்  பேரலை  ஆகும்
     மூன்றுலக  எல்லை  எல்லாம்  நான்கு  கதி  கரைகளாகும்
வெவ்வினைகள்  பெருக்கெடுத்து  கடல்  கலக்கும்  வெள்ளமாகும்
     ஆசையும்  மோகமும்  ஊழித்தீ  ரத்ன  தீப  தீவுகளாகும்           332

சம்சாரப்  பெருங்கடலை  தடையின்றி  கடப்பதற்கு
     முனிவரனின்  அறவுரைகள்  மூழ்கடிக்கா  தோணியகி
ஏறுகின்றோர்  அனைவரையும்  மோட்சம்  என்னும்  நகர்  இறக்கும் – என
     மாமன்னன்  கிரணவேகன்  மனதினில்  பதிந்ததன்று           333

மன்னனும்  முனியை  நோக்கி  மலரடி  தொழுது  சொன்னான்
     என்  போகம்  செல்வம்  எல்லாம்  வான்முகிலும்  கடலலை  போல்
நான்  ஆளும்  மண்ணும்  வளமும்  நாலைந்து  நாளில்  மறையும்
     அறத்தினை  தவமாய்  கொண்டு  கர்மத்தை  வெல்வேன்  என்றான் 334  

அருந்தவம்,  விதானம்  நான்கும்,  சீரிய  ஒழுக்கம்,  பூஜை
     நான்கையும்  திருத்தி  செய்யும்  நற்குணம்  உடையோரெல்லாம்
மோட்சமாம்  வீடு  செல்ல  முதல்  வழி  ஒன்றே  ஆகும்
     நற்சிறப்போடு  செய்ய  நடந்திடு  மன்னா  என்றார்                   335

தவம்  என்னும்  திருமகளை  தன்னகத்தே  சேர்த்தணைத்து
     சிவந்த  வாய்  சிற்றடிகள்  செம்மலர்  கொடியிடையும்
கருநிற  கூந்தல்  கொண்டு  கெண்டை  மீன்  விழ்கள்  கொண்ட
     தேவியர்  அனைவரையும்  துப்பினான்  தாம்பூலம்  போல               336

செவியணி  குண்டலம்  போக்கி  தேர்ந்த  மணி  கிரீடம்  நீக்கி
     உடலினில்  மணியும்  முத்தும்  பொன்மாலை  பொருள்  உதிர்த்து
பட்டோடு  தோள்  வளையம்  பசும்பொன்  நகைகள்  ஒதுக்கி
     சுருள்குழல்  சிரத்தில்  அழிய  துறந்திட்டு  முனிவன்  ஆனான்      337

பனி  மழை  வெய்யில்  தாங்கி  நிற்கின்ற  மலையைப்  போல
     ஒழுக்கத்தில்  நீங்கா  முனிவர்  ஒருசேர  வியக்கும்  நிலையில்
ஆகாச  சரணத்தன்மை  அடைந்திட்ட  கிரணவேக  முனிவன்
     காஞ்சன  மலை  குகையில்  காட்டரசன்  போலிருந்தான்          338

புடம்  போட்ட  பொன்னைப் போல  ஒழுக்கத்தாள்  யசோதரையும்
     ஆர்யாங்கனையாகி  ஆதவன்  ஒளி  போல்  நிற்க
வாள்  மேல்  நடப்பதற்கொப்ப  வலிய  சீலத்தாள்  சீதரையும்
     ஆர்யாங்கனையாகி அன்னையுடன்  சேர்ந்து  இருந்தாள்           339

சுப  அசுப  வினைகளின்  படி  நான்கு  கதி  சுழலும்  ஜீவன்
     நல்லொழுக்க  குணத்தை  உடையோர்  மக்களாய்  வந்து  தோன்றி
ஆண்களாய்  பிறப்பெடுத்தோர்  அளித்திடும்  தானம்  பூஜையும்
     வீடடைய  வாயில்  காட்டும்  பெண்கள்  வீடடைய  விதிகள்  இல்லை     340
இந்திரன்  தேவிமார்க்கும்  இறைநிலை  உயர்வதில்லை
     மக்களில்லா மலடிதன்மையாளும் மக்கள் பெற்று  அவர்  இறப்பதாலும்
தன்  கணவன்  சேர்த்துக்  கொண்ட  சக்களத்தி  உறவினாலும்
     துக்கத்தை  தாங்கியதால்  மோட்சகதி  கிடைப்பதில்லை            341

பஞ்ச  அணுவிரதம்  ஏற்று  சிறப்புறும்  சீலம்  கொண்டு
     தவத்தோர்க்கு  தானம்  செய்து  அருகனின்  அடிகள்  தொழுது
கணவனை  மேலாய்  போற்றி  கற்புடை  மகளீர்  ஆனால்
     பெண்  உரு  நீங்கப்  பெற்று  கல்பவாசி  தேவராவர்                  342

கோழிப்பாம்பாய்  பிறவி  கொண்டு  அசனிகோட  வேழ்த்தை  வீழ்த்தி
     நரகம்  ஒன்றில்  அரவமுற்று  நன்மை  நாட  வழியும்  இன்றி
மீண்டும்  மீண்டும்  விலங்கினமாய்  வேறு  பிறவி  ஏதும்  இன்றி
     மலைப்பாம்பாய்  பிறந்து  மலைக்குகையில்  ஸ்ரீபூதி  இருந்தான்          343

ஆர்யாங்கனை  யசோதரைக்கும்  அவள்  மகள்  சீதரைக்கும்
     அறம்  உரைத்த  கிரணவேகன்  அடி  எடுத்து  குகையில்  செல்ல
கடுஞ்சின  விழிகளோடு  முன்பகை  முனிவரன்  மேல்  பாய்ந்து
     வாயினால்  முனியை  விழுங்க  அருகா  என்றழைத்தார்  முனிவர்  344

முனிவரன்  குரலைக்  கேட்ட  மும்மணி  ஆர்யாங்கனைகள்
     கிரணவேகன்  முனியின்  தோளை  கெட்டியாய்  பிடித்திழுக்க
அரவமோ  முனியின்  அங்கம்  அனைத்தையும்  உள்ளிழுக்க
     முனிவனின்  முகத்தை  கண்டோர்  மூவரும்  விழுங்கப்பட்டார்      345

விழுங்கிய  பாம்பின்  மீது  வெஞ்சினம்  இல்லா  மனதால்
     கிரணவேக  முனிவன்  பிறந்தான்  இரவி பிரபன்  தேவனாக 
அருங்குண  மாதர்  இருவரும்  அரிய  நல்தவப் பயனால்
     சத்குணம்  முழுதும்  கொண்ட  சாமான்ய  தேவரானார்            346

குற்றமில்லா  குணவோர்  மூவரும்  தேவலோக  தேவனாய்  பிறக்க
     வைரபாவ  தீவினையால்  மலைப்பாம்பான  சத்ய  கோடன்
நான்காம்  நரகம்  அடைந்து  நரகத்தின்  பலனைத்  தூய்த்து
     உன்னத  ஒப்பில்லாத  ஒரு  நரக  உடலைப்  பெற்றான்          347

  மனிதகதி  பெற்று  விட்டு  இம்மண்ணுலகில்  வாழ்பவரே
     அறத்தினைக்  காட்டிலும்  செல்வம்  அவனியில்  ஏதுமில்லை
மறத்தினால்  வரும்  கேடு  வையகத்தில்  பெரியதாகும்
     மறத்தினை அறவே  போக்கி  அறத்தினை  சேர்த்து  வாழ்வீர்       348

மன்னனும்,  தேவியும்,  மைந்தனும்  சுவர்க்கம்  புக்க  சருக்கம்  நிறைவு.
                              
7.   சக்கராயுதன்  முத்திச்  சருக்கம்.

உலகம்  என்று  உரைக்கின்ற  இம்  மண்ணுலகம்  மத்தியிலே
     நாபியை  போல்  அமைந்துள்ள  ஜம்பூத்தீபத்  தலத்தினிலே
தருமங்களால்  தழைத்தோங்கும்  பாரத  தேசந்தன்னில்
     புலவர்களும்  கவிஞர்களும்  புகழும்  ஊராம்  சக்கராபுரம்           349

அந்நகரின்  நாற்புறமும்     ஆழி  ஒத்த  அகழிகளும்
     நிலவினை  தொட  நினைக்கும்  நீண்ட  நெடு  மதில்  சுவரும்
பெரும்  படையே  வலம்  வரும்  பெரிய  ராஜ  வீதிகளும்
     அரண்மனையை  நடுவில்  வைத்து  அமைந்ததுவே  அந்நகரம்      350

ஆண்  மயிலின்  சாயலிலே  அழகு  பொங்கும்  கோதையர்கள்
     கால்  சலங்கை  தாளமிடும்  நடனசாலை  ஒருபுறமும்
அட்டமி  சந்திரன்  போல்  அழகு  கொண்ட  நூதலுடன்
     பண்ணிசைத்து  பாடிவரும்  பாவையர்  பாடலிசை  ஒருபுறமும்      351

கருமேக  நிறத்தை  கொண்ட  கார்மழையின்  துடிப்பு  கொண்ட
     களிறுகளைக்  கட்டி  வைக்கும்  வேழ  சாலை  ஒருபுறமும்
கமுகு  மரத்தோப்புகளும்  கன்னல்  விளைக்  காடுகளும்
     சூழ்ந்திருக்கும்  மருதநிலம்  சொக்க  வைக்கும்  ஒருபுறத்தில்         352

பாய்ந்து  சென்று  விண்ணளக்கும்  பரிகள்  கட்டும்  சாலைகளும்
     பகைவர்களின்  ஊன்  குருதி  படிந்த  ஆயுத  சாலைகளும்
வண்டுலவும்  கூந்தல்  உடைய  பொது  மகளீர்  வீதிகளும்
     வணிகர்  தங்கி  தொழில்  புரியும்  கடைகள்  கொண்ட  நகரமிது       353

கள்  சொட்டும்  மாலைகளும்  மணம்  வீசும்  பொடிகடைகளும்
     கடையிலா  ஞானம்  உடைய  அருகன்  உறையும்  ஆலயமும்
குடிகாக்கும்  கோல்  கொண்ட  முடிமன்னன்  அரண்மனையும்
     கொண்ட  இந்த  நகர்  சிறப்பு  கூறும்  நிலை  தாண்டியது             354

பகைவர்களும்  பதுங்குகின்ற  வீரத்திற்கு  புலியை  ஒப்பான்
     பைங்கொடிகள்  மயங்குகின்ற  பேரழகன்  மன்மதன்  தான்
சக்கராபுரம்  நகரின்  தனித்தலைவன்  அபராஜிதன் – அவன்
     பட்டத்து  ராணியாக  வசுந்தரி  அவன்   தோள்  அணைத்தாள்         355

கிள்ளை  மொழியுடையாள்  கேட்கத்  தூண்டும்  பேச்சுடையாள்
     யாழ்  குழலின்  இனிமையுடன்  கன்னல்  சுவை  சொல்லுடையாள்
ஆண்  மயிலின்  சாயலுடன்  கயல்  ஒத்த  விழியுடையாள்
     அபராஜிதன்  மஞ்சை  அலங்கரிக்கும்  மலர்கொடியாள்             356

அகமிந்திர  லோகத்தில்  இருக்கும்  பிரிதிங்கர  சிம்மசேனன்
     ஆயுள்  முடிவு  பெற்று  அடுத்த  பிறவி  எடுப்பதற்கு
வாசமுள்ள  குஞ்சுடையாள்  வானோர்  மயங்கும்  வனப்புடையாள்
     வசுந்தரி  வயிற்றினிலே  வாரிசாக  பிறப்பெடுத்தான்              357

செந்நிற  வானத்திலே  திகழும்  பிறை  திங்களை  போல்
     அரசகுலம்  தழைக்க  வந்த  அபராஜிதன்  மகன்  இளவரசன்
எண்வினையும்  கெடுத்து  வெல்லும்  ஏற்றமிகு  வீரனாவான்- என
     தாய்  தந்தை  வைத்த  பெயர்  சக்கராயுதன்  என்ற  பெயர்           358

எட்டெட்டு  கலைகளையும்  எளிதாக  கைக்கொண்டான்
     ஐங்கனையான்  மலர்  அம்பு  ஆசை  கொள்ளும்  வடிவானான்
கொஞ்சுகின்ற  அழகுடனும்  கொவ்வை  வாய்  இதழுடனும்
     சித்திரப்பாவையான  சித்திரமாலையை  மணமுடித்தான்             359

மின்னலுடன்  விளையாடும்  கார்மேக  கூட்டம்  போல்
     சித்திரமாலையுடன்  சேர்ந்திருந்தான்  சக்கராயுதன்
மலைப்பாம்பு  விழுங்கியதால்  தேவனான  கிரணவேகன்
     சக்கராயுதன்  மகனாக  சித்திரமாலை  வயிற்றுதித்தான்            360


தேனினிய  மொழியுடையாள்  சித்திரைத்  திங்கள்  முகத்தாள்
     சித்திரமாலை  பெற்றெடுத்தாள்  கல்பதேவன்  கிரணவேகனை
ஆனந்தத்தில்  சக்கராயுதன்  அள்ளித் தந்தான்  செல்வங்களை
     வருங்கால  ராஜனுக்கு  வஜ்ராயுதன்  என  பெயர்  இட்டான்     361


ஈரெட்டு  கலை  வளரும்  இளம்  பிறைச்  சந்திரன்  போல்
     வஜ்ராயுதன்  வளர்ந்தான்  நாளொரு  மேனியுடன்
மாமன்னன்  கற்று  உணரும்  வாண்  சிறப்பு  வித்தைகளை
     வஜ்ராயுதன்  கற்று  வாலிபனாய்  வளர்ந்திட்டான்             362

ஐந்து  நிலம்  சேர்ந்து  தரும்  அளப்பரிய  அழகுடனும்
     தேவலோகம்  இடம்  பெயர்ந்து  தேடி  இங்கு  வந்தது  போல்
வானளவு  மாளிகைகள்  வண்டலையும்  பூவனங்கள்
     பார்ப்போரை  கட்டி  இழுக்கும்  பளிங்கு  நகர்  பிருதிவிதிலகம்          363

பிருதிவிதிலக  நகரத்தின்   பேரரசன்  அதிவேகன்
     பேரரசன்  பெருந்தேவி  பேரழகி  பிரியகாருணி
இல்லற  தருமம்  ஏற்று  இணைந்திருந்த  இருவருக்கும்
     இரத்தினமாலை  மகளானாள்  முன்பிறப்பின்  சீதரையாள்          364

இளமை  துள்ளும்  மெய்யுடனும்  இளஞ்சிவப்பு  இதழுடனும்
     அன்னமொத்த  நடையினாலே  துவண்டு  விடும்  துடி  இடையும்
திருமகளே  இடம்  மாறி  புவிக்கு  வந்த  பேரழகாய்
     இரத்தினமாலை  வளர்ந்திருந்தாள்  வானகத்து ஏந்திழையாய்        365

ஆண்  மயிலின்  சாயலுடன்  பெண்மானின்  மருள்  விழியும்
     வீணை  யாழ்  இசை  போல  வெளிப்படும்  மென்  மொழியும்
அரம்பையரும்  ஆசை  கொள்ளும்  அளவிலா  அழகுதன்னை
     தூதரால்  அறிந்த  சக்கராயுதன்  பெண்  கேட்டு  செய்திதந்தான்       366

அறநூல்கள்  முறைப்படியும்  அக்கினியின்  சாட்சி  கொண்டும்
     வஜ்ராயுதன்  கைபிடித்தான்  வண்ணமயில்  ரத்தினமாலையை
ஈருடல்  ஓர்  உயிராய்  இமை  சேர்ந்த  இருவிழியாய்
     தம்பதிகள்  இருவருமே  தனித்து  இன்பம்  கொண்டார்கள்              367

சம்சார  இன்பத்திலே  தடையின்றி  வாழ்கையிலே
     கருவுற்று  களிப்பெய்தாள்  இளையராணி  இரத்தினமாலை
யசோதரையாய்  முன்  பிறந்து  கல்பதேவனான  பூர்ண்ச்சந்திரன்
     இரத்தினமாலை  வயிற்றுதித்தான்  பூர்வ  ஜன்ம  வாஞ்சையாலே   368

பெற்றவர்கள்  சுற்றத்துடன்  இட்ட  பெயர்  இரத்தினாயுதன்
     கல்பதரு  கன்றினை  போல்  களிப்புடனே  வளரலானான்
மணங்கமழும்  கூந்தலாரை  மனம்  கவர்ந்த  கன்னியரை
     மணமுடித்து  முத்தெடுத்தான்  காமப்பெருங்  கடலினிலே           369

அபராஜித   மாமன்னனும்   அவன்  இளவல்  சக்கராயுதனும்
     சக்கராயுதனின்  ஒரே  மகன்  செல்வன்  வஜ்ராயுதனும்
வஜ்ராயுதன்  பெற்றெடுத்த  வல்லவன் இரத்தினாயுதனும்
     சம்சார  சுகத்தினிலே  திளைத்து  மகிழ்ந்து  இருந்தார்கள்          370

தவத்தையே  சொத்தாய்  கொண்டு  சகலமும்  துறந்து  விட்டு
     அறத்தையே  மனதில்  ஏற்று  ஆன்மனில்  பற்று  நீக்கி
அருகனின்  தருமம்  ஒன்றே  சிந்தையில்  செரிந்து  நிற்கும்
     முனிவர்கள்  இருக்கும்  இடத்தை  நாடினான்  அபராஜிதன்                   371

தீவினைகள்  ஆன்மா  விட்டு  சென்றிடும்  உபாயம்  தன்னை
     முனிகளை  வணங்கி  கேட்டான்  முடிமன்னன்  அபராஜிதன்
கர்மத்தின்  உண்மை  இயல்பும்  ஜீவனின்  உண்மை  இயல்பும்
     ஜீவனில்  சேருகின்ற  பந்தத்தை  உனக்கு  சொல்வேன்  என்றார்       372

பிறர்பொருள்  ஒவ்வா  நிலையும்  எண்வினை  அறுத்த  செயலும்
     பாவ  திரவிய  கர்மங்கள்  ஆன்மனில்  விலகி  நிற்க
மோட்சத்தின்  உண்மை  இயல்பை  ஞானத்தால்  அறிந்து  தெளியும்
     ஜீவனின்  தூய்மை  ஒன்றே  வீடு  பேறடையும்  வழியாம்              373

முனிவரின்  சொல்லைக்  கேட்ட  முடிவேந்தன்  அபராஜிதன்
     நாடாளும்  பெரும்  பொறுப்பை  மகன்  சக்கராயுதனுக்கு  தந்து
அறநெறி  ஆட்சி  செய்து  நிலையாமை  உணரும்  போது
     வஜ்ராயுதனுக்கு  முடி  சூட்டி  வருவாய்  தவ  நிலைக்கு  என்றான்      374

முடி  துறந்த  அபராஜிதன்  முனி  தீட்சை  ஏற்றுக்  கொண்டான்
     ஐம்பொறி  புலன்  இன்பத்தை  தீயிலிட்ட  விறகாய்  வெறுத்தான்
தரணி  ஆண்ட  சக்கராயுதன்  தருமநெறி  வழுவிடாமல்
     அறம்  சிறக்க  ஆட்சி  செய்து  அன்பு  நிலை  காக்கலானான்          375

சம்சார  சுகத்தினாலே  சார்ந்து  வரும்  வினைகளையும்
     ஆன்மாவில்  இயல்பில்  சேரும்  பாவ  திரவிய  கர்மங்களையும்
தவநீதி  கொண்டு  இனி  தடைசெய்ய  நினைத்த  சக்கராயுதன்
     வஜ்ராயுதனுக்கு  முடி  தந்து  ஜின  தீட்சை  கைகொண்டான்      376

அபராஜித  முனிவரனின்  மலரடியை  தொழுது  எழுந்து
     சக்கராயுதன்  முனிவனாகி  ஜினதீட்சை  ஏற்ற  பின்பு
கடும்  வினைகள்  கழிந்துவிட  முக்கால  யோகத்துடன்
     அரைத்திங்கள்  ஒருத்திங்கள்  அன்ன  உபவாசம்  பழகினான்       377

புலன்  வழி  சேர்க்கையாலே  பொறி  ஆறின்  செயலை  நீக்கி
     நல்லொழுக்க  சக்தியாலே  புலன்  அடக்கம்  கொண்டதனால்
அறுவகை  உயிர்களையும்  அருளோடு  காத்து  ஓம்பும்
     குற்றமற்ற  தர்ம  தியானம்  கொண்ட  தவ  திவ்யனானான்        378

அகத்துப்  பரிசங்கள்  பதின்மூன்றை  நீக்கி  விட்டு
     புறத்துப்  பரிசங்கள்  ஒன்பதையும்  போக்கி  விட்டு
ஆன்ம  பல  தியானத்தாலும்  நல்லறிவு  தெளிவினாலும்
     வீடு  கதி  பெறுவதற்கு  வீரனாக  தவம்  இருந்தான்                   379

(13கப்பரிசங்கள்   தாகம்,  பசி,  நோய்,  யாசித்தல்,  வேண்டியதை  பெறாமல்  இருத்தல்,  
தளர்தல்,  உணவு  போன்றவற்றிக்கு  செல்லுதல்,  படுத்தல்,  ஆடை, காட்சி இன்மை,  அறிவு,     ஞானமின்மை,  சேர்தல்.   புறபரிசங்கள்   9  :  வெப்பம்,  குளிர்,  மாசு  உணர்வு,  புகழ்ச்சி  இகழ்ச்சி,  கடுஞ்சொல்,  வதைத்தல்,  கடிதல்,  திணவு,  பெண்  ஆசை.  )

எண்  வினை  உதயத்தாலே  ஏற்படும்  உயிரில்  குணக்கேடுகள்
     தந்திடும்  வினைகள்  எல்லாம்  சிந்தித்து  மனதில்  கொண்டு 
சம்சார  இன்பம்  நீக்கி  வஜ்ராயுதன்  தவம்  மேற்கொள்ள
     மனதினால்  விலக்கலானான்  மாராணி  ரத்தினமாலையை          380

ஆசையை  துறந்த  அவன்  அனுபவித்த  போகம்  எல்லாம்
     புதிதாய்  கண்முன்  வந்து  புதிய  இன்பங்களாய்  தோன்ற
மோகமும்  செல்வமும்  ஆயுளும்  மின்னலைப்  போல்  அழியும் – என
     அத்தனையும்  விட்டொழிக்க  அருகன்  தவம்  ஏற்பேன்  என்றான் 381

செல்வமகன்  ரத்னாயுதனை  வாஞ்சையில்  அழைத்த  வேந்தன்
     வைரங்கள்  பதித்த  முடியை  வஜ்ராயுதன்  அவனுக்கு  சூட்டி
மோகத்தில்  மூழ்கி  சென்றால்  முடிவில்லா  பாவ  வினைகள்
     உதயத்தை  கொடுப்பதோடு  உறைந்திடும்  ஆன்மனில்  என்றார்   382

முன்  பிறப்பின்  நல்வினையால்  முத்து  மணி  ரத்தினத்துடன்
     வெண்குடையின்  குளிர்  நிழலில்  வேழத்தின்  மீது  அமர்ந்து
வலம்  வருவோர் எல்லோர்க்கும்  நல்வினைகள்  உதிரும்  காலை
     பகைவருக்கு  அடிமைகளாய்  படுந்துயரில்  உழல்வார்  என்றான்   383


ரத்தினம்  பவழம்  கொண்டு  நாட்டிய  கட்டிலின்  மேல் 
     ஐவகை  பொருள்கள்  சேர்த்து  அமைத்திட்ட  மெத்தை  மீது
உறங்குவோர்  பாவ  வினைகள்  உதயத்தைக்  கொடுக்கும்  போது
     வெறுநிலம்  தங்கி  படுப்பார்  துஞ்சினார்  நிலையில்  என்றான்         384

பாற்கடல்  அமுதம்  ஒத்த  பலவகை  உணவு  கொண்ட
     பொற்கலம்  கையில்  ஏந்தி  பூவையர்கள்  தாங்கி  வேண்ட
வெறுப்புடன்  உண்பவர்கள்  நல்வினை  அவிந்த  போது
     மண்கலம்  கையில்  ஏந்தி  பிச்சை  கேட்டு  உண்பார்  என்றான்       385

இத்தனையும்  எடுத்து  சொல்லி  வஜ்ராயுதன்  தன்  தனயனுக்கு
     நல்குண  ஒழுக்கத்தோடு  நாடாள்வாய்  என்று  உரைத்த பின்
 தந்தை  சக்கராயுத  முனியை  தபோவனம்  நாடி  சென்று
     தாமாரை  மலரை  ஒத்த  தவமணி  பாதம்  பணிந்தான்            386

வினைகளின்  பிடியில்  உள்ள  சம்சார  வாழ்க்கை  பற்றி
     மனமது  நடுக்கத்தாலே  தர்மத்தின்  வழியை  நோக்கி
ஈராறு  அடக்கம்  ஏற்று  எண்  வினைகள்  வெற்றி  கொண்டு
     மீளாத  வீட்டை  அடையும்  உறுதியில்  வந்தேன்  என்றான்           387

வஜ்ராயுதன்  வாய்மொழியும்  வல்லிய  பொறுமையும்  கண்டு
     ஆன்மாவின்  மாசுபோக்க  அருகனின்  மும்மணிகள்  ஏற்று
அறுவகை  உடலின்  உயிரை  அருளோடு  போற்றி  பார்க்கும்
     மாபெரும்  தவத்தை  நீ  மகிழ்வுடன்  ஏற்று  செய்  என்றார்           388

செயற்கரிய  செய்வோரெல்லாம்  சிந்தையில்  குணவோராவர்
     அக்குண  வரிசை  தன்னில்  அபராஜித  மாமன்னனும்
அவன்  மகன்  சக்கராயுதனும்  அவனிளவல்  வஜ்ராயுதனும்
     பூமியாளும்  போகம்  நீங்க  போற்றுகின்ற  பெரியோரானார்      389


மாமேரு மலையைச்  சூழ்ந்த  திக்கஜ  மலையைப்  போல
     தியானத்தை  செம்மை  செய்து  சிலகாலம்  சங்கத்தில்  நின்று
தீயென  ஒளிரும்  பரிதியாய்  சக்கராயுதன்  தனித்து  வந்து
     மாமலை  உச்சி  சென்று  மனவினை  ஒழிக்கலானார்             390

பொறிகளின்  புலன்வழி  தடுத்து  சித்தர்கள்  வடிவந்  தன்னை
     புருவங்கள்  நடுவே  ஏற்று  நாசியின்  நுனியில்  நிறுத்தி
மனம்  வாக்கு  காயம்  ஒன்றிய  மாபெரும்  தியானத்தாலே
     எண்வினை  கர்மங்களும்  இளம்பரிதியின்  இருளானது            391

முகிலிடை  இருந்து  விலகும்  வெந்தனல்  ஆதவன்  போல்
     ஆன்மனின்  கர்மவினைகள்    கட்டோடு  அழியப் பெற்று
அனந்த  நான்கும்  அணி  செய்ய  சக்கராயுத  பட்டாரகர்
     மூன்றுலக  உச்சியான  சித்த  சேத்திரம்  சென்றடைந்தார்              392

ஒரு  பிறப்பில்  வணிகனான  உத்தமன்  பத்திரமித்திரன்
     மறு  பிறப்பில்  மன்னனான  சீயபுர  சிம்மசேனன்
அருந்தவத்தால்  அகமிந்திர  தேவனாகி  அங்கு  ஆயுள்  முடிவுற்று
     சக்கராயுதனாய்  பிறந்து  தவத்தினால்  சித்தர்  ஆனார்            393

          சக்கராயுதன்  முத்திச்  சருக்கம்  நிறைவு  பெற்றது.
                            
              

No comments:

Post a Comment