Badrabhagu Muni - பத்ரபாகு முனிவர்


 பத்திரபாகு முனிவர் கதை.





Jain United News Centre, Whatsapp குழுவில் தொடராக செய்யாறு திரு கம்பீர. துரைராஜ் அவர்கள் பதிவு செய்து வந்த தொடர். அவரது தொடர் அஞ்சல்களுக்கு நன்றி.

               
[வாழ்நாளுக்கு இறுதி வரலாம். 

அது இயற்கையாக வரட்டும். 
உண்ணத் தகாதன உண்டோ, 
செய்யத் தகாதன செய்தோ, 
நோயாகத் தீவினைக் கொலையாக வரவேண்டா. 

ஒருகால், அப்படி வரினும் தவமேற்கொண்டபின் அவை துன்பந்தரா. 
பத்திரபாகு முனிவர் இத்தகைய துன்பங்களைப் பொறுத்து விண்ணுலகில் ஈறிலா இன்பம் எய்தினார்.]


முனிவர் வரலாறு:


     இச்சம்புத்தீவத்தின் பரதநிலத்து புரவர்தன நாட்டுக் குண்டினி நகரம் என்னும் பொழிலில் (ஊரில்) இருந்தாண்ட அரசன் பதுமரதன். அரசனின் பட்டத்தரசியின் பெயர் பதுமசிரி.

      அந்நகரில் அரண்மனைப் புரோகிதனாக இருந்தவன் சோமசருமன் என்னும் பார்ப்பனன். இவன் நால் வேதங்களும் ஆறு அங்கங்களும் பதினெட்டு அறநூல்களும் (தரும சாத்திரம்) துறை போகக் கற்றவன். அவனுடைய மனைவி திருமகளைப் போன்ற அழகும் பண்பும் உடையவள். அவள் பெயர் சோமசிரி.

      இவ்விருவர்க்கும் அழகும் கவர்ச்சியும் மிக்க ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை தாய் தந்தையர்க்கும் உற்றார் உறவினர்க்கும் மனமகிழ்ச்சியையும், எல்லா நலங்களையும் நல்கத்தக்கதாக அறியப்பட்டதால் 'பத்திரபாகு' எனப் பெயர் சூட்டினர். பத்திரபாகு இரண்டாம் பிறைநிலா போல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தான். பூணுலிடும் பருவம் எய்தியதும் நல்ல நாள், முழுத்தம், ஓரை ஆகியவற்றைக் கணித்து பத்திரபாகுவுக்குப் பூணூலிட்டு மகிழ்ந்தனர்.

    பத்திரபாகு தன்னைப்போன்ற மாணிகளுடன் (பிரம்மசாரி) சேர்ந்து நகரத்தின் புறத்தே வட்டாடிக் (ஒருவகை விளையாட்டு) கொண்டிருந்தான். உருளையான வட்டுகளை ஒன்றன் மேலொன்றாக பதினான்கு அடுக்கி* பத்திரபாகு விளையாடிக் காட்டினான்.

(* வட்டாடுதல் இந்தியா முழுவதும் இருந்த விளையாட்டு வகைகளில் ஒன்று. உருண்ட தட்டையான வட்டுகளைச் சற்றுத் தொலைவிலிருந்து ஒன்றன்மேல் ஒன்று படியுமாறு எறிந்து விளையாடும் விளையாட்டு வகையாக உய்த்துணரக் கிடக்கிறது.) 


இப்பால், வர்த்தமான பட்டாரர் வீடு பெற்ற (மோட்சம் பெற்ற) பின் பதினான்கு சுருத கேவலிகளுள் நான்காமவரான கோவர்தன பட்டாரர் தன் வழிப்பயணத்தினிடையில் உச்சயன்த மலையை வழிபடுவதற்காக குண்டினி நகரத்திற்கு வந்தார்.

      புறநகரப் பகுதியில் பத்திரபாகு பதினான்கு வட்டுகளை ஒன்றன்மேலொன்று வீசியெறிந்து அடுக்கி விளையாடிக் கொண்டிருப்பதைக் கோவர்தன பட்டாரர் கண்டார். இச் சிறுவன் பதினான்கு பழைய ஆகமங்களிலும் புலமை பெற்ற பெரிய சமணபட்டாரகராக எதிர்காலத்தில் விளங்குவான் என்று மனதுக்குள் எண்ணி மகிழ்ந்தார். இவனைத் தன் மாணவனாக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பினார்.

    கோவர்தன பட்டாரர் பத்திரபாகுவின் தாய் தந்தையரைக் கண்டு, 'உங்கள் மகனை என்னிடம் ஒப்படையுங்கள். அவனுக்கு அனைத்து சாத்திரங்களையும் கற்பித்து உங்களிடம் மீண்டும் ஒப்படைக்கிறேன்' என்றார். அவர்களும் மிக மகிழ்ந்து பத்திரபாகுவைக் கோவர்தன பட்டாரரிடம் ஒப்படைத்தனர்.

      கோவர்தன பட்டாரர் பத்திரபாகுவுக்கு, இலக்கணம், யாப்பு, அணி, காப்பியம், நாடகம், பிரமாணம் முதலிய உலகிலுள்ள அனைத்துச் சாத்திரங்களையும் கற்பித்தார். அவரும் முறையாக ஆகமங்களைக் கற்றார். எல்லாம் கற்றதும் பத்திரபாகுவுக்கு உலக நிலையாமை புரிந்தது. புலனின்பங்களை அறவே வெறுத்தார். கோவர்தன பட்டாரரையடுத்து, 'பட்டாரரே! எனக்குத் துறவு அளித்தருள வேண்டும்!' என்று விடாக்கோள் (வைராக்கியம்) உடையவராகி வேண்டிக் கொண்டார்.

    "நீ கேட்பதுபோல் உன்னை இப்பொழுதே துறவு மேற்கொள்ளச் செய்வது பொருந்தாது. உன் சொந்த நகருக்குச் சென்று உன் கல்வித் திறனைக் கற்றவர்களின் அவையில் காட்டிப் புகழ்பெற வேண்டும். உன்னோடு வாது செய்ய வருவாரோடு வழக்காடி வெல்லவேண்டும். எல்லாத் திசைகளிலும் புலமை பரவவேண்டும். உன் பெற்றோர் உன் கல்வித் திறனால் பெருமையடைய வேண்டும். அதன்பிறகு உன் பெற்றோரிடம் நீ துறவுகொள்ள விரும்புவதைச் சொல்லி  அவர்களின் இசைவு பெற்றுக்கொண்டு வந்தால் நீ தவ மேற்கொள்வதற்கு உதவுவேன்" என்று கோவர்தன பட்டாரர் கூறினார்.

பத்திரபாகு தன் குருவரின் (குருவின்) நன் மொழிகளை ஏற்று அவ்வாறே செய்வதாகக் கூறி வணங்கி விடை பெற்றுக் கொண்டு தன் சொந்த நகருக்குச் சென்றார். தாய் தந்தையரைக் கண்டு மகிழ்ந்தார். நகரில் கற்றவர்களோடு அனைத்துக் கல்வித் துறைகளிலும் சொற்போர் செய்து அவர்களைத் தோற்கடித்தார். இவருடைய புலமையை நாற்றிசையினரும் வாயாரப் போற்றினர்.  பெற்றோர் தம் மகனின் கல்வித் திறனைக் கண்டு பேருவகைக் கொண்டனர். அதன்பிறகு, தன் தாய் தந்தையரிடம் தான் தவ மேற்கொள்ள விரும்புவதாகக் கூறி அவர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு கோவர்தன பட்டாரரிடம் வந்தார். கோவர்தனர் தான் கூறியவாறே பத்திரபாகுவைத் துறவு நெறியில் ஈடுபடுத்தினார்.

      பத்திரபாகு சின்னூட்களையும் பன்னிரு அங்கங்களையும், நாற்பது பழைய ஆகமங்களையும் கற்றுணர்ந்து கடுந்தவம் புரிந்தார். தேவர்களும் மாந்தர்களும் பணிந்து வழிபாடுகள் செய்து சென்றனர். முனிவர்களெல்லாம் வந்து வணங்கத்தக்க கோவர்தன பட்டாரர் *நல்ஞானம், நல்லொழுக்கம், நன்னம்பிக்கை ஆகியவற்றின் மேம்பாட்டால் உள்ளடங்கு இயற்கை(சமாதி மரணம்) எய்தி விண்ணுலகம் சென்றார்.

 சந்திரகுப்தனின் பிறப்பு

    ஐந்து சுருதகேவலிகள் எனப்படும் முனிவர்களுள் ஐந்தாமவரான பத்திரபாகு பட்டாரர் பல சித்திகளையும் பெற்ற முனிவர்களின் கூட்டத்தில் சேர்ந்து, சிற்றூர், நகரம், மலையூர், காட்டூர், ஆற்றூர், பட்டணம், கடல்துறைப்பட்டிணம் என்னும் இடங்களுக்கெல்லாம் சென்றார். இறுதியில் மகத நாட்டுப் பாடலிபுத்திரம் என்னும் பொழிலுக்கு (நகரம்) வந்தார்.

      பாடலிபுத்திரத்தை நந்தமன்னன் ஆண்டு வந்தான். ஒருநாள் நந்தன் சாணக்கியனை இழிவுபடுத்தி வெளியில் துரத்தி விட்டான். அதனால் சீற்றம் கொண்ட சாணக்கியன், 'நந்தனை ஒழிப்பேன்' என்று சூளுரைத்தான். சூளுரைத்தவாறே நந்தனை அழித்து பாடலி நகரை ஆள்வதற்குச் சந்திரகுப்தனை அரசனாகச் சாணக்கியன் அமர்த்தினான். சந்திரகுப்தன் பல ஆண்டுகள் சிறப்புற நாடாண்டு காலமானபின் மகன் பிந்துசாரனும்,  பிந்துசாரனுக்குப் பின் அவன் மகன் அசோகனும் அரசராயினர்.

 அசோகனுக்கு குணாளன் என்னும் மகன் பிறந்திருந்தான். பேரரசன் அசோகன் பகை நாடுகளை வெல்லும் பொருட்டு பாடி வீடமைத்துப் பல நாட்கள் அந்நாடுகளில் தங்கிப் போரிட்டுக் கொண்டிருந்தான். தன் மகன் குணாளன் நன்கு கல்வி கற்கவேண்டும் என்ற விருப்பத்தால் அரண்மனையிலுள்ள அமைச்சர் புரோகிதர் முதலிய அதிகாரிகளுக்கு ஓலை அனுப்பினான். அவ்வோலையில், "ஆசிரியருக்கு அரிசியும் பருப்பும் நெய்யும் பிறவும் வேண்டுவன தந்து மகனைக் கல்வி கற்கச் செய்யவும்" என்று எழுதியிருந்தது.

       அசோக மன்னன் அனுப்பிய ஓலையைப் பொருள் விளங்கப் படிக்கத் தெரியாத அரண்மனையிலுள்ள ஓலை படிப்பவன் கீழ்கண்டவாறு தவறாகப் படித்தான்.

      அரசனின் ஓலையில்  '.......... குமாரம் அத்தியாபசேத்' (அத்தியனம் + ஆப + சேத் = குமாரனை (மகனை) கல்வி கற்கச் செய்யவும்) என்றிருந்ததை '...... குமாரம் அந்தியாபசேத்' (குமாரனை (மகனை) க் குருடனாக்கவும்) என்று படித்துப் பொருள் கூறிவிட்டான். 'அத்தியாப' என்பதிலுள்ள 'த்' என்னும் எழுத்தை ' ந்' என்னும் எழுத்தாகப் பிறழ (அந்தம் = குருடு. அந்த + யாப்பு - - அந்தியாப= குருடனாக. சேத் = செய்க) உணர்ந்ததன் விளைவாகப் பொருள் தலைகீழாக மாறிவிட்டது.

       அமைச்சர், புரோகிதர், நகரக்காவலர் ஆகிய அனைத்து அதிகாரிகளும் அந்தத் தவறான பொருளையே அரசனின் விருப்ப ஆணையாகக் கருதினர். அரசனின் ஆணையை நிறைவேற்றாமலிருந்தால் அரசனின் சினத்துக்குள்ளாக நேருமே என அஞ்சி, ஓலையில் கூறியுள்ளபடி ஆசிரியனுக்கு அரிசி, பருப்பு, நெய் முதலியவற்றைக் கொடுத்தனர். அரசனின் மகன் குணாளனின் கண்களையும் குருடாக்கி விட்டனர்.


      பகை நாடுகளுடன் போரிட்டுப் பெருவெற்றி பெற்ற மன்னன் அசோகன் வெற்றிக் களிப்போடு அரண்மனைக்குத் திரும்பினான்.


 பேரரசன் அசோகன் வெற்றிக் களிப்போடு அரண்மனைக்குத் திரும்பியவன், அரண்மனையில் அருமை மகன் குணாளன் இரு கண்களையும் இழந்து குருடனாக இருப்பதைக் கண்டதும், அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. அசோகன் செயலிழந்து திகைத்துப்போய் விட்டான். தான் அனுப்பிய ஓலையை நன்றாகப் படித்துப் பொருள் விளங்கிக்கொள்ளாத அரண்மனை அதிகாரிகளைக் கடிந்து கொண்டான். அசோகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. மகன் குருடான துயரத்தை அவனால் தாள முடியவில்லை.

            இதற்கிடையில் குணாளன் மனைவி சந்திரானனை என்பவள் ஆண் குழந்தை ஈன்றாள். தனக்குப் பேரன் பிறந்தான் என்னும் செய்தி அசோகனுக்கு மகிழ்ச்சி யளித்தது. பேரனுக்கு 'சந்திரகுப்தன்' எனப் பெயரிட்டான். சந்திரகுப்தனுக்குப் பேரரசனாகப் பட்டங்கட்டினான். அசோகன் துறவியாக முடிவு செய்தான். தன் மகன் குணாளனை நோக்கி 'நீ வேண்டுவன கேள்' என்றான். குணாளன் 'காகணீ' என்னும் விலையுயர்ந்த மாணிக்கக்கல் வேண்டுமென்றான்.  'அது பேரரசர்க்கல்லது (சக்கரவர்த்தி) பிறர்க்குத் தரப்படலாகாது. நான் செய்யத்தக்கது சொல் செய்கிறேன் ' என்று கூறிவிட்டு அசோகன் சினவிரத பட்டாரரிடம் துறவு பூண்டான்.

  பேரரசன் சந்திரகுப்தனின் பழம்பிறவிகள்


     சந்திரகுப்தனின் ஆட்சிக் காலத்தில் சமாதிகுப்தர் என்னும் முனிவர் அவதிஞான முள்ளவராகி பல விடங்களுக்கும் சென்று வரும்வழியில் பாடலிபுத்திரம் நகருக்கு வந்தார். முனிவர் புறநகர் சோலையில் தங்கியிருக்கிறார் என அறிந்து அவரைக் காணச் சென்றார். முனிவரைக் கண்டு முறையாக வணங்கி வழிபட்டு நின்று அறநெறிகளைக் கேட்டுணர்ந்த பின், தன்னுடைய பழம் பிறப்புகளைப் பற்றித் தெரிவிக்குமாறு சந்திரகுப்தன் வேண்டினான். முனிவர் சொல்லத் தொடங்கினார்.

      அவந்தி நாட்டு வைதிச நகரில் செயவருமன் என்னும் மன்னன் நாடாண்டு வந்தான். அவன் அரசமாதேவியின் பெயர் தாரணி, தலைநகரைச் சார்ந்த பராளகூடம் என்னும் ஊரில் தேவிலன் என்னும் சகடப்பரதன் (பண்டங்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளுள்ள வணிகன்) இருந்தான். அவன் மனைவியின் பெயர் பிருதிவிசிரி. அவள் வயிற்றில் கொடுந் தீவினைப் பிறவியான குழந்தை கருக்கொண்ட நாள் முதல் அவர்களின் செல்வ வாழ்வு அழியத் தொடங்கியது.


தேவிலன் மனைவி பிருதிவிசிரியின் வயிற்றில் தீவினைப்பிறவியான குழந்தை கருக்கொண்ட நாள்முதல் அவர்களின் செல்வ வாழ்வு அழியத் தொடங்கியது.

         ஒருநாள் தன் கூட்டத்தைச் சார்ந்த சகடப்பரதர்களுடன் தேவிலன் பருத்திப் பொதிகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு நகரத்தில் விற்கச் சென்றான். வழியில் ஆறலைக்கள்வர்கள் வழி மறித்து தேவிலன் உள்ளிட்ட பல வணிகர்களையும் கொன்றனர். எஞ்சியோர் தப்பி ஓடினர். வண்டிகள், எருதுகள், பண்டங்கள், பணம் ஆகியவற்றைக் கள்வர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

        வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் தன் கணவன் தேவிலனைக் கொன்றுவிட்டனர் என்னும் செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் குறை மாதத்திலேயே பிருதிவிகிரி ஆண் குழந்தையை ஈன்றாள். குழந்தைக்கு நந்திமித்திரன் என்று பெயரிட்டாள். குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குள் பிருதிவிகிரியும் இறந்து விட்டாள்.

     குழந்தை நந்திமித்திரனை நெருங்கிய உறவினர் எடுத்து வளர்த்தனர். அவனை வளர்த்த அனைவரும் இறந்து போயினர். அவ்வூரிலும் நோய்நொடி பெருகியது. அவ்வூரார் அனைவரும், ' இச்சிறுவன் பிறந்த குடும்பமும் உறவினர்கிளைகளும் கெட்டன. இவ்வூரும் இவனால் அல்லல் உறுகிறது. ஆதலால் இவனை ஊரை விட்டே துரத்திவிட வேண்டும்' என்று முடிவு செய்து துரத்தி விட்டனர்.

          ஊரைவிட்டு துரத்தப்பட்ட சிறுவனான நந்திமித்திரன் பல வூர்களில் திரிந்தான். பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். பிச்சை கிடைக்காத நாட்களும் உண்டு. ஒன்றும் கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு. இவனுக்குப் பதினாறு ஆண்டு நிரம்பியது. ஒருநாள் வைதிச நகருக்கு வந்தான்.

     அவ்வூரில் காடகூடன் என்னும் விறகு விற்பவன் தலையில் விறகைச் சுமந்து கொண்டு நகரில் விற்பதற்காக வரும் வழியில் நந்திமித்திரனைக் கண்டான். இருவரும் ஒருவருக்கொருவர் தோழராயினர். ஒரு தோட்டத்தின் வழியாக வரும் போது, காடகூடன் விறகுச் சுமையை தூக்கமாட்டாமல் களைத்து ஓரிடத்தில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டான். அதைக்கண்ட நந்திமித்திரன், தானும் படுத்து ஓய்வெடுத்துக்  கொள்ள விரும்பினான். தலைக்கு வைத்துக்கொள்ள ஏதும் கிடைக்கவில்லை. சுற்றிப்பார்த்தான். ஒரு பெரிய கல் தெரிந்தது. எட்டுபேர் சேர்ந்தாலும் பிடித்து அசைக்கமுடியாத கல்லை  நந்திமித்திரன் மிக எளிதாக தூக்கிக்கொண்டு வந்து தலைக்கு வைத்து படுத்துக் கொண்டான். காடகூடனுக்கு நந்திமித்திரனின் உடல் வலிமை கண்டு மிகவும் வியப்புண்டாயிற்று.


 காடகூடனுக்கு நந்திமித்திரனின் உடல் வலிமை கண்டு மிகவும் வியப்புண்டாயிற்று.

        *விறகுச் சுமையை நகரில் விற்ற பிறகு காடகூடன் நந்திமித்திரனைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான். 'உனக்கு இவ்வூரில் உறவினர் அல்லது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா' என்று அவனை வினவினான். 'எனக்கு யாருமில்லை' என்று நந்திமித்திரன் கூறினான். அப்படியானால், ' நீ என் வீட்டிலேயே இரு. எங்கும் போகவேண்டாம். நான் உன்னை ஆதரிக்கிறேன் ' என்று காடகூடன் சொல்லியதைக் கேட்டதும், நந்திமித்திரனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

       நாள்தோறும் இருவரும் காட்டுக்குச் சென்று விறகு சுமந்து வந்து விற்றனர். நந்திமித்திரன் பத்து பேர் சுமக்கக் கூடிய பெரும் விறகுச் சுமையைச் சுமந்து வந்து விற்றுக் கொடுத்தான். ஆதலால் காடகூடன் விறகு விற்றே பணக்காரனாகிவிட்டான்.

        காடகூடன் தன் மனைவி செயகண்டி என்பவளைப் பார்த்து, 'நீ  இந்த நந்திமித்திரனுக்கு வயிறார உணவிடக்கூடாது. எண்ணெய் போன்றவற்றால் செய்த சுவையான உணவு படைக்கக் கூடாது. குளிப்பதற்காக வெந்நீர் கேட்டாலும் வெந்நீரிட்டுத் தரக்கூடாது.' என்று தொடக்க முதலே சொல்லி வைத்திருந்தான். இவன் தன்னைவிட  உயர்ந்தவனாகி விடக்கூடாது என்ற பொறாமை காடகூடனின் உள்ளத்தில் நந்திமித்திரனை அழைத்து வந்த முதல் நாள் முதலே உருவெடுத்திருந்தது.


       ஊரெல்லாம் விழாக் கொண்டாடிய நன்னாளில் மனம் தாளாமல் நந்திமித்திரனுக்குச் செயகண்டி வயிறார விருந்துணவு வகைகளைப் படைத்து அவன் மனம் மகிழ உண்ணுமாறு செய்தாள். மறுநாள் காட்டுக்கு விறகு வெட்டி வரச் சென்ற நந்திமித்திரன் காடகூடனைப் பார்த்து, 'நண்பா! ஆண்டுக்கொரு நாள் பண்டிகை வந்தது. எனக்குத் தருமமாகவாவது உடுத்திக் கொள்ள ஒரு புது வேட்டி வாங்கித் தரக்கூடாதா? நிறைய விலை கொடுத்து வாங்கித் தரவேண்டாம் மிகக் குறைந்த விலையிலுள்ளதையாவது வாங்கிக் கொடு' என்று வேண்டினான். அப்படியே வாங்கித் தருகிறேன் என்று காடகூடன் கூறிவிட்டுப் பேசாமல் வீட்டுக்கு வந்தான். விறகுச் சுமையை இறக்கி வைத்துவிட்டுத் தன் மனைவியை நோக்கி,' நீ  நந்திமித்திரனுக்கு வயிறார உணவு படைத்தாயா? என்று அதட்டினான்.

காடகூடன் தன் மனைவியை நோக்கி, ' நீ நந்திமித்திரனுக்கு வயிறார உணவு படைத்தாயா?' என்று அதட்டினான்.

         'பண்டிகை நாளாயிற்றே என்று மனமிரங்கி அவனுக்கு வயிறார உணவு படைத்தேன்' என்று செயகண்டி கூறினாள். காடகூடன் கடுஞ்சீற்றம் கொண்டு அவளை அடி அடி யென்று அடித்து நொறுக்கினான். அவள் அடிதாளாமல் தலைவிரிக் கோலமாய் ஓடினாள். அவளைச் சாகுமாறு அடித்துத் துரத்தி விட்டான்.

       நந்திமித்திரன் செயகண்டியைக் கண்டு,' அம்மா! உன்னை உன் கணவன் ஏன் அடித்துத் துரத்திவிட்டான்' என்று வினவினான். 'பண்டிகை நாளன்று உனக்கு வயிறாரச் சோறிட்டதற்காக என்னை என் கணவன் அடித்துத் துரத்தி விட்டான் ' என்று அழுது கொண்டே கூறினாள். இத்தகைய கயவன் முகத்திலும் விழிப்பது தவறு என்றுணர்ந்த நந்திமித்திரன்,' அவன் வீட்டில் மாரி இருக்கட்டும்' எனத் திட்டிவிட்டு வெளியேறினான். தன்னந்தனியாகவே விறகு வெட்டிக் கொண்டு வந்து விற்று வாழத் தொடங்கினான். எட்டு தம்மம் (ரூபாய்) விலை பெறக்கூடிய விறகை ஒரு காசும் பெறாமல் வயிறாரச் சோறோ அல்லது கூழோ தருபவர்களுக்குச் சோற்றுக் கூலியாக விற்று வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பணத்தின் மேல் ஆசையே தோன்றவில்லை.

       மற்றொரு நாள், நந்திமித்திரன் காட்டுக்குப் போய் விறகு வெட்டிச் சுமந்துகொண்டு வரும்போது முனிவர் ஒருவர் தனியே செல்வதைக் கண்டான். அவர் சிவகுப்தாச்சாரியார் என்னும் முனிவர் என்பது அவனுக்குத் தெரியாது. அவர் எட்டு அங்கங்களிலும், நிமித்திங்கள் என்னும் சாத்திரங்களிலும் வல்லவர். காட்டில் கடுந்தவம் செய்து பதினைந்து நாட்கள் உண்ணா நோன்புக்குப் பிறகு பொழிலில் (நகரில்) பாரணை (அமுது வேண்டுதல்) செய்வதற்காக நடந்து போய்க்கொண்டிருந்தார்.

            இம்முனிவர் எங்குப் போகிறார் என்று பார்க்க வேண்டுமென்பதற்காக நந்திமித்திரனும் அவரைப் பின் தொடர்ந்தான். வழியில் புறநகரத்திலிருந்த ஜிநாலயத்தின் புறமதிலின் உட்புறத்தில் தன் விறகுச் சுமையைச் சாய்த்து நிறுத்தி விட்டு முனிவரின் பின்னே நகருக்குள் சென்றான்.


       சிவகுப்த ஆச்சாரியரை அரண்மனையில் வரவேற்று உணவிட்டு அவருடைய நல்லாசியைப் பெற வேண்டும் என்று நினைத்த மன்னன், இந்நகரில் யாரும் முனிவரை வழியில் நிறுத்தி உணவிடக்கூடாது என்றும் அரண்மனையில் அவருக்கு உணவிடப்பட வேண்டும் என்றும் நகர் முழுதும் பறையறையச் செய்திருந்தான். ஆதலால் சிவகுப்த ஆச்சாரியாரை நகரில் யாரும் வரவேற்று விருந்தோம்பவில்லை. அரசன் ஆணையை மீற மக்கள் அஞ்சினர். முனிவர், சிறுகுடிசை, பெரிய மாளிகை என்று பாராமல் அனைத்து வீடுகளின் வழியாகவும் வந்து கொண்டிருந்தார்.


முனிவர் அரண்மனை வாயில் வழியாக வந்த போது அரசனும், அரசனின் சுற்றமும் முனிவரை எதிர்கொண்டு வணங்கி வரவேற்றனர். அரசனும் அரசியும் நிறைபொற்குடம், கண்ணாடி, மலர், அரிசி, மாதுளம் பழம் ஆகிய மங்கலப் பொருள்களோடு முனிவரை வலம் வந்தனர். அரசி முனிவரின் திருவடிகளை மங்கல நன்னீராட்டினாள். அரசனும் முனிவரின் திருவடிகளைக் கழுவினான். முனிவரோடு பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த நந்திமித்திரனையும் இளைய முனிவர் எனக் கருதி அரசி அவன் கால்களையும் கழுவினாள். அவனையும் வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர்.

        முனிவருக்கும் நந்திமித்திரனுக்கும் பொன்னாலாகிய உண்கலங்களில் முக்காலிகளின் மேல் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. அரசனும் அரசியும் உணவு வகைகளைத் தட்டில் பறிமாறினர். அரசான்னம் என்னும் உயர்ந்த நெற்சோறு பருப்புத் துவையல், நெய், பலவகை காய்கறிப் பொறியல், மற்றும் கூட்டுகள், திவ்வியம் (பாயசம்), கோதுமை மாவினால் செய்த இனிப்பு வகைகள், அரிசி மாவினால் செய்த இனிப்பு வகைகள், முதலிய பதினெட்டு வகை பண்ணிகாரங்களும் (பட்சணங்கள்) ஊறுகாய் முதலிய தொடு கூட்டுகளும், பல்வகை இன்சுவைக் குடிநீர் (பானகங்கள்) களும் விருந்தில் படைக்கப்பட்டன.

     முனிவருக்கு படைக்கப்பட்ட அனைத்து உணவு வகைகளும், சுவைக் குடிநீர் (பானகம்) களும் தனக்கும் படைக்கப்பட்டதறிந்து நந்திமித்திரனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பிறந்த நாளிலிருந்து ஒரு நாளாயினும் இத்தகைய உயர்ந்த உணவு வகைகளைக் கனவிலும் தான் கண்டதில்லை என்று நந்திமித்திரன் தனக்குத்தானே நினைத்துக் கொண்டான். தன் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களில் வயிறார உண்டறியாத நந்திமித்திரன் அன்று தான் தொண்டையடைக்கும் அளவுக்கு வயிறார தணிய(திருப்தியாக) உண்டான். பிறகு இருவருக்கும் தளிர் வெற்றிலையும் நிலவத்தி என்னும் ஊரில் விளைந்த மிக உயர்ந்த பாக்கும் தந்தனர். முனிவர் தனக்குத் தந்த வெற்றிலைப் பாக்கை நந்திமித்திரனுக்கு கொடுத்துவிட்டுத் தம் இருப்பிடம் செல்வதற்காக விடைபெற்றுச் சென்றார்.


      முனிவர் ஜிநாலயத்தை யடுத்த மடத்தில் போய்த் தங்கினார். நந்திமித்திரன் தானும் முனிவராகி விடவேண்டும் என்றும், முனிவரானால் பலராலும் உயர்வாக மதிக்கப்படும் பெருமையும் பெறலாகும் என்றும், அறுசுவை உணவு காலமெல்லாம் தானாகவே கிடைக்கும் என்று கருதினான்.


அருகதாசன் என்னும் நகரப் பெருவாணிகனும் இளைய முனிவரை விருந்துக்கு அழைக்கச் சென்றான். அரசனுக்குரைத்த மறுமொழியையே இளைய முனிவர் கூறியதால் வணிகனும் முனிவரை வணங்கி விடைபெற்று வீடு திரும்பினான்.

       இளைய முனிவரான நந்திமித்திரருக்கு இனி வர இருக்கும் துன்பங்களை முன்கூட்டி யணர்ந்த முனிவர், இரவும் பகலும் ஐந்து வணக்க(பஞ்ச நமஸ்காரம்) மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்குமாறு கூறினார். அவ்வாறே இளைய முனிவர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தார்.

     அரசன் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது இளைய முனிவரை ப் பற்றிய நினைவு வந்ததும், அரசியும் அவையினரும் கேட்குமாறு இளைய முனிவரின் உயர் பண்புகளையும் தவ ஆற்றலையும் புகழ்ந்து பேசினான். கடந்த ஐந்து நாட்களாக உணவும் கொள்ளாமல் நீரும் அருந்தாமல் அவர் செய்யும் கடுந்தவத்தை அரசியும் பாராட்டிப் பேசினாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அரசிளங்குமரன், 'நான் இளைய முனிவரின் இருப்பிடத்திற்குச் சென்று அவர் தவம் முடிந்ததும் உணவருந்த நம் அரண்மனைக்கு அழைத்து வருகிறேன்' என்று புறப்பட்டான்.

      இளைய முனிவரின் இருப்பிடத்திற்குச் சென்று அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'எங்கள் அரண்மனைக்கு விருந்துண்ண எழுந்தருள வேண்டும் என்று வேண்டினான். அரசிளங்குமரனின் இளமைப் பொலிவும், நற்பண்புகள், திறமையும் கண்ட நந்திமித்திரர் அவனை வாழ்த்தி, தான் உண்ணா நோன்பு மேற்கொண்டு தவத்திலிருப்பதால் வருவதற்கில்லை என்று கூறி அனுப்பி வைத்தார். 

        நந்திமித்திரரின் ஆறுநாள் உண்ணா நோன்புக்குப் பின் முனிவர் சிவகுப்த ஆச்சாரியார் அங்கு வந்தார். 'உம்மைப் போன்ற நல்லொழுக்க சீலரையும், கடுந்தவம் செய்யும் ஆற்றலும், நம்பிக்கைத்  துணிச்சல் உள்ளவரையும் காண்பது அரிது. நீர் மிகவும் பெரியவர். வணங்கத் தக்கவர் என்று நந்திமித்திரரைப் பாராட்டினார். தம் குரவரே (குருவே) தன்னைப் பாராட்டுவது கேட்டு நந்திமித்திரருக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அப்போது சிவகுப்த ஆச்சாரியார் ஒரு உண்மையை வெளியிட்டார்.

       "நந்திமித்திரரே! உமக்கு வாழ்நாள் இன்றோடு முடிகிறது. இந்த திருமடத்தில் ஒரு மூலையில் இருந்து மெய்நீக்க நோன்பு (சரீர நிவ்விருத்தி) செய்க. ஆடாமலும் அசையாமலும் அமர்ந்து மனத்தை ஒருமுகப் படுத்துக. ஐந்து வணக்க (பஞ்ச நமஸ்காரம்) மந்திரத்தை இடைவிடாமல் ஒதுக!"என்று கூறித் தானும் மந்திரங்களை அருகிலிருந்த சிவகுப்த ஆச்சாரியார் ஓதிக் கொண்டிருந்தார்.
____________
பஞ்ச மந்திரம்.
            ***
ணமோ அரஹந்தாணம்,

ணமோ ஸித்தாணம்,

ணமோ ஆயிரியாணம்,

ணமோ உவஜ்ஜாயாணம்,


ணமோ லோயே ஸவ்வ ஸாஹூணம்.


தேவர்களின் நடுவில் பூந்தேரில் காணப்பட்ட கனகத்துவசனை நோக்கி, 'நீங்கள் யார், இங்கு எதற்காக வந்தீர்கள்?' என்று அரசன் வினவினான். 'நான்தான் நந்திமித்திரன். உங்களால் இளைய முனிவர் என்று அழைக்கப்பட்டவன். உங்கள் அரண்மனையில் விருந்துண்டவன். ஏழு நாட்கள் உண்ணாநோன்பும் கடுந்தவமும் மேற்கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணுலகில் கனகத்துவசன் என்னும் தேவனாகப் பிறந்திருக்கிறேன். என்னுடலை நல்லடக்கம் செய்வதைக் காண்பதற்கும்  என்மீது அன்பு கொண்ட உங்களை வாழ்த்துவதற்கும் தேவர்கள் புடைசூழ வந்தேன் 'என்று அவர் மறுமொழி கூறினார். பின் நல்லடக்கம் செய்யப்படும் உடலுக்கு மலர் மாலையும் நறுமணப் பொருள்களையும் சாத்தச்செய்து தன் குருவரான (குருவான) சிவகுப்த ஆச்சாரியரையும் வழிபட்டு, தங்கள் அருளால்தான் இத்தகைய பேறு கிட்டியது எனப் பாராட்டி விடைபெற்று விண்ணுலகம் சென்றார்.

         அரசன் இதையெல்லாம் கண்டு தானும் தவம் செய்யும் பொருட்டு, தன் மகன் சீவருமனுக்கு அரசனாக முடிசூட்டி விட்டுத் துறவு பூண்டான். பல அரசிளங் குமாரர்களும், அரண்மனை மகளிரும், அரசுச் சுற்றமும், நகர மக்களுள் பலரும் அரசனோடு தாமும் துறவு மேற்கொண்டு பல ஆண்டுகள் தவம் செய்து வானுலகில் தேவராயினர்.

        கனகத்துவசனாகத் தேவருலகில் பலகாலம் வானுலக இன்பம் நகர்ந்து அதே நந்திமித்திரர் இப்போது இந்நாட்டையாளும் அரசர் சந்திரகுப்தராகப் பிறந்து என்முன் நிற்கிறீர்' என்று இதுவரை சொல்லப்பட்ட கதைகளில் வந்த பிறவித் தொடர்புகளை இணைத்துக் காட்டினார் சமாதிகுப்த பட்டாரர். தன் பழம்பிறவிகளைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் சந்திரகுப்தன், சமாதிகுப்த பட்டாரரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

 பன்னிரண்டாண்டு வறுமை

      பத்திரபாகு முனிவர் அனைத்திடங்களுக்குச் சென்று தம் முனிவர் கூட்டம் சூழ்ந்துவர உஜ்ஜயினி நகருக்கு வந்து புறநகர்ச் சோலையில் தங்கியிருந்தார். இதனையறிந்த அரசன் சுற்றம் சூழச்சென்று அவரை வழிபட்டான். அவரிடம் அறம் கேட்டுப் பின்னர் அரண்மனைக்குச் சென்றான். முனிவர் அந்நகரில் பலநாள் தங்கியிருந்தார்.

     முனிவர் ஒருநாள் அனைத்து முனிவர்களுடன் நகருக்குள் உணவுக்காக (அமுதேற்புக்காக) எழுந்தருளினார். ஒவ்வொரு முனிவரும் ஒவ்வொரு நகரப் பகுதிக்குச் சென்றனர். பத்திரபாகு முனிவர் ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அந்த வீட்டில் ஒருவருமில்லை. முன் கதவின் உள்ளறையிலிருந்து ஒரு குழந்தை தொட்டியிலிருந்தவாறே, 'பட்டாரா! போய்விடு, போய்விடு' என்று கூறியதை முனிவர் கேட்டார். முனிவர் தன் இருப்பிடத்திற்குச் சென்று இதன் பொருளை ஞானத்தின் மூலம் அறிந்தார். இந்நாட்டுக்குப் பன்னிரண்டாண்டு வறுமை வரப்போகிறது என்றும், மழையே பன்னிரண்டாண்டு வரை பெய்யாது என்றும் முனிவர் அறிந்தார்.


      உடனே தன் கூட்டத்திலிருந்த அனைத்து முனிவர்களையும் அழைத்தார். 'இந்த நாட்டில் இனிமேல் பன்னிரண்டாண்டு வரை மழை பெய்யாது. வறுமையால் மக்கள் பெரிதும் துன்புறுவர். முனிவர்களுக்கு அன்னம் இடுவார் யாரும் இருக்க மாட்டார்கள். ஆதலால் அனைவரும் தென்னாட்டை நோக்கிப் புறப்படுங்கள். உணவுப் பொருள்கள் கிடைக்குமளவுக்குச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.


தீய கனவுகள்

        அன்றிரவு  அரசன் பதினாறு தீய கனவுகளைக் கண்டான். அவன் கண்ட பொல்லாத கனவில்,
1. கதிரவன் திடுமென மறைந்தான். 2. கற்பக மரத்தின் கிளைகள் முறிந்தன. 3. நிலத்தில் இறங்க வந்த வானூர்தி மீண்டும் மேலே போய்விட்டது. 4. பன்னிரண்டு தலையுள்ள பாம்பு வந்தது. 5. நிலா பிளந்து சிதறியது. 6. விரைந்த நடையுடைய இரண்டு யானைகள் ஒன்றோடொன்று போர் புரியத் தொடங்கிப் பின்வாங்கின.  7. மின்மினிப் பூச்சிகள் காணப்பட்டன. 8. நீரில்லாத ஏரியின் கரை தெரிந்தது. 9. காட்டுத் தீ கண்முன் காணப்பட்டது. 10. அரசனின் அரியணையில் குரங்கு ஏறி உட்கார்ந்தது. 11. பொன்னாலான தட்டில் நாய் கன்னல் (பாயசம்) பருகியது. 12. மதயானையின் மேல் குரங்கு ஏறி உலா வந்தது. 13. குப்பையின் நடுவே தாமரை முளைத்தது. 14. கடல் கரை கடந்தது. 15. தேரில் கழுதைகள் பூட்டப்பட்டு இருந்தன. 16. அரசர்கள் வெண் கழுதைகளின் மேல் ஏறி உலா வந்தனர்.

       இக்கனவுகளைக் கண்டு மனம் வருந்திய சந்திரகுப்தன் பொழுது புலர்ந்ததும் முனிவரின் இருப்பிடத்திற்குச் சென்றான். முனிவரை வணங்கி, தான் கண்ட கனவுகளை எடுத்துக்கூறி அதன் விளைவுகளாக என்ன நேரும் என்பதை எடுத்துரைக்க வேண்டினான்.

பத்திரபாகு முனிவர் அக்கனவுகளின் பயனைச் சொல்லத் தொடங்கினார்.


      "(1) கதிரவன் மறைவைத் பார்த்ததால் பெரிய முனிவர்களும், அவதி ஞானிகளும் உன் நாட்டில் இனி இருக்க மாட்டார்கள்;  (2) கற்பக மரத்தின் கிளைகள் முறிவதைக் கண்டதால் அரசர்கள் யாரும் தவ நெறியைப் பின்பற்ற மாட்டார்கள்; (3) வானூர்தி நிலத்தில் இறங்காமல் மீண்டும் மேலே போவதைக் கண்டதால் தேவர்களும், வித்தியாதரர்களும் இனி இங்கு வரமாட்டார்கள். (4) பன்னிரண்டு தலைப் பாம்பைக் கண்டதால் இந்நாட்டில் பன்னிரண்டாண்டு மழை பெய்யாமல் கொடிய வறுமை வரும்; (5) நிலவு பிளந்து சிதறியதைக் கண்டதால் அறநெறி கெடும்;  (6) மத யானைகள் போரிடவந்து பின் வாங்கியதால், மக்கள் எதிர்பார்த்தபடி மழை பெய்யாது; ஏதோ சிலவிடங்களில் தூறல் பொழியும்; (7) மின்மினிப் பூச்சிகளைக் கண்டதால், சிறந்த அறநூல்களும் சாத்திரங்களும் கற்பாரும், கற்பிப்பாரும் இன்றி அழியும்; எழுதப் படிக்கக் கற்றுக் கொள்பவர் மட்டும் காணப்படுவர்; (8) நீரின்றி வறண்ட ஏரியின் தரையைக் கண்டதால் அறிஞர்களும் ஞானிகளும் தோன்றிய இந்நாட்டில் அறியாமை எஞ்சி நிற்கும். (9) காடு தீப்பற்றி எரிவதைக் கண்டதால், தீயவர்களும் கயவர்களும் தோன்றிக் கொடுமை பல புரிவர். (10) அரியணையில் குரங்கு உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததால், மிகவும் இழிந்தவர்கள் அரசர்களாவர்; (11) பொன்னாலாகிய தட்டில் நாய் உணவருந்தக் கண்டதால், தீய இயல்பினர் அரசர்களால் மதித்துப் போற்றப்படுவர்; (12) குரங்கு யானையின் மேல் ஏறி வருவதைக் கண்டதால், நற்குடியில் பிறந்தவர்களும் உயர்ந்தவர்களும் கூட உலகில் வாழ்வதற்காக இழிந்தவர் சொற்படிக் கேட்டு அவர் வழி நிற்பர்;  (13) குப்பையின் நடுவே முளைத்த தாமரையைக் கண்டதால், இழிந்தவர்களெல்லாம் உயர் பண்புடைய உயர் குடியினராக மாறி விடுவர்; (14) கடல் கரையைக் கடந்ததைக் கண்டதால்; அரசிளங்குமரரும் அருள், கொடை போன்ற உலக பண்புகளை இழந்து யாருக்கும் ஒன்றும் உதவாத பணப்பித்து கொண்டவராகி விடுவர், அறநெறிகளில் பற்றில்லாத மக்கள் ஈவு இரக்கமற்றவராகி விடுவர், அற்ப இன்பங்களைத் தேடியலைந்து கெடுவர்; (15) வெண்கழுதை பூட்டிய பொன் தேர்களைக் கனவில் கண்டதனால், சம்யக் தரிசன ஞான சாரித்திரங்களால் மேம்பட்டுத் தவ நெறியில் உயர்ந்து, மனவலிமை, வாய்மை, வீரம், ஆகியவற்றால் சிறந்த பெரியோர்களின் துணையிருந்தும், தீர்த்தங்கரர்களின் அருளுரையால் பிறவியறுத்துப் பெரும் பயன் கொள்ளும் வீடுபேறு எய்தற்குரிய நிலையில் இருப்பவர்களும், நிலையாத உலகச் சிற்றின்பங்களில் நாட்டஞ்செலுத்தும் தவற்றால் அழிவர்; (16) அரசர்கள் வெண்கழுதை மேலேறி வருவதைக் கண்டதால், உயர் குலத்தவர்கள் இழிந்த குலத்தவருடன் திருமண உறவுகள் கொண்டு ஒருவருக்கொருவர் உறவினராகி விடுவர். இதுவே நீ கண்ட கனவின் பயன் " என்று பத்திரபாகு முனிவர் சந்திரகுப்த மன்னருக்குக் கூறினார்.  அவர் மேலும் விரித்துரைக்கும் போது கலியூழிக் (கலியுகம்) கால கொடுமைகளை முழுமையாகக் காணலாம் என்று சில எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.

கலிகாலத்தில் பொய் சொல்வது இயல்பான பழக்கமாகி விடும். தீயவர்கள் கல்வியும், புலமையும் நிரம்பியவராக இருப்பர். பண்பாளர்களிடம் ஏமாற்றும், கொடியவரிடம் பெருமதிப்பும், துறவிகளிடம் ஆடம்பர பேச்சும் காணப்படும். உண்மையும் நேர்மையும் கொண்ட பண்பாளர்களைக் காண முடியாது. கள்ளரின் கூட்டங்கள் உலகத்தை அலைக்கழிக்கும். பெற்றோர் பிள்ளைகளை நம்ப மாட்டார்கள். அந்தணர்கள் அறமல்லாத தீச்செயலில் ஈடுபடுவர். மனைவிமார் கணவன்மாரிடத்து உண்மையான அன்பு கொண்டிருக்க மாட்டார்கள். மகன் தந்தையை எதிர்ப்பான். இத்தகைய கலிகாலத்தில் தவம் செய்வதற்காகக் காட்டுக்குச் செல்பவர்களே நற்பேறு பெற்றவர்கள்.

       முனிவர் சொன்னவற்றை முழுதும் கேட்ட மன்னன் சந்திரகுப்தன், தன் மகன் சிம்மசேனனுக்கு அரசு பட்டங் கட்டிவிட்டுத் துறவியானான். அவனோடு அரசர் பலரும் பெருந்தரத்து அதிகாரிகளும் துறவியாயினர்.

சந்திரகுப்தரின் தென்னாட்டு வருகை

      நடு இந்தியாவில் இருந்த முனிவர்கள் அனைவரும் பத்திரபாகு பட்டாரரிடம் (முனிவரிடம்) வந்தனர். பட்டாரரின் அறிவுரைப்படி நாலாத் திசைகளிலும் பல நாடுகளுக்குச் செல்ல முடிவு செய்தனர். இராமிலாச்சாரியார்,  தூலாச்சாரியார், தூலபத்திராச்சாரியார் ஆகிய மூவரும் தம் சீடர்களுடன் சிந்து நாட்டை நோக்கிச் சென்றனர்.


     பத்திரபாகு முனிவர், சந்திரகுப்தரையும் ஏனைய முனிவர் குழுவினரையும் அழைத்துக் கொண்டு தென்னாடு நோக்கி வந்தார். சரவணபெள கோள என அழைக்கப்படும் கழுப்பப்ப நாட்டுப் பகுதிக்கு வந்தனர். பத்திரபாகு முனிவர் தம் வாழ்நாள் எல்லையுணர்ந்து, மேற்கொண்டு மேலும் செல்ல இயலாதவராகி  அங்கேயே தங்கி தம் இறுதித் தவம் செய்ய எண்ணினார். ஆதலால் அவர் கழுப்பப்ப மலையில் தங்கி விட்டார். ஏனைய முனிவர்களை தமிழ்நாட்டுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார். 

 பத்திரபாகு பட்டாரரின் தலைமைச் சீடரான விசாகாச்சாரியார் தலைமையில் அரபத்திரர், சுபமித்திரர், மகாசிரியர், சுமதியார், மகாமதியார், விசாகநந்தி ஆகியோர் அனைவரும் ஆச்சாரியார் ஆக்கப்பட்டு எண்ணாயிரம் முனிவர்களைப் பத்திரபாகு பட்டாரர் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார். சந்திரகுப்தரையும் தமிழ் நாட்டுக்குச் செல்லுமாறு பத்திரபாகு பட்டாரர் கூறினார். ஆனால், சந்திரகுப்தர் பத்திரபாகு பட்டாரரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவருடன் அங்கேயே தங்கி விட்டார். பத்திரபாகு பட்டாரர் கழுப்பப்ப நாட்டு கழுப்பப்ப மலையில் ஒரு பாறையின் மேலமர்ந்து கடுந்தவம் மேற்கொண்டார்.

        இதுவே இன்றும் சிரவணபெளிகொளா என்று அழைக்கப் படுகிறது.

         பத்திரபாகு பட்டாரர் உண்ணா நோன்பு மேற்கொண்டு தவத்தில் ஈடுபட்டார். அவர் சந்திரகுப்தரைப் பார்த்து, "நீர் வெளியில் சென்று உணவு பெற்று வருக" என்றார். "ஆளில்லாத இப்பெரிய காட்டில் எங்கும் ஊர்களே தென்படவில்லை. எங்குப் போய் உணவு பெற்று வரமுடியும்" என்றார். "காடாக இருந்தாலும் வழிப்போக்கர் போய்க் கொண்டிருப்பார்கள். முனிவராக இருப்பவரைக் கண்டால் வழிப்போக்கரும் தம்மிடமுள்ள உணவின் ஒரு பகுதியை மகிழ்ச்சியுடன் வேண்டியளிப்பர். ஆதலின் சென்று வருக" எனச் சந்திரகுப்தரைப் பத்திரபாகு பட்டாரர் அனுப்பி வைத்தார்.


     சந்திரகுப்தர் யாராவது தன்னை நிறுத்தி உணவளிப்பார்களா என்று பார்ப்பதற்காகக் காட்டினூடே சென்றார். வழியில் ஒரு மரப் பொந்திலிருந்து ஒரு கை வெளியில் நீண்டது. அதன் முன் கையில் முத்தும் மாணிக்கமும் பதித்த வளையல்கள் இருந்தன. அக்கையில் ஒரு பொன் அகப்பை இருந்தது. "முனிவரே உணவு ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றோரு குரல் கேட்டு அம்மரத்தைச் சுற்றி வந்தார். அங்குமிங்கும் பார்த்தார் ஒருவரும் காணப்பட வில்லை. உணவு கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி வந்தார். பத்திரபாகு பட்டாரரிடம் நிகழ்ந்தவற்றைக் கூறினார். அவர் மறுநாளும் அன்னத்திற்குச் செல்லுமாறு கூறினார்.

 சந்திரகுப்தர் மறுநாள், உணவிற்குக் காட்டினுள் சென்றார். சிறிது தொலைவில் ஒரு மரத்தின் கீழ் அழகே உருவான இளம் பெண்ணொருத்தி உடல் நிறைய விலை உயர்ந்த ஆடையணிகள் பூண்டு நின்றிருந்தாள். அவள் சந்திரகுப்தரைக் கண்டு நிறுத்தினாள். அவள் கையில் உணவுத் தட்டை ஏந்தி நின்றாள். சந்திரகுப்த முனிவர் அவளை நோக்கி, 'அம்மையே! நீ தனித்த பெண்ணாக இருக்கிறாய், தனித்திருக்கும் பெண்ணிடம் முனிவர்கள் உணவு வாங்கி உண்ணலாகாது' என்று கூறிவிட்டுத் திரும்பி வந்து விட்டார். மறுநாளும் அன்னத்திற்குச் செல்லுமாறு சந்திரகுப்தரைப் பத்திரபாகு பட்டாரர் அனுப்பி வைத்தார்.

         சந்திரகுப்தர் காட்டினுள் சிறிது தொலைவு நடந்து சென்றார். அவரே வியப்படையும்படி காட்டின் நடுவே பெரிய நகரம் தெரிந்தது. அந்த நகரத்தை நோக்கி சந்திரகுப்தர் நடந்தார். அந்நகரில் பெரிய மாளிகைகள், கோவில்கள், அரண்மனைகள், அங்காடித் தெருக்கள், பொது மகளிரின் சேரிகள், பூங்காக்கள் ஆகியவை இருந்தன. மக்கள் திரளாக அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். யானைகளும், குதிரைகளும் வருவதும் போவதுமாக இருந்தன. புதர்கள் மண்டி மரஞ்செடி கொடிகளே நிறைந்து காணப்படும் இக்காட்டில் இப்படியொரு நகரம் இருக்கிறதே என்று சந்திரகுப்தர் வியந்தார்.

      அவர் நகரத்தெரு வழியாகச் செல்லும் போது உயர்ந்த ஆடையணிவகை பூண்ட அழகிய பெண் அவரை எதிர் கொண்டு பணிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவருடைய திருவடிகளைக் கழுவி வழிபாடு செய்தபின் முறையாக அவர் மகிழும் வண்ணம் இனிய விருந்துணவு படைத்தாள். சந்திரகுப்தர் விடை பெற்றுக் கொண்டு தம் இருப்பிடத்திற்குத் திரும்பினார். பத்திரபாகு பட்டாரரிடம் நிகழ்ந்தவற்றை எடுத்துக் கூறினார். "அப்படியானால், இனி நாள்தோறும் அந்த நகருக்குச் சென்று உணவு பெறுக" என்று பட்டாரர் கூறினார்.

      பத்திரபாகு பட்டாரர் தம் தவம் நிறைவடைந்து பயன் தரும் நாள் நெருங்கி விட்டதை உணர்ந்தார். நல்ஞானம், நல்லொழுக்கம், நன்னம்பிக்கை ஆகிய கடைப்பிடிகளில் (வைராக்கியம்) தலைசிறந்தவராகிப் 'பசி, நீர்வேட்கை, துன்பம் ஆகியவற்றைப் பொறுத்து அவமோதரிய சரிகைக்குப்பின்* கடுந்தவம் செய்து உள்ளடங்கு இயற்கை (சமாதி மரணம்) எய்தினார். பின்பு கல்பம் என்னும் விண்ணுலகில் சாகரோப கால வாழ்நாள் பெற்று அமிதகாந்தன் என்னும் தேவனாகப் பிறந்தார்.
---------------------------------------------
* அவமோதரியசரிகை:


      வயிறு நிறைவதற்குத் தேவையான 32 கவளச்சோற்றில் ஒரு நாளுக்கு ஒரு கவளம் குறைத்து உண்டு வரும் நோன்பு.    சரிகை - - - உணவுக்காகச் செல்லும் பயணம்.


சந்திரகுப்தர் முனிவர் தம் சீடர்களுடன் அங்குத் தவம் செய்து கொண்டிருந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின் தமிழ் நாட்டுக்குச் சென்றிருந்த முனிவர்கள் திரும்பி வந்தனர். வடநாட்டில் மழை பெய்து வறுமை நீங்கியதைக் கேள்விப்பட்டு மீண்டும் வடநாட்டுக்குச் செல்லும் நோக்கத்தோடு தாம் வந்திருப்பதாகக் கூறினர். சந்திரகுப்தர் நல்ல உடல் நலத்தோடு ஆளில்லாத இப்பெருங்காட்டில் எப்படிப் பன்னிரண்டாண்டுகள் தவம் செய்து கொண்டிருக்கிறார் என்று வியப்படைந்தார்கள். அன்று உண்ணா நோன்போடு அங்கேயே படுத்திருந்து மறுநாள் தாம் பயணம் மேற்கொண்டிருப்பதைச் சந்திரகுப்த முனிவருக்கு தெரிவித்தனர். அவர் "நீங்கள் அனைவரும் மேலும் சில நாட்கள் இங்குத் தங்கியிருந்து பிறகு செல்லுங்கள்" என்றார். "பக்கத்தில் ஊர்களே இல்லை. எங்குப் பார்த்தாலும் காடாகத் தெரிகிறது, இங்கு உணவுக்காக எந்த இடத்திற்குச் செல்ல முடியும்? ஆதலால் எங்களுக்கு விடை கொடுங்கள். நாங்கள் போகிறோம்" என்று அவர்கள் கூறினர்.

       சந்திரகுப்தர் அவர்களை நோக்கி, 'இக் காட்டினுள் ஒரு நகரம் இருக்கிறது. அங்குச் சென்று உணவு பெற்று இங்கு இன்றாயினும் நீங்கள் இருக்கலாம்' என்றார். அதன்படி அம்முனிவர்கள் அனைவரும் அக் காட்டில் இருந்த நகரத்துக்குச் சென்றனர். அந்நகரத்தைக் கண்டு வியந்தனர். அம் முனிவர்களை அந் நகர மக்கள் வணங்கி வரவேற்று அறுசுவை விருந்தளித்து மகிழ்ந்தனர். முனிவர் அனைவரும் மனநிறைவோடு இருப்பிடம் திரும்பி வந்து சந்திரகுப்தரிடம் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.


        அதன்பின் விசாகாச்சாரியார் தன் சீடனைப் பார்த்துத் தன் குண்டிகையை (கமண்டலம்) க் கொண்டு வருமாறு கூறினார். அச்சீடன் தேடிப் பார்த்து மீண்டும் நினைவு கூர்ந்தவனாய், 'அடிகளே! குண்டிகையை விருந்துண்ட வீட்டிலேயே மறந்து விட்டுவிட்டேன்' என்றான்.  'அப்படியானால் மீண்டும் அவ்வீட்டுக்குச் சென்று அக் குண்டிகையைக் கொண்டு வா' எனச் சீடனை முனிவர் அந் நகருக்கு அனுப்பினார். அச் சீடன் சென்று பார்த்தபோது அங்கிருந்த நகரத்தைக் காணவில்லை. காடெல்லாம் சுற்றிப் பார்த்தான். எங்கும் நகரம் காணப்படவில்லை. அலைந்த களைப்பில் மீண்டும் முனிவர் இருப்பிடத்திற்குத் திரும்பினான். வழியில் ஒரு நெடியமரத்தின் நுனிக்கிளையில் குண்டிகை இருப்பதைப் பார்த்தான். ஏறி எடுத்துவர அவனால் இயலாததால் முனிவரிடம் வந்து நிகழ்ந்ததைக் கூறினான்.

 சீடன் கூறிய செய்தியை கேட்ட முனிவர்கள் வியப்படைந்து, சந்திரகுப்த முனிவரிடம் கூறினர். அனைவரும் காட்டினுள் சென்று பார்த்தனர். அவர்கள் முன்பு பார்த்த நகரம் காணப்படவில்லை. அதன்பின் நெடிய மரத்தின் உச்சாணிக் கிளையில் இருந்த குண்டிகையை (கமண்டலத்தை) மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தனர். சந்திரகுப்த முனிவரை நோக்கி, 'தாங்கள் செய்த தவப்பேற்றால் இதுநாள் வரை வானுலகத் தேவர்களே செயற்கை நகரம் அமைத்து தங்களுக்கு உணவு அளித்து வந்தனர். மண்ணுலகத்திலேயே தேவர்களின் கையால் தேவ உணவு உண்ட பெருமை உங்களுக்கு உண்டு. இனி உண்ணா நோன்புகளைக் கைக்கொண்டு தவப்பயன் பெறுங்காலம் உங்களை நெருங்கி வருவதால்தான் அந்நகரம் மறைந்து விட்டது. இனி, தாங்கள் தலைமயிரைக் களைந்து விடவேண்டும். ஜைனநோன்புகள் அனைத்தையும் கைக்கொண்டு கடுந்தவத்தில் ஈடுபடுங்கள்' எனக் கூறிவிட்டு வடநாடு சென்றனர்.

      முனிவர் கூட்டங்களுடன் சிந்து நாட்டுக்குச் சென்றிருந்த இராமிலாச்சாரியார், தூலாச்சாரியார், தூலபத்திராச்சாரியார் ஆகியவர்களும் அந்நாட்டிலும் வறுமையால் மாந்தர் மாந்தரையே கொன்றுண்ணும் கொடுமையைக் கேட்டு வருந்தினர். அங்கிருந்த சமணர்கள் அவரைக் கண்டு, 'இங்குப் பகலில் யாரும் சமைப்பதில்லை. பகலில் பசிக்கு அலைபவர்கள் யார் வீட்டிலாயினும் அடுப்பிலிருந்து புகை வருவதைக் கண்டால் பாய்ந்து பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள். ஆதலால் இரவில்தான் சமைத்துண்பார்கள். நீங்களும் உங்கள் கூட்டத்தில் உள்ள முனிவர்களும் இரவில் உணவு ஏற்று அதையே வைத்திருந்து பகலிலும் உண்டு கொள்வதுதான் நல்லது 'என்று கூறினர்.

அரையாடைத் துறவிகள்

      அவ்வாறே முனிவர் அனைவரும் இரவில் உணவு ஏற்றுப் பகலிலும் அதையே உண்டு வந்தனர். ஒருநாள் கருந்திங்கள் (அமாவாசை) இருளில் ஒரு நிக்கந்த (உடலில் ஆடையில்லாத) துறவி உணவு கேட்டு வருவதை அவ்வூருக்குப் புதியவளான வேளாசாமினி என்னும் கருவுற்ற பெண் பார்த்து திடுக்கிட்டு அஞ்சினாள். அதனால் அவள் கருக்கலைந்து இறந்த குறைமகவீன்றாள். அவள் உயிரும் ஊசலாடியது. இந்தப் பெண்ணின் உயிருக்கும் கருவிலிருந்த குழந்தை உயிருக்கும் தன்னால் தீங்கு நேர்ந்ததறிந்த முனிவர் வருந்தித் தம் ஆச்சாரியரிடம் நிகழ்ந்ததைக் கூறினார். இதற்கு என்ன கழுவாய் (பிராயச்சித்தம்) செய்வது என்று வினவினார்.

ஆச்சாரியார் இதைப்பற்றிச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து முனிவர் அனைவரையும் அழைத்து, 'இனிமேல் வறுமைக்காலம் (பஞ்சம்) தீரும்வரை நிக்கந்தமாக (அம்மணமாக) யாரும் உணவுக்காக வெளியில் செல்ல வேண்டாம். இடது தோளில் ஒரு நீண்ட துணியை இருபுறமும் தொங்கவிட்டுக் கொண்டு செல்லுங்கள். வலது கையில் ஏனம் (பாத்திரம்) இருக்கட்டும். இனி, முன்பு ஏற்பட்டது போன்ற தீங்கு யாருக்கும் நேராது' என்று கூறினார். அவ்வாறே அனைத்து முனிவரும் இடது தோளில் நீண்ட வெள்ளாடையைத் தொங்க விட்டுக் கொண்டு, உணவு ஏற்க ஊருக்குள் சென்றனர். அன்று முதல் மக்கள் அவர்களை அரையாடைத் துறவிகள் என்று அழைத்தனர்.

       நாடு மலிய மழை பெய்து வறுமை தீர்ந்ததும் முனிவர் அனைவரும் சிந்து நாட்டிலிருந்து நடு இந்தியாவிற்குத் திரும்பினர். சிந்து நாட்டிலிருந்து வந்த முனிவர்கள் தென்னாட்டிலிருந்து வந்த விசாகாச்சாரியாரையும் அவர் கூட்டத்தாரையும் கண்டு வணங்கினர். அப்பொழுது விசாகாச்சாரியார் சிந்து நாடு சென்று திரும்பியவர்கள் பாதிமேலாடை அணிந்திருப்பதைப் பார்த்து, "அது நம் நோன்பு முறைகளுக்கும் கொள்கைகளுக்கும் பொருந்தாது. மேலாடைகளை எறிந்து விட்டு நிக்கந்தமாகவே (அம்மணமாகவே) இருங்கள்" என்று இராமிலாச்சாரியார், தூலாச்சாரியார், தூலபத்திராச்சாரியார் ஆகியோருக்குக் கூறினார். அவ்வாறே ஆச்சாரியரும் தத்தம் கூட்டங்களில் இருந்த முனிவர்களுக்குக் கட்டளையிட்டு பாதி மேலாடைகளைத் தூக்கி எறிந்துவிடச் செய்தனர்.

      ஆனால் மூன்றாமவரான தூலபத்திர ஆச்சாரியாரும் அவர் கூட்டத்தினரும் தம் பாதி மேலாடையைக் கைவிட ஒப்பவில்லை. ஆதலால் சமண முனிவரின் கூட்டத்தில் இரண்டு பிரிவினர் தோன்றினர். பாதி மேலாடை அணிந்தவரும், ஆடை அணியாதவருமாகிய இருபிரிவினரும் தத்தமக்கேற்ற கொள்கைகளை வகுத்துக் கொண்டனர்.

வெள்ளாடைத் துறவிகள்

      சுரதநாட்டு வலவிநகரில் வப்பிரபாலன் என்றொரு அரசன் இருந்தான். இவன் அரையாடைத் துறவிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் இவன் மனைவி சாமினி என்பவள் இத்தகைய துறவிகளிடம் பெருமதிப்பு வைத்திருந்தாள். ஒருநாள் அரசனும் அரசியும் அரண்மனை மேல்மாடத்தில் நின்றிருந்த போது தெருவில் அரையாடைத் துறவிகள் சென்று கொண்டிருந்தனர். அரசன் அவர்களை அரண்மனைக்கு வரவழைத்தான். அவர்களை நோக்கி, "நீங்கள் ஆடை உடுத்திருப்பவர்களாகவும் கருத முடியவில்லை. உண்மைத் துறவி எல்லாவற்றையும் துறந்து விட வேண்டும். ஆதலால் நீங்கள் மேலே போட்டிருக்கும் நீண்ட மேலாடையை எறிந்து விட்டு நிக்கந்த துறவியாக இருங்கள்" என்றான். அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. உடனே அரசன் மற்றொரு வழிவகை கூறினான்.

    " உங்களுக்கு மேலாடையை விட மனமில்லையாயின் மற்ற உலக மக்களைப் போல ஒழுங்காக உடலை மூடும்படி ஆடை அணிந்து கொள்ளுங்கள். இரண்டும் கெட்ட நிலையில் நீங்கள் காணப்படலாகாது" என்றான். அரசனின் கருத்தை முனிவர்கள் முழுமனதாக ஏற்றுக் கொண்டனர். உடல் முழுதும் வெள்ளாடை உடுத்த ஒப்புக் கொண்டனர். ஆனால் கச்சை கட்டுதலைத் தவிர்த்தனர். வெள்ளாடைத் துறவிகள் அன்று முதல் சுவேதம்பரர் எனப்பட்டனர். ஆடையணியாதவர் திகம்பரர்எனப்பட்டனர். வடநாட்டில் பலவிடங்களிலும் வெள்ளாடைத் துறவிகள், கம்பளியாடைத் துறவிகள், சிற்றாடைத் துறவிகள் என பலவகைத் துறவிகள் ஆடை உடுப்பவராயினர்.

    தென்னாட்டிலும் சாமளிபுத்திரன் என்னும் அரசன் வெள்ளாடைத் துறவிகள் (சுவேதம்பரரை) தன்னாட்டில் பெருகச் செய்தான்.

       இவ்வாறிருக்க, சந்திரகுப்த முனிவர் விடாப்பிடியோடு (வைராக்கியம்) கடுந்தவம் செய்து, உள்ளடங்கு இயற்கை (சமாதி மரணம்) எய்தி பிரம்ம கல்பகம் என்னும் விண்ணுலகில் பத்து சாகரோப கால வாழ்நாள் பெற்று சீதரன் என்னும் தேவனாகப் பிறந்தார்.

    இக்கதை படித்த, கேட்ட அன்பர்கள் அனைவரும் பத்திரபாகு முனிவரை மனதில் நினைத்து உடலுக்கும், உள்ளத்துக்கும் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு *நற்காட்சி, நல்லொழுக்கம், நன்னம்பிக்கை என்னும் மும்மணிகளைக் கைக்கொண்டு வானுலக இன்பங்களை எய்துக.


(முற்றும்)

நன்றி :நூலாசிரியர், வெளியீட்டாளர் அவர்களுக்கு.


   இச்சிறுகதையை தட்டச்சு செய்தபோது சிறுசிறு பிழைகள் ஏற்பட்டிருக்கும். மன்னிக்கவும்.



1 comment: