வச்சிரசங்கன், ஸ்ரீமதி


வச்சிரசங்கன், ஸ்ரீமதி சரிதம்சமண அண்டவியலின் படி…

சுமேரு (சுதர்சன மேரு, மஹாமேரு) என்ற பெருமலையை மையத்தில் கொண்ட ஜம்பூத்வீபம் அதனைச் சுற்றி பாதுகாப்பு அகழிபோல இருமடங்கு பரப்பளவில் லவண(லவணோததி) சமுத்திரம்;


அடுத்தடுத்து வட்டத்தைச் சுற்றி வட்டமாக நிலப்பகுதிகள் அமைந்து கடைசி தீவும் கடலுமான சுயம்புரமணத்தீவும், சுயம்புரமணக் கடலுக்கு இடையே எண்ணிலடங்கா தீவு, பாதுகாப்பு அகழிபோல கடல்களின் பரப்பு இரண்டு இரண்டு மடங்காக உள்ளன.


ஜம்பூத்வீபம் - சுயம்புவாக தோன்றிய நாவல் மரங்கள் நிறைந்த பூமி. அதனால் நாவலந்தீவு என்று தமிழில் அழைக்கப்படுகிறது.


மஹாமேருவைச் சுற்றி வட்டமான நிலப்பரப்பாக அமைந்துள்ள நாவலந்தீவில் ஏழு க்ஷேத்திரங்கள் உள்ளன. பரதக்ஷேத்திரம், ஹைமவத க்ஷேத்திரம், ஹரி க்ஷேத்திரம், விதேஹ க்ஷேத்திரம், ரம்யக க்ஷேத்திரம், ஹைரண்யவத க்ஷேத்திரம், ஐராவத க்ஷேத்திரம் என ஏழு பூமிகளாக அழைக்கப்படுகிறது.
பரத , ஐராவத க்ஷேத்திரங்களில்; உயிரினங்களின் உடல் வலிமை, உயரம், ஆயுள் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக்கொண்டு ஏறுகாலம், இறங்குகாலம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.  இரு அரைகாலச் சுழற்சி சமமான கால அளவைக் கொண்டிருந்தாலும்,  அதன் இருசமபிரிவும் வெவ்வேறான அளவுள்ள ஆறுகால உட்பிரிவுகளைக் கொண்டது.


1. நன்நற்காலம் (நல்ல+நல்ல; சுஷமா+ சுஷமா); 2. நற்காலம் (சுஷமா); 3. நற்றீக்காலம் (நல்ல+தீக்காலம், சுஷமா+துஷமா); 4. தீநற்காலம் (தீக்+நல்ல காலம், துஷமா+சுஷமா); 5. தீக்காலம் (துஷமா); 6. தீத்தீக்காலம் (தீக்+தீக்காலம், துஷமா+துஷமா) என ஆறு பிரிவுகள் இருக்கும்.
இதில் தீ நற்காலமான நான்காம் காலம் உத்தம கர்ம பூமி யாகும். அதாவது ஆயுள், உயரம் மற்றும் ஞானம் மேலும் குறைவதோடு, உயிர்களிடத்தில் மகிழ்ச்சியைவிட துக்க உணர்வே மேலேங்கி நிற்கும்.


இதற்கு முன் உள்ள மூன்றாவது நற்தீக்காலத்தின் கடைசியில் முதல் தீர்த்தங்கரரான ஆதிபகவன் தோன்றி மக்களை நலவழிப்படுத்தினார். மற்ற இருபத்து மூன்று தீர்த்தங்கரர்களும் அவதரித்தது இந்த நான்காம் காலப்பகுதியில் தான். பகவான்  மஹாவீரர்  நிர்வாணம் அடைந்து மூன்று ஆண்டுகள் எட்டு மாதங்களில் இந்த தீநற்காலமும் முடிந்து தற்போது ஐந்தாம் காலமான தீக்காலம் நடைபெறுகிறது.


விதேஹ க்ஷேத்திரங்களில் எப்போதும் நற்தீக்காலத்தின் கடைசிபகுதி போன்று இருக்கும். அதனால் அங்கு எக்காலமும் இருபது தீர்த்தங்கரர்கள் இருந்தவண்ணம் நற்சிந்தனைகளை போதித்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் நமது ஜைன மரபு, கலாச்சாரம், ஒழுக்கங்கள் எப்போதும் மறையாமல்  விதேஹ க்ஷேத்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிபகவனான ரிஷபதேவரும் தமது அவதிஞானத்தால் அந்த விதேஹ க்ஷேத்திர கலாச்சாரங்களை கண்டறிந்து இந்த பரதக்ஷேத்திர மக்களை வழி நடத்தியுள்ளார் என்று கூறுகிறது சமணவரலாறு.


 அதே சமயம் பரத க்ஷேத்திரத்திலும் விதேஹம் என்ற பகுதியும் உள்ளது. இரண்டிற்கும் இடையே குழப்பம் வருவது இயற்கையே.

மனம் போல் மாங்கல்யம்…


நாவலந்தீவின் ஏழில் ஒன்றான இந்த விதேஹ க்ஷேத்திரத்தில் புட்கலாவதி நாட்டில் உத்பலகேடபுரத்து நகரத்து அரசனாக வச்சிரபாகு என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்துராணி வசந்தரைக்கு, முற்பிறவியில் ஈசானகல்பத்தில் இலளிதாங்கன் எனும் தேவனாக பிறந்து தேவசுகத்திற்கான ஆயுள் முடிந்து, வச்சிரசங்கன் என்ற மகனாக பிறந்தான்.


தேவலோகத்தவனாகவே இப்பூமியிலும் தேஜசுடன் காணப்பட்டான். அமரலோகத்தில் அவனது தேவியாக இருந்த சுயம்பிரபாதேவியின் நினைவு அவனை விட்டு அகலாமல் இருக்கவே இங்குள்ள பெண்டிர் எவரையும் மணம் புரிய மனமின்றி காலம் தாழ்த்தி வந்தான்.


அதேகாலத்தில் ஈசானஅமரலோகத்தில் இருந்த சுயம்பிரபை தனது தேவன் இலளிதாங்கன் மரிக்கவே விரக்தி கொண்டு த்ருடதர்மா என்ற தேவனின் தருமோபதேசம் கேட்டு ஆறுமாதங்களாக ஜினரை பூஜித்து வந்தாள். பின்னர் அங்குள்ள சோலையிலுள்ள ஜினாலயத்தில் பூஜித்து சைத்திய மரத்தினடியில் அமர்ந்து தியானித்து உடலை விடுத்தாள்.


அவளும் மறுபிறவியாக அதே புட்கலாவதி நாட்டின் ஒரு பகுதியான புண்டரீக நகரத்து மன்னன் வஞ்சிரதந்தன்(வச்சிரஜங்கன் இல்லை) மற்றும் அவனது தேவி இலக்ஷ்மிமதி இருவருக்கும் ஸ்ரீமதி எனும் மகளாக பிறந்தாள். இவள் இளமைப் பருவம் எய்தியபோது அந்நாட்டில் யசோதரன் என்ற மாமுனிவருக்கு கேவலஞானம் வெளிப்பட்டது. அப்போது அவரை வணங்க வந்திருந்த தேவரசர்களால் முழங்கப்பட்ட துந்துபி வாத்திய ஓசை கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அவள் விழித்தெழுந்தபோது தேவர்களின் பரபரப்பான சூழலைக் கண்ணுற்றாள். அவ்வேளையில் முற்பிறப்பை அறியும் உணர்வு அவளுள் விழித்தெழுந்ததில் தனது தேவனான இலளிதாங்கனை நினைத்து மூர்ச்சையானாள். தோழிகள் அவளது மயக்க நிலையை நீர்தெளித்து தெளியச் செய்ததும், எனது மணாளனான இலளிதாங்கனைக் கண்ட பின்னரே நான் பேசத்துவங்குவேன். அதுவரை பேசாமடந்தையாய் இருப்பேன் என்றவாறு உறுதிபூண்டாள்.


அவனது பெற்றோர்கள் இவளது மெளனநிலைக் கண்டு  அவளைத்தேற்றினர். இருப்பினும் அவள் மெளன விரத்துடன் இருந்தே காலம் கழித்தாள். இவளது நடவடிக்கையை கண்ணுற்ற இவளது தந்தை வஜ்சிரதந்தனும் இது முற்பிறவி நினைவு வந்ததினால் ஏற்பட்ட பாதிப்பு என்று கூறி தனது மனைவியை தேற்றியதோடு, மகளுக்காக பண்டிதை என்ற தாதியினை அமர்த்தி இவளைத்தேற்றி முன்போன்ற நிலைக்கு கொண்டு வருவாயாக என்று கட்டளை இட்டுச் சென்றான்.


அவ்வேளையில் அந்நகரத்திலுள்ள கேவலஞான முனிவர் யசோதருக்கான கைவல்ய பூஜையை செய்ய முடிவு செய்த போது, அரசனது ஆயுதசாலையில் சக்ராயுதம் தோன்றியது. அதற்கும் சக்கரபூஜை செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும் இம்மை மற்றும் மறுமைக்கு  நலமளிக்கும் கைவல்யபூசை செய்வதே உசிதம் என்றெண்ணி யசோதர பட்டராகரைப் பூசிக்க தனது பரிவாரங்களுடன் சென்றான். அவரை திருவடிகளில் வணங்கி மங்கலப்பொருட்களால் அர்ச்சிக்கும் போது மனமலங்கள் விலகி வச்சிரதந்தனுக்கு அவதிஞானம் எனும் தொலையுணர்வு ஆற்றல் தோன்றிற்று.


மன்னனும் தனது முற்பிறவியை அறிந்ததோடு தனது மகள் ஈசான கல்பத்து சுயம்பிரபை என்னும் தேவியாவாள் என்பதும் அவளது வாட்டத்திற்கு அவளது காதலன் இலளிதாங்கனே காரணம் என்பதை அறிந்து, பண்டிதை எனும் நியமனம் செய்யப்பட்ட தோழியை அழைத்து ஸ்ரீமதியை நான் வரும்வரை காத்துவருவாயாக என்று பணித்து விட்டதோடு, ஆயுதசாலையில் தோன்றியுள்ள சக்ராயுதத்திற்கான பூசைவிதிகளைச் செய்ய புறப்பட்டான்.காலம் கழிந்தது, ஒருநாள் பண்டிதை என்ற அந்த சாமர்த்திய சாலியான தோழியும் சமயம் பார்த்து ஸ்ரீமதியிடம் உனது வாட்டத்திற்கும், இந்த பேசாநிலைக்கான காரணத்தையும் கூறுவாயாக; என்னால் ஆகாதது ஒன்றுமில்லை என்று பலரும் என்னைப் புகழ்வர். என்னிடம் உனக்கு ஏற்பட்டுள்ள மனக்குழப்பத்திற்கு மூலமான நிகழ்வைக் கூறினால் வாய்ப்பாக கருதி அதனை சரிசெய்வேன். என்னை முழுவதுமாக நம்பு, உனது தாயைப்போல ரகசியம் காப்பேன் என ஆறுதலாக தைரியத்தை அளித்ததும், ஸ்ரீமதியும் சிறிது கூச்சயுணர்வு நீங்கியவளாய் அன்று தேவர்களது துந்துபி யோசை கேட்டு விழுந்து தனக்கு நிகழ்ந்த முற்பிறவி நினைவு முழுவதுமாய் தெரிவிக்கலானாள்.


ஈசான தேவலோகத்தில் தான் பிறப்பதற்கு முன்கதியில் இப்பூமியில் ஒரு அரசனுக்கு நிர்நாமிகை என்ற மகளாய் பிறந்திருந்திருந்ததையும், பின்னர் சிலகாலத்தில் அனைத்து உறவினர்களையும் இழந்து நிர்கதியாய் தவித்ததையும் தெரிவித்தாள். அப்போது அருகிலுள்ள வனத்தில் தவமியற்றி வந்த பிகிதாசிரவர் என்ற முனிவரை சென்று வணங்கி தனக்கு இத்துன்பநிலை ஏற்பட்டதற்கான காரணத்தை வினவியபோது அவரும் அவதிஞானத்தால் கண்டறிந்து; இதற்கும் முன் பிறவியில், ஜைன ஆகமத்தைப் படித்துக் கொண்டிருந்த ஒரு தவமுனிவருக்கு இழைத்த தீங்கினால் இக்கதி ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் இதிலிருந்து மீள ஜினகுண சம்பத்து மற்றும் சுருதஞானம் என்னும் இரு நோன்புகளை உறுதியாய் ஏற்று போற்றிக் காத்திடின் விடுதலை பெறலாம் என்று உபாயம் கூறினார்.

அதன் படி நிர்நாமிகையான நான் ஜினகுண சம்பத்து நியமத்தை நிறைவேற்ற அறுபத்து மூன்று உபவாசங்களையும், சுருதஞானம் என்ற விரதத்திற்கான நூற்றி ஐம்பத்தெட்டு உபவாசங்களையும் ஏற்று பூர்த்தி செய்தேன். அதற்கு வெகுமதியாக ஆயுள் முடிந்ததும் ஈசான கல்பத்தில் இலளிதாங்க தேவனுக்கு சுயம்பிரபை தேவியாக அவதரித்தேன் என்று கூறினாள். பின்னர்  என்தேவன் மரித்து இப்பூமியில் மானிடனாய் பிறந்த  ஆறுமாதங்களுக்கு பின் இங்கு வந்து ஸ்ரீமதியாக பிறந்தேன். தற்போது அவன்மீதுள்ள காதலால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று இரு பிறவிகளாக தொடரும் அவளது காதல் உணர்வை தெரிவித்தாள்.


மேலும் எனது முற்பிறவி சரிதம் அனைத்தையும் ஒரு துணியில் சித்திரத்தொடரியாக (பட்டகம்) வரைந்துள்ளேன். அவற்றிற்கிடையே சில ரகசிய நிகழ்வுகளையும் மறைபொருளாக குறித்துள்ளேன். இவற்றை அறிந்தவன் என் கண்ணாளன் ஒருவனே.  அதனால் எனது சுயசரித பட்டகத்தை ஜினாலயம் போன்ற பொதுஇடத்து பட்டகச்சாலையில் (சித்திரக்கூடங்கள்) காட்சிப் பொருளாக பிரசுரித்தால், அதனைப் பார்ப்பவர்களில் எவர்ஒருவர் அதன் ரகசியச் செய்திகள் அனைத்தையும் தெரிவிக்கிறாரோ அவரே என் முற்பிறவி கணவன். அவனே என் காதலன், அவனைத்தேடி தருவாயாக என்று வேண்டினாள்.

பண்டிதையும் இளவரசியாரே கவலையை விடுங்கள். கண்டிப்பாய் விரைவில் உங்கள் காதலனோடு வருகிறேன். அதுவரை சந்தோஷமாக நம்பிக்கையுடன் இருங்கள். அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிச் சென்றாள். அருகேயுள்ள மகாபூத ஜினாலயத்தை அடைந்து அங்குள்ள கூடத்தில் இந்த சித்தரத்தொடரியை விரித்து காட்சிப்படுத்தியிருந்தாள்.

இதற்கிடையே வச்சிரதந்த மன்னன் ஆறுகண்டங்களையும் வென்று தனது சக்ராயுதத்துடன் தனது தலைநகருக்கு திரும்பினான். ஒரு நன்னாளில் முப்பத்து மூன்றாயிரம் முடிசூடிய தேவர், வித்தியாதரர் மற்றும் மனித மன்னர்களாலும் போற்றி புகழப்பட்டு பேரரசருக்குரிய மணிமுடி தரித்து சக்கரவர்த்தியானான்.

அப்போது ஒருநாள் தன் மகள் ஸ்ரீமதியை அழைத்து எனதருமை மகளே. உனது சோர்வு, கவலைகளை நீக்கி மெளனம் கலைந்து மகிழ்ச்சியுடன் உணவருந்தி இருப்பாயாக. நான் சக்ராயுதத்துடன் போருக்குச் செல்லும் முன் யசோதர முனிவருக்கு கைவல்ய பூஜை செய்தபோது அவதிஞானத்தைப் பெற்றேன். அவ்வாற்றலின் துணையால் உனது காதலன் ஈசான கல்பத்து இலளிதாங்க தேவன் என்பதை அறிந்தேன். இப்போது என் முற்பிறவிகளின் வரலாற்றையும் தெரிவிக்கிறேன் கேள் என்றபடி தனது முற்பிறவிகள் வரலாற்றில் இலளிதாங்க தேவன், சுயம்பிரபையும் எந்தெந்த முறையில் உறவு கொண்டிருந்தனர் என்ற விபரங்களை கூறி முடித்தான். (ஆதிபுராணத்திலுள்ள நிகழ்வுகளை சுருக்கமாக தெரிவித்துள்ளேன்)


அவளும் தந்தையே நானும் முற்பிறவி சரிதங்களை தங்களது கருணையினால் அறிந்து மகிழ்ந்தேன் என்று மகிழ்வுற்றாள். வச்சிரதந்தனும் மகளே அவன் இன்னும் மூன்று நாட்களில் இங்கு வந்து உன்னை மணமுடிப்பது உறுதி. பண்டிதை அவனை கையோடு அழைத்து வரப்போகிறாள் என்று நம்பிக்கை யளித்ததும் அகமகிழ்ந்தாள் ஸ்ரீமதி. அத்துடன் நான் உனது மாமி வசுந்திராதேவியை உடன் காணச்செல்கிறேன் என்று கூறி தந்தையான வச்சிரதந்தன் புறப்பட்டான்.


சற்று நேரத்தில் பண்டிதையும் அங்கு வந்து ஜினாலய சித்திரக்கூடத்தில் நடந்த விஷயங்களை விளக்கலானாள். இளவரசி ஸ்ரீமதி… அந்த சித்திரங்களை கண்ட பலரும் அதன் கதையைக் கூறிவந்தனர். ஒன்றும் நீ குறிப்பிட்ட ரகசிகங்களை வெளிப்படுத்துவனவாக இல்லை, அதனால் பரிகசிக்கவே, அவர்களும் தலைகுனிந்து சென்றனர். (அக்காலத்தில் இதுபோன்ற சித்திரத்தொடரியை வரைந்து அதிலுள்ள ரகசியக்குறியீடுகளை தெரிவிப்பவரையே தனது மணமொத்த மணவாளனாக தேர்வு செய்யும் ஒரு சுயம்வர முறையும் இருந்துள்ளது என்பது தெரிகிறது.)அவ்வாறான சமயத்தில் காதலனான வச்சிரசங்கன் ஜினாயத்தில் ஜினதுதி செய்து விட்டு இக்கூடத்திலுள்ள இச்சித்திரங்களை கண்டதும் வியந்து நின்றான். இதில் காணப்படும் விமானம் எனது ஸ்ரீபிரபம் போல அழகான வடிவத்துடன் உள்ளது. அதில் இலளிதாங்க தேவனாக அமர்ந்திருப்பது நானே. மேலும் இனிமையான, கனிவான பேச்சும், அழகிய வதனத்துடன் அருகிலிருப்பவள் என்தேவி சுயம்பிரபை போலவே உள்ளது. அவளது அங்க லட்சணங்கள் அனைத்தும் இச்சித்திரத்தில் பொருந்துவதாகவே உள்ளன. ஆமாம்.. நாங்கள் இருவரும் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடி மகிழ்ந்த சோலைகளும், அங்குள்ள அழகுக்கூடங்களும் அப்படியே வரையப்பட்டுள்ளன. இதிலுள்ள குறிப்புகள் அனைத்தும் எனது வாழ்க்கை நிகழ்வுகளை தத்ரூபமாக கலையம்சத்துடன் வரைந்திருப்பதைக் காணும் போது கண்டிப்பாக எனது சுயம்பிரபை மறுபிறவி யெடுத்திருந்தாலன்றி பிறரால் இவ்வாறு அடையாளப்படுத்த முடியாது என்று கூறி வியந்து நின்றதைக் கண்டதும். அவனிடம் நான் உனது காதலியின் தோழி பண்டிதையானவள் என்று கூறியதும் அவனும் தன்னிடம் உள்ள சித்தரத்தொடரி துணியான பட்டகத்தை என்னிடம் காட்டியதோடு, ஒப்பிட்டும் கூறினான். நானும் சந்தோஷத்துடன் அவன் அளித்த பட்டகத்தையும் உனக்களிக்க கொணர்ந்துள்ளேன். அவற்றைப் பெற்றுக் கொள்வாயாக. அவனே உனது மணாளன் இனி கவலையை விடு களிப்புடன் இரு என்று மகிழ்ச்சி பொங்க கூறி முடித்தாள்.


அவ்வாறு முற்பிறவி ஞானத்தினால் தங்களது உறவின் நெருக்கத்தை அறிந்த இருவருக்கும் சக்கரவர்த்தி வச்சிரதந்தனும், தனது தாய் வசுந்திரா தேவி மற்றும் தந்தை வச்சிரபாகுவுடன் வந்திருந்த காதலன் வச்சிரசங்கனுக்கு தனது மகளான ஸ்ரீமதியை மணம் செய்ய சம்மதிக்குமாறு கூறி,  அவனுக்கு வேண்டிய செல்வங்களை தனது பொக்கிஷ அறையிலிருந்து அள்ளிச் செல்லுமாறு வேண்டினான்.


வச்சிரபாகுவும், சக்கரவர்த்தியாரே உன் அருளால் எனது நாடும் செழிப்பாகவே உள்ளன. அதனால் உனது மகளான ஸ்ரீமதியை எனது மகனுக்கு மணம் செய்தாலே எங்கள் மனம் நிறைந்து விடும் என்று கூற; இருவருக்கும் நன்னாளில் நலங்குடன் திருமணம் நிறைவேறியது.
 ஸ்ரீமதியும் மனம் போல் மங்கல்யத்தைப் பெற்றாள்.
வச்சிரசங்கனும்,  ஸ்ரீமதியும் தங்கள் இச்சைப்படி வாழ்ந்து வீரபாகு, சுபாகு என்ற மக்களைப் பெற்றனர். பிற்காலத்தில் நான்பதொன்பது புதல்வர்களுடன் வாழ்ந்து வந்தனர் என்கிறது வரலாறு.


காலச்சக்கரம் சுழல்வதை நிறுத்தாத போது, நிகழ்வுகளும் நிற்கப்போவதில்லை. அவனது நாடும், மாமன் வச்சிரதந்தன் ஜின தீட்சை ஏற்றபின் சில அரசியல் நெருக்கடி ஏற்பட்டு அந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பையும் ஏற்க வேண்டியதாயிற்று. அவ்வாறான வேளையில்  ஒருநாள் மன்னன் மாளிகையில் தேவியுடன் தங்கியிருந்த போது, வனத்தில் ஆகாய சாரண பரமேட்டியர் தநவரர் மற்றும் சாகரசேனர் என்ற இருவர் வனச்சரியா மார்க்கத்தினால் அத்தலத்தில் எழுந்தருளினார்கள்.


அச்செய்திகேட்டு தேவியுடன் சென்று திருவடிகளில் விழ்ந்து வணங்கி வரவேற்று புனிதமான இடத்தில் அவர்களை அமர்த்தி அர்ச்சினைப் பொருட்களால் பூசனை செய்தான். உடல், மனத்தூய்மையுடனும், சிரத்தை, பக்தி, பேராசையின்மை, சக்திமுறையறிதல், தயாகுணம், மன்னித்தல் என்னும் ஈகையாளனுக்குரிய பண்புகளைப் பெற்ற வச்சிரசங்க மன்னன்;
நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம், தவம், அனுஷ்டானம் முதலிய தானம் வாங்குபவரின் பண்புகளை கொண்ட அச்சாரணமுனிவர்களுக்கு நாற்பத்தாறு குற்றங்கள் நீங்கிய ஆகார தானம் அளித்ததினால் ஐவகை அதிசயங்களை (பஞ்சாச்சர்யங்கள்) பெற்றான். அதாவது தேவர்களது பொன்மாரி, தேவதுந்துபி, தேவமணம் கமழும் மந்தமாருதம், தேவதுதி, பூமழை போன்றவைகள்.


இத்தகைய குற்றம் நீங்கிய உணவினை விருப்பு, வெறுப்பின்றி ஏற்றனர். அங்கு சாரணர்களாக எழுந்தருளிய இருவரும் தாத்தா வச்சிரதந்தன் ஜினதீட்சை ஏற்றபோது உடன் சென்ற இவர்களது புதல்வர்களே என்கிறது ஆதிபுராண வரலாறு.


(இவர்களுக்கும் ஸ்ரீஆதிநாதருக்கு என்ன சம்பந்தம் என்ற வினாவை கேட்பது காதில்..…..).


அப்புனிதன் வச்சிரசங்கனே பிற்காலத்தில் பரதக்ஷேத்திரம் ஹஸ்தினாபுரத்தில்  பதினான்காவது மனுவான நாபி மஹாராஜனுக்கும், மருதேவிக்கும் மைந்தனாக அவதரித்த தெய்வபுருஷர் ஸ்ரீஆதிநாதர் என்பதை அறிய வேண்டும். அவரே அறுதொழிலை இக்கரும பூமியில் கற்பித்து மக்களுக்கு நல்லாட்சியை தந்து மறுமையில் நற்கதிக்காக அத்துனை செல்வங்களையும், வசதி வாய்ப்புகளையும், அதிகாரப்பற்றினையும் விட்டொழிக்க எண்ணி குமாரர்களான பரத, பாகுபலியிடம் ஆட்சியை ஒப்படைத்து, தீட்சை ஏற்று பிச்சை ஏற்பவன் போன்ற தோற்றத்தில் தவக்கோலம் பூண்டார்.


அனுதினமும் இயம, நியமங்களை நிறைவேற்றி தியானத்தில் ஆழ்வதில் நாட்டம் கொண்டார். ஆறுமாத காலம் கழித்து வனத்தை விட்டு நாட்டிற்குள் வந்த போது அவரது ஆகாரசரியை புரியாத மக்களால் ஏதும் அளிக்கப்படாமல் போனதை சட்டை செய்யாது, திரும்பி வனத்திற்கே சென்று தியானத்தில் ஆழ்ந்து விட்டார். பின் ஆறுதிங்கள் சென்றபின் வரும்போது அப்போதிருந்த ஸ்ரேயன்குமாரரே தான் முன் ஜன்மத்தில் சாரணபரமேஷ்டியருக்கு உணவளித்த விதிமுறையை அறிந்து தானமளிப்பவருக்குரிய மனோநிலை உணர்வில் நிறுத்தி, தானம் பெறும் ஆதிநாதருக்கு ஆகாரமளித்தார். அதாவது கரும்புச்சாற்றை மனத்தூய்மையுடன் ஆகாரமாக அளித்தார் என்கிறது ஆதிபுராணம். அந்த ஸ்ரேயன்குமாரர் யாரெனில் விதேக க்ஷேத்திரத்தில் வச்சிரஜங்கனாக ஆதிநாதர் இருந்த போது அவரது தேவியான ஸ்ரீமதியே யாவார் என்பதையும் அதே ஆதிபுராணம் பல ஜன்மத்தொடர்புகளுடன் அழகாக தெரிவிக்கிறது.

----------
அதாவது ஆகாரத்தை அளித்தவர் முற்பிறவில் மனைவியும், பெற்றவர் கணவனாவார் என்பதாக முற்பிறப்பின் கணவன், மனைவிக்கு இடையே உள்ள புரிதலை இப்பிறவியிலும் தெரிவிக்கிறது இந்த முதல் புராணம் என்பதாகவும் ஏடுத்துக் கொள்ளலாம்.
------------

ஆகாரத்தை அளிப்பவர் பெற்றவரிடம் ஞானத்தைப் பெறுவார் என்பதைத் தெரிவிப்பதும் இன்றைய அக்ஷய திரிதியை சரிதம் தெரிவிக்கும் பல கருத்துகளில் ஒன்றாக கொள்ளலாம்.

----------------------

ஆச்சார்ய ஜினசேனர் வழங்கிய ஆதிபுராணம் என்னும் ஆதிநாதரின் சரிதம் ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு மேலும் தொடராமல் நின்றுவிட்டது. அவருக்குப் பின்  குருவின் வழியை சிரமேற்கொண்டு அவரது சீடர் குணபத்திரால் உத்திரபுராணம் என்று மற்ற 23 ஜினர்களின் சரிதத்தையும் கூறும் படியாக நிறைவு செய்யப்பட்டது.

இவ்விரு நூல்களையும் தமிழில் 15ம் நூற்றாண்டில் ஸ்ரீபுராணம் என்னும் நூலாக பெரமண்டூரைச் சார்ந்த பவ்யர் குணபத்திரர் என்ற ஆசிரியரால் மணிப்பிரவாள நடையில் ஆக்கப்பட்டது என்பதை அறிந்து மகிழ்வோம்.

நம்காலத்தில் புராணச்செம்மல் என்ற விருதினைப்பெற்ற வணக்கத்திற்குரிய பேராசிரியர் ஸ்ரீசந்திரனார் அவர்கள் வழங்கிய ஸ்ரீபுராணம் என்ற தூய தமிழ் நூலே நமக்கு வழிகாட்டியாக பல ஆண்டுகளாக இன்றுவரை இருந்து வருகிறது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர்  முனைவர் வி. அசோக்குமாரன் அவர்களது ஸ்ரீபுராணம் என்ற காப்பியத்தமிழ் நூல் நம்மிடையே ஜனரஞ்சகத்தமிழில் சுவாரஸ்யமான எழுத்து நடையில் வலம் வருகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.


அக்காலத்திலிருந்து இக்காலம் வரை சமணத்தொண்டு புரிந்த சலாகா புருஷர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை தெரிவிக்கும் ஸ்ரீபுராண நூல் ஆசிரியர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த வணக்கத்தை புனித நாளான இன்று தெரிவித்துக் கொள்வோம்.


நன்றி…


பத்மராஜ் ராமசாமி.


4 comments:

  1. ஐயா, படித்ததில் பிடித்தது

    நன்றி
    சாந்தகுமார் அப்பாண்டைராஜ்

    ReplyDelete