திருக்கலம்பகம் கவியாக்கம்.

 


திருக்கலம்பகம்  கவியாக்கம்.

 

        செம்மொழியாம் தமிழுக்கு சமணர்களின் பங்கு மகத்தானது.  நன்னூல்,  நேமிநாதம்,    யாப்பருங்கலம்,  யாப்பருங்கலக்காரிகை,  போன்ற  இலக்கண  நூல்களையும்,  ஐம்பெருங்காப்பியங்களான  சீவக சிந்தாமணி,  சிலப்பதிகாரம்,  வளையாபதியையும்,  ஐஞ்சிறுக்  காப்பியங்களான  யசோதர  காவியம்,  சூளாமணி,  நீலகேசி,  நாககுமாரகாவியம்,  உதயணகுமார  காவியங்களையும்,  நாலடியார்,  திருக்குறள்  போன்ற  அறநூல்களையும்,  திவாகரம்,  பிங்கலம்  போன்ற  நிகண்டுகளையும்,  அந்தாதி,  கலம்பகம்,  பிள்ளைத்தமிழ்,  சிற்றிலக்கியங்களையும்,  இன்னும்  பல  நூல்களையும்,  கணிதம்,  சோதிடம்,  மருத்துவம்  போன்ற  பல்துறை  நூல்களையும்  தமிழுக்கு  தந்து  பெருமை  சேர்த்தவர்கள்  சமணர்கள். 

 

இந்த வரலாற்றுச்  சிறப்பை  அனைத்து  தமிழ்  அறிஞர்களும்  அறிவர்.  தமிழும்  சமணமும்  பின்னிப்  பிணைந்தவை  என்று  தமிழுலகமும்  அறியும்.  இந்த  வகையில்,  உதீசித் தேவர்  இயற்றிய  திருக்கலம்பகம்  என்னும்  சிற்றிலக்கியமும்  ஒன்றாகும்.  இவர்  ஆர்பாக்கம்  என்னும்  ஊரில்  வாழ்ந்ததாக  வரலாறு  கூறுகிறது. உதீசித் தேவரின்  பாடலுக்கு,  அவரது  காலத்திற்கு  சற்று  பின்னால்  தோன்றிய,  ஆர்பாக்கத்திற்கு  அருகில்  உள்ள  கோலியநல்லூரில்  வாழ்ந்த,  சந்திரநாதர்  என்பவரின்  மகன்,    அனந்த  தேவரின்,  பதப்பொருள்,  பொழிப்புரையுடன்  கூடிய  இந்நூலைத்  தவிர,  வேறுயாரும்  பதிப்பிக்க  முன்  வரவில்லையாம்.  உதீசித்தேவரின்  காலம்  9  ஆம்  நூற்றாண்டின்  இறுதி  அல்லது  10  ஆம்  நூற்றாண்டின்  துவக்கம்.

 

            இத்திருக்கலம்பகம்  திரு. மு.  ராகவையங்கார்  அவர்களால்  1911 லும்,  திரு. அ.  சம்பத்ராவ்  நைனார்,  தின்டிவணம்,  அவர்களால்  1935 லும்,  திரு. ஆ.  சக்ரவர்த்தி  நைனார்,  தஞ்சை,  அவர்களால்  1955 லும்,  புலவர். திரு. எஸ்.  தன்யகுமார்,  அவர்களால்  1995 லும்  நான்கு  பதிப்புகளாக  வெளியிடப்பட்டது.  முதல்  மூன்று  பதிப்புகள்  கிடைக்கவில்லை.  நான்காவது  பதிப்பு  மட்டுமே  கிடைத்துள்ளது. 

 

            திருக்கலம்பகம்  என்னும்  நூலில்  திரு  என்பது  அடையாகவும்,  கலம்பகம்  என்பது  இலக்கிய  வகையாகவும்  அமைந்துள்ளது.  திரு  என்பதற்கு  சென்னை  பல்கலைக்கழக  அகராதி, செல்வம்,  சிறப்பு,  அழகு,  காந்தி,  பொலிவு,  பாக்கியம்,  நல்வினை,  தெய்வத்தன்மை  போன்ற  பலவகையான  பொருள்களைக்  கூறுகிறது.  இக்கலம்பகம்  அருகபரமேட்டியை  பாட்டுடைத்  தலைவனாகக்  கொண்டு,  பாடப்பட்டமையால்,  திரு  என்ற  சொல்லுக்கு  தெய்வத்தன்மை  என்ற  பொருள்  பொருத்தமாகவும்,  சிறப்பாக  அமைகிறது.  எனவே  திருக்கலம்பகம்  என்பது  அருகபெருமானின்  பெருமைகளையும்,  சிறப்பினையும்  கூறும்  நூல்,  இக்கலம்பகம்  என்று  கூறலாம்.

 

            திருக்கலம்பகத்தில்  மொத்தம்  111  பாடல்கள்  உள்ளன.  இவை,  கொச்சக  ஒரு  போகு  கலிப்பா,  வெண்பா,  கட்டளைக் கலித்துறை,  விருத்தம்,  வெண்டுறை  எனப்பலவகைப்  பாடல்களால்  ஆனது.  தமிழ்ப்  புலமை  இல்லாத  காரணத்தால்  இவையாவும்  எனக்குத்  தெரியாது.  தமிழ்  அறிந்த  புலவர்  பெருமக்களும்,  சமணம்  அறிந்த  சான்றோர்களும்,  இத்திருக்கலம்பகத்தைப்  படித்திருக்கலாம்.  பெரும்பாலோர்  படித்திருக்க  வாய்ப்பும்  இல்லாமல்  இருக்கலாம்.  இதில்  என்  கருத்து  தவறாகவும்  இருக்கலாம்.  நான்  நுகர  ஆரம்பித்ததை,  நம்  நல்லற  சொந்தங்களும்  தெரிந்து  கொள்ளும்  ஒரு  முயற்சியாக,  என்  எளிய  தமிழில்  தர  முயற்சித்துள்ளேன். 

 

            மூலப் பாடல்களின்  பொருள்  மாறாமல்,  தர  முயற்சித்துள்ளேன்.  குறை  காணின்  திருத்துங்கள்.  மகிழ்ந்து  ஏற்கிறேன்.  நெகிழ்ந்து  திருத்திக் கொள்கிறேன்.  விமர்சனம்  செய்வது  உங்கள்  உரிமை.  அதை  ஏற்பது  என்  கடமை.  நன்றி,  வணக்கம்.

 

                                                                                                அன்புடன்  உங்கள்,

                                                               முட்டத்தூர். அ. பத்மராஜ்.

 

 

                                                திருக்கலம்பகம்.

 

காப்பு :

 

 பதினறுவர்  பொன்  வண்ணர்  பச்சை  இருவர்

மதிவண்ணர்  மற்றோர்  இருவர்  -  கதியடைந்த

செம்மை  நிறத்தோரிருவர்  சேர்ந்த  முகிலிருவர்

ரெம்மைக்குந்  தெய்வமெமக்கு                                                                                                                                  

 

            பஞ்சம  கதியடைந்த  விருஷபர்,  அஜிதர்,  சம்பவர்,  அபிநந்தர்,  சுமதி,  சீதளர்,  சிரேயாம்சர்,  விமலர்,  அனந்தர்,  தர்மர்,  சாந்திநாதர்,  குந்துநாதர்,  அரநாதர்,  மல்லிநாதர்,  நமிநாதர்,  வர்தமானர்  என்னும்  பதினாறு  பேரும்  பொன்  வண்ணம்  உடையவர்கள்.  பார்ஸ்வநாதர்,  சுபார்சுவர்  இருவரும்  பச்சை  நிறம்  உடையவர்கள்.  சந்திரபிரபர்,  புஷ்பதந்தர்  இருவரும்  வெண்மதி  போன்ற  வெள்ளை  நிறம்  உடையவர்கள்.   பத்ம பிரபர்,  வாசுபூஜ்யர்  இருவரும்  செம்மை  நிறம்  உடையவர்கள்.  முனிசுரதர்,  நேமிநாதர்  இருவரும்  நீலவண்ணம்  உடையவர்கள்.  இந்த  இருபத்திநான்கு  தீர்த்தங்கரர்களும்  எப்பிறவியிலும்  எமக்கு  தெய்வமாவர்.

 

நால்வகை  மலரின்  மணமும்  நாற்றிசை  சூழ்ந்து  மணக்க

நால்வகை  வண்டுகள்  இசையும்  நறையுண்ட  மயக்கத்தில்  ஒலிக்க

நெடிதுயர்  அசோக  நிழலுடன்  நிலவொத்த  முக்குடை  நிழலில்

மூவுலகோர்  தொழுது  நிற்க  வெண்சாமரை  வீச  வீற்றுள்ளாய்             1                   

            நான்கு  வகையான  நறுமண  மலர்களின்  மணமானது,  நான்கு  திசைகளிளும்  நெருங்கி,  சூழ்ந்து  வீச,  அம்மலர்களின்  மதுவினை  உண்டு  மகிழ்ந்து,  மயங்கிய  நால்வகை  வண்டுகள்,  மயங்கி  பாடி  இசைக்க,  நீண்டு,  தழைத்த,  குளிச்சியை  தரும்  அசோகமரத்துடன்,  முத்துமாலைகளின்  ஒளியில்,  மூன்று  முழுநிலவினைப்  போன்ற  முக்குடையின்  கீழ்,  தேவர்கள்  வெண்சாமரையை  வீச,  மூன்று  உலக  மக்களும்  வணங்கி  நிற்க  வீற்றிருக்கின்றாய்.

4  மலர்கள்  :  கோட்டுப் பூ,  கொடிப் பூ,  நீர் பூ,  புதர்  பூ.  நறை : மது, தேன்.

4  வண்டுகள்  :  கருவண்டு,  பொன்வண்டு,  ஞிமிறு,  கரும்பு.

 

கயல்களென  துள்ளிப்  புரளும்  கருங்குவளை  விழிகள்  கொண்ட

பெண்களின்  உறவு  ஒன்றே  பிறப்புக்கு  மூலம்  ஆகும்  என்று

முனிவர்கட்கு  சொல்லி  அருளி  எண்ணற்ற  பிறவிகள்  நீக்கிய

எழில்  நங்கை  முக்தியை  மகிழ்தல்  நின்  குணச்  சிறப்பேயாகும்                 

 

            மீன்களைப்  போல்  துள்ளிப்  புரண்டு,  கருங்குவளை  பூக்கள்  பூத்தாற்  போன்ற  விழிகளை  உடைய  பெண்களின்  உறவினாலேயே  பிறப்புகள்  உண்டாகின்றன  என்று  முனிவர்களுக்கு  சொல்லி  அருளி,   எண்ணற்ற  பிறவிகளை  நீக்கச்  செய்த  அழகு  மிகுந்த  கன்னியான  முக்தியை  அனந்த  சுகத்தில்,  தழுவி  மகிந்து  இருத்தல்  உன்  குணச்  சிறப்பாகும்.,

 

கொல்லவரும்  பகைவர்களிடம்  கொள்ளும்  கோபம்  பிறவியை  தரும்

தவமுனிவர்க்கு  சொல்லியருளி  தாங்கொணா  இரு  வினைகள்  கெடுத்து

ஐம்புலன்கள்  மிக  வெப்பமாகி  ஆறா  சீற்றம்  மதமும்  ஆகிய

கருங்குன்றாம்  களிறை  கொன்ற  கருணை  உள்ளம்  கொண்டவர்  நீயே

 

            நம்மை  கொல்ல  வரும்  பகைவர்களிடம்,  தணியாத,  பொங்கிடும்  கோபமானது,  தொடர்ந்து  பிறவிகளைக்  கொடுக்கும்  என்று,  முனிவர்களிடம்  கூறி,  அருளி,  ஆன்மாவுக்கு  பகைவர்களாகிய  காதி,  அகாதி  வினைகளை  அறுத்து  அழித்தும்,  ஐம்புலங்களின்  வெப்பமாகிய  கோபமும்,  மதமும்  கொண்ட  யானையை  கொன்று  வென்றதும்  உன்  கருணை  உள்ளம்  தானே.

 

ஐவகை  உயிர்கள்  இடத்தும்  அருள்  உள்ளம்  கொள்ளாதவர்கள்

பிறவிப்  பெரும்  கடலில்  ஆழ்ந்து  பல  பிறவி  எடுப்பார்  என்று

அருந்தவ  முனிவர்களுக்கு  அருளி  அன்போடு  தொழுதெழுவோர்க்கு

வானவர்கள்  உலகம்  தந்து  வீடுபேறு  தருவது  உன்  தன்மையே                         

ஐவகைப்பட்ட  உயிர்களிடம்  அன்போடும்,  அருளோடும்  நடந்து  கொள்ளாதவர்கள்,  பிறவி  என்னும்  பெரும்  சமுத்திரத்தில்  ஆழ்ந்து  துன்பங்களை  அனுபவிப்பார்கள்  என்று,  அரியதான  தவத்தினை  செய்யும்  முனிவர்களுக்கு  சொல்லியருளி,  உம்மை  அன்போடு  தொழுது  வருபவர்களுக்கு,  தேவர்கள்  உறைந்து  மகிழும்  அமரர்  உலகத்தைத்  தந்தும்,  உன்னைப்  போல்  கிடைக்தற்கரிய  பெரும்பேறாகிய  முக்தியை  தருவதும்  உன்  தன்மைதானே. 

 

உள்ளங்கை  கொண்ட  ரத்தினத்தின்  ஒளியினைக்  காண்பதைப்  போல்

மூவுலகு  அறியும்  உன்  ஞானம்  மதுகொண்ட  மலரின்  மணம்  போல்

மண்டிடும்  நின்  அனந்த  சுகமும்  மணக்கும்  கமலத்தை மிதியா  பாதமும்

பதினென்  மொழியில்  ஒலிக்கும்  பரமாகமம்  உன்  திருமொழி  ஒன்றே          

 

            உள்ளங்கையில்  இருக்கும்  குற்றமற்ற  ரத்தினமானது  எண்திசையும்  ஒளியினை  தருவது  போல்,  மது  தளும்பி,    நாற்புறமும்  மணந்து  வீசும்  மலரினைப்  போல்,  உன்  அனந்த  ஞானத்தின்  ஒளியையும்,  மூவுலகமும்  அறிந்து  மகிழும்.  மிக  அதிகமாக,  தழைத்து  நிற்கும்  உன்  அனந்த  சுகமும்,  சுகந்தமான  மணத்தை  வீசும்  செந்தாமரையில்  பதியாமல்  நடக்கும்  நின்  பாதமும்,   பதினென்  மொழிகளில்  கேட்கும்  படியாக  நீ  அருளும்  உன்  திருமொழியே  பரம  ஆகமம்  ஆகும்.

 

ஐம்பொறிகள்  அடக்கம்  அழிக்கும்  ஐங்கணையான்  மதனை  வென்றாய்

நாற்கதி  பெருங்கடலில்  மூழ்கி  நலிவுறும்  ஜீவன்களைக்  கொல்லும்

தொழிலினை  சிரமேற்  கொண்ட  தென்திசையான்  காலனை  கடந்தாய்

பகலவன் பேரொளியாய் துலங்கும் பிரபாவளையம் மூன்றினையுடையாய் 

 

            மலர்கணைகள்  ஐந்தையும்  தன்  ஆயுதமாகக்  கொண்டு,  ஐம்பொறிகளின்  அடக்கத்தை  அழித்து  கொல்லும்  மன்மதனை  வென்று  வீழ்த்தினாய்.  நான்கு  கதியாகிய  பிறவிப்  பெருங்கடலில்  சிக்கி,  நலிவுற்று  வாழும்  உயிர்களைக்  கவர்வதையே  தன்  தொழிலாகக்  கொண்டுள்ள,  தெற்கு  திசையின்  அதிபதியான  எமனை  கடந்து  சென்றாய்.  செஞ்சுடராய்  தோன்றி,  பேரொளியாய்  பரிணமிக்கும்  சூரிய  ஒளியைப்  போன்ற  பிரபாவளையம்  என்ற  ஒளிவட்டத்தை  உன்  பின்னே  கொண்ட  நாயகன்  நீயே.

 

மேலுலகோர்  மென்மலர்கள்  சொரிய மென்மலர்கள்  மதுவினை  பொழிய

தேன்  தந்த  வழுக்குதல்  நீங்கா திருமுற்றம்  உடையோய்  நீயே

மூவுலகமும்  உன்னுள்  அடங்க  மத்திம  லோகத்தில்  அடங்கி

முழு  அறத்தொனியை  அடக்கா  மும்மதில்  கொண்டோன்  நீயே                    

           

வானுறையும்  தேவர்கள்  அன்றலர்ந்த  மலர்களை  மழை  போல்  தூவ,  அம்மலர்களில்  இருந்து  கொட்டும்  தேனால்  உன்னுடைய  அழகிய  முற்றம்  வழுக்கும்  தன்மையை  உடையவன்  நீ.  மூன்று  உலகமும்,  மூவுலக  உயிர்களும்  உன்னுள்  அடங்கும்,  ஆனால்  நீயோ  மத்திம  லோகத்தில்  அடங்கியுள்ளாய்..  மூன்று  பெரும்  மதில்களையுடைய  நீ  வழங்கும்  திருமொழியாகிய  அறங்கள்  மட்டும்  அடங்காமல்  ஒலித்துக்கொண்டே  இருக்கிறது.

 

ஏற்றிடும்  வேதங்கள்  சொன்னவன் நீ  ஏகாந்த  வாதத்தை கெடுத்தவன் நீ

அனேகாந்த  வாதம்  வகுத்தவன் நீ  அறநெஞ்சோன்  காலனை  கடந்தவன் நீ

வீரனும்  நீயே  விமலனும்  நீயே  விண்ணும்  நீயே  கண்ணும்  நீயே

தீரனும்  நீயே   சுகதனும்  நீயே  சிவனும்  நீயே  தவனும்  நீயே

 

            அனைவரும்  ஏற்றுக்  கொள்ளும்படி  பழைய  வேதங்களை  எடுத்துச்  சொன்னவன்  நீ,  பொய்யான  ஏகாந்த  வாதத்தை  அழித்தவன்  நீ,  நன்னெறியான  அனேகாந்த  வாதத்தை  வகுத்து  கொடுத்தவன்  நீ,  தருமதேவன்  என்று  கூரும்படியான  உயிர்  பறிக்கும்    எமனும்  நெருங்க  முடியாதவன்  நீ.  அனந்தவீரியன்  நீ.  நிர்மலத்தையுடையவன்  நீ.  ஆகாயம்  முழுவதும்  உடையவன்  நீ.  ஞானமான  கண்களையுடையவன்  நீ.  தீரத்தையுடையவன்  நீ.  நன்னடத்தை  உடையவன்  நீ.  மங்களகரத்தை  உடையவன்  நீ.  அரிய  தவத்தை  உடையவன்  நீயே.

 

ஐம்பொறிகள்  அடக்கம்  இன்றி  அறநெறியில்  செல்ல  மறந்தோரும்

பிறப்பென்னும்  காட்டில்  உழன்று  பெருந்துன்ப  வழியில்  சென்றோரும்

பிறவிக்கடல்  துன்பம்  அறுக்கும்  பெரும்  ஞான  அறவாழியே  உன்

பொற்பாதம்  வணங்கி  துதித்து  பெற  வேண்டும்  பிறப்பில்லா  வாழ்வை        2

 

            ஐம்பொறிகளை  தன்  கட்டுப்பாட்டில்  அடக்கி  வைக்காமல்,  அறநெறியான  தவ  வழியில்  செல்ல  மறந்தவர்களும்,    பிறப்பு  என்னும்  பெருங்காட்டில்  உழன்று,  திரிந்து,  அனைத்து  பெருந்துன்பங்களை  அடைபவர்களும்,  பிறவியான  நான்கு  கதிகளின்  துன்பத்தை  அறவே  ஒழித்து,  அனந்த  வாழ்வை  பெறவேண்டுமானால்,  ஞானத்தின்  குணக்குன்றான  அறவாழியே  உன்  பொற்பாதங்களை  எப்போதும்  துதித்து  வணங்க  வேண்டும்.

 

நான்  உதிர்க்கும்  சொல்லினாலும்  நான்  அறிந்த  அறிவினாலும்

நான்  உம்மேல்  கொண்ட  அன்பினாலும்  நான்  தொடுத்த  சொல்மாலையை

பொற்றாமரை  மலர்மேல்  இருக்கும்  பெருமான்  அருகபரமேட்டியின்

தூய  அடியில்  சாற்றி  துதித்தால்  சுவாமியே  எவ்விதம்  பொருந்தும்                 3

           

சாதுக்களே,  நான்  கூறும்  என்  சொற்களாலும்,  நான்  அறிந்து  பெற்ற  அறிவினாலும்,  நான்  உன்  மேல்  கொண்ட  அன்பினாலும்,  நான்  தொடுத்த  எளிமையான  சொல்  மாலையை,  பொன்னாலான  தாமரை  மலரினில்  வீற்றிருக்கும்  அருக  பரமேட்டியே,  உன்  தூய  திருவடிகளில்   வைத்து,   இந்திரர்கள்,  ஆயிரம்  வாய்  கொண்டு  துதித்தால்  எவ்வளவு  அழகுடன்  பொருந்தும்.

            இதனால்  இறைவனின்  பெருமையும்,  தனது  சிறுமையும்  கூறப்படுகிறது.

 

மூவுலகத்தாற்கும்  பொருள்களை  மூவிரண்டு  வகையென  சொன்னான்

ஓரைந்து  அத்திகாயத்தையும்  உயிர்  திரியும்  நாற்கதியும்  சொன்னான்

அனைத்துலக  மக்களுக்கும்  அறமிரண்டும்  நான் மறையும்  சொன்னான்

அறமிரண்டால்  சேரும்  வினைகளை  அறுக்கின்ற  வழியும்  சொன்னான்          4

 

            நெஞ்சமே,  தனக்கென்று  ஒன்றையும்  சொல்லிக்கொள்ளாமல்,  மூவுலக  மக்களுக்கும்  ஆறு  பொருள்களையும்,  அதன்  இயல்புகளையும்  சொன்னாய்.  ஐந்து  அத்திகாயங்களையும்,  உயிரானது  நான்கு  பிறப்புகளில்  உழன்று  அனுபவிக்கும்  துன்பங்களைச்  சொன்னாய்.  அனைத்து  மக்களுக்கும்  இரண்டு  அறங்களையும்,  பழைமையான  நான்கு  வேதங்களையும்  சொன்னாய்.  இல்லறம்,  துறவறம்  என்னும்  இரண்டு  அறங்களில்  சேருகின்ற  நல், தீவினைகளையும்,  அவைகளை  போக்கும்  வழிகளையும்  சொன்னாய்.

            இதனால்  சகல  தத்துவங்களையும்  உரைத்தவன்  என்று  கூறப்பட்டது.

 

வானவர்  பொன்  முடிகள்  உரசலால்  வான்  இருள்  அகன்று  போய்விட

முடிகொண்ட  பூங்கொத்தினின்று  முத்தான  மாது  சிந்தும்  மதியோனே

பரமாகம  நெறியைப்  பாருக்கு  பதினென்மொழியில்  அறிய  பகன்ற

மும்மதில்  முழுதும்  உடையோனே  முதல்வா  உனையன்றி  யார்  உளர்               5

 

            பெருந்தகையே,  உன்னை  வணங்க  வரும்  வானவர்கள்  முடியானது  ஒன்றுடன்  ஒன்று  உரசுவதால்,  ஏற்படும்  ஒளியானது  வானத்தில்  உள்ள  இருளைப்  போக்கும்.  அம்முடிகளில்  தரித்துள்ள  மணம்  வீசும்  மலர்களில்  இருந்து  சொட்டுகின்ற  மதுவான  நீரானது,  குளிர்விக்க  வீற்றிருக்கும்  நிலவு  போன்றவனே.  பதினெட்டு  மொழிகளில்  அனைத்து  உயிரும்  அறியும்  வண்ணம்,  உன்  பரமாகமத்தை,  திருமொழியாய்  உரைத்த,  மூன்று  பெரும்  மதிகளை  உடைய  முதல்வனே,  உனையன்றி  வேறு  கடவுள்  யாருளர். 

            இதனால்  நீயே  கடவுள்  என்று  கூறப்பட்டது.

 

முயல்  கொண்ட  களங்கம்  நீக்கி  மும்மதி  போல்  முக்குடைகள்  கொண்ட

மூவிரண்டு  பொருளின்  குணத்தை  முக்காலமும்  ஓர்  தன்மையில் காணும்

நாற்திசையும்  விளங்கி  ஒளிக்கும்  நான்  முகத்தையுடைய  நான்முகனே

மனமயக்கம்  கொண்ட  உலகோர்  திசை  முகன்  என்று  அழைப்பரோ              6

 

            முயலைத்  தன்னிடத்தே  கொண்டிருந்த  களங்கத்தை  நீக்கி,  முத்துமணி  மாலைகள்  தொங்கி  ஒளிவீசிடும்,  முழு  நிலவினைப்  போன்ற  மூன்று  குடைகளை  உடையவனே.  ஆறுபொருள்களின்  குணத்தையும்,  மூன்று  காலங்களையும்  ஒரே  தன்மையாய்  நோக்கும்  ஞானம்  உடையவனே.  நான்கு  திசையும்  போரொளியாய்  திகழ்ந்து  ஒளிரும்  நான்கு  முகத்தைக்  கொண்டவனே,  உன்னை  உலகமக்கள்  அனைவரும்  திசைமுகன்  என்று  அழைப்பதில்  தவறில்லையே.

            இதனால்  உலகத்தாருடைய  பேதமை  கூறப்பட்டது.

 

இதழ்  அலர்ந்து  மது  தளும்ப  இசைபாடும்  வண்டுகள்  மொய்க்க

கலைமகள்  அமர்ந்து  அருளும்  கமல  மலரில்  கால்கள்  பதியா

ஏழுலகம்  அறிந்து  சொல்லிடும்  ஈரொம்பது  மொழியில்  ஒலித்திடும்

திவ்யத்  தொனியின்  நாயகரே  தீர்த்தங்கரர்  ஆன  பகவானே                               7

 

            உலகத்தவரே,  பழைய  நீரில்  கிழங்குகளுடன்  தோன்றாமல்,  விண்ணில்  இதழ்கள்  மலர்ந்து,  மது  தளும்பிட,  அதை  உண்ட  வண்டுகள்  மயக்கத்தில்  இசை  பாட  சுற்றித் திரியும்  தாமரை  மலரில்  கால்கள்  பதியாமல்,  தோன்றி,  ஏழு  உலகங்களையும்  அறிவித்து,  அதில்  உள்ள  பதினெட்டு  மொழிகளையும்  உன் திருமொழியால்   விளக்கிய  கலைமகளின்  நாயகரே,  நீயே  தீர்த்தங்கர  பகவான்  ஆவாய்.

            இதனால்  உலகைத்  தரும்  நாதன்  இவரென  கூறப்பட்டது.

­

இருள்  கதிகள்  கவிழ்ந்த  உயிரை  இருள்  களைந்த  ஞானத்தின்  ஞாயிறே

அவனியில்  முடிவில்லாதவனாகி  அறுவகைப்  பொருளைக்  கூறி – அதன்

அநித்திய,  நித்திய  குணங்கள்  அவைகளுக்கு  உண்டென்ற  உன் சொல்லை

ஏகாந்த  வாதிகள்  ஏற்கார்  எழில்  ஞாயிறை  காணா  கோட்டான்  போல்     8

 

            உயிர்களை  சூழ்ந்து  பிணைந்துள்ள  இருள்  போன்ற  வினைகளை,  இருளைப்  போக்கும்  சூரியனைப்  போல்  அகற்றும்  ஞானசூரியனே.  ,  உலகத்தில்  முடிவில்லாதனவாகிய  ஆறு  பொருள்களின்  அதன்  உண்மை  குணத்தால்  நித்தியமாகவும்,  பிற  குணங்களால்  அநித்தியமாகவும்  உள்ளன  என்று  நீ  கூறும்  உண்மைத்  தத்துவதை,  ஏகாந்த வாதிகள்  சூரியனைக்  காணாத  கோட்டானைப்  போல்  ஏற்க  மாட்டார்கள்.

            இதனால்  ஏகாந்தவாதிகள்  இழிவு  கூறப்பட்டது.

 

உண்மையை  சிறிதும்  அறிந்திடா  உலகோர்  பலர்  கூறும்  சொற்கள்

நம்  முன்னோர்கள்  செல்லும்  வழியே  நாம்  செல்லும்  வழியென்றுரைப்பர்

நால்வகை  வேதங்கள்  சொல்லிய  நாயகன்  உன்  நெறியைப்  பற்றி

பொற்றாமரை  தாள்  பதியா  செல்வா  பொய்நெறியை  என்றும் ஏற்கேன்       9

 

            ஆனவைகள்  எல்லாம்  ஆகத்தக்கது.  உண்மையை  அறிதல்  அரிது.  ஆகையால்,  நம்முன்னோர்கள் சென்ற  வழியையே,  நாமும்  பின்பற்றி  செல்லுவோம்.  அவ்வழியன்றி  நமக்கு  வேறொன்றும்  இல்லை  என்று  உலகத்தவர்கள்  கூறுவர்.  வானில்  உள்ள  பொற்றாமரை  இதழ்களில்  தோன்றிய,  நாயகனாகிய  நீ,  கூறிய  நால்வகை  வேதங்களின்  உண்மை  நெறியைத்  தவிர,  வேறெந்த  பொய் நெறிகளையும்  நான்  ஏற்கமாட்டேன்.

            இதனால்  தன்னுடைய  துணிவு  தன்மையை  கூறப்பட்டுள்ளது.

 

ஜினதரும  நீர்  கொண்ட  ஆற்றில்  சேர்ந்திட்ட  இரு  வினைகள்  கழுவ

ஐம்பொறிகள்  ஆமை  போல்  அடங்க  அடையும்  நல்லொழுக்கத்தாலே

பகையொடு  கோபத்தைப்  போக்கி  நட்பில்லா  அருளைத்  தந்திடும்

பொற்றாமரை  நாயகனே  உன்  முச்சோதிகளும்  முழுதும்  உனதே                 10

 

            உலகத்தவரே,  பகையையும்,  கோபத்தையும்  போக்கி,  உறவுகள்  இல்லாத  அருளையும்  கொடுக்கின்ற  அருக பரமேட்டியின்  பொற்பாதங்களைப்  பற்றி,  அடைந்து,  ஜின  தருமமாகிய  நீர்  புரண்டோடும்  ஆற்றில்,  உயிருடன்  சேர்ந்த  இரு வினைகளை  கழுவி,  ஐம்புலங்களையும்  ஆமைபோல்  அடக்கி,  அதனால்  கிடைக்கும்  நல்ல  ஒழுக்கத்தைப்  பெற்றோமானால்,  ஒப்பற்ற  பெரும்  இன்பத்தைத்  தரும்,  மூன்று  சோதிகளையும்  அடைவோம்.

( மூன்று  சோதி  :  மன ஒளி,  வாக்கு ஒளி,  காய ஒளி. )

            இதனால்  ஜின  தருமத்தின்  பெருமை  கூறப்பட்டது.

 

இசை  பாடும்  வண்டுகள்  தங்கி  இதழ்  சொட்டும்  மது  குளிர்ச்சியில்

செம்பருதியை  கண்டு  அலர்ந்த  செந்தாமரையில்  அடி  பதியா  அருகா

செங்கை  ஒளி  ரத்தினம்  ஏந்தி  சேவிக்க  வந்தோர்களை  போக்கி

உலகோரை  ஒன்றாய்  நோக்கும்  உன்னையன்றி  யாருளர்  தேவனே   11

 

            இசை  பாடுகின்ற  வண்டுகள்  அலைந்து,  திரிந்து,  தங்கி,  மலரின்  இதழ்களில்  இருந்து  சிந்துகின்ற  தேனின்  குளிர்ச்சியுடன்,  இளங்காலை  சூரியனைக்  கண்டு  மலர்கின்ற  செந்தாமரை  மலரின்  மேல்  கால்கள்  பதியாமல்  நிற்கின்ற  அருக  பெருமானே !  தங்கள்  கைகளில்  விலையுயர்ந்த  ரத்தினங்களையும்,  இன்னும்  பல  பொருள்களையும்,  ஏந்திக்கொண்டு  உன்னை  தொழுவதற்க்கு  வந்த  செல்வந்தர்களை  நீக்கி,  உலகில்  உள்ள  எல்லோரையும்,  சமமாக  கருதி  பார்க்கும்  தேவனே,  உன்னையன்றி  அவ்வாறு  நடத்தும்  அருளாளர்  யாருளர். 

            இதனால்  சர்வக் ஞானியானவனே  என்று  கூறப்பட்டது.

 

ஏழு பங்கிகள்  ஞானம்  சொன்ன  எழில் பிண்டி  அமர்ந்த  முதல்வா

இருள்  மிகுந்த  வினைகள்  பொடித்து  ஏழுலகமும்  ஆளும்  வேந்தே

ஏற்றமிகுமுன்  தரும  நெறியால்  ஏழுலகமும்  போற்றும்  இறைவா

மட்டு  கொட்டும்  தாமரைபூ  யானையை  மூவுலகும்  செலுத்து  நாதா       12

 

            நயமான  ஏழுபங்க  நியாயத்தை  பற்றிய  ஞானத்தை  விவரித்து  சொன்ன,  எழில்  தளும்பும்  அசோக  மரத்தை  உடைய  முதல்வனே.  உயிருடன்  பின்னி  பிணைந்த  இருளாகிய  வினைகளை  அழித்து,  ஏழு  உலகத்தையும்  ஆளுகின்ற  அரசனே,  தேன்  கொட்டுகின்ற  தாமரைப்பூ  என்னும்  யானையை,  மூன்று  உலகமும்  செலுத்தி,  ஆளுகின்ற,  தேவர்களுக்கு  நாயகனே,  எல்லா  உலகமும்  உன்  தரும  வாக்கின்படி  செல்கிறதே,  நீயே  உலகத்தை  ஆளும்  பெருமையுடைய  இறைவன்  ஆவாய்.

( மட்டு : தேன் )

 

அனைத்துலகம்  போற்றும்  நாயகன்  அழியாப்  புகழ்  வாழ்வுடை  அமலன்

பரந்த  நல்  பெருமையினையுடைய  பல பொருள்  குண தத்துவம்  அறிந்து

தூய்மையுடன் பெருமையுமுடைய துலங்கும் ஆயிரம் பெயர்களுடையோன்

பெருமையை  கூறும்  புலவரன்றி  பேசிடேன்  வேறு யாரிடமும் என்றும்            13

 

            அனைத்து  உலகமும்  போற்றும்  நாயகன்,  அழியாத  புகழை  உடைய  அமலன்,  பரந்த  நல்ல  பெருமைகளையுடையவன்,  பல  பொருள்கள்  கெட,  குணத்தத்துவம்  அறிந்தவன்,  தூய்மையுடனும்,  பெருமையுடைய  ஆயிரம்  திருப்பெயர்களை  உடையவனும்,  அருக  பெருமானின்  பெருமைகளைக்  கூறும்  புலவர்களையன்றி,  வேறு  யாரிடமும்  யாம்  பேசமாட்டோம்.

            இதனால்  மித்தியா திருஷ்டிகள்  எத்தன்மையினராயினும்  அறிவிலர்  என்று  கூறப்பட்டது. 

 

தோகை மயில்  கூட்டங்களைப் போல்  துள்ளி  மகிழ்ந்து  ஆடுவோம் ஊஞ்சல்

கருங்குழல்  மொய்த்திடும் வண்டாய்  கவியிசைத்து  ஆடுவோம் ஊஞ்சல்

கயல் விழிகள்  இரண்டும்  துள்ள  களித்து  நாம்  ஆடுவோம்  ஊஞ்சல்

மணிவடங்கள்  மார்பில்  புரள  மகிழ்ச்சியில்  நாம்  ஆடுவோம்  ஊஞ்சல்        14

 

            தோகையை  விரித்தாடும்  மயில் கூட்டங்களைப்  போல்  மகிழ்ச்சியில்  துள்ளி  ஊஞ்சல்  ஆடுவோம்.  நீண்டு,  புரளும்  கருங்குழலில்  மொய்த்திடும் கரு  வண்டுகள்  இசைப்பது  போல்  கவி  பாடி  ஆடுவோம்  ஊஞ்சல்.  மீன்  போன்ற  கண்களில்  களிப்பு  பொங்கிட  ஆடுவோம்  ஊஞ்சல்.  மணி  வடங்கள்  மார்பினில்  புரண்டு  ஆட,  தாமரை  மலர்  மேல்  பாதத்தை  பதிந்துள்ள  அருகனின்  திருவடிகளை  துதித்து,  மகிழ்ச்சியில்  ஆடுவோம்  ஊஞ்சல்.

            இதனால்  இவனே  நிர்மலன்  என்று  கூறப்பட்டது.

 

போர்  படை  ஆயுதங்கள்  நீக்கி  பேரின்ப  முக்தியை  தடுத்து  நிறுத்த

போர் செய்யும் பகைவரை வென்ற  அருகனை  தொழுது  ஆடுவோம் ஊஞ்சல்

செவ்வொளியை  படர்ந்து  நிற்கும்  செம்பொன்  மதிலுடைய  மூலவன்

வளமையைப்  போற்றிப்  பாடி  வானுயர  ஆடுவோம்  ஊஞ்சல்                   

 

            போர்  செய்ய  தேவைப்படும்  ஆயுதங்களை  எல்லாம்  கையில்  எடுக்காமல்,  பேரின்பமான  முக்தி  வீட்டை  அடைவதை,  தடுத்து  நிறுத்த  போர்  செய்யும்  பகைவர்களை  வென்ற  அருகணை  துதித்து  பாடி  ஆடுவோம்  ஊஞ்சல்.  இளம்  ஞாயிறு  போல்  செவ்விய  ஒளியை  பரப்பிக்  கொண்டிருக்கும்,  செம் பொன்னாலான  மூன்று  மதில்களையுடைய  மூலவனின்  வளமையான  பெருமைகளைக்  கூறிக்கொன்டே  ஆடுவோம்  ஊஞ்சல்.

 

ஆடிடும்  குண்டலம்  அணிந்தோர்  அவர்  மனக்  கபடம்  அறியாமல்

மையல்  கொண்டு  மனதால்  மயங்கும்  மாந்தர்கள்  துக்கம்  அடைவர்

எண்குணம்  கொண்ட  அருகனின்  எழில்  பாதம்  ஒருதரம்  துதிப்போர்

இனி  பிறவி  எடுக்காதவர்கள்  இறப்பையும்  அறியாதவர்  ஆவர்             15

 

            காதினில்  ஊசலாடும்  குண்டலங்களை  அணிந்த  நல்லோர்களின்  மனதில்  உள்ள  கபடமான  வஞ்சனைகளை  அறியாமல்,  அவர்கள்  மேல்  ஆசை  கொண்டு  மயங்கி,  மனதால்  நினைக்கிறவர்கள்  துக்கத்தை  அடைவார்கள்.  எட்டு  வகை  குணங்களைக்  கொண்ட  என்  நாதன்  அருகனின்  அழகிய  பாதங்களை  ஒரு  தரம்  துதிப்பவர்கள்  கூட,  இனிப்  பிறவி  பெருங்கடலில்  நீந்தார்கள்.  அவர்களுக்கு  இறப்புப்  பற்றியும்  அறியாமல்  போகும்.

            இதனால்  பற்றற்றவனின்  பற்றினை  பற்றவேண்டும்  என  கூறப்பட்டது.

 

இறந்து பெறுதல் முக்தி என்பாரும்  இறவாமல் கல்லாதல் முக்தியென்பாரும்

இவ்வுலகில்  பிறப்பு  எடுத்து  இறைவனை  அடைவது  முக்தி  என்பாரும்

பிறப்பில்லா  ஞான அளவே  முக்தியென  பேசுவோர்  பேசிக்கொள்ளட்டும்

அருகனின்  பரம  ஆகம  சுகமே  அறிவுடையோர்  ஏற்றிடும்  சுகமாம்            16

 

            சிலர்  சாக்காட்டிற்குப்  பின்  முக்தி  கிடைக்கும்  என்று  கூறுவார்கள்.  இன்னும்  சிலர்  இறக்காமல்  காய  சித்தி  (  கல்லாக  உறைதல் ))  செய்வதாலே  முக்தி  கிட்டும்  என்பார்கள்.  இன்னும்  சிலர்  இவ்வுலகில்  பிறப்பெடுத்து  ஈஸ்வரனை  அடைவதே முக்தி  என்பார்கள்.  பிறப்பில்லாத  ஞானத்தின்  அளவாதலே  முக்தி  என்பார்கள்.  பேசுவோர்  எல்லாம்  பேசிக்  கொள்ளட்டும்.  தருமச்சக்கரத்தால்  உலகையாளுகின்ற  அருக  பரமேட்டி அருளிய  பரம  ஆகமங்களை  பற்றி  நடக்கும்  அறிவுடையோர்கள்  என்றென்றும்  சுகத்தை  அடைவார்கள்.

            இதனால் மித்தியா திருஷ்டிகள் கூறும் முக்தி நிலை  பழிக்கப்பட்டது.

 

வான் மழை  பொழிவது  போன்று  வாசமலர்கள்  பூமழை  சொரிய

முகில் மோதலாய்  துந்துபி  முழங்க மும்மதில்களின்  கொடிகள்  அசைய

இருவினை  மும்மலங்கள்  அழித்து  திருமொழி  தரும்  நாவினையுடைய

சமவ சரணத்தின்  நாயகனே  மும்மலங்கள்  கெடுவது  எவ்வாறோ              17

 

            விண்ணில்  இருந்து  மழை  பெய்வது  போன்று  மணந்து  வீசும்  மலர்களின்  பூமழை  கொட்ட,  மேகங்கள்  மோதுவதால்  ஏற்படும்  இடியோசையைப் போல்  துந்தூபிகள்  இசைக்க,  மூன்று  பொன் மதில்களின்  கொடிகள்  அசைந்தாடும்  சமவ  சரணத்திற்கு  உரியவனே,  இரு வினைகளையும்,  மூன்று  மலங்களையும்  அழித்து,  திவ்யத்தொனியால்  அறம்  அளிக்கும்  நாவினையுடையவனே,  காமம்,  வெகுளி,  மயக்கம்  என்னும்  மூன்று  மலங்களை  கெடுத்து  அழிப்பது  எவ்வாறு  என்று  கூறுங்கள்.

            இதனால்  இறைவனை  பழிப்பது  போலக்  கருமங்கள்  கெடுத்தது  கூறப்பட்டது.

 

விஷம்  தரும்  எட்டி  மரங்கள்  விளைத்திடும்  அமிர்தத்தை  அன்று

அரிமாவும்,  களிறும்  பகை  நீங்கி  அறம்  கேட்கும்  காலம்  அன்று

அரும்பசி,  உடல்  பிணி  நீங்கி  ஐம்பொறிகள்  அடங்கும்  காலமன்று

அருக பரமேட்டியே  நீ  விண்ணில்  அடி  பதித்து  நடக்கும்  நாளன்று                   19

 

            மலர்ந்து  மணம்  வீசும்  செந்தாமரையின்  இதழ்களின்  மேல்,  பாதம்  பதியாமல்,  வானத்தில்  வலம்  வரும் அருக பரமேட்டியே,  நீ  அவ்வாறு  நடக்கும்  காலத்தில்,  விஷத்தையே  விளைவிக்கும்  எட்டி  மரங்கள்,  அமிர்தத்தைக்  கொடுக்கும்  அன்று.  சிங்கமும்,  யானையும்  தங்களின்  பகையை  நீக்கி,  இணைந்து  அறம்  கேட்கும்  அன்று.  குடலை  இடமாகக்  கொண்ட  தாளாத  பசியும்,  உடலின்  கண்  கொண்ட  நோய்களும்  நீங்கிட,  ஐந்து  பொறிகளும்  ஆமை  போல்  அடங்கி  நிற்கும்  அன்று.

            இதனால்  அருக பெருமானை  நம்பினவருக்கு  அனைத்து  நன்மைகளும்  கிடைக்கும்  என்று  கூறப்பட்டது.

 

உடல்  என்னும்  கூடு  தளர்ந்து  உயிர்  பறிக்க  கூற்றுவன்  நிற்க

அந்திம  காலம்  வந்திடும்  போது  அனைத்து  மயக்கமும்  மனமது  நீங்க

மூலமந்திரம்  முழுமனம்  நிறைய  ஆதியே  என  அடைக்கலம்  கொள்ள

திரும்பிடா  பிறவியை  போக்கி  தேவேந்திரனின்  நாயகன்  ஆவார்            19

 

            உயிர்  தங்கிய  கூடான  உடல்  தளர்ந்து  போக,  அவ்வுடலின்  உயிரைப்  கொண்டு  செல்ல  கூற்றுவனாகிய  எமன்  எதிரில்  வந்து  நிற்கும்  கடைசி காலத்தில்,  மனதில்  ஏற்பட்டிருந்த  அனைத்து  மயக்கங்களும்  மனதை  விட்டு  நீங்கி  நிற்க,  பஞ்ச மந்திரம்  ஒன்று  மட்டுமே  மனம்  முழுவதும்  நிறைந்து  இருக்க,  அருக  பரமேட்டியே  நீயே  எனக்கு  அடைக்கலம்  என்று  சரணாகதி  அடைந்தோர்கள்,  பிறவியை  நீக்கி,  இந்திரர்கள்  ஆவார்கள்.

            இதனால்  அருகனை  அந்திம காலத்தில்  நினைத்தவர்கள்  கூட  இந்திரர்கள்  ஆவார்கள்  என்று  கூறப்பட்டது.                    

 

கயல்விழி  கடைக்கண்  பார்வையும்  கச்சையில்  அடங்கா  தனங்களும்

 வெண்முத்து  வடங்கள்  தவழும்  வெண்ணையாய்  திரண்ட  கழுத்தும்

அசைத்திடா பெரும்  வலிமையுடைய  அருகா உன்  பாதம்  சேர்வர்

முக்தி  என்னும்  நாட்டை  அடைவர்  சேராதோர்  நால்கதியில் உழல்வர்     20

 

            கன்னியர்களின்  மீன்  போன்ற கண்களின்  கடைவிழி  பார்வையும்,  கச்சையை  மீறித்  துடிக்கும்  தனங்களையும்,  வெண்மை  நிற  முத்து  சரங்கள்  புரளும்  வெண்ணெய்யென  திரண்ட கழுத்தும்  உன்னை  சிறிதும்  அசைக்காத  பெரும்  வலிமையுடைய  அருக பெருமானே,  நிர்மலனே,  உன்  பாதத்தை  அடைந்தவர்கள்  முக்தியென்னும்  நாட்டை  அடைந்து  மகிழ்வர்.  அவ்வாறு  உன்னைத்  தொழாதவர்கள்  இழிவான  நாற்பிறப்பிலும்  பிறந்து  துன்பத்தை  அனுபவிப்பார்கள்.

            இதனால்  திருவாக்கின்  உறுதி  கூறப்பட்டது

 

விண்ணில்  உருவான  சிறப்புடைய   வெண்தாமரை  பூமேல்  நடக்கும்

வீதராகப்  பெருமான்  அருகனை  அறிந்தும்  அறியாத  செய்கையால்

கடும்  வெப்ப  இழிந்த  நரகமும் கடையிலா  சுகத்தின்  வீடுபேறும்

அருவுயிர்க்கும்  அமைத்துத்  தரும்  அனந்த  சுகம்  உடையவன்  நீயே 21

 

            ஆகாயத்தில்  உருவான  பெருமையை  உடைய  வெள்ளைத் தாமரை  மேல்  நடக்கும்  வீதராகப்  பெருமானான  அருக  பரமேட்டியே,  உன்னை  அறியாமையும்,  அறிதலுமாகிய  இரு  செய்கைகளாலும்,  கடும்  வெப்பத்தைத்  தரும்  கீழான  நரகத்தையும்,  சுகத்தைத்தரும்  வீடுபேறையும்  உயிர்களுக்கு  உண்டாக்குமென்று  சாதுக்களால்  சொல்லப்படுமென்றால், அதை  அவ்வுயிர்களுக்கு  அமைத்துத்  தருவதும்  அனந்த  சுகத்தையுடைய  உன்னையன்றி  வேறு  யாருளர்.

            இதனால்  உலகத்திற்கு  இன்பகாரன் இவனே  என்று  கூறப்பட்டது.

 

முக்தியென்னும்  இலக்குமியுடைய  மூவுலகும்  ஆளும்  என்  அருகா

பூக்களும்  புனலும்  கை  கொண்டு  பூஜித்து  உனை  வணங்கும்  நான்

என்றென்றும்  நானுன்  அடிமையானால்  என் கருமம் அழிக்கவல்ல  நீ

என்மனதில் ஒரு தினம் வந்தால் உன் பெருமை கெடுமோ என் தலைவா          22

 

            முக்தி  என்னும்  திருமகளுக்கு  சொந்தமாகி,  மூன்று  உலகத்தையும்  ஆளுகின்ற அருக  பரமேட்டியே,  தினமும்  பூக்களையும்,  தண்ணீரையும்  கொண்டு,  உன்னைத்  தொழுது  வணங்கும்  நான்,  என்றும்  உன்  அடிமை  என்று  கூறி,  அடிமையாகும்  என்  கருமத்தை  அழிக்கவல்ல  நீ,  என்  மனதில்  ஒரு  தினம்  வந்து  சேர்ந்தால்  உன்  பெருமை  கெட்டுவிடுமா  தலைவா.

            இதனால்  பழிப்பது  போல்  முக்திக்கு  நாதன்  என்று  கூறப்பட்டது.

 

மது  உண்ணும்  வண்டுகள்  நெருக்க  மலரும்  தளிரும்  சுமந்து  நிற்கும்

தரணியை  இருளாக்கும்  அசோகின்  தண்  நிழலில்  அமர்ந்த  அருளே

நல்லுயிர்களைக்  கெடுக்கா நின்ற  நாற்கதி  என்னும்  பொய்  வண்டியை

உதைத்து நொருக்கும் உயர்ந்தோனே உன்பாதம் எனக்கருள வேண்டும்      23

 

            தேனை  உண்ணும்  வண்டுகள்  தேனுக்காக முட்டி  நெருங்க,  மலர்களும்,  தளிர்களும்  தழைத்து  நின்று  உலகத்தையே  இருளாக்கும்  அசோக  மரத்தின்  நிழலில்  அமர்ந்த  அருளாளனே,  நல்ல  உயிர்களைக்  கெடுத்து  வதைக்காத,  நான்கு  பிறவிகள்  என்னும்  மாய  வண்டியை,  உன்  திருக்  காலால்  உதைத்து  நொருக்கும்  உன்  பாதத்தை  தினம்  தாமரைப்  பூவினால்    அர்ச்சிக்கும்  அடிமையான  என்னை  நீ  ஆண்டருள  வேண்டும்.

            இதனால்  தான்  வேண்டும்  பொருள்  கூறப்பட்டது.

 

ஈரைம்பது  இந்திரர்களும்  ஈரிரண்டு  விண்  தேவர்களும்

குணம்  பாடி  குற்றேவல்  செய்யும்  தகுதியில்  உள்ளோர் இல்லாரென

ஒன்றையும்  பகராது  அளிக்கும்  அனந்த  சதுட்டம்  கொண்ட  அருகா

சாதுக்கள்  சொல்  உண்மையானால்  எங்களையும்  மறந்ததெவ்விதம்  24

 

            நூறு  இந்திரர்களும்,  நான்கு  வகைத்  தேவர்களும்  உனக்கு  சிறிய  வேலைகளைச்  செய்து,  உன்  குணங்களைப்  பாடித்  துதிக்க  வீற்றிருக்கும்  அரிய  தவத்தையுடையவனே,  உன்னை  நினைத்தவர்கள்  எல்லோரும்  தகுதி  உள்ளவர்கள்,  தகுதியில்லாதவர்கள்  என்று  ஒன்றையும்  கூறாமல்,  நீங்காத  அனந்த  ஞானம்,  அனந்த  தரிசனம்,  அனந்த  வீரியம்,  அனந்த  சுகம்,  கொடுப்பவர்  என்று,  சாதுக்கள்  கூறுவது  உண்மையானால்,  நீ  எங்களை  மறந்தது  எப்படி.

            இதனால்  வேண்டுவோர்  வேண்டியதை  கொடுப்பவன்  இவனே  என்று  கூறப்பட்டது. 

 

பாவங்களை சகடங்கள்  ஆக்கி  பகைவர்  சிரம்  கொய்யும்  பலம்

தருமத்தை  சக்கராமாய்  கொண்டு  தாங்கொணா  இருவினை  பகைவரை

தீயென பற்றி  கருக  அழித்த  தேவர்களும்  தொழுதிடும்  உம்மை

உலகெல்லாம்  தொழுது  வணங்கும்  உயர்நிலை  சோதியே  எம்பெருமான்25

 

            பாவத்தைக்  கொண்ட  சக்கரத்தை  வீசி,  அரசர்களின்  தலைகளை  கொய்து,  ரத்தத்தினால்  வெற்றியை  அடைந்த  அனேகர்  உண்டு.  என்  சுவாமியாகிய  அருக  பெருமான்,  தரும  சக்கரத்தைக்  கையில்  ஏந்தி,   மக்களை  தாங்க முடியாத  துன்பத்தில்  ஆழ்த்தும்  கொடிய  இரு வினைகள்  என்ற  பகைவர்களை,  தீ  போல்  பற்றி  கருகச்  செய்து  அழித்த,  வானுறையும்  அமரர்களும்,  வையம்  முழுதும்    தொழும்,  உயர்ந்த  நிலை  கொண்ட  சோதியே,  நீயே  எம்  இறைவன்  ஆவாய்.

            இதனால்  மித்தியாத்துவ  தெய்வம்  பழிக்கப்பட்டது.

 

வானத்து  வீதியில்  வலம்  வரும்  வாசமலர்  களிறின்  பாகனே

முதலும்  முடிவும்  இல்லா  மூலமே  மூன்றொளியில்  உதிக்கும்  ஞாயிறே

வேதங்களைச்  சொல்லிய    செல்வா  வெள்ளி  வான  வீதியை  உடையோய்

உனையன்றி பிறரை துதிக்கும் ஊனமனம் கொண்டாரும் உளரோ                    26

           

ஆகாயம்  என்னும்  வீதியில்  வலம்  வருகின்ற,  நாற்திசையிலும்  மணம்  வீசிக்கொண்டு  செல்லும்  செந்தாமரை  மலர்  என்ற  யானையின்  பாகனே,  ஆதியும்  அந்தமும்  இல்லாத  முதல்வனே,  பிரபாவலய  மூன்றினுள்  உதிக்கின்ற  சூரியனே,  திருமொழியால்  பரம  ஆகமங்கள்  கூறிய  செல்வனே,  வெள்ளிபோல்  ஒளிரும்  வான  வீதியை  உடையவனே,  உன்னையன்றி  பிறரைத்  துதிக்கும்,  முடமான  மனதை  உடையவர்கள்  உலகத்தில்  எப்படி  இருக்கிறார்கள்.  அவ்வாறு  துதிக்கும்  விதம்  தான்  எவ்விதம்.

            இதனால்  பிறதெய்வங்களை  துதிக்கும்  தகுதியடையவனல்ல  என்று  கூறப்பட்டது. 

 

ஆழி  சூழ்  உலகத்தோர்  எல்லாம்  ஆதியாம்  அருகன்  ஒன்றே  என  கூற

அறச் சக்கரம்  கரத்தில்  ஏந்தி  ஆகமங்கள்  அருளிய  தலைவன்

ஒன்றரை  காதம்  நீண்டு  நிமிர்ந்த  ஒளிர்ந்திடும்  செந்தாமரை  அமர்ந்த

அருகனின்  திருவடிகள்  அன்றி  அயல்  தெய்வங்கள்  துதிப்பது  ஏனோ   27

 

            கடல்  சூழ்ந்த  இவ்வுலகத்தில்  உள்ளோரெல்லாம்,  முதலும்,  முடிவும்  இல்லாத  அருகன்  ஒருவரே  கடவுள்  என்று  கூற,  தருமச் சக்கரத்தைக்  கையில்  ஏந்தி,  உலகை  ரட்சித்து,  ஆகம  வேதங்களை,  பிறவிப்பிணியை  நீக்க  அருளிய  தலைவனே,  ஒன்றரை  காத  தூரம்  நீண்டு,  நிமிர்ந்து,  மணம்  பரப்பி,  வண்டுகள்  சூழ்ந்து  மொய்க்கும்,  செவ்வொளி  கக்கும்  செந்தாமரை  மேல்  மேவும்  அருகா  உன்  திருவடிகளே  சரணம்  என்று  தொழாமல்,  வேறு  தெய்வங்களை  தொழுவதற்கு  மனம்  எப்புடி  ஒப்புகிறது.

            இதனால்  வேறு  தெய்வம்  இல்லை  என்று  கூறப்பட்டது. 

 

முடிவிலா  பெரும்  ஞானத்தினால்  மூவிரண்டு  பொருள்களில்  பரவிய

முன்னூற்று நாற்பத்தி மூன்று கயிரளவும் முழுதும்  முச்சோதி நிறைந்த

அருக பரமேட்டியை அறியாமல்  ஐம்பூதங்களை  மேனியாய்  கொண்டவன்

உயிர்களுக்கு  தலைவன்  என்று  உளறுவதும்  பேதமை  அன்றோ                   28

 

            அளவிட  முடியாத  ஞானத்தை  உடையவனும்,  ஆறு  பொருள்களிலும்  பரவி  நின்றவனும்,  முன்னூற்று  நாற்பத்தி  மூன்று  கயிரளவு  முழுவது,  முப்பெரும்  சோதியால்  நிரம்பியுள்ளவனுமாகிய  அருகபரமேட்டியை  கருத்தன்  என்று  அறியாமல்,  மனதில்  மயக்கம்  கொண்டு,  அளவிட்ட  இந்த  பூமியை,  அக்கினியை,  தண்ணீரை,  காற்றை,  ஆகாயத்தை  எங்கள்  தலைவன்  தன்  தேகமாக  கொண்டு,  உயிர்களைக் காக்கின்றான்  என்று  பிதற்றுவது  அறியாமையே  ஆகும்.

            இதனால்  மித்தியா  திருஷ்ட்டிகள்  அருகனுடைய  நிலையை அறியாதவர்கள்  எனக் கூறப்பட்டது.

 

வண்டுகள்  மது  உண்டு  மயங்கி  வாய்  சிந்தும் தேன்  துளி  மழையால்

அடி  பருத்த  அசோக  மரத்தை  அடையாலமாய்  கொண்ட  அருகனே

அனைத்துலகும்  வேண்டி  வணங்க  அரிமாசனத்தில்  அமர்ந்த  ஆதியே

நல்லற  வேதங்களை  எல்லாம்  நாட்டவர்களை  உணரச்  செய்வாய்                29

 

            மலர்களில்  உள்ள  மதுவினை  உண்பதால்,  மயக்கத்தில்  வாயிலிருந்து  சிந்துகின்ற  தேன்  துளிகள்  மழையைப்  போல்  கொட்டுவதால்,  அடிமரம்  பருத்து,  தழைத்து  இருக்கும்  அசோக  மரத்தையுடையவனே,  எல்லா  உலகமும்  உன்னை  வணங்கி  நிற்க,  பொன்  சிம்மாசனத்தில்  அமர்ந்து,  நல்லற  வேதங்களாகிய  பரமாகமத்தை  நாட்டு  மக்கள்  அனைவரையும்  உணரச்  செய்வது  உன்  கருணையன்றோ.

            இதனால்  மெய்யறிவு இல்லாதவர்கள்  உலக  முறைமை  அறியாதவர்கள்  எனக்  கூறப்பட்டது.

 

குற்றத்தில்  இருந்து  நீங்கிய  குறைவற்ற  ஞானமுடை  முனிவர்கள்

உன்  பொன்னடி  தொழுது  வணங்க  பொற்றாமரை  மீது  அமர்ந்தாய்

அனைத்து  உலகும்  உன்னுடைய  அனந்த  ஞானத்தினுள்  அடங்க

இந்த ஞானத்தை உள்ளம் கொண்டோர் இவ்வுலகில் எவரேனும் உண்டோ 30

 

            அனைத்து  குற்றங்களையும்  அறவே  நீக்கிய,  தெள்ளிய  ஞானமுடைய  முனிவர்கள்  உன்னுடைய  முக்தி  தரும் பொன்னடியை  வணங்கி  நிற்க,  நீ  பொற்றாமரையில்  அமர்ந்துள்ளாய்.  எல்லா  உலகங்களும்  உன்னுடைய  எண் குணத்தில்  ஒன்றான,  அனந்த  ஞானத்தில்  அடங்கியள்ளது.  இந்த  அரிய  ஞானத்தை  உள்ளத்தில்  கொண்டோர்  இவ்வுலகில் வேறு  எவரேனும்  உள்ளனரோ.

            இதனால்  அனந்த  ஞானம்  உடையவர்  அருகனே  எனக்  கூறப்பட்டது.

 

செருக்குடைய  வண்டுகள்  மோதச்  செந்தேனும்  பூக்களில்  பெருக

ஏழுலகமும்  மணம்  கமழ்ந்திட  எழில்  உடைய  அசோக  நிழலோன்

முக்காலமும்  மூவிரண்டு  பொருளும்  முழுதும் பொறியால்  அளந்த

அருகன் நீரென யான் அறிவேன் அவனி அளந்த நெடுமாலெனல் பொய்யே31

 

            திமிர் கொண்ட  வண்டுகள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்கொள்ள,  அதனால்  பூக்களில்  இருந்து  சிவந்த  நிறமுடைய  தேன்  கொட்ட,  அத்தேனால்  ஏழு  உலகங்களும்  நறுமணத்தால்  சூழ்ந்து  மணக்க,  அழகான  அசோக  மரத்தின்  கீழ்  அமர்ந்துள்ள   அருகனே,  மூன்று  காலங்களையும்,  ஆறு  பொருள்களையும்,  தன்னுடைய  பொறிகளினாலேய  அளந்த  அருக  பரமேட்டி  நீயே  என  நான்  அறிந்துள்ளேன்.  ஆனால்  உலகளந்தவன்  நெடுமாலே  என உரைப்பது  பொய்தானே.

            இதனால்  அனந்த  ஞானத்தை  உடையவன்  அருகனே  என்று  கூறப்பட்டது.

 

நற்குண  முனிவர்கள்  நெஞ்சம்  நற்குண  பாற்கடலில்  அமர்ந்து

ஒப்பில்லா  வினைகள்  என்னும்  ஓங்கிய  பகைவர்களை  அழித்து

விசும்பின்  நீள்  உச்சி  கடந்து  வலக்கரம்  தர்ம  சக்கரம்  ஏந்திட

நீலவண்ண மலையாம் நேமிநாதரை நினையாதார் குணம் தெளியாதவரே32

 

            நற்குணமாகிய  சமுத்திரத்தை  சேர்ந்த  தவ  முனிவர்களின்  மனமாகிய  பாற்கடலில்  அமர்ந்த  சித்தியான  இடத்தையுடையவனே,  ஒப்பில்லாத  வினைகளாகிய  எதிரிகளை  அழித்து,  கருமத்தைக்  கெடுத்து,  வலது  கரத்தில்  தர்மச் சக்கரத்தை  ஏந்தி,  ஆகாயத்தின்  உச்சியை  கடந்து,  அழகிய  நீல  நிறமான  மலையைப்  போன்ற  சுவாமி  நேமிநாதரை  நினையாதவர்கள்,  தங்களின்  குணங்களில்  இருந்து  தெளியாதவர்களாவர்

            இதனால்  அருகனை  கடவுள்  என்று  மனம்  தெளியாதவர்கள்  முக்தியை  அடையார்  என்று  கூறப்பட்டது.

 

இச்சையாம்  வியாதியை  அழித்தவன்  எங்களின்  கெடா இன்பமுடையோன்

பரமாகமத்தை  அறிந்து  தெளிந்தோர்  பக்தியுடன்  வணங்கும்  அருகனை

மென்மலர்  முக்தி  நாயகியின்  மென்கரம்  பற்றிய  முக்தி  நாயகனை

துதித்திட்ட  உலகோர்  எல்லாம்  துலங்கிய  முக்தி  பேறடைவார்                      33

 

            ஆசையாகிய  நோயினை  அழித்தவனை,  எங்களின்  கெடாத  இன்பத்தையுடையவனை,  பரம  ஆகமங்கள்  அனைத்தையும்,  அறிந்து  தெளிந்தவர்கள்  பக்தியுடன்  பணிந்து  வணங்கும்  அருக பெருமானை,  மென்மையான  முக்தி  நாயகியின்  பூங்கரங்களை  பற்றிய  முக்தி  நாயகனை,  பணிந்து  தொழும்  உலகத்தவர்கள்  எல்லாம்,  பேரின்பம்  என்னும்  வீடுபேறை  அடைவார்கள்.

            இதனால்  அருகனை  துதித்தவர்  பெறும்  வீடுபேற்றினை  கூறப்பட்டது.

 

முக்காலத்திலும் மூவிரு பொருளிலும் நிச்சயத்தில் நிச்சயமாயினவென்றாய்

பொருள்களின்  சென்ற  குணங்களால்  அந்நித்தியமாயின  என்றாய்

நன்னெறியில்  நின்றோர்  எல்லாம்  நவின்றதை  உண்மையாய்  ஏற்றார்

இரு  சொல்லும்  ஏற்காதவர்கள்  நாற்பிறப்பின்  துன்பத்தில்  உழல்வர்      34

 

            மூன்று  காலத்திலும்,  ஆறு  பொருள்களிலும்  நிச்சய  நயங்களால்  நிச்சயமாயின  என்றும்,  பொருள்களின்  குணங்கள்  கெட,  அவைகள்  அந்நித்தியமாயின  என்றும்  கூறினாய்.  நல்ல  ஒழுக்க  நெறியில்  நிற்பவர்கள்  நீ  சொன்னதை  உண்மையென்று  ஏற்றுக்  கொண்டனர்.  இந்த  உன்னுடைய  நித்திய,  அந்நித்தியம்  என்னும்  தத்துவங்கள்  இரண்டையும்  ஏற்காதவர்கள்  நான்கு  கதிகளிலும்  பிறந்து  துன்பத்தை  அனுபவிப்பார்கள்.

            இதனால்  திவ்விய  திருமொழியின்  பெருமை  கூறப்பட்டது.

 

மூன்றுலகாளும்  இந்திரர்களால்  முக்குடையினைப்  பிடித்து  நிற்க

மண்ணுலகைத்  தன்  தோள்களினாலே  மலர்  போலத்  தாங்கி  நிற்க

பரமாணு  ஒன்றைக்  கொண்டே  பாருலகம்  முழுவதையும்  அளந்தாய்

இருவினையாம் பகைவர்கள் இறந்தனர்  உன் சுக்கில தியானத்தால்         35

 

            மூன்று  உலகத்தையும்  ஆளும்  இந்திரர்கள்  உனக்கு  முக்குடையை  பிடித்துக்  கொண்டு  நிற்க,  இந்த  மாபெரும்  உலகை  உன்  தோள்களில்  மலர்  போல்  தாங்கி  நிற்கும்  மாலவனே,  பரம  அணு  ஒன்றைக்  கொண்டே,  அக்கணத்திலேயே  உலகம்  முழுவதையும்  அளந்து  விடும்  பேறாற்றல்  படைத்தவனே,  இருவினைகளாகிய  பகைவனை  வேல்  வில்  முதலியனவின்றி,  உம்  சுக்கிலதியானம்  என்னும்  வாளால்  வென்று  உலகத்தை  ரட்சிப்பவனும்  நீயே.

             

கயலென  துள்ளும்  விழிகளுடன்  கவர்கின்ற  கலச  தனங்களையும்

முத்து, மலர்மாலை  சந்தனம்  அணிந்த  மோகம்  தரும்  பெண்களை  ஒதுக்கி

மூன்றாம்  பிறை  நூதலை  உடைய  முக்தி  என்னும்  மங்கையை  தழுவிய

சஞ்சலம்  இல்லாதத்  தலைவனே  சகல  உலகம்  காக்கும்  இறைவா                 

 

            மீன்களைப்  போல்  துள்ளுகின்ற  கண்களுடன்,  பொற்கலசம்  போல்  கவர்கின்ற  தனங்களையும்,  வலம்புரி  சங்கில்  இருந்து  எடுத்த  முத்து  மாலைகளும்,  வண்டுகள்  மொய்க்கும்  மது  சிந்தும்,  வாசனையுள்ள  மலர்மாலைகளையும்,  மணக்கும்  சந்தனத்தையும்  அணிந்து,  மோகத்தைத் தூண்டும்  நங்கையர்களை  ஒதுக்கித்  தள்ளிவிட்டு,  மூன்றாம்  பிறை  போன்ற  நெற்றியை  உடைய  முக்தி  என்னும்  மங்கையை  தழுவி,  மனதில்  சிறிதும்  சஞ்சலம்  இல்லாத  தலைவனே,  நீயே  உலகைக்  காக்கும்  இறைவன்  ஆவாய்.

            இதனால்  அருகன்  அனந்த  வீரியன்  என்று  கூறப்பட்டது.

 

ஆயிரம்  தோள்கள்  இருபுறமும்  ஆயிரம்  மாலைகளால்  ஒளிர்ந்திட

ஆயிரம்  கண்கள்  மேனியுடையோன்  ஆனந்த  கூத்தாடும்  இந்திரன்

ஆயிரத்தெட்டு  நாமங்கள்  பாடிட  ஆகாயத்தில்  வெற்றி வலம் வரும்

ஆழிச்  சக்கரம்  உடைய  அழகா  அரணாகும்  உம்  அடிகள்  எமக்கு                 36

 

            இருபுறமும்  ஆயிரம்  தோள்களில்  ஆயிரம்  மாலைகள்  ஒளிர்ந்து  பிரகாசிக்க,  உடலெல்லாம்  ஆயிரம்  கண்களையுடய  தேவேந்திரனின்,  ஆயிரம்  கண்களும்  களிப்பில்  மகிழ,  உனது  ஆயிரத்தெட்டு  பெயர்களையும்  கூறி,  போற்றிப்பாடி  ஆனந்த  கூத்தாடும்  வேளை  ஆகாய  வீதியில்  அழகிய  தர்மச் சக்கரத்துடன்  வலம்  வரும்  அழகனே,  உம்  திருவடிகள்  எமக்கு  என்றும்  காவலாக  அமையும்.

            இதனால்  உயிர்கள்  பிழைப்பதற்கு  ஆதாரமானவன்  இவனே  என்று  கூறப்பட்டது. 

 

மூவுலக  இந்திரர்கள்  தமது  முடிகள்  உம்  பாதம்  தொழுதிட

முக்குற்றங்கள்  கெட்டு  அழிய  மனமதில்  கருணை  பெருகிட

ஐம்பொறிகள்  ஆமையாய்  அடங்க  அறுவகை  பொருளையும்  நீ காண

அருகா  உன்  பெருமையை  நாங்கள்  அனுதினமும் பார்த்தே  மகிழ்வோம்     37

 

            மூன்று  உலகையும்  ஆளும்  இந்திரர்கள்  தங்களது  மணிமுடிகள்  உம்  பாதத்தை  தொட்டு  வணங்க,  மூன்று  குற்றங்களையும்  நீ  கோபித்து  அழித்திட,  அப்போது  உமது  மனதினில்  கருணை  வெள்ளம்  பெருகி  ஓட,  ஐந்து  பொறிகளும்  ஆமை  போல்  உள்ளடங்கி  இருக்க,  ஆறுவகைப்  பொருள்களையும்  நீ  பார்த்திட,  உங்கள்  பெருமையை  தினமும்  நாங்கள்  பார்த்து  மகிழ்கிறோம்.

            இதனால்  கருமத்தைக்  கெடுத்தது  கூறப்பட்டது.

 

கேவலக்  தியான  விழிகள்  கொண்டு  காமனின்  உடலை  எரித்தாய்

மும்மதி  விண்ணில்  தோன்றலாய்  முக்குடை  நிழலில்  அமர்ந்தாய்

முனிவர்க்கு  கொல்லா  நெறி  சொல்லி  எழுமூன்றின்  இரட்டிப்பு  நூலை

அங்கமாய்  தோன்ற  அறிவித்த  நாதா  அத்தனையும்  பொருத்தல் எப்படி           38

 

            கேவலக்  ஞானமான  மூன்றாவது  கண்ணைத்  தோன்றச்  செய்து,  வலிமை  பொருந்திய  மன்மதனின்  உடலை  எரித்தாய்.  வானத்தில்  முழு  சந்திரனைப்  போன்ற  முக்குடையின்  நிழலில்  அமர்ந்தாய்.  தவமுனிவர்களுக்கு  கொல்லாமை  என்னும்  விரத நெறிகளைச்  சொன்னாய். ஆகமங்கள்  என்னும்  வேதங்கள்  42 யும்  அங்கமாக  தோன்றச்  சொல்லி,  மூன்று  குற்றங்களையும்  மனதில்  அழித்து,  மூன்று  உலகத்தையும்  அறிந்த  நாயகனே,  இவையெல்லாம்  உன்னிடம்  பொருந்துவது  எப்படி.

            இதனால்  அருகனுடைய  திவ்விய  வாக்கே  மாறுபாடு  இல்லாதது  என்று  கூறப்பட்டது.

 

அனந்த  சுகத்தில்  அமர்ந்து  அழகு  கமலபூவில்  கால்  பதிய

மதுவுண்ட  வண்டுகள்  மொய்க்கும்  மயக்கும்  பிண்டி  மரமுடையோனே

காலனை  உன்  காலால்  உதைத்து  கனிந்த  மெய்ப் பொருளைச்  சொல்லி

முரணற்ற  உன்  பரமாகங்கள்  மயக்கத்தை  உயிர்கட்க்கு  போக்கும்     39

 

            அழகிய  தாமரைப்  பூவில்  பாதம்  பதிய,  அனந்த  சுகத்தில்  அமர்ந்து  கொண்டுள்ளவனே,  மலர்களில்  வடியும்  மதுவினை  உண்டு,  அதன்  மயக்கத்தில்  திரியும்  வண்டுகள்  சூழ்ந்த  அசோக  மரத்தையுடையவனே,  கொல்லுதலை  நீக்கி,  உயிர் பறிக்கும்  காலனை  காலால்  உதைத்து  தள்ளி,  இனிமையான  மெய்ப்பொருளைச்  சொல்லியும்,  முன்னுக்குப்  பின்  முரண்பாடுகள்  ஏதும்  இல்லாத  பரமாகங்களைக்  கூறியும்,  உயிர்களின்  மயக்கத்தைப்  போக்கும்  சோகம்  இல்லாதவனே. 

            இதனால்  அருகனுடைய  தன்மை  கூறப்பட்டது.

 

ஐங்கணயான்  செய்யும்  போரில்  அவன்  கணைகள்  அழியச்  செய்து

முக்தியாம்  மங்கையைத்  தழுவி  முடிவற்ற  இன்பம்  நுகர்ந்தோனே

மோகனீய  மன்னனின்  சிரத்தை  முழு ஞானவாள்  கொண்டு  கொய்து

நால்கதியாம்  சங்கிலியை  அறுத்தோர்  நாடிடுவார்  அருகன்  அடியை  40

 

            ஐந்துவகை  மலர்க் கணைகளை  தன்  போர்  ஆயுதங்களாக்கி,  அவன்  செய்யும்  போரில்,  அவன்  அனைத்து  கணைகளையும்  அழியச்  செய்து,  முக்தி  என்னும்  பேரழகு  மங்கையை  தழுவி,  அணைத்து,  எல்லையற்ற  இன்பம்  நுகர்பவனே,  மோகனீயம்  என்னும்  மன்னனின்  சிரத்தை  அறுத்து,  அருகநெறிகள்  என்னும்  முழுமையான  ஞானமாகிய  வாளால்  வெட்டி  சாய்த்து,  கடுமையான  துன்பத்தைக்  கொடுக்கின்ற  நால்வகைப்  பிறப்புகள்  என்ற  சங்கிலியை  அறுத்து  எறிபவர்கள்  அருகனின்  செவ்விய  அடிகளை  அடைவர்.

            இதனால்  அருகனின்  அருள்  பெற்றவர்  முக்தியை  பெறுவர்  என்று  சொல்லப்பட்டது.

 

பிறவிப்  பகை  அறுக்கும்  சக்கரம்  பெருந்துயர்  கடலின்  தெப்பம்

மனம்  நிறைவடையும்  நிதியும்  மதுரமாய்  மனம்  விரும்பும்  பழம்

நாவுக்கு  நல்லதோர்  அமிர்தம்  நால்கதி  நோயின்  அவிழ்தம்

நமோ  அரகந்தாணம்  என்னும் நல்ல  மூல  மந்திரம்  ஒன்றே                      41

 

            பிறவியாகிய  பகைவனை  வென்று  அழிக்கும்  சக்கரம்,  தாங்கயியலாத பெரும்  துயரைத்  தரும்  வாழ்க்கைக்  கடலை  கடக்க  உதவும் படகு,  இப்பிறவியில்  நம்  மனமெல்லாம்  மகிழ்ச்சி  பொங்கி,  நிறைவு  கொள்ளும்  பெருஞ்செல்வம்,  அலைபாயும்  மனதானது,  நின்று,  நிலைத்து,  விரும்பும்  சுவை  மிகுந்த  பழம்,  நாவுக்கு  கிடைத்த  பாற்கடல்  நல்லமிர்தம், நால்வகைப்  பிறப்புக்கள்  என்ற  பெரும்  நோயினைப்  போக்கும்  மருந்து,  இத்தனையும்,  அருக பரமேட்டி  நமக்கு  அருளிய  மூலமந்திரமான  ஓங்கார  மந்திரம்  ஒன்றே  தான்.

( அவிழ்தம் : மருந்து. )

 

ஐம்பொறிகள்  வழியில்  சென்று  அலைகின்ற  தெய்வங்களுக்கு

பொருளற்ற  வெறும்  நாமங்கள்  கூறி  போற்றுகின்ற  உலகத்தோர்க்கு

அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர்  அழுக்காறில்லா  சாதுக்கள்

முதல்  எழுத்தைச்  சுட்டிச்  சொல்ல  மூலமந்திரம்  உதிக்கும்  அங்கே              42

 

            ஐம்பொறிகள்  செல்லும்  வழியே,  அடக்கம்  இன்றி  அலைந்து,  திரிகின்ற  தெய்வங்களுக்கு,  பொருளில்லா  பெயர்களை  எல்லாம்,  அலங்காரமாகவும்,  ஆர்பாட்டமாகவும்  போற்றிக்  கூறி  வணங்கும்,  உலகத்தவர்கள்,  அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ  சாதுக்களின்  முதல்  எழுத்தாகிய  அ, சி, ஆ, உ, ச  என்று  கூற,  அருகனின்  ஓங்கார  மந்திரம்  உருவாகும்  பெருமையை  அறியலாம். 

            இதனால்  ஓங்காரம்  பஞ்ச பரமேட்டி  ஸ்ரூபம்  என்று  கூறப்பட்டது.

 

ஆதித்தன்  ஆயிரம்  கூடினாற் போல்  அமைந்த  பிரபாவலைய  ஒளியில்

ஓராயிரம்  மதிகள்  சேர்ந்திட  ஒளிர்ந்திட்ட  காய  சோதியைக் கொண்டு

கமலத்தில்  கால்  பதியா  உன்னை  காண  கண்கள்  குளிர்ச்சியுறும்

கைகளில் போர் செய்யும் ஆயுதமின்றி காத்திடும் உன் செயல் எவ்வாறு 43

 

            ஆயிரம்  சூரியன்  ஒன்றாய்  கூடினால்,  உண்டாகும்  ஒளியை  ஒத்த  பிரபாவலையத்தில்,  ஆயிரம்  சந்திரன்கள்  சேர்ந்து  தரும்  பேரொளியினை  உடைய  உன்  உடல்  ஒளியையும்,  உன்னுடைய  செவ்விய  பாதங்கள்  பதியாத,  செந்தாமரை  மலரின்  மேல்  வீற்றிருக்கும்  உன்னைக்  காணக்காண  கண்கள்  குளிர்ச்சியுரும்.  உம்மிடத்தில்  பகைவர்களை  கொல்லும்  சிந்தையும்,  அவர்களுடன்  போர்  செய்ய  கையில்  ஆயுதங்களும்  இல்லாமல்,  அனைத்தையும்  காத்திடும்  செயல்  எவ்வாறு.

            இதனால்  பழிப்பவன்  போல்  பற்றற்றவன்  என்று  கூறப்பட்டது. 

 

குற்றங்கள்  அனைத்தும்  கலைந்த  குணக்குன்றே  என்  அருகா

முக்குடை  நிழலில்  அமர்ந்த  உன்  மலரடிகள்  தொழுவதாலே

ஆதியில்  ஆன்மாவில்  சேர்ந்து  ஆற்றலில்  பெருகி  நிற்கும்

வலிய  வெவ்வினைகள்  எல்லாம்  வீழ்ந்திடும்  உம்  அருளினாலே                     44

 

            குற்றங்கள்  ஏதும்  இல்லாத  குணத்தையுடைய  என்  அருக பரமேட்டியே,  முக்குடை  நிழலில்  அமர்ந்து  இருக்கும்  உன்  மலர்  போன்ற,  தூய்மையான,  மெல்லிய  அடிகளை  வணங்குவதால்,  ஆதியில்  என்  உயிருடன்  கலந்து,  பிண்ணியுள்ள  ஆற்றல்  மிக்க,  வலிய,  கொடிய  வினைகள்  எல்லாம்  காய்ந்த  இலை  சருகாக,  உன்  அருளால்  உதிர்ந்து  போகும்.

            இதனால்  அருகன்  வினைப்பகைவன்  என்று  கூறப்பட்டது.

 

சகடத்தின்  சக்கரம்  போல  சுழல்கின்ற  நால் பிறப்பில்

இறந்து  பிறந்து  வரும்  களைப்பில்  இளைப்பாறும்  விதமென  காணில்

நால்வகை  வண்டுகள்  நாடிடும்  நல் அசோக மர  மலரைப்போல

அருகனடி  துதிப்பதினாலே  அறுந்திடும்  ஏழு  பிறவிகள்  அன்றே                     45

 

            ஓடுகின்ற  வண்டியின்  சக்கரம்  போல்,  நான்கு  பிறப்புகளில்  சுழல்கின்ற,  பிறப்பு,  இறப்புகளின்  களைப்பைப்  போக்கி,  இளைப்பாறும்  விதம்  எப்படியெனில்,  நான்கு  வகையான  வண்டுகள்,  மதுவுக்காக,  அசோக  மலர்களை  நாடுவது  போல்,  அருக பரமேட்டியின்  திருவடிகளை,  நாடித்தொழுவது,  ஏழுவகைப்  பிறப்புகளை  அழித்து  களைப்பைப்  போக்கிக் கொள்வது  போல்  அமையும்.

            இதனால்  அருகனை  தொழுபவர்  இன்பமும்,  தொழாதவர்  துன்பமும்  கூறப்பட்டது.

 

பரமனின்  பாதத்  தாமரையை  பக்தியால்  போற்றித்  துதித்தலும்

பல வினைகள்  அழுக்கை  நீக்க  பாதநீர்  கொண்டு  குளித்தலும்

பாதங்கள்  தரித்த  பூக்கள் கொண்டு  பாவி  என்  சிரத்தில்  தரித்தலும்

பாதத்தில்  முழு  சரண்  அடைதலே  பலன்  தரும்  ஒரு  குறைகளுமின்றி   46

 

            அருக பரமேட்டியே  உன்னுடைய  தாமரப்  பூ  போன்ற  பாதங்களைப்  பக்தியுடன்  போற்றி  வணங்குவதாலும்,  பல  வினைகள்  பிணைந்துள்ள  உயிரின்  அழுக்கை  உன்  பாத்தத்தின்  நீர்  கொண்டு  கழுவி  சுத்தம்  செய்தாலும்,  உன்  பாதங்களை  அலங்கரித்த  மலர்களை  என்  சிரத்தில்  சூடிக்கொண்டதாலும்,  உன்  பாதங்களைத்  தவிர,  வேறெதுவும்  எங்களுக்கு  இல்லை  என்று  முழு  சரணாகதி அடைந்ததாலும்  மட்டுமே,  ஒரு  குறையும்  இல்லாத  பலன்  கிடைக்கும்.

            இதனால்  உதீசித்தேவர்  தான்  பெற்ற  இன்பம்  கூறப்பட்டது.

 

கடகங்களை  கையில்  அணிந்து  கண்கள்  இமையா  தேவர்களின்

பிறவியாம்  நோயினைப்  போக்க  பொங்கும்  கடல்  கடைந்து  எடுத்த

முக்தியாம்  அமிர்தம்  தந்து  முக்தி  மங்கையை  மார்பில்  அமர்த்தி

கரும்புவில்  காமனைக்  கொன்று கர்மம் வென்ற விதம் யாம் அறியோம்    47

 

            சக்தி  மிகுந்த  கங்கணங்களை  கையில்  அணிந்து,  வணங்கும்  தேவர்களின்  பிறவி  நோயினைப்  போக்க,  மகரமீன்  வாழும்  பெரும்  கடலை,  பெருத்த  ஒலி  எழுப்பும்  வண்ணம்  கடைந்து,  முக்தி  என்னும்  அமிர்தத்தை  எடுத்து  கொடுத்த  நாதனே,  அந்த  முக்தியாம்  இலக்குமியை,  மார்பில்  வீற்றிருக்க  வைத்துள்ளவனே,  கரும்பு  வில்கொண்டு  போர்  தொடுக்கும்  காமனைக்  கொன்று, கர்மத்தை  வென்ற  செயல்  எவ்வாறு  என்று  அறியோம்.

            இதனால்  பழிப்பது  போல்  விருப்பற்றவன்  என்று  கூறப்பட்டது.

 

ஆசை,  தீவினை,  பிணிகள்  பெருகிட  நிந்தையொடு  மயக்கம்  சேர்ந்திட

நறவு,  தேன்,  தசைகள்  உண்டிடும்  பொய்  நெறிகள்  கொண்ட  மக்கள்

புகழ், அறிவு, காருண்யம்  பெற்று  பேரின்ப  பேறுடன்  வாழ்ந்திடுவர்

திசைகளை  ஆடையாய்  உடுத்திய  தீர்த்தங்கரர்  மார்கத்தினராகின்     48             

            ஆசைகள் வளர்ந்து,  தீவினைகள்  நீண்டு,  பிணிகள்  பெருகி,  நீங்காத  நிந்தையானது  வளர,  கள்,  தேன்,  ஊன்  உண்ணும்  பொய்யான  நெறிகளைத்  தொடருவோர்,  அனைத்தையும்  விட்டு  விட்டு,  புகழ்  வளர்ந்து,  அறிவு  பெருகி,  உயிர்களிடம்  பெருங்கருணை  கொண்டு,  ஒப்பில்லாத  பேரின்பதை  அடைந்து  நீடூழி காலம்  வாழ்வார்கள்,  திசைகளையே  ஆடையாய்  உடுத்திய  தீர்த்தங்கரர்கள்  அருளிய  திருமொழியாம்  நெறிகளை  பின்பற்றி  நடப்பார்களேயானால்.

            இதனால்  சினதர்மத்தின்  அருமையையும்,  அந்நிய  சமயத்தினது  தீமையும்  கூறப்பட்டது.

 

மாய மலம்  வல்வினைகள்  அறுத்து  மயக்கத்தைத்  தெளியச்  செய்யும்

செங்கமல  பாதங்கள்  கொண்டு  சிங்காசனத்தில்  அமர்ந்த  சுடரே

பொல்லாத்  தீவினைகள்  சுமந்து  பிறவா  கதியினை  அறியா  என்னை

நாற்கதி  பயத்தைப்  போக்கியது  நாதா  உன்  கருணையால்  தானே     49

 

            வஞ்சனைகள்  செய்கின்ற  வலிய வினைகளை  அறுத்து,  மயக்கம்  தரும்  வினைகளில்  இருந்து  தெளியச்  செய்து,    சிவந்த,  செவ்விய  பாதங்களை  கொண்டு,  சிங்கங்கள்  தாங்கிய,  பொன்மணிகளால்  ஆன  சிங்காசனத்தில்  அமர்ந்துள்ள  ஞானச் சூரியனே,  பொல்லாத  பெருந் தீவினைகளைச்  சுமந்து  கொண்டு,  பிறவா  நிலை  ஒன்று  உள்ளது  என்று  அறியாமல்,  நான்கு  கதியில்  பிறந்து, பிறந்து  வருந்துகின்ற  என்னை,  அப்பிறவி  பயத்தில்  இருந்து,  போக்கியது  உன்  கருணையால்  ஆன  தலைமையாகும்.

            இதனால்  தனது  குறை  கூறப்பட்டது. 

 

விவேகிகள்  மனங்கள்  தோறும்  வீற்றிருக்கும்  ஆதியாம்  கடவுளே

ஆயிரத்தெட்டு  பெயர்களுடனே  ஐந்து  நாமங்கள்  மேலும்  உடையோனே

சக்தியோசாதன், வாமனன், அகோரன், ஈசானன், தம்புருடன்  என்று

பஞ்ச கல்யாணத்தில்  தேவர்கள்  பகர்கின்ற  பெயர்கள்  இவையே                 50

 

            தாமரைப்  பூவில்  தோன்றியும்,  தர்ம கண்டங்களில்  உலாவியும்,  விவேகிகளின்  மனமாகிய  தாமரை  மேல்  வீற்றிருக்கும்  ஆதி முதலாகிய  சுவாமியே,  உன்  பரிசுத்தமான  குணங்களைக்  கூறும்  1008  பெயர்களையுடைய  அருக பரமேட்டியே,  உன்  பிறப்பு  முதலாகிய  உண்டான  பஞ்ச கல்யாணத்தில்,  தேவர்கள்  தங்கள்  அன்பினால்,  மேலும்  சத்தியசாதன்,  வாமனன்,  அகோரன்,  ஈசானன்,  தம்புருடன்  என்று  ஐந்து  பெயர்களால்  அழைத்துப்  போற்றி  வணங்குவாரகள்.

            இதனால்  பஞ்ச கல்யாணமுடையவர்  அருகனே  என கூறப்பட்டது.

 

ஆயிரம்  நாக்களைப்  பெற்றிட்ட  அமரர்கோன்  இந்திரர்கள்  புகழும்

வெண்தாமரை  யானையை  கொண்ட  வேதங்கள்  அருளிய  புனிதனே

குளிர்கொள்  செம்பிண்டி  மலரின்  குறைவில்லா  மணத்தைக்  கொண்ட

அருகனே உம் அடிகளைத்  தொழும்  அடியவர்கள்  அடியைத்தொழுவோம் 51

 

            ஆயிரம்  நாவினை  பெற்ற  அமரர்களின்  அரசனான  இந்திரர்களால்  புகழப்படுவோனே,  வெண்தாமரை  மலரை  தன்  வாகன  யானையாகக்  கொண்டு,  நிறைவான  வேதங்களை  எடுத்தருளிய  நிர்மலமான  புனிதனே,  குளிர்ந்த  சிவந்த  அசோக  மலரின்,  குறைவில்லா  மணத்தைக்  கொண்ட  அருகனே,    உன்  பாதங்களைத்  தொழும்  அடியவர்களின்,  திருவடிகளை யாமும் தொழுவோம்.

            இதனால்  வழிபடும்  உபாயம்  கூறப்பட்டது.

 

மனதினில்  அருளுடையோர்கள்  மனதினில்  சேருதல்  எளிதாய்

மாபெரும்  திவினையுடையோர்  மனதினில்  சேருதல்  அரிதாய்

முச்சோதியுடன்  வந்து  சேர்பவர்  மீண்டும்  மீளாப்  பிறப்பெடுத்தல்

பகை, பசி, நோய், காலன்  சேராப் பேரின்ப  முக்தியாம்  வீடுடையோனே    52

 

            மனதினில்  உயிர்களிடம்  அருளுடையவர்கள்  உன்னை  வந்து  சேர்தல்  சுலபம்.  கொடிய  தீவினைகளை  கொண்டுள்ளோர், தம்  நினைவினாலேயே  உன்னைச்  சேர்தல்  அரியதாகும்.  மூன்று  சோதிகளுடன்  உன்னை  வந்து  சேர்பவர்கள்,  மீண்டும்  பிறவாத  பெரும்  பேறை  அடைவார்கள்.  பகை,  பசி,  நோய்,  இறப்பு  இல்லாத  முக்தி  என்னும்  பெரும் வீட்டையுடையவன்  நீயே  ஆவாய்.

 

வீசிய  மலை,  மழை, நெருப்புகள்,  வெட்டிடும்  ஆயுதங்கள்  பலவும்

வஞ்சகம்,  கோபம்,  வண்பகையால்,  வலிய  வினைகள்  கொண்ட  கமடன்

அவனியில்  உள்ளோர்  அஞ்சி  நடுங்க  அவைகளை  மலரென  ஏற்ற மாலவா

அலர் மலர்களால் தொழுமெனக்கு அடைக்கலம் தா அருளெனும் நிழலில்

 

            நெஞ்சத்தில்  கபடமும்,  பெருஞ்சினமும்,  பகையும்  கொண்டு,  கொடிய  கடும்  தீவினைகளைக்  கொண்ட  கமடன்,  உன்  மேல்  எடுத்து  எறிந்த  பெரும்  மலைகளையும்,  நெருப்பு,  மழையையும்,  கொல்லும்  ஆயுதங்கள்  இன்னும்  பலவற்றை,  மண்ணில்  உள்ள  மாந்தர்கள்  அஞ்சும்படி  வீச,  அவைகள்  அனைத்தையும்  மணம்  வீசும்  மலர்களைப்போல்  உன்  மேனியில்  ஏற்றுக்  கொண்ட  மாலவனே,  அன்றலர்ந்த,  அரிய  பல  மலர்களை  உன்  பாதத்தில்  வைத்து  தொழும்  எனக்கு,  அருள்  என்னும்  உன்  நிழலை  அடைக்கலமாகத்  தருவாயா.

            இதனால்  தனது  குறை  கூறப்பட்டது.

 

கார்காலத்  தனி  அழகுடைய  கருவுற்ற  முகில்கள்  கூட்டமே

மழலை  போல்  தவந்து  சென்று  முகில்  வண்ண  நேமியின்  கிர்நாரை

வலம்  வந்து  சுற்றி  வணங்கி  வந்தணைத்த  தீவினை  நோய்களை

மறைந்தொழியச்  செய்திடுங்கள்  மழை  நீராய்  என்  மேல்  பெய்து                      53

 

            கார்  காலத்திற்கே  உரிய  தனி  அழகையுடைய  கருத்த  மேகக்  கூட்டங்களே,  உலகத்தையே  அளந்த  நீலவண்ணன்  ஆகிய  நேமிநாதர்  முக்தியடைந்த,  ஊர்ஜயந்தகிரி  என்னும்  கிர்நார்  மலையை,  குழந்தை போல்  தவழ்ந்து  சென்று,  வலமாக  சுற்றி  வந்து,  வணங்கி,  என்  உயிரினில்  வந்து  பிணைந்துள்ள  தீவினை  என்னும்  நேய்கள்  நீங்கி  அழிய,  நீங்கள்  சுமந்துள்ள  நீரை  மழையாக  என் மீது  பொழியுங்கள்.

            இதனால்  அடியவர்கள்  பெருமை  கூறப்பட்டது.

 

தீவினைகளின்  அலைகள்  பொங்கும்  தீராப்  பிறவிப் பெருங்கடலில்

தெப்பமாய்  உயிர்களைக் காத்து  தீவினைப்  போக்கும்  திருமேனியானே

இடியோசைக்  கேட்ட  நாகம்  போல  இறந்திடும்  ஆசையாம்  அரவம்

தீவினை  காடுகள்  தீயில்  கருக  முக்திக்கு  வழியை  கொடுக்கும்             54

 

            தீவினை  என்னும்  பெரும்  அலைகள்  எழுந்து  வீசும்,  தீராப்  பிறவி  பெருங்கடலைக்  கடக்க,  படகுபோல்  இருந்து  உதவும்  உன்  அழகிய    திரு உருவத்தை  தரிசிப்போர்க்கு.  இடியோசைக்  கேட்ட  நாகமானது,  அஞ்சி  இறப்பதைப் போல ,  ஆசை  என்னும்  கொடிய  பாம்பும்  இறந்து,  ஆறுவகைப்பட்ட  ஏகாந்த  வாதம்  என்னும்  மயக்கங்களும்,  தீவினைகளான  பெருங்காடுகளும்  எரிந்து  சாம்பலாக,  முக்திக்கு  வழி  அமையும்.

            இதனால்  அருகனின்  பாதத்தை  நினைத்தவர்களுக்கு  வரும்  பயன்  கூறப்பட்டது.

 

வேர்கள்  காணும்  பவணர்  உலகம்  கிளைகள்  தொடும்  சோதிடர்  உலகம்

எழுந்து  தழைத்த  அசோக  நிழலில் ஏழுமதிலுடன்  அமர்ந்த  இறைவா

தனச்சுமையால் வருந்தும் இடையும் தளும்பி சொட்டும் இதழ் புன்னகையும்

போற்றிடும்  மயக்கம்  தவிர்த்து  பேரின்ப  முக்தியை  நான் பேற்றுவேன்  55                  

            எட்டு  திசைகளையும்  நெருங்கி,  நீண்டு  சோதிடர்  உலகத்தைத்  தொடும்  கிளைகளையும், குளிர்ச்சி  கொண்ட  சமுத்திரங்களைக்  கொண்ட  பவணர்  உலகத்தைக்  காணும்  வேர்களையும்  உடைய,  தழைத்து,  எழுந்து,  வளர்ந்துள்ள  அசோக  மர  நிழலில்,  ஏழு  பிரகாரங்களுக்கு  நடுவில்  அமர்ந்துள்ள  இறைவனே,  இளமை  பொங்கும்  தனங்களின்  சுமையால்  வருத்தமடையும்  இடையையும்,  சிவந்த  பவழம்  போன்ற  இதழ்கள்  சிந்தும்  புன்னகையையும்  புகழ்ந்து,  போற்றிப்  பாடும்  மயக்கம்  உடையவர்களைத்  தவிர்த்து,  உன்  மெய்நெறி  மார்க்கங்களை  போற்றிப்  பாடும்,  முக்தி  நெறியைப்  புகழ்வேன்.

            இதனால்  மித்தியாத்துவ  தெய்வங்கள்  பழிக்கப்பட்டன.

 

வானவருலகை பொன்னுலகென்றும் வட மலையை பொன்மலையென்றும்

இரும்பைப்  பொன்னாக்கும்  ரசமும்  இவ்வுலக மக்களுக்கு  சொன்னோம்

செம்பொன்  மும்மதில்கள்  சூழ்ந்து  செழித்த  அசோகமர  நிழலானின்

ஆணையில்  மும்மருந்து  தந்தோம்  அம்மருந்தை  அகத்தே  கொள்க  56

 

            ஐயனே,  நாங்கள்  தேவர்களின்  உலகை  பொன்னுலகம்  என்றும்,  வடக்கே  உள்ள  மேருமலையை  பொன்  மலையென்றும்  பேதப்படுத்தி  கூறுகிறோம்.  இந்த  மண்ணுலக மக்களுக்கு  இரும்பைப்  பொன்னாக்கும்  ரசவாத  சித்து  வேலையயும்  சொல்லி  வைத்துள்ளோம்.  வறுமையால்  நல்ல  பாலும்  சோறும்  உண்டாகுக  என்று  மயக்கமுடைய  சித்தர்களும்,  தங்கள்  சித்து  வேலையை  உலகெங்கும்  செய்ய,  மும்மதில்களும்  சூழ்ந்து,  செழித்த  அசோக  மரநிழலில்  உள்ள  அருகனே,  உம்  ஆணைப்படி ரத்தினத்திரயமாகிய  மும்மருந்தையும்  நாங்கள்  புசித்தோம்.  அம்மருந்தை  மனதில்  ஏற்றுக்  கொண்டோம்.

இதனால்   சித்து வித்தை  பயனற்றது  என்று  கூறப்பட்டது. 

 

தருமமாம்  சக்ராயுதத்தால்  தரணிகள்  மூன்றையும்  ஆளும்

கருமமாம்  கடல்கள்  வற்ற  கடைந்திட்டாய்  முனிவர்கட்காக

பொற்றாமரையாம்  உன்னடிகளை  பெருஞ்செல்வமாய்  நீ  தந்தால்

குற்றேவல்  அடிமையாய்  பணிந்து  குறைவின்றி  யான்  பிழைப்பேன்           57

 

            தருமமாகிய  சக்கரத்தைக்  கையில்  ஏந்தி,  மூன்று  உலகங்களையும்  ஆள்பவனே,  தீவினைகளாகிய  பெருங்கடலை,  முனிவர்களுக்காக,  வற்றும்படி  கடைந்த  நாயகனே,  பொன்னாலான  தாமரை  மலர்  போன்ற  உன்  பாதங்களை  நான்  மனதில்  கொள்ள,  பெருமையுடைய  பெருஞ்செல்வமாய்  கொடுத்தாயானால்,  உனக்கு  சிறு,  சிறு  வேலைகள்  செய்யும்  அடிமையாக  இருந்து,  குறையொன்றும்  இல்லாமல்  பிழைத்துக்  கொள்வேன்.

            இதனால்  அருகனின்  அருள்  பெற்றவர்களுக்கு  குறைவில்லை  என்று  கூறப்பட்டது. 

 

பிழை  வளர்க்கும்  நீண்ட  ஆசையில்  பொருள்  பெருக்கி  வாழ்ந்தவர்கள்

பின் நின்று வான்கவிகள் தன்னை புனைந்துரைக்கும்  புலவர்களைப்  போல்

பொங்கும்  மதநீர்  மழை  சொரியும்  தங்கு  சின  கரிகள்  பரிகளுடன்

பொன்மணி, துகில், ஆபரணங்கள்  போதும்  என்று  வேண்டேன்  என்றும்       

 

            குற்றங்களை  வளர்க்கும்  மிகுந்த  ஆசையால்,  பொருள்  செல்வத்தை  நாடி,  வளர்ந்து  வாழும்  செல்வந்தர்கள்  பின்னே  நின்று,  வானளவு  புகழும்  மேன்மையான  கவிதைகளைப்  புனைந்து,  புகழ்கின்ற  புலவர்களைப்  போல்,  கோபத்தால்  பொங்கி  வரும்  மதநீரை  மழைபோல்  கொட்டும்  யானைகளையும்,  குதிரைகளையும்,  பொன்மணிகளும்,  ஆபரணங்களும்,  துணிகளும்  எனக்கு  வேண்டும்  என்று  உன்னிடம்  எப்போதும்  கேட்கமாட்டேன்.   

 

எண்திசையும்  வெறி  மணக்கும்  எழில்  மலரின்  தேன்  துளிகள்

தென்றலுடன்  கலந்து  சூழ  செம்பரிதியால்  தளிர்  தழைத்து

முத்து  மணி  மாலைகள்  தொங்க  குளிர்கொள்  செம்பிண்டி  நாதனே

நீ  பெற்ற  எண்குணங்களெல்லாம்  எனக்கருள்  என  வேண்டுகிறேன்     58 

 

            எட்டு  திசைகளிலும்  மணந்து  வீசும்,  அழகு  பொருந்திய  மலர்களில்  இருந்து,  சொட்டும்  தேன்  துளிகள்,  தென்றலுடன்  கலந்து  வீசி  நிற்க,  செந்நிற  ஆதவனின்  ஒளியால்,  தளிர்கள்  தழைத்து,  முத்துமணி  மாலைகள்  தொங்க,  குளிர்ச்சியான,  செழித்த  அசோகமரத்தை   உடையவனே,  நீ  பெற்ற  எட்டு  குணங்களை  எல்லாம்  எனக்கும்  தந்து  அருள்  செய்ய  வேண்டுகிறேன்.

            இதனால்  மண்ணுலக  சுகத்தில்  வெறுப்பும்,  விண்ணுலக  சுகத்தில்  விருப்பத்தையும்  காட்டுகிறது.

 

வேண்டுதல்  வேண்டாமை  இல்லா  வீரனாம்  அருகன்  திருவடிகளை

அகத்தினில்  பற்றிக்  கொண்டு  ஐம்பொறிகளை  அடக்கி  ஆண்டால்

அருகில்  வந்த  வெவ்வினைகள்  அழிந்தொழியும்  நீராவியைப்  போல்

மீண்டும்  நம்மை  அணுகாதெனில்  மாலவன்  மலரடி  தொழாததேனோ  59

 

            விருப்பு,  வெறுப்பு  இயல்பாகவே  இல்லாத,  அனந்த  வீரியனான  அருகனின்  திருவடிகளை,  மனதில்  ஆழ்ந்து  பற்றிக்  கொண்டு,  ஐந்து  பொறிகளையும்,  அதன்  வழிப்  புலன்களையும்   ஆமை  போல்  அடக்கி  ஆண்டால்,  நம்  பக்கத்தில்  வரும்,  கொடிய  தீவினைகள்  எல்லாம்,  ஆவியைப்  போல்  அழிந்து  போகும்.  அப்படி  அடங்கி  இருந்தால்,  அந்த  கொடிய  வினைகள்  மீண்டும்  பக்கத்தில்  வந்தாலும்,  தானே  திரும்பி  போகுமேயானால், அருகனுடைய  பாதங்களை  ஆராதிக்காமல்  நீங்குவதன்  காரணம்  யாதோ.

            இதனால்  எதிர்வரும்  வினைத் துன்பங்களை  நீக்குபவனே  அருகன்.  மித்தியா திருஷ்டிகளின்  அறியாமை  பழிக்கப்படுகிறது.    

 

நல் தீவினைகள்  நம்மை  விட்டால்  நாடிடலாம்  வீடுபேரின்பத்தை

நல்லறத்  துறவிகள்  சொல்வர்  நிறை  பேரின்பக்  கடலது  என்று

பாவி  என்  நெஞ்சம்  கெடுவதும்  பக்குவம்  இன்றி  அலைவதும்

அருகனின்  அறநெறிகள்  மறந்து  அல்லல்  படும்  இல்லறத்தால்  தான்     60                       

            உலகத்தில்  மிக  வெப்பம்  ஆகிய,  நல்வினைகள்,  தீவினைகள்  இரண்டும்  நம்மை  விட்டு  போய்விடுமானால்,  நாம்  பேரின்பமான  முக்தியை  அடையலாம்.  நல்ல  நெறிகளை  கூறி,  மக்களை  நல்வழிபடுத்தும்  முனிவர்கள்,  அதை  பெரும்  இன்பங்கள்  நிறைந்துள்ள,  பெரிய  சமுத்திரம்  என்று  கூறுவர்.  ஆனால்,  பாவியாகிய  என்  மனம்,  இல்லற  வாழ்க்கையால்  தான்,  அருகனின்  குற்றமில்லாத,  நல்லற  நெறிகளை  மறந்து,  பக்குவம்  இல்லாமல்  அலைந்து  கெடுகிறது.

            இதனால்,  நெஞ்சைப்  பழிப்பது  போல்,  மித்யாத்துவ  மார்க்கத்தை  பழித்து  கூறப்பட்டது. 

 

மனையது  பெருகி  மங்கலம்  கூட  திருவடிகள்  பதித்த  திருமகளே

முன் பெருந்  துன்பம் மெல்லென  வந்து  பனியென  விலகி  பயனில் நின்றது

மலர்கணையானை கொன்று நீராக்கி  மலைவாழ் குறவர் பொய்யினையும்

மற்ற  சமயப்  பொய்மையை  நீக்கி  மாலவன்  நெறிகள்  மட்டும்  போதுமே 61

 

            வீடு  பெருகி  வளமையாக,  அனைத்து  மங்கலங்களும்  நிறைந்து  நிற்கும்,  பெருமையுடைய  இலக்குமியே,  உன்  திருவடிகள்  வீட்டில்  பதிந்து  நின்றால்,  முன்பு,  பெருந்துன்பம்  மெதுவாக  வந்து,  அது  பனி போல்  நீங்கி  பயனற்று  போகும் என்றும்,  அனைத்து  வினைகளுக்கும்  காரணமான,  மலர்களை  ஆயுதமாகக்  கொண்ட  காமனக்  கொன்று  சாம்பலாக்கி,  மலையில்  வாழும்  குறவர்களின்  பொய்யுரைகளையும்,  மற்ற  அற்ப  சமயத்தினரின்  பொய் உணர்வுகளையும்,  யான்  ஏற்கமாட்டேன்.  மலர்  மேல்  தோன்றிய  என்  கருத்தனே  உன்  நெறிகள்  மட்டுமே  எங்களுக்கு  போதும்.

            இதனால்  மித்தியாத்துவ  மார்க்கம்  பழிக்கப்பட்டது.

 

வெண்ணொளி  முடியரசர்,  முனிவர்  விண்ணாளும்  இந்திரர்  வணங்க

பொன்மதில்கள்  மூன்றும்  சூழ்ந்த  பெருமை  மிகு  சமவசரணத்தை விடேன்

கன்னல்  வில்லை  கையில்  தாங்கிய  காமனின்  தனுசை  ஒடித்தெறிந்து

ஞானமாம்  எழில்  நங்கையை  மணந்து  முக்தி  நாட்டை  ஆளும்  மூலவா  62

 

            பொன்,  முத்து  மணிகளால்  பேரொளி  வீசும்  முடிகளைக்  கொண்ட  மன்னர்களும்,  முனிவர்களும்,  வானிலுள்ள  கற்பகங்களை  ஆளுகின்ற  இந்திரர்களும்,  வணங்க  வீற்றிருக்கும்,  பொன் மதில்கள்  மூன்றும்  சூழ்ந்து,  பெருமையும்,  புனிதமும்  கொண்ட  சமவ சரணத்தை  விட்டு  நீங்கா  மனம்  இன்றி  இருப்பேன்.  கரும்பு  வில்லை  கையில்  கொண்டு  போரிடும்,  மன்மதனின்  கைவில்லை  ஒடித்து,  அறுத்து, ஒழித்து    வென்று,  ஞானமாகிய  அழகிய  பெண்ணை,  மணந்து,  முக்திநாட்டை  ஆளும்  மூலவனே.  நீயே  இறைவன்.

            இதனால்  அருகனின்  பெருமை  கூறப்பட்டது.

 

அன்போடு  நட்பும்  தயவையும்  ஐந்துயிர்க்கும்  தந்து  வாழார்

கண் போன்ற  கருணையை  தவிர்த்து  கல் நெஞ்சில்  வஞ்சனை  கொள்வார்

அலர்  தாமரை  அமர்ந்த  அருகனை  அறநெறியில்  சென்று  வணங்கார்

அற்பமான  இச்செய்கைகளெல்லாம்  அடிமனதில்  ஏற்றல்  நலமோ                     63

 

            அறிவுடையோர்களே,  அன்பையும்,  தோழமையும்,  தயவையும்  ஐந்து  வகைப்பட்ட  உயிர்களுக்கும்  கொடுத்து,  வாழமாட்டீர்கள்.  கண்களைப்  போன்ற கருணையை  விட்டு  விட்டு,  வஞ்சனைகளை  மனதில்  ஏற்றுக்  கொண்டவராவீர்.  மலர்ந்து  மணம்  வீசும்  தாமரைப்  பூவில்  அமர்ந்துள்ள  அருகனை,  அறநெறிகளைப்  பின்  பற்றி வணங்கமாட்டீர்.  இழிவான  இந்த  செயல்களையெல்லாம்  மனதில்  வைத்து  நடத்தல்  எந்த  விதத்தில்  பயனைத்  தரும்.

            இதனால்  நன்நெறிகள்  சேரும்  உபாயம்  சொல்லப்பட்டது.

 

புலவர்கள்  பொழிந்திடும்  மொழியோ  பொதிந்திடும்  மாலையாய்  தோளில்

சுக்கிலத்  தியான  வாளினை  சூடிய  சுவாமியுன்  அடிகளை  மனமது தொழ

இலவம்  பஞ்சு  இதழ்களோடும்  இன்பம்  சொட்டும்  வார்த்தைகளாலும்

வேல்  விழிகள்  வீசிடும்  வலையில்  விழாமல்  யான்  தப்பிப்  பிழைப்பேன்         64

 

            சாதுக்கள்  போற்றிப்  புகழ்ந்து,  மழையைப்  போல்  கொட்டுகின்ற  வார்த்தைகளின்  தொகுப்பாகிய  புகழ்மாலைகள்  உன்  தோளினை  அலங்கரிக்க,  சுக்கிலத்  தியானம்  என்னும்  வாளை  உடலில்  அணிந்துள்ள  உன்னை,  வணங்கி,  வாழ்க  என்று  மனமானது  நினைத்து  மகிழ்வதால்,  இலவம்  பஞ்சி  ஒத்த,  மது  தளும்பும்  இதழ்களையும்,  அதிலிருந்து  சொட்டும்  மனோரஞ்சிதமான  வார்த்தைகளையும்,  வேல்  போல்  உள்ள  விழிகள்  வீசும்  வலையிலும்  விழாமல்  தப்பிப்  பிழைப்பேன்.

            இதனால்  அருகனை  வணங்கினோர்  குற்றங்களைக்  களைந்து  உயர்வர்  என்று  கூறப்பட்டது.

 

பலர்  செல்லும்  வழிகள்  எல்லாம்  பல  புதிய  மார்க்கம்  ஆனாலும்

பொய்  மார்க்கம்  வழியில்  அமைய  புகழ்வோம்  பொய்  தெய்வங்களை

வெம்மையாம்  பெரு  நரகம்  போக்கி  முக்தியாம்  பேரின்பத்தைத்  தரும்

அறநெறி அனைத்தையும் வழங்கி  அருளோடு  அணைப்பாய்  என்னை  65

 

            உலக  மக்கள்  பலர்,  அவர்கள்  செல்லும்  சமய  மார்க்கங்கள்  பலவானாலும்,  அந்த  பொய்யான  தத்துவங்களுடைய  பொய்  நெறிகளை  உணர்ந்து  சென்றால்,  அந்த  பொய்யான  தெய்வங்களை  புகழ்ந்து  போற்றவேண்டும்.  தீவினைகள்  நம்  உயிருடன்  கலந்து,  கொடும்  வெப்பமான  நகரத்தை  நீக்கி,  முக்தியான  பேரின்பத்தை  தரும்,  உன்  அறநெறிகள்  அனைத்தையும்  வழங்கி,  என்னை  அன்போடு  அணைத்து  அருள்வாயாக.

            இதனால்  மித்யா  மார்க்கங்களின்  இழிவும்,  தனது  குறையும்  கூறப்பட்டது.

 

கரும்பு  வில்  பதித்த  மலர்நாண்  கனன்று  எழும்  ஓசைகளுடன்

மலர்  மண மேனியின்  மங்கையர்  மலையொத்த  தனங்களின்  நோயால்

கலங்கிடும்  கடையவன்  என்னை  காத்து  ரட்சித்து  அணைக்க

குளிர்கொள்  முக்குடையையுடைய  கோமானே  பூந்தேரில்  வாராய்                       66

 

            மன்மதனின்  கரும்பு  வில்லில்  உள்ள  நாண்  மூலம்,  மலர்க் கணைகளைப்  பொருத்தி,  மிகப்  பெரும்  ஓசைகளுடன்  வீசியதால்,  மலர்களின்  நறுமணம்  கொண்ட  உடலின்  வாசத்துடன்,  மங்கையர்களின்  பெரும்  தனங்கள்  தரும்  நோயால்,  பிணையப்பட்டு  கலங்கி  இருக்கும்  கடையோனான  என்னை,  அத்தீவினைகளில்  இருந்து  காத்து,  ரட்சித்து,  உன்னுடன்  அணைத்துக்  கொள்ள,  குளிர்ச்சிப்  பொருந்திய  மூன்று  குடைகளையுடைய  கோமானே,  பரிகள்  பூட்டி  இழுத்து  வரும்,  தாமரைப்  பூ  தேரில்  வந்து  என்னை  ஆட்கொள்வாய்.

            இதனால்  தனது  குறை  கூறப்பட்டது.

 

முன்னே  நான்  பிறந்த  பிறப்பில்  முழுவினை  நுகர்ந்து  இப்போது

முழு  ஞானத்தில்  பிறந்தேனென  பித்தன்  போல்  பிதற்றும்  புத்தன்

பொங்கிடும்  நீரின்  அலைகளென  பிறந்திடும்  தேகம்  தோரும்

உயிர்  இருக்கும்  என்றுரைத்த  உன்  அடிகளே  சரணம்  அருகா                      67

 

            முன்பு  நான்  பிறந்த  பிறப்பினை  எண்ணும்  போது,  எல்லா  வினைகளையும்  செய்து  அனுபவித்து,  இப்பொழுது,  நான்  முழு  ஞானி  என்னும்  பெயரை  அடைந்தேன்  என்று  சொல்லி,  பெரிதாக  பிதற்றுகின்ற  புத்தனைப்  போல்  இல்லாமல்,  நீரில் பொங்கி  எழுகின்ற  அலைகளைப்  போல்  எடுக்கின்ற  பிறவிகளின்  உடல்  தோரும்  உயிர்  இருக்கும்  என்று  சொல்லும்,  ஒப்பற்ற  புத்தியுடையவனாகிய  அருக பரமேட்டியே,  உன்  திருவடிகளை  சரணடைகிறேன்.

            இதனால்  புத்த  தெய்வம்  பழிக்கப்பட்டது.

 

உயிர் கொலை  செய்வதை  விழையார்  உறும்பழி  பொய்யினை  சொல்லார்

கடும்வினை  களவினைச்  செய்யார்  கனவிலும்  பிறன்மனை  விரும்பார்

மிகுபொருள்  ஏற்பதை  வெறுப்பார்  மது, ஊன், தேன்  உணவு  தவிர்ப்பார்

இறைவனின் அறநெறிகள்  பற்றிய  இல்லற  தருமத்தின்  நல்லோர்                  68

 

            மணம்  மிக்க  தாமரை  மலர் மேல்  வரும்  அருகனின்  அறநெறிகளை  கைக்கொண்டு  வாழும்  இல்லற  தருமத்தை  ஏற்ற  நல்லவர்கள்,  உயிர்களை  வதைத்து  கொலை  செய்வதை  விரும்பமாட்டார்கள்.  பெரும்  பழியான  தீவினைகளைத்  தரும்  பொய்யினை  உரைக்கமாட்டார்கள்.  கொடிய  வினைகளைச்  சேர்க்கும்   திருட்டை  செய்யமாட்டார்கள்.  கனவில்  கூட  பிறர்  மனைவிகளை  சேர  நினைக்கமாட்டார்கள்.  தேவைக்கு  அதிகமான  பொருள்களை  சேர்க்கமாட்டார்கள்.  மது,  தேன்,  ஊன்  முதலிய  உணவுகளை  உண்ணமாட்டார்கள்.

            இதனால்  சமணத்தின்  பெருமையையும்,  மித்யா  மார்கத்தின்  செயலையும்  பழித்து  கூறப்பட்டது.

 

தூற்றுவாரைக்  கண்டு  வெகுளார்  துன்பத்தில்  அமிழ்ந்து  உழலார்

அன்னியமானவைகளை  இகழார்  அன்னிய  சமயத்தை  விரும்பார்

புகழ்வார்  சொல்  கேட்டு  மகிழார்  இருவகைப்  பற்றினை  துறந்து

இணையற்ற  சித்த  பதவியடைய  எண்ணிடுவார்  நன்னெறி  துறவியர்        69

 

            அகமிந்திரலோகத்திற்கு  மேல்  இருக்கும்,  நிரந்தர  இன்பம்  பயக்கும்,  சித்த  சேத்திரத்தில்  இருக்கும்  ஜினவரனை  அடைய,  புறப்பற்று  பத்தையும்,  அகப்பறு  பதினான்கையும்  நீக்கி,  நல்ல  நெறிகளைப்  பின்  பற்றி  ஒழுகும்  துறவியர்கள்,  தங்களை  இகழ்பவர்கள்  மேல்  கோபம்  கொள்ளமாட்டார்கள்.  துன்பங்களில்  அமிழ்ந்து,  சிக்கி  தவிக்கமாட்டார்கள்.  தனக்கு  அன்னியமானவைகளை  தூற்றி  பேசமாட்டார்கள்.  அன்னியமான  பிற  சமயங்களை  விரும்பமாட்டார்கள்.  தங்களைப்  பற்றி  கூறும்  புகழுரைகளில்  மயக்கம்  அடையமாட்டார்கள்.

            இதனால்  சமண  முனிவர்களின்  பெருமையையும்,  மித்தியா  மார்க்க  முனிவர்களின்  செய்கையும்  பழிக்கப்பட்டது.

 

இதழாயிரம்  அழகைக்  கொண்ட  இளம்  பரிதி  தாமரை  மலர்  மேல்

வண்டுகள்  இசை  பாடி  திரிய  வல்வினைகள்  அறுத்து  அழிக்கும்

சக்கரம்  விண்ணில்  முன்னே  செல்ல  சகல  உலகமும்  தொழுது  நிற்க

முக்குடையின்  நிழலில்  அமர்ந்த  முழு  ஞானம்  கொண்ட  தலைவனே  70

 

            ஆயிரம்  மெல்லிய  இதழ்களின்  அழகுடைய,  இளங்காலைச்  சூரியனைப்  போன்ற,  சிவந்த  தாமரை  மலர்  மேல்,  கால்கள்  பதியாமல்,  மதுவுண்ட  வண்டுகள்  மயக்கத்தில்  இசைபாடி  திரிய,  கொடிய  வினைகளை  அறுத்து  ஒழிக்கும்,  உன்னுடைய  தருமச்  சக்கரம்  முன்னே  செல்ல,  எல்லா  உலகத்து  ஜீவராசிகளும்  வணங்கி  நிற்க,  முக்குடையின்  குளிர்ந்த  நிழலில்  அமர்ந்துள்ள  அனந்த  ஞானம்  கொண்ட  தலைவன்  நீயே.

 

என் மனம் உனை வணங்காவிடினும் என் நெஞ்சம் உனை கெஞ்சாதெனினும்

அகிம்சையையே  ஆணையாக்கி    அகிலத்தை ஆளும்  நாயகனே

ஐம்பொறிகள்  கலங்கி  வருந்த  எமன்  வந்து  எதிரில்  நிற்க

நான்  இரக்கும்  உன்னடிகளை  எனக்கு  தந்து  அருள்வாய்  அருகா

 

  என்னுடைய  மனம்  உன்னை  வணங்காமல்  இருந்தாலும்,  நான்  உன்னை  இறஞ்சி  கேட்பது  தகாது  ஆயினும்,  கொல்லாமை  நீங்கி,  அகிம்சை  என்னும்  கட்டளையை  தந்து,  அகில  உலகத்தையும்  ரட்சிப்பவனே,  ஐந்து  பொறிகளும்  கலங்கி,  மயங்கி  வாடும்  போது,   எமன்  எதிரில்  வந்து  நிற்கையில்,  நான்  உன்னிடம்  மனம்  உருகி  கேட்க்கும்  உன்  திருவடிகளை  மட்டும்  எனக்கு  தந்து  அருள்வாயாக.

இதனால்  தன்னுடைய  பேதமையும்,  அருகன்  அருளும்  கூறப்பட்டது.

 

மும்மதில்  சூழ்  சமவ சரணத்தில்  முக்கோடி  தேவர்கள்  பூமழை  தூவ

இந்திரர்கள்  வீசும்  சாமரைகள்  இடையில்  புகும்  தென்றலை  வீசிட

மாலவனின்  அழகிய  சபையில்  மலர் சிந்தும்  தேன்  மணம்  சுமக்கும்

வரி வண்டுகட்கும்  எமக்கும்  வரும்  வினைக்கு  மருந்தாவாய்  அருகா      71

 

            மூன்று  மதில்கள்  சூழ்ந்து  வினைகளைக்  கெடுக்கும்  சமவ சரணத்தில்,  மூன்றுகோடி  தேவர்கள்  மலர்களை  மழைபோல்  தூவ,    இந்திரர்கள்  கை  கொண்டு  வீசும்  வெண்சாமரையில்  இருந்து  வரும்  தென்றல்  போன்ற  மென்  காற்று  இடையில்  புகுந்து  செல்ல,  மலர்களில்  இருந்து  சொட்டும்  தேனின்  மணத்தை  சுவைத்து,  சுமந்து,  அருக பெருமானின்  அழகிய  சபையில்  திரியும்  வரி  வண்டுகளுக்கும்,  எங்களுக்கும்,  எதிர்வருகின்ற  வினைகளுக்கெல்லாம்  மருந்தாக  நீ  அமைய  வேண்டும்.

            இதனால்  அருகனுடைய  சிறப்பு  கூறப்பட்டது.

 

களித்தோடும்  மான்கள்  கொண்ட  கருங்குவளை  மலர்  கண்களை

காமனின்  கரும்பு  வில்லது  தரும்  காமத்தை  தூண்டும்  கணைகளை

மயில்  அனைய  மாந்தர்கள்  வீசிட  மயக்கத்தில்  அவரைச்  சேரோம்

மலர்ந்த  செந்தாமரை  மேவும்  மாலவனே  உன்  அடியார்  நாங்கள்                   72

 

            சந்தோஷத்தில்  துள்ளி  ஓடும்  மான்கள்  கொண்ட,  கருங்குவளை  மலர்கள்  போன்ற  கண்களாலும்,  மன்மதனின்  கரும்பு  வில்லில்  இருந்து  வீசப்படும்,  காமத்தைத்  தூண்டும்  கணைகளாலும்,  மயிலின்  சாயை  உடைய  மங்கையர்கள்  வீசும்  கடைக்கண்  பார்வையாகிய  மயக்கத்தில்  வீழ்ந்து  அவர்களைச்  சேரமாட்டோம்.  ஏனென்றால்,  அன்றலர்ந்த  செந்தாமரையின்  மேல்  நடக்கும்  அருக  பரமேட்டியே,  உன்னை  பின்பற்றி  நடக்கும்  அடியவர்கள்  நாங்கள்.

            இதனால்  அடியவர்கள்  சிறப்பு  கூறப்பட்டது.               

 

வில்  கொண்டு  எம்  வீரம்  கண்ட  வெண்மகுடம்  பூண்ட  வேந்தரும்

அருக நெறி  கொண்ட  எங்கள்  ஆரணங்கை  எண்ணார்  மனதில்

பரம்பரை  சொல்  சாதி  குலம்  என்று பகர்ந்திடும்  புத்தனின்  சொல்லா

வேதியர்கள்  நீதி  அழிக்கும்  சொல்  வேதத்தில்  உண்டென்பதா  கூறும்    73

 

            தோழனே,  எங்களுடைய  வில்  ஆற்றலையும்,  வல்லமையையும்  முன்பே  கண்ட  வெண் முடிகளைக்  கொண்ட  அரசர்களும்,  தங்களின்  பலத்தை  கொண்டு,  அருகனின்  அறநெறியான  ஒழுக்கத்தை  உடைய  எங்கள்  பெண்களை  நினைக்கமாட்டார்கள்.  பிறப்பினால்  சாதி,  குலம்  அமையும்  என  வேதத்தில்  உள்ளது  என்று  கூறும்  பிராமணர்கள்  கூறுவதா,  அல்லது  சாதி,  குலம்  என்பது  பரம்பரையாக  இருந்து  வருவம்  வெற்றுச்  சொல்  என்று  புத்தன்  கூறுவதா,  எது  என்று  எங்களுக்கு  சொல்வாயாக.

            இதனால்  மித்தியா  திருஷ்டிகள்  பழிக்கப்பட்டன.

 

வெண்ணிற  சங்குகள்  ஈன்றிட்ட  வெண்மணி  முத்துக்கள்  கோர்த்த

மென் மலர் பஞ்சனை  கொண்ட  மயிலையில்  துயிலும்  நேமிநாதரே

வினை  செய்தான்  பயன் நுகரான் வாரிசு நுகர்வானெனும்  புத்தனின்

வஞ்சகநெறி  தரும்  தருமத்தை  வாழ்க்கையில்  என்றும்  ஏற்கேன்                   74

 

            மிகுந்த  அலையோசையையுடை  சமுத்திரத்தில்  உள்ள,  வெண்சங்குகள்  தரும்  வெள்ளிய  முத்துக்கள்  கோர்த்த  மாலைகள்  தொங்கும்,  மென்மையான  மலர்களால்  அமைந்த  பூமெத்தையில்  துயிலும்,  மயிலாப்பூரில்  ஆட்சி  செய்யும்  நேமிநாதரே,  வினைகள்  செய்தவன்  பயனை  அனுபவிக்காமல்,  அவன்  காலத்திற்கு  பின்,  அவனுடைய  வாரிசுகள்  அவ்வினைகளின்  பயனை  நுகர்வார்கள்  என்று  கூறும்  புத்தனின்,  கபட  நெறிகள்  கொண்ட  தருமத்தை,  என்றும்  என்  வாழ்வில்  பின்பற்றி  நடக்கமாட்டேன்.

            இதனால்  புத்த மதம்  பழிக்கப்பட்டது.

 

மயிலையில்  வாழ்  பெருந்தலைவா  மலர் சிங்காசனம்  அமர்ந்த  தேவா

தீபங்குடியை  தேர்ந்து  நயந்தவா  தென்கயிலையாம்  திருமலை  நாதா

தென்தமிழ்  மலையுறையும்  திருவே  செம்பொன் மதில்  சூழ்  சமவ சரணா

ஈராறு கணங்கள் ஏற்ற இறைவா எளியோன் மனவினை நீங்க அமர்வாய்       75

           

மைலாபூர்  என்னும்  திரு  மயிலை  நகரில்  வாழும்  தேவர்களுக்கு எல்லாம்  தலைவனே,  மலர்ந்து  மணம்  வீசும்  செந்தாமரை  பூவை  சிம்மாசனமாகக்  கொண்டு  அமர்ந்தவனே,  தீபங்குடி  என்னும்  திருநகரை  விரும்பி  ஏற்ற  திருவுருவே,  தென்கயிலாயம்  என்று  போற்றப்படும்  திருமலையில்  உறைபவனே,  தெந்தமிழ்  மலையான  பொதிகைமலைக்கு  சொந்தமான  நாயகனே,  செம்பொன்னாலான  மதில்கள்  சூழ்ந்த  சமவசரணத்தானே,  பன்னிரண்டு  கணங்களின்  இறைவனான  நேமிநாதனே,  எளியவனான  என்  மனதில்  சூழ்ந்துள்ள  வினைகள்  எல்லாம்  நீங்கிட,  என்  மனதில்  வந்து  அமர்வாய்.

            இதனால்  அருகனின்  கருணை  கூறப்பட்டது.

 

அமரர்கள்  வாழும்  நாட்டையாளும்  இந்திரர்கள்  தம்  தேவியருடன்

அழகிய  பொன் மதில்கள்  சூழ்ந்து  அமைந்த  சமவ சரணத்தில்  உதவ

உறவினர்  அன்னியர்  என்று  உயிர்களை  அறியாமல்  ரட்சிக்கும்

பேதமைகள்  இல்லா உன்  குணத்தை  போற்றுவார்  உம்  அடியவர்கள்           76

 

            தேவர்கள்  வாழுகின்ற  தேவலோகத்தை  ஆளுகின்ற  இந்திரர்கள்  தம்  தேவியருடன்,  உம்  ஆணைப்படி  வந்து,  அழகான  பொன் மதில்களால்  சுழப்பட்ட  சமவ சரணத்தில்  பணிவிடைகள்  செய்ய,  சுற்றத்தார்கள்  என்றும்,  அன்னியர்கள்  என்றும்,  எண்ணிப்  பார்க்காமல்,  எல்லாவுயிர்களையும்,  வேறுபாடுகளின்றி,  ஒரே  மாதிரியாக  ரட்சித்து  அருளும்  உம்முடைய  கருணையான  குணத்தை,  உம்  அடியவர்கள்  எல்லாம்  போற்றுவார்கள்.

            இதனால்  அருகனின்  பெருமை  கூறப்பட்டது.

 

மறுமைக்கு  உறுதியான  ஆகமத்தின்  மார்க்கத்தை  ஆய்ந்து  பார்த்தால்

ஆன்மா  ஒன்றே  அழிவற்றதாகும்  அழகு,  தேகம்,  அதனுடன்  செல்வமும்

இளமை, வீரமும், இணைந்த சுற்றமும்  முகில்  தொட்ட  அம்பென நீங்கிட

பழவினைகள்  போக்கும்  பரமனின்  பாதத்தில்  பயந்து  வாழுங்கள்              77

 

            இனிய  சொந்தங்களே,  மறுமைக்கு  நன்மை  பயக்கும்  உறுதியான,  பரம  ஆகமங்கள்  கூறும்,  அறநெறிகளை  ஆராய்ந்து  பார்த்தால்,  உயிர்  ஒன்று  மட்டுமே  அழிவில்லாத  புனிதமானது  என்பதை  அறிந்து  கொள்ளுங்கள்.  அழகும்,  உடம்பும்,  நாம்  சேர்க்கும்  செல்வமும்,  நமது  இளமையும்,  வீரமும்,  நமது  சொந்தங்கள்  என்றெல்லாம்  எண்ணிக் கொண்டு  இருப்பவர்கள்,  அனைத்தும்  வானத்தில்  மேகங்களுக்கு  இடையில்  எய்யப்பட்ட  அம்புபோல்  என்று  எண்ணி  நீக்குங்கள்.  பழைமையான  நூற்று  நாற்பத்தியெட்டு  கருமமாகிய  பகைவர்களை  அழிப்பது  அருக பரமேட்டியின்  பாதங்களே,  என்று  எண்ணி,  அதை  மட்டும்  பற்றிக்  கொண்டு  பயந்து  வாழுங்கள். 

 

பிறப்பு,  இறப்பு,  முதுமை,  பிணியென  பிணைந்திட்ட  துன்பங்கள்  சேர

பெருஞ்சிறப்பு  உயிரும்  உடலும்  பெருவாளும்  உரையும்  போலாகும்

ஒன்பது  வாயில்  கொண்ட உடல்மேல்  ஊன்றிடும்  பற்றுகள்  நீக்கி

ஈராறு  விரதங்கள்  ஏற்றிட  என்றென்றும்  வினை  நீங்கும்  உயிரில்       

 

            பிறப்பு,  இறப்பு,  முதுமை,  பிணி  என்று  சொல்லப்படும்  துன்பங்கள்  எல்லாம்  பின்னிப்  பிணைந்திட்ட,  சிறப்பான  அறிவுடைய  உயிரும்,  அறிவு  இல்லாத  இந்த  உடலும்,  நீண்ட  வாளும்,  அது  இருக்கும்  கூடும் போன்றது,  என்பதை  முதலில்  தெரிந்து  கொள்ளுங்கள்.  புழுக்கள்  வாழும்  ஒன்பது  வாயில்கள்  கொண்ட,  மாமிச  பிண்டமான,  இந்த  உடலின்  மேல்  உள்ள,  ஆசை,  சுகம்  முதலிய  பற்றுகள்  அனைத்தையும்  அறவே  போக்கி,  நான்கு  கஷாயங்களை  நீக்கி,  பன்னிரண்டு  விரதங்களை  மேற்கொண்டால்,  பொய்யுணர்வு  என்ற  மித்தியாத்துவமும்,,  அனைத்து  வினைகளும்  உயிரை  விட்டு  நீங்கும்  எண்ணி  வாழுங்கள்.

 

வீருசால்  குப்தி,  சமிதி,  தருமம்  வினையில்லா  சிந்தை  விரதங்களோடு

தியானமும்,  ஞானமும்  சேர்ந்திட  தீவினைகள்  நீங்கும்  என  அறியும்

ஆறு சிந்தனை, அகப், புற  தவத்தால்  ஞானமும்  தியானமும்  பெருகிட

இருள்சேர்  இருவினைகள்  அழியும்  இன்பமாம்  முக்தியும்  கிட்டும்                     

 

            பெருமை மிகுந்த  மனம்,  வாக்கு,  காய  அடக்கமும்,  ஐந்து  வகையான  நடத்தைகளும் (சமிதி),  பத்து  வகையான  கருமங்களும்,  வினைகள்  இல்லாத  நற்சிந்தனைகளும்,  அணுவிரதம்,  குணவிரதம்,  சிட்சாவிரதம்  ஆகிய  பன்னிரண்டு  விரதங்களோடும்,  நல் ஞானம்,  தியானமும்  சேர்ந்தால்  அனைத்து  தீவினைகளும்  நீங்கும்  என்று  அறிந்து  கொள்ளுங்கள்.  துவாதசாநுப்பிரேட்சை  என்னும்  பன்னிரண்டு  சிந்தனைகளோடு,  அகத்தவம்,  புறத்தவம்  ஆக  மூன்றாலும்  நல்ல  ஞானமும்,  உயர்ந்த  தியானமும்  பெருகிடும்.  இதனால்,  உயிருடன்  சேரும்,  இருள்  போன்ற  காதி,  அகாதி  வினைகள்  அழிய,  பேரின்பமாம்  முக்தி  நம்மைத்தேடி  வரும்  என்று  தெரிந்து கொள்ளுங்கள்.   

 

தொல்லிய  இவ்வுலகம்  என்றும்  தோன்றலும்  வீடடையும்  இடமாம்

நற்காட்சி, நல் ஞான,  ஒழுக்கம்  நம்  சமணப்  பண்பென  அறியும்

உயிர்களிடம்  பொய்,  பகை,  நீக்கி  உண்மையான  அருளுண்டாகில்

முக்தியடையும்  மார்க்கம்  என  மூலவன்  அருகன்  மொழிந்தவையாகும்

 

            மிகப்  பழைமையான  இவ்வுலகம்,  பலவான  சீவராசிகளும்,  பிறந்து,  இறந்து  முக்தியடையும்  இடமாகும்.  சாதன  வஸ்துக்களாகிய  மனித  உடல்,  வினைகளை  வேரறுக்கும்  இடம்.  முக்தி  பெறக்  கூடிய  கால  நிலை,  நல்ல  எண்ணம்,  பிறவியின்  முடிவு  என்ற  ஐந்தையும்,  பிரிவில்லாமல்  ஒரு  தன்மையாய்  அடைந்து,  பின்னும்,  நற்காட்சி,  நல் ஞானம்,  நல்லொழுக்கம்  நமது  சமணத்தின்  பெருமை  என்பதை  உணர்ந்து  அறிய  வேண்டும்.  அனைத்து  உயிர்களிடத்தும்,  பொய்மை,  பகைமை  நீங்கி,  உண்மையான  மிகப்  பெரும்  அருள்  கொண்டோமானால்,  அதுவே  முக்தியடையும்  மார்க்கம்  என்று  அருக பரமேட்டியருளிய  வாய்  மொழிகளாகும்.

            இதனால்  உயிர்  நித்தியமாதலும்,  அந்த  உயிர்  ஆசையினால்,  வினைகளால்  சூழப்படுதலும்,  அவ்வினையால்  பிறப்புண்டாதலும்,  அவற்றால்  துன்பமடைதலும்,  அவ்வினையை  அழித்தால்  முக்தி  கிட்டும்  என்று  கூறப்பட்டது.

 

திவ்யத்தொனி  அருளிய  தேவன்  திருநாமம்  ஆயிரத்தெட்டோன்

தனச் சுமை  தாங்கா  சிற்றிடையில்  தவழும்  மேகலையுடையோருடன்

சயனிக்கும்  தேவரும்  உலகோரும்  தாமரைப்பூ  மேல் மேவும்  நாதனின்

திருவடிகளை  வணங்கித் தொழுதிட  தீவினைகள்  அழிப்பான்  அருகன்         78

 

            பெருங்கடலை  போன்ற  தன்மையுடைய  சமவ சரணத்தில்,  தனது  திவ்வியத் தொனியால்  அறம்  அருளியவனும்,  ஆயிரத்து  எட்டு  திருப்  பெயர்களை  ஓதி  போற்றப்படுபவனும்,  தனங்களின்  சுமை  தாங்காமல்,  ஒடிந்து  விடுமோ  என்று  எண்ணத் தோன்றும்,  சிற்றிடையில்  மேகலைத் தவழும்  அழகிய  மங்கையர்களுடன்  உறங்கும்  தேவர்களும்,  மனிதர்களும்,  தாமரை  மலர்  மேல்  நடக்கும்  நாதனின்  திருவடிகளை  வணங்க,  அனைத்து  தீவினைகளையும்,  அருகன்  அழித்து  ஆட்கொள்வான்  என்று  அறியுங்கள்.

            இதனால்  அருகன்  பெருமை  கூறப்பட்டது.

 

அறுவகைப்  பொருட்களையும்  அடுத்தவர்  ஓதாது  அறிந்திட்ட

தானறிந்த  பொருளனைத்தையும்  தலைசிறந்த  ஆகமங்களாக்கி

திவ்வியத்தொனியால்  உரைக்க  சிந்தையில்  குற்றம்  கொண்டோர்

நாங்கள்  யாத்த  வேதங்களென்று  நவில்கின்ற  பேதமை  யாதோ                     79

 

            உலகில்  உள்ள  ஆறு  வகைப்  பொருள்களையும்,  மற்றவர்களால்  சொல்லப்படாமல்,  தானே  அறிந்துணர்ந்தவனும்,  தான்  அறிந்த  எல்லாவற்றையும்,  நாற்பத்திரெண்டு  அங்க  ஆகமங்களாக்கி,  தன்னுடைய  திவ்விய  திருமொழியால்  உரைத்தவனுமாகிய  அருகா,  மனதில்  குற்றமும்,  கள்ளமும்  உடையவர்கள்,  தாங்களே  இந்த  வேதங்களைச்  செய்தவர்கள்  என்று  கூறிக் கொள்வது  அவர்களின்  பேதமையைக்  காட்டுகிறது.

            இதனால்  மித்தியாத்துவ  சாத்திரம்  பழிக்கப்பட்டது.

 

மன்மதனை  வென்றிட்ட  மாதவா  மருள்  வினைகள்  அழித்த  மூலவா

நானிலமே  வணங்கும்  நான்முகா  நல்ல உன்  மார்க்கம்  அறியாதோர்

உடலெங்கும்  கரங்கள்  கொண்டு  உருட்டும்  விழிகள்  நெருப்பைக்  கக்க

வீணர் சிரம் கைகளில் ஏந்தியோர் தேவர்கள் என்பார் தெளியா மனதோர்            80

 

            நங்கையர்கள்  மேல்  ஆசையைத்  தூண்டும்  காமனை  வென்று  எரித்த  பிரம்மனே,  கற்பத்தில்  உதிக்கும்  கருமங்களை  எல்லாம்  அழித்த  முதல்வனே,  உலகம்  முழுவதும்  பணிந்து  வணங்கும்  நான்முகனே,  உன்னுடைய  மெய்யுணர்வு  மார்க்கங்களை  அறியாதவர்கள்,  உடல்  முழுவதும்  கரங்களுடனும்,  அவைகளில்  போர்  ஆயுதங்களையும்,  மனிதர்களின்  தலைகளையும்  கொண்டு,  கண்களில்  நெருப்பைக்  கக்கும்  பார்வையுடன்  இருப்பவர்களை,  வீர  தெய்வங்கள்  என்று  ஏற்றுக் கொண்டவர்கள்  தெளிவில்லாத  மனதை  உடையவர்கள்  ஆவர்.

            இதனால்  மித்யா  தெய்வம்  பழிக்கப்பட்டது.

 

பாரேழையும்  அளந்து  உணர்ந்த  பரம  ஞானத்தலைவன்  என்பேனோ

பழைய  வினைக்கடலைத்  தாண்டிய  பற்றறுத்த  முக்தியான்  என்பேனோ

ஐங்கணையான்  வில்லறுத்த  அரிமா  நிகர்  அறிவன்  என்பேனோ

ஏழு  பிறவியிலும்  நீயே  கருத்தன்  எப்போதும்  உன்  அடிமை  என்பேனோ 81

 

            பூமி  ஏழையும்  பரமாணுவினால்  அளந்து,  உணர்ந்து,  தெளிந்த,  உயர்ந்த  ஞானத் தலைவன்  என்று  கூறுவேனோ,  காரிருள் போன்ற  பழைமையான  வினைகளாகிய  கடலைத்  தாண்டிய,  அனைத்துப்  பற்றுகளையும்  அறுத்தொழித்த  முக்தியான்  என்போனோ,  ஐந்து  மலர் கணைகளைக்  கொண்டு,  மக்களை  ஆட்டிப்படைக்கும்,  மன்மதனின்  கைவில்லை  ஒடித்து,  வென்ற  சிங்கத்திற்கு  நிகரானவன்  என்று  சொல்வேனோ,  நான்  ஏழு  பிறவிகள்  எடுத்தாலும்  நீயே  என்  தலைவன்,  நான்  எப்போதும்  உன்  அடிமை  என்று  மொழிவேனோ.

            இதனால்  அனைத்து  சீவராசிகளுக்கும்  ஆதாரமானவன்  என்று  கூறப்பட்டது.

 

ஏழுவகை  கொண்ட  நியாய  மொழியை எடுத்துரைத்த  நல் உபதேசியே

ஏழுவகை  உலகும் வணங்கும்  எழில் ஞானியே  உனை  வணங்காமல்

ஏழிரு  மார்க்கனை ஸ்தானத்தில்  இல்லறம்  துறவறம்  இரு  வழியில்

ஐவிடயம் நான்கு பிறப்பறுத்து ஏழுபிறவி இருவினையொருவினையானேன்      82

 

            ஏழுவகையான  நியாய  மொழிகளை  அனைவருக்கும்  உபதேசித்தவனே,  ஏழு  உலகமும்  வணங்கும்  அழகிய  ஞானத் தலைவனே,  உன்னை  வணங்காமலேதான்,  அனந்த  காலமாக,  பதினான்கு  மார்க்கனை  ஸ்தானத்திலும்,  இல்லற,  துறவற  மார்க்கத்திலும்,  ஐந்து  விடயங்களிலும்,  நான்கு  பிறப்பிலும்  உண்டாகின்ற,  ஏழ பிறப்பிலும்,  இருவினையினாலே,  ஒருவினையையுடை  யான்  நின்ற விதம்  யாதோ..

மார்க்கனை : ஆய்ந்து  நோக்குதல். 14 மாக்கனை :  காதி,  இந்திரியம்,  காயம்,  யோகம்,  உணர்வு,  கஷாயம்,  ஞானம்,  சம்யமம்,  தரிசனம்,  லேஸ்மா,  பவ்ய,  சம்யத்வ,  சஞ்னி,  ஆகாரமார்கணா.

ஐந்து  விடயம் :  ஓசை,  தொடுவுணர்வு,  உருவம்,  சுவை  நாற்றம்.

ஏழு பிறப்பு :  தேவர்,  மனிதர்,  விலங்கு,  பறவை,  ஊர்வன,  நீர் வாழ்வன,  தாவரம்.

 

பொருள்  பின்னால்  திரியும்  எம்மை  பயமற்க  என  பகராவிடினும்

பெருமையும்  கிருபையும்  மங்காதென  தேவர்களால்  போற்றிடுபவனே

ஐவகை  உயிர்களையும்  அருளும்  அறமான  உன்  தருமச்  சக்கரம்

காமனின்  வில்லை  அழித்து  என்  கடுந்தீவினைகள்  போக்காததேன்      83

 

            நிலையற்ற  செல்வத்தின்  பின்னால்  ஓடித்திரியும்  எங்களை,  பயப்படாதே  என்று  கூறாவிட்டாலும்,  உன்னுடைய  பெருமையும்,  கருணையும்  எப்போதும்  மறையாது,  என்று  தேவர்களால்  போற்றப்படும்  அருக பரமேட்டியே,  ஐந்து  வகைப்பட்ட  உயிர்களையும்  ரட்சித்து,  அருளும்  உன்னுடைய  தருமச் சக்கரமானது,  மன்மதனின்  கரும்பு  வில்லை  ஒடித்து  அழித்தது  போல்,  எங்களின்  கடுமையான  தீவினைகளையும்  அழிக்காதது  ஏனோ.

            இதனால்  அருகனது  பெருமையும்  தனது  எளிமையும்  கூறப்பட்டன.

 

விலங்குகளாகி  உலகில்  பிறந்து  வீழ்ந்தோரை  தேவர்களென்றும்

தேவர்கள்  கிருபையால்  பிறந்து  சீவன்களை  காப்பீரென்பவரே

மூவுலகமும்  காவல்  செய்தும்  மிருகங்கள்  ஐம்புலங்கள்  காத்தும்

மனம்  பொருந்த  அறம்  உரைக்கும்  மாலவனே  அருக பரமேட்டியாம்       84

 

            மிருகங்களாகி  உலகில்  பிறந்து,  சம்சாரக்கடலில்  தடுமாறி  விழுந்தவர்களை  கடவுள்கள்  என்றும்,  இந்த  தேவர்கள்  மயக்கம்  இல்லாத  கருணையால்  பிறந்து,  சீவராசிகளை  ரட்சிப்பவர்கள்  என்றும்   சொல்வோரே!  என்றும்  பிறக்காமல்,  பூமியையும்,  வலிமை  பொருந்திய  பாதாள  உலகத்தையும்,  நீண்ட  சொர்கலோகத்தையும்,  மிருகங்களின்  ஐம்புலங்களையும்  காவல்  செய்யும்  தன்மையுடையவரும்,  மனம்  பொருந்தி  ஏற்கக்கூடிய  அறநெறிகளை  உரைக்கும்  தலைவன்  அருக பரமேட்டி  ஒருவரேயாவார்.

            இதனால்  அருக பரமேட்டியின்  பெருமை  கூறப்பட்டது.

 

போற்றிடும்  நல்  அறிவுடையோரே  பொய்  சாத்திரம்  போற்றுவதேனோ

எண் குணங்களில்  முதல்  நான்கு  அனந்த ஞானம்,  அனந்த தரிசனம்

அனந்த வீரியம்,  அனந்த  சுகம்  அனைத்தும்  உடைய  அருகதேவன்

அரங்கேற்றிய பரமாகமத்தை  அளந்திட  மற்றொன்றால்  முடியுமோ   85

 

            நல்லறிவு  உடையவர்களே,  மெய்யுணர்வு  இல்லாத  பொய்  சாத்திரங்களை  போற்றும்  செயல்கள்  ஏனோ,  எண் குணங்களில்  முதல்  நான்கு  குணங்களான  அனந்த ஞானம்,  அனந்த  தரிசனம்,  அனந்த  வீரியம்,  அனந்த சுகம்  அனைத்தும்  உடைய  அருக பெருமான்,  அருளிய  பரம  ஆகமத்தை,  அளந்து  ஆராய,  வேறொரு  தருமத்தின்  தத்துவத்தால்  இயலுமா.

            இதனால்  அருக பரமேட்டியின்  தருமமே,  மெய்யான  சாத்திரம்  என்று  கூறப்பட்டது. 

 

அசோகமர  நிழலில்  அமர்ந்த  அருகனின்  பரமாகங்களுக்கு

திறம்  மாறு  கொண்ட  அற்பநூலில்  திண்ணிய  மனஉறுதி கொண்டோரே

உயிர்வதை  அறமாகுமென்றால்  உயிர்  காப்பது  பாவம்  ஆகுமா

பாவத்திற்கு  சொர்க்கம்  என்றால்  தருமத்திற்கு  நரகம்  தகுமா                      86

 

            அசோகமர  நிழலில்  அமர்ந்துள்ள  அருக பெருமான்  அருளிய  பரம  ஆகமங்களுக்கு,  மாறுபாடான  கருத்துக்களையும்,  நெறிகளையும்  கொண்ட,  அற்பமான  பொய்யறங்களைக்  கொண்ட  நூலில்,  திடமான,  உறுதிகொண்ட  மனம்  உடையவர்களே,  உயிர்களை  வதைத்து  கொல்லுவது  தருமம்  என்றால்,  உயிர்களை  பாதுகாப்பது  பாவம்  ஆகுமா?.  உயிர்களைக்  கொல்லும்  பாவங்களுக்கு  சொர்க்கம்  கிடைக்கும்  என்றால்,  தருமநெறி  கொண்டு  உயிர்களைக்  காக்கும்  செயல்களுக்கு  நரகம்  கிட்டுமா?.

            இதனால்  மித்தியாத்துவ  நூல்கள்  பழிக்கப்பட்டது.

 

அச்சந்தரும்  வேலுடை  வேந்தரும்  அனைத்துலக  அமரர்கள்  கூட்டமும்

அடிபணிந்து  உன்  திருவடி  வேண்ட  அசோகமர  நிழல்  அமர்ந்தோனே

சிற்றிடை  கொண்ட  மாந்தர்கள்  சிந்திடும்  நெடுவிழி  நோக்கில்

தோற்றோடும்  வீரர்கள்  உண்டு  துவண்டிடா  பெரும்  வீரனும்  நீயே                      87

 

            அச்சுறுத்தலைத் தரும் கூரிய வேல்களை உடைய  சக்கரவர்த்திகளும்,  அனைத்து  தேவ  உலகத்தில்  உள்ள  தேவர்களின்  கூட்டமும்,  உன்னுடைய  பொற்றாமரை  பாதங்களை  பணிந்து  வணங்கி,  உம்முடைய  திருவடிகளை  எங்களுக்கு  கொடுக்கவேண்டும்  என்று  வேண்டி  நிற்க,  அசோகமர  நிழலில்  அமர்ந்த  நிர்மலனே,  மின்னலைப்  போன்ற  சிறிய  இடையைக் கொண்ட,  மங்கையர்களின்  வாள் போன்ற  கண்கள்  சிந்தும்  கடைவிழியின்  பார்வையில்  தோற்று,  முதுகுகாட்டி  ஓடும்  வீரர்களும்  உண்டு.  இதற்கெல்லாம்  தடுமாற்றம்  இன்றி  தளராத  மனம்  கொண்ட  வீரன்  நீயே  ஆவாய்.

            இதனால்  மித்தியா  தெய்வங்கள்  பழிக்கப்பட்டன.

 

அனல்  என  தீண்டும்  வினைகளே  ஆதியில்  உம் குலம்  தீயில்  கெட

நீரினில்  தேன்  சொட்ட  விரிந்த  நிறையிதழ்  சூழ்  தாமரை  மலரில்

திருவுலா  வந்த  கருத்தனிடம்  திகட்டா  என்  அன்பு  சேர்ந்தது

உம்மோடு  இனி  உறவுமில்லை  உடனே  எனை  விட்டு  அகல்வாய்               88

 

            நெருப்பைப்  போல்  வெப்பத்துடன்  என்னை  சூழும்  கொடிய  வினைகளே,  முன்பு  உம்  குலம்  முழுவதும்  தீயில்  கெட்டு  அழிய,  தண்ணீரில்  தேன்  சொட்டும்  விரிந்த,  மிகுந்த  இதழ்களைக் கொண்ட  தாமரைப்  பூவில்,  அழகிய  உலாவரும்  என்  அருகனிடம்,  என்னுடைய  உண்மையான,  மனம்  கனிந்த  அன்பு  சேர்ந்து  விட்டது.  இனி  உம்மோடு  எனக்கு  எந்தவிதமான  தொடர்பும்  இல்லை.  எனவே  என்னை  விட்டு  அகன்று  விடுவதே  உம்  காரியம்  ஆகும்.

            இதனால்  அருகனிடம்  தனது  மனம்  அடைந்தது  என்று  போற்றி  கூறப்பட்டது.

           

நாற்கதி  என்னும்  பெயருடையா  நான்கு  பெருங்கடலை  மேடாக்கி

வெகுண்டெழுந்த  அருகனுக்குரிய  மிகு பொருள்  செல்வம்  சாதுக்களை

நெடுங்குழலுடை  கோதையர் மேல்  நெஞ்சத்தால்  இடர்படுவோர்க்கு

இறையாமையை  ஒருவர்  சொல்லிட  ஏற்றிட  செவி  கேட்பார்  உண்டோ            89

 

            பரந்து  விரிந்த  நான்கு  கதி  என்னும்  பெயருடைய,  நான்கு  பெருங் கடல்களையும்,  மூடி,  மேடாக்கி,  கோபித்த  அருக பெருமானுக்கு,  உரிய  செல்வங்களான  சாதுக்கள்,  நீண்டு,  நெடிய  கூந்தலையுடைய  நங்கையர்களால்,  மனதில்  உண்டாகும்  துன்பங்களை  உடையவர்களுக்கு  சுவாமி  தத்துவத்தை  ஒருவர்  எடுத்து  சொல்லும்  போது  செவி  கொண்டு  கேட்காதவர்களும்  இருப்பார்களோ.

            இதனால்  அருகனின்  அடியார்கள்  மித்தியா  தெய்வங்களை  மதியார்  என்று  கூறப்பட்டது.

 

 பெருஞ்செல்வம்  உடையோர்  என்றும்  பெரு ஞானக்கடல் என்றென்னும்

வறுமையக்  கண்டு  நிந்திக்கும்  மடவர்  பால்  அணுகோம்  என்றும்

அருகனின்  பெரும்  தருமமாகிய  அழியா  ரத்தின திரயத்தை கொண்டு

துன்பம்  தரும்  வினைகள்  போக்கி  துயரக் கடல் நீங்கி  வாழ்வோம்             90

 

            அருக பரமேட்டியின்  பெரும்  தருமமாகிய  நற்காட்சி,  நல் ஞானம்,  நல்லொழுக்கம்  என்னும்  ரத்தினத் திரயத்தைக்  கைக்கொண்டு,  துன்பம்  தரும்  வெம்மையாகிய  தீவினைகளை  நீக்கி,  துயரம்  என்னும்  பெருங்கடலை  கடந்து  வாழ்வோம்.  தாங்கள்  பெரும்  செல்வம்  உடையவர்கள்  என்றும்,  தாங்கள்  பெரும்  கல்வி  ஞானம்  உடையவர்கள்  என்றும்  எண்ணி,  வறுமையைப்  பார்த்து  இகழ்ந்து  நிந்திப்பவர்களை  என்றும்  நாடிச்  செல்லமாட்டோம்.

            இதனால்  மித்ய திருஷ்டிகள்  எவ்வளவு  செல்வந்தராயினும்,  சம்யக் திருஷ்டிக்கு  இணையாகமாட்டார்கள்  என்று  கூறப்பட்டது.

 

முகில் தவழும் வான்நிறத்தை  உடையவன் வானுறையும்  கடவுளர்  நாயகன்

உயிர்வதையை  நீக்கி  உயர்ந்தவன்  உயர் தர்ம சக்கரம் உடையவன்

மகரமீன் கொடியோன் மன்மதனை  மாய்த்து  தொண்டர் மனதில் நிற்கும்

நால்மறை ஓதிய நாயகன் நேமியை  நாடுவோர் பிறவியை  அறுப்பார்      91

 

            மேகம்  தவழும்  வானத்தின்  நீலநிறத்தை  உடையவனும்,  தேவலோகத்தில்  உறைந்து,  தேவர்களுக்கெல்லாம்  நாயகனும்,  உயிர்வதை  செய்து  கொல்லுதலை  நீக்கிய  உயர்ந்த  நிலையைக் கொண்டவனும்,  வெற்றி  பொருந்திய  தர்மச் சக்கரத்தை  உடையவனும்,  மகரமீனை  தன்  கொடியாக  ஏற்று,  மங்கையர்  மேல்  மையலைத்  தூண்டும்  மன்மதனைக்  கொன்று,  தன்  அடியவர்கள்  மனதில்  நிலைத்து  நிற்பவனும்,  பரிசுத்தமான  பரம  ஆகமங்களை  மக்களுக்கு  அருளிய  மாலவனான  நேமிநாதரை,  நாடி  சரணடைந்தவர்கள்  என்றும்  பிறவிப்  பெருங்கடலை  விட்டு  நீங்குவர்.

 

நிறைமதி  ஞானியை  வணங்காதோர்  நீங்காப்  பெரும்  நரகில்  வீழ்வர்

வெறுவுறு  விலங்கில்  பிறப்பர்  வெம்பசியில்  மூட  மனிதராவர்

பண்டை  வெவ்வினைகள்  துரத்த  பகை  பயத்தில்  துன்பம்  கொண்டு

தருமாறி  மயங்கி தவிக்கும்  தாள்  பணியா  உயிர்கள்  எல்லாம்

 

            நிறைந்த  ஞானத்தையுடைய  ஞானியான  அருகனை  வணங்காதவர்கள்,  காரிருள்  சூழ்ந்த  நரகத்தில்  வீழ்ந்து  கடும்  துன்பத்தை  அடைவார்கள்.  பயமும்,  அச்சமும்  மிகுந்த  விலங்குகதியிலும்,  கொடிய  பசியினால்  அறிவை  இழந்து,  தாழ்ந்த  செயல்  புரியும்  மனிதகதியிலும்  பிறப்பர்.  மேலும்  பழைமையான  வலிய  வினைகள்,  தொடர்ந்து  துரத்தி  வர,  அவ்வினைகளின்  பயத்தில்  துன்பங்கொண்டு,  தருமாறி  மயங்கித்  தவிப்பர்.  இவையனைத்து எம்  வீதராகப்  பெருமானான  அருகனின்  திருவடிகளை  வணங்கித்  துதிக்காத  உயிர்களுக்கு  ஏற்படும்.

 

நாவினில்  பொருந்தும்  மந்திரம்  நல்  பக்தர்கள்  கூறும்  மந்திரம்

தேவர்கோனின்  ஐநூறு  வாய்கள்  செப்பிடும்  செவ்விய  மந்திரம்

அனந்த  சுகம்  ஈனும்  மந்திரம்  அருகனடியை  தொழுவோர்  மந்திரம்

விஷ்ணு  புத்தன்  கள்  மந்திரமன்று  வீதராகவன்  அருளிய  பஞ்சமந்திரம்           92

 

            நம்  நாவினில்  நன்கு  பொருந்தி  அமையும்  மந்திரம்.  நல்ல  அடியவர்கள்  சொல்லும்  மந்திரம்.  விண்ணுலகில்  வாழும்  தேவர்களின்  அரசனான  இந்திரனின்,  ஆயிரம்  கண்களும்,  ஆயிரம்  கரங்களும்  ஆட,  அவன்  ஐநூறு  வாய்கள்  சொல்லும்  மந்திரம்.  நமக்கெல்லாம்  வரையற்ற  அனந்த  சுகத்தைக்  கொடுக்கும்  மந்திரம்.  அருகனின்  அடிகளைப்  பணிந்து  வாழும்  அடியவர்கள்  கூறும்  மந்திரம்.  பிரம்மனுக்கு  கூறியதும்,  புத்தன்  மக்களுக்கு  கூறியதுமான,  பழைய  கள்ளைப்  போன்ற  மந்திரமாக  இல்லாமல்,  வீதராகப்  பெருமான்  அருளிய  பஞ்சமந்திரமே  சிறந்த  மந்திரம்.

 

சேற்கெண்டை  விழிகள்  செவித் தொட  தேவமகளீர்  ஆயிரம்  நடனமிட

ஆயிரம்  தாமரைப்  பூக்கள்  சூழ  அழகிய  கமல  மலரினில்  மேவும்

சினம்  கொண்ட  சிங்கமும்  யானையும்  சினம்  மறந்து  சினேகமாய்  சேர

காசினியை காக்கும் என் அருகா காமனை வெல்லும் தன்மையெவ்வாறு  93

 

            மைதீட்டிய  அழகிய  செவ்விய  கெண்டை  மீன்களைப்  போன்ற  கண்கள்  இரண்டும்  செவிகளைத் தொடும்,  முகத்தையுடைய,  தேவமங்கையர்கள்  நடனம்  புரிய,  ஆயிரம்  தாமரைகள்  சூழ்ந்திருக்க,  நடுவில்  ஆயிரம்  இதழ்கள்  கொண்ட  செந்தாமரை  மலரின்  மேல்  நடந்தும்,  ஒன்றின்  மேல்  ஒன்று  சினமும்,  பகையும்  கொண்ட  சிங்கமும்,  யானையும்  தங்கள்  கோபதையும்,  விரோதத்தையும்  மறந்து  சேர்ந்திருக்க,  இந்த  உலகத்தை  காத்து  அருளும்  அருக பெருமானே,  வலிமையுடைய  மன்மதனை  எதிர்த்து  போரிடாமல்,  அவனை  அழிக்கும்  நிலையை  எப்போது  நானடைவேன்.

            இதனால்  காமங் கடத்தலே  முக்தி  என  கூறப்பட்டது.

 

ஏழு ஸ்வரங்களின்  இன்னிசையோடு  எழுந்திடும்  வண்டுகள்  ஒலியும்

மதுதுளிகள்  குளிர்ந்து  கொட்டும்  மலர் மழையில்  முனிகள்  வணங்க

அறம்  என்னும்  செங்கோல்  கொண்டு  அகாதி காதி  வினைகளை  அழிக்கும்

எழில் தாமரை தேவா  உன்னடியை  எண்திசையோர்  என்றும்  தொழுவர்           94

 

            ஏழு ஸ்வரங்களையும்  இசைத்துப் பாடும்  தேர்ந்த  இசையாளனைப்  போல்,  மணம்  பொருந்திய  மலர்களின்  தேனினை  உண்ட  வண்டுகள்  எழுப்பும்  இனிய  ஒலியும்,  தேன்  துளிகள்  குளிர்ந்து  சொட்டும்,  நறுமண  மலர்களின்  மலர்  வட்டத்தினுள்  இருந்து  உன்னை  வணங்குகின்ற  முனிவர்களும்,  குற்றங்கள்  வருகின்ற,  துன்பங்கள்  கொடுக்கின்ற  கடும்  வினைகளை  நொருக்கி  அழிக்கும்,  அறமாகிய  செங்கோலைக் கொண்ட  செந்தாமரையின்  நாயகனே,  உன்  திருவடிகளை  எட்டு  திசையிலும்  உள்ளவர்கள்  வணங்கி  நிற்பார்கள்.

            இதனால்  அருகனை  மனதில்  வைக்காதவர்கள்  கருமம்  கெட்டு  வீடுபேறு  அடையமாட்டார்கள்  என்று  கூறப்பட்டது.

 

அருகரும்  நல் சித்தர்களும்  அருந்தவம்  காக்கும்  ஆச்சாரியரும்

நான்கு  நல் வேதங்களைக் கூறும் நற்சிந்தை உபாத்தியார்களும்

சகலமும்  துறந்த  சாதுக்களும்  பஞ்ச பரமேட்டி  நாமம்  சொல்ல

வெல்லுதற்கரிய  வெவ்வினைகள்  விட்டு விடும்  தன்  ஜீவன்  தன்னை     95                    

            அருகரும்,  சித்தர்களும்,  அரிய  தவத்தையுடைய  ஆச்சார்யர்களும்,  நான்கு  நல்ல  வேதங்களின்  அறங்களை  மக்களுக்கு  எடுத்துக் கூறும்  உயர்ந்த  சிந்தனைகளையுடைய  உபாத்தியாயர்களும்,  அகப் புறப்  பற்றுகள்  அனைத்தும்  துறந்த  சாதுக்களுமாகிய  பஞ்ச பரமேட்டிகளின்  பெயரைச்  சொல்ல,  வெல்லுதற்கரிய  வினைகள்  எல்லாம்  தன்னுடய  உயிரை  விட்டு விடும்.

            இதனால்  பஞ்சமந்திரமே  முக்திக்கு  காரணம்  என்று  கூறப்பட்டது.

 

உருவங்கள்  பலவும்  எடுத்து  உயர்ந்த  பிரகாசம்  கொண்டு

உயர்ந்து அழகிய பிரகாசத்தால்  ஊன்றிய  வினைகள்  உதிரச் செய்தும்

முக்குடை  தண்  நிழலில்  அமர்ந்த  மூவுலகம்  தொழும்  அருகனை

பணிவுடன்  வணங்கித் தொழுதிட  பற்றிய  இருள்  வினைகள் நீங்கும் 96

 

            பலவகை  உருவங்களை  எடுத்து,  நீண்டு,  வளர்ந்த,  அழகிய  ஒளியினை  கொண்டதால்,  அந்த  உயர்ந்த  அழகிய  பிரகாசத்தால்  உயிரில்  ஊன்றி கலந்த  வினைகள்  எல்லாம்  உயிரினை  விட்டு  உதிரந்து  போகும்.  முக்குடையின்  குளிர்ந்த  நிழலில்  அமர்ந்துள்ள,  மூன்று  உலகமும்  தொழும்  அருக பெருமானை,  பணிவுடன்  வணங்கி  நின்றால்  உயிரில்  பற்றிய  வினைகளாகிய  இருள்  விலகிவிடும்.

            இதனால்  சித்தருடைய  உருவம்  கிடைத்தல்  அரியது  என்று  கூறப்பட்டது.

 

கச்சையை  மீறிய  தனங்களால்  கொடியிடை  தளர்ந்து  துவண்டிட

காமுகர் தோளுடன் மனமும் கற்பும்  குழம்பிய மனதில் அமைதி விலகிட

வேல்விழி வஞ்சியர் நோக்கால்  விஷம்  என  ஏறிய  மயக்கம்

அனைத்தையும்  அறவே ஒழித்தோம்  அருகா உன்  திருவடிகள்  பற்றி 97

 

            மங்கையர்கள்  மார்பில்  அணியும்  கச்சையை  மீறி  துள்ளும்  தனங்களால்,  கொடி போன்ற  சிறிய  இடையானது  தளர்ந்து,  துவள,  அதனால்  ஆடவர்களின்  தோளும்,  மனமும்,  கற்பும்  குழம்பி,  அமைதி  கலங்கி,  விலகிப்  போக,  அந்த  சேல்விழி  வஞ்சியரின்  பார்வையால்,  விஷம் போல  மனதில்  மயக்கம்  ஏறிட,  இவை  அனைத்தையும்  அறவே  ஒழித்திடும்  ஒரே  ஆயுதம்  அருக பெருமானே  உன்  திருவடிகள்  மட்டும்  தான்.

            இதனால்  அருகனைத் துதித்து  நம்புபவர்  காமனை  வென்றவர்  எனக்  கூறப்பட்டது.

 

முக்குடையின்  குளிர்ந்த  நிழலும்  முழுமதியின்  வெண்ணொளியுடனும்

முன்வாயில்  தேவர்கள் முடியொளி  மும்மதில்  ஒளிர  நின்றவனே

பற்றென்னும்  வினைப்  பற்றை  நீக்கிய  பற்றற்றோர் உனைப் பற்றினால்

பற்றாமல்  விட்டுவிடல்  தான்  பரமனே உன் அறநெறியோ  சொல்                        98

 

            வெற்றி  பொருந்திய  மூன்று குடையின் குளிர்ந்த நிழலும்,  முழுச்சந்திரனின்  பிரகாச  ஒளியும்,  முன்வாயிலில்  நிற்கின்ற  தேவர்களின்  மணிமுடிகளின்  பேரொளியும்  மூன்று  மதில்களிளும்  ஒளிர  நின்றவனே,  வினையாகிய  பற்றுகளையெல்லாம்  நீக்கி,  பற்றுகளை  அறுத்தவர்கள்,  உன்  பாதமே  கதியென்று  பற்றினால்,  நீ  அவர்களைப்  பற்றாமல்  விட்டு விடல்  உன்  அறநெறிக்கு  தருமமா  என  நீயே  சொல்.

            இதனால்  அருகனின்  அவாவற்ற  குணமும்,  அவனை  நினைத்தால்  கிடைக்கும்  பேறும்  கூறப்பட்டது.

 

திருமொழியின்  வழியே நடந்தோர்  திவ்விய புருஷர்கள்  ஆவர்

தேவருலகம்  சென்று  பிறப்பர்  தேவ கற்பங்களை  ஆள்வர்

திருமொழியின்  வழி நடக்காதோர்  திருந்தாத  மூடர்கள்  ஆவர்

வெஞ்சிறையாம்  நரகில்  வீழ்வர்  வேந்தனாகும்  இயல்பும் இவ்வாறே    99

 

            அருக பெருமானின்  திவ்வியத் தொனியில்  அருளிய  அறவழியே  நடப்பவர்கள்,  மேன்மையான  தேவர்களாய்  பிறந்து,  தேவர்கள்  உலகத்தை  ஆள்வார்கள்.  அவ்வாறு  திவ்வியத் தொனியின்  அறங்களைப்  பின்பற்றாதவர்கள்,  அறிவிலிகளாகப்  பிறந்து,  கொடிய  சிறைச்சாலையாகிய,  நரகத்தில்  வீழ்ந்து  துன்பத்தை  அனுபவிப்பார்கள்.  இதுவே  அருகன்  ஆகும்  இயல்புத்  தன்மையாகும்.

            இதனால்  திவ்வியத்தொனியின்  சிறப்பு  கூறப்பட்டது. 

 

ஐம்பூதம், இரவி, மதி, உயிர் நின்ற  மயக்கம்  இல்லா  என்  மூர்த்தியே

அனந்த மயமான வரம்பில்லா  நிலைகொண்ட  மாசிலா  ஞானியே

செய்கையால்  வினை கெட  நின்றிட்ட  வினை  என்னும்  திருமூர்த்தியே

ஆயிரத்தெட்டு முச்சோதி கொண்டு  பிறவுருவம்  பேணுவதெப்படியோ      100

 

            இயல்பாகிய  நிலம்,  நீர்,  நெருப்பு,  வாயு,  ஆகாயம்,  சூரியன்,  சந்திரன், உயிர்  என்று  நின்ற,  குற்றம்  இல்லாத  என்னுடைய  மூர்த்தியே,  அனந்தமயமான,  வரம்பில்லாத,  நிலைகொண்ட  குற்றமில்லாத  ஞானியே,  உன்னுடைய  செயல்களினால்  அனைத்து  வினைகளும்  கெட,  வினையாகி  நின்ற  அழகிய  திருவுருவே,  ஆயிரத்தெட்டு  திருப்பெயர்களுடன்,  மூன்று  சோதிகளும்  உடைய  அருகனே, உன்னை விட்டு  அன்னியமான  பிற  உருவங்களை  ஆதரித்து,  வணங்குவது  எத்தன்மையாகும்.

            இதனால் மித்யா  தெய்வங்கள்  பழிக்கப்பட்டது.

 

வான்மிசை யோனிமிசை ஓராயிரத்தில் தொன்னூறு ஏழினோடும் பொருத்தி

இருபத்தி மூன்றும் பார்க்கும்,  எழில்  பெருகும்  மண்ணிடையில்

நானூற்று ஐம்பத்தெட்டும், பவணத்து  ஏழுகோடி எழுபத்திரெண்டு லட்சம்

சோதிடரோடு, நாலிரண்டு  வியந்தரரும்,  விமானங்கள்  கணக்கிலா  சேர

வடதிசை கண் பொற்குன்று போல  வானத்தில்  நிலைபெற்ற  ஜினாலயங்கள்

சிவந்தபொன் சமவ சரண  அருகன் என் மனதில் அமர்ந்ததை அறியேன்  101

                       

            எல்லோராலும்  ஆதரிக்கப்படும்  பெருமையுள்ள,  எண்பத்து  நாலு  லட்சத்து  தொண்ணுற்றெழாயிரத்து  இருபத்தி  மூன்று  வானவர்  உலகங்களும்,  எழில்  பெருகும்  பூமியில்  நானூறு  ஐம்பத்தெட்டும்,  பவணலோகத்தில்  ஏழுகோடியே  எழுபத்திரெண்டு  லட்சமும்,  சிறப்பான  குணமுடைய  சோதிடர்களோடும்,  எண்மராகிய வியந்தரர்களும்,  விமானங்களில்  கணக்கில்லாதவைகளும்  சேர,  வடதிசையில்  உள்ள  மேருமலையைப்  போல்,  வானத்தில்  நிலைபெற்று  விளங்குகின்ற  கோயில்களும்,  சிவந்த  பொன்னாலாகிய  சமவ சரணம்  உடைய  அருக  பெருமான்  என் மனதில்  தங்கியுள்ளதை  நான்  அறியேன்.

            இதனால்  பவ்விய  உயிர்களின்  மனதில்  எப்போதும்  அருகன்  வாசம்  செய்வார்  என்று  கூறப்பட்டது.

 

அருகனின்  காதல்   பெருங்கிழத்தி  அவனியெல்லாம்  ஈன்ற  தாயவள்

அறம்  வளர்த்த  அழியா  கன்னி  அன்னையாவாள்  ஆறு  சமயங்களின்

பரிவை  தன்பால்  கொண்டவளும்  பாருக்கெல்லாம்  தனி  தீபமானவள்

பிறவா  முக்தி  சித்தி  நாயகி  பிறப்புக்கு  எதிராய்  பகையானவள்                   102

 

            அருக பெருமானின்  விருப்பத்திற்கு  மிகுந்த  உரிமையானவள்.  உலகத்திற்கு  தாயானவள்.  எக்காலமும்  கெடாத  கன்னியாகி,  தருமத்தை  வளரச்  செய்த  செவிலித் தாயானவள்.  சைவம்,  வைஷ்ணவம்,  பிரம்மம்,  பௌத்தம், கபிலம், கெணாதரம்  ஆகிய  ஏகாந்தவாத  ஆறு  சமயங்களைத்  தன்னுள்  கொண்டவள்.  இந்த  பூமிக்கு  தனித்தீபமானவள்.  மாறுபடாத  முக்தி  நாயகியானவள்.  நால்கதி  என்னும்  பிறப்புக்கு  பகையானவள்.

 

உயிர்களுக்கெல்லாம்  கருணையானவள் ஊறி அளிக்கும் தெய்வமானவள்

உயர்ந்த கற்பின் பாவையானவள்  உண்மை ஞானக்  கொழுந்தானவள்

ஐம்புலன்  நோய்க்கு  மருந்தானவள்  ஆசை வியாதியை அழிக்கின்றவள் 

என்றெல்லாம்  போற்றும்  தவத்தோர்  ஏகிடுவார்  சித்தர்  பாதம்  நாடி

 

            உலகில்  உள்ள  அனைத்து  உயிர்களுக்கும்  கருணையானவள்.  சுரந்து  கொடுக்கின்ற  தெய்வத் தன்மையுடையவள்.  உயர்ந்த  நிறைக்  கற்பின்  பாவையானவள்.  உண்மையையும்,  ஞானத்தையும்  உடைய  தளிர்  போன்றவள்.  ஐம்புலங்களால்  உண்டாகும்  நோயைப்  போக்கும்  மருந்து ஆனவள்.  ஆசை  என்னும்  கொடிய  வியாதியை  அழிப்பவள்  என்றெல்லாம்  போற்றி  வணங்கும்  அரிய  தவத்தை  உடையவர்கள்,  துதிக்கின்ற  சித்தருடைய  சிவந்த  பாதத்தை,  துதியாதவர்கள்  அறிவும்  வளராது,  அறிவு முதிர்ச்சியும்  அடையாது.

            இதனால்  சித்தத் திருவினது  பெருமையும்,  சித்தருடைய  பாதமும்  சித்தி  என்று  கூறப்பட்டது.

 

நாவலந்தீவினை  சிமிழுள் அடக்கி நன்மேரு மலையினை ஊசியில் நுழைத்து

பொருள்களில்  புனையும்  வித்தைகள் பொருந்துமோ சில காரியங்களென்று

உலோக,  அலோகம்  தன்னுள் அடக்கி  தாமரை  மேவும் அருகனின்  தருமம்

ஏகாந்தவாதிகள் செவி வழி நுழைய சாற்றுவேன் காணீர் சான்றோர்களே  103

           

சம்பூத்தீபமாகிய  இந்த  பூமியினை  ஒரு  சிறிய  சிமிழுக்குள்  அடக்கி  வைப்பேன்.  வடக்கில்  நெடிதுயர்ந்து  நிற்கும்  மேருமலையினை  ஊசியின்  காது  துவாரத்திற்குள்  நுழைப்பேன்.  இந்த  உலகில்  உள்ள  சகல  பொருட்களின்  பண்பட்ட  வித்தைகள்  எனக்கு  ஒரு  பொருட்டாகுமா ?  ஏழுவகை  உலகமும்  தன்னுள்  அடக்கிக்கொண்டு,  நறுமணம்  வீசும்  செந்தாமரை மலர்  மேல்  நடக்கும்  அருகனின்  திருமொழிகளை  எப்போதும்  மனதில்  உறுதியாக  அறிந்து  கொள்ளுங்கள்.  இழிவான  பதவியையுடைய  புத்தன்  போன்ற  ஏகாந்தவாதிகளின்  காதில்  ஜினதர்மம்  நுழையும்படி  செய்வேன்  பாருங்கள்  சான்றோர்களே.

            இதனால்  மித்தியாவாதிகள்  அறிவிலிகள்  என்பதும்,  ஜினதர்மம்  பெருமை  மிகுந்தது  என்றும்  கூறப்பட்டது.

 

காணுகின்ற  கண்கள்  இருந்தும்  கண் கொண்டு  நோக்கார்  என்றும்

நுண்ணிய நல் ஞானம்  உடையோர்  நுகர்ந்திடார்  புலன் வழி சுகத்தை

பரியோடு  பாகனின்றி  ஊர்ந்திடும்  பங்கய மண  மலர்  மேல்  மேவும்

பாரீசன்  பொற்பாதம்  தொழுவோர்  பண்பினை  அறிவார்  என்றும்                     104

 

            தெளிந்த  முடிவில்லாத  ஞானத்தை  உடையவர்கள்,  பார்ப்பதற்கு  இரண்டு  கண்கள்  இருந்தும்,  கண்களைக் கொண்டு  பார்க்கமாட்டார்கள்.  நுணுக்கமான  நல்ல  அறிவினை  உடையவர்கள்,  ஆதரிக்கின்ற  பொருள்களாய்  இருந்தாலும்,  புலன் வழி  நுகரும்  சுகத்தை  அனுபவிக்கமாட்டார்கள்.  குதிரையும்,  தேரோட்டியும்  இல்லாமல்,  ஆகாயத்தில்  ஊர்ந்திடும்  மணம் மிகுந்த செந்தாமரை  மலரான  தேரில்  செல்லும்  அருகனின்  பாதம்  தொழுவோர்கள்  இந்த  பண்புகளை  எல்லாம்  என்றென்றும்  அறிவர்.

            இதனால்  அருகனின்  அதிசயங்கள்  கூறப்பட்டது.

 

தெரிந்த  அறமழை  சொரிந்த  முகிலது  சிவந்த  மரைமலர்  சுமந்தான்

நாதன்  அருளிய  வேதம் புகழ்ந்து  நவிலும்  மாதங்கி  நயனங்கள்

இசைந்து  கொலை களவு  உலகோருடன்  இருண்டு, அகன்று சோர்ந்த தவம்

நீண்டு கீழ்பட ஒளிர்ந்து நின்றது  தழங்கு  தலைவனை துதித்தது போல்     105

 

            தெரியப்பட்ட  தருமமாகிய  மழையை  சொரியும்  கருணையுடைய  மேக வண்ணமானவனும்,  தாமரைப் பூவானது  தாங்கிய  பாதத்தையுடைய  அருக பெருமானின்,  அரிய  வேதங்களைத்  துதித்துப் பாடி,  நாட்டியம்  ஆடுகின்ற  மாதங்கியின்,  நடனத்தைக்  காட்டுகின்ற  அழகிய  விழிகள்,  ஆசையால்  கொலை, களவு  செய்து,  உலகத்தாருடன்  சண்டை செய்து, கருத்த  நிறத்துடன், பரந்து,  சோர்ந்த,  அவள் தவமானது   வீழ்ந்து,  நிமிர்ந்து,  பிரகாசிப்பது  எப்படியிருக்கிறது என்றால்,  ஒலியாகி  நின்ற  அருக பெருமானை  தரிசிப்பதை ஒத்திருந்தது.

            இதனால்  மாதங்கி  பெண்ணின்  தன்மை  கூறப்பட்டது.

மாதங்கி : 16 வயது பெண்.  தழங்கு :  ஒலியாகி நிற்பது.

 

நிகரில் முனி, அரசர், கந்தியர்  பவணர்  அவர்  தம்  மனைவியரும்

பஞ்சவர்  உடன் சேர் வஞ்சியர்  அமரரும் இணைந்த மடந்தையரும்

நிலவுலக வியந்தரர் மனைவியர் விலங்கோடு ஈராறு கணங்கள் தொழ

பூந்தாது  பொதித்த சிம்மாசனத்தில்  பொன்னிற முக்குடை நிழலில்

ஒளிர்கின்ற பிரபாவலையம் மூன்றில்  ஓங்கி தழைத்த அசோக மரமும்

நறுமண மலர் பொதுளும் இருளில்  வெண் கவரி திரள்கள் அசைய

வண்டு மோதி  வடியும் மதுவோடு  வான்மழையாய் பூமழை பெய்ய

எண்புறமும்  துந்தூபி  முழங்க  எழிலருகன்  இருந்தான் நான் வணங்க        106

 

            ஒப்பற்ற  முனிவர்களும்,  மன்னர்களும்,  ஆரியாங் கன்னிகளும்,  வரிசையாக  பவண தேவர்களும்,  அவர்கள்  மனைவியர்களும்,  ஆகாயத்தை  வீதியாகக் கொண்டு  ஒளிர்கின்ற  சோதிடர்களும், அவர்களின்  தேவியர்களும்,  குற்றமில்லாத்  தேவர்களும்,  அவர்களின்  நாயகிகளும்,  நிலவுலகம்  முழுதும்  திரியும்  வியந்திரர்களும்,  அவர்களின்  ராணிகளும்,  உலகிலுள்ள  அனைத்து  விலங்குகளும்,  பன்னிரண்டு  கணங்களும்  கைத்தொழுது  நிற்க, 

பூந்தாதுகள்  பொதிந்து  நிரம்பியுள்ள  பொன் சிம்மாசனத்தில்,  பொன்னாலான  முழுமதி போன்ற  முக்குடை  நிழலில்,  சூரியனைப்போல்  பிரகாசிக்கின்ற  பிரபாவலையும்  மூன்றினுள்,  நீண்டு,  தழைத்து  வளர்ந்த  அசோகமரமும்,  நறுமண மலர்கள்  நெருங்கி  இருளூட்ட,  வெண்மையான  கவரித் திரள்கள்  எல்லா பக்கங்களிலும்  அசைய,  வண்டுகள்  மோதுவதால்,  தேன்  சொட்டும்  மலர்கள்  வான்மழையைப்  போல்  பெய்ய,  எட்டு  திசைகளிலும்  தேவதுந்தூபிகள்  இசை  எழுப்ப, 

நான்  என்  பிறவிகள்  தோறும்  தொழுவதற்கு,  என்  தலைவனாகிய  அருக பெருமான்  வீற்றுள்ளார்.

இதனால்  அருகனின்  பெருமையும்,  தேவர்கள்  சிறப்பும்  கூறப்பட்டது.

 

பன்னிரண்டு  கணங்களுக்கும்  பரமனான  பெருந் தலைவனே

உன்னை அன்றி  வேறுயார்   உளர்  உலகில்  நாங்கள்  துதிப்பதற்கு

எண் குணங்கள்  கொண்ட  உம்மை  எவர்  குற்றம்  காண  வல்லார்

உன் குணங்கள் அவர் இறைக்கு உண்டென்பது அவர் பேய் உரையாம்   107

 

            குறித்த  பன்னிரண்டு  கணங்களுக்கும்  தலைவனான  பெருந்தலைவனே,  நீ  இல்லாமல்  வேறு  யார்  இருக்கிறார்கள்,  நாங்கள்  வணங்குவதற்கு.  எட்டுவகையான  உயர்ந்த  குணங்களைக்  கொண்ட  உம்மைக்  குற்றங்கள்  கூறும்  வல்லமை,  வேறு  யாருக்கு  இருக்கிறது.  அப்படி  இருக்க,  உம்முடைய  குணங்கள்  எங்கள்  சுவாமிக்கு  இருக்கிறது  என்று  கூறுவார்களானால்  அது  அவர்களின்  பேய்த் தன்மையைக்  காட்டுகிறது.

            இதனால்  அருகனின்  குண மகிமையையும்,  மித்யாத்துவ  தெய்வங்களின்  குணவீனமும்  கூறப்பட்டுள்ளது.

 

கொங்கை தரும் சுமையில் வருந்தும்  கெண்டைவிழி நோக்கில் மெலியார்

அனைத்தையும் உள்ளங்கை கொண்ட ரத்தினமாய் அறியும் அபங்கர்

வினை  அழித்து  சுகம் அளிப்பார்  வாங்கி  உண்ணா பசி அறுப்பார்

காமவேளின் பகையை  ஒழிக்க  கொடும் ஆயுதம் தாங்கா நின்றார்

மனமது மயக்கம் ஆகி பேயுடன்  சுடலையில் பிணத்துடன்  சுற்றான்

எண் திசையும் சிரங்களைக் காட்டி  எழும் புஜம்  கொண்டு திரியான்

பகைவரின் வரவைப் பார்த்து  பல கொடும்  ஆயுதம்  கை ஏற்கான்

பஞ்சணை மேல் நித்திரை கொண்டு படுத்துறங்கா கோமான்  அருகன்           108

 

            கனத்த  தனங்களின்  சுமையால்,  வருந்தி வாடும்  இடையை  உடைய  மங்கையர்களின்,  கடைக்கண்  பார்வையைக்  கண்டு,  வருந்தி  இளைக்காதவர்,  உலக பொருட்கள்  அனைத்தையும்,  உள்ளங்கையில்  உள்ள  ரத்தினத்தைப்  போல்  அறியும்  பங்கமில்லாதவர்,  அனைத்து  வினைகளையும்  வென்று சுகம்  அளிப்பவர்,  பிறரிடம்  பிச்சை  வாங்கி உண்டு, பசியை போக்கிக் கொள்ளாதவர்,  காமனின்  பகையை  அழிக்க,  ஆயுதம் ஏந்தாதவர், 

மனமயக்கத்தில்  பேயுடன் சுடுகாடு தோறும் சுற்றாதவர்,  எட்டு  திசைகளிலும்  தன்  தலைகளை காட்டி  விம்மிய புஜத்தைக் கொண்டு திரியாதவர்,  பகைவரின்  வரவுக்காக, கையில்  ஆயுதங்களை  கொள்ளாதவர்,  பஞ்சணை மேல்  படுத்து,  சோம்பலாக  உறங்காதவர்  எம்  தலைவனான  அருக பெருமான்.

            இதனால்  அருகனின்  குணப் பெருமையும்,  மித்யா  தெய்வங்களின் குணக் குற்றமும்  கூறப்பட்டது.

 

அனகன்,  அமலன்,  தலைவன்  அலர்  மலர்  மேல்  மேவும்  அருகன்

அகம்  புற  மலங்கள்  நீக்க  அரும்  மருந்து  துறவறம்  என்று

அனைத்துலக  உயிர்களுக்கும்  அவன்  அருளிய  அறநெறி  ஒன்றே

துறவறத்தை  மனதில்  ஏற்றல்  துயர்  அறவே  நீக்கும்  நெறியாம்                109

 

            நெஞ்சே,  பாவம்  இல்லாதவனும்,  நிர்மலமானவனும்,  எல்லோருக்கும்  தலைவன்  ஆனவனும்,  அன்றலர்ந்த  தாமரை  மலர்  மேல்  பாதம்  பதித்தவனுமான  அருக பெருமான்,  அகத்திலும்,  புறத்திலும்  உள்ள  அனைத்து  குற்றங்களும்  நீங்க,  அரிய  மருந்து  துறவறம்  ஒன்றே,  என்று,  உலகத்தில் உள்ள  அனைத்து  உயிர்களுக்கும்  அருளிய  அறநெறியாகும்.  அந்த  துறவறம்  நம்  உள்ளத்தில்  சேர்ந்தால்,  அழியாத  கருமத்தை  எல்லாம்  அறவே  நீக்கி  விடலாம்.

            இதனால்  துறவறத்தின்  பெருமை  கூறப்பட்டது.

 

விசும்பினைத்  தழுவிடும்  சிகர  கல்லினில்  துள்ளிடும்  அருவி

வெற்றிக்கொடி  அசைவது  போல  வெள்ளிப் பனிமலை  இமயத்தின்

நடுவே  நாமூன்று  யோசனை  பரப்பில்  நன்மணி  பதித்த ஏழ்நிலத்தில்

நாற்திசையும்  அரங்கினைப் போல்  நவமணிகள் பதித்த  தூண்கள்                  110

 

            நெஞ்சமே,  ஆகாயத்தைத்  தழுவிட  வேண்டும்  என்ற  ஆசையில்,  வளர்ந்துள்ள,  நெடிய  மலைகளின்  சிகரங்களில்,  முட்டி, மோதி,  துள்ளி  குதித்து  வரும்  அருவியாறு,  வெற்றிக் கொடியைப் போல்,  மேலே  காற்றில்  அசைகின்ற,  குற்றமற்ற  வெள்ளியாலாகியது  போன்ற,  கயிலாய  மலைமேல்,  மத்தியில்,  பொன்னாலான  கீர்த்தியையுடைய,  பன்னிரண்டு  யோசனை  அகலத்தில்,  இந்திர  நீலமணியைப்  போல்  ஏற்படுத்திய  ஏழு  நிலத்திலும்,  அரங்கத்தைப்  போல  நான்கு  திசைகளிலும்,  நவரத்தினங்கள்  பதித்த  தூண்கள்.

 

நீண்டகன்ற  நான்கு  வீதிகளில்  நீண்டு  உயர்ந்து  நின்றிருக்கும்

அஞ்ஞானமென்னும்  இருள்  நீக்கும்  அருமணிகள்  பதித்த  மானஸ்தம்பம்

அன்றலர்ந்த  தாமரை  மலர்கள்  அகழி  எல்லாம்  நிறைந்திருக்கும்

கண்டவர்கள்  கண்ணைக்  கிட்டும்  காணாதவர்  நெஞ்சம்  ஏங்கும்

 

            நீண்டு,  நெடிதகன்ற  வீதிகளில்  ஞானமில்லாத  அறியாமை  என்னும்  பேரிருளை  நீக்கும்,  வானினைத்  தொடுவது  போன்று  வளர்ந்து நிற்கும்,   விலையுயர்ந்த  மணிகள்  பதித்த  மானஸ்தம்பமும்,  ஆதவனைக்  கண்டு  களித்து,  இதழ்  மலர்ந்த  தாமரைப்  பூக்கள்  மிகுந்து  நிறைந்துள்ள  அகழிகளும்,  பார்க்கின்ற  அனைத்து  உயிர்களின்  கண்கள்  சொக்கி  சுகத்தில்  மயங்கும்.  அந்த  அழகைக்  காணாதவர்கள்  மனம்  முழுவது  ஏக்கத்தில்  வருந்தும்.

 

அரும்  பொன்  தகடுகள்  ஒளிரும்  அழகு மிக்க  தோரணங்களால்

வியந்திர, பவண, சோதிட  தேவர்கள்  வரிசையோ  நெடுமலை போல் நீளும்

ஆனிப்பொன்  தகடுகள்  வேய்ந்த  அளவற்ற  தூபிகள்  இருக்கும்

வானுயர்ந்த  கொடிகள்  வரிசை  வாயில்  ஒவ்வொன்றிலும்  நிற்கும்

 

            பசும்  பொன்னால்  தகடுகள்  செய்து,  அதை  அழகிய  தோரணங்களாக்கி,  தொங்க விடப்பட்ட  அழகிய  ஒளிவீசும்  தோரணங்களும்,  வியந்தர  தேவர்களும்,  பிரகாசமான  சோதிட தேவர்களும்,  பவண தேவர்களும்  மிகவுயர்ந்த  நீண்ட  மலையைப் போல்  வரிசையாக  நின்றிருக்க,  ஆனிப்பொன்  தகடுகளால்  வேயப்பட்ட  நெடிதுயர்ந்த  தூபிகளும்,  நீண்ட  நெடிதுயர்ந்த  வாயில்களின்  இருபுறமும்  கட்டப்பட்டு  காற்றில்  அசைந்தாடும்  கொடிகளும் நிற்கும்.

 

ஏழுஸ்வரம்  பாடும்  வண்டுகள்  எழில்  வாயில்கள்  எல்லாம்  சூழும்

மூன்று  மதிகள்  மேல்  வளர்ந்து  மேகத்துடன்  கொஞ்சித்  தவழும்

மாளிகையின்  பொன்மாடங்களில்  மங்கையர்கள்  பாட்டொலிக்கும்

நாட்டிய  நங்கையர்கள்  நடனம்  நல்  அரசர்கள்  சபையை ஒக்கும்

 

            ஏழுஸ்வர  இசையினை  பாடுவது  போல்  நால்வகை  வண்டுகளும்  அழகு  மிக்க  வாயில்களில்  சூழ்ந்து  இசைபாடும்.  யுத்தத்தை  அறியாத  மூன்று  மதில்களும்,  மிக  உயரமாக  வளர்ந்து,  விண்ணில்  தவழும்  மேகங்களுடன்  கொஞ்சி  விளையாடும்.  அங்குள்ள  மாளிகைகளின்  நிலா  முற்றத்தில்  இளம்  நங்கையர்களின்  இன்னிசை,  செவிகளில்  தேனென  பாய்ந்து  ஒலிக்கும்.  நவரசமும்  நயனத்தில்  காட்டிடும்,  நடன  மங்கையர்கள்  ஆடும்  நடனம்,  வானுலக  இந்திரன்  சபையை போல்  இருக்கும்.

 

வாவிகளில்  வண்டுகள்  திரியும்  வானப்பளிங்கில்  வீடுகள்  அமையும்

ஆயிரங்கால்  மண்டபம்  எல்லாம்  ஆதவன்  போல்  ஒளியை  கக்கும்

கணதரர்கள்  கரம்  வணங்க  கற்ற  வேதங்கள்  போரொலியில்

எட்டுவித  அர்ச்சனை  வேள்வியால்  இலக்குமி  மண்டபம்  அதிரும்

 

            பொய்கைகளில்  பூத்திருக்கும்  மலர்களின்  மதுவுக்காக  வண்டுகள்  சூழ்ந்து  திரியும்.  வானத்தின்  பளிங்கினைப்  போல்,  அங்குள்ள  அனைத்து  வீடுகளும்  பிரகாசிக்கும்.  அங்கு  அமைந்துள்ள  ஆயிரங்கால்  மண்டபங்கள்  எல்லாம்  ஆதவனின்  பேரொளி  போல்  ஒளியினை  கக்கி  அழகினைத்தரும்.  கணதரர்கள்  அனைவரும்  கரம்  கூப்பி  வணங்கி,  தாங்கள்  கற்ற,  நல்ல  நெறி  தவறாத  வேதங்களைப்  போற்றி  சொல்லும்  ஒலியானது,  அவ்விடம்  முழுதும்  சூழ்ந்து  ஒலிக்கும்.  எட்டு  விதமான  அர்ச்சனைகளின்  வேள்வியால்  இலக்குமி  மண்டபம்  அதிர்ந்து  நோக்கும்.

 

தேன்  கமழ்ந்து  வெறி  நிறந்த  ஒளியை கக்கும்  பூம் பொய்கையில்

மண்ணுலகில்  விண்ணுலகம்  மறைய  மனிதருடன்  தேவரும்  நெருங்க

இருவரின்  தோளணி  முடி  உரச  இடியென  கனன்று  ஒளியை  எழுப்ப

ஆனந்த  விழிகள்  நீர்  தளும்ப  ஆட்டம்  பாட்டின்  ஜெயஒலி  எழுந்தது

 

            தேன்  கொட்டுகின்ற  மணம்  மிகுந்த  மதுவினால்  நிறந்த  மலர்கள்,  குளங்களில்  நிறைந்து  தரும்  ஒளியால்,  பூமியுடன்  ஆகாயம்  சேர்ந்து  மறைந்து  போக,  தேவர்களும்,  மண்ணுலக  மாந்தர்களும்  நெருங்கி  மோதிக் கொள்ள,  இருவரின்  தோள்  அணிகளும்,  மணிமுடிகளும்  உரசி,  கனன்று  ஒளி,  ஒலி  எழுப்பும்.  அந்த  மகிழ்ச்சியினால்,  இருவிழிகளிலும்  அனைவருக்கும்  ஆனந்த  கண்ணீர்  வடிய,  ஆட்டம்  பாட்டத்தினால்  ஜெய  கோஷ  ஒலி  நிறைந்து  நிற்கும்.

 

கருங்கடல்  பேரிரைச்சல்  ஒலி  கரைந்தது  கடற்காற்றில்  அங்கு

முன் வாயில்  கொடிகள்  எல்லாம்  மேல்  வானம்  தூசியை  துடைக்க

பசும்பொன்னால்  செய்த  கொடிகள்  பனிமலை  அருவியாய்  சிறக்க

பரிதியாய் ஒளிரும் கோயிலில்  பலமணி மாலை கொண்ட கூடம்

 

            அந்த  மகிழ்ச்சிப்  பேரொலியால்,  கருங்கடலின்  பெரும்  இரைச்சல்  அந்த  கடற்காற்றிலேயே  கரைந்து  மறைந்தது.  முன்  வாயிலில்  கட்டிய  கொடிகளின்  துணியானது,  வானத்தில்  இருக்கும்  தூசியை  துடைத்து  சுத்தமாக்கியது.  பசும்பொன்  கொண்டு  செய்த  கொடிகள்  எல்லாம்,  பனி  அருவி  கொட்டும்,  நீண்ட  மலை  போல்  சிறப்புடையதாய்  இருக்கும்.  சூரியனின்  பேரொளி  போல்  இருக்கும்  கோயிலில்,  மணிகளால்  செய்த  மாலைகள்  தொங்கும்  கூடங்கள்  அமைந்திருக்கும்.

 

பசுமையாய்  தழைத்து  வளர்ந்த  பசுந்தளிர்  அசோகமர  நிழலில்

கடல்  முத்து  மாலைகள்  தொங்கும்  கந்தக்குடி  என்னும்  இடத்தில்

பிடரிமுடி, பிளந்த  வாய் கொண்ட  பெரும்  சிங்கம்  தாங்கும்  சபையில்

முழுமதி வெண் முக்குடை நிழல்  மேலிருந்து  சொரிய  வீற்றுள்ளாய்

 

            பச்சைப்  பசேலென  வளர்ந்து  தழைத்த,  இளந்  தளிர்களுடன்  கூடிய  அசோக  மரத்தின்  நிழலில்,  கடலில்  இருந்து  எடுத்த  வலம்புரி  சங்கின்  முத்துகள்  கோர்த்த  மாலைகள்  தொங்கும்,  கந்தக்குடி  என்னும்  இடத்தில்,  பிடரி  முடியுடனும்,  பிளந்த வாயுடனும்  இருக்கும்  சிங்கங்கள்  தாங்கிய  மென்மலர்  ஆசனத்தில்,  முழுநிலவு  போன்ற,  குளிர்ந்த  நிழலைத்தரும்,  முக்குடையின்  அடியில்  அமர்ந்துள்ளாய்.

 

 

ஆதவனின்  மண்டலம்  போன்று  அமைந்தது  பிரபாவலையம் மின்னலாய்

வெண்மதியின் பிரகாசத்துடன்  வெண்சாமரை  மென் காற்றை  வீசிட

பூ வண்டுகள்  இசைத்திடும்  ஒலியில்  பூமழை  வான்மழையாய்    சொரிய

தேவ துந்துபியின்  தேன்  இசை  சென்றது  விண்  முகிலைத் தழுவிட

 

 

            சூரிய மண்டலம்  போன்று  பேரொளி  வீசும்,  மின்னலைப்  போன்ற  பிரபாவலையம்  விளங்க,  வெண்மையான  முழுச்சந்திரனின்  பிரகாசம்  போன்ற,  வெள்ளை  நிற  சாமரத்தின்  மெல்லிய  தென்றலையொத்த  காற்று  வீசிட,  நால்வகை  பூ வண்டுகள்  ஒலிக்கும்  இன்னிசையுடன்,  வானத்தில்  இருந்து  மழைபோல்  பூக்கள்  சொரிய,  தேவர்கள்  இசைக்கும்  துந்தூபியின்  இசையானது,  மேகங்களைக்  கொஞ்சி  தழுவ  சென்றிடும்.

 

 

ஆதித்தனாய்  நான்கு  திசையிலும்  அறச் சக்கரம்  தீவினைகள்  நீக்க

அனாதியில்  தொடர்ந்த பிறப்பை  அழித்திட்ட  தவமுனிவோரும்

அரும்  பகை  நீக்கிய  விலங்குகளும்  ஆறிரண்டு  கணங்களும்  சூழ்ந்திட

சூரிய  மண்டல  பேரொளியில்  சுந்தரத்  திருவுருவம்  கொண்டோனே

 

 

            பரிதியின்  ஒளியைப் போல  எண் திசைகளிலும்  அறச் சக்கரமானது  சுழன்று,  அனைத்து  தீவினைகளையும்  போக்க,  அனாதி காலத்திலிருந்து  தானே  தொடர்ந்து  வந்த  பிறப்பினை  அழித்த  தவமுனிவர்களும்,  தங்களுக்குள்  இருந்த  கொடிய  பகையை  நீக்கி,  நட்பினைப்  பூண்ட  விலங்குகளும்,  இறுதியாக  பன்னிரண்டு  கணங்களும்  சூழ்ந்து  நின்றிருக்க,  சூரியனின்  போரொளியுடன்  விளங்குகின்ற  சுந்தரத்  திருவுருவம்  கொண்டோனே.

 

ஆயிரத்தெட்டு  பெயர்கள்  சூடிய  அழியா  முச்சோதி  உடையோனே

அளவற்ற  நான்கும்  அடைந்து  ஆறு பொருள் ஞானம்  உணர்ந்தோனே

அறுமூன்று  மொழியில்  ஒலிக்கும்  ஆகமங்கள்  அருளிய  அறவோனே

கரும்புவில்  காமனை  எரித்த  கனல்  விழி  நோக்கைக் கொண்டோனே

 

            ஆயிரத்தெட்டு  திருப் பெயர்களையும்  அழியாத  மூன்று  சோதிகளைக்  உடையவனே,  அளவற்ற  அனந்த தரிசனம்,  அனந்த ஞானம்,  அனந்த சுகம்,  அனந்த  வீரியம்  நான்கையும்  அடைந்து,  ஆறு  பொருள்களின்  தன்மையை  அறிந்தவனே,  அனைத்து  உயிர்களும்  அறியும்  வண்ணம்,  பதினெண்  மொழிகளில்  பரம ஆகம  நெறிகளை  உன்  திருமொழியால்  அளித்தவனே,  மக்களுக்கு  காமம்  என்னும்  தீவினை  உணர்வை  தூண்டி  எழுப்பும்,  கரும்பு  வில்லைக்  கொண்ட  மன்மதனை  உன்  நெருப்புப்  பார்வையால்  அழித்த  தூயவனே.

 

 

அழிவிலா  முக்தி  நாயகியையுன்  அகம்  பாதியில்  ஏற்ற  அருகனே

முக்காலமும்  மூவுலகும்  அளந்த  மும்மதில் பொன்னொளியுடையோனே

மூவுலக  இந்திரர்கள்  தம்  முடி  தேய  வணங்கும்  பெருமானே – என

அருகன்  புகழ்  போற்றிப் பாடி  அவன் பாதம்  பணிந்து  தொழுவோம்

 

 

            அழிவில்லாத  முக்தி  நாயகியை  உன்னுடன்  ஏற்று,  அவளுக்கு  உன்  உடலில்  பாதியைத்  தந்த  அருகனே,  மூன்று  காலங்களையும்,  மூன்று  உலகத்தையும்  ஒரு  பரம அணுக்களால்  அளந்த,  மூன்று  பொன் மதில்களைக்  கொண்ட  போரொளி  படைத்தவனே,  மூவுலக  இந்திரர்களிம்  தங்களின்  மணிமுடிகள்  தேய  வணங்கும்  பெருமானே,  உன்னுடைய  புகழினைப்  போற்றிப்  பாடி  உன்  பாதங்களை  நாங்களும்  பணிந்து  துதிப்போம்.

            இதனால்  சமவசரண  பெருமையும்,  அருகனின்  குணப் பெருமையும்  கூறப்பட்டன.

18 மொழிகள்  :  வடமொழி  நீங்கலாக,  சிங்களம்,  சோனகம்,  சாவகம்,  சீனம்,  துருவம்,  குடகம்,  கொங்கணம்,  கன்னடம்,  கொல்லம்,  தெலுங்கு,  கலிங்கம்,  வங்கம்,  கங்கம்,  மகதம்,  கடாரம்,  கவுடம்,  கோசலம்,  தமிழ் என் பதினெட்டு.

 

 

பருவங்கள்  பலவகையாயினும்  பாரெல்லாம்  காத்து  ரட்சிக்கும்

முரணற்ற  நல் தத்துவங்கள்  முன்னுரைத்தோர்  பலர்  ஆயினும்

காவலராம்  எம்  தேவர்  ஒருவரே  கருத்தன்  என்  அருகன்  ஆவார்

காலடியை  என்  சிரசில்  ஏற்பேன்  கருமங்கள்  அழியும்  அம்மலரால் 111

 

            சாதுக்களே,  உத்சர்ப்பிணி,  அவசர்ப்பிணி  என்று  காலங்கள்  பல வகையாயினும்,  இந்த  பூமியை  காத்து,  ரட்சித்து,  முரண்பாடில்லாத  நல்ல  தத்துவங்களை,  எடுத்துரைத்தவர்கள்  பலர்  இருந்தாலும்,  என்னுடைய  சுவாமியும்,  தெய்வத்தன்மை  உடையவரும்  ஒருவரே  ஆவர்.  அவர்  ஆயிரத்தெட்டு  திருப்பெயர்களில்  ஒன்றாகிய,  கருத்தன்  என்ற  அருகன்  ஆவார்.  அந்த  அருகனின்  திருவடிகளை  என்  சிரசில்  எப்போதும்  சூடிக்கொள்வேன்.  ஏனென்றால்,  அது  கருமங்களை  அழிக்கவல்ல  பூவாகும்.

            இதனால்  எக்காலத்திலும்  சுவாமி  ஒருவரே  என்றும்,  அவரே  தத்துவத்  தலைவர்  என்றும்,  அவரது  தாள்  மலரை  யாவரும்  தரிசிக்க  தக்கதென்றும்  கூறப்பட்டது.

 

                        திருக்கலம்பகம்  முடிவுற்றது.

 

இனிய  சொந்தங்களே,

            இந்த    திருக்கலம்பகத்தை  தொடர்ந்து  வந்தமைக்கு  மிக்க நன்றி.    பேச்சுத்  தமிழில்  பொருள்  பதியும்,  பெரு முயற்சியில்  மூலத்துடன்  ஒப்பிடுகையில், பிழைகள்  பல  வந்திருக்கும்.  பொருட் குற்றம்  மிகவும்  தவிர்த்திருப்பேன்.  பொருட் குற்றம்  சிலது  காணினும்  பெருந்தன்மையுடன்  மறந்து  ஏற்கவும்.  பொருட்  குற்றங்களை  நவின்றால்  பெருமையுடன்  திருத்திக்  கொள்வேன்.

மூலநூலான  திருக்கலம்பகத்தில்  நான்  நுகர்ந்ததை  உங்களையும்  நுகரச்  செய்தேன்.  சமணச்    சான்றோர்கள்,  தவறைச்  சுட்டினால்  கற்றுக்  கொள்வேன்.  அனைத்து  நல்லற  சொந்தங்களுக்கும்  நன்றி  கூறி  விடைபெறுகிறேன்.  வணக்கம்.

                                                                        என்றும்  உங்கள்  அன்பில்,

                                                                            முட்டத்தூர். அ. பத்மராஜ்.

                                                                                                01.06.2022.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

           

 

 


1 comment:

  1. Awesome effort sir . This year no posting ?

    ReplyDelete