சீவக சிந்தாமணி.


சீவக சிந்தாமணி.




நூலாசிரியர்  அறிமுகம் :

           

ஐம்பெருங் காப்பியத்தில்  ஒன்றான  செந்தமிழ்  காப்பியம்  இது.  ஜைன  ஆச்சாரியர்கள்  சார்ந்திருந்த  பல  சங்கங்களில்  ஒன்று    திரமிள  சங்கம்.  இச்சங்கத்தில்  சிறந்து  விளங்கியது  நந்தி  கணம்.  இந்த  நந்திகண  அருங்கலான்வயத்தோர்  பன்மொழிப்புலவர்கள்.  இத்  திரமிள  சங்க,  நந்திகண,  அருங்கலான்வயத்தை  சேர்ந்தவர்  தான்  திருத்தக்கதேவர். 

           

சோழ  குடியைச்  சேர்ந்த  திருத்தக்கதேவர்,  மதுரை  சென்ற  போது,  அங்குள்ள  தமிழ்ப்  புலவர்கள்,  தேவரிடம்,  உம்  சமயத்தோர்  துறவறம்  பாட  வல்லவரே  அன்றி,  இன்பம்  தோன்றும்  அகப்  பொருட்சுவை  ஏந்திய  பாடல்களைப்  பாட  அறியாதவர்கள்  என  கூற,  தேவர்  சமணப்  புலவர்கள்,  காதற்  சுவையும்  பாட  வல்லவர்கள்  என  கூறி,   அவர்கள்  கேட்டுக்  கொண்டதற்கு  எழுதிய  நூலே  ஜீவகசிந்தாமணி.

           

மதுரை  நிகழ்ச்சியை  தேவர்  தன்  குருவிடம்  கூற,  குருவோ,  இவரது  திறமையை  உலகறியச்  செய்ய,   முதலில்  அங்கு  குறுக்கே  ஓடிய  நரியை  பற்றிய   ஒரு  நூல்  எழுதச்  சொல்ல,  தேவர்,  சமணக்  கொள்கைகளை  உள்ளடக்கிய  நரிவிருத்தம்  என்னும்  நூலை  இயற்றினார்.  வியந்து,  மகிழ்ந்த  குரு,  “ செம்பொன்  வரை  மேல் “  என்ற  வரி  துவக்கத்தில்,  கடவுள்  வாழ்த்துடன்,  ஜீவகன்  வரலாற்றை  அகப்  பொருட்சுவை  தளும்பும்  காவியமாக  இயற்றுக  எனப்  பணித்தார்.

           

தேவரும்,  ஆசிரியர்  வரிகளுடன்,  தானும்  சித்தர்  வணக்கத்திற்காக,  “மூவா  முதலா”  என்னும்  தொடக்கத்துடன்  செய்யுள்  அமைக்க,  மாணாக்கரின்  செய்யுள்  சிறப்பென்று  கூறி,  அவர்  பாடலையே  முன்  வைத்து  எழுதச்  சொன்னார்.  அதனால்  தான்,  இந்நூலில்  சித்தர்  வணக்கம்  முன்னிலும்,  அருகர்  வணக்கம்  பின்னிலும்  அமைந்தது.

           

திருத்தக்கதேவர்,  இந்நூலை  எல்லாச்  சுவைகளும்  சிறப்புடன்  அமைத்து,  எட்டே  நாட்களில்  முடித்து,  மதுரையில்,  அரங்கேற்றி,  அனைவராலும்  பாராட்டப்  பெற்றார்.  அழுக்காறுடைய  சிலர்,  அகப்பொருட்  சுவை  உச்சம்  கண்டு,  அந்நுகர்ச்சி  பெற்றாலன்றி,  இந்நூல்  எழுதயிலாதென்றனர்.  தேவரோ  பெரும்  நெருப்பை  கையில்  ஏந்தி  தன்  தூய்மையை  அறியச்  செய்தார்.  இவர்  காலம்  ஒன்பதாம்  நூற்றாண்டு. தேவரின்  வர்ணனைகளில்  நான்  ஒரு  சதவிகிதத்திற்கும்  குறைவாக  தான்  கையாள  முடிந்தது.  இது  கதையை  தெரிந்து கொள்ள  மட்டுமே,  எழுதியது  என்பதால் 3145  செய்யுள்கள், 13 இலம்பகங்கள்  கொண்ட  காப்பியத்தை மிகச் சுருக்கி   கதையை  மட்டும்  தெரிந்து  கொள்ள  முடித்துள்ளேன். தேவரின்  கடவுள்  வாழ்த்தை  அப்படியே  தந்துள்ளேன்.

 

இனி  நாம்  ஜீவகசிந்தாமணி  காப்பியத்தை  தொடர்வோம்.  


கடவுள்  வாழ்த்து  :


சித்தர்  வணக்கம்.


மூவா  முதலா  உலகம்  ஒரு  மூன்றும்  ஏத்தத்

தாவாத  இன்பம்  தலையாயது  தன்னின்  எய்தி

ஓவாது  நின்ற  குணத்து  ஒண்ணிதிச்  செல்வன்  என்ப

தேவாதி  தேவ  னவன்சேவடி  சேர்த்தும்  அன்றே.


        அருகர்  வணக்கம்.


செம்பொன்  வரைமேல்  பசும்  பொன்னெழுத்  திட்ட  தேபோல்

அப்பொன்  பிதிர்வின் மறுவாயிரத்  தெட்டு  அணிந்து

வெம்பும்  சுடரின்  சுடரும்திரு  மூர்த்தி  விண்ணோர்

அப்பொன்  முடிமே  லடித்தாமரை  சென்னி  வைப்பாம்.


ஆசாரியர்,  உபாத்தியாயர்,  சாது  வணக்கம்.


பண்மாண்  குணங்கட்கு  இடனாய்ப்பகை  நண்பொடு  இல்லான்

தோன்மாண்பு  அமைந்த  புனைநல்லறம்  துன்னி  நின்ற

சொன்மாண்  பமைந்த  குழுவின்சரண்  சென்று  தொக்க

நன்மாண்பு  பெற்றேன்  இது  நாட்டுதல் மாண்பு  பெற்றேன்


      அவையடக்கம்.


கற்பால்  உமிழ்ந்த  மணியம்கழு  வாதுவிட்டால்

நற்பால்  அழியும்  நகைவெண்மதி  போல்  நிறைந்த

சொற்பால்  உமிழ்ந்த  மறுவும்மதி  யால்க  மீஉவிப்

பொற்பா  இழைத்து  கொளல்பாலர்  புலமை  மிக்கார்


முந்நீர்ப்  பிறந்த  பவழத்தொடு  சங்கு  முத்தும்

அந்நீர்  உவர்க்கும்  எனின்யாரவை  நீங்கு  கிற்பார்

இந்நீர  என்சொல்  பழுதாயினும்  கொள்ப  அன்றே

பொய்ந்நீர  அல்லாப்  பொருளால்விண்  புகுதுமென்பார்

 


1.   நாமகள்  இலம்பகம்.



நாட்டு  வளம்  :

 

செந்தமிழ்  கலை  அறிந்த  செம்மாப்  புலவர்களும்

            வெண்தாமரை  அமர்ந்த  நாமகளும்  திருமகளும்

கோணாத  கோல்  கொண்ட  கொற்றவன்  மேல்  காதலுடன்

            குடிமக்கள்  குடிகொண்ட  நாட்டின்  வளம்  நானுறைப்பேன்                 1

 

செவ்விளநீர்  காய்  முற்றி  மரம்  துறக்கும்  தென்னைகளும்

            மது  சொட்டும்  மலர்களை  சிரம்  கொண்ட  கமுகுகளும்

பழம்  வெடித்து  சுளை  பிறக்கும்  பலாமரத்  தோப்புகளும்

            எப்போதும்  எழில்  கொடுக்கும்  ஏமாங்கத நன் நாட்டுக்கு                    2

                                   

வெண்மேக  கூட்டங்கள்  விண்வெளியில்  உலா  வர – அவை

            தாகத்தால்  சமுத்திரத்தின்  நீருண்டு  உடல்  கருக

மோகத்தால்  மதிமயங்கி  அவை  மோதி  ஒலி  ஒளிக்க

            மாதம்  மும்மாரி  பெய்யும்  ஏமாங்கத  நாட்டினிலே                                3

 

மலை  மகளின்  கண்களிலே  வெண்மதி  போல்  நீர்  கொட்ட

            மலருக்கு  அலைகின்ற  வண்டினம்  போல்  தென்றல்  வர

மலர்  கணையான்  கைத்திறத்தால்  மங்கையரும்  ஆடவரும்

            ஏமாங்கத  நாட்டினில்  தான்  எப்போது  மகிழ்ந்திருப்பர்            4

 

தேன்  அருவி  மலை  இறங்கி  வான்  வழி  போல்  கொட்டும்

            இந்திரனின்  மணிவடம்  போல்  காண்பவர்  கண்  கட்டும்

வானரங்கள்  கனி  எடுக்க  மந்தியுடன்  முட்டும்

            ஏமாங்கத  நாட்டினிலே  அழகு  மிக  சொட்டும்                                          5

 

வள்ளல்கள்  கைசிவக்க  பொருள்  அள்ளித்  தருவது  போல்

            மழை  வெள்ளம்  மலை  செல்வம்  அத்தனையும்  உடன் ஏற்று

ஊர்தோரும்  புரண்டோட  ஊர்  மக்கள்  பெரும்  இன்பம்

            ஏமாங்கத  நாட்டுக்கு  என்றென்றும்  ஓர்  சிறப்பு                                       6


வெள்ளம்  எனும்  கன்னிக்கு  மென்முலை  போல்  மணல்  திட்டும்

            மலையருவி  சீர்தந்த  மற்ற  அரும்  பொருள்களுடன்

சிரம்  வைத்து  கரம்  பற்றி  அலை  கோர்த்த  நுரை  கொண்ட

            கடல்  என்னும்  கணவனுக்கு  அவன்  நுகர  சென்றதங்கு                       7

 

குத்தி  மதம்  அடக்கி  களிறு  வேட்டை  ஆடுதல்  போல்

            வெள்ளத்தின்  வேகம்  தணிய  வாய்க்காலில்  படல்களிட

நற்குல  மங்கையரின்  கற்பைப்போல்  அவ்வெள்ளம்

            ஏரி,  குளம்,  அணை  என்று  நீர்நிலைகள்  நிறைந்தனவே                      8

 

படலிட்டும்  அடங்காமல்  பாய்ந்தோடும்  நீர்  ஒலியும்

            கரை  காக்கப்  போராடும்  காளையர்கள்  பேரொலியும்

பம்பை  பறை  ஒலியும்  ஆர்பரிக்கும்  கடல்  ஒலியும்

            ஏமாங்கத  நாட்டினிலே  எண்திசையும்  முழங்கிடுமே                            9

 

சேறு  மணங்கமழும்  செழுமை  மிக்க  வயலினிலே

            வரிகொண்ட  விறால்  மீன்கள்  தறி  கெட்டு  ஓட்டமிட

எருமையும்  எருதையும்  ஏரினில்  பூட்டி  உழும்

            உழவர்கள்  எண்ணிக்கை  விண்மீனாய்  இருந்தனவே                           10

 

நிலமகளை  மனம்  தொழுது  வெண்முளை  நெல்  விதைப்பர்

            நாற்றங்கால்  நாற்றெடுத்து  நடவு  செய்ய  நாள்  குறிப்பர்

நடவு  நடும்  நாரிகைகள்  எண்ணிக்கையை  கணக்கெடுத்து

            முன்  நாளே  அழைத்திடுவார்  முதல்  நடவு  செய்வதற்கு                      11

 

செந்தனம்  மேல்  சேறு  படும்  நாற்றின்  முடி  பிரிக்கையிலே

            அங்கிருந்த  கயல்கள்  எல்லாம்  அஞ்சி  குதித்தோடிவிடும்

கவரிமான்  கன்றருந்தி  மீந்த  பாலை  முலை   சொரியும்

            பால்  மணத்தால்  மீன்களெல்லாம்  பாய்தனவே  தாமரை  மேல்         12

 

நாற்று  நடும்  உழத்தியரின்  பாட்டொலியின்  ஆரவாரம்

            கார்கால  முகிலெழுப்பும்  கடும்  முழக்கம்  என்றெண்ணி

மயில்  கூட்டம்  அகவுவதை  குயில்  கூட்டம்  மனம்  அஞ்சி

            காதலனின்  பிரிவு  கொண்ட  காதலி  போல்  ஒதுங்கியது                     13


கழனி  வாழ்  உழவருக்கு  கைவளையாள்  மது  ஊட்ட – அவன்

            சிந்திய  மது  உண்டு  மயக்கத்தில்  இள அன்னம்

கன்னி  நாரையுடன்  கலவியதை  கண்ட  பேடை  மயில்

            ஆண்மயிலுக்கு  அதை  காட்டி  அறிவுதனை  புகட்டியதே                     14

 

காதலியர்  கண்களென  குவளபூவை  களையாது  விட

            கன்னியவள்  முகமென்று  தாமரையை  தவிர்த்து  விட

களையெடுக்க  வந்தவர்கள்  தன்  காதலியின்  உடலழகை

            ஏழு  சுரங்களுடன்  இசைக்கும்  நிலை  உழவர்  நிலை      15

 

சூலுற்ற  பச்சைப்பாம்பின்  தோற்றம்  போல்  நெற்பயிர்கள்

            கீழோர்  கை  செல்வம்  போல்  தலை  நிமிர்ந்த  நெற்கதிர்கள்

தெளிந்த  நூல்  கற்றோராய்  சிரம்  வணங்கும்  முதிர்ந்த  கதிர்கள்

            ஏமாங்கத  நாடு  கொண்ட  எழில்  வளமே  பெரியதாகும்        16                                

 

மீன்  கண்ணின்  இடம்  அளவு  வெற்றிடமாய்  இல்லாமல்

            தேன்  இறாலின்  திரட்சியுடன்  கன்னல்  வளர்  காடுகளும்

களிர்  மறையும்  வளப்பமுடன்  நெல்  வளர்ந்த  நெடுநிலமும்

            வானவரும்  போற்றுகின்ற  வளம்  கொழிக்கும்  நாடிதுவே                   17

 

கதிர்  அறுத்த  கழனிகளில் வாளைமீன்கள்  கலைந்தோட

            நெற்கட்டின்  சுமை  அதிர  கமுகு  மரம்  பழம்  உதிர

நெற்போரின்  நெடு உயரம்  வான்  முகிலை  தடை  செய்ய

            சுமை  தாங்க  முடியாமல்  நில  மகளும்  நிலைகுலைந்தாள்                18

 

எருமைகளும்  எருதுகளும்  போரடித்து  நெல்  பிரிக்க

            பிரித்த  நெல்லை  காற்றினிலே  தூற்றி  அதன்  தரம்  பிரிக்க

செந்நெல்  குவியலெல்லாம்  பொன்மலை  போல்  உயர்ந்திருக்க

            சோறுடை  பெரு  நாடென்ற  பெயர்  கொண்ட  ஏமாங்கதம்                19                                            

 

குவளை  விழி  கோதையர்கள்  குளிர்  குளத்தில்  நீராட

            பாலாடை  மேகலையோ  வடம்  இற்று  மணி  சிதற

சிதைந்த  மணி  அத்தனையும்  சேர்த்தெடுக்க  ஆளின்றி

            வாவிகள் கொண்ட நீரினிலே  விண்  மீனாய்  மிதந்தனவே                   20


மடுக்கலில்  மலர்  மேய்ந்த  கருங்குன்று  எருமை  எல்லாம்

            மடி  சுரந்த  பாலெல்லாம்  தாரையாய்  நிலம்  நனைய

தன்  மகவு  பாலருந்த  தானிருக்கும்  மனை  ஏக

            மங்கையர்கள்  தந்த  கலன்  மடிப்பாலால்  நிரம்பியது                           21

 

அவள்  கண்ணில்  அவன்  உருவம்  எப்போதும்  குடியிருக்க

            அவள்  மீது  காமத்தை  ஒழியென்று  அவள்  ஊட

எழில்  மிகுந்த  மேகலையை  அவன்  எட்டி  பிடித்திழுக்க

            அறுந்த  மணி  அத்தனையும்  சிதறியது  பொறி  தணலாய்                  22

 

கொடியிடை மங்கையர்கள்    கொவ்வை  வாய்  மது  உமிழ

            இளம்  புன்னைகள்  பூத்தன  இசை  வண்டுகள்  ஆர்த்தன

மாடங்கள்  ஒவ்வொன்றிலும்  வின்மீன்கள்  மலர்ந்தன

          வாழை  முகைகளோ  பெண்  மென் தனம் போல்  மலர்ந்தன               23  

                             

உணவுக்கு  கூடங்கள்  ஆயிரம்  அறத்திற்கு  இறைநிலம்  ஆயிரம்

            கொடி  இடை  மங்கையர்கள்  கோலம்  போடுமிடம்  ஆயிரம்

செய்தொழில் தினம்  ஓம்பி  செமையோர்கள்  ஆயிரம்

            மங்கலங்கள் ஆயிரம் என மலர்ந்திடும்  நிகழ்வுகள்  ஆயிரம்               24


 

நற்தவம்  செய்வோர்கள்  நாடிடும்  நாடு  இது

            இல்லற  தருமத்தில்  நெறிகாப்போர்  நாடு  இது

நிலை  செல்வம்  கல்வியை  கற்றுத் தரும்  நாடு  இது

            நிலையா  பொருள்  ஈட்ட  விரும்புவோர்  நாடு  இது                                 25

 

நகர்  வளம்  : 

           

ஏமாங்கத  நாட்டில்  உள்ள  எழில்  நகரம்  ராசமாபுரத்தில்

            விண்  தொடும்  மரங்களும்  வீங்கெழில்  சோலைகளும்

குயில்  இசை  மயக்கத்தில்  குதித்தாடும்  மயில்களும்

            கண்  இமை  அசைவின்றி  காணலாம்  அவ்வழகினை                            26

 

துடியிடை  கன்னியர்  குளித்திடும்  பொய்கையில்

            சந்தனக்  குழம்புடன்  நறுமலர்கள்  மிதந்திட

மெய்  அணி  சுண்ணமும்  பூசிடும்  புனுகுவும்

            கார்குழல்  புகையுடன்  கலந்தங்கு  இருந்தன                                             27


சுவை  மிகு  கரும்பையும்  சோற்றின்  கவளத்தையும்

            விரும்பியே  உண்டிடும்  மலை  நிகர்  வேழங்கள்

கல்  மதில்  உட்புறம்  மரக்கதவுகள்  பின்புறம்

            கருமேகக்  கூட்டமாய்  சூழ்ந்த  நல்  நகரமாம்                                            28

 

தேரினால்  பொன்  சிதறும்  தேரோட்ட  பயிலிடமும்

            பொன்மாலை  அணிந்திட்ட  பரி  ஏற்ற  பயிற்சியும்

கேடயம்  துணை  கொண்டு  வாள்  வீச  கற்றலும்

            தனித்தனி  கூடம்  தான்  தனிச்  சிறப்பு  அந்நகரில்                                  29

 

இடை  நகர்  தோற்றம் :

 

பல  தொழில்  செய்திடும்   புறநகர்  கடந்திட்டால்

            இடைநகர்  அடையலாம்  மருத  நிலந்தனில்

இடி  என  முழங்கிடும்  அலைகடல்  ஓசை  போல்

            மக்களின்  பேச்சொலி  மருதத்தில்  முழங்கிடும்                                       30

 

செந்நிறப்  பொடியுடன்  பொன்  துகள்  சேர்த்து

            சந்தனக்  குழம்புடன்  பன்னீர்  தனை  கலக்கி

தையலார்  மென்கரம்  தாங்கிய  துருத்தியால்

            வீதியில்  சிதறின  இந்திர  தனுசு  என                                                           31

 

கார்மேக  காதலால்  மேல்  நோக்கும்  மயில்களாய்

            பொன்  மாட  உச்சியில்  தொங்கிடும்  மணிக்குடங்கள்

மாடத்தில்  உலா  வரும்  முகில்  கொண்ட  உரசலால்

            மழை  கொட்டும்  அருவியாய்  மாடமும்  அழுதத ங்கு                       32

 

உலர்ந்திடும்  நெல்லை  காத்திடும்  அணங்குகள்

            கவர்ந்திடும்  கோழிமேல்  பொன்  காதணி  எறிந்தனர்

சிறு  தேர்  யானை  மேல்  ஊர்ந்திடும்  மழலைகளை

            காதணி  தடுத்திடும்  செல்வத்தின்  நகர்  இது                                            33

 

பூவையும்  பொன்னையும்  அணிந்திடும்  பூவையர்

            புருவத்தின்  வில்  கொண்டு  விழியம்பு  எய்துவர்

வேல்  கொண்டு  போராடும்  வீரத்திருமகன்கள்

            கன்னியர்  கை அணைக்கும்  வின்னவர்  நகரம்  இது               34   

                                         

எள்  விழ  இடம்  இல்லை  ஈரொன்பது  மொழியுண்டு

            திரண்டிடும்  மக்கள்  வந்து  நகரினில்  நிறைவதுண்டு

பறவைகள்  வாழ்ந்திடும்  பழமரத்  தோப்புகளுண்டு

            மண்ணில்  விண்ணுலகமாகும்  மருதநிலம்  அந்நகரம்                           35

 

அகழியின்  தோற்றம்  :

 

ஒளிமுத்து  மாலைகள்  சூடி  ஒடிந்திடும்  இடையுடனும்

            கமல  மொட்டு  தனத்துடனும்  கயல்  ஒத்த  விழியுடனும்

தத்தை  கைகொண்ட  மகளீர்  தத்தைக்கு  அன்னம்  எண்ணி  காட்டும்

            தாமரை  மலர்கள்  கொண்ட  அகழியின்  அழகைக்  காண்போம்       36

( தத்தை  :  கிளி  )

 

கொன்றிடும்  தன்மை  உடைய சுறாமீன்கள்  முதலைக்கூட்டம்

            உண்டிட  ஆட்கள்  இன்றி  உலாவரும்  அகழி  தன்னில்

பகைவரின்  உலாவைக்  கண்டு  பதறிடும்  இறாமீன்கள்

            கலக்கிடும்  அகழி  நீரை  பறந்திடும்  அன்னங்கள்  எல்லாம்             37

 

வண்டுகள்  முழங்கும்  ஒலியால்  இணையுடன்  இருக்கும்  அன்னம்

            தாமரை  மலரின்  மீது  தனிமையில்  போய்  தங்கியது

சுற்றத்தை  விட்டு  நீங்கி  பிறவி  துன்பத்தை  நீக்குதற்கு

            மாதவம்  செய்யும்  முனிவரின்  மாண்பினை  ஒத்திருக்கும்                  38

 

பொன்  வெள்ளி  மண்குடங்கள்  நீரினில் அமிழா  வண்ணம்

            மென்மலர்  கொண்ட  நீர்துறை  மங்கையர்கள்  குளியலாலே

கொங்கைகள்  கொண்ட  குங்குமம்  கரைந்திடும்  தன்மையாலே

            நீரெல்லாம்  சிவந்து  காணூம்  நிறைந்திடும்  மணத்தினாலே              39

 

மதிலின்  தோற்றம்  :

 

 பகைவர்கள்  அகழி  தாண்டி  பற்றினால்  மதிலின்  சுவரை

            சதக்கினி  பொறியை  கொண்டு  சாய்க்கலாம்  நூறு  பேரை

தூக்கியே  எறியும்  பொறியும்  பேய்  யானை  பாம்பு  பொறியும்

            கூற்றுவன்  பொறியும்  கொண்ட  விண்  தொட்ட  மதில்களாகும்        40


கட்டிப்  பிடித்து  முறுக்கும்  சங்கிலி  பொறிகள்  உண்டு

            கொலை செய்யும்  தன்மையுள்ள  வனவிலங்கு  பொறிகள்  உண்டு

அம்பினை  மழையாய்  பொழியும்  விற்பொறிகள்  மிக்க  உண்டு

            வரையின்றி  தொடர்ந்து  தாக்கும்  வாள்பொறிகள்  வசதியுண்டு       41

 

கொல்திறன்  அதிகம்  கொண்ட  குதிரைப்  பொறிகள்  உண்டு

            கற்களைக்  காராய்  உமிழும்  கவண்  போன்ற  பொறிகளுண்டு

நெருப்பினை  நீர்  போல்  கொட்டும்  தீப்பொறிகள்  அதிகம்  உண்டு

            மனிதனின்  தலையைத்  திருகும்  மரப்பொறிகள்  மதிலில்  உண்டு    42

 

அழகிய  ஆந்தைப்  பொறிகள்  அன்னம்  வடிவுடைய  பொறிகள்

            உருக்கிய  செம்பைக்  கொட்ட  எறிந்திடும்  வெம்மைப்  பொறிகள்

கொதித்திடும்  நெய்யைச்  சொரியும்  கொப்பறை  போன்ற  பொறிகள்

            யவ்வனர்  அறிவின்  திறனால்  அமைந்தன  மதிலின்  மேலே                43

 

வைரமணி  பதித்த  கதவுகள்  வஞ்சியரின்  முகம்  போலாகும்

            வைரம்  பதித்த இரு  கூடங்கள்  வனிதையரின்  தனம்  போலாகும்

வானளாவி  பறக்கும்  கொடிகள்  கோதையரின்  கூந்தலாகும்

            வைரஒளி  அகழி  நீரே  மதில்  பெண்ணின்  ஆடையாகும்                      44

 

அகநகர்  தோற்றம்  :

 

பூமியிலே  பொன்  எடுத்து  பொன்னை  சாரளாய்  தெளித்து

            பொருளற்ற  வறியவர்கள்  பொருள்  பெற்ற  பாக்கியத்தால்

மறுமையில்  விண்ணுலகம்  செல்லும்  குடியுடைய  உள்நகரம்

            தேவலோகம்  ஒத்த  அதன்  சிறப்பினை  சிறிது  காண்போம்                45

 

பரத்தையர்  சேரியின்  தோற்றம்  :

 

கொவ்வை  வாய்  செவ்விதழும் செம்பவள  தொண்டையுடனும்

            தோழியர்  வந்து  கூறும்  காமத்தின்  தூதினாலே

ஆயிரத்தெட்டு  கழஞ்சி  பொன்னுக்கு  அழகிய  தன்  மேனி  தந்து

            காமத்தை  நுகர்ந்து  மகிழும்  கிழத்தியர்  இடத்தை  சொல்வோம்     46

 

குங்குமக்  குழம்பினாலே  குளிர் வாசல்  திண்ணை  மெழுகி

            சந்தன  மணம்  கமழும் சயனறை  மாலைகள்  தொங்க

சுவர்களில்  காமம்  பொங்கும்  சுந்தர  ஓவியங்கள்  வரைந்து

            மென்மலர் படுக்கை கொண்ட விண்ணவரும் விரும்பும்  சேரி             47

 

செம்மணி  மாலைகள்  சுமையில்  சிற்றிடை  துவண்டு  சரிய

            அழகிய  தனங்கள்  மீது  அப்பிய  சந்தனமும்  பொடியும்

தூய்த்ததால்  உதிர்ந்ததன்  மேல்  மொய்த்திடும்  வண்டுகள்  வீழ்ந்து

            கிடந்திடும்  முற்றம்  மணக்கும்  மன்னரும்  மகிழ்ந்து  தங்குவர்          48

 

சிலம்புடன்  மேகலையும்  சேர்ந்து இசைத்திடும்  குழலின்  ஓசையும்

            மென்விரல்கள்  மீட்டி  எழுப்பும்  மகரயாழ்  இன்னிசையும்

செம்பவள  வாய்  உதிர்க்கும்  பாட்டுகள்  மெட்டின்  ஒலியும்

            பரத்தையர்  வாழும்  இடம்  வானுலகம்  போன்றதாகும்                         49

 

வண்டுகள்   மொய்க்கும்  மலரை  மாலையாய்  சூடிய  மங்கைகள்

            அகில்  புகை  மூட்டத்தாலே  ஆதவன்  அங்கு  மறைய

பகல் அது  இரவாய்  போக  பாவையர்  அணிகலன்களால்

            இரவது  பகலாய்  மாறும்  காமனின்  சேரிகளெல்லாம்                           50

 

சந்தன  குழம்பு  கொண்டு  தரையினை  மணக்க  மெழுகி

            அகிற்புகை  வெண்கடுகு  தூவி  வணிகர்கள்  கடை  திறந்து

யவ்வன  பெட்டிகள்  கொண்ட  முத்துமணி  வைரம்  குவித்து

            பகலினை  இரவாய்  ஆக்கும்  கருநீல  மணிகள்  வைத்தார்                  51

 

அணிகலன்  வைக்கும்  போது  சிதறிடும்  பொருட்கள்  தன்னை

            கையது  மீண்டும்  கொள்ளா  குபேரனை  ஒத்த  வணிகர்கள்

பழக்குலை  கமுகு  கொண்டும்  பசும்பொன்  மணிகள்  கொண்டும்

            கடையினை  அழகு  செய்யும்  சிறப்பினை  செப்பல்  அரிது                 52

 

நெரிசலால்  மக்கள்  கூட்டம்  நடந்திட  இடம்  இல்லாமல்

            ஒர்மார்பு  கொண்ட  சந்தனம்  எழுவர்  மார்பு  பூசுமாறு

தேன்  கூட்டு  வண்டுகள்  போல்  நெருக்கிடும்  வணிகர்  வீதியில்

            எழுந்திடும்  ஓசை  தன்னை  எழுத்தினில்  வரையா  வளமை                53


தெருக்களின் தோற்றம்  :

 

முரசொடு  சங்கு  ஒலிக்கும்  மங்கையர்  பூண்ட  அணிகள்  ஒளிரும்

            மூட்டிட்ட  அகிற்புகை  எழும்பி  முகிலென  ஞாயிறை  மறைக்கும்

குடையோடு  குடை  உரசும்  களிறோடு  களிர்  நெருக்கும்

            தெருக்களின்  அழகைக்  காண  தேவையோ  ஆயிரம்  கண்கள்          54

 

அலைகடல்  ஓலியைப்  போல்  ஆர்த்திடும்  தேவர்கள்  பூஜை

            பூஜையை  சேவிக்க  வந்த  மன்னர்கள்  முடியும்  முடியும்

மோதியே  எழுப்பும்  ஒலி  முகில்  மோதும்  மின்னலைப்  போல்

            காண்பவர்  கண்கள்  கூசும்  ராசமாபுர   வீதிகள் தோறும்                      55

 

சிறு  ஊடல்  கன்னியரை  செல்லமாய்  கணவன்  இழுக்க

            சிற்றிடை  மேகலை  வடம்  இற்றிட  தரையில்  சிதற

பொன்  நிற  மணிகள்  எல்லாம்  பூமியில்  சிந்தி  கிடப்பது

            வானவில் கீழே  வந்து  வந்து  தரை  தவழ்ந்த  அழகை  தரும்                56

 

வெள்ளிய  அரிசின்  உணவும்  மணந்திடும்  நெய்யின்  கறியும்

            கட்டித்தயிர்  துவையலுடன்  உண்டிடும்  மாந்தர்  ஒருபுறம்

மலையருவி  கொட்டும்  நீர்போல்  மதநீர்  சொரியும்  யானைகளும்

            சிட்டென  பறக்கும்  பரிகளும்  சிறுவர்களின்  ஓசைகள்  ஒருபுறம்      57

 

இன்னிசை  சிந்தும்  சங்கொலியும்  எண்திசை  கேட்கும்  முழவொலியும்

            மான்விழி  மகளீர் மேனி  பூண்ட  அணிகலகள்  மென்  ஒலியும்

நரம்புடன்  காற்றில்  இசைக்கும்  மகரயாழ் தேன்  குழல்  ஒலியும்

            நடந்திடும்  நதிகள்  எழுப்பும்  சல  சல  ஒலிகள்  ஒருபுறம்                      58

 

துடியிடை  மங்கையர்  ஆடும்  பந்துகள்  ஒலியைக்  கேட்டு

            பஞ்சி  ஒத்த  இறகுகள்  கொண்ட  அன்னங்கள்  அஞ்சி  ஓடி

முத்துமணி  பதித்த  மாடத்தின்  உச்சியில்  அமர்ந்த  நிலை

            முழுமதி நீ துணையே என்று நம்பியது போல்தோன்றும்                        59

 

மனைவியர்  மார்பின்  சந்தனம்  உலர்ந்திட  மூட்டிய  அகிற்புகை

            முகிலென  திரண்டு  எழுந்து  வானினை  சூழ்ந்து  நிற்க

காதணி  அணிந்த  ஒளியில்  காதலிகள்  செவ்விய  முகம்

            மேகத்தின்  இடையே  காணும்  முழுமதி  போல்  தோன்றும்                  60


வெண்நிற  மாடம்  நிற்கும்  செந்நிற  அழகிய  மகளீர்

            வெற்றிலை  பாக்கு  மடித்து  வனஅரசன்  போல்  இருக்கும்

கணவனின்  வாய்  கொடுத்து  கை  மாலை  செம்பகம்  வாங்கி

            முத்துக்கள் அணிந்த தங்கள்  முகில்  குழலில்  சூடிக்கொள்வர்            61

 

மைகொண்டு  வாளாய்    நீண்ட மயக்கும்  விழி  கொண்ட  மகளீர்

            மார்பு கொண்ட  சந்தன குழம்பு  மணவாளன்  மார்பில்  பதிய

கொங்கையால்  உழுது  தூய்க்கும்  கொள்ளையற்ற  இன்பம்  தன்னை

            விரும்பியே  இணைந்து  பெறுவர் ஐங்கணையான் வரத்தினலே         62

 

அனிச்சைப்பூ  மென்மையுடைய  ஆரணங்கின் அழகிய சிலம்பு

            கணவனின்  சிரத்தைத்  தொடும்  கவிழ்ந்த  பூ  மஞ்சம்  படும்

காமத்தை  நுகரும்  மக்கள்  இரவு  பகல்  அறியாததால்- அந்நகர்

            இரவு  பகல்  இன்றி  இருக்கும்  வானுலகை  ஒத்து  இருக்கும்                 63

 

செவ்விதழ்  மங்கையர்  தரும்  செல்வமாம்  இன்பம்  உண்டு

            செழித்த  அந்த மாநகரில்  செல்வமாம்  பொருளும்  உண்டு

வீரக்  கழல் கொண்ட  வீரர்களின்  செல்வமாம்  வீரம்  உண்டு – என

            தேவர்கள்  இமைக்கா  நோக்கும்  செவ்விய  நகர்  ராசமாபுரம்            64

 

திங்கள்  முக்குடை   உடைய  அருகனின்  ஜினாலயங்கள்

            திகழ்ந்திடும்  இராசமாபுரம்  வீதிகள்  ஒவ்வொன்றிலும்

வேள்வியும்  விழாவும்  அங்கு  விடாமல் தொடர்ந்து  வர

            வெண்சங்கொடு மத்தளஓசை முழங்கிடும்  எந்நாளும்  அங்கு            65

 

அரண்மனைச்  சிறப்பு  :   

 

நாற்திசை  அகழி  சூழ்ந்து  நடுவினில்  அரண்மணை  அமைத்து

            அகழியின்  ஆழம்  கருதி  அலைகடல்  சுறாக்கள்  பேணி

வான்  எல்லைக்  காணச்  செல்லும்  மதிலினை  முகில்கள்  தடுத்து

            வானுலகம்  கண்டு  அஞ்சும்  வளராதே  என  இறஞ்சியது                      66

 

மேகத்தின்  கெஞ்சல்  கேட்டு  மேக  மண்டலத்தில்  நின்று

            தன்னிடம்  பறக்கும்  கொடிகள்  விண்ணினை  அழைத்தற்கொப்ப

நால்வாயில்  கோபுரக்  கதவுகள்  நல்மணிகள்  பதிந்து  தொங்க

            கோபுரத்தின் உச்சி  மாலைகள்  திருமாலின்  மாலைக்கொப்பும்        67


சந்தனம்  பூசிய  மேனியில்  சங்கீன்ற  முத்துமாலை  மகளீர்

            தேன்மலர்  சூடிய  கூந்தலும்  செங்கனி  பிளந்த  இதழ்களும்

துள்ளிடும்  இளமையோடு  தூண்டிடும்  காமன்  கணையால்

            காமத்தில்  ஆடும்  சோலை  இந்திரனின்  கற்பகச்சோலை                   68

 

ஆண்  யானை  தன்னையாளும்  பெண்  யானையை  நோக்கி  நிற்கும்

            பெண்மானின்  அழகைக்  கண்டு  ஆண்  மானின்  விழிகள்  ஏங்கும்

பொன்னோடு  வெள்ளி  கொண்டும்  பொருந்திய  சிலைகள்  அங்கு

            மன்னனின்  காமத்தீயை  வளர்த்திடும்  வசந்தமண்டபம் உண்டு      69

 

இனிய  குயில்  பாட்டிசைக்க  எழில்  தும்பி தன்  யாழ்  மீட்ட

            மலர்  வண்டு  மத்தளத்தில்  மயில்  அங்கு  நடனம்  இட

பூ  மரங்கள்  பூச்சொரிய  சூழ்ந்திருக்கும்  தோப்புகளை

            நீக்கினால்  உயிரது  நீங்கும்  நினைத்தால்  உயிர் தொடரும்                 70

 

பந்தடும்  இடங்கள்  எல்லாம்  பனிமுத்துக்கள்  பதிந்திருக்கும்

பொன்  ஒளியில்  சித்திரங்கள்  புதிது  புதிதாய்  அழகு  செய்யும்

நவமணிகள்  கொண்டு  அங்கு  நட்ட  தூண்  வரிசையாலே

            வானுலகம் பெயர்ந்து இங்கு வந்தது போல் காட்சி தரும்                        71

 

மும்மத  நீர்  சொரிந்து  முகபடாம்  கொண்ட  கரிகள்

            காற்றினும்  வேகம்  கொண்ட குதித்தோடும்  பரிகள்  கூட்டம்

ஓடிடும்  தேர்கள்  கூடி  ஒலித்திடும்  பெரும்  இரைச்சல்

            ஆழியின்  ஆரவாரமாய்  அமைந்திடும்  அந்த இடம்                                 72

 

வேந்தனைக்  காத்து  நிற்கும்  வீரர்கள்  துயிலும்  கூடமும்

            திறை  இறை  கப்பம்  வைக்கும்  செம்பொன்  கருவூல அறையும்

மணமலர்  அணிந்த  கூந்தலார்  அணிகலன்  வைக்கும்  மாடமும்

            போர்கள  ஆயுதங்கள் கொண்டு  பொதிந்திட்ட  அரண்மனையது     73

 

கடைக்கண்  பார்வையாலே  காளையர்  மெய்யின்  வெப்பம்

            நெஞ்சினை  சுட்டுத்  தாக்கும்  பாவையர்  கூத்தின்  அரங்கம்

போரினில்  தோற்று  நின்ற  பகைமன்னர்  தேவியர்கள்

            வழிபட்டு  வாழ்நாள்  கழிக்கும்  ஜினாலயாமும்  அங்கு  உண்டு           74


குறவையர்  கூத்தின்  ஒலியும்  காண்பவர்  கைகள்  ஒலியும்

            பாட்டுகள்  இசையின்  ஒலியும்  பக்க  இசை  கருவிகள்  ஒலியும்

மகரயாழ்  மீட்டும்  ஒலியும்  மங்கையர்கள்  சிரிப்பின்  ஒலியும்

            நெஞ்சமே  மகிழ்ந்து  நிற்கும்  நித்தமும்  இனிதே  கழியும்                     75

 

சச்சந்தன்  வரலாறு  :

 

கச்சையணிந்த  கன்னியர்கள்  கனவில்  உலவும்  சச்சந்தன்

            பெரும்  நஞ்சு  கொண்ட  பாம்பாய்  பகைவர்  மேல்  சினமுடையான்

பணிந்து  தஞ்சம்  கேட்டோர்க்கு  பாற்கடல்  அமுதம்  ஆனவன்

            ஏமாங்கத்தின்  எழில்  மன்னன்  ஏந்திழை  விசயின்  மணவாளன்       76

 

திருமகள்  விரும்பி  நோக்கும்  திண்ணிய  தோள்  உடையான்

            இயல்  இசை  நாடகத்தில்  ஈடில்லா  திறன்  உடையான்

வறியோற்கு  அள்ளிதரும்  வளம்  பெற்ற  கரம்  உடையான்

            பகைவரின்  தேர்  படையை பந்தாடும்  வலிமை  உடையான்               77

 

கடல்  சூழ்ந்த  உலகாளும்  வெண்கொற்ற  குடையாலும்

            உலகத்து  மக்கள்  மேல்  உள்ளம்  கொண்ட  பரிவாலும்

அவன்  ஆளும்  நிறையாட்சி  அரும்  மாட்சி  பெற்றதாலும்

            காவலன் மேல்  காதலினால்  களிக்கிறது ஏமாங்கதம்                            78

 

செல்வம்  கொழிக்கும்  நாட்டின்  பெரும் செறுக்குடையான்  சச்சந்தன்

            வந்தவர்க்கு  அள்ளித்  தந்து  வருணனுக்கு  வாரிசானான்

எதிரிகளின்  உயிர்  எடுக்கும்  எருமையுடை  எமனுமானான்

            அருள்  மனதில்  அன்பனாகி  அணங்குகளின்  காமன்  ஆனான்      79

 

விசயையின்  தோற்றம்  :                                

 

நீர்வளம்  கொழித்து  நிற்கும்  விதேகத்தின்  மன்னனுக்கு

            தாமரை  வாழ்  திருமகளாம்  தன்  மகளே  விசயையென்பாள்

இளம்பிறை  புருவமுடன்  எறிந்திடும்  வேல்  விழிகளுடன்

            திருத்தமாய்  செதுக்கி  வைத்த  செவ்விய  பூஞ்சிலையாவாள்             80

 

இளமூங்கில்  தோளுடனும்  இருண்ட  சுருள்  குழலும்

            குளிர்  திங்கள்  இளம்பிறைபோல்  குறைகாணா  நூதலுடன்

சித்திரை முழு  மதிமுகமும்  தேன்  தளும்பும்  செவ்விதழும்

            எள்ளுப்பூ  நாசியுடன்  எழில் கொண்ட ஏந்திழையாள்                             81

 

மான்  மருள்  விழிகளிலே  செவ்வரிகள்  படர்ந்திருக்கும்

            மாயோனின்  பாற்கடல்  போல்  மங்கையவள்  முகம்  ஒளிரும்

மகரமீன்  வடிவினிலே  செவிகள்  குண்டலங்கள்  கொண்டிருக்கும்

            வானகத்து  தேவதை  போல்  வண்ணமயிலாய் இருப்பாள்                    82

 

குலை  தள்ளா  இளங்கமுகின்  மரகத  மணிக்  கணுவாய்

            நீருண்டால்  வெளிதெரியும்  நீர்சங்கு  நிற  கழுத்தும்

காற்றினிலே  அசைந்தாடும்  மூங்கில்  ஒத்த மென்  தோள்களும்

            செங்காந்தள்  விரல்களுடன்  கரம்  கொண்ட  கன்னியவள்                  83

 

செங்கமல  மொட்டுகள்  போல்  செதுக்கி  வைத்த  கொங்கைகளும்

            வடகங்கை  சுழல்கள்  நாணும்  வலம்புரி  கொப்பூழ்  சுழியும்

இலைபோல்  படர்ந்திருக்கும்  இளஞ்சிவப்பு  வயிற்று  அழகும்

            வானுலக  மங்கை  ஒருத்தி  மண்ணுலகம்  வந்தாள்  என்பார்               84

(  கொப்பூழ்  :  தொப்புள்  )

 

கண்  அறியா  அசைவுடைய  கை  அணையும்  சிற்றிடையை

            கண்டவர்கள்  இல்லை  என்பார்  காணாதவர்  உண்டு  என்பார்

நாகப்பாம்பின்  படம்  ஒத்த  நன்மணியால்  செய்த  மேகலை

            இடை  சுற்றி  வீற்றிருக்கும்  இளம்பரிதி  செந்நிறமாய்                           85

 

வெண்யானை  துதிக்கையும்  வெட்கமுறும்  அவள்  தொடையால்

            இளம்  வாழைத்  தண்டாக   இரு கால்களும்  திரண்டிருக்கும்

மகரம்  போல்  வடிவில்  செய்த  குரங்கு  செறி என்னும்  அணி

            செம்பஞ்சித்  துடையினிலே  சேர்ந்து  தனி  அழகு  தரும்            86

 

நீட்டலும்  குறுக்கலும்  இல்லா  நிறைந்த கரும்சுருள்  குஞ்சும்

            அம்பினை  போட்டு  வைக்கும்  அம்பறா  தூணி  போன்றும்

ஆடுதசை  இடம்  பெயரா  அமைப்புடைய  கணுங்கால்கள்

            அமைவதில்லை  மற்றவர்க்கு  அமைந்தது  தான்  நம்  விசைக்கு        87


முத்துப்  பரல்  இட்டு  செய்த  கிண்கிணியும்  பாடகமும்

            அணிந்த  இடம் வலியில்  வருந்த  அதை  கண்டு  சிலம்பு  நகைக்க

இளஆமை  முதுகினைப்  போல்  இரு  பாதங்கள்  அழகு  தனை

            போற்றிப் புகழ்வார்க்கு புலன்  உணர்வு  கலங்கி  விடும்                        88

 

திருமகளின்  பேரழகுடனே  செவ்விய  மெல்  விரல்களில்

            நுனியது  தடிப்பு  இன்றி  செம்பஞ்சி  நகங்கள்  உண்டு 

இலவம்  பூ  இதழைப்  போல  மென்  பஞ்சு  சிற்றடிகள்

            ஏழடி  நடந்து  சென்று  ஒரு  காதம்  போல்  வருந்தும்                                89

 

இத்தகைய  எழிலை  கொண்ட  ஏந்திழையால்  விசயை

            சச்சந்தன்  தன்  மனதில்  சித்திரமாய்  எழுதி  வைத்து

காதல்  என்னும்  நீர்  பாய்ச்சி  காமம்  என்னும்  மலர்  தூவி

            அவன்  நினைவின்  இன்பந்தனை  இயம்புதற்கு  மொழியுமில்லை    90

 

தான்  சிந்தும்  மதநீரை  தானே  உண்ணும்  மதகளிறை

            தன்  நாட்டில்  கொண்டிருக்கும்  விதேகத்தின்  முடிமன்னன்

வீட்டுச் செல்வம்  விசயை  மனம்  வேங்கை நிகர்  சச்சந்தன் மேல்

     தாமரையில் வீற்றிருக்கும் திருமகளாய் மோகம் கொண்டாள்           91  

                   

ஏமாங்கத  நாட்டு  மன்னன்  ஏறு  போன்ற  சச்சயந்தன்

விதேகத்து  மன்னனிடம்  பெண்  கேட்டு  செய்தி  சொல்ல

மகள்  கொண்ட  காதலாலும்  மந்திரிகள்  கருத்தினாலும்

            விசயை  என்னும்  பேரழகியை  விவாகம்  செய்து  வைத்தான்             92

 

செவ்விதழ்  சிந்தும்  தேனை  வண்டென  உண்ணும்  மன்னன்

            கவளத்தை  உண்ணும்  களிறாய்  காட்சிக்கு  பொருந்தலானான்

அன்பொடு  இன்ப  முயக்கத்தில்  அன்னங்கள்  அரவங்கள்  போல

            புணர்ச்சியில்  புரண்ட  அவர்கள்  போகபூமியர்  செல்வம்  ஒப்பர்       93

 

மணமலர்  தொடுத்த  மாலை  மெய்யிலே  பூசிய  சுண்ணம்

            அறுசுவை  ஊண்டியோடு  அகில்  புனுகு  சந்தனமும்

ஐம்பொறி  நுகர்ந்து  மயங்க  அடைந்திடும்  இன்பத்தோடு

            ஈருடல்  ஓருயிர்  ஆகி  இருவரும்  மயங்கினர்  அங்கு                               94


தடையின்றி  தூய்க்கும்  இன்பம்  சாந்தணிந்த குழலை கலைக்க

            மாவடு  கண்கள் இரண்டும்  மயங்கியே  ஊடல்  கூடலெழுப்ப

ஊடிய  காலத்தில்  அவளடி  சிரசினில்  சிலம்பொலி  எழுப்ப

            கூடிய காலத்தில்  மேகலை  குறுவோசை கொண்டு  முடியும்               95

 

அணிகளால்  ஒளியை  வீசும்  அழகிய  இளம்  தனங்கள்

            ஒரு  கோட்டில்  எழுதியதாய்  நெளிந்திடும்  மெல்  சிற்றிடையும்

காதணி  குண்டலம்  பொருந்திய  கனிமுகம்  கொண்ட  விசயையுடன்

           மாரிகால மேகம் பெய்வது போல பொழிந்திட்டான் இன்பம் தனை    96 

                  

பவழவாய்  அமுதம்  உண்டு  கொடியிடை  கொங்கையில்  தங்கி

            இடிபடும்  மாவைப்  போல  உணர்வுடன்  உடலும்  துவள

ஐம்பொறிக்கும்  இன்பம்  ஊட்டி  அனுபவித்த  சுகத்தினாலே

            மண்ணுலக  கடமைகளை  மறந்திட்டான்  சச்சந்தன்                              97

 

வேழம்  நிகர்  சச்சாயந்தனுக்கு  கட்டியங்காரன்  ஒரு  அமைச்சன்

            கண்ணும்  இமையும்  போல  மன்னனும்  மந்திரியும்  தோழராவர்

மன்னருக்குரிய  சிறப்பினை  தந்து  மக்களுக்கு  முறசறிவிக்க

            கட்டியங்காரனை  அழைத்து  செப்பினான்  தன் முடிவை                     98

 

பரி  படை  மிகவும்  கொண்ட  அரிஞ்சயன்  மார்பில்  உதித்து

            முற்பிறவி  என்  வரத்தால்  பிறந்தவள்  தான்  என்  விசயை

அவள் மேல் உள்ள  அன்பினாலும்  அவளை  நீங்கா நெஞ்சினாலும்

            அரசனாக  நீ பொறுப்பு ஏற்று  ஆட்சி  செய்  ஏமாங்கதத்தை                 99

 

கட்டியங்காரன் உள்  மனதில்  கவிழ்ந்திருந்த  எண்ணம்  தனை

            காவலன்  சச்சயந்தன்  சொல்ல  களிப்புற்ற உள்ளத்தோடு

பட்டத்து  யானையின்  மேல்  படர்ந்திடும்  பட்டு  மெத்தையை

            நாயின்  மேல்  இட்டதாகும்  நான்  அரசை  ஏற்றால்  என்றான்              100

 

கட்டியங்காரன்  மறுத்து சொல்ல  சச்சயந்தன்  தன்  நிலையை  கூற

            அவன்  காலடி  தொழுது  நின்று  கனிவுடன்  உரைக்கலானான்

காதலியின்  கட்டணைப்பில்  கட்டுண்டு  பேரின்பம்  காணீர்

            கவலையற்று நீங்கள் இருக்க  காத்திடுவேன்  இவ்வுலகை  என்றான் 101


நிமித்திகன்  எனும்  பெயருடைய  நேர்மைநெறி  கொண்ட ஓர்  அமைச்சன்

            மன்னனை  வணங்கி  நின்று  மறுத்திட்டான்  மன்னன்  செயலை

சச்சயந்தன்  ஊழ்வினையே  சனியாகி  நாவில்  அமர

            பொறாமையில்  புலம்புகிறாய்  போய்  விடு  இங்கிருந்து  என்றான்  102

 

சத்தியம்  தர்மம்  நேர்மை  தன்  அகத்தே  கொண்ட  நிமித்திகன்

            அமைச்சனாக  என்  கடமையோ  அரசனுக்கு  நலம்  உரைத்தல்

சச்சயந்த  மாமன்னனே  சற்று  நீர்  செவிமடுப்பீர்

            பெண்  இன்ப  மயக்கத்தில்  பழியடைந்தோர்  பலருண்டு                     103

 

பெருந்தவத்தான்  பிரம்மதேவன்  திலோத்தமையை  மோகித்து

            அவள்  சென்ற  திக்கு  காண  நான்முகனாய்  வடிவெடுத்தும்

திலோத்தமையை  அடையலின்றி  தெய்வலோக  வாழ்விழந்து

            தவம்  செய்து  பாவம்  தீர்த்தும்  பழிநிலைத்து  போனதன்றோ             104

 

பாண்டவர்  ஐவர்  சேர்ந்து  பத்தினி  ஒருவர்  ஆகி

            பெற்றிட்ட  பழியை  போக்க  பிறவியில்  யாரும்  இல்லை

காமத்தால்  பிறந்த  பழியை  கருமத்தால்  அழித்தல்  இல்லை

            இம்மையில்  மட்டும்  இன்றி  மறுமையிலும்  நரகம்  தொடரும்             105

 

ஆயிரம்  கண்  இந்திரனும்  அறிவுடை  அமைச்சன்  சொல்  கேட்பான்

            இந்திரனை  ஒத்த  நீயும்  நிமித்தனின்  மொழியை  ஏற்பாய்

மானனைய  மனைவி  விசயைக்கு  மாபெரும்  துன்பம்  செய்யும்

            ஓரறிவு  உடையவனானாய்  உருத்ரதத்தன் நான் செப்புகின்றேன்     106

 

அமைச்சர்கள்  வாய்மொழி  கேட்ட  அரிமாநிகர்  சச்சந்த மன்னன்

            அவரவர்  தவத்திற்கேற்ப  அமைவதே  இன்பம்  எல்லாம்

வாழ்நாளில்  வாழும்  வாழ்க்கை  வரையறை  கொண்டுள்ளதால்

            நிலையாமை  பற்றி  எனக்கு  நீ  உரைக்க  வேண்டாம்  என்றான்        107

 

தருமநீதி  கட்டளையால்  இடித்து  கூறல்  அமைச்சன்  கடமை

            இதை  உணர்ந்த  காரணத்தால்  நான்  உனக்கு எடுத்துரைத்தேன்

மங்கை  விசயை  இன்பந்தனை  மனம்  மகிழ்ந்து  அவளை  புணர்க

            நின்  தவறை  நான்  காணாமல்  நிமித்தன்  நான்  துறவு  எற்பேன்      108


எதிர்  வரும்  தீமை  தன்னை  எண்ணம்  ஏற்கா  சச்சயந்தன்

            இரவு  பகல்  காலமின்றி இன்பத்தில்  திளைத்திருந்தான் 

இன்பப்  படையெடுப்பில்  இருவருமே  மோதிக்  கொள்ள

            ஆனிப்பொன்  முத்தென  ஜீவகன்  அவள் கருவில் வந்துதித்தான்       109

 

கரு  தரித்த  நாள்  அன்றே  விசயை  கண்டிட்டாள்  கனவு  மூன்று

            மீளாத கனவு துயரத்தால் மங்கை அவள்  அஞ்சிட்டாள்

கை  நிறை  பூவும்  சந்தனமும்  கருத்தில்  பதிந்த  கனவுடனும்

            அறவாழி  ஜினாலயத்தில்  அருகன்  அடி  பணிந்திட்டாள்                      110

 

சமணத்தின்  புனித  மரம்  அசோகம்  கிளை  முறிந்து  விழ

            கிளை  ஒடிந்த  மரத்தின்  கீழ்  சிறுகன்று  அசோகம்  வளர

வளர்கின்ற  கன்றின்  மேலே  மணிமுடியும்  எண்  மாலைகளும்

            மனதில்  கண்ட கனவை  மன்னனுக்கு  எடுத்து சொன்னாள்                 111

 

சச்சந்தன்  தன்  தேவிக்கு  கனவு  பலன்  கூறலானான்

            பெருமரத்தைப்  பற்றி  அவன்  பொருளொன்றும்  கூறாமல்

சிறு  கன்று  உன்  மகன்  தான்  சிறப்பான  மன்னன்  ஆவான்

            எட்டுமாலை  அவன்  மணக்கும்  எண்பெரும்  தேவி  என்றான்             112

 

அசோகமரம்  முறிந்த  பலன்  ஆரணங்கு  அவனை  கேட்க

            அரசனான  எனக்கு  வரும்  ஒரு  தீங்கு  அது  என்றான்

பொன்  வளையால் விசயை  பொறுக்கவில்லை  அவன்  மொழியை

            தன்  உயிர்  பிரிந்ததை  போல்  தரை  தொட்டாள்  மயக்கத்தில்           113

 

கனவின்  பலன்கள்  எல்லாம்  பலிப்பதில்லை  நீ  அறிவாய் - என

தென்றல்  எனத்  தழுவி  மன்னன்  தேற்றினான்  தன்  மனைவியை

இன்பமொழிகள்  பல  கூறி  ஏந்திழையை  மடி  இருத்தி

            தன்  தேவி  மகிழ்ந்திருக்க  தாதிகட்கு  ஆணையிட்டான்                        114

 

தங்கமகன்  கருவில்  வளரலானான்  தாய்  அவள்  தளரலானாள்

            செவ்விய  வாய்  வெளுத்து  சிறு  இடையும்  பருத்து

கண்களில்  பசலை  தெரிய  கை  வயிறு  முன்  பெருக

            அவள்  கொண்ட  பேரழகு  அனுதினமும்  மங்கியது                                 115


அறிவு  என்னும் ஓர் அமைச்சன்  அறிவுரைத்தான்  வேந்தனுக்கு

            அறநிறியை  நீ  மறந்தாய்  மறநெறியில் மனம் வைத்தாய்

காமம்  என்னும்  கள்  குடித்து  நல்வினையை  நீ இழந்தாய்

      விண் எழும்பும் ஊர்தி ஒன்றை விரைவாய் நீ செய் என்றான்         116      

                             

சிற்பக்கலை  தேர்ச்சி  பெற்ற  சிறந்த  ஒரு  தச்சனிடம்

            செம்மையுடன்  வானில்  செல்ல  விண்ணூர்தி  செய்ய  சொல்ல

பலவகைத்  துகில்கள்  நூலும்  பசை  மெழுகு  அரக்கு  சேர்த்து

            வான்வழி  பறந்து  செல்லும்  மயில்  பொறி  ஒன்றமைத்தான்              117

 

சச்சந்தன்  கற்றுத்  தந்தான்  மயிபொறியை  இயக்குதற்கு

            வஞ்சியவள்  தேர்ந்து  நின்றாள்  வான்பொறியின்  விசையறிந்து

விண்  தவழும்  மேகம்  தொடும்  வலப்புறமாய்  கை விசை  இயங்க

            தரை  பணிந்து  நின்றுவிடும்  இடப்புறமாய்  இயக்கினாலே                 118

 

முறைப்படி  நாட்டைப்  பெற்ற  முதல்  அமைச்சன்  கட்டியங்காரன்

அறநூல்  அறிந்த  அறவோரை  அவன்  பகையாக்கிக்  கொண்டு

செய்நன்றி  முற்றும் துறந்த  தீயத்  தன்  குணத்தினாலே

            மன்னனை  மாய்ப்பதற்கு  மனதினிலே  திட்டங்கொண்டான்              119

 

மன்னனுக்கு  பகையான  மாபெரும்  தெய்வம்  வந்து

            மன்னனைக்  கொள்வாய்  என  இரவு  பகல்  சொல்கிறது

என்ன  நான்  செய்வதென்று  எனக்கு  வழி  தெரியவில்லை

            மாண்புமிகு மந்திரிகளே  மறுமொழி  கூறுங்கள்  என்றான்                  120

 

இடி கேட்ட  பெரும்  நாகம்  என  பயங்  கொண்ட  மந்திரிகள்

            கட்டியங்காரனின்  கீழ்மையை  கருத்தினில்  கொண்டதனால்

நம்பிய அரசனை  அழித்தால் நலம்  குலம்  செல்வம்  சிதறும்

            வேந்தன்  காட்டிய  வழியில்  குல  செல்வம்  காக்கும்  என்றார்             121

 

மண்ணுலக  மக்கள்  மொழிவர்  மன்னரும்  தேவரும்  ஒன்றென

            தேவரைக்  காட்டிலும்  அரசன்  தேர்ந்த குண  மேலோர்  ஆவர்

 அரசனின்  அருளைப்  பெற்றால்  அடையலாம்  நன்மைகள்  பல       

மன்னனின் கோபம் என்றும் மண்ணுலகை விட்டு  நீக்கும்                    122

 

தெய்வத்தை  வாழ்த்தி  நின்றால்  தேவையில்  நன்மை  செய்யா

            தெய்வத்தைத்  தூற்றி  பேச  செய்யாது  அழித்தல்  தன்னை

அரசனே கண்  உறங்கினாலும்  அவன்  மனம்    உலகையாளும்

            கண்  இமையா  தெய்வத்தாலே  அசுரர்  கை  அறங்கள்  காக்கா         123

 

தீயினை கை  தொட்டால்  சுடும்  மன்னன்  சினத்தீ  வேரோடழிக்கும்

            மணந்த  மனையாளை  விட்டோன் மன  துன்ப  நோயால்  சாவான்

நம்பியவரை  வஞ்சித்தோனும்  நாடியே  பிறன்மனை  சேர்ந்தோனும்

            இம்மையில் குஷ்டநோய் தாக்கி மறுமையில் நரகம் அடைவர்            124

 

ஆற்றலில்  மிக்க  அமைச்சன்  அறம்  ஓம்பும்  தருமதத்தன்

            அறிவுரை  இன்னும்  பல கூற  அனைத்தையும்  புறத்தே  தள்ளி

விற்புருவம்  நெறிந்து  உயர  விழிகளில்  தீப்பொறி  பறக்க

            வேந்தனும்  வானுலகு  செல்வான்  நான்  புவியாள்வேன்  என்றான்     125

 

கொடியவன்  கட்டியங்காரன்  கொண்டனன்  மனதில்  சூழ்ச்சி

            அரசனை  சார்ந்தோரெல்லாம்  அடைத்திட்டான்  சிறையில்  தள்ளி

அவன் சொல்லைக் கேட்டோர்க்கெல்லாம்  அளித்திட்டான் பதவி  பொருளை

            சேனைகள்  சூழச் சென்று  சூழ்ந்திட்டான் சச்சந்தன் மனையை          126

 

வாயில்  காப்போன்  விரைந்து வந்து  வேந்தனை  பணிந்து  சொன்னான்

            நெடுநில  மன்னா  போற்றி  நீண்டமுடி  அரசே  போற்றி

நல்லற  வேந்தே  போற்றி  நெறிநிறை  மார்பா  போற்றி

   கட்டியங்காரன் படைகள் உமை வெட்டிட வந்துள்ளது  என்றான்  127 

                         

பூமியில்  பிறப்பும்  இறப்பும்  அவரவர்  வினைப்பயனாகும்

            பொன்பொருள்  வரவும்  நீக்கம்  முன்பிறப்பின்  நல்தீவினையே

நடப்பது  வினையின்  செயலென  நீக்கிடு  உன்  நெஞ்சக்  கவலையை

      அரசியின் அருகே வந்து நின்று அன்புடன் தழுவிச் சொன்னான்    128 

                  

நல்வினைப்  பயனால்  நமக்கு  அமைந்தது  மயில்பொறி  ஒன்று

            மயில்பொறி  ஏறி  அமர்ந்து  மாளிகையை  விட்டகல்  என்றான்

பஞ்சமந்திரத்தை  நாவிசைக்க  பத்தினியும்  பொறி  மேல்  அமர 

            விசயையும் ஐந்தெழுத்தைக் கூற விண்ணிலேபறந்தது மயில்பொறி 129


குவளைமலர்  விழி  வழியும்  கொதிவெப்பக்  கண்ணீரோடு

            விசயை  வானில்  சென்ற  பின்பு  வேந்தனும்  கடுங்கோபத்துடன்

கூர் படிந்த  வாளை  உருவி  கேடயத்தை  பரிதியாய்  சுற்றி

            இடி  முழங்கும்  சிங்கமாகி  சிதறச்  செய்தான்  எதிரி  படையை         130

 

வேந்தனின்  சீற்றம்  கண்டு  விற்படை  அம்புகள்  பொடிய

            மன்னனின்  வாளின்  வேகம்  மதகரி  மத்தங்கள்  பிளக்க

தனியொரு  ஆளாய்  நின்று  சாய்த்ததால்  துரோகிப்  படையை

            கட்டியங்காரன்  சினந்து  களிறினை  செலுத்தி  வந்தான்                      131

 

உள்ளிருந்த  சக்கரத்தால்  மன்னனின்  கேடயம்  பிளக்க

            வெகுண்டெழுந்த  சச்சயந்தன்  வெட்டினான்  அவன்  களிறை

வீரவாள்  முறிந்து  போக  எதிரி  வீரர்கள்  விரைந்து  சூழ

            பாரதப்போரில்  அபிமன்யுவாய் பார்வேந்தன்  தனியே  நின்றான்     132

 

சக்கரமும்  வேலும்  உடலை  தாக்கியே  பிளந்து  அழுத்த

            உடல்  சோர்ந்தும்  மனம்  தளரா  மன்னனும்  சினந்து  நோக்க

வெங்கதிரோன்  மறைவது  போல்  வேந்தனவன்  உயிர்  பிரிய

            ஏமாங்கத்தின்  சான்றோர்கள்  கைகுவித்து  புலம்பினார்கள்               133

 

 முத்து  மாலைகள்  அணிந்து  வெண்கொற்றக்  குடையின்  கீழ்

            பாய்ந்திடும்  பரிகள்  பூட்டிய  பொன்வேய்ந்த  தேர்  அமர்ந்து

அம்பினை  மழையாய்  பெய்து  எதிரியை  நடுங்கச்  செய்யும்

            சச்சந்தன்  எல்லாம்  விட்டு  தரை சாய்ந்து போரில்  மாய்ந்தான்         134

 

நிலமகள்  மடியில்  வீழ்ந்த  நெறிநிறை  சச்சந்தன்  உடலை

            ஈமப்படுக்கையில்  கிடத்தி  அரண்மனை  அழகு  மகளீர்

கயல்விழி  நீரைக்கொட்டி  காவலன்  உடலைக்  கழுவி

            கார்முகில்  மின்னலைப்  போல்  குழல்  கலைய  புலம்பினார்கள்        135

 

தந்திர  சிறுநரி  ஒன்று  ஆண்  சிங்கத்தைக்  கொன்று  விட்டு

            சிங்கத்தின்  இருப்பிடத்தில்  சிறுநரி  அமர்ந்தது  போல்

அறமற்ற  கட்டியங்காரன்  அரண்மனை  வந்து   சேர்ந்து

            யானை  மேல்  முறசறைந்து  ஏமாங்கதத்தின்  வேந்தனானான்          136



சீவகன்  பிறப்பு  :

 

மனம்  கொண்ட  கலக்கத்தாலும்  உடல்  இருந்த  தளர்ச்சியாலும்

            வான்  பறந்த  மயில்பொறியை  தென்றலென  செலுத்தி  செல்ல

கட்டியங்காரன்  வெற்றி  முரசு  கடல்  சீறும்  ஒலியாய்  கேட்க

            வேல்  பட்ட  பெண்  மானாய்  வீழ்ந்திட்டாள்  மனம்  மெய்  சோர         137

 


மூர்ச்சித்து  விசயை  சாய்ந்ததாலே  பொறிவிசை  இடபுறம்  அழுந்த

            நகர்  தாண்டி சென்ற  மயில்பொறி  தரை தாழ்ந்து மெல்ல  இறங்கியது

இறங்கிய  இடமோ  இருட்டில்  சுடுகாடு  என்று  அறியாமல்

            மயில்பொறி  ஆசனத்தில்  மயக்கத்தில்  விசயை  இருந்தாள்               138

 

வானத்து  மேகம்  போல  பிணப்  புகை  சூழ்ந்திருக்க

            பேய்களும்  நடுங்கும்  அந்த  பாழும்  சுடுகாட்டின்  நடுவில்

இருளின்றி  ஒளி  பரப்பும்  மணி  விளக்குகள்  சுடர்  எழுப்ப

     ஜீவகன்  பிறந்தான் அங்கு திருமகளோ துன்பம்  மறந்தாள்           139   

                            

என்  மகன்  ஏமாங்கதத்தில்  இளவரசாய்  பிறாந்திருந்தால்

            ஈராறு  வருடங்களுக்கு  இறை  தரல்  நீங்கியிருக்கும்

பகையரசர்  சிறையை  விட்டு   தங்கள்  நாடு  சென்றிருப்பர்

            பொற்குவியல்  தினம்  தினமும்  மக்களுக்கு  கொடுத்திருப்பார்            140

 

பொன்மணிகள்  நீ  அணிந்து  பொன்  இழைத்த  தொட்டிலிலே

            சுற்றி  நின்று  உறவினர்கள்  சுந்தரமாய்  தாலாட்டு  பாட

நிமித்திகர்கள்  கூடி  அங்கு  உன்  ஜாதகத்தை  கணித்திருக்க

            பாவலர்களும்  புலவர்களும்  பொன்குவியல்  பெற்றிருப்பர்                  141

 

ஊளையிடும்  நரி  முழக்கம்  பிணம்  வேகும்  நெருப்பொளியும்

            கோட்டானின்  குரல்  ஒலியும்  பேய்  உலாவும்  நிழல் அசைவும்

வெண்பஞ்சி  மெத்தையின்றி  சுடுகாட்டு  மேடையிலே

            என்  தீவினையின் பாவத்தால் பிறந்திட்டாய்  என்று  அழுதாள்             142

 

சுடுகாட்டில்  தெய்வத்தின்  உதவி  :

 

ஏமாங்கத  நாட்டின்  ராணி  எழில்  மங்கை  விசயமாதேவி

            தன்  மகனின்  நல்வினையை  தன் மனம் உணர  முடியாமல்

என்  செய்வேன்  இவன்  வளர  என்றெண்ணி  அழுகையிலே

            செண்பகமாலை  எனும்  பெயரில்  கூனியாய்  தெய்வம்  வந்தது         143


சுடுகாட்டில்  உறையும்  தெய்வம்  இவள்  துணைக்கு  வந்ததனால்

            உள்ளத்து  கவலை  தனை  உதறினால்  சிறு  பொழுது

தெய்வ  வடிவில்  வந்த  தேவி  செப்பினாள்  விசயை  இடம்

            செந்தாமரை வாழ்  திருமகளே  இத்துன்பம்  எனது  பாவம்  என்றாள் 144

 

உன்  திருமகன்  சொல்  கேட்டு  இப்புவியுலகம்  அடிபணியும்

            அறமற்ற  பகைவனை  அழிக்க  அடலேறு  போல்  வளர்வான்

இவன்  வளர்ந்து  ஆளாக  இப்போது  ஒருவன்  வருவான்

            இவனை  எடுத்து  செல்வதை  காண்போம்  மறைந்து  என்றாள்          145

 

மழலையை  விட்டு  வைக்க  மலரனைய  மெத்தை  செய்தாள்

            தாய்  பால்  ஊட்டி விட்டு  தங்கமகன்  வாய்  துடைத்தாள்

பாலகனை மெத்தையில் கிடத்தி  பல  மணிகள்  தெளித்து  வைத்தாள்

  சச்சந்தன் மோதிரத்தை மகவின் கை பதித்து  மறைந்து  நின்றனர்  146 

                  

கந்துக்கடன்  மேற்கொண்ட  கடமை  :

 

இருள்  கொண்ட  சுடுகாட்டில்  ஒளி  கொண்டு  இருள்  கிழிய

            கந்துக்கடன்  எனும்  வணிகன்  கரிய  உடை கை வாளோடு

ஒளிவந்த  திக்கை  நோக்கி   ஒருவனாய்  தனியே  சென்று

            இளங்காலை  ஞயிறு  போல்  இருந்த மழலையை  கண்டான்               147

 

முத்திரை  மோதிரத்தை  எடுத்து  மறைத்து  கொண்டான் தன்னகத்தே

            இருகையால்  அவனை  அள்ளி  தன்  மார்பில்  சேர்த்தணைக்க

தும்பியது  அக்குறு  மழலை  சீவ  என  வாழ்த்தியது  அத்தெய்வம்

            பகை  அறுப்பான்  வேருடனே  என  பெற்ற  மனம்  வாழ்த்தியது         148

 

துஞ்சி  விட்ட  தன்  மகனை  சுடுகாட்டில்  விட்டு  விட்டு

            நன்மணிகள்  சிறப்புடைய  இம்மகனை  எடுத்துக்  கொண்டு

மகனை  இழந்த  மனைவியிடம்  அம்மகவை  கையில் கொடுத்து

            நின்  மகன்  சாதல்  இல்லா  நன்மகன்  தான்  என்றுரைத்தான்             149

 

சுநந்தை  மனம்  மகிழ்ச்சியிலே  சுந்தரனை  கை  வாங்க

            வலம்புரி  சங்குகள்  முழங்க  வாத்திய  கருவிகள்  ஆர்த்தன

மன்னனின்  மறைவினாலே  நாட்டில்  அழுகுரல்  துன்பக்  காட்சி

            கந்துக்கடன்  மகன்  வரவால்  மகிழ்ச்சி  ஒலி  பரவலாச்சி                      150


செல்வனான  கந்துக்கடன்  சீவகனை  வளர்த்தல்  எண்ணி

            பொன்  குவிந்த  நிதியறையை  பொங்கும்  மகிழ்வில்  திறந்து

இரப்போர்க்கும்  வறியவர்க்கும்  இரவு  பகல் பேதம்  இன்றி

            அள்ளி  அள்ளி  கொடுத்து  அகமகிழ்வில்  கை  சிவந்தான்                    151

 

நெஞ்சம்  நிறந்த  சச்சயந்தன்  நிலவுலகை  விட்ட  துன்பம்

            கல்  நிறைந்த  மயானத்தில்  குலவிளக்கை  பிரிந்த  துயரம்

நான்  செய்த  தீவினையால்  நேர்ந்ததென்று  புரண்டு  அழ

            தொடக்கமுதல்  முடிவுவரை  நடப்பதை  கூனி  சொன்னாள்                 152

 

சீவகனின்  பெருஞ்சிறப்பை  தெய்வம்  சொல்ல  கேட்ட  விசயை

            இனி  செய்யும்  செயல்களை  எனக்கெடுத்து  உரையும்  என்றாள்

இவ்விருளை  போர்வையாக்கி  அழகு  நிறை  மணல்  கடந்து

            அமரிகை  ஆற்றைக்  கடந்து  மறுகரை  செல்வோம்  என்றாள்            153

 

ஐபத்து  யோசனைகள்  நடந்தால்  அழகு  மதில்  கோபுரத்துடன்

            தாணிதிலகம்  நகர்  வரும்  தங்க  வேண்டாம்  அந்நகரில்

வண்டுகள்  மொய்க்கும்  வனமும்  நீர்  வற்றா  பொய்கையுடன்

            தவம்  செய்வோர்  வாழுகின்ற  தண்டகாரணியம்  அடைவோம்         154

 

இளவம்  பஞ்சு  திரள்  பாதம்  வாள்  பருக்கை  கல்  பதிய

            கொடி  போன்ற  இடை  வாட  குருதி  சிந்தும்  பாதத்துடன்

காட்டுவழி  தனில்  அசைந்து  அமர்ந்து  நடந்து  சென்று

            கைவீசி  மெய்  சோர்ந்து  தவப்பள்ளி  சென்றடைந்தார்கள்                  155

 

மாதவம்  செய்யும்  பெண்டீர்  எதிர் சென்று  அழைத்து  வந்து

            பாதங்கள்  துன்பம்  போக்கி  பாவையின்  கருத்தறிந்து

இப்பிறவி  துன்பம்  நீங்க  திருவற  வழியில்  செல்ல

            வளர்பிறை  நல்ல  நாளில்  அணிகலன்கள்  களைந்தார்கள்                 156

 

நற்மணம்  கமழும்  குழலை  சிரம்  தனை  விட்டு  நீக்கி

            மதிமுகம்  திலகம்  தன்னை  மென்விரலால்  அழித்து  போக்கி

காதணி  குண்டலத்தையும்  கழுத்தணி  மாலைகளையும்

            கணத்திடும்  உள்ளத்துடன்  கழற்றினார்கள்  விசயைக்கு அங்கு        157


கைவளைகள்  உடைத்து  நீக்கி  இடை  கொண்ட  மேகலை  போக்கி

            தொடையணி  குரங்கு  செரியும்  காலணி  சிலம்புகள்  கழற்றி

உடல்  கொண்ட  அணிகள்  துறந்து  பூ உதிர்ந்த  கொடியைப்  போல

            வெண்  நிற  துகில்  உடுத்தி  தவமகளாய்  காட்சி  தந்தாள்                    158

 

கூற்றுவனும்  கண்டு  அஞ்சும்  வேல்  உடைய  கந்துக்கடனும்

            கணவனின்  சொல்லை  மீறா  கற்புடைய  நிறை  சுநந்தையும்

சுற்றமும்  நட்பும்  கூடி  விரும்பிய  சான்றோர்  சேர்ந்து

            தெய்வம்  அன்று  கூறிய  சீவகன்  என  பெயர்  இட்டார்கள்                   159

 

ஆயர்பாடியில்  அன்று  வளர்ந்த  நந்தகோபன்  மகனைப்  போல

            சுநந்தையின்  தாய்ப்பால்  பருகி  சீவகன்  வளர்ந்து வந்தான்

கல்வி  கற்கும்  பருவம்  வர  கலைச்செல்வி  ஞானப்  பெண்ணை

            கந்துக்கடனும்  அவன்  மனைவியும்  மணம் செய்ய விரும்பினர்        160

 

நம்பியும்  அச்சணந்த  அடிகளும்  :

 

பொன்மணி  முத்துக்களை  குறுணி  அளவு  பரப்பி  வைத்து

            பொன்  மாலை கழுத்திலிட்டு  செம்பொன்  எழுத்தாணி  கொண்டு

பசும்பொன்  ஓலையிலே  பாலகன்  எழுதினான்  ஓம் ஸித்தந்நமஹா

            பெற்றவரும்  உற்றவரும்  பெருமையுடன்  பார்த்து  நின்றார்                161

 

எட்டெட்டு  கலைகளையும்  இயல்புடனே  கற்று  உணர்ந்து

            யானை  குதிரை  ஏற்றம்  தேரோட்டம்  வெற்றி  பெற்று

படைக்கலப்  பயிற்சிகளை  பார்வேந்தன்  போல்  பயின்று

            நிலமகள்  நெற்றி  கொண்ட  திலகமாக  அவன்  திகழ்ந்தான்               162

 

அவன்  ஆசிரியர்  அச்சணந்தி  அத்தனையும்  கற்று  தந்து

            ஆகம  நூல்கள்  சொல்லும்  அறவழியில்  நடந்து  சென்று

நற்காட்சி  நல் ஞானம்  நல்லோழுக்க  குணம்  கொண்டால்

            நான்கு  கதி  உயிர்க்கெல்லாம்  நல்லமுதம்  போலாகும்  என்றார்       163

 

ஐம்பொறி  அரவத்தினால்  அடைந்திடும்  இன்பம்  எல்லாம்

            தீவினை  நீத்தல்  இன்றி    துன்பத்துக்  கடலில்  வீழ்வர்

மனிதகதி  ஒன்றில்  மட்டும்  மோட்சமாம்  வீடு  கிட்டும்

            அப்பிறவி  பெற்ற  பயனை  அருகன்  நெறி  பற்றி  வாழ்வோம்            164



கருவறை  என்னும்  வயலில்  கருவென்ற  முத்தை  விதைத்து

            குழந்தையாம்  நாற்றை  நட்டு  குமரர்  பருவ  பயிர்  வளர்த்து

தீவினை  என்னும்  விலங்குகள்  மனிதப்  பயிறை  மேயா  வண்ணம்

            ஒழுக்கமாம்  வேலியிட்டால்  மோட்சமாம்  கதிர்கள்  கிட்டும்                165

 

நரகத்தை  நாடிச்  செல்லும்  தீவினை  எல்லாம்  போக்கி

            நற்காட்சி  ஞானக்  கதவில்  நல்லொழுக்க  தாழ்  பொருத்தி

நால்வகை  சரணம்  அடைந்து  வீடு  பேறடையும்  நெறியை

            அச்சணந்தி  தன்  மாணவனுக்கு  ஐயமற  விளக்கிச்சொன்னார்         166

 

அச்சணந்த  அடிகள்  சீவகனுக்கு  பிறப்பின்  ரகசியத்தை  உணர்த்தல்.

 

சீவகன்  பிறப்பைப்  பற்றி  சீவகன்  தெரிந்து  கொள்ள

            அச்சணந்தி   அவனை  அழைத்துச்  சென்றார்  பூம்பொழிலுக்கு

நாற்புறமும் நன்கு  நோக்கி  ஒற்றர்கள்  இல்லை  என  உணர்ந்து

            சீவகனின்  பிறப்பின்  கதையை  தெரிந்திட  உரைக்கலானார்            167

 

முதலமைச்சன்  கட்டியங்காரனின்  முறையற்ற  சூழ்ச்சியாலே

            சச்சயந்த  மாமன்னன்  தன்  மனைவி  விசயை  கனவுக்குப்  பின்

மயில்போறி  ஒன்றமைத்து  மாளிகையை  விட்டு  அனுப்பி

            வீரத்துடன்  போர்  செய்து  வீழ்ந்திட்டான்  அமைச்சனாலே                168

 

மயில்போறியும்  இறங்கியது  மக்கள்  புகா  சுடுகாட்டில்

            மாராணி  பெற்றெடுத்தால்  மதிமுகத்தில்  மழலை  ஒன்றை

சுடுகாட்டு  தெய்வம்  கூனியாய்  விசயைக்கு  உதவி  செய்ய

            மோதிர  மணி  முத்துடனே  மகவை  இட்டது  இருக்கை  மேலே           169

 

மரித்து  விட்ட  மகனை ஏந்தி  ஒரு  வணிகன்  அங்கு  வர

            தன்மகனை  தரையிலிட்டு  தூக்கினான்  அம்மகவை

தூக்கிய  கண  நேரத்தில்  தும்பியது  அக்குழந்தை - அப்போது

            வானத்தில் வாழும் தெய்வம் வாழ்த்தியது சீவ  என்று                              170

 

தங்கநிற  குழந்தையினை  தன்  மனைவி  கை  கொடுத்து

            நம்  மழலை  இறக்கவில்லை  இவன்  நம்  மகவு  தான்  என்றான்

அச்சணந்தி  சொல்  கேட்டு  அவன்  யார்  என சீவகன்  கேட்க

            நீ  தான்  என்று  கூறியதும்  நிலைகுலைந்து  தரைசாய்ந்தான்             171



மயங்கி  விழுந்த  சீவகனை  மணநீர்  தெளித்து  எழுப்பி  விட்டு

            உன்  பகைவன்  இன்னும்  உயிருடனே  இருக்கின்றான்

ஓராண்டு  காலம்  நீ  பொறுத்திருக்க  வேண்டும்  என்றார்

            வில்  வல்லான்  சீவகனும்  விரும்பி  ஏற்றான்  ஆணைதனை                  172

 

அச்சணந்தி  அடிகள்  தன்  வரலாறு  கூறல்  :

 

வாணராசி  ஆண்ட  மன்னன்  பரிதி  ஒத்த  உலோகபாலன்

            மகனுக்கு தன்  அரசு  தந்து  மாதவத்தை  ஏற்றுக்  கொண்டான்

மெய்  தவத்தான்  அரசனுக்கு தீவினையின்  பயன்கள்  சேர

            யானைத்தீ  என்னும்  பசியால்  தவம்  விட்டு  தெரு  நுழைந்தான்        173

 

கந்துக்கடன்  உணவருந்த  அமர்ந்திருந்தான்  நண்பர்களோடு

            பொற்கலத்தில்  நல்லுணவை  பொன்வளை நங்கையர்கள் இட 

நான்  நின்றேன்  நடைதனிலே நல்லான்மா  கந்துக்கடன் பார்க்க

            நல்  உணவு  அருந்த வருக என நட்போடு அழைதான் என்னை            174

 

போது  போதும்  என்னும்  அளவில்  பெய்தனர்  உணவில்  நெய்யை

            சக்கரைப்  பாகை  குடத்தில்  பெய்  பெய்  என  மகளீர்  பெய்ய

கடலில்  வெண்மலைகள்  இட்டு  கடலினை  தூர்ப்பது  போல்

விலாப்புறம்  பெரிதும்  புடைக்க  விருந்தினை  விரும்பி  உண்டேன்           175

 

நிலமது  தாங்கா  அளவு  பொன்நிதி  கொண்ட  கந்துக்கடன்  வீடு

            அருகன்நெறி  தவறா  நடக்கும்  அனைவருக்கும்  இல்லமாகும்

இல்லத்தில்  உனைக்  கண்டேன்  என்  யானைத்தீ  பசி  நீங்கியது

            முரசொலி  நாணும்  வண்ணம்  உன்  முழக்கம்  அன்று  கேட்டேன்      176

 

அச்சணந்தி  அடிகள்  தவம்  மேற்கொள்ளல்  :

 

முயன்றிடும்  தவங்கள்  தாயாக  எனை  உருவாக்கிய  தந்தையானீர்

            சீவகன் அச்சணந்த  அடிகளின்  திருவடி  தொழுது  சொன்னான்

அடிகளோ  அவனை  வாழ்த்தி  மனதினில்  பகைவர்  அழிவை  பொருத்தி

            நான்  தவநெறி  கொள்வேன்  என்ற   முடிவினை  உரைக்கலானார்   177

 

அடிகளின்  துறவு  கேட்டு  சுநந்தை  தீயிடை  வெண்ணையானாள்

            என்  மகன்  சீவகனை  விட்டு  செல்வதும்  நலமோ  என்றாள்

என்  வினைகள்  எல்லாம்  நீங்க  என்  தவம்  ஒன்றே  வழியென

            மகாவீரரின்  சமவசரணம்  நோக்கி  மாமுனியும்  நடக்கலானார்   178

 

                                          நாமகள்  இலம்பகம்  முற்றும்.                                              

  

1.    கோவிந்தையார்  இலம்பகம்.


 

அச்சணந்தி  பிறவி  நீத்தல்  :

 

ஆசையின்  வேரினை  அறுத்து  அருகனின்  நெறியைப்  பற்றி

            மகாவீரரின்  மலரடி  தொழுது  மாதவ  நோன்பை மனதில்  ஏற்று

நீரினில்  தோன்றி  மறையும்  நீர்குமிழி  போன்ற மனிதகதியின்

            பொய்யுடம்பை  மண்ணில்  விட்டு  வானவர்  தொழ  வீடடைந்தார்    179

 

சீவகன்  குமரன்  ஆதல்  :

 

நாகலோகம்  ஒத்த  ராசமாபுரத்தில்  களிறுகளை  பிளிர்ந்திட விரட்டி

            கொடி கொண்ட தேர்கள்  செலுத்தி குதிரகள்  மேல் காற்றாய் சென்று

படைகலப்  பயிற்சிகள்  பெற்று பாட்டுடன் இசை யாழும் தேர்ந்து   

            மலையொத்த திண்தோளுடைய மாவீரனாய் சீவகன் இருந்தான்      180

                       

பகைவர்கள்  அச்சத்தில்  பதுங்கும்  பார்த்தனை  ஒத்த  சீவக நம்பி

            காமத்துக்கு  மன்னன்  ஆன  காமனோ  இவன்  என்றெண்ணி

காந்தம்  போல்  கவர்ந்திழுக்கும்  கண்களை  கொண்ட  கன்னியர்

            கருத்தினில் காதல் துயரால் கலையிழந்து வாடி வருந்தினார்கள்      181                              

வேடர்  நிரை  கவர  எண்ணுதல்  :

 

மணமுல்லை  மலர்களின்  மேல்  மது  உண்ணும்  வண்டினங்கள்

            பசுக்கூட்டம்  கன்றை  எண்ணி  பால்  சொரிந்து  நின்றதனால்

கார்கால மேகத்தின் மழை என   முல்லை  அரும்புகள்  மலர்கின்ற

            மலை  மேலே  சிங்கம்  நிகர்  வேடுவர்கள் கூட்டம்  கூடினார்கள்         182                             

வேடர்  நிமித்திகனை  இகழ்ந்து  நிரை  கொள்ள  எழுதல்  :

 

அரசனின்  ஆநிரைகள்  வரும்  இவ்விளவேனில்  பருவத்தில்

            ஆநிரையை  கைப்பற்றி  அடைத்திடுவோம்  நம்மிடத்தில் – என

வேடன்  ஒருவன்  பகர்கையிலே  பறவை  ஒன்று  ஒலி  எழுப்ப

            நிமித்திகன்  அதை  உணர்ந்து  நேருவதை  சொல்லலானான்              183

 

 

ஆநிரைகளை  நீர்  கவர்வீர்  அரசன்  படை  தோற்றோடும்

            தேரினிலே  ஒருவன்  வருவான்  துரத்தி  நம்மை  வெல்வான் என கூற

ஒற்றைத்தேர் உடையவன் பெரிய  கூற்றுவனே  ஆனாலும்  சோதிடா

            எக்கேடும்  நம்மைத்  தீண்ட வாரா  கவர்வோம்  ஆநிரை  என்றார்     184

 

 

மது  நிறைய  குடித்தார்கள்  பறை  துடியை  அடித்தார்கள்

            வெற்றிமாலை  சூடுதற்கு  கொற்றவையைத்  தொழுதார்கள்

காரிப்புள்  எனும்  பறவை  ஆநிரையில்  அழிவுகுறி  காட்டியது

            சோதிடன்   சொல்கின்றேன்  நிறைந்த  காவல்  செய்யுங்கள்               185

 

 

வேடர்  நிரை  கவர்தல்  :

 

வானமும்  வான்மீனும்  போல்  வனத்தில்  பசுக்கள்  புல்  மேய

            வேடர்கள்  அம்பு  மழையால்  இடையர்கள்  சிதறி  ஓடினர்

தயிர்  கடையும்  மத்தின  பிணைந்திருக்கும்  கயிறு  போல

            ஆநிரையை  சூழ்ந்த  வேடர்கள்  அனைத்தையும்  ஓட்டிச்  சென்றார் 186

 

 

இடையர்கள்  செய்தி  சொல்ல  இடைச்சேரி  துன்பங்கொள்ள

            கன்றுகளைக்  கட்டிக்  கொண்டு  கதறினார்கள்  பசுக்கள்  இன்றி

பாறையாய்  தோய்ந்த  தயிரும்  பால்  நெய்யும்  ஆறுபோல்  ஓட

            அழிவுற்ற  ஆயர்  படை  விரைந்தது  அகழிசூழ்  மூதூரை  நோக்கி     187

 

 

கட்டியங்காரனுக்கு  செய்தி  சொல்லல்  :

 

புறம்  கண்ட  இடையர்  கூட்டம்  பூவிரி  முல்லை  நிலம்  கடந்து

            தேன்  சொரியும்  தாமரைகள்  திரண்ட  மருதம்  நிலம்  நீங்கி

சுறாமீன்கள்  சுழன்று  சுற்றும்  அகழி  சூழ்ந்த  மூதூரில்

அரசனுக்கு  செய்தி  சொல்ல  காவலரை  வேண்டி  நின்றார்கள்       188

 

வெண்சாமரை  மகளீர்  வீச  விரிந்த  செவி  குண்டலம்  ஒளிர

            அரியணையில்  வீற்றிருக்கும்  அரசன்  கட்டியங்காரன்  முன்னே

கைகுவித்து  அடிவணங்கிய  காவலர்கள்  கைகட்டி  நின்று

            ஆநிரையை  வேடர்  கொண்ட  அதிர்ச்சியினை  அறிவித்தார்கள்       189

 

கட்டியங்காரன்  படை  தோல்வியுறுதல்  :

 

செந்நிறம்  கொண்ட  விழிகளில்  தீயெழச்  சினந்து  நோக்கினான்

            கொல்வதில்  கூற்றுவனான  கொற்றவன்  கட்டியங்காரன்

கடல் போல்  பரந்திருக்கும்  நால்படை  படை தலைவர்களையும்

            காற்றென  விரைந்து  சென்று  கவருங்கள்  ஆநிரையை  என்றான்    190

 

மும்மத  நீர் கண்  பெருகும்  குன்றொத்த  களிறுகளுடனும்

            போர்த்  திறம்  கொண்டிருக்கும்  பரி  கொண்ட  தேர்களுடனும்

வேல்  கொண்ட  குதிரைப்  படையும்  வாள்  கொண்ட  காலாட்படையும்

            போர் முரசம் இடியாய் முழங்க பூமி அதிர புறப்பட்டது அரச படை   191

                       

புயலினால்  பொங்கும்  கடல்  போல்  போரிடும்  அரசர்  படையும்

            மாரி போல் அம்பைப் பெய்து  தாக்கிடும் வேடர்கள்  படையும்

போரினில் மன்னன் சேனை அழிய களிப்பினில் வேங்கையாய் வேடர்  சூழ

            பரிகளோடு களிறும்  தேரும்  பனிமலைகளாய்  சரிந்தது வீழ்ந்தன   192

                                   

வேடர்கள்  வில்லின்  வேகம்  வீசியது  சூறைக்  காற்றாய்

            பார்வேந்தனின்  படைகள்  எல்லாம் பறந்தன  காற்றின்  தூசாய்

வேடர்கள்  பசுக்கூட்டத்தோடு  விரைந்தனர்  வெற்றி மாலையோடு

            அல்லலில்  வருந்தினான்  மன்னன்  ஆழ்ந்திட்டன்  துக்கம்  தன்னில்  193

 

நந்தகோபன்  நிரை  மீட்போர்க்கு  தன்  மகளை  தருவதாக  முரசறைதல் 

 

வாள்  போன்ற  விழிகளுடனும்  மாசறுபொன்  மெய்  ஒளியுடனும்

            ஒடிந்திடும்  துடியிடை  கொண்ட  பூங்கொடியாள்  என்  மகளை

பசுக்கூட்டம்  கவர்ந்து  வரும்  பார்போற்றும் மா  வீரனுக்கு

            மணம்  முடிப்பேன்  என்று  கூறி  முரசறைந்தான்  நந்தகோபன்          194

 

சீவகன்  போருக்கு  எழுதல்  :

 

கருமுகில்  மோதும்  போது  கண்  படும்  மின்னலைப்  போல்

            தேன்  சொட்டும்  மாலையணிந்த  தேவன்  ஒத்த  சீவகனிடம்

ஆநிரையை  கவர்ந்ததாலே அவ்வூர் படும்  துன்பத்தை  எல்லாம்

            நேர்பட  ஒருவன்  சொன்னான்  நிம்மதி  வேண்டும்  என்று                    195

 

 

எண்குண  ஒழுக்கத்தாரையும்  எல்லாம்  துறந்த  துறவியரையும்

            தாயொத்த  பெண்களையும்  தழுவும்  சிறு  மழலைகளையும்

பால்  தரும்  பசுக் கூட்டத்தையும் பல் அறங்கூறும்  அந்தணரையும்

            துன்பத்தில்  காப்பேன்  என்று  சூளுரைத்தான்  சீவகன்  நம்பி              196

 

 

குதிரைகளை  நுகத்தில்  பூட்டி  தேரினை  தேர்வு  செய்தான்

            கையில் பெரும்  வில்லை  ஏந்தி  கணைகளை  தேர்ந்தெடுத்தான்

பரிதியின்  குளம்பால்  எழுந்த புழுதியால்  ஞாயிறு  மறைய

            வந்திடும்  சீவகனைக்  கண்டு சோதிடன்  வேடரை  தடுத்தான்             197

 

 

வேடர்  போரில்  தோற்று  ஓடுதல்  :

 

வேந்தனின்  படையை  அழித்த  வேடர்கள்  நாங்கள்  என்று

            துத்திரிக்  கொம்புகள்  ஊதி  கொக்கரித்து  சீழ்க்கை  ஒலித்து

எதிரொலி  எழும்புதல்  போல்  சங்கு  பறை  கொம்புகள்  ஊதி

            வேடர்கள் வில்  படையின்  மீது  சீவகன்  படையும்  மோதியது             198

 

சீவகனின்  திண்ணியத்தேர்  திசையெல்லாம்  காற்றாய்  சுழல

            எழும்பிய மண்  புழுதியாலும்  எண்ணத்தில்  மயக்கத்தாலும்

கருடனின்  சிறகின்  ஒலியால்  கருநாகம்  அஞ்சியது  போல்

            கருத்தில்  அறம்  இழந்த  வேடர் கலங்கி வீரம்  இழக்கலானார்            199

 

கார்கால  பெரும்  மழையை  காற்று  சீறிச்  சிதறுதல்  போல்

            வேடர்கள்  பொழியம்  அம்பை  வில்லால்  விலக்கிய சீவகன்

வேடர்கள்  கை  வில்லும்  அம்பும்  வீரத்தால் தான்  பொடியச்  செய்ய

            வேடர்கள்  பசுக்களை  விட்டு வேகமாய் மறைந்தனர் வனத்தில்         200

 

 

இராகுவின்  வாயில்  இருந்து  மதியினை  மீட்ட  திருமாலாய்

            வேந்தனின்  படையை  வீழ்த்தி  வேடர்கள்  கவர்ந்த  ஆநிரையை

சீவகன்  தன்  நண்பர்களுடன் செவ்வனே  மீட்ட  செய்தி  கேட்டு

            கோபித்தில் மன்னன் கொதிக்க குதுகலம்  கொண்டது  நகரம்            201

 

கற்புடை  மகளீர்  எல்லாம்  மாலைகள்  மாடத்தில்  கட்டி

            அகிற்புகை  சுண்ணம்  பொடியை  அளவின்றி  எங்கும்  தூவி

ஆநிரை  மீட்ட  சீவகன்  ஆண்டாண்டு  வாழ்க என்று

            வாழ்த்தியே வரவேற்றார்கள் மாடத்தில் மகிழ்ச்சியில் நின்று             202

 

 

மதுவினை  கொட்டும்  செவ்வாய்  மழலையின்  கொஞ்சும்  மொழியார்

            பொன்னிற  தனங்கள்  சுமையை  தாங்கிடா  இடைவெளிக்  கொண்டு

வெற்றியின்  திலகம்  கொண்ட  வேந்தனுக்கு  நிகராய்  நிற்கும்

            சீவகநம்பி பேரழகைக்  காண  பரத்தையர்  தெருவில்  நின்றார்         203        

          

அல்குலாம்  தேரின்  மீது  அழகிய  மணி  மேகலைக்  கட்டி

            அடங்கிட  கொங்கைகளை  பாய்ந்திடும்  பரியாய்  பூட்டி

புருவமாம்  வில்லை  வளைத்து  விழிகளை  அம்பாய்  கொண்டு

            காமனின்  விலைமகளீர்  படை  சீவகனின்  எதிரியாய்  நின்றனர்     204

 

வள்ளல் போல்  வாரி  வழங்க  மண்ணிலே  ஒருவன்  இருப்பான்

            கொல்லும்  கொடிய  வாட்போரில்  கூற்றுவனாய்  இருப்பான்  ஒருவன்

நுண்ணிய  நூல்கள்  கற்றோர் உரைத்திட்ட  சொற்கள்  எல்லாம்

            உன்னிலே  நாங்கள்  கண்டோம்  என தொழுதனர் மகளீர் சிலர்        205

 

விண்ணுலக  தேவர்  எல்லாம்  வெற்றிவேல்  அழகன்  என்றார்கள்

            மண்ணுலக  மக்கள்  எல்லாம்  மதகளிறு  போன்றோன்  என்றார்கள்

செம்மலர்  அணிந்த  மார்பை  செங்குன்று  பாறை  என்றார்கள்

            சீவகன் நல்லழகைக் கண்ட மன்மதனின் மறுஉரு என்றார்கள்        206

 

 

வெற்றியை  மணந்த  சீவகன்  வெண்மணி  மாளிகை  புகுந்தான்

            புரவிகள்  கட்டை  அவிழ்க்க  புகுந்தன  லாயம்  தன்னில்

ஆயிரத்தெட்டு  ஆரணங்குகள் எட்டுவித  மங்கலங்களுடன்

            எதிர்கொண்டழைத்து நம்பியை இன்முகம் மலர வாழ்த்தினார்கள் 207               

 

உயர்மிகு  தாயும்  தந்தையும்  உவகையில்  எதிரில்  வந்து

            ஒளிதரும்  மணிகள்  அணிந்து  ஒளிர்ந்திடும்  சீவகநம்பியை  

  அழித்திடும்  கண்ணேறு  போக்க ஆலத்தை சுற்றி எடுக்க

            அடி தொழுத நின்ற  சீவகனை  ஆரத்தழுவி  ஆனந்தித்தார்கள்        208

                                   

ஆநிரை  மிகுதி  கொண்டு  ஆண்டுவரும்  நந்தகோபன்

            நம்பியே  என்  சொல்  கேட்டு  நொடியில் நீர்  மறப்பாயாக

நட்பினால்  நாட்டின்  அழிவை நினைக்காத  மன்னன்  சச்சந்தன்

  அரசை தந்தான் அமைச்சனிடம் அரசி விசயை மேல் காதலாலே     209

 

 

அரசனோ  கொல்லப்பட்டான்  அறம்  மறந்த  மந்திரியாலே

            மலையுச்சி நாடி  நான்  சென்று  மாய்வதற்கு அன்றே  முயன்றேன்

பார்வேந்தனின் வாரிசை அறிந்து  பின்  மரிப்பதே  நல்லதென்று

            ஆல் விதை  நம்பிக்கையால் அன்றகன்றேன் சாதலில் இருந்து            210

 

 

வேந்தனின்  குடிவழி  வந்த  ஆநிரைகள்  கொண்ட  என்  பெயர்

            கோவிந்தன்  என்பதாகும்  கோமகள்  கோதவரி  என்  மனைவி

வில்லொத்த  புருவத்தின்  கீழ்  கள்ளொத்த மை  கண்களோடு

            கொம்பொத்த  இடையை  கொண்ட  கோவிந்தை  என்  மகளாம்        211

 

 

வெண்ணை  போல்  குழைந்து  வருடுதற்கு  மெய்  இனியாள்

            விரும்பிடும்  பாலைப்  போல  மொழிந்திடும்  சொல்லுடையாள்

உருக்கிய  பசுநெய்  போன்ற  நிறங்கொண்ட  மேனியுடையாள்

            பொன்  பதுமைகள்  ஏழுடன்  தருகிறேன்  மணங்கொள்  என்றான்     212

 

 

கயல்விழி  கொண்ட  மங்கை  தினைபுனம்  காக்கும்  நங்கை

            வேடுவர் குலபெண் வள்ளியை வேல்முருகன் விரும்பி மணந்தான்

ஆயர்குல  பெண்  நப்பினையை அத்திருமாலும் ஆசையில்  ஏற்றான்

            குலத்தின் வேற்றுமை மறந்து கோவிந்தையை ஏற்க என்றான்            213

 

 

பதுமுகனுக்கு  மணம் புரிவிக்க  சீவகன்  இசைந்து  அவளை  ஏற்றல்  :

 

 

சீவகன் சிந்தையில் கோவிந்தையை பதுமுகனுடன் சேர்க்க எண்ணி

மாமனே உன் மகள்  எனக்கு  நெற்றிச்சுட்டும்  கண்ணியுமாவாள்

என்  உயிர்நண்பன்  பதுமுகனோ  என்னை நிகர்த்த  வீரன்  ஆவான்

            அவன் மணப்பான் உன் மகளை என  கூற இசைந்தான் கோபன்      214

 

சிறு  நூதலும்  வளை  புருவமும்  காமனின்  கை  வில்லைக்  கொல்லும்

            குவளைமலர்  இருவிழிகள்  கடல்  கயல்மீனைக்  கொல்லும்

மொழிகின்ற சொல் அனைத்தும் முக்கனியின் சுவையை  கொல்லும்

            கோவிந்தையின் முழு அழகும் கண்டவர்கள்  உயிர்  கொல்லும்          215

 

மணம்  வீசும் பசு  நெய்  தடவி  கருங்கூந்தல்  அணிசெய்து

            செவியிரண்டில்  மங்கலத்தின்  காதணிகள்  நிறைவு  செய்து

சந்தனத்தை  எடுத்து  வந்து  கை  குழைத்து  அங்கம்  பூசி

            மணக்கோலம்  செய்து  வைக்க  மலைத்து விட்டார்  அனைவருமே    216

 

 

பதுமுகன்  இன்பம்  நுகர்தல்  :

 

பசும்பொன்  பதுமைகள்  ஏழுடன்  இரண்டாயிரம்  இளம்பசுக்கள்

            சீதனமாய்  ஆயர்கோன்  தந்து  செல்வமணம்  செய்து  வைத்தான்

மலர்கணையான்  படைமுழுதும்  பதுமுகனை  சாய்த்து வீழ்த்த

            கோவிந்தையின் மென் மடியில் கோமகனும் மயங்கி வீழ்ந்தான்        217

 

 

ஆயர்குல  நல்அழகி  இவள்  பாற்கடலின்  அமுதம்  இவள்

            தேன்  சிந்து செவ்வாயுடைய  செங்கமல  இதழும்  இவள்

திருமகளே மனம்  தேடி  வந்த  ஒரு  மகளாம்  இவள்  அழகை

  பதுமுகன் மெய் பருகியதால் பாவை மடியில் உணர்விழந்தான்         218                  

 

கோவிந்தையார்  இலம்பகம்  முடிவுற்றது.





3. காந்தருவதத்தையார்  இலம்பகம்.



சீதத்தன்  பொருள்  ஈட்ட  கடல்  கடந்து  போதல்  :

 

சீவகன்  அனைவருடனும்  சிறப்புடன்  வாழ்க்கை  வாழ்கையிலே

            யவதத்தன்  மரபில்  உதித்த சீதத்தன்  எனும்  வணிகன்

ஒளிர்கின்ற  பொன்  அணிகள் உடல் கொண்ட  பதுமை  மனைவி

  பொருள்  திரட்ட சீதத்தன்  புறப்பட்டான்  கப்பலிலே                                 219

 

முயற்சி  உள்ளம்  உடையான்  முயற்சித்தால்  மேல்  மேலும்

            தினம் தினம்  வெள்ளமென சேரும்  நிதி  அவனிடத்தில்

மதிகெட்டார்  சொல் கேட்டு  மனச்  சோம்பல்  கொண்டோர்கள்

            இகழ்ச்சியில்  தலை  கவிழ்ந்து  இழிநிலை  அடைவார்கள்                    220

 

தனம் அது  பகையை  வெல்லும்  தன்  இடமிருந்தே  உயிரை கொல்லும்

            செல்வம்  நல்அறம்  வளர்க்கும்  அறத்துடன்  இன்பம்  செழிக்கும்

முயற்சியில்  கிட்டும்  செல்வம்  முழுமையான  உண்மை செல்வம்

            முறையற்று  பெரும்  செல்வம்  நிலையற்று போகும்  செல்வம்            221

 

பெரும்பொருள்  கலத்தில்  ஏற்றி  வறியோர்க்கு  தானம்  தந்து

            கடல்  கால  நிலை கணித்து  கடற்கரைக்கு  வந்தான்  சீதத்தன்

பாய்மர  பாய்கள் ஆய்ந்து  கட்டி  கொடிகளை  மரஉச்சியில்  ஏற்றி

            கொம்பு சங்கு பறை முழங்க களிறு போல் கலம் கடலோடியது         222  

                 

மின்னொளி  மதிமுகமும்  மென்மலர்  அனைய  உடலும்

            தென்றலில்  ஆடும்  கொடியாய்  அன்னத்தின்  நடையுடனும்

மங்கையர்  மிகுந்து  வாழும்  மலர்வனம்  போலிருக்கும்

            பொன்  விளையும்  ஓர்  தீவை  பெருசீத்தத்தன் கண்டான்                     223

 

 

புயல்  காற்றினால்  கலம்  கவிழ்ந்தது  :

 

அழகிய  முத்து  மாலைகளை  அரசனுக்கு  காணிக்கையாக்கி

            அவன்  அருள்  பெற்று  சிலநாள் அத்தீவில்  சீதத்தன் தங்கியபின்

ஆறு  திங்கள்  கழிந்த  பின்நர்  அவன்  ஈட்டிய  பொருள்களோடு

            அரசனின்  அனுமதி  பெற்று அவன் நாடு  திரும்பலானான்                   224

 

கலம்  அது  கடலில்  செல்ல  களிப்பினில்  இருந்தோர்  ஆட

            கருமுகில்  கூட்டம்  பரவி  காரிருள்  போலத்  தோன்ற

எண்திசையும்  காற்று  கூட  கடல் அலை  மேலே  பொங்க

            கப்பலோ தன் அமைதியற்று கடும் சுழலில் சிக்கி ஆடியது              225

                      

முன்வினை  நல்பயனால்  நடுகடலில்  அழுந்தினாலும்

            நல்லவர்கள்  பிழைத்திடுவார்  நடுங்கிட  வேண்டாம்  என்றான்

அசோகமர  நிழலில்  அமர்ந்த  அருகன்  திருவடி  நினைத்து

            அச்சத்தைப்  போக்கிடுங்கள்  அருகன்  அருள்  காக்குமென்றான்       226

 

கடல்  காற்று  புயலாய்  மாறி  கலத்தின்  கயிறுகளை  அறுந்திட

            பாய்மரங்கள்  முறிந்து  விழ  பிடிப்பின்றி  கலம் சுழன்று ஆட

பேய்  காற்றில்  சிக்கி  நின்ற  பெருமரம்  சாய்ந்ததை  போல்

            கப்பலும்  கடலில்  மூழ்கிட  கலம் இருந்தோர் மூழ்கினார்கள்               227

 

 

பாய்மரத்தின்  துண்டு  ஒன்றை  பற்றிக்  கொண்ட  சீதத்த வணிகன்

            அருகன்  அருள்  அமைந்ததாலே  அவன்  சேர்ந்தான்  கரையினிலே

என்  வினைதான்  என்னை  இங்கு ஏந்தி வந்து சேர்த்தது  கரையில்

            என்னைக் காக்க ஏதேனும் கலம் என்று  வருமோ என  நினைத்தான் 228

 

 

தரனிடம்  தன்  வரலாறை  கூறல்  :

 

தீவினில் தனியே  சீதத்தன்  தன்  சிந்தையில்  வருத்தங்  கொண்டு

            உதவுவார்  யார்  வருவர்  என  உள்ளத்தில்  ஏங்கி  இருந்தான்

தரன்  என்னும்  பெயருடைய  அத்தீவினில்  வாழும்  ஒருவனை

            கண்ணுற்ற சீதத்தன் அவனிடம் கலக்கத்தில் தன் கதை கூறினான் 229 

                 

பொருள்  தேடி  சென்றதையும்  கலம்  கவிழ்ந்து  வீழ்ந்ததையும்

            அறவழியில்  ஈட்டிய  பொருள்கள்  அத்தனையும்  அழிந்ததையும்

தான்  பட்ட  துன்பங்கள் எல்லாம்  தரனுக்கு  உரைத்ததின்  பின்னர்

            தரன்  அவனுக்கு  உதவுவதாக  உறுதி  கேட்டு  உளம்  மகிழ்ந்தான்     230

 

 

தரன்  அவனை  ஊருக்கு  அழைத்து  செல்லுதல் :

 

வித்தைகள்  பலவும்  கற்று  தேர்ந்த  நல்ல ஒரு  வித்தகன்  நான்

            கடல்  அமிழ்ந்த  தோழர்களையும்  கடல் கொண்ட பொருள்களையும்

இமைப்பொழுதில்  மீட்டிடுவேன்  இழந்ததற்கு துன்பம்  வேண்டாம் - என

            நல்லுரைகள்  பலவும்  கூறி  நல்லுறுதி  தந்தான்  தரன்                            231

 

நறுமணம் கமழும்  சோலைகளும்  நல்ல  நீர்  ஊற்றுகளும்  கொண்ட

            இம்மலை  மீது  ஏறி  செல்ல  மனதினில்  துணிவு  கொள்  என

குதிரையின்  வடிவில்  ஒத்த  ஆட்டுகடா  ஒன்றில்  ஏறி

            வான்  வழியே  பறந்து  சென்று மலை உச்சி  வந்து  நின்றனர்              232

 

கண்டாலே  இனிமை  தரும்  காண்பதற்கு  அரியதாகும்

            தாமரை  பூவில்  வாழும்  திருமகளும்  ஆசை  கொள்ளும்

மரங்களில்  தொங்கும்  கனியை  சீதத்தன்  பறித்து  உண்டு

            பாற்கடல்  அமிர்தம்  உண்ட  பரவசத்தில்  அகமகிழ்ந்தான்                   233

 

நகர்  தோற்றம் :

 

இன்பத்தை  அள்ளித்  தரும்  இடங்களை  எல்லாம்  ஆய்ந்து

            இன்பம்  நுகர்  பொருள்களை  அறிந்து  அதை  குணம்  அளந்து

அத்தனையும்  ஒருங்கே  சேர்ந்த  அழகிய  ஒரு  நகரத்தை

            வானத்து  தேவர்  கூடி  வடிவமைத்தாரோ  இந்நகரை                             234

 

இளங்கதிரோன் பரிகளை சேர்த்து  இந்நகரின்  மதிலாய்  அமைத்து

            மதில் கொண்ட  பூங்கொடிகள்  மதியை  பெண்  முகமாய்  கருதி

தன்  கையை  மேல்  நீட்டி  அதை  தடவுவது  போலிருக்கும்

            பொன்னகரின்  மதில்  அழகை  போற்றாதார்  யாரும்  இல்லை           235

 

கன்னியர்  மேகலை  ஒலியும்  கால்  சிலம்புகள்  பரல்  ஒலியும்

            யாழ்  குழல்  இசையின்  ஒலியும்  முழவுடன்  வெண்சங்கொலியும்

பொன்னகரில்  தினம்  ஒலித்து  பேரழகு  நான் தான்  என்று

            வாய் திறந்து கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் அந்த அழகு நகரம்               236   

                

செம்பொன்  மாடங்களில்  உள்ள  பசும்பொன்  தூண்கள்  மேலே

            ஆதவன்  கதிர்கள்  தாக்க அப்பொன்  உருகி  பூத்து  நிற்க

மருண்ட மான் விழிகள் கொண்ட மங்கையர்கள் அருள் நோக்கால்

வெம்மையும்  தணிந்து  போக  வெங்கதிர்கள்  நாணியன                 237 

                                

பொன்மாலை  அணிகலன்கள் பொதுவழியில்  விழுந்து  கிடக்க

            எடுப்பார்கள்  யாருமின்றி  விண்மீனாய்  தரை  ஒளிக்க

தேவேந்திரன்  மணிச்  செப்பு  வாய்  திறந்தாற்  போலிருக்கும்

            விண்  மண்ணுக்கு  இடையான  வித்யாதரர்  வாழும்  உலகு                  238

 

பொன்னகர்  மேல்  பறந்து சென்று  பொங்கிடும்  எழிலைக்  கண்டு

            சீதத்தன்  மயங்கி  இருக்க  தரன்  பறந்த  வாகனமோ

மழை முகில்  தவழ்வதாலே  மின்னல் ஒளி  பெற்றிருக்கும் 

            தரனின்  பொன்  மாடத்தின்  தளம் மேலே  இறங்கியது                          239

 

வித்தியாதரர்  விந்தை  உலகின்  வேல்வேந்தன்  கலுழவேகன்

            கரம்  பிடித்த  காதலி  தான்  பெருமை  மிக்க  தாரணியாம்

கலுழவேகன்  தாரணியின்  காதலிலே  பிறந்தவள்  தான்

காந்தருவதத்தை  என்னும்  கட்டழகு  பெண்  மகளாம்                   240

 

எள்விழ  இடமின்றி  மலையில்  எல்லா  நாட்டு  மன்னர்களும்

            பெண்  பிறந்த  நாளன்றே  பேரணியாய்  திரண்டு  வந்து

பொன்னோடு  பொருள்களையும்  பசும்பொன்  அணிகலன்களையும்

  வேழத்தின் மீதுதமர்ந்து  வேண்டுவோர்க்கு கொடுத்தார்கள் 241

                                                                                                                  

வித்யாதர  மன்னன்  கலுழவேகன்  செப்பினான்  தன்  நிமித்திகனிடம்

            வான்  கோள்கள்  துணைகொண்டு வரைந்திடுக  ஜாதகத்தை என்று

வானவில்லாய்  புருவம்  கொண்டு  வசீகரிக்கும்  விழிகள்  கொண்ட

            இப்பெண்ணின்  நல்பயன்கள்  ராசமாபுரத்தில் என  உரைத்தான்      242

 

வெண்பட்டுத்  துகில்  விரித்து  பஞ்சொத்த  மலர்கள்  தெளித்து

            பசும்பொன்  கட்டிலின்  மேல்  பாவையர்கள்  கவரி  வீச

அரசன்  கழுலவேகன்  மகிழ்ந்து  அமர்ந்திருந்த  வேளையிலே

     சீதத்தன் அழைத்து கொண்டு    வந்தான்  வேந்தன்  முன்பு செல்வோம்    243       

                                     

சிற்றரசர்கள்  மணிமுடிகள்  தினம்  பட்ட  காரணத்தால்

            சிவந்து  செம்பொன்னாய்  ஒளிவீசும் செவ்வடிகளை

கை குவித்து  வணங்கிய  பின்  கனிமொழியில்  முகமன்  கூற

            அரசனோ  அவ்விருவரையும்  அமர்க  என  அருள்  மொழிந்தான்        244

 

தேனில்  தோய்ந்த  சொல்லால்  சீதத்தன்  நலங்கள்  கேட்டான்

            இன்றய  நட்பல்ல  நமது  ஏழுதலைமுறை தொடர்ந்ததென்றான்

மன்னன்  நான்  வணிகன்  நீயென  மனதினில்  கலக்கம்  வேண்டாம்

            நின் வீடு இதுவென்றெண்ணி மகிழ்வு கொள் என்றான் வேந்தன்       245

 

பட்ட சந்தனமரம்  மழையால்  பசுந்தளிர்  கொண்டது  போல்

            சீதத்தன்  மனம்  குளிர்ந்தான்  மன்னனை  நோக்கிச் கூறினான்

தங்களின்  சொல்லைப்  போல  என்  தந்தைக்கு  தந்தை  சொன்னார்

            நின்  திருவடி  சேவைக்கு  என்  தலைமுறை  இருக்குமென்றான்         246

 

கலுழவேகன்  அவன்  கைபிடித்து  அழைத்து  சென்றான்  மனைவியிடம்

            தாரணியும்  முகமலர்ந்து  தனியன்பில்  வரவேற்றாள்

முழுமதி  போல்  முகத்துடனும்  கெண்டை  மீன்  விழிகளுடனும்

            கருங்குழலுடைய இவள் என் காந்தர்வதத்தை மகளாவாள்                   247

 

வீணைக்கு  உரியவள்  தான்  வெண் தாமரை வாழ்  சரஸ்வதி

            சரஸ்வதியே  தன்னை  மறப்பாள்  இவள்  இசைக்கும்  வீணையாலே

இன்று முதல்  இவள்  உன்  மகள் இசைந்து  நீ ஏற்றுக்கொள்வாய்  - இவளை

            வீணை  இசையில்  வெல்லும்  இசைவேந்தனுக்கு  மணமுடிப்பாய்    248

 

இவ்வின்ப  உலகத்தில்  இன்பத்தை  இடரின்றி பெற்று வாழ்ந்தாலும்

            துணையற்ற  தனிமையினால்  கொடுந்துன்பம்  வேறில்லை

கனிமொழி  கன்னியர்கள்  கணவன் மடி துயின்றால்  தான்

  இந்திரலோகத்தின்  இன்பம்  ஈட்டி வந்தது  போல்  இருக்கும்         249    

                                                                              

காந்தர்வதத்தையின்  தாதியை  கலுழவேக  வேந்தன்  அழைத்து – இனி

            தந்தையும்  தாயுமாய்  இருந்து  தன்மகளை  பேணச்  சொன்னான்

கலம்  நிறைய  பொன்  செல்வம்  காலத்திற்கும்  நல்கியுள்ளேன்

மனம் ஒத்து நீங்கள் இருவருமே சீதத்தன் நல்லுரையை ஏற்றிடுவீர்  250

                     

தத்தை  தத்தைபோல்  வந்து  தந்தையை  வணங்கி  நின்றாள்

            தந்தையோ  அன்பில்  மகளை  தழுவினான்  பிரிவின்  சுமையால்

வலம்புரி  சங்கு  ஈனும்  முத்துக்கள்  மண்ணுலக  மக்களுக்கு மட்டுமே

            பெண்களைப் பெறும் பெற்றோர் பெறும் பயன்கள்  அவ்விதமே         251

 

நிமித்திகன்  சொல்லிய  வழியில்  என்  மன்னன்  கலுழவேகன்

            அன்புடை  சீதத்தனை  இங்கு  அழைத்து  வர  ஆணையிட்டான்

கலத்தையும்  மூழ்கச்  செய்து  உனை  மட்டும்  பிழைக்கச்  செய்து

            கண்கட்டும்  என்  மாயத்தால்  கவர்ந்தேன்  உனை  என்றான்  தரன்  252


துன்பங்கள்  எனக்கு  தந்தாய்  மன்னன்  நட்பை  பெற்று  தந்தாய்

            என் கலத்துடன்  நண்பர்களை  பொருள்களுடன் திருப்பி தந்தாய்

வித்யாதர வேந்தன்  ஆணையால்  தரனே  உன்  துன்பம்  எல்லம்

            என் மனம் குளிர இன்பமாக்கி என் குலத்தை வாழச்செய்தாய்       253

 

 

காந்தர்வதத்தைக்கு தாதியுடன்  கலம்  அளவு  பொன்னும்  பொருளும்

            அன்புடன்  அண்ணல்  தந்தான்  அரசியும் மனம்  மகிழ்ந்து  நின்றாள்

சீதத்தன்  திருமகள்  தத்தையோடு  சீர்மிகு  விமானத்தில் அமர்ந்து

            முரசொடு சங்கொலிக்க புறப்பட்டு தன் மனைமகிழ்ந்து சேர்ந்தான் 254

 

 

பசும்பொற் கொடியை  ஒத்த  பதுமையாம்  அவன்  மனைவியை

            அன்பு கொண்டு  ஆரத்தழுவி அரும்பிரிவு  துன்பம்  போக்கி

காந்தருவதத்தையைப்  பற்றி   பதுமைக்கு  எடுத்து  சொல்லி

            கந்தர்வலோகம்  போன்ற  கன்னிமாடத்தில் தங்க  வைத்தான்            255

 

 

சுயவர  மண்டபம்  அமைத்தல் :

 

 

பாற்கடல்  அமுதம்  தன்னை  செப்புக்குள்  வைத்தது  போல்

            பாவையரும்  பார்த்து  மயங்கும்  பேரெழில்  கொண்ட  தத்தைக்கு

திருமணம்  செய்ய  எண்ணி  கட்டியங்காரனை  காணச் சென்று

            இச்சையை  சீதத்தன்  சொல்ல  இனிதே  நீர்  செய்க என்றான்             256

 

காசறு  பொன்னால்  இழைத்து  காண்பவர்கள்  கண்கள்  மயங்க

            வானமே  நாணும்  வண்ணம்  வானுலக  மண்டபம்  ஒன்று

வழிதவறி இங்கு  வந்தது  போல்  சுயவர  மண்டபம்  ஒன்று  அமைக்க

            ஏவலர்க்கு  ஆணையிட்டான்  நிமித்திகனும்  நாள்  குறித்தான்             257

 

பசும்பொன்  தூண்கள்  நாட்டி  பவளத்தால்  உத்திரம்  அமைத்து

            பளிங்கினால்  கழிகள்  பரப்பி  பனி வெள்ளி  தகட்டால்  மூடி

பொன் சுற்று  சுவர்  அமைத்து  வெண்முத்து  மணல்  பரப்பி

            இந்திரன்  சபைக்  கூடமாய்  எழில்  மண்டபம்  ஒன்றமைத்தனர்         258

 

பாவை  தத்தை  தங்குமிடத்தில்  பளிங்கினால்  சுவர்  அமைத்து

            பூ  பொன்  மாணிக்க  மாலைகள்  கலந்தங்கு  தொங்க  விட்டதால்

பூந்தென்றல்  மெதுவாய்  வீச அசைந்திடும்  மாலைகள்  எல்லாம்

            கருமுகில்  இடையே  ஒளிரும்  மின்னலைப்  போல்  மிளிரும்                259

 

ஓவியர்  தம்  திறமையாலே  வரைந்திட்ட  ஓவியங்களால்

            அகம்  புறம்  எதுவென்றறியா  ஐயத்தை  உண்டு  பண்ணும்

தளங்களில்  இடும்  அகிற்புகை  தழுவியே  விண்ணில்  சென்று

            வானவர்  உலகம்  புகுந்து  மணம்  பரப்பி  இளைப்பாறும்                      260

 

வீணை  இசை  மீட்டுவதில்  சரஸ்வதிக்கு  நிகரானவள்

            இவள்  இசையை  வெல்வோர்  எவரெனினும்  மணம்  முடிப்பர் – என

மன்னனின்  சம்மதம் பெற்ற  மாபெரும்  வணிகன்  சீதத்தன்

            முரசறைந்து  செய்தி  சொன்னான்   தத்தையின்  திருமணத்தை        261

 

மதங்கொண்ட  களிரை  அடக்கி  மாகுன்றை  கையால்  தள்ளும்

            காம்பிலி  நாட்டு  மன்னன்  பாலகுமாரன்  பங்கேற்க  வந்தான்

வில்லேந்தி  தழும்படைந்த  திண்ணிய  தோள்கள்  கொண்ட

            வாணராசி  வேந்தன்  வந்தான்  தத்தையை தன் மனைவியாக்க      262   

                 

அரசர்கள் அடி  தொழுது  சூழ்ந்து  வைரமுடி  ஒளியில்  பணியும்

            அவந்தி  நாட்டு  அரசன்  வந்தான்  ஆரணங்கை  மணந்து  கொள்ள

வீரக்  கழல்  கால்களில்  ஒலிக்க  வெற்றி  பல  கண்ட  வீரன்

     அயோத்தி  மன்னன்  வந்தான்  அரிவையை  அழைத்து செல்ல    263

                          

காந்தர்வதத்தை  தன்  காலடி  பதித்து  செல்ல

            பனிநீரால்  தரை  தெளித்து  பல  மலர்கள்  நிலம்  பரப்பினர்

தத்தையின்  தாதி  வீணாபதி    தலைவியை  நெருங்கி  சென்று

            எண்வகை  மணங்கள்  பற்றி  எடுத்துரைத்தாள்  தத்தையிடம்             264

 

நிமித்திகன்  நாள்  குறித்தான்  அன்று  சீதத்தன்  நிதி  அளித்தான்

            மணமுள்ள பசு  நெய்  எடுத்து  தத்தையின்  மெய்யில்  பூசி

மலர்  அரைத்த  குழம்பாலே  மாதர்கள்  மணக்கத்  தடவி

            தத்தையின்  நல் அழகை  தரணிக்கு  விளங்கச்  செய்தார்கள்             265

 

பொற்குட  கங்கை  நீரில்  புனுகு  அகில்  சந்தனம்  கலந்து

            தத்தையை  அமரச்  செய்து  தாதியர்கள்  நீராட்டினார்கள்

கருஞ்சுருள்  கூந்தல்  திருத்தி  நறுமணமலர்  தலையில்  சூடி

            சந்தனக்  குழம்பினாலே  தத்தையுடல்  மணக்கச் செய்தார்                  266

 

ஒப்பனக்  கலையில்  சிறந்து  ஒளிர்கின்ற  மகளீர்  வந்து

            தத்தையை  திருமகளாய்  திருத்தி  தன்  இனமே  நாணங்கொள்ள

சங்கோடு யாழ்  முரசு  முழங்க  தாதியர்கள்  படை போல்  சூழ

            கேட்போரின்  மனம்  நெகிழ  பண்ணிசைக்க  தத்தை  வந்தாள்          267

 

செங்கமல  மலரில்  வாழும்  திருமகளைப்  போன்ற  தத்தை

            புதிய  பொற்கொடி  ஒன்று  அழகென்னும்  தளிரை  ஈந்து

பொன்நிறப்  பூவாய்  பூத்து  பொற்சிலம்பு  ஒலி  எழுப்ப

            அன்னமாய்  மென்நடையில்  அடைந்திட்டாள்  மண்டபத்தை              268

 

சந்தனத்தால்  தரை  மெழுகி  சாதி முல்லை  மலர்கள்  தூவி

            பட்டினால்  செய்யப்பட்ட  பல  திரைகள்  அங்கமைத்து

வண்ணமலர்  மாலைகளை  வகை  வகையாய்  தொங்கவிட்ட

            மண்டபத்தில்  அவள்  அமர்ந்து  யாழிசைக்க  தொடங்கினாள்            269

 

இருகரங்கள்  யாழை  மீட்ட  பவளவாய்  பாட்டிசைக்க

            இலைமலர்  பொழில்கள்  அங்கு  நிலைகுழைந்து  உருகி  வளைய

  தூண்கள்  எல்லாம்  தளிர்  துளிர  கின்னரர்கள்  மெய்  மறக்க

            இசையறிந்த  கின்னர மிதுனம்  எனும்  பறவை  தரை வீழ்ந்த்து           270

 

கரும்  புருவம்  நெற்றி  ஏறாது  கயல்விழிகள்  சற்றும்  ஆடாது

            மது சிந்தும்  தொண்டை  விம்மாது  முத்துப்பல்  வெளிதெரியாது

பவளவாய்  பாடியதோ  இல்லை  யாழ் நாவெடுத்து  படியதோ- என

            கேட்டவர்கள்  தனை  மறந்து  கிரக்கத்தில்  மயங்கினார்கள்                271

 

தத்தையின்  யாழிசை  கேட்டு  மன்னர்கள்  திரும்பிச்  சென்றார்

            நான்மறை  அந்தணர்கள்  நாணியே  தோல்வியுற்றார்

ஆறு  திங்கள்  கழிந்தபின்  ஆண்  சிங்கம்  ஒத்த  சீவகன்

            புத்திசேனன்  நண்பனிடம்  புகன்றிட்டான்  தன்  முடிவை                      272

 

நண்பனே  நீ  சென்று என்  தந்தையிடம்  சொல்வாய்  இன்று

            தத்தைமேல்  மையலாலே  நான்  அங்கு  செல்லவில்லை

நான்  கற்ற  கல்வியினை  நாடு  அறிய  செய்வதற்கு

            செல்கிறான்  சீவகன்  என  நீ  உரைத்து  பதில்  கொள்வாய்                   273

 

புத்திசேனன்  புகன்ற  செய்தியை  கந்துகடன்  கருத்தில்  கொண்டு

            யாழ்  போட்டியில்  போட்டியிட தடையில்லை  என்றுரைக்கையில்

நாகமாலை  அனுப்பி வைத்த  ஓலையினை  ஓர்  மங்கை  நீட்ட 

            கந்துகடன்  அதை கைவாங்கி  கடிதத்தை  படிக்கலானான்                  274

 

கட்டியங்காரன்  கடுஞ்சினம்  சீவகன்  மேல்  பாய்ந்துள்ளது

            நம்பியை  அழிப்பதற்கு  நாளெல்லாம்  புலம்புகிறான்

சீவகனை  நகரை விட்டு  நீக்கி  அவனை  செம்மையாக  பாதுகாக்க

            நல்லதொரு  இடத்துக்கு  அனுப்பி  வை  என்றது  மடல்                            275

 

கந்துகடன்  செப்பலானான்  கடந்த  கால நிகழ்வு  ஒன்றை

            கட்டியங்காரனுடன்  கலந்தனர்  புலவர்கள்  நாடகம்  நடத்த

சீவகனை  அழைத்தார்கள்  அரிவையர்க்கு  அழகு  செய்ய

            ஒப்பனையில்  ஒப்பற்ற  நம்பி ஒத்து  சென்றான்  நண்பர்களுடன்       276

 

ஆடும்  அணங்கு  அனந்தமாலையை  அகிலம்  போற்ற  அழகு  செய்தான்

            நங்கையவள்  நாணத்துடன்  நம்பி  மீது  காதல்  உற்றாள்

நயனத்தில்  குறிப்பு  எடுத்து  நாயகனுக்கு  செய்தி  சொல்ல

            கண்டுகொண்ட  கட்டியங்காரன்  காட்டுத்  தீயாய்  கோபமுற்றான்  277

 

அனந்தமாலை  கரம்  பற்றி  இழுத்து  சென்றான்  அரண்மனைக்கு

            ஆரணங்கோ  சீவக நம்பியின்  அழகு  சொல்லி  புலம்பளுற்றாள்

அமைச்சரிடம்  அரசன்  கேட்டான்  அம்மனிதன்  விபரம்  பற்றி

            மந்திரிகள்  எடுத்துரைத்தார்  சீவகனின்  பெருமைகளை                      278

 

கணக்கற்றோர்  கை  சேர்த்து  தூக்க  இயலா  கல்குண்டை

            பூப்போல  தோள்  தூக்கி  பூப்பந்தாய்  எடுத்த  வல்லோன்

அரசர்  படை  ஆநிரை  மீட்க  அடுத்தடுத்து  தோல்வி  காண

            அவ்வேடர்  குலம்  அழித்து  ஆநிரையை  மீட்ட  வீரன்  என்றார்            279

 

சீவகனின்  சிறப்பு  அனைத்தும்  மந்திரிகள்  சொல்லச் சொல்ல

            கட்டியங்காரன்  கொண்டான்  நெஞ்சினிலே  சூழ்ச்சியினை

சீவகனை  அழிக்க  எண்ணி  சித்தத்தில்  திட்டம்  கொண்டான் – என

            நாகமாலை  கூறியுள்ளாள்  படை  கொண்டு  செல்க  என்றான்           280

 

தந்தையின்  வாய்  மொழியை  புத்திசேனன்  வந்து  சொல்ல

            சீவகனும்  புன்முறுவலுடன்  புறப்படுவோம்  என்றுரைத்தான்

மணிமாலைகள்  மார்பணிந்தான்  நெய்  தடவி கூந்தலிட்டான்

            செம்பொன்  ஓலை  கொண்டு  செவிகளில்  அணிந்திட்டான்                281

 

பொதிகைமலை  சந்தனத்தை  பொன்னுடலில்  பூசிக்கொண்டான்

            பட்டுத்துகில்கள்  கொண்டு  பரந்த உடல்  அணிந்து  கொண்டான்

பளபளக்கும்  வாள்  உரையை  கச்சையோடு  கட்டிக்கொண்டான்

            செம்புள்ளிகள் நெற்றிகொண்ட  வேழத்தின்  மேல்  வந்தமர்ந்தான்   282

 

விடுபட்ட  அம்பைப் போல  விரைந்து  செல்லும்  தேர்களும்

            காற்றென  பாய்ந்து  செல்லும்  கவரிகொண்ட  குதிரைகளும்

சூறாவளியாய்  சுழலும்  வாள்கொண்ட  வீரர்களும்

            சங்குகள்  முழக்கம்  இட  சீவகன்  யாழ்  மண்டபமடைந்தான்              283

 

அரசனின்  அறமிழந்த  மனம்  அழுக்காறில்  ஆழ்ந்து  ஊற

            கனல்  கக்கும்  விழியாலே  சீவகனை  சினந்து  நோக்க

மலர் தூவிய  விரிப்பின்  மீது  மத யானை போல்  நடந்து 

            புதிய  மெல்லணையின்  மேலே  பொலிவுடன்  அமர்ந்தான்  நம்பி      284

 

மலர்  கூந்தல்  மகளீர்  எல்லாம்  தேனுண்ணும்  வண்டுகள்  போல

            மணிமார்பன்  சீவகனின்  மண்டிய  பேரழகை  பருக

திருமகளை  ஒத்த  தத்தை  சீவகனின் மார்பை  ஓலையாக்கி

   அடிமை என்று எழுதவேண்டும் என தாதியர்கள் கூறி மகிழ்ந்தனர்    285         

 

அழகினை  மத்தாக  நிறுத்தி  அடங்கா  இளமையை  கயிறாக்கி

            நற்குடிப்  பிறப்பென்ற  கையால்  ஒப்பனை  என்னும்  கைகயிற்றால்

காமம்  என்னும்  பெருங்கடலை  கலைக்கி  கடைகின்ற  காளையான

            சீவகனை  என்று  அடைவேன்  என  ஏங்கினாள்  காந்தர்வதத்தை      286

 

காந்தர்வதத்தை  சொல்ல  அவள்  தோழி  வீணாபதியும்

            உயர்ந்த  ஒரு  வீணை  நீக்கி  வேறு  வீணைகள்  பல  தந்தாள்

வீணை  ஒன்றை  கையில்  கொண்டு  அதன்  தன்மையை  அறிவிக்க

            சீவகன்  தன்  இசையறிவால்  தெள்ளிய  ஆய்வு  செய்தான்                   287

 

கை  கொண்ட  வீணை  அது  நீரில்  அமிழ்ந்த  மரம்  என்றான்

            மறு  வீணை  ஒன்றை  எடுத்து  வாள்  வெட்டியமரம்  என்றான்

அடுத்த  வீணை  ஆய்ந்ததிலே  இடி  கொண்ட  மரம்  என்றான்

            எடுத்த  இன்னொரு  வீணையோ  சிறப்பிழந்தது  என்றான்  நம்பி      288

 

அடுத்த  வீணை  உழவராலே  சுட்ட  மரத்தின்  வீணை  என்றான்

            கொடுத்த  வீணைகள் எல்லாம்  குறை  கண்டு  ஒதுக்கிவிட்டான்

அகிற்புகை  ஊட்டப்  பெற்ற  அழகிய  யாழ்  தந்தாள்  தோழி

            அந்த வீணை தத்தை  போல  அருஞ்சிறப்பு  உடையதென்றான்          289

 

அந்த  யாழ்  நரம்புகளை  அதிநேரம்  ஆய்ந்த  நம்பி

            நரம்பின்  முறுக்கை  தளர்த்தி  நங்கை  முடியை  எடுத்து  காட்டி

நபுலன்  கையில் இருந்த  நல்முறுக்கு  நரம்பு    வாங்கி

            யாழினில்  பொருத்திக்  கொண்டு  யாழிசைக்க  தயாரானான்           290

 

பொன்மேனி  வருடுதல்  போல்  விரல்  தடவி  இசை  எழுப்ப

            யாழிசை  இல்லை  இது  வாய்  இசையென  வின்னவரும்  மயங்க

கல்  மண்  மரம்  உருகிட  கின்னரப்  பறவைகள்  சோர்ந்திட

            இசையுடன்  ஒன்றிணைந்து  ஆலாபனை  செய்தான்  நம்பி               291

 

சீவகன்  கை  யாழ்  தடவி  தேவையிசை  பொழிகையிலே

            விண்ணுலக  கின்னரார்கள்  வீணைகளை  விட்டொழித்தார்

வித்தியாதர மக்கள்  கேட்டு  நெஞ்சுருகி  மெய்  சோர்ந்தார்

            மண்ணுலகோர் மனம் மயங்க சித்தர்கள் போல்  இன்பமுற்றார்         292

 

கருங்கூந்தல்  முதுகில்  தவழ  காதுகளில்  குண்டலங்கள்  ஒளிர

            அழகிய  பிறை  நூதலில்  அரும்பென  வியர்வை  துளிர

எழில்  கழுத்தை  இடம்  சாயத்து  இருகரங்கள்  யாழைத்  தடவ

            இளமயில்  போன்ற  தத்தை  இதுவரை இசையா  இசைதந்தாள்          293

 

தத்தையின்  பாட்டிசைக்கு  தகுந்தாற்போல்  யாழிசைத்தான்

            நம்பியின்  பாட்டிற்கேற்ப  நங்கை  யாழ்  இசைக்கவில்லை

சீவகனின்  யாழுக்கேற்ப  தத்தை  வாய்  பாடவில்லை

            மொத்தத்தில்  காந்தர்வதத்தை  மௌனியானாள்  தன்னிலையில்    294


யாழிசையில்  பின்னடைந்த  யவ்வனத்தாள்  காந்தர்வதத்தை

            மனமது  மிக  வருந்த  வெட்கத்தால்  தலை  குனிந்து

வெற்றிகண்ட  சீவகனுக்கு  பொன்மாலை  கையிலேந்தி

            ஆண்  ஏறு  நம்பிக்கு  அணிவித்து  அடி  தொழுதாள்                                295

 

தன்  அடி  தொழுதவளின்  பொன்  அடி  பாதம்  கண்டு

            மண்ணுலக மங்கையில்லையிவள்  விண்ணூலகின்  திருமகளென

முழுமதியின்  முகத்தினையும்  கமலமொட்டு  தனத்தினையும்

            கண்களால்  விழுங்கியவன்  கண்  இமைக்க  மறந்திட்டான்                 296

 

வேல்விழியாள்  தத்தையை  வீணையில்  சீவகன்  வென்றான் – என

            இராசமாபுரத்து  மக்கள்  எல்லாம்  நலம்  கூறி  வாழ்த்துரைக்க

இருள்  சூழ்ந்த  மனம் கொண்ட  நஞ்சு  எண்ண  கட்டியங்காரன்

            அரசர்களை  வசை  மொழிந்தான்  அழுக்காறு  கொண்டதனால்        297

 

மன்னர்கள்  முடிவெடுத்தார்கள்  போரிட்டு  தத்தையை  அடைய

            பதுமுகன்  புத்தி  சொன்னான்  பெரும்  போரை  தவிப்பதாற்கு

மோகத்தின்  கர்மத்தாலே  முடிமன்னர்கள்  மறுத்துரைக்க

            கொட்டியது பெரும்போர் முரசு போர் முகில்கள் சூழ்ந்ததங்கு            298

                              

சீவகன்  உவகையில்  உரைத்தான்  செங்கொடியாள்  தத்தைக்கு

            நங்கையே  நடுங்க  வேண்டாம்  நம்  படை  வெல்லும்  என்றான்

பெண்கள்படை  முன்னே  வந்து  தத்தையை  சூழ்ந்து  நின்று

            சீவகன் வெல்லும் வரையில் உங்களை காத்திடுவேம்  என்றார்கள்    299

 

வாட்படைகள்  வாளோடு  மோத  பரிகள்  ஒவ்வொன்றும்  எதிர்க்க

            தேர்களும்  ஒன்றோடு  ஒன்று  இடியென  முழங்கி  மோத

களிறுகள்  களிறை  சாய்க்க  புழுதியால்  பரிதி  மறைய

            கொம்போடு சங்கொலியும் கொலைக்களம் போல் ஆனதங்கு             300

 

 

சீவகனின்  தேரின்  ஓட்டம்  சிறகு  கொண்ட  பறவையென்பர்

            தேர்  நின்று  அம்பு  எய்தால்  தேர்  உருவம்  கண்டேன்  என்பார்

மண்ணிலே  பார்த்தேன்  என்பார்  விண்ணிலே  பறந்தது  என்பார்

            புரவிநூல் நன்கு கற்ற  நம்பி  பனங்காயென சிரங்கள்  கொய்தான்   301

           

சூல்  கொண்ட  மேகம்  கொட்டும்  மழை  போல  அம்பை  பெய்தான்

            நல்மனங்கொண்ட  மன்னர்களின்  மணிகொண்ட  மார்பை  தீண்டி

தீநெஞ்சு  வேந்தர்களின்  பொன் கவசம்  பிளந்து  பாய்ந்து

            நம்பியின்  வில்  அம்புகளால்  நலிந்தோடின  எதிரி  படைகள்              302

 

முகில்  மோதும்  மின்னல்  என  மன்னர்கள்  மறைந்து  போனார்

            வேந்தர்கள்  படைகள்  எல்லாம்  காற்றிடை  சரகாய்  போக

சீவகன்  வெற்றிப்  படைகள்  களத்தினில்  களிப்பில்  ஆட

            தத்தையை  அழைத்துக்  கொண்டு  தன்  மனை  சென்றான்  நம்பி    303

 

தூய  பசும்  பொன்  கொடுத்து  அருகனின்  உருவம்  செய்தான்

            ஊரெல்லாம்  மகிழ்ந்து  ஆட  உற்சவங்கள்  நடத்தி  வைத்தான்

பெருநிதி  அறைத்  திறந்து  பிறர்  மகிழ  பொருளை  ஈந்தான்

            போரினில்  உயிரைக்  கொன்ற  தீவினையை  தீர்த்து  வைத்தான்      304

 

மாங்கனி  ஒத்த  தத்தையின்  மங்கல  மண  விழாவுக்கு

            நான்கு  நூறாயிரம்  கலசங்களில்  நல்  தயிர்  பால்  நெய்களோடு

நாடே  வியக்கும்  வண்ணம்  நல்  மண  வேள்வி  செய்ய

   ஆநிரைகள் கொண்ட அரசன்  நந்தகோபன் நாடி வந்தான்                  305     

                         

பொதுமக்கள்  சுமந்து  வந்த  முக்கனிகள்  காய்யும்  கிழங்கும்

            தெங்கோடு  கமுகு  குலையும்  சீர்பெரும்  வெற்றிலை  பெட்டியும்

செண்பகமும்  மரிக்கொழுந்தும்  செவ்விய  முல்லை  மல்லிகையும்

            வைப்பதற்கு  இடம்  இன்றி  வாடியது  ராசமாபுர  நகரம்                        306

 

உண்கலம்  கழுவும்  ஒலியும்  உணவு  சமைப்போர் கழலொலியும்

            இன்னிசை  மீட்டும்  கருவிகளின் இதமான  இசையொலியும்

மறை  அறிந்த  அந்தணர்கள்  வேத  வேள்வி  குரல்  ஒலியும்

            மங்கல வாத்தியம் முழங்க சீவகன் தத்தையை மணந்தான்                307


காந்தர்வதத்தையார்  இலம்பகம்  முடிவுற்றது.





4.    குணமாலையார்  இலம்பகம்.


 

காசறு  முனிவர்  உளம்  போல்  மாசற்ற  வானில்  ஞாயிறு

            வடதிசை  அயனம்  செல்ல  ஐங்கணை  கொண்ட  காமன்

போர்கள  பாசறை  நீங்கிய  போர்வீரர்கள்  துன்பம்  போக

            இளவேனில்  காலம்  தந்து  இன்பத்தை  அளித்தான்  உலகுக்கு           308

 

இன்னிசை  எழுப்பும்  குயில்கள்  யாழிசை  மீட்டும்  தும்பிகள்

            கன்னியரின் கஸ்தூரி  மணம்  கமழ்கின்ற  மணச்  சோலைகள்

அகிற்புகை  எழுந்து  ஓங்கி  ஆதவனின்  ஒளியை  மறைக்க

            இராசமாபுரத்தின்  தன்மை  இந்திரலோகத்தை  ஒத்தது                         309

 

மலை  இறங்கும்  அருவியென மணிமாலை  கொண்ட  ஊர்திகளும்

            கருமுகில்கள்  ஊர்வது  போல்  கருங்குன்றுகளாய்  களிறுகளும்

ஆடை  அணிகலங்கள்  ஏந்தி  அசைந்து  வரும்  ஆரணங்குகளும்

            அந்நகரின்  வாயில்  முன்னே  ஆனந்தத்தில்  கூடி  நின்றார்                 310

 

சுத்த  சுருதி  தாளத்தோடு  சுண்டியிழுக்கும்  பாட்டு  ஒலியும்

            பண்ணிசையை  இன்னிசையாய்  பரவிவிடும்  யாழ்  ஒலியும்

நட்டுவாங்க  ஜதியோடு  எழும்  நாட்டியத்தின்  சிலம்பொலியும்

காண்போரின்  கரவொலியும்  கலந்து  கந்தர்வலோகமாகும்              311

 

சிவந்த  நிற  தோல்  கொண்ட  செவ்வாழைத்  தோட்டங்களும்

            செங்கனிகள்  மரம்  தொங்கும்  மாமரத்தின்  தோப்புகளும்

பழம்  வெடித்து  சுளை  சிரிக்கும்  பலாமர  பெருங் காடுகளும்

            பச்சைக்  கம்பளம்  எடுத்து  பாய்விரித்த  நகரம்  அது                             312

 

மலர்  கக்கும்  மதுவருந்தி  மயங்கி  சுற்றும்  வண்டுகளும்

            மணம்  பரப்பும்  மலர்களோடு  வெண்மணலும்  பரவி  நிற்கும்

கருங்குயிலும்  கிள்ளைகளும்  காதினிக்க  பாடிசைக்கும்

            செம்பொழிலில்  குணமாலையும்  சுரமஞ்சரியும்  அமர்ந்திருந்தார்   313

 

செவ்வரி  படர்ந்த  கண்களுடன்  செங்கனி  ஒத்த  இதழ்களுடன்

            செவ்விளநீர்  நிமிர்  தனங்களுடன்  செதுக்கிய  கல்  சிற்பவுடலுடன்

செம்பொன்  இடை  மேகலையுடன்  செவ்வாழைக்  கால்களுடன்

            சேர்ந்திட்ட முழுசித்திரமாய்  செம்மலராய்  குணமாலை  இருந்தாள் 314

 

மானின்  மருள்  விழியுடனும்  மாங்கனியின்  கன்னத்துடனும்

            மதியொத்த  முகத்துடனும்  மலர்  மென்மை  உடலுடனும்

மதர்த்தெழுந்த  தனத்துடனும்  மணி சிணுங்கும்  மேகலையுடனும்

            மண்ணுலகோர் மயங்கி  நிற்கும் மங்கை சுரமஞ்சரி இருந்தாள்          315

 

மனம்  ஒத்த  தோழியர்கள்  மகிழ்ந்த  சொல்லாடல்  நடுவே

            சுகந்த  சுண்ணப்  பொடியுடனே  தோழியர்கள்  இருவர்  வர

விண்ணவர்  உலகில்  மட்டும்  இச்சுண்ணம்  உள்ளது  என

            விழிநகைக்க  தன்  பொடியை  குணமாலை  கூறிக்கொண்டாள்        316

 

என்  தாதி  கொண்டு  வந்த  மண்  மணக்கும்  என்  சுண்ணம்

            ஈடில்லா  தரம் கொண்ட பொடி  இவ்வுலகில்  இது  ஒன்று  தான்

இப்போட்டியில் தோற்பவர்கள்  இன்று  நீராடல்  விட  வேண்டும்

            கோடிப் பொன் அருகருக்கு  தர  சுரமஞ்சரி சூளுரைத்தாள்                   317

 

சுண்ணப்  பொடி  கைகொண்டு  சூழ்ந்திருந்த  அக்கூட்டத்திடம்

            தாதிகள்  இருவரும்  சென்று  தரம் அதை  கேட்டு  வேண்ட

இப்பொடியை  ஆய்வதற்கும்  இதன்  தரத்தை  சொல்வதற்கும்

            இப்புவியில்  ஒருவர்  உண்டு  அவர் இளமாறன்  ஜீவகன் என்றார்       318

 

வாள்பிடித்து  திரண்ட  கையும்  வளமான  நூலறிவும்  கொண்ட

            வீரக்கழல்கள்  கால்  அணிந்த  வேழம்  போன்ற  சீவகன்  நம்பி           

தம்பியரும்  தோழர்களும்  தன்னை  சுற்றி  சூழ்ந்திருக்க

            விண்மீன்கள்  புடை  சூழ்ந்த  முழுநிலவாய்  வீற்றிருந்தான்                  319

 

செம்பொற்  கொடியனையோர்  சுண்ணத்தை  ஏந்தி  வந்து

            சீவகன்  அடிதொழுது  சுண்ணத்தை  எதிரில்  வைத்து

சிறந்ததை  இதில்  ஆராய்ந்து  செப்புங்கள்  எங்களுக்கு  என

            செவ்விதழாள்  கனகபதையும்  மல்லிகையும்  காத்திருந்தனர்             320

 

கோடையில்  இடித்து  செய்த  இச்சுண்ணம்  நல்லதென்றும்

            குளிர்  நாளில்  செய்த  இப்பொடி  குறை  சிறிது  கொண்டதென்றான்

நீர்  உரைத்த  இக்குறையை  நெஞ்சம்  ஏற்க  வேண்டுமாயின்

            சான்று  காட்டி  உரையுமென  தாதியர்கள்  மறுமொழிந்தனர்             321

 

கண்  இமைக்கும்  மன்னவரும்  கண்  இமைக்கா  வானவரும்

            உன்  சொல்லை  தட்டமாட்டார்  உனக்கெதிராய்  உரைக்கமாட்டார்

அன்னவரின்  சான்றை  எல்லாம்  அடியவள்  நாங்கள்  ஏற்கமாட்டோம்

            வானத்தில்  பறக்கும்  இனத்தின்  வாய்மொழியில்  சான்றுரைப்பீர்   322

 

மலர்  சொட்டும்  மதுவுக்கு  மயங்கி  ஆடும்  வண்டுகளே

            தேன்  உண்ண  பூவுக்குள்  தழுவும்  தேன்  இனங்களே

சுண்ணங்களின்  தரம்  அறிய  தூவுகின்றேன்  வானில்  பொடியை

            சிறந்ததை  நீங்கள்  உண்டு  தேர்ந்தாய்வு  செய்திடுங்கள்                     323

 

சோலை  மயில்  ஒத்த  சுரமஞ்சரியின்  சுண்ணத்தையும்

            கோல  மயில்  போன்ற  குணமாலை  சுண்ணத்தையும்

வானத்தில்  சிதறி  விட  சுரமஞ்சரியின்  சுண்ணம்  விழ

            குணமாலை  சுண்ணத்தினை  சுவைத்தன  வண்டும்  தேனும்             324

 

வண்டுகளை  நடுவராக்கி  சுண்ணத்தின்  சிறப்பைக்  கூற

            வஞ்சியர்கள்  விரைந்து  சென்று  வென்றது  குணமாலை  என்றார்

முகில்  மோதும்  ஓசைக்  கேட்டு  முடங்கிடும்  நாகம்  போல

            சுரமஞ்சரி  துன்பம்  கொண்டாள்  சுண்ணதின்  தன்மையாலே           325

 

சுரமஞ்சரி  அடியில்  வீழ்ந்து  குணமாலை  குழைந்து  சொன்னாள்

            எப்போதும்  இருப்பது  போல்  இனிமையுடன்  இருந்திடுவோம்

சீவகன்  சொல்  தோற்று  அவன்  என்  செவ்வடியை  தொடுவதற்கு

            நோம்பேற்பேன்  என  சூளுரைத்து  சுரமஞ்சரி  விட்டகன்றாள்             326

 

கன்னிமாடம்  சென்றடைந்தாள்  கடுஞ்சினத்தில்  சுரமஞ்சரி

            தாதியர்  தாய்க்கு  சொன்னார்  தலைவிக்கு  நேர்ந்தவற்றை

விண்  உலவும்  சந்திரனை  விண்ணை  விட்டு  நீக்குதல்  போல்

            ஆடவரை  இனி கானேன்  கண்டால்  உணவு  கொள்ளேனென்றாள்   327

 

தாய்  சுமதி  சொன்ன  சொல்  தந்தை  குபேரன்  செவி  நுழைய

            மூவுலகும்  மதிக்கத் தக்க  மாணிக்கமாலையை  கையிலேந்தி

கட்டியங்காரன்  முன்  வைத்து  காணிக்கையாய்  அதை  தந்து

            கன்னிமாடத்தெரு  வழியே  காளயர்  செல்ல  தடை  விதித்தான்         328

 

இன்பத்தைக்  கொடுக்கும்  என்று இருவரிடம் எழுந்த  விளையாட்டு

            இன்பத்தை  நீக்கி  அங்கே  துன்பத்தை  புகுத்தியது  என

குணமாலை  மனம்  நொந்தாள்  குன்றொத்த  நட்பு  தொடர்ந்திட

            அருகனின்  திருவடிக்கு  ஆயிரம்  பொன் பூவிட்டு  தொழுதாள்             329

 

ஐங்கணையான்  அழகை  வென்று  செம்மலை  வடிவம்  கொண்ட

            தீயைப்போல்  வண்ணமுடன்  திகழ்கின்ற  நேமிநாதரின்

பொன் மதில்  சூழ்ந்து  நிற்கும்  பேரெழில்   ஆலயத்திற்கு

            எட்டு  கோடி  பொன்னை  மக்கள்  நீராட்டுவிழா  தானமாக்கினர்      330

 

சிலம்பணி  சிற்றிடை  மகளீர்  வீரக் கழலணிந்த  காளையரோடு

            நீர்விளையாடும்  ஒலியோ  எண்திசையும்  ஓசை  எழுப்ப

மதவேழம்  ஒத்த  சீவகன்  மனம்  நீர்  விழாவை  விட்டு  அகல

            காணுதல்  தகுதி  அல்ல  என  விலகினான்  அவ்விடத்தை  விட்டு        331

 

அந்தணர்  அன்னக்  குவியலை  அங்கு  வந்த  நாய்  கவ்வ

            வேதியர்  வெஞ்சினம்  கொண்டு வேகத்தில் நாயினை வதைக்க

அடிதாளா  அப்பைரவன்  கதறி  அடுத்திருந்த  குளத்தில்  பாய்ந்து

            அதன்  உயிரை  காத்துக்கொள்ள குளத்தில் நீந்தி  சென்றது                 332

 

கள்  வழியும்  வெள்ளிக்குடத்துடன்  கன்னியர்  இருவர்  தொடர

            களிமகன்  ஒருவன்  அங்கு  கள்ளுண்ட  மயக்கத்தில்  வந்து

அந்தணரை  சினந்து  நோக்கி  அடித்து  என்  நாயை  கொன்றீர்  என

            அச்சுருத்தி  பேசலானான்  அந்தணர்கள்  அஞ்சி  நின்றனர்                  333

( களிமகன் :  கள்  உண்டவன்,  குடிகாரன். )

 

சீவகன்  விரைந்து  வந்தான்  களிமகன்  சினத்தை  வென்றான்

            அந்தணர்க்கு  ஆறுதல்  சொல்லி  அவ்விடம்  அகலச்  செய்தான்

அடியினால்  நலிவு  கொண்ட  அந்நாயிடம்  கனிவு  கொண்டு

            ஐம்பத  மந்திரம்  சொல்லி  அமைதியை  அருளச்  செய்தான்                334

 

நல்வினை  முற்பிறப்பிலில்லை  என நெஞ்சத்தில்  வருந்த  வேண்டாம்

            ஆசை,  பாசப்  பற்றனைத்தும்  அகற்றிடு உன் மனதிலிருந்து

மரணத்தைக்  கண்டு  அஞ்சி  மனதினில்  பதற  வேண்டாம்

            அருகனின்  ஐம்பத  அமிர்தம்  அருந்தினால் வீடடைவாய் ஈன்றான்   335

 

காமம்  வெகுளி  மயக்கம்  முக்குற்றம்  மனதில்  நீக்கி

            பழம்வினை  உள்ளத்தில்  போக  தொடர்வினை  உயிரில்  நீங்க

பஞ்சமந்திரத்தை  நெஞ்சில்  பலமுறை  பதியச்  செய்ய

            நாயுடல் விட்டு பிரிந்த உயிர் தேவகதியில் பிறந்து தேவனான து      336

                                  

பொன்னகர்  கோயில்  எல்லாம்  மென்மகளீர்  தேவியர்  ஆனார்

            பொன்மணி  மாலைகள்  சூடி  நவமணி  மேகலை  அணிந்து

ஆண்மயில்  சாயல்  ஒத்த  அரம்பையர்கள்  சூழ்ந்திருக்க

            அரிமா  போன்ற  அத்தேவன்  அவ்வுலகில்  மகிழ்ந்திருந்தான்              337

 

பஞ்சமந்திரப்  பன்னீராலே  பாவமாம்  அழுக்கைக்  கழுவி

நாய்  உடல்  தன்னை  விட்டு  நாடிட்ட  தேவ  சுகத்தை

அவதிக்  ஞான  ஆற்றலாலே  அனைத்தையும்  உணர்ந்த  தேவன்

            சீவகனை  காண  விரும்பி  விண்விட்டு  மண்ணில்  வந்தான்               338

 

இளஞ்சுடர்  மேனியுடனும்  இமையாத  விழிகளுடனும்

            குற்றமில்லா  மணிமுடியுடன்  குன்றா  ஒளி  மாலைகள் கொண்டு

சுதஞ்சண  தேவன்  அங்கு  சீவகன்  முன்னே  தோன்ற

            சீவக நம்பி  அவனைக் கேட்டான் செப்பிடுவீர்  நீர்  யாரென்று             339

 

நல்வினை  என்னில் அற்றதாலே  நாய்யுடலில்  நலிந்து  திரிந்தேன்

            பஞ்சமந்திரம்  எனக்கு  ஓதி  பழைவினை  அழியச்  செய்தாய்

மண்ணுலகில் நாயுடலை விட்டு  விண்ணுலக  தேவன்  ஆக்கினாய்

            இவ்வுலகம்  உன்  அடியின்  கீழ்  உறங்குமாறு  உதவி  செய்வேன்       340

 

எக்குறையும்  இல்லை  எனக்கு  இடர்வரின்  உனை  நினைப்பேன் – என

            சீவகன்  மொழிந்து  அருள  தேவனும்  தழுவிக்  கொண்டான்

நின்  நிழலாய்  என்மனம்  உனை  நீங்காமல்  தொடர்ந்திருக்கும்

            நீ நினைத்த நாழிகையில் நான் வருவேன் என கூறிச்  சென்றான்       341

 

ஊக்கம்  என்னும்  ஏர்  கொண்டு  உடல்  ஆகிய  நன்நிலத்தை

            தவம்  என்னும்  உழவு  செய்து  நல்நோன்பு  நெல்  விதைத்து

நல்  ஒழுக்க  நீர்  பாய்ச்சி  ஐம்பொறிகள்  வேலி  காத்து

            வீடென்ற  மணிகள்  பெற்று  சித்தநிலை  செல்வோமென்றான்           342

 

ஆழிபோல்  முழங்கி  கொண்டு  வாயு போல் கடும்  வேகத்துடன்

            அழிப்பதில்  தீயைப்  போன்றும்  எடுப்பதில்  எமனைப்  போன்றும்

கால்  கட்டு  சங்கிலி  அறுத்து  கட்டுத்தறிகளை  முறித்து

            பட்டத்து  யானை  அசனிவேகம்  பாய்ந்தது  மக்கள் வெள்ளத்துள்      343

 

மும்மத  நீர்  விழியில்  கொட்ட  முழு  முனை  தந்தங்களோடு

            நெடு  மலை  குன்று  போல  நிலமகள்  அதிர  வரும்

களிறினை  கண்ட  மக்கள்  கண்  மறைய  பதுங்குவது

            கதிரவனை கண்ட  இருள்  கலங்குவதற்கு  ஒப்பாகும்                             344

 

சினந்திட்ட  வேழத்தைக்  கண்டு  சிவிகையை  சுமந்த  ஆட்கள்

            பல்லக்கை  தெருவில்  வைத்து  பயந்து  பதறி  ஓடினார்கள்

குணமாலைக்கு  உற்ற  தோழி  கூவினாள்  உதவிக்கு  என்று

            வந்துதவுவோர் யாரும்  இன்றி வணங்கினாள் யானை முன்னே      345                     

 

பிடர்வரை  தொங்கும்  குழலை  பொன்மணி  கயிற்றால்  கட்டி

            மாலையை  அதன்மேல்  சுற்றி  செவியணி  ஒளியாய்  வீச

கவர்ந்திடும்  தோற்றத்தோடு  காதலால்  காக்கும்  தோழர்களோடு

            வருகையில்  நம்பி  கண்டான்  குணமாலை  கொண்ட  துன்பத்தை   346

 

பெருந்தகை  சீவக  நம்பி  பெண்படும்  துயர்  அறிந்து

            பெண்  உயிர்  காக்கா  விட்டால்  பேடியாய்  இறப்பதே  மேல்  என

கைக்கடகம்  முழங்கை  ஏற்றி  கச்சினால்  ஆடையை  கட்டி

            பிளிரிந்திடும்  களிறை  ஒடுக்க  பாய்ந்திட்டான்  வேங்கை  போல     347

 

படம்  விரி  நாகத்தின்  மேல்  பாய்ந்திடும்  கருடனைப்  போல்

            முன்  நிற்கும்  தோழி  மாலையை  கொம்புகளால்  குத்த  குனிய

மலைமேல்  பாயும்  சிங்கமாக  மத்தகத்தின்  மேல்  குதித்து  இடிக்க

            சினம்  கொண்ட  வேழம் சீறி சீவகனை  துதிக்கையால்  தூக்கியது   348

 

வீரக்  கழல்  கால்  அணிந்த  வேங்கை  போல் பாய்ந்த  சீவகன்

            உரமுற்ற  உடலை  முறுக்கி  வேழத்தின்  கொம்பிடை  புகுந்து

கால்களின்  கீழ்  மறைந்து  கல்  தூண்  போன்ற  கைகளாலே

            களிறினை  அடக்கி  ஓட்டி  கன்னியின்  துயரைத்  துடைத்தான்          349

 

கொம்பொடு  துதிக்கை  மதமும்  கொண்ட  அக்களிறை  திருப்பிய

            மாணிக்கத்  தூணைப்  போன்ற  மயக்கிடும்  தோளோன்  சீவகன்

ஐநூற்று  நான்கு  தோழர்களும் ஐயனை  தொழுது  பிரிந்து  செல்ல

            பூமழை பொழிந்திடமணக்கும் பூம்பொழிலை தனியே அடைந்தான் 350

 

நெய்  விடப்  பற்றி  எரியும்  நெருப்பினில்  வாடிய  பூவாய்

            குணமாலை  கொண்ட  துயரை  தோழிகள்  மனதில்  மறைத்க

தாய்மையின்  தாக்கத்தாலே  தாய்  அவள்  கண்ணீர்  துடைத்து

  ஆட்டத்தால்  சோர்ந்தாள்  என  அன்னை  அவளை   அணைத்தாள்   351

 

கன்னிமாட  கூடம்  தன்னில்  கன்னி  மனம்  தனிமைக்  காண

            களிறை  வென்ற  சீவகனின்  கட்டெழில்  உருவம்  கண்ணிலாட

மலர்  அம்புகள்  ஐந்தினையும்  மாறி  மாறி  காமன்  வீச

            மங்கையவள்  மனங்குழைந்தாள்  மலர்மாறன்  நம்பி  நினைவில்     352

 

விழிகள்  இரண்டும்  ஒளி தளர  வெண்கையின்  வளை  கழல

            விம்மும்  நெஞ்சு  புண்களாக  வெந்தீயாய்  காமம்  பற்ற

தான்  வளர்க்கும்  தத்தையிடம்  தான்  பிழைக்க  வழியை  கேட்க

            நின்  விருப்பம்  இந்நாட்டிலேனில்  நவின்றிடு  என தத்தை கூறியது  353

 

செங்கமலம்  மேல்  அமர்ந்த  திருமகள்  போன்ற  குணமாலை

            செவ்விய  வாய்  தத்தையிடம்  தன்  மனதை  திறந்து  விட

பச்சைப்  பசும்  கிளியோ  பாவை  நெஞ்சின்  செய்தி  கொண்டு

            பறந்தது  விண்ணை  நோக்கி  சீவகன்  மணி  மாளிகைக்கு                  354

 

 

வண்ணங்கள்  பல  கூட்டி  வரைசீலையை  எதிர்  பதித்து

            சித்திரத்தை  வரைவதற்கு  சீவகன்  மனம்  தெளிந்து

பாய்ந்து  வரும்  களிறு  கண்டு  பாவை  மனக்கலக்கம்  தனை

            குணமாலை  முகப்  பயத்தினை  குறையின்றி  தீட்டினானே                355

 

நங்கையின்  நயன  நடுக்கத்தை  நல்லெழிலாய்  தீட்டியவன்

            நெகிழ்ந்து  விழும்  துகிலினை  நேத்திரத்தால்  தழுவி  நோக்கி

கருங்கூந்தலும்  சிலம்புகளும்  தழுவும்  அவள்  கால்  தடவி

            அழகு  பொங்கும்  ஓவியத்தை  ஆரத்தழுவி  அணைத்து  நின்றான்    356

 

அண்ணல்  அவன் தழுவிக்கொண்டு  அவள்  அழகில்  மயங்கி  நிற்க

            குணமாலை  மனக் கவலையை  கொண்டு  வந்த  தூது  தத்தை

சிற்றிடை  ஒடிசலுடனும்  சின்ன  யானை  நடையுடனும்  வந்த

            சித்திரப்  பாவை  போன்ற  தத்தையை  தத்தை  கண்டது                      357

 

செவி  அமைந்த  குண்டலங்கள்  செவ்வான  ஒளியை  சிந்த

            மெல்லிடை  அணிந்த  மேகலை  மெல்லிசையாய்  ஒலி  எழுப்ப

வட்ட  வடிவ  அழகு  முகம்  வான்  நிலவின்  தன்மையுடன்

            வரும்  தத்தையை  கண்டு  வாடியது  தத்தை  மனம்                                358

 

கள்  சிந்தும்  கண்  களிப்பும்  காலடியின்  கிண்கிணியும்

            கருங்கூந்தல்  பின்  தவழ  காமம்  அது  முன்  நழுவ

கண்கவரும்  மன்மதனாம்  களிறை  வென்ற நம்பியை காண

            காந்தருவதத்தை வந்தாள்  கண்டிட்டாள் அவன் ஓவியத்தை            359  

                               

ஓவியத்தில்  ஒளிர்ந்த  உரு  யார்  என்று  தத்தை  கேட்க

            உருவத்தை  வரைந்த நம்பியோ  இயக்கி  என  சொல்லுதிர்க்க

பூந்துகிலும்  குழலும்  பொதிந்த  புதியதோர்  இயக்கி  இவள்

            உன்  மனதை  கவர்ந்தவள் என ஊடல் கொண்டாள் தத்தையங்கு      360

 

விற்புருவம்  நெற்றி  ஏற  வேல்  விழிகள்  கனல்  கக்க

            முத்து  முத்தாய்  முகம்  வியர்க்க  முழுமேனி  மெல்ல  அதிர

சினம்  கொண்ட  தத்தையின்  சினம்  தணிக்க  எண்ணியவன்

            ஈருடல்  ஓர்  உயிர்  நாம்  ஏன்  உனக்கு  கோபம்  என்றான்                      361

 

குணமாலை  உருவம்  பார்த்து  குணம்  கொண்ட  கோபத்தால்

            ஊடலினால்  உளம்  சோர்ந்து  தத்தை  சீவகனை  விட்டகல

தூது  வந்த  தத்தையோ  துளிர்த்த  மன  மகிழ்ச்சியினால்

            சீவகனின்  அடிதொழுது  செவ்வடிகள்  வாழ்க  என்றது                           362

 

பைங்கிளி    வந்த  காரணம்  படை  கொண்ட  நம்பி  கேட்க

            தலைவியின்  காதல்  நெஞ்சம்  தலைவனுக்குண்டா  என்றறிய

தூதாக  என்னை  அனுப்ப  அவள்  துன்பத்தைத்  தாங்கிக்  கொண்டு

            நின்  மாளிகை  நாடி  வந்தேன்  நலம்  பயக்க  சொல்  என்றது              363

 

பொன்மலை  தானம்  தந்து  பசும்  வயல்  நகரம்  ஈந்து

            குன்றொத்த  தோள்களாலே  குணமாலையை  தழுவுவேனென்றான்

தூதுதத்தையோ  நம்பியிடம்  துள்ளியமாய்  எழுதி  கேட்க

            கடிதமும்  கணையாழியையும்  கனிவுடன் தந்தான் தத்தைக்கு     364  

                    

நூலறிவு  தெளித்து  வைத்த  நுண்ணிய  வரிகள்  கொண்ட

சீவகன்  கடிதம்  கண்டு  சிந்தையில்  மகிழ்வு  கொண்டாள்

பாலினில்  தேனைக்  கலந்து  பருகிடும்  இன்பம்  அனைத்தும்

            படிந்தது  பாவை  விழிகளில்  உதிர்ந்தது  நீர்  உவகையாலே                365

 

செவிலித்தாய்  வந்து  சேர்ந்தாள்  செவி  தாங்கா  செய்தியுடன்

            மாமன்  மகன்  வந்துள்ளான்  மனைவியாய்  உன்னை  கேட்டு

நங்கையே உன் பெற்றோர்கள்  சேர்ந்து  நகைமுகை  விருந்து  படைத்து

            சம்மதம்  கூறியுள்ளார்  உனைத்  தாரமாய்  தருவதற்கு                          366

( நகைமுக  விருந்து : உடன்பாடு,  சம்மதம். )

 

இருசெவிகள்  பொத்திக்  கொண்டாள்  இளம்  நெஞ்சில்  களக்கமுற்றாள்

            இணையற்ற  களிறை  வென்று  எனைக்  காத்த  சீவகன்  தவிர

எவரையும்  மனம்  ஏற்கமாட்டேன்  எந்நிலை  எனக்கு  வந்திடினும்

            உயிரினை  விடுவேன்  இல்லை  உயர்  தவம்  ஏற்பேன்  என்றாள்        367

 

செவிலித்தாய்  தாய்க்கு  சொல்ல  செல்லத்தாய்  பதியிடம்  பகர

            குபேரமித்திரன்  மகிழ்ந்து  குணமாலை  உள்ளம்  கவர்ந்த

சீவகனே  தன்  மகளுக்கேற்ற  சிறந்த  ஒரு  கணவன்  என்று

            செழுமிய  உள்ளத்துடன்  திருமணத்தை  முடிப்போம்  என்றான்          368

 

கற்றார்,  கட்டுரை,  கவிவல்லார்  முத்திறம்  வல்லார்  நால்வரை

            கண்மணி மகளுக்கு  மணம்  பேச  கந்துக்கடன்  இல்லம்  அனுப்ப

கனகமணிச் செப்புகளில் பொருளும் வெற்றிலை பாக்குடன் பல ஏந்திசெல்ல 

            கற்பகமரம்  போன்றீரே  வருக  என கந்துக்கடன்  வரவேற்றான்          369

 

ஸ்ரீ தேவி  அழகு  ஒத்த  மகள்  குணமாலை  எங்கள்  செல்வி

            திருமால்  நிகர்  சீவகனுக்கு  திருமணம்  பேச  வந்தோம்  என

நால்வரின்  கூற்றைக்  கேட்டு  நம்பியின்  பெற்றோர்  மகிழ்ந்து

            நல்லதொரு  மணநாள்  குறித்து  நாடினார்  குபேரமித்திரன்  இல்லம் 370

 

சுந்தர  முரசுகள்  முழங்க  சுப  முழவும்  உடன்  ஒலிக்க

            வெண்சங்கும்  வளைகொம்பும்  வீதியெல்லாம்  ஒலிநிரப்ப

கரைமோதி  ஒலி  எழுப்பும்  கடலலை  போல்  ஆர்ப்பரிக்க

            மாநகர்  மாந்தர்  வாழ்த்த  மணந்திட்டான்  குணமாலையை               371

 

பசும்  பொன்  நகைகளுடன்  பைங்கொடியர்  எழுநூறு  பேரும்

            செம்பொன்  ஒரு கோடியும் செழித்த  நிலம்  ஐந்து  ஊரும்

செல்லமாய்  வளர்த்த  மகளுக்கு  சீதனமாய்  அள்ளித்தந்து

            சிறப்புடன்  அனுப்பி  வைத்தான் குபேரமித்திரன் குணமாலையை    372

 

பாலாடை  போன்ற  மென்மேனி  பவளமாய்  சிவந்த  வாய்

            தண்மதி  போல்  முகத்தினிலே  தவிக்க வைக்கும் கருவிழிகள்

மூங்கிலொத்த  மென் தோள்கள்  முக்கனி சுவை  இரு  தனங்கள்

            அத்தனையும்  சித்திரம்  போல்  அழகில்  நின்றாள்  குணமாலை        373 

 

நான்கிதழ்கள்  சுவை  அருந்த  நாற்கரங்கள்  உடல்  தழுவ

            இரு  உடல்கள்  ஓருடலாய்  இணைந்து  குழைந்து  உழல

ஐங்கணையான்  மலரம்புகள்  அடைமழையாய்  பொழிந்திருக்க

            சீவகனும்  குணமாலையும்  சேர்ந்திருந்தார்  பஞ்சணையில்                374

 

நீர்  விளையாட்டு  நாளில்  நிறை  மதம்  கொண்ட  வேழம்

            சீவகன்  இரு  கரங்களிடையே சிக்குண்டு  பின்னே  செல்ல

நாணிய  யானை அசனிவேகம்  நெய்  கவளம்  சோறு  நீக்கி

            நெஞ்சத்தில்  சினத்துடனே  நின்றது  உணவு  போக்கி                             375

 

களிறு  கொண்ட  நிலையறிந்து  கட்டியங்காரன்  வந்தான்

            காரணம்  பாகனைக்  கேட்க  பாகனோ  நடந்ததை பகர்ந்தான்

ஆநிரை  மீட்ட  கோபத்தாலும்  யாழினில்  வென்ற  தாபத்தாலும்

            கட்டளையிட்டான் கட்டியங்காரன் சீவகநம்பியை கைது செய்ய   376   

                   

பிறை  சிரம்  கொண்ட  சிவனும்  இடம்  பெற்ற  உமையும்  போல

            இளங்கொடியாள்  குணமாலையும்  எழிலுருவன்  நம்பியும்  இருக்க

சிங்கத்தை  இகழ்ந்து  சூழும்  சிறுநரிகள்  கூட்டம்  போல

            கட்டியங்காரனின்  வீரர்கள் சூழ்ந்தனர் சீவகன் மாளிகையை            377

 

முப்புரம்  எரித்த  சிவன்  போல்  முகமது  தீயாய்  சிவக்க

            வீரக்  கழல்  அணிந்து  வென்றிடும்  வில்லையை  ஏந்தி

கட்டியங்காரன்  ஆயுள்  கடந்தது  இன்றோடு  என்று

            நந்தட்டா  தேரைப்  பூட்டு  நசுக்குவோம்  அவனை  என்றான்                378

 

தந்தையும்  தாயும்  வந்தனர்  தனையனை  நோக்கிச்  சொன்னர்

            மன்னனோடு  மாறுபட்டால்  மாபெரும்  பகையே  கிட்டும்

சினத்தினை  ஒதுக்கித்  தள்ளி  சிந்தித்து  செய்வாயானால்

            மன்னனின்  கோபம்  நீங்கும்  மகனே  உனக்கு  நலமே  கிட்டும்           379

 

அச்சணந்தி  ஆசிரியருக்கு  அன்றளித்த  வாக்கை  எண்ணி

            சினத்தினை  சினந்து  ஒதுக்கி  சிந்தித்து  முடிவு  செய்து

பெற்றோரின்  வார்த்தை  தனை  பெரிதாக  மனதில்  ஏற்று

            கச்சினால்  கட்டிய  கைகளோடு கடந்திட்டான்  வீரர்கள்  சூழ              380

 

பேதை  பருவ  மகளீர்  விளையாட்டை  விட்டு  பார்க்க

            பெதும்பை  பருவ  மகளீர்  சிலம்பொலிக்க  வந்து  பார்க்க

மங்கை  பருவ  மகளீர்  பந்தாட்டம்  நிறுத்திப்  பார்க்க

            மாவீரன் சீவக  நம்பி  மதயானை  போல  சென்றான்                               381

 

மடந்தைப்  பருவ  மகளீர்  மனம்  கனந்து  மெய்  சோர

            அரிவைப்  பருவ  மகளீர்  அம்பு  விழிகள்  நீர்  சொரிய

தெரிவை  பருவ  மகளீர்  தெருவில்  வந்து  ஓலமிட

            பேரிளம்  பெண்கள்  எல்லாம்  பேயறைந்தார்  போலிருந்தார்              382

 

( பேதை : 5 முதல் 7 வயது.  பெதும்பை : 8 முதல் 11 வயது.  மங்கை : 12, 13 வயது

மடந்தை : 14 முதல் 19 வயது.  அரிவை : 20 முதல் 25 வயது.  தெரிவை : 26 முதல்

31 வயது.  பேரிளம் பெண் : 32  வயதுக்கு  மேல். )

 

தீவினை  வந்து  உறுத்த  சிறைபட்டான்  என்பார்  சிலர்

            கூற்றுவனை  அழைத்த  மன்னன்  குலம்  அழியும்  என்றார்  சிலர்

குணமாலை  தத்தை  செய்த  நற்தவத்தில்  பயனில்லை  என்பார்

            அறங்காக்கும்  கடவுளுக்கு  அழியாப்  பழி  என்பார்  சிலர்                    383

 

 

பன்னிரு  கோடி  பொன்  எடுத்து  கந்துக்கடன்  சென்றான்  அவைக்கு

            கட்டியங்காரனிடம்  காணிகையாக்கி அடி பணிந்து  சொன்னான்

மதகளிறு  மகளீரைக்  கொன்றால்  மன்னன்  உமக்கு  பழியே  மிஞ்சும்

            மன்னித்துவிடு  என் மகனை  அறியாமையால் செய்த  தவறை           384

 

கட்டியங்காரன்  சொன்னன்  கள்வனைப்  போல்  கொல்வேன்  என

            கந்துக்கடன்  திரும்பி  விட்டான்  கடும்  நடுக்க  நெஞ்சுடனே

தாயவள்  கதறி  அழுதாள்  தனியே  வந்த  பதியைக்  கண்டு

            முன்புறைத்த  முனியின்  சொல்லை  மனைவிக்கு  கூறலானான்       385

 

ஒப்பற்ற  முனிவரை  தொழுது  ஒன்பது  முறைகளில்  அழைத்து

            நால்வகை  உணவுகள்  படைக்க  அம்முனிவர்  விரும்பி உண்ண

நம்  மனக்குறையை  நீக்க  நம்  வாரிசின்  பிறப்பைக்  கூறி

            பிறப்பொடு அவன் துறவு வரை நடப்பதை முனிவர் சொன்னார்    386

 

                         ( 9  முறைகள் : எதிர் கொளல், இடம் அளித்தல், கால் கழுவுதல், அடி போற்றல்,  அர்ச்சித்தல், இனிய மொழி கூறல், தூய மனத்தவராதல், தூய உடலினராதல்,  வினை விலக வேண்டுதல்.   4 வகை  உணவு : உண்பன, தின்பன, உறுஞ்சுவன,  பருகுவன. )

 

நண்பர்கள்  திட்டமிட்டனர்  நம்பியை  மீட்டுக்  கொணர

            தத்தையோ  தியானம்  செய்தாள்  தலைவனின்  துன்பம்  விலக

கட்டியங்காரன்  உயிர்க்கு  காலம்  இன்னும்  வரவில்லை  என

            சீவகன்  உள்ளம்  சிந்தித்து  சுதஞ்சணை  நினைத்தான்  மனதில்       387

 

சீவகன்  இன்னல்  தன்னை  அவதிக் ஞானத்தால்  சுதஞ்சணன் அறிய

            மேகத்தை  ரதமாய்  கொண்டு  ராசமாபுரத்தை  அடைந்தான்

கார்முகில்  பெரிதும்  திரள  கதிரவன்  பின்னே  மறைய

            கடல்  நிலம்  புகுந்தது  போல்  பொய்யான  காட்சி  அமைத்தான்        388

 

சீவகன்  நம்பியைக்  கண்டான்  செந்தோளால்  கட்டியணைத்தான்

            மார்புரத்  தழுவிக்  கொண்டு  வானத்தில்  பறந்து  சென்றான்

காந்தர்வதத்தைக்  கண்டாள்  கணவன்  வானில்  செல்லுவதை

            மனம்  மகிழ  வாழ்த்தினாலும்  இனி  காண்பது  எப்போதென்றாள்   389

 

மைத்துனன்  மதனன்  என்பான்  மன்னனின்  ஆணை  ஏற்று

            சீவகனை  கட்டி  இழுத்து  காண்போர்கள்  வருந்த  வந்தான்

சுதஞ்சணன்  கொண்டு  சென்றான்  சூட்சமம்  அறியா மதனன்

            நம்பியை  காணாமல்  பதறி  நால்புறமும்  தேடச்  செய்தான்               390

 

மன்னனின்  சினத்தில்  தப்ப  மர்மமாய்  ஒருவனைத்  தொடர்ந்து

            வாளினால்  வெட்டிக் கொன்று  வடிவம்  தெரியாமல்  சிதைத்து

கட்டியங்காரனிடம்  சென்று  சீவகனைக்  கொன்றோம்  என்றான்

            மன்னனும்  மனம்  மகிழ்ந்து  மதனனுக்கு  சிறப்புகள் செய்தான்        391

 

                                    குணமாலையர்  இலம்பகம்  முற்றிற்று.


                             தொடர்ச்சி....   Click here

No comments:

Post a Comment