சமணத்தில் பூணூல்


சமணத்தில் பூணூல்….




பண்பைப் பொருத்தே ஒரு மனிதனை இவ்வுலகம் மதிப்பிடுகிறது . நல்ல பண்பிற்கான காரணம் அவன் வாழ்க்கை நெறிகளும், தார்மீக ஒழுக்கமும் தான். அவற்றையே அவன் சிறப்பியல்பாக, பண்புருவாக, குணச்சித்திரமாக உலகம் கருதுகிறது.



நற்பண்பினைக் கொண்ட மனித சமூகமே உலகில் நன் மதிப்பை பெற்றுள்ளது.  இவ்வுலகை நடத்த தகுதியான சமூகமாக மக்களால் கருதப்படுகிறது. நல்ல நெறிகளையும், நீதி நேர்மையான ஒழுக்கத்தையும் ஒரு மனிதன் பெறுவதே உலக நலனாகிறது.



நற்குணத்தவர்க்கு நெறிகளை அவன் பிறந்த சமூகமும்; நீதி, நேர்மை, தார்மீக ஒழுக்கத்தை அவன் தாய், தந்தை மற்றும் முதியோர்களின் நடத்தையுமே வழங்குகின்றன.



அதனால் நல்ல மதத்தில், இனத்தில், குலத்தில் பிறந்தவர்கள் நற்பண்பினராக  உள்ளனர். அவ்வகையில் நோக்குங்கால் நற்குலத்தவர் குழந்தைகளுக்கு தம்மரபு, பாரம்பர்ய நெறிமுறைகளை அளிப்பதோடு; நல்லொழுக்க நடவடிக்கைகளை கற்பித்து, கண்காணித்து அதன் படி ஒழுகவும் முயல்வது பெற்றோர்கள் கடமையாகிறது.




நெறிகளை அந்தந்த சமூகச் சடங்கும், சம்பிரதாயமும் அந்தந்த பருவத்தில் அளிக்கிறது. தினமும் அதன்படி ஒழுக பெற்றோர்களே பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஒழுக வைப்பது தார்மீக கடமையாகும்.



அதில் சமண சமயம் முதன்மையான வாழ்வுநெறிகளை இவ்வுலக வாழ்வின் அமைதிக்கும், அவ்வழியே இறுதி லட்சியமான முக்திப் பாதைக்கும்  வழிவகுக்கிறது என்பதை இவ்வுலகமே ஏற்றுக்  கொண்டுள்ளது. அஹிம்சை நெறியை உணர்விலும், ஒழுக்கத்திலும் தன்னகத்தே கொண்டொழுகிய தவ  சீலர்கள் அளித்த வாழ்க்கை நெறிகள்; அதற்கேற்ற சடங்குகள், சம்பிரதாயங்களை குழந்தை பிறந்ததிலிருந்தே வரையறுத்து வழங்கியுள்ள, அக்குலத்தில் பிறந்ததே நாம் பெற்ற பெரும் பேறு எனின் மிகையாகாது.


ஆகையால் அம்மேலான சமண வாழ்வுவழிமுறையை தாமும் கடைபிடித்து, அந்தந்த பருவத்தில் குழந்தைகளுக்கும் வழங்குவதும் பெற்றோர் மற்றும் முதியோர்களின் கடமையாகும்.




சமணம் ஒரு குழந்தை கருவுற்ற நாளிலிருந்து, இளமை, முதுமை என அந்தந்த பருவத்தின் கடமையை நினைவுறுத்தும் சடங்குகள் அனைத்திற்கும் ஒரு அழமான கருத்தையும், நெறிமுறையையும் சிறப்பாக, முதன்மையானதாக வழங்கியுள்ளது.
அக்குலத்தில் பிறந்ததை  நாம் பெருமையுடன் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது.




துன்பம் விலக்கி இன்பம் சேர்ந்த அவ்வாழ்வுநெறியில் நம் முன்னோர் ஒழுகி வாழ்ந்த வாழ்க்கை முறையே நமக்கு எடுத்துக் காட்டாக அமையும்.




வாழ்க்கை என்பது உயிர்வாழ பொருள் ஈட்டுவது மட்டுமன்று, ஈட்டும் போழ்தே திருப்தியும், மகிழ்ச்சியும், அமைதியும் அன்றாடம் நம் இல்லத்தில் நிறைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியமாகும்.




அக்கருத்தை மையமாக கருதி  சடங்கின் வழியே நல்லொழுக்கத்தை துவக்கி வாழ்நாள் முழுவதும் அதில்  பயணித்து தானும் வாழ்ந்து, பிறவற்றையும் வாழவைக்கும் சமணச் சடங்கில் ஒன்றுதான் உபநயனம் எனும் எட்டுவயது  நிரம்பிய இருபாலருக்கான அடுத்த  வாழ்க்கைநிலை துவக்கம்.



அதாவது குழந்தை பிறந்த போது பெயர் வைத்தல், பின் மொட்டையடித்து காது குத்துகிறோம், பள்ளிக்கு செல்லும் போதும் நெல்மணிகளில் எழுத்துக்களை நல்லநாளில் எழுதியபின் பள்ளியில் சேர்ப்பது (தற்போது வழக்கொழிந்து விட்டது) போன்றவை குழந்தைப்பருவச் சடங்கில் அடங்கியவை.



அதன் பின்னர் எட்டு வயது நிரம்பும் போது எந்த ஒருகுழந்தைக்கும் ஆளுமை முழுவதுமாக வளர்ந்த நிலை என்பது இன்றைய விஞ்ஞானம் தரும் உண்மை. அவ்வேளையில் உபநயனம் என்ற பெயரில் மந்திர உபதேசம்  அளித்த பின் வாழ்க்கையின் பாதையை விரத, நியமங்களுக்கு உட்படுத்தி; பூஜை, தானம் செய்ய தகுதியான நல்லொழுக்க சீலராக வாழ்வில் நிலைமாற்றம் செய்வதே இச்சடங்கின் நோக்கமாகும்.



அதனால் அன்றிலிருந்து மறு ஜனனம் எடுத்ததாக சமணம் கருதுகிறது. அதனால உபநயனம் ஏற்றபின் த்விஜன் எனப்படுகிறார். 
அதாவது  சரீர  ஜன்மன் எனும் வாழ்வு நிலையிலிருந்து சம்ஸ்கார ஜன்மன் எனும் நிலை மாற்றம் அடைகிறான் என்பதே இதன் தாத்பர்யம். இது பின்னாளில் ஏற்கப்போகும் முனிதீட்சையின் முன்சடங்காகவே சமணம் கருதியிருக்கிறது.



அவ்வளவு சிறப்பு வாய்ந்த  உபநயனம், பூணூல், ஆவணி  அவிட்டத்தைப் பற்றி சுருக்கமாக காண்போம்…




யக்ஞோபவீதம் – யக்ஞ + உபவீதம்

என இரு சொல்லாக பிரிக்கப்படுகிறது.

யக்ஞ எனும் சமஸ்கிரத  சொல்லுக்கு ஹோமம், தானம், பூஜை என்பது அர்த்தம்

உபவீதம் என்றால் பகவன்சூத்திரம் – பகவானால் அருளப்பட்ட ஆகமம்.  அதாவது சித்தாந்தநூல். அதாவது ஆகமமாக உரியது.


ஹோமம், தானம், பூஜை முதலிய கிரியைகளை செய்யும் போது (ஆகமமாக உரியது
அதாவது) அணிய வேண்டியது எனக் கொள்ள வேண்டும்.


அதாவது நம் ஆழ்ந்த சித்தாந்தமான நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் எனும் மும்மணியைக் குறிக்கும்  சின்னம்.


அதனால் மூன்று இழைகளைக் கொண்டுள்ளது ரத்னத்ரயமான பூணூல்.
(சம்யக் தரிசனக்ஞானசாரித்ராணி)



அதி நிர்மல முக்தா: பல லலிதம் யக்ஞோபவித மதிபூதம்
  ரத்ன த்ரயமிதி மத்வா க்ரோமி கலுஷாப ஹரண மாபரணம்


பொருள்:

உயர்ந்த முத்துக்களைப் போன்று வெண்மையானதும் மிகத் தூய்மையானதும் ஆகிய இந்த யக்ஞோபவீதத்தை ரத்னத்ரயத்தின் சின்னம் எனவும் பாவத்தைப் போக்கக் கூடியது எனவும் கருதி இதை ஒரு ஆபரணமாக அணிந்து  கொள்கிறேன்.


இது ரத்னத்ரய சின்னத்தை பூணும் நூல்…

பூணூல்…



பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்ரியர் ஆகியோர்கள் அறம் பொருள் இன்பம் வீடு நான்கு புருஷார்த்தங்களைப் பெற யக்ஞோபவீதம் அணிய வேண்டும் என்று முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.


ஆனால் இந்த விதி தற்போதைய அந்தணர்களிடமிருந்து வந்ததாகவும், ஜைனர்களூக்கு கிடையாது என்று கூறப்படுவது தவறாகும். விருஷ தீர்த்தங்கரர் காலத்தில் இந்த அந்தணர்கள் இல்லை. ஆதிபகவன் பாலகனாக இருந்த போதே இதை அணிந்துள்ளார் என்பதை ஹரிவம்ஸ புராணம் தெரிவிக்கிறது.


"அந்தணர் என்போர் அறவோர்" என்று குந்தகுந்தரும் தெரிவிக்கும் அந்தணர்கள் தான் அவர்கள். அறவழியில் நடப்போரே அந்தணர் எனப்படுபவர்.



இது  முழுதுணர்ஞானியரால் அருளப்பட்ட ரத்தினத்ரயம் என்னும் அறத்தை  நினைவுறுத்தி  வருவதால் ஒவ்வொரு ஸ்ராவகரும் அணிய வேண்டும். இதில் மஞ்சள் தடவி மந்திரத்தால்  தூய்மை செய்து அணிய வேண்டும். இதனை அணியாத ஆண்மகன் ஸ்ரீ மஹாவீரர் கூறிய நான்கு வழி வாழ்வுமுறையில் ஒன்றான ஸ்ராவகர்/ இல்லறத்தார் என்று அழைக்கப்படமாட்டார்.



மேலும் அவர் கூறிய நல்லொழுக்கத்திற்கான விரத  நியமங்களை கடைபிடிக்க இப்புனித நூலை அணிந்து தான் கடைபிடிக்க வேண்டும். அதனால் இது ஒரு விரத  சின்னமாகவும் கருதப்படுகிறது.



அவர் கூறிய அஷ்டமூல விரதத்தை விடாமல்  கடைபிடிக்க வேண்டும். (அதாவது மாமிசம், கள், தேன், அத்தி, ஆலன், அரசன், அரளி, கல்லத்தி போன்ற வற்றில் ஜீவராசிகள் நிரம்பியுள்ளன. அதனை உண்ணாமல் இருப்பதே அஷ்ட மூல விரதமாகும்.)



பூணூல் அணிந்தவன் விரதிகனாக கருதப்படுகிறான். மேலும் முனிகளுக்கும், ஆர்யிகைகளுக்கும் ஆகாரதானம் அளிக்கும் போதும், ஜினபகவானுக்கு பூஜை செய்யும் போதும் அவசியம் அணிந்து  கொள்ள வேண்டும்.



கணதரர் முதலானோர் கூறப்பட்ட மந்திரத்தினால் சுத்தி செய்யப்பட்ட யக்ஞோபவீதத்தை அணிந்திருப்பதால் நற்காட்சியாளனாக கருதப்படுகிறான்.


----------------------------------------



தீர்த்தங்கரர்கள் இல்லறத்தில் இருந்த போது பூணூல் அணிந்திருந்தனர் என்பதற்கு பல சான்றுகள் ஆகமத்திலுள்ளன.


ஸ்ரீ ரிஷபநாதர் கழுத்தில்  ஆரமும், இடையில் கர்தணி எனும் ஆபரணமும், தோளில் பூணூலும் அணிந்திருந்தார் என்பதை ஆதிபுராணம் கூறுகிறது.



மேலும் அப்புராணத்தில்,  பகவான் ரிஷபதேவர் பரதக்ஷேத்திர மக்களுக்கு **விதேக க்ஷேத்திரத்தில் என்னென்ன  ஆச்சாரங்கள் கடைபிடித்தார்களோ அதனை தெரிவிக்கிறார். அதில் ஆறு வகையான  கிரியைகள், குலசார விதிமுறைகள்  பற்றிய குறிப்பிடும்  போது அங்குள்ள சிராவகர்கள் யக்ஞோபவீதம்  அணிந்திருந்தனர் என்கிறார்.



உத்திரபுராணத்தில் மேகரதன் எனும் சிற்றரசனுக்கு கணதர பரமேஷ்டி பூர்வ விதேக க்ஷேத்திரத்தில் ஸ்ராவகர் நன்மைக்காக, நற்காட்சிக்காக பல நெறிமுறைகளை உபதேசிக்கும் போது பூணூல் அணிவது பற்றி கூறுவதாக குறிப்பு வருகிறது.


அனைத்து மஹாபுருஷர்களும் பூணூல் அணிந்திருந்ததாகவே வரலாறுகள் தெரிவிக்கின்றன.


சீவக சிந்தாமணியில் ஜீவேந்திர குமாரருக்கு அவன் தந்தை கந்துக்கடன் அனைத்து ஸ்மஸ்காரங்களையும் செய்ததாக குறிப்பு வரும்போது பூணூல் அணிவிக்கும் உபதேசமும்  செய்வித்தான் என்றும்  சொல்லப்பட்டுள்ளது.


அதே சமயம் விரதசின்னமான, யாகம், பூஜை, தானம் முதலியவற்றை செய்ய தகுதியான  பூணூலை மாற்றிக் கொள்வது  எப்போது என்பது மட்டும் பரதசக்ரவர்த்தி காலத்தில் ஏற்பட்டதாக ஆவணி அவிட்டம் துவங்கிய வரலாற்றில்  கூறப்பட்டுள்ளது.
(வரலாற்றை பின்னர் காண்போம்)


அன்றிலிருந்து தான் இது துவங்கப்பட்டது என்பது ஏற்புடையதல்ல.  ஆதிநாதர் காலத்திலேயே பூணூல் அணியும் முறை இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.



உபநயனம்; யக்ஞோபவீதம் ஏற்கும் முறை….



ஒவ்வொரு ஸ்ராவக சிறுவ, சிறுமியருக்கு எட்டு வயது நிரம்பிய  பிறகு உபநயனம் எனும் சடங்கு  செய்யப்படுகிறது. அதற்குப்  பின்னரே நற்காட்சி பெற தகுதியுடையவராக கருதப்படுகிறது.


எட்டு வயது  நிரம்பிய ஆண் பெண் இருபாலருக்கும் உபநயனத்தன்று..


ஆண்மகன் தலைமுடியை களைந்தபின் குளித்தும்; பெண் மகள் குளிப்பது மட்டும் செய்தல் வேண்டும். இருபாலரும் புதிய ஆடை அணிந்து (மஞ்சள் ஆடையாக இருப்பது  நல்லது.) ஜினாலயம் சென்று ஜினருக்கு அபிஷேகம் செய்த பின், ஆண் மகன் ஒரு தட்டில் சந்தனம் தடவி அதில் ஸ்வஸ்தீகம் எழுதிய பின் பூணூலைக் கழுவி  சுத்தம் செய்து அதில் வைத்தல் வேண்டும்.


உபநயனம் ஏற்கும் ஆண் பிள்ளைகள் இடுப்பில் தர்ப்பைக் கயிற்றை அணிந்து கொள்ள வேண்டும் என்ற விதியும்  உள்ளது.


கந்தோதகத்தை உடலில் பூசியபின்; பூணூலுக்கு  ரத்னத்ரய  பூஜை  செய்ய வேண்டும்.


ஹோமம் செய்து, புண்யாஹவாசக மந்திரம்  சொல்லி மேலும் தூய்மையான பிறகு, குருவின்  முன் அமர்ந்து அவர் கூறும் தர்மோபதேசம், விரதோபதேசம் மற்றும் மந்திரோபதேசம் கேட்கவேண்டும். அதன்  பின்னரே அவர் ஜின அறத்தில் ஈடுபட தகுதியுள்ளவராக கருதப்படுகிறது.



பின்னர் குருவின் மூலம் ஆண் மகன் பூணூலைப் பெற்று, அதற்குரிய மந்திரத்தை பூர்வகமாய்  சொல்லி அணிதல்  வேண்டும்.



முனிவரோ, பட்டாரகரோ, அல்லது அவர்கள் இல்லாத ஸ்தலங்களில் நன்கு ஆகமம் கற்ற பெரியோரிடமோ இச்சடங்கினை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


தர்மோபதேசம் -  என்பது ஜைன சித்தாந்தம் பற்றி அறவுரை ஆற்றுவது. ஆன்ம நெறியைப் பற்றிய விளக்கம் அளிப்பது.



விரதோபதேசம் -  என்பது அஷ்ட மூல விரதங்களைக் கடைபிடிப்பதாக உறுதி ஏற்றுக் கொள்ளுதல்



மந்திரோபதேசம் -  என்பது பஞ்ச மந்திரம் நல் உச்சரிப்புடன் ஓதி அருளுதல்.

உபதேசம் அளிப்பவர் பஞ்ச மந்திரங்களைச் சொல்லி, அதை பயிற்சி எடுத்துக் கொள்ளுபவர் பின் தொடர்ந்து சொல்லி கற்றுக் கொண்டவுடன். மந்திரத்தின் பெருமையையும், மகிமையையும் அறிந்து நாள்  தோறும் இந்த மந்திர ஜபம் செய்வதாக  உறுதி கொள்ள வேண்டும்.



அன்று  முதல் உபநயனம் ஏற்ற இருபாலரும் தினமும் மந்திரத்தினை ஜபம் செய்வதாக உறுதி ஏற்க வேண்டும்.



மேலும் ஆண் மகன் பூணூலை கழற்றாமல் இருக்க உறுதி பூண வேண்டும்.


------------------------------------

ஏதோ ஒரு காரணத்தினால்  உபநயனம் ஏற்க முடியாதவர்கள் திருமணச் சடங்கிற்குள் ஏற்பது கடமையாகும்.  இல்லாவிடில் அன்றைய கிரியை செய்ய தகுதியற்றவராக கருதப்படுவர்.


------------------------------------

பூணூல் எப்போதும்  அணிந்து  கொள்ள  வேண்டும்..


மும்மணிகளை நினைவு கூறுவதே பூணூல் அணிவதன் தாத்பர்யம். அதனால்  ஏற்படும் உடல் உறுத்தலில் நல்ல  பாவனை ஏற்பட்டு வினைக்கட்டு மேலும் இல்லாமல் தடுக்க உதவுகிறது.



மூன்றிழைகளை ஒரு முடிச்சாக செய்து திருமணத்திற்கு  முன்புவரை அணிதல் வழக்கம்.


அதன் பின்னர் நவதேவதையை நினைவில் கொள்ள மூன்று முடிச்சுகள் கொண்ட 9 இழைகளை அணிய வேண்டும் என சான்றோர்கள் கூறுவது வழக்கத்தில் உள்ளது.


(மேலும் 27 இழைகளையுடைய பூணூல் அணியும் வழக்கமும் முற்காலத்தில் இருந்துள்ளது. அதனை  த்ரவ்ய சூத்திரம் என்றழைத்துள்ளனர். )



பூணூல், உபவீதம், ப்ரம்மசூத்ரம், ரக்ஷா சூத்ரம், யக்ஞோபவீதம் அனைத்தும் ஒரே பொருளை தருவதாகும்.



பூணூலை மாற்றுவது பற்றி:


ஸ்ராவகர்கள் பரதச்சக்ரவர்த்தி அந்தணர்களை அழைத்து பூணூலை வழங்கிய  தினத்தை நினைவு  கூறும் பொருட்டு ஸ்ரவண (ஆடி/ஆவணி) மாதம், பெளர்ணமி திதியன்று ஒவ்வொரு ஆண்டு ஆலயத்திலோ, வீட்டிலோ  ஹோமம் செய்து யக்ஞோபவீதத்தை  கந்தோதகத்தால்  சுத்தம் செய்து, மந்திரசுத்தி செய்து புதிய பூணூலை அணிய வேண்டும். அதையே ஆவணி  அவிட்டமாக நாம் கொண்டாடுகிறோம். (செய்முறை விளக்கம் கீழே  தரப்பட்டுள்ளது.)


* விட்டில் சூதகம் ஏற்பட்டால்

* பிணத்தை தொட்டால்

* தயாதிகள் யாரேனும்  இறந்தால்

* பூணூலில் ஒரு இழை  அறுந்தாலும்

* நம்மை அறியாமல் ஏதாவது உயிர் நம்மால் இறந்தால்

* அறுவை சிகிச்சை  செய்து கொண்டால்

புதிய பூணூலை கந்தோதக நீரினால் சுத்தம் செய்து ஒன்பது  முறை பஞ்ச மந்திரம் சொல்லி  புதியதை அணிந்து பழையதை கழற்றி விட வேண்டும்.

பழைய  பூணூலை நீர் நிலைகளில்  விட வேண்டும்.


பகவானை  தரிசிக்கும் முன் பூணூலை தொட்டு விட்டு பின்னர் வணங்க வேண்டும் என நூலில் குறிப்புள்ளது.



பூணூல் கழுத்திலிருந்து நாபிகமலத்திற்கும் இடுப்புக்கும் இடையில் தொங்கும் நீள அளவில் இருக்க வேண்டும். கூடுதலாக மல, ஜலம் தீண்டும்படி இருத்தல் கூடாது.



ஜின  பூஜை, ஆகாரதானம், சந்தியா வந்தனம் ஆகிய கிரியைகள் செய்யும் போது புருஷர்கள் பூணூல் அணிந்தவராக  இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.




ஆவணி அவிட்டம் வந்த வரலாறு.




ஸ்ரீபரதேஸ்வரச் சக்கரவர்த்தி ஆறு கண்டங்களையும் வென்று ஆட்சி புரிந்து ஷட்கண்டாதிபதி என்ற பட்டத்தைப் பெற்றுத் திகழ்ந்தார். ஒரு நாள் சக்கரவர்த்தி ஒரு சிறப்பான தானம் செய்ய எண்ணி அந்த தானத்தைப் பெற்று போகும்படி மக்களுக்கு அறிவித்தார். தானம் கொடுக்கின்ற இடத்தை தண்ணீர்  ஊற்றி சமப்படுத்தி  சேற்றை சரிசெய்து அதில் முளைத்த நவதான்யங்களை அதன் மீதுத் தூவி வைக்க ஏற்பாடு செய்தார். மாளிகையின் அடுத்த பக்கத்தில் சமமான தரைவழி ஒன்றும் இருந்தது.



குறித்த வேளையில் தானம் பெறுவோர் அழைக்கப்பட்டார்கள், பலர் வந்து தாம் விரும்பிய பொருட்களை தானமாக பெற்றுச் சென்றனர். இன்னும் தானம் பெறாதவர்கள் இருக்கின்றார்களா என வினவ, அதற்கு “சில சான்றோர்கள் இன்று பெளர்ணமியானதாலும் விரத அனுஷ்டானங்களை ஏற்ற காரணத்தினாலும், முளைத்த விதைகளை மிதித்தால் ஏகேந்திர ஜீவ வதை ஆகும், என எண்ணி தானம் பெற வராமல் நிற்கின்றனர் ’’ எனச் சொல்ல, அதனைக் கேட்ட மாமன்னன், மாளிகையின் அடுத்த பக்கமாக அவர்களை வரவழைத்து தானத்தையும் அளித்து, மேலும் இவர்கள் கொல்லாமை அறத்தை, அஹிம்சா தர்மத்தைப் போற்றும் சிறந்த சீலவான்கள், உத்தம ஸ்ராவகர்கள் என்பதை உலகம் அறிய அடையாளமாக ஒளபாசன விதிகளான யக்ஞோபவீதத்தை(பூணூலை) அவர்களுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.  அவர்களை ஜைன பிராமணர்கள் என அழைக்கச் செய்தார்.



மேலே சொல்லப்பட்ட இப்புனித செயல், பூணூல் அணியும் மங்கலச் செயல், பரதேஸ்வரச் சக்கரவர்த்தியால் ஆவணிமாதம் பெளர்ணமி திதி அவிட்ட நட்சத்திரம் அன்று நடத்தப்பட்டது. அந்த நன் நாளையே இன்றும் ஆவணி அவிட்டமாக நாம் ஆண்டுதோறும் அனைவரும் ஒன்றாக கூடி  பூணூல் அணியும் வழக்கம் இருந்து வருகிறது.



ஆவணி அவிட்டம் என்பது  உபாகர்மம் (புதுப்பித்தலை செய்யும் நாள்)


உபா – புதுப்பித்தல் ;  கர்மம் – செய்தல்

--------------

சடங்கின் போது,  ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்?


தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். (சிரார்த்தம் நம்மிடையே இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.)


தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை/குடுமியை (?) நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.


இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகீக விருப்பமும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள்.


கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு(உத்தரதிக்கு) தேவர்களிடம் போகிற திசை. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் திசை.


நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறதோ ; அதாவது வலது தோள் பக்கம் மாற்றி போட்டுக்கொண்டு தர்ப்பணம் செய்தல் வேண்டும்.


பிரதக்ஷணம் பண்ணுவது என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். பெரும்பாலான கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதனால் நுழைந்து நாம் பிரதக்ஷணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பக்கத்தான் போகவேண்டும்.


இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும்.

*********************************************

பூணூல் தயாரிப்பது  எப்படி.


சாஸ்திரம் அறிந்தவர்கள் இல்லாவிடில் தூய மனத்துடன் உடல் தூய்மையுடனும் உள்ள உபநயனம் ஏற்றுக் கொண்டவர்கள் தயாரிக்கலாம்.

பருத்தியால் ஆன நூலை ஒரு சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு. அதனை விரல்களைச் சுற்றி வலதுபுறமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 96 முறை சுற்ற வேண்டும். பின்னர் அதன் இரு முனைகளையும் பிடித்துக் கொண்டு மூன்றாக மடித்து சம அளவில் வருமாறு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த இரு முனைகளையும் சேர்த்து முடிச்சு போட வேண்டும். இவ்வாறு போடப்படும் முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர்.

அவ்வாறு தயாரிக்கும் போது அணிபவருக்கு தொப்புள் அளவிலும் இடுப்பைத் தொடாமலும் இருக்கும்.  அவ்வாறு கடையில் வாங்குவது சற்று நீளமாக இருந்தால் கழிவு வெளியேறும் பாதையில் படும் ஆதலால், அதனை சரியான அளவுடன்  முடிச்சு போட்டு வைக்க வேண்டும்.

-----------------------------------------------   


(பெற மேலேயுள்ள இடுகையைத் தொடவும்)







10 comments:

  1. AHIMSA PARAMO DHARMA HI ..JAI Jai Jinendra !!!

    FIRST INTRODUCE MYSELF : I AM FROM NELLIYANKULAM..JEEVENDIRAN JAIN, S/O APPADURAI NAINAR (presently in USA)..
    Really great job done by you ( R.Padmaraj)..very very useful sir
    I learn many thing from this site.
    Thank you so much. Jai Jinendra..

    ReplyDelete
  2. மிக அருமை ஐயா.

    ReplyDelete
  3. Very good effort taken sir and useful for life long.
    Best regards Jayaprakash kalpakkam

    ReplyDelete